Jeyamohan's Blog, page 655
December 26, 2022
பனிமான்கள் -லோகமாதேவி
[image error]அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
பனி நிலங்களில் உங்கள் குடும்பத்து பயண அனுபவங்கள் வாசிக்க வெகு சுவாரஸ்யமாக இருந்தன. பொதுவாக உங்கள் பயண அனுபவக்கட்டுரைகள் அப்படி நானும் செல்ல வேண்டும் என்னும் ஆசையையும், சென்றிருக்காத ஏக்கத்தையும், சமயங்களில் கொஞ்சம் பொறாமையையும் உண்டாக்கும் குறிப்பாக மழை பயண அனுபவங்கள் கடும் பொறாமையை உண்டாக்கின..
ஆனால் இந்த பனி நிலப்பயண அனுபவங்கள் ‘’நல்ல வேளை நான் இங்கெல்லாம் எப்படியும் போகப் போவதில்லை’’என்னும் ஆசுவாசத்தை அளித்தன. டேராடூனில் இருந்த சிலநாட்களில் 9 அல்லது 10 பாகை வெப்ப நிலைக்கே நான் திணறினேன். ஒரு நாள் அறையின் வெப்பமூட்டி அரைமணிநேரம் பழுதான போது அந்த அரைமணியில் நானும் உறைந்து, இறந்து 8 பின் பிறந்தேன்.
கட்டுரைகளின் வழியே தெரிந்துகொண்ட அங்குள்ள வாழ்க்கை பெரும் பிரமிப்பை அளிக்கிறது. ஆழ்துயில் நிலை, சோர்வு கடுங்குளிர், உணவு பண்பாடு, கல்வி, பெற்றோரின் சிக்கல்கள், நிலப்பரப்பு, தொன்மம், உல்லாச கப்பல் பயணம் பனிப்பொழிவு,தீவுகள்,சிவப்பிந்தியரின் இல்லங்கள் பனிமான்கள் என அப்பகுதியை குறித்த ஒரு ஆவணப்படம் பார்த்த உணர்வும் நிறைவும்
புகைப்படங்களின் வழி அந்நிலத்தை கற்பனை செய்கையில் அங்கிருப்பதாக தோன்றிய வெறுமை மிகக்குறைந்த வண்ணங்களால் ஆன சூழலால்தான் என்று எனக்கு பட்டது . பசுமையே இல்லை மரங்கள் எல்லாம் சாம்பல் போர்த்தி எலும்புக்கூடு போல் பனிமூடி அசைவின்றி துக்கித்து நிற்கின்றன. அப்பகுதியின் வாழ்க்கை அத்தனை கடினம் என இங்கிருப்போரால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. அங்கும் காதல் மணம் புரிந்து சென்று, முழுக்க மகிழ்ச்சியுடன் இருக்கும் மனிதர்கள் இருப்பது உற்சாகமும் நம்பிக்கையும் அளிக்கிறது.நானும் ஸாமி ஆகி பனிமானால் இழுத்து செல்லப்படும் வண்டியில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்ய முயன்றேன், குளிர் தாங்க வில்லை. எனவே துவங்கிய புள்ளியிலேயே கற்பனையை நிறுத்திக்கொண்டேன்
பொள்ளாச்சியில் மழை அதிகமென்பதால் பெண்கொடுக்க யோசிக்கிறவர்களையும், வால்பாறை என்பதால் கிடைத்த அரசுவேலையை மறுத்தவர்களையும் அங்கு ஒரு பத்து நாள் அனுப்பி வைக்க வேண்டும்.
பனிமான்களை குறித்த தகவல்கள் ஆர்வமூட்டியது. போக்குவரத்து, உணவு, பொழுதுபோக்கு, கேளிக்கை, சுற்றுலா முக்கியத்துவம் என ஒரே விலங்கு எத்தனை பயன்பாடுகளை கொண்டிருக்கிறது.
மிக இளம் வயதில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் கண்காட்சி பள்ளியில் நடந்த போது 2 ரூபாய்க்கு ஒரு வண்ண கதை புத்தகம் வாங்கினேன். அந்த சில பக்க கதையில் வண்ண ஓவியங்களில் இப்படி பனிமூடிய ஒரு நிலமும், பனிமான்களும் இருந்தன.அதிலிருந்தே இந்த பனிமான்களின் மீது எனக்கு தனித்த பிரியம் உண்டு.
இவற்றின் அறிவியல் பெயரான Rangifer tarandus என்பதின் பேரின, சிற்றின பெயர்கள் இரண்டுமே பனிமான் என்றே லத்தீன மொழியில் பொருள் கொண்டவை.Rein என்னும் ஆங்கிலச் சொல் நார்ஸ் மொழியில் விலங்குகளின் கழுத்தில் கட்டி இருக்கும், அவற்றை கட்டுப்படுத்தும் தோல்பட்டையை குறிக்கும் சொல், பிற்பாடு ’இழுத்துப் பிடித்து நிறுத்தல்’ என்னும் பொருளில் அச்சொல் புழங்கப்பட்டது அப்படியே Der என்னும் காட்டு விலங்குகளை குறித்த பொதுவான சொல் deer ஆகிவிட்டிருந்தது.
வாழ்வு மரத்தின் இலைகளை தின்ற நான்கு மான்கள், அவற்றை அடிப்படையாக கொண்ட நான்கு பருவங்களும், இதயத்தின் நான்கு அறைகளும், மான் கொம்புகளை கொண்டிருக்கும் வளமையின் தெய்வம், பச்சை குத்திக் கொள்ளும் மான் வடிவங்கள் என, இந்த வேர்ச்சொல்லை தேடிக் கொண்டிருக்கையில் நார்ஸ் தொன்மங்களின் மான் குறித்த இத்தகைய சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட சில கட்டுரைகள் வாசிக்க கிடைத்தது.
பனிமான்களுக்கு உணவாக கொடுத்த கருகிப்போன பனிப்பாசியை புகைப்படம் எடுத்தீர்களா என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அவற்றை காண வேண்டும் என எனக்கு நெடுநாட்களாக விருப்பமுண்டு.
அவை லைக்கன்கள் என்னும் கூட்டுயிர்கள். பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் இரட்டை உயிர்கள். தோற்றத்தினால் ஆங்கிலத்தில் இவை ரெயின்டீர் மாஸ் என்றழைக்கப்பட்டாலும் இவை மாஸ் எனும் படுவ பாசிகள் அல்ல லைக்கன்கள் தான். இந்த பனிமான் லைக்கனின் (Rein deer Lichen) அறிவியல் பெயரான Cladonia rangiferina என்பதின் சிற்றினப்பெயரான rangiferina வில் பனிமான்களின் பெயர் இணைந்திருக்கிறது.Cladonia என்றால் கிளைத்த என்று பொருள்.
