Jeyamohan's Blog, page 650
January 5, 2023
சரஸ்வதி ராம்நாத்
பெங்களூரில் பாவண்ணனுடன் சென்று சரஸ்வதி ராம்நாத்தை அவருடைய இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். அன்று பிரேம்சந்தின் கோதான் நாவலை மொழியாக்கம் செய்துவிட்டு அதை சாகித்ய அக்காதமி வெளியிட நீண்டநாட்கள் எடுத்துக்கொள்வதைப் பற்றி கவலைப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். உடல்நிலையும் நலிந்திருந்தது. நாவல் பின்னர் வெளிவந்தது. அவர் அதன்பின் அதிகநாள் உயிர்வாழவில்லை.
பழைய மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவகை தவவாழ்க்கை வாழ்ந்தவர்கள். அவர்களை பொதுவாசிப்பில் ஈடுபட்ட பெரும்பான்மை அறிந்திருப்பதில்லை. தீவிரவாசிப்பு என அன்று சொல்லப்பட்ட சிற்றிதழ்ச்சூழலில் ஒரு சிறுஎண்ணிக்கையிலான நூல்களே வாசிக்கப்பட்டன. பெரும்பாலும் தமிழ் நவீனத்துவ நூல்கள். அதன்பின் அதையே பன்னிப்பன்னிப் பேசுவது, பூசலிடுவது.
நடுவே கிளாஸிக் என சொல்லத்தக்க படைப்புகள் இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டன. அவற்றை மொழியாக்கம் செய்தவர்கள் அவை அச்சில் வரவே பல ஆண்டுகள் காத்திருந்தனர். அச்சில் வந்த நூல்கள் எவருமே கவனிக்காமல் மட்கி மறைந்தன. மறுபதிப்பு வருவதே இல்லை. தமிழின் முக்கியமான விமர்சகர்கள் எனப்பட்ட க.நா.சு, வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, பிரமிள், வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் எவரும் மொழியாக்க நாவல்களைப் பற்றிப் பேசியதில்லை.
(அந்த நிலையை பெருமளவு மாற்ற என்னுடைய பங்களிப்பு முதன்மையானது என்னும் பெருமிதம் எனக்குண்டு. தமிழுக்கு வந்த பெரும்படைப்புகளான அக்னிநதி, ஆரோக்ய நிகேதனம், மண்ணும் மனிதரும், ஊமைப்பெண்ணின் கனவுகள், நீலகண்ட பறவையைத் தேடி, வாழ்க்கை ஒரு நாடகம், தர்பாரி ராகம், சிக்கவீரராஜேந்திரன், சாந்தலா, சதுரங்கக்குதிரை, கயிறு, ஏணிப்படிகள் போன்ற நாவல்களைப் பற்றிய முதல்கட்டுரைகளை பெரும்பாலும் நான் எழுதினேன். அவற்றைப் பற்றிய உரையாடலை தொடர்ச்சியாக நிலைநிறுத்தினேன். அவை பயனும் அளித்தன.ஒரு வாசகத் தலைமுறை உருவாகி வந்தது)
சரஸ்வதி ராம்நாத் தன் நூல் அச்சில் வருவதைக் காணும் இன்பம் அன்றி மொழியாக்கத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொண்டதில்லை. அன்று எழுதப்பட்ட எத்தனையோ நூல்கள் இன்று மறைந்துவிட்டன. ஆனால் பெரும்படைப்புகளின் மொழியாக்கங்கள் நீடிக்கின்றன.
சரஸ்வதி ராம்நாத்
சரஸ்வதி ராம்நாத் – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா பதிப்பு ,கடிதம்
விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நடுவே சில மாதங்கள் கிடைக்காமலிருந்தது. என் நண்பர் ஒருவருக்காக நான் அதை வாங்கிப் பரிசளிக்கலாம் என நினைத்து தேடியபோது out of stock வந்துகொண்டிருந்தது. மின்னூல் கிடைத்தது. ஆனால் விஷ்ணுபுரம் பரிசளிக்க மிக உகந்த நாவல் என்பது என் எண்ணம். நான் எட்டு பிரதிகளுக்குமேல் வாங்கி பரிசளித்துள்ளேன்.
அதை வாங்கிக்கொள்பவர் வீணான ஒரு பரிசு என நினைக்க மாட்டார். உடனே அவர் படிக்காமல் இருக்கலாம். ஆனால் தூக்கி போட மாட்டார். அவருடைய ஷோகேஸில் அது எப்போதும் இருக்கும். அவர் வைணவர் என்றால் அவருடைய மதிப்புமிக்க பொருளாகவே அது அங்கே இருக்கும். நான் வாங்கிக்கொடுத்த விஷ்ணுபுரம் நாவலை ஒரு தொழிலதிபர் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா காலத்தில் படித்து முடித்து எனக்கு எழுதியிருந்தார். ஒரு பெரிய மனிதருக்கு எந்த பொருளை பரிசாகக்கொடுத்தாலும் அது பெரும்பாலும் வீணான பரிசுதான். விஷ்ணுபுரம் அப்படி கிடையாது.
விஷ்ணுபுரம் இன்றைக்கு ஒரு கிளாஸிக் அந்தஸ்தை அடைந்துவிட்டிருக்கிறது. இன்றைக்கு அதை வாசிப்பதென்பது ஒரு பெரிய தவம்போல. அதை வரிவரியாக ஓராண்டு எடுத்துக்கொண்டு வாசிக்கவேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாவலை இன்றைக்கு பார்க்கும்போது அது மேலும் கனமும் ஆழமும்கொண்டதாக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது.
