Jeyamohan's Blog, page 652
December 31, 2022
நீலமென்பவன்
(விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை)
வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான ஒரு புனைவுலகிற்குள் நுழைந்தேன். நூற்று முப்பத்தாறு சிறுகதைகளாக அது விரிந்தது. உலகஅளவில் வேறெந்த எழுத்தாளராவது இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை கதைகளைம் இவ்வளவு படைப்பூக்கத்துடன், இத்தனை நுண்ணிய கலைஒருமையுடன் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நிகழ்ந்திருக்கலாம். மனிதகுலத்தின் சாத்தியங்கள் அளவிறந்தவை.
ஆனால் அது எவ்வாறு நிகழ்ந்தது என்று என்னால் இப்போது சொல்ல முடியும். அந்த நூற்று முப்பத்தாறு கதைகளுமே மென்மையான, இனிய உளநிலையை வெளிப்படுத்துபவை. வாழ்க்கை மீதான நம்பிக்கையை, மானுட எதிர்காலம் பற்றிய கனவை விரித்து வைப்பவை. மனிதர்களுக்கு இடையே உருவாகும் கனிவின் நுண்தருணங்கள், மனிதர்கள் தங்களைத் தாங்களே கண்டடையும் உச்சங்கள், இவ்வாழ்க்கை மனிதர்களுக்கு அளிக்கும் அரிய பரிசுகள் அக்கதைகளில் உள்ளன.
இன்னொரு வகையிலும் சொல்லலாம். உலகில் எந்த எழுத்தாளராவது இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை நேர்நிலையான படைப்புகளை எழுதியிருக்கிறார்களா என்று. அதுவும் அரிதானதே. அத்தனை கதைகளையும் எழுத வைத்தது அவற்றில் எல்லாம் இருந்த பொதுவான நேர்நிலையும் அதன் அள்ள அள்ளக் குறையாத இனிமையும்தான்.
இத்தனைக்கும் அது பெருந்தொற்றுக்காலம். உலகமே வாசல்களை அடைத்துக்கொண்டு அறைகளுக்குள் முடங்கியிருந்தது. உலகப்பொருளியல் என்ன ஆகும், பழைய நிலைக்கு மீள முடியுமா என்ற ஐயங்கள் ஒவ்வொரு உள்ளத்திலும் எழுந்து கொண்டிருந்தன. நான் பணியாற்றிக் கொண்டிருந்த திரைத்துறை முழுமையாகவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்றும், திரைஅரங்கு என்னும் வடிவமே இருக்கப்போவதில்லை என்றும் அப்போது ஆரூடங்கள் கூறப்பட்டன. அப்போது நான் சில பொருளியல் சிக்கல்களிலும் இருந்தேன்.
ஆனால் நான் அந்த இனிமையில் திளைத்துக் கொண்டிருந்தேன். அவ்வினிமையின் ஊற்றுமுகம் என்பது நீலம் என்னும் நாவல். நீலம் இனிமையே உருவான படைப்பு. ஆனால் இனிமையே மேலும் மேலும் என செறிவு கொண்டால் கடும் கசப்பாக ஆகிவிடுகிறது. அதிமதுரம் போல. சங்கப்பாடல்களில் அதிமதுரம் தின்ற யானை என்ற ஒரு உவமை உண்டு. நாவில் பட்டதுமே கடும்கசப்பாக உணரப்பட்டு, சுவைக்கும் தோறும் இனிமையாகி, இனிமை திகட்டலாகி, இனிமையென்பதே பெரும் வதையென்றாகும் அனுபவத்தை அதிமதுரம் அளிக்கும். கசப்பும் இனிப்பும் ஒன்றேதானோ என்ற எண்ணம் எழும்.
நீலத்தின் அந்த இனிமை இப்புவியின் மொத்த எடையாலும் அழுத்தப்பட்டு, மொத்த வெப்பத்தாலும் ஒளியூட்டப்பட்டு, வைரமென ஆகிவிட்ட ஒன்று. உயிர் கொல்லும் இனிமை அது. பிறிதொரு முறை அத்தகைய ஓர் உலகத்திற்குள் நான் நுழைவேனா என்றால் மாட்டேன் என்றுதான் இப்போது சொல்லத்தோன்றுகிறது. ஆனால் அது என் கையில் இல்லை என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
வண்ணக்கடல் முடிந்ததும் கண்ணனின் பிறப்பு பற்றி அடுத்த நாவலில் ஒரு பகுதியில் சொல்லவேண்டும் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் ஒரு பயணத்திற்காக கிளம்பி, இமயமலை அடிவாரம் வழியாக அலைந்து, மீண்டு வருகையில் சட்டென்று மதுராவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நண்பர்களுடன் ஒரே பயணத்தில் சண்டிகரிலிருந்து மதுரா வரைச் சென்றோம். நண்பர்கள் சலித்திருந்தார்கள், திரும்ப விழைந்தார்கள். எனக்கும் மதுரா மேல் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால் ஒருமுறை சென்றுவிட்டுப்போகலாம் என்ற சிறு உட்குரல் அரித்துக்கொண்டே இருந்தது.
மதுரா வழக்கம்போல வாகனப்புகையும், தூசியும், அகழ்வாய்வு நிகழுமிடங்களின் இடிபாடுகளு,ம் பலவகையான மக்கள்திரள் செறிந்த தெருக்களும், வணிகக்கூச்சல்களுமாக நுரைத்து நிறைந்திருந்தது. மதுராவில் கண்ணன் பிறந்த இடத்தை பார்த்து விட்டு மேலே சென்றேன். மதுரா எப்போதுமே பித்து நிறைந்த இடம். ஆண்கள் கோபிகைகளாக தங்களை உணர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.
ஓவியம்: ஷண்முகவேல்என் உள்ளத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எந்த உணர்வுமின்றி அகம் உறைந்திருப்பதாகவே தோன்றியது. ஆனால் என் கைகளை சுருட்டி முறுகப் பற்றியிருந்தது நினைவிருக்கிறது. மறுகணம் ஓங்கி எதையோ கூச்சலிட்டுவிடுவேன் என்பது போல, எவரையோ தாக்கத்தொடங்கிவிடுவேன் என்பது போல, வலிப்பு வந்து மூர்ச்சையாகி விழுந்துவிடுவேன் என்பது போல. மேலே சென்று ராதா கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி அங்கிருந்த ஓவியங்களைப்பார்த்தபடி சுற்றிவந்தோம்.
சற்று அப்பால் ஓர் ஓவியத்தைப் பார்த்தபடி நான் நின்றேன். ராதா கிருஷ்ணா ஆலயத்தின் முன் பக்தர்கள் செறிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள். உள்ளிருந்து வந்த பூசகர்கள் பக்தர்கள் ராதைக்கும் கண்ணனுக்கும் போட்ட மாலைகளை பெரிய தாலத்தில் அள்ளிக்கொண்டு வந்து கூட்டத்தை நோக்கி வீசினார்கள். தற்செயலாக ஒரு மாலை என் கழுத்திலேயே விழுந்தது.
அருகிருந்த நண்பர் விஜயராகவனும் மற்றவர்களும் உணர்ச்சிப் பரவசம் அடைந்தனர். ஆனால் நான் அப்போதும் அகம் உறைந்து என்ன செய்வதென்று அறியாமல்தான் நின்று கொண்டிருந்தேன். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அது ஒரு தற்செயல்தான் என்று சொல்லிக்கொண்டேன். அதைப் பற்றி பேச மறுத்தேன். திரும்பி வருகையில் விஜயராகவனின் மூக்குக் கண்ணாடியை ஒரு குரங்கு கவர, அதை மீட்கும் போராட்டத்தின் வேடிக்கையில் உள்ளம் மாறிவிட்டது.
உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் என்னை முற்றிலும் பின்னிழுத்துக்கொள்வதே என்னுடைய வழக்கம். அது ஒரு சமநிலையை அளிக்கிறது. வாழ்க்கையைப்பற்றி பொய்மைகளை சூடிக்கொள்ள வேண்டாம் என்ற எச்சரிக்கை எப்போதும் என்னிடம் உண்டு. எப்போதுமே கேடயமாக தர்க்கபுத்தியை தூக்கி நிறுத்துவது சுந்தர ராமசாமி எனக்குப் பயிற்றுவித்த போர்முறையாக இருக்கலாம்.
