குணா கந்தசாமியின் டாங்கோ
அன்புள்ள ஜெ,
1996 ல் திரைப்பட விழா ஒன்றில் நான் Last Tango in Paris என்னும் பழைய படத்தைப் பார்த்தேன். அக்காலத்தில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்த கதைக்கருதான். ஏதோ ஒரு காரணத்தால் தனிமைப்பட்டுப்போன ஒருவன் ஒரு புதிய ஊருக்கு வருகிறான். அங்கே சில கதாபாத்திரங்களைச் சந்திக்கிறான். பெரும்பாலும் பெண், காதல், காமம். அந்த உறவுகளின் வழியாக தனிமையை உதற முயல்கிறான். குணா கந்தசாமியின் டாங்கோ நாவலை கையிலெடுத்தபோது அந்த சினிமா ஞாபகம் வந்தது. ஆச்சரியமாக இந்நாவலின் கதையையும் என்னால் அந்த திரைப்படத்துடன் ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது.
இந்நாவலின் கதை தென்னமேரிக்க நாடான உருகுவேயில் நாட்டில் வெள்ளி ஆறு என அழைக்கப்படும் நதிக்கரையில் உள்ள தலைநகரில் இந்தக் கதை நிகழ்கிறது. கதைநாயகன் ஆனந்த் தமிழன், அங்கே பணிநிமித்தம் சென்றவன். ஆசிரியர் உருகுவே நாட்டில் பணிநிமித்தம் வாழ்ந்திருக்கிறார் என்று தமிழ்விக்கி சொல்கிறது. ஆகவே மெய்யாந அனுபவத்தின் பின்புலத்தில் இந்த நகரத்தின் காட்சிகள் சொல்லப்படுகின்றன. வெள்ளி ஆறும் கடலும் இந்நாவலில் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன.
இந்நாவல் அந்த புத்தம்புதிய ஊரில் ஆனந்த் அடையும் தனிமையைச் சொல்கிறது.அந்தத் தனிமை அந்த புதிய நிலத்தில் உள்ள பண்பாடுடன் பொருந்திக்கொள்ள முடியாத காரணத்தால் உருவானதாக இருக்கலாம். அல்லது அங்கே அவன் குடும்பம் ஏதுமின்றி இருப்பதனால் உருவாவதாக இருக்கலாம். அவனுக்கு பிறப்பால் அமையாத குடும்பம் பற்றிய குறிப்பு வருகிறது. அவன் வழக்கமான ஒரு குடும்ப உறவையும் அதன் பாதுகாப்பையும்தான் தேடிக்கொண்டிருக்கிறான் என்றும் தோன்றுகிறது. ஒரு இயல்பான குடும்ப உறவை உருவாக்கிக்கொண்டால் தீர்ந்துவிடும் பிரச்சினைதான் அது என்றும் சொல்லலாம்.
ஆனந்த் அந்த கடற்கரையில் தன்னந்தனிமையை உணரும்போது ஆரம்பிக்கும் நாவலில் அந்தக் கடல் கூடுதலாக அந்த தனிமைக்கு ஒரு பெரிய காரணம் உள்ளதோ என்று நம்மை எண்ணச் செய்கிறது. ஆனந்துக்கும் சந்தியாவுக்கும், தென்னமேரிக்க பாலியல்தொழிலாளியான அமெந்தேவுக்கும் உள்ள உறவும் தனிமையின் சித்திரம்தான். ஆனந்த் தன் தனிமையை போக்கிக்கொள்ள அவர்களை நாடுகிறான். அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தங்களுக்கு தனிமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தனிமை அவர்களின் பாதுகாப்பு வளையம். சந்தியாவின் பாதுகாப்பு வளையம் அவனை வெளியே தள்ளுகிறது. அமெந்தேயின் வளையத்தை உணர்ந்து அவனே விலகிக்கொள்கிறான்.
வெவ்வேறு மனிதர்களிடம் ஆனந்த் தொடர்ச்சியாக ஓர் உணர்வுபூர்வத் தொடர்பை உருவாக்க முயன்று, அது கைகூடாமல் விலகும் சித்திரம் இந்நாவல் என்று சொல்லலாம். ஆனந்த் தேடுவது ஒரு உறுதியான உறவமைப்பைத்தான் என்பதற்கான ஆதாரமாக எனக்குப் படுவது மத்தியாஸ் போன்ற ஒருவர் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதற்கு ஒன்று கிடைத்ததும் அலைதல் அடங்கிவிடுவது. வெவ்வேறு கதாபாத்திரங்களுடன் ஆனந்த் கொள்ளும் இயல்பான உரையாடல்கள் வழியாக இந்த தனிமையும் தவிப்பும் மிகையில்லாமல் சொல்லப்படுகின்றன.
