Jeyamohan's Blog, page 643
January 18, 2023
லெ.ரா.வைரவனின் ராம மந்திரம்- சுஷீல்குமார்
வணக்கம் ஜெ,
நாகர்கோவிலுக்குள் வருபவர்களை எதிர்கொண்டு வரவேற்பது ஒழுகினசேரி. ஒரு சில தெருக்களைக் கொண்ட சிறிய பகுதிதான். ஆனால், அதன் ஒவ்வொரு தெருவிலுமிருந்து கதைகள் பெருக்கெடுத்து வருகின்றன. தாத்தாக்கள், அப்பாக்கள், பல வயது பெண்கள், கடந்து செல்லும் அந்நியர்கள் என கதை மாந்தர்கள் பல்கிப் பெருகுகின்றனர். அம்மனிதர்களின் சமூகக் கட்டமைப்பின் மீதான விமர்சனம், சடங்குகள், கலாச்சாரம் மற்றும் அந்த நிலத்திற்கே உரிய தொழில்கள், நம்பிக்கைகள் என விரிந்து செல்லும் கதைப்பரப்பை தனதாக்கிக் கொண்டிருக்கிறார் எழுத்தாளர் வைரவன் லெ.ரா.
இந்தக் கதைகள் எல்லாவற்றிலும் வைரவன் உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பது தன் கதை மாந்தர்களின் ஆளுமையை தான். அதிலும், அவரைக் கவர்வது அசாதாரணமான ஆளுமை கொண்ட மனிதர்கள். இத்தொகுப்பில் இருக்கிற பன்னிரெண்டு கதைகளும் அத்தகைய பன்னிரெண்டு மனிதர்களை நம்முன் நிறுத்துகின்றன. யார் ஆண், யார் பெண், எது ஆண்மை, எது பெண்மை என ஆராய்ந்து தயங்கித் தயங்கி தன் பாலினத்தை வெளிப்படுத்தும் பதின் பருவக் கதாபாத்திரம், மனைவியின் கர்ப்பத்தை பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி கையாள நடுங்கும் உறுதியற்ற ஒருவன், உண்மையைக் கைவிட்டுவிட்டு அதே உண்மை தன்னைக் கைவிட அலைந்து திரியும் ஒருவன், பலாத்காரத்திற்குப் பதிலாக நிற்கும் துப்பாக்கி முனையில் தன் இறைவனைக் கண்டடைந்த ஒருவன், போதையிலும் வாழ்விலும் ஒரு அத்தம் பார்த்துவிடத் தீர்மானமாக இருக்கும் ஒருவன், நீண்ட இருளில் ஒரு சிறு துளி வெளிச்சத்தைப் பற்றிக் கொள்ள ஓடும் ஒருவன், மருத்துவாழ்மலையின் சிரஞ்சீவியை இமயத்தில் தேடும் ஒருவன் என பல ‘ஒருவன்’களையும் அவர்களது தனித்துவமான எண்ண ஓட்டங்களையும் முடிவுகளையும் துல்லியமாக நம் முன் விரித்துச் செல்லும் கதைகள்.
இவர்கள் எல்லோரையும் விட என்னைக் கவர்ந்தவன் ஒருவன் இருக்கிறான். எப்போதும் நடந்து கொண்டேயிருக்கிறான். தொலைவுகளெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை என நடக்கிறான். பறவைகளும், பூச்சிகளும் பின் தொடர நடக்கிறான். அவனது நடை ஒரு அதிசயமாகிறது. மொத்த உலகமே அவனது நடையைப் புகழ்கிறது. ஒரு உச்சகட்ட நேர்காணலில் அவனது நடையின் புனிதத்தன்மை சிலாகிக்கப்படுகிறது. அவனோ எதையும் கண்டுகொள்ளாமல், நடையை கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி மீண்டும் நடக்கிறான். இன்னும் அவன் நடந்துகொண்டேதான் இருக்கிறான். நடத்தல் அவன் சுதந்திரம், வியாதியோ, தவமோ, புனிதமோ அல்ல, அது வெறும் நடை என்கிறான். இன்னொருத்தியோ தன்னுடலை, தன் காமத்தை ஆயுதமாக்கி உலகைக் கேலிசெய்து நிமிர்ந்து நிற்கிறாள். அசாதாரண உறவுகளின் உள்ளிருக்கும் பகடி, சோகம், திமிர், அசாத்தியத் துணிவு என தொடத் தயங்கும் கருக்களைத் துணிந்தெடுத்து அவற்றின் உன்னதங்களைக் காட்டுகிறார் வைரவன்.
ஒட்டு மொத்தத்தில், நாஞ்சில் நாட்டின் வெளிப்படாத மனிதர்களும், அவர்களின் வெளிப்படாத வாழ்க்கைத் தருணங்களும், தனித்துவமான ஆளுமைகளும், வீழ்ச்சியும், கால மாற்றத்தின் தாக்கமும் என பரந்த தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். நாஞ்சிலோடு நின்று விடாமல் தன் கணினித் துறை சார்ந்த கதைகள், முழு கற்பனைக் கதைகள், அறிவியற் புனைவுகள், தொன்ம மீட்டுருவாக்கங்கள் எனவும் முயல்கிறார். வடிவத்திலும் மொழியிலும் பலவிதங்களில் எழுதிப் பார்க்கிறார். நாஞ்சில் வட்டார வழக்கும் உறுத்தலின்றி மிக இயல்பாக வருகிறது.
வைரவன் லெ.ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பட்டர்-பி’ சென்ற வருடம் வெளியாகியது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நண்பர்கள் தவறவிடக் கூடாத புத்தகம் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘ராம மந்திரம்’. யாவரும் பதிப்பக வெளியீடு.
சென்னை புத்தகக் கண்காட்சியில் யாவரும் பதிப்பக அரங்கு எண் 214, 215
ராம மந்திரம், சிறுகதைத் தொகுப்பு, பக்கங்கள் 142, விலை 180
புத்தகம் பெற: 99400 21472
சுஷீல்குமார்
January 17, 2023
நவீன இலக்கியப் பயிற்சி முகாம், புதுவை
புதுவை வெண்முரசு கூடுகையின் சார்பாக, நவீன இலக்கிய கலையின் அடிப்படைகள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அறிவிப்பு.