ஆனால் திரும்பி வந்து ஓரிரு நாட்களுக்குள் நான் அந்நாட்களை மிகத்தீவிரமாக மீண்டும் நிகழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். என்னுள் விசை கொண்டு கொப்பளித்தவை என்னென்ன உணர்வுகள் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. உச்ச கட்ட வெறியுடன் திரும்பத் திரும்ப எதையெதையோ எழுதிப்பார்த்தேன். பொருளற்ற சொற்கள். நான் எழுதி வெளியாகின்றவை நூறு சொற்களென்றால் அவற்றை திரட்டிக்கொள்ள நூறு பொருளில்லா சொற்களையும் எழுத்தில் உளறித்தள்ளுவது என் வழக்கம்.
நான் எழுத எண்ணியது கண்ணனின் வாழ்க்கையை. பாகவதத்தை எடுத்து அதற்காக படித்தேன். ஒரு பத்தி கூட படிக்க முடியவில்லை அந்தச் சொற்கள் அனைத்தையுமே அந்நியமாகத் தெரிந்தன. கண்ணன் எனக்கு மிக அருகில் இருக்கையில் அவரைப்பற்றி எவரோ எழுதியது எனக்கு எதற்கு என்று தோன்றியது. ஆனால் அருகிருப்பவன் அறியக்கூடுபவனாக இல்லை. அருகிருப்பதொன்று தன்னை அத்தனை செறிவுடன் உணர்த்தியும் கூட அது என்னவென்று உணரவும் முடியவில்லை.
எழுதி எழுதி அழித்து, வெறிகொண்டு வெளியே கிளம்பி, பித்தனைப்போல் நாகர்கோவிலின் இந்தப் புறநகர்ப் பகுதிகளிலும் ஏரிகளிலும் தனித்த சாலைகளிலும் அலைந்து ,களைத்து திரும்பி வருவேன். துயில் கனக்கும் வரை பாடல்களைக் கேட்டுக்கொண்டிருப்பேன். திரும்பத் திரும்ப அஷ்டபதி தான். ”யா ரமிதா வனமாலினா!” அல்லது பஜனை. ’ராதே ராதே ராதே பர்ஸானவாலி ராதே!”
பின்னிரவில் உடல் களைத்து, மெல்ல எழுந்து சென்று படுக்கையில் படுப்பேன். அரைமணி நேரத்திற்குள் விழித்துக்கொள்வேன். அப்போது மிக அருகே ஓர் இருப்பை உணர்வேன். கைநீட்டினால் தொட்டுவிடலாம், கண்விழித்தால் மறைந்துவிடும். எழுந்து அமர்ந்து உலர்ந்த வாயும் கலங்கிச்சிவந்த விழிகளுமாக என்னைச் சுற்றி இரவு நிகழ்ந்துகொண்டிருப்பதை பார்ப்பேன். கதவைத் திறந்து வெளியிலிறங்கி பின்னிரவின் பனிக்குளிரில் இந்த மலையடிவாரப் பகுதியைச் சுற்றிவருவேன். தெருநாய்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளும். என் காலடி பட்டு தவளைகள் சிதறும். இருமுறைக்குமேல் பாம்புகளை காலால் தொட்டிருக்கிறேன்.
அதன் நடுவே இங்கிருப்பதன் எல்லா சடங்குகளையும் செய்துகொண்டும் இருந்தேன். நண்பர் வசந்தகுமாரின் மகனின் திருமணம். அதற்கு நானும் அருண்மொழியும் நாகர்கோவிலிலிருந்து கிளம்பி மதுரை சென்றோம். செல்லும் வழியெல்லாம் அவளிடம் எரிந்து விழுந்துகொண்டிருந்தேன். எவரென்றில்லாமல் உள்ளம் ஒவ்வாமை கொண்டிருந்தது. இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றுமே அர்த்தமிழந்து பொலிவிழந்து சிதறிக்கிடந்தன என்னைச்சுற்றி. இவை அனைத்திற்கும் அர்த்தம் கொடுக்கும் ஒன்று வேறெங்கோ இருக்க ,அனைத்தும் உயிரற்ற வெறும் சடங்குகள் என்று தோன்றியது.
இங்கிருக்க விரும்பவில்லை நான். வேறெங்கு செல்வது என்றும் தெரிந்திருக்கவில்லை. அத்திருமணம் முடிந்து அன்று அறைக்குத் திரும்பி தனிமையில் கணினியைத் திறந்து அர்த்தமின்றி எதையோ தட்டிக்கொண்டிருந்தேன், பின்னிரவு வரை. படுத்து அரைமணி நேரம் துயின்றபோது ஒரு கனவில் இந்நாவலின் முழுவடிவத்தையும் பார்த்துவிட்டேன். குழந்தைகளுக்கான ஜப்பானியப் படக்கதை போல. ஒரு சேவலின் குரலைக்கேட்டேன். விடிந்துவிட்டதென்று எண்ணினேன். மணி மூன்று கூட இருக்காது ஆனால் சேவலின் குரல் கேட்டது. எங்கிருந்தோ ஏதோ ஒரு விழிப்பென கணிப்பொறியில் அமர்ந்து சேவலின் குரலாகவே முதல்வரியை எழுதினேன்.
பின்பு அவ்வரிகள் ராஜன் சோமசுந்தரத்தால் இசை அமைக்கப்பட்டு கமலஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோரின் குரல்களில் மேலெழுந்து ஒலிக்க கேட்கையில் வேறெங்கோ இருந்து அத்தொடக்கத்தை நினைவு கூர்ந்தேன். முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து ஈரோடு கிருஷ்ணனுக்கும் ,அரங்கசாமிக்கும், தொடர்ந்து வெண்முரசை வாசித்துக்கொண்டிருந்த பல நண்பர்களுக்கும் ’தொடங்கிவிட்டது’ என்ற செய்தியை அனுப்பினேன்.
அது இன்று வரையிலான என் வாழ்க்கையின் மிக உச்ச தருணங்களில் ஒன்று. என் தலை வான் நோக்கி வெடித்து திறந்துகொண்டது போல. உடல் எடை இழந்துவிட்டது போல. என் இருப்பு உருகி மறைய அதன் எச்சத்தில் இருந்து நான் மீண்டும் புதியவனாக பிறந்து எழுந்தது போல.
யானையைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். தன் செவிகளால் அது ஒவ்வொரு கணமும் பறவையென ஆக முயன்றுகொண்டிருக்கிறது என்று. அத்தனை எடையுடன் அந்த விழைவு அதனுடலில் ஒருகணமும் ஓயாமல் இருந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று அதை தொட்டு எழுப்ப அது சிறகடித்து பறக்கத் தொடங்கிவிடுமெனில் என்னவாக இருக்கும்? அக்கணம் அதுதான். யானை பறக்கத்தொடங்கிவிட்டது.
ஆனால் அது எத்தனை பெரிய அவஸ்தை என்று அடுத்தடுத்த நாட்கள் காட்டின. ஆங்கிலத்திலே ’ரோலர் கோஸ்டர்’ அனுபவம் என்பார்கள். அதி உச்சங்களிலிருந்து அதி பாதாளங்களை நோக்கி விழுந்து எழுந்துகொண்டிருந்தேன். தற்கொலையின் முனையில் ஒவ்வொரு கணமுமென நாட்கள் கடந்து சென்றிருக்கின்றன. உடம்பே ஒரு நாவென ஆகி இப்பிரபஞ்சமெனும் இனிப்புப் பெருக்கில் திளைத்திருக்கிறேன்.
அன்றெல்லாம் சாலைக்கு செல்வதில்லை. உருளும் சக்கரங்களுக்கு அடியில் நானே குதித்துவிடுவேன் என்று அஞ்சினேன். பற்கள் கிட்டித்துக்கொண்டு எலும்புகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கிரீச்சிடும் மெய்விதிர்ப்புகளை அடைந்திருக்கிறேன். தலைக்குள் விந்தையான ஒரு பறவைக்குரல் தொடர்ந்து ஒலிக்க, உடம்பு முழுக்க புல்லரிப்புகள் ஓடிக்கொண்டே இருக்க, பெரும்புயலுக்கு காத்திருக்கும் சிறுகாட்டுச்சுனையென தருணங்களைக் கடந்தேன்.
