Jeyamohan's Blog, page 649
January 6, 2023
மனசாட்சியும் வரலாறும்- கடிதம்
அன்பு நிறை ஜெ வணக்கம் !
ஒரு சித்தாந்தம் எப்படி உருவாகிறது, அதன் ஆணி வேர் எதுவாக இருக்கிறது, என்பதை விட அந்த சித்தாந்தம் கட்டமைக்கபட்டபிறகு அதன் செயல்பாடுகள், அதன் நடைமுறைகள், அதன் இலக்குகள் என, அந்த சிந்தாந்தின் கொள்கைகளினாலான விளைவுகளினாலேயே வரலாற்றில் அறியப்படுகிறது ! கம்யூனிசமும் மார்க்ஸ்ம் ஏங்கல்ஸ்சும் வரலாற்றில் ஏற்படுத்திய விளைவுகளை கொண்டே அவர்களை மதிப்பிடவேண்டும். உண்மையில் அவர்களின் தாக்கத்தை விட வரலாற்றில் ஹிட்லரும், லெலினும், ஸ்டாலினும் ஏற்படுத்திய தாக்கம் மலையென தெரிகிறது.
பின்தொடரும் நிழலின் குரல் வாசித்துகொண்டிருக்கும் போது மனம் காந்தி காந்தி என இடைவிடாது கூறிகொண்டிருந்தது, கொஞ்சம் பிசகியிருந்தால் கூட கையில்லாத கால்கள் அற்ற குழந்தைகளாக எம் முன்னோர்கள் மடிந்திருப்பார்கள் என்ற உண்மை விளங்காமலில்லை. இவ்வளவு வரலாற்று எடையுள்ள நாவலை இதற்குமுன் நான் வாசித்தது இல்லை. கோவை ஞானி கந்தசாமியாக வருகிறார். கே ஆர் எஸ், கேகேஎம், கதிர். அருணாசலம். வீரபத்திர பிள்ளை எல்லாம் யாரோ ?
நான் வடக்கத்தியன்( செங்கல் பட்டு) எந்த வரலாற்று நாயகர்களையும் நேரில் பார்த்திராத பாக்கியம் உண்டு எனக்கு. ஏழு நாட்களில் பின்தொடரும் நிழலின் குரலை படித்துமுடித்தேன் தினமும் நூறு பக்கம் ஆனால் அந்த நூறு பக்கம் படிப்பதே மிகவும் சவாலானதாக இருந்தது. ஆண்டுகணக்காக இலக்கியத்தை பயின்று வந்தாலும், என் வாழ்க்கைக்கு சவால் உங்களை படித்து முடித்து நீங்கள் ஒன்றுமே இல்லை எனகடந்துசெல்லவேண்டும் என்பது தான்.
ஒட்டுமொத்தமாக இந்த நாவலால் என் மனம் சிலவற்றைஉங்களிடம் கூற முயல்கிறது.
1)இவற்றுகெல்லாம் யாரையும் கைகாட்ட முடியாது. இது இப்படிதான் நடக்கும் இதை தான் வரலாறுஎன மனிதன் கூறுகிறான் அல்லது இந்த மாதிரியான வரலாறுகளையே மனிதன் படைக்கவிரும்புகிறான்.
2)அன்னா , அன்னாவின் குழந்தை , புகாரின், வீரபத்திர பிள்ளை , வீரபத்திர பிள்ளையின்பிள்ளை,தல்ஸ்தோய் தாஸ்த்தவெஸ்கி இவர்களெல்லாம் வரலாறின் உப தயாரிப்புகள் (by product) வரலாற்றின் உண்மையான நேரடியான product (தயாரிப்பு) லெலின்/ ஸ்டாலின் ஹிட்லர் என. ஆனால் இந்த மையத் தயாரிப்புகளில் போய் காந்தி அமர்ந்தது தான் வரலாறு முன்பு கண்டிராத அதிசயம் அதற்கு மூலக்காரணம் இந்தியதன்மை என சொல்லலாமா ?
3)இந்தியாவின் உணமையான விடுதலை பிரிட்டிஷ்ஷாரிடமிருந்து இல்லை மாறாக இந்தியாவிடமிருந்தே என காந்தி உணர்ந்தது ? விடுதலை பெறும்போது உண்டாக்கப்பட சட்ட மசோதாக்களில் இந்தியாவின் சிறுபான்மையினருக்கும் பட்டியலினத்தவருக்குமான சமுதாய சம உரிமையை ,பங்கீட்டை நிர்ணயம் செய்தது. அதற்கு எதிராக எந்த வித எதிர்ப்பு குரலும் பெரும்பான்மையிடமிருந்தோ இதரஉயர்சாதிகளிடமிருந்து எழாமலிருந்தது அதற்குண்டான எல்லா வேலைகளையும் காந்தி ஏற்கனவேமுன்னெடுத்து முடித்துவைத்திருந்தமையால் அல்லவா ? (இது புரட்சி ஆகாதா ?
நாம் அந்த நொறுங்கிய கிழிந்த கந்தலான இந்தியாவிலிருந்து அந்த கிழவன் வீசிய மெல்லியநூலை பற்றி மேலேறி வந்துவிட்டோம். அந்த மெல்லிய நூல் மானசீகமாக ஒவ்வொருஇந்தியனுக்கும் காந்தி போட்ட பூநூல். ஆனாலும் நூறாண்டுகளுக்கும் மேலாக அந்த இந்திய தன்மையை நொறுக்கியே ஆக வேண்டும் என்பதில் துளிகூட பின்வாங்காமல் இதர மொத்த உலகமும் கங்கணம் கட்டிகொண்டிருப்பது ஏன் ? அந்த இந்தியதன்மையும் இந்திய மெய்ஞானிகளும் எவ்வளவு தொந்தரவாக இருக்கிறார்கள் இந்தஉலகிற்கு ? உண்மையில் இந்திய இலக்கியங்களும் இதிகாசங்களும் இந்த உலகை தான் எவ்வளவுசீண்டுகிறது?
நானிருக்கும் நாட்டில் நான் ஒருபோதும் என்னை இந்தியனாகவோ அல்லது இந்துவாகவோவெளிகாட்டிக்கொள்ளவே முடியாது.( கூடாது). ஜெ ! இந்தியதன்மையையும் இந்து மதத்தயும் இதன் மெய்ஞானிகளையும் காணாமல் ஆக்க ஒரு இறுதி இயந்திரத்தை அன்பளிப்பாக கொடுத்துவிடவும். காந்தி என்ற ஒரு ஆத்மா இந்த பிரபஞ்சத்திலேயே இல்லாமலாகவேண்டியும்.