நண்பர்களுக்கு வணக்கம், கதைகள் கவிதைகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட புதிய வாசகர்களுக்கு, அந்த ஆர்வத்தை இலக்கியக் கலை நோக்கில் திட்டவட்டப்படுத்திக்கொள்ள, நவீன இலக்கியத்தின் அடிப்படைகளை அறிமுகம் செய்துகொள்ள, ஐயங்களைக் களைந்துகொள்ள, வாசிப்பின் செல்திசையை தெளிவாக்கிக்கொள்ள, இலக்கிய வாசிப்பின் அரிச்சுவடி பற்றிய ஒருநாள் முகாம் புதுவையில் 04.02.2023 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணிவரை நடைபெற இருக்கிறது. இலக்கிய விமர்சகர்,கட்டுரையாளர் கடலூர் சீனு கலந்து கொண்டு முகாமை முன்னெடுப்பார்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கவனத்திற்கு
* கலந்துகொள்ள கட்டணம் இல்லை
* முகாமில் கலந்துகொள்பவர்களின் வயது 18 முதல் 35 க்குள்.
* முதலில் தங்கள் பங்கேற்பை உறுதி செய்யும் 25 நபர்கள் மட்டுமே வகுப்பில் கலந்துகொள்ள இயலும் .
* பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விதிமுறைகள் உண்டு.
* காலை மாலை தேனீர் இடைவேளை, மற்றும் மதிய உணவு முகாமில் வழங்கப்படும் .
பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும், இயலாதவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.
விண்ணப்பிக்க
https://forms.office.com/r/AhrSQPLEG5
குறிப்பு : (தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாசிப்பு முகாம் நிகழும் இடம், பயிற்சி வகுப்பின் விதிகள் உள்ளிட்டவைகள் சார்ந்த அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் வழியே தெரிவிக்கப்படும்.)
தொடர்புக்கு : மணிமாறன், 9943951908 தாமரைக்கண்ணன். 9940906244
மின்னஞ்சல் mani.maran.abcd@gmail.com , lstvdesign@gmail.com
புத்தகக் கண்காட்சியில் இன்னும் ஒருநாள்
18 ஜனவரி 2023 மாலை 5 மணி முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் கடையில் இருக்க எண்ணியுள்ளேன் ( எண் 115, 116 ) மாலை 5 மணிமுதல் இருப்பேன். நூல்கள் வாங்கவும் கையெழுத்து பெறவும் விரும்புபவர்களை, நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
புத்தகக் கண்காட்சியில் நான்கு மணிநேரம் நின்றிருப்பதென்பது இத்தனை உவகையை அளிக்கும் என்று பிறரால் நம்ப முடியாது. இது எழுத்தாளரின் நாள். நம் எழுத்துக்கள் வழியாகவே நம்மை வந்தடைபவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நம் நூல்கள் விற்றுக்கொண்டே இருக்கின்றன. தமிழில் எழுதும் எந்த எழுத்தாளருக்கும் அச்சிட்டு அடுக்கப்பட்டுள்ள நூல்கள் ஒருவகையான திகைப்பையே அளிக்கும். எவரேனும் வாசிக்கிறார்களா? இவை வீணான பொருட்களா? புத்தகக் கண்காட்சி அதற்கு கண்கூடான ஒரு பதிலை அளிக்கிறது. இதோ என் வாசகர்கள் என்று காட்டுகிறது. இருபது வயதுகூட ஆகாத இளைஞர்களை வாசகர்களாகக் காண்கையில் அடுத்த தலைமுறையினரிடம் சென்றடைந்துவிட்டோம் என்னும் பெருமிதத்தை அளிக்கிறது
இலக்கியம் முதல் இலக்கியம் வரை
‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற பாடல் என் சின்ன வயதில் மிகப்பிரபலம், எங்கள் எட்டாம்கிளாஸ் கணித ஆசிரியர் அதை வகுப்பில் பாடுவார். கொஞ்சம் பிசிறடித்தாலும் உற்சாகமாகக் கேட்கும்படி இருக்கும். சென்ற இரண்டாம் தேதி முதல் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். உழைப்பு? சொல்லலாம்தான். ஆனால் உழைப்பில் ஒரு முயற்சி அல்லது கட்டாயம் உள்ளது. இது செயல்களின் வழியாக ஒழுகிச்செல்லுதல். ஆகவே உற்சாகமானது
நான் ஜனவரி 3 ஆம் தேதி கிளம்பி ஈரோடு சென்றேன். அங்கே விஷ்ணுபுரம் அலுவலகம் இன்னும் வசதியான கட்டிடத்திற்கு நகரவிருக்கிறது. கிருஷ்ணன் முழுமூச்சாகச் செயலில் இருக்கிறார். ஐந்து ஆறு ஏழு தேதிகளில் தத்துவப் பயிற்சி வகுப்புகள். உற்சாகமான இளைஞர்சந்திப்பு அது. ஏழாம் தேதி அஜிதனின் நூல்வெளியீட்டுவிழாவுக்குச் செல்ல முடியவில்லை. ஏழாம் தேதி மட்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி தவிர எட்டு இலக்கிய நிகழ்வுகள். அண்ணாநூலகத்தில் நிகழ்ந்த இலக்கியவிழாவில் விஷ்ணுபுரம் நண்பர்களே மூவர் பேசினர். இருந்தும் அரங்கு நிறைந்த கூட்டம் வியப்பூட்டுவது. (மைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்)
எட்டாம் தேதி அதிகாலை நான் சென்னை வந்துசேர்ந்தேன். அதிகாலை என்றால் அதீதகாலை, மூன்று மணிக்கு. மூன்றரைக்கு வளசரவாக்கத்தில் அருண்மொழி, சைதன்யா, அஜிதன் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றேன். என்னை லண்டன் முத்து கேசவன் ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டார். சென்றதுமே ஹாய் அருண்மொழி என குழறலாகச் சொல்லிவிட்டு அப்படியே குப்புற விழுந்து தூங்கிவிட்டேன். ஒன்பது மணிக்கு எழுந்து ஒன்பதே காலுக்கு தன்னறம் விருதுவிழாவுக்குக் கிளம்பிவிட்டேன்.
