நமது சொற்கள்
வெள்ளிமலையில் பொழுதுபோகாமலிருக்கும்போது ஏதாவது கைபோனபோக்கில் படிப்பதுண்டு, அப்படிப் படித்த ஒரு நூல் கி.ரா 85, காலத்தை வென்ற கதைசொல்லி. செப்டெம்பர் 2007ல் வெளிவந்தது. கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்தது.
கி.ரா என்ற பெயர் இருக்கும் ஒரு நூல் சுவாரசியமாகத்தான் இருக்கும் என ஓர் எண்ணம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அதைப் படித்து முடித்தபோது பெரும் சலிப்புதான் மிஞ்சியது.
கிராவின் 85 அகவை நிறைவை ஒட்டி வெளியானது. கி.ராவே எனக்கு அனுப்பித்தந்த நூலை அப்போது சும்மா புரட்டிப் பார்த்துவிட்டு சுவாரசியமாக ஏதும் இருக்கப்போவதில்லை என எண்ணி அப்பால் வைத்துவிட்டிருக்கிறேன். அந்த எண்ணம் பொய்க்கவில்லை. இப்போது கி.ரா இல்லை. நூல் வெளிவந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் சுவாரசியமான ஒரு வரி கூட இல்லாத நூல் இது. எழுத்தாளர்கள், வாசகர்கள் உட்பட 31 பேர் இதில் எழுதியிருக்கிறார்கள்.
நம் மரபில் பெரியவர்களைப் பற்றி ‘நாலு நல்ல வார்த்தைகள்’ சொல்லவேண்டும் என ஒரு வழக்கமுண்டு. அதையேதான் அத்தனை பேரும் கடைப்பிடித்திருக்கிறார்கள். அத்தனை கட்டுரைகளிலும் கி.ரா. பற்றி ஒரே விஷயம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அன்பானவர், வீட்டுக்குப் போனவர்களை உபசரிப்பவர், அவர் மனைவி கணவதி அம்மாள் கணவனுக்கு உகந்த துணைவி, வருபவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவார் – மொத்த நூலிலும் இது மட்டும்தான். திரும்பத் திரும்ப இது மட்டும்தான்.
சொல்லப்போனால் எவருமே கி.ராவை கவனிக்கவே இல்லை. அவருடைய பழக்கவழக்கங்கள், பேச்சுமுறை எதுவுமே எவர் நினைவிலும் இல்லை. கிரா சுவாரசியமாகப் பேசுவார் என்கிறார்கள். என்ன பேசினார் என ஒருவருக்கும் ஒரு வரிகூட சொல்வதற்கில்லை. இதுதான் ஜெயகாந்தன் பற்றியும் எழுதப்பட்டது. ‘ராத்திரி முழுக்க பேசிக்கிட்டே இருப்பார், அற்புதமா பேசுவார்’. ஆனால் என்ன பேசினார் என்பது எவருக்கும் நினைவில்லை. இந்த மூடர்களிடமா அவர் அவ்வளவு பேசினார் என்று திகைப்பாக இருக்கும். சுவர்போல எதிரில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஏன் எதுவும் இவர்கள் நினைவில் இல்லை? காரணம் இவர்கள் எவருமே அவரை அறிய, அவருடன் இருக்க அவரை நோக்கிச் சென்றவர்கள் அல்ல. அத்தனை பேருக்கும் தங்களைத் தவிர எவரும் முக்கியம் அல்ல. ஆகவே அவர்கள் அவரைக் கவனிக்கவே இல்லை. இந்நூல் முழுக்க அத்தனை கட்டுரைகளும் கிராவுக்கு தான் எவ்வளவு முக்கியமானவன் என்பதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தன்னை கிரா எப்படி உபசரித்தார், தன்னுடன் எவ்வளவு அன்பாக இருந்தார் என்பதையே அத்தனை பேரும் எழுதியிருக்கிறார்கள்.
இவர்கள் நடுவே ஒரு கலைஞன் பிறந்து வாழ்ந்து மடிவதென்பது பெரும் அவலம்தான். அவனைச் சுற்றி அவனை எந்த வகையிலும் கலைஞனாகப் பொருட்படுத்தாத பாமரர்கள். அவர்களுக்கு கி.ரா ஒரு ‘வயசாளி’ மட்டும்தான். எந்த வயசாளியைப் பற்றியும் சொல்லும் பழகிப்போன உபச்சாரச் சொற்களை மட்டும்தான் அவரைப்பற்றியும் சொல்ல அவர்களால் முடியும்.