ரகுபதி
இந்தப் புத்தகக் கண்காட்சியில் – சுனில் கிருஷ்ணன்
கவிஞர் பெருந்தேவியின் ‘கவிதை பொருள்கொள்ளும் கலை’ இந்த கண்காட்சியில் வெளியாகும் மிக முக்கியமான நூல்களில் ஒன்று என கருதுகிறேன். அவரது முந்தைய கட்டுரை நூல்களான ‘உடல் பால் பொருள்’ ‘தேசம் சாதி சமயம்’ ஆகியவை எனக்கு அவரது கவிதைகள் அளவிற்கே முக்கியமானவை. ‘உடல் பால் பொருள்’ பெண்ணியம் குறித்த வரையறைகளும் புரிதல்களும் ஆண் – பெண் எனும் இருமைக்கு அப்பால் எந்த அளவிற்கு பரிணாமம் அடைந்துள்ளது என்பதை எனக்கு உணர்த்தியது. படைப்பு மனதிற்கு பொதுவாக கோட்பாடுகளின் மீது ஒரு வித மனவிலக்கம் இருக்கும். ரசனையில் உவக்காத படைப்புகளை கோட்பாட்டாளர்கள் தங்களது சட்டகத்திற்கு பொருந்துகிறது என்பதால் கொண்டாடுகிறார்களோ எனும் ஐயம் அது. இந்த தொகுப்பில் அத்தகைய கற்பிதங்களை பெருந்தேவியின் கட்டுரைகள் தகர்த்தன.
[image error]
நல்ல கவிதைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நெருக்கமாக புரிந்து கொள்ளவும் கோட்பாடுகள் எப்படி உதவும் என்பதை இக்கட்டுரைகளில் காட்டுகிறார். குறிப்பாக பிரம்மராஜன், ஆத்மாநாம், நகுலன், ஞானக்கூத்தன் ஆகியோரது கவிதைகளின் சில கூருகளை கவனப்படுத்தி எழுதிய கட்டுரைகள் எனக்கு புதிய திறப்புகளை அளித்தன. அவர்களின் கவிதைகளுக்கான வாயிலை திறந்து விட்டன. சேரனின் கவிதைகளை முன்வைத்து போர் திணை பற்றிய உரையாடலாகட்டும், பாரதி மகாகவியா எனும் உரையாடலையொட்டி எழுதிய கட்டுரை ஆகட்டும், ரசனையையும் கோட்பாட்டு புரிதலையும் ஒருங்கிணைத்து சில திறப்புகளை அளிப்பதாக உள்ளன.
‘கவிதை பொருள் கொள்ளும் கலை’ , கட்டுரைகள்- பெருந்தேவி
எழுத்து பிரசுரம்
எழுத்தாளர் தமிழ் பிரபாவின் இரண்டாவது நாவல் ‘கோசலை.’ இந்த புத்தக கண்காட்சியில் பரவலாக கவனிக்கப்படும் என நம்புகிறேன். சிந்தாதிரிப்பேட்டை தான் களம். கூன் முதுகும், குள்ள உருவமும் கொண்ட கோசலை எனும் நூலகர்தான் நாயகி. புறக்கணிப்புகளும், அவமானங்களும், பச்சாதாபங்களும் நிறைந்த கோசலையின் வாழ்க்கை போராட்டம் தான் கதை. அவளுக்கு இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. காதலை வென்றெடுக்கிறாள், பிள்ளை பெறுகிறாள். அத்தனை இக்கட்டுக்களையும் மீறி தனக்குள்ளாக ஆற்றலை கண்டுகொள்கிறாள். அந்த ஆற்றலை தான் சரியென நம்பும் பொது நன்மைக்காக செலவிடுகிறாள்.
எளிய இலட்சியவாதியாக கோசலையின் ஆளுமையை சுருக்காமல் அவளை அவளது ஏற்ற இறக்கத்தோடு முழு ஆளுமையாக கட்டமைத்ததில் பிரபா வெற்றி கண்டுள்ளார். நான் வாசித்த சமீபத்திய நாவல்களில் ஒரு கதை மாந்தரோடு இந்த அளவிற்கு ஒன்றியதில்லை.‘கோசலை’ – நாவல்- தமிழ்ப்பிரபா
நீலம் வெளியீடு
ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
அஜியின் ‘ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’ கதை பிடித்திருந்தது. ஜஸ்டின் வன்முறையை விரும்பாதவன் என்ற சித்திரம், துறையில் இருந்து வரும் ஆட்கள் அவனுடன் பள்ளியில் படித்தவர்களாக இருப்பதால் ஒத்து போவது போன்றவை வாசித்துக் கொண்டிருக்கும் போது அஜியின் இயல்பை கதையில் திணிக்காறானோ என்று தான் முதலில் தோன்றியது. அவனுக்கு குமரித்துறைவி போன்ற முழுவதும் நேர்மறையான படைப்புகள் மீது இருக்கும் ஈடுபாட்டால் அப்படி யோசித்தேன். ஆனால் பரலோகத்தில் ஏசு வந்தவுடன் கதை வேறொரு தளத்திற்கு சென்றது. ஏசு ‘ஜஸ்டின்’ என்ற பேரை கேட்டுவிட்டு ‘ஸ்ஸோ பேர வெக்கானுவ பாரு’ என்று எரிச்சலடைவதும் கடைசியில் கன்னத்தில் ஒரு அறை அறைந்து விட்டு ‘போல உள்ள, அழுகுவாம் பாரு’ என்று சொல்லி ஜஸ்டினை சொர்க்கத்திற்கு அனுப்புவதும் கன்னியாகுமரி ஊர்புறங்களில் கனிவை கொஞ்சம் வன்முறை கலந்து மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்த தந்தைகளுக்கே உள்ள இயல்புகள்:) பரலோகத்தில் நாஞ்சில் நாட்டு மொழி பேசும் தந்தை ஏசு’ என்ற கற்பனையே பரவசத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. அஜிக்கு வாழ்த்துக்கள்!
ஜெயராம்
*
அன்புள்ள ஜெ
அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் ஓர் அருமையான கதை. பால் ஸக்கரியாவின் அன்னம்ம டீச்சர் ஓரு நினைவுக்குறிப்பு போன்ற கதைகளின் அந்த உணர்வு உள்ள கதை. அதிலுள்ள இனிமையான விளையாட்டுத்தனமும், அது இயல்பாக ஒரு உயர்ந்த ஆன்மிகதளத்தை எட்டுவதும் இன்றைய கதைகளில் மிகவும் அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றது. பல அழகான விஷயங்கள் உள்ளன. படித்துக்கொண்டிருக்கும் அமெச்சூர் பையன் அவனைப் போட்டிருவோம்ணே என்று ஒன்றுமே தெரியாமல் துடிப்பாக இருப்பது, ஜஸ்டின் பாதி சைவமாக ஆவது எல்லாமே அழகானவை. ’வழிதவறிய குமாரன்’கள் இப்படித்தான் இயேசுவிடம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
ராஜா குமரவேல்
*
அன்புள்ள ஜெ
மதுரைப்பகுதிச் சண்டியர்களில் பெரும்பாலானவர்கள் கொலைசெய்யப்போகும் முன் அந்த ஆளிடம் பேச்சுக்கொடுத்து, அவனைச் சீண்டி, அவன் கெட்டவார்த்தை சொல்லி வசைபாடியபிறகுதான் வெட்டுவார்கள். அப்போதுதான் வெட்டுவதற்கான மனநிலை அவர்களுக்கு வரும். இதை பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த நுட்பம் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் கதையில் அழகாக அமைந்துள்ளது. அருமையான ஃபீல்குட் கதை.