விஷ்ணுபுரம் 25 ஆண்டு நிறைவை ஒரு விழாவாகவே கொண்டாடவேண்டும் என நினைக்கிறேன்
ஸ்ரீதர் ராமானுஜம்
அன்புள்ள ஸ்ரீதர்
விஷ்ணுபுரம் 25 பதிப்பை முதலில் என்னிடமிருந்து அருண்மொழி பெற்றுக்கொண்டாள். அது அவளுக்கு அந்த அளவுக்கு அணுக்கமான நூல். ஏனென்றால் அது அவளும் சேர்ந்தே எழுதியது. எழுதிய மை காயாமலேயே எடுத்து எடுத்து படித்தாள். வரிவரியாகச் செப்பனிட்டாள். சுருக்கி கொஞ்சம் வடிவையும் மாற்றியமைத்தாள். இன்று அவள் அதன் சாயல் இல்லாமலேயே இன்னொரு மொழிநடையும் பார்வையும் கொண்ட எழுத்தாளர் ஆகிவிட்டாள்.
25 ஆண்டு நிறைவு என்பது எனக்கு இந்தவகையில்தான் இனியதாகிறது.
ஜெ
எண்திசைத் தேடல்விஷ்ணுபுரம் வட்டம், தமிழ் விக்கி – கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் கார்த்திக் சரவணன். பெங்களூரில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்கள், சொற்பொழிவின் இடையே உங்கள் கதைகளை மேற்கோள் காட்டுவார் .அதன் மூலம் தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு பற்றிய அறிமுகம் கிடைத்தது.வாங்கி வாசித்தேன்.
ஒரே வாசிப்பில் படித்து முடிக்க வேண்டிய புத்தகம் அல்ல அது. சில கதைகளை மறுவாசிப்பு செய்யும் போதெல்லாம் புது புது அனுபவம் ஏற்படுகிறது. தொடர்ந்து உங்கள் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். எழுகதிர், தேவி, வெள்ளையனை வாசித்து முடித்து விட்டேன். உங்கள் கதைகளின் வழியாக நாகர்கோவில் வட்டார வழக்கு மொழி நடையை மிகவும் ரசிக்கிறேன். அடுத்ததாக வெண்முரசு படித்துக்கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர் ஒருவருக்கு முதல் முறையாக இது போல கடிதம் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். உங்கள் எழுத்துக்கள் வழியாக எழுந்துவரும் ஜெயமோகன் எனக்கு ஆசானாக தரிசனம் தருகிறார், அறம் பேசுகிறார். சஞ்சலம் மிகுந்த தருணங்களில் எது சரி எது தவறு என உள்ளிருந்து உணர்த்துகிறார். மிக்க நன்றி ஜெ.
விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இணைய விரும்புகிறேன். இலக்கியம் சார்ந்த பணிகளில் ,விவாதங்களில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க விரும்புகிறேன். வலைத்தளத்தில் தமிழ்விக்கி பற்றிய உங்கள் முயற்சியை அறிந்து கொண்டேன். நானும் பங்கேற்கலாமா? நிச்சயம் என்னால் முடியும். ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
இப்படிக்கு,
கார்த்திக் சரவணன்.
*
அன்புள்ள கார்த்திக்
விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஒரு நட்புக்குழுமம் அல்லது நட்புச்சூழல் மட்டுமே. அமைப்பு அல்ல, ஆகவே உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. உறுப்பினர் அடையாளமே இல்லை. ஆர்வமிருந்தால் எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம். அங்கே நண்பர்களுடன் அறிமுகமாகலாம். நண்பர்கள் உங்களுக்கும் நீங்கள் நண்பர்களுக்கும் பழகும்போது நீங்களும் உள்ளே வந்துவிடுவீர்கள். சாம்பார் வாளியை கையில் தந்துவிடுவார்கள்.
தமிழ் விக்கி பங்களிப்பை பொறுத்தவரை அதன் பங்கேற்புக்காக உள்ள வழிகாட்டுநெறிகளை படியுங்கள். அதன்படி சில பதிவுகளை அனுப்புங்கள். சரிபார்த்து வலையேற்றுவோம். பதிவுகள் சம்பந்தமான விவாதங்களும் நிகழும். உங்கள் பதிவுகள் கண்டபின் உங்களை தொகுப்பாளர் பட்டியலிலும் சேர்ப்போம்.
அன்புடன்
ஜெ
எழுகதிரும் சினிமாவும்
அன்புள்ள ஜெ
எழுகதிர் தொகுப்பை படித்தேன். அண்மையில் வெளிவந்த முக்கியமான தொகுப்பு அது. இந்தக்கதைகளைப் பற்றி இப்படிச் சொல்வேன். வணிகக்கேளிக்கை எழுத்து உருவாக்கும் டெம்ப்ளேட்களை இலக்கியம் கையில் எடுக்கும்போது நிகழும் அற்புதம். உலகமெங்கும் நவீனத்துவம் காலியான பிறகு இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆப் த ரோஸ் தான் முதல் தொடக்கம் என நினைக்கிறேன். துப்பறியும் கதை, பேய்க்கதை என எல்லா டெம்ப்ளேட்டுகளிலும் அற்புதமான கிளாஸிக்குகள் எழுதப்படுகிறன.
எழுகதிர்கதையே சிறந்த உதாரணம். ஒரு அபாரமான திருட்டின் கதை. மிகமிக நுட்பமாக எழுதப்பட்டது. ஆனால் அதிலுள்ள அடிப்படையான மர்மம் என்பது அந்த கிழக்குநோக்கிய ஈர்ப்பு. அது ஏன்? அதை விளங்கிக்கொள்ளவே முடியாது. மகத்தான ஒரு கதை. திகைக்கவைக்கும் சாத்தியம் கொண்டது. ஒரு மிகச்சிறப்பான சினிமாவாக எடுக்க முடியும். அதற்கு ஏதாவது முயற்சிகள் நடைபெற்றனவா?
அன்புடன்
ஃபெலிக்ஸ் ஜான்
*
அன்புள்ள ஃபெலிக்ஸ்
புனைவுக்களியாட்டு கதைகளின்மேல் எல்லாருக்குமே ஆர்வமுள்ளது. ஆனால் இங்கே சினிமாக்கதைகளுக்கு இருக்கும் டெம்ப்ளேட்கள் அவற்றை அணுக தடையாக உள்ளன.
