தக்ஷசிலா பல்கலையின் மதிப்புறு முனைவர் பட்டம்

தமிழ் எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தமிழ்நாட்டுக் கல்வித் துறையில் இருந்து கௌரவங்கள் கிடைப்பது இயல்பானதாகவும், தகுதி அடிப்படையில் ஆனதாகவும் பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம் தமிழ் கல்வித்துறையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள், அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் முறையில் இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மிக மிகக் குறைவானவர்கள் என்பதுதான்.

ஏனென்றால் தமிழ்க்கல்வித்துறை பெரும்பாலும் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்தது. தமிழகத்தில் பண்பாடு, இலக்கியம் சார்ந்த கல்வி முழுமையாகவே தேக்கமடைந்து பொருளற்றதாக ஆகியுள்ளது. இன்றைய கல்வித்துறையில் இருந்து பண்பாடு, இலக்கியம் சார்ந்து குறிப்பிடும்படியான ஆளுமைகள் ஒரு சிலர் தவிர எவரும் கண்களுக்குப் படவில்லை. வரலாற்றாய்விலேயே கூட சென்ற தலைமுறையில் இருந்த அறிஞர்களுடன் ஒப்பிடும் அளவுக்குப் பெரிய ஆளுமைகள் இல்லை. அதற்கு அரசுகள் பண்பாட்டுக்கல்வியை புறக்கணிப்பது, கல்லூரி ஆசிரியர்ப்பணியில் தகுதியை விட லஞ்சம் முக்கியத்தகுதியாகக் கருதப்படுவது என்று பல காரணங்கள் உள்ளன.

பொதுவாகக் கல்வித்துறை இலக்கியத்தை இலக்கியத்தை ஆய்வுக்கான கச்சா பொருள் மட்டுமாகவே அணுகுகிறது. ஆகவே அந்தந்த காலகட்டத்தில் செல்வாக்குடன் ஓங்கி இருந்த படைப்புகளையே அவர்கள் இலக்கியம் என்று கருதுவார்கள். அப்படி சமகாலத்தில் படைப்புகள் ஓங்கியிருப்பதற்கு அவை கேளிக்கை வாசிப்பு வழியாக அடையும் வணிக வெற்றி ஒரு காரணமாக இருக்கிறது. அத்துடன் அரசியல்  சார்ந்த தொடர்பும் அதன் விளைவான அதிகாரமும் இன்னொரு காரணமாக இருந்திருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ்க்கல்வித்துறையின் கடந்த காலத்தை எடுத்து பார்த்தோம் என்றால் அது தொடக்க காலத்தில் முதன்மையாக ராஜாஜி கோஷ்டியின் பிடியில் இருந்தமை தெரியும். அந்த அரசியல் சார்புடன், வணிக ஏற்பும் கொண்டிருந்தவர்கள் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்தனர். உதாரணம், கல்கி. பின்னர் காங்கிரஸுக்கு அணுக்கமானவராக இருந்த அகிலன், நா.பார்த்தசாரதி. இன்று பெரும்பாலும் எவராலும் நினைவு கூரப்படாத பல படைப்பாளிகள் ராஜாஜி குழு என்பதனாலேயே சாகித்ய அகாடமி போன்ற இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். உதாரணம் அ.ஸ்ரீனிவாச ராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை, கு.ராஜவேலு, மீ.ப.சோமு.

பின்னர் திராவிட இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றிய போதும் திராவிட இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர்களுக்கு எழுத்தாளர்கள் ஏற்புகள் பெற்றனர். சுரதா முதல் வைரமுத்து வரை அந்த அணி இன்றும் தொடர்கிறது. தமிழ்க்கல்வித்துறையில் ஆசிரியர்த்தொழிற்சங்கம் வழியாக இடதுசாரிகளின் செல்வாக்கும் உண்டு. ஆகவே இடதுசாரிகள் கல்வித்துறை ஏற்பு பெற்றனர். ஆனால் திராவிட இயக்கம் எந்த எழுத்தாளரையும் பெரிதாக முன்வைக்கவில்லை. அவர்கள் அரசியல்தலைவர்களையே முதன்மை எழுத்தாளர்களாக முன்வைத்தனர். அரசியல்த் தலைவர்களை புகழ்ந்து துதிபாடி பதவிகளை அடைய கல்வியாளர்கள் அவர்களை இலக்கியவாதிகளாக கொண்டாடும் உத்தியை கண்டடைந்தனர் எனலாம்.