தன்னறம் விருது இவ்வாண்டு சு.வேணுகோபாலுக்கு. தம்பி மிக உற்சாகமாக இருந்தார், வழக்கமாகவே அப்படித்தான் இருப்பார், அன்று கொஞ்சம் கூடுதலாக. நான் ஆற்றிய உரை கொஞ்சம் பிந்தித்தான் இணையத்தில் வெளியாகியது. தம்பியின் ஏற்புரை வழக்கம்போல கொப்பளிப்பு கொண்டது. கல்லூரியில் அடுத்த ஆசிரியர் வாசலில் வந்து நிற்பது வரை வகுப்பு நடத்தும் வழக்கம் கொண்டவர். பாவண்ணன், கோகுல்பிரசாத் ஆகியோர் பேசினார்கள். (தன்னறம் விருது விழா)
மாலையில் இன்னொரு இலக்கிய விழா. தெய்வீகனின் நூல் வெளியீடு. அதில் ஒரே ஈழநண்பர்களின் திரள். ஷோபா சக்தி வந்திருந்தார். நெடுங்கால நண்பர் கருணாகரன், ‘காலம்’ செல்வம், ‘கருப்பி’ சுமதி ஆகியோர் வந்திருந்தார்கள். நெகிழ்ச்சியான ஒரு மனநிலையில் இருந்த மாலை. விருப்பத்திற்குரிய அனைவரும் ஒரே இடத்தில் கூடிவிட்டதுபோல. நானே அவ்வப்போது அப்படியே கிளம்பிச்சென்று அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் இருவரையும் சந்தித்தாலென்ன என்று எண்ணிக்கொண்டிருக்கும் நாட்கள் இவை.
(கடவுச்சீட்டு வெளியீடு,உரைகள்)
தெய்வீகனின் நிகழ்வு உற்சாகமானதாக இருந்தது. சிரிப்பும் நையாண்டியுமாக நடந்த சுருக்கமான கூட்டம். வெற்றிமாறன் இரண்டுநிமிடம் நீண்டு நின்ற பேருரை ஒன்றை ஆற்றினார். நான் பேசி முடித்தபோது கூட்டம் களைப்படைந்துவிட்டிருந்தது. ஏனென்றால் பாதிப்பேர் உலகத்திரைப்பட விழாக்களில் படம் பார்ப்பதுபோல ஒரே நாலில் ஐந்து இலக்கியக்கூட்டங்களில் பங்கெடுத்திருந்தனர். சிறில் அலெக்ஸ் மூன்றுகூட்டங்களில் கலந்துகொண்டு ஒரு கூட்டத்தில் அவரே பேசி அரைமயக்க நிலையில் இருந்தார்.
மாலை எங்கள் வாடகை மாளிகைக்கு தெய்வீகனும் ஆஸ்திரேலியச் செய்திநிலையத்தில் அறிவிப்பாளரான ரேணுகாவும் வந்திருந்தார்கள். இரவு 12 மணிவரை உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம். ரேணுகாவை பார்க்க இலங்கையின் நகைச்சுவை நிகழ்வான சந்துரு- மேனகா இணையரில் மேனகா போல இருந்தது. அதை அவரிடம் சொன்னேன். மேனகா என் தங்கைதான் என்றார். எனக்கு அவர்களின் சரளமான நடிப்பு, இலங்கைத்தமிழ் உச்சரிப்பு ஆகியவற்றில் ஒரு பெரிய மோகம் உண்டு. பெரும்பாலான நாட்களில் சந்துரு மேனகா ‘ஸ்கிட்’ ஒன்று பார்த்துவிடுவேன். (மேனகா சந்துரு நகைச்சுவை)
மறுநாள் ஒன்பதாம்தேதி அருண்மொழியும் சைதன்யாவும் நாகர்கோயில் கிளம்பினர். நான் பத்தரை மணிக்கு கிளம்பி ஐடிசி சோழா விடுதிக்குச் சென்றுவிட்டேன். அது ஒரு மாபெரும் புதிர்மாளிகை. ஏராளமான ‘லவுஞ்சுகள்’ அவற்றில் யார் யாரோ. சில லிஃப்டுகள்தான் நம் அறைக்குச் செல்லும். உள்ளே நடமாட ஊழியர் உதவி தேவை. மலையாள நடிகர் ஆசிஃப் அலியை சந்தித்தேன். ஒரு சினிமா செய்வதாக இருக்கிறோம்.
அன்று சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். முன்னரே அறிவித்திருந்தமையால் தொடர்ச்சியாக வாசகர்களும் நண்பர்களும் வந்துகொண்டே இருந்தனர். மாலை 5 முதல் இரவு 9 வரை நின்றுகொண்டே நூல்களில் கையெழுத்திட்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தேன். நூல்களும் சிறப்பாக விற்றன.
அன்றுமாலை சாம்ராஜ், நான், அஜிதன், ‘காலம்’ செல்வம் மற்றும் அவருடைய மகள்களுடன் ஒரு சைவ உணவகம் சென்று சாப்பிட்டோம். முதலில் உணவகத்தின் பெயரைச் சொல்லி டாக்ஸியில் ஏறிச் சென்று இறங்கிய இடம் ஒரு சிறு உணவகம். இதுவாக இருக்காதே என சந்தேகமிருந்தாலும் தோசைக்கு ஆணையிட்டு வரவழைத்த்விட்டோம். பிறகுதான் இடம் மாறிவிட்டது என்று தெரிந்தது. சாப்பிடாமலேயே கிளம்பினோம். ஓட்டல்காரரிடம் பணம் தருவதாகச் சொன்னாலும் அவர் மறுத்துவிட்டார்.
நடந்தும் பின்னர் ஒரு ஷேர் ஆட்டோவிலுமாக நாங்கள் உண்மையில் உத்தேசித்த உணவகத்துக்குச் சென்றோம். அந்த அனுபவத்தை செல்வத்தின் மகள்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். சின்னவளாகிய கஸ்தூரிக்கு ஷேர் ஆட்டோ ஒரு மெய்சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருப்பதை காணமுடிந்தது. இரவு டாக்ஸிகள் வராமல் அழைப்பை ரத்துசெய்துகொண்டே இருந்தனர். ஆட்டோவில் ஐடிசி சோழாவில் சென்றிறங்கியபோது என்னை பலர் அபூர்வமான மனிதராக எண்ணி மரியாதையுடன் பார்த்தனர்.
பத்தாம்தேதியும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். மீண்டும் ஐந்தரை மணிநேரம் நின்றுகொண்டே வாசகர்களைச் சந்தித்தேன். என் வாசகர்களிடம் ஒரு பொதுவான அம்சத்தை கவனிக்கிறேன். அவர்கள் என்னிடம் என் இலக்கியத்தின் கலை, இலக்கிய இன்பம், கருத்து பற்றி பேசுவது குறைவு. பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கையையும், அதில் என் எழுத்து உருவாக்கிய மாற்றத்தையும் பற்றியே பேசுகிறார்கள். நெகிழ்வும் கண்ணீரும் பரவசமும் நட்புமாக.
