Jeyamohan's Blog, page 653

December 30, 2022

ஓராண்டு- ரம்யா

நீலி மின்னிதழ்

அன்பு ஜெ,

“அன்பு” பற்றிய ஒரு உரையால் இந்த வருட விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தியின் பதில்களில் அது தெரிந்தது. கமலதேவியின் அமர்வில் அது நேரடியாக பேசப்பட்டது. ஏன் அன்பை எழுதுகிறீர்கள், ஒளி நோக்கி, மனிதர்களின் மேலான நம்பிக்கையை நோக்கி எழுதுகிறீர்களே என்ற கேள்விக்கு, “நான் இருளிலிருந்து தான் ஆரம்பிக்கிறேன் அது ஒளியை நோக்கி சென்று முடிகிறது” என்றார். ஆம் அன்பின் பக்கம் நின்று கொண்டிருப்பவர்கள் முதலில் கண்டு திகைப்பது அன்பின்மையால் நிகழ்த்தப்படும் வன்முறையைத்தான். அதில் பிறக்கும் கேள்விகள் வழியாகவே அவர்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள். இவான் கார்த்திக் கமலதேவியிடம் “அன்பு என்பது மனிதனுக்கு கற்பிக்கப்பட்ட ஒன்று தானே” என்று  கேட்டபோது “இல்ல.  நான் அப்படி நினைக்கல. அது இயல்பாகவே நமக்கு இருக்குது” என்றார் சுருக்கமாக.

விஷால்ராஜா கமலதேவியின் கதைகள் பற்றிய தன் விமர்சனக்கட்டுரையில்  //பரிவுணர்ச்சிக்கும் அன்புக்கும் நடுவே இருக்கக்கூடிய வேறுபாடு துலக்கம் பெறாதபோது வாகர் ஏமாற்றப்பட்டதாகவே உணர்வார். ஏனென்றால் துயர் கண்டு பரிவு கொள்வது அசாத்தியமான செயல் அல்ல. மேலும் அது அறிவுரை மட்டுமே. சாலையில் யாசகம் கோருபவர்களை காணும் பல கண்கள் பரிவுணர்ச்சி கொள்கின்றன. ஆனால் அன்பு செய்வது பரிவுணர்ச்சி போல எளிமையாக நிகழ்வதன்று. அன்பை தரவும் பெறவும் பயிற்சி தேவைப்படுகிறது. அதில் நீடித்து தரிக்க வேண்டியுள்ளது. நம்மில் ஒரு பகுதியை இழக்க வேண்டிவருகிறது.  அதற்கான துணிச்சலை கமலதேவியின் சிறுகதைகள் வெளிப்படுத்தவில்லை.// என குறிப்பிட்டிருந்தார். இதை முன்வைத்து சுனில் கிருஷ்ணன் கமலதேவியிடம் “நீங்க அன்பு என்று சொல்வதை விஷால் ராஜா பரிவு என்று சொல்கிறாரே. நீங்க என்ன சொல்றீங்க இதைப்பற்றி” என்று கேட்டார். கமலதேவி எல்லாக் கேள்விகளுக்கும் சட்டென எதிர்வினையாற்றுவதைப் போல “ஓ.. அவர் அப்படி பரிவுன்னு சொல்றாரா. நான் இரண்டையும் பிரிச்சுப்பாக்கல. ஒன்னு இன்னொன்னோட வடிவம் தான. பரிவு தொடக்கம்ன்னா அன்பு முடிவு. அப்படி வசதிக்காக பிரிச்சுக்கிட்டாலும் ஒன்னு தான்” என்றார் இயல்பாக. அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் அறிவார்ந்த தளத்தில் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டெஃபனிஷன் உள்ளது. ஒரு திட்டவட்டமான வரையறை உள்ளது. போட்டித்தேர்வுகளுக்காக அவற்றை பட்டியலிட்டு உதாரணங்களை விளக்கி கோட்பாடுகளை தத்துவாதிகளை துணைக்கு அழைத்து என அவற்றை மயிர் பிளக்கும் விவாதம் செய்திருக்கிறோம். நேர்காணலிலும் இத்தகைய உணர்வுகளுக்கான வரையறையை ஒருவன் உணர்ந்து வைத்திருக்கிறானா என்று அறிவதற்கான கேள்வி ஒன்று கேட்கப்படும். காதலுக்கும், காமத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கூட புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். காதலும், காமமும் ஒன்றையொன்று முயங்கும் என்று தான் நினைத்திருக்கிறேன். அதில் இருக்கும் வேறுபாடு கூட எனக்கு முதலில் ஒவ்வாததாக இருந்தது. எதை அறிவார்ந்து அணுகினாலும் ஏதேனும் கோட்பாட்டைக் கொண்டு நிறுவிவிடலாம் என்ற கருத்துக்கு ஏற்ப அதையும் நிறுவிக் கொண்டேன். ஆனால் காமத்திற்கும் ஒன் நைட் ஸ்டாண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்ற சிந்தனை ஒன்று என் முன் வந்து ஒரு நாள் நின்ற போது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. கலாச்சார அதிர்ச்சி என்று சொல்லமாட்டேன் மாறாக உணர்வுகளின் முன்னான அதிர்ச்சி என்பேன். காதலின் உச்சபட்ச வெளிப்பாடு தானே காமம். அப்படியெல்லாம் அறிவார்ந்து பிரித்துக்கொள்ளாத ஒருவன்/ஒருத்தி பாதிக்கப்படும்போது அதை அறிவார்ந்து மதிப்பிட்டு கடந்து போகலாம், அதுவல்லாமல் அதை பரிகசித்து, எதிரில் அப்படியெல்லாம் சிந்தனை செய்யாமல் அவன்/ளுக்கு துன்பம் விளைவித்தவனை கடக்கலாம்.