ராஜ் கார்த்திக்
January 5, 2023
சு.வேணுகோபால், தெய்வீகன் – இரண்டு நிகழ்வுகள்
ஜனவரி 8 ஆம் தேதி நான் ஒரே நாளில் இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். காலையில் தன்னறம் விருது சு.வேணுகோபாலுக்கு வழங்கப்படும் விழா. மாலையில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் தெய்வீகனின் நூல் வெளியீட்டு விழா.
இரண்டுமே பிடித்த நிகழ்வுகள். சு.வேணுகோபால் என் உள்ளத்திற்கினிய இளவல். விழாவில் நண்பர் பாவண்ணன், எழுத்தாளர் கோகுல் பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இடம் கவிக்கோ மன்றம், சென்னை. நேரம் காலை 10 மணி.
தெய்வீகன் தமிழ் விக்கிதெய்வீகனின் ’நாடற்றவனின் கடவுச்சீட்டு’ உற்சாகமான வாசிப்பனுபவம்.முற்றிலும் புதிய களத்தில் துளித்துளியாகச் சிதறிய வாழ்க்கைகளின் சித்திரங்களால் ஆனது. ஜனவரி 8 மாலை 5:30 மணிக்கு நிகழும் அமர்வில் வெற்றிமாறன், லக்ஷ்மி சரவணக்குமார், தமிழ்ப்பிரபா ஆகியோருடன் நானும் பேசுகிறேன். இடம் அதே கவிக்கோ மன்றம், சென்னை. பொழுது மாலை 530 மணி.
புத்தகக் கண்காட்சியும் ஐயங்களும்
சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த விழாவை முப்பது ஆண்டுகளாக வெவ்வேறு வடிவில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் வண்ணங்கள் எனக்கு இன்றுவரை சலித்ததே இல்லை. தமிழில் அறிவுச்செயல்பாடுக்காக மட்டுமே நிகழும் ஒரு பெருநிகழ்வு இது.
ஒவ்வொரு ஆண்டும் எவரேனும் எங்கேனும் எழுதி, வாட்ஸப் செய்திகளாக, மின்னஞ்சல்களாக புத்தகக் கண்காட்சி பற்றிய சில விமர்சனங்கள், எள்ளல்கள் என் காதில் விழுகின்றன. மீண்டும் மீண்டும் பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறேன். பழையவர்கள் அவற்றை கடந்துசெல்ல அறிந்திருக்கலாம். புதியவர்கள் குழம்பக்கூடும். ஆகவே அவற்றை மிகப்பழையவன் என்ற நிலையில் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது.
இலக்கிய சூழலில் சோர்வூட்டும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்பவர்கள் நான்கு வகையானவர்கள். இந்நால்வரும் என்றும் இருப்பவர்கள். ஆனால் இன்று சமூக ஊடகங்கள் இவர்கள் குரலெழுப்ப வழியமைக்கின்றன. எண்ணிக்கைபலத்தால் இவர்கள் ஒரு சக்தியாக ஆகியிருக்கிறார்கள். என்றுமில்லாத அளவு இன்று இவர்களின் குரலால் இலக்கியவாதிகளும் வாசகர்களும் சூழப்பட்டிருக்கிறார்கள்.
அ. பெரிதாக ஏதும் எழுதாமல் அப்படியே ஓய்ந்துபோன சற்று மூத்த எழுத்தாளர்கள். இலக்கியம் என்பது தீவிரத்தால், அர்ப்பணிப்பால் அடையப்படுவது. அத்துடன் இயல்பான கற்பனையும் அறிவாற்றலும் இருக்கவேண்டும். இவர்களுக்கு இரண்டுமிருக்காது. கொஞ்சம் ஏதோ எழுதிப்பார்த்திருப்பார்கள். திசைதிரும்பி அங்கே இங்கே அலைந்திருப்பார்கள்.
மீண்டு வந்து அமர்வதற்கான திண்ணை என்பது முகநூல். அங்கே மீண்டும் எதையாவது எழுதுவார்கள். ஆனால் கலை கைவிட்டுப்போய்விட்டதென அவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகவே வம்புகளில் ஈடுபடுவார்கள். கசப்புகளையும் அவநம்பிக்கைகளையும் பொழிந்தபடியே இருப்பார்கள். இவர்களின் எதிர்மறை மனநிலை முழுக்க இலக்கியத்தின் வெற்றிகள்மேலும் புதிய எழுச்சிகள் மேலும்தான் இருக்கும்.
ஆ. இலக்கியத்தில் கவனம் பெறாது போன சிறு எழுத்தாளர்கள்.இவர்கள் தொடர்ந்து எழுதுவார்கள், செயல்படுவார்கள். ஆனால் இலக்கியம் கைவராது. இலக்கியம் என்றல்ல எந்தக்கலையும் அப்படித்தான். அது முயலும் அனைவருக்கும் அமையவேண்டுமென்பதில்லை. பல காரணங்கள். இயல்பான கற்பனைத்திறன்குறைவு, அறிவுநுண்மையின் போதாமை, வாசிப்பின்மை என. பலசமயம் வாழ்க்கைச்சூழலால்கூட ஒருவர் முழுமையாக வெளிப்பட முடியாமலாகும்.அவர்களுக்கு சூழல்மேல் கசப்பும் அவநம்பிக்கையும் இருக்கும்.
இ. அரசியலாளர்கள். இலக்கியச்சூழலில் அதிகமாகக் கேட்கும் குரல்களில் ஒன்று இத்தரப்பு. இவர்கள் இயல்பிலேயே இலக்கியத்துக்கான மொழிநுண்ணுணர்வும், வாழ்க்கைசார்ந்த பார்வையும் இல்லாதவர்கள். இளமையிலேயே ஓர் அரசியல்சார்பு உருவாகிவிடும். சுயமான சிந்தனை இல்லாத காரணத்தால் அந்த அரசியல் சார்ந்தே சிந்தனையை முன்னெடுத்து இறுக்கமான நிலைபாடாக ஆக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழ்ச்சூழலில் அரசியலென்பதே குழுமனப்பான்மை, தலைமைவழிபாடுதான். பெரும்பாலும் அதன் உள்ளுறை சாதியும் மதமும் தனிப்பட்ட நன்மைகளும்தான்.
ஆனால் இவர்களால் பெருந்திரளாக கூட முடியும். கூட்டாக கூச்சலிடமுடியும். அத்துடன் அந்த அரசியலால் இவர்களுக்கு ஓர் அபாரமான தன்னம்பிக்கை உருவாகிவந்திருக்கும். உலகுக்கே வழிகாட்ட, திருத்த, இடித்துரைக்க, கடிந்துகொள்ள, நையாண்டிசெய்ய தாங்கள் தகுதிபடைத்தவர்கள் என நம்புவார்கள். அதை எவராலும் உடைக்க முடியாது. அதை இவர்களில் உருவாக்குவது வழியாகத்தான் அந்த அரசியல்தரப்பின் அடித்தளமே அமைகிறது.
