Jeyamohan's Blog, page 660
December 17, 2022
தனிவழிப் பயணி
பிறழ்வெழுத்து என்னும் எழுத்துமுறையின் இந்திய அளவிலான முதல் உதாரணம் சாரு நிவேதிதா. எழுத்து, எழுத்தாளன் என்னும் உருவகங்களை உடைத்து விளையாட்டென நிகழும் எழுத்து அவருடையது. எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளாத எழுத்து. பின்நவீனத்துவ காலகட்டத்தின் இலக்கியவாதி அவர். புனைவு, உண்மை என்னும் இரண்டு எல்லைகளைக்கூட அழித்துச்செல்வது அவருடைய எழுத்துலகம். அத்தகைய எழுத்து என்பது கோட்பாட்டு அலசல்களுக்கு, கல்வித்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு முற்றிலும் எதிரானது அவர்களால் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது. அவர்கள் தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் அதன்மேல் சுமத்த, அதையெல்லாம் உதறி நிர்வாணமாக முன்சென்றுகொண்டிருப்பது. அவர்களை தன் எளிமையாலெயே தோற்கடிப்பது. ஆனால் வாசிக்கும்போது தன்னையும் சாரு நிவேதிதா போல நிர்வாணமாக ஆக்கிக்கொள்ளும் வாசகன் அதை எளிதில் தொட்டு அறியமுடியும். ஏனென்றால் சாருவின் எழுத்துக்கள் அவர்களை நோக்கியே எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வாசிப்புகள் அடங்கிய தொகுதி இது. சாரு நிவேதிதா 2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை பெறுவதை ஒட்டி இந்நூல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வெளியிடப்படுகிறது
விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை
எழுத்தாளர் சாரு நிவேதிதா நவீனத் தமிழிலக்கியத்தின் தனிக்குரலாக நாற்பதாண்டுகளாக ஒலித்து வருபவர். நவீனத் தமிழிலக்கியத்தின் பல்வேறு மரபுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்துச் சென்றவர் என அவர் அறியப்படுகிறார். தன்னை ஒரு கலகக்காரராக முன்வைக்கும் சாரு நிவேதிதா எல்லாவகையான அற,ஒழுக்க கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாக தன் எழுத்தை உருவாக்குகிறார். புனைவாக தன்னையும் தன் வாழ்க்கையையும் முன்வைக்கிறார். மரபான கதைசொல்லும் முறையை தவிர்த்து வாசகனுடனான உரையாடலாகவோ, நேரடியான வாழ்க்கைக்குறிப்பாகவோ தன் கதைகளை எழுதுகிறார்.
எல்லாவகையான முறைமைகளையும் மீறிச்செல்லும் எழுத்துமுறை என்னும் பொருளில் சாரு நிவேதிதாவின் இலக்கிய அணுகுமுறை பிறழ்வெழுத்து என விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. அவ்வகை எழுத்தை உருவாக்கியவர்களில் இந்தியாவில் அவரே முன்னோடியானவர். கட்டற்ற கூறுமுறை கொண்டதும், சிதறுண்ட வடிவம் கொண்டதுமான எழுத்துக்கள் வழியாக தமிழின் பின்நவீனத்துவ அலையை தொடங்கிவைத்தவராகவும் அவர் மதிப்பிடப்படுகிறார். சாரு நிவேதிதாவுக்கு இவ்விருதை அளிப்பதில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் பெருமைகொள்கிறது.
(விஷ்ணுபுரம் விருது 2022 வாழ்த்தறிக்கை)
மமங் தாய்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொள்ளும் மமங் தாய் அவர்களின் கவிதைகளை வாசித்தேன். அவர் பற்றிய தமிழ்விக்கி பதிவையும் வாசித்தேன். உண்மையில் தமிழ்விக்கியில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் பழங்குடிகளின் மறந்துபோன வாழ்வையும் அவர்களின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தையும் அவர் கவிதைகளில் வாசிக்கமுடிந்தது. அந்தப் பழங்குடிகள் கற்களையும் பாறைகளையும் சகோதரர்களாக அறிந்தவர்கள். தனிமையிலிருந்தும் அதிசயங்களிலிருந்தும் வந்திறங்கியவர்கள். எந்த ஆவணமும் இல்லாமல் நதியையே நரம்பாகக் கொண்டவர்கள். ஆனால் அனைத்தும் மாறிக்கொண்டிருக்கின்றன. சிறுநகரங்கள் எதிர்காலத் தலைமுறைக்காக வளர்ந்துகொண்டிருக்கின்றன. அவை மரணத்தை நினைவூட்டுகின்றன. அவர்கள் சாதாரணம் என்று எண்ணியிருந்த சாலையோரப் பச்சைப் பெரணிச் செடிகளும் ஏன் சடங்குகளும் தெய்வங்களும் கூட மறைந்துவருகின்றன. ஊழைத்தேடும் பயணிகளாக ஆகிவிட்டார்கள்.
ஐம்பதாண்டுகளின் நிகழ்ந்த மாற்றத்தை ஒரேமூச்சில் வாசிக்கமுடிந்தது. இன்னும் என்னென்ன நிகழப்போகின்றன என்ற பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நல்ல கவிஞர் ஒருவரைத் தமிழிலக்கியத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
அன்புடன்,
த.திருமூலநாதன்.
***
அன்புள்ள ஜெ
ஒவ்வொரு ஆண்டும் ஓர் இந்திய இலக்கிய நட்சத்திரம் தமிழில் அறிமுகமாகிறார். அசலான ஒரு படைப்புக்கலைஞர். இந்த ஆண்டு அறிமுகமாகும் மமங் தாய் அவர்களின் படைப்புகளில் உள்ள அசலான குரல் ஆச்சரியப்பட வைக்கிறது. பழங்குடி மக்களின் கதைகளில் இயல்பான ஒரு கள்ளமற்ற, கட்டற்ற கனவு இருக்கும். அதை ஒரு நவீன மனம் புரிந்துகொள்ளவோ அதனுடன் இணையவோ முடியாது. அந்த இணைவு சாத்தியமான அபூர்வமான படைப்புகள் அவருடையவை.
இதேபோல உலக இலக்கியவாதிகளையும் விஷ்ணுபுரம் மேடையில் அறிமுகம் செய்யவேண்டும்.
ஆர்.ரவி
சாருவின் ‘முள்’- கோ. புண்ணியவான்
என் மனைவி மார்க்கெட் போனால் அவள் வாங்கிவரும் மீன்வகை திருக்கையும் சுறாவுதான். எனக்கு அந்த வகை மீன்களின் மேல் ஒவ்வாமை அதிகம். நான் முள் உள்ள மீன்களையே வாங்கி வருவேன். பிற மீன்கள் போலல்லாமல் சமைத்ததும் திருக்கையிலும் சுறாவிலும் வழ வழப்புத் தன்மை அதிகரித்து மிக மிருதுவாகிவிடும். திருக்கை சுறா வகை மீன்களில் முள் அறவே இருக்காது. மாறாக மென்மையான நடு எலும்பு மட்டுமே இருக்கும். அவள் வாங்கி வரும் அவ்விரு மீன் வகைகளால் எங்களுக்குள் பிரச்னை துவங்கிவிடும்.
ஒரு நாள் நான் என் மனைவியைக் கேட்டேன். “ஏன் முள் மீன்களை வாங்கிவராமல் பிடிவாதம் பிடிக்கிறாய்?” என்று.
“சின்ன பிள்ளையா இருக்கும் காணாங்கெலுத்தி மீன் முள் தொண்டையில் குத்தி மாட்டிக்கிட்டு ரெண்டு நாளா அவத்திப்பட்டேன், அன்னியிலேர்ந்து இந்த முள் மீன்களைத் தொடுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டேன்” என்றாள்.
“அடிப்பாவி உன் சபதத்த ஏன் எம்மேல திணிச்சி என்னையும் சாப்பிடவிடாம செய்றியே” என்றேன்.
“போகப் போகப் பழகிரும், சாப்பிடுங்க” என்பாள். மனைவி சொல்லே மந்திரமில்லையா? எளவு பழகித்தான் போச்சி. ஆனாலும் முள்மீன்கள்தான் சுவையானவை. அதிலும் உடம்பெல்லாம் முள்ளாய் இருக்கும் உல்ல மீன்கள் மிகச் சுவையானவை. அவற்றுக்குள் முட்கள் பேன் சீப்பின் பற்கள் போலப் பின்னிக்கிடக்கும்.ஒவ்வொரு முறை வாயில் வைக்குபோதும் மிகக் கவனமாக நாக்கில் துழாவித் துழாவி நீக்கும் லாவகம் தெரியாதவர்கள் அந்த மீனை மறந்துவிடுவதே நல்லது. ஆனால் அதன் குழம்பு அலாதியான சுவை கொண்டது.
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனும் மீன் என்ற தலைப்பில் கதை எழுதியிருக்கிறார். தினசரி மீன் உணவே பரிமாறப்படுவதால் உண்டான வெறுப்பையும் சலிப்பையும் அங்கத தொணியில் சொல்லிச்சென்றார். அது பிரபஞ்சநின் முத்திரக் கதைகளில் ஒன்று.
சாருவின் முள் கதையைப் படித்தவுடன் இந்த நினைவளைத் தவிர்க்கமுடியவில்லை.
சாருவின் கதையிலும் முள் தொண்டையில் சிக்கி அவதிப்படும் ராஜா ஒரு மையக் கதாப்பாத்திரமாக வருகிறார். அப்பாத்திரமே கதையை நகர்த்துகிறது. பதினைந்து நாட்களாக மீன் முள்ளோடு சிக்கித் தவிக்கிறான். கதையை வாசித்துக்கொண்டே போகும்போது தொண்டையில் சிக்கி அறுவிக்கொண்டிருப்பது உள்ளபடியே மீன்முள்தானா அல்லது வேறொன்றைச் சொல்ல அதனைப் பயன்படுத்துகிறார என்ற சந்தேகம் உண்டாகிறது. அவர் அந்த முள்ளை அவன் தொண்டையில் குத்தவைத்து அதனைக் குறியீடாக வைத்து அவனின் அலைக்கழிவை அழுத்தமாக சொல்லிச் செல்கிறார்.
சாருவின் இக்கதை இளம் வயதில் கதை சொல்லியான ராஜாவுக்கு உண்டான பாலியல் கிளர்ச்சியைச் சொல்கிறது. ராஜாவுக்கு வயது பதிமூன்று அல்லது பதினான்கு இருக்கலாம் என்றே நம்மை யூகிக்க வைக்கிறார். பதின்ம வயதினருக்கே இயல்பாக தொல்லைதரும் பாலுணர்ச்சி பற்றிய அபிப்பிராத்தைச் சொல்வதன் வழி அவன் வயதைத் தோராயமாக பதின் மூன்று பதினான்குக்குள்தான் அடங்கும் என்று யூகிக்கத் தோணுகிறது. ராஜாவுக்குப் பெண் உடல் மீதான கூர்ந்த ஈர்ப்பை மையச் சரடாகக் கொண்டுள்ளது முள்.
அந்த ஈர்ப்பை மெல்ல மெல்ல கதையில் வளர்த்துச் செல்கிறார். ராஜா காய்ச்சல் கண்டபோது அவள் அவன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறாள் அவன் அத்தை. பின்னர் அவன் அவள் கைகளோடு கோர்த்து கரிசனம் காட்டுகிறாள். இந்த வகைத் தொடுதல்களால் அவனைப் பாலியல் உணர்ச்சியால் அலைக்கழிய வைக்கிறது என்று வாசகனுக்கும் மறைமுகமாக சொல்கிறார். ராஜாவின் அப்போது ‘இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போகவும் தயார்” என்று அவன் சிந்தனை கட்டுக்கடங்காமல் போவதை எழுதுகிறார். அத்தை உடல் மீதான பதின்ம வயதின் ஈர்ப்பை, அந்த ஈர்ப்பினால் அவனுக்கு உண்டான மனக்குழப்பத்தையும் நாம் புரிந்து கொள்கிறோம். இந்தச் சுயதொல்லையைத்தான் “தொண்டையில் குத்தி அறுவும் முள்” என்று சொல்கிறார் சாரு.