இவை அனைத்துமே சொற்கள். அத்தருணங்களை நீலம் வழியாக மட்டுமே ஒரு வாசகரால் உணர முடியும் – அவர் மொழியை அனுபவமாக ஆக்கும் இலக்கிய நுண்ணுணர்வுடையவர் என்றால். அந்நிலையைச் சொல்லிவிட முடியாதென்று மெய்யியலும், சற்றேனும் உணர்த்திவிட முடியுமென்று இலக்கியமும் தொடர்ச்சியாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. என் வரையில் தமிழில் அவ்வுச்சநிலையை நவீன இலக்கியத்தில் நீலம் மட்டுமே நிகழ்த்தியிருக்கிறது.
அவ்வினிமையிலிருந்து மீண்டு வந்தவனுக்கு அதன்பின் எல்லாமே சாதாரணமானவை. நீலம் இந்திரநீலத்திலும் ஓரளவு நிகழ்ந்திருக்கிறது. நீலம் அடைந்த இனிமையின் உச்சங்களின் நேர்மறுபகுதியென வன்முறையும் வஞ்சங்களும் வெறிகளும் கொந்தளிக்கும் பல ஆயிரம் பக்கங்களாக வெண்முரசு விரிந்தது. இன்று எண்ணுகையில் நீலம் என்னும் மறுஎடை இல்லாமல் இருந்திருந்தால் அப்போர்க்காட்சிகளை எழுதும்போது நான் கசந்து இருண்டு என்னை அழித்துக்கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது. நீலம் என்னில் நிகழும்படி ஆக்கியது ஒரு நல்லூழ்தான். நீலம் ஓர் உயிர் காக்கும் சட்டை என என் உடலில் படிந்து அப்பெருங்கடலின் அலைகளில் மூழ்காமல் மிதக்க வைத்தது.
வெண்முரசை எழுதி முடித்து; அது அளித்த அனைத்து கசப்புகள், கொந்தளிப்புகள், சலிப்புகள், நாட்கணக்கில் நீளும் மாபெரும் வெறுமைகள் அனைத்தையும் கடந்து வந்தேன். அந்நாட்களில் நானிருந்த நிலை கண்ணனைப் பற்றிக்கொண்டு; அறியாத கொடுங்காட்டில், முற்றிலும் விழி இருண்ட கூரிருளில், உள்ளமே வழி தேடிக் கண்டடைய, கால்கள் துழாவி துழாவி அதை அடையாளம் காண, கடந்து வந்த ஒரு பயணம் தான்.
இன்று எண்ணுகையில் திகைப்பு வருகிறது. என்னில் இருந்த அனைத்து இருளையும் நானே பார்த்தேன். கட்டுக்கடங்காத பெரும் காமத்தை, கீழ்மையிலிருந்து கீழ்மைக்கு செல்லும் பெரும் அகந்தையை, ஒவ்வொன்றையுமே தொட்டு வெறுமையாக்கும் பெரும் வெறுமையை, எடைதாளாமல் மண்டையை வெடிப்புறச் செய்யும் மாபெரும் தன்னிலைமையத்தை.
அந்நாட்களில் ஒரு விரும்பத்தகாத செயல் நடந்தது. ஒரு தெரு ரவுடியால் நான் தாக்கப்பட்டேன். அவனிடம் இந்த ஊர்க்காரர்கள் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையாகவே இருப்பார்கள். மிகுந்த விலக்கம் கொண்டிருப்பார்கள். அவ்வெச்சரிக்கைகளை நினைவில் கொள்ளுமிடத்தில் அப்போது நான் இல்லாமலிருந்தேன். அது அவனுக்கு அவனுடைய உள்ளூர் அதிகாரத்தை சீண்டும் செயலாக தென்பட்டது.
அதை தொடர்ந்து இங்கிருக்கும் மானுடக்கீழ்மை அனைத்தையுமே கண்டேன். இணையவெளியில் என் சக எழுத்தாளர்கள் பலர் நான் அடிபட்டதை மகிழ்ந்து கொண்டாடினார்கள். என் அரசியல் எதிரிகளாகத் தங்களை நினைத்துக்கொள்பவர்கள் அதை பல மாதங்களுக்கு பேசிப்பேசி மகிழ்ந்தனர்.என்னிடம் இருந்து கடந்த காலங்களில் உதவி பெற்றுக்கொண்டவர்கள், அதன் பிறகும் கொரொனாக் காலத்தில் உதவிக்காக வந்து நின்றவர்கள் கூட அக்கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
பிறிதொருவரராக இருந்தால் அத்தருணத்தில் பெருங்கசப்பை தன்னில் திரட்டிக்கொண்டிருக்க முடியும். என் நண்பர்கள் பலருக்கு அக்கசப்பிலிருந்து இன்னும் கூட மீளமுடியவில்லை. ஆனால் நான் அவர்களில் பலருக்கு இன்றும் நெருக்கமானவனே. காரணம் அன்று நான் முற்றிலும் நேர்நிலை மனநிலையில், முற்றிலும் அகக்கொண்டாட்டத்தில் இருந்தேன். என்னை அங்கு கொண்டு சேர்த்தது நீலம் தான்.
அந்நாட்களில் ஆற்றூர் ரவிவர்மாவின் நண்பரும் கேரளத்தின் புகழ்பெற்ற சோதிடருமான ஒருவர் என்னை அழைத்து ”செய்தி வாசித்தேன், என்ன நடந்தது?” என்று கேட்டார். நான் அதை விவரித்தேன். எனது ஜாதகம் அவரிடம் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து என்னை மீண்டும் கூப்பிட்டு ”பெரிய வீடு கட்டுகிறாயா?” என்று கேட்டார். ”இல்லை” என்று சொன்னேன். ”அப்படித்தான் காட்டுகிறது. அரண்மனை கட்டுகிறாய் அல்லது பெரிய வேள்வி மாதிரி எதையோ நடத்துகிறாய். அதன் விளைவான எதிர்நிகழ்வுதான் இது” என்று சொன்னார். நான் ”இல்லை” என்று சொன்னேன்.
சோதிடத்தின் அடிப்படையில் என்னை ஷத்ரியனாகக்கொண்டு அரண்மனை அல்லது வீடு என்று கணித்துவிட்டார். சற்றுத் தயங்கியபின் நான் மகாபாரதத்தை எழுதி முடிக்கப்போகிறேன் என்று சொன்னேன். அவர் திகைத்து ”அதுதானா?” என்றார். ”அதற்கான எதிர்வினையை நீ அனுபவித்து தான் ஆகவேண்டும், அதைக்கடந்து செல். இதனால் உனக்கு எந்த தீங்கும் இல்லை. ஆனால் நாவலை முடிக்கும்போது அது பாண்டவர்கள் விண்ணேறும் மகாபிரஸ்தானத்தில் முடியக்கூடாது. மீண்டும் கண்ணனைப் பற்றி பாடி முடி” என்றார். அவ்வண்ணமே வெண்முரசு நாவல் நிரை கண்ணன் பிள்ளைத்தமிழில் நிறைவுற்றது.
மீண்டும் நீலம். நீலத்தில் தொடங்கி நீலத்தில் முடிவுற்றது போல. அவ்வினிமை இன்றும் என்னில் நிறைந்திருக்கிறது. இன்று இரண்டு ஆண்டுகளாகின்றன. இப்போது கூட ஒரு முற்றிலும் எதிர்மறையான கதையை என்னால் எழுத முடியவில்லை. பெரும்பாலான கதைகள் இனிமையில் களிப்பில் தான் முடிகின்றன. வேண்டுமென்றே முயன்றபோதும் கூட கருணையாக வெளிப்படுகிறதே ஒழிய துயராக எதிர்நிலை வெளிப்படவில்லை. நீலத்தின் இனிப்பு என் நெஞ்சிலும் சொற்களிலும் எப்போதைக்குமென குடிகொண்டுவிட்டதென்று நினைக்கிறேன். இத்தருணத்தில் நீலம் என நிறைந்தவனுக்கு என் செல்ல முத்தங்கள்.
இந்நாவலை செம்பதிப்பாக வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரிக்கும் செம்மைசெய்த ஸ்ரீனிவாசன் -சுதா தம்பதியினருக்கும், மெய்ப்பு பார்த்த ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ஹரன் பிரசன்னாவுக்கும் நன்றி. இப்போது மறுபதிப்புக்கு மெய்ப்பு பார்த்திருக்கும் மீனாம்பிகைக்கும், வெளியிடும் செந்தில்குமாருக்கும் நன்றி.