எழுகதிர் கதையை ஓடிடி சினிமாவாக ஆக்க ஒருவர் முன்வந்தார். ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் ஓடிடி அமைப்பின் தலைவருடன் பேசினேன். அவர் ‘கதைநாயகன் – வில்லன் – பிரச்சினை – சாகசம் – தீர்வு’ என்ற பாணியிலேயே அணுகினார். கதையில் அவர் இவற்றையெல்லாம் தேடி, இவற்றை புகுத்தும்படிச் சொன்னார். முயற்சி கைவிடப்பட்டது.
அவரை குறைசொல்ல முடியாது. நம் சினிமாப் பார்வையாளர்களில் கணிசமானவர்கள் அத்தகையவர்கள். சினிமா தெரியாத நம் விமர்சகர்களும், இலக்கியமும் தெரியாத இலக்கியவாதிகளும் அப்படியே அவர்களை வைத்திருக்கிறார்கள். (பொன்னியின் செல்வனிலேயே வில்லன் தெளிவாக இல்லை என விமர்சனம் வந்ததை கண்டிருப்பீர்கள்)
ஆகவே எனக்கும் அழுத்திப்பேசும் துணிவு இல்லை. சினிமா என்பது வணிகம். முதலீடு பிழைக்கட்டும் என்பதே என் கொள்கை.
ஜெ
January 4, 2023
யார் சார் வாசிக்கிறாங்க இப்பல்லாம்?
Stories of the True : Translated from the Tamil by Priyamvada
2022 ஆம் ஆண்டில் என்னென்ன நூல்களை வாசித்தேன் என்று தோராயமாக பார்த்தேன். ஒருமாதிரி நெஞ்சடைத்தது. வாசித்து தள்ளியிருக்கிறேன். ஏற்கனவே நான் வாசிப்பாளன், இப்போது தமிழ் விக்கி வாசிப்புக்கான ஒரு சாக்கு. தமிழ் விக்கியில் உள்ள எல்லா பதிவுகளையும் வாசித்திருக்கிறேன். அதைவிட, அதன்பொருட்டு தொடர்புள்ள பலநூல்களை வாசித்திருக்கிறேன்.
இவ்வாண்டு பதினெட்டாம்நூற்றாண்டு புராணங்கள் மட்டும் பன்னிரண்டு வாசித்திருக்கிறேன். சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் முந்நூறுக்கும் மேல். பல நூல்களை நாற்பது நிமிடங்களுக்குள் வாசித்திருக்கிறேன். தமிழில் கட்டுரைநூல்கள் மிக தொய்வான நடையில், திரும்பத்திரும்ப வரும் சொற்றொடர்களுடன், தேய்வழக்குகளுடன் அமைந்துள்ளன. என் வாசிப்பென்பது ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை அப்படியே ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வார்த்தைகளுக்குள் ஒரு கலைக்களஞ்சியப் பதிவாக ஆக்கிவிடுவது. எனக்கு முன்னரே அதுதான் வழக்கம். எழுதினாலொழிய எனக்குள் ஒரு அறிதல் சுருங்கி, செறிவாகி என்னுடையதாக ஆவதில்லை.
தொல்நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர வாசித்தவை வணிகநாவல்கள். பெரும்பாலும் அவற்றைப் பற்றிய குறிப்புகளுக்காக.நாளுக்கொரு நூலாவது வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். ஆச்சரியமான ஒரு புரிதல் வந்தது. பழைய வார இதழ் தொடர்கதைகளை நூல்வடிவமாக வாசிக்கும்போது அவை எத்தனை சுருக்கமானவை என வியப்பேற்படுகிறது. ஒரு வாரத்துக்கான ஓர் அத்தியாயம் சாதாரணமாக ஆயிரம் வார்த்தைகள், பலசமயம் எழுநூறு வார்த்தைகள். (வெண்முரசின் எல்லா அத்தியாயங்களும் சராசரியாக இரண்டாயிரம் வார்த்தைகள்) ஆகவே ஓராண்டு முழுக்க வெளிவந்த ஒரு நாவலை ஒரு மணிநேரத்தில் வாசிக்கமுடியும். நான் வாசந்தி எழுதிய எட்டு நாவல்களை ஒரே ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன்.
வெண்முரசு முடிந்தபின் அமெரிக்கா சென்றிருந்தபோது ஒரு நண்பர் என்னிடம் ‘25000 பக்கம் சார், யார் எதிர்காலத்திலே வாசிப்பாங்க?” என்றார்
”ஏன்?” என்றேன்
“இது அவசர யுகம்சார். இப்பல்லாம் எல்லாரும் சுருக்கமா, நூறு வார்த்தைகளுக்குள்ள இருந்தாத்தான் வாசிக்கிறாங்க” என்றார்.
நான் “அப்படியா?” என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன்.
அன்று மாலை ஒரு விருந்து. விவேக் என்னும் நண்பரின் இல்லத்தில். அவருடைய 6 வயது மகள் என்னிடம் வந்து அவள் வாசித்த நூல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அமெரிக்கக் குழந்தைகளிடம் நம்மூர் குழந்தைகளிடம் இருக்கும் தயக்கம் இருப்பதில்லை. “ஜெயமோகன் தாத்தா, யூ நோ இன் திஸ் புக்…” என ஓயாத பேச்சு. அவள் வாசித்த புத்தகத்தை எனக்குக் காட்டினாள். முழுக்க எழுத்துக்களாலான முந்நூறு பக்க புத்தகம்.
“இத எப்ப்போது ஆரம்பித்தாய்?” என்றேன்.
“நேற்று… இன்றைக்கு முடிப்பேன்”
என்னருகே அந்த நண்பர் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்தேன், அவர் கொஞ்சம் திகைத்தவர்போலிருந்தார்.