மிகவும் வெளிப்படையாகச் சொல்லாமல், ராஜாவின் உடல் மீதான அத்தையின் ஈர்ப்பையும் கதையில் ஆங்காங்கே சில இடங்களில் வைக்கிறார். அவள் பதினைந்தே நாட்கள்தான் அவன் வீட்டில் இருக்கப்போகிறார். அந்த நாட்களில் அவள், அவன் வெளியே போவதைக்கூட விரும்பாமல் எந்நேரமும் தன்னுடன் இருப்பதையே விரும்புகிறாள். அவள் கணவன்கூட ராஜாவை வெளியே சுற்ற அழைத்துச் செல்வதைக் கூட அவள் அனுமதிக்கவில்லை. ”ராஜாவுக்கு உடல் சரியில்லை அது வராது” என்று அவள் சொல்லும்போது அவன் எந்நேரமும் தன் பார்வௌகுள்ளேயே இருப்பதையே விரும்புவதாகக் காட்டுகிறது. சாரு அத்தை பாத்திரத்தைப் படைக்கும்போது சாரு மிகக் கவனமாக சொற்களைக் கையாள்வதாகப் படுகிறது. அவள் ராஜாவை கரிசனத்தோடு அணுகுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். அப்போதெல்லாம் அவள் அன்பை மட்டுமே சொரிகிறாள். ராஜாவின் உடல் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லை என்று சொல்லவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் ராஜாவை மிகச் சிறிய வயதிலிருந்தே அவள் அறிவாள். நீ யாரைத் திருமணம் செய்துகொள்வாய் என்று கேட்கும்போது நான் அத்தையைத்தான் கட்டிக்குவேன் என்று தன் விபரம் அறியாப் பால்ய வயதிலேயே சொன்ன சொல்லால் அத்தை அவன் மீது அளப்பரிய பாசத்தை காட்டுகிறாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்த இடங்களை மிக நுணுக்கமாகத் தொட்டுச் செல்கிறார் சாரு.
அத்தை அவன் வீட்டில் தங்கியிருந்த 15 நாள்களிலும் குத்திய முள் அறுவியபடி இருக்கிறது என்று எழுதும்போது ராஜாவின் அத்தையின் தேகம் மீதான ஈர்ப்பை அவதானிக்க வைக்கிறது. ஏன் குறிப்பாக அந்த 15 நாட்களுக்கு மட்டும் முள் அறுவவேண்டும் என்ற வாசகன் வினவே கதையைத் த்றந்து காட்டுகிறது.
நண்பன் பேபி அழைக்கும்போது ராஜாவுக்கு அவனோடு இணைந்து கொள்ள விருப்பமில்லாமல் அத்தையின் அணுக்கத்தையே பெரிதும் விரும்பி அவளோடு இருப்பதையே விரும்புகிறான். ஆனால் அந்த எண்ணம் பேபியின் முகம் பிதிபலிக்கும் தீவிரத்தினால்தான் அவனுடன் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. அந்த சீரியஸான முகத்தை பேபி காட்டியிருக்காமல் இருந்திருந்தால் ராஜா அத்தையுடன்தான் இருந்திருப்பான். அத்தையின் அணுக்கம் அக்கணத்தில் அவனுக்குத் தேவையாக இருந்தது.
முள் தொண்டையில் அறுவிக்கிட்டே இருக்கு என்று ராஜா பேபியிடம் சொல்ல , பேபி ஒரு வேளை ஒன்னோட பிரம்மையாகவும் இருக்கலாம் என்று சொல்லுமிடத்தில் சாரு அவனின் பாலியல் உண்ர்ச்சியால் தூண்டப்பட்டுக் கொண்டே இருப்பதை மறைமுகமாகச் சொல்லிவிடுகிறார். அத்தையும் மாமாவும் பதினைந்து நாட்கள் கழித்து தங்கள் ஊருக்குக் கிளம்பும் நேரத்தில், அத்தை அழுகிறாள்.
‘இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா… இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது…”
-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி இருக்கிறேன்’ என்று அத்தை சொல்லும்போது அத்தைக்கும் ராஜா உடல் மீதான ஈர்ப்பு இருந்ததோ என்ற எண்ணமும் எனக்கு உண்டானது. அவள் அப்படியொன்றும் வயதானவள் இல்லை. ராஜாவுக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம்தான். இயல்பாகவே ஆண்களைப் போல பெண்களுக்கும் தன்னைவிட இளம் வயது ஆண்களின் மேல் பாலியல் ஈர்ப்பு உண்டாவதை பல கதைகளில் வாசித்திருக்கிறோம். வாழ்வியல் நடப்பும் அவ்வாறுதான் இருக்கிறது. இங்கே சாரு இந்தக்கதையில் வரும் அத்தையின் போக்கு குறித்த உண்மையை உணர்ந்துகொள்ள வாசகனிடமே விட்டு விடுகிறார் என்று படுகிறது.
இது சாரு எழுதிய முதல் சிறுகதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விடலைப் பருவத்தில் இயல்பாக உண்டாகும் அதீத பாலியல் தூண்டல் பற்றிய முதல் கதையே அபாரமாக வந்திருக்கிறது. அதனை விவாதத்துக்குரிய கதையாக்கி தமிழ் இலக்கியத்துக்குள் அட்டகாசமாக நுழைந்த சாரு இன்றுவரை அதுபோன்ற வகைமை எழுத்தை கைவிடாமல் எழுதிவருகிறார். அவரின் இந்தப் போக்கு அவர் ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறது. இம்முறை அவருக்கு வழங்கப்படும் விஷ்ணுபுர விருதுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கோ.புண்ணியவான், மலேசியா.
December 16, 2022
விஷ்ணுபுரம் விழா-இன்றைய அமர்வுகள்
இன்று (17 டிசம்பர் 2022) காலை 9 மணிமுதல் ராஜஸ்தானி சங் அரங்கில் விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கு தொடங்கும். இதில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். மேடையில் இருப்பவர்களுக்கு நிகராகவே மூத்த படைப்பாளிகளும் இளம்படைப்பாளிகளும் அரங்கிலும் இருப்பார்கள்.
மேடையில் 7 அமர்வுகள் நிகழும். எழுத்தாளர்களுடனான கேள்விபதில் பாணியிலான கலந்துரையாடல் இது. விஷ்ணுபுரம் அரங்குகளின் நெறிகளில் முக்கியமானது இது இந்த ஆசிரியர்களை வாசகர்கள் அணுகியறிவதற்கான அரங்கு என்பதே. அந்த ஆசிரியர்களின் கருத்துக்களை அறிவதற்கே இந்த அரங்கு. ஆகவே சுருக்கமான வினாக்களே அனுமதிக்கப்படும். எக்காரணத்தாலும் வாக்குவாதம் அனுமதிக்கப்படாது.
பொதுவாக இலக்கியவாசகர் – எழுத்தாளர் சந்திப்பு என்பது உவப்ப தலைக்கூடுதல் என்னும் வள்ளுவர் வாக்குக்கு ஒப்பவே நிகழவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆகவே கடுமையான கருத்துக்கள், மறுப்புகள் எவர்மேலும் இருக்கலாகாது என கோருகிறோம். இது அந்த படைப்பாளிகள் தோன்றும் முதல் வாசக அரங்காகக்கூட இருக்கலாம். அவர்களுக்கும் அது ஓர் இனிய அனுபவமாக அமையவேண்டும்.
நண்பர்கள் சந்திக்க, கலந்துரையாட, மகிழ ஒரு தருணமாகவே இந்த நிகழ்வு அமையவேண்டும். சென்ற ஆண்டுகள்போலவே அவ்வண்ணமே இது அமையுமென எண்ணுகிறேன்.
இது சாரு நிவேதிதா என்னும் மூத்த படைப்பாளியை கௌரவிக்கும் நிகழ்வை ஒட்டி அமையும் கருத்தரங்கு. ஆகவே இந்த அரங்கு என்பது நடைமுறையில் இந்த ஒவ்வொரு படைப்பாளியையும் சாரு நிவேதிதாவே கௌரவிப்பதுபோலத்தான். இந்த அரங்கு நிறைவுற நிகழ்வதே நாம் சாருவுக்குச் செய்யும் பதில்மரியாதையும் ஆகும்.
பிகு: அரங்கில் ஆறு புத்தக கடைகளின் நூல்காட்சி உண்டு. நூல்கள் வாங்கமுடியும்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
படைப்பு என்னும் பலிச்சோறு -ரா.செந்தில்குமார்
[image error]சாரு நிவேதிதா கோணல் பக்கங்கள் என்கிற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய வாசகனானேன். வாசிப்பு இன்பம் என்பதற்க்கு உதாரணமான கட்டுரைகள் அவை. எந்த விஷயத்தையும் சுவாரஸ்யபடுத்தும் அந்த எழுத்து நடை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஸீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்சிலியசமும் ஃபேன்சி பனியனும் போன்ற அவருடைய நாவல்களின் வழியே சாருவுடனான உறவு ஏற்பட்டது. இரண்டாயிரத்தின் மத்தியில் என்று நினைக்கிறேன். சாரு ஹாட்மெயில் ஐடி மூலம் உரையாட கிடைத்தார். முதலில் எளிதாக ஆரம்பித்தவர் பிறகு நீங்கள் சிற்றிதழ் குறுங்குழுவை சேர்ந்தவரா என்று கேட்டு கிண்டலடித்தார். அந்த காலக்கட்டத்தில் சாருவை டோக்கியோ வரவழைக்க திட்டம் போட்டோம். போட்டோம் என்ன ? வாசிப்பில் இருந்ததே அப்போது நானும் ஜோ என்கிற நண்பனும் தான். எல்லாம் கூடி சாருவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு இந்தியாவிற்க்கு மாற்றலாகிவிட அந்த திட்டம் அப்படி நின்றுவிட்டது. பிறகும் அவருடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருபவன் என்கிற முறையில் தமிழ் இலக்கியத்தில் அவருடைய பங்கை முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். எழுத்தும் எழுத்தாளனும் பிரிக்க முடியாதபடி பின்னி பிணைந்து புனைவு எது, நிஜமெது என்று அறுதியிட்டு சொல்லிவிடமுடியாதபடி வாசகனை மாயஜாலத்திற்க்குள் ஆழ்த்துவதாக இருப்பது சாரு நிவேதிதாவின் எழுத்து.
மனிதன் சிதறுண்ட ஆளுமைகளின் தொகுப்பாக இருக்கிறான். சிறை கைதியின் புட்டத்துக்குள் லத்தியை சொருகுபவன் தான் வீட்டுக்கு சென்று குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சுகிறான். எனில் இலக்கியம் மட்டும் எப்படி ஒரு ஒட்டுமொத்த உண்மையையோ அல்லது மனிதனையோ வரையறுக்க இயலும். அவ்வகையாகவே சாரு நிவேதிதாவின் படைப்புகள் துண்டுகளாக பிரிந்த ஆன்மாவை கலைடாஸ்கோப்பில் காண்பிக்க முயலுகிறது. நிறங்கள், உருவங்கள் எல்லாம் அங்கு மாறிக்கொண்டேயிருக்கிறது, ஒன்றுடன் ஒன்று முயங்கி பெரிதாகி, சிறிதாகி என மயங்கிபடியே தோன்றும் காட்சிகளில் நிஜம் எது பொய் எது? சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள், வாழ்வுக்கான அர்த்தத்தையோ, ஒட்டுமொத்த தரிசனத்தையோ அடைய முயல்வதல்ல. மாறாக அப்படி ஒரு ஒட்டுமொத்த கோட்பாடோ, உண்மையோ இங்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எழுத்து அவருடையது. அங்கு புனிதங்களோ, மீறக்கூடாத அறங்களோ இல்லை. சாரு நிவேதிதாவிற்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட பின்பு, ஜெயமோகனின் வாசகர்களிடையே கூட சிலரிடம் ஏற்பட்ட அதிர்வலைகளுக்கு காரணம் இதுவாகவே இருக்ககூடும். இருண்மையும், எதிர்மையுமே பின் நவீனத்துவத்தின் கூறுகள். எனவே, இங்கு இதுவும் இருந்தது, இருக்கிறது.
இந்திய குடும்பங்கள் மாறுதலின் காலக்கட்டத்தில் சிக்கியிருக்கிறது. அதன் தலை நவீன மேற்கத்திய யுகத்திலும் நுழைந்துவிட்டாலும், கால்கள் சென்ற காலக்கட்டத்தின் சிந்தனைமுறையில் கட்டப்பட்டதாக தவித்துக்கொண்டிருக்கிறது. கணவன், மனைவிக்கு இடையேயான திருமண வாழ்க்கை ஒத்துவரவில்லையென்றால், முழுமனதாக பிரிந்துச்செல்வதற்க்கான வெளி இன்னமும் சரிவர உருவாகிவரவில்லை. குழந்தைகள், பெண்ணுக்கான பொருளாதார சுதந்திரம், குடும்ப அமைப்பு பிரிந்துச்செல்வதற்க்கான தடைகளாக நீடிக்கிறது. எனவே தான் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு திருமண மீறல்களும், அதன் விளைவாக வன்முறையும் எங்கும் வியாபித்திருக்கிறது. எனவே தான் எப்படியாவது விட்டு விடுதலையாகிவிட, மெல்ல கொல்லும் விஷங்களை கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த புரிந்துணர்வுமில்லாத இருவரிடையே பாலியல் வாழ்க்கை முழுவதுமாக அற்றுப்போய், குழந்தையென்றும், தியாகமென்றும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு, வெளியில் இணை மனங்களை தேடிச்செல்வதாலும், பாலியல் வேட்கையாலும், அதன் விளைவாக உருவாகும் குற்ற உணர்வு, விரக்தி இவற்றால் அழுத்தப்பட்ட நரகமாக இன்றைய குடும்பங்கள் உருமாறியிருக்கின்றன. உண்மையில் மெல்ல கொல்லும் நஞ்சு இப்படிப்பட்ட உறவுகள் தான்.
