அமெரிக்க எழுத்தாளர்களுடன்

அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும் தொடக்கத்தின் முகப்பில்… புத்தகத்தின் காலடித்தடம் அமெரிக்காவின் சிறுவர்களிடம் அமெரிக்காவின் தனித்தன்மைகளில் ஒன்று எந்த ஊரிலும் அந்த ஊருக்கான இலக்கியவாதிகள் உண்டு என்பதுதான். அவர்கள் ஆங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்படுகிறார்கள். உலக இலக்கியம் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு உண்டு.  ஆனால் அவர்களுக்கு தமிழ் என்ற மொழியோ, அதில் ஓர் இலக்கியமோ இருக்கும் செய்தியே தெரியாது. நண்பர் ஜெகதீஷ் மட்டும தெற்கு கரோலினா மாநிலத்தின் சார்ல்ஸ்டன் நகரில் உள்ள எழுத்தாளர் குழுமத்துடன் தொடர்பில் இருப்பவர். அவர் முயற்சியால் 27 அக்டோபர் 2025 அன்று Colleton Memorial Library Hall அரங்கத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது.

“Writer who write” என்பது அந்த அமைப்பின் பெயர். அதிலுள்ள அனைவருமே ஒரு நூலேனும் எழுதி வெளியிட்டவர்கள். சமூகவியல் முதல் புனைவிலக்கியம் வரை. அமைப்பின் தலைவி  பௌலா போட்ஸ் முதுகெலும்பில் காயம் காரணமாக நீண்டநேரம் அமர்ந்திருக்க முடியாத நிலையிலும் மகள் துணையுடன் வந்து அரைமணி நேரம் இருந்து என் படைப்புகள் பற்றி ஒரு சுருக்கமான உரையை ஆற்றினார்.

With Stephen Chadwick, author of ‘Walking with Bow and heart’

என் கதைகள் பற்றி ஜெகதீஷ்குமார் ஓர் அறிமுகத்தை அளித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞரான ஆலன் அமெரிக்காவுக்கே உரிய கையசைவுகளுடன் Stories of the True பற்றி உரையாற்றினார். என் வாசகர் அமலனின் மகன். (அமலன் எனக்காக அபாரமான மீன்கறி கொண்டு வந்திருந்தார்) ஃப்ளாரிடாவிலிருந்து நண்பர் தேவர்பிரான் வந்திருந்தார். ஆலனின் உரை சுவாரசியமானது, அசலான கூர்ந்த அவதானிப்புகளும் கொண்டது. அவர் என் பனிமனிதன் நாவலை வாசித்துக்கேட்டிருந்தார். (பனிமனிதன் ஆங்கிலத்தில் ஜக்கர்நாட் வெளியீடாக வரவுள்ளது) அமெரிக்கக் குழந்தைகளுக்கு நூறுநாற்காலிகளும் வணங்கானும் புரிவது ஆச்சரியம் அல்லது ஆச்சரியமே இல்லை.

ஏறத்தாழ அரைமணி நேரம் அங்கே வந்திருந்த எழுத்தாளர்கள் என் கதைகள் பற்றிய தங்களுடைய உளப்பதிவை முன்வைத்தனர். பெரும்பாலும் எழுதி வைத்து வாசித்தனர். ஐந்து நிமிடங்களுக்குமேல் எவரும் வாசிக்கவில்லை. ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த கதைகளை அவர்கள் பலர் முன்னரே படித்திருந்தார்கள். அவர்களின் மதிப்பீடுகளும் கூர்மையாக இருந்தன. (சங்கரரின் கயிற்றரவு என்பதை இணையத்தில் வாசித்து தெரிந்துகொண்டு ஸ்டீபன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது)

நான் அரைமணிநேரம் பேசினேன். இன்று என் உள்ளம் விரித்து எடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு கருதான் அது. காலனியாதிக்கத்தின் தாக்கம் இன்று இந்திய சிந்தனைகளில் என்னவாக இருக்கிறது என்பது. காலனியாதிக்கத்தின் எச்சமான ஆங்கிலமே இன்று நாம் உலகுடன் தொடர்புகொள்ளும் ஊடகம், அதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அது காலனியாதிக்க மனநிலையை தன்னுள் கொண்டதும்கூட. இந்த முரண்பாடு சிக்கலானது.

காலனியாதிக்கம் இந்தியாவில் ஓர் ஆளும்வர்க்கத்தை, ஓர் உயர்குடிமரபை உருவாக்கி அதன் மொழியாக ஆங்கிலத்தை நிறுத்தியது. ஆங்கிலமே இந்தியாவின் அறிவியக்கமொழியாக, கல்விமொழியாக இருப்பதனால் கல்விகற்பதே இந்திய யதார்த்தத்தில் இருந்து ஓர் எழுத்தாளனை அகற்றுவதாக ஆகிவிட்டது. இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் ஏறத்தாழ அனைவருமே இந்த விலக்கம் கொண்டவர்கள்.

மூன்று வகை விலக்கம். ஒன்று மிதப்பான மேட்டுக்குடித்தன்மை. மேலோட்டமான விளையாட்டுத்தன்மை. சேதன் பகத் அல்லது அமிஷ் திரிபாதி உதாரணம். அல்லது கல்வித்துறை சார்ந்த ஆய்வுத்தன்மை. உதாரணம், அமிதவ் கோஷ். அல்லது மேலைநாட்டு வாசகர்களை மட்டுமே கருத்தில்கொண்டு எழுதுவது. சல்மான் ருஷ்தி அல்லது விக்ரம் சேத்.