கி.ராவின் அத்தனை உரையாடல்களும் திகைக்கச் செய்யும் அவதானிப்பும் நுட்பங்களும் கொண்டவை. கிணறு தோண்ட இடம்பார்ப்பவர்கள் ஒரு கல்லை எடுத்து வாயில் போட்டு அதன்வழியாக இருபதடி ஆழத்தில் நீர் இருப்பதை கண்டறிந்துவிடுவது, மந்தையில் ஒரு ஆட்டின்மேல் மட்டும் உண்ணி அதிகமாக இருந்தால் அந்த ஆடு நோயுறப்போகிறது என்னும் கீதாரிகளின் கவனிப்பு, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தன் சீவாளியை தானே தயாரிக்கும் அழகு, அவர் வாசித்த நீளமான பாரிநாயனத்தில் தோடி அழகாக வெளிப்படும்போது கொஞ்சிக்குலவும் ராகங்களான செஞ்சுருட்டி போன்றவை சரியாக வராதது — ஓர் ஒன்றரை மணிநேர உரையாடலில் கி.ரா. சொன்னவை நான் பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு குறித்து வைத்தேன். கி.ரா பற்றி விரிவாகவே எழுதியுமிருக்கிறேன். பல உரையாடல்களில் பேசியுமிருக்கிறேன்.
அப்படி எத்தனையோ சொல்லலாம். கி.ரா எப்படிச் சாப்பிடுவார். (விரல்கள் மட்டுமே உணவை தொடும்) எந்த உடையை எப்படி அணிவார். பேசும்போது எப்படி அமர்வார். எப்படி சிரிப்பார். கி.ராவின் இடைச்செவலின் சித்திரம், அவருடைய வீட்டின் சித்திரம்கூட எந்தக் குறிப்பிலும் இல்லை. தேவதச்சன் சாதாரண உரையாடல்களில் கி.ரா பற்றி அழகான சித்திரங்களை அளித்திருக்கிறார். அவர் சொன்னபடி கிராமத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்ததும் சட்டை, வேட்டி இரண்டையும் கழற்றி மடித்து வைத்துவிட்டு ஒரு துண்டை கட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்கும் கிராவின் காட்சி என் கண்ணிலேயே இருக்கிறது. கி.ரா என்னும் கிராமத்து விவசாயின் அகம் வெளிப்படும் தருணம் அது. கிராவை கூர்ந்து கவனிக்கும் ஒருவரின் அகம்தான் அதை பதிவுசெய்ய முடியும்.
கி.ரா அகராதி தயாரித்த காலம் பற்றி நாலைந்துபேர் இதில் குறிப்பிடுகிறார்கள். அகராதி தயாரித்தார் என்பதற்கு மேல் அக்குறிப்புகளில் ஒன்றுமே இல்லை அவற்றில். அப்பெரும்பணியை செய்யும்போது அவர் எப்படி பணியாற்றினார், தரவுகளை எப்படி எழுதி வைத்திருந்தார் எதைப் பற்றியும் பேசப்படவில்லை. அகராதி தயாரிக்க அட்டைகளை அடுக்குவது, குறிப்பேடுகள் செய்வது என இரண்டு வழிகள் உண்டு. இரண்டில் கிரா எதை கடைப்பிடித்தார்? எவரெல்லாம் அவருக்கு உதவினார்கள்? ஒரு வரி கூட இல்லை
பெரும்பாலான கட்டுரைகளில் அதை எழுதியவர்கள் தங்களைப் பற்றியே எழுதியுள்ளனர். தங்களை கீழிறக்கி, கி.ராவை மேலேற்றி அதை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த கீழிறக்கல் ஒருவகை சம்பிரதாய அடக்கம் மட்டுமே. அவர்களால் அவர்களைப் பற்றி மட்டுமே எழுத முடியும் என்பதைக் காட்டுவது அது. தன்னையும் தன் உலகையும் கடந்து எதையுமே கவனிப்பதில்லை என்பதற்கான சான்று.
கி.ரா பற்றி வழக்கமான வாயுபச்சாரங்களை அள்ளிக் குவிக்கிறார்கள் கட்டுரையாசிரியர்கள். அப்படி எழுதுவது உயர்ந்தது, நெகிழ்ச்சியானது என்றும் நம்புகிறார்கள். ஆகவே அதற்கு அப்பால் யதார்த்தமாகவோ நுணுக்கமாகவோ எவரேனும் எதையாவது சொல்லிவிட்டால் புண்பட்டும் விடுவார்கள். கிரா பீடி பிடிக்கும் தகவலைப் பதிவுசெய்து அவரை அவமானப்படுத்திவிட்டார்கள் என ஒரு கோஷ்டி கிளம்பும்.
