Jeyamohan's Blog, page 647
January 10, 2023
கிருத்திகா
கிருத்திகாவின் எழுத்து தமிழில் ஒரு விசித்திரமான நிகழ்வு. அவருடைய எந்த படைப்பும் இலக்கியமாக அவற்றின் முழுமையை அடையவில்லை. பெரும்பாலானவை அவருடைய முயற்சிகள் மட்டுமே. ஏனென்றால் அவர் இலக்கியச் சூழலில் செயல்படவில்லை. இலக்கியம் சார்ந்த தீவிரக்களங்களுடன் அவருக்கு அறிமுகமே இல்லை. அவர் டெல்லியின் அதிகார உயர்மட்டத்திலேயே வாழ்ந்தவர். ஆனால் சாதாரணமாக ஒரு தமிழ் எழுத்தாளர் பார்க்கமுடியாத, அறியமுடியாத ஓர் உலகை எழுத அவரால் இயன்றது. அவை எய்தப்படாத கலைமுயர்சிகளாகவே நின்றுவிட்டன.
வெவ்வேறு காலங்களில் சிட்டி, நாகார்சுனன், பெருந்தேவி என விமர்சகர்கள் கிருத்திகாவை முன்வைத்து பேசியிருந்தாலும் இலக்கிய வாசகர்களால் அவர் பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எந்த வாசகரையும் அவ்வெழுத்துக்கள் ஆழமாக பாதிக்கவில்லை. ஆனால் புறக்கணிக்கமுடியாதவையாகவும் அவை திகழ்கின்றன.
கிருத்திகா
கிருத்திகா – தமிழ் விக்கி
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பற்றி கடிதமெழுதி ஓராண்டாகிவிட்டது. ஐந்தாறு வருடம் நவநீதம் அவர்கள் மற்றும் என் மிகச்சிறு பங்களிப்புடன் 67 பறவைகள் கொண்ட அறிமுக கையேட்டை அனுப்பினேன் அல்லவா! இப்போது இந்த ஓராண்டுக்குள் அது நூறாகியுள்ளது. உங்களுக்கு கடிதமெழுதிய பிறகு சிறந்த இளைஞர் குழு அமைந்தது. விடுமுறை நாட்களில் தொடர்ந்து நீர்நிலைகளைச் சுற்றிப் பயணித்தோம். அதன் பலனாக எங்கள் ஊரில் மட்டும் நூறு பறவை இனங்களைக் கண்டுள்ளோம்.
பறவைகள் பற்றிய நுண் விவரிப்புகள், ‘போறபோக்கில்‘ மக்கள் பறவைகளை பற்றி சொல்லும் சொலவடை, பறவைகளுக்கு ஆங்காங்கே வழங்கப்படும் பெயர்கள், வெவ்வேறு இனங்களுக்குள் உள்ள உறவுகள், சண்டைகள், பறவைகள் செய்யும் சாகசங்கள், திருட்டு என எத்தனை அறிதல் ஓராண்டுக்குள்! கணக்கெடுப்புக்குச் செல்லும்போது ஆங்காங்கே சொல்லி கேட்ட குறிப்புகள் பேருதவியாக இருந்தது.
நாங்கள் ஒருபக்கம் அறிவியல் உதவியோடு பறவைகளை அறிந்து வருகிறோம். அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு செயலியின் உதவியோடு இக்கணக்கெடுப்பு நடக்கிறது. மற்றொரு பக்கம் தங்கும் பறவைகள் மட்டும் வலசை வரும் பறவைகள் படிமங்களாக மக்களிடையே இருந்து வருகிறது. குறிப்பாக ஊரிலேயே முழுநேரம் செயல்படும் மக்களிடம் இவை புதைந்துள்ளது. அந்த அனுபவ அறிவை வெளிக்கொணர்வதென்பது தான் சவால் என்று நினைக்கிறேன். படிமங்கள் மற்றும் அறிவியல், இவை இரண்டிலொன்று இல்லாத பறவைகள் வெறும் குறிப்பாகவும் எண்ணிக்கையாகவுமே இருக்குமென்று நினைக்கிறேன். இதை கருத்தில் கொண்டு நாங்கள் பொது இடங்களில் ஒரு பொறி போடுவதுண்டு. அது கூட்டத்தில் பேச்சாகி கதைகளும் சொலவடைகளும் வந்து தெறிக்கும். அந்த கதைகளை பையில் போட்டுகொண்டு திரும்புகிறோம். வேட்டையாடுபவர்களிடமே கதைகளும் குறிப்புகளும் கொப்பளிக்கின்றன.
விஜயபாரதி அண்ணனைப் பற்றி குறிப்பிட வேண்டும். அறிதலின் பொருட்டு எங்களை பார்க்க ஊருக்கு வந்தார். அதற்குப் பிறகு அவரின் கணக்கெடுப்பு வேகத்தை ஈடுகொடுக்க எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் உள்ள பறவை ஆர்வலர்களோடு தொடர்ந்து பயணிக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது.
சில காரணங்களால் புதுப்பிக்கப்பட்ட கையேட்டை தயாரிப்பதில் தாமாதமாகியுள்ளது. விரைவில் தயாராகுமென்று நினைக்கிறேன்.
இறுதியாக, இவ்வாண்டு பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 15-18 நடைபெறுகிறது. அதை பற்றிய அறிமுகம் மற்றும் தகவல் – https://birdcount.in/event/pongal-bird-count-2023/
பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக பறவைகள் கணக்கெடுப்பும் இருக்க அனைவரையும் இவ்வுலகத்திற்குள் எங்கள் குழு சார்பாக அழைக்கிறேன். இயற்கையைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தலின் முதல் படி அவற்றை அவதானித்தாலே என நம்புகிறேன்.
நன்றி
கோ வெங்கடேஸ்வரன்
Nature group – மன்னங்காடு
பட்டுக்கோட்டை
சிரிப்பின் கலை -கடிதங்கள்
ஆனையில்லா தொகுப்பு வாங்க
ஜெயமோகன் நூல்கள் வாங்க
ஆனையில்லா மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
அண்மையில் நான் வாசித்த மகத்தான Stress buster என்றால் அது ஆனையில்லா தொகுப்புதான். எனக்குப் பிடித்தமான நூல் அபிப்பிராய சிந்தாமணி. அதிலுள்ள நகைச்சுவை கொஞ்சம் அறிவார்ந்தது. நையாண்டித்தன்மை கொண்டது. இந்த தொகுதியில் இருக்கும் கதைகள் எல்லாமே innocent ஆன கதைகள். எல்லாமே அழகான சித்தரிப்புகள். மிகத்தீவிரமானவை. ஆனால் வெடித்துச் சிரிக்கும்படி உள்ளன.