நவீன இலக்கியம் எப்போதும் கல்வித்துறையின் எல்லைக்கு வெளியே தனது செயல்பாட்டை வைத்துக்கொண்டது. அதற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று நவீன இலக்கியம் என்பது எப்போதுமே எதிர்ப்பு தன்மை கொண்டது, மையப் போக்குகளுக்கு மாறாக நிலைகொள்வது என்பதுதான். ஆகவே அது அமைப்புகளிடமிருந்தோ மையப் பெரும்போக்கில் இருந்தோ தனக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பதும் நியாயம் அல்ல. ஆனால் ஓர் இயல்பான கல்விப்பரப்பு என்பது பெரும்பாலும் மையஓட்டத்தையும் , அதிகாரத்தையும் சார்ந்திருக்கும் போதேகூட அதில் ஒரு சிறு பகுதியேனும் மாற்றுச் சாத்தியங்களையும் எதிர்ப்பு லைகளையும் கருத்தில் கொண்டாக வேண்டும். அதுதான் உலகம் எங்கும் கல்வித்துறையில் நாம் பார்க்க கிடைப்பது. அது இங்கே அறவே இருக்கவில்லை.

அவ்வாறு மாற்றுப்போக்கையும் எதிர்ப்போக்கையும் கருத்தில்கொள்ளவில்லை எனில் கல்வித்துறை தேக்கமடைந்து அறிவார்ந்த தகுதியை இழந்துவிடும்.  பழம்பொருட்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு துறையாக ஆகிவிடும்.  வாழும் இலக்கியம் என்பது எதிர்ப்பும், மையவிலக்கமும் , தனிநபர்போக்கும் கொண்டதாகவே இருக்கும். அதை தவிர்த்தால் கிடைப்பது சம்பிரதாயமான எழுத்துக்கள் மட்டுமே. அவற்றிலிருந்து சம்பிரதாயமான கருத்துக்களே கிடைக்கும். அவை கல்வித்துறையை முன்னகரச் செய்வன அல்ல.  இந்த முரணியயக்கம் தமிழ் கல்வித்துறையில் அநேகமாக இல்லை என்பதுதான் அதன் மீதான முதன்மையான விமர்சனமாக இருந்து வருகிறது.

சமகால அதிகார அரசியல், அரசு ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுபவர்களே கல்வித்துறைக்கு பொதுவாக உவப்பானவர்கள். வரலாற்று நுண்ணுணர்வை, தன் பண்பாட்டின் நனவிலியை வெளிப்படுத்தும் படைப்பாளிகள் கல்வித்துறையைச் சென்றடைவது மிக அரிது. இரண்டு காரணங்கள். ஒன்று, அத்தகைய மெய்யான இலக்கியம் ஓர் இலக்கியப்படைப்பாளியின் ஆழுள்ளத்தின் மொழிவழி வெளிப்பாடாக இருக்கும். தன்னை சமூகத்தின் ஓர் அலகாக சரியாக அமைத்துக்கொண்டு, தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதன் வழியாக அப்படைப்பாளி சமூக ஆழ்மனமாக வெளிப்படுகிறான். ஆனால் மேலோட்டமான நோக்கில் அது ஒரு தனிமனித அகவெளிப்பாடாக மட்டுமே தோன்றும். மேலும் அவ்வாறு தனிமனிதன் வழியாக வெளிப்படும் பண்பாட்டின் ஆழம் என்பது சமகாலம் சார்ந்ததாகவும், நடைமுறை சார்ந்ததாகவும் இருக்காது. மாறாக எதிர்காலம் சார்ந்ததாகவும், ஒட்டுமொத்தப் பார்வைகொண்டதாகவும் இருக்கும். ஆகவே அது கல்வித்துறை ஏற்கனவே கையில் வைத்திருக்கும் அளவுகோல்களுக்கு எளிதில் அகப்படாது.

தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்க்கல்வித்துறைக்கும் உள்ள முரண்பாடு மட்டுமல்ல இது, உலகஅளவிலேயே இப்பிரச்சினை உள்ளது. இந்த வேறுபாட்டினால்தான் சாதாரண அரசியல்மனம் கொண்ட கல்வியாளர்களால் நவீன இலக்கியத்தை உணர முடிவதில்லை, அவர்கள் அதை ஏதோ தனிமனிதர்கள் தங்களுக்குள்ள எழுதிக் கொண்டு தாங்களே வாசிக்கும் ஒரு சிறு அறிவுவட்டம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால்அதற்கப்பால் செல்லும் உள்ளம் கொண்ட கல்வியாளர்கள் சிலர் என்னும் தமிழில் இருந்தாக வேண்டும். அவ்வாறு ஒரு சிலரை கவித்துறையில் இருந்து எடுத்துச் சொல்ல முடியும் ஆ. முத்துசிவம் முதல் சி. கனகசபாபதி, பேரா. ஜேசுதாசன், எம்.வேதசகாயகுமார், அ.ராமசாமி வரை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த வகையான கல்வித்துறை அதிகாரமும் இருந்ததில்லை. விதிவிலக்காக கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம். அவர் இந்திரா பார்த்தசாரதி, கி ராஜநாராயணன் ஆகியோரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பயிற்றுனர்களாக மாற்றியது என்பது தமிழில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நகர்வு.அண்மையில் தஞ்சை தமிழ் பற்கலையில் சில எழுத்தாளர்கள் வருகைதரு எழுத்தாளர்களாக அழைக்கப்பட்டது ஒரு சிறு முன்னகர்வு.அவ்வாறு தமிழில் மிகச்சிற அளவிலேயே சில நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன.

இச்சூழலில் தமிழ் நவீன இலக்கியத்தைச் சார்ந்த எனக்கு தக்ஷசிலா பல்கலை வழங்கியிருக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் முக்கியமான ஒரு தொடக்கம். நான் எல்லா வகையிலும் தனிநபரின் அகம் வெளிப்படும் எழுத்தை மட்டும் முன்வைப்பவன், அதற்காக பேசுபவன். எல்லா அரசியல் தரப்புகளையும் விமர்சனம் செய்பவன், அவற்றுக்கப்பாலுள்ள பெரும் மானுடக்கனவுகளை நோக்கிச் செல்ல முயல்பவன். எல்லா அமைப்புகளுக்கும் எதிரானவன். அரசு சார்ந்த ஏற்புகளை பெறுவதில்லை என்ற கொள்கை கொண்டவன்.  ஆகவே எல்லா தரப்பாலும் வசைபாடப்படுபவனும்கூட. ஆனால் என் முன்னோடிகளைப் போலன்றி எனக்கான வாசகர்கள் உலகமெங்கும் திரண்டுள்ளனர். காரணம் என் முன்னோடிகளுக்கு கிடைக்காத தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்தான்.

தக்ஷசிலா பல்கலைக் கழகம் முக்கியமான ஒரு பேரமைப்பு. அது வழங்கும் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் எனக்கு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற லேமா போவே   பிஜி தீவின் இந்தியத் துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி ஆகியோர் கலந்துகொள்ளும் விழாவில், துணைவேந்தர் தனசேகரன் தலைமையில் வழங்கப்படும் இந்த பட்டம் என்னுடன் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவுக்கும் அளிக்கப்படுகிறது. மிகப் பெருமிதத்துடன் இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்.என் வாசகருமான தக்ஷசிலா வேந்தர் தனசேகரன் மகாலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.

இது ஒரு பெரிய தொடக்கம் என்று நினைக்கிறேன். தமிழில் இதைப்போன்று எதிர்காலத்தில் கௌரவிக்கப்பட வேண்டிய நவீன எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர் ஒவ்வொருவரும் அந்த கௌரவத்தை அடையும்போதுதான் தமிழ் இலக்கியம் கௌரவிக்கப்படுகிறது. நான் எப்போதுமே என்னை நவீனத்தமிழிலக்கியம் என்னும் அமைப்பாகவே முன்னிறுத்துபவன், நாங்கள் தமிழ்க்கல்வித்துறை கௌரவம் நோக்கிச் செல்லும் முதற்காலடியாகவே இதைப் பார்க்கிறேன். நம் இலக்கியத்தை நாம் கொண்டாடும்போது தான் அதை உலகம் கொண்டாட தொடங்கும் .அதற்கான ஒரு முதல் முயற்சியை எடுத்த அனைவருக்கும் நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2025 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.