அசாதாரண குளிர் நிலவும் மாசற்ற தூய பகுதிகளில் மட்டுமே வளரும் இவை சாம்பல், இளம்பச்சை, வெள்ளை அல்லது பழுப்பு நிற கிளைத்த உடலம் கொண்டவை. மிக மிக மெதுவாக வளரும் இயல்புடையவை இந்த லைக்கன்கள், ஒரு வருடத்திற்கு 3 லிருந்து 10 மி மீ அளவுதான் இவை வளரும். 100 வருடங்களுக்கு மேலும் உயிர்வாழும், இவற்றின் கிளைத்த உடலத்தின் பிரதான கிளைகளின் எண்ணிக்கையை வைத்து இவற்றின் வயது கணக்கிடப்படுகிறது. இந்த மிகச் சிறிய உடலங்களில் ஆண் பெண் இனபெருக்க உறுப்புக்கள் இருப்பதும் இவைபால் இனப்பெருக்கம் செய்வதும் ஆச்சரியம்.
அழிந்துவரும் இனங்களிலொன்றாக இவை சிவப்பு பட்டியிலடப்பட்டிருப்பதால் இவற்றை பாதுகாக்க இங்கிலாந்தில் சட்டம் இருக்கிறது
கடும் பனிப்பொழிவிலும் பனிமான்கள் மாவுசத்து சுமார் 70 சதவீதம் இருக்கும் இந்த லைக்கனை நுகர்ந்து அடையாளம் கண்டு தேடி சென்று உண்கிண்றன பனிமான்களுடன் மனிதர்களும் இவற்றை உண்கிறார்கள். ஸ்கேண்டினேவியாவில் இந்த லைக்கனை நொதிக்க வைத்து அகுவாவிட் ( Aquavit) என்னும் மது உருவாக்கப்படுகிறது, .1800களில் ஸ்வீடன் இந்த லைக்கன் மது உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இருந்தது
அமிலம் கொண்டிருக்கும் இவற்றை சாம்பலில் புதைத்து வைத்து, கசப்பு நீக்கி பாலில் கலந்தும், கொதி நீரில் இட்டு மென்மையாக்கி அப்படியே உணவில் கலந்தும் உண்கிறார்கள். துருவப்பகுதிகளில் இவற்றை உலர செய்து சட்டமிட்டு சுவர்களில் மாட்டி வைப்பதும், ஜன்னல்களில் அழகுக்கு தொங்க விடுவதும் வழக்கம்.
Dene என்னும் ஆர்க்டிக் பகுதி பழங்குடியினர் பனிமான்களை வேட்டையாடி அவற்றின் வயிற்றில் இருக்கும் பாதி ஜீரணமாயிருக்கும் லைக்கன்களை எடுத்து பனி மான்களின் ரத்தத்திலேயே ஊறவைத்து நொதிக்க செய்து பின்னர் உண்ணுவார்கள். இந்த லைக்கன்களில் இருக்கும் அமிலம் இப்போதும் பனி மான் தோலை பதப்படுத்த உபயோகபடுத்தபடுகிறது அமெரிக்க பழங்குடியினர் இந்த லைக்கனில் தேநீர் தயாரித்து அருந்துகிறார்கள
இவற்றை துருவப்பகுதி மக்கள் பலவகையான சிகிச்சைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பழங்குடியின தலைவர் இறந்துபோகையில்,இறந்தவரின் நினைவுகளும், அனுபவங்களும் அவர் கொடிவழியில் இருப்பவர்களுக்கு கிடைப்பதன் பொருட்டு,இறந்தவரின் மூளையை பங்கிட்டு உண்ணும் நியூ கினி பழங்குடியினருக்கு உண்டாகும் ‘குரு’ என்னும் நோய்க்கு காரணமான பிரையான் (prion) எனப்படும் புரத கிருமியை அழிக்கும் தன்மை கொண்டவை இந்த பனிமான் லைக்கன்கள் என சமீபத்தில் நடந்த ஆய்வுகள் தெரிவித்தன.
பனி மான்களும் அழியும் ஆபத்திலிருப்பதாக 2015 ம் ஆண்டின் சிவப்பு பட்டியல் தெரிவிக்கிறது.
மிக்குறைவான வளங்களை கொண்டிருக்கும், அசாதாரண பனிச்சூழலில் கண்ணுக்கு தெரியாத அளவில் இருக்கும் இந்த லைக்கன்களுக்கும், முரட்டு தோற்றம் கொண்ட பனிமான்களுக்குமிடையே இருக்கும் இந்த சார்பு வாழ்வும் , இவையிரண்டையும் சார்ந்த அங்குள்ள மக்களின் வாழ்வும் வியப்பளிக்கிறது.
ஆஃபன்பெர்கில் இருக்கும் சரண் இன்று காலை சாலையில் நின்று கொண்டு காணொளி அழைப்பில் அந்நகரின் முதல் பனித்தூவலை காண்பித்தான். ’பொழிபனி’ என அழகிய சொல்லொன்று இந்த கட்டுரைகளில் இருந்தது நினைவுக்கு வந்தது
உங்கள் பயண கட்டுரைகள் வழி அறிந்துகொள்ளும் உலகப்பகுதிகள் அற்புதமானவை.
நன்றிகளுடன்
லோகமாதேவி
விஷ்ணுபுரம் 2022, கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
ஆசிரியருக்கு வணக்கம்,
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட விழா மேலும் மேலும் என சிறப்பாகி கொண்டே செல்கிறது என சொல்வீர்கள். அதை கருத்தில் கொண்டே விழா ஏற்பாடுகள் திட்டமிடப்படும்.
சனிக்கிழமை காலை முதல் அமர்விலேயே கிட்டத்தட்ட ஐநூறு பேர் அமர்ந்திருந்தது ஞாயிறு மாலை விழாவில் பெருங்கூட்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தியது.சனிக்கிழமை மதிய உணவு சாப்பிட்டவர்கள் நானூற்றி முப்பது பேர்.
வாசகர்கள் அனைவருக்கும்,விழா நடக்கும் ராஜஸ்தானி பவன் அறைகள் நிரம்பியதால்,குஜராத்தி சமாஜ் மற்றும் டாக்டர் பங்களாவிலும் அறைகள் எடுத்திருந்தோம்.எழுத்தாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள் அருகிலேயே வேறு,வேறு விடுதிகளில் தங்கியிருந்தார்கள்.
