Jeyamohan's Blog, page 642
January 19, 2023
பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”
இன்று இக்குறளை படிக்க நேர்ந்தது. உடன் உங்கள் நியாபகம் வந்தது. இப்பொழுது தங்கள் தந்தை இருந்திருந்தால், தன்னுடைய குழந்தைகளில் உங்களைப் பற்றி இவ்வாறான எண்ணம் இருந்திருக்குமா? இல்லை எனில் இக்குறளின் உண்மை நோக்கம் என்ன?
எனக்கு மிகத் தெளிவாக, கோர்வையாக இக்கேள்விக்கான நோக்கத்தை சொல்லத் தெரியவில்லை என்றாலும் கேட்க தோன்றிற்று. தங்களின் விளக்கத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்
இப்படிக்கு,
வினோத்
அன்புள்ள வினோத்
இது ஒரு சிக்கலான வினா. தந்தை– மகன் உறவு நாம் நினைப்பதைவிட அடர்த்தியான உட்சுழிப்புகள் கொண்ட ஒன்று. ஏனென்றால் அது இரண்டு தலைமுறைகள் சந்தித்துக்கொள்ளும் முனை. இரண்டு காலகட்டங்கள் சந்தித்துக்கொள்வதுதான் அது. குரு – சீடன் உறவு ஒன்றே அதற்கு இணையான இன்னொரு கூர்முனை. அங்கே உரையாடல் – மோதல் இரண்டும் சம அளவே உள்ளன.
குரு–சீடன் உறவில் நடுவே இருப்பது அறிவு அல்லது ஞானம். ஆகவே அந்த உறவு இனிதாகவே நிகழக்கூடும். அந்த உறவைப்புரிந்துகொள்ள அந்த ஞானமே உதவக்கூடும். தந்தை மகன் உறவில் நடுவே இருப்பது உலகியல். சூழ்ந்திருப்பதும் உலகியல். ஆகவே அங்கே பல விஷயங்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை. பலசமயம் மிகப்பிந்தியே பிடிகிடைக்கின்றன.
என் அப்பா என்னை நினைத்து மிக அஞ்சினார். நான் படிப்பில் மேலே சென்று பெரிய வேலையில் அமரவேண்டும் என விரும்பினார். நான் ஊர்சுற்றினேன், அகமும் புறமும் அலைந்தேன். அதற்காக அவர் என்னிடம் மிகக்கடுமையாக நடந்துகொண்டார். அவரை நான் மேலும் வெறியுடன் மீறினேன். என் கனவு எழுத்தாளர் ஆகவேண்டும் என்பது. அதற்கு அவரே முதன்மைத்தடை என அன்று உணர்ந்தேன்.
என் அப்பா நல்லவேளையாக எனக்கொரு வேலை கிடைத்தபின் மறைந்தார். எனக்கு அரசுவேலை அமைந்தபோது ‘நல்லவேளை, இனி அவன் தெருவோரம் கிடக்கமாட்டான்’ என்றார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் வீரபத்ர பிள்ளை என்னும் எழுத்தாளர் அப்பாவின் நண்பர், அவர் தொடுவட்டி சந்தையில் அனாதையாக இறந்து கிடந்தபோது அடக்கம் செய்தவர்களில் அப்பாவும் ஒருவர். அப்பா என்னை எண்ணும்போதெல்லாம் அந்த பதற்றத்தையே அடைந்திருந்தார்.
ஆனால் மிகப்பிந்தி என் அப்பாவுக்கு என் எழுத்துக்கள் மேல் மதிப்பிருந்தது என என் அப்பாவின் நண்பர்களிடமிருந்து அறிந்தேன். என்னுடைய கதைகள் ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் வெளிவந்தால் பல பிரதிகள் வாங்கி தன் நண்பர்களின் வீடுகளில் ‘கைமறதியாக’ விட்டுச்செல்வது அவர் வழக்கம். அவற்றைப்பற்றி அவர்கள் பேசினால் அக்கறையாக கேட்கமாட்டார், உதாசீனத்தை நடிப்பார். அவர்களுக்கும் அந்த விளையாட்டு தெரியும்.
எனக்கு என் அப்பா நான் எழுதிய எந்தக் கதையையும் வாசிக்கவே இல்லை என்னும் மனக்குறை அவர் மறைந்து எட்டாண்டுகள் வரை இருந்தது. அம்மா என் கதை வெளிவந்த இதழ்களை அவர் அருகே கொண்டு வைத்தால் எடுத்து புரட்ட மாட்டார். திரும்பியே பார்க்கமாட்டார். நாட்கணக்கில் அந்த இதழ் அங்கே இருக்கும். ஓரிரு நாளிலேயே உதவாக்கரையாக அலைவதைப்பற்றிய வசையும் எனக்குக் கிடைக்கும். பின்னர் நானே என் எழுத்துக்களை ஒளித்து வைக்க ஆரம்பித்தேன்.
அன்றெல்லாம் நான் வேறு பெயர்களில் எழுதுவது மிகுதி. என் அம்மாவுக்குக் கூட அவை நான் எழுதியவை என தெரியாது. என் அப்பாவின் நண்பர் குஞ்சுவீட்டு தம்பி என் கதை ஒன்றைப்பற்றி பேசினார். அது இளம்பாரதி என்ற பெயரில் நான் எழுதியது. அதை நான் சொன்னதும் தம்பி சிரித்தபடி ‘அவருக்கு நீ நாலு வரி எழுதினாலே உன் மொழிநடை தெரியும்’ என்றார். அந்த அளவுக்கு அம்மா என் எழுத்துக்களை கூர்ந்து படித்திருக்கவில்லையோ என இன்று தோன்றுகிறது.
என் அப்பாவை நான் முழுமையாகப் புரிந்துகொள்ள நீண்டநாட்களாகியது. அப்பா அபாரமான வாசிப்புச்சுவை கொண்டவர். அவர் நவீன இலக்கியம் வாசிப்பது அரிது, ஆனால் செவ்விலக்கியம் பற்றி அவர் சொன்ன எல்லா கருத்துக்களும் சுவைமிக்கவர் சொல்பவை. அவருக்கு கதகளி பிடிக்கும். இசையார்வம் உண்டு. யானைப்பைத்தியம். மாடுகள் மேல் பேரார்வம் கொண்டவர். நண்பர்களுக்கு இனிய உரையாடல்காரர். ஒருவகையான அப்பாவி, ஆனால் அதை ஒருவகை கெத்தாக வெளிப்படுத்தியவர்.
அப்பாவின் இடத்தில் இன்றிருப்பவர் என் அண்ணா. என் அப்பாவின் எல்லா இயல்புகளும் என் அண்ணாவுக்கு உண்டு. என் அண்ணா அபாரமான நகைச்சுவை கொண்டவர் என்பதை அவரிடம் அணுக்கமாக பழகியவர்கள் மட்டுமே அறிவார்கள். அவருடைய நண்பர்கள் அனைவருமே வாழ்நாள் தோழமை கொண்டவர்கள், அதற்குக் காரணம் அந்த நகைச்சுவை. அவர் வாசிப்பதில்லை, என் படைப்புகள் எதையும் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் வாசித்தால் அவருக்கு புரியும், அந்த நுண்ணுணர்வு அவருக்கு உண்டு.
என் அப்பாவிடமிருந்து அண்ணா வழியாக வந்த அந்த நுண்ணுணர்வு என் அண்ணா மகன் சரத்துக்கு வந்துள்ளது. அவன் பட்டப்படிப்பை முடிக்கும் வரை இலக்கியமே அறிமுகமில்லை. அவன் வீட்டுச்சூழலில் அது இல்லை. ஆனால் திடீரென இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்து ஓராண்டிலேயே தேர்ந்த நுண்வாசகனாக ஆகிவிட்டான். அது பாகுலேயன் பிள்ளையின் சுவை. பாகுலேயன் பிள்ளை இருபது வயதில் அவனைப்போலவே இருந்திருப்பார். பாலசங்கரும் அப்படித்தான் இருந்தார்.
அப்பா என்னைப்பற்றி பெருமிதம் அடைந்திருப்பாரா? ஆம் என இன்று உறுதியாகச் சொல்லமுடியும். அவருடைய நண்பராக இருந்தவர் எம்.எஸ். (எம்.சிவசுப்ரமணியம்) அவரும் பத்திரப்பதிவுத்துறை ஊழியர். நானும் எம்.எஸும் நண்பர்களாகி 12 ஆண்டுகளுக்குப்பின் அஜிதன் எடுத்த ஆவணப்படத்தில் என் அப்பாவின் படத்தை எம்.எஸ். பார்த்தார் ”ஆ, இது நம்ம பாகுலேயன் பிள்ளைல்லா” என்றார். திகைப்புடன் “தெரியுமா சார்?” என்றேன். “ரொம்ப நல்லா தெரியும்…. அபாரமான படிப்பாளி. திருவிதாங்கூர் ஹிஸ்டரியிலே ஒரு எக்ஸ்பர்ட்” என்றார். அவரையும் என்னையும் எம்.எஸ் இணைத்தே பார்த்திருக்கவில்லை.
எம்.எஸ் தீரா வியப்புடன் சொன்னார். “அவரு தன்னோட ரெண்டாவது பையன் பெரிய ஆள்னு சொல்லிட்டே இருப்பார். அது நீங்கதானா? எங்கிட்டே பல தடவை சொல்லியிருக்கார்” பின்னர் எம்.எஸின் ஒரு நண்பரை நானும் அவரும் சந்தித்தபோது எம்.எஸ் என்னை அறிமுகம் செய்தார். “இது நம்ம அருமனை ஹிஸ்டாரியன் பாகுலேயன் பிள்ளைக்க பையன், பெரிய படிப்பாளின்னு அவரு சொல்லிக்கிட்டே இருப்பாரே” அவர் முகம் மலர்ந்து “ஆமா, உங்கப்பாவுக்கு ரொம்ப பெருமை அதிலே” என்றார். என்னிடம் ஒரு துளிகூட அது காட்டப்பட்டதில்லை.
