Jeyamohan's Blog, page 656
December 24, 2022
விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா – கடிதம்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நாவலின் 25 ஆவது ஆண்டு இது என்பது மனக்கிளர்ச்சியை அளித்த செய்தி. நான் அந்நாவல் வெளிவரும்போது 6 வயதான குழந்தையாக இருந்திருப்பேன். நான் அதை 4 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். விஷ்ணுபுரம் எனக்கு முழுக்க பிடி கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. ஆனால் என் வாழ்க்கையில் அது ஒரு திருப்புமுனையான நாவல். நான் அதை மீண்டும் வாசிக்கவேண்டுமென நினைத்திருக்கிறேன்.
விஷ்ணுபுரம் எனக்கு என்ன தந்தது? நான் அது வரை மதம், இறைவன் , ஆன்மிகம் எல்லாமே போலியானவை என்று நம்பியிருந்தேன். அல்லது அறிவில்லாதவர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்று வேண்டிக்கொள்வது என்று நினைத்தேன். விஷ்ணுபுரம் வாசிப்பதற்கு முன் அதில் சந்தேகமே இல்லை. இன்று நினைக்கிறேன் அது எவ்வளவு அசட்டுத்தனமான புரிதல் என்று. அவ்வளவு போலியான அல்லது அசட்டுத்தனமான ஒன்றுக்காக இத்தனை மாபெரும் கோயில்களை கட்டியிருப்பார்களா என்றும் இத்தனை பாடல்களையும் காவியங்களையும் எழுதியிருப்பார்களா என்றும் நான் யோசிக்கவே இல்லை.
விஷ்ணுபுரத்தின் சாராம்சமாக இருப்பது ஞானத்தேடல். ஞானம் என்றால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்ன என்றும் அதில் நான் எங்கே எப்படி பொருந்துகிறேன் என்றும் தெரிந்துகொள்வதுதான். எந்த மனிதருக்கும் இந்த கேள்விக்கான விடை தேவை. பலர் பிறர் சொன்ன பதில்களைக்கொண்டு சமாதானம் ஆகிவிடுவார்கள். பாவபுண்ணியம், தெய்வச்செயல் என்றெல்லாம் ஏதோ ஒரு பதில் எல்லாருக்கும் உண்டு. சொந்தமாக சில பதில்களைச் சிலர் தேடுகிறார்கள். அவர்கள்தான் ஆன்மிகத்தேடல்கொண்டவர்கள்.
அந்த ஆன்மிகத்தேடல் எப்படி காலந்தோறும் நடைபெறுகிறது என்று காட்டும் நாவல் விஷ்ணுபுரம். அந்தத் தேடல் வழியாக என்ன என்ன அமைப்புகள் உருவாகி மதங்களாக ஆகின்றன என்று காட்டுகிறது. அதை மீறி புதிய புதிய கேள்விகளுடன் மேலும் மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அதிலுள்ள பாவனைகள், நடிப்புகள் எவ்வளவு. அதற்கும் நம் வாழ்க்கைக்குமான தொடர்புகள் எவ்வளவு சிக்கலானவை. விஷ்ணுபுரம் மனித அறிவு என்பதே இந்த தேடலின் விளைவாக உருவானதுதான் என்று காட்டுகிறது.
விஷ்ணுபுரம் நாவல் 25 ஆம் ஆண்டு கொண்டாடுவதை ஒட்டி ஒரு நல்ல விழாவோ கருத்தரங்கமோ எல்லாம் ஏற்பாடு செய்திருக்கவேண்டும். நீங்கள் அதைச் செய்யவேண்டும் என விரும்புகிறேன். அவசியமான பணி அது.
நா. கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
எங்கள் அமைப்பின் நெறிகளில் ஒன்று என் நூல்களுக்காக எதையும் செய்வதில்லை என்பது. அது நான் நன்கொடை பெறுவதன் அடிப்படையான நேர்மையை இல்லாமலாக்கிவிடும் செயல். எல்லா விழாக்களும் பிற படைப்பாளிகளுக்காகத்தான்.
விஷ்ணுபுரம் விழாவில் என் பிரியத்திற்குரிய நண்பர் ராம்குமார் இ.ஆ.ப(மேகலாய) விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பை வெளியிட சமீரன் (கோவை ஆட்சியர்) பெற்றுக்கொண்டார். முற்றிலும் சாதாரணமாக, சாப்பிடும் இடத்தில் நடந்தது அது. அதுவே ஒரு விழாதான்
ஜெ
விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழாதனிவழிப் பயணி – வெளியீடு
அன்புள்ள ஜெ,
சாரு நிவேதிதா பற்றிய கட்டுரை வேண்டும் என்று ஒருவரிடம் நீங்கள் கேட்டதாகவும், அவர் வசைபாடி அனுப்பியதாகவும் அவரே எழுதி ஒரு பதிவு சுற்றிக்கொண்டிருக்கிறது. அவரிடம் நீங்கள் கட்டுரை கேட்டது உண்மை என்றால் அவரை எந்த அளவில் மதிக்கிறீர்கள் என எழுதலாமே?
