புரவியின் காலடியோசை- நிர்மல்
அன்புள்ள ஆசிரியருக்கு,
டெக்ஸாஸ் நண்பர் ப்ரதீப்புடன் ஈராறு கால்கொண்டெழும் புரவி சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது. அதனால் மீண்டும் வாசித்தேன். அது எனக்களித்த வாசிப்பவனுவத்தினை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
ஈராறு கால்கொண்டெழும் புரவி என்னும் இந்நாவல், திருமந்திரத்தின் யோக மரபு வழியாக தன்னையறிதலை நோக்கிப் பயணிக்கும் ஓருவரின் வாழ்வைப் பேசுகின்றது. பாச ஞானம், பசு ஞானம் உடையவர்கள் வழியாக பதி ஞானம் தேடி நகரும் இப்பயணம், நவீன நாவல் வடிவில் சித்தர் மரபு இயங்குவதை காட்டுவதாகவே எனக்கு தோன்றியது.
சித்தர் என்பவர் “சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டவர்” என மரபில் சொல்வர். சப்தம் என்பது நாதம்; சப்த முடிவு என்பது நாதாந்தம். நாதம் என்பது சர்வ ஆன்மாக்களுக்கும் அறிவினை எழுப்புவித்து நிற்கும் ஞானம். இந்த ஞானத்தை மனதால் தியானித்துக் காண்பவர்களே சித்தர்கள். இந்த நாவலால் உந்தப்பட்டு திருமந்திரம் வாசிக்கையில் இந்த அறிமுகம் கிடைத்தது. ஆனால் அதை புரிந்து கொள்ள நாவல் வழங்கும் அனுபவம் உதவியது. நாவல் வாசித்து முடித்து திருமந்திர கவிதை. அதை வாசித்து முடித்து மீண்டும் நாவல். ப்ரதீப்புடன் உரையாடல். பாம்பின் வாலை விழுங்கும் பாம்பு. இது ப்ரதீப்புக்கு பிடித்த படிமம். அதை அவருடன் உரையாடுகையில் பெற்றுக் கொண்டேன்.
நாவலின் தலைப்பு திருமூலரின் இக்கவிதையிலிருந்து வருகிறது.
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்,
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்,
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்,
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
தண்டபாணி தேசிகர் உரையின்படி, “ஈராறு கால் கொண்டெழுந்த புரவி” என்பது கங்கையும் யமுனையுமாய் உருவகிக்கப்படும் இடகலை, பிங்கலை நாடிகள் வழியே மேலெழும் குதிரைபோல் களித்தாடும் பிராணன்.
நாவலின் இறுதியில், நாவலில் பிள்ளைவாள் தன் உடலெங்கும் எழுந்த உயிரையும், அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதார பிந்துவையும், அதில் திகழ்ந்த நாதத்தையும் உணர்கிறார். அதன் பின் அவரது எண்ணமாக விரியும் காட்சிகள் கவித்துவம் மிக்கவை.
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி,
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்,
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்,
திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே
“இரண்டது கால் கொண்டெழுகையில் ஆயிரம் சாயல்கள் ஆயிரமென எழுந்தெழுந்த அலைகளில், அவர் மீண்டும் மீண்டும் சொற்களையே அள்ளி அள்ளிக்குடித்துக்கொண்டிருந்தார்”
என்று நாவல் விவரிக்கிறது. காலம் பிறப்பில் இருந்து இறப்பு வரை அவர் சொற்களில் வாசிப்பவனுக்கு காட்சியாகின்றது.
ஐம்பத்தி ஒன்று எழுத்து என்பது சப்தங்களின் அடிப்படை என இந்தியப் பார்வை சொல்லும். சப்தம் சொல்லாகி, வார்த்தையாகி, வாக்கியமாகி, எண்ணமாகி, பொருள் கொண்டெழும். பிள்ளைவாளுக்கு காலம் சொற்களில் திரண்டு, அவரது பேரனுபவமாய் (ஐந்தெழுத்து ) முடிகிறது. அவர் நிறைவுறுகிறார். மாம்பழம் பழுகிறது.