ஏன் என்று இன்று புரிகிறது. இன்று என் மகன் அஜிதன் எழுத்தாளன், அறிஞன். எனக்கு அடுத்த தலைமுறையில் அவனளவுக்கு வாசித்த, இசையறிந்த, கலையறிந்த, நுண்ரசனை கொண்டவர்கள் மிகமிக அரிது. தமிழ்ச்சூழலில் வேறெவருக்கும் அவனுக்கான வாய்ப்புகளும் இல்லை. ஏனென்றால் வாசிப்பது, கலைகளை அறிவது தவிர அவன் இது வரை வேறேதும் செய்ததில்லை. முறையான படிப்பு,வேலை உட்பட. அவன் வாழ்க்கையே விரும்பியதை மட்டும் செய்வதற்காக அமைந்தது. அந்த ‘ஆடம்பரம்’ இயல்பாக ஒரு தமிழ் இளைஞனுக்கு இல்லை.
அவனிடம் எப்போதும் நான் மிகையாகவே எதிர்பார்க்கிறேன். எளிதில் நிறைவடைவதில்லை. நான் கொண்டிருப்பதிலேயே கடுமையான இலக்கிய அளவுகோல் அவனுக்காகவே. காரணம், அந்த வசதிகள் இன்னொருவருக்கு இல்லை என்பதே. ஒரு பேரிலக்கியவாதியிடம் எதிர்பார்ப்பதை மட்டுமே அவனிடம் எதிர்பார்க்கிறேன். இன்று அவன் எழுதுவது எனக்கு பெருமிதத்தை அளிக்கிறது. ‘இவன் எந்நோற்றான் கொல்’ என என்னைநோக்கி நானே சொல்லிக்கொள்கிறேன்.
ஆனால் எனக்கிருக்கும் அழுத்தங்கள் சாதாரணம் அல்ல. ஒவ்வொரு நாளும் என்னிடம் எவரேனும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவனை நான் ‘கெடுத்துவிட்டேன்’ என்று. அவனை நான் ‘முறையாக’ படிக்கச் செய்து கணிப்பொறி வல்லுநன் ஆக்கியிருக்கவேண்டும். அமெரிக்காவில் வேலைக்கு அனுப்பியிருக்க வேண்டும். ‘என் மகன் அமெரிக்காவில் இருக்கிறான். நீங்கள் கோட்டைவிட்டு விட்டீர்கள்’ இதைத்தான் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என் நண்பர்கள், வாசகர்கள்கூட.
அண்மையில்கூட ஒருவர் அவனுக்கு ஒரு கடை வைத்துக் கொடுக்கலாகாதா என என்னிடம் கேட்டார். ‘இல்லையென்றால் பெண் கிடைக்காது சார்’ என்றார். ‘அவனுக்கு பொருளாதாரச் சிக்கல் எல்லாம் வராது சார், அவன் வேலைசெய்து வாழ்நாள் முழுக்க ஈட்டும் சம்பளம் அவனிடம் இப்போதே இருக்கிறது’ என்று நான் சொன்னால் அவருக்கு அதுவும் புரியவில்லை. அவன் ‘சும்மா’ இருப்பதாகவே அவர் நினைக்கிறார். அப்படி இருக்கக்கூடாது, நான் அவனை போதிய அளவு கண்டிக்கவில்லை என்கிறார். பணம் இருந்தாலென்ன, மேலும் சம்பாதிக்கவேண்டியதுதானே?
அபாரமான நேர்மையாளரான பாகுலேயன் பிள்ளை எனக்கு எதுவும் சேர்த்துவைக்கவில்லை. (ஊழல்செய்ய அவருடைய பெருமிதப்போக்கு ஒத்துவராது. அவரால் எவரிடமும் குழையவோ பணம் பெறவோ முடியாது). அப்படி என்றால் அவர் எத்தனை அழுத்தத்தைச் சந்தித்திருப்பார்? அவருக்கு அந்தக் குற்றவுணர்வு இருந்தது. நண்பர்களிடம் ‘நேர்மையா இருந்ததனாலே பையனுக்கு கொஞ்சம் சொத்து சேர்க்க முடியாம போய்ட்டுது’ என்று புலம்பியிருக்கிறார். என்னை இந்த உலகம் கீழ்மைப்படுத்திவிடும் என அஞ்சியிருக்கிறார். அந்த அச்சமே என்மேல் கடுமையான பாவனைகளைக் காட்டும்படிச் செய்திருக்கிறது.
இத்தனை வெற்றியை நான் அடைந்த பின்னரும் எனக்கு அப்பா வடிவாக இன்றிருக்கும் என் அண்ணா என்னை இங்குள்ள உலகியல் ஏமாற்றிவிடும் என தீராத பதற்றம் கொண்டிருக்கிறார். எப்போதும் என்னிடம் அதை அண்ணா சொல்லிக்கொண்டே இருக்கிறார் அதே பதற்றம் அஜிதன் பற்றி எனக்கு இருக்கிறது.
மைத்ரி நாவலின் சில பகுதிகளில் மொழி வழியாக ஓர் எழுத்தாளன் சென்றடையும் உச்சத்தை நான் காண்கிறேன். அது பொருள்மயக்கம் வழியாக, அணிகள் வழியாக, மொழிக்குழைவு வழியாக மட்டுமே தொடத்தக்கது. தமிழில் மிக அரிதானது. நான் இலக்கியமென கருதுவது அந்த sublimation மட்டுமே. என் பார்வையில் வேறு எவையும் இலக்கியத்தில் உண்மையில் பொருட்டானவை அல்ல. சமூகவியல், வாழ்க்கைச்சித்திரங்கள், உறவுகளின் விவரிப்பு, காமம் மற்றும் வன்முறைச் சித்தரிப்பு எல்லாமே இரண்டாம்பட்சமே. அந்த நுண்தளம் வாசகர் அனைவருக்கும் உரியது அல்ல. மிக அரிதான கூர்ந்த ரசனை கொண்ட வாசகரை மட்டுமே நம்பி எழுதப்படுவது. அதை அவன் எழுத்தின் வாசித்தபோது முதல்முறையாக அவனைப்பற்றி பெரும் நிறைவை அடைந்தேன்.
ஆனால் கூடவே அச்சமும் வந்து கவ்வுகிறது. அவனுடைய இயல்பான எளிமை, உலகியலை மூர்க்கமாக மறுத்து அவன் அடையும் தனிமை, கலைஞனுக்குரிய அலைபாய்தல், மிகையுணர்வுநிலைகள் எல்லாமே எனக்கும் உரியவை. ஆகவே, அவை என்னை கலக்கமுறச் செய்கின்றன. உலகியலை அவன் எப்படி எதிர்கொள்வான் என திகைக்கிறேன். அவனுக்கு என் நண்பர்கள் உடனிருக்கவேண்டும் என எப்போதும் விரும்புகிறேன். அவனுக்கான சில நண்பர்கள் இன்று அமைந்துள்ளனர் என்பதை மட்டுமே ஆறுதலாக நினைக்கிறேன்.
ஏனென்றால் என் மகன் என்பதனால் அவனுக்கு பல சாதகநிலைகள் இருக்கலாம், கூடவே மிக வலுவான எதிர்நிலைகளும் உண்டு. என்மீதான எல்லா கசப்புகளையும் அவன்மேல் திருப்புவார்கள். அவன் வாழ்நாள் முழுக்க நான் சந்தித்த சிறுமைகளை தானும் சந்திக்கவேண்டியிருக்கும். என் மகன் என்பதனாலேயே அவனுடைய தனித்தன்மையை தொடர்ச்சியாக நிராகரிப்பார்கள். அது அவர்களின் உள்நோக்கமாக கூட இருக்கவேண்டியதில்லை, இயல்பாக அமையும் பார்வையின்மையே அப்படி அவர்களை ஆக்கலாம். எனக்கு வந்த உடனடி வரவேற்பு அவனுக்கு அமையாது, அவன் அழுத்தமாக தன்னை நிறுவிக்கொண்டாலொழிய அவனை ஏற்க மாட்டார்கள். அவனுக்கிருக்கும் வாய்ப்புகளே அவன்மேல் பொறாமைகளை உருவாக்கும். அவன் அதையெல்லாம் கடந்தாகவேண்டும்.
தந்தை என்னும் நிலை இந்த இரு எல்லைகளுக்கு இடையேயான ஊடாட்டமே. மைத்ரியின் பின்னட்டையில் அ.முத்துலிங்கம், தேவதேவன், அபி ஆகியோர் சொல்லியிருக்கும் வரிகள் எனக்கு பெரும்பரவசத்தை அளிக்கின்றன. அவர்கள் உபச்சாரம் சொல்பவர்கள் அல்ல என நான் அறிவேன் என்பதனால். அதேசமயம் இந்த பதற்றத்தில் இருந்து விடுபடவும் எளிதில் முடிவதில்லை.
இன்று, என் அப்பாவை மிக அருகே உணர்கிறேன். இந்த அறுபது வயதில் நான் எழுதும் கதைகளில் என் அப்பா உயிர்ப்புடன் எழுந்து வருகிறார். ஆனையில்லா தொகுப்பு முதலிய நூல்களின் கதைகளில் தோன்றும் தங்கப்பன் நாயர் (அப்பாவின் வீட்டுப்பெயர்) இனிய மனிதர். அவரை அவர் நண்பர்களுடன் சேர்த்தே எழுதமுடியும் என கண்டுகொண்டேன். அவர் குடும்ப மனிதர் அல்ல, சமூக மனிதர். ‘ஒரு ஆனைய மானம் மரியாதையா சீவிக்க விடமாட்டீங்களாடே?’ என்ற தங்கப்பன் நாயரின் குரல் கேட்டு அக்கதையை எழுதிக்கொண்டிருந்த நான் கண்ணீருடன் வாய்விட்டு நெடுநேரம் சிரித்தேன். எனக்கு மிக அந்தரங்கமான கதை அது. வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு, அவஸ்தைப்பட்டு, பின்னர் மந்திரத்தால் சின்னக்குழந்தையாக மாறி வெளியேறிய அந்த யானை பாகுலேயன் பிள்ளையேதான்.