’ஒரு ஆனையை மரியாதையா வாழ விடமாட்டீங்களாடே’ என்ற குரலைக்கேட்டதும் சிரித்து புரைக்கேறிவிட்டது. ‘நாம என்னத்துக்கு இன்னொருத்தனோட பூனையை புலியாக்கணும்’ அதேபோல. தங்கன் கொண்டுகொடுக்கும் வரிக்கைச்சக்கை இன்னொரு வெடிச்சிரிப்பு. முழு கதைகளையும் இரண்டு முறை வாசித்துவிட்டேன். தமிழில் இப்படி ஒரு கலையம்சம் கொண்ட உற்சாகமான நம்பிக்கையூட்டும் நகைச்சுவைநூல் இன்னொன்று இல்லை என்று நினைக்கிறேன்.
அறிவார்ந்த நையாண்டி பகடி எல்லாமே சிரித்தபின் உள்ளே எங்கோ கொஞ்சம் கசப்பை மிச்சம் வைக்கின்றன. இன்னொருவரை பார்த்து நாம் சிரிக்கும்போது நாம் ஒருபடி அகங்காரம் கொள்கிறோம் இல்லையா? பசீர் எழுதுவதுபோன்ற நகைச்சுவைகள்தான் கள்ளமில்லாதவை. ஆகவே அற்புதமான மகிழ்ச்சியை அளிப்பவை.
ஆனால் எனக்கு கடுகு போன்றவர்கள் எழுதுவதுபோன்ற செயற்கையான காமெடிகளில் ஈடுபாடு இல்லை. நகைச்சுவை நடக்கும் இடத்துக்கு நாமும் செல்லவைப்பதுதான் நல்ல நகைச்சுவை.
எஸ்.ராஜகோபாலன்
*
அன்புள்ள ஜெ ஐயா அவர்களுக்கு!
ஹாஸ்ய எழுத்தாளர் ஹாஸ்ய எழுத்தாளர்! ஹாஸ்யம் ஒன்றும் எளிதல்ல! என்றெல்லாம் கேட்டு கேட்டு ஏதோ ஒரு வகையில் உங்களை அதிலிருந்து மனதில் தள்ளியே வைத்திருந்தேன்!
அனால்!!! “இடம்” சிறுகதை அதை முற்றிலும் நீக்கி, படித்து 4-5 இடங்களில் சிரித்து சிரித்து, ஒரு மிக சுவாரசியமான, உற்சாகம் ஊட்டும் அனுபவத்தை பெற்றேன்!!!
வாழ்த்துக்கள்!
தருண் ஆனந்த்
*
பெருங்கை, கடிதங்கள்
அன்பு ஜெ,
இந்தச் சிறுகதையில் இழையோடும் மெல்லிய காதல் இனிமையானது. சொல்லுவதற்கு முந்தய கணம் வரை இருவருக்கும் இருக்கும் தத்தளிப்பே கதையை நகர்த்திச் செல்கிறது. “கொண்டு குடு மக்கா. ஒன்ன எனக்கு சீவனாக்கும்னு சொல்லுததுக்கு வளவி குடுக்கறது மாதிரி வளி ஒண்ணுமில்ல” என்று அவனிடம் சொல்லப்பட்ட இடம் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இறுதியில் கையில் வளையல் வாங்கிக் கொண்ட அவளின் புன்னகைக்குப் பின், கதையின் ஆரம்பத்திலிருந்து அவள் அவனிடம் நடந்து கொண்ட யாவுமே இன்னொரு படி உணர்வைக் கூட்டி விடுகிறது. இந்த ஆண்டில் நான் வாசித்த முதல் புனைவு “பெருங்கை”.
பெருங்கையின் கேசவன் வழி ஒரு கணம் புனைவுக் களியாட்டு கோபாலகிருஷ்ணனை சென்று தொட்டு வந்தேன். இருவரின் ஆன்மாவும் ஒன்று தான். முதன் முதலாக அவனை “ஆனையில்லா” சிறுகதையில் தான் சந்தித்தேன். பிரம்மாண்டம், மலைப்பு, பயத்தைத் தாண்டி யானைகளைக் கண்டவுடன் குழந்தை போல மனம் துள்ள ஆரம்பித்தது கோபாலகிஷ்ணனை புனைவில் சந்தித்த பின்பு தான். அவன் வரும் கதைகளிலுள்ள மனிதர்கள் மட்டும் கூடுதலான கள்ளமின்மையை ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும். சொற்களுக்கு இடமில்லாத அவனைச் சுற்றி சொற்களாலும் எண்ணங்களாலும் அலைக்கழியும் மனிதர்கள். அவன் இருக்கும் இடத்தில் யாவும் அவனை மையமாகக் கொண்டே சுழல்வது போல மிக இயல்பாக கதைகள் அமைந்திருக்கும். அவனை அப்புனைவின் மனிதர்கள் குழந்தையாய் பாவிப்பதற்கு இணையாகவே கோபால கிஷ்ணன் “பாவம் எளிய மானுடர்கள்” என்ற சிந்தனையை அவர்கள் மேல் கைக் கொண்டிருப்பது போலத் தோன்றும். ஆட்கள் கஷ்டப்பட்டு எடுத்துவைக்க முற்பட்டுக் கொண்டிருக்கும் கேட்டை போகிற போக்கில் கோபாலகிருஷ்ணன் தூக்கி நிறுத்தி விட்டுப் போகும் ஒரு தருணத்தைச் சொல்லியிருப்பீர்கள். அந்த இடம் கேசவன் பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திலுள்ள கற்களை இயல்பாக எடுத்து வைக்கும்போது ஞாபகம் வந்தது.
வளையலை கேசவன் சந்திரியின் கையில் கொடுக்கும் உச்சமான தருணத்தில் “ஏலெ ஆனைக்க கை உனக்க கையில்லா?… இந்தப்பெருங்கையைக் கொஞ்சம் கொடுலே நாலு கல்லத்தூக்கி வெச்சிட்டுபோட்டும்.” என்ற வாத்தியாரின் சொல் வழி அதன் பெருங்கையையும், அது அவனின் கையாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்தக் கைகளில் தன் எடையை, மன சஞ்சலத்தை என யாவையும் வைத்து விடுகிறான் என்றே பட்டது.
புனைவுக்களியாட்டு சிறுகதைகளுக்குப் பின் உங்களையும் அப்புனைவிடங்களையும் அணுக்கமாக்கிக் கொள்ளவே கன்னியாகுமரி- நாகர்கோயில் பயணம் செய்தேன். அந்தப் பயணத்தில் திற்பரப்பு அருவி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பின்னால் கூச்சல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது மலைத்து ஒதுங்கி விட்டேன். கோபலகிஷ்ணனே தான் என்று மனம் அரற்றிக் கொள்ளுமளவு அவனை பாகனுடன் மிக அருகில் அங்கு பார்த்தேன். பெருங்கையே தான் ஜெ.
பிரேமையுடன்
ரம்யா.