மற்றொரு புறம், சேர்ந்துவாழும் குடும்பங்களிலும் அன்பு என்கிற பெயரில் செலுத்தபடும் மறைமுக அதிகாரம் இணையின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் ரத்து செய்வதாய் அமைந்து குடும்ப அமைப்பை வன்முறை களமாக மாற்றிவைத்திருக்கிறது. இந்தச் சூழலைதான் தனது எழுத்தின் மூலம் சாரு நிவேதிதா அப்பட்டமாய் முன்வைக்கிறார். அவருடைய புனைவும் உண்மையும் மயங்கிய எழுத்து முறை மூலம் வாசகனுக்கு இந்த வலியை அப்படியே கடத்துகிறார். அவருடைய எழுத்துக்கு ஏற்பட்டிருக்கும் வசீகரம் இந்த அப்பட்டத்தன்மை மூலம் உருவானது.
இரண்டாயிரமாவது ஆண்டுக்கு பிறகுதான் இப்படி இணையம் எல்லோருக்குமான ஒன்றாக மாறியது. எத்தனையோ வசதிகளை இணையம் தந்திருந்தாலும், ஆண் பெண் உறவு மேலும் அபத்தமான ஒன்றாக மாறியது இணையத்தில் தான். சந்திக்கும் வாய்ப்பே இல்லை என்கிறபோது, சேட் என்கிற பெயரில் மாறிமாறி இருவரும் பிம்பங்களை பெருக்கி ஊதினார்கள். சந்திப்பு சாத்தியமில்லை என்பதே ஒரு சுதந்திர வெளியை இருவருக்கும் ஏற்படுத்தி தந்த தையும் மறுக்க இயலாது தான். சாரு மிக நேரடியாக இணையத்தில் நிகழும் போலி நாடகங்களை எழுதினார். கலிஃபோர்னியாவிலிருக்கும் போது தினமும் மூன்று மணி நேரம் அரட்டையடிக்கும் திருமணமான பெண், சென்னை வந்தவுடன் பத்து நிமிடம் கூட பேச நேரமில்லாதவளாக, ஒரு மாதம் இந்தியாவில் செலவழித்து மறுபடியும் ஏர்போர்ட் சென்றவுடன் சாருவுக்கு போன் செய்கிறாள். இந்த அபத்தம் சாருவை கொந்தளிக்க செய்கிறது.
சாருவின் பலமென்று, அவர் வாழ நேர்ந்த களங்களை நான் கருதுவதுண்டு. நாகூரில் இளமையில் வாழ்ந்ததால், அந்த மண்ணுக்கே உரிய பகடியும், சூஃபியசம் மீதான ஈடுபாடும் ஏறக்குறைய அனைத்து படைப்பிலும் எதிரொலிக்கிறது. கூடவே தஞ்சை மண்ணுக்குண்டான பிரத்யோக பாலியல் துணுக்குகள் அவருடைய எழுத்தெங்கும் விரவியிருக்கிறது. டெல்லியில் வாழ்ந்ததால் நாடகம், இசை ரசனை என பல்வேறு கலாச்சாரங்களின் கலவை அவரிடமுண்டு. அதன்மேல் சென்னை மயிலாப்பூருக்குண்டான நடுத்தர மேல் நடுத்தர வாழ்க்கையின் அவல நகைச்சுவை இவையெல்லாம் சேர்ந்தே சாருவின் எழுத்தில் வெளிபடுகிறது.
சிருஷ்டியின் குறியீடாக இருக்கும் யோனிதான் முடிவின்மையின் சூன்யமுமாகவும் ஸீரோ டிகிரியில் இருக்கிறது. கம்யுனிஸ்ட்கள் மீதான கிண்டல், தலைவர் சிலை மீது செருப்பு மாலை, இலக்கியவாதிகள் மீதான எள்ளல், பொன்பரப்பி வங்கி கொள்ளை முயற்சி, என ஸீரோ டிகிரியில் அவர் கைவைக்காத இடமில்லை. ஸீரோ டிகிரியில் புனிதமென்று கருதபடும் எல்லாம் உடைபடுகின்றன. இன்செஸ்ட் உறவுகள், சுய இன்பம், பாலியல் வேட்கை என நீள்கிறது இந்த பட்டியல். ஸீரோ டிகிரிக்கு பிறகுமான நாவல்களும் இந்த விஷயங்களை கொண்டிருப்பினும், ஜெனிக்கான சூர்யாவின் கடிதம் சீரோ டிகிரியை கவித்துவமான இடத்திற்க்கு கொண்டு செல்கிறது. அதிலும்
முந்தின பிறவியில் நீ என் காதலியாய் இருந்தாய்,
அதற்கும் முந்தின பிறவியில் நீ என் தாயாக இருந்தாய் அதற்கும் முந்தின
பிறவியில் நீ என் சாமுண்டி தெய்வமாக இருந்தாய்
எனத் தொடங்கும் கவிதை அதன் உச்சம். ஓரிரு வார்த்தைகளை தவிர்த்துவிட்டு எழுதுவது, நிறுத்தகுறியின்றி எழுதுவது இவையாவும் கவனம் ஈர்க்கும் உத்திகளே தவிர, இவையெல்லாவற்றையும் தாண்டி தான் கொண்டிருக்கும் கவித்துவத்தால் ஸீரோ டிகிரி தமிழில் தனக்குண்டான தவிர்க்க முடியாத இடத்தை அடைந்தது
அதிகார வெறி எப்படியெல்லாம் மனிதர்களை ஆட்டிவைக்கிறது என்பதை ராஸலீலாவில் விவரிக்கிறார் சாரு. ராஸ லீலா முழுவதுமே அதிகாரத்தை பகடி செய்வதாக, மையத்தை பழித்து விளிம்பை முன்வைப்பதாக இருக்கிறது. சுந்தரேசன் என்னும் தபால்துறை உயரதிகாரி தவறு செய்யும் போஸ்ட்மாஸ்டரை கையும் களவுமாக பிடிக்கிறார். தவறை கண்டுக்கொள்ளாமல் இருக்க, அழகியான போஸ்ட்மாஸ்டரின் மனைவியை கேட்கிறார். எல்லாம் முடிந்தபின்பு அந்த தவறு மூடிமறைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் சாட்சியாக கண்ணாயிரம் பெருமாள் இருக்கிறான். இந்த அநீதியை கண்டு பொங்கவில்லை அவன். அவன் பொங்குவதெல்லாம், தனக்கும்தான் அந்த பெண் மீது ஆசை இருக்கிறது. அதிகாரம் இருப்பதால் நினைத்தவற்றையெல்லாம் அடைகிறானே இந்த அதிகாரி என்று பொருமுகிறான் கண்ணாயிரம் பெருமாள். தவறை தண்டிக்காமல் விட மனைவியை கேட்கும் அதிகாரியுடன், கம்போடியாவில் பல்லாயிரகணக்கான உயிர்களை காவு வாங்கிய போல்பாட்டை ஒப்பிட்டு அடிக்கோடு இடுகையில் அது இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.
எழுத்தை வாழ்வாக கொண்டாலும், லெளகீகத்திற்க்காக குமாஸ்தவாக பணியாற்றும் ஒரு கலைஞனின் அன்றாடம் என்பது எலிப்பொறியில் சிக்கிக்கொண்ட அவஸ்தையாகதானே இருக்க இயலும்? அதுவே கண்ணாயிரம் பெருமாளுக்கும் நிகழ்கிறது. அப்படி நரகத்தில் உழன்றுக்கொண்டு எழுதிய படைப்பை ”நான்தான் எழுதிக்கொடுத்தேன்” என்று நண்பன் சொன்னால் மொத்த வாழ்வும் அர்த்தமில்லாது போகிறது. அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையும் கண்ணெதிரே மறுக்கபடுகிறது. அதை தாங்க இயலாது உடைகளை கழட்டி எறிந்துவிட்டு ஓடும் அந்த பித்த நிலையை, ஷேக்ஸ்பியரின் கிங் லியர், தன்னுடைய மகள்களின் துரோகம் தாங்காது அடையும் பித்த நிலையுடன் ஒப்பிடுகையில் நாவல் வேறொரு இடத்திற்க்கு தாவுகிறது. இப்படி சாரு அடிகோடிடும் இடங்கள் வாசகனின் உழைப்பை கோருபவை. அப்படி தேடலில் ஈடுபடும்போதே வாசகன் சாருவின் படைப்பிலிருந்து அடையக்கூடியவையும் அதிகமாகிறது.
புனைவாக இருந்தாலும் அபுனைவாக இருந்தாலும் சாரு பாத்திரங்களுக்கு வைக்ககூடிய பெயர்கள் பகடியின் உச்சமாக இருக்கும். ராஸ லீலா நாயகனின் பெயர் கண்ணாயிரம் பெருமாள். இந்திரனுடைய பெயரை சூட்டிக்கொண்டு பாலியல் வெக்கையில் தவிப்பவன் அவன். அதே கதையில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் பெண் உயரதிகாரிக்கு பெயர் இந்திராணி என்று சூட்டியிருப்பார். ஒன்பதாம் நூற்றாண்டில் செத்த மூளை, முனியாண்டி, நேநோ, ஃபங்குலா என ஒவ்வொன்றும் பாத்திரத்தின் தன்மையை பெயரிலேயே கொண்டிருப்பவை. உடனடியாக ஒரு புன்னகையை நம்மிடம் தொற்ற வைப்பவை.
புனைவை போலவே கவனம் ஈர்த்தவை சாரு நிவேதிதாவின் அபுனைவு கட்டுரைகள். ஈழப்போர் முடிவில் தமிழினம் தகித்துக்கொண்டிருந்த சூழலில் வன்முறையின் தோல்வி என்று பேசாபொருள் பேச துணிந்தவை அவை. நக்சல்பாரிகளின் போராட்டம் பற்றி எந்த கவனமுமின்றி காட்சிகளின் சுவாரஸ்யத்திற்க்காக மையகருத்தை கண்டுக்கொள்ளாமல் விட்ட குருதிபுனல் படத்திற்க்கு சாரு நிவேதிதா எழுதிய விமர்சனம் மிக முக்கியமானது. அங்காடி தெரு படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையரங்கம் இடிந்து தலைமேல் விழுந்துவிடுமோ என்று பயந்துக்கொண்டே படம் பார்த்தேன் என்கிற வரிகளை புன்னகை இல்லாமல் கடக்க முடியாது. பிம்பங்களை கட்டுடைப்பது என்பதை தொடர்ந்து சாரு செய்கிறார். மற்றவர்களை பற்றி மட்டுமல்ல, தன்னுடைய பிம்பத்தையும் தானே உருவாக்கி அதை கட்டுடைத்து மீளவும் உருவாக்கி எனத் தொடர்கிறார், நித்யானந்தாவின் ஆன்மிகத்தை பற்றுதல், பைங்கிளி எழுத்தாளரை திடீரென்று உலக இலக்கியமென்று பிரசுரித்தல் போன்ற பிழைகளும் அதன் ஒரு பகுதியாகவே கொள்ள நேரிடுகிறது.
வாழ்வை பணயம் வைத்து எழுதப்பட்டவை என்று சாரு சொல்லிக்கொள்கிற வரிகள் அப்படியொன்றும் போலியானவை அல்ல. தன்னுடைய தாய் தந்தை, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றையும் பற்றி வெளிப்படையாக எழுதுவது என்பது லெளகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சாத்தியமான ஒன்று அல்ல. சமயங்களில் அது நண்பர்களை, உறவுகளை காவு வாங்கும் பலிகளம் தான். ஒருவகையில் அது பலிச்சோறுதான். ஆனால் தன்னுடைய படைப்பின் பொருட்டு அதை முயலகூடியவராக சாரு நிவேதிதா இருக்கிறார்.