அந்த குழந்தைதான் Stories Of the True நூலுக்கு ஒரு மதிப்புரை பேசி அனுப்பிய வர்ஷா.
திரும்பும்போது அந்நண்பர் சொன்னார் “என் பையன் படிக்கிறதே இல்லை சார்”
“எல்லா குழந்தைகளும் படிக்க வாய்ப்பில்லை. ஆனால் படிக்கிற குழந்தை என்றால் இந்தக் காலத்தில் அதுக்கு பக்க எண்ணிக்கை ஒரு கணக்கே இல்லை. என் அப்பா தலைமுறையை விட நான் வாசிச்ச வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி. என்னை விட என் மகனும் மகளும் வாசிக்கிற வேகமும் பக்கங்களும் ஜாஸ்தி…அது கூடிட்டேதான் போகும்” என்றேன்
”நீட்டி அடிச்சா கம்பராமாயணம் பொன்னியின் செல்வனிலே ஒரு பகுதிக்குத்தான் வரும். வெண்முரசு பொன்னியின் செல்வன் மாதிரி ஏழு மடங்கு….என்ன காரணம்? தொழில்நுட்பம். அது உருவாக்குற எழுதுற, வெளியிடுற, வாசிக்கிற வசதி” என்றேன். “மனுஷ மனசோட வேகம் ஜாஸ்தியாகிட்டே போகுது. விளையாட்டுகள், கேளிக்கைகள்லாம் அந்த வேகத்தை எட்டிப்பிடிக்கணும்னு ஓடுது. அந்த விளையாட்டுக்கள் கேளிக்கைகள் வழியாகவே மனுஷ மனம் இன்னும் வேகமா ஓடக்கத்துக்கிடுது… உங்க மகன் கம்ப்யூட்டர்கேம் ஆடுவானா?”
“ஆமா”
“அவன் ஆடுற வேகத்தை போன தலைமுறையிலே நினைச்சே பாக்கமுடியாது” என்று நான் சொன்னேன். “வாசிப்பும் அதைப்போலத்தான். எந்த ஒரு சமூகத்திலும் அறிவார்ந்த ஒரு வட்டம், கிரீம் மட்டும்தான் வாசிக்கும். நம்மூர்ல அது லட்சத்திலே நாலஞ்சுபேர். இங்கே அது நூத்துக்கு நாலஞ்சுபேர். அதான் இவங்க இப்டி இருக்காங்க, நாம அப்டி இருக்கோம்”
அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை
“வெண்முரசு யாருக்குன்னு கேட்டீங்கள்ல? இந்த பொண்ணுமாதிரி குழந்தைகளுக்காகத்தான்…அவங்களுக்கு இதெல்லாம் பத்தாது…அதிகம்போனா ஒருமாசத்திலே படிச்சிருவாங்க… இதை சுருக்கி ஞாபகம் வைச்சுக்கிற நவீன வழிமுறைகளும் அவங்களுக்குத் தெரியும்”
வெண்முரசின் இன்றைய தலைமுறை வாசகர்களைப் பார்க்கிறேன். பெரும்பாலானவர்கள் வெண்முரசு 2014 ல் தொடங்கப்பட்டபோது பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் மிகவிரைவாக படித்து முடித்துவிடுகிறார்கள். சென்ற சில மாதங்களாகவே எனக்கு வாசகர்களின் அழுத்தம் கூடி வருகிறது. நான் புனைவு எழுதி நாளாகிறது என்கிறார்கள். “படிக்க ஒண்ணுமே இல்லை சார்” என்னும் கோரிக்கையை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
வெண்முரசு எழுதும்போது அதை எளிதில் கடந்துவிடமுடியாத ஒரு சொல்வெளி என்னும் எண்ணம் எனக்கிருந்தது. அதை உடைத்த நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன். கணிப்பொறியாளரான அவர் வெண்முரசை வாசிப்பதற்காக வேலையை விட்டுவிட்டு ஆறுமாதக்காலம் மாயவரத்தருகே தலைச்சங்காடு என்னும் தன் ஊரில் அமர்ந்து ஒரே மூச்சில் படித்து வந்து எட்டிவிட்டு அடுத்த வேலையை தேடிக்கொண்டார். என்னால் அதை நினைத்தே பார்க்கமுடியவில்லை. வேறு யுகம், வேறுவகை வேகங்கள். சூர்யகுமார் என்னும் இளைஞரை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்தேன். வெண்முரசு வாசிக்கப்போறேன் சார் என்றார். பதினைந்து நாட்கள் ஆகவில்லை. நான்காவது பெருநாவலை முடித்துவிட்டதாக கடிதம் போட்டிருக்கிறார். இன்று இன்னொரு கடிதம், சோழராஜா என்னும் கல்லூரி மாணவர் எழுதியது.
பக்கங்களைக் கண்டு மலைப்பவர்கள் எவர் என பார்க்கிறேன். கொஞ்சம் வயது முதிர்ந்தவர்கள். வார இதழ்களில் எழுநூறு வார்த்தைகொண்ட ஓர் அத்தியாயத்தை ஒரு வாரம் வைத்து வாசித்தவர்கள். இருநூறு பக்க நூலை பெரிய நூல் என நினைத்துப் பழகியவர்கள். இப்போது வாசிப்பை பெரும்பாலும் நிறுத்திவிட்டவர்கள். இன்னொரு சாரார், பொதுவாக வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்.
நான் நிறைவடைய இரண்டு விஷயங்கள். கன்யாகுமரி எக்ஸ்பிரஸுக்காக காத்து நாகர்கோயில் ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன். 25000 பக்கம் எழுதியிருக்கிறேன். இரண்டுவகையிலும் உருவாகி வரும் தலைமுறையுடன் இருக்கிறேன்.
