Jeyamohan's Blog, page 659
December 19, 2022
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
சுனீல் கிருஷ்ணனின் மரணமின்மை என்னும் மானுடக் கனவு. வெளியீடு நாஞ்சில்நாடன். பெற்றுக்கொள்பவர் சௌந்தர்ராஜன்(யோகா குரு)
லெ.ரா.வைரவனின் இரண்டாம் சிறுகதைத்தொகுதியான இராம மந்திரம். வெளியிடுபவர் சுனில் கிருஷ்ணன் பெற்றுக்கொள்பவர் ஜெயமோகன்
கா.சிவாவின் மூன்றாம் சிறுகதை தொகுதியான கரவுப்பழி. வெளியிடுபவர் ஜெயமோகன். பெற்றுக்கொள்பவர் கமலதேவி.
ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த அனிதா அக்னிஹோத்ரியின் உயிர்த்தெழல்.
இவான் கார்த்திக்கின் முதல்நாவலான பவதுக்கம். எம்.கோபால கிருஷ்ணன் வெளிய்ட பெற்றுக்கொள்பவர் ஜெயமோகன்
சுஷீல்குமாரின் மூன்றாம் சிறுகதை தொகுதியான அடியந்திரம். ஜெயமோகன் வெளியிட பெற்றுக்கொள்பவர் செந்தில்குமார் என்னும் குவிஸ் செந்தில்
மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி ‘ஆழம்’ நாவல் கீரனூர் ஜாகீர்ராஜா வெளியிட ஜெயமோகன் பெற்றுக்கொள்கிறார். உடனிருப்பவர் சுனில் கிருஷ்ணன்ந.சுப்பு ரெட்டியார்
பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் ஆலயப் பயணக்கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஆனால் இன்று உடனடியாக நினைவுக்கு வருவது நினைவுக்குமிழிகள் என்ற அவருடைய நான்கு பாக தன்வரலாறுதான். தன்வரலாறு எழுதுபவர் சாகசமோ, தியாகமோ செய்திருக்கவேண்டியதில்லை, அவர் வாழ்க்கையில் அதிநிகழ்வுகள் நிகழ்ந்திருக்கவேண்டியதில்லை என்று அது எனக்குக் காட்டியது. பல ஆண்டுகள் அன்றாடநிகழ்வுகளை வரிசையாக டைரியில் குறித்துவந்தவர் அவற்றையே தன்வரலாறாக எழுதியிருக்கிறார். அதனூடாக வெளிப்படுவது ஒரு காலகட்டம் எப்படி நிகழ்ந்தது என்னும் சித்திரம். ஒரு யதார்த்த நாவல்போல பொறுமையாக வாசிக்கவேண்டிய படைப்பு அது.
ந.சுப்புரெட்டியார்ஸதீநாத் பாதுரியின் விடியுமா? – வெங்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களின் வரிசையில் ஸதீநாத் பாதுரியின் வங்க நாவல் “விடியுமா?”-வை (தமிழாக்கம் என்.எஸ். ஜகந்நாதன்) சென்ற வார இறுதியில் வாசித்தேன். ஆச்சர்யமும், வியப்பும், நிறைவும்.
1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்க காரணமானவன் நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு“. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான்.
அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது.
ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார்.
அதன்பின்பு…
***
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் “ஜாகரி” (“விடியுமா?”) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்ன என்ன என்பதை பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் “ஸரோஜ் பந்தோபாத்யாய“. முன்னுரையிலிருந்து…
*
ஸதீநாத் பாதுரியின் “ஜாகரி” வங்காள அரசியல் நாவல் இலக்கியத்துக்கு ஒரு புது பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் இசைத்து வந்த “கோஷ்டிகான” அமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்து விட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. “ஜாகரி“-யில் வர்ணிக்கப்படும் “மாஸ்டர் ஸாகிப்“பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது“
*
முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள் தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது.
அருமையான நாவல்! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழிற்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்!. முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (“வெள்ளையனே வெளியேறு“) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைப்படுத்தியது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் “விடியுமா?”.
நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புற கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான்.***
முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் “ஜாகரி“(“விடியுமா?”)-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – “மனிதன்“.