செந்தில்குமார்iதேகம் புத்தகம் வெளியீட்டின்போது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மிஷ்கினுடைய பேச்சின் காரணமாக, சாரு நிவேதிதா தொடர்ந்து மிஷ்கினை விமர்சித்து கட்டுரைகளாக எழுதியிருந்தார். சில வருடங்கள் கழிந்து மிஷ்கின் உடனான ஒரு இரவு உரையாடலில் இது பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, மிஷ்கின் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ஒரு வருட காலம் ஏறக்குறைய தினமும் இரவு சாருவும் மிஷ்கினும், மிஷ்கினுடைய அலுவலகத்தில் சந்தித்து அதிகாலை வரை உரையாடல், இசை என கொண்டாடி வந்தனர். திடீரென்று ஒரு நாள், அந்த வீட்டை காலிசெய்யும்படி ஆகிவிடுகிறது. எல்லா புத்தகங்களையும் புதிய முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு அன்றிரவு கடைசியாக இருவரும் அந்த பழைய வீட்டில் குடிக்கிறார்கள். அதிகாலை இரண்டு மணி அளவில் இருவரும் வெளியே வந்து நிற்கிறார்கள். இனி இந்த வீடு இல்லை. தெருவில் அனாதையாக சுற்றித் திரியும் நாய் சாருவின் காலடியில் வந்து நிற்கிறது. தினமும் இரவில் அங்கு வரும் சாரு, அந்த நாயிற்கு ஏதேனும் உணவிடுவது வழக்கம். குனிந்து நாயை தூக்கிய சாரு மடியில் வைத்துக்கொண்டு ”இனிமே உனக்கு யாருடா சோறு போடுவா?” என்று கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார். ”அப்படி ஒரு மனிதன் சாரு. அந்த சாருவைதான் நான் நினைவில் வைத்திருக்கிறேன். என்னைத் திட்டி எழுதியதை அல்ல”, என்று சொன்னார் மிஷ்கின். அதே சாரு , தனது அவ்வா சிறுகதையில் தெரு நாயின் தொல்லை தாங்காது, அதன் மேல் வெந்நீரை கொட்டும் குரூரத்தையும் எழுதியிருப்பார். இந்த முரணையும், இருமையையும் சேர்த்தே சாருவின் படைப்புகளை புரிந்துக்கொள்ளமுடியும்.
விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ரா.செந்தில்குமார்.
இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா
விஷால்ராஜா(விஷ்ணுபுரம் அரங்கில் பங்குபெறும் இளம்படைப்பாளிகள் பற்றிய வாசிப்புகள் வெளிவந்த சூழலில் விமர்சனபூர்வமாக அணுகும் இக்கட்டுரை மேலும் விவாதங்களைக் கோருகிறது)1.
மலையாள விமர்சகர் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு பற்றி சொல்லும்போது சிறுகதைக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் இருப்பதால், நல்ல சிறுகதை எழுதுவது எளிது என்றும் நாவல் வடிவமற்ற வடிவம் கொண்டிருப்பதால் அதிலேயே எழுத்தாளனின் மேதமையை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுவொரு சுவாரஸ்யமான அவதானிப்பு. சிறுகதை வெவ்வேறு வடிவங்களை தேர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்கு இது பொருத்தமான அவதானிப்பா என்பது வேறு கேள்வி. ஆனால் கட்டாயம் சுவாரஸ்யமான அவதானிப்பு. யோசித்து பார்த்தால் ஆரம்பம் முதலாகவே சிறுகதைகள் சார்ந்து பல்வேறு சூத்திரங்கள் இலக்கியச் சூழலில் நிலைபெற்றிருப்பது ஞாபகம் வருகிறது. சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனும் எட்கர் ஆலன் போவின் புகழ்பெற்ற கூற்று, சிறுகதை என்பது ஒரு சிறு சம்பவம் என புதுமைப்பித்தன் சொன்னது – இப்படி சிறுகதைகள் சார்ந்து தெளிவாக வகுத்தளிக்கப்பட்ட பல வரையறைகள் படிக்க கிடைக்கின்றன. ஒருவிதத்தில் நவீன இலக்கியத்தில் சிறுகதைக்கு மட்டுமே குண அடிப்படையின்றி, வடிவ அடிப்படையில் இலக்கணம் மொழியப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் சுஜாதாவால் “சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்” என்று வகுத்துக் கொண்டு முரண்பாடுகளையும் திருப்பங்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி பல நல்ல கதைகளையும், பல மோசமான கதைகளையும் ஒரே நேரத்தில் எழுத முடிந்திருக்கிறது.
தொலைக்காட்சியின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் தமிழில் பத்திரிக்கைகள் பிரபலமாக இருந்த, தொன்னூறுகளுக்கு முந்தைய காலகட்டத்தையே சிறுகதையின் பொற்காலம் என்று சொல்வார்கள். அதுவே சிறுகதைக்கு தெளிவான வடிவ இலக்கணத்தை கொடுக்க முடிந்த காலம். தொன்னூறுகளில் நவீன தமிழ் இலக்கியத்தின் முகமே ஒரு வகையில் மாறியது. கோட்பாடுகள் அறிமுகமாயின. கதை என்பதிலிருந்து விவாதம் அல்லது உரையாடல் எனும் இடத்துக்கு நாவல் வகைமை சென்றது. கவிதை தன் புனித பீடத்திலிருந்து இறக்கப்பட்டு சந்தைக்கு அழைத்து வரப்பட்டது. தன்னால் அங்கும் தரிக்க முடியும் என்று நிரூபித்தது. இந்த மாற்றத்தின் அலையில் சிறுகதைக்கு என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பேசப்படவில்லை. சிறுகதைக்கு புதிய தேவைகள் முளைத்தன. வெறுமனே வாழ்க்கை சித்தரிப்பு என்பதைத் தாண்டி நாவலின் தத்துவ விசாரனை அம்சத்துக்கு சிறுகதை முகம் கொடுக்க வேண்டியிருந்தது. மேலும் கொஞ்ச காலத்திலேயே, முரண், கதாபாத்திர அமைப்பு போன்ற சிறுகதை அம்சங்களை குறுஞ்சித்தரிப்பு எனும் வகைமையில் கவிதை சுவீகரித்துக் கொண்டது. ஆக, குடும்பத்தில் நடுக்குழந்தைப் போலானது சிறுகதை. அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு தனக்கு வர வேண்டிய புது துணியை தம்பியிடம் இழந்து.
மூத்த எழுத்தாளர்கள் வெவ்வேறு வகையில் சிறுகதையின் வடிவ இலக்கணத்தை தொன்னூறுகளில் மீறினார்கள். தனிநபர் எல்லையை கடந்து நாட்டாரியல் கூறுமுறை, செவ்வியல் தரிசனம், வரலாற்றுவாதநோக்கு போன்றவை சிறுகதையில் இணைந்தன. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தாக்கமுற்று, கீழைநாட்டு மரபின் அறிதல்கள் மாயமாகவும் கவித்துவமாகவும் முன்வைக்கப்பட்டன. கதைகள் பற்றிய கதைள், வரலாற்றின் இடைவெளி சார்ந்த பிரக்ஞை முதலியவை பேசுபொருளாயின. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன், யுவன் சந்திரசேகர், ரமேஷ்-பிரேம் முதலியோரை இந்த அலையின் முகங்களாக சொல்லலாம். படுகை, தாவரங்களின் உரையாடல், ராஜன் மகள் போன்ற கதைகள் உதாரணங்கள். இப்பட்டியலோடு ஒருவர் உடன்பாடலாம்; விமர்சிக்கலாம்; ஆனால் பொதுவான இந்த மாற்றத்தை யாரும் மறுக்க முடியாது. மேற்சொன்ன பட்டியலைத் தாண்டி ஜீ.முருகன், ஜே.பி.சாணக்யா, லஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி போன்ற முக்கியமான சிறுகதையாசிரியர்களும் அடுத்தடுத்து செயல்பட்டிருக்கிறார்கள். எல்லோரையும் பற்றி பேசுவது இங்கே நோக்கம் அல்ல. ஆனால் மேற்சொன்ன மாற்றத்துக்கு பிறகு ஏறத்தாழ இரு தசாப்தங்கள் கடந்துவிட்டன. எனவே சமகாலம் பற்றி பேசும்போது கடந்தகால திருப்பத்தை தவிர்க்காமல் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஞாபகம் இல்லாத வீட்டில் மனிதர்கள் வெளிர்வதைப் போல ஞாபகமற்ற இலக்கியச் சூழலும் வெளிரிவிடும் என்பதால்.
இன்று இணையத்தின் வருகைக்குப் பிறகு, நவீன இலக்கியத்தின் முகம் புதிதாய் உருமாறியிருக்ககிறது. எந்த துறையும் ஜீவத்துடிப்புடன் இருந்தால், ஒவ்வொரு பத்தாண்டுக்கும் இப்படி ஒரு மாற்றம் கட்டாயம் வரும் என நினைக்கிறேன். அந்தத்த காலத்தவர்கள் தம் காலத்தை மட்டும் விசேஷமாக கருதுவதும் இயற்கையானதாகவே இருக்கவேண்டும். அவ்வகையில், நவீன தமிழ் இலக்கியம் இப்போதும் புதுக்குரல்களை தோற்றுவித்தபடி உயிர்ப்புடன் செயல்படுவது நல்ல செய்தி. இந்த புதிய அலையில், சிறுகதை எழுத்து மீண்டும் மேடை வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக படுகிறது. இணைய இதழ்கள் அதிகரிப்பதால் பத்திரிக்கையின் குழந்தையாகிய சிறுகதை எழுத்து மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறதா? அல்லது நம்முடைய கவன எல்லை குறுகியிருப்பதால் திரும்பவும் சிறுபுனைவில் நிறைய குரல்கள் புழங்குகின்றனவா? தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை. எப்படியோ சிறுகதையாசிரியர்கள் மீண்டும் எண்ணிக்கையில் அதிகரித்திருக்கிறார்கள். எனவே சிறுகதை பற்றிய பேச்சும் கூடுல் முக்கியத்துவம் பெறுகிறது.
2.
சிறுகதையின் வடிவ இலக்கணம் வரையறுக்கப்பட்டு பின்னர் மீறப்பட்டது என்றால், இன்று எழுதப்பட்டும் கதைகள் அந்த மீறலின் தொடர்ச்சியாக இருக்கின்றவனா அல்லது பழைய வடிவ இலக்கணத்தினை பின்பற்றுகின்றனவா? இரண்டும் நடந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக புத்தாயிரம் எனும் இடைவெளிக்கு பிறகு தோன்றியிருக்கும் சிறுகதைகளில் எல்லா சாயைகளும் படிந்துள்ளன. சமகாலமானது வேறுபாடுகள் தொலைந்த பருவத்திலிருக்கிறது. தீவிரம், வணிகம், கேளிக்கை, புனிதம், மீறல், அரசியல் என எல்லா தொனிகளுக்கு இடையிலும் எல்லைக்கோடு கலைந்துவிட்டது. எல்லா வகை எழுத்துக்களும் பேச்சுகளும் ஊடகத் தாக்கங்களும் கலந்த பரப்பாக இருப்பதனால் சிறுகதையிலும் இதே கலவையே காணக் கிடைக்கிறது. அகரமுதல்வன், கமலதேவி, கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் சிறுகதைகள் படிக்கும்போது உடனடியாக அடையாளம் தெரிவது இந்த இயல்பே. அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி இருவர் சிறுகதைகளிலும் தொன்மங்களும் வரலாறும் மீள மீள வருகின்றன. ஆனால் படிக்கும்போது அதன் நோக்கம் சார்ந்த குழப்பம் மேலிடுகிறது. கமலதேவி, கார்த்திக் பாலசுப்ரமணியன் இருவரும் பெரும்பாலும் தனிமனிதர்களை மையப்படுத்திய யதார்த்த கதைகளையே எழுதுகிறார்கள். ஆனால் அக்கதைகள் தம் இயல்பை ஒப்புக் கொள்வதில் தயக்கம் கொண்டிருக்கின்றன. தம் பூர்வீகத்தை அறிவதில் விருப்பம் இல்லாமல் இருக்கின்றன. அதனாலேயே வடிவம் மற்றும் குரல் சார்ந்த பிரக்ஞையை அவற்றில் உணர முடியவில்லை.