இந்நாவல் வாசகர்களுக்கு ஒரு கனவென சென்று சேர்ந்ததில் ஷண்முகவேலின் ஓவியங்களுக்கு பெரும்பங்குண்டு. வெண்முரசுக்கு அவர் வரைந்த ஓவியங்களிலேயே தலைசிறந்தவை இதில் தான் அமைந்தன என்று சொல்ல முடியும். தனியாக ஓவியத்தொகையாகவும் அவை வெளிவந்துள்ளன. இன்று பயணம் செய்கையில் அந்த ஓவியங்கள் அவருடைய பெயரில்லாமலும் சற்று மாற்றியும் வரையப்பட்டு இந்தியா முழுக்க புழக்கத்தில் இருப்பதை, பல இடங்களில் வழிபடப்படுவதைக் காண்கிறேன். நீலம் ஓவியங்களுடனான செம்பதிப்பு தமிழிலியே அழகான நூல் என்று வாசகர்களால் மதிப்பிடப்பட்டது.
இத்தருணத்தில் இவ்வினிமையின் ஒரு துளியை எங்கேனும் தானும் அறிந்த ஒவ்வொரு வாசகரும் என் நண்பரே என்று சொல்லிக்கொள்கிறேன் நன்றி.
ஜெ
நீலம் மலர்ந்த நாளில் நீலம்- மொழி மட்டும் நீலச்சிலை நீலம் மலர்கள் நீலம் யாருக்காக? நீலம் வரைபடம் கிருஷ்ண சிம்மம் நீலமும் இந்திய மெய்யியலும் குழலிசை சிம்மதரிசனம் இணையும் கண்ணிகளின் வலை குருதியின் ஞானம் ராதையின் உள்ளம்விபூதிபூஷண் பந்தோபாத்யாய
இன்னொரு தமிழ் எழுத்தாளர் என்று சொல்லுமளவுக்கு இங்கே வாசிக்கப்பட்டு பின்தொடரப்படுபவர் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய. ஒவ்வொரு புதிய வாசகனும் ஒரு கட்டத்தில் அவரை கண்டடைகிறான். அவரைப்பற்றிய விரிவான அறிமுகம்
விபூதிபூஷண் பந்தோபாத்யாய
விபூதிபூஷண் பந்தோபாத்யாய – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விழா 2022, கடிதம்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
“விஷ்ணுபுரம் விருது விழா 2022” – இனிமை ததும்பும் வருடாந்திர இலக்கிய நிகழ்வு. இரு நாட்களையும் எண்ணிப் பார்க்கையில் இனிமைப் பனுவல் – “மதுராஷ்டகம்” பாடிய கவியின் மனநிலை எதுவாக இருந்திருக்கும் என்று எட்டிப் பார்த்த உணர்வு. மலரை மெல்லத் தொட்டுப் பார்த்து கை விலகிய பின்னும் விரலில் எஞ்சி இருக்கும் பூவின் மகரந்தம் போல ஒரு தித்திப்பு. நன்றிகள் பலப்பல.
இலக்கிய அமர்வுகள் அனைத்தும் அருமை. மிகு உணர்திறன் கொண்டவர்கள் (Highly Sensitive Persons) எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் எனினும் அந்த மிகு உணர்திறனே அவர்களை படைப்பூக்கம் கொண்டு செயல்பட தூண்டுகோலாகிறது என்பதற்கு எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களின் அனுபவப்பகிர்வுகள் சான்று. ஐ டி துறையின் பணிச்சூழல் பற்றிய பொது பிம்பத்தில் உள்ள பிழைகளைக் கண்டு சரியானதைச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பே எழுத வந்ததன் காரணம் என்றார். மேலும், இலக்கிய செயல்பாடு, ஒரு விலகல் தன்மையுடன் “ஒரு சாரி சொல்லிவிட்டால் போதுமே! ஏனிந்த சிக்கல்?” என்ற பார்வையுடன் சில சூழல்களை கவனிக்கும் தன்மையை தந்திருப்பதையும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கமலதேவி அவர்களின் அமர்வு அன்பே அனைத்துயிரையும் இணைக்கும் சரடு என்பதை மீண்டும் மீண்டும் கண்முன் நிறுத்தியது. “உணர்வுகள் ஒன்றே போல் தானே இருக்கின்றன. இதில் ஆணியம் என்ன? பெண்ணியம் என்ன?” என்பதே அவருடனான உரையாடலின் அடிநாதமாக இருந்தது. பெண் எழுத்தாளர் என்று வரையறைக்குள் வைத்து மதிப்பிட வேண்டாம்; வேண்டுமானால் பெண் என்பதனால் சற்று கூடுதல் கறார்தனத்துடன் தன் எழுத்துக்களை அணுகலாம், மதிப்பீடு செய்யலாம் என்று குறிப்பிட்டார். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று தாத்தன் சொன்னதை, பற்பல நூற்றாண்டுகள் கடந்தும் மாறா அகதரிசனமாக, வலிமையுடனும் அதே சமயம் மென்மையாகவும் அவர் உரையாடல் வெளிப்படுத்தியது. ‘அன்பு’ என்ற ஒன்றின் வேறுவேறு வண்ண வெளிப்பாடுகளே / சிறு சிறு சாயல் மாற்றங்களே பற்று, கோபம், வன்மம், வெறுப்பு முதலான பல்வேறு உணர்வுகளும் என்று மிக அன்புடனே அவையில் முன்வைத்தார்.
விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா அவர்களின் அமர்வு அவரது நீண்ட அனுபவம் மற்றும் தீரா தொடர் வாசிப்பு ஆகியவற்றின் செழுமையைக் காட்டியது. அவரது குன்றா ஊக்கத்தையும் தளரா இலக்கிய ஈடுபாட்டையும் கண்டு ஊக்கமும் வியப்பும் மேலிட்டது. திறன் வாய்ந்த சமையற்கலைஞர்களின் குழாமில் தானொரு சுவைஞன் என்று வெகு அழகாக தனது உரையாடலைத் துவக்கினார். பதிப்புத்துறையின் இடர்பாடுகளையும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளையும் சவால்களையும் முன்வைத்ததோடு, வாசிப்பை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மனிதனைப் பண்படுத்தும் இலக்கியம் மேலும் விரிவான வாசகர் தளத்தைச் சென்றடைய விற்பனையிலும் மொழிபெயர்ப்பிலும் எடுக்கப்பட வேண்டிய முன்முயற்சிகள் பற்றிய அவரது ஆலோசனைகள் வாசிப்பின் மீதான நேசத்தையும் மனிதர்கள் மீதான பாசத்தையும் கோடிட்டு காட்டின.
எழுத்தாளர் அகர முதல்வன் அவர்களின் அமர்வு சற்றே கனத்த மனவுணர்வுகள் சூழ தொடங்கியது என்றாலும், அன்பின் வலிமையையும் அதன் வெளிப்பாடாக நேர்மறை நிலைப்பாட்டையும் நிகழ் அனுபவமாகத் தந்தது. “நாமார்க்கும் குடியல்லோம்” என்றும், கடலில் எறியப்பட்ட போதும் உடலில் கட்டப்பட்ட கல்லே தெப்பமாகும் என்றும் சொல்லித்தந்த மூத்த தாதையின் மொழி, எத்தகைய கடுமையான இடர்ப்பாடு மிக்க சூழலிலும் நேர்மறை அணுகுமுறையையும் நன்னம்பிக்கையையுமே தர வல்லது என்றும்; பாலுக்கு அழுத பாலகனுக்கு இரங்கி, இறை அளித்த பாலின் மிச்சமாய் குழந்தையின் கடைவாயில் சொட்டி நின்ற துளிப்பாலின் எச்சமே தனது வெளிப்பாட்டின் ஊற்றுமுகமாய் இருப்பது என்றும் – மரபின் தொடர்ச்சியையும், அதன் மீட்டெடுக்கும் வலிமையையும் அகர முதல்வன் சுட்டிக் காட்டினார். தனது தீவிர வாசகத் தன்மையே சில சமயம் படைப்பாளராகத் தன்னுள் தயக்கத்தையும் மலைப்பையும் தருவதை வெளிப்படுத்தினார்.