யாருக்காக ? அறம், ஆங்கில விமர்சனம்கொத்தமங்கலம் சீனு
கொத்தமங்கலம் சீனு என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் வழியாக படித்தபோது வியப்பாக இருந்தது. இருபது படங்களில் நடித்திருக்கிறார். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் கேளிக்கைத் துறையில் புகழுடன் இருந்திருக்கிறார்.அதைவிட துணைநடிகர் நிலையில் இருந்த கொத்தமங்கலம் சுப்பு இவரை விட புகழுடன் அறியப்படுகிறார். காரணம், கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதினார்- தில்லானா மோகனாம்பாள்.
கொத்தமங்கலம் சீனு – தமிழ் விக்கி
Masterly! – An Interview with Jeyamohan
You have dedicated yourself completely to literature and are pursuing writing almost as a form of Yoga, a sort of writer’s Dharma if you will. It seems as if you had started early down this path. When did you first realize that this was your chosen path? Can you talk a bit about this journey?
யோக முகாம், கடிதம்
அந்தியூர் யோகப் பயிற்சி முகாமுக்கு பெயர் கொடுத்த பின், செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற கவலை இருந்து கொண்டேயிருந்தது. அதற்கேற்றாற்போல் வகுப்பு தொடங்குமுன் இரண்டு நாட்கள் கடுமையான உடல் வலி மற்றும் தலைவலி. மருந்துகள் எடுத்துவிட்டுதான் பேருந்து ஏறினேன்.
ஆனால் முகாம் வந்து சேர்ந்ததும் அப்படி ஒரு உடல் வலி இருந்தது நினைவில் எழவே இல்லை. சிரிப்பும் கொண்டாட்டமும் தான்!
யோகப் பயிற்சி வகுப்புகள், மிக அருமையாக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் அவர்கள் அடிப்படை விளக்கங்களை எளிமையாகவும் தெளிவாகவும் அழகு தமிழில் விளக்கினார். வகுப்புகளில் இப்படி தூய தமிழ் கேட்டு நெடு நாள் ஆகி விட்டது. மற்ற மரபுகளை, குறிப்பாக நவீன மருத்துவத்தை அவர் discount செய்யவில்லை. அதுவே இந்த யோகப்பயிற்சியின் மேல் மிகுந்த மதிப்பை உருவாக்கியது .
எந்த ஒரு அமர்வும் ஒன்றரை நேரத்திற்கு மேல் இல்லை. போதுமான இடைவேளை கொடுக்கப்பட்டது.மூன்று நாள் வகுப்புகளிலும் Learning மட்டும்தான் இருந்தது, Training என்பது இல்லை. தொடர்ந்து பயிற்சி செய்வது ஒருவரின் சுய ஒழுக்கத்தில் வருவது என்பது சொல்லாமல் சொல்லப்பட்டது.
சனிக்கிழமை காலை வகுப்பை எப்போது தொடங்கலாம் என்று ஆசிரியர் கேட்டபோது, காலையில் குளித்துவிட்டு வர வேண்டுமா என்று எதிர்க்கேள்வி கேட்கப்பட்டது. அப்படியெல்லாம் அவசியம் இல்லை என்று ஆசிரியர் சொல்லிவிட்டதால் (ஆஹா..இவரல்லவா ஆசிரியர்!) அடுத்த நாள் காலை குளிரில் ஏழு மணிக்கே வகுப்புகள் தொடங்கியது.
ஞாயிறு காலை பைபிள் வசனத்துடன் வகுப்பைத் தொடங்கியது ஒரு முத்தாய்ப்பு!
வெள்ளி சனி இரவுகளில் உணவுக்குப்பின் எங்கள் அறையில் தி.ஜானகிராமன், ஆதவன், ப.சிங்காரம் முதல் ஆல்பெர் காம்யு, நீகாஸ் கசந்த்சாகீஸ் வரை பல்வேறு எழுத்தாளர்கள் அலசப்பட்டார்கள். உண்மையிலேயே, இப்படி ஒரு வாய்ப்பு அமைவது அரிதினும் அரிது. அந்த இரவுகள் எங்களுக்கு அருளப்பட்டவை!
முகாமில் இருந்த நூலகம் தாறுமாறாகப் பயன்படுத்தப்பட்டது. நான் லயன் காமிக்ஸ் -இல் ஒரு புத்தகம் படித்தேன். 1960 – களில் கல்கி இதழில் அரு .ராமநாதன் எழுதி தொடர்கதையாக வந்த குண்டுமல்லிகை bind செய்யப்பட்டு கிடைத்தது. அதில் இருந்த துணுக்குகள் வழி கல்கி இதழ் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியின் பக்கம் சாய்ந்திருந்தது தெரிகிறது.
ஒரு மதிய வேளையில் மகாபாரதம் படங்களாக விரிந்த ஒரு புத்தகத்தை வைத்து நண்பர் ஒருவர் குழந்தைகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார். அதில் பீஷ்மர் திருதராஷ்டிரனுக்கும் , பாண்டுவுக்கும் பெண் தேடி அம்பை, அம்பிகை, அம்பாலிகையை சிறையெடுக்கச் சென்று கொண்டிருந்தார்.
மூன்று நாட்களிலும் வழங்கப்பட்ட உணவைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். எந்த ஒரு உயர்தர சைவ உணவகத்தையும் விட மிக மிக சுவையான உணவு. பல வகை உணவுகளை கொடுத்து தேர்வு செய்யும் வாய்ப்பை உண்பவனுக்கு கொடுக்கா விட்டாலே, உணவு சுவையாகி விடக்கூடும் என்று தோன்றுகிறது.
அந்தியூர் மணியண்ணன் மிகச் சிறப்பாக இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தது மட்டுமன்றி , நிறைய இலக்கியம் பேசினார். அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல. அரசியல் மேடைப்பேச்சுக்குரிய குரல் அவருடையது!
ஐயமே இல்லை, இந்த முகாமில் கலந்து கொண்ட எல்லோருக்குமே இனிய நினைவுகளாக மட்டுமே இந்த அனுபவம் இருக்கும்.