வெங்கி
“விடியுமா?” – ஸதீநாத் பாதுரி
(வங்க நாவல்; மூலம்: “Jagari” 1945)
தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
பனியும் பண்படலும் – கடிதம்
அன்புள்ள ஜெ,
நெடுநாட்களுக்குப் பிறகு பயணக் கட்டுரை. உற்சாகமாக இருந்தது. நார்டிக் நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகள் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே இவ்வுலகின் பிற நாடுகளில் இருந்து மானுட சிந்தனை பரிமாணங்களில் பன்மடங்கு முன்னே சென்றவை. இந்நாடுகளில் இருக்கும் தனிமனித வெளி என்பது உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. அதே போன்று பணம், உழைப்பு போன்று நம்மை ஓட வைத்துக் கொண்டிருக்கும் வஸ்துக்களைப் பற்றிய அவர்கள் பார்வையும் தனித்துவமானதே. நான் பார்த்த வரையில் குழந்தைகளுக்கு இப்பிராந்தியங்களில் கிடைக்கும் சுதந்திரம் அபரிமிதமானது. என் மகன் ஐந்து வயதாக இருக்கையில் நார்வே சென்றிருந்தோம். தலைநகரான ஆஸ்லோவில் இருந்து எட்டு மணி நேர பயணத் தொலைவில் இருந்த ஒரு மிக மிகச் சிறிய கிராமத்தில் தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரின் தினப் பயன்பாட்டிற்காக சற்றே பெரிய படகு வைத்திருந்தார். அதில் அவ்வூரின் ஃப்யோர்ட் என்றழைக்கப்படும் நீர்நிலையோடு ஒரு பயணத்தையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். என் மகன் தானும் அந்த படகை செலுத்த விரும்புவதாக சொன்னான். ஆம், விருப்பை வெளிப்படுத்தினான், அவ்வளவே. அடம் பிடிக்கவில்லை, அழுது கேட்கவும் இல்லை. சும்மா கேட்பது போல் கேட்டான். அவர் உடனேயே அவனை அழைத்து சுக்கானை இயக்கச் சொல்லிவிட்டார். சற்று நேரம் சென்று பார்க்கையில் என் மகன் தனியாக படகை செலுத்திக் கொண்டிருந்தான். அவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அதிர்ச்சியுடன் அவரை பார்த்தேன். பார்வையைப் புரிந்தவராக ‘அவன் பொறுமையாக, பக்குவத்துடன் செலுத்துகிறான். எனவே நான் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன்’, என்றார். என் மகன் முகத்தில் அன்று தெரிந்த மலர்வை, உடலில் வெளிப்பட்ட தன்னம்பிக்கையை இந்தியாவில் இன்று வரை மீண்டும் என்னால் கொண்டு வர இயலவில்லை. நானும் அவனை நம்பி காரை இன்னமும் கொடுக்கவில்லை. (அது இங்கே சட்டப்படி தவறு என்பதால் அல்ல என்பதை புரிந்து கொள்ளபவரே நல்ல இலக்கிய வாசகர்!!)
பனி அவர்களை மொத்தமாக வடிவமைக்கிறது எனலாம். இங்கே பிறப்பு விகிதம் குறைவு, எனவே குழந்தைகளுக்கு அவ்வளவு மரியாதை. இந்நாடுகளில் நகரங்கள் குறைவே. நகரங்களுக்கு வெளியே மக்கள் அப்பெரும் பனி நிலங்களில் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நார்வேயில் நாங்கள் தங்கியிருந்த கிராமத்தில் மொத்தமே எட்டு வீடுகள் தான். அவற்றில் நான்கில் மட்டுமே மனித வாசம். ஊரின் மக்கட்தொகை எட்டு. ஆம், எட்டே பேர் கொண்ட ஒரு ஊர். நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்களிடம் எந்த சாவியையும் தரவில்லை. கேட்டதற்கு வீட்டை பூட்டும் வழக்கம் இல்லை என்றார். அனைத்தும் திறந்த மடம் தான். ஏனெனில் தாங்கள் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு யாரேனும் வருகை தந்தால் அவர்கள் அனாவசியமாக குளிரில் வெளியே நிற்க வேண்டுமே. அது மிகக் கடினம் என்பதால் அவர்கள் உள்ளே வந்து இருக்க ஏதுவாக பூட்டுவதில்லை என்றார். புரிந்தாலும் மண்டைக்கு உறைக்க கொஞ்சம் தாமதமானது.