ஜெ
எண்பெருங்குன்றம்
மதுரை ஒரு காலத்தில் சமணமையமாக இருந்தது. மதுரையை நோக்கி நான்கு திசைகளில் இருந்து வந்துசேரும் பெருவழிகளின் அருகே முக்கியமான சமணப்பள்ளிகள் அமைந்த குன்றுகள் இருந்தன. அவை எண்பெருங்குன்றம் என அழைக்கப்படுகின்றன
எண்பெருங்குன்றம்
எண்பெருங்குன்றம் – தமிழ் விக்கி
கொஞ்சம் அறபியில், மிச்சம் தமிழில் – ஆக மொத்தம் உலக இலக்கியம்- கொள்ளு நதீம்
கார்த்திகை பாண்டியன் தமிழ் விக்கி
இந்தப் பனிரெண்டு கதைகள் உயிர்மை இதழில் நவம்பர் 2021-இல் ஆரம்பித்து 2022 நவம்பரில் முடிந்தன. ஒவ்வொரு சிறுகதையையும் படித்துவிட்டு, உடனுக்குடன் மாதந்தவறாமல் கார்த்திகைப் பாண்டியனிடம் போனில், வாட்ஸப்–ல், முகநூலில் என் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தேன். அதற்கு முன் அவர் மொழிபெயர்த்த தொகுப்புக்கள் என்னிடமிருந்த போதிலும் அறபு என்பதால் இதில் சற்று கூடவே ஆர்வம் காட்டத் தொடங்கினேன்.
அதற்கு இரண்டு காரணங்கள், என் இருப்புச் சார்ந்து – பிறந்தது முதலே (இஸ்லாமிய) மதம் வழியாக எனக்கு அறபுக் கதைகள் அறிமுகமாகி வந்தன. பிறகு வேலைவாய்ப்புக் காரணமாக முழு வனவாச காலம் (1997 – 2011 வரை) என பதினான்கு ஆண்டுகள் (மத்தியக் கிழக்கு நாட்டின் எண்ணெய் வயலில் மனிதவள மேம்பாட்டு அலுவலராக) பன்னாட்டு நிறுவனமொன்றில் பணிபுரிந்தேன்.
அங்கு மேலதிகமாக அறபு இலக்கியம் – என் வாசிப்புப்பழக்கத்தில் பாரிய செல்வாக்கைச் செலுத்தின. கணக்கு வழக்கின்றி அறபுச் சிறுகதைகள், நாவல்களை வாசித்திருக்கிறேன். ஆல்பர் காம்யு தமிழில் மொழிபெயர்க்கப்படாத காலத்திலேயே அறபு மொழிபெயர்ப்பு வந்துள்ளதை அங்குள்ள புத்தகக்கடைகளில் பார்த்துள்ளேன். அறபு மொழி நேரிடையாக தெரியாத போதும், ஆங்கிலம் வழியாக அறபு இலக்கியத்தை கடந்த கால் நூற்றாண்டுகளாக பின்தொடர்ந்து வருபவன் என்கிற முறையில்… எனக்கு இதைக் குறித்து எழுத, பேச அடிப்படைத் தகுதி இருப்பதாகவே உணர்கிறேன்.
வளைகுடா நாட்டில் பணிபுரியச் சென்றதும் (1997-ல்) அங்குள்ள சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், இலக்கிய, மதம் சார்ந்த விமர்சன நூல்களை (ஆங்கிலத்திலும், ஓரளவு தெரிந்த உருதுவிலும்) படிக்கத் துவங்கினேன். அறபியும், பாரசீகமும் அறிந்து கொண்டால் அனுகூலம், இல்லையென்றாலும் குறையொன்றுமில்லை. மொராக்கோவின் ரபாத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் இடையில் ஏறக்குறைய 12,000 கி.மீ தூரம். இங்கு பரவி வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏதோவொரு வகையில் அறபு மொழி செல்வாக்கின் கீழேதான் உள்ளனர். ஆயிரமாண்டுகாலம் அங்கு முகிழ்த்த பல்வேறு சிந்தனைப் போக்குகள், வெவ்வேறு பண்பாடுகள், உணவு, உடை பழக்கவழக்கம் குறித்து கூர்ந்து கவனித்து வந்துள்ளேன்.
அப்பொழுது – எனக்கும் முன்பாக அனேகமாக 80-களின் ஆரம்பத்தில் சௌதி அரேபியா, அமீரகம் துபாய் போன்ற நாடுகளிலிருந்து நாகூர் ஆபிதீன், சீர்காழி தாஜ் தமிழ் வலைப்பூக்களில் எழுதி வந்தனர். சற்று பிந்தி தமிழ்மணம், திண்ணை போன்றவற்றில் (‘உடல் வடித்தான்’ புகழ் அபுல் கலாம்) ஆசாத், எச். பீர்முஹம்மத் ஆகியோரும் ஈராயிமாவது ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வப்போது புனைவு, அபுனைவுகளை எழுதிக் கொண்டிருந்தனர். இன்னும் நிறைய பேர்களுடன் நேரடி அறிமுகம் இல்லையென்பதால் பெயர்களைக் குறிப்பிடவில்லை, மற்றபடி அறபு இலக்கியத்தை பயிலத் தொடங்கியிருந்த காலமது. இவற்றில் அதாகப்பட்டது, அறபு இலக்கியத்தில் யார் யாரையெல்லாம் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்றெல்லாம் யோசிப்பேன்.
ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன் அமெரிக்க, ருஷ்ய இலக்கியம் இங்கு தெரிந்த அளவுக்கு ஏன் அறபு உலகம் பணமாக, பெட்ரோலிய வளமாக மட்டும் இங்கு தெரிகிறது? அறபு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு சலனம், ஓர் அசைவு எதுவும் தமிழில் இல்லாத நிலை ஏங்க வைத்தது. இத்தனைக்கும் மலையாளத்தில் பென்யாமின் எழுதிய “ஆடுஜீவிதம்” (2008-ல்) வந்துவிட்டிருந்தது.
நம்மிடம் இங்கு இராமாயணம், மகாபாரதம் இருப்பதைப் போல எல்லா தொல்நாகரிகங்களிலும் கதைகள் உள்ளன, ஆயிரத்தோரு இரவு அறபுக் கதைகள், முல்லா (நஸ்ருத்தீன்) கதைகளின் தோற்றமும் ஆயிரமாண்டு பழமை கொண்டது. கி.பி. ஆறு முதல் ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் பக்தி இலக்கியம் தோன்றி வளர்ந்ததாக கணிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் அறபு மொழி படிப்படியாக பாரசீகம், துருக்கி, ஆப்கான் பிறகு இந்திய மொழிகளின் மீதும் தமது செல்வாக்கை செலுத்தத் தொடங்கியது. நபிகள் நாயகத்தின் மருமகன் அலியை மூலப்பிதாகவாக கொண்டு சூஃபிய மரபு கிளைத்ததை ஏற்றுக் கொண்டு பார்த்தால் – இந்த இரண்டின் தோற்றப்பாடும் ஒரே கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. குறிப்பாக நம் தமிழிலுள்ள சங்க இலக்கியம் எழுதப்பட்டது / தொகுக்கப்பட்டது கி.மு. 5 முதல் கி.பி. 2 என எழுநூறு ஆண்டுகளைக் கூறுவர். அதேபோல் – சற்று பிந்தி வந்த அறபு செவ்விலக்கியம் இஸ்லாமிய தோற்றத்துக்கும் முந்தையது, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் திருக்குர்ஆனுக்கும் முந்தைய வரலாற்றைக் கொண்டது.
அறபு என்று சொன்னவுடனேயே அதை முஸ்லிம்களுடனும், இஸ்லாமிய மதத்தோடும் இணைத்துப் பார்க்கும் போக்கு வலுவாக உள்ளது. Foreign Notices of South India நீலகண்ட சாஸ்திரியும், Arab Geographers Knowledge of Southern India ஹுசைன் முஹம்மத் நைனாரும் எழுதிய இரண்டு நூல்கள் 1942-ல் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. உள்ளபடியே சொன்னால் Megesthenes (கி.மு. 3 / 4 ஆம் நூற்றாண்டு) யுவான் சுவாங் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு) என இன்றிலிருந்து 1400 – 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலக்கிய பதிவுகளில் பல்வேறு வெளிநாட்டினர் இங்கு இந்தியா வந்துள்ளனர். நமது தென்னிந்தியர்களும் ரோமாபுரி வரை சென்ற வணிகர்களைப் பற்றியும் ஓரளவு தமிழில் பரவலாக பேசப்பட்டு வந்திருக்கிறது. இந்தளவு பழைய வியாபார தொடர்புகள் (அறபு நாட்டில் முஹம்மத் நபிகள் இஸ்லாம் என்கிற மதத்தை தோற்றுவிப்பதற்கு) பல நூறு ஆண்டுகள் முன்பிருந்தே இருந்து வந்தது.