தொடாதவளை, வெறுமே பார்த்துக் கொண்டவளை மட்டுமே நினைத்து காலம் முழுமைக்கும் தீற்றலாக வைத்து வாழ்வை நசித்துக் கொண்ட ராஜமார்த்தாண்டன்களை, மாற்றான் மனைவியின் மேல் வந்த காதல்/காமத்திற்காக தன் சொந்தங்களை இழந்து, தன் நாட்டை, தன் பத்து தலையை இழந்த காதலனை அது ஏளனம் செய்வதாகப் பட்டது. அவனை நோக்கி “ஏண்டா சீதா ஆச்சி தான் இந்த ஒலகத்துலயே பொண்ணா?” என ஒரு இருபத்தியொராம் நூற்றாண்டு ஆள் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கலாம். அன்பை எந்த ஒளிவு மறைவுமின்றி கண்பிப்பவர்களை, ஏங்குபவர்களை, கரைந்து அழுபவர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கை இந்த காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரையும், ஒவ்வொரு உரையாடலையும் அறிவார்ந்து மதிப்பிடும் மனிதர்கள் எனக்கு விலக்கமே அளிக்கிறார்கள். அத்தனை அலர்ட்டாக ஏமாறாமல் இந்த உலகத்திலிருந்து, மனிதர்களிடமிருந்து தப்பித்து அவர்கள் அடைவது என்ன? மிகப்பெரிய ஏமாற்றம் தரும் வலியை, அந்த மத்துறு தயிர் தரும் வலியை அனுபவிக்காமல் வாழ்க்கையில் என்ன?