இவர்களுக்கு இலக்கியத்துடன் தொடர்பே இல்லை. இலக்கியம் மொழிவழியாக அந்த ஆசிரியன் செய்யும் பயணம், கண்டடைதல் ஆகியவற்றாலானது. இவர்கள் பயணத்திற்கு முன்னரே கண்டடைதலை நடத்தியவர்கள். ஆனால் இவர்கள் இன்றைய சமூக ஊடகச் சூழலால் இலக்கியத்தை நேருக்குநேர் சந்திக்க நேர்கிறது. இவர்களுக்கு இலக்கியம் கண்ணெதிரே தீவிரமாக நிகழ்வது ஒருவகை நிம்மதியின்மையை அளிக்கிறது.
இவர்கள் அறிந்தது அரசியல் மட்டுமே. ஆகவே இவர்கள் பார்வையில் எல்லாமே அரசியல்தான். இலக்கியத்தை ஒருவகை அரசியல் என்று புரிந்துகொள்கிறார்கள். இலக்கியம் இவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே அது பூடகமான அரசியல் சதி என நினைக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இடைவிடாது இலக்கியம் மீது மோதிக்கொண்டே இருக்கிறார்கள். இலக்கியத்தை திரிக்கிறார்கள். தங்கள் விரும்பியதை கண்டடைந்து அதையே அந்த இலக்கியம் சொல்வதாக ஆணையிட்டுச் சொல்கிறார்கள். இலக்கியவாதிகளை முத்திரையடிக்கிறார்கள். அணிதிரள்கிறார்கள், திரட்டமுயல்கிறார்கள்.
ஈ. இலக்கியப் பாமரர்கள். இவர்களுக்கு வாசிக்கும் வழக்கமெல்லாம் இருப்பல்லை. மிகமிகக்குறைவாகவே எந்த அறிவுசெயல்பாடு பற்றியும் தெரியும். ஆனால் சமூக ஊடகத்தால் இலக்கியத்தை வெறுமே வம்புச்செய்திகளாக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இவர்கள் நால்வரும் உருவாக்கும் சில பொதுவான அசட்டுக் கருத்துக்கள் உண்டு. ஓர் இலக்கியவாசகன் இக்கருத்துக்களில் எவற்றையேனும் எவரேனும் சொன்னால் அக்கணமே அவரை அலட்சியம்செய்து விலகிவிடவேண்டும். அவருக்கும் இலக்கியத்திற்கும் எந்த உறவுமில்லை. அவருக்கும் அறிவியக்கத்தில் இடமே இல்லை. அவை இவை.
அ. வாசகர்களை விட எழுத்தாளர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லாரும் எழுதறாங்க. வாசகர்கள் எங்கே?
தமிழில் எழுதுபவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுக்க அப்படித்தான். தொழில்நுட்பம் அதற்குக் காரணம். ஆனால் அதேபோல வாசிப்பும் பெருகியிருக்கிறது. தமிழகத்தில் எட்டு நகர்களில் பெரும் புத்தகக் கண்காட்சிகள் நடக்குமென முப்பதாண்டுகளுக்கு முன்பு எவர் நினைத்திருக்க முடியும்? பல்லாயிரம் வாசகர்கள் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முகநூலில் வம்புக்கு வந்து நிற்பவர்கள் அல்ல. மௌனப்பெரும்பான்மை. ஆனால் அவர்களே இலக்கியத்தை தீர்மானிக்கிறார்கள்.
ஆம், இந்த எண்ணிக்கை போதாது. நம் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் வாசிப்பு இன்னும் பத்துமடங்கு ஆகவேண்டும். ஆனால் இன்று வாசிப்பவர்களே லட்சக்கணக்கானவர்கள். அவரவருக்குரியதை வாசிக்கிறார்கள். ஆன்மிகம், சுயமுன்னேற்றம், பொருளியல், தொழில்நுட்பம், வாழ்க்கைவரலாறு, அரசியல், புனைகதை. அவர்களில் ஒரு சிறுபகுதியே புனைகதை வாசகர். ஆனாலும் இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் இலக்கிய நூல்கள் வெளிவந்து விற்கப்படுகின்றன. அவற்றில் ஏற்கப்படுவன மீண்டும் அச்சாகி வெளிவருகின்றன.
அந்த போட்டிதான் உயிரின் இயல்பு. மலர்கள் அப்படித்தான் பூத்துக்குலுங்குகின்றன, கனியாகின்றவை சிலவே. விந்துத்துளியில் உயிரணுக்களில் கருவாகின்றது ஒன்றே. ஆகவே நூல்கள் பெருகட்டும். அந்தப் பெருக்கம் வளர்ச்சிதான். அதைக்கண்டு ஏளனம் செய்பவன், ஒவ்வாமை கொள்பவன் அறிவியக்க ஆர்வம் கொண்டவனே அல்ல.
ஆ. ஒரு ரெண்டு புக் எழுதினவன்லாம் பெரிய ஆள் மாதிரி புத்தகக் கண்காட்சியிலே அலையறான்.
உள்ளூர் முனிசிப்பல் கவுன்சிலர் விடைத்து திரிவதை கண்டு ஒரு முனகலை வெளிப்படுத்தும் தெம்பில்லாமல் பம்முகிற, உயரதிகாரியிடம் இளிக்கிற பரிதாபத்திற்குரிய ஆத்மாக்கள்தான் இப்படிச் சொல்கின்றன. ஒரே ஒரு நூல் எழுதியவனும் சரி, நாளை எழுதவிருக்கிறேன் என நம்புபவனும் சரி, வாசகனும் சரி நிமிர்வுகொள்ளட்டும். அதற்கான இடம்தான் புத்தகக் கண்காட்சி.
ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தாலே நீங்கள் தமிழகத்தின் மக்கள்தொகையில் லட்சத்திலொருவர் என நினைவுகூருங்கள். அதன்பொருட்டே நீங்கள் பெருமிதம் அடையலாம். வேறெந்த நிமிர்வைவிடவும் அது உயர்வானது. அறிவியக்கத்துடன் தொடர்பில் இருக்கிறேன் என்னும் திமிர் உங்களிடம் இருக்கட்டும். புனிதமான உணர்வு அது.
ஆம், நான் வாசகன், நான் எழுத்தாளன் என இங்கு தின்று கழிந்து புணர்ந்து சாகும் இப்பெருந்திரள் நோக்கிச் சொல்லுங்கள். நீங்கள் எங்களை அறியமாட்டீர்கள், ஆனால் உங்களுக்காகவும் நாங்கள் சிந்திக்கிறோம் என்று சொல்லுங்கள். அந்த திமிரை உணரமுடியாதவன் ஒருவகை அற்பன், அவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை.