கதை சொல்வதும், கேட்பதும் மனிதர்களின் ஆதிப் பழக்கம். மாவீரர்கள், அதிமனிதர்களின் கதைகளே முன்பு இவ்வளவு காலமாக கதைகளாக சொல்லப்பட்டன, (பிறகுதான்) அவை எழுத்து வடிவத்துக்கு வந்தன. அவை அடிப்படைக் கேள்விகள், அனுபவங்கள், கனவுகள், ஆசைகளை சேமித்து வைத்துள்ளன. இதுவே இன்றைய புனைவிலும் நாம் காணக்கூடிய அம்சம். “கிஸ்ஸா” என்பது கதைகள், “ரிவாயா” என்பது விவரணைகள், “ஹிகாயா” என்பது நீதிபோதனைகள் / ஞானமொழிகள். புராணங்களிலுள்ள கதைகளிலிருந்து சிறுகதைகள் வேறுபடுவதால்தான் அதை எல்லா மொழிகளிலும் தனித்து காட்டுவதைப் போல, அறபு மொழியிலும் “கஸீரா” என்கிற வகைப்பாட்டில் சிறுகதைகள் வருகின்றன.
வ.வே.சு.ஐயர் (1881- 1925) ‘குளத்தங்கரை அரச மரம்’ தமிழின் முதல் சிறுகதையை எழுதினார். அதே காலகட்டத்தில் இங்கு இப்பொழுது தமிழ் இலக்கியத்தில் நன்கு அறிமுகமான கலீல் ஜிப்ரான் (1882 – 1931), மிகெய்ல் நைமி (1889 – 1988); இன்னுமொரு எகிப்தியரான முஸ்தபா லுத்ஃபி அல்மன்பலூட்டி (1876 – 1924) அவ்வளவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாததால் இங்கு தமிழில் அவரை யாருக்கும் அதிகம் தெரியாது. முஹம்மத் ஹுசைன் ஹைகல் (1888 – 1956) “ஜைனப்” என்கிற நெடுங்கதை 1914-ங்கில் வெளியானது. கலீல் ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ 1912-ஆம் ஆண்டு முதல் பதிப்பைக் கண்டது என்பதோடு சேர்த்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும். 90 நூல்களை எழுதியவர் கலீல் ஜிப்ரான் என்பது நிறைய பேருக்குத் தெரியாது. இங்கு அவரின், ‘தீர்க்கதரிசி’ மட்டுமே கிட்டத்தட்ட எல்லா தரப்பு தமிழ் இலக்கிய வாசகர்களாலும் படிக்கப்பட்ட நூலாகும். மிகெய்ல் நைமி ‘மிர்தாதின் புத்தகம்’ என்கிற ஒரே ஒரு நூலை மட்டுமே எழுதியவர். கலீல் ஜிப்ரான் மிகக் குறைவான ஆயுட்காலம் (வெறும் 48 வயது) மட்டுமே வாழ்ந்த நிலையில் மிகெய்ல் நைமி தன் நண்பரைவிட இரண்டு மடங்கு அதிகமான வாழ்நாளைக் கொண்டிருந்தவர். அறபுச் சிறுகதையின் முன்னோடி ஆளுமை இவர்களே .
எல்லா மொழிகளிலும் சிறுகதை என்பது புதிய வடிவம், ஆனால் அதன் வேர்கள் நீதிக்கதைகளின் காலம் வரை பின்னோக்கிப் போகக் கூடியது. “கஸஸ்” என்று (அறபுச்) சிறுகதைகளுக்கென்றே தனி மாத இதழ்கள் தொடங்கி நூறாண்டுகளாகப் போகின்றன. அறபு சிறுகதைகளில் உலகளாவிய நோக்கை கொண்டு வந்த Maupassant (1850 – 1893) என்று நினைவுக் கூரப்படும் கஸ்ஸான் கனஃபானி (1936 – 1972) முக்கியமானவர். அறபு கவிஞர்களென்று இங்கு தமிழில் அறிமுகமான பலரைப் போலவே மஹ்மூத் தர்வேஷ் (1941 – 2008) எழுதிய நனவோடைக் குறிப்புக்கள் சிறுகதை போன்ற புனைவு மொழியில் எழுதப்பட்டவை. அறபு மொழியில் இஸ்லாம், மதநோக்கு என்பதற்கு முன்பே கலை, இலக்கிய படைப்பாற்றல் பெரும் உச்சத்தை தொட்டு இருந்தது. நவீன அறபு இலக்கியம் என்பது எல்லா வகையிலும் அதன் ஆரம்பகால வேர்களில் – அதாவது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையில் வேர்கொண்டுள்ளது.
பழங்குடி சமூகப் பண்புகளின் பிரதான அம்சம் என்பது கூட்டுறவு. பெரிய கூட்டுக் குடும்பங்கள் – ஒரு குட்டி கிராமம் போல ஊர் மையத்திலுள்ள பொதுப் பூங்காவில், கடற்கரைப் பகுதியாக இருந்தால் அந்த மணல் பரப்பில் ஐம்பது பேர்கள் கொண்ட மூன்று தலைமுறையின் வெவ்வேறு வயதிலான ஆணும் / பெண்ணும் கலந்த சிறு குழுவை சர்வ சாதாரணமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களில் அவ்வாறு நான் இவர்களை கண்டிருக்கிறேன்.
இந்தத் தொகுப்பின் முதல் கதையாக நாற்பத்தியோரு ஸ்தூபிகள். அறபு வாழ்க்கையில் பள்ளிவாசல் என்பவை வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டுமல்ல. கூட்டு வாழ்க்கையின் (சந்திப்பு) மையங்கள். தாராளமயமாக்கல், எண்ணெய் வளம் மக்களை பெரு நகரில் குடியேறச் செய்துள்ளது. அங்கு எழுந்து வரும் பிரமாண்டமான மசூதிகள் ஒருவகையில் பண்பாட்டு வெளியாகவும் திகழ்கின்றன.
கிரிக்கெட் மீது நமக்கிருக்கும் மோகத்தைப் போல அறபு (இளைஞர்களின்) வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம், கால்பந்தாட்டம். அங்குமிங்குமாக அது பதிவாகியுள்ளது. படித்த கதாபாத்திரங்களின் உரையாடல் அறிவார்ந்து வைக்கப்பட்டுள்ளது, அதேநேரம் பாமரர்கள் தமக்குள் பேசிக் கொள்ளும்போதும் பரிமாறிக் கொள்ளும் மொழி பேச்சுவழக்காக தனித்து தெரிகிறது. மொழியாக்கம் கவனமாக செய்ததை காட்டுகிறது.
நகரம், கிராமம் எல்லா இடங்களிலுமுள்ள பெண்கள் இதில் சிறுகதையில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அறபுகள் பழமைவாதிகள் என இங்கொரு பேச்சு நிலவி வருகிறது. அதற்கு மாற்றமாக, முற்போக்கு / புரட்சிப் பெண்கள் இந்தச் சிறுகதைகளில் இல்லாவிட்டாலும்கூட கதையில் அவர்கள் விளிம்புநிலையில் இல்லை, வாழ்க்கையின் மையத்தில் உள்ளனர்.
ஓரளவுக்கேனும் நாம் ஜனநாயக முறைக்கு பழகிக் கொண்டிருந்தாலும் – அறபு நாடுகளில் சரிபாதி இன்னும் மன்னராட்சி அல்லது காலக்கெடுவோ / இத்தனை முறை / இத்தனை ஆண்டுகள் என வரைமுறை எதுவுமின்றி அதிபர்களைக் கொண்ட அரசியல் அமைப்பில் நீடித்து வருகின்றன. முஹம்மத் அல்ஷாரிக் எழுதிய “விசாரணை” என்கிற சிறுகதை மன்னராட்சியும், வளம் கொழிக்கும் நிலவும் வளைகுடா நாட்டின் நிலவரம் வரிக்கு வரி உயிர்ப்புடன் இருக்கிறது. பொருளியல் அசமத்துவத்தை சற்று நுட்பமாக பார்த்த பேராசிரியர், எங்கும் போல மாணவப் பருவத்தில் கிளர்ச்சி மனப்பான்மையுள்ள இளைஞர், மேற்கத்திய வாழ்க்கை என்கிற கான்வாஸில் அருமையாக நெய்யப்பட்டுள்ளது.
இங்கு திரைப்படங்கள் அரசாங்கத்தின் தணிக்கைக்கு உட்பட்ட பிறகே பொதுவெளியில் வைக்கப்படும் நடைமுறை இருக்கிறதல்லவா, அதே நேரம் நம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதுவதை (இலக்கிய) பத்திரிகையாசிரியர்கள் பொதுவாக தணிக்கை எதையும் செய்வதில்லை. பெரும்பாலும் நேரடியாக அச்சேற்றிவிடுவார்கள். ஆனால் அறபு நாடுகளில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் எழுதி அனுப்புவதை (இதழாசிரியர்) அங்குள்ள பண்பாட்டு அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே சிறுகதைகளும், நாவல்களும் பிரசுரமாகும், நூல்களாகவும் தொகுக்கப்படும்.
சுதந்திரம், ஜனநாயகம் குறித்த எந்தவொரு மாற்றுக் கருத்துகள் முன்வைக்காத அறபுகளின் வாழ்வியலை நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுத்தம் அளிக்கும் புறச்சூழல் சுயதணிக்கையை மீறி உணர்த்தப்படுகிறது. பணம் ஒரு நாட்டை நவீனமாக்கி விடுமா, நவீனத்தை கடந்த பிறகுதானே பின்நவீனம் (எங்கும்) வர இயலும்? அந்த வகையில் பார்த்தால் இவ்வளவு (எண்ணெய்) செல்வசெழிப்பு கொட்டிக் கிடக்கும் அறபு நாடுகள், சமூகம் நவீனமானதா என கேட்டுக் கொள்ளலாம். அதனால் மறைபொருளாக பிரதிக்குள் இயங்கும் பூடகமாகன இலக்கிய போக்கை நுண்வாசிப்பால் மட்டுமே வாசகர்களால் கடக்க இயலும்.
