வளைகுடா பகுதியில்- பாலாஜி
அன்புள்ள ஜெ,
இந்த முறை சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி பிரயாணத்தின் பொழுது உங்களுடன் இருந்த மூன்று நாட்களும் மிகப்பெரும் உணர்வெழுச்சியை எனக்குள் ஏற்படுத்தியது. மனம் தொடர்ந்து ஒரு உச்சத்திலேயே அலை பாய்ந்து கொண்டிருந்தது. உங்களை ஒரு பெயராக அறிந்த அந்த நாள் முதல் ஒரு நாள் கூட உங்கள் பெயரை நினைக்காமல் கடக்காத இந்த நாள் வரை தொகுத்து கொள்ளத் தோன்றியது.
விகடன் உதவியால் முதல் அறிமுகம். உங்கள் தளம் அதிகம் புரிந்ததில்லை என்பதனாலும், மனம் அன்று குப்பைகளிலேயே உழன்றதனாலும், ஒரு இடைவெளி. மீண்டும் சாரு அவர்களின் புண்ணியத்தால் உங்கள் பக்கம் வந்தேன். இந்த முறை வாசிப்பில் சிறு முன்னேற்றம், கூடவே முயன்று வாசிக்க நினைத்ததனாலும், உங்களைப் பற்றிக் கொண்டேன். அதிலிருந்து இடரில்லை.
இந்நிலையில் உங்கள் அமெரிக்க வருகை (2009 என்று நினைவு) எனக்குள் ஒரு குதூகலத்தை ஏற்படுத்தியது. Folsom வந்திருந்த உங்களை சந்திக்க கலந்துரையாடல் நடந்த அந்த அறை வாசல் வரை வந்து, எதோ ஒரு அற்ப காரணத்துக்காக திரும்பிச் சென்றதை நினைத்து இன்று வரை வருந்துகிறேன். அப்பொழுதே அதைப் பற்றி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி புலம்பியுமிருக்கிறேன். பிறகு ஏழாம் உலகம் வாசித்து முடித்து, அந்த கொந்தளிப்பு அடங்காமல் தவித்து, அதைப்பற்றியும் உங்களுக்கு எழுதி மீண்டேன்.
2012-ல் விடுமுறையில் சென்னை வந்திருந்த பொழுது, ஜோ டி குருஸ் அவர்களுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததற்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் கலந்து கொள்வது குறித்த செய்தி தளத்தில் கண்டு, உற்சாகத்தோடு உங்களை சந்திக்க லயோலா காலேஜ் வந்தேன். பேசுவதா இல்லையா என்ற குழப்பம் தாண்டி பேசும் துணிவு குறித்த குழப்பத்தோடு முதன் முதலில் உங்களைப் பார்த்தேன். யாருடனேயோ உரையாடிக் கொண்டிருந்த நீங்கள் தற்செயலாக திரும்பிய பொழுது உங்கள் கண்கள் என்னைத் தொட்டு மீண்டன. எனக்கு முதலில் மிகவும் வித்தியாசமாக தெரிந்தது அந்தக் பளிங்குக் கண்கள். வசீகரமாகவும் இருந்தன அதே நேரம் தள்ளி நிற்கவே தோன்றியது. இரண்டு மூன்று முறை உங்களை நெருங்க முயன்று முயற்சியைக் கைவிட்டேன்.
பிறகு 2015-ல் மீண்டும் உங்கள் அமெரிக்க விஜயம். இந்த முறை சான் ஹோஸேயில் உங்களுடன் திரு. பி. ஏ. கிருஷ்ணன் அவர்களும் இருந்த நிகழ்வு. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடன் பேசத் தொடங்கி, சரளமாக அவரது நாவல்கள் தொடங்கி கட்டுரைத் தொகுப்புகள் வரை பல விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தத் துணிவில், நிகழ்ச்சி முடிந்து நீங்க மேடையிறங்கியவுடன் அருகில் நெருங்கினால், அதே பளிங்குக் கண்கள். பேச முடியாமல், உங்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். மேலும் சிலர் சூழ்ந்து கொண்டனர். எவரும் பேசத் தொடங்குமுன், அச்சூழலை எப்படி சரியாகப் புரிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. சட்டென்று இலகுவாகி, சினிமா, இயக்குனர் ஷங்கர், 2.0 என்று நீங்கள் பேச சிலர் உற்சாகமானார்கள். எதுவும் பேசத் தோன்றாமல், வாசல் வரை வந்து பிரிந்தேன். அந்த சமயத்தில் வேறு தனிப்பட்ட கூடுகைகள் நடக்கும் விவரங்கள் தெரியாமல் அப்படியே விட்டு விட்டேன்.