இலக்கியம் நேரடியாக வாழ்க்கையுடன் உரையாடவேண்டும் என்பதே என் நோக்கம். என்னிடம் என் படைப்பு ஒரு வகை அழகிய கலைப்பொருள் என ஒருவர் சொன்னால் எரிச்சலடைகிறேன். நான் முன்வைப்பது நான் வாழ்ந்த, உணர்ந்த வாழ்க்கையையே. ஆகவேதான் உத்திசோதனை, புதியமுறையில் சொல்லிப்பார்த்தல் போன்றவற்றின்மேல் எனக்கு ஒவ்வாமையும் உள்ளது. புதியவடிவங்களில் நானும் எழுதியிருக்கிறேன், அதெல்லாம் அந்த கதையை அப்படித்தான் சொல்லமுடியும் என்பதனால்தான்.
பத்தாம்தேதி மாலையே நானும் லண்டன் முத்துவும் கிளம்பி ஈரோடு சென்றோம். எங்கள் மலைத்தங்குமிடத்தில், குளிரில் நான்குநாட்கள் பதினாறு நண்பர்கள் தங்கியிருந்தோம். அதி தீவிரமான இலக்கிய – தத்துவ உரையாடல்கள். குறையாத சிரிப்பு. பதிநான்காம் தேதி ஈரோட்டில் இருந்து கிளம்பி கோழிக்கோடு. அங்கே ஓர் இலக்கிய விழா. இலக்கியத்தில் இருந்து இலக்கியத்திற்கு.
எஸ்.முத்தையா
சென்னை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு சென்னை வரலாற்றை செய்திக்கோவைகளாக எழுதி வந்த எஸ்.முத்தையா அறிமுகமானவராகவே இருப்பார். கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அத்தகைய நகரவரலாற்றாளர்கள் பலர் உள்ளனர். சென்னைக்கு குறிப்பிடத்தக்கவர் முத்தையா ஒருவரே.
எஸ். முத்தையா
எஸ். முத்தையா – தமிழ் விக்கி
வெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்
வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்து!
கடந்த சில நாட்களில் வெள்ளை யானை நாவலை முழுதுமாகக் கேட்டு முடித்தேன். கிராமத்தானின் குரல் உங்களது குரலாகவே ஒலித்தது. நீங்கள் பேசுவது போலவே சகர உச்சரிப்புகளைச் ச்சகரமாக அழுத்துவது இயல்பாக இருந்தது! காத்தவராயனை அயோத்திதாசப் பண்டிதர் எனப் புரிந்ததாலோ என்னவோ, எய்டனும் உண்மையானவனோ என்ற மயக்கத்தில் கூகுளில் கூடத் தேடினேன். அவனது மனச்சலனங்களும், பழங்கவிகளோடு தேடிப் பதித்த புத்தியும் உரையாடுகின்ற நெருப்பை ஷெல்லி என்ற தீப்பொறி பற்ற வைப்பது எழுச்சியும் மயக்கமும். மாரிசாவுடன் ராயபுரத்துக்கு அலுங்காமல் சென்ற அதே வண்டிதான் செங்கற்பட்டுக்கு அவன் செல்கின்றபோதும் சென்றது. ஆனால் எத்தனை வேறுபாடுகள். இந்தியப் பெரும்பஞ்சங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பிடித்த அதிர்வும், அதனோடு கலந்து உழன்ற அல்லது போராடிய ஆன்மாக்களின் அசைவுகளும் அப்படியே வந்து ஒட்டிக் கொள்கின்றன. இவையெல்லாம் நிகழ்ந்ததால்தான் வள்ளலாரைப் போன்ற மகான்கள் பசிப்பிணியை ஒருபுறம் போக்க முற்பட்டார்கள் என்றும் தோன்றியது. பசி ஒரு எரியும் கூரை என்று நீங்கள் எழுதியது நினைவுக்கு வந்தது. வெள்ளை யானப் பனிப்பாறையைப் போல இரக்கமற்ற குளிரோடு இறுகிப் போயிருக்கும் அதே அதிகார மனங்கள், அவற்றிற்குத் துணையாகச் சொடுங்கும் சாட்டைகள், எல்லாம் வெவ்வேறு வேடங்களைப் புனைந்து இன்றும் தமது மேடைகளில் ஆடிக்கொண்டுதானிருக்கின்றன. எய்டன்கள் துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள் தம்மை; அல்லது எங்கோ தன்னிலை மறந்து குடித்தழிகிறார்கள். வெள்ளை யானையின் மொழிபெயர்ப்புக்கு பிரியம்வதா அவர்களுக்குக் கிடைத்த வெகுமதிக்கும், மொழியாக்கம் சிறக்கவும் வாழ்த்துக்கள்.
நான் ஒரு காலத்தில் உங்கள் மாடன் மோட்சம் படித்தது. பிறகு பல ஆண்டுகளுக்குப் பின் யானை டாக்டர். உங்களை ஒரு இந்துத்துவ எழுத்தாளர் என்றே பலரும் சொல்லிக் கேட்டிருந்ததாலோ என்னவோ உங்களிடம் ஈடுபாடு இல்லாமலேயே இருந்தது. படிப்பதற்கான நேரமும் போதுவதில்லை. அண்மையில் ஸ்பாட்டிபை போன்ற தளங்களில் ஒலிக்கோப்புகளைக் கேட்க ஆரம்பித்தேன். சென்ற மாதத்தில் என் நண்பன் தங்கமணி உங்களது சில இணைப்புகளை அனுப்பினான். உங்கள் அறம் தொகுப்பின் சில கதைகளால் கவரப்பட்டேன். பிறகு ஒவ்வொன்றாகக் கேட்டேன். நூறு நாற்காலிகளைக் கேட்டபிறகு உங்கள் மீது நான் கொண்டிருந்த இந்துத்துவ வலதுசாரி என்ற கருத்து உருமாறத் தொடங்கியது. சாதிகளின் பிடியில் இயங்கும் மனமும் சமூகமும் கடந்து ஒவ்வொருவரிலும் மானுட ஆற்றல் பீரிட்டுக் கொண்டே இருப்பதையும், அது ஓங்கி எவ்வாறேனும் வளர்ந்து சுய ஆற்றலைப் புரிந்து தன்னளவில் முழுமையான வாழ்வை வாழ்ந்து நிறைவடையும் என்ற ஆறுதலையும் எனக்குள் காண்கிறேன். நீங்கள் எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் உங்கள் எழுத்து உருவாக்கும் மாந்தர்களும் காட்சிகளுமே ஒரு வாசகனாக எனக்குப் போதுமானவை என்றும் தோன்றுகிறது. சோற்றுக் கணக்கைக் கேட்டபிறகு அமெரிக்காவில் கெத்தல் பாயைப் போல நானும் ஒரு கடை நடத்தப் போவதாகக் குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டுள்ளேன்! உங்கள் உரைகளைத் தொடர்ந்து கேட்கிறேன். காந்தியம் தோற்கும் இடங்கள் பிடித்திருக்கிறது. இன்னும் கேட்பேன்.