அறபு நவீன இலக்கியத்தின் சிறுகதைத் திருமூலர் தாஹா ஹுசைன் (1889 – 1973) ஆவார். அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் Naguib Mahfouz (1911 – 2006). நாகிப்–ன் முக்கியமான ஆக்கங்கள் தமிழுக்கு வந்துவிட்டன. அதுவும் நோபல் பரிசு பெற்ற “நம் சேரிப் பிள்ளைகள்” நாவலை பஷீர் ஜமாலி செய்திருந்தார். அதற்கு சற்று முன்பு 1001 அறேபிய இரவுகளின் மறு ஆக்கம் எனப்பட்ட “அரேபிய இரவுகளும் பகல்களும்” சா.தேவதாஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. ஆனால் என்ன காரணமோ, தமிழ் வாசகப் பரப்பில் உரிய கவன ஈர்ப்பை பெறவில்லை என்பதே என் புரிதல். இந்தத் தொகுப்பில் அவருடைய “The Seventh Heaven” என்கிற தொகுப்பிலுள்ள “அறை எண் 12” என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது. ஓர் இளம்பெண் அங்குள்ள பெரிய ஊரின் தங்கும் விடுதி அறை எண் 12-ல் தங்க வருகிறாள். அவள் பதிவு செய்து தங்கியிருப்பதென்னமோ ஒரே – ஒற்றை அறை. அவளைக் காண கடுகடுத்த, குட்டையான, குண்டு மனிதன் என ஒப்பந்தக்காரர் யூசுப் காபில், பிணங்களைக் கழுவும் அகலமான மனிதன் சையத் எனவும் பெயர் சுட்டி காட்டப்படுகிறார். மகப்பேறு மருத்துவர், அங்காடி முதலாளி, தரகன், அலங்காரப் பொருள் விற்பவன், வாசனைத் திரவிய வணிகன், முகவர், மளிகைக்கடைக்காரர், வருவாய்த் துறை அதிகாரி, மீன் வியாபாரி, செய்தித்தாள் பதிப்பாளர், பேராசிரியர், மதத் தலைவர் என பலரும் அவளைச் சந்திக்க விரும்புகின்றனர். ஒருவர் பின் ஒருவராக வரும் இவர்கள் அனைவரும் தனித்தனியாக அறைக்குள் செல்கின்றனர்.
விடுதி ஆரம்பித்த கடந்த ஐம்பதாண்டுகளாக அங்கு பணிபுரிந்துவரும் விடுதி மேலாளர் அந்த பெண்மணியை போனில் அனுமதி கேட்டு உள்ளே அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார். பிணங்களைக் கழுவும் ஆள் வராண்டாவில் காத்திருக்கிறார். வெளியே பயங்கர மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அனேகமாக ஒரே நாளுக்குள் நடந்துவிடக் கூடிய கதை என்றே தோன்றினாலும் இந்த கதையில் ஏதோ அமானுடத் தன்மை இருப்பதை உணர முடிகிறது. யதார்த்த, மாய யதார்த்தத்துக்குமான இடைவெளி என்பது அவ்வளவு குறுகியதும், விரிந்ததுமான ஒன்று. யோசித்துப் பார்த்தால் விடுதி அறை, விருந்தினர், மேலாளர், ரூம் பாய், விருந்தினரைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் – அவ்வளவுதான். அறபு, எகிப்திய பண்பாடு என்பது சுமேரிய பண்பாட்டின் நீட்சி. சற்றேறக்குறைய சிந்து சமவெளி நாகரிகத்துக்கு அடுத்து வந்த ஒன்று. இங்கு நாம் “நீலி / அரக்கி” எனப்படும் பெண் மையக் கதாபாத்திரமே அந்த பண்பாட்டிலும் மர்மமானவளாக வெளிப்படுகிறாள். “ஜின்” எனப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மாய இருப்பு அது. விவரணையில் அந்த விடுதி அறையிலுள்ள உணர்வை, பதற்றத்தை, மர்மத்தை ஆசிரியர் நாகிப் மஹ்ஃபூஸ் சிறுகதைக்குள் நிரவியுள்ளார். கி.ரா. வின் கதைகளில் வரும் மங்கத்தாயாரம்மாள் நினைவுக்கு வருகிறார்.
அறபுகளின் வாழ்க்கையில் கூடுகைக்கு பெரிய முக்கியத்துவம் உள்ளது. இசை, ஓவியம், நாடகம், ஆடல், பாடல் என அத்தனை கலை வடிவங்களின் ஏதோ ஒரு கூறு இதிலுள்ள சிறுகதைகளில் வெளியாகியுள்ளன. அறபுகள் என்பதே தொல்குடி, இனக்குழுச் சமூகம் – இன்று நாம் காணக்கூடிய பணக்காரத்தன்மைக்கு அடிநாதமாக நாட்டார் மரபு ஒன்றின் மீதே இது நிற்கிறது. மங்கல நிகழ்வுகளில் குலவை ஓசை எழுப்பும் பெண்களைப் பற்றி அறிய மகிழ்ச்சி உண்டாகிறது. அறபு நிலப்பரப்பை, அங்குள்ள மக்களின் மனவியல்பை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள இந்தச் சிறுகதைகள் உதவுகின்றன. இது ஒட்டுமொத்தமான அறபு இலக்கியமா என்றால் இல்லை, இந்தக் கதைகளில் அறபு இலக்கியத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறேன் – இதன் மூலம் மேலதிகம் வளைகுடா எழுத்துக்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
இந்தச் சிறுகதைகளின் வழியாக அறபுகளின் சமூகம், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், மத நம்பிக்கைகள், மரபு மீதான பிடிப்பு, நவீனத்தை எதிர்கொள்ளும் போக்கு ஆகியவற்றை அறியக் கூடும். கெய்ரோ, பாக்தாத், மெக்கா போன்ற நகரங்களைப் பற்றிய (நேரடி, மறைமுக) குறிப்புகள் அறபுகளின் நனவிலியில் உள்ளவை. அதனால் அவை இங்கு வெளிப்பட்டிருப்பது இயல்பானதே.
இந்த சிறுகதைகளினூடாக மதம், மெய்யியல் ஆகியவை அறபு வாழ்வோடு எப்படி இயைந்து போயிருக்கிறது என்பதைக் காணமுடிகிறது. இந்த தொகுப்பில் ஒன்று போல் அல்லாத அழகான கதாபாத்திரங்கள் உள்ளன. பழங்குடி மனநிலை எப்பொழுதும் உணர்வுகளால் ஆனது. ஆனால் அங்கு பிற்பாடு வந்த பிரதான (இஸ்லாமிய) மதம் நகரவாசிகள், வியாபாரச் சமூகத்திலிருந்து எழுந்த ஒன்று. இந்த இரண்டு எதிர்நிலைகள் ஒன்றையொன்று உட்செறித்த முரணியக்கமாகும்.
பாலஸ்தீன–இஸ்ரேல் முரண், ஈரான் ஈராக் போர், குவைத் மீதான ஆக்ரமிப்பு, அதன் பிறகு அமெரிக்க ஆப்கன், ஈராக் மீதான படையெடுப்பு, பின்லாடனின் பயங்கரவாதம் என அங்கிருந்த அரசியல் சூழ்நிலையால் சமூக வாழ்க்கையில் பாரிய விளைவுகள் உண்டாயின. இந்த நிலையில் 1938-இல் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனால் கிடைத்த பெருஞ்செல்வமும் சாதகமாகவும், பாதகமாகவும் அறபு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தின. சௌதி அரேபியா பரப்பளவில், மக்கள் தொகை அடிப்படையில், செல்வ செழிப்பில், இஸ்லாமிய மதம் தீர்க்கதரிசி முஹம்மது நபி பிறந்த நாடு என்கிற வகையில் மிகவும் முக்கியத்துவம் கொண்ட நாடு. இலக்கியத்திலும் அதற்கு தனித்த இடமொன்றுள்ளது, ஆனால் அங்கிருந்து ஒரேயொரு சிறுகதைகூட கார்த்திகைப் பாண்டியனுக்கு (ஆங்கிலத்தில்) கிடைக்கவில்லை என்பது வியப்பானது.
பொதுவாக அறபு வாழ்க்கை என்பதே பயணங்கள் செல்லும் வழக்கங்களை பல ஆயிரமாண்டுகளாக ஒழுகி வருபவை, திடீரென்று எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பின் அது செய்த குறுக்கீடு என்பது நகரங்களுக்குள் அவர்களை அடைத்து வைத்தது என்றே கருதுகிறேன். அறபு சிறுகதைகளின் போக்கை அறிந்துக்கொள்ள 1980-க்கு முன் / பின் என ஒரு பிரிகோட்டை வகுத்து வாசிக்கப்பட வேண்டும். அரசியல், பண்பாடு, வரலாறு, பொருளாதரம், அறம் என அத்தனை கூறுகளையும் ஊடறுத்து செல்லக் கூடிய அந்நியமாதல் இந்தச் சிறுகதைத்தொகுப்பில் தெளிவாக உணர முடிகிறது.
1930-79 வரை வெறும் ஐம்பது நாவல்களே அறபியில் எழுதப்பட்டன என்றும், அதன் பிறகு 1980 – க்குப் பிறகான இந்த நாற்பது ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகாரித்து 500 (அறபு) நாவல்கள் வந்திருப்பதாக ஒரு கணக்கு உள்ளது. இங்குள்ள கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் சில பேராசிரியர்கள் அறபு இலக்கியத்தை படிப்பதும், அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பேராசிரியர் அ.ஜாகிர் ஹுசைன், கே.எம்.ஏ. ஜுபைர், JNU-வில் பணிபுரிந்து (ஓய்வுபெற்ற) பஷீர் ஜமாலி, தாய்லாந்து பல்கலைக் கழக (இலங்கையர்) இர்ஃபான் போன்றவர்கள் அறபு – தமிழ் மொழியாக்கங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் (இரண்டாவது மொழியான) ஆங்கிலத்தில் படித்துவிட்டு தமிழில் கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்தார் என்பது எவ்வளவு மகத்தானது. வெறுமனே போகிற போக்கில் நேரம் போகாமல் மொழிபெயர்க்கவில்லை, சிறுகதைகள் என்பது பக்க அளவைக் கொண்டு எண்ணப்படுபவை அல்ல. இவற்றில் சில ஒன்று மற்றொன்றுடன் ஒப்பிடும்போது ஒன்றுபோல் இல்லை.