மொழிபெயர்ப்பாளர் குளச்சல் யூசுப் அவர்களின் அமர்வு மிகு சுவாரசியம் கொண்டதாக இருந்தது. அவரது சூழல் தாண்டி இலக்கியத்தில் செயல்பட மொழியாக்க களத்தைத் தேர்ந்தெடுத்ததின் காரணத்தை அவர் மீண்டும் மீண்டும் சொன்ன விதம் அரங்கத்தைப் புன்னகைக்க வைத்தது. பஷீர் அவர்களின் எழுத்தை தமிழுக்கு கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் மொழியாக்கம் என்று வரும்போது எழும் பொதுவான சிக்கல்களையும் (கதைக்களம் சார்ந்த பண்பாடு, பிரத்யேக வட்டார வழக்கு, மலையாள-சமஸ்க்ருத-அரபுச் சொற்களை கையாளுதல்) குறிப்பிட்டார். தானே முதல் வாசகனாய் நின்று தனது மொழியாக்க தரத்தில் கவனம் கொள்வதையும், சீர் செய்து திருப்தி கொள்ளுந்தோறும் இருக்கையில் இருந்து எழுந்து சில அடிகள் நடந்து தானே அகம் மகிழ்ந்த பின் வந்தமர்ந்து பணியில் தொடர்ந்து ஈடுபடுவதையும் சுவைபடக் கூறினார். மலையாள இலக்கியங்களை அம்மொழியிலேயே வாசித்துணர வேண்டும் என்று முயன்று மொழி கற்றதையும் மொழியாக்கம் செய்யும் போது இணையான தமிழ் சொற்களைக் கண்டடைய மேற்கொள்ளும் முயற்சிகளையும் விவரித்தார். சங்கப்பாடல்களை மலையாளத்திற்கு கொண்டு சென்றதையும் இஸ்லாமிய நூல் தொகுப்பிற்கு எடிட்டராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி அவர்களின் அமர்வு மரபு அவருக்கு கையளித்ததையும், மரபுத்தொடர்ச்சியில் பின்னுள்ள கண்ணிகளைத் தொடர்ந்து செல்லுந்தோறும் நிகழும் கண்டடைதல்களையும் விளக்குவதாக அமைந்தது. வாசிப்பு மற்றும் படைப்பிக்கச் செயல்பாட்டினால் தன வாழ்வில் நிகழ்ந்த முன்நகர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பணிக்கு சேர்ந்த இடத்தில இருந்த நூலகமும், கி.ரா. அவர்களுடனான உறவும் தன்னை செழுமைப்படுத்தியதை க் குறிப்பிட்டார்.
எழுத்தாளர் வெண்ணிலா அவர்களின் அமர்வு ஒரு காலகட்டத்தையே கண் முன் கொண்டு வந்தது. திராவிட இயக்கத்தில் பற்று கொண்டிருந்த தனது தந்தையினால் தனக்கு கிடைத்த வாசிப்புவெளி, சுதந்திரம் மற்றும் அறிவுச்சூழலுடனான தொடர்பு ஆகியன தனது ஆளுமையை வடிவமைத்ததை, தனது இலக்கிய செயல்பாட்டை விரிவடைய வைத்ததைக் குறிப்பிட்டார். புனைவு – அபுனைவு எதுவாயினும் வரலாற்று செய்திகளை/தரவுகளை சேகரிக்க மேற்கொள்ளும் களப்பணிகள் கோரும் உழைப்பை, அதில் உள்ள சவால்களை தன அனுபவங்களைக் கொண்டு விளக்கினார். வரலாற்றுத் தொடர்புடைய தரவுகளைக் கண்டடையுந்தோறும் அடையும் புதிய திறப்புகளையும் அதனால் எழும் நிறைவையும் சுட்டிக் காட்டினார்.
கண்முன்னே இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்ந்த இந்த அமர்வுகளுக்குப் பிறகு திரு. செந்தில் அவர்களின் ‘வினாடி-வினா’ நிகழ்ச்சி காலம் கடந்தும் கலை ஆளுமைகளை நினைவுகளின் ஊடே கண்டெடுக்கும் களிப்பினைத் தந்தது. உற்சாகமும் பரபரப்பும் கொப்பளிக்க அனைவரும் ஆவலுடன் பங்கெடுத்தனர்.
கற்றதும் பெற்றதும் என அகம் நிறைத்த முதல் நாள் நிகழ்வுகள்!
எண்ண எண்ண மகிழ்ச்சி தரும் நினைவுகள்!
நன்றி.
அன்புடன்
அமுதா பாலசுப்ரமணியம்
வல்லினம் இதழும் என் குடும்பமும்
வல்லினம் 2023 இதழில் எங்கள் குடும்பமே எழுதியிருக்கிறது. என்னுடைய பெருங்கை என்னும் கதை, அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் என்னும் சிறுகதை (அஜிதன் எழுதிய முதல் சிறுகதை), அருண்மொழி நங்கை எழுதிய விமர்சனக் கட்டுரை ஆகியவை வெளியாகியுள்ளன. ம.நவீன் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா பற்றி எழுதியிருக்கிறார். ஒருவகையில் வல்லினமே என்னுடைய குடும்பம் போலத்தான்.
வல்லினம் இணைய இதழ்வாசிப்புச் சவால்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுனில் கிருஷ்ணன் ஆயிரம் மணிநேர வாசிப்புச் சவால் ஒன்றை தொட்ங்கினார். எந்த நூலாக இருந்தாலும் ஓராண்டில் ஆயிரம் மணிநேரப் போட்டி. அதில் இறங்கிய அனைவரிலும் மிக ஆழமான சிந்தனைமாற்றத்தை, ஆளுமை மலர்ச்சியை அது உருவாக்கியது. பலர் எழுத்தாளர்கள் ஆனார்கள். இதழ்கள் நடத்த தொடங்கினர். இலக்கியச் செயல்பாட்டாளர்களாயினர்
நான் அருகிருந்து பார்த்தது அருண்மொழியை. ஏற்கனவே அவள் நல்ல வாசகி. ஆனால் பல ஆண்டுகள் அலுவலக உழைப்பின் சலிப்பும் விலக்கமும் அவளிடமிருந்தன. ஓர் எரிச்சல் அவள் ஆளுமையில் இருந்துகொண்டே இருந்தது. ஓராண்டில் 1000 மணிநேரம் தீவிரமாக வாசித்த அருண்மொழி முற்றிலும் வேறொரு ஆளுமையாக ஆனாள். அவளுடைய அகமொழி தெளிவடைந்தது. அது தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. எழுத ஆரம்பித்தாள். மேடைகளில் பேசுகிறாள். இன்றைய அருண்மொழி உற்சாகம் மட்டுமே கொண்ட ஒருத்தி
வாசிப்புச் சவாலை மீண்டும் எப்படி தொடங்குவது என மயிலாடுதுறை பிரபு எழுதியிருக்கிறார்.
December 30, 2022
மேடையுரை பயிற்சி முகாம்
Public speaking and giving speech concept. Hand holding microphone in front of a crowd of silhouette people with lens flare and sun light leak bokeh. Singing to mic in karaoke or talent show concept.பொன்னியின் செல்வன் மேடையில் என்னுடைய 7 நிமிட உரையை பற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். 7 நிமிட உரை உலகமெங்கும் புகழ்பெற்று வருகிறது. சுருக்கமாக, ஆனால் முழுமையாக, ஏழே நிமிடத்தில் ஓர் உரையை ஆற்றமுடியும். கவனச்சிதறல் இல்லாமல் ஒரு விஷயத்தை வாசகர்களிடம் கொண்டுசேர்ப்பதற்கு அது மிக உதவியான ஒரு வழி.
அப்போது நண்பர்கள் அந்த வகையான உரைக்கான ஒரு பயிற்சிவகுப்பு வைத்தாலென்ன என்று கேட்டனர். வரும் 2023 , ஜனவரி 20, 21, 22 (வெள்ளி, சனி, ஞாயிறு) தேதிகளில் ஒரு பயிற்சி வகுப்பு முகாமை ஒருங்கிணைக்கவிருக்கிறேன். முப்பதுபேர் பங்கெடுக்கலாம். முழுமையாகப் பங்குகொள்ளவேண்டும். கட்டணம் உண்டு, கட்டணம் கட்டமுடியாதவர்கள் அறிவித்தால் பணம் ஏற்பாடு செய்யமுடியும்.
மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ளோர் பெயர், வயது, தொலைபேசி எண், ஊர் ஆகிய தகவல்களுடன் jeyamohan.writerpoet@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதலாம்
ஜெ
ஏற்பும் நிறைவும்
படையல் சிறுகதை முன்னரே படித்த ஒன்றுதான் ஆனால் இன்று வெற்றிராஜா வின் படையல் எனும் புதையல் கட்டுரையை படித்து மீண்டும் ஒருமுறை படித்தேன். வாழ்வின் / படைப்பின் பல ரகசியங்களைக் கூறுகிறதோ என்றும் மீண்டும் மீண்டும் படித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும் என்றும் எண்ணம் வந்தது.