அமெரிக்காவில் 22 ஆண்டுகளாக வசிக்கிறேன். உயிரியல் ஆராய்ச்சியாளன். தற்போது மூச்சுப் பயிற்சிகளை ஆய்கிறேன். சித்தர் இலக்கியங்களில் ஈடுபாடுண்டு. சிறு வயதில் ஓரளவுக்கு வாசித்தேன் என்பது மகிழ்ச்சி. இனி மீண்டும் வாசிப்பினைச் செவி வழியாகவேனும் நிகழ்த்துவேன். நிறையப் பேசுங்கள், உங்கள் எழுத்துக்களை ஒலி வடிவில் என்னைப் போன்றோருக்காகத் தொடர்ந்து ஆக்கித் தாருங்கள். ஆற்றல் மிக்க உங்கள் எழுத்துக்கு நன்றி!
மிகுந்த அன்புடன்
சுந்தர் பாலசுப்ரமணியன்
அன்புள்ள சுந்தர்
உங்கள் காணொளியை கண்டேன். சிறப்பான ஓர் அறிமுகம்.என்னைப்பற்றிய உங்கள் உளத்தடையை கண்டேன். என்னைப்பற்றி அரசியல் அமைப்புகளின் அடித்தட்டுகளில் உழல்பவர்கள் உருவாக்கும் எதிர்மறைச் சித்திரத்தை நான் பொருட்படுத்துவதில்லை. அவை என் வாசகர்களை தடுக்காது, என் ஒரு நூலையாவது வாசிப்பவர்கள் என்னை உணர்வார்கள் என நான் நம்புகிறேன். ஆனால் அவ்வாறு வாசிக்க வருவதற்கே அவை தடையாகும் என உங்களைப்போன்ற சிலரின் கடிதங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரவரே தேடி அடையவேண்டியதுதான்.ஜெ
உடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்
கையறு நதி (நாவல்) – வறீதையா கான்ஸ்தந்தின்
எல்லா இறையியலாளர்களும், பக்திமான்களும், ஞானிகளும் திருப்திகரமான பதிலை அளிக்க முடியாத கேள்வி ஒன்றுண்டு… ‘கடவுள் ஏன் உலகில் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார் ஒருவர். கர்மா என்கிறது ஒரு சிந்தனை மரபு. துயருருவோர் பேறுபெற்றோர் என்றார் இன்னொருவர். ஒரு குழந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது, பேரிடர்களின்போது, ஒரு பெருத்த அவமானத்தின் பின்பு, போர் மற்றும் மனித வக்கிரங்களின் கொடுஞ்செயல்களினை அனுபவிக்கும்போது இந்தத் தத்துவங்கள் அர்த்தமற்றவையாகத் தோன்றுவதே இயல்பு இல்லையா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய், மனிதன் அகவிழிப்படைந்த காலம் தொட்டே இக்கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. துயரின் வலி நெஞ்சை நிரப்பி அழுத்தும்போது தத்துவம் அர்த்தமற்ற உளறலாகும், தர்க்கம் பிழையாகும், நிலம் நடுங்கி நம்பிக்கையின் தூண்கள் தகர்ந்து தூள் தூளாகும், பூமி விலகி நம்மை முடிவற்ற பாதாளம் நோக்கி வீழச் செய்யும். காலில் கட்டப்பட்ட பாறாங்கல்லாகத் துன்பம் நம்மைத் தொடரும். செயலிழக்கச் செய்யும், எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். நம்மை ஒரு சாதாரண மனிதன் என்று மட்டுமல்ல ஒரு சாதாரண விலங்காகவே உணரச் செய்யும். துன்பம் இல்லாத வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசியை வாங்கி வா என்றார் புத்தர். அடுத்தவரின் துன்பம் நமக்கு செய்தி, நம் துன்பம் நமக்கு துயர அனுபவம்.
கையறுநதி எனும் நாவல் வடிவில் எழுதப்பட்டிருக்கும் தன்வரலாற்றுப் புத்தகத்தில் வறீதையா கான்ஸ்தந்தின் தான் எதிர்கொண்டிருக்கும் துன்பம் ஒன்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மூளையின் சுரப்பிகளின் அதிசெயல்பாட்டால் ஒரு சராசரி வாழ்வை வாழ முடியாத மகளைப் பேணும் ஒரு தந்தையின் கதை இது. அந்தத் தந்தை ஒரு அறிவாளி. படித்தவர். பேராசிரியர். மனிதர்களின் பெருந்துயர்களை ஆய்வு செய்தவர். ஒரு மகளின் மனப்பிறழ்வை அவர் எப்படி எதிர்கொள்கிறார், அவரைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பவற்றைக் குறித்த பரவலான அனுபவங்கள் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன.
ஒரு அசாதாரண மனிதரென்றாலும் அவரது அன்றாடம் என்பது பிறரைப் போல சாதாரணமானதுதான். அந்த அன்றாடத்தின் மேல் ஒரு பெரும் சோகம் வந்து விழும்போது அந்தக் கதையில் ஒரு காவியத் தன்மை வந்துவிடுகிறது. சோகம் என்றல்ல அதை சவால் என்றும் கொள்ளலாம், தான் விரும்பி ஏற்காத ஒரு சவால். பழங்கதைகளில் வரும் பூதங்களைப் போல ஒவ்வொன்றாய் மாயமாய் எதிர்பாராமல் தோன்றும் சவால்களை தனி ஒருவனாக எதிர் கொள்ளும் ஒரு தந்தை. விடாது போரிடும் ஒரு வீரனைப் போல சந்தேகங்களும், அவநம்பிக்கையும், தெளிவும், எதிர்நோக்கும் ஒரு சேரப் பயணிக்கும் ஒரு காவியத்தைப் போன்றது கையறுநதியின் கதை..
பைபிளின் பழைய ஏற்பாட்டில் யோபுவின் கதை இத்தகையது. அரிச்சந்திரனின் கதையை ஒத்த கதை அது. அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையுடய செல்வந்தனான யோபுவை சோதிக்க கடவுளிடம் சாத்தான் அனுமதி பெறுகிறான். யோபுவின் செல்வங்கள் பறிபோகின்றன, அவனது பிள்ளைகள் மாய்ந்துபோகின்றன, அவனது உடல் சிதைந்து புண்ணடைந்து போகின்றது. யோபு கடவுளை நிந்திக்க மறுக்கிறான். அவனால் அந்தத் துன்பத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது நண்பர்கள் பல காரணங்களை, ஆறுதல்களைச் சொல்கிறார்கள். அவன் அந்தத் துன்பங்களிலிருந்து மீள்வதற்கு ஒருமுறை கடவுளை மறுதலிப்பதிலும் தவறில்லை என்கிறார்கள். யோபு இறுதியாக கடவுளிடம் பேசுகிறான். கடவுள் அவனுக்குச் சொல்வதெல்லாம் என் திட்டங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான்.