பேராசிரியர், கல்வியாளர், சினிமா / காட்சியூடகவியலாளர், இதழியலாளர், களச் செயல்பாட்டாளர் என சமூக அசைவியக்கத்தின் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் எழுதிய சிறுகதைகள். வெவ்வேறு நிலப்பரப்பில் மக்கள் பேசும் மொழியில், எழுதும் வார்த்தைகளில் வித்தியாசமாக இருக்கும். அதுவே அதன் தனித்தன்மையும், இயல்பும் ஆகும். மயங்க வைக்கும் சொற்சேர்க்கை இந்த சிறுகதைகளில் மின்னல் வெட்டைப் போல் பளிச்சிட்டு மறைகின்ற அழகுக்காகவே இவற்றை படித்துப் பார்க்கலாம்.
பழமையும், புதுமையும் கொண்ட அறபு இலக்கியம் இன்றைய நவீன மொழியிலும் எழுதப்பட்டு வருகிறது. கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தேர்வு எந்த அடிப்படையில் இருக்கிறது என்று ஆர்வமாக பின் தொடர்ந்து வந்தேன். எனக்குப் பிடித்த வேறு சில அறபுகள் எழுதிய சிறுகதையை கார்த்திக் மொழிபெயர்த்து விடுவார் என கடைசி சில மாதங்களாக நினைத்துவந்தேன், துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை, அதேபோல் தவ்ஃபீக் அல்ஹக்கீம் (1898 – 1987) ஏன் விடுபட்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை. நோபல் பரிசு பெற்ற ஈரானியரான Shirin Ebadi (பிறப்பு 1947…) –யின் ஒரு நாவலை (ஆங்கிலத்தில்) படித்திருக்கிறேன், சிறுகதைகளும் எழுதி இருக்கின்றார் என்றே நினைக்கிறேன். ஈரானிய சிறுகதைகள் ஒன்றுகூட இல்லை, Youssef al-Sharouni போன்றவர்கள் என பெரிய பட்டியல் உள்ளது, அவர்கள் எழுதியவற்றை பிற்காலங்களில் யாரேனும் மொழிபெயர்க்கக் கூடும்.
அறபுகள் என்றாலே முஸ்லிம்கள் என்கிற மனப்பான்மை நிலமையில், அறபு கிறிஸ்தவர் (அதுவுமொரு பெண்) எழுதிய சிறுகதையும் இதில் உள்ளது. அறபு இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான எழுத்தாளர்களை இந்த தொகுப்பில் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு கதாசிரியர்களின் தெரிவில் கார்த்திகைப் பாண்டியனின் உழைப்பு இருக்கிறது. அறபு கதாசிரியர்களின் எத்தனையோ சிற்கதைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்ததில் பெரிய ஆய்வு உள்ளது. இந்த சிறுகதைகள் நேரிடையானவை, எளியவை, புதியவை. பாலைநிலத்தின் சூட்டால் தகிப்பவை. மொழிபெயர்ப்ப்பு என்கிற அளவில் இதில் பிரதியின்பத்தை வாசகர்களால் உணர முடிகிறது,
இந்தச் சிறுகதைகள் நிகழும் பாலைவனப் பெருவெளியில் கழித்த என் பதினான்கு ஆண்டுகளின் நினைவுகளை – flash back-ல் பார்ப்பதைப் போல் உள்ளது. இச்சிறுகதைகளின் வழியாக அவற்றை மீட்டெடுக்க கார்த்திகைப் பாண்டியன் தனிப்பட்ட முறையில் எனக்கு உதவியுள்ளதால் என் நெஞ்சார்ந்த நன்றிகளை அவருக்கு உரித்தாக்குகிறேன்.
கொள்ளு நதீம் – ஆம்பூர்
சில பதிப்பகங்கள்
இந்த புத்தகக் கண்காட்சியில் பொதுவாக அறியப்பட்ட பதிப்பகங்களை நாடிச்சென்று நூல்கள் வாங்கும்போதே சில அறியப்படாத பதிப்பகங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். அதில் ஒன்று அழிசி பதிப்பகம். க.நா.சுவின் புதிய நூல்களை தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்து வருகிறது அது. இந்நூல்கள் ஏன் முக்கியம் என்றால், இவற்றில் பல இன்னும் மற்றொரு அச்சாக வெளிவர நீண்டகாலமாகும் என்பதனால்தான். (க.நா.சுவின் புதிய நூல்கள்- அழிசி பதிப்பகம்) ஓர் இளம் வாசகனுக்கு இந்நூல்களில் படித்திருக்கிறீர்களா மிக முக்கியமான ஒரு நூல். அந்த நூல் உண்மையில் ஒரு பட்டியலாக நீண்டகாலம் இலக்கியச் சூழலில் புழங்கியது. நவீனத்தமிழிலக்கியத்திற்கான முதன்மைநூல்களை அதுவே தொகுத்துக் காட்டியது. பின்னர்தான் அந்த பட்டியலை ஒட்டிய கட்டுரைகளை க.நா.சு. எழுதினார். (அழிசி பதிப்பகம்)
இலக்கியவாசகர்கள் இந்த புத்தகக் கண்காட்சியில் தவறவிடக்கூடாத இன்னொரு பதிப்பகம் யாவரும். இன்று யாவரும் பதிப்பகம் இளம்படைப்பாளிகளின் தொகுப்புகளை வெளியிடுகிறது. பொதுவாக குறைவான பிரதிகளே அவை அச்சிடப்படுகின்றன. வேறு பதிப்பகங்கள் வெளியிடும் இளம்படைப்பாளிகளின் நூல்களும் யாவரும் பதிப்பகத்தில் கிடைக்கும். இலக்கியத்தில் ‘இன்று’ என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறிய விரும்புபவர்கள் அந்நூல்களை தேடி வாங்கியாகவேண்டும். (யாவரும் பதிப்பகம்)
இன்னொரு பதிப்பகம் சீர்மை. (சீர்மை பதிப்பகம்) அராபிய, இஸ்லாமிய இலக்கியங்களை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்து வெளியிடுகிறார்கள். தமிழில் அரிதாகவே மொழியாக்கங்களை நம்பி வாங்க முடியும். சீர்மை நூல்கள் எவையும் இன்றுவரை என்னை ஏமாற்றியதில்லை.
நூல்வனம் பதிப்பகம் அச்சுநிபுணர் மணிகண்டனால் நடத்தப்படுவது. மிக அழகிய பதிப்புகளாக நூல்களை வெளியிட்டு புகழ்பெற்றது. எம்.கோபாலகிருஷ்ணனின் மொழியாக்கத்தில் ஆண்டன் செகாவ் கதைகளை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு யுவன் சந்திரசேகரின் பெயரற்ற யாத்ரிகன் என்னும் ஜென் கவிதைகளின் தொகுதியை நான்கு வண்ணங்களில் நான்குவகை அட்டைகளுடன் வெளியிட்டுள்ளது.
சீனலட்சுமி- கடிதம்
இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது. இங்கு சில கதைகளை மட்டுமே நான் பேசி இருக்கிறேன்.
சீனலட்சுமி – லதாJanuary 18, 2023
கோவையில்…
இன்று (19 ஜனவரி 2023) காலை விமானத்தில் கோவை வந்திறங்குகிறேன். அங்கே பிரியம்வதாவுக்கு Stories Of The True நூலின் மொழியாக்கத்துக்காக அ.முத்துலிங்கம் விருதை விஜயா வாசகர் வட்டம் வழங்குகிறது. அதில் கலந்துகொள்கிறேன். அனிதா அக்னிஹோத்ரி, சுமதி ராமசாமி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இடம் பி . எஸ் . ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கம், பீளமேடு, கோவை 14
நேரம் மாலை 530
Stories Of The True வாங்ககேரள இலக்கிய விழா
ஈரோட்டில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி கிளம்பி கோழிக்கோடுக்குச் சென்றேன். சரியாக கால்நீட்டி படுப்பதற்குள் ஆறுமணி நேரத்தில் பயணம் முடிந்துவிட்டது. விடியற்காலை மூன்றுமணிக்கு சென்றிறங்கி அங்கே Raviz விடுதியில் பதினான்காவது மாடியில் வானில் மிதப்பதுபோல தூங்கினேன். காலை ஒன்பது மணிக்கு எழுந்து பத்துமணிக்கு கேரளா லிட் ஃபெஸ்ட் அரங்குக்குச் சென்றுவிட்டேன்.
கேரளத்தில் இன்று நான்கு சர்வதேச இலக்கியவிழாக்கள் நடைபெறுகின்றன. கேரளா லிட்பெஸ்ட் டி.சி.புக்ஸ் நிறுவனம் ஒருங்கிணைப்பது. கோழிக்கோட்டில். மாத்ருபூமி லிட்ஃபெஸ்ட் திருவனந்தபுரத்தில். இன்னொரு கேரள லிட் ஃபெஸ்ட் எர்ணாகுளத்தில். ஒவ்வொன்றும் சிலகோடி ரூபாய் செலவில் நிகழ்பவை. 90 சத நிகழ்வுகள் மலையாளத்தில் நடைபெறும். ஒவ்வொன்றிலும் சராசரியாக ஐந்தாயிரம் பார்வையாளர்கள் பங்கெடுக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இவற்றுக்கு தனியார் நிதியுதவிகள் உள்ளன. அரசு உதவி இல்லை.