முக்கியமாக வெற்றிராஜா கூறும் ” நம் எண்ணங்களை சீராக்கி வாழ்வையே மாற்றவல்ல படைப்புகளை பொழிந்து கொண்டேயிருக்கும் மகத்தான கலைஞன் ஜெயமோகனுக்கு இன்றைய சமூகமும் நாளைய சமூகமும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஜெயமோகனை கொண்டாடுதல் என்பது நமது முன்னோர்கள் தவறவிட்ட பாரதியை, புதுமைபித்தனை கொண்டாடுவதும் கூட. ஆகவே படையலையும் படைத்தவனையும் கொண்டாடுவோம்.”
நாங்கள் மனப்பூர்வமாக உங்களை கொண்டாடுகிறோம் உங்கள் மேல் மதிப்பும் அன்பும் கொண்டு இருக்கிறோம் . ஆனால் இது போதுமானதா என்று புரியவில்லை . கம்பன் , வள்ளுவர் போன்ற பழந் தமிழ் படைப்பாளிகளுக்கு கிடைத்த பெயரும் புகழும் சென்ற நூற்றாண்டுப் படைப்பாளிகளுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் நமக்கு உண்டு. தமிழ் சமூகமும் வாசகர்களும் அரசும் மீண்டும் அதை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். குறைந்த பட்சம் வாசகர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் உங்களுக்கு மன நிறைவைத் தருகிறதா ?
அன்புடன்
நாரா சிதம்பரம்
புதுக்கோட்டை
அன்புள்ள சிதம்பரம்,
வெவ்வேறு தருணங்களில் இத்தகைய உணர்ச்சிகரமான கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. அவை என்னை சற்று தயங்கச் செய்த காலம் இருந்தது. இன்று அத்தயக்கம் இல்லை. இந்த நெகிழ்வு எனக்கானது அல்ல, என் கலைக்கானது என்று இப்போது உணர்கிறேன்.
ஓர் எழுத்தாளனை வாசிக்கையில், அவன் படைப்பு நம் ஆத்மாவை தொடும்போது, உருவாகும் அணுக்கம் வேறெவரிடமும் உருவாவதில்லை. இதை உண்மையான இலக்கிய அனுபவம் உடைய ஒருவர் உடனே புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு ஒன்று வாழ்வில் நிகழாதவர்கள் எத்தனை விளக்கினாலும் கொள்ள முடியாது.
அவ்வாறு புரிந்துகொள்ளாதவர்கள் தங்கள் எல்லைக்குள் நின்றுவிடுபவர்கள் என்றால் பிரச்சினையில்லை. அவர்கள் இலக்கியம் பற்றி பேசுவார்கள் என்றால் இந்த அந்தரங்கமான உறவை உணரமுடியாமல் அதை தாக்கிக்கொண்டே இருப்பார்கள். ஏளனம் என தொடங்கி எரிச்சல், வசை என முடியும் அது. பெரும்பாலும் இலக்கியத்தில் இருந்து தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த, தாங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அரசியல் தரப்புகளையோ கொள்கைகளையோ மட்டுமே எடுத்துக்கொள்பவர்கள் இவர்களில் முதல்வகை. வெவ்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து கற்றவற்றை இலக்கியம் மீது போட்டு ஆய்வுசெய்ய மட்டுமே அறிந்த கல்வித்துறையாளர்கள் இரண்டாம் வகை. அவர்கள் அனுதாபத்திற்குரிய எளிய உள்ளங்கள் மட்டுமே.
கற்றல் வழியாக உருவாகும் உறவே இவ்வுலகில் இதுவரை மானுடர் ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொள்ளும் உறவுகளில் மகத்தானது. பெற்றோர், துணைவி, குடும்பம் என உருவாகும் எல்லா உறவும் இரண்டாம்நிலையில் உள்ளதே. இன்று சாக்ரடீஸ் பிளேட்டோ அரிஸ்டாடில் என்றே நாம் அறிகிறோம். அவர்களின் பெற்றோரை அல்ல.
இது ஏன் இவ்வாறு இருந்துகொண்டிருக்கிறது? மனிதனுக்குள் அறிதலுக்கான பெரும்விழைவு உள்ளே பொறிக்கப்பட்டுள்ளது. அறிதலின்போது மட்டுமே அவன் அடையும் நிகரற்ற இன்பம் ஒன்று உண்டு. அறிவின்பமே மனிதனை விலங்குகளில் இருந்து பிரித்தது. மானுடக்கலாச்சாரமே அவ்வாறு உருவானதுதான். அந்த அடிப்படை இல்லையேல் மானுடமே இல்லை. இங்கே மானுடம் இவ்வண்ணம் திகழ்வதற்கான ஆணை அறிவின்பம் எனும் வடிவில் மானுடனுக்குள் என்றோ எவ்விதமோ வந்து சேர்ந்தது
அந்த அறிவின்பத்தால்தான் ஆசிரியனும் மாணவனும் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்புவியில் இருக்கும் முதன்மையான விசை ஒன்றால் அவர்களின் உறவு நிகழ்கிறது. பிறப்புத்தொடர்ச்சியை உருவாக்கும் பொருட்டு மானுடனுள் பொறிக்கப்பட்டுள்ள காமமும், குழந்தைப்பற்றும், தன்னலமும் எல்லாமே அதற்கு அடுத்த நிலையில் இருப்பவைதான்.
ஆசிரியனுக்கு அடுத்த உயர்படியில் இருப்பது தெய்வம் மட்டுமே. தெய்வம் எனும்போது பிரபஞ்சசாரமான ஒன்று எனக் கொள்ளலாம். இங்கனைத்திலும் நாம் உணரும் ஒன்று. ஒரு மலருடன், காலையொளியுடன், விரிவானுடன், நதியுடன் நம்மை இணைக்கும் பேருணர்வாக அது நம்மில் நிகழ்கிறது. நம்மை கடந்து நாம் அறியும் ஒன்று.
எழுத்தாளனை ஆசிரியன் என்றே நம் மரபு சொல்லிவருகிறது. இலக்கியம் எப்படி எந்நிலையில் நிகழ்ந்தாலும் கற்பித்தல் என்னும் அடிப்படையை விட்டு அது விலகவே முடியாது. ஆனால் இலக்கியம் கற்பிக்கும் விதம் வேறு. அவ்வகையிலேயே பிற ஞானங்களில் இருந்து அது வேறுபடுகிறது. பிற ஞானங்களை அளிக்கும் ஆசிரியர்கள் போதனை வழியாக கற்பிக்கிறார்கள். அவர்கள் கடந்து சென்றவற்றை நமக்கு அளிக்கிறார்கள். அவர்கள் கற்பிப்பனவற்றில் இருந்து வெளியே அவர்கள் இருக்கிறார்கள்.
இலக்கியம் போதிப்பதில்லை, அது ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் காட்டி அதை வாசகன் வாழச்செய்கிறது. வாசகன் கற்பன அனைத்தும் அவனே வாழ்ந்து அறிவன. ஆகவே அவை அவனுடைய ஞானங்களே. புனைவிலக்கியத்தை எழுதுபவனை அவ்வெழுத்தினுள் நாம் கண்டடைகிறோம். அவனுடன் வாழ்கிறோம். ஆகவே அவனும் நம்முடன் ஓர் உரையாடலில் இருப்பதாக எண்ணுகிறோம். கற்பிக்கும் ஆசிரியனிடம் உருவாகும் மதிப்பு மிக்க விலகல் பலசமயம் இலக்கிய ஆசிரியனிடம் உருவாவதில்லை. அணுக்கமும் நெகிழ்வுமான உறவே உருவாகிறது. நம் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட, நம் இன்பங்களில் உடனிருந்த, நம்முடன் வாழ்ந்த ஒருவருடன் நாம் கொள்ளும் உறவு போன்றது அது.
அந்த உறவு வழியாகவே இலக்கியத்தை உண்மையில் உணர்ந்தறிய முடியும். அந்த உறவு கொள்பவர்களுக்காகவே இலக்கியம் எழுதப்படுகிறது. இலக்கியத்தில் இருந்து அரசியலை அடைவது என்றால், இலக்கியத்தை ஓர் செத்த உடலென ஆய்வு செய்வது என்றால் அந்த உறவு இருக்கலாகாது. அந்த உறவு அரசியலாய்வு அல்லது கல்வித்துறை ஆய்வுக்குரிய விலக்கத்தை இல்லாமலாக்கிவிடும்.
