Jeyamohan's Blog, page 651
January 2, 2023
விதைமுளைக்கும் மழை
வெண்முரசு எழுதி முடித்தபின் அதிலிருந்து உளம் விலகி பிறிதொருவனாக ஆகி இங்கு நின்றிருந்து அந்நாட்களைத் திரும்பிப்பார்க்கையில் ஒரு பெரும் தியான அனுபவத்தின் வெவ்வேறு தருணங்களாகவே அதை எண்ண முடிகிறது. முதற்கனல் தியானத்தில் வந்தமையும் முதல் நிலைகடத்தலின் தருணம். அதற்குமுன் பலமுறை பலவாறாக எழுதி அழித்தவை அனைத்தையுமே தியானத்திற்கு முந்தைய நிலைகொள்ளாமை என்றே சொல்லவேண்டும்.
முடிவின்மையின் முதல் தொடுகை. இந்தப்பாதையின் முதல் திறப்பு. தன் எல்லைகளை தானே உளம் கடக்கும் நிலை. பிறிதொன்று வந்து தொடும் புள்ளி. அது நிகழ்ந்ததுமே பரவசம் கொள்கிறோம். ஆம் இதோ என்று உள்ளம் துள்ளுகிறது. பிறிதொன்றும் முக்கியமல்ல என்றாகிறது. அதற்கு முழுக்க தன்னை கொடுத்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது. ஓர் ஆழமான கத்திக்குத்து போல என்று அதை யோகமரபிலே சிலர் சொல்லியிருக்கிறார்கள். அது நிகழ்ந்து, மெல்ல விடுவித்துக்கொண்டு அமர்ந்திருக்கையில் அது ஒரு சிறுவிதை என்று தெரிகிறது. தம் உள்ளத்தில் பெருகும் நீரை ஊற்றி ஊற்றி வளர்க்கவேண்டிய ஊற்று. அதற்குள் இருப்பது ஓர் உயிர்த்துளி மட்டுமே.
முதற்கனலை எழுதி முடித்ததுமே அது பலதிசைகளில் முளைத்து விரியும் பெரும் தாவரம் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. முதற்கனலில் அத்தியாயங்கள் அனைத்தும் சுருக்கமானவை. உணர்வுகள் மிக விரைவாகச் சொல்லி செல்லப்பட்டன. குறியீடுகள் படிமங்கள் ஆழ்படிமங்கள் முகங்காட்டி மறைகின்றன. ஆனால் முதற்கனலில் பின்னர் இந்நாவல் பேருருக்கொண்டு விரிந்தபோது இதில் என்னென்ன இருக்குமோ அனைத்துமே உள்ளது. வெவ்வேறு புராணங்களின் இணைப்பினூடாக உருவாகும் புதிய அர்த்தம். புராணங்கள் வழியாகச் சென்றடையும் தத்துவ தரிசனங்கள். வாழ்க்கைத் தருணங்களின் நாடக உச்சங்கள். வாழ்க்கையினூடாக திரண்டு வரும் கவித்துவ தருணங்கள். வாழ்க்கையின் சாரமென வெளிப்படும் கருத்துக்கள். எல்லாமே அதில் தங்கள் வடிவமென்ன என்று காட்டிவிட்டன. அதன்பின் எழுதுவது மிக எளிதாக ஆகிவிட்டது என்று இப்போது தோன்றுகிறது. மொத்த வெண்முரசையே கண்முன் பார்த்துவிட்டது போல.
உண்மையில் என் அகக்கண் அதைப்பார்க்கவில்லை. அதற்கும் அடியிலிருக்கும் அறியா விழி ஒன்றுதான் அதைப் பார்த்திருக்கிறது. அதன் பின் இருபத்தைந்து பெருநாவல்களை எழுதிமுடித்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் முதற்கனல் அதன் பின்னர் எழுதப்பட்ட அனைத்தையும் தொடங்கி வைத்திருக்கிறதென்றும், முதற்கனலின் இயல்பான நீட்சியாகவே மொத்த நாவலின் மொத்த பக்கங்களும் அமைந்திருக்கின்றன என்றும் தெரியவந்தது. இந்த நாவல்தொடரின் உச்சமென்றும் சாரமென்றும் திரண்டு வந்த அனைத்துமே முதற்கனலில் வில்லிலிருந்து எழும் அம்புகள் போல கிளம்பியிருந்தன.
வெண்முரசை எழுதி முடித்தபின் திரும்பி வந்து முதற்கனலைப் புரட்டிப் பார்க்கையில் நான் ஒரு பெரும் திகைப்பை அடைந்தேன். நான் எண்ணாத அனைத்தையும் அதில் எழுதியிருந்தேன். என்னில் அடுத்த ஏழாண்டுகளில் நிகழப்போகும் அனைத்தையுமே அதில் தொட்டுவிட்டிருந்தேன். அப்போது எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. இன்று பார்க்கையில் முதற்கனலே மொத்த வெண்முரசையும் பொருந்துவதற்கான தாழ்க்கோல் என்று தோன்றுகிறது.
முதற்கனலுக்குப்பின் மழைப்பாடலை எழுதத்தொடங்கும்போது முன்பிருந்த எந்தத் தத்தளிப்பும் இல்லாத ஒரு பரவச நிலையை அடைந்திருந்தேன். மழைப்பாடல் மலையிறங்கி ரிஷிகேசத்தில் நிலம் தொட்ட கங்கை அகன்று பெருகி பரவுவது போல வடிவம் கொண்டது. விரைந்தோடி வந்த ஒவ்வொன்றும் விசையழிந்து விரியத்தொடங்கின. நான் அதன் நிலக்காட்சிகளை மிக விரும்பி எழுதினேன். அந்நாட்களில் முற்றிலும் அயலான நிலங்களில் அலைந்துகொண்டிருந்தேன். கனவுவெளிகளில் வாழ்ந்தேன். மழைப்பாடலில் தான் வெண்முரசு முழுக்க வளர்ந்து நிறைவடையும் மையக்கதைமாந்தர் அனைவருமே தோன்றினர்.
மழைப்பாடல் ஒரு விந்தையான இணைப்பையும் கொண்டிருக்கிறது. முதற்கனல் முடியும்போது பாலை நிலம் சொல்லப்படுகிறது. ஒரு கைப்பிடி மணலை அள்ளினால் பல லட்சம் விதைகள் அடங்கியது அந்நிலம் என்று பீஷ்மர் உணருகிறார். மழைப்பாடல் பீஷ்மர் மழையை உணர்வதில் தொடங்குகிறது. நாவல் முழுக்க மழை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இப்புவியில் இருந்து விண்ணுக்கு ஆணையிடும் ஆற்றல் கொண்டவை வேதமும் தவளையின் குரலும்தான் என்று வேதகால ஞானிகள் நம்பினர். மழை மழை மழை என விண்நோக்கி ஆணையிடும் தவளைகளின் குரலில் இந்நாவல் முடிகிறது. இந்நாவலை சம்ஸ்கிருதத்தில் எழுதியிருந்தால் மாண்டூக்யம் என்று பெயரிட்டிருப்பேன்.