இந்நாவலில் எல்லா கதாபாத்திரங்களும் வாழ்க்கை அளவுக்கே அமைக்கப்பட்டவர்கள். மிகையில்லாமல் கதாபாத்திரங்கள் அமையவேண்டும் என்று ஆசிரியர் கொண்டுள்ள கவனத்தால் கதாபாத்திரங்கள் சுருக்கமாகவும், விசித்திரங்கள் இல்லாமலும் இருக்கிறார்கள். ஒரே விதிவிலக்கு ஞாபகமறதிநோய்க்கு ஆளான முதியவர். அவரிடமிருந்து ஆனந்த் பெற்றுக்கொள்ளும் ஞானம் என்ன என்பதை நாவலில் இருந்து ‘நேற்றும் நாளையும் இல்லாத இன்று’ என்று புரிந்துகொள்ளலாம்.
அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் பக்கத்துவீட்டு மாமியின் உரையாடல் வழியாக நாவலின் தரிசனம் வெளிப்படுவதுபோன்ற ஒரு இடம் அது. இந்நாவலின் தொடக்கத்தில் நேற்றுநாளை என்ற காலமாக இருக்கும் கடல் இறுதியில் அக்கணமாக ஆகிவிட்டது என்று நான் வாசித்தேன். என் வாசிப்பாக இருக்கலாம். அது எனக்குப் பிடித்திருந்தது.
நம்பகத்தன்மையே இந்நாவலின் பலம் என்று தோன்றுகிறது. வாசிக்கையில் எந்த இடமும் உறுத்தவில்லை. எந்தக் காட்சியும் மிகை என்றோ செயற்கை என்றோ தோன்றவில்லை. மொழியும் இயல்பான ஒழுக்குடன் உள்ளது. ஓரிரு மணிநேரத்தில் வாசித்து முடிக்கத்தக்க ஒரு நாவல் இது. குணா கந்தசாமி ஒரு சிறந்த படைப்புக்கலைஞர் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.
இந்நாவலின் பிரச்சினை என்ன என்று எனக்கே கேட்டுக்கொண்டேன். நான் இதை என் வாசிப்பின் சிக்கலாகவும் சொல்வேன். ஒரு கதாபாத்திரம் ஒரு மனிதன் என்பதற்கு மேலே சென்று ஒரு அடையாளமோ படிமமோ ஆகும்போதுதான் நாம் அதை நமக்குள் விரிவாக்குகிறோம். அதேபோல ஒரு நிகழ்வு நம் நினைவில் நீடிக்க வேண்டும். அதற்கு அந்த கதாபாத்திரமும் கதைநிகழ்வும் கொஞ்சம் அரிதாகவும், புதிதாகவும் இருக்கவேண்டும். அந்த அரிதான அம்சம்தான் இந்நாவலில் விடுபடுகிறது. முப்பதாண்டுகளாக வாசித்துக்கொண்டும், சினிமா பார்த்துக்கொண்டும் இருக்கும் எனக்கு இந்த தனிமை ஒரு பழைய பேசுபொருளாகப் படுகிறது.
லாஸ்ட் டாங்கோ இன் பாரீஸ் சினிமாவைச் சொல்லிவிடவேண்டும். டாங்கோ என்பது இணைநடனம். இந்நாவலைப் பொறுத்தவரை இணைநடனம் இணையில்லாமல் நடப்பதன் வெறுமையைச் சொல்கிறது என்று சொல்லலாம். ஆனால் அந்தச் சினிமாவில் சட்டென்று ஒரு புதிய உச்சம் நிகழ்கிறது. அது எதிர்பாராதது, ஆனால் நம்பகமாகவும் இருந்தது. அந்த உச்சம் அதுவரைக்கும் நமக்கு தெரிந்த அந்த அகவுலகை புரட்டி அதற்கு அப்பால் ஓர் உலகைக் காட்டுகிறது. ஒரு நாவலில் நாம் எதிர்பார்க்கவேண்டியது அந்த தருணத்தையும் தான் என்பது என் எண்ணம்.
எம்.பாஸ்கர்
அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள்- கடிதம் தேவி லிங்கம் எழுதிய நெருப்பு ஓடு- கடிதம் விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
[image error]
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