காரணங்களற்ற துன்பத்தை ஒரு மனிதன் எப்படி எதிர்கொள்வது? கடவுளின் திட்டங்களை அறிவதெப்படி? இயற்கையின் திட்டங்களை அறிவதெப்படி? மிகக் கடினமான கேள்வி இது. இதற்கான காலம் மனிதனுக்கு அருளப்படவில்லை. இதற்கான திறனும் அவனுக்கு மிகக் குறைவே. இயற்கையின் எந்த நிகழ்வும் ஒரு நீண்ட காலத்தில் நிகழும் எண்ணற்ற செயல்தொடர்களின் விளைவேயாகும். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பு ஒரு புயலை உருவாக்கும். அவ்வண்ணத்துப் பூச்சியே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு விலங்கின் வாயிலிருந்து தப்பிய புழுவின் வாரிசாயிருக்கும். எத்தனையோ வண்ணத்துப் பூச்சிகள் எண்ணற்ற சாத்தியங்கள். பலகோடி தாயக்கட்டைகள் அந்தரத்தில் முடிவின்றி சுழன்றுகொண்டிருக்கும் ஒரு விளையாட்டில் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை, நாம் எத்தனை தூரம் விளையாடுகிறோம் என்பது மட்டுமே கணக்கு.
அந்தத் தந்தையின் துன்பத்தை நான் சற்று மிகைப்படுத்திவிட்டேனோ என்று தோன்றுகிறது. வறீதையா கையறுநதி முழுக்க தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார் அவருக்கேயுரிய விதத்தில் விடைகளையும் கண்டடைகிறார். அவர் அந்த விளையாட்டை நிதானத்துடனும் சாதுர்யத்துடனும் குறைந்தபட்ச பாதிப்புகளுடனும் விளையாடும் வழிகளைத் தேடி அடைகிறார். மனப்பிறழ்வுகளை நம் சமூகங்கள் எப்படி எதிர்கொண்டன இன்றும்கூட எப்படி எதிர்கொள்கின்றன என்பதை நாம் அறிவோம். அந்த அர்த்தமற்ற பழமையான பாதைகளில் அவரும் சற்று நடக்கிறார். பின்பு பல்லாயிரம் ஆண்டுகால நடைமுறைகளையும் ஒற்றை மனிதனாக எதிர்கொண்டு அறிவின் துணைகொள்கிறார். சுழலும் கோடி பகடைகளின் நிகழ்தகவைப் புரிந்துகொள்வதல்ல அந்த ஆட்டத்தின் விதி, அத்தனை பிரம்மாண்டத்தை அளந்துகொண்டிருந்தால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியாது. வானத்தை பார்த்துக்கொண்டே நடந்தால் தடுக்கி விழ வேண்டியதுதனே?. அந்தத் தந்தை தன் சிலுவையச் சுமந்தபடியே அடுத்த அடியை எடுத்துவைக்கிறார். அவர் அந்த முடிவிலா பகடையாட்டத்தில் ஒரு காயாக நகர்த்தப்படுவதிலிருந்து விடுபடுகிறார். ஆட்டத்தின் விதிகளை அவரே முடிவு செய்கிறார்.
கையறுநதி ஒரு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருவதற்கான முதற்காரணம் அது சுய அனுபவப் பகிர்வென்றாலும் ஒரு நாவலின் கூறுமுறையைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. சம்பவங்களின் அடுக்குகள் ஒரு புனைவுத் தன்மையுடன் அடுத்து என்ன நடக்குமோ என்று வாசகர் எதிர்பார்த்திருக்கும்பொருட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல புனைவின் மொழியும் கையாளப்பட்டுள்ளது குறிப்பாக உவமைகள் மற்றும் தத்துவ விசாரங்களையும் சொல்லலாம். ஆனாலும் இது உண்மையாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை என்கிற உணர்வும் ஒரு சேரக் கிடைக்கிறது.
இரண்டாவது காரணம் இதன் பேசுபொருள். பொருளாதாரத் தேவைகளைக் கடந்து வரும் மானுட சமூகம் சந்திக்கும் பெரும் சவால்களில் முக்கியமானது மனச்சிதைவுகள். கடந்த சில ஆண்டுகளாக மூளையைக் குறித்து வருடத்திற்கு ஒரு முக்கிய புத்தகமாவது வெளிவந்துகொண்டிருக்கிறது. மனதின் மாயத்தை பகுதி பகுதியாக, ஒரு எந்திரத்தை பிரித்து பார்ப்பதைப்போல, பாகம் பாகமாக பிரித்துப் பார்க்கின்றனர். ஆயினும் மனம் அல்லது மூளை குறித்த ஆய்வுகள் இன்னும் துவக்க நிலையிலேயே இருக்கின்றன. ஒரு புழுவின் மூளையைக் கூட நாம் முழுதாக அறிந்துகொள்ளவில்லை என்கிறார் மூளை குறித்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர் (கிரிஸ்டாஃப் காஷ்). பலகோடி தாயக்கட்டைகள் அந்தரத்தில் சுழலும் இன்னொரு உலகம் நம் உடலுக்குள்ளும் இருக்கிறது. மன நோய்மை என்பது உடல்ரீதியானதும்கூட. மனம், மூளை இரண்டையும் குணப்படுத்துவது அவசியம். அது நமக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நேரும்போது நாம் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றோம். அதை இயன்றவரை மூடி மறைப்பவர்களே அதிகம். எனவே இப்புத்தகம் ஒரு தைரியமான, புரட்சிகரமான வெளிப்பாடாகவும் உள்ளது. தன் மகளின் தகப்பனாக மட்டுமல்ல மனச் சிக்கல்களில் ஆட்படும் பல்லாயிரம் குழந்தைகளின் தகப்பனாகவும் நின்று இப்புத்தகத்தை ஆசிரியர் எழுதியுள்ளார். அது ஒரு எழுத்தாளனுக்கேயுள்ள துணிவு. தன் உடலை ஒருவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதுபோல தன் ஆன்மாவை உலகுக்குத் திறந்து காட்டுகிறான் எழுத்தாளன்.