ஆகவே அவ்விரு தரப்பினரும் இலக்கியவாதியுடன் வாசகன் உணர்வுநெருக்கம் கொள்ளலாகாது, இலக்கியவாதியுடன் விலக்கம் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் பொதுவாகவே வாசிப்புக்குரிய ஓர் இலக்கணமாக மிக அசட்டுத்தனமாக சொல்லிக்கொண்டிருந்தனர். பத்தாண்டுகள் ஒலித்த அந்தக்குரல் இன்று மதிப்பிழந்துவிட்டது.
அழகியல் விலக்கம் என ஒன்று உண்டு. அது முற்றிலும் வேறானது. வாழ்க்கையை நேரடியாக அப்படியே இலக்கியத்துடன் சம்பந்தப்படுத்துவது இலக்கியப்படைப்பை அறிய தடையாக ஆகும் என்னும் கருத்து அது. உதாரணமாக, உங்களுக்கு ஒரு காதல்தோல்வி உள்ளது. ஆகவே காதல்தோல்வி பற்றிய எந்த கதையும் உங்களை கண்கலங்கச் செய்யலாம். அது இலக்கிய வாசிப்பு அல்ல. இலக்கியவாசிப்புக்கு அழகியல்சார்ந்த ஒரு விலக்கம் தேவை. இலக்கியப்படைப்பை அது இலக்கியப்படைப்பு என்னும் எண்ணத்துடன், அதன் அழகியலை அறியும் அளவுக்கு தனிப்பட்ட விலக்கத்துடன் வாசிக்கும் நிலை அது.
இலக்கியவாதியிடம் வாசகன் கொள்ளும் உணர்ச்சிகரமான உறவு மிகமிக தூய்மையானது என நான் நினைக்கிறேன். அது நான் என் உளம்கவர்ந்த ஆசிரியர்களுடன் கொண்டுள்ள உறவில் இருந்து நான் அடைந்த முடிவு. அதை குறைத்துரைக்கும் அசட்டுக்கூற்றுக்களை எல்லாம் எவ்வகையிலும் நான் பொருட்படுத்துவதில்லை. அந்த உறவு என்னை அந்த ஆசிரியரை மிகமிக அணுகிப் பார்க்கச் செய்கிறது. அந்த ஆசிரியரின் எழுத்துக்களின் ஆழங்களுக்கு மிக எளிதாகச் செல்ல வைக்கிறது.
இதை நீங்களே பார்க்கலாம். எளிய ஆனால் உணர்வுரீதியாக படைப்பாளியுடன் உறவுள்ள ஒரு வாசகர் ஒரு படைப்பைப் பற்றிச் சொல்லும் அசலான, ஆழமான கருத்துக்களை விமர்சகர் என்றும் ஆய்வாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்களால் கூறமுடிவதில்லை. அவர்களிடமிருந்து நல்ல வாசகன் கற்க ஒரு வரிகூட இருப்பதில்லை. காரணம் அந்த அணுக்கம்தான். ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான அன்புதான் ஞானத்தின் ஊடகம் என்பார்கள். அதுவே இங்கும்.
ஆக, ஓர் ஆசிரியனுக்கு வாசகன் செய்யவேண்டியது என்னவாக இருக்கமுடியும்? அவனை முழுதறிவதுதான். அவனை தொடர்ந்து அணுகுவதுதான். அவன் எழுதிய எல்லாவற்றையும் வாசிப்பதுதான். அவனுடைய வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் தானும் உரியவன் ஆவதுதான். அவன் சரிவுகளையும் இருட்டுகளையும்கூட அறிவதுதான். என் வாசகர்களிடம் நான் எதிர்பார்ப்பது அதையே. உணர்வுரீதியாக உடனிருப்பது.
அதற்கப்பால், நான் தமிழின் சூழல் காரணமாக ஓர் அமைப்பாளனாக, ஒருங்கிணைப்பாளனாக செயல்படவேண்டியிருக்கிறது. தமிழிலக்கியத்தை ஒட்டுமொத்தமாக முன்வைப்பவனாக ஆகியிருக்கிறேன். அதற்கான செயல்களில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறேன். ஒரு வாசகன் வாசிப்பதற்கு அப்பால் எனக்காகச் செய்யக்கூடுவது அச்செயல்களிலும் உடனிருப்பதுதான்.
நான் எழுதவந்தபோது தமிழ்ச்சூழல் ஆயிரம் வாசகர்களுக்குமேல் இல்லாத ஒரு குறுங்குழுவாக இருந்தது. நான் சிற்றிதழ்களிலேயே எழுதிவந்தேன். ஆகவே எனக்கு எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. அந்நிலையில் இருந்து இன்று வந்திருக்கும் தொலைவைப் பார்த்தால் எனக்கு மிகச்சிறந்த வாசகர்களும், என் காரியங்களுடன் உடன் நிற்கும் அற்புதமான நண்பர்களும் அமைந்துள்ளனர் என்றே நினைக்கிறேன். ஆகவே கௌரவிக்கப்பட்டவனாக, ஏற்கப்பட்டவனாகவே உணர்கிறேன். நிறைவுடனேயே இருக்கிறேன்.
ஜெ
பெர்சே
மலேசியாவில் முழுக்க முழுக்க காந்திய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஜனநாயகத்திற்கு, சமநீதிக்குமாக போராடிவரும் அமைப்பு பெர்சே. பெர்சே பேரணிகள் என்ற பெயரில் நடந்த மாபெரும் மக்கள் அணிவகுப்புகள் மலேசிய அரசியலில் ஆழமான விளைவை உருவாக்கியவை. இந்தியாவில் வால்ஸ்டீரீட் மறிப்பு போன்ற போராட்டங்கள் பேசப்பட்ட அளவு இவை பொது ஊடகங்களில் பேசப்படவில்லை.
பெர்சே பேரணிகள்
விஷ்ணுபுரம் விருது விழா கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
முதல் நாள் ராஜஸ்தான் அரங்கில் நுழையும் போது படிக்கட்டில் நின்று ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார் ஜெ. கீழே இறங்க எத்தனித்துக் கொண்டிருந்தவரை மரியாதை கலந்த பணிவோடும் உள்ளக்கிளர்ச்சியோடும் நின்று நோக்கிக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து செல்லும்போது என்னைப் பார்த்து புன்னகையுடன் “வாங்க” என்பதுபோல் தலை அசைத்தார். திரும்பி அவரை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் முகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்த பெருங்கனிவை உணர்ந்தேன். ஓடிச்சென்று கட்டியணைக்கத் தோன்றியது.
முதல்நாள் அமர்வில் கமலதேவி மற்றும் அகரமுதல்வன் அமர்வுகள் உச்சங்களாக இருந்தன. கமலதேவியும் கார்த்திக் புகழேந்தியும் எவ்வளவு பெரும் வாசிப்பாளர்கள் என்பதை அறிய முடிந்தது. ஈரோடு கிருஷ்ணனின் துள்ளல் கேள்விகளின் ரசிகன் நான்.
சாருவை முதன்முதலாக நேரில் பார்க்கிறேன். விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருடைய தளத்தை தினமும் வாசிக்கிறேன். தனக்கான தண்ணீர்த் தேவை பற்றி எழுதியிருந்தார். அவர் இருக்கை அருகில் தண்ணீர் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பத்தாவது நிமிடத்தில் ஒரு நண்பர் சிறிய தண்ணீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தார். மகிழ்ச்சி.
இடைவேளையில் சாரு வெளியில் பேசிக்கொண்டிருந்தார். நான் கீழே சென்று டீ குடித்துவிட்டு வந்தபோதும் அதே இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை கீழே டீ இருப்பது அவருக்குத் தெரியவில்லையோ என்று நினைத்தேன். சரி, நாமே கொண்டுவந்து கொடுக்கலாம் என்று நினைத்து, அவரின் மிக அருகில் நின்று கொண்டிருந்த பௌன்ஸர் அருணின் தோளைத்தொட்டு, “சார் டீ குடிப்பாரா?” என்றேன். “டீ குடிக்க மாட்டார், காபி சொல்லியிருக்கோம். அதுக்காக வெயிட்டிங்” என்றார். சாருவிடம் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.
அகரமுதல்வன் சைவ இலக்கியங்கள் அவர் வாழ்வில், எழுத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை அழகாக விளக்கினார். “நான் சிவ பதியங்களைக் கேட்டு வளர்ந்தவன், எனக்கு அவநம்பிக்கை இருக்க முடியாது, வராது, வர முடியாது,”.