விண்ணிலிருந்து மண்ணுக்கிறங்கும் மழை விண் மண்ணுக்கு அளிக்கும் ஓர் உறுதிப்பாடு. இங்கு உயிர் நிகழவேண்டும் வாழ்க்கை பெருக வேண்டும் என்று விண் விரும்புவதின் சான்று. மழைபெருகுக!
இந்நாவலை என்னுடைய இணையதளத்தில் வெளியிட்டேன். பின்னர் நூல் வடிவில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டது. இதற்கான ஓவியங்களை ஷண்முகவேல் வரைந்து தந்தார். மணிகண்டன் உதவினார். இந்நாவலின் மாபெரும் கற்பனையை வாசகர் உள்ளத்தில் எழுப்ப அவ்வோவியங்கள் பெருந்துணையாக அமைந்தன. முன்விலைத் திட்டத்திலேயே முந்நூறு பிரதிகள் இந்நாவல் விற்றது மலிவுப்பதிப்பும் வெளிவந்தது. அதன்பிறகு கிழக்குப் பதிப்பகம் இதை வெளியிட்டது. இப்போது விஷ்ணுபுரம் பதிப்பகம் மூன்றாவது பதிப்பாக வெளியிடுகிறது.
இத்தனை பெரிய நாவல், இத்தனை செறிவுள்ள படைப்பு இக்குறுகிய ஆண்டுகளில் மூன்றாவது பதிப்பை நெருங்குவதென்பது தமிழ்ச்சூழலை பொறுத்தவரை வியப்புக்குரியதுதான். இதை மெய்ப்பு நோக்கி, செம்மையாக்கி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா இணையருக்கும், பின்னர் மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் மற்றும் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கும், இப்போது மெய்ப்பு பார்க்கும் மீனாம்பிகை, செந்தில்குமார் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.
இதை முன்னர் வெளியிட்ட நற்றிணை யுகனுக்கும் கிழக்கு பத்ரிசேஷாத்ரிக்கும் நன்றிகள். தொடர்ந்து எட்டாண்டுகளுக்கும் மேலாக இந்நாவல் உடனேயே வாழ்ந்துவரும் இதன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பிறந்து இந்நாவலை நோக்கி வந்துகொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மீண்டும் வணக்கம்.
ஜெ
09.11.2022
(விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவந்துள்ள மழைப்பாடல் நாவல் செம்பதிப்புக்கான முன்னுரை)
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்
ஒலிப்பதிவுகள் வருவதற்கு முந்தைய இசைக்கலைஞர்கள் ஒருவகையில் துரதிருஷ்டசாலிகள். அவர்களின் இசை கேட்கமுடியாமலேயே காற்றில் மறைந்தது. ஆனால் இன்னொருவகையில் அவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களின் இசையைப் பற்றிய தொன்மங்கள் வாழ்கின்றன. அவற்றினூடாக நாம் ஒரு தேவசங்கீதத்தை கற்பனைசெய்துகொள்கிறோம். கேளாச்சங்கீதமே மேலும் இனிது!
கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர்யோகம், ஆசிரியர்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீண்ட நேர பயணத்திற்கு பின்பு பயிற்சி முகாமிற்கு மிக சரியாக பயிற்சி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சென்றடைந்தேன். குருஜி. சௌந்தர் அவர்களின் யோகா மரபினை பற்றிய விளக்கத்துடன் பயிற்சி தொடங்கியது. யோகா மரபின் வகைகளை பற்றியும், ஒருவர் தனது எண்ணங்களும், ஆளுமைகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட யோகமரபினை பிரதானமாக பின்பற்ற வேண்டும். இதற்கான விழுப்புணர்வை அடைவதற்கான ஆரம்ப நிலை பயிற்சிகள் கற்பிக்க பட்டது. இது ஒரு தொடக்கம் மட்டுமே, இதிலிருந்து நாம் அடையும் அனுபவமே நம்மை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றும், தொடர் யோகா சாதகமே அதற்கான வழி என்றும் குருஜி அறிவுறுத்தினார்.
பயிற்சி இடைவேளைகளில் பொழுது நடைபெற்ற இயல்பான உரையாடல்கள் இந்த முகாமின் மிக சிறந்த தருணங்கள். எனது முந்தய யோகா பயிற்சி அனுபவங்களை ஒப்பிடும்பொழுது இது மிகவும் புதியது. ஆசிரியன் மற்றும் மாணவர்களிடையே நடந்த உரையாடல்களுக்கான தளம், முன்பு அமைந்ததே இல்லை. ஆசிரியர் பணியில் இருக்கும் எனக்கு இது மிக முக்கியம் என்று தோன்றியது.
இந்த மூன்று நாட்களுமே அனைவரும் மிக மகிழ்வுடனும் அமைதியுடனும் இருந்தனர். நேர்மறையான எண்ணைகளுடனே அனைவரின் உரையாடல்களும் இருந்தது. எனது வாழ்வின் முக்கியமான மூன்று தினங்கள். நீங்கள் சொல்வது போல் யோகத்தினை வாழ்வியல் முறையாக மாற்ற முயல்கிறேன்.
நன்றி
இரத்தினசபாபதி
சென்னை
அன்புள்ள இரத்தினசபாபதி,
யோக மரபில் இரண்டு களங்கள் முக்கியமானவை. ஒன்று புறவாழ்வு. இன்னொன்று அகம். புறவாழ்வில் ஏன் உங்களால் ஒரு யோகப்பயிற்சியை தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை என்பது முக்கியமான கேள்வி. யோகத்தால் உள்ளம் குவியும்போது நீங்களே உங்களை கவனிக்கிறீர்கள். அப்போது உருவாகும் கேள்விகள் இன்னொருவகை. நடைமுறை சார்ந்து முதல்வகைக்கும், தத்துவம் சார்ந்து இரண்டாம் வகைக்கும் வழிகாட்டி, ஆலோசனை சொல்லும் தனிப்பட்ட ஆசிரியர் எந்த ஒரு யோகப்பயிற்சிக்கும் அவசியம். அவருடனான சில ஆண்டுகள் தொடரும் உறவும் இன்றியமையாதது.
ஜெ
விஷ்ணுபுரம் விழா கடிதம்
தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக விஷ்ணுபுரம் விழாவில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கிறேன். இலக்கிய நிகழ்வுகளில் பங்குகொள்வதற்க்கு இணையாக நண்பர்களைச் சந்திக்கும் நாட்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கச் செய்யும் விழா இது. நோய்க்காலத்துக்குப் பின்பான கடந்தவருட விழாவில் பங்கேற்றது ஏற்கனவே இனிய அனுபவமாய் நிறைந்திருந்தது. இந்தமுறையும் எழுத்தாளர்களுடனான அரங்குகள், புதிய புத்தகங்கள் என மீண்டுமொரு மகிழ்வான அனுபவம். அரங்குகள் முடிந்தபின் இடைவேளைகளில் எழுத்தளர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களிலும் நண்பர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுக் கொண்டிருந்தனர்.