அன்புள்ள ஜெ
இருட்டையும், பகலையும் உருவாக்குபவன் கேசவன் என்ற வரியே கேசவன்தான் அந்த பாகனுடைய தெய்வம் என்று காட்டிவிடுகிறது. அவன் செய்வது ஒரு தெய்வத்துக்கான பணிவிடையைத்தான். மனிதர்களுக்கு மிகப்பெரிய பாரம் எல்லாம் தெய்வத்துக்கு சின்ன விளையாட்டு. எல்லாமே விளையாட்டுதான் கேசவனுக்கு. கூழாங்கல்லை பொறுக்கி வாயில்போடுவது முல்லைப்பூவை பொறுக்கி கொடுப்பது கல்தூண்களை தூக்கிவைப்பது. அதேபோலத்தான் அந்த வளையலையும் கொடுக்கிறது. அதுதான் மனிதவாழ்க்கையில் தெய்வம் தலையிடும் தருணம். தெய்வத்தின் பெருங்கை.
ஜி.குமார்
January 9, 2023
புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
சென்னை புத்தகக் கண்காட்சியின் விஷ்ணுபுரம் அரங்கு எண் 115 மற்றும் 116. அரங்கில் மேலும் ஒரு நாள் இருப்பேன். 10 ஜனவரி 2023 மாலை 4 மணிமுதல் நான் இருப்பேன். பார்க்க, நூல்கள் வாங்கி கையெழுத்திட விரும்புபவர்களை அழைக்கிறேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம்அட்டையும் தாளும்
Stories of the True வாங்க
ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்) நூல்கள். பழைய கெட்டியட்டை நூல் குட்டிபோட்டு பெருகியதுபோல இருந்தது. அள்ளி சோபாவில் பரப்பியபோது உண்மையாகவே பெரிய நண்டு குட்டிக்குட்டி நண்டுகளுடன் தோன்றுவதுபோலவே தெரிந்தது.
Stories of the True முதல்பதிப்பு விற்றுவிட்டது, விரைவாக விற்பதனால் மலிவுப்பதிப்பு வரவிருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் அது இப்படி சுருக்கவுருவில் இருக்கும் என நான் நினைக்கவில்லை. பொதுவாகவே உலகமெங்கும் ஒரு நூல் விரைவாக விற்றுத்தீருமென்றால்தான் தாளட்டைப் பதிப்புகள் வெளியிடுவது வழக்கம். மகிழ்ச்சியடையவேண்டிய செய்திதான்.
ஆனால் என் வாழ்க்கையிலிருந்து தாளட்டை நூல்கள் விலகிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் பெரும் உழைப்பில் சேர்த்த ஏராளமான நூல்களை கடந்த ஆண்டுகளில் வெவ்வேறு நிகழ்வுகளில் வருகையாளர்களுக்குப் பரிசாக அள்ளிக்கொடுத்து நூலகத்தைக் காலிசெய்துவிட்டேன். இப்போதும் நூல்கள் எஞ்சியிருக்கின்றன.
ஒன்று, பொடி எழுத்தை வாசிக்க முடியவில்லை. இரண்டு, சற்றுப்பழைய நூல்களில் தாளின் வண்ணம் மாறியிருப்பதனால் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிகின்றன. இதேதான் தமிழிலும். தமிழில் நமக்கு 90 சத நூல்கள் தாளட்டைப் பதிப்புகள். நான் இன்று அச்சு பெரியதாக, தெளிவாக உள்ளதா என்று பார்க்கிறேன். வரிகளுக்கிடையே இடைவெளி போதிய அளவு உண்டா என்று பார்க்கிறேன். என் நூலகத்தில் இருந்த காலச்சுவடு வெளியீடுகளான ஜி.நாகராஜன் படைப்புகள் போன்றவை வாசிக்கவே முடியாமலாகிவிட்டன.
விஷ்ணுபுரம் பதிப்பகம் விஷ்ணுபுரம் நாவலை 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாப் பதிப்பாகக் கொண்டுவந்தபோது நான் சொன்ன ஒரே ஒரு நிபந்தனை எழுத்துரு அளவுதான். பழைய பதிப்புகளைவிட 100 பக்கம் கூடுதலாக இருக்கிறது, காரணம் பெரிய எழுத்துக்கள். வரிகளுக்கிடையேயான இடைவெளி மிகுதி. வெண்முரசு நூல்களும் அப்படித்தான். பரவாயில்லை.
ஆனால் என் மகளுக்கு கெட்டியட்டை நூலகப்பதிப்பு பிடிக்கவில்லை. “என்ன இது அவ்ளவு தடிமனா… ஹேண்ட்பேகிலே எப்டி கொண்டு போறது?” என புகார் சொன்னாள். தாளட்டை வந்ததுமே “ஆ, அழகா கியூட்டா இருக்கு” என மகிழ்ந்தாள். கெட்டியட்டை பதிப்பை கண்களை ஓட்டி ஓட்டி படிக்கவேண்டியிருக்கிறதாம். இது சின்ன பக்க அளவுக்குள் எளிதாகப் படிக்க முடிகிறதாம். ஆச்சரியமாக இருந்தது.
கெட்டியட்டை எல்லாம் ஒரு சம்பிரதாயம்தான். உண்மையான விற்பனை தாளட்டையில்தான் நிகழும். அதுவே விரும்பப்படுகிறது என்கிறார்கள். நூலகங்களில் நூல்களை சேமிக்கவேண்டும் என்னும் கருத்து மறைந்துவருகிறது. வாசித்துவிட்டு தூக்கி வீசிவிடவேண்டும். தேவையென்றால் மீண்டும் வாங்கலாம். நிரந்தரமாக இருப்பது மின்வடிவில் மின்நூலகத்தில்தான். எதிர்காலத்தில் கெட்டியட்டைப் பதிப்புகள் ஒரு கலைப்பொருளாக மட்டுமே வெளிவரலாம்.
கெட்டியட்டை பதிப்பு செலவேறியது. அதை கையால்தான் கட்டவேண்டும். மானுட உழைப்பே பணச்செலவுதான். அதிலும் விஷ்ணுபுரம் 25 ஆண்டுப் பதிப்பு, பின்தொடரும் நிழலின் குரல் புதிய பதிப்பு போன்றவற்றில் விளிம்பில் ஒரு பிறைவடிவ வளைவு அமையும்படி கட்டப்பட்டுள்ளது. அது இன்னும் செலவேறியது. ஆனால் காட்சிக்கு அது ஒரு கம்பீரத்தை அளிக்கிறது. எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த எந்த உணர்வும் அடுத்த தலைமுறையிடம் இருப்பதில்லை.
Stories of the True கெட்டியட்டை பதிப்புகளை எடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ள அருண்மொழி சொன்னாள். ஓராண்டுக்குள் அவை கிடைக்காமலேயே ஆகிவிடும். இனி வருவன எல்லாமே தாளட்டைப் பதிப்புகளாகவே இருக்கக்கூடும். வேறொரு வாசிப்புலகம் உருவாகியிருக்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் எல்லா கெட்டியட்டை நூல்களையும் வாங்கி அடுக்கிவிடவேண்டும் என்னும் வெறி எழுகிறது.