அந்த பனிக்கு உடலில் வெப்பத்தை தங்க வைக்க ஊனுணவும், மதுவும் தேவை. பனி அவர்களை ஒன்றிணைக்கிறது. தங்கி வாழ ஒருவருக்கொருவர் உதவியாக வேண்டிய சமூக ஒத்துழைப்பை உத்தரவிடுகிறது. உடல் உழைப்பைத் கோரும் பணிகளை எந்திரங்களால் நிறைவேற்ற அவர்களை முடுக்குகிறது. அவர்களின் உணவு, உடை, உறைவிடம் துவங்கி உறவு, உழைப்பு, உலகியல், ஆன்மீகம் என அனைத்தையும் வடிவமைப்பது பனியே. இன்றும் தானியங்கமாக்கலில் புதுப்புது உத்திகளை, சிந்தனைகளை முன்வைப்பதில் உலகின் முன்னணி நாடுகள் இவையே.
இப்போது இவை தங்கள் மறைந்த பண்பாட்டை, குறிப்பாக வைக்கிங் பண்பாட்டை மீட்டெடுக்க பெரு முயற்சிகளை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியே அந்த மரக்கலத்தைமுழுமையா கடலடியில் இருந்து எடுத்து கண்காட்சி ஆக்கியதும், தோர், ஓடின், லோகி என அவர்களின் தெய்வங்களை அவெஞ்சர்கள் ஆக்கியதும். நீங்கள் கூறியது போன்று தங்கள் வெற்றிகளை மட்டுமல்லாது தோல்விகளையும் தயங்காமல் முன்வைத்தமை அவர்களை வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் புதுமைகளை செய்யத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது.
இதற்கு நேர் மாறான மறுமுகமும் அவர்களுக்கு உண்டு. பனி எந்த அளவு அவர்களிடையே ஒருங்கிணைவைக் கோருகிறதோ அதே அளவு அவர்களிடையே விலக்கத்தையும் அளிக்கிறது. அவர்கள் பொதுவாக தனியர்கள். மன அழுத்தம் என்பது அங்கு சாதாரணமான ஒன்று. மது விடுதிகளில் சற்று கூடுதலாக குடித்தால் கூட தற்கொலை மனநிலை இருக்கிறதா என பார்ப்பார்கள். இங்கே வெயில் பொழியும் இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு இந்த சிக்கல்கள் எல்லாம் இல்லை. அதிலும் குறிப்பாக மீண்டும் இந்தியா வந்து விடுவோம் என்ற மனநிலையில் வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த நாட்கள் எல்லாம் சற்றே நீண்ட விடுமுறைக் காலம் போலத் தான் தோன்றும். எனவே இயல்பாகவே ஒரு கொண்டாட்ட மனநிலை கூடி விடும். ஆனால் அங்கிருப்பவர்களுக்கு இது தனிமையின் காலம். தனிமை இன்னமும் அவர்களின் ஆதி உணர்வான வேட்டை மனநிலையை கூர்மையாகவே வைத்திருக்கிறது.
மிக நீண்ட, ஒளியின்மையால் நிறைந்த, பனியால் உறைந்த காலத்தின் பின்விளைவு அது. ஆம் பனி அங்கு காலத்தை கூட உறைய வைக்கும். காலத்தை ஒரு கல்லென தொட்டுவிடலாம் எனத் தோன்ற வைக்கும். உறைந்த காலம் மானுட மனதையும் அசைவின்மை நோக்கித் தள்ளுகிறது. ஆடும் சுடரை அசையாமல் ஆக்கி ஊழ்கம் பயின்ற நம் மண்ணின் ஆன்மிக முதிர்வு இங்கே மலரும் முன்பே கிறித்தவம் காலூன்றி விட்டது. எனவே இன்று அந்த அசைவின்மை அவர்களின் வேட்டையின் போது கைகூட வேண்டிய பொறுமை என்ற அளவிலேயே தேங்கி விட்டது. நார்டிக் நாடுகளில் இன்றும் வேட்டை ஒரு முக்கியமான தொழில், பொழுதுபோக்கு. ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் டென்மார்க்கின் ஃபரோய் தீவுகளின் ஆழமில்லா கடற்கரையில் நிகழும் திமிங்கில வேட்டை மிகவும் புகழ்பெற்றது. (இன்று விலங்கு ஆர்வலர்களிடமிருந்து மிகப் பெரிய கண்டனங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வும் கூட.) ஃபின்லாந்து ஐரோப்பாவிலேயே மிக அதிக வேட்டையாடுபவர்களைக் கொண்ட நாடு.