அமர்வுகளில் குறிப்பாக இலக்கிய முகவர் பற்றிய கனிஷ்கா மற்றும் மேரி ஆகியோரின் கருத்துக்கள் இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று. இத்துறையின் வெவ்வேறு சாத்தியங்களையும் சவால்களையும் தெளிவாக முன்வைத்தார்கள். எழுத்தாளரே படைப்பாளியாகவும், படைப்பை அறிமுகம் செய்து சந்தைப்படுத்துபவராகவும், விமர்சனக்கூட்டங்களை முன்னெடுப்பவராகவும் இருக்கும் தமிழ்ச்சூழலில் இலக்கிய முகவர் என்னும் இவ்வகைமை பற்றிய விவாதங்கள் முற்றிலும் புதிய எழுத்துச் சூழல் பற்றிய கருத்தக்கதை முன்வைத்தன.
அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மமங் தாய் அமர்வு சீனா-இந்தியா இடையில் உள்ள இம்மாநிலத்தின் ‘ஆதி’ பூர்வகுடி மக்களின் மொழியையும், பண்பாட்டினையும் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரின் பார்வையில் வெளிப்படுத்தியது. இந்த அமர்வை வழிநடத்திய ராம்குமார் இ.ஆ.ப எழுத்தாளர் மமங்தாய் அவர்களின் பதில்களோடு தேவைப்படும் இடங்களில் தன் பணி அனுபவங்களையும் பகிர்ந்து விவாதங்களைச் செம்மைப்படுத்தினார்.
இரு நாட்களும் சுநீல் கிருஷ்ணன், காளிப்பிரசாத், சுரேஷ் பிரதீப், விஷால் ராஜா, செந்தில் ஜெகந்நாதன், சுஷில் குமார் ஆகியோருடன் சாருவின் படைப்புகள் பற்றியும், அவரது விமர்சன பங்களிப்பைப் பற்றியும் உரையாடிக்கொண்டிருந்து நிறைவழித்த அனுபவம். கவிஞர் இசையுடனான சந்திப்பில் அவரது கவிதை ஒன்றினைப் பற்றிய என் தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து அவரைக் அணைத்துக் கொண்டேன். அருண்மொழி அக்காவிடம் ‘பனி உருகுவதில்லை’ நூலினை என் மனைவிக்காக பெயர் எழுதி கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டேன். புத்தகங்களோடு ஊருக்குத் திரும்பியபின் அக்கா மகன்கள் இருவரும் தேகம், குமரித்துறைவி நாவல்களை ஆளுக்கொன்றாக எடுத்துச் சென்று படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கூடவே கடந்த முறையைப் போலவே இந்த வருடமும் நான் எப்போதும் மறக்க முடியாத சில நிகழ்வுகள் எனக்கு நடந்தன.
விழா தேதிகள் அறிவிப்பிற்குப் பின்னும் என்னுடைய பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக டிசம்பர் முதல் வாரம் வரை காத்திருக்கவேண்டியிருந்தது. பிறகு பயணத்தைத் திட்டமித்தவுடன் தங்குமிடம் பதிவுசெய்து கொண்டேன்.
இந்த வருடம் எனக்கு டாக்டர் பங்களாவில் ஒதுக்கியிருந்தார்கள். சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து இயக்கப்படும் இரவுப்பேருந்து ஒன்றில் கிளம்பி அதிகாலை 4 மணிக்கே கோவை காந்திபுரம் வந்து சேர்ந்தேன். தங்குமிடம் தொடர்பான அறிவிப்பில் பஸ், ஆட்டோ, டாக்சி வழியாக ராஜஸ்தானி சங் வருவதற்க்கு வழிகளை ஏற்கனவே அனுப்பியிருந்தார்கள். காலையில் பஸ்கள் தாமதமாகத்தான் கிளம்பும் என்று தெரிந்தபின் கூகுளில் தேடியபோது மொத்தமே 30 நிமிட நடைதான் என்று தெரிந்து கோவையின் அதிகாலை சாலையில் நடந்தே ராஜஸ்தானி சங் வந்து சேர்ந்தேன். (அடுத்தமுறை இந்த 30 நிமிட நடை பற்றிய சிறு குறிப்பையும் மின்னஞ்சலில் சேர்க்கச்சொல்ல வேண்டும்).
அந்நேரத்திற்கே சுதா மாமி கையில் பட்டியலுடன் வருவோர்க்கு உதவிக்கொண்டிருந்தார். எனக்கு டாக்டர் பங்களா என்றவுடன் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு ஜி. எஸ். எஸ். வி. நவீன் கிளம்பியதும் என்னை அங்கு காரில் இறக்கிவிட்டுச் செல்லச் சொன்னார். அறிமுகமாகியபின் பேசிக்கொண்டே வந்த நவீன் ஒரு பங்களா வாசலில் இறக்கிவிட்டு “உள்ளே சென்று விஷ்ணுபுரம் என்று சொல்லுங்கள், அவர்களே பார்த்துக்கொள்வார்கள்” என்று வழியனுப்பிச் சென்றார். பெரிய வராந்தா கொண்ட அந்த இருண்ட மாளிகையின் உள் சென்றபோது கதவு பூட்டியிருந்தது. அப்படியே வீட்டின் பக்கவாட்டில் ஒரு முறை சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வராந்தா வந்தபோது வேகமாக உள்ளே வந்தவர் ‘யார் நீங்க, எதுக்கு உள்ள போனீங்க’ என்று கேட்டுக்கொண்டே நெருங்கினார். நான் நிதானமாக ‘விஷ்ணுபுரம்’ என்று கூறினேன். அவர் ‘யாருங்க நீங்க, என்ன சொல்றீங்க, எதுக்கு உள்ளே வந்தீங்க’ என்றவுடன் நிலைமை புரிந்து நண்பர் நவீனை ஒரு தடவை நினைத்துக்கொண்டேன். ‘இது தங்குறதுக்கான கெஸ்ட்கவுஸ்னு நினைச்சு வந்துட்டேன்’ என்று சொல்லி அவரைச் சமாளித்துவிட்டு வேகமாக வெளியேறி அருகில் ‘டாக்டர் பங்களா’ பற்றி விசாரிதேன். தெருவின் இரண்டு முனைகளிலும் கெஸ்ட்கவுஸ் பங்களாக்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் எதற்கு சிக்கல் என்று மீண்டும் நடந்து ராஜஸ்தானி சங் வந்து விஷயத்தைச் சொன்னேன்.
அப்போது தான் அங்கு அறைக்காக இன்னொரு நண்பருடன் வந்திருந்த எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் விடியும் வரை தன்னுடனேயே அறையில் இருக்கலாம் என்று அழைத்தார். அடுத்த இரண்டு மணிநேரங்கள் சுரேஷ் பிரதீப்புடன் இலக்கியம் பற்றியும் அவரது ‘Tamil literary talks’ இலக்கிய சானல் பற்றியுமான ஆரவமூட்டும் உரையாடலாக அமைந்தபோது நண்பர் நவீனுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டேன். கூடவே அந்த அறைக்கு வந்த எழுத்தாளர் செந்தில் ஜெகந்நாதன் இதில் கலந்து கொண்டது இன்னும் சுவாரசியமாக இருந்தது. பிறகு நாங்கள் டீ குடிக்கச் சென்றுவிட்டு வரும்போது நீங்கள் நண்பர்களோடு வந்துகொண்டிருப்பதைப் பார்த்து உங்களோடு சேர்ந்துகொண்டோம் . அப்போதே மொழியாக்கம் பற்றிய விவாதம் துவங்கி, மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு, அவர்களின் பல்வேறு ஆக்கங்கள் என உரையாடல் போய்க் கொண்டிருந்தது. அறைக்குத் திரும்பி மீண்டும் சிறுகதைகளைப் பற்றிய உரையாடலில் இருந்தபோது அந்த அறைக்கான இன்னொரு நபராக எழுத்தாளர் விஷால் ராஜா வந்து சேர்ந்தார். மீண்டும் இலக்கியம், விமர்சனம் பற்றிய உரையாடல் தொடர்ந்தது.