கடவுச்சீட்டு வெளியீடு,உரைகள்
“நாடற்றவர்களின் கடவுச்சீட்டு” நூல் வெளியீடு இனிதாய் நடந்து முடிந்தது. எட்டாம் திகதி மாலை இரண்டு பெரும் நிகழ்வுகளுக்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டு, மெல்பேர்னிலிருந்து புறப்பட்டு 15 மணி நேரம் பயணம் செய்து வந்து, இந்த அரங்குகளில் கலந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை எங்கிருந்து எனக்குள் உதித்தது என்று இன்றுவரை புரியவில்லை.
மெல்பேர்ன் – கொழும்பு பயணத்தைவிட, கொழும்பிலிருந்து இந்தியா வருவதென்பது, முன்பொரு காலத்தில் ஓமந்தை – முகமாலை சோதனைச் சாவடியில் வரிசையில் நின்று வன்னிக்குள் பயணிக்கின்ற பெரும் உளைச்சலையும் எரிச்சலையும் தந்தது. ஐயப்பன் பக்தர்களால் நிரம்பிக்கிடக்கும் விமானங்களில், எங்களைப் போன்ற நாத்திக பயணிகள் படும் பாட்டை எந்தக் கடவுளிடம் ஒப்பாரி செய்து அழுவது என்றே தெரியவில்லை. இந்திய விமானத்துக்குள் நுழைவதற்கு முன்னர், விமானத்தின் வாசலில் வைத்தும் கடைசியாக ஒரு சோதனை போடுகிறார்கள். அதிகாரிகளின் உத்தரவுகளில் பிறந்த ஒவ்வொரு சொல்லையும் தவறாமல் கடைப்பிடித்து, ‘ஸ்டப்‘ போட்டு கைகளை விரித்து – கால்களை அகட்டி டான்ஸ் எல்லாம் அடிக்காண்பித்து, சென்னை அண்ணா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போது, நவத்தூவரங்களினாலும் பெருமூச்சு போனது.
மதியம், அண்ணா ஞாபகார்த்த நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய திருவிழா நிகழ்வில், புலம்பெயர் இலக்கிய அமர்வில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்த காரணத்தினால், சென்னையில் முதல் தூக்கம் நான்கு மணி நேரம் மாத்திரமே என்று மட்டுப்படுத்தப்பட்டது. அங்கு சென்றபோது, முதன் முதலாக இவ்வளவு பிரம்மாண்டமாக ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதில் ஏற்படுகின்ற சம்பிரதாயமான எந்தப் பிசுறுகளும் இல்லாமல், நேர்த்தியாக ஒழுங்காகியிருந்தது. போய் இறங்கியதும் என்னைப் பார்த்தவுடனேயே, அடையாளம் கண்டுகொண்டார்கள் கெட்டிக்கார அரசு அதிகார்கள். நேரடியாக உணவு பரிமாறும் இடத்துக்கு அழைத்துச் சென்று, வரிசையில் சேர்த்துவிட்டார்கள். செல்வேந்திரன் அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். அதன்பின்னர், அழகியபெரியவன், பேரறிவாளன், சுகிர்தராணி, தமயந்தி, தென்றல் சிவகுமார், ஆதவன் தீட்சண்யா, லோகமாதேவி என்று ஏகப்பட்டவர்கள் அடுத்தடுத்து எதிர்ப்பட்டார்கள். முகநூலில் மாத்திரம் நண்பர்களாக அளவளாவிக்கொண்ட நாம், முதல்முறையாக நேரடியாக சந்தித்து ஆளுக்காள் “லைக்” போட்டுக்கொண்டோம்.
மாநாட்டு மண்டபத்தில், பல நூற்றுக்கணக்கானவர்களின் முன்னிலையில் கொண்டுபோய், பேச்சாளர் என்று இருத்தியபோது, அண்ணா விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, தாழப்பறந்த விமானமொன்று வயிற்றுக்குள் வட்டமடித்ததுபோலிருந்தது. ஷோபா மற்றும் செல்வத்துடன் அரங்கைப் பரிமாறிக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி இனிதாய் நிறைவுபெற்றது.
மாலையில், “நாடற்றவர்களின் கடவுச்சீட்டு“.
கவிக்கோ அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு ஏற்பாடாகியிருந்தபோதும், அண்ணா நூலகத்தில் இடம்பெற்ற இலக்கியத் திருவிழாவிலிருந்து, இலக்கியம் வழிவிடுவதற்கு சற்றுத் தாமதமாகிவிட்டது. ஷோபா, கருணாகரன், சாம்ராஜ், கறுப்பி சுமதி, வாசு முருகவேள் எனப்பலரும் ஐந்து முப்பதிற்கே அரங்கிற்கு வந்துவிட்டிருந்தனர். இப்படியான இலக்கியக் கூட்டங்களுக்கு முன்னராக நடைபெறுகின்ற, வழக்கமான பகடிகளால், அரங்கு பம்பலாடிக்கொண்டிருந்தது. ஆறு மணியளவில் ஜெயமோகன் வந்தார். ஷோபாவைச் சென்று ஆரத்தழுவினார். சுருதி தொலைக்காட்சி உட்பட அரங்கிலிருந்து பல கமராக்கள் வெறித்தனமாக வெளிச்சத்தைப் பாய்ச்சின. வரலாற்றுச் சம்பவத்தை பதிவுசெய்துகொண்டன. அங்கு கருணாகரன் வந்திருப்பது ஜெயமோகனுக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. ஒரு மூலையிலிருந்து அவர் எழுந்தபோது, ஜெயமோகனின் கைகள், அவரை அறியாமலேயே கருணாகரனை பாய்ந்து கட்டிக்கொண்டன. காலம் செல்வமும் அங்கு வந்தவுடன் “ஓ…..இலங்கையின் எல்லா இயக்கங்களும் இங்குதான் நிக்குதா” – என்று தன் எல்லா நண்பர்களையும் ஒரே இடத்தில் கண்டுகொண்ட பெருமகிழ்வில் நெகிழ்ந்தார். பல நிமிடங்கள் ஜெயமோகன் அங்கேயே நின்று அளவளாவினார். அப்போது அங்கு வந்து வெற்றிமாறனுக்கு ஜெயமோகன் ஈழத்தவர்களை அறிமுகம் செய்தார். பின்னர், தமிழ்பிரபாவின் நாவல் உட்பட அவரது அனைத்து திறன்களையும் மேற்கோள்காட்டி, ஈழத்தவர்களுக்கு அறிமுகம் செய்தார். மொழிபெயர்ப்பாளர் லதா, லக்ஷ்மி சரவணகுமார் என்று அனைவருடனும் பேசி, ஆறரை மணிக்கு நிகழ்வு ஆரம்பித்தது.