இருநாள் இலக்கிய திருவிழாவின் இறுதி நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வில் எழுநூறு பேருக்கும் மேல் வந்து சிறப்பித்தனர்.இதுவரை நடந்த விழாக்களிலேயே இதுதான் அதிக எண்ணிக்கையில் விருது பெறும் ஆளுமையை வாசகர்கள் கூடி வாழ்த்தியது.
ஞாயிறு மாலை ஆவணப்படம் திரையிடும் முன்பே அரங்கில் நாற்காலிகள் நிறைந்து வாசகர்கள் நின்றுகொண்டிருந்தனர். ராம்குமார் அவர்கள் முன் வரிசையில் மேலும் நாற்காலிகளை போட சொன்னார்.அந்த நாற்காலிகள் நிரம்பியதும். ராம்குமார் மீண்டும் அழைத்து “ பாய் கோவை ஆட்சியர் சமீரன் வந்துகொண்டிருக்கிறார் மற்றும் நாம் அழைத்த சிறப்பு விருந்தினர்கள் சிலருக்கு நாற்காலிகள் வேண்டும்” என்றார்.
ராஜஸ்தானி பவனில் கிடைத்த அனைத்து நாற்காலிகளையும் அரங்கிற்கு கொண்டுவந்தும் இடம் போதாமல் அரங்கினுள் நின்றுகொண்டும்,அரங்கின் வெளியில் நின்று கண்ணாடி வழியாகவும் வாசகர்கள் விழாவை பார்த்து ரசித்து சாரு நிவேதிதாவை வாழ்த்தினர்.
விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது.நீங்கள் சொல்வதுபோல் பத்தில் ஒரு பங்கு செலவு தான்.ஐநூறு பேருக்குமேல் ஆறு வேளை விருந்துணவு, தங்குமிடம், தேநீர், சிறப்பு விருந்தினர்களின் விமான,ரயில் கட்டணம்,அவர்களுக்கான சிறந்த விடுதியறை என கோடி ரூபாய் செலவாகும் இந்த நிகழ்வை சில லட்சங்களில் உங்கள் நண்பர்களின் கடும் உழைப்பால் சாத்தியமாக்கியுள்ளீர்கள்.
விழாவிற்கு நிதி கோரி அறிவிப்பு வந்த சில தினங்களில் சக்திவேல் நிதியளித்துவிட்டு எழுதிய கடிதத்தை கண்கள் நிரம்ப படித்தேன். (https://www.jeyamohan.in/173756/ ) இத்தனை சிறப்பாக விழா நடப்பதற்கு ஆதாரம் பணம்.விழாவிற்கு தேவையான நிதியை (ஐநூறு முதல் லட்சம் வரை)உலகெங்கிலிருந்தும் அனுப்பித்தந்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் விஷ்ணுபுரம் விழா குழு சார்பாகவும்,ஆசான் ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
விழாவிற்கு வர முடியாது என தெரிந்தும் இந்த திருவிழா சிறப்பாக நடக்கவேண்டும் எனும் நல்லெண்ணத்தில் நிதியளித்தவர்கள் நிறையப்பேர். விழாவுக்காக வாஷிங்டனிலிருந்து விஜய் சத்யா,வார இறுதியில் வந்த சவூதி ஒலி சிவக்குமார்,சிங்கப்பூர் விஜி,லண்டன் ராஜேஷ்,நியூசிலாந்து என உலகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் கலந்துகொண்டார்கள்.
நான் முக்கியமாக சந்திக்கவேண்டும் என விரும்பியவர்கள் சிலர் விழாவுக்கு வரவில்லை. பாண்டி அரிகிருஷ்ணன்,சிவாத்மா,வளவ துரையன்,மணி மாறன்,விழுப்புரம் திருமலை மற்றும் நேரில் வாழ்த்து கூற விரும்பிய அறம் மொழிபெயர்ப்பாளர் சகோதரி பிரியம்வதா .
இந்தியாவின் நடந்த ஆக சிறந்த இரு நாள் இலக்கிய திருவிழாவின் ஒருங்கிணைப்பில்,சிறு பணிகள் செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
ஷாகுல் ஹமீது ,
நாகர்கோயில் .
அன்பின் ஜெ
சிறுவர்களுக்கு தீபாவளியைப்போல எங்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா.
அறிவித்த நாள்முதலே ஆவலோடு காத்திருந்து விழா நாளன்று நிகழ்வுக்கு வந்திருந்தோம். வழக்கம்போல மிக நேர்த்தியாக அனுபவம் மிகுந்த நெறியாளர்கள் (ராஜகோபால், செல்வேந்திரன்)தூண்ட, விருந்தினர்களோடு உரையாடும் நிகழ்வுகளில் சலனமற்ற அரங்கில் வாசகர்களின் கவனம் யாவும் ஒரே குவியத்தில்.
முன்னோடியும் பின்னோடியும் இல்லாத அசல் சக்தியான சாரு நிவேதிதா அவர்களுக்கு விஷ்ணுபுரம்விருது வழங்கியது மகிழ்வான நிகழ்வு.
கவிஞர் போகன் சங்கர் கூறும்போது அனல்வாதம் புனல்வாதம் அருட்பா மருட்பாவை சுட்டிக்காட்டி வாதமும் இலக்கிய சண்டையும் இலக்கியம் வளர்கத்தான் என்கிற positive approach நேர்மறை சிந்தனையை வளர்க்கும்.நீங்கள் course correction செய்வதாக போகன் கூறியது உங்கள் பொருப்பையும் பெருந்தன்மையையும் பறைசாற்றுகிறது.
விமர்சனங்கள் கடந்து நண்பர்கள் துணையோடு சாதித்துள்ளீர்கள்.நீங்கள் சொன்னதுதான் ‘இருத்தலியம் பேசுபவர்கள் காலாவதியாவதில்லை.’அறிவை அள்ளிக்கொண்டு மீண்டோம்.வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிதினும் பெரிது கேட்போம்.நீங்கள் அதனினும் பெரிது தருவீர்கள்.
நன்றி.