எந்த அடிப்படையில் தனிப்பயணி என்னும் நூல் தொகுக்கப்பட்டது?
அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்,
தனிப்பயணி நூல் முழுக்க முழுக்க என்னால் தயாரிக்கப்பட்டது. வேறு எவருக்கும் அதில் எந்தப் பொறுப்பும் இல்லை. எங்கள் அமைப்பில் முறையாக ஒரு பொறுப்ப்பு அளிக்கப்படாதவர் அதைச் செய்வதில்லை.
அந்நூலுக்காக நான் கட்டுரை கேட்டது நான்குபேரிடம் மட்டுமே. அவர்களில் அனீஷ்கிருஷ்ணன் நாயர் மிகத்தாமதமாக தந்தமையால் தொகுப்பில் சேர்க்க முடியவில்லை. எஞ்சிய மூன்றும் நூலில் உள்ளன. வேறெவரிடமும் கட்டுரை கோரவில்லை. விஷ்ணுபுரம் சார்பிலும் எவரிடமும் கட்டுரை கோரப்படவில்லை.
தானாகவே வாசகர்களாக எழுதி அளிக்கப்பட்ட கட்டுரைகள்தான் எஞ்சியவை. அவ்வாறு வரும் கருத்துக்களுக்கு வாசகமதிப்பு மிகுதி என்பது என் எண்ணம். எழுதவேண்டும் என்னும் உந்துதல் அவர்களுக்கு இயல்பாக உருவாகவேண்டும். ஆனால் அவை கடைசி நிமிடம் வரை வரவில்லை. வழக்கம்போல நூல் அச்சுக்குப் போனபின் வந்துகொண்டிருந்தன. 18 ஆம் தேதிவரை வந்தன. ஆகவே என் கட்டுரையை இணையத்தில் வெளியிடவில்லை.
நூலின் முதற்பதிப்பு முடிந்தபின் எஞ்சிய கட்டுரைகள் சேர்க்கப்பட்டு அடுத்த பதிப்பு வெளியாகும்.
ஜெ
இயல் விருதுகள் – 2022
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் – இயல் விருதுகள் – 2022
வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது, கோவிட் நோய்த்தொற்று காரணமாக 2020ம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022ல், இரண்டு இயல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.
பாவண்ணன் (இயற்பெயர் பலராமன் பாஸ்கரன்)
தமிழ் இலக்கியத் தோட்டம், 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் அவர்களுக்கு வழங்குகிறது.
பாவண்ணன் 1980 களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் தலைமுறையை சேர்ந்தவர். ’தீபம்’ என்னும் இதழில் வெளிவந்த முதல் சிறுகதையை தொடர்ந்து சிற்றிதழ்களிலும், பெரிய இழழ்களிலும் இவர் இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்.
தமிழ் சிறுகதைகளையும், தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இவர் அந்தக் கதைகளில் காணப்பட்ட அழகியலையும் வாழ்வியலையும் இணைத்து புரிந்துகொள்ளும் விதமாக எழுதிய நூறு விமர்சனக் கட்டுரைகள் மிகப்பெரிய வாசக கவனத்தை பெற்றன.
ஐம்பது தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணையதளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் முன் வரிசையில் வைக்கத் தகுதியாக்கின.
பாவண்ணன், வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்து தேறினார். கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய கவிதை தொகுதிகள் மூன்றும், சிறுகதை தொகுதிகள் 21ம், நாவல்கள் மூன்றும், குறுநாவல்கள் மூன்றும், கட்டுரை தொகுப்புகள் 34ம், சிறுவர் இலக்கியத் தொகுப்புகள் ஒன்பதும், மொழிபெயர்ப்புகள் (கன்னடத்திலிருந்து) 24 நூல்களும், (ஆங்கிலத்திலிருந்து) ஐந்து நூல்களும் (எல்லாமாக 99 நூல்கள்) இதுவரை வெளியாகியுள்ளன.
இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:
புதுச்சேரி அரசு சிறந்த நாவல் விருது – 1987இலக்கியச் சிந்தனை சிறந்த நாவல் விருது – 1995.கதா அமைப்பு சிறந்த சிறுகதை விருது – 1995.சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெர்ப்பு விருது – 2005தமிழக அரசு சிறந்த குழந்தை இலக்கிய விருது – 2009சுஜாதா – உயிர்மை அறக்கட்டளை சிறுகதை தொகுப்பு விருது – 2015என்.சி.பி.எச் சிறந்த கட்டுரை தொகுதி விருது – 2015இந்திய அமெரிக்க வாசகர் வாழ்நாள் சாதனை விருது – 2018விளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் விருது – 2019எம்.வி. வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது – 2021இவருடைய இலக்கிய படைப்புகள் சக எழுத்தாளர்களின் மதிப்பை பெற்றவை. முக்கியமாக இவருடைய மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியத்தின் வளத்தை பெருக்கின. இவருடைய தமிழ் இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
பாவண்ணனுக்கு இயல்
2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. பாவண்ணன் ஏற்கனவே மொழியாக்கத்துக்கான கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். நாற்பதாண்டுகளாக எழுதிவருபவர்.
பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்
December 23, 2022
தத்துவ அறிமுக வகுப்புகள் 2023
2022 ஆம் ஆண்டில் இரண்டு இந்திய தத்துவ அறிமுக வகுப்புகள் நடத்தப்பட்டன. அவ்வகுப்பில் பங்கு கொள்ளாதவர்களுக்காக அதே வகுப்புகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5,6,7 (வியாழன் ,வெள்ளி, சனி) நாட்களில் நடத்தலாமா என எண்ணுகிறேன்.
ஞாயிறன்று நான் சென்னையில் இருக்கவேண்டியிருப்பதனால் இந்த ஏற்பாடு. பங்கெடுப்பவர்கள் வியாழன் வெள்ளி விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும் என்பதனால் கொஞ்சம் தயக்கம். ஆனால் பங்கேற்பாளர்கள் போதிய அளவு இருந்தால் நடத்த எண்ணுகிறேன்.
பங்கெடுக்க விரும்புபவர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி தகவல்களுடன் jeyamohan.writerpoet@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதவும்
இவ்வகுப்புகள் இந்து (இந்திய) மெய்யியலின் அடிப்படைகள் பற்றியவை. இவை பயிற்சிவகுப்புகள். ஆகவே தத்துவ அறிமுகம், தத்துவசிந்தனைக்கான பயிற்சி ஆகியவை அடங்கியவை.
ஜெயமோகன்
சக்கரவர்த்தி உலா
க.நா.சுப்ரமணியம், தமிழ் விக்கி
சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி. ஊடகங்களில் வரும் சாதகமான விஷயங்களைப் பாராட்டுவதும் மாறான விஷயங்களை நிராகரிப்பதும் வழிமுறைகள். அவர்கள் ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களையும் எழுத்தாளர் மற்றும் இதழாளர்களையும் சந்தித்து உரையாடச்செய்வதற்கான முயற்சி அது. இடதுசாரிகள் வலதுசாரிகள் கேளிக்கைச்சாரிகள் எல்லாத்தரப்பையும் கூட்டி நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில்தான் நான் முதன்முறையாக க.நா.சுப்ரமணியத்தைச் சந்தித்தேன்.
அது 1986. வழக்கமான கருத்தரங்குகள் போல அல்லாமல் பெரிய அரங்கு நிறைய ஆணும் பெண்ணுமாக நிறைந்து இரைந்துகொண்டிருந்தார்கள். வந்திருந்த ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஒவ்வொரு வகையான வரவேற்பு. சோ மேடைக்கு வந்தபோது உச்சகட்ட கரவொலி, வரவேற்பு. அவசரநிலையை எதிர்த்துப் போராடித் தன் ஆளுமையை நிலைநாட்டிய சோ அவரது புகழின் உச்சியில் இருந்த நாட்கள் அவை. பின்னர் பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற உறுப்பினராக ஆனது அவரது நடுநிலை பிம்பத்தைக் கலைத்து மதிப்பைக் கீழிறக்கியது என்று நினைக்கிறேன். ஒரு ஆயிரம்வாலா போல வெடித்துவிட்டு அவர் சரசரவென இறங்கிச்சென்றார்.
அரங்கில் அன்று நேர் எதிரான எதிர்வினையைப் பெற்றவர் கோவி.மணிசேகரன். ஏதோ ஒரு வார இதழில் கணவனை இழந்த பெண்கள் பூவும்பொட்டும்வைத்து மினுக்குகிறார்கள் என்று அவர் எழுதியிருந்ததை எதிர்த்து அரங்கிலிருந்த பெண்கள் எழுந்து நின்று கண்டனக்கூச்சல் எழுப்பினார்கள். அவர் ‘ஆண்மையுடன்’ கூந்தலைச் சுண்டிவிட்டபடி ‘பொட்டு வைக்கும் விதவைகள் எல்லாம் விபச்சாரிகள்’ என்று அறைகூவினார். ஒரே கொந்தளிப்பு.அவர் மேலே பேசவிடாமல் மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்டார். அவர் தன் எதிர்ப்பைக் கூவியபடி வெளியேறினார்.