இதை நிகழ்த்திட உதவிய அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
உதயசங்கர்
அன்புள்ள உதயசங்கர்
சென்ற ஆண்டில் நண்பர்களுடன் பேசி முடிவெடுத்த ஒன்று இந்நிகழ்வுத்தொடர்.இந்நிகழ்வுகளின் நோக்கம் என்பது ஒரு நண்பர்குழாமை உருவாக்குவதுதான். கொரோனா காலகட்டத்தின் சோர்வு, தனிமை, அவநம்பிக்கை ஆகியவற்றை வெல்ல நண்பர்களை நாளும் இணையத்தில் சந்தித்ததும், பலவகை கூட்டுச்செயல்பாடுகளும் உதவின. இணையான ரசனைகொண்ட நநண்பர்களின் கூட்டம் இன்று இலக்கியம், ஆன்மிகம் அனைத்துக்கும் தேவையாகிறது. ஏனென்றால் வாசிப்பதனாலேயே, சிலவற்றை தேடுவதனாலேயே நாம் தனிமைகொண்டிருக்கிறோம். அத்தனிமையை வெல்லவே இந்தக் கூடுகைகள். அந்நட்புச்சூழல் அளிக்கும் மகிழ்வு புதியவை கற்க மிக உதவியான ஒன்று
ஜெ
தத்துவக் கல்வி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
சீரான இடைவெளிகளில் என் ஆசிரியர்கள் கனவில் வருகின்றனர். அத்தகைய கனவுகள் மட்டும் ஆண்டுக்கணக்கில் நினைவில் தங்கிவிடுகின்றன. ராமகிருஷ்ணருடன் வாலிபால் விளையாடிய கனவெல்லாம் 15 வருடங்களுக்குப் பின்னும் நினைவிருக்கிறது. குமரித்துறைவி வெளியான அன்றைக்கு முந்தைய இரவு கண்ட கனவில் உங்கள் அருகில் உட்கார்ந்து , நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தத்துவ வகுப்பில் வேதங்கள் குறித்து நீங்கள் பேசிய இரவில் அக்கனவு கிட்டத்தட்ட நிஜமாகிவிட்டது (இடமும், அருகில் இருந்தவர்களும் மட்டும் வேறு).
இன்று காலை வந்த கனவு அதற்கு இணையான உள எழுச்சியை அளித்தது. இரண்டாம் தத்துவ வகுப்பில் நான் கலந்துகொள்வது போன்ற கனவு. பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. உங்களோடு ஒரு கேள்வி பதில் உரையாடல் தான். அதற்கே மூச்சு வாங்கி எழுந்துவிட்டேன்.
ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்பும் எடுத்த குறிப்புகளை மீண்டும் படித்தேன். அடுத்த வகுப்புக்கு முன் படிக்க வேண்டும் என்று சில புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறேன் (இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், சுகுமார் அழிக்கோடின் ‘தத்வமஸி’ மற்றும் சில). இது தவிர தொடக்கநிலை மாணவன் செய்ய வேண்டிய வீட்டுப்பாடங்கள் வேறு என்ன?
-பன்னீர் செல்வம்.
*
அன்புள்ள பன்னீர்செல்வம்
கனவு நல்லது. நனவில் பயில்வது ஆழுள்ளத்துக்கு இறங்குகிறது என்பதற்கான சான்று.
ஆனால் தத்துவ வகுப்பின் தொடர்கல்வி என்பது மேலும் நூல்களை வாசிப்பது அல்ல. அவ்வகுப்பில் பயின்றவை ஒரு சொல்லும் மறக்காமலிருக்கும்படி கிட்டத்தட்ட நெட்டுரு போடுவது. கால அட்டவணை, தத்துவப் பரிணாம அட்டவணை, கலைச்சொற்கள் எல்லாம் நினைக்காமலேயே நினைவிலெழவேண்டும். ஒரு சொல் சற்று தாமதமாகுமென்றாலும் தொடர்கல்வி தொடர்சிந்தனை இரண்டும் தடைபடும்
ஜெ
—————————————————
January 3, 2023
சாதிகள் வரையறை செய்யப்பட்ட வரலாறு
ஐயா வணக்கம்!
எனக்கு, நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம்! இதுபற்றி எவ்வளவோ தேடினாலும் விடைதான் கிடைக்கவில்லை. கண்டிப்பாக தங்களால் (மட்டுமே) முடியுமென்றே, இந்த மின்னஞ்சலை எழுதுகின்றேன்.
இந்த சாதி, இந்தப் பிரிவுக்குள்தான் வருகிறது என்பதை நம் சுதந்திர இந்தியாவில், ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவந்தவர்கள் யார் யார்? எப்போது? அந்த அமைப்பில் எத்தனை பேர் இருந்தார்கள்? அவர்களுக்கெப்படி இந்த புள்ளி விபரங்கள் அனைத்தும் தெரியும்? உதாரணமாக, வெள்ளாளர் இனத்தில், சைவ வெள்ளாளர்கள் OC என்றும், வீரகொடி வெள்ளாளர் BC என்றும், இசை வெள்ளாளர் MBC என்றெல்லாம் வகுத்தது யார்? இப்படி ஒவ்வொரு சாதிக்குள்ளும் எத்தனையோ பிரிவுகள் உள்ளது. இதையெல்லாம் யார் வகுத்தார்கள்? எப்படி வகுத்தார்கள்? அவர்கள் வகுத்தவைகள் எல்லாம் சரியா?
இன்னும் இந்த சாதியக்கட்டுகள் இருப்பதை எப்படி மாற்றலாம் என்னும் திட்டங்கள் எல்லாம் நம் அரசியல் அமைப்பில் உள்ளதா? அப்படி இருந்தால், ஏன் கட்சிப் படிவங்களில் சாதிய ஓட்டுக்கள் பற்றியெல்லாம் கேட்கும்படியான கேள்விகள் உள்ளன? இன்னும் சாதி பார்த்தே வேட்பாளர்கள் நிறுத்தும் போக்கைத் தாங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? உண்மையில் நம் இந்தியா அல்லது தமிழகம் சாதியத்தில் இருந்து வெளிவரும் சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா? இந்நிலை மாற வாய்ப்புள்ளதா?