இ. எழுத்தாளர்களை வாசியுங்க, ஆனா தனிப்பட்ட முறையிலே நெருக்கம் வைச்சுக்காதீங்க. அவங்கள்லாம் நல்லவங்க இல்லை
இதைச்சொல்லும் அற்பன் தன்னை ஏதோ ஒருவகை புனிதன் என நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனுக்கு அரசியல்வாதியை கும்பிட, அதிகாரியை பணிய கூச்சமில்லை. எழுத்தாளனிடம் மட்டும் ஒவ்வாமையாம். எழுத்தாளனும் மனிதனே. அவனுக்கும் கொந்தளிப்புகள் இருக்கும். அவனுக்கும் தன்முனைப்பு இருக்கும். ஆனால் எந்த நல்ல வாசகனும் இந்த உலகில் எழுத்தாளனையே தனக்கு அணுக்கமானவனாக கருதுவான். அவனுடன் பேச, அவனுடன் அணுக்கம் கொள்ளவே துடிப்பான். நான் இன்றும் அப்படித்தான் இருக்கிறேன். எந்த எழுத்தாளரையும் தேடிச்சென்று பழகுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை.
நான் என் வாழ்க்கையில் இதுவரை கண்ட மாமனிதர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்களே. எஞ்சியோர் மானுடசேவைப் பணியாளர்கள். சிந்திப்பவனிடம் மட்டுமே எனக்குப் பேசுவதற்கு இருக்கிறது. என்னுடைய எளிமையான சபைநாகரீகம், ஒழுக்கம் ஆகியவற்றை எழுத்தாளர்களிடம் நான் போடுவதில்லை. எழுத்தாளர் என்னை மதிக்கிறாரா கும்பிடுகிறாரா என்று நான் கவனிப்பதில்லை. எழுத்தாளனிடம் திகழும் ஒன்று உண்டு. சிலரிடம் சுதந்திரம், சிலரிடம் பித்து, சிலரிடம் சிரிப்பு, சிலரிடம் திமிறல், சிலரிடம் கனிவு, சிலரிடம் கனவு…
ஏதோ ஒன்று அவனை எழுத்தாளனாக்குகிறது. அவனை பெருந்திரளில் ஒருவனாக, சாமானியனாக அல்லாமலாக்குகிறது. அதுதான் எனக்கு முக்கியம். அவர் என்னைப்போல் சலவைச்சட்டைபோட்டு உபச்சராமொழிகள் பேசி நான் மதிக்கும் ‘பெரியமனிதர்’ ஆக இருக்கவேண்டும் என்பதில்லை. குடித்துவிட்டு என்மேல் வாந்தி எடுத்த ஜான் ஆபிரகாம் நான் கண்ட மாமனிதர்களில் ஒருவர்தான்.
ஈ. ஆன்லைன்ல புக் வாங்கலாமே, எதுக்கு புத்தகக் கண்காட்சி?
ஆன்லைனில் புத்தகம் வாங்குபவர்கள் எவரும் இதைச் சொல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் மெய்யாகவே புத்தகக் காதலர்கள். இதைசொல்பவர்கள் புத்தக ஒவ்வாமை கொண்டவர்கள். வாசகர்களுக்கு புத்தகங்களை காண்பதே கொண்டாட்டம்தான். ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைவதென்பது தமிழ்ச்சமூகத்தின் மூளையை கண்கூடாக பார்ப்பதுபோல. நம் அறிவியக்கத்தையே ஒரே பார்வையில் பார்ப்பதுபோல.
உ. புத்தகங்கள்லாம் விலை அதிகம், மலிவா வித்தா நல்லது.
புத்தகங்களை மெய்யாக வாங்கும் எவரும் சொல்வதல்ல இது. இன்று ஒரு நல்ல சாப்பாட்டுக்கு எளிதாக ஐநூறு ரூபாய் ஆகிறது. வீட்டுக்குக் கொண்டுவந்தால் ஆயிரம். ஆயிரம் ரூபாய் விலையுள்ள ஒரு நூல் வாழ்நாள் முழுக்க நம்முடன் இருப்பது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்தகத்தின் விலை குறைத்து வைக்கப்பட்டால் அது கூடுதலாக விற்பதில்லை. அழகான நூல் விலை கூடுதலென்றாலும் அதுதான் விற்கும். அதுதான் புத்தகக் காதலர்களின் உலகம். வெளியே இருப்பவர்களுக்கு அது புரியாது
ஊ. தமிழ்லே தரமான நல்ல நூல்களே இல்லை. அதனாலே வாங்குறதில்லை…
சரி, ஆங்கிலத்தில் அண்மையில் என்னென்ன வாங்கி வாசித்தீர்கள் என்று இப்படிச் சொன்ன ஒருவரிடம் கேட்டேன். பெப்பேப்பே என்று ஏதோ சொல்லி சமாளித்தார். (பொதுவாக புத்தகம் பக்கம் தலைவைத்துப் படுக்காத கூட்டம் சொல்லும் பதில்தான். காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்கள். ஆம், முழுத்தொகுப்புகள்!) ஆங்கிலத்தில் பல தலைப்புகளில் உள்ள ஏராளமான நூல்கள் தமிழில் இல்லைதான். தமிழில் துறைசார் நூல்கள் பல தரமற்றவையும்தான். ஆனால் ஒருவர் அடிப்படை அறிவுத்தேடல் கொண்டவர் என்றால் தமிழில் வாங்கிக்கொண்டே இருக்கவேண்டிய அளவுக்கு நூல்கள் உள்ளன. தமிழ் வாழ்க்கையை தமிழிலக்கியம் வழியாகவே அறிந்துகொள்ள முடியும். தமிழ்ப்பண்பாடு சார்ந்த மகத்தான நூல்கள் ஏராளமாக உள்ளன. சைவம், வேதாந்தம் சார்ந்து தமிழில் ஏராளமான மூலநூல்கள் உள்ளன. முக்கியமான நூல்களின் மொழியாக்கங்கள் உள்ளன.
ஊ. புத்தகம் படிச்சா அறிவாளியா? அதனலே என்ன லாபம்?
அதை புத்தகம் படிக்காதவரிடம் சொல்லிப்புரியவைக்கவே முடியாது. புத்தகம் படிப்பவனுக்கு அதற்கான விடை தெரியும்
ஆகவே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுங்கள். திளையுங்கள்
சரஸ்வதி ராம்நாத்
பெங்களூரில் பாவண்ணனுடன் சென்று சரஸ்வதி ராம்நாத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். அன்று பிரேம்சந்தின் கோதான் நாவலை மொழியாக்கம் செய்துவிட்டு அதை சாகித்ய அக்காதமி வெளியிட நீண்டநாட்கள் எடுத்துக்கொள்வதைப் பற்றி கவலைப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். உடல்நிலையும் நலிந்திருந்தது. நாவல் பின்னர் வெளிவந்தது. அவர் அதன்பின் அதிகநாள் உயிர்வாழவில்லை.
பழைய மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவகை தவவாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை பொதுவாசிப்பில் ஈடுபட்ட பெரும்பான்மை அறிந்திருப்பதில்லை. தீவிரவாசிப்பு என அன்று சொல்லப்பட்ட சிற்றிதழ்ச்சூழலில் ஒரு சிறுஎண்ணிக்கையிலான நூல்களே வாசிக்கப்பட்டன. பெரும்பாலும் தமிழ் நவீனத்துவ நூல்கள். அதன்பின் அதையே பன்னிப்பன்னிப் பேசுவது, பூசலிடுவது.