இலக்கிய விழாக்களுக்கு மத்தியில் மிகுந்த சிரமமாக பொறுப்புக்களுடன் ஓடித்திரிகின்ற அகரமுதல்வன், எந்த குழப்பமும் இல்லாமல் நிதானமாக நிகழ்வினை தொகுத்தளித்தார். நிகழ்வின் முதல் அம்ஸமாக, நூலை வெற்றிமாறன் வெளியிட்டு வைக்க, தமிழ்பிரபா பெற்றுக்கொண்டார். அதன்பிறகு, தமிழ்பிரபா வாழ்த்துரை வழங்கினார். அடுத்து, லக்ஷ்மி சரவணகுமார் நாடற்றவர்களின் கடவுச்சீட்டினை முழுமையாகப் படித்து, கிட்டத்தட்ட ஒரு மதிப்புரையாகவே தனது பார்வையை முன்வைத்தார். தமிழ்பிரபா, லக்ஷ்மி ஆகியோர் இருவரும் மேடைப் பேச்சுக்கு புதிதானவர்கள் அல்ல. கூடவே, சினிமா துறையில் இயங்குபவர்கள். ஆக, தமக்கு ஒதுக்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள், இவ்வளவு வேகமாக, தாங்கள் நினைப்பவற்றை ஒரு கோர்வையாக பேசமுடியும் என்பதை நிகழ்த்தியே காண்பித்தார்கள் என்றுதான் கூறவேண்டும்.
அடுத்து, வெற்றிமாறனின் வாழ்த்துரை. மேடைப் பேச்சுக்கு மிகுந்த கூச்சமும் அச்சமும்கொண்டவர் வெற்றி. அவர் திரையில்தான் நிகழ்த்திக்காட்டுபவர். மேடைகள் ஏறும்போது அவருக்குள் ஏற்படுகின்ற பதற்றத்தை நான் பலதடவைகள் காணொலிகளிலும் பார்த்திருக்கிறேன். அத்துடன், இது இலக்கிய மேடை; தனக்கானது அல்ல என்று அவர் எண்ணக்கூடிய விலகலும் அவருக்குள் இருந்துகொண்டிருக்கும். ஆனால், நேற்று அவர் உற்சாகத்துடனேயே பேசினார். பேசி முடித்துச் சென்று கதிரையில் அமரும்போது, “உங்களுக்கு இது பேருரைதான்” – என்று ஜெயமோகன் சொல்ல, அதற்கு அரங்கமே க்ளப் போட்டது. வெற்றியின் வழக்கமான வெட்கச் சிரிப்பு அவரது தாடியின் மீது தழும்பி வழிந்தது.
நேற்யை அரங்கு, ஒரு இறுக்கமான இலக்கிய நிகழ்வு என்றதுபோல் அல்லாமல், ஜெயமோகனும் வெற்றியும் மேடையிலிருந்து அவ்வப்போது அடித்து கடவுண்டர்களினால், கலகலத்தபடியே இருந்தது. அது பார்வையாளர்களையும் நிகழ்வுடன் நெருக்கமாக உணரவைத்தது. மேடையிலிருந்தவர்கள் மீதான பெரு விம்பங்களைத் தாண்டி, அவர்களுடனான நெருக்கமான ஊடாட்டத்தை ஏற்படுத்தியது.
“நாடற்றவர்களின் கடவுச்சீட்டு” நூலை வாய்ப்பு கிடைத்தால் வாய்ப்பு கிடைத்தால் படமாக்குவதற்கு விரும்புகிறேன் என்று லக்ஷ்மி கூற, அப்போதிருந்தே அந்தப் பேச்சு, ஒவ்வொருவரின் பேச்சிலும் உருளத்தொடங்கியது. வெற்றி பேசும்போது, தான் இந்தப் புத்தகத்தைப் படித்தபோதும் அதனை உணர்ந்ததாகக் கூறி, லக்ஷ்மியை வாழ்த்தினார். இறுதியாப் பேசிய ஜெயமோகனும் மிகுந்த நெருக்கமாக அதனை வழிமொழிந்தார்.
ஜெயமோகனின் பேச்சு வழக்கம்போல ஆழமாக – பல அரசியல் கூறுகளுடனும் – நுட்பமான அவதானங்களினாலும் – சில அழுத்தமான கோரிக்கைகளாலும் – இனிமையாகவும் – அமைந்தது.
நிகழ்வு ஆரம்பிக்கும்போதிருந்த அதே உணர்வு, முடியும்போதுமிருந்தது. என் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது என்று பெருமையோடு சொல்லக்கூடியதாயிருந்தது. நிகழ்வில், “உன் கடவுளிடம் போ” நூலையும் பலர் வாங்கிச் சென்றார்கள். புதிய வாசகர்களின் அன்பினால் நிறைந்தேன். ஒரு எழுத்தாளனுக்கு அவன் வாழ்வில் வேறென்ற பேறு தேவையாகிவிடப்போகிறது.
நிகழ்வினை அச்சொட்டாகப் பதிவு செய்த சுருதி தொலைக்காட்சியினருக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்த ஆகுதி பதிப்பகத்தினருக்கும் அகரமுதல்வனுக்கும் மனம் கனிந்த நன்றிகள்
தெய்வீகன்
ஆ .முத்துசிவன்
நவீன தமிழிலக்கியத்தில் மிக அதிகமாகப் புழங்கும் கலைச்சொற்களில் ஒன்று அழகியல். அதை ஓர் இலக்கியக் கலைச்சொல்லாக அறிமுகம் செய்தவர் ஆ.முத்துசிவன். தமிழ் நவீன இலக்கியவிமர்சனத்தின் முன்னோடிகளில் ஒருவர். புதுமைப்பித்தனின் நண்பர். ஆனால் ஒரு புகைப்படம்கூட இல்லாமல் அவர் மறைந்துவிட்டிருக்கிறார்
கே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு
நண்பர் பாலமுருகனை முதன்முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் வலைதளத்தின் வாயிலாகத்தான் அறிந்துகொண்டேன். அவரது ‘பேபிக்குட்டி’ என்ற கதையின் சுட்டியை அளித்து, மிகச்சிறந்த கதை என்று தனது அபிப்ராயத்தையும் பகிர்ந்திருந்தார். ‘பேபிக்குட்டி’ சிறுகதை என்னையும் வெகுவாகக் கவர்ந்தது. அதன் தாக்கத்தால், நான் அவரது பிற கதைகளையும் தேடி வாசிக்க விரும்பினேன். ஆனால், அவரது நூல்கள் சிங்கப்பூரில் கிடைக்கவில்லை. சிங்கை நூலகத்திலும் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், வாசிப்பின் அழகிய விதியொன்று உண்டு. ஒரு நூலை உண்மையில் நம் ஆழ்மனம் விரும்பும்போது, அந்த நூல் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். இந்த அழகிய விதியின்படி அவரது நூல் மட்டுமின்றி, அடுத்த சில வருடங்களில் பாலமுருகனது நட்பும் கிடைத்தது. அதனூடாக அவரது பல சிறுகதைகளையும் வாசிக்க முடிந்தது. அவ்வப்போது அவரது சிறுகதைகளைக் குறித்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இயன்றது.