நான் ஒளரங்கசிப் தவிர சாருவின் அனைத்து நாவலகளையும் வாசித்தேன். அன்பின் மேலான ஒவ்வாமையும், சந்தேகப்பார்வையும் கொண்டு பார்க்கும் ஒரு பார்வையை அது அளித்தது. இது வரை நான் அடைந்த அத்தனை அன்பின் வாசல்களிலும் நின்று அது ஏளனப்பார்வையை வீசியது. இது அன்பல்ல இது காமம், இது அன்பல்ல பரிவு, இது அன்பல்ல பச்சாதாபம், இது அன்பல்ல பயன்படுத்திக் கொள்ளல் என ஒரு குரல் சிரித்துக் கொண்டே சொன்னது போல இருந்தது. இத்தனை சளிப்புகளுக்கு அப்பால் ஒரு அன்பு நிற்க முடியுமா? சாரு ஒரு தளத்தில் நின்று கொண்டு கலைத்துப் போட்டுச் சொல்வதைத் தான் விஷால் ராஜா அதற்கு எதிரான தளத்தில் நின்று சொல்வதாகப் படுகிறது.

பற்று, கருணை, பரிவு, பாசம், அன்பு, காதல், காமம், பிரேமை, பக்தி என தமிழில் இருக்கும் பிரிவுகளை விட ஆங்கிலத்தில் இந்த உணர்வுகளுக்கான பெயர்கள் அதிகம். ஒரு மொழி நவீனமாவதற்கு சான்றாக இந்த உணர்வுக்கான நுண்வரையறை தரும் பெயர்களின் எண்ணிக்கைப் பெருக்கம் அமைகிறது. “அறம்” என்ற தமிழ்ச் சொல்லுக்கு நிகராக பல ஆங்கில வார்த்தைகளை துலாத்தட்டில் வைத்தால் மட்டுமே அது சமன் கொள்ளும். ”அன்பு” என்ற வார்த்தை கூட அப்படித்தான்.

கமலதேவி ஆழமான கேள்விகளை அல்லது மிகவும் சிக்கலான உறவுப் பிரச்சனைகளைப் பேசவில்லை எனினும் அவர் கதைகளில் மனிதர்களுக்கிடையே அன்பு நிகழவில்லை வெறும் பரிவு தான் நிகழ்ந்துள்ளது என்பதை எதைக் கொண்டு வரையறுக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக உள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு கல்வியை அளிக்க அனைத்தையும் துறந்து வாழும் நெடுஞ்சாலைப்பறவை சிறுகதையில் வரும் ஜென்ஸி டீச்சரின் செயல்கள் வழி எனக்குத் தெரிவது அன்பு தான்.

ஆணல்ல பெண்ணல்ல, இரு வேறு உயிர்கள், இருவேறு உயிர்களல்ல பிரம்மம் என்ற சிந்தனையை உங்கள் எழுத்துக்களின் வழி வந்தடைந்திருக்கிறேன். அதை உணர்கிறேன். யாவருக்குள்ளும் உறையும் குழந்தைமையை, தெய்வத்தை தான் அதன் பின் தேட ஆரம்பித்தேன். அறிவார்ந்தவர்கள் பல திரைகளை, பாவனைகளைக் கை கொண்டிருக்கிறார்கள். எப்போதும் தரிசித்துவிட முடியாத தெய்வத்தை தன்னுள் பூட்டி வைத்திருக்கிறார்கள். பரிவும், அன்பும் ஒன்று என நான் வாதிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. துயர் கண்டு பரிவு காணும் பாத்திரங்களை மட்டும் தான் கமலதேவி படைத்திருக்கிறாரா என்பதற்கு அவர் படைப்புகளின் வழியே மறுக்கலாம். Pathy, sympathy, empathy என ஒரு வரிசை உள்ளது. யாவும் ஊறி வரும் ஊற்று அன்பாகத்தான் இருக்க முடியும். “உள்ளுக்குள்ளவே ஊறி காயற ஊத்தாவது இல்லாத கேணி பின்னால எந்த மழைக்கும் சுரக்காதும்பாங்க” என்று சொன்ன கமலதேவி பேசுவது பரிவல்ல. அன்பு தான்.