இலக்கியத்தில் தொடர்ச்சி என்பது முக்கியமான ஒரு கருதுகோள். மரபின் பகுதியே தனிமனிதன் என்று டி.எஸ்.எலியட் வரையறை செய்து நிலைநாட்டினார். தொடர்ச்சி, தனித்துவம் – இதுவே இலக்கியம் செயல்படும் முறை. ஓர் எழுத்தாளன் ஏதோவோர் விதத்தில் மரபோடு தொடர்புப்படுத்திக் கொள்கிறான். அது அவனுடைய வாசகத் தேர்வின் வழியாகவே பெரும்பாலும் நடக்கிறது. அவன் விரும்பி படிக்கும் ஆசிரியர்கள் அவனுடைய தொடர்ச்சியை தீர்மாணிக்கிறார்கள். அவன் விருப்பம் தனிமனிதன் மற்றும் கலாச்சாரத்தின் ஆழத்தோடு சம்பந்தப்பட்டது. வண்ணதாசனை லா.ச.ரா மற்றும் தி.ஜானகிராமனின் தொடர்ச்சி என்று ஒரு விமர்சகர் அடையாளம் காட்டலாம் (பெண்ணில், உறவில், அழகில் திளைக்கும் கற்பனாவாதம்). அதே நேரம், தன் முன்னோடிகளிடம் இல்லாத ஒன்றை வண்ணதாசன் தன்னிச்சையாக படைப்பில் சேர்க்கிறார் (எண்ணங்களின் மொழியில் பேசாமல் புறச்சித்தரிப்புகள் வழியாகவும் புலன் அனுபவங்கள் வழியாகவும் மனோநிலையை வெளிப்படுத்துதல்). அதன் வழியே அவர் தனித்துவமான ஆளுமையாக மாறுகிறார். ஆனால் மேலே குறிப்பிட்ட சமகால எழுத்தாளர்களில் இந்த தொடர்ச்சி புரிதலின், இசைவின், தேடலின் வாயிலாகவும் அடையாளப்படுத்தல் மற்றும் பாதிப்புகளை அனுமதித்தல் வாயிலாகவும் நடக்காமல் நேரெதிராக மேலோட்டமாக நடக்கிறது. சுருக்கமாக சொன்னால், தன்னறிதல் குறைந்த இடமாக அவர்கள் படைப்புலகு திகழ்கிறது. அதனால் தனித்துவத்தின் வீச்சு தடைப்பட்ட இடமாகவும். ஏனென்றால் தொடர்ச்சியின்றி தனித்துவம் இல்லை.
இரண்டு விஷயங்களை இங்கே, தெளிவுபடுத்த வேண்டும். முதலாவது, மரபுடனான தொடர்ச்சி என்பது திட்டமிட்டு நடப்பதில்லை. அட்டவணைப் போட்டு இலக்கியம் எழுத முடியாது. இலக்கியத்தை வீட்டுப் பாடமாகவோ இயந்திரத்தனமான மூளை உழைப்பாகவோ நான் சுருக்கவில்லை. மாறாக தன்னறிதல் என்று நான் சுட்டுவது நவீன இலக்கியத்தின் போக்குடனான அடையாளப்படுத்தல் மட்டுமே. எந்த எழுத்தாளனும் இந்த சூழலுக்கு முற்றிலும் அன்னியமாக இருந்துக் கொண்டு நல்ல படைப்பை கொடுத்துவிட முடியும் என நான் நம்பவில்லை. இந்த பரப்புக்கு வெளியே இந்த நிலத்தின் உரம் கலக்காமல் ஒரு புல்லிதழிலும் பச்சை சேர்ந்திட முடியாது. ஜோ.டி.குரூஸை உதாராணமாக கூறலாம். அவருடைய முதல் நாவலான “ஆழி சூழ் உலகு” தமிழுக்கு மிக புதிதான ஓர் உலகை –நெய்தல் வாழ்கை- அறிமுகம் செய்தது. கூட்டங்களும் சச்சரவுகளும் இதழ்களும் பரிபாஷைகளும் நிரம்பிய இலக்கிய உலகுக்கு ஏறத்தாழ அன்னியராகவே அவர் கருதப்பட்டார். எனில் எழுத்துக்கு வாழ்க்கை அனுபவம் மட்டுமே போதும் என்று ஒருவருக்கு தோன்றலாம். ஆனால் ப.சிங்காரத்துடன் அவர் தன்னை பொருத்திக் கொண்டதை இங்கே புறந்தள்ளிட முடியாது. முற்றிலும் புதிதான ஒரு உலகத்துக்கும் இங்கே வேர் இருக்கும். தடம் இருக்கும்.
இரண்டாவதாக, இலக்கிய மரபானது தனிநபர் திறன்களின் கூட்டுத் தொகை மட்டுமல்ல. அதன் முழுமை என்பது உரையாடல்களின் வழியாகவே நிகழ்கிறது. சூழலில் வினையூக்கி போல இலக்கிய உரையாடல் நடக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய இலக்கிய மொழி பலவீனப்படும்போது தன்னறிதலும் குறைகிறது. இலக்கிய உரையாடல் என்பது வெறுமனே கதை சுருக்கங்களை சொல்வதாகவோ அல்லது சொல்முறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டுவதாகவோ அல்லது பேசுபொருளின் மேலோட்ட ஒற்றுமைகளை குறிப்பிடுவதாகவோ அல்லது மனப்பதிவுகளை முன்வைப்பதாகவோ மட்டும் எஞ்சுமேயானால், மொழியின் கலாச்சாரத்தின் படைப்பாக்கத்தின் நுட்பங்களை புரிந்துகொள்ளவே முடியாது. எழுத்தாளனின் தன்னறிதல் எப்படி இந்த கூட்டு நனவிலியில் பிறக்கிறதோ அதேப் போல் ரசனையும் அங்கிருந்தே முளைக்க வேண்டும். அதன் அடுக்குகளை –அரசியல் வாசிப்பிலிருந்து அழகியல் வரை- நாம் ரத்து செய்துவிட்டு தனிநபர் பார்வையை முதன்மைப்படுத்த முடியாது. ஆக, நம் உரையாடல் மொழியில் தற்சமயம் நேர்ந்திருக்கும் குறைபாட்டை அடிக்கோடிடாமல் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளாமல் எந்த மதிப்பீடும் இங்கே நிகழ முடியாது. டெர்ரி ஈகிள்டன் சொல்வது போல அப்பாவித்தனமான வாசிப்புக்கு நாம் திரும்ப முடியாது என்பது உண்மையானால், அப்பாவித்தனமான எழுத்துக்களை கடப்பதற்கான வழியையும் தொடர்ச்சியிலேயே தேட வேண்டும்.
3.
கமலதேவி, கார்த்திக் பாலசுப்ரமணியன் இருவரின் கதைகளையும் யதார்த்த கதைகள் (பெரும்பாலும்) என்று ஒரு வசதிக்காக வரையறுக்கலாம். இலக்கியத்தின் முதன்மை பணிகளில் ஒன்று வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது. அது நிலையான அர்த்தமாக இருக்க வேண்டியதில்லை. அர்த்தமின்மையை, திடுக்கிடலைக்கூட முன்வைக்கலாம். வாழ்க்கை என்று நாம் சொல்வது சம்பவங்களின் தொடர் சங்கிலியை. நம்மை பாதிக்கிற சம்பவங்கள். நாம் பொறுப்பேற்க வேண்டிய சம்பவங்கள். நாம் வேடிக்கைப் பார்த்து கடந்துபோகிற சம்பவங்கள். நாம் கேள்விப்படுகிற சம்பவங்கள். இப்படி எண்ணற்ற சம்பவங்களாலானது வாழ்க்கை. இந்த உதிரி நிகழ்வுகளை எல்லாம் புரிந்துகொள்வதற்கான –அல்லது வெளிப்படுத்துவதற்கான- சரியான வடிவம் சிறுகதையே (அதன் செவ்வியல் அர்த்தத்தில்). புதுமைப்பித்தனின் “ஒரு நாள் கழிந்தது” எனும் தலைப்பு அவ்வகையில் நமக்கு ஒரு தெளிவான வரையறையை தந்துவிடுகிறது. சிறுகதை என்பது வாழ்வின், ஆயுளின் சிறிய அலகான “ஓரு நாளின்” சித்திரம்.
சிறு சிறு அலகுகளாகவே வாழ்க்கையை நாம் கடத்துவதால் சிறுகதையின் ஆதார இயல்பான யதார்த்த விவரிப்பு எப்போதும் தொலைந்து போகாது என்றே நான் நினைக்கிறேன். யதார்த்தத்தை அறிவதற்கு சிறுகதை ஒரு சிறந்த உபாயம். தனிமனிதனுடைய யதார்த்த வாழ்க்கை நிறைய எழுதப்பட்டுவிட்டது; அது சலிப்பானது என்று விமர்சனக் குரல்கள் ஒலிக்கலாம். ஆனால் யதார்த்த கதைக்கான தேவையை அந்த விமர்சனம் ஒழித்துவிடமுடியாது. எனவே கமலதேவியோ கார்த்திக் பாலசுப்ரமணியனோ யதார்த்த கதைகள் எழுதுவதை குற்றம் சொல்ல முடியாது. புதுமை என்று அங்கு கோஷமிடவும் தேவையில்லை. ஆனால் அவர்கள் படைப்பில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் அசல் எத்தனத்தைக் காட்டிலும் தாங்கள் அறிந்த கதைச் சட்டகத்திற்குள் வாழ்க்கையை வசதியாக பொருத்திக் கொள்கிற முனைப்பிருக்கிறது. அது விமர்சிக்கப்பட வேண்டியது. போட்டோ ஸ்டூடியோவில் ஒரே இடத்தில் நிற்க வைக்கப்பட்ட காமிரா போல நாம் இலக்கிய வடிவத்தை அசைவின்றி கையாள முடியாது. திட்டவட்டமான வடிவத்தின், பழக்கத்தின் பொறி இதுவென நினைக்கிறேன். இதனால்தான் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதையில் எழுத்தாளனின் அசல் மதிப்பை கண்டுபிடிப்பது சிரமம் என்கிறார் போலும்.
தொடக்கத்தில் குறிப்பிட்டது போல யதார்த்தக் கதைகள் வடிவ இலக்கணம் கொண்டவை. அல்லது அதற்கான சாத்தியத்தை தக்கவைத்திருப்பவை. அந்த இலக்கணங்களில் ஒன்று கதையை முரண்பாட்டை சுட்டி முடிப்பது. கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் “டொரினா” கதையில் ஒரு முரண் வருகிறது. டொரினா எனும் கலர் சோடா விற்கும் நபரோடு கதையின் மையப் பாத்திரமான பெண் காதலில் விழுகிறாள். காதல் கைக்கூடாது அப்பெண் நெடுங்காலம் திருமணமே ஆகாமலேயே இருக்கிறாள். கடைசியில் அவள் வயதாகி டொரினோவிலேயே விஷம் கலந்து குடித்து சாகிறாள். இது ஒரு சோக முரண். கமலதேவியின் “உடன்போக்கு” கதையில் ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. கணவன் அவளை அணுசரித்து நடந்தாலும் அவன் குடிபழக்கம் அவளுக்கு பிடிக்கவில்லை. உறவில் கசந்து விவாகரத்து பெற்றுவிடுகிறாள். பிறகு சில காலம் கழித்து அப்பெண்ணுக்கு வீட்டில் மறுமணம் நிச்சயிக்கிறார்கள். அவள் வீட்டைவிட்டு ஓடுகிறாள் – தன் முன்னாள் கணவனுடனே. இது ஒரு நகை முரண்.
மேற்கூறிய இரண்டு கதைகளும் பல்வேறு காரணங்களால் வாசகனை தொய்வடைய வைக்கின்றன. முதன்மைக் காரணம் – தத்துவ பின்புலமில்லாமல் முரணாக மட்டுமே தேங்கிவிடும் சிறுகதை, வாசக மனதில் தரித்து வளர்வதற்கான சாத்தியத்தை இழந்து வெறும் துணுக்காக மாறிவிடுகிறது என்பதே. யதார்த்த கதைகளின் அழகியல் மற்றும் தத்துவ பின்புலம் பற்றியும் சிறுகதையில் முரண் பற்றியும் “ஆழத்தின் விதிகள்” கட்டுரையில் விரிவாகவே பேசியிருப்பதால், அவற்றை இங்கே மீண்டும் விவரிக்காமல், பொது அம்சத்தை மட்டும், தொட்டுக் காட்ட விரும்புகிறேன். முரணை சுட்டிக் காட்டுவதன் வழியே எழுத்தாளர்கள் சிக்கலான முடிச்சுகளை தவிர்க்கும்பட்சத்தில் இங்கே உண்டாகிற கேள்வி – யதார்த்தத்தை புரிந்துகொள்ள சிறுகதை எழுதப்படுகிறதா அல்லது சிறுகதையின் வடிவ இலக்கணத்துக்கு ஏற்ப யதார்த்தம் சமைக்கப்படுகிறதா என்பதே. அப்படி சமைக்கப்படும்போது ஒவ்வொரு அனுபவத்தையும் படைப்பூக்கமே வெளிப்படாத, விசாரனைக்கு வாய்ப்பில்லாத கதையாக மாற்றிவிட முடியும். பேஸ்புக்கில் ஒவ்வொரு வாழ்க்கை அனுபவத்தையும் ஜோக்காக மாற்றி ஸ்டேடஸ் போட்டு சிரிப்பு மூட்டுவதுப் போல. எனவே யதார்த்த கதை எழுதும்போது எழுத்தாளனுக்கு கூடுதலாகவே தன்னறிதல் தேவையாக இருக்கிறது
4.