மூன்றாவது காரணம் புத்தகத்தின் மையத்தை ஒட்டி வரும் ஆசிரியரின் பிற அனுபவங்கள். ஒரு சமனற்ற மீனவக் குடும்பத்தில், ஒரு சாதாரண மீனவ கிராமத்தில் பிறந்து வளர்ந்து எல்லையற்ற அந்தப் பெருங்கடலின் தீராத அழைப்பைப் புறந்தள்ளி பரிச்சையமில்லாத சமவெளி நோக்கி கண்ணற்றவன் காட்டுக்குள் அலைவதுபோல பாதைகளைத் தேடியலைந்து தன்னை ஒரு சமூகப் பங்களிப்பாளனாக ஆக்கிக்கொண்ட ஒரு அசாதாரணரின் சாகசக் கதையும் அவர் சந்திக்கும் சவால்களும் அவற்றை அவர் கடந்த விதங்களும் இதில் பதியப்பட்டுள்ளன.
பேராசிரியர் கான்ஸ்தந்தின் ஒரு அறிவு ஜீவி. அவரது புத்தகங்கள் அனைத்திலும் ஒரு ஆய்வுத்தன்மை இருக்கும். அவரது புத்தகங்கள் பலவும் ஆய்வுகளே. கிட்டத்தட்ட அவரது புத்தகங்கள் அனைத்திலுமே கடல் எனும் வார்த்தை தலைப்பில் இருக்கும். ஆனால் கையறு நதியில் அவர் ஒரு தனிப்பட்டவராக, ஒரு தந்தையாக, நம்மிடம் மனம்திறந்து பேசும் ஒரு நண்பராக வெளிப்படுகிறார். தனது பாரங்களை நம்மிடம் பகிர்வதன்மூலம் நமக்கு வழி காட்டியாகவும் இருக்கிறார். கடற்கரை குறித்த பல நூறு ஆய்வுகளைவிட ‘ஆழி சூழ் உலகு’ நாவல் தந்த தாக்கம் அதிகம். அதைப்போலவே கையறுநதியையும் மதிப்பிடலாம். ஆனால் இது கடற்கரையின் கதைய மட்டுமல்ல. இது நம் காலத்தின் கதை ஆகவே ஆழி சூழ் உலகை விடவும் பரவலான முக்கியத்துவத்தைப் பெற தகுந்தது. சட்டென்று நின்றுபோனதொரு கடிகாரத்தைப்போல வாழ்க்கையை நகரவிடாமல் ஒரே சுழலில் நிறுத்திவிடும் ஒரு துயரம்,, ஒரு இடுக்கண், ஒரு அசந்தர்ப்பம் உலகில் யாருக்கும் எங்கேயும் நேரலாம்.
கையறுநதி ஒரு நவீன துயரத்தை ஒரு நவீன மனிதன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதன் வழிகாட்டியாக அமையலாம். உங்கள் துயரங்களை எடைபோட, ஒப்பிட, அதன்வழி ஆறுதல் தேட ஒரு கதையாக இருக்கலாம். ஒரு அசாதாரண வாழ்வின் அசாதரண தருணங்கள் குறித்த மனம் திறந்த உரையாடலாக வாசிக்கப்படலாம். ஒரு சாகசக் கதையாக, ஒரு சோக நாடகமாகவும் படிக்கப்படலாம். என்னவாக இருந்தாலும் பேராசிரியர் கான்ஸ்தந்தின் ஒரு உணர்வுபூர்வமான, அறிவுபூர்வமான, அன்னோன்யமான, பயனுள்ள புத்தகத்தை எழுதியுள்ளார், அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
காலம் , ஜனவரி 2023
மைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாகச் சொற்பொழிவுகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யூடியூப் வந்தபிறகு வேண்டும் நேரத்தில் கேட்கமுடிகிறது. ரயில்பயணத்தில் மிக மிக உபயோகமான ஒரு விஷயம் சொற்பொழிவுகள் கேட்பது. உங்களுடைய உரைகள் எனக்குப்பிடிக்கும். அவை அந்தரங்கமாக நம்மோடுபேசுவதுபோல் உள்ளன. உங்களுடைய குழப்பங்கள், தயக்கங்கள்கூட தெரியும். கண்ணைமூடிக்கொண்டு கேட்டால் அருகே இருந்து பேசுவதுபோலவே இருக்கும். எனக்கு உரத்தகுரலில் ஏற்ற இறக்கங்களுடன் பேசும் தொழில்முறைப் பேச்சுக்கள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அவை மேடையிலே கேட்கலாம். காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு கேட்டால் அவ்வளவாக சுகப்படுவதில்லை.
அண்மையில் கேட்ட உரைகளில் அஜிதனின் மைத்ரி ஏற்புரை மிக அற்புதமாக இருந்தது. மேடைக்கான எந்த பாவனையும் இல்லாமல் தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல பேசுகிறார். அதோடு நீங்கள் பேசுவதுபோல வெறும் உபச்சாரங்களாக இல்லாமல் கேட்பவர்களுக்கு ஏதாவது முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும் என நினைக்கிறார். இலக்கியம் பற்றிய அவருடைய இரண்டு கருத்துக்களுமே ஆழமானவையாகவும் புதியவையாகவும் இருந்தன.
ஜி.செல்வநாயகம்
அன்புள்ள ஜெ
அஜிதனின் மைத்ரி விழா ஏற்புரை ஒரு மிகச்சிறந்த உரை. எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வழக்கமான நன்றியுரையாக இருக்கு என நினைத்துத்தான் கேட்டேன். ஆனால் மிக இயல்பாக இதுவரை தமிழில் பேசப்படாத சில களங்களைத் தொட்டுப் பேசுகிறார். பலகலைகள் வழியாக உருவாகும் எழுத்து பற்றி அவர் சொல்வது முக்கியமானது. வாக்னர் பற்றி தாமஸ் மன்னின் கருத்து வழியாக இயல்பாக அதைச் சொல்கிறார். அதைவிட முக்கியமான கருத்து கவிதைக்கும் உரைநடைக்குமான வேறுபாடு பற்றி அவர் சொல்வது. உரைநடையின் குறிப்புணர்த்தும்தன்மை கவிதையில் இருந்து முழுக்கவே வேறுபட்டது. அஜிதனின் வாசிப்பும் தெளிவும் ஆச்சரியப்பட வைக்கின்றன. வாக்னர், தாமஸ் மன், நீட்சே என்று இங்கே அதிகம் பேசப்படாத சிந்தனையாளர்கள் வழியாக மிகநுட்பமான சிலவற்றைச் சொல்கிறார். மைத்ரி போன்ற ஒரு நாவலை எழுதுபவருடைய உள்ளம் எதையெல்லாம் உள்வாங்கியிருக்கும் என்னும் செய்தி ஆச்சரியமானது.