தமிழ்ச்சமூகத்தின் பொதுமனநிலையை காட்டுவது இது. முனிவர்கள், சமயக்குரவர்கள், அரசர்கள் அனைவரைப் பற்றியும் ஒரே ‘டெம்ப்ளேட்’ கதைதான். அண்மையில் மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கும் தொன்மத்தில் வாழும் அகத்தியருக்கும் ஒரே கதையைச் சொல்கிறார்கள். ராஜராஜ சோழன் சிற்பிக்கு வெற்றிலை சுருட்டிக் கொடுத்த கதையை கொஞ்சம் மாற்றி மு.கருணாநிதிக்கும் சொல்கிறார்கள். எழுத்தாளர்களுக்கான ஒரு ‘டெம்ப்ளேட்’ உருவாகியிருப்பதை இந்நூலில் காண்கிறோம்.
எத்தனை வெளிநாட்டு ஆசிரியர்களை பிற எழுத்தாளர்கள் அப்படி நுணுக்கமான சொல்லோவியங்களாக ஆக்கியிருக்கிறார்கள். ஏன், வைக்கம் முகமது பஷீர் பற்றி எத்தனை அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. பி.கே.பாலகிருஷ்ணனின் ‘மாயாத்த சந்தியகள்’ என்னும் நூல் ஓர் அற்புதமான படைப்பிலக்கியம். தமிழில் அதற்கிணையானவை சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல்கள். சு.ராவின் நூல்கள் அவமதிப்பவை என சி.சு.செல்லப்பா, ஜி.நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, பிரமிள் அனைவரின் உறவினரும் ஆதரவாளர்களும் கொந்தளித்துவிட்டார்கள்.
ஜி.நாகராஜன் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஒரு நூல் பின்னடைவு (நாளை மற்றுமொரு நாளே. கிரியா பதிப்பு) அவரை அவமதிக்கின்றது என்று அன்று பலர் வசைபாடினர். அதில் ஜி.நாகராஜன் குடிப்பவர் என்ற தகவல் இருக்கிறதாம், ‘குடிப்பார், அதையெல்லாம் ஏன் எழுதணும்?’ என்றவகை வசைகள். அவற்றை சுந்தர ராமசாமி ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் சுந்தர ராமசாமி பற்றிய என் நூல் அவருக்கு அவமதிப்பு என சு.ராவைச் சார்ந்தவர்கள் மனம்புழுங்கினர். இன்று சு.ரா பற்றிய முழுமையான நினைவோவியமாக அடுத்த தலைமுறையிடம் சென்றிருப்பது அந்நூல் மட்டுமே.
கி.ரா பற்றிய இந்நூலில் இரண்டு நுண்ணிய அவதானிப்புகள தான் உள்ளன என்பது என் மதிப்பீடு. குக்கரின் விசில் ஓசை கி.ராவுக்குப் பிடிக்காது என்பதனால் கணவதி அம்மா அதன் ‘வால்வ்’ எடையை ஒரு ஸ்பூனால் மிக மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக் எடுத்துவிடுவார்கள் என்னும் காட்சி. பீடி புகைக்கும் காலகட்டத்தில் கி.ரா பீடிகளின் நுனியை ஒரு கத்தரிக்கோலால் கச்சிதமாக நறுக்குவார், அதற்காக ஒரு கத்தரிக்கோலை மேஜைமேல் வைத்திருப்பார் என்னும் தகவல். நான் சுருக்கமாகப் பழகிய வகையிலேயே கி.ரா பற்றி அப்படி எவ்வளவோ சொல்லமுடியும். இடைச்செவலில் மேஜை மேல் ஒரு ஈர்க்குச்சி வைத்திருந்தார். ஒட்டிக்கொண்டிருக்கும் புத்தகங்களின் பக்கங்கள் கிழியாமல் அகற்றுவதற்காக. அப்படிப்பட்ட அவதானிப்புகளே ஒரு கலைஞனை, ஆளுமையை எதிர்வரும் தலைமுறைக்குக் காட்டுபவை.
கி.ரா பற்றிய நுண்ணிய அவதானிப்புகள் இக்குறிப்புகளை எழுதிய படைப்பாளிகள் பலரிடம் இருக்கும். அவற்றை அவர்கள் தேவை என்றால் பேச்சில் சொல்லவும் செய்வார்கள். ஆனால் எழுத மாட்டார்கள். சம்பிரதாயமான சொற்களை மட்டுமே சொல்வார்கள். கொஞ்சம் தனிப்பட்ட முறையில், கொஞ்சம் கூர்மையாக எதையேனும் சொல்லிவிட்டால் ‘ஆ, அவமதிப்பு!’ என்று ஒரு பாமரக்கோஷ்டி கிளம்பும் என அவர்களுக்கு தெரியும். எதற்கு வம்பு என அந்த சம்பிரதாயச் சொற்களைச் சொல்கிறார்கள். ஆனால் எழுத்தாளன் என்பவன் இந்த பாமரக்கும்பலை, (அவர்களில் பலர் பாமர எழுத்தாளர்கள் என்றாலும்) அலட்சியம் செய்ய கற்றிருக்க வேண்டாமா என்ன?
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