திட்டவட்டமான வடிவமும் அதன் ஏமாற்றும் அழைப்பும் எழுத்தாளனின் பார்வையை திரித்துவிடும். எனில், அந்த வடிவத்தின் பரிச்சயத்தை குலைக்கிற ஓர் அம்சம் படைப்பில் அவசியமாகிறது. அது எழுத்தாளனின் இருப்பன்றி வேறில்லை. எழுத்தாளனுடைய தேடலே பழக்கத்தின் தேய்மானத்தில் சிக்காமல், புதிதான தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. கார்த்திக் பாலசுப்ரமணியன் சிறுகதைகளில் மொழியிலும் கதைக்கருவின் தேர்விலும் வாழ்க்கைப் பார்வையிலும் ஒரு வெறுமை இருக்கிறது. அந்த அயர்ச்சியிலேயே எழுத்தாளன் எங்கே என்று அந்த காலி இடம் நோக்கி நாம் கேட்க நேர்கிறது. இங்கே எழுத்தாளனை ஒரு தனிக் குரல் எனும் அர்த்தத்திலோ பொருண்மையாகவோ நான் குறிப்பிடவில்லை.
எழுத்தாளன் என்று ஒருவன் இல்லை; அவன் கண்டுபிடிக்கப்படுகிறான் என்பது பின்-நவீனத்துவக் கருத்து. நான் பின்-நவீனத்துவ வாசகன் அல்ல. சமூக உரையாடல் என்பதைத் தாண்டி அந்தரங்க உரையாடலாகவே நான் இலக்கியத்தை கருதுகிறேன். எனினும், எழுத்தாளன் கண்டுபிடிக்கப்படுகிறான் என்றே எனக்கும் தோன்றுகிறது. படைப்பாக்கத்தில் தன்னை கண்டுபிடிக்கும் எழுத்தாளனை வாசகனும் பின்தொடர்ந்து சந்திக்கிறான் –சமூககத்தையும் கலாச்சாரத்தையும் கடந்த ஓர் இடத்தில். அப்படி நாம் கண்டுபிடித்து உரையாட எழுத்தில் ஒரு நபர் இருக்க வேண்டியிருக்கிறது. நம்மோடு ரகசியத்தை பகிரும் குரல். மொழி நடையில் அவனை நாம் அறிகிறோம். அல்லது புனைந்தெடுக்கிறோம். அப்படி புனைந்தெடுப்பதற்கான தடயமோ உரையாடுவதற்கான குரலோ கார்த்திக் பால்சுப்ரமணியனின் சிறுகதையில் தென்படவில்லை. தந்தையின் மரணத்தை ஒட்டி அல்லது தலையில் அடிப்பட்டு பிறழ்வு நிலைக்கு செல்லும் மகன் பற்றிய கதையிலும் சரி (புள்ளிக்குப் பதிலாக வட்டம்), ஓர் அன்னியனின் ‘வாழ்ந்து கெட்ட கதையை’ லேசாக குறிப்புணர்த்தும் கதையிலும் சரி (கோவா) மொழி நடை ஒரே மாதிரி தட்டையாக இருக்கிறது. அவருடைய அறிவியல் புனைவிலும் (மெய்நிகரி) மெல்லுணர்ச்சியையே நம்மால் அறிய முடிகிறது. நுகர்வு கலாச்சாரம் போன்ற தற்கால பிரச்சனைக்கூட அவர் கதையில் பேசுபொருளாகிறது (சுழல்). ஆனால் அதிலும் தகவல் பெருக்கம் எனும் அசல் அபாயம், ஒற்றைப் படை உணர்ச்சியால் நீர்த்துப் போகிறது. வாழ்க்கையனுபவத்தால் விரிவுப்படுத்தப்படாத பித்தோ அல்லது விவேகமோ தீண்டாத சாதாரண உணர்ச்சியையே அவர் பிற கதைகளிலும் முன்வைக்கிறார். மனநல மருத்துவர்கூட பொதுபுத்தியின் ஆறுதலை ஏதோ அரிய தத்துவம் போல் முன்வைக்கும் அவருடைய புனைவுவெளி ஆயாசமூட்டுவது. அதிலுள்ள சுய ஆக்கிரமிப்பு இன்னொரு சிக்கல். எனவேதான் கேட்க வேண்டியிருக்கிறது, எழுத்தாளன் எங்கே? யதார்த்தத்தை துலங்கச் செய்யும் அவன் குரல் எங்கே?
(தன் சிறுகதை தொகுப்பை அசோகமித்திரனுக்கு சமர்பித்திருக்கிறார் கார்த்திக் பாலசுப்ரமணியன். ஏமாற்றும் எளிமை எனும் பிரயோகத்துக்கு மிக சரியான முன்மாதிரி அசோகமித்திரன். அசோகமித்திரனின் எளிமையினால் மேம்போக்காக தாக்கமுறும்போது நிகழும் குறைபாடுகள் பற்றி ஏற்கனவே “அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்” கட்டுரையில் பேசியிருக்கிறேன்.)
5.
கமலதேவியின் கதைகள் விசாரனைக்குட்படுத்தப்படாத பொதுமனதின் சௌகர்யமான உணர்ச்சி நிலைகளையே பிரதிபலிக்கின்றன. எனினும் சுய ஆக்கிரமிப்பு இல்லாததால், அபூர்வமாக “கடல்” போன்ற படைப்பு அங்கு தென்பட்டுவிடுகிறது. “கடல்” சிறுகதை கவித்துவ தாவலுக்கான இடத்தை தன்னில் பொதித்து வைத்துள்ளது. டீச்சர் வேலைக்காக கடற்கரை நகரத்துக்கு வருகிறாள் நித்தியா. திருச்சி போன்ற குறிஞ்சி நிலத்தில் இருந்து நெய்தலுக்கு இடம் பெயர்கிறாள். புதிய இடத்தோடும், உப்பு காற்றோடும் பொருந்தவே முடியாமல் இருப்பவளுக்கு கடைசியில் கடலை பார்க்கும்போது சங்க இலக்கியம் நினைவில் வருகிறது. “’கடலினும் பெரிது எமக்கு அவருடை நட்பே ஸ’என்று பனிரெண்டாம் வகுப்பில் படித்த வரி கேட்டது.கடலை பார்த்து பார்த்து காத்திருந்த காத்திருப்பின் சொல்.இரங்கலும் இரங்கலின் நிமித்தமும்” என்று அந்த கடல் முதல்முறையாக நித்தியாவை புன்னகைக்க வைக்கிறது. காலத்தின் நீண்ட ஓட்டத்தில் தனிமனிதனை இணைப்பதன் வழியாக, கலை இலக்கியம், அலாதியான மன விரிவை வழங்குவதோடு உடலும் இடமும் பிணைந்த நம் எல்லைகளை கடக்கவும் உதவுகிறது. விளைவாக, நம் தனிமை நிர்மூலமாகவோ அல்லது கடவுள் போல இன்னும் பிரம்மாண்டமாகவோ மாறுகிறது. “கடல்” சிறுகதையில் இயல்பாக நவீனப் புலத்தில் சங்க காலம் இணைகிறது. மலை மகள் கடலும் தனக்கு அன்னியமில்லை என்பதை உணர்கிறாள். சிறுகதை வடிவம் “கவிதையாதல்”-ஐயே தன் லட்சியமாக கொண்டிருக்கிறது. இக்கதையில் அதற்கான முழு சாத்தியமும் இருக்கிறது. ஆனால் கமலதேவியின் கதைகளில் வழக்கமாக தென்படும் அவசியமில்லாத அலைபாய்தலும் கவனம் கோராத மொழியும் பொதுபுத்தியின் எல்லையை மீறாத பரிவுணர்ச்சியும் கவிதையை அறிய தடையாக இருக்கின்றன. சிறுகதைக்கு நல்லுபதேச தொனியை அளித்துவிடுகின்றன.
“கடல்” போல கவித்துவ உயரமில்லாத கதைகளில் ஆசிரியரின் பரிவுணர்ச்சி எல்லா இடங்களையும் நிரப்பிவிடுகிறது. “சிலுவைப் பாதை” கதையில் ஏழ்மை மீதான பரிவுணர்ச்சி. “கண்ணாடி பரப்பு” கதையில் மீன் மீதான பரிவுணர்ச்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். பரிவுணர்ச்சிக்கும் அன்புக்கும் நடுவே இருக்கக்கூடிய வேறுபாடு துலக்கம் பெறாதபோது வாகர் ஏமாற்றப்பட்டதாகவே உணர்வார். ஏனென்றால் துயர் கண்டு பரிவு கொள்வது அசாத்தியமான செயல் அல்ல. மேலும் அது அறிவுரை மட்டுமே. சாலையில் யாசகம் கோருபவர்களை காணும் பல கண்கள் பரிவுணர்ச்சி கொள்கின்றன. ஆனால் அன்பு செய்வது பரிவுணர்ச்சி போல எளிமையாக நிகழ்வதன்று. அன்பை தரவும் பெறவும் பயிற்சி தேவைப்படுகிறது. அதில் நீடித்து தரிக்க வேண்டியுள்ளது. நம்மில் ஒரு பகுதியை இழக்க வேண்டிவருகிறது. அதற்கான துணிச்சலை கமலதேவியின் சிறுகதைகள் வெளிப்படுத்தவில்லை.
மேலதிகமாக ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். ஒரேடியாக பரிவுணர்ச்சியை மோசமான இயல்பு என்று சொல்ல நான் விரும்ப மாட்டேன். ஏனென்றால் மற்றமை நோக்கி நகர்வதற்கான முயற்சி அதில் உள்ளது. படைப்பாக்கத்தில் அதுவோர் எளிய உபாயம் என்பது மட்டுமே குற்றச்சாட்டு. அதே நேரம், வன்முறையையும் எளிய உபாயங்களாக பயன்படுத்த முடியும். தமிழ் இலக்கிய உலகில் அப்படி எதிர்மறை மனித இயல்புகளை சுரண்டி எழுதப்பட்ட கதைகள் நிறைய உண்டு. அவற்றின்மேல் உடனடியாக மனவிலக்கம் தோன்றாவிடில், பரிவுணர்ச்சியை கேள்வி கேட்பதற்கான தார்மீகம் இல்லாதவர்களாக நாம் ஆகிவிடுவோம். தீமையை இயல்பாக எடுப்பது நன்மையை இயல்பாக எடுக்கும் அப்பாவித்தனத்துக்கு எந்த வகையிலும் சலித்தது அல்ல. கமலதேவியின் பரிவுணர்ச்சி, அடிப்படை மனித மாண்புடன் ஒத்து போவதினாலேயே அவர் கதைக் களங்களில் குறைந்தபட்ச வேறுபாடு தெரிகிறது. “கடல்” கதையில் வருவது போன்ற அழகிய தருணமும் கைக்கூடியிருக்கிறது.
6.
நவீன யதார்த்தக் கதைகளின் நோக்கம் சிறுசிறு அலகுகளாய் நிலைத்து தனிமனித அனுபவமாக யதார்த்தத்தை புரிந்துகொள்வது என தோராயமாக வகுத்துரைக்கலாம். எனில் தொன்மம், வரலாறு போன்றவற்றை நவீன உரையாடலில் கொண்டு வருவதன் நோக்கம் என்ன? தொன்ம மறுஉருவாக்கம் என்பது புதிய விஷயம் அன்று. புதுமைபித்தனின் “சாப விமோசனம்”, ஜெயகாந்தனின் “அக்னி பிரவேசம்” இரண்டுமே ராமாயண சம்பவங்களையும் மதிப்பீடுகளையும் தலைகீழாக்குகின்றன, ஆனால் கலாச்சார கோட்பாடுகளின் வருகைக்கு பிறகு தொன்ம மறு உருவாக்கம் என்பது வெறும் சமூக அரசியல் விமர்சனம் என்பதோடு நின்றுவிடவில்லை. அது அறிதல் வழியாக மாறியிருக்கிறது.