ரவிச்சந்திரன் மாணிக்கம்
மைத்ரிபாவம் – பி.ராமன்January 16, 2023
இன்று விஷ்ணுபுரம் அரங்கில் இருப்பேன்
சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் கடை எண் 115, 116ல் அமைந்துள்ளது. அங்கே இன்று மாலை 5 மணிமுதல் இருப்பேன். நூல்கள் வாங்கவும் கையெழுத்து பெறவும் விரும்புபவர்களை, நண்பர்களைச் சந்திக்க விரும்புகிறேன்
பிரியம்வதாவுக்கு அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டும் பொருட்டு, அருண்மொழி அவர்களும் , நானும் தொகுத்த நூல்கள் வெளியீட்டு விழாவில், கோயம்புத்தூர் விஜயா பதிப்பக உரிமையாளர் மு. வேலாயுதம் அவர்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்படும் நூல்களில் சிறந்த ஒன்றுக்கு வருடந்தோரும் விருது ஒன்று கொடுக்கவிருப்பதாக தெரிவித்தார். அ. முத்துலிங்கம் பெயரில் கொடுக்கப்படவிருக்கும் அந்த விருதிற்கான பொருளுதவியை, அந்த நிகழ்வில் பங்கு கொண்ட கோயம்புத்தூர், காரமடை Dr சசித்ரா தாமோதரன் அவர்கள் ஏற்றுக்கொள்வார் என்பதையும் அறிவித்தார்.
2022-ற்கான அ.முத்துலிங்கம் விருது , தங்களின் அறம் நூலின் உண்மை ஆளுமைகளின் கதைகளை ஆங்கிலத்தில் Stories of The True என்ற பெயரில் மொழியாக்கம் செய்த பிரியம்வதா ராம்குமார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கும் பிரியம்வதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Stories of The True – முதல் பதிப்பில் வந்த மூவாயிரம் புத்தகங்கள் விற்று, இரண்டாவது பதிப்பு வெளிவந்துவிட்டது. எட்டு அல்லது ஒன்பது முக்கிய ஆங்கிலப் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வந்துள்ளன. அமெரிக்காவில் நேரடியாக விற்கப்படவில்லையெனினும், எனக்குத் தெரிந்து 300 முதல் 350 புத்தகங்கள் நண்பர்களே வாங்கிப் பரிசாக கொடுத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் ‘எப்படா இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வரும்’ அதை. ஆங்கிலம் பேசும் நண்பர்களுக்கு, பிறந்ததிலிருந்து அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்காக கொடுப்பதற்கு எனக் காத்திருந்தவர்கள். நூலில் இருக்கும் அறத்தின் வழி நின்ற ஆளுமைகளின் கதைகளின் தீவிரம் ஒரு புறம் இருக்க, அதை ஆங்கிலத்தில் சரியாக கொண்டு சேர்த்த பிரியம்வதாவிற்குப் பெரும் பங்கு உண்டு. சிறந்த மொழியாக்கம் என நான் நினைப்பது மூலநூலில் இருக்கும் உணர்வுகளை, அந்தப் பாத்திரங்களின் பண்புகளை, அப்படியே மொழியாக்க நூலை வாசிக்கும் வாசகனுக்கு கடத்துவதில் உள்ளது. தமிழில் அறம், சோற்றுக்கணக்கு, வணங்கான், நூறு நாற்காலிகள் கதைகளை வாசித்துவிட்டு எப்படி உணர்வுப்பிளம்புகளாக பெற்றோர்கள் என்னிடம் பேசினார்ளோ, அப்படி இப்பொழுது அவர்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் வாசித்துவிட்டு தங்கள் உணர்வுகளை என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.
Whatsapp-ல், சோஸியல் மீடியாவில் என எனக்குத் தெரியும் முன், இந்த விருது அறிவிப்பை, விஜயா மு. வேலாயுதம் முறையாக சொல்வதற்காக போனில் அழைத்தார். அப்பொழுது நான் எனது ஒரு வேண்டுகோளை வைத்தேன். விருது கொடுக்கும் நாள், 19 ஜனவரி, அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்தநாள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா, அ. முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டும் பொருட்டு ஒரு இசை ஆல்பம் தயாரித்துள்ளது. அதை அந்த விழாவில் வெளியிடமுடியுமா என்று கேட்டேன். அவர் அன்புடன் அதை ஏற்றுக்கொண்டார்.
அ. முத்துலிங்கம் அவர்களின் கடவுள் தொடங்கிய இடம் நாவல், இலங்கையிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களையும், இறுதியில் வெற்றியையும் முன்வைக்கும் நாவல். பொதுவெளியில், புலம் பெயர்ந்தவர்களின் அவலம் பேசப்படும் அளவு, அவர்களது வெற்றியை கொண்டாடுவதில்லை. இந்த இசைக்கோவை புலம்பெயர்ந்தவர்களின் வெற்றியையும், அ. முத்துலிங்கம் அவர்களின் சிறப்பையும், அயராது உழைக்கும் அவர் தமிழ்த் தொண்டையும் முன் வைக்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்த வெண்முரசு ஆவணப்படத்திற்கு இசையமைத்த ராஜன் சோமசுந்தரத்தின் இசையில், பாடகர் ஸ்ரீனிவாசன் அவர்கள், கனடாவில் வாழும், வளர்ந்துவரும் பாடகிகள் விதுசாய்னி, சின்மயி அவர்கள் பாட K2BDance Studios நடனக்குழுவினர் நடனமிட என இந்த இசைக்கோவை தயாராகியுள்ளது. கவிஞர் சாம்ராஜ் அவர்களும், ராஜன் சோமசுந்தரம் அவர்களும் பாடலை எழுதியுள்ளார்கள்.
தமிழின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரின் பெயரில் கொடுக்கப்படும் விருது இன்னொரு ஆளுமையின் மொழியாக்கத்திற்கு கொடுத்துச் சிறப்பிக்கும் இந்த விழா ஒரு சரித்திர நிகழ்வு. 19-ஜனவரி-2023, மாலை 5:15-ற்கு கோவை பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவில் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.
நிகழ்வை முன்னின்று நடத்தும் விஜயா மு. வேலாயுதம் அவர்களுக்கும், Dr. சசித்ரா தாமோதரன் அவர்களுக்கும் எனது நன்றி. கலந்துகொண்டு உரையாற்றாவிருக்கும், தினமணி ஆசிரியர் வைத்யநாதன், விரிவுரையாளர் இந்திராணி, வங்கமொழி எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் கீதா ராமஸ்வாமி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