தயவுகூர்ந்து விளக்க வேண்டுகிறேன்!
இப்படிக்கு,
செ. இராசமாணிக்கம்.
எட்கார் தர்ஸ்டன்அன்புள்ள இராசமாணிக்கம்,
மிக விரிவாகவே இதற்கு பதில் சொல்லவேண்டும். ஏற்கனவே நிறையவே சொல்லிவிட்டேன். அவை நூலாகவும் வெளிவந்துள்ளன. எளிதில் வாங்கி வாசிக்க முடியும்.
ஏற்கனவே சொன்னவற்றை மீண்டும் சுருக்கமாக சொல்கிறேன். ஏன், எவ்வாறு என்னும் ஐயமிருந்தால் நூலையே வாசிக்கவும்.
சாதி பற்றி நமக்கு சில பொதுவான புரிதல்கள் தேவை.
அ. சாதி எவராலும் உருவாக்கப்பட்டது அல்ல. அது சமூகம் உருவாகி வந்த பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் அமைப்பு.
ஆ. பிறப்பு அடிப்படையில் மக்களை பிரித்து, மேல்கீழாக அடுக்கும் போக்கு என்பது நிலவுடைமைச் சமூகத்தின் இயல்பு. அச்சமூகத்தின் உற்பத்திமுறைக்கு அவசியமானதாக இருந்தது. அந்த போக்கு இல்லாத சமூகமே உலகிலெங்கும் இல்லை. ஆகவே சாதிபோன்ற அமைப்பு எல்லா நாட்டிலும் இருந்தது. வேறுவகைகளில் நீடிக்கிறது.
இ. சாதிகள் என்பவை பழங்குடிகளின் இனக்குழுக்களாக இருந்தவை. பழங்குடிக்குழுக்கள் சமூகமாக இணைந்தபோது அச்சமூகத்திற்குள் இனக்குழுக்கள் சாதிகளாயின. வென்றசாதி மேல், சிறிய சாதிகள் கீழ் என ஆகியது.
இ. இந்திய சாதியமைப்பு எப்போதுமே மாறாததாக இருந்ததில்லை. அடித்தளச் சாதிகள் மேலெழுந்து ஆட்சியமைத்து அரசகுடிகள் ஆகியுள்ளன. ஆண்ட சாதிகள் அடிமைப்பட்டு கீழ்சாதிகளும் ஆகியுள்ளன.
*
இவற்றின் அடிப்படையில் உங்கள் கேள்விகளுக்கான விடை.
இந்தியாவிற்கு பிரிட்டிஷார் வந்தபோது இங்குள்ள சாதியமைப்பைப் புரிந்துகொள்ள முயன்றனர். நிர்வாகத்திற்கு அது தேவையாகியது. தொடக்ககாலத்தில் சாதிமுறை பற்றி ஐரோப்பிய மதப்பரப்புநர்கள் ஆராய்ந்து முதற்கட்ட பதிவுகளை உருவாக்கினர். அதன்பின் பிரிட்டிஷ் ஆட்சியர்கள் மானுவல்கள் எனப்படும் நிர்வாகக்குறிப்புகளை எழுதியபோது சாதிகளைப் பதிவுசெய்தனர்.
ஜே.ஹெச்.நெல்சன் எழுதிய மதுரா கண்ட்ரி மானுவல் ஓர் உதாரணம். (இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது) அதில் சாதிகளைப் பற்றிய விரிவான குறிப்பை அளித்துள்ளார். ஆனால் அவர் சாதிகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் அவற்றின் இயல்புகளையும் பற்றி பிரிட்டிஷ் அரசில் பணியாற்றியவர்களிடம் விசாரித்து எழுதியவைதான் அவை.
அதன்பின் சமூகவியல் ஆய்வாளர்கள் சாதிகளைப் பற்றி பதிவுசெய்தனர். எட்கார் தர்ஸ்டன் விரிவாக தென்னகச் சாதிகளை பற்றி பதிவுசெய்தார். அவருடைய ஏழு பகுதிகள் கொண்ட மாபெரும் நூலான Castes and Tribes of Southern India ஒரு மிகப்பெரிய ஆவணத்தொகுப்பு. (கே.ரங்காச்சாரியுடன் இணைந்து எழுதியது) 1909 ல் இந்நூல் வெளிவந்தது. இன்றுவரைக்கும்கூட இந்நூல் ஒரு உசாத்துணை நூலாக உள்ளது. இணையத்தில் மின்னூலாகக் கிடைக்கிறது.
அதன்பின் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பிரிட்டிஷார் நடத்தினர் 1881 ல் இந்தியாவில் முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தது. அதில்தான் இன்ன சாதி இன்ன வகையானது, இன்ன சாதி இன்னசாதிக்கு கீழானது என்பது உறுதியாகப் பதிவுசெய்யப்பட்டது. அதற்கு முன் ஒரு சாதி இன்னொரு ஊருக்குச் சென்று இன்னொரு தொழில் செய்தால் அதன் நிலை மாறிவிட வாய்ப்பிருந்தது. ஏராளமான தரவுகள் உள்ளன.
உதாரணமாக, சோழ அரசு வீழ்ச்சியடைந்தபோது போர்ச்சாதிகள் சேரநாட்டுக்கு குடிபெயர்ந்து நெசவுத் தொழில் செய்தனர். அவர்கள் கைக்கோளமுதலியார் என அறியப்பட்டனர். இதை அ.கா.பெருமாள் பதிவுசெய்துள்ளார். இப்படி பல சாதிகளின் இடம் மாறியுள்ளது. பிரிட்டிஷ் கணக்கெடுப்புக்கு பின் அது இயலாதது ஆகியது.