அறையில் இருந்து போனில் அழைத்த சுக்கிரி நண்பர்கள் அங்கு அனைவரும் கிளம்பி விட்டதால் குளியலறையைப் பயன்படுதிக்கொள்ளலாம் எனக் கூறினா். அங்கு சென்று குளித்து முடித்து மீண்டும் பழைய அறைக்குச் செல்லலாம் என்று வெளியேறியபோது அறையின் கதவு திறக்கவில்லை. இடையில் அறைக்கு வந்த ஒருவர் அறையில் யாருமில்லை என்று நினைத்து கவனமாகப் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். அன்றைய நிகழ்வுகளை அழகாகத் தொகுத்தளித்த ஜாஜா தான் என்னை உள்ளே வைத்துப் பூட்டியவர் என்று பிறகு தெரிந்தது. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒரே சீராகத் தட்டிக்கொண்டிருந்த போது வெளியே வராந்தாவில் நடந்து வந்த சிலரிடம் உள்ளே மாட்டிக்கொண்டதைச் சொன்னேன். அவர்கள் கீழே சென்று ஆட்களை வரச்சொல்வதாகச் சொல்லிவிட்டு நான் யாரென்று கேட்டபோது ‘நான் ராஜேஸ் பேசுறேன்’ என்றதை ‘யாரோ, நாகேஸ்வரராவாம்’ என்று அவர்களுக்குள் பேசியபடி கீழே சென்றார்கள். பிறகும் நெடுநேரம் யாரும் வராதாதால் இந்தமுறை ஒரேமாதிரி தட்டாமல் வேறுவேறு மாதிரி கதவைத் தட்டி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து வந்த பார்த்து விசாரித்த குரல் லாஓசி சந்தோஷ் என்று தெரிந்து மாட்டிக்கொண்டதைச் சொன்னேன். அவரும் கீழே போய் ஆள் அனுப்புகிறேன் என்று சொன்னபோது பயந்து ‘எங்கும் செல்லவேண்டாம், இங்கிருந்தே ஏதாவது செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டதால் ஒரு வழியாக கதவு திறக்கப்பட்டு விரைந்து வெளியேறி அரங்கிற்கு சென்று அமர்வுகளில் பங்கேற்கத்துவங்கினேன்.
தேநீர் இடைவேளையில் என்னைச் சந்தித்த ஜாஜா ‘கிட்டதட்ட கொலைக்கேசுக்கு இணையான குற்றம் போல’ நண்பர்கள் அவரைக் காலை முழுவதும் இதுபற்றி விசாரித்துகொண்டிருந்ததாகச் சொல்லிச் சிரித்தார். மதிய உணவின் போதுதான சந்திப்பில்தான் தெரிந்தது, அடைபட்டிருந்தபோது என்னை ‘யாரோ நாகேஸ்வரராவாம்’ என்று கூறிக் கடந்து சென்றவர்கள் என்னோடு காலையில் இருந்தே அறையில் பேசிக்கொண்டிருந்த செந்தில் ஜெகன்னாதனும், சுரேஷ் பிரதீப்பும் தான் என்று. பிறகு விழா முடியும் வரை அவர்கள் என்னை நாகேஸ்வரராவ் என்றே அழைத்துக்கொண்டிருந்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்வின் முடிவில் அரங்கின் படிகளில் உங்களோடும் நண்பர்களோடும் அமர்ந்திருந்த போது அங்கொரு அறையில் கிளம்பிக்கொண்டிருந்த திருமூலநாதனை நெடுநேரமாக யாரோ அறையில் வைத்து அடைத்துள்ளார்கள் என்று பதட்டமாக நண்பர்கள் சாவியைத் தேடிக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த நவீன் தன்னிடம் தான் சாவி இருக்கிறது என்று சொன்னபோது அங்கு பெரும் சிரிப்பொலிதான் எழுந்தது. அதன் பிறகு என் அனுபவத்தையும் உங்களோடும் நண்பர்களோடும் சொல்லிச் சிரித்தது என்றும் இவ்விழாவினை என் நினைவில் தங்கச் செய்யும்.
இதோ, விழாவிலிருந்து வந்த அதே மனநிலையைத் தக்கவைக்கும் விதமாக சுநீல் 2023 ம் ஆண்டுக்கான 1000 மணிநேர வாசிப்பு சவாலை மீண்டும் துவங்கியுள்ளார். பெரிய திட்டங்களோடு இணைந்து இந்த புதுவருடத்தைத் தொடங்குகிறேன். நன்றி ஜெ.
அன்புடன்,
ராஜேஸ்.
இங்கிலாந்து.
அன்புள்ள ராஜேஷ்
இத்தகைய நிகழ்வுகளின் பயன் என்பதே இதைப்போன்ற தற்செயலாக கைகூடும் இலக்கியவிவாதங்களும் தனிப்பட்ட உரையாடல்களும்தான். மறக்காமலிருக்க நீங்கள் சொன்னதுபோன்ற சில அனுபவங்களும்.
ஜெ
ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், ஒரு பார்வை
நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் இருக்குமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற’’ வர்களுக்கு சமர்ப்பிக்கிறான். அஜிதன் தமிழுக்கு உயிரும் ஒளியும் ஜீவனும் அளிக்கும் படைப்புகளை அளிப்பார் என அவரது முதல் நாவல் ‘’மைத்ரி’’யும் முதல் சிறுகதை ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ கட்டியம் கூறுகின்றன.
அஜிதனின் கதை பற்றி -பிரபு மயிலாடுதுறைJanuary 1, 2023
கடல்வண்ணம்
வண்ணக்கடல்மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின் பெயரைக்கொண்ட ஒரு பேரிலக்கியம் வேறெங்கும் உண்டா?
மகாபாரதம் அப்பெயரை தனக்கு சூட்டிக்கொள்ள அனைத்துத் தகுதிகளும் கொண்டது. அது இப்பாரதப் பெருநிலம் போலவே முடிவற்ற வண்ண வேறுபாடுகளுடன் பெருகி விரிந்திருப்பது. மலைகளும், ஆறுகளும், பாலை நிலங்களும், வயல்வெளிகளும், அடர்காடுகளும், பெருநகரங்களும் என ஒரு பயணி தன் வாழ்நாளெல்லாம் பார்த்தாலும் தீராதது.