அன்புடன்
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழா ஒரு பேரனுபவம். தமிழ்ச்சூழலில் வாழும் எந்த இலக்கிய வாசகருக்கும் ஒரு தனிச்சிக்கல் உண்டு. இங்கே அவன் தனிமையானவன். சூழலில் எங்குமே வாசிப்புக்கு துணை கிடையாது. மதிப்பு கிடையாது. இந்த விழாக்களில் அத்தனை வாசகர்களைப் பார்ப்பதும் உரையாடுவதும் நாம் ஒரு இயக்கம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. நம்முடைய செயல்கள் எல்லாமே அர்த்தபூர்வமானவையே என்ற நம்பிக்கை உருவாகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழா உருவாக்கும் நம்பிக்கை, ஊக்கம் எல்லாமே அற்புதமானவை. விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்ததுமே வெறியுடன் வாசிக்க ஆரம்பிப்பது என் வழக்கம். இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது செய்யும் வெறியுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்னும் ஆசை உருவாகிறது. இலக்கியவாசகன் என்பது ஒரு ரகசியம் அல்ல என்ற நிலை தோன்றுகிறது.
அற்புதமான நாட்கள். என் மனம் கவர்ந்த இலக்கியவாதிகளைப் பார்த்தேன். பேசிக்கொண்டிருந்தபோது சும்மா கேட்டுக்கொண்டு பக்கத்திலே நின்றேன். பேசுமளவுக்கு எனக்கு இன்னும்கூட திடம் வரவில்லை. ஆனால் அற்புதமான அனுபவமாக இருந்தது.
உணவு, மற்ற ஏற்பாடுகளெல்லாமே சிறப்பானவையாக இருந்தன. நான் என் நண்பனின் ஹாஸ்டலில் தங்கினேன். அடுத்தாண்டு குஜராத்தி பவனில் எல்லார் கூடவும் தங்கவேண்டும் என நினைத்தேன். இரவிலே எல்லாரும் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். மிஸ் ஆகிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.
வாழ்த்துக்கள்
ராஜ்குமார் மணிவண்ணன்
December 25, 2022
முருகபூபதிக்கு இயல்
லெ.முருகபூபதி தமிழ் விக்கி
கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2022 ஆம் ஆண்டுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈழ எழுத்தாளர் லெ.முருகபூபதிக்கு வழங்கப்படுகிறது. முருகபூபதி முதன்மையாக இதழாளர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபோன பின் இலக்கியச் செயல்பாட்டாளராக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார். ஈழ இலக்கியவாதிகள் பற்றிய அவருடைய நினைவுக்குறிப்புகள் ஆவணத்தன்மை கொண்டவை. 2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது அவருடன் தங்கியிருக்கிறேன்
ஜெ
(2022 ஆண்டு இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. (2021ல் விருதுகள் வழங்கப்படாமையால்) இன்னொரு விருது பாவண்ணனுக்கு இயல் விருதுகள் – 2022 )
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருதுகள் – 2022
வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது, கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022 இல் இரண்டு இயல் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் கனடா ரொறொன்ரோவில் வழங்கப்படும்.
லெட்சுமணன் முருகபூபதி
தமிழ் இலக்கியத் தோட்டம், 2022 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் இலங்கையில் பிறந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி அவர்களுக்கு வழங்குகிறது.
1972 இல் எழுத்தாளராக அறிமுகமான இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. வீரகேசரி பத்திரிகை ஆசிரிய பீடத்தில் இவர் பணியாற்றியபோது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் – மாணவர் விழாவில் கலந்து கொண்டார்.
1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த இவர், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என எழுதி வெளியிட்டு வருகிறார். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்துவதில் முன்னின்று உழைத்துவரும் இவர், 2011 இல் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம், 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச் சங்கம் ஆகியனவற்றின் ஆரம்ப உறுப்பினருமாவார்.
இலங்கையில் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் 13 யூலை 1951 இல் பிறந்த முருகபூபதி , விவேகானந்த வித்தியாலயத்தில் ( தற்போது விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) தமது ஆரம்ப கல்வியை தொடங்கி பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், ( தற்போது கனகரத்தினம் மத்திய கல்லூரி ) நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.
இவருடைய வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி என்ற ஆவணப்படத்தை 2017 இல் மெல்பேர்ன் எழுத்தாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், வீடியோ கலைஞர் மூர்த்தியும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர்.
இவருடைய சிறுகதை தொகுதிகள் ஏழும், புதின, சிறுவர், பயண இலக்கியம் மூன்றும், கடித இலக்கியம், நேர்காணல் தொகுதி இரண்டும், கட்டுரை தொகுதிகள் பதினாறும் வெளிவந்துள்ளன.
இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:
சுமையின் பங்காளிகள் – 1975 ஆம் ஆண்டு சிறந்த சிறுகதை தொகுதிக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.பறவைகள் – 2002 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் தேசிய சாகித்திய விருது.அக்கினிக்குஞ்சு இணைய இதழ் 2018 இல் வழங்கிய வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் விருது.இதர விருதுகள்:
2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது விக்ரோரியா மாநில டெறபின் மாநகர சபை வழங்கிய சிறந்த பிரஜைக்கான விருது.2011 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது.2022 Aust Tamil TV –( Tamil Linguistics Award ) விருது.
இவருடைய இலக்கிய, ஊடகத்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியம் சம்பந்தமான சேவைகளைப் பாராட்டி 2022 ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.
இந்துஞானத்தின் அடித்தளக் கற்கள்
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் மின்னூல் வாங்க
இந்துஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்னும் இந்நூல் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் ஒரு வரி கடிதத்திலிருந்து தொடங்கியது. ஒரு காலத்தில் அவருக்கும் எனக்கும் தொடர்ந்து கடிதப்போக்குவரத்து இருந்தது.
இந்திய ஆன்மீகத்தை புரிந்துகொள்வதற்கு ஆறு தரிசனங்கள் எந்த வகையில் முக்கியமானவை என்றும், ஆறு தரிசனங்களின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் சைவம், வைணவம், வேதாந்தம் மூன்றையுமே ஒருவரால் தெளிவுற வகுத்துக்கொள்ள முடியாது என்றும் நான் எழுதியிருந்தேன்.
அந்த ஆறு தரிசனங்களைப்புரிந்து கொள்வதற்கு தமிழில் எந்தெந்த நூல்கள் உள்ளன என்று அவர் கேட்க, ஒரே ஒரு நூல் மட்டுமே தமிழில் பரிந்துரைக்கத் தகுதியாக உள்ளது என்று நான் மறுகடிதம் எழுதினேன். வித்வான் கி.லக்ஷ்மணன் எழுதிய இந்திய தத்துவ ஞானம். அது ஓரு நல்ல அறிமுகநூல். ஆனால் ஐம்பதாண்டு பழையது. பாடப்புத்தகத்தன்மை கொண்டது.