நடுவே கிளாஸிக் என சொல்லத்தக்க படைப்புகள் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டன. அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள் அவை அச்சில் வரவே பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சில் வந்த நூல்கள் எவருமே கவனிக்காமல் மட்கி மறைந்தன. மறுபதிப்பு வருவதே இல்லை. தமிழின் முக்கியமான விமர்சகர்கள் எனப்பட்ட க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பிரமிள், வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் எவரும் மொழியாக்க நாவல்களைப் பற்றிப் பேசியதில்லை.
(அந்த நிலையை பெருமளவு மாற்ற என்னுடைய பங்களிப்பு முதன்மையானது என்னும் பெருமிதம் எனக்குண்டு. தமிழுக்கு வந்த பெரும்படைப்புகளான அக்னிநதி, ஆரோக்ய நிகேதனம், மண்ணும் மனிதரும், ஊமைப்பெண்ணின் கனவுகள், நீலகண்ட பறவையைத் தேடி, வாழ்க்கை ஒரு நாடகம், தர்பாரி ராகம், சிக்கவீரராஜேந்திரன், சாந்தலா, சதுரங்கக்குதிரை, கயிறு, ஏணிப்படிகள் போன்ற நாவல்களைப் பற்றிய முதல்கட்டுரைகளை பெரும்பாலும் நான் எழுதினேன். அவற்றைப் பற்றிய உரையாடலை தொடர்ச்சியாக நிலைநிறுத்தினேன். அவை பயனும் அளித்தன.ஒரு வாசகத் தலைமுறை உருவாகி வந்தது)
சரஸ்வதி ராம்நாத் தன் நூல் அச்சில் வருவதைக் காணும் இன்பம் அன்றி மொழியாக்கத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொண்டதில்லை. அன்று எழுதப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று மறைந்துவிட்டன. ஆனால் பெரும்படைப்புகளின் மொழியாக்கங்கள் நீடிக்கின்றன.
சரஸ்வதி ராம்நாத்
சரஸ்வதி ராம்நாத் – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா பதிப்பு ,கடிதம்
விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நடுவே சில மாதங்கள் கிடைக்காமலிருந்தது. என் நண்பர் ஒருவருக்காக நான் அதை வாங்கிப் பரிசளிக்கலாம் என நினைத்து தேடியபோது out of stock வந்துகொண்டிருந்தது. மின்னூல் கிடைத்தது. ஆனால் விஷ்ணுபுரம் பரிசளிக்க மிக உகந்த நாவல் என்பது என் எண்ணம். நான் எட்டு பிரதிகளுக்குமேல் வாங்கி பரிசளித்துள்ளேன்.
அதை வாங்கிக்கொள்பவர் வீணான ஒரு பரிசு என நினைக்க மாட்டார். உடனே அவர் படிக்காமல் இருக்கலாம். ஆனால் தூக்கி போட மாட்டார். அவருடைய ஷோகேஸில் அது எப்போதும் இருக்கும். அவர் வைணவர் என்றால் அவருடைய மதிப்புமிக்க பொருளாகவே அது அங்கே இருக்கும். நான் வாங்கிக்கொடுத்த விஷ்ணுபுரம் நாவலை ஒரு தொழிலதிபர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காலத்தில் படித்து முடித்து எனக்கு எழுதியிருந்தார். ஒரு பெரிய மனிதருக்கு எந்த பொருளை பரிசாகக்கொடுத்தாலும் அது பெரும்பாலும் வீணான பரிசுதான். விஷ்ணுபுரம் அப்படி கிடையாது.
விஷ்ணுபுரம் இன்றைக்கு ஒரு கிளாஸிக் அந்தஸ்தை அடைந்துவிட்டிருக்கிறது. இன்றைக்கு அதை வாசிப்பதென்பது ஒரு பெரிய தவம்போல. அதை வரிவரியாக ஓராண்டு எடுத்துக்கொண்டு வாசிக்கவேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாவலை இன்றைக்கு பார்க்கும்போது அது மேலும் கனமும் ஆழமும்கொண்டதாக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது.
விஷ்ணுபுரம் 25 ஆண்டு நிறைவை ஒரு விழாவாகவே கொண்டாடவேண்டும் என நினைக்கிறேன்
ஸ்ரீதர் ராமானுஜம்
அன்புள்ள ஸ்ரீதர்
விஷ்ணுபுரம் 25 பதிப்பை முதலில் என்னிடமிருந்து அருண்மொழி பெற்றுக்கொண்டாள். அது அவளுக்கு அந்த அளவுக்கு அணுக்கமான நூல். ஏனென்றால் அது அவளும் சேர்ந்தே எழுதியது. எழுதிய மை காயாமலேயே எடுத்து எடுத்து படித்தாள். வரிவரியாகச் செப்பனிட்டாள். சுருக்கி கொஞ்சம் வடிவையும் மாற்றியமைத்தாள். இன்று அவள் அதன் சாயல் இல்லாமலேயே இன்னொரு மொழிநடையும் பார்வையும் கொண்ட எழுத்தாளர் ஆகிவிட்டாள்.
25 ஆண்டு நிறைவு என்பது எனக்கு இந்தவகையில்தான் இனியதாகிறது.
ஜெ
எண்திசைத் தேடல்விஷ்ணுபுரம் வட்டம், தமிழ் விக்கி – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் கார்த்திக் சரவணன். பெங்களூரில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள், சொற்பொழிவின் இடையே உங்கள் கதைகளை மேற்கோள் காட்டுவார் .அதன் மூலம் தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு பற்றிய அறிமுகம் கிடைத்தது.வாங்கி வாசித்தேன்.
ஒரே வாசிப்பில் படித்து முடிக்க வேண்டிய புத்தகம் அல்ல அது. சில கதைகளை மறுவாசிப்பு செய்யும் போதெல்லாம் புது புது அனுபவம் ஏற்படுகிறது. தொடர்ந்து உங்கள் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். எழுகதிர், தேவி, வெள்ளையனை வாசித்து முடித்து விட்டேன். உங்கள் கதைகளின் வழியாக நாகர்கோவில் வட்டார வழக்கு மொழி நடையை மிகவும் ரசிக்கிறேன். அடுத்ததாக வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர் ஒருவருக்கு முதல் முறையாக இது போல கடிதம் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். உங்கள் எழுத்துக்கள் வழியாக எழுந்துவரும் ஜெயமோகன் எனக்கு ஆசானாக தரிசனம் தருகிறார், அறம் பேசுகிறார். சஞ்சலம் மிகுந்த தருணங்களில் எது சரி எது தவறு என உள்ளிருந்து உணர்த்துகிறார். மிக்க நன்றி ஜெ.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இணைய விரும்புகிறேன். இலக்கியம் சார்ந்த பணிகளில் ,விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க விரும்புகிறேன். வலைத்தளத்தில் தமிழ்விக்கி பற்றிய உங்கள் முயற்சியை அறிந்து கொண்டேன். நானும் பங்கேற்கலாமா? நிச்சயம் என்னால் முடியும். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
இப்படிக்கு,
கார்த்திக் சரவணன்.