இந்நிலத்தில் தணியா வேட்கையுடன் நான் அலையத்தொடங்கி இன்று நாற்பதாண்டுகளுக்கும் மேலாகின்றன. இன்னமும் இது நான் பார்க்காத நிலமாக, தன் மாபெரும் மர்மங்களில் சிறிதைக்கூட விட்டுக்கொடுக்காத ஒன்றாக, மாயம் காட்டி அடிமைப்படுத்தி அமர்ந்திருக்கும் பெருந்தெய்வமாகவே உள்ளது.
ஓவியம்: ஷண்முகவேல்மகாபாரதத்துக்கு அப்பெயர் வந்தது இந்தியாவின் அப்பெருங்காவியத்தில் மட்டுமே மொத்த இந்தியாவின் சித்திரமும் எவ்வகையிலோ அமைந்துள்ளது என்பதனால்தான். பின்னர் காளிதாசன் ரகுவம்சத்திலும், கம்பன் கம்பராமாயணத்திலும் முயன்றது அந்த பாரத தரிசனத்தை எவ்வகையிலேனும் தங்கள் பெருங்காவியத்தில் கொண்டு வருவதற்காகத்தான். ஆயினும் மகாபாரதத்தின் அந்த முழுமை பின்னர் எந்தப் பேரிலக்கியத்திலும் நிகழவில்லை. மகாபாரதம் சொல்லாத நிலமொன்று இந்தியாவில் இல்லை என்று ஒரு கூற்றுண்டு. ”வியாசோச்சிஷ்டம் ஜகத் சர்வம்” என்று அதை விளக்குவர்கள்.
மகாபாரதத்தின் அந்த பாரத தரிசனம் ஒருவகையிலேனும் திகழும் நாவல் வெண்முரசு வரிசையில் வண்ணக்கடல்தான். மகாபாரதத்தில் பாரத தரிசனம் பல இடங்களில் நிகழ்கிறது. குறிப்பாக பாண்டவர்களின் வனவாச காலத்தில் அவர்கள் கேட்டு அறியும் வெவ்வேறு நூல்கள் வழியாகவும், கதைகள் வழியாகவும். அதன் பின்னர் அவர்கள் நிகழ்த்தும் திசை வெற்றிப்பயணங்களின்போது. ஆனால் ஒரு நவீன நாவலின் கட்டமைப்பிற்குள் அம்மாபெரும் போர் நிகழ்ந்து, அதன்பின் அவர்கள் அடையும் அகஎழுச்சிகளும் கண்டடைதல்களும் அமைந்தபின் பாரதசித்திரம் வரமுடியாது. ஆகவே மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளாகக் கூறப்படும் பாரத சித்திரத்தை பாண்டவர்களின் பிறப்புத் தருணத்திலேயே வண்ணக்கடலில் கொண்டு வந்தேன்.
எனது நிலத்திலிருந்து ஒருவர் கிளம்பி அஸ்தினபுரி நோக்கித் தன்னை செலுத்திக்கொள்வதுதான் இந்நாவலின் கட்டமைப்பு, அது என்னுடைய பயணமும் கூட. உண்மையிலேயே குமரியிலிருந்து நான் மகாபாரதம் நிகழ்ந்த நிலங்களை நோக்கி கிளம்பிச் சென்று அலைந்து கண்டடைந்திருக்கிறேன். இளநாகன் நான்தான் என்று வாசகர் எவரும் உணர முடியும். ஆகவே ஒருவகையில் இந்த இருபத்தாறு நாவல்களில் எனக்கு மிக அணுக்கமானது இது. இதில் மட்டுமே எவ்வகையிலேனும் என் இருப்பை நான் உணர்கிறேன். மற்றவை முழுக்கவே என்னிலிருந்து அகன்று நிகழ்ந்தவை.
வண்ணக்கடல் எனது இணையதளத்தில் வெளிவந்தபோது ஷண்முகவேல் அதற்கு வரைந்த மாபெரும் நிலக்காட்சிகள் நகரச்சித்திரங்கள் வழியாக ஒரு கனவென வாசகர்களை ஆட்கொண்டது. பின்னர் நற்றிணை பதிப்பகம் இதை வெளியிட்டது. கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக மறுபதிப்பு வந்தது மூன்றாம் பதிப்பாக விஷ்ணுபுரம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. செம்பதிப்பாகவும் மக்கள் பதிப்பாகவும் வெளிவந்து பல ஆயிரம் வாசகர்கள் இதை வாசித்திருக்கிறார்கள். இது மீண்டும் ஒரு பதிப்பு முன்னர் இதை வாங்கி வாசித்தவர்களுக்கும் இனி இதற்குள் வரப்போகிறவர்களுக்குமாக.
ஓவியம்: ஷண்முகவேல்இத்தகைய படைப்புகள் அனைவருக்கும் உரியவை அல்ல. அன்றாடத்தில், நிகழ்காலத்தில் தொடங்கி இங்கேயே நின்றுவிடுபவர்களுக்குரியவை அல்ல. தங்கள் வாழ்க்கைக்கு அப்பால் இப்பிரபஞ்சம் முழுக்க பரந்திருக்கும் எதையோ ஒன்றை எவ்வகையிலேனும் உணர விரும்பும் உளம் கொண்டவர்களுக்குரியவை. அத்தகையோர் என்றுமிருப்பார்கள். அதுவரை இச்சொற்களும் இருக்கும். அவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்நாவலை முதலில் மெய்ப்பு பார்த்து சீர்படுத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா இணையருக்கும், பின்னர் மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ஹரன்பிரசன்னா இருவருக்கும், இப்பதிப்பை மெய்ப்பு பார்த்த மீனாம்பிகை, செந்தில்குமார் ஆகியோருக்கும் எனது நன்றிகள். இந்நாவலை முன்பு வெளியிட்ட ’நற்றிணை’ யுகன், ’கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி ஆகியோருக்கும் என் நன்றி.
இது நிகழ வழி வகுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் என் அடிபணிதல்.
ஜெ
09.11.2022
விஷ்ணுபுரம் வெளியீடாக வந்திருக்கும் வண்ணக்கடல் மூன்றாம் பதிப்பின் முன்னுரை
தக்கை ராமாயணம்
கொங்குநாட்டுக்குரிய இரண்டு இதிகாச காவியங்கள் புகழ்பெற்றவை. ஒன்று, நல்லாப்பிள்ளை பாரதம். இன்னொன்று தக்கை ராமாயணம். தக்கை என்னும் வாத்தியத்தை இசைத்துப் பாடவேண்டிய காவியம். இது கம்பராமாயணம் மீதான ஒரு மறு வாசிப்பு. இசையிலமைத்து பாடப்பட்ட கம்பராமாயணம். ஒரு காவியத்தின் சுருக்கமாக எழுந்த காவியம் என்னும் அளவிலும் மிக முக்கியமானது இது
தக்கை ராமாயணம்விஷ்ணுபுரம் விழா, கடிதம்
“வெயிலிது வெறும் வெயிலல்ல கடவுளின் அருள்தான் பாரடா” என்ற ‘குவெம்பு’வின் வரிகளை உண்மையாக்கும் டிசம்பர் குளிருக்கிடையே வரும் மெல்லிய வெயிலைப் போன்ற சில இதமான நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் தன்னுள் வைத்திருக்கிறது டிசம்பர் மாதம் , கார்த்திகை தீபம் , அதிக வேலைப்பளு இல்லாத கிருஸ்மஸ் காலம் , கடந்த சில வருடங்களாக விஷ்ணுபுரம் விருது விழா என கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம் இது.