இந்தச் சந்தடியில் க.நா.சு அவரது பிரம்புக்கைத்தடியும், முகத்தில் சரியும் முடியும், நீளமான காதி ஜிப்பாவும், மூக்கில் கனத்துச் சரியும் சோடாப்புட்டிக் கண்ணாடியுமாக மேடை ஏறி தட்டுத்தடுமாறிப் பேசியதை எவரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் பேச்சு இன்றைய சினிமாப்பாட்டுகள் போல இருந்தது. அரங்கில் இருந்த மொத்த ‘ஆர்கெஸ்ட்ரா’ வும் வேறு எதையோ முழங்கிக்கொண்டிருக்க அவர் சம்பந்தமே இல்லாமல் மெல்லிய குரலில் வேறெங்கோ எதையோ ஒலித்துவிட்டுத் தடுமாறி இறங்கிவிட்டார்
நான் பரவசத்துடன் க.நா.சுவை நோக்கி ஓடினேன். அவர் அரங்குக்கு வெளியே சென்று விரிந்த திண்ணையில் தூணருகே நின்றிருந்தார். நான் சென்று வணங்கி ‘என் பெயர் ஜெயமோகன். தமிழில் நிறைய வாசிக்கிறேன்’ என்று பதற்றமும் மூச்சுத்திணறலுமாகச் சொன்னேன். க.நா.சுவின் புன்னகை நட்பாக இருந்தது. ‘என்னென்ன படிச்சேள்?’ என்றார். நான் எந்த இலக்கியவாதியிடமும் சொல்லியாகவேண்டிய மரபின்படி அவரது நூலைச் சொன்னேன். ‘பொய்த்தேவு படிச்சிருக்கேன்’
அது போகட்டும் என்பதுபோல க.நா.சு கையை அசைத்தார். ‘…நீங்க மௌனி கதைகள் படிச்சிருக்கேளா?’
நான் ‘இல்லை’ என்றேன்.
‘அதை முதல்ல படியுங்கோ…கொஞ்சம் கஷ்டம். ஆனா இலக்கியத்துக்கு ஒரு ஸ்கேலை அது உண்டுபண்ணிக் குடுத்திரும்…மத்தத நாமளே மதிப்புப் போட்டுப் பாத்துக்கலாம்’.
அதற்குள் அமைப்பாளர்கள் அவரை நோக்கி வந்தார்கள். ‘இங்கே நிக்கிறீஙகளா?’ என்றார்கள்.
‘நல்லதா ஒரு காப்பி சாப்பிடணும்’ என்றார் க.நா.சு.
‘போலாமே’ என்றார் அவர்களில் ஒருவர். அவர்களை நான் அறிவேன். அவர்கள் க.நா.சு மீது பெரிய மரியாதை கொண்டவர்கள்.
க.நா.சு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரது அப்பா கும்பகோணத்தில் தபால் அதிகாரி. க.நா.சு அவருக்கு ஒரேமகன். அன்றைய உயர்கல்வி முடித்தவர் க.நா.சு. ஆனால் இலக்கியத்துக்காக மட்டுமே வாழவேண்டும் என்பதனால் வேறு எந்தவேலைக்கும் முயலவில்லை. இதழியலில்கூட அக்கறை காட்டவில்லை. அவருக்குப் பெரிய தேவைகள் இல்லை. ஒரேமகள்தான். அவர் மிகமிகக்குறைவான வருமானத்தில், பெரும்பாலும் நண்பர்களை நம்பியே வாழ்ந்தார். பெரும்பாலானநாட்கள் நண்பர்களின் விருந்தினராக எங்கேனும் தங்கியிருப்பார்.
க.நா.சு ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்தபோது இலக்கிய வட்டம் சந்திரோதயம்,சூறாவளி போன்ற சிற்றிதழ்களை நடத்தி அவற்றில் தமிழில் வணிக இலக்கியப் போக்குகளை மிகக்கடுமையாகத் தாக்கி எழுதினார். அன்று அது பெரிய அலைகளை [ காபிக்கோப்பைக்குள்தான்] கிளப்பியிருந்தது. அன்று அவர்கள் எல்லாம் மிகப்பெரிய இலக்கியநட்சத்திரங்கள். இதழ்கள் அவர்களின் கால்களில் விழுந்து கிடந்த காலம். க.நா.சு ஒட்டுமொத்த தமிழ் அறிவுலகையே அவமானம்செய்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அன்றைய பொதுவாசகர்களும் அதை நம்பினார்கள்.