நீங்கள் கூறிய மற்றொரு கருத்துடனும் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். பல முறை வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியா மீண்டவன் என்ற முறையில் நான் சென்று குடியேற விரும்புவதும் இந்நாடுகளில் ஒன்றில் தான். இங்கே தன்னறத்தைக் கண்டுகொண்டவர்கள் முழுமையான நிறைவுடன் வாழ முழு வாய்ப்பும் இருக்கிறது. உங்களுடன் இவ்வுலகில் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டுமென்றால் நார்வேயில் நான் தங்கிய அந்த மலை கிராமத்தையே தெரிவு செய்வேன். காலம் கைகூடட்டும். நெடுநாட்களுக்குப் பிறகு பனியுடனான என் நினைவுகளை அசைபோட வைத்தமைக்கு நன்றி.
என்றும் அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்
இன்னொரு சினிமா பேட்டி
திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்தேன். செப்டெம்பரில் இரு படங்களின் வெளியீட்டை ஒட்டி பேசவேண்டியிருந்தது. பின்னர் ஒவ்வொரு ஊடகநண்பருக்காகவும் பேசும்படி ஆகிவிட்டது. பெரும்பாலும் இந்த புதிய ஊடகங்களில் உற்சாகமான புதிய இளைஞர்கள் பணிபுரிகிறார்கள். முடியாது என மூர்க்கமாகச் சொல்லமுடியாத நிலை
December 18, 2022
விஷ்ணுபுரம் விழா 2022
ஒவ்வொரு ஆண்டும் எழுதும் ஒரு வரி உண்டு. விஷ்ணுபுரம் விருதுவிழா ஒவ்வொரு ஆண்டும் பெரியதாகிக்கொண்டு செல்கிறது. இந்தாஅண்டு இதுவரை நிகழ்ந்தவற்றிலேயே பெரிய விழா. மிக நிறைவான நிகழ்வு. அமர்வுகள்.
அல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்
[image error]அல்லையன்ஸ் பதிப்பகம் நூறாண்டு கண்ட தமிழ் நூல்வெளியீட்டகம். இலக்கிய வாசகர்களுக்கு க.நா.சுவின் நினைவுகளில் அல்லையன்ஸும் அதன் வெளியீட்டாளர் குப்புசாமி ஐயரும் அடிக்கடி வருவது நினைவுக்கு வரலாம். க.நா.சு குப்புசாமி ஐயரிடம் பணம் வாங்கி செலவழித்துவிட்டு அந்தக் கட்டாயத்தால் கன்னிமாரா நூலகத்திலேயே அமர்ந்து நாவல் எழுதினார்.
அல்லையன்ஸ் குப்புசாமி ஐயர்கொத்தமங்கலம் சுப்பு -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
கொத்தமங்கலம் சுப்பு பற்றிய குறிப்பு மிக விரிவாக இருந்தது. இக்காலகட்டத்தில் மறைந்த ஓர் ஆளுமை பற்றி இப்படி ஒரு விரிவான நேர்த்தியான பதிவு என்பது மிகுந்த நிறைவளிப்பது. மற்ற இடங்களிலுள்ள பதிவுகள் எந்த அளவுக்கு அரைகுறையானவை, எந்த அளவுக்கு கைபோனபோக்கில் எழுதப்பட்டவை என்று பார்க்கையில் வருத்தமும் ஏற்படுகிறது.
கொத்தமங்கலம் சுப்பு பலவகையாக இன்று அறியப்பட்டாலும் காந்திமகான் கதை என்ற பெயரில் அவர் நிகழ்த்திய வில்லுப்பாட்டுக்காகவே புகழ்பெற்றிருந்தார். தேசிய இயக்கத்தில் பங்களிப்பாற்றியவர்
என்.ஆர். ராமகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
கொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) எழுதிய தில்லானா மோகனாம்பாள் வெளிவந்தபோது நான் சிறுவன். என் அம்மா அவ்வளவு ஆர்வமாக வாசிப்பார். அந்தக்கதை அன்று தமிழகத்தையே கட்டிப்போட்டிருந்தது. பிற்பாடு சினிமாவாகவும் வெளிவந்தது. கோபுலுவின் படங்களுடன் பழனியப்பா பிரதர்ஸ் அழகான நூலாக அதை அச்சிட்டிருக்கிறது. இப்போது கிடைக்கிறதா என தெரியவில்லை
ஆர்.ராஜப்பா
அறிவியக்கத்தில் இணைதல் – கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,
இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.அறம் வாசித்த போது,இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டொரோண்டோ வில் திரையிடப்பட்ட வெண்முரசு ஆவணப்படம் சென்று பார்த்த போது, கொற்றவையை வாசித்த போது, கொற்றவையின் நீலியை கண்டடைந்தபோது என்று எத்தனையோ முறை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கேன்.ஆனாலும் ஒரு சிறு தயக்கம்.கடல் போல் விரிந்திருக்கும் தங்கள் படைப்புகளில் சிறு துளிகளைப் போல் மிகக் குறைவாக தானே வாசித்திருக்கிறோம் ,இன்னும் கொஞ்சம் வாசித்து விட்டு எழுதுவோம் என்று கடிதம் எழுதுவதற்கு உள்ளூர ஒரு சிறுதயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஈரோடு தூரன் விருது விழாவில் தங்களை சந்தித்த ஆத்மதிருப்தியோடு இக்கடிதம் எழுதுகிறேன்.சமீப காலங்களில் எனக்குள் ஒரு rejuvenation நிகழ்ந்திருக்கிறது.அது தங்களையும்,தங்கள் எழுத்தையும், தங்கள் தளத்தையும் கண்டடைந்தபின். தாங்கள் அளிக்கும் பதில்களின் விளக்கங்களும் வாழ்க்கை சார்ந்து தேடல் சார்ந்து ஒரு தெளிவும் வெளிச்சமும் ஏற்படுத்தியிருக்கிறது .எப்படியாவது தங்களை ஒருமுறையாவது சந்தித்துவிடவேண்டுமென்ற ஆசையும் தூரன் விருது விழாவில் நிறைவேறியது.
முதன்முறையாக ஆகஸ்ட் 13 மாலை விழா மண்டபத்தில் தூணருகே மஞ்சள் நிற சட்டையில் உங்களைப் பார்த்தது ஒரு தரிசனம் போல் இருந்தது.என் வாழ்வின் உச்சகட்ட மகிழ்கணமது.பொக்கிஷமாய் அந்த தருணத்தை மனதில் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.அப்போது வாசித்துக் கொண்டிருந்த ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ புத்தகத்திலேயே தங்களிடமிருந்து கையெழுத்து வாங்கியது மிக்க மகிழ்ச்சி.தூரன் விருது விழாவில் தங்களருகே இருநாள் இருக்கக் கிடைத்தது பெருவரம்.ஜெவென்னும் விசையால் இணைக்கப்பட்டு அந்த ஒளியின் பாதையில் ஒருங்கே பயணிக்கும் அத்தனை பேரையும் அங்கு ஒருசேர பார்க்கக் கிடைத்தது .இது எத்தகைய அறிவியக்கம் என்பதை உணர முடிந்தது.
இவற்றிற்கெல்லாம் இத்தனை தாமதாக வந்துவிட்டோமே என்று வருத்தமிருந்தாலும் ‘எதுவுமே மிகமிகப் பிந்திய காலம் அல்ல.எந்தக் காலத்திலும் எதையும் செய்யமுடியும்.எதையும் தொடங்க முடியும்’ என்ற தங்களது தன்மீட்சி வரிகளையே நினைத்துக் கொள்கிறேன்.விடுமுறை முடிந்து இந்தியாவிலிருந்து திரும்பிவிட்டதால் தங்கள் மணிவிழாவில் கலந்து கொண்டு தங்களையும் அருண்மொழி நங்கை அவர்களையும் நேரில் சந்திக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தாலும் பாரதி பாஸ்கர் அவர்கள் கூறியது போல் நிகழ்வில் பங்கெடுக்கமுடியாத சூழல் கொண்ட என்னைப்போன்ற அத்தனை பேருக்கும் இங்கு இருப்பு கொள்ளாமல் அன்றைக்கு அகம் முழுவதும் விழா நிகழ்விடத்திலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தது.
இங்கு செப்டம்பரில் மீண்டும் கனடா திரும்பிய போது maple இலைகள் fall சீசனிற்காக நிறம் மாறத் துவங்கியுள்ளது. சங்கச் சித்திரங்களில் algonquin பற்றி தாங்கள் எழுதிய வரிகளை அது நினைவுபடுத்தியது.தங்கள் எழுத்தில் நான் வாசித்த முதல் புத்தகம் சங்கச்சித்திரங்கள்.மிகவும் அணுக்கமானது.நீங்கள் செய்யும் அத்தனைக்கும் உங்களுக்கு ஆத்மார்த்தமான நன்றி .’குரு மட்டுமே நிறைக்கும் ஓர் அகவெற்றிடம் நம் எல்லோருக்குள்ளும் உண்டு’ என்று சியமந்தகக் கட்டுரையில் சிவராஜ் அவர்கள் எழுதிய வரிதான் எத்தனை உத்தமமானது.