சாருவிற்கு விருது அறிவிக்கப்பட்டவுடனே யூட்யூபில் அராத்து புத்தக வெளியீட்டு விழாவில் நீங்களும் சாருவும் ஓரே மேடையில் நிகழ்த்திய கொண்டாட்டம் நிறைந்த உரையாடல் ஞாபகம் வந்தது , அதை மீண்டும் நேரில் பார்க்க ஆவலாக இருந்தது .
17தேதி ஆம் காலை நண்பர்களோடு அரங்கிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தபோது , ராணுவ ஒழுங்கோடு நேரம் தவறாமல் சரியாக 10 மணிக்கு முதல் இலக்கிய அமர்வுக்கான அறிவிப்பு கேட்டதும் உள்ளே வந்து அமர்ந்தோம் அரங்கம் நிரம்பிவிட்டிருந்தது , கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவர்களோடு உரையாடல் நல்ல தொடக்கமாக அமைந்தது , மென்பொருள் பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் பணி குறித்த நிறைவு ஏன் பெரிதாக கிடைக்கவில்லை என்பதையொட்டி அருமையான விவாதம் ஒன்று நிகழ்ந்தது.
எனக்கும் அந்த நிறைவு குறித்த கேள்வி நான் வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே தோன்றியது , அடுத்ததாக கமலதேவி அவர்களின் அமர்வில் கேள்வியாக எந்த பந்தை வீசினாலும் சிக்ஸர்களாக மாற்றிக்கொண்டிருந்தார் , மிகவும் ரசித்த அமர்வு , ஒருவருடைய எழுத்து பிடித்துவிட்டால் தொடர்ந்து அவருடைய அனைத்து படைப்புகளையுமே தொடர்ந்து வாசிப்பேன் என அவர்சொன்னதும் , சிறுவயதில் காந்தி குறித்த பார்வை அவருக்கு என்னவாக இருந்தது என்பதையும் , இப்போது காந்தி அவருக்கு ஆதர்ஷமாகவும் இருப்பதை சொன்னார் .
விஜயா வேலாயுதம் அவர்களுடனான அமர்வு சற்று புதியது , சமீப காலமாக பதிப்பகங்களின் வீழ்ச்சியை பற்றியும் , அதன் சிக்கல்களையும் பேசினார் , கார்த்திக் புகழேந்தியின் அமர்வுகள் அவருடைய படைப்புகளில் இருக்கும் தொன்மம் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன , அருடையாட பாட்டியின் நினைவுகலிருந்து சொல்லும் கதைகளும் , தொ பரமசிவன் அவருடனான பழக்கமும் அவருடைய புனைவுலகில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தின என்பதையும் சொன்னார் .
குளச்சல் மு. யூசுப் அவர்களுடனான அமர்வு மொழிபெயர்ப்பு சார்ந்து எனக்கிருந்த நிறைய சந்தேகங்களை தீர்க்கும் விதமாக அமைந்தது, நிறைய முறை கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்க முயன்று சில கேள்விகள் எழுந்து தடைபட்டுகொண்டேயிருக்கின்றன அத்தகைய கேள்விக்கு குளச்சல் அவர்களிடமிருந்து முக்கியமான விடைகள் கிடைத்தன , அவர் முழுக்க முழுக்க வாசிப்பு இன்பத்திற்காகவே மலையாளம் கற்று அந்த மொழியின் உன்னத படைப்புகளை தமிழுக்கு மிக செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருந்தது.
அ.வெண்ணிலா அவர்களுடைய அமர்வும் சுவாரஸ்யமாக இருந்தது, கங்காபுரம் நாவல் குறித்த நிறைய கேள்விகள் எதிர்பார்க்காத வகையில் இருந்தது குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஹிரண்யகர்ப்பம் என்ற சடங்கு குறித்தான கேள்வி.
இரவு செந்தில் அவர்கள் நடத்திய இலக்கிய விநாடிவினா அற்புதமான அனுபவம் , கேள்விகள் எதுவாக இருந்தாலும் 2 பேர் பதில் சொல்ல கை தூக்கியதை பார்த்தால் திகிலாக இருந்தது , ஒருவகையில் கல்லூரி காலத்தை மீண்டும் நினைவுபடுத்திய நிகழ்வு, பரிசாக வழங்கப்படும் புத்தகங்களில் கையெழுத்திட மூன்று மூத்த எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள் என நிகழ்வை தொகுத்த செந்தில் சொன்னதும் உங்களுக்கு பக்கத்தில் இருந்த அருண்மொழி அம்மாவை நீங்கள் பொய்யான அதிர்ச்சியோடு பார்த்த தருணம் மிக அழகானது . கவிஞர் தேவதேவன் , அருண்மொழி நங்கை, ஜெ கையெழுத்திட்ட எந்த புத்தகமும் பரிசாக கிடைக்காதது சற்று வருத்தம்தான் .
இரண்டாம் நாள் மேரி குர்தலாங் மற்றும் கனிஷ்கா குப்தா அவர்களுடைய அமர்வு தமிழ் சூழலில் மிகவும் புதிய அனுபவம் எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் புதிய பணி இந்திய இலக்கிய சூழலில் உருவாகியிருப்பதையும் , அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் நல்ல அம்சங்கள் என் அனைத்தையும் இருவரும் சிறப்பாக விளக்கினார்கள், கனிஷ்கா மடை திறந்த வெள்ளம் போல் பேசிக்கொண்டே சென்றார் , மொழிபெயர்த்து தொகுத்த செந்தில் அடிக்கடி அணை கட்டி தடுக்கவேண்டியிருந்தது.
சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் மமாங் தாய் அவர்களுடைய அமர்வில் அவருடைய படைப்புகளில் நதி எனும் படிமம் சார்ந்தும் , அவர்களுடைய ஆதி எனும் மொழி சாரந்த நிறைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் புதிய திறப்புகளை அளித்தன , ஆங்கிலம் வாசிப்பதற்கு சற்று சிக்கல் இருந்தாலும் அவருடைய படைப்புகளை வாசிக்க தூண்டியது.
விருது விழாவின் முக்கிய அம்சமான சாரு நிவேதிதா அவர்களுடனான அமர்வு , இந்த அமர்வை தொகுத்து வழங்க எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் என சொன்னவுடன் அரங்கம் அதிர்ந்தது , நான் மிகவும் எதிர்பார்த்த நிகழ்வு , உங்களுக்கும் சாரு அவர்களுக்கும் இருக்கும் கருத்து மற்றும் ரசனை முரண்களை சாரு சொல்லிய விதம் மிக அருமை , அவருக்கு steak என்ற உணவுவகை சுத்தமாக பிடிக்காது அதனால் சீலேவில் சரியாக சாப்பிட முடியவில்லை என சொல்லி முடித்த அடுத்த தருணத்தில் “எனக்கு உலகத்தில் இருக்கும் உணவு வகைகளிலேயே பிடித்தது steakதான் என்று சொன்னது போன்ற அருமையான தருணங்கள் கொண்ட அமர்வாக இருந்தது , இத்தனை முரண்கள் இருந்தும் இரு துருவங்களை ஒன்றாக இணைப்பது இலக்கியம்தான் .
