முடிவிலா ஆடல்!
அன்புள்ள ஜெ,
ஒரு புத்தகத்தை பற்றி என் வாழ்வில் முதன்முறையாக முயற்சித்து எழுதும் கடிதம். குறைகள் இருப்பின் விட்டு விடவும் அல்லது சுட்டிக்காட்டவும். தங்களின் நேரத்திற்கு நன்றி.
அந்த புத்தகம் தங்களின் கடல். அப்புத்தகத்தில் முன்னுரையில் தஸ்தயேவ்ஸ்கியன் சந்தர்ப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே அதை படிக்கும்பொழுது குற்றமும் தண்டனையும் இரஸ்கலினிக்கேவ், சோனியா உரையாடலும், கரம்சேவ் சகோதரர்கள் நாவலின் அல்யோன்ஸாவின் உரையாடலும் கடல் கதையும் மாறி மாறி மனதில் ஒரு திரை உருவகமாக வந்து கொண்டே இருந்தது. என்னை பொறுத்தவரை இது இன்னொரு தஸ்தயேவஸ்க்கின் கதை என்ற உணர்வே இருந்தது. நீங்கள் கூறியது போல புதுமை (Novelty) எதுவும் இல்லை என்றாலும் மானுட ஆத்மா மற்றும் அவற்றின் விடுதலைதானே இத்தனை ஆயிரம் ஆண்டு காலமும் மனிதர்களால் தேடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த மானுடர்களில் சிலராக சாம், பெர்க்மான்ஸ், தாமஸ், செலினா, பியா, செட்டி என்று வருகிறார்கள்.
சாம் தேவனின்பால் கொண்ட நம்பிக்கையில் அன்பின் மூலம் தாமஸ் என்னும் சமூகத்தின் இருட்டான பக்கங்களால் பாதிக்கப்பட்ட ஒருவனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் இறங்குகிறார்.
பெர்க்மான்ஸ்/ Lucifer குடும்பத்தின் வறுமையால் வேறு வழியற்று Seminariyயில் சேர்ந்து ஓரளவு குடும்பத்தின் வறுமையை சமாளித்து எழுந்து வரும் வேளையில் தனிப்பட்ட / தவறான நடவடிக்கையில் ஈடுபடும் பொழுது கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட அதற்கு காரணம் சாம் என்பதும் அது சாமின் மீதான விரோதம் / வன்மம் ஆக மாறி சாமை பழிவாங்குவதை விட எந்த நம்பிக்கையில் சாம் பெர்க்மான்ஸ்சை குற்றம் சுமத்தினாரோ அந்த நம்பிக்கையை உடைப்பதே குறிக்கோளாக எடுத்துக் கொள்கிறார்.
தாமஸ்/ தொம்மை தம் அம்மாவின் ஒவ்வொரு வலியையும் பார்த்து வலியும் வேதனையுமாய் வளரும் குழந்தை. தன் அம்மாவின் வலி மிகுந்த இறப்பும் அதற்கு காரணமான இந்த சமூகத்தின் மீதான கோபமுமாக வளரும் குழந்தை/ இளைஞன்.
இந்த மூவருக்கிடையான வாழ்க்கை. தேவன், சாத்தான் மற்றும் மனிதன் என்று எடுத்துக் கொள்ளலாம்.
செட்டி, செலினா, பியா என்று அந்த மூவரின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள். செட்டி தாமஸின் வாழ்க்கையிலும், செலினா சாம், பெர்க்மான்ஸ் வாழ்க்கையிலும், பியா தாமஸ், சாம், பெர்க்மான்ஸ் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
பியாவை பற்றி படிக்கும் பொழுது குற்றமும் தண்டனையும் சோனியாவை பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பியா தன் சிறு வயதில் நிகழ்ந்த தனி தாயின் மரணத்துக்கு பின் வாழ்வின் எந்தவொரு கசடுகளையும் தன்னை பாதிக்காமல் சிறு குழந்தையை / தேவதையை போல வளர்ந்தவள். சோனியா அதற்கு நேர் எதிரான குடிகார தந்தை, குடும்பத்தின் வறுமை, மாற்றாந்தாயாக இருந்தாலும் அவளின் துயரம், அவள் குழந்தைகளை வளர்க்க படும்பாடு, இறுதியில் பாலியல் தொழில், அங்கு வரும் மனிதர்களின் குணக்கேடுகள் என்று வாழ்வின் அனைத்து கசடுகளையும் கண்டு வளர்ந்தவன். இறுதியில் பியா, சோனியா என்று இருவருமே தேவதைகளாக தாமஸ், பெர்க்மான்ஸ், இரஸ்கலினிக்கோவ் என்ற மூவரையும் நல்வழிபடுத்துகின்றனர்.
சாம், பெர்க்மான்ஸ் மற்றும் செலினா மூவரிடையே உருவாகும் உணர்வுகள். சாம், செலினா இருவரிடையே உருவாகும் ஒரு கண தடுமாற்றம் மூவரின் வாழ்க்கையையும் மாற்றுகிறது. அதில் பாதிக்கப்படுவது பியா. அந்த பாதிப்பு பியாவின் மன வளர்ச்சியை பாதித்து இறுதியில் தன் தந்தைக்கு நன்மை செய்கின்றது.
இப்படி அனைவரையும் பைபிள் என்ற ஓற்றைச் சரடு வழியாக கடலின் உருவகமாக இணைக்கின்றது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது வெண்முரசு எழுதிய காலகட்டத்தில் பைபிளை இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு இன்றைய தமிழில் எழுத வேண்டும் என்று நீங்கள் கூறி இருந்தது நினைவுக்கு வந்தது. அதையும் நீங்களே எழுத வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
புத்தகத்தை படித்த பின்பு தான் கடல் திரைப்படத்தை பார்த்தேன். அந்தப்படம் வெளியான காலகட்டத்தில் எந்தவொரு படமும் பார்க்க கூடிய மனநிலையில் நான் இல்லை. படத்தை பற்றி அல்லது அதன் தோல்வியை பற்றி எழுத சில விஷயங்கள் உள்ளன. இக்கடிதம் சரியாக இருந்தால் கூறுங்கள். அதை பற்றியும் எழுதுகிறேன்.
மீண்டும் தங்கள் நேரத்திற்கு நன்றி
அன்புடன்
முத்துவேல்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