நவீன சிந்தனை முறை காலனிய ஆதிக்கம் நிறைந்தது. ஐரோப்பிய சார்பு கொண்டது. அது தன் தர்க்க வரையறைக்குள் சிக்காத பூர்வீக கலை, சிந்தனை, வழிபாடு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் கொண்டிருந்தது. மையப்படுத்தப்பட்ட மொழிபுகளை முன்வைத்தது. புறவயமான ஆதாரங்களையே சிந்தனைக்கான பாதையாக நினைத்தது. லத்தீன் அமெரிக்கா, கிழக்காசியா போன்ற நாடுகள் விடுதலைக்கு பிறகு தம் பண்பாட்டை மேற்கத்திய வழிமுறைகளை கடந்து புரிந்துகொள்ளவும் முறைப்படுத்தப்பட்ட நாகரீகப் போக்குக்கு அப்பால் வாழ்க்கை நெறிகளை ஆராயவும் முனைந்தன. விளைவாக சிறு தெய்வங்களும் நாட்டாரியல் கூறுகளும் இலக்கியத்தில் இடம்பெறலாகின. இந்த பின்னனியிலேயே அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி ஆகியோரின் சிறுகதைகளை நாம் அணுக வேண்டியிருக்கிறது. இந்த அடிக்கட்டுமானத்திலிருந்து அவை வளர்ந்து முன்னகர்ந்திருக்கின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்ல வேண்டி வரும்.
“வீழ்ந்தவர்களின் புரவி”, “மாபெரும் தாய்” போன்ற சிறுகதைகளில் அகரமுதல்வனும் “வெஞ்சினம்”, “காளிக்கூத்து” போன்றவற்றில் கார்த்திக் புகழேந்தியும் தொன்மங்களை படைப்பின் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள். இருவருமே சிறுதெய்வங்களை வஞ்சகம் மற்றும் அழிவின் பின்னனியில் பொருத்துகிறார்கள். அகரமுதல்வன் கதைகளில் ஈழப் போர் மாபெரும் அவலமாய் நிற்கிறது. கார்த்திக் புகழேந்தி கதைகளில் எளியோரை அரசியல் அதிகாரம் சுரண்டி வஞ்சிக்கிறது. ஆனால் என்ன விளைவுக்காகவும் என்ன வகை விசாரத்துக்காகவும் இருவரும் தொன்மங்களை நாடுகிறார்கள் என்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த தெளிவின்மையினாலேயே இது வெறும் மோஸ்தரோ எனும் சந்தேகம் ஏற்படுகிறது.
கார்த்திக் புகழேந்தி “கதைசொல்லி”யின் மொழியிலும், அகரமுதல்வன் செயற்கையான படிமங்களின் மொழியிலும் எழுதும்போதும் – இருவருடைய கதைப் புலமும் முற்றிலும் வேறாக இருக்கும்போதும் – பேசுபொருள் சார்ந்த ஒற்றுமை நம்மை சிந்திக்க வைக்கிறது. எழுத்தாளனுக்கு தன் நோக்கம் மேல் இருந்தாக வேண்டிய ஆளுமை பற்றிய கேள்விக்கு இட்டுச் செல்கிறது. கார்த்திக் புகழேந்தி நமக்கு நன்கு பழக்கப்பட்ட, பொது ரசனையில் பதிந்துவிட்ட கதை முகூர்த்தங்களையே எழுதுகிறார். அது வாசக அனுபவத்தை வளரவிடாமல் தேங்கச் செய்கிறது. உதாரணமாக, வெஞ்சினத்தில், பூவாத்தாள் தொன்மம் – ராசா மகனுக்கு கட்டிக் கொடுக்க விரும்பாமல் குடும்பத்தினாலேயே கொலை செய்யப்படும் அழகி- வெறும் பழிவாங்கும் கதையாக முடிந்துவிடுகிறது. மறுபுறம் அகர முதல்வனின் கதைகளிலோ தொன்மம் என்பது மிகையலங்காரம் போன்ற இடத்துக்கு நகர்ந்துவிடுகிறது. பேய் படங்களில் வரும் அச்சமூட்டும் காட்சி அமைப்பு போல. அதாவது, இக்கதைகள் தத்துவார்த்தமாக அல்லாமல், மாய அம்சத்தின் காரணமாகவே தொன்மங்களை எழுதுகின்றனவோ என்று சம்சயம் உருவாகிறது. அப்படி எழுதும்போது அவை இயல்பாகவே வெகுஜன அச்சத்தையும் நம்பிக்கையும் அதிர்ச்சியையும் மட்டும் பிரதிபலிப்பவையாக மாறிவிடுகின்றன.
இலக்கியம் என்பது மதப் பிரதியும் அல்ல, ஆவணப் பிரதியும் அல்ல என்கிறார் இடாலா கால்வினோ. மதத்தின் இறுக்கமான நம்பிக்கை சார்ந்த நோக்குடன் எந்த பழக்க வழக்கங்களையும் இலக்கியத்தில் அணுக வேண்டியதில்லை. முக்கியமாக நீங்கள் தொன்மத்தை நவீன உலகில் பேசும்போது அது வெறும் உத்தியாக இருந்துவிடக்கூடாது. ஏதோவோர் வகையில் அது படிமமாகி முடிவின்றி வளர வேண்டியிருக்கிறது. ஆதிமுதல் மனிதன் உணர்கிற கருணை மற்றும் பயங்கரத்தின் உருவாகவே இங்கே சிறு தெய்வங்கள் இருக்கின்றன. அந்த ஆதி உணர்ச்சியை வாசிப்பில் கடத்துவது பெரிய சவால். குகை மனிதனின் கை ரேகை தொட்டு பார்ப்பதுப் போல ஓர் பிணைப்பை எழுத்தாளன் உண்டாக்க வேண்டும். அந்த கவித்துவ கண்டடைதலை மேற்சொன்ன கதைகள் எட்டியிருப்பதாக எனக்கு படவில்லை. மாறாக அவை மேல்மட்ட அதிர்ச்சியினையும் எளிய வினோதத்தையுமே வரைந்து காட்டுகின்றன.
கார்த்திக் புகழேந்தியின் “காளிக்கூத்து” கதையோடு எல்லா வகையிலும் ஒப்புமை செய்யக்கூடிய படைப்பு, ஜெயமோகனின் “மாடன் மோட்சம்”. இரண்டுக்கும் நடுவே இருக்கும் முக்கியமான வேறுபாடு என்பது ஜெயமோகனால் உருவாக்க முடிந்திருக்கும் சிரிப்பு. ஒரு பொது மனிதனின் இடைவெளியுடனும் சின்ன பூசாரித்தனத்துடனும் கார்த்திக் புகழேந்தி தன் கதைகளை எழுதுவதால் அவற்றில் அந்த சிரிப்புக்கான வாய்ப்பையே அறிய முடியவில்லை. போலவே ஜெயமோகன் தன் பல கதைகளில் தெய்வத்தைச் சுற்றி அமைப்பும் அதிகாரமும் உருவாகும் விதம் பற்றிய சித்திரத்தை அளித்திருக்கிறார். அது பல்வேறு கருப்புத் தரப்புகளின் மோதலாகவும் முரணியக்கமாகவும் ஜெயமோகனால் பார்க்கப்படும்போது, கார்த்திக் புகழேந்தி கதையில் அது ஒற்றைப் படையான சோக கதையாக மட்டுமே அணுகப்படுகிறது. இந்த இடைவெளி எதனால் நடக்கிறது என்பதே நாம் உரையாட வேண்டிய புள்ளி.
7.
இலக்கியத்தின் பயன் என்ன எனும் கேள்விக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதிலை சொல்ல முடியாத இடத்திலேயே நாம் இன்னமும் இருக்கிறோம். அவ்வளவு நுண்மையான ஓர் இருப்பின் மேல்தான் வாழ்வின் பெரிய கேள்விகள் சுமத்தப்படுகின்றன. இந்நிலையில் இலங்கைப் போர் போன்ற மாபெரும் அழிவை ஓர் எழுத்தாளன் எப்படி எதிர்கொள்வது? நூற்றாண்டாக எழுத்தாளர்கள் போர் சூழலை எதிர்கொண்டபடியும் அவை பற்றி கதைகள் எழுதியவாறுமே இருக்கிறார்கள். உலக யுத்தம் பற்றி இன்றும் நாவல்கள் வருகின்றன. யூத படுகொலை பற்றி எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. உள்நாட்டு போர்கள் பற்றியும் தொடர்ச்சியாக நூல்கள் வருகின்றன. இவ்வளவு இருந்தும், போர் கதைகளில் ஒரு வாசகன் வாசிப்பனுபவம் பற்றி பேசத் துணியும்போது அறம் சார்ந்த நெருக்கடியை அவன் உணர நேரலாம். மனிதர்களுடைய எல்லா தர்மநெறிகளையும் பண்பாட்டு நம்பிக்கைகளையும் குலைக்கும்படி ஒரு கொடூரம் நிகழ்த்தப்படு
கார்த்திக் புகழேந்தி -கடிதம்
கார்திக் புகழேந்தி தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
கார்த்திக் புகழேந்தி பற்றிய தமிழ் விக்கி பதிவின் வழியாக அவரைப் பற்றிய கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை! என்னும் கட்டுரைக்குச் சென்றேன். அவரை இன்னும் அணுக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. கார்த்திக் புகழேந்தி வாழ்க்கையின் பல்வேறு அல்லல்கள் வழியாக போராடி வந்திருக்கிறார். பல தொழில்கள் செய்திருக்கிறார். சிட்டி யூனியன் பேங் ஏடிஎம் எனக்கு போதிமரம் என்கிறார்.
வாழ்க்கையில் இருந்துதான் கலை வரவேண்டுமா என்று கேட்டால் விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் விதி அதுதான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இன்றைய இலக்கியப்படைப்புகளில் முக்கியமாக இருக்கும் சிக்கல் என்னவென்றால் அனுபவப் பற்றாக்குறைதான். அனுபவங்கள் இல்லாத நிலையில்தான் வடிவச்சோதனை, மொழித்திருகல் என்றெல்லாம் எழுத்து திசைதிரும்புகிறது. பலகதைகள் வடிவம் காரணமாக பரவாயில்லையே என்று தோன்றவைத்தாலும் அப்படியே கொஞ்சநாளில் மறந்துவிடுகின்றன.
அனுபவங்கள் அபூர்வமானவையாக இருக்கவேண்டுமென்றில்லை. ஆனால் அதில் எழுத்தாளன் போராடியிருக்கவேண்டும். அவன் எதனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான் என்பது முக்கியம். சாமானிய மக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும்போதுதான் எழுத்தாளனுக்கு வாழ்க்கைப் போராட்டம் உறைக்கிறது. அதுதான் எழுத்து
கலை எப்போதுமே mundane தளத்தில் இருந்து விடுபடவே முடியாது. சும்மா cerebral ஆக எதையாவது யோசித்து முட்டிமோதி எழுதலாம்தான். அப்படி எழுதுபவர் அபாரமான மேதையாக இருக்கவேண்டும். அப்போதுதான் தத்துவம் சார்ந்து ஆழமாக செல்லமுடியும். மிகவிரிவான கல்வி வேண்டும். பண்பாடு இலக்கியமெல்லாம் அsiத்துபடியாக இருக்கவேண்டும். அல்லது மிக அபாரமான கற்பனை வேண்டும். அதுவும் இங்கே அரிது.
கார்த்திக் புகழேந்தி போன்ற அடித்தளத்தை அறிந்து எழுதுபவர்களே இன்றைக்கு தமிழ் வாழ்க்கையை எழுதமுடியும். அவருடைய ஆரஞ்சு மிட்டாய் என்னும் தொகுதியை மட்டுமே என்னால் வாசிக்க முடிந்தது. விஷ்ணுபுரம் விருதுவிழா அறிவிப்புக்கு பிறகுதான் நான் அவர் பெயரை கேள்விப்பட்டேன். கவனிக்கத்தக்க படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் விஷ்ணுபுரம் அமைப்புக்கு நன்றி
சி.பாலசுப்ரமணியம்
விஜயா வேலாயுதம், கடிதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
அன்பின் ஜெ,
நலம்தானே?
சென்ற மார்ச் மாதத்தில் ஒரு ஞாயிறு இரவு தகடூர் புத்தகப் பேரவை, ஐயா மு. வே அவர்கள் பங்கேற்ற இணைய நிகழ்வொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஐயா எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்” என்ற நூல் அறிமுக நிகழ்வு. தங்கமணி சார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். திருவள்ளுவர் பொத்தக நிலையம் நடத்தும் அறிவுடை நம்பி அவர்கள் அறிமுகம் செய்து பேசினார். புத்தக அறிமுகத்தோடு தனக்கும், தன் அப்பாவுக்கும் மு, வே ஐயாவுடன் இருந்த நெருங்கிய நட்பு பற்றியும் சொன்னார். எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அவர்களும், கவிஞர் க.வை. பழனிச்சாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். நம்பியின் அறிமுகத்திலிருந்தும், தொடர்ந்த இரண்டு வாழ்த்துரைகளிலிருந்தும் ஐயாவின் முழுமையான சித்திரம் ஒன்று துலங்கி வந்த சிறப்பான நிகழ்ச்சி அது.