1 – 1:30 மணி நேர அமர்வுகள் சில நிமிடங்களில் முடிந்ததைப்போல பெரும்பாலான அமர்வுகளில் தோன்றியது , ” கேள்வி கேட்பதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது , தயக்கம் கொஞ்சம் விலகி கேள்வி கேட்கலாம் என நினைக்கும்போது அமர்வே முடிந்துவிட்டது ” என பக்கத்தில் இருந்த நண்பர் சொன்னார் அந்த அளவிற்கு அமர்வுகள் சீக்கிரம் முடிந்ததாக தோன்றியது அதற்கு முக்கிய காரணம் இந்த முறை கேள்விகள் மிக செறிவானவை , நேரத்தை வீணாக்கும் அல்லது கவன ஈர்ப்புக்கான கேள்விகள் சுத்தமாக இல்லை. சுருக்கமாக ஆனால் நுட்பமாககேள்வி கேட்கும் முறை ஒன்று மரபு போல விஷ்ணுபுரம் விழாவில் உருவாகியிருக்கிறது , என்னை வெகுவாக ஈர்த்தது சக்திவேலின் கேள்விகள் , மிக மிக நுட்பமாக கேட்கப்பட்ட கேள்விகள் அவருடையது . பதில்களும் நேரத்தில் எவ்வித தயக்கமோ பதற்றமோ இல்லாமல் இயல்பாக இருந்தது , வளர்ந்து வரும் எந்த எழுத்தாளர்களுக்கும் 500 பேர் கொண்ட அவையில் வாசகர்களோடு உரையாடும் இந்த களம் மிக முக்கியமானது.
2020 ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் அறிமுகமான சில நண்பர்கள் சேர்ந்து எழுத்தாளர் போகன் சங்கரிடம் பேய் கதைகளை சொல்லுமாறு வலியுறுத்திகொண்டிருந்தோம் , அமர்வுகள் முடிந்ததும் ராஜஸ்தானி சங் அறையில் இட நெருக்கடியில் அமர்ந்துக்கொண்டு நள்ளிரவு வரை நீளும் உங்கள் உரையாடல் கொண்டாட்டமானது இந்த முறையும் அமர்க்களமாக இருந்தது.
தேநீர் மற்றும் உணவு இடைவெளிகளில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களோடு உரையாடும்போது படைப்பாளிகளுக்கு டெல்லி , மும்பை போன்ற பெருநகரங்களில் வசிப்பதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் எப்படி அவர்களுடைய புனைவுலகை வேறு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது என்பதைப்பற்றி பல விஷயங்களை சொன்னார் , ஒருநாள் முழுவதும் அவர் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு சுவாரஸ்யமான உரையாடல்.
விருது வழங்கும் விழாவில் அவை நிரம்பி வழிந்தது , விருது அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வந்துகொண்டிருந்த வீண் சலசலப்புகள் நுரை போல் அடங்கிய தருணம் அது என நினைத்துக்கொண்டேன் , வாழ்த்துரைகளும் மிக செறிவானவை குறிப்பாக உங்கள் வாழ்த்துரை சமீப காலங்களில் உங்களுடைய அருமையான உரைகளில் ஒன்று.
வழக்கமாக விழா முடிந்த அடுத்தநாள் உங்களோடு மீண்டும் ஒரு உரையாடல் நிகழும் இந்த முறை அது நிகழவில்லை ஆனால் குளச்சல் யூசுப் அவர்களோடு தனிபட்ட முறையில் நிறைய உரையாட வாய்ப்பு கிடைத்தது.
அருமையான உணவும் , மற்ற ஏற்பாடுகளையும் சிறிய குறைகள்கூட இல்லாமல் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்த விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரும் மிக்க நன்றி.
ராஜஸ்தானி சங் படிக்கட்டுகளில் கூடி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இருந்த உற்சாகமும் , வெடிச்சிரிப்புகளும் புத்தாண்டில் அனைவருக்கும் அமைய வேண்டுகிறேன்.
அன்புடன் ,
ஷிமோகா பாலு
யோகம்: நல்லூழ் விளைவு
‘மலைத் தங்குமிடத்தில் யோக பயிற்சி முகாம்’ என நீங்கள் அறிவித்தவுடன் வலசை பறவை போல, என் அலுவல் மற்றும் தனி வாழ்வு அளித்திருந்த அழுத்தங்களில் இருந்து ஒரு சிறு விடுதலையை எதிர்பார்த்தே அதில் பங்கேற்க ஆர்வம் கொண்டேன்.
ஆனால், ஈரோடு விஷ்ணுபுரம் அறையில் தங்கியதும், வெள்ளியன்று அதிகாலையில் எழுந்து அங்கிருந்த உங்கள் ‘தன்னைக் கடத்தல்’ நூலை வாசிக்க நேர்ந்ததும் எனக்கு அந்த துவக்கத்திற்கான பிறிதொன்றிலா ஆசீர்வாத உணர்வை அளித்தது.
என் சைனஸ் உபாதைக்காக ஏற்கனவே மூச்சு சார்ந்து ஓரிரு பயிற்சிகளை சித்த வைத்தியர் பரிந்துரையின் பேரில் வேதாத்ரி மகரிஷி அமைப்பினரிடம் கற்றிருந்ததும், ஜக்கி நடத்திய இரண்டு நாள் முகாமின் மூலம் சாம்பவி பயிற்சி பழகியதும் பாரம்பரியமற்றவை (Non traditional) என்ற புரிதலே குரு சௌந்தரின் மூலம் தான் அறிந்தேன். அந்த பயிற்சிகளை அவர் சற்றும் கீழிறக்காமல் முறையாக இப்படி வகைப்படுத்திய விதம், பழைய அரைகுறை பயிற்சியின் நினைவுகளை மொத்தமாக கழற்றி வைக்க உந்தியது. அதுவே நிலையான கற்றலுக்கான வழி என உள்ளுணர்வு முன்னடத்திற்று.
உடல் – மூச்சு – மனம் சார்ந்த அழுத்தங்களை Muscular tension, Mental tension, Emotional tension என அவர் பகுத்து மூன்றையும் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு கற்பித்த போது தான் உடல் சார்ந்த அடிப்படை புரிதலே நிகழ்ந்தது. எனக்கு 27 வயதே எனினும் உடல் மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்களை வெகுவாக எதிர்கொண்டிருந்தேன். அதெல்லாம் என்னை பாதிக்கின்றன என நான் நம்பிக்கொண்டிருந்தது என்னுடைய பிழை தான் என குரு வழியாக அறிய நேர்கையில் ‘நான்’ கழன்று புதிய ஒருவனாக அங்கு நின்று கொண்டிருந்தேன். அந்தக்கணம், உங்கள் ‘தன்மீட்சி’ நூலின் வழியாக நான் பெற்றிருந்த மீட்சியின் நீட்சியாகவே அந்த 3 நாள் பயிற்சி முகாம் எனக்குத் தோன்றியது.