விளைவாக, க.நா.சு எங்கும் எதுவும் எழுதமுடியாத நிலையை அடைந்தார். க.நா.சுவுக்கு அன்று பதிப்பகங்கள் அளிக்கும் மொழியாக்க வேலைகள்தான் முக்கியமான வருமானம். அவரது நூல்களுக்கான பதிப்புரிமையையும் அவ்வப்போது சிறிய தொகைகளாகப் பெற்றுக்கொள்வார். இலக்கிய நட்சத்திரங்களின் பகையை அஞ்சிய அன்றைய பெரிய பதிப்பகங்கள் க.நா.சுவை விலக்கின. அவர் சென்னையில் வாழ முடியாமல் டெல்லி போனார். அங்கே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். டெல்லியில் அவருக்கென்று ஒரு நண்பர்வட்டமும் சூழலும் உருவாகியது
பின்னர் எண்பதுகளின் தொடக்கத்தில் க.நா.சு சென்னை வந்து சேர்ந்தார். ‘எனக்குப் பிடித்தமான மண் இது. சாவதற்காக இங்கே வந்திருக்கிறேன்’ என்று சொன்னார். எல்லா இதழ்களுக்கும் கடிதம் எழுதித் தனக்கு எழுதும் வாய்ப்பு தரும்படி கோரினார். தினமணி அவரை ஊக்குவித்து எழுத வைத்தது. அவர் இலக்கிய அறிமுகக் கட்டுரைகள் நிறைய எழுதினார். அவருக்கு சாகித்ய அகாதமி விருது ’இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்ற அறிமுக நூலுக்காகக் கிடைத்தது. நான் அவரைச் சந்தித்தது அந்தக்காலகட்டத்தில்தான். ஆனால் அவரை அடுத்த தலைமுறையின் பொதுவாசகர்களுக்கு அறிமுகமே இருக்கவில்லை
கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, லட்சுமி, சாண்டில்யன் போன்ற அக்கால வணிக எழுத்தின் மூலவர்களை முற்றாக நிராகரித்து புதுமைப்பித்தன்,மௌனி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோரில் தொடங்கும் ஒரு நவீன இலக்கியப்போக்கை க.நா.சு முன்வைத்தார் க.நா.சு போட்ட ‘படித்திருக்கிறீர்களா?’ என்றபட்டியல் மிக முக்கியமானது. அன்றெல்லாம் அந்தப்பட்டியல் நல்ல இலக்கியவாசகர்களிடம் இருக்கும். பலர் அதைக் கையாலேயே நகலெடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் தங்களைத் தேடிவரும் புதியவாசகர்களுக்கு அதைக்கொடுப்பார்கள். சுந்தர ராமசாமி அந்த பட்டியலைத் தட்டச்சு செய்து ஐம்பது பிரதி எடுத்து எப்போதும் கையில் வைத்திருப்பார். எனக்கும் அளித்தார். நான் அதிலுள்ள நூல்களைத் தேடித்தேடி வாசித்து நவீன இலக்கியத்தை அறிந்துகொண்டேன்.
உண்மையில் இன்றைக்கு நாம் தமிழ் நவீன இலக்கியம் என்று சொல்லும் ஓர் இயக்கத்தை அந்தப்பட்டியல் வழியாக க.நா.சு தான் வரையறுத்தார். அவர் அதை உருவாக்கினார் என்றுகூடச் சொல்லலாம். அந்தப்பட்டியலை மீறி ஒரு இலக்கிய வரிசையை எந்த விமர்சகரும் இன்றும் உருவாக்கவில்லை. இலக்கியத்தரமானவை என க.நா.சு நம்பும் ஆக்கங்களை கால வரிசைப்படி அதில் சுட்டிக்காட்டியிருந்தார். விரிவான இலக்கிய விமர்சனங்களை எழுதி அச்சிடும் வசதி அக்காலகட்டத்தில் இல்லை. ஏனென்றால் இருபது பக்கங்களில் நூறு பிரதிகள் அச்சிடப்படும் சிற்றிதழ்களில் மட்டுமே இலக்கியம் இருந்துகொண்டிருந்தது. பிரபல வார இதழ்களில் வெறும் கேளிக்கைக் கதைகளுக்கே இடம். நவீன இலக்கியம் ஆர்வத்துடன் தேடித்தேடி வாசிக்கும் ஒரு ஆயிரம்பேருக்குள்தான் புழங்கியது. அச்சூழலில் இந்தப் பட்டியல் பெரும்பங்களிப்பை ஆற்றியது.
பல நல்ல எழுத்தாளர்களை தமிழ்ச்சமூகம் மறந்துவிடாமல் நினைவூட்டிக்கொண்டே இருந்தது க.நா.சுவின் பட்டியல்தான். உதாரணம் ஆர்.ஷண்முகசுந்தரம். அதேபோல எவரும் கவனிக்காத நல்ல ஆக்கங்களை இலக்கியத்தின் வட்டத்துக்குள் நிலைநிறுத்தியதும் க.நா.சுபட்டியல்தான். உதாரணம், கரிச்சான்குஞ்சுவின் ‘பசித்தமானுடம்’. ஆனால் க.நா.சு அதற்காக மிகமிகக் கடுமையாக வசைபாடப்பட்டார். அந்தப்பட்டியலில் விடுபட்ட எல்லாருக்கும் அவர் எதிரியானார். க.நா.சு ஒரு ‘குழுவை’ உருவாக்குகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டார்.