கேள்விகள் கேட்கும்போது சிலர் ஒரே மூச்சில் இரண்டு கேள்விகளைக் கேட்கிறார்கள். இரண்டு கேள்விகளையும் நினைவில் வைத்து பதில் சொல்ல முடிவதில்லை. பெரும்பாலும் ஒரு கேள்விக்கான பதிலே வருகிறது. ஒரு வாய்ப்பில் ஒரு கேள்வி மட்டுமே என்பதைக் கடைபிடித்தால் நேரம் மிச்சமாவதுடன், மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிட்டும்.
எப்போதும் போல திருமண விருந்துக்கு சற்றும் குறைவில்லாத விருந்து. மூன்று வேளையும் விருந்து என்பது சற்றே வியப்படையச் செய்தது.அகரமுதல்வனின் “மாபெரும் தாய்”, பாவண்ணனின் “பொம்மைகள்” புத்தகங்களை வாங்கிக்கொண்டேன். விஜயா வேலாயுதம், கனிஷ்கா மற்றும் மேரியுடனான அமர்வுகள் பதிப்புலகம் பற்றிய புரிதல்களைத் தந்தன.
சாருவுடனான அமர்வு தீவிரமானதாகவும் செறிவாகவும் இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் கறாரான ஒழுங்கைக் கடைபிடிப்பவர். தான் எப்படி விழிப்புடன் தனது எழுத்தின் கட்டமைப்பை, முறையை உருவாக்குகிறேன் என்பதை விளக்கினார். சீலே சென்று மாட்டிறைச்சி உண்ண முடியாமல் பட்டினி கிடந்த சாரு, பசு எனக்குத் தாய் மாதிரி, தாயை எப்படி உண்பது என்றார். சாருவால் உண்ண முடியாத அந்த உணவை வெளிநாடுகளில் தான் விரும்பி உண்பதை ஜெ குறிப்பிட்டார்.
ஜெவின் உரை சாருவின் இலக்கியத்தை, அவர் எழுத்தின் நோக்கத்தை, அவசியத்தை ஆழமாக புரிந்துகொள்ள உதவியது.தி அவுட்சைடர் மிகப்பிரமாதம். இளம் வயதிலேயே சாரு எவ்வளவு பெரிய வாசிப்பு வெறியனாக இருந்திருக்கிறார்.
சாருவை இனிமேல் தான் நான் வாசிக்க வேண்டும். ஸீரோ டிகிரியை இரண்டு முறை தொடங்கி உள்நுழைய இயலாமல் நிறுத்தி விட்டேன். மிலரப்பா கட்டிய வீட்டை இடிக்கச் சொன்ன போகரைப் போல நான் கட்டிய வீட்டை இடிக்க சாரு தயாராக இருக்கிறார். இடிக்கக் தயாராக வேண்டியது நான் தான்.கர்மா என்ற தலைப்பில் சாரு எழுதியிருந்த மிலரப்பா பற்றிய இரண்டு கட்டுரைகளைத் தேடி வாசித்து விட்டேன்.
சாருவின் விருது விழா ஒரு வரலாற்று நிகழ்வு. “வரலாறு நிகழும் போது அங்கே இருக்கும் ஈ கூட வரலாற்றில் இடம் பெறும்” என்பதை மேற்கோள் காட்டினார் விஜயா வேலாயுதம் அவர்கள். ஒரு ஈயாக நானும் இந்த தமிழிலக்கிய வரலாற்றுத் தருணத்தில் பங்கெடுத்த நிறைவு.
வாழ்வின் தீவிரமான இரண்டு நாட்கள். விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
சக்தி பிரகாஷ்.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விழா ஒரு மறக்கமுடியாத நினைவு. நான் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் ஒரு சம்பிரதாயத்தன்மை இருக்கும். பேச்சுக்களில் கண்டெண்ட் கூட சம்பிரதாயமானதாகவே இருக்கும். புதிசாக ஒன்றுமே காதில் விழாது. ஆனால் அதேசமயம் ஒரு வித ஒழுங்கும் இருக்காது. இஷ்டப்படி தொடங்குவார்கள். நீட்டி நீட்டி செல்வார்கள். என்ன பேசுகிறார்கள் என்பதிலும் கட்டுப்பாடு இருக்காது.
மாறாக விஷ்ணுபுரம் அரங்குகள் மிகமிக கறாராக திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் பேசப்பட்ட கண்டெண்ட் பல திசைகளிலும் சுதந்திரமகா சென்றது. ஏராளமான விஷயம். ஈழவரலாறு, தொன்மம், தனிநபருக்கும் இலக்கியத்துக்குமான உறவு, ஐடி உலகம் எல்லாமே பேசப்பட்டது. எதுவுமே மேலோட்டமான பேச்சு இல்லை. மிக மிக ஆழமான விவாதங்கள். தமிழக இலக்கியச் சூழலில் இன்னொரு இலக்கிய களம் இதைப்போல கிடையாது.
அரங்கில் கார்த்திக் பாலசுப்ரமணியம், கார்த்திக் புகழேந்தி ரெண்டுபேரும் கொஞ்சம் தடுமாறினார்கள். Hearsay எல்லாம் மேடையிலே சொல்லக்கூடாது. ஏனென்றால் அதை மறுக்க அங்கே ஆளில்லை என்றால் அது அவதூறாக ஆகிவிடும். பதில்களை சமாளிக்க நினைக்கக்கூடாது. முடிந்தவரை நேர்மையாகச் சொல்லவேண்டும். கமலதேவி நினைத்ததை விட தெளிவாகவும் உறுதியாகவும் பேசினார். அகரமுதல்வன் , அ.வெண்ணிலா ரெண்டுபேரும் உறுதியாக பேசினர். அவர்களுக்கு நல்ல மேடை அனுபவம் உண்டு என நினைக்கிறேன்.
விழாவில் அருணாச்சலப்பிரதேச கவிஞர் மமங் தாய் பேச்சு ஆச்சரியமாக இருந்தது. இங்கே கேட்கப்பட்ட பல கேள்விகளை அவர் இதற்கு முன் வழக்கமான சர்வதேச விழாகளீல் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவருடைய ஒரு கதாபாத்திரம் சமவெளி கதாபாத்திரம்போல யோசிக்கிறதே என்ற கேள்விக்கு அவர் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் முதலில் அந்த கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். இப்படி கூர்ந்து வாசிப்பவர்கள் அதிகமாக இலக்கிய விழாக்களுக்கு வருவதில்லை.
சிறந்த விழா. பாராட்டுக்கள்
எஸ். சிவராஜ் ஆனந்த்
மைத்ரியின் மலைப்பயணம்
அன்புள்ள ஜெ
மைத்ரி நாவல் படித்தேன். நாவலின் அமைப்பிலேயே ஒரு கவித்துவம் இருந்தது. உடனே கிளம்பி இமையமலைப்பக்கம் ஒரு பயணம் செய்யவேண்டும் போல் இருந்தது. அழகான ஒரு ரொமாண்டிஸிசம். தமிழிலக்கியத்தில் ரொமாண்டிஸிசமே அழிந்துபோய்விட்டது. எல்லாமே ஒன்று வறுமை, கொடுமை என்று எழுதுகிறார்கள். அல்லது அகச்சிக்கல்கள். இந்த நாவல் ஒரு நல்ல பயணம்போல இருந்தது. அழகான நாவல். அதைத்தான் சொல்லவேண்டும்.
இந்த நாவல் சொல்லும் விஷயம் ஒரு கனவுதான். அதை ரொமாண்டிசைஸ் செய்துதான் சொல்லமுடியும். ஹரனும் மைத்ரியும் கண்டடையும் அந்த உலகத்தை நேரடியாக சாதாரணமாகச் சொன்னால் ஒன்றுமே இல்லைதான். ஒரு சின்னப் புள்ளிதான். ஆனால் அதை மிக அழகான மொழியில் படிக்கப்படிக்க தித்திக்கும்படியாக எழுதியிருக்கிறார்
இந்த வீடியோவை நான் மைத்ரி நாவலுடன் இணைந்து பார்த்தேன். இது எனக்கு இன்னொரு அனுபவத்தை அளித்தது. நான் இமையமலை போனதில்லை. மைத்ரி வாசித்ததனால் நான் ஏற்கனவே போனதுமாதிரியே இருந்தது.
சிவக்குமார்.கே
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