*
அன்புள்ள கார்த்திக்
விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஒரு நட்புக்குழுமம் அல்லது நட்புச்சூழல் மட்டுமே. அமைப்பு அல்ல, ஆகவே உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. உறுப்பினர் அடையாளமே இல்லை. ஆர்வமிருந்தால் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். அங்கே நண்பர்களுடன் அறிமுகமாகலாம். நண்பர்கள் உங்களுக்கும் நீங்கள் நண்பர்களுக்கும் பழகும்போது நீங்களும் உள்ளே வந்துவிடுவீர்கள். சாம்பார் வாளியை கையில் தந்துவிடுவார்கள்.
தமிழ் விக்கி பங்களிப்பை பொறுத்தவரை அதன் பங்கேற்புக்காக உள்ள வழிகாட்டுநெறிகளை படியுங்கள். அதன்படி சில பதிவுகளை அனுப்புங்கள். சரிபார்த்து வலையேற்றுவோம். பதிவுகள் சம்பந்தமான விவாதங்களும் நிகழும். உங்கள் பதிவுகள் கண்டபின் உங்களை தொகுப்பாளர் பட்டியலிலும் சேர்ப்போம்.
அன்புடன்
ஜெ
எழுகதிரும் சினிமாவும்
அன்புள்ள ஜெ
எழுகதிர் தொகுப்பை படித்தேன். அண்மையில் வெளிவந்த முக்கியமான தொகுப்பு அது. இந்தக்கதைகளைப் பற்றி இப்படிச் சொல்வேன். வணிகக்கேளிக்கை எழுத்து உருவாக்கும் டெம்ப்ளேட்களை இலக்கியம் கையில் எடுக்கும்போது நிகழும் அற்புதம். உலகமெங்கும் நவீனத்துவம் காலியான பிறகு இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆப் த ரோஸ் தான் முதல் தொடக்கம் என நினைக்கிறேன். துப்பறியும் கதை, பேய்க்கதை என எல்லா டெம்ப்ளேட்டுகளிலும் அற்புதமான கிளாஸிக்குகள் எழுதப்படுகிறன.
எழுகதிர்கதையே சிறந்த உதாரணம். ஒரு அபாரமான திருட்டின் கதை. மிகமிக நுட்பமாக எழுதப்பட்டது. ஆனால் அதிலுள்ள அடிப்படையான மர்மம் என்பது அந்த கிழக்குநோக்கிய ஈர்ப்பு. அது ஏன்? அதை விளங்கிக்கொள்ளவே முடியாது. மகத்தான ஒரு கதை. திகைக்கவைக்கும் சாத்தியம் கொண்டது. ஒரு மிகச்சிறப்பான சினிமாவாக எடுக்க முடியும். அதற்கு ஏதாவது முயற்சிகள் நடைபெற்றனவா?
அன்புடன்
ஃபெலிக்ஸ் ஜான்
*
அன்புள்ள ஃபெலிக்ஸ்
புனைவுக்களியாட்டு கதைகளின்மேல் எல்லாருக்குமே ஆர்வமுள்ளது. ஆனால் இங்கே சினிமாக்கதைகளுக்கு இருக்கும் டெம்ப்ளேட்கள் அவற்றை அணுக தடையாக உள்ளன.
எழுகதிர் கதையை ஓடிடி சினிமாவாக ஆக்க ஒருவர் முன்வந்தார். ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் ஓடிடி அமைப்பின் தலைவருடன் பேசினேன். அவர் ‘கதைநாயகன் – வில்லன் – பிரச்சினை – சாகசம் – தீர்வு’ என்ற பாணியிலேயே அணுகினார். கதையில் அவர் இவற்றையெல்லாம் தேடி, இவற்றை புகுத்தும்படிச் சொன்னார். முயற்சி கைவிடப்பட்டது.
அவரை குறைசொல்ல முடியாது. நம் சினிமாப் பார்வையாளர்களில் கணிசமானவர்கள் அத்தகையவர்கள். சினிமா தெரியாத நம் விமர்சகர்களும், இலக்கியமும் தெரியாத இலக்கியவாதிகளும் அப்படியே அவர்களை வைத்திருக்கிறார்கள். (பொன்னியின் செல்வனிலேயே வில்லன் தெளிவாக இல்லை என விமர்சனம் வந்ததை கண்டிருப்பீர்கள்)
ஆகவே எனக்கும் அழுத்திப்பேசும் துணிவு இல்லை. சினிமா என்பது வணிகம். முதலீடு பிழைக்கட்டும் என்பதே என் கொள்கை.
ஜெ
January 4, 2023
யார் சார் வாசிக்கிறாங்க இப்பல்லாம்?
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
2022 ஆம் ஆண்டில் என்னென்ன நூல்களை வாசித்தேன் என்று தோராயமாக பார்த்தேன். ஒருமாதிரி நெஞ்சடைத்தது. வாசித்து தள்ளியிருக்கிறேன். ஏற்கனவே நான் வாசிப்பாளன், இப்போது தமிழ் விக்கி வாசிப்புக்கான ஒரு சாக்கு. தமிழ் விக்கியில் உள்ள எல்லா பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். அதைவிட, அதன்பொருட்டு தொடர்புள்ள பலநூல்களை வாசித்திருக்கிறேன்.
இவ்வாண்டு பதினெட்டாம்நூற்றாண்டு புராணங்கள் மட்டும் பன்னிரண்டு வாசித்திருக்கிறேன். சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் முந்நூறுக்கும் மேல். பல நூல்களை நாற்பது நிமிடங்களுக்குள் வாசித்திருக்கிறேன். தமிழில் கட்டுரைநூல்கள் மிக தொய்வான நடையில், திரும்பத்திரும்ப வரும் சொற்றொடர்களுடன், தேய்வழக்குகளுடன் அமைந்துள்ளன. என் வாசிப்பென்பது ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை அப்படியே ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் ஒரு கலைக்களஞ்சியப் பதிவாக ஆக்கிவிடுவது. எனக்கு முன்னரே அதுதான் வழக்கம். எழுதினாலொழிய எனக்குள் ஒரு அறிதல் சுருங்கி, செறிவாகி என்னுடையதாக ஆவதில்லை.
தொல்நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர வாசித்தவை வணிகநாவல்கள். பெரும்பாலும் அவற்றைப் பற்றிய குறிப்புகளுக்காக.நாளுக்கொரு நூலாவது வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். ஆச்சரியமான ஒரு புரிதல் வந்தது. பழைய வார இதழ் தொடர்கதைகளை நூல்வடிவமாக வாசிக்கும்போது அவை எத்தனை சுருக்கமானவை என வியப்பேற்படுகிறது. ஒரு வாரத்துக்கான ஓர் அத்தியாயம் சாதாரணமாக ஆயிரம் வார்த்தைகள், பலசமயம் எழுநூறு வார்த்தைகள். (வெண்முரசின் எல்லா அத்தியாயங்களும் சராசரியாக இரண்டாயிரம் வார்த்தைகள்) ஆகவே ஓராண்டு முழுக்க வெளிவந்த ஒரு நாவலை ஒரு மணிநேரத்தில் வாசிக்கமுடியும். நான் வாசந்தி எழுதிய எட்டு நாவல்களை ஒரே ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன்.