2016-ல் மீண்டும் ஒரு விடுமுறை. மற்றுமொரு இந்தியப் பயணம். இந்த முறை நீங்கள் காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரியில், “காந்தீயம் தோற்கும் இடங்கள்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை கேட்க வந்தேன். மேடை நிகழ்வுகள் அபாரம். உங்கள் உரை ஒரு பக்கம், சாரதா நம்பி ஆரூரனின் ஆறுமுக நாவலர் குறித்த பேச்சுக்கு உங்கள் அற்புதமான எதிர்வினை (உண்மைக்கு நெருக்கமான மற்றொரு உண்மை) இன்னொரு பக்கமுமாக அற்புதமாக அமைந்தது. நிகழ்வு முடிந்ததும் மீண்டும் உங்களை சந்திக்க காத்திருந்தேன்.
அப்பொழுது அருகில் உங்களுக்காக சுகா அவர்களும் காத்திருந்தார். அவரைப் பார்த்ததும், அவரது மூங்கில் மூச்சு படித்திருந்த பரவசத்தில், அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில், தஸ்தாயெவ்ஸ்கியின் பேனாவிலிருந்து குதித்து வந்த பாத்திரத்தைப் போல முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டிருந்தேன். எதோ ஒரு தருணத்தில் அவர் திரும்ப, சட்டென்று ஒரு உந்துதலில் எல்லாம் மறந்து சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டு அவரைத் தள்ளி நிற்க வைத்தேன்.
இந்தப் பதட்டத்தில் நான் இருக்கும்பொழுதே நீங்கள் அருகில் வந்து விட்டீர்கள். அருகில் உங்கள் பார்வை என் மேல் பட்டுத் தாண்டியது. மீண்டும் பளிங்கு. மீறி ஏதேனும் பேசலாம் என்று முடிவெடுத்த நிலையில், அங்கு புயலென நுழைந்தார் ஒருவர். உங்கள் அருகே வந்து கை குலுக்கி, கட்டியணைத்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் தான் ராம்ஜி யாஹூ என்று யாரோ சொல்ல பிறகு அறிந்தேன். பிறகு அந்தத் தருணம் கடந்தது. மீண்டும் வாசல் வரை உங்களைத் தொடர்ந்து வந்து பின் பிரிந்தேன்.
இதற்குப் பிறகு வழக்கம் போலவே உங்கள் வலைதளம் மூலம் உங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். 2020-ல் தனிமையின் புனைவுக்களியாட்டு எழுதிய நேரத்தில், வாசகர்களையும் கதைகள் எழுதக் கேட்டீர்கள். அந்த நேரத்தில், நானும் ஒரு சிறு அனுபவத்தை எழுதி அனுப்பினேன். அது சிறுகதையாகாது என்ற உண்மை தெரிந்திருந்தும் அனுப்பினேன். அதையும் வாசித்து அதன் பிரச்சினையை மூன்றே வரிகளில் கனிவாக விளக்கியதை என்றும் மறக்க முடியாது.
மீண்டும் 2022-ல் தங்களின் மற்றுமொரு அமெரிக்கப் பயணத்தில், வால்நட் கிரீக்கில் நிகழ்ந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். அங்கு தான் இப்பொழுது VLC குழுமத்தில் இருக்கும் அனைவரையும் முதலில் கண்டேன். அன்று இருந்தது ஒரு சிறு குழு, நிறைவான சந்திப்பு. அன்றும் உங்கள் கண்களைப் பார்த்து தயக்கத்தோடே நின்றிருந்தேன். ஆனால் அருகிலிருக்கும் சந்தர்ப்பம் சற்று நீண்ட நேரத்துக்கு கிடைத்தது. அதை அனுபவித்துப் பிரிந்தேன்.
ஆனால் இந்த முறை (2025) தங்களின் வருகை, ஒரு புதிய தொடக்கம். சாரதா–பிரசாத்தின் இல்லத்தில் நடந்த சந்திப்பில், அசோகமித்திரனின் கதைகளை பேசி விவாதித்தோம். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் உங்கள் பார்வையை அறிய ஆவலுடன் பார்த்திருந்தேன். மேலும், விவாதத்தில் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் பேசும் போதும், உங்கள் இடத்திலிருந்து முயன்று அவர்களை கவனித்தது பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. விவாதம் முடிந்து, எங்கள் குழுமத்திற்கு சில ஆலோசனைகளை வழங்கிய பிறகு, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து நானும் கலந்து கொண்டேன். சில கேள்விகளையும் கேட்டேன். மிகவும் உற்சாகமான முதல் நாள் சந்திப்பு.