நிகழ்வில் அடுத்ததாக மு. வே ஐயா ஏற்புரை வழங்கினார். இன்னும் ஞாபகத்திலிருக்கும் நல்ல உரை. ஐயாவை பல வருடங்கள் கழித்து பார்க்கிறேன் அந்நிகழ்வில். “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்பது போல நான் சொல்ல வேண்டுமானால் “எல்லாப் புகழும் புத்தகங்களுக்கே” என்பேன் நான்” என்றுதான் உரையை ஆரம்பித்தார் மு. வே ஐயா. புத்தகங்கள் ஒருவர் வாழ்வை என்ன செய்யுமென்பதற்கு தன் 81 வருட வாழ்க்கையே சாட்சி என்றார். புத்தகங்கள் சார்ந்த தன் விருப்பமும் தொழிலும் ஒன்றாய் அமைந்ததே தன் நிறைவான வாழ்க்கைக்கு காரணம் என்றார். கொங்கு மண்டலத்தில் தன் இத்தனை வருட அனுபவத்தில் தான் சந்தித்த சிறந்த வாசகர்கள் சிலரை நினைவு கூர்ந்தார். எல்லோருக்குள்ளும் படிக்கும் ஆர்வம் இருக்கிறது, அதை எப்படித் தூண்டி, புத்தகங்களை நோக்கி அவர்களை ஈர்ப்பது என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது என்றார்.
நான் பழைய நினைவுகளில் ஆழ்ந்தேன். பயணங்களின் போதும், வெளியில் செல்லும்போதும், பெரிய புத்தகக் கடைகள் மட்டுமல்ல, வார, மாத சஞ்சிகைகள் தொங்கும் சின்னப் பெட்டிக் கடைகளைக் கண்டால் கூட ஆசையாய்த்தான் பார்ப்பேன். அந்தப் பித்து ஆரம்பித்தது என் பால்யத்தில் என்பது அம்முவுக்கும் தெரியும். கிராமத்தில் வசந்தா அத்தை, மனோ சித்தப்பா, வெங்கடாஜலபதி பெரியப்பா, கமலா பெரியம்மா, பொட்டுத் தாத்தா, ராஜி அக்கா மற்றும் பல அக்காக்கள் போன்றோரால்தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அட்டையாய் ஒட்டிக்கொண்டது. வார மாத இதழ்களில் வந்த தொடர்கதைகள், படக் கதைகள் எல்லாமே பைண்ட் செய்யப்பட்டு வசந்தா அத்தை வீட்டில் ஒரு பெரிய அட்டைப் பெட்டி நிறைய முதல் மாடியில் இருக்கும். விடுமுறைகளில் காலையில் அங்கே போனால் மாலையில்தான் திரும்புவேன். சாப்பாடு, டீ, காபி எல்லாம் அத்தை வீட்டில்தான். வீடு மந்தையில் இருந்ததால் பலசரக்குக் கடைகள் எல்லாம் பக்கத்தில்தான். வீட்டு வாசல் பக்கத்திலேயே நண்பன் முனீஸ்வரனின் அப்பா காரா சேவு, மிக்ஸர் கடை வைத்திருந்தார். கடைக்குப் போடப்படும் பழைய குமுதம், ஆனந்த விகடன் எல்லாவற்றையும் ஒன்று மாற்றி ஒன்று படிக்க வாங்கி வந்து கொண்டேயிருப்பேன். சென்னம்பட்டி நடுநிலைப் பள்ளியில் படித்தபோது அங்கு தலைமையாசிரியர் ”டேவிட் சுந்தர் சிங்” ரத்னபாலா, பூந்தளிர், பாலமித்ராவை அறிமுகப்படுத்தினார். பள்ளியின் முன்னாலேயே கடை வைத்திருந்த தோழி நாகேஸ்வரியின் அப்பா காமிகஸ் புத்தகங்கள் கடையில் வைத்து நாள் வாடகைக்குத் தந்து கொண்டிருப்பார். ஒன்பதாம் வகுப்பு திருமங்கலம் PKN-க்கு வந்தபிறகு, வாசிப்பு கல்கி, சாண்டில்யன், ராஜேஷ்குமார், சுபா, பி,கே.பி, சுஜாதா, பாலா என்று விரிந்தது.
89-ல் கோவைக்கு வந்தபின்தான் விஜயா பதிப்பகம் அறிமுகமாயிற்று. 94 வரையிலான என் கோவை கல்லூரி வாழ்க்கையின் அந்த நான்கு வருடங்களை சுயபுராணமாய் எழுதினால் அதில் விஜயா பதிப்பகம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும். பாலாவின் மீதும், தி.ஜா.-வின் மீதும் கொண்ட பெருங்காதலோடு கல்லூரியில் சீனியர் அகிலன் அண்ணாவால் தீவிர இலக்கியமும் அறிமுகமானது ஜேகேயோடு சேர்த்து. புத்தகங்களின் மீதான என் பெரும்பசிக்கு விஜயா பதிப்பகம் அள்ளி அள்ளி தீனி போட்டுக் கொண்டேயிருந்தது. நண்பர்களோடு சைக்கிளில் மருதமலை போனால் அங்கு ஒரு விஜயா பதிப்பகத்தின் கடை. தோழிகளோடு பேரூர் கோவில் போனால் அங்கு ஒரு கடை. காந்திபுரம் போகும்பொழுதெல்லாம் கௌரிசங்கர் முன்னாலிருக்கும் விஜயா பதிப்பகக் கடையில் நுழையாமல் வந்ததில்லை. கல்லூரி வாழ்க்கையில், டவுன் ஹால் மணிக்கூண்டு என்றால் எனக்கு ராஜவீதி விஜயா பதிப்பகம்தான். கூடவே அங்கிருக்கும் பழைய புத்தகக் கடைகளும். 89-ல் விஜயா பதிப்பகத்துடன் அன்று தொடங்கிய பந்தம் இதோ 2021 வரை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 99-ல் அம்முவுடன் திருமணத்திற்குப் பிறகு திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டினுள் இருக்கும் விஜயா பதிப்பகக் கடையும் என் பக்கங்களில் இணைந்து கொண்டது.
இப்போதும் ஊருக்குப் போனால் பல்லடம், திருப்பூர், கோவை என்று சுற்றும்போது புத்தகக் கடைகளுக்குள் நுழையாமல் பயணங்கள் முழுமையடைந்ததே இல்லை. பல்லடத்தில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆர்யாஸ் ஹோட்டலுக்கு அருகிலிருக்கும் புத்தகக் கடை, பொள்ளாச்சி ரோடு திருப்பத்தில் சரவண பவனிலிருக்கும் சிறிய கடை என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை. ஏனோ புத்தகங்களை மொத்தமாகப் பார்ப்பதும், அதைத் தொட்டு, பிரித்து உணர்வதுமே ஒரு இனிய அனுபவமாக ஆழ்மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. அது வாசிப்பினால் உண்டான பரவசத்தின் தேடல். விளைவு.
மு. வே ஐயா அவர்கள் இவ்வருட விஷ்ணுபுர விழாவில் கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. ஐயாவிற்கு அன்பும், வணக்கங்களும்.
வெங்கி
அ. க. அரவிந்தன்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்
அ.வெண்ணிலா சிறுகதை வாசிப்பனுபவம்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
பெண் உடலை காம உலகின் வாசல் என்றே ஆண் நினைக்கிறான். கதவைத் திறக்கும் முன் அவ்வுடலே காம உலகின் தீராத வெம்மையில் தகித்து நிற்கும் கணங்களே அவளை எல்லைகள் தாண்டிச் செல்லத் தூண்டும் காரணியாகிறது. பெதும்பை பருவத்தின் குதூகலம், அறியத் துடிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகிறது. மங்கைப் பருவம் அனுபவிப்பதிலும் மடந்தைப் பருவம் தன்னுடல் மாற்றத்தின் நிகழ்வுகளை எதிர் நோக்குவதிலும் அதன் வலிகளை ஏற்றுக் கொள்வதிலும் கழிகிறது.
கணவனின் ஆர்வத்திற்கு விடை அளிப்பவளாய் மட்டுமே இருப்பதால் தன்னுடலின் வேட்கைகளை தணிக்க முடியவில்லையே என ஏங்குகிறாள். மங்கை முடிந்து மடந்தையில் கால் வைக்கும் பெண்ணுடல் எதிர் கொள்ளும் தீவிரமானதும் நிதானமாக உயருவதுமான காம நதியின் பெருக்கை பதின்வயதின் ஆர்வத்துடனும் முதுவயதின் பொறுமையுடனும் நுண்மையாக விசாரணை செய்கிறது கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய இந்திரநீலம் சிறுகதை.
ஒரு வட்டத்திற்குள் நின்று காம நதிப் பிரவாகத்தின் நீள அகல ஆழங்களை அளந்து பார்த்துவிடத் துடிக்கிறாள் பாமா. இளமையின் வசீகரமும் வனப்பும் குறைந்து வரும் வயதில் தீராமல் உயர்ந்து நிற்கும் காமச் செடியின் பூக்களைப் பறித்து சூடிடவும் அதன் நறுமணத்தின் போதையில் மிதக்கவும் தன் கணவன் கண்ணனை எதிர் நோக்குகிறாள்.
காமம் பெண் உடலுக்கு எதிராக நிற்கிறது. இளமையில் தொட்டதும் பற்றி எரிந்து கரைந்து காணாமல் போகும் மெழுகாகவும் மெனோபாஸ் காலத்தில் நின்று புகையும் ஈர விறகாகவும் அவள் உடல் காமத்தின் துருவங்களைக் காட்டுகிறது.
அவள் தேவை என்னவென்று உடலியக்கத்தில் ஒருபோதும் காதல் கணவன் கேட்டதில்லை. தனக்கு என்ன தேவை என்பதை கேட்டுப் பெறும் பின்புலத்திலும் அவள் வளரவில்லை. கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குத் தரப்படும் என்பது கடவுளிடம் சாத்தியமாகலாம். ஆனால் கணவனிடம் அதன் விளைவுகள் வேறாகி விடுமோ என்ற அச்சமே நுரை பொங்கி வழியும் தன் காமத்தின் கதவுகளை குறைந்தபட்சம் ஒரு முத்தம் என்ற அளவிலேயே மூடிக் கொள்ள வேண்டும் என பாமாவை நினைக்க வைக்கிறது. அன்றாடத்தின் சலிப்பினூடே அவளின் காம நதியின் பெருக்கை உணராமல் கணவன் சொட்டு சொட்டாக வழிய விடுகிறான். பெருவெள்ளம் என சுழித்தோட வேண்டிய காமம் கண்ணனின் வழக்கமான அவசர இயக்கத்தில் சூம்பிப் போய் சிற்றோடையின் வடிகால் எனக் குறுகி முடிகிறது.
இந்திர நீலம் சிறுகதையாடல் வழி அ.வெண்ணிலா எழுப்பும் கேள்விகள் ஏராளம். உடல் கோரும் மென் காமத்தின் கிளர்ச்சிகளை அக்கறையோடு விசாரணை செய்யும் ஏராளமான கேள்விகள். மெனோபாஸ் காலகட்டத்தில் பெண் உடல் வழியே தோன்றிப் படரும் காமத்தினை உளவியல் விசாரணைகளால் எதிர் கொள்கிறார்.
இயல்பாய் தாவிச் செல்லும் மனம் கொண்ட நவீன பெண் அல்ல பாமா. மரபில் காலூன்றி நவீனத்தில் எழும்பி பறக்க நினைப்பவள். பறந்து சென்றுவிட நினைக்கும் பட்டத்தின் உயிர் நுனி, கரம் பிடித்தவனின் விரல்களில் சிக்கி இருப்பதை இயல்பாக எடுத்துக் கொண்டு தன் சிறகை மடக்கி வைக்கும் ஐம்பதை நெருங்கிய பெண்.
கண்ணன், பாமா, காமம், இந்திரநீலம் என ஒரு காவியச் சாயலுடன் பெண் உடல் உணர்த்தும் காமத்தை கவித்துவமாய் மொழியும் அருமையான சிறுகதை.
அன்புடன்
க. ரகுநாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்
விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