*

“மகிழ்ந்து களி கூறு, இன்றிருத்தல் இப்போதிருத்தல்” போன்றவற்றின் மேல் விலக்கம் உள்ளது. அது உணர்வுகளை துச்சமாக மதிக்கிறது. அன்றைய கணத்திற்குப் பின்னான நினைவுகளை என்ன செய்ய என்று தவிப்பவனின் முன் அது வைக்கும் தீர்வு என்ன? அடிப்படை உணர்வுகளை அது புறந்தள்ளுகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது. மமங் தாய் அமர்வில் ”ட்ரான்ஸ்” என்பதை இலக்கியத்தின் கூறாக பயன்படுத்துவதைப் பற்றி சுனில் கேட்டார். கார்த்திக் புகழேந்தியிடம் இக்கூறு சார்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் எழுத வந்த காலத்தில் மரபை வேரை நோக்கி எழுதுவது புதுப் பாதையாக இருந்தது. அவற்றையெல்லாம் முழுவதுமாக நிராகரிக்கும் காலத்தில் உங்கள் பயணத்தை ஆரம்பித்து அந்த சிந்தனையை மிகவும் ஆழமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு கொணர்ந்து வைத்திருக்கிறீர்கள்.

ஆனால் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சிக்கலாக உணர்வுப் பூர்வமாக இருப்பவர்களை பித்தர்களாக, அறிவின் படியில் சற்றே கீழ் வைத்து பார்க்கக் கூடிய தன்மையைச் சொல்லலாம். அன்பை வன்முறை என்று சாரு சொல்லும் போதும், இது அன்பல்ல பரிவு என்று விஷால் சொல்லும் போதும் அதை நோக்கி சொல்லப்படுபவர்களுக்கு இணையாகவே இந்த இரு அறிவுத்தரப்பிலும் இல்லாமல் குறைகுடமாக, அலைக்கழிதலுடன் உணர்வுப்பூர்வாக போராட்டத்துடன் இருப்பவர்களும் காயமடைகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் சம நிலையற்றவர்களால் காண்பிக்கப்படுவது தான் அன்பாக மாறிவிடுமா என்ற ஐயம் எழுகிறது. அன்பும் “ட்ரான்ஸ் ஸ்டேட்டாக” பார்க்கும் நிலைமை வந்து விடுமா என்ற ஐயம் எழுகிறது.

ஒருவேளை இன்றிருக்கும் இந்த ட்ராஸ் ஸ்டேட்கள் யாவும் இப்படி அறிவார்ந்து மதிப்பிட்டவர்களால் தான் ஒளிந்து கொண்டுவிட்டதா என்ற எண்ணம் வருகிறது. மதுமஞ்சரியின் நேர்காணலுக்கு வந்த எதிர்வினையில் அது தெரிந்தது. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது குக்கூ தன்மை என்று கிண்டல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இந்த இந்தியப் பண்பாட்டில் தங்களை ஒளித்துக் கொண்டவை யாவும் இவ்வாறு ஏளனம் செய்யப்பட்டதாலோ, அறிவார்ந்து மதிப்பிட்டதாலோ இருக்கலாம். திராவிடச் சிந்தனைகள் வழி நாத்திகம் அறிவார்ந்து நின்று ஆத்திகம் சார்ந்த அனைத்தையும் மறுத்ததிலிருந்து இன்று மரபை வேரை நோக்கி சமூகத்தை முடுக்க பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. உணர்வுகளை அறிவார்ந்த உணர்வுகளற்ற தளத்திலிருந்து மதிப்பிடுவது இக்காலகட்டத்தின் சிக்கலாக உள்ளது.