மறுநாள் காலை 10 மணிக்கு சான் மட்டையோ Barnes & Noble புத்தகக் கடையில் இருந்த நிகழ்வில் மீண்டும் சந்திப்பு. அந்நிகழ்வு நிறைவாக, நெகிழ்வாக இருந்தது. இவ்வளவு பேர் வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை. குறிப்பாக புதியவர்கள் சிலர் வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. இதில் நான் தனிப்பட்ட முறையில் நான் கொள்வது, என் மகன் உங்களிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு உங்கள் பதிலும். அன்று அவன் கேட்ட கேள்வி அவனைப் புதிதாக அறிய வைத்தது. கேள்விக்கு உங்கள் பதிலும் (“Dream in language. Become a writer.”), எனது நல்லூழ் என்றே ஏற்கிறேன். அவன் ஒருவித பரவசத்தோடு வீட்டில் சுற்றியதாக பிறகு அறிந்தேன். அதிகம் பேச நேரமில்லாமல் நான் மதியம் Folsom வந்துவிட்டேன். அங்கும் மாலையில் உங்களுடன் இருந்த சில மணி நேரம், அற்புதம் (உ. வே. சா குறித்த உரையாடல் நெகிழ்வாக இருந்தது). வீடு திரும்பும் பொழுது காரில் பத்மநாபா, ஸ்ரீ மற்றும் அவரது சகோதரர், குகன் மற்றும் சிந்து ஆகியோருடன் உங்கள் எழுத்துக்களைப் பற்றியும், இலக்கியமும், இன்ன பிற விஷயங்களையும் பேசிக்கொண்டே திரும்பினோம். முற்றிலும் மகிழ்வான நாள்.
மறுநாள் நாவல் பயிற்சிப் பட்டறை. நண்பர் பத்மநாபா கூறியது போலத்தான் நானும் உங்களுடன் நாள் முழுவதும் இருக்கலாம் என்றே கலந்து கொண்டேன். ஆனால் தொடக்கத்திலிருந்தே தெளிவான வரையறைகளுடன் கூடிய வகுப்பாக அமைத்தது, செறிவான ஒரு பயிற்சியாக இருந்தது. கரு மற்றும் பேசுபொருள் குறித்த வித்தியாசங்கள், கதையில் இருக்கக்கூடாத shift, பாத்திரங்களின் வரைவு போன்ற பல விஷயங்களை தொகுத்து அறிந்து கொண்டேன். தனிப்பட்ட முறையில் என்னைக் கவர்ந்தது, ஒரு புகைப்படத்தில் நாவலுக்கான கருவைக் கண்ட எழுத்தாளரின் சித்திரம். அதைத் தொடர்ந்து நானும் இங்கு தெருவில் நடக்கும் போதெல்லாம் கண்களை விரித்து ஏதேனும் கதைக்கரு கிடைக்கிறதா என்று தேடி வருகிறேன். நான் உற்றுப் பார்ப்பது ஏதேனும் பிரச்சனையை கொண்டு வரலாமென்றாலும், கரு கிடைத்தால் நல்லது!
இவையெல்லாம் கடந்து, அன்று மாலை 2 மணி நேரம் உங்களுடன் பல்வேறு விஷயங்களை நெருக்கத்திலமர்ந்து கேட்டுக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தது என் வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று. இந்த மூன்று நாட்களில் உங்களிடம் இருந்து பெற்றவையெல்லாம் ஓர் வரமே. எங்களின் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவரான உங்களிடம் நாங்கள் பெற்றுக் கொண்டது ஏராளம். இந்த செயலூக்கத்தைத் தக்க வைப்பது ஒன்றே நான் உங்களுக்குத் செலுத்தும் நன்றி.
அன்று நாவல் பயிற்சிப் பட்டறை முடிந்து விடை பெற்று, தத்துவ முகாமில் மீண்டும் உங்களை சந்திக்க போகிறேன் என்ற மகிழ்ச்சியில், நெஞ்சம் படபடக்க வீடு திரும்பினேன். வழியில் சட்டென்று உங்களுடன் இருந்த, இந்த மூன்று நாட்களும் அந்தப் பளிங்குக் கண்களை சந்திக்கவே இல்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.
பாலாஜி
அன்புள்ள பாலாஜி
அமெரிக்கா வருவதும், நண்பர்களைச் சந்திப்பதும் இப்போது அடிக்கடி நிகழ்வதாக ஆகிவிட்டது. உண்மையில் இந்தியாவில் நண்பர்களைச் சந்திப்பதுதான் குறைந்துவிட்டதாக புகார் சொல்கிறார்கள். இனிய நினைவுகள்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