க.நா.சுவால் பட்டியலில் இருந்து விடப்பட்டவர்கள் அன்று மிக வலுவானவர்கள். பணமும் புகழும் உடையவர்கள். க.நா.சு வசைகளுக்கு பதில் சொல்வதில்லை. ‘இது நேக்கு புடிச்ச புக்ஸோட பட்டியல். புடிக்கலைன்னா விட்டிருங்கோ’ என்று மட்டுமே சொல்வார். பொதுவாக அவருக்கு விவாதங்களில் நம்பிக்கை இல்லை. இலக்கியப்படைப்புகளை அலசி ஆராய்வதிலும் ஆர்வம் இல்லை. ‘படிச்சுப்பாருங்கோ’ என்பதே அவரது வழி.
க.நா.சு இடதுசாரிகளில் உள்ள எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் அங்கீகரித்திருக்கிறார். சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே அவர்தான் அவர்களில் உள்ள முக்கியமான எழுத்தாளர்களை அடையாளம் காட்டினார். ஆனாலும் இடதுசாரிகள் அவரை சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்று குற்றம்சாட்டினார்கள். இடதுசாரியான ஈழ விமர்சகர் க.கைலாசபதி க.நா.சு சி.ஐ.ஏவின் பணத்தால் மிக வசதியான வாழ்க்கையை வாழ்வதாக எழுதினார். நாடோடி வாழ்க்கை வாழ்ந்த க.நா.சு அதற்கும் பதில் சொல்லவில்லை. புன்னகையுடன் ‘சர்தான்,அவருக்கு அப்டி தோண்றது…’ என்று சொல்லிவிட்டார்
காபி சாப்பிட அவர்கள் கிளம்பும்போது க.நா.சு சிரித்தபடி ‘நேக்கு இன்னும் சிஐஏ மணியார்டர் வரலை… காபிக்கான காச நீங்கதான் குடுக்கணும்’ என்றார்.
அமைப்பாளர்களில் ஒருவர் சிரித்தபடி ‘குடுத்திடலாம்..வாங்க’ என்றார்.
அவர்கள் நடந்தபோது ஒல்லியாக தாடியுடன் இருந்த நானும் தயங்கியபடி அவர்களுடன் நடந்தேன். என்னை அவர்கள் கவனிக்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடன். க.நா.சுவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக்கூட்டத்தில் இருவர் பெரும்பணக்காரர்கள் என எனக்குத்தெரியும். ஆனால் அவர்கள் எல்லாரும் க.நாசுவின் முன் சக்கரவர்த்தியின் சேவகர்கள் போலிருந்தார்கள்.
அவரது அந்தக் கம்பீரம் கையில் எதுவுமே இல்லாத நிலையில் இருந்து வந்தது. அல்லது எதுவுமே ஒரு பொருட்டல்ல என்ற நிலையில் இருந்து வந்தது. அவர் நிமிர்ந்து சரியும் தலைமுடியை மெல்ல நீவிப் பின்னால் சரித்தபடி சாலையைப் பார்த்தார், தன் பிரஜைகளைப் பார்வையிடும் சக்கரவர்த்தியைப்போல. கூடவந்தவர்களிடம் பேசினார், சீடர்களின் அறியாமையை மன்னிக்கும் குருவைப்போல. அந்த அரங்க முகப்பின் சந்தடிகளுக்கு அப்பால் தன்னந்தனியாக நின்றுகொண்டிருந்தார், ஞானமடைந்தபின் தன் அரண்மனை முற்றத்துக்குத் திரும்பி வந்த புத்தனைப்போல.
என்னுள் இருந்து சுய அடையாளம் தேடிப் பரிதவித்த அந்த இளைஞன் மனஎழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலை நிமிர்ந்து நடக்கமுடிந்தால், இந்த உலகின் பணம் அதிகாரம் அற்ப வேட்கைகள் அனைத்தையும் இப்படிக் காலடி வைத்து இலகுவாகத் தாண்டமுடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக்கொண்டேன்.
எதிரே இருவர் வந்தார்கள். ஒருவர் எழுத்தாளர். அவருக்கு க.நா.சுவை முன்னரே தெரியும்போல. க.நா.சு அவரைக்கண்டதும் ’நமஸ்காரம்’ என்றார்.
அவர் ‘டெல்லியிலே இருந்து வந்துட்டீங்கன்னு சொன்னாங்க’ என்றார்.
‘ஆமா’ என்றார் க.நா.சு.
‘வடக்கத்திச் சப்பாத்திய மெல்ல முடியலையாக்கும்’ என்றார் அவர்.
க.நா.சு ’’கஷ்டம்தான்’’ என்றார்.
‘என்னமோ இங்க உள்ளவங்கள்லாம் மடையனுங்கன்னு சொல்லி சேத்த வாரி எறைச்சிட்டுப் போனீங்க…எங்க போனாலும் வரவேண்டிய இடம் இங்கதான்…என்ன?’ என்றார் அவர் . முகத்தில் ஒரு நக்கல்.
‘பின்ன…அதானே நம்மூர் வழக்கம்?’ என்றார் க.நா.சு அதே சிரிப்புடன்.