சாரு அன்பை வன்முறையாகச் சொல்வதும், அதைக் கேட்டு அரங்கமே சிரிப்பதும், அன்பை இத்தனை வரையறைகளுக்கு விஷால் உட்படுத்துவதும் அறிவார்ந்த தளத்தில் நின்று கொண்டுதான். காந்தாரா படத்தைப் பார்த்து புலங்காகிதம் அடைந்து “இது என் கலாச்சாரம்” என்று சொல்பவர்கள் தான் அதை அறிவீனம் என்று மதிப்பிட்டவர்கள். கார்த்திக் புகழேந்தியிடம், மமங் தாயிடம் ட்ரான்ஸ் ஸ்டேட் பற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது போல இனி ஒரு தலைமுறை கழித்து அன்பின் வெளிப்பாடு பற்றிய கேள்வி கேட்கப்படும். இந்த உளப்பொங்கள்கள், உணர்ச்சிக் கொந்தாளிப்புகள் எங்கோ அறிதாக நிகழும்போது இது என் ஆதிஉணர்வு என்று சுட்டிக் காட்டும்படி நிகழுமோ என்று தோன்றுகிறது. அத்தனை குரூரமாக நிலமை மோசமாகிவிடவில்லையெனினும் இந்த அறிவார்ந்த தளத்தில் குழந்தைமையை தக்க வைத்துக் கொள்வது சிரமாக உள்ளது.

*

நீலி பதிப்பகம்: நவீன எழுத்தாளர் நிரையில் பெண்களின் பங்கு பற்றிய தேடலில் பல பெண் எழுத்தாளர்களை தமிழ் விக்கி வழியாகக் அறிமுகப்படுத்தினீர்கள். தீவிர மைய இலக்கியத்தில் இருந்தும் கூட ஏன் இவர்கள் பெயரெல்லாம் விடுபட்டன என்ற கேள்விக்கான பதிலை ஒரு கடிதத்தில் சொல்லியிருந்தீர்கள். கி.வா.ஜ -வுடன் இருந்த பிணக்கு காரணமாக புதுமைப்பித்தனோ, சு.ரா வோ அவர் உருவாக்கிய ஒரு பெண் நிரையை கருத்தில் கொள்ளவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். இலக்கியத்தில் நிகழும் இந்த அரசியல் காரணமாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பை மறுதளிக்கிறது. ஒன்று இன்னொன்று இந்த உலகத்தில் இல்லாதத்து போலவே தனித்து செயல்படுகிறது. எந்த அரசியலுக்கும் ஆளாகாமல் வெறுமே எழுதிக்கொண்டும், வாசித்துக் கொண்டும் இந்த வம்புகளுக்கு பதிலளிக்காமல் வெறுமே எழுதிச் செல்லும் பெண் எழுத்தாளர்கள் கால நீரோட்டத்தில் மறக்கப்பட்டுவிட்டனர். இன்றைய சூழலில் வம்புகளால் மட்டுமே அறியப்படும் பெண் எழுத்தாளர்களை தொடர்ந்து சென்று அவர்கள் எழுத்திற்குள் உள் நுழைந்தால் வாசகனாக ஏமாற்றத்தை அளிக்கிறார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டும், விருதுகள் பெற்றுக் கொண்டும், புகழின் வெளிச்சத்தில், சிறு குழுத்தொடர்புடன் இருக்கும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதுவல்லாதவர்களும் இருக்கிறார்கள். எழுதிச் சென்றவர்களில், எழுதுபவர்களில் பெண்ணெழுத்து என்ற தன்மை உள்ளதா என்ற கேள்வி வருகிறது.