திருமூலரின் கலைச்சொற்களை நவீன நாவலொன்றில் காண்பது மிகவும் சுவையானது. மனதுக்கும் கைக்கும் எண்ணவோ எழுதவோ காணாத சொற்சித்திரங்கள் இங்கு மெல்லிய புன்னகை தரும் காட்சிகளாக, அன்றாட உரையாடல் வடிவங்களாக மாறுகின்றன.
திருமந்திரத்தின் ஓர் உவமை காட்சியானது எனக்கு பசுமரத்தாணி போல நின்றது.
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே
கடல்நீரில் உள்ள உவர்ப்பு சூரிய வெப்பத்தால் உப்பெனப் பெயர் பெற்று, மீண்டும் நீரில் கலந்தபோது நீரேயாவது போல ஆன்மா சிவத்தில் அடங்கும் என்ற இக்கருத்தை, நாவல் காட்சியாக்குகிறது. உப்பு இருக்கிறதா என்று காட்சியாகக் காண்கையில், கவிதை ஏற்படுத்திய உணர்வை முழுக்க சொல்லில் விரித்துக் கொள்ள முடிகிறது.
மிகுந்த காத்திரமான உணர்ச்சித் தருணங்களையும், சம்பவங்களையும் கதை கவிதை நடையில் சொல்கிறது. பஞ்சபூதங்களுடன் மானுட உயிருக்குள்ள இணைப்பைப் புரிந்துகொள்ள நாவல் பெரிதும் உதவுகிறது.
பிள்ளைவாளின் பயணம் ஒரு தொடர் கற்றல் செயலாக கதையில் வருகின்றது.
கற்றல்: வாழ்வில் கற்றுக்கொள்ள அவர் தயங்குவதே இல்லை. குருவிடம் போய் கல்வியைக் கேட்கிறார்.வாழ்தல்: கற்றதை வாழ்ந்து பார்க்கிறார்.உணர்தல்: வாழ்ந்ததில் கற்றுக்கொண்டு, அதன் போதாமையை உணர்கிறார்.மேலேறுதல்: மேலும் கற்க நகர்கிறார்.நிறைவுறுதல்: தொடர் செயலாக நகர்ந்து தன் முழுமையை நோக்கிச் சென்று நிறைவுறுகிறார்.“ஊர்கூடி எரியிட்டு ஒருபிடிச் சாம்பலாக்கிய பிள்ளைவாளின் எச்சத்துடன், அவன் மலையேறிவந்து அந்த மாமரத்தடியில் குழியெடுத்து அதை அடக்கினான். உப்பெனக் கரைந்து உள்நீரில் ஊறி, ஆழத்து நதியையும் அதனுள் நெருப்பையும் நெருப்பெழும் வெறுமையையும் வெறுமையின் வெளியையும் பிள்ளைவாள் அறியலாகும்.”
“மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாகக் காய்த்து கனத்துத் தழைய ஆரம்பித்தது.”
என வாசிப்பவனுக்கு கேள்வியை, நிறைவை ஒரே நேரத்தில் தருகின்றது.
அஷ்டாங்க யோக மார்க்கத்தில் நிபுணத்துவம் உள்ளவர்கள் இந்த நவீன நாவலில் மேலும் நுட்பங்களை சுட்டி, மேலும் விரித்துக் கொள்ள முடியும்.
ஆனால், அது கட்டாயமில்லை. அதுபற்றி முறையான பயிற்சி இல்லாத எனக்கும் கதையுடன் ஒன்ற முடிந்தது என்பது இந்நாவலின் வெற்றி.
இந்த நாவலில் தேடலையும், தேடி அடைந்தவர் வாழ்வையும் காண முடிந்தது.
அன்புடன்
நிர்மல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