பாலமுருகனின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் அவரது மொழி. பல படைப்பாளிகளும் சந்திக்கும் முதன்மையான சவால், தங்கள் படைப்பில், மொழி அடர்த்தியாகும்போது அதன் அழகு குறைவதும், அழகு கூடிவரும்போது அடர்த்தி குறைந்து தட்டையாகக் காட்சியளிப்பதுமே ஆகும். படைப்புத் தராசின் இந்த இருதட்டுகளின் சமநிலையைப் பேணுவது சற்றுச் சிக்கலானது. ஆனால், பாலமுருகனுக்கு இது ஒரு சவாலாக இல்லை என்பதை அவரது கதைகளை வாசிக்கையில் உணரமுடியும். கவித்துவம், அடர்த்தி, செறிவு இவையாவும் இவரது மொழியில் நிரம்பியிருந்தாலும் அதற்கு நிகராக வசீகரமும் கலந்திருப்பதால், மொழியில் சமநிலையும் துல்லியமும் துலங்கி வருகின்றன. அதனாலேயே கதை வெகு சுலபமாக வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது. அதே சமயம், தனது ஆழத்தால் மிரட்டவும் செய்கிறது இவரது மொழி.
இத்தொகுப்பின் கதைகள் வெகு இயல்பாகத் துவங்கி, சிறிது சிறிதாக வெப்பம் கூடி, முடிவில் வாசகன் மனத்தில் வெடிக்கின்றன. வெவ்வேறு கதைமாந்தர்கள், வெவ்வேறு வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், வெவ்வேறு நிலவெளி என இத்தொகுப்பின் கதைகள் காட்டும் உலகம் வியப்பும், விரிவும் நிரம்பியது. கதைகள் மட்டுமல்ல, கதைகூறல் முறையிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் பாலமுருகன். நவீனத்துவம், பின்நவீனத்துவம், மாய யதார்த்தவாதம் எனப் பல்வேறு வகைகளில் கதைகளை வார்த்தெடுத்துள்ளார். இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் மற்றொரு கதையை வெல்ல முயல்கின்றன. ஒவ்வொரு கதையும் அதனதன் வழியில் முக்கியமானவை.
“ஒரே நிலவுதான் உலகில் உள்ள எல்லாக் குளங்களிலும் தனித்தனியாக மிதந்து கொண்டிருக்கிறது…” என்ற கவிதை ஒன்று உள்ளது. அதே போல, பாலமுருகனின் இத்தொகுப்பிலுள்ள வெவ்வேறு கதைகளிலும், நிரம்பியிருப்பது, கைவிடப்பட்ட மனிதர்களின் துயரமும், மனவலியுமே. தனிமை என்பது பொருண்மையானதல்ல. அது மீப்பொருண்மைத் தளத்தில் பேருருக்கொள்வது என்பதைத் தனது கதைகளில் உணர்த்த முயல்கிறார் பாலமுருகன். ‘அப்பாவின் 10ஆம் எண் மலக்கூடம்’ கதையில் வரும் பெரியவர், ‘ஓர் அரேபியப் பாடல்’ கதையில் வரும் விரோனிக்கா, ‘எச்சில் குவளை’ கதையில் வரும் காயத்ரி, ‘துள்ளல்’ கதையில் வரும் பாட்டிகள் என இத்தொகுப்பின் கதாமாந்தர்கள் தனிமையின் அடியற்ற பள்ளத்தில் விழுந்தபடியிருக்கிறார்கள்.
முற்றிலும் புதிய களங்களிலும் இவரது கதைகள் தோன்றியபடியிருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள ‘அப்பாவின் 10ஆம் எண் மலக்கூடம்’ என்கிற சிறுகதை வாசகர் முன்னறியாத களத்தில் தகைவு கொண்டிருக்கிறது. நவீன வாழ்வுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள ஒரு மனிதன் எவ்வளவு பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது? காலமாற்றத்தில் மனிதர்களைப் போலவே மலக்கூடங்களும் மாறிவிட்டன. நவீன மலக்கூடங்களுக்குப் பழகாத ஒரு முதியவரின் நினைவில் விரியும் இக்கதை சிறந்ததொரு வாசிப்பனுவத்தை அளிக்கும் கதை. உண்மையில் மலக்கூடம் என்பது என்ன, மலமும் அழுக்கும் கீழ்மையும் எங்கு இருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை இது.
பாலமுருகனின் இத்தொகுப்பில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம், சிறுவர்களின் உலகை அது விரித்தெடுக்கும் விதம். இத்தொகுப்பின் பல கதைகளிலும் சிறுவர்கள் வந்தபடியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கேயுரிய பிரத்யேகமான உலகமும் அவர்களின் எண்ணவோட்டங்களும் தங்கள் குடும்பத்தை, தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவர்கள் புரிந்துகொள்ளத் தவிப்பதும் வெகு யதார்த்தமாகப் பதிவாகியிருக்கிறது. ‘நீர்ப்பாசி, தேவதைகளற்ற வீடு, நெருப்பு, எச்சில் குவளை, துள்ளல்’ போன்ற கதைகளில் பாலமுருகன் காட்டும் சிறுவர் உலகம் வெகு சுவாரஸ்யமானது. நெருப்பு கதையில் சிறுவன் வினோத் கடைக்கார கிழவியின் கன்னங்களைப் பார்க்கும்போது அவனுக்கு இவ்விதம் தோன்றுகிறது: ‘இருளடைந்த இரண்டு குண்டு விளக்குகள் அவளுடைய இரு கன்னங்களாகத் தொங்கிக் கொண்டிருந்ததையும் வினோத் கவனித்தான். அதை ஓங்கி அடித்தால் சட்டென எரியும் என்றும் யூகித்துக் கொண்டான்’. மொழிக்குச் சிறகு முளைப்பது இதுபோன்ற வரிகளில்தான்.
சிறுவர்களுக்கு அடுத்த படியாக, பாலமுருகனின் கதைகளில் பெண்கள் நிரம்பியிருக்கிறார்கள். சிறுமியான காயத்ரி முதல் கிழவிகள் வரை எல்லா வயதுப் பெண்களும் இதில் அடக்கம். வாழ்வைத் தொலைத்த கோமதி (மீட்பு), அதனோடு போராடும் சுராயா (நெருப்பு), வாழ்விலிருந்து முற்றிலும் அகன்று செல்லும் காளி (காளி), எனப் பெண்களின் துயரங்களைக் கலாபூர்வமாகக் கையாண்டிருக்கிறார் பாலமுருகன்.