தமிழகத்தில் இன்று இத்தகைய நிகழ்வுகள் இல்லை. தமிழக தனியார் நிறுவனங்கள் பொதுவாக இதற்கெல்லாம் நிதியுதவி செய்வதில்லை. ஏனென்றால் அவற்றில் பண்பாட்டுப் பயிற்சி கொண்டவர்கள் எவரேனும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. விஷ்ணுபுரம் சார்பில் நாங்கள் ஒருங்கிணைத்தால்தான் ஒரு சர்வதேச இலக்கியவிழா இங்கே உருப்படியாக நடைபெற வாய்ப்பு.
தமிழகத்தில் சிறிய அளவில், உயர்வட்டத்திற்காக மட்டும், ஹிந்து லிட்ஃபெஸ்ட் என ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. இந்து நாளிதழ் ஒருங்கிணைக்கும் அந்த நிகழ்வு பல ஆண்டுகளாக சில இலக்கிய வைரஸ்களால் தொற்றுக்கு உட்பட்டு சூம்பிப்போய் நிகழ்கிறது. நவீனத் தமிழிலக்கியத்துடன் அதற்கு தொடர்பில்லை. ஒரே ஒரு வட்டத்தைச் சேர்ந்த மிகச்சில தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமே அதில் கலந்துகொள்கிறார்கள். இங்கே நவீனத் தமிழிலக்கியம் இருக்கும் செய்தியை அறியாமலேயே சர்வதேச எழுத்தாளர் சிலர் வந்து செல்கிறார்கள்.
கேரள இலக்கியவிழாக்கள் எல்லாவற்றுக்கும் எனக்கு அழைப்பு வருவதுண்டு. பெரும்பாலும் ஒருங்கிணைப்புக்குழு தலைவரே நேரில் அழைப்பார். ஆனால் இலக்கியவிழாக்கள் சம்பந்தமாக ஒரு சிறு விலக்கம் எனக்குண்டு என்பதனால் கலந்துகொள்வதில்லை. அங்குள்ள அந்த பரபரப்பும் கொண்டாட்டமும் என் அகத்தனிமையுடன் இசைவதில்லை. ஆனால் இப்போது என் ஆங்கில நூல் வெளிவந்துள்ளமையால் அவர்கள் என்னை கட்டாயப்படுத்துகிறார்கள். வேறுவழியில்லை.
கோழிக்கோடு இலக்கிய விழாவில் எனக்கு இரண்டு அரங்குகள். ஒன்றில் கே.சி.நாராயணன் என்னை பேட்டி எடுக்க நான் என் இலக்கிய வாழ்க்கை, என் எழுத்துக்கள், என் அரசியல் பற்றி பேசினேன். வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். ஒரு சிறந்த உரையாடல் அமைந்தது. கேரளத்திலும் எனக்கு தீவிரமான வாசகர்வட்டம் ஒன்று உண்டு. அரங்கிலிருந்தவர்கள் அனைவருமே என் எழுத்துக்களை வாசித்தவர்கள். அரங்கு நிறைந்து சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இருந்துகூட சிலர் வந்திருந்தார்கள். திருச்செங்கோட்டில் இருந்து நிகழ்வுக்கு வந்த கார்த்திக் ஒரு கேள்வி கேட்டார். மொழிக்கும் நிலத்துக்குமான உறவைப் பற்றி.
இன்னொரு அரங்கு கமல்ஹாசன், நான், பால் ஸகரியா ஆகியோர் கலந்துகொண்டது. கமல் அன்றுகாலை தனி விமானத்தில் சென்னையில் இருந்து வந்திருந்தார். கமல்ஹாசனின் திரைமொழி, அவருடைய இலக்கியப்பார்வை, காந்தியம் பற்றிய கேள்விகள் எழுந்தன. பால் சகரியாவின் திரை அனுபவம் பற்றி நான் ஒரு கேள்வி கேட்டேன். மிகப்பெரிய திரள். முகங்கள் மட்டுமேயான ஒரு பெரிய திரை போல தோன்றியது. நான் கமலிடம் ‘இங்கே தேர்தலில் நின்றால் ஜெயித்துவிடுவீர்கள் போல’ என்றேன். அவர் சிரித்தபடி ‘கூட்டம்கூடும். ஓட்டை மாற்றிப்போட்டுவிடுவார்கள்… அது வேறு’ என்றார்.
பின்னர் கமல் ஹாசனுக்கு இன்னொரு அரங்கு. அவர் அரைமணிநேரம் தன் அரசியல் பற்றியும், தன் இந்தியக் கனவு பற்றியும் பேசினார்.மிகச் சரளமான, உணர்ச்சிகரமான உரை.
கமல்ஹாசன் டெல்லி சென்று ராகுல்காந்தியின் நடைபயணத்தில் கலந்துகொண்டபோது அதைப்பற்றி என்னிடம் கருத்து கேட்டிருந்தார். அதன் அரசியல் லாபம் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் அது அவர் செய்யத்தக்க மிகச்சிறந்த செயல் என்று நான் சொன்னேன்.
இன்று மதச்சிறுபான்மையினர் அரசியலில், அரசாங்கத்தில் இருந்து நம்பிக்கையிழந்து விலகிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நீண்டகால அளவில் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகமிக ஆபத்தானது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பார்க்கையில் அச்சமே எழுகிறது. இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, நவீனப்பார்வை கொண்ட அரசியல் மேலெழுந்தாகவேண்டும்.கமல் அதன் முகமாகவே தன்னை முன்னிறுத்தவேண்டும்.
கமல்ஹாசனுடன் அவருடைய தனிவிமானத்தில் அன்றே சென்னை வந்தேன். ஒன்றரை மணிநேரம் மலையாள இலக்கியம், சினிமா பற்றிய நகைச்சுவைகளாகப் பொழிந்துகொண்டிருந்தார். சென்னையில் விடுதியில் தூங்குவதற்காகப் படுத்தபோது எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. பயணம் முடியவில்லை. நான் ஊருக்கு செல்ல ஜனவரி 27 ஆகும்.
ஆர்.எஸ்.சுப்புலட்சுமி
[image error]சாரதா கல்வியமைப்புகளை உருவாக்கிய ஆர்.எஸ்.சுப்புலட்சுமி தமிழகத்தில் விதவைகள் நலனுக்காகவும் கல்விமேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஒரு சமூகப்போராளி. ஆனால் தன் சேவைகளை பெரும்பாலும் பிராமண சமூகத்திற்காகவே நிகழ்த்தினார் என்னும் குற்றச்சாட்டும் அவர்மேல் உண்டு.
ஆர்.எஸ். சுப்புலட்சுமி
ஆர்.எஸ். சுப்புலட்சுமி – தமிழ் விக்கி
சித்ரனின் பொற்பனையான்- நரேன்
.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இம்மாதம் வெளியிடப்படுகிறது. இவரின் சிறுகதைத் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, 2018 ஆம் ஆண்டில் முதல் சிறுகதை தொகுப்பு க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான த.மு.எ.க.ச. விருதையும் பெற்றிருந்தபோதும் கொரோனா கால சிறுகதை அலையினால் வாசகர்களின் கவனத்தை இவரால் பெற முடியாது போனது என்றே நினைக்கிறேன். சிறுகதை எனும் கூரிய வடிவத்திற்குள்ளேயே மிக நிதானமாக கதை சொல்லும் இவர் சிறுகதைகளை எழுதுவதிலும் மிக நிதானமாகவே செயல்பட்டிருக்கிறார்.
சித்ரனின் படைப்பு மனம் இரு விதமாக இயங்குகிறது. ஒன்று தன் வாழ்விற்கு மிக நெருக்கமான அல்லது முற்றிலும் யதார்த்த உலகில் நடக்கச் சாத்தியமான சம்பவங்களில் சற்றே புனைவு கலந்து சிறுகதைகளை படைக்கிறார். இக்கதைகளின் அடியாழத்தில் ஒரு அமானுஷ்யமான தீவிரம் குடிகொண்டிருந்தாலும் யதார்த்தவாத தொனியைத் தொட்டுச் செல்கிறது இவரின் எழுத்து நடை. உதாரணமாக, ‘பெரியப்பா’ எனும் சிறுகதையில் ஒரு நாயின் கண்கள் அநாதிக் காலம் முதல் தொடரும் நன்றியையும் வஞ்சத்தையும் மன்னிப்பையும் தாங்கி நிற்கிறது. ஆனால் கதைக்குள் பொதிந்திருக்கும் ஆழத்தை எந்த விதத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாத பாவனையில் புனைவு மொழி அமைந்திருக்கிறது. மற்றொரு விதமான கதைகள், முழுக்க கற்பனையினாலும் அணிகளையேற்ற மொழியினாலும் சிறுகதை என்ற கட்டுமானத்திற்குள் அடங்காமல் விரிந்து விரிந்து சென்றுகொண்டே இருக்கின்றன. இக்கதைகளில் உலவும் மர்மங்களும் அதனூடாக இயல்பாகவே வெளிப்படும் சுவாரசியமும் முக்கிய கூறுகளாக நிலைத்துவிடுகின்றன.