இந்த விசித்திர நிலைமை ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல கண்டங்களைச் சேர்ந்த இலக்கியத்துக்கு உண்டு. ஆங்கிலமே உலகுக்கான தொடர்புமொழி என்பதனால் இந்தியாவில் இருந்து உருவாகும் உயர்குடி எழுத்தே இந்திய எழுத்தாக உலகமெங்கும் சென்றடைகிறது. அந்த எழுத்து இந்தியாவின் கலாச்சார நுட்பங்கள் அற்றது. இந்தியாவுக்குரிய உணர்வுநிலைகளும் இந்தியாவிற்குரிய மெய்யான சமூகச்சிக்கல்களும் வெளிப்படாததும்கூட.

இன்னொன்றும் உண்டு, இந்த ஆங்கிலவழி இலக்கியம் ஆங்கிலத்தில் வாசிக்கும் வாசகர்களுக்காக சமைக்கப்படுவது. ஆகவே பண்பாட்டு நுட்பங்கள் குறைக்கப்படுகின்றன. மேலைவாசகர்களுக்கு புரியும் விஷயங்கள் மட்டுமே அளிக்கப்படுகின்றன. மேலைநாட்டு வாசகர்கள் ஏற்கனவே அறிந்த, ஏற்றுக்கொண்ட கருத்துக்கள் கொண்டவை மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. மேலைநாட்டில் இருந்து கற்கப்பட்ட உத்திகளே கையாளப்படுகின்றன. இது உண்மையில் ஒரு போலி இலக்கியம். இதை வாசிப்பது எளிது, ஆனால் இது வெறும் ‘கதை’ தான்.

நல்ல எழுத்து வாசகனுக்கு ஓர் அறைகூவலை அளிக்கும். அவன் அந்த தடையை மீறி வாசித்தாகவேண்டும். மெய்யான இந்திய இலக்கியம் மேலைவாசகன் முயன்று, பொறுமையுடன் அணுகியாகவேண்டிய ஒன்றாகவே இருக்கமுடியும். ஏன் அந்த கவனத்தை அளிக்கவேண்டும்? ஏனென்றால் நான் அந்தக் கவனத்தை அமெரிக்க- ஐரோப்பிய எழுத்துக்கு அளித்திருக்கிறேன்.

பௌலா பி.கே.போட்ஸ்

இன்றைய இலக்கியம் எந்த அளவுக்கு வட்டாரத்தன்மை கொள்கிறதோ அந்த அளவுக்கு உலகுதழுவியதாக ஆகிறது என்பது என் கருத்து. உலகம் அதையே கவனிக்கவேண்டும். ஏனென்றால் சராசரிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும் உலகுக்கு எதிரான நம் கலகம் என்பது அதுதான். இலக்கியத்தின் தலையாய பணி என்பது அதுவே.

ஏறத்தாழ ஒரு மணிநேரத்துக்கு மேல் கேள்விபதில் நீடித்தது பெரும்பாலான வினாக்கள் நான் பேசிய ‘அசல்தன்மை’ ‘உள்ளூர்த்தன்மை’ ஆகியவற்றை ஒட்டியே அமைந்தன. எழுத்தாளர் ஜெரால்டைன் தெற்கு கெரேலினாவிலுள்ள தன் தனித்த வட்டாரப் பண்பைப்பற்றி சொன்னார், அதைப்பற்றி மட்டுமே எழுதவேண்டும் என்னும் எண்ணம் என் உரையின் வழியாக உருவாகியது என்றார்.

Geraldine. Auther of “Eating Pigfeet in the dark!”

ஆலன் மிக முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்டார். “எப்படி ஒருவர் தனக்கான அறம் என்பதை கண்டடைவது?” “ஒருவர் இரண்டு பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா?” இரண்டுக்கும் அவரே சொந்தமாக விடைகளைத் தேடவேண்டும் என்று நான் சொன்னேன். வாழ்நாள் முழுக்க நீடிக்கும் இத்தகைய வினாக்களில் இருந்தே எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

ஆலன் போல எதிர்காலத்தில் எழுதக்கூடும் என எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை அளித்த பதினைந்து இளைய தலைமுறையினரையாவது இந்தப் பயணத்தில் சந்தித்தேன். இந்த அமெரிக்கப் பயணம் ஒவ்வொரு நாளும் தீவிரமான நம்பிக்கையை, கனவை உருவாக்கிக்கொண்டே செல்கிறது.

அமெரிக்க எழுத்தாளர்களுடனான இச்சந்திப்பு ஒரு சிறிய தொடக்கம். அவர்களை என்னால் தீவிரமாக பாதிக்கமுடிகிறது என்பது எனக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. அமெரிக்காவில் பள்ளிமுதல் கல்லூரிவரை என் சொற்கள் ஆழமாகவே சென்று சேர்கின்றன என்பதை இப்பயணத்தில் உறுதிசெய்து கொண்டேன்.

இந்த அரங்குகள் ஒரு பயிற்சிக்களமும் கூட. நான் இரு வகையிலேயே இதுவரைச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். என்னால் மிகமிக இளையதலைமுறையினரிடம் எப்போதுமே தீவிரமாக தொடர்புகொள்ள முடிகிறது. பிற எழுத்தாளர்களை பாதிக்கமுடிகிறது. அது இங்கும் நிகழ்கிறது. அத்தகைய நீடித்த செல்வாக்கை எப்போதும் மிக அடித்தளத்தில் இருந்து சிறிது சிறிதாகவே உருவாக்கி எழுப்ப முடியும். ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட நிறுவனங்கள், செயல்முறைகள், ஆளுமைகள் எனக்கு பெரிதாகப் பயன்படவும் மாட்டார்கள். நானே என் வழியை உருவாக்கியாகவேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.