பிரிட்டிஷ் கணக்கெடுப்பில் ஒவ்வொரு சாதியும் தங்கள் இடம் என்ன, இயல்பு என்ன என அவர்களே கூறியதன் அடிப்படையில்தான் பதிவுசெய்யப்பட்டது. 1911 ல் நடந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுக்க பல சாதிகள் இணைந்து ஒரே பெயரை பதிவுசெய்துகொண்டன. ஒரேபெயரில் சாதியை பதிவுசெய்யவேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்ட்ன. ஏன் என்றால் அப்போது ஜனநாயகத்தில் என்ணிக்கையின் பலம் என்ன என தெரிய ஆரம்பித்திருந்தது .அப்படி ஒன்று திரள்வது அதிகாரம் அடைய உதவியது.
அப்படி ஒரு சாதி தன்னை ஒருவகையில் குறிப்பிட்டபோது மற்ற சாதிகள் அதை எதிர்த்தன. இன்றைக்கும்க்கூட தேவேந்திரகுல வேளாளர் அவ்வாறு தங்களைச் சொல்லிக்கொள்வதை மற்ற வேளாளர்கள் எதிர்க்கிறார்கள் அல்லவா அதைப்போல.சில சாதிகள் தங்களை ஷத்ரியர் என சொல்லிக்கொண்டபோது மற்ற சாதிகள் எதிர்த்தன. இந்தப்பூசல் பல ஆண்டுக்காலம் நடைபெற்றது.
ஆங்கில ஆட்சியாளர்கள் அவர்கள் எடுத்த மூன்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் வழியாக திரட்டிய செய்திகளைக் கொண்டு சாதிகளின் இயல்பையும் இடத்தையும் முடிவுசெய்தனர். சாதிகளின் சமூக இடம், பொருளாதாரம் ஆகியவை அதற்கு கருத்தில்கொள்ளப்பட்டன. சாதிகளின் கோரிக்கையும் கருத்தில்கொள்ளப்பட்டது. தொடக்கத்தில் எல்லா சாதியும் தங்களை உயர்சாதி என்று சொல்ல விரும்பின. 1921 ல் சாதிவாரி இட ஒதுக்கீடு வர ஆரம்பித்த பிறகு எல்லா சாதிகளும் தங்களை பிற்பட்ட சாதி என சொல்ல விரும்பின.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பல சாதிகள் பிற்பட்ட சாதிகளாக அறிவிக்கப்பட்டன. அது இடஒதுக்கீட்டை அடைவதற்காக அரசியல் வழியாக பெற்ற அடையாளம். தேவேந்திரகுல வேளாளர் இன்று தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம், தாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்கிறார்கள். எப்படியும் இருபதாண்டுகளில் அவர்கள் அந்த அடையாளத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
இப்படித்தான் சாதிகளின் அடையாளங்கள் சென்ற இருநூறாண்டுகளாக பதிவுசெய்யப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டன
*
சாதிகள் இன்று இந்தியாவில் முன்பு போல இறுக்கமான சமூகக் கட்டுமானங்கள் அல்ல. ஆனால் அவை கூட்டு அடையாளங்களாக ஆகியிருக்கின்றன. மக்கள் தங்களை பெரிய சமூகக்குழுக்களாக திரட்டிக்கொள்ளவும், அரசியல் அதிகாரத்தையும் பொருளியல் அதிகாரத்தையும் அடையவும் அவை உதவுகின்றன. சாதியின் சமூகம் சார்ந்த இறுக்கம் போய்விட்டது. ஆனால் சாதியின் அரசியல் முக்கியத்துவம் வலுவாகி வருகிறது.
அதன் விளைவாகவே குற்றம்சாட்டும் அரசியல் உருவாகியுள்ளது. விசித்திரமான ஓர் இரட்டைநிலை. தங்களை சாதிசார்ந்து திரட்டிக்கொள்வதும், சாதியடிப்படையில் செயல்படுவதும், சாதிப்பெருமிதங்களை கொள்வதும் ஒருபக்கம். இன்னொரு பக்கம் சாதியைக் கற்பித்தவர்கள் என பிராமணர்களை, இந்து மதத்தை வசைபாடுவது. அதாவது சாதியின் எல்லா சாதக அம்சங்களையும் நாங்கள் ஏற்போம், அவற்றின் எதிர்மறையம்சங்களுக்கும் வேறுசிலர் பொறுப்பு என்னும் ஒரு நிலைபாடு. அதுவே இங்கே சாதிசார்ந்த எல்லா விவாதங்களிலும் உள்ளுறை.
ஜனநாயகத்தில் மக்கள் எப்படியாவது தங்களை திரட்டிக்கொண்டு அதிகாரத்தை அடையமுற்படுவதே இயல்பாக நிகழ்கிறது. தொழிற்சங்கம் என்பது அப்படிப்பட்ட ஒரு திரட்டு. அதேபோல ஒன்றாக சாதியும் ஆகிவிட்டிருக்கிறது. நம்மைவிட ஜனநாயகம் மேலோங்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட மக்கள் இப்படி பிறப்பு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த பல குழுக்களாக திரண்டுதான் அதிகார அரசியலில் ஈடுபடுகிறார்கள். பொருளியலில், அதிகாரத்தில் வெல்லும் குழுக்கள் ஆதிக்கம் கொள்கின்றன.
இது சரியா தவறா என நாம் சொல்ல முடியாது. வரலாறு இப்படி நிகழ்கிறது என்று மட்டுமே சொல்லமுடியும். ஜனநாயகம் என்பதே அதிகாரப்போட்டிதான் எனும்போது அது சரியும்கூட. சாதிகளுக்குள் மோதல்கள் நிகழாதவரை, சாதிகளின் அடிப்படையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் அவமதிக்காதவரை வேறுவழியில்லை என கொள்ளவேண்டியதுதான்.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