கொற்றவையின் நிலம் பகுதியை வாசித்த போது அந்தக் கண்டடைதலை என்னால் உணர முடிந்தது.எப்படி புகாரிலிருந்து மதுரை நோக்கி கிளம்பிய கண்ணகி வேறோ, எப்படி மீண்டும் அவள் புகாரிலிருந்த புறப்பட்ட அதே பழைய கண்ணகியாக முடியாதோ, எப்படி நீலி அவளுக்கு பயணத்தின் பாதையெங்கும் அத்தனை கண்கள் கொடுத்து உண்மையாய் உள்ளதை காணக்கொடுத்தாளோ அதுபோல் தான் எங்களுக்கு நீங்கள்.அவரவர் இருப்புக்கான உண்மையான தேடலைத் தேட, கண்டடைய கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாசகர்களாக, மாணவர்களாக ஆத்மார்த்தமாய் உங்களைக் கண்டடைந்து சரணடைந்த யாருமே இனி பின்செல்ல முடியாது. செயலின் முழுவடிவமாக மட்டுமே திகழும் தங்கள்முன், தங்கள் அறிவியக்கத்தில் ஒருவராக திகழும் தகுதியையே அனுதினமும் வளர்த்துக் கொள்ளவேண்டுமென்பது மட்டுமே எங்கள் எல்லோரின் தீர்க்கமாக இருக்கும்.
இம்முறை இந்தியா வந்தபோது தங்களையும், விஷ்ணுபுர நண்பர்களையும் சந்தித்தது வாசிப்பிற்கும்,கற்றலுக்கும் மிகுந்த உற்சாகம் கொடுத்திருக்கிறது.ஆத்மார்த்தமாக மனதில் தோன்றியதை அப்படியே எழுதிவிட்டேன்.ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் அத்தனைக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றி.
பணிவன்புடன்
இந்துமதி
டொரண்டோ.
*
அன்புள்ள இந்துமதி,
நன்றி.
அறிவியக்கம் என்று சொன்னீர்கள். அது உண்மை. இப்போது பார்க்கையில் இந்த செயல்பாடுகளுடன் தொற்றிக்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தங்களுக்கான செயற்களத்தை கண்டுகொண்டதை, அங்கே சாதனைகளைச் செய்வதை காணமுடிகிறது. இதை எழுதும்போது இதைப்போல ஓர் எளிய கடிதத்துடன் அறிமுகமான ரம்யா நடத்தும் பெண்களுக்கான இணைய இதழான நீலி யை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எங்கிருந்து எங்கு அவர் வந்து சேர்ந்திருக்கிறார் என்னும் திகைப்பும் நிறைவும் உருவாகிறது.
உங்கள் செயற்களத்தைக் கண்டுகொண்டால் உங்களிடமும் இந்த விலக்கமும், தயக்கமும் இருக்காது. உங்கள் நிறைவை நீங்களும் அடையக்கூடும். வாசிப்பு அதை கண்டடைவதற்கான வழி மட்டுமே.
ஜெ
ஜெயமோகன் நூல்கள் வாசிப்பின் வழிகள் வாங்க
வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க
வணிக இலக்கியம் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க
December 17, 2022
இன்று விஷ்ணுபுரம் விருது விழா
இன்று (18 டிசம்பர் 1922) அன்று கோவை ராஜஸ்தானி சங் (ஆர்.எஸ்.புரம்) அரங்கில் விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா நிகழ்கிறது. எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இவ்விழாவில் அருணாச்சலப்பிரதேசத்தின் முகம் என அறியப்படும் கவிஞர் மமங் தாய் கலந்துகொள்கிறார். எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் காளிப்பிரசாத் ஆகியோருடன் நானும் கலந்துகொள்கிறேன்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் அரங்கில் இந்தியாவின் நூல்பதிப்பு – மொழியாக்கம் பற்றி கனிஷ்கா குப்தா, மேரி தெரஸி குர்கலங் ஆகியோருடனான ஒரு கலந்துரையாடல் நிகழும். கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆகியோர் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவார்கள்.
மாலை 530க்கு எழுத்தாளர் அராத்து இயக்கிய சாரு நிவேதிதா பற்றிய ஆவணப்படம் The Outsider திரையிடப்படும். அதன்பின் விருதுவிழா நிகழும்.
வருகையாளர் அனைவருக்கும் காலை, மதியம், இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைவரையும் வருக என வரவேற்கிறோம்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