‘நீங்கள் ஏன் ஒன்றை எழுதக்கூடாது, நவீன மொழியில் இன்றைய வாசகர்களுக்காக?’ என்று அவர் கேட்டார். அது ஒரு விதையாக விழுந்தது. எனக்கே தெளிவுறுத்திக் கொள்ளும்பொருட்டு எழுத ஆரம்பித்தேன். பின்னர் அது நூலாகியது. இந்நூலில் இந்திய சிந்தனை முறையின் அடிப்படையாக இருக்கும் ஆறு தரிசனங்களையும் முன்வைத்திருக்கிறேன்.
இந்து மதம் என்றால் என்ன, அதனுடைய பாடத்திட்டம் ,என்ன என்ற வினாவுக்கு வேதங்கள், ஆறு தரிசனங்கள் ,ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் என்று சுருக்கமாக பதிலளிக்கப்படுவது வழக்கம். நான்கு வேதங்களும் தொல்பிரதிகளாக அடித்தளத்தை அமைக்கின்றன. அவற்றின் மேல் ஒரு விவாதத்தை உருவாக்கி முன்னெழுந்தவை ஆறு தரிசனங்கள். ஒருவகையில் அவை வேதத்திற்கும் முந்தியவையாக கூட இருக்கலாம்.
சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் என்னும் ஆறுதரிசனங்களும் இன்று வரைக்கும் இந்து மெய்யியல் பற்றிய அனைத்து விவாதங்களுக்குமான அடிப்படைக் கேள்விகளை எழுப்பி நிலைகொள்பவை. அந்த கேள்விகளின் அடிப்படையில் உருவான மேலதிகப் பெருவிவாதங்களில் உபநிஷத்துகள் எழுந்தன. உபநிஷத்துகள், கீதை, பிரம்மசூத்திரம் மூன்றும் அடங்கியது மூன்று தத்துவம் என்று சொல்லப்படும் பிரஸ்தானத் திரயம்.
பின்னர் ஆறு மதங்கள் எழுந்து இந்து மதத்தை விரிவடையச்செய்தன. அவற்றின் வழிபாட்டு வேர்கள் வேதங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். ஆனால் மூன்று தத்துவங்கள் உருவாக்கிய தத்துவ விவாதங்களின் பெயராக ஆறு மதங்களும் தத்துவ அடிப்படை பெற்றன, பெருமதங்களாக தங்களைக் கட்டமைத்துக்கொண்டன.
காலப்போக்கில் காணபத்தியம், கௌமாரம் இரண்டும் சைவத்துடன் இணைந்தன. சௌரம் பெரும்பாலும் வைணவத்துடன் இணைந்தது. சாக்தம் சில பகுதிகளில் தனியாக நீடிக்கிறது. தமிழகம் போன்ற பகுதிகளில் அதுவும் சைவத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
இவ்வாறு இந்து ஞானமரபின் அனைத்து பகுதிகளையும் தொட்டு விரியக்கூடிய அடிப்படை சிந்தனைக் கட்டமைப்பாகிய ஆறுதரிசனங்களைப் பற்றிய விவாதம் இந்நூலில் உள்ளது. அவற்றை ஒரு பொதுவாசகனுக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டது இந்நூல்.
ஏற்கனவே இந்நூலின் முன்னுரையில் விளக்கப்பட்டுள்ளது போல ஏன் இது இந்திய தரிசனம் என்று சொல்லப்படவில்லை என்றால் இந்த ஆறு தரிசனங்களும் இந்து ஞான மரபுக்கே முக்கியமானவை. இவற்றில் சாங்கியம் பௌத்த தரப்புக்கு மிக நெருக்கமானது. வைசேஷிகம் ஓரளவுக்கு ஜைன மதத்திற்கு முக்கியமானது. ஆயினும் ஜைன மதமோ பௌத்த மதமோ ஆறு தரிசனங்களை தங்கள் சிந்தனையின் அடிக்கட்டுமானமாகக் கொண்டிருக்கவில்லை. ஆகவேதான் இவை இந்து தரிசனங்கள் எனப்பட்டன.
இந்து மதத்தை ஒருவர் மூன்று வகைகளில் இன்று அறியலாம். சடங்குகள் ,வேள்விகள் போன்றவற்றினூடாக இந்து மதத்தை ஒருவர் அறிய முடியும். அது பூர்வ மீமாம்ச மரபு என்று முன்பு சொல்லப்பட்டது. ஆலயங்கள் வழிபாடுகள் மற்றும் பக்தி வழியாக ஒருவர் இன்று இந்து மதத்தை அறியமுடியாது. பக்தி இயக்கம் பொ.யு.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் ஐநூறு ஆண்டுகளில் உருவாக்கிய ஒரு பெருமரபு.
மூன்றாவதாக, இந்து மெய்யியல் அல்லது இந்து தத்துவ ஞானம். தத்துவார்த்தமாக இந்து மதத்தை அறியமுயலும் ஒருவர் ஆறு தரிசனங்களிலிருந்தும் மூன்று தத்துவங்களிலிருந்தும்தான் தொடங்க வேண்டும். அவ்வாறு அறிய விரும்பும் வாசகர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
இது ஒரு அறிமுகநூல் என்றவகையில் பயனுள்ளதாக இருந்தது என்று இது எழுதப்பட்டபின் சென்ற இருபதாண்டுகளில் சில நூறு வாசகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவ்வகையில் இந்நூலின் இலக்கு நிறைவேறிவிட்டதென்றே கருதுகிறேன். இதை எழுதுவதற்கு காரணமாக அமைந்த பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களை நன்றியுடன் எண்ணிக்கொள்கிறேன்.
ஜெ
14.07.2022
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
மாம்பழக் கவிசிங்கராயர்
மாம்பழக் கவிராயரின் கவிதைகளை இணையநூலகம் வழியாக படித்தேன். அவை கவிதைகள் அல்ல, குறுக்கெழுத்துப்போட்டிகள் என்னும் எண்ணம் உருவானது. ஆனால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொண்டாடப்பட்ட கவிஞர். என் ஐயம் இதுவே. இன்று நாம் கொண்டாடும் பல சூத்திரவடிவ கவிதை கதைகள் இன்னும் கொஞ்சகாலத்தில் என்ன ஆகும்?