வெண்முரசு முடிந்தபின் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் ‘25000 பக்கம் சார், யார் எதிர்காலத்திலே வாசிப்பாங்க?” என்றார்
”ஏன்?” என்றேன்
“இது அவசர யுகம்சார். இப்பல்லாம் எல்லாரும் சுருக்கமா, நூறு வார்த்தைகளுக்குள்ள இருந்தாத்தான் வாசிக்கிறாங்க” என்றார்.
நான் “அப்படியா?” என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன்.
அன்று மாலை ஒரு விருந்து. விவேக் என்னும் நண்பரின் இல்லத்தில். அவருடைய 6 வயது மகள் என்னிடம் வந்து அவள் வாசித்த நூல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அமெரிக்கக் குழந்தைகளிடம் நம்மூர் குழந்தைகளிடம் இருக்கும் தயக்கம் இருப்பதில்லை. “ஜெயமோகன் தாத்தா, யூ நோ இன் திஸ் புக்…” என ஓயாத பேச்சு. அவள் வாசித்த புத்தகத்தை எனக்குக் காட்டினாள். முழுக்க எழுத்துக்களாலான முந்நூறு பக்க புத்தகம்.
“இத எப்ப்போது ஆரம்பித்தாய்?” என்றேன்.
“நேற்று… இன்றைக்கு முடிப்பேன்”
என்னருகே அந்த நண்பர் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்தேன், அவர் கொஞ்சம் திகைத்தவர்போலிருந்தார்.
அந்த குழந்தைதான் Stories Of the True நூலுக்கு ஒரு மதிப்புரை பேசி அனுப்பிய வர்ஷா.
திரும்பும்போது அந்நண்பர் சொன்னார் “என் பையன் படிக்கிறதே இல்லை சார்”
“எல்லா குழந்தைகளும் படிக்க வாய்ப்பில்லை. ஆனால் படிக்கிற குழந்தை என்றால் இந்தக் காலத்தில் அதுக்கு பக்க எண்ணிக்கை ஒரு கணக்கே இல்லை. என் அப்பா தலைமுறையை விட நான் வாசிச்ச வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி. என்னை விட என் மகனும் மகளும் வாசிக்கிற வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி…அது கூடிட்டேதான் போகும்” என்றேன்
”நீட்டி அடிச்சா கம்பராமாயணம் பொன்னியின் செல்வனிலே ஒரு பகுதிக்குத்தான் வரும். வெண்முரசு பொன்னியின் செல்வன் மாதிரி ஏழு மடங்கு….என்ன காரணம்? தொழில்நுட்பம். அது உருவாக்குற எழுதுற, வெளியிடுற, வாசிக்கிற வசதி” என்றேன். “மனுஷ மனசோட வேகம் ஜாஸ்தியாகிட்டே போகுது. விளையாட்டுகள், கேளிக்கைகள்லாம் அந்த வேகத்தை எட்டிப்பிடிக்கணும்னு ஓடுது. அந்த விளையாட்டுக்கள் கேளிக்கைகள் வழியாகவே மனுஷ மனம் இன்னும் வேகமா ஓடக்கத்துக்கிடுது… உங்க மகன் கம்ப்யூட்டர்கேம் ஆடுவானா?”
“ஆமா”
“அவன் ஆடுற வேகத்தை போன தலைமுறையிலே நினைச்சே பாக்கமுடியாது” என்று நான் சொன்னேன். “வாசிப்பும் அதைப்போலத்தான். எந்த ஒரு சமூகத்திலும் அறிவார்ந்த ஒரு வட்டம், கிரீம் மட்டும்தான் வாசிக்கும். நம்மூர்ல அது லட்சத்திலே நாலஞ்சுபேர். இங்கே அது நூத்துக்கு நாலஞ்சுபேர். அதான் இவங்க இப்டி இருக்காங்க, நாம அப்டி இருக்கோம்”
அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை
“வெண்முரசு யாருக்குன்னு கேட்டீங்கள்ல? இந்த பொண்ணுமாதிரி குழந்தைகளுக்காகத்தான்…அவங்களுக்கு இதெல்லாம் பத்தாது…அதிகம்போனா ஒருமாசத்திலே படிச்சிருவாங்க… இதை சுருக்கி ஞாபகம் வைச்சுக்கிற நவீன வழிமுறைகளும் அவங்களுக்குத் தெரியும்”
வெண்முரசின் இன்றைய தலைமுறை வாசகர்களைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்கள் வெண்முரசு 2014 ல் தொடங்கப்பட்டபோது பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் மிகவிரைவாக படித்து முடித்துவிடுகிறார்கள். சென்ற சில மாதங்களாகவே எனக்கு வாசகர்களின் அழுத்தம் கூடி வருகிறது. நான் புனைவு எழுதி நாளாகிறது என்கிறார்கள். “படிக்க ஒண்ணுமே இல்லை சார்” என்னும் கோரிக்கையை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
வெண்முரசு எழுதும்போது அதை எளிதில் கடந்துவிடமுடியாத ஒரு சொல்வெளி என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அதை உடைத்த நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன். கணிப்பொறியாளரான அவர் வெண்முரசை வாசிப்பதற்காக வேலையை விட்டுவிட்டு ஆறுமாதக்காலம் மாயவரத்தருகே தலைச்சங்காடு என்னும் தன் ஊரில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து வந்து எட்டிவிட்டு அடுத்த வேலையை தேடிக்கொண்டார். என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. வேறு யுகம், வேறுவகை வேகங்கள். சூர்யகுமார் என்னும் இளைஞரை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்தேன். வெண்முரசு வாசிக்கப்போறேன் சார் என்றார். பதினைந்து நாட்கள் ஆகவில்லை. நான்காவது பெருநாவலை முடித்துவிட்டதாக கடிதம் போட்டிருக்கிறார். இன்று இன்னொரு கடிதம், சோழராஜா என்னும் கல்லூரி மாணவர் எழுதியது.
பக்கங்களைக் கண்டு மலைப்பவர்கள் எவர் என பார்க்கிறேன். கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள். வார இதழ்களில் எழுநூறு வார்த்தைகொண்ட ஓர் அத்தியாயத்தை ஒரு வாரம் வைத்து வாசித்தவர்கள். இருநூறு பக்க நூலை பெரிய நூல் என நினைத்துப் பழகியவர்கள். இப்போது வாசிப்பை பெரும்பாலும் நிறுத்திவிட்டவர்கள். இன்னொரு சாரார், பொதுவாக வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்.
நான் நிறைவடைய இரண்டு விஷயங்கள். கன்யாகுமரி எக்ஸ்பிரஸுக்காக காத்து நாகர்கோயில் ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன். 25000 பக்கம் எழுதியிருக்கிறேன். இரண்டுவகையிலும் உருவாகி வரும் தலைமுறையுடன் இருக்கிறேன்.
யாருக்காக ? அறம், ஆங்கில விமர்சனம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