பாலமுருகனின் மொழி உச்சம் கொள்வது அவரது ‘காளி’ என்ற சிறுகதையில்தான். காலங்காலமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள கடக்கப்படாத அல்லது கடக்க முடியாத அகழியை இக்கதையில் கவனப்படுத்துகிறார். இந்தக் கதையில் வரும் காடு உண்மையில் காடல்ல, அது இருண்டு போன மனத்தின் குறியீடு என்று வாசகர் உணர்கையில் கதையின் கனம் கூடிக்கொண்டே போகிறது. இப்படித்தான் அவரவர் மனங்களின் இருண்ட காடுகளில் நம் துணையை ஒவ்வொருவரும் தேடிக்கொண்டிருக்கிறோம்.
‘நெருப்பு’ கதையில் நாம் வைக்கம் முகமது பஷீரின் புன்னகையைக் காண முடிகிறது. இக்கதையின் மேற்புறத்தில் உள்ள எளிமையும் பகடியும் அதன் ஆழத்தில் உள்ள நம்பமுடியாத துக்கத்தை மேலும் உக்கிரமாகக் காண்பிக்கின்றன. ஒரு வரியை வாசித்ததும் இயல்பாக சிரித்துவிடுவோம். ஆனால், அடுத்த கணம் அப்படிச் சிரித்ததற்காக வெட்கமும் வருத்தமும் நமக்குள் ஏற்படும். ஒரு சிதைந்த குடும்பத்தின் துக்கத்தையும், வீழ்ச்சியையும், உள்ளோடிய துயரையும், சரிசெய்ய முடியாத வாழ்வின் நெருக்கடியையும், பகடி கலந்த மொழியில் பதிவு செய்கிறது இக்கதை.
விமானம் ஒன்று தரையில் ஊர்ந்து சென்று சட்டென வானில் பறப்பது போலத்தான் இவரது கதைகள், இயல்பான வேகத்தில் பயணித்து, முடிவில் சட்டெனப் பறந்து விடுகின்றன. ‘தேவதைகளற்ற வீடு’, ‘நாவலின் முதல் அத்தியாயம்’ போன்ற கதைகளில் இத்தன்மை வெகு துலக்கமாகத் தெரிகிறது. யதார்த்த நடையில் துவங்கும் இக்கதைகள் முடிவில் மாய யதார்த்தத்தின் மடியில் புதைந்துவிடுகின்றன. ‘நாவலின் முதல் அத்தியாயம்’ கதையில் வடிவேலுவின் அந்த ரகசிய அறைக்குள் மாட்டிக்கொள்ளும் மனிதனைப் போலத்தான் பாலமுருகனின் மொழிக்குள் நாமும் மாட்டிக்கொள்கிறோம். பின்நவீனத்துவக் கூறுகள் கொண்ட ‘நாவலின் முதல் அத்தியாயம்’ என்ற இக்கதை இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று.
ஒவ்வொரு கதையுமே அதனதன் உச்சத்தில் நிலைகொள்வது ஒரு வரம். இக்கதைகளை வாசிக்கும்போது பாலமுருகன் அவரது படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார் என உணரமுடிகிறது. இந்த உச்ச நிலையிலேயே அவர் எப்போதும் சஞ்சரித்து மேலும் பல காத்திரமும் ஆழமும் நிறைந்த படைப்புகளை அளிப்பார் என்று ஒரு வாசகனாக நான் முழுமனத்துடன் நம்புகிறேன்.
மிக்க அன்புடன்
கணேஷ் பாபு
28.08.2022
மரணமின்மை எனும் மானுடக்கனவு- சௌந்தர்
மரணமின்மை எனும் மானுடக் கனவு வாங்க
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடப்பட்ட நூல்களில் முக்கியமான ஒரு நூல் சுனில் கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பான மரணமின்மை எனும் மானுடக்கனவு.இந்த நூலை வாசித்து விட்டு சுனிலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
காந்தியும் ,இலக்கியமும் அவர் வாழ்வில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், நமக்கு சரகரின் நீட்சியாக சுஸ்ருதரின் கண்ணியாக, ஆகச்சிறந்த இந்திய மருத்துவ அறிஞர் ஒருவர் கிடைத்திருப்பார்.அல்லது சரக சம்ஹிதைக்கு உலகின் சிறந்த உரை எழுதப்பட்டிருக்கும். ஏனெனில் ‘ ‘நான் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற ஆயுர்வேத மருந்தவனாக வருவேன் என என் ஆசிரியர்கள் நம்பினர் , ஆனால் எனக்கு வேறொரு கிறுக்கு பிடித்துக்கொண்டது. வாசிக்கவும் எழுதவும் அனுமதிக்கும் சுதந்திரத்துடன் கூடிய இலகுவான தொழில் வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்தேன் ‘ என முகவுரையில் சொல்கிறார்.
மொத்தம் பதினைந்து கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பில், சுனில் அறிமுகப்படுத்தியிருக்கும் உசாத்துணை நூல்கள் மட்டுமே வாசித்து முடிக்க நமக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் தேவைப்படலாம்.
ஆயுர்வேத நூல்கள் என்றாலே மூலிகைகளை அரைத்தல், கஷாயம் காய்ச்சுதல், பத்தியம் இருத்தல் என நம் அன்றாடத்திற்கு சம்பந்தமே இல்லாதவற்றை பேசிக்கொண்டிருக்கும் அல்லது சம்ஸ்கிருத சுலோகங்களை மேலே எழுதி அதை கீழே தமிழ்ப்படுத்தி நம்மை மேலும் ‘படுத்தி‘ எடுப்பவை.
இந்த சிக்கலை உடைத்து தரமான ஆயுர்வேத நூல் எனும் மாபெரும் அறிவுக்களஞ்சியமான ‘திரிதோஷ மெய்ஞ்ஞான தத்துவ விளக்கம்‘ எனும் நூலை தந்தவர் சுனில் மற்றும் எனக்கும் ஆயுர்வேதத்தில் மானசீக ஆசிரியரான தெரிசனங்கோப்பு இல.மஹாதேவன் சார். இது சார்ந்து ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரை { PARNASALAI- பர்ணசாலை
சுனிலின் இந்த கட்டுரை தொகுப்பு அதன் தொடர்ச்சி என்றே சொல்வேன். ஒவ்வொரு கட்டுரையிலும் ஆசிரியரின் பெயர் நன்றியுடன் நினைவு கூறப்படுகிறது.
இத்தொகுப்பின் முதல் பகுதி வேத காலத்தில் தொடங்கி காலனிய காலம் வழியாக கோவிட் தொற்று வரை ஆயுர்வேதத்தின் பங்களிப்பும் எல்லைகளும், தக்க சான்றுகளுடன், பேசப்படுகிறது.
அதில் முக்கியமாக நியாய–வைசேஷிக தரிசனங்கள் கூறுகளை ஆயுர்வேதம் எப்படி சரளமாக பயன்படுத்திக்கொள்கிறது. சீன மருத்துவத்தின் ‘மெரிடியன்‘ என்கிற கருத்துக்கும் , யோக மரபின் ‘நாடி‘ என்கிற கருத்துக்கும் இணையாக ‘ஸ்ரோதஸ்‘ எப்படி கையாளப்படுகிறது என்கிற பகுதியும்.