மாம்பழக் கவிச்சிங்க ராயர்விஷ்ணுபுரம் விருதுவிழா 2022, கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
எழுத்தாளர் ஜெ.மோ அவர்களுக்கு,
நலமறிய ஆவல் வணக்கம், என் பெயர் ஹரிராமகிருஷ்ணன் நான் முதுகலை இயற்பியல் முடித்து CSIR NET, GATE போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறேன். கடந்த சனி ஞாயிறு அன்று நடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்குபெற்றேன். எனக்கு புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தியது. அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.
முதலில் நான் என் வாசிப்பு அனுபவத்தை உங்களிடம் சொல்கிறேன். என் தந்தை மூலமே புத்தகம் வாசிப்பு அனுபவம் தொடங்கியது. ராஜேஷ்குமார், சுபா , பட்டுக்கோட்டை பிரபாகரன் என்று தொடங்கி, பாலகுமாரன், சு.வெங்கடேசன் , என்று போய் பிறகு ஜெயகாந்தன், கி.ரா, காதுகள் வெங்கடேசன், அசோகமித்திரன். தி.ஜா என்று இப்போது பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமானவர் சுனில் கிருஷ்ணன் அண்ணா தான். அவரின் அறிமுகம், மரப்பாச்சி இலக்கிய வட்டம் கூடுகை இவை தான் என் வாசிப்பு பாதையை மாற்றியது. அதற்கு முன்பு வரை எனக்கு இலக்கியத்தில் இவ்வளவு படைப்புகள் இருக்கு என்று தெரியாது. தங்களை எனக்கு சினிமா வசனகர்த்தாவாகவும், சில சிறுகதைகள், நாவல்களின் ஆசிரியராகவும், அப்ப அப்ப சர்ச்சைகளில் சிக்கி கொள்பவராக , சர்ச்சையை உருவாக்குபவராக மட்டுமே தெரியும். சுனில் அண்ணா பரிந்துரைத்த உங்களின் சில சிறுகதைகள், சில நாவல்களை வாசித்த பிறகு உங்கள் மீதுள்ள அபிப்பிராயம் மாறியது.
இந்த சமயத்தில் தான் சுனில் அண்ணா விஷ்ணுபுரம் செல்வோமா என்று அழைத்தார். மறுமொழி ஏதும் சொல்லாமல் சம்மதித்தேன். அப்போது இருந்தே ஒரு ஆர்வம், ஒரு பரபரப்பு எனக்குள் தொற்றிக்கொண்டது. 16.12.2022 இரவு கோயம்பத்தூர் பேருந்து ஏறியபோது அது இன்னும் அதிகமானது.
சனிக்கிழமை காலை டிபன் உண்ணும் போது எனக்கு நேரே ஒரு பெரும் கூட்டத்திற்கு நடுவே உங்களை பார்த்ததும் எப்படி உங்களிடம் பேச ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம், பயம் எழுந்தது.ஒரு காதலன் காதலியிடம் தன் காதலை சொல்லும் முன்பு எப்படி அவனுடைய இதயத்துடிப்பு அவனுக்கு கேட்குமோ அவ்வாறு உங்களிடம் பேச பின்னாடியே அலைந்த போது எனக்கு என் இதயத்துடிப்பு கேட்டது பிறகு அங்கு வந்த பிச்சை என்ற நண்பர் தைரியம் அளிக்க உங்களிடம் வந்து பேசினேன், புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். பிறகு என் பயம் சென்றது. அதன்பின் 5,6, முறை உங்களிடம் வந்து பேசிவிட்டேன்.
சரி இப்போ விஷ்ணுபுரம் நிகழ்ச்சிக்கு வருவோம். விஷ்ணுபுரம் பல புது அனுபவங்களை எனக்குள் ஏற்ப்படுத்தியது. பொதுவாக இலக்கியக்கூட்டம் என்று வைத்தால் எங்க ஊர் பக்கம் யாரும் வர மாட்டார்கள். ஆனால் இங்கு வந்த கூட்டத்தை பார்த்தும் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. வாசிப்பை நேசிக்கும் கூட்டம் இவ்வளவு இருக்கா என்று எனக்குள் ஒரு வியப்பை அளித்தது.
குறிப்பாக வினாடி வினா பகுதி. என் வாழ்விலே ஒரு பரிசை கூட வாங்காத என் முதல் வினாடி வினா போட்டி. இவ்வளவு நுட்பமாக கேள்விகளை உருவாக்க முடியுமா இலக்கியத்தில் என்று வியக்க செய்தது. விஷ்ணுபுரத்தில் நடந்த அமர்வுகளில் சில எழுத்தாளர்களின் சில படைப்புக்களை தான் நான் வாசித்து உள்ளேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த அமர்வுகள் என்றால் ம்மங் தய், கமலதேவி, முகமது யூசுப், கார்த்திக் புகழேந்தி இவர்களின் அமர்வுகள். பதிப்பாளர் விஜய வேலாயுதம் அவர்களின் அமர்வு மூலம் பதிப்பாளர்களின் வலி, மற்றும் வேதனையை அறிய முடிந்தது. புத்தகத்தின் மீது உள்ள தீராத காதல் தான் அவரை இன்னும் இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது.
நிறைவாக சாரு அவர்களின் அமர்வு மற்றும் நிகழ்வுகள். Quite unexpected அவரின் ஓவ்வொரு பதிலும் ஒவ்வொரு வெடி தான். அதனைக்கும் மேலாக அங்கு காண்பித்த ஆவணப்படம். இப்படி பட்ட ஒரு ஆவணப்படத்தை நான் இதற்கு முன் கண்டது இல்லை இனிமேலும் பார்ப்பேனா என்றும் தெரியவில்லை.சாருவின் ஔரங்கசீப் மற்றும் zero degree நாவலை மட்டுமே படித்துள்ளேன். இந்த விழாவுக்கு பிறகு அவருடைய மற்ற சில நாவல்களை படிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். விழாவுக்கு வந்தவர்களில் மிகவும் குறைந்த வாசிப்பு அனுபவம் கொண்டவன் நானாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விழா முடிந்த பிறகு நாம்ம என்னடா வாசிக்கிறோம் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். நாம இன்னும் நிறைய வாசிக்கனும் என்ற ஆர்வம் பிறந்தது.
பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் 20-க்கும் மேல் நண்பர்கள் ஆனார்கள். வாசிப்புடன் நிற்காமல் எழுதவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.இந்த விழா முடிந்து பேருந்தில் பயணிக்கும் போது எனக்கு ஒரு கேள்வி பிறந்தது. கரிசல் வாழ்வியலை கி.ரா, பூமணி சொல்லியிருக்கிறார்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வாழ்வியலை தோப்பில் மீரான், தாங்கள் என்று பலர் பேசி இருக்கிறீங்க. இப்படி ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் இருக்கும் போது, நம் செட்டிநாடு வாழ்வியலை சொல்ல யாரு இருக்கா என்ற கேள்வி தோன்றி, சுனில் அண்ணாவிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்லிக்கொள்ளும் அளவு பெரிய எழுத்தாளர்கள் யாரும் இல்லை அதுக்கு தான் மரப்பாச்சி இலக்கிய வட்டம் தொடங்கி இருக்கு, நீங்க எல்லாம் எழுத ஆரம்பித்து தான் அந்த குறையை போக்க வேண்டும் என்றார். அப்பொழுது தான் நாமும் எழுதினால் என்ன என்ற கேள்வி எனக்குள் தோன்றியது.
நான் போட்டி தேர்வுக்கு தயாராகி வருவதால் வாசிக்க நேரம் குறைவாகவே கிடைக்கிறது. IISC, NIT, அல்லதுCUTN போன்ற பெரிய கல்வி நிலையத்தில் PHD-யில் சேர்ந்து ஆராய்ச்சியாளனாக ஆக வேண்டும் என்பது என் இலட்சியம். இப்போது இதனுடன் சேர்த்து புத்தகம் வாசிக்க வேண்டும் , எழுத வேண்டும் என்ற எண்ணமும் பிறந்துள்ளது. கண்டிப்பாக அது நிறைவேறும் என்ற உறுதியுடன் உங்கள் பதில் மற்றும் ஆசிர்வாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்
உங்கள் அன்பு வாசகன்
சி.ஹரிராமகிருஷ்ணன்
அன்புள்ள ஹரி
போட்டித்தேர்வுக்கு வாசிப்பது இலக்கியவாசிப்பு இரண்டும் முரண்படாமல் பார்த்துக்கொள்ளவும். இப்போதைக்கு குறைந்த அளவுக்கு, ஒரு வாரத்திற்கு சில மணிநேரம் என்னும் அளவில் இலக்கியவாசிப்பு போதும். போட்டித்தேர்வுக்கான வாசிப்பு உடன் நிகழட்டும்.
ஆனால் ஒன்று சொல்வேன். போட்டித்தேர்வுக்கான பாடங்களையே எழுதுங்கள். விரிவாக. அது உங்கள் எழுத்துநடையை மேம்படுத்தும், போட்டித்தேர்வுக்கும் உதவும். போட்டித்தேர்வின் எல்லா விஷயங்களையும் எழுதிக்கொண்டே இருங்கள். பின்னாளில், ஒரு வேலையும் இடமும் உறுதியான பின் விரிவாக எழுதமுடியும்
வாழ்த்துக்கள்
ஜெ
சாகித்ய அக்காதமி, யானை டாக்டர்
உங்கள் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை. ஆனடாக்டர் மொழிபெயர்ப்பு சாஹித்ய அகடமி மலையாள மொழிபெயர்ப்பு குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது…
https://sahitya-akademi.gov.in/pdf/Pressrelease_TP-2022.pdf
அன்புடன்
ஆர்வி
அன்புள்ள ஆர்வி,
ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொன்ன பின் கவனித்தேன். உண்மையில் விருது கிட்டத்தட்ட கிடைக்கும் நிலை. ஆனால் மூல ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளாரும் ஒருவரே என்பது ஒரு சிக்கலை அளித்தமையால் தவிர்க்கப்பட்டுள்ளது. வேடிக்கையான விஷயம்தான்.
ஜெயமோகன்
அறம், ஆங்கில விமர்சனம்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜெயமோகனின் அறம் தொகுப்பிற்கு (Stories of the True) எழுதப்பட்ட திறனாய்வின் தமிழ் மொழிபெயர்ப்பு இது
A Search for Moorings: N Kalyan Raman- தமிழில்: பிரியதர்ஷினி சிவராஜாDecember 24, 2022
சிலுவையின் நிழலில்
சிலுவையின் பெயரால் மின்னூல் வாங்க
சிலுவையின் பெயரால் என்னும் நூலின் தொடக்கப்புள்ளி என்பது நீண்ட காலத்திற்கு முன்பு ஒருமுறை கே.சி.நாராயணன் சென்னையில் மாத்ருபூமி நிருபராக பொறுப்பிலிருந்தபோது பார்சன் காம்ப்ளக்ஸிலிருந்த அவருடைய தங்குமிடத்தில் சக்கரியா உட்பட பல இலக்கிய நண்பர்கள் கூடிப்பேசிக்கொண்டிருந்தபோது இறையியலில் ஆய்வு செய்பவரான மாத்யூ என்னும் நண்பர் கூறிய ஒரு வரி என்று இன்று எண்ணுகிறேன். இலக்கியவாதிகள் பேசும் கிறிஸ்து இங்குள்ள கிறிஸ்தவ பக்தர்கள் அறியாதவர்.
கிறிஸ்தவ பக்தர்கள் ஒரு அமைப்பின் முகமாக கிறிஸ்துவைப் பார்க்கிறார்கள். வேண்டியதை அளிக்கும் கருணை கொண்ட தேவனாகவும் சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் தூதனாகவும் அவரைப் பார்க்கிறார்கள். ஒருவரலாற்று நாயகனாகவோ ஆன்மீக ஆசிரியராகவோ அவனை அவர்கள் அறியமாட்டார்கள். இலக்கியவாதிகள் பார்க்கும் கிறிஸ்து டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி, நிகாஸ் கசந்த்சகீஸ், ஜோஸ் சரமகோ என வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதி உருவாக்கப்பட்டவர். எனக்கு உடனடியாக அது உண்மை என்று தோன்றியது. தமிழில் இலக்கியவாதிகள் மத்தியில் க.நா.சுவின் அன்பு வழி என்னும் நாவல்தான் கிறிஸ்துவை அறிமுகம் செய்தது. அந்தக் கிறிஸ்து அல்ல குமரி மாவட்டத்தில் பலநூறு கிறித்துவ வழிபாட்டிடங்களில் வணங்கப்படும் கிறிஸ்து.