அங்கு கற்கும் யோக பயிற்சிகளுக்காக, நம் அன்றாடத்தில், உணவில், பழக்கங்களில் (புகை, குடி) பிரத்யேகமாக எந்தவித மாறுதல்களையும் செய்ய வேண்டாம் என குரு அறிவுறுத்தி, அதற்கான உளவியல் காரணங்களை அவர் விளக்கிய போது ஒரு முறை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, நிமிர்ந்து, முன்னகர்ந்து அமர்ந்தேன். இதற்கு முன் கற்ற பயிற்சிகளும் அவை விதித்த நிபந்தனைகளும் தானாகவே அதிலிருந்து ஒரு விலக்கத்தை உருவாக்கியிருந்தன என்பதே அந்த நிமிர்வுக்கு காரணம்.
யோகம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவங்களை அளிக்கக்கூடியது, அதை ஒவ்வொருவரும் தொடர் பயிற்சியின் வழியாகவே கண்டறிந்து, தங்களை மீட்டுக்கொள்வதற்கான சாத்தியங்களை அடைய முடியும் என்றார். அதை அடைவதற்காக தினமும் காலை 1 மணி நேரம், மாலை அரை மணி நேரம் ஒதுக்கி பயிற்சி செய்கிறேன். இதுநாள் வரை அந்த நேரம் எங்கிருந்தது, அதை எப்படி இப்போது எடுத்துக்கொண்டேன் என எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நமக்கு எது முக்கியம் என நாம் உணர்ந்தால் போதும். அதை செயல்படுத்திக் கொள்வதற்கான வழிகளை நாமே கண்டறிவோம் என நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது.
பயிற்சிக்கு அப்பால், குருவுடன் நிகழ்ந்த அலட்டல் இல்லாத இயல்பான உரையாடல்களும்; உங்களுக்குப் பிடித்தமான ‘யானைக் குடிலில்’ நாங்கள் தங்கியதும், அது சார்ந்து அந்தியூர் மணி அண்ணா பகிர்ந்த சுவையான தகவல்களும்; குழந்தைகளின் கற்பனை கதைகளும்; புதிய நண்பர்களும் என 3 நாள் தருணங்கள் அனைத்தும் நினைவடுக்குகளில் நிறைந்து விட்டவை.
“இப்படி ஒரு சூழலில், யோகம் கற்பதற்கான வாய்ப்பை ஜெயமோகன் வழியாக நாம் பெற்றது யோகி சத்தியானந்தர் மற்றும் குரு நித்யாவின் ஆசிகள் தான்” என பயிற்சி நிறைவின் போது குரு சௌந்தர் சொன்னார். ஒரு கணம் உடல் சிலிர்த்து மீண்டது. என்னைப் பொறுத்தவரை, இளமைக்கேயுறிய கற்பனையும், அழைக்கழிப்பும், சமநிலையின்மையும் கொண்ட எனக்கு இது என் நல்லூழ் விளைவு.
உங்களுக்கும், குரு சௌந்தர் அவர்களுக்கும், அந்தியூர் மணி அவர்களுக்கும் என் எல்லையிலா நன்றிகள் சமர்ப்பணம்.
– வெற்றி, மதுரை
அன்புள்ள வெற்றி,
சில கடிதங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை ஒட்டியே இந்த முகாம் பற்றிய எண்ணம் வந்தது.
யோகப்பயிற்சி பற்றி நமக்கு பல பிம்பங்கள் உள்ளன. அவற்றை களைய விரும்பினேன்
அ.யோகப்பயிற்சியால் உடனடி அற்புதங்கள் விளையாது. அது மாயாஜாலம் அல்ல. ஆனால் உண்மையான ஓர் அற்புதம் அதில் உள்ளது. பொறுமையான பயிற்சியால் அதை அடையமுடியும்.
ஆ. யோகப்பயிற்சி என்பது புதியபுதிய வகையில் அமைய முடியாதுஒரு நீண்ட குருமரபின் வழியாகவே அடையமுடியும். ஓர் யோக ஆசிரியர் சொல்லித்தரும் எதையும் அவருடைய மரபு குறைந்தது மூன்று தலைமுறைக்காலம், 100 ஆண்டுகள், பயின்று அவதானித்திருக்கவேண்டும். செய்வன, செய்யக்கூடாதன வகுக்கப்பட்டிருக்கவேண்டும்
இ. யோகப்பயிற்சியும் தியானப்பயிற்சியும் வேறு. யோகப்பயிற்சியும் ஆன்மிகப் பயிற்சியும் வேறு. ஆனால் யோகம் தியானத்துடனும் ஆன்மிகத்துடனும் நெருக்கமான உறவுள்ள ஒன்று.
ஈ. யோகம் என்பது அடிப்படையில் தத்துவப்பயிற்சி. அறிவுசார்ந்தே யோகம் கற்பிக்கப்படமுடியும்.
இக்குழப்பங்களில் சிக்கியவர்களின் கேள்விகளால் நான் துளைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அதற்கான விடை இந்த முகாம். அதை மெல்லமெல்லத்தான் நம்மவர் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.
ஜெ
செல்லவேண்டிய ஆறு
வழக்கமாக புத்தாண்டில் எங்காவது கூடுவது வழக்கம், இவ்வாண்டு அது இயலவில்லை. பல நண்பர்கள் கூடும்நிலையில் இல்லை. அடுத்த ஆண்டுமுதல் அதை ஒரு பொதுநிகழ்வாக, முறையாக அறிவிப்பு விட்டு நிகழ்த்துவதாக திட்டம் உள்ளது.
கிருஷ்ணனும் நண்பர்களும் மட்டும் கூடினர். நள்ளிரவில் 12 மணிக்கு நான் வழக்கமாக ஓர் 7 நிமிட உரை ஆற்றுவதுண்டு. அதை ஆற்றும்படி மின்னஞ்சலில் கோரினர். நான் பேசினேன்.
அந்த உரையின் சுருக்கம் இதுவே. ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் வருமாண்டில் என்னென்ன செய்யவேண்டும் என பட்டியலிடுபவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன செய்தோம் என்று சொல்பவர்களே முக்கியமானவர்கள். அவர்களையே நான் என்னுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.
ஓர் ஆண்டில் ‘சாதித்தவை’ முக்கியமானவை அல்ல. அப்படி ஒரு சாதனை என்பது இல்லை. ஓர் ஆண்டை மகிழ்ச்சியாகக் கழித்தோமா என்பதே முக்கியமானது. மகிழ்ச்சியாகக் கழித்தாலே நாம் உரியவை சிலவற்றைச் செய்துள்ளோம், சாதித்துள்ளோம் என்றுதான் பொருள்.
இந்த ஆண்டில் நான் இலக்கியக் களத்தில் தொடர்ந்து செயல்படுபவர்கள் என நினைக்கும் இருவரின் பதிவுகள்
2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்
நினைவுப்பாதை – சுனில் கிருஷ்ணன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