எழுத்தாளர் அ. வெண்ணிலாவுடன் விஷ்ணுபுரம் விழாவுக்காக அறையைப் பகிர்ந்து கொண்டேன். காலையில் டீ குடிக்கச் சென்றபோது,  அடுத்தடுத்து அவர் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்வுகளை, மனிதர்களை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார். ஆய்வுகளுக்காக நான்கு வருடங்கள் அனைத்திலிருந்தும் விலகி அமைந்திருந்ததன் மன நிறைவைச் சொன்னார். ஓயாமல் செயலில் இருக்க முடிந்த வாழ்வு என்று நினைத்துக் கொண்டேன். அறையில் அணுக்கமாக்கிக் கொண்டபின் தாயும், குடும்பப் பொறுப்புமுள்ள பெண்ணை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “எத்தனை வேலைகளுக்கும் மத்தியில் பிள்ளைகள் சாப்பிட்டார்களா, வாகனம் அவர்களுக்கு சரியாக வந்ததா, பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற எண்ணங்களை மட்டும் விட முடியவில்லை. இயற்கையின் தகவமைப்பு போல. ஆனா முருகேஷ் அப்படியில்லை அவரால் இயல்பாக இருக்க முடியும். நான் தான் எல்லாத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பேன்” என்றார். உண்மையில் அது வேறு ஒரு வெண்ணிலா தான். ஆய்வாளர், அறிவார்ந்தவருக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணுக்கான இயல்புத்தன்மை அது. இந்த நவீனம் அதை கேலி செய்கிறது. இயல்பாக ஊறிவரும் ஒன்றின் மேல் அறிவார்ந்த மதிப்பீட்டை வைத்து நீர்த்துப் போகச் செய்கிறது. அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வதற்காகவென ஒரு பெண் பெண்தன்மையை இழக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தான் திரும்பத்திரும்ப எங்களுக்கு சொல்லிவருகிறீர்கள். பெண்ணுக்குரியதை எழுதுவதற்காக அவள் அவமானப்பட வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. இங்கிருந்து சென்ற வருட ஜா. தீபா அமர்வை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு அங்கு சொல்ல வேண்டியது உள்ளதால் எழுதுகிறேன் என்றார். அதை மட்டும் தான் எழுத வேண்டுமா என்ற கேள்விக்கு “ஆம், இல்லை” என்ற இரு பதிகளும் இருக்கலாம் தான். ஜா. தீபா, கமலதேவி வழியாக இருமுனைப்பட்ட சிந்தனைகளை அடைந்தேன். அ. வெண்ணிலாவிடம் “அப்ப பெண் மட்டுமே சொல்லிவிட முடியும் ஒன்று இருக்கிறது தான் இல்லயா” என்று கேட்டேன். அவர் அதை ஆமோதித்தார்.