‘அப்ப வேற பட்டியல் போடுறீங்களாக்கும்?’ என்றார் அவர். கூட நின்றவர் சிரித்தார்
‘போட்டுட்டாப் போச்சு…காபிசாப்பிடப்போறேன். வர்ரேளா?’என்று க.நா.சு அழைத்தார்.
‘இல்லை. நீங்க போங்க’ என்றார் அவர். க.நா.சு விலகியதும் இருவர் முகத்திலும் ஒரு பெருமிதம். க.நா.சுவை வாயடைந்து போகச்செய்துவிட்டார்கள் என்று நினைத்தார்கள் போல. பேசியவர் ஏதோ சொல்ல இருவரும் க.நா.சு காதில் விழவேண்டும் என்றே சிரித்தார்கள்.
ஆனால் க.நா.சு சாதாரணமாகப் பேசிக்கொண்டே நடந்தார். அமைப்பாளர்களில் ஒருவர் ஒரு டாக்ஸியை அழைத்தார். அது வந்து நின்றதும் நான் பின் தங்கிவிட்டேன். க.நா.சு சிரித்துப் பேசிக்கொண்டே காரில் ஏறிச் செல்வதை. கடைசியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். காருக்குள் அவர் ஏதோ சொல்ல எல்லாரும் சிரித்தார்கள்.
சிலவருடங்கள் கழித்து க.நா.சு இறந்தசெய்தி வந்தது. நல்லவேளையாக அவர் சென்னையில் இறக்கவில்லை. அவரை மதித்த டெல்லிக்கு மகளைப் பார்க்கச் சென்றிருந்தபோது இறந்தார்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2012 அக்டோபர்
உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்
’பள்ளிக்கெட்டு சபரி மலைக்கு’ ‘நீயல்லால் தெய்வமில்லை’ போன்ற பாடல்களை கேட்டவர்கள் உளுந்தூர்பேட்டை சண்முகம் என்னும் பெயரையும் அறிந்திருப்பார்கள். வானொலியில் அனேகமகா தினமும் அவர் பெயர் சொல்லப்படும். என் வரையில் அவருடைய சிறந்த பாடல் ‘சின்னஞ்சிறு பெண் போலே..’
விஷ்ணுபுரம் விழா 2022, கடிதங்கள்
குளச்சல் மு.யூசுப்- நடத்துபவர் அழகியமணவாளன்விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
தூரன் விருது விழாவில் சாருவிற்கு விருது தரப்படுவதன் பொருட்டு அமர்வுகளில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து விவாதிக்கப்பட்ட போது என்னுள் தோன்றியது இது ஒரு சுருதி பேதம் என்பது தான். விக்கிரமாதித்யன் வரையிலான விருதுகளில் ஏற்படாத சர்ச்சை இதில் நிச்சயம் இடம் பெறும் என்று நினைத்தேன். இதுவே சுருதி பேதமாக எனக்கு தோன்றியதன் காரணம். முற்றிலும் மாறுபட்ட இரண்டு சிந்தனைப் பள்ளிகள் இரு வேறு எழுத்து முறைகள் முரணியக்கத்தின் வழியாக ஒத்திசைவு காண முடியும் என்பதையே பலரால் புரிந்து கொள்ளவோ அல்லது புரிந்தும் ஏற்கவோ முடியவில்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இதை எழுதும் நான் உட்பட உங்களின் பல வாசகர்களை இது உறக்கத்தில் இருந்து எழுப்பியது. சாருவிற்கு ஜெயமோகனின் இந்த அங்கீகாரம் இனி வரும் காலங்களில் தான் தீவிர இலக்கிய வட்டங்களில் மிகவும் காத்திரமாகப் பேசப்படும். ஜெயமோகன் ஒரு புதிய போக்கை உருவாக்கி விட்டாரா அல்லது இது மணிக்கொடி இயக்கப் போக்கின் தொடர்ச்சியா?
அகரமுதல்வன் அரங்கு, நடத்துபவர் விக்னேஷ் ஹரிஹரன்கலகம் கட்டற்றப் போக்கு மற்றும் மரபை உள்வாங்குதல் ஆகியவை ஒன்றிணைந்து செல்ல முடியுமா அல்லது இருள் என்றால் அந்த கண்களால் ஒளியைக் காண முடியாது என்றோ அல்லது இதற்கு நேர் எதிராகவோ கூற முடியுமா இதில் நாம் தீர்ப்பிடுதற்கு முன் கவனிக்க வேண்டியது ஜெ மற்றும் சாருவின் இலக்கியச் செயல்பாடு என்பது continuously evolving process என்பது தான்.