விடுதலைக்கு முந்தைய கால பிரபல ஆயுர்வேத வைத்தியர் ப்ருஹஸ்பதி தேவ திரிகுணாஜி பற்றிய சுவாரஷ்யமான வாய்மொழிக்கதையும்.
மரபு மருத்துவர்களின் அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உடற்கூறு மற்றும் உடலியங்கியல் புரிதல் ஏதுமின்றி புற்று நோய் முதல் மரபணு குறைபாடு வரை எல்லாவற்றையும் தீர்க்கமுடியும் என மார்தட்டிக்கொள்ளும் அரைகுறை வைத்தியர்கள் பற்றியும் சொல்லிவிட்டு , மஹாதேவன் சார் போன்ற, தங்கள் மரபின் எல்லைகளை தெரிந்தும் அதன் போதாமையை ஒத்துக்கொண்டும் நவீன மருத்துவதையோ, நிகரான வேறு முறைமைகளையோ ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லாத அசல் வைத்தியர்களையும் பிரித்தறியும் பகுதியும்.
இந்திய மருத்துவ முறைகளை பற்றி புரிந்துகொள்ள உண்மையில் ஐரோப்பிய அறிஞர்களையே சார்ந்து இருக்கவேண்டியுள்ளது என சொல்லி , டொமினிக் உஜாஸ்ட்டிக், ஜீன் லாங்போர்ட், கென்னத் ஜிஸ்க் ,டாக்மர் உஜாஸ்ட்டிக், முள்ளன் பால்ட், ராச்சல் பெர்கர், ரிச்சர்ட் வெய்ஸ் என அறிஞர்களின் பெயர்களையும் அவர்களின் பங்களிப்பையும் விரிவாக சொல்லும் பகுதியும்.
வேதமும் ஆயுர்வேதமும் எனும் கட்டுரை ஒரு க்ளாசிக் நாவலுக்கு சற்றும் சளைக்காத பகுதி. இந்திரனில் தொடங்கி ஆத்ரேயர், அக்னிவேஷர் வழியாக பெளத்தத்தின் பங்களிப்பு வரை குரு பரம்பரை பேசப்படுவதுடன் , அதர்வ வேதத்திலிருந்து சம்ஹிதைகள் வழியாகவும் , கெளசிக சூத்திரம் போன்ற சூத்திரங்களின் வழியாகவும் பெளத்த நூல்களான வினய பிடகங்களில் இந்திய மருத்துவ மாண்புகள் பற்றியும், மிக விரிவான சித்தரத்தை அளிக்கிறது.
இந்த அத்தியாயத்தில் தொகுத்து கொடுக்கப்பட்டிருக்கும் நூல்களை ஒருவர் தேடிச்சென்று படித்தாலே, ஆயுர்வேதத்தின் பார்வை விசாலமாகிவிடும்.
இரண்டாவது பகுதி இந்திய மருத்துவத்தின் உன்னதமான ஆளுமைகள் மற்றும் நூல்கள் பற்றிய அபாரமான பகுதி முதலில் டாக்டர் மஹாதேவன் பற்றிய பிஷக் உத்தமன் {மருத்துவர்களில் தேர்ந்தவன் } எனும் கட்டுரை ஏற்கனவே படித்தது, அதில் மேலதிகமாக அவருடைய சமீபத்திய நூல்கள் பற்றிய பகுதியும் ,
சுனில் பல்வேறு இணைய இதழ்களில் எழுதிய சிறிய கட்டுரைகளும், மிக முக்கியமாக டாக்டர்.பி.எம் ஹெக்டே பற்றி டாக்டர் ஜீவானந்தம் மொழிபெயர்த்த ”மருத்துவத்திற்கு மருத்துவம்” என்கிற கட்டுரையும்.
சுனில் முக்கியமாக பரிந்துரைக்கும் நூலான PHYSICAL DIAGNOSIS பற்றிய விரிவான கட்டுரையும்.
அனைத்திற்கும் உச்சமாக சரக சம்ஹிதைக்கு சுனில் எழுதியிருக்கும் ஆத்மார்த்தமான கட்டுரை. இந்த கட்டுரை நிச்சயமாக சுனிலால் மட்டும் எழுதப்பட்டிருக்க முடியாது, அவருடைய ஆன்மாவும் , ஐந்து தலைமுறை வைத்திய குடும்பம் என்பதால் அவர் முன்னோர்களாலும் சரகருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நன்றியுரை போல தான் உள்ளது.
சுனிலுக்கு சுஸ்ருதரை விட சரகர் மேல் அலாதி பிரியம். நானோ சுஸ்ருதரை தொடர்பவன். இதை படித்து முடித்தவுடன் என் ஆசிரிய நிரையை மனதில் எண்ணிக்கொண்டேன், என்றேனும் சுஸ்ருதருக்கு இப்படி ஒரு கட்டுரையை சமர்ப்பணம் செய்துவிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அப்படி ஒரு உற்சாகமான வாசிப்பனுபவம்.
இறுதி அத்யாயம்‘ஆரோக்கிய நிகேதனம்‘ மற்றும் ‘சுளுந்தீ‘ நாவலை முன்வைத்து இந்திய மருத்துவ முறையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இலக்கியமும் மருத்துவமும் இணையும் பகுதி.
துறை சார்த்த நூல்களில் இருக்கும் பெரும் சவால், நீங்கள் பத்து நூல்களை படித்தால் மட்டுமே அதில் மதிப்பு மிக்க ஒன்றை கண்டடைய முடியும். அதிலும் ஆயுர்வேதம் ,யோகம் போன்ற வணிகமும் மரபும் முட்டிக்கொண்டிருக்கும் துறைகளில் நூற்றுக்கு எண்பது புத்தகங்கள் ஏற்கனவே சொன்னவற்றை வெட்டி ஒட்டி அட்டைப்படமும் தலைப்பையும் மட்டும் மாற்றி சந்தை படுத்திக்கொண்டிருப்பவை, மீதி இருக்கும் இருபது நூல்களில் பதினெட்டு நூல்கள் உலகின் எல்லா அறிவும் இங்கிருந்தே வந்தது. எனும் பிரகடன நூல்கள், மிக அரிதாகவே உண்மைக்கு அருகில் ஒருசில நூல்கள் நிற்கின்றன அவை தொன்று தொட்டு கையளிக்கப் பட்டதால், அதை உணர்ந்து எழுதும் எழுத்தாளன் தன் ஆணவத்தை சிறிது நேரம் கழற்றி முன்னோர் காலடியில் வைத்துவிட்டு வெறும் கருவியாக நிற்கிறான். அந்த முன்னத்தி ஏர் இவனை உந்தி தள்ளி தனக்கானதை எழுதிக்கொள்கிறது.இந்த நூல் அப்படியான ஒன்று.
அன்புடன்
செளந்தர் .G
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