சுருக்கமாகச் சொன்னால் அது மதத்துக்கும் ஆன்மிகத்துக்குமான தீர்க்க முடியாத முரண்பாடுதான். ஆன்மீகம் உயிர்த்துடிப்பானது நகர்ந்துகொண்டிருப்பது தனிநபர்களைச் சார்ந்தது. மதம் உறுதியானது நிலைகொண்டது. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது. கிறிஸ்தவ மதம் கிறிஸ்து மறைந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டீன் அவர்களால் ஒரு மதமாக வரையறுக்கப்பட்டு மையத்திருச்சபை அமைக்கப்பட்டு இன்று காணும் வடிவில் நிறுவப்பட்டது. பின்னர் அதிலிருந்து மேலும் மேலும் கிளைகளென திருச்சபைகள் பிரிந்து உலகளாவ வளர்ந்தன.
கான்ஸ்டன்டீனுக்கு முன்னால் கிறிஸ்தவ மதம் ஒரு ஆன்மீக இயக்கமாகவே இருந்தது. அடித்தள மக்களிடம் விடுதலையையும் மீட்பையும் பற்றிய கனவுகளையும் உருவாக்கிய ஒரு ஆன்மிக பெருக்காக அது திகழ்ந்தது. அது மக்களைத் திரட்டுவதைக்கண்டு தன் பேரரசின் அதை அடித்தளமாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் கான்ஸ்டன்டீன் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார். ஒரு ஆன்மிக மரபு மதமாகும்போது அது சிலவற்றை ஏற்கிறது சிலவற்றை மறுக்கிறது. இன்று காணும் பைபிள் கான்ஸ்டன்டீன் கூட்டிய அவையால் அறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அந்த அவையால் நிராகரிக்கப்பட்ட திருச்செய்திகள் இருந்தன. அவற்றில் முதன்மையானது தாமஸ் எழுதிய சுவிசேஷம். மக்தலீனா எழுதிய சுவிசேஷமும் இருந்திருக்கிறது. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகாலம் முழுமையாக மறுக்கப்பட்டன. அவற்றை கையில் வைத்திருப்பதும் குற்றமெனக்கருதப்பட்டது.
சென்ற நூற்றாண்டில் அவை நாக்–ஹமாதி என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் சாவுகடல் பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் பாப்பிரஸ் சுவடிகளில் இவை அகழ்ந்தெடுக்கப்பட்டன. பொதுவாக இவை கருங்கடல் சுவடிகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையை கத்தோலிக்கத் திருச்சபை நெடுங்காலம் நிராகரித்தது. கார்பன் டேட்டிங் எனப்படும் காலக்கணிப்பு முறை வந்தபிறகு இவை உண்மையானவை தொன்மையானவை என நிறுவப்பட்டது. இன்று மறுக்க முடியாத மாற்று கிறிஸ்தவ தரப்பாக இது உள்ளது. இன்று மதத்திற்கும் ஆன்மிகத்திற்குமான வேறுபாட்டை உணர்வதற்கான மிகச்சிறந்த ஆவணங்கள் இவை.
இந்நூலின் உள்ளடக்கமாக இருக்கும் புனித தாமஸின் சுவிசேஷம் என்னும் சிறுபகுதியை ஏற்கனவே நான் மொழியாக்கம் செய்திருந்தேன். அதை ஒட்டி எனது இணையதளத்தில் கிறிஸ்துவைப்பற்றிய இயல்பான ஒரு விவாதம் தொடங்கியது. எப்படி இன்றைய கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அதற்கப்பால் உள்ள மனிதாபிமானியும் மெய்ஞானியும் கவிஞனுமாகிய கிறிஸ்து யார் என்பது அந்த விவாதங்களின் மையப்பொருள் மக்தலீனா பற்றி, மாற்று பைபிள் பற்றி, மறைக்கப்பட்ட பைபிள் பற்றிய விவாதங்கள் அவ்வாறு உருவாகி எழுந்தன. இலக்கியம் அறிந்த கிறிஸ்துவை உணர்ச்சிகரமான முன்வைக்கும் கட்டுரைகள் இதில் உள்ளன. மதத்தால் கட்டமைக்கப்பட்ட கிறிஸ்துவின் மறைக்கப்பட்ட பகுதிகளைச் சொல்லும் கட்டுரைகள் இதில் உள்ளன.
இந்நூல் ஆன்மீக கிறிஸ்துவையும் அமைப்பு கிறிஸ்துவையும் ஒரே சமயம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது. கிறிஸ்தவ மதம் கிறிஸ்து எனும் ஆன்மிக வழிகாட்டி இரண்டுக்குமான வேறுபாட்டை நோக்கி வாசகனை திறக்கச் செய்வது. ஓர் ஆன்மீக ஞானியாக ஒவ்வொரு மனிதனையும் நோக்கி கிறிஸ்து அவருடைய விடுதலையை வழிகாட்டுகிறார். ஒவ்வொரு ஆத்மாவுடனும் தனித்தனியாகவே அவர் பேசுகிறார். இன்றும் கிறிஸ்துவமதம் ஒவ்வொருவரையும் பெருந்திரளில் ஒருவராக உணரச்செய்கிறது. கிறிஸ்துவை மேய்ப்பனாகவும் தங்களை பெரும் மந்தையாகவும் உருவகித்துக்கொள்கிறது. அவ்வாறன்றி கிறிஸ்துவுக்கும் தனக்குமான தனிப்பட்ட உரையாடல் ஒன்றை தொடங்க நினைப்பவருக்கு இந்த நூல் கையேடாக இருக்ககூடும். ஒரு கிறிஸ்தவ பக்தனுக்கு இந்நூலில் படிக்க ஏதும் இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. மெய்ஞான குருவாக ஆன்மிக ஞானியாக இறை வடிவாக கிறிஸ்துவை அறிய விரும்பும் இலக்கிய வாசகன் இதில் கிறிஸ்துவின் ஒளிமிக்க ஒரு முகத்தை கண்டடைய முடியும் என்று தோன்றுகிறது.
சிலுவையின் பெயரால் நூலின் மறுபதிப்புக்கான முன்னுரை
குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
அருளவதாரம்
இன்றும் காவியங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு வாசகர்கள் இருக்கிறார்களா தெரியவில்லை. வி.மரிய அந்தோனி 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் அருளவதாரம் என்னும் காவியத்தை எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் அக்காவியம் நூலாக வெளிவந்தது. தமிழ்வாசகன் மேல் வைத்த எந்த நம்பிக்கையில் எழுதினார் என தெரியவில்லை.
மரிய அந்தோனி நாகர்கோயில்காரர். மறவன்குடியிருப்பில் வாழ்ந்தார்.
அருளவதாரம்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