மிக நிதானமாகச் சம்பவங்களை அடுக்கிச் சொல்லும் போக்கையும் பொறுமையாகவே கதைகளை எழுதி வெளியிடும் தன்மையையும் வைத்தே தயங்கித் தயங்கிக் கதை சொல்லும் சித்ரனின் மனதை ஒருவாறு ஊகித்துவிடலாம் என்று தோன்றுகிறது. வெடித்துச் சொல்லக்கூடிய நகைச்சுவைக்கான சாத்தியம் இருந்தாலும் மெல்லிய கோணல் சிரிப்போடுதான் கதைக்குள் அவற்றை வெளிப்படுத்துகிறார். ஆனால், சத்தமில்லாமல் அவரின் சிறுகதைகளுக்குள் ஒளிந்திருக்கும் நகை முரண்களே அக்கதைகளுக்கான பலமாக இருக்கிறது. ‘ஒரு வழிப்போக்கனும் அவனது வழித்துணையும்’ எனும் சிறுகதையில் பணப் பிரச்சினையால் வேறொருவனின் ஈர்ப்புக்கு தன் மனைவியை இழந்தவன் அத்தனை ஆண்களின் பெண் ஈர்ப்பையே மூலதனமாக்கி தன் பணத் தேவையைப் பூர்த்தி செய்கிறான். எந்த முன் முடிவுகளும் இல்லாமல் இக்கதை அடிப்படை இச்சை ஒருவனுக்குப் பணத்தை ஈட்டித் தரும் வித்தையை இயல்பாக விவரிக்கிறது. குற்ற உணர்வே இல்லாமல் இப்படி பணம் பறிப்பவனும் கூட இச்சைகளின் தீவிரத்திலிருந்து முற்றிலும் விலகியவனாகத்தான் இருக்கிறான். அதுவே எந்த பிணக்கும் இல்லாமல் தன் மனைவியை இப்போதும் கூட எதிர்கொள்ளக்கூடியவனாக அவனை வைத்திருக்கிறது.
இத்தொகுப்பிலிருக்கும் மற்ற சிறுகதைகளும் உடல் வேட்கையும் அது இயற்கையுடன் நேரடியாகக் கொள்ளும் உறவையும் தொட்டுப் பேசுகிறது. பெண்களின் மீது ஈர்ப்பற்ற ஒருவனின் உடல் தீ பற்றியவுடன் பால் மாறுகிறது. மற்றொரு கதையில் பின்னாளில் சித்தனாகிப் போகும் ஒருவன் ஃ என்ற பாறை அமைப்பின் மீது நிர்வாணமாகக் கிடப்பதையே ஏகாந்தமாக எண்ணுகிறான். வரதன் என்ற சாகசக்காரனின் ஆடு திருட்டும் பெண் திருட்டும் பதின் பருவ நினைவுகளாக ஒரு கதையில் விரிகிறது. இப்படி சித்ரனின் சிறுகதைகளில் பெண் வேட்கை ஊமை வலியைப் போலத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கையான புறச் சித்தரிப்புகளினால் முகமூடியிட்டு திரிகிறது.
கூர்மையாகச் சொல்ல வேண்டிய கதைகளில் கூட சம்பவங்களின் குவிப்பு சிறுகதையின் தாங்கு சக்தியை மீறிய எடையைக் கூட்டுகிறது. அனைத்தையும் கூறிவிடும் ஆர்வமும் ஆனால் அதை மிக நிதானமாக விவரிக்கும் விதமும் நாவலின் ஒரு பகுதியை வாசித்துக்கொண்டிருப்பதாய் தோன்றச் செய்துவிடுகிறது. உண்மையில் சித்ரனுக்கு நாவல் வடிவம்தான் உகந்ததாக அமையக்கூடும். இத்தொகுப்பில் கிட்டத்தட்ட அறுபது பக்கங்களுக்கு நீளும் ‘பொற்பனையான்’ எனும் நீள் கதையே இதற்கு உதாரணம். இக்கதை வரலாறும் மிகை புனைவும் முயங்கி நீளும் அதே வேளையில் இருவேறு மரபுகள் பொருந்திப் போகும் ஒற்றைக் கூறு ஒன்றை மிக சன்னமாக நூல் பிடித்துக் காட்டுகிறது. ரசவாதம் எனும் மந்திர விளையாட்டு எக்காலம் தொட்டும் கதைகளின் சுவாரசியத்தைக் கூட்டக் கூடியது. ஆனால் அந்த அம்சம் சில தலைமுறைகளாக, பல்வேறு பொற்பனையாளன்களின் ஊடாகச் சொல்லிச் செல்லும்போது அதன் முடிவை நோக்கிய கவனத்தைச் சற்றே சிதறச் செய்யும் அளவிற்கு விவரணைகளும் மொழி விளையாட்டுகளும் அமைந்துவிடுகின்றன. இருப்பினும், சித்ரன் கட்டியெழுப்பும் ஒரு புனைவுலகம் இன்னும் கூட நீண்டு ஒரு நாவலாக உருப்பெறுவதற்கான சாத்தியத்தையே கொண்டிருக்கிறது. இதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, ஐந்து குறுங்கதைகளை இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார். விளையாட்டாக, ஒரு ஸ்மைலியுடன், அவை உண்மையில் சிறுகதையாக நீள்வதற்கான சாத்தியங்களை கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லலாம்
மேலும், சித்ரனின் சிறுகதைகள் பல்வேறு இழைகள் முளைத்து வளரும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. வாசகன் எந்த இழையைப் பற்றிக்கொள்வது என்ற பதற்றத்தை ஒரு சிறுகதை அளிக்கும்போது அது தன் கூர்மையை இழந்துவிடக் கூடும். அத்தனை இழைகளையும் விவரித்துச் சொல்லத் துவங்கும்போது அது நாவல் வடிவை நோக்கிப் பயணிக்கத்தொடங்கி விடுகிறது. இவ்விரண்டிற்கும் இடையே சித்ரன் திகைத்து நிற்கிறார் என்று படுகிறது
சித்ரனுக்கு கைகூடியிருக்கும் மொழி அழகும், இலகுவாகக் கதையை தன் போக்கில் விவரித்தபடியே செல்லும் பாங்கும், புறவுலகின் இயல்பான சூழலில் கூட மர்மங்களைக் கண்டறியும் ஆர்வமும் அவரின் படைப்புகள் மேல் ஆர்வத்தை உருவாக்குகிறது
நரேன்
***
கிழவனின் கடல்
கிழவனும் கடலும் வாங்க
இனிய ஜெ,
இம்முறை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மற்ற மொழி நாவல்களை படிக்கலாம் என்ற எண்ணம்,
தங்களின் கண்ணீரை பின் தொடர்தலை படித்த பிறகு அடைந்திருந்தேன்.
“கடலும் கிழவனும்” குறுநாவல் பற்றி கு. சிவராமன் குறிப்பிட்டது ஞாபகம் வந்து வாங்கினேன். The old man and the sea யின் தமிழ் மொழியாக்கம். நாவலாசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. ச.து.சு. யோகியார் தமிழ் மொழியாக்கம். 79 பக்க குறுநாவல்.
வீட்டிற்கு திரும்பியவுடன் ஒரிரு மணிக்குள் படித்து முடிக்கும்படி இச்சிறு கதையாக்கம் தூண்டியது.
கிழவன் ஒரு பெரிய மீனை பிடித்து விடுவது போல் கனவு காண்கிறான். அவன் கனவுகளில் சிங்கம் அடிக்கடி வருகிறது. பையன் கிழவனை அன்புடன் ஊக்கப்படுத்துகிறான். கிழவனுக்கு வேண்டுவன செய்கிறான். எண்பத்தேழு நாட்களுக்கு பிறகு, பெரிய சுறா அகப்படுகிறது.
அதை காக்க தன்னிடம் உள்ளவற்றை இழக்கிறான் – ஈட்டி, கத்தி, துடுப்பு, தூண்டில், கயிறு.
மற்ற சுறாகள் அகப்பட்ட சுறாவை சூறையாடுகிறது. பெரும் போராட்டத்திற்கு பின் கடைசியில் மிஞ்சுவது தான் கதை.
கிழவனிலுள்ள, போராடும் மிருகமும் ஆணவ மனிதனும் சேர்ந்து அச்சுறாவை கரைக்கு எடுத்து செல்ல போராடுகிறார்கள். ஆனால், அவனில் உள்ள ஆத்மா அவ்வப்போது வெளிப்பட்டு, மனித வாழ்வின் இயல்பை அவனுக்கு நினைவூட்டுகிறது. தன் பிரிய பையனை அடிக்கடி நினைத்துக் கொள்கிறான். ஒரு ஆன்மா தனக்கு பிடித்த இன்னொரு ஆன்மாவை தேடுவது போல.
கதையில் கிழவன், தனக்குள்ளே கூறுகிறான், “பாவம், அது(அகப்பட்ட சுறா) எனக்கொரு கெடுதியும் செய்ய வில்லை. எனக்கும் அதற்கும் வித்தியாசமென்ன – நான் அதை விட தந்திரசாலி – அவ்வளவுதானே?”. வேறொரு இடத்தில், “காற்று நம் நண்பணே – சில சமயங்களில் கடலும் கூடத்தான். பல நண்பர்களும் பகைவர்களும் இருந்தாலும், படுக்கை – ஆம், படுக்கையே என் நண்பண். வெறும் படுக்கை. அவ்வளவுதான்; படுக்கை மிகமிகப் பெரிய நண்பண்; தோல்வியுற்றவனுக்கு அடைக்கலம் படுக்கையே. தோல்வியா? யாரிடம், எதற்கு நீ தோற்றாய்?”.
சாண்டியாகோ என்ற கிழவனின் பெயரையும் மனோலின் என்ற பையனின் பெயரும் கதையின் இறுதியிலேயே அறிமுக படுத்த பட்டுள்ளது. செயல்களின் அனுபவங்களே நினைவுகளே எஞ்சும். பெயர்கள் அதை தொக்கியே இருக்கும். நாவலாசிரியர் இதை தான் என் அனுபவங்களில் கடத்துகிறாரோ?
ஒரு செயல், ஆணவ வெளிப்பாடாக இருக்கும் போது, வெறுமையே வெல்லும், என்பதை முடிக்கும் போது அடைந்தேன். பையன் கிழவனுக்காக உருகும் போது, இனிமையான மனித உறவுகளின் பாதிப்பையும் அடைந்தேன்.
ஜானகிராமன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