கடந்த கால சண்டைகளை எடுத்து வைத்தே பலரும் தங்கள் எதிர்ப்பு மற்றும் கண்டணத்தைப் பதிவிட்டனர். நான் அவற்றை ஜெயமோகன் மற்றும் சாருவின் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் அல்லது வேறு எந்த துருவ எழுத்தாளர்களின் வளர்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாகவே காண்கிறேன். ஆனால் அவ்வாறு நேர்மறையாகக் காண முடிவதின் காரணம் ஜெவும் சாருவும் இன்று வந்தடைந்துள்ள இடத்தின் காரணமாகத் தான் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு அடையாத எதுவும் பொருட்படுத்தத் தக்கவையாகவும் இருந்திருக்காது. நம் இலக்கிய நுண்ணுணர்வுகளுக்கு சவால் விடும் விழா இது. அதை மறுவரையறை செய்யக் கோருகிறது. மாஸ்டர்கள் அவ்வாறு தான் உங்களை உறங்க விடவே மாட்டார்கள். இரு துருவ தீவிர இலக்கியச் செயல்பாடுகள் சந்தித்து ஒன்றை ஒன்று சமன் செய்த நிகழ்வு இது. இது சுருதி பேதமல்ல ஜூகல் பந்தி
என்று தெளிவுற வைத்தது.
சிவக்குமார் ஹரி
சென்னை
நிர்மால்யா, யூசுப்பை கௌரவிக்கிறார்அன்புள்ள ஜெ
இவ்வாண்டுதான் நான் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மொத்த audience focus ம் அதில் பங்கேற்கும் இலக்கியவாதிகளை நோக்கியே அமைந்திருந்தது. நீங்களும் எங்களைப்போல வாசகர்களில் ஒருவராக அமர்ந்து வாசகராகவே அவ்வப்போது (scarcely) விவாதங்களில் கலந்துகொண்டீர்கள். விழாவில் முன்னிறுத்தப்பட்ட எல்லா இளம் எழுத்தாளர்கல் மீதும் deep reading நிகழ்ந்தது. ஒவ்வொரு கேள்வியும் ஆச்சரியமூட்டும் அளவுக்கு ஆழமானவை. ஆனால் எவரையும் hurting and teasing எதுவும் வரவில்லை.
பல கூர்மையான கேழ்விகளில் ஒருசில dismissal இருந்தது என்றாலும் அது அந்த எழுத்தாளர் பதில் சொல்லத்தக்கதாகவே அமைந்தது. விழாவில் பங்கேற்ற மேரி இந்த அளவுக்கு கூர்மையான விமர்சனம் ஆங்கில நூல்களைப் பற்றி இந்திய இலக்கிய விழாக்களில் உருவாவதில்லை என்று சொன்னது உண்மை. நானும் சில இலக்கிய விழாக்களில் பார்வையாளராக கலந்துகொண்ட அனுபவம் உள்ளவள்.
லோகமாதேவி அ.வெண்ணிலாவை கௌரவிக்கிறார்இந்த விழாவின் முக்கியமான அம்சம் பெண்கள். இலக்கிய விழாவில் இத்தனை பெண்கள் கலந்துகொண்டது மிகப்பெரிய மன நிறைவை உருவாக்கியது. பெண்களினிடம் இலக்கிய நிகழ்வுகளில் அனேகமாக இல்லை என்ற அளவிலேயே இருக்கும் இலக்கிய விழாக்களில் குடி, பெண்களை எல்லாம் தன் காதலிகளாக பார்க்கும் சிலரின் அவதூறுகள் எல்லாம் சேர்ந்துதான் அந்த விலகலை உருவாக்கின. அதெல்லாம் இங்கில்லை என்பது மிகப்பெரிய விஷயம். ஒரு சூழலை இங்கே உருவாக்க முடிந்தது மிகச்சிறப்பானது. அனைத்துக்கும் நன்றி
பவி
கவிதைகள் மாத இதழ், டிசம்பர்
அன்புள்ள ஜெ,
டிசம்பர் மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் ‘ஆழங்களின் அனுபவம்’ என்ற சீர்மை வெளியீடாக வந்த ஜி.ஆர். பாலகிருஷ்ணனின் விமர்சன நூலிலிருந்து அபியின் ‘என்ற ஒன்று’ கவிதைத் தொகுப்பு ரசனை கட்டுரையின் ஒரு பகுதியும், கடலூர் சீனு எழுதிய ‘கவிதையில் நாய்’ என்ற கட்டுரையும், சுகுமாரன், அபி, கமலதேவி கவிதைகள் குறித்து சிங்கப்பூர் கணேஷ் பாபு, ஆஸ்டின் சௌந்தர், டி.ஏ. பாரி எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு.
கே.நல்லதம்பியின் யாத் வஷேம்
கே.நல்லதம்பி மொழியாக்கம் செய்த யாத் வஷேம் கன்னடத்தில் நேமிசந்திரா எழுதிய நாவல். யூதர்களின் இடப்பெயர்வை பின்னணியாகக் கொண்டு இன்றைய இஸ்ரேலின் அறத்தை உசாவும் நாவல். 2022 ஆம் ஆண்டுக்கான மொழியாக்கத்துக்கான சாகித்ய அக்காதமி விருது பெற்றுள்ளது.
பாவண்ணன் அதைப்பற்றி எழுதிய கட்டுரை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