இந்த ஒரு வருட காலமாக தமிழ்விக்கி வழியாக எழுந்த கேள்விகளை நீலி மின்னிதழ் வழியாக தேடிப் பார்க்கிறோம் ஜெ. சமீபத்தில் சைதன்யா சொல்லும்போது ”இந்த தமிழ்விக்கி வழியாக, நீலி மின்னிதழ் வழியாக நான் கண்டு கொண்டது பெண்ணுக்கான பிரச்சனைகளை நான் ஐரோப்பிய தன்மையோடே பார்க்கிறேனோ? என்ற சந்தேகத்தை தான். தமிழ் இலக்கிய வரலாறு, குறிப்பாக பெண்ணெழுத்து பற்றிய வரலாறு எழுதப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக இவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளைத் தாண்டி, இவர்களின் சமூகப் பின்புலம், பிரச்சனைகள், எழுதுபொருள், களம் சார்ந்து வரலாற்றுத் தன்மையுடன் கூடிய தொடர் கட்டுரையை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார். மகிழ்வாக இருந்தது. இதை மேலும் விரிப்பார் என்றே தோன்றுகிறது. உண்மையில் இந்தச் சித்திரம் தான் தேவைப்படுகிறது. உலக இலக்கியத்தில் புனைவில் பெண்ணெழுத்து என சுசித்ராவும், அபுனைவில் பெண்ணெழுத்து பற்றி சைதன்யாவும், தனி ஆளுமைகள் பற்றி விக்னேஷ், இசை மற்றும் நண்பர்கள் எழுதும் தொடர் கட்டுரைகளுக்கான கோட்டை இங்கு நவீனத்தில் விடுதலைக்கு முந்தைய பெண்ணெழுத்து வரை நீட்டிக் கொள்ளலாம். சங்ககாலத்தில் பெண்பாற்கவிஞர்கள் என எடுத்துப் பிரித்து படித்துப் பார்த்தால் மிகப் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சங்ககாலத்திற்கென திட்டவட்டமான தன்மை ஒன்றுள்ளது. அங்கு ஆண், பெண் என்ற பேதமில்லாமல் அகவுலகம் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தி இலக்கிய காலத்தில் ஆண் பெண் பேதம் சற்று புலப்படுகிறது. பக்தியில் பெண்ணாக தங்களை உருவகிக்கும் முறையையே உயர்வாகக் கருதியுள்ளனர். ஆழ்வார்களில் ஆண்டாளுக்கு மட்டுமே இறைவனைச் சென்று சேரும் பாக்கியம் கிடைக்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு மட்டுமே இறைவனின் அருகில் அமையும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நுண்ணிய வேறுபாட்டை அவர்களின் கவிதைகள் வழி ஆராய வேண்டும். ஆனால் விடுதலைக்கு முன் ஆரம்பித்த நவீனச் சிக்கல்களை உலக இலக்கியத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. பெண் விடுதலை, சுதந்திரம், அடிமைத்தனம் பற்றி பேசுவதற்கான தேவை வரலாற்று ரீதியாகத்தான் எடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மறுமலர்ச்சி மேற்கத்திய கல்வியின் உந்துதலால் விளைந்தது தான். பெண் விடுதலைச் சிந்தனையும் கூட அவ்வாறே. இவை பற்றிய ஒரு சித்திரத்தை சைதன்யா தொடராக எழுதுவது முக்கியமானது.  இந்த செறிவான கட்டுரைகளை தொகுக்கும் முயற்சியாக நீலி பதிப்பகம் அமையும். இது தவிரவும் புழக்கத்தில் இல்லாத பெண் படைப்பாளர்களின் தொகுப்புகள் கொணர வேண்டும். மேலும் இந்த கனவுகள் விரிவடையும். நண்பர்களின் தேடலின் இன்னொரு முயற்சியாகவே நீலி பதிப்பகத்தைப் பார்க்கிறேன். தூரன் விழாவில் நடை செல்லும் போது நீலி மின்னிதழின் கட்டுரையின் செறிவுத்தன்மையின் அவசியத்தை சொல்லிக் கொண்டிருந்தபோது “நீலி பதிப்பகம்” என்ற சொல் உங்கள் வார்த்தைகளின் வழி எடுத்துக் கொண்டது தான். இந்த வருடத்தின் மிக முக்கியமான ஒன்றாக தமிழ்விக்கியைப் பார்க்கிறேன். ஆசிரியரின் அருகமைந்து கற்றுக் கொள்வது போன்ற நிறைவை அளித்தது தமிழ்விக்கி. மேலும் அந்தக் கற்றலை செறிவாக்கும் வழிமுறையை இந்த விஷ்ணுபுரம் விழாவில் சொல்லியிருக்கிறீர்கள். அதைக் கட்டாயம் அடுத்த வருடத்திற்கான செயலாக மாற்றிக் கொள்வேன். இந்த வருடம் முழுவதும் செயலால் நிறைத்துக் கொள்வதற்கானதை கொடுத்தீர்கள். நான் என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் தளத்தை, செயலைக் காண்பித்ததற்காகவும் மேலும் கனவுகளை நோக்கி முடுக்கிக் கொண்டிருப்பதற்காக நன்றி ஜெ.

*

கேள்விகள் பெருகிக் கொண்டே இருக்கிறது ஜெ. பதில் காண முற்படும்போது இருமுனை அறிவுத்தரப்புக்கும் செல்ல முடியாமல் அலைக்கழிதலாக உள்ளது. ஆணவத்துடன் அறிவார்ந்த தளத்தில் நின்று கொண்டு முதல் முறையாக ”அறிந்தவை, அறிபவை அறியப்படப் போகிறவை என காலம் மூன்றெனில், அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்கக் காலம் ஒடுங்குமா? அறிதல் என்பது என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது எது?” என விஷ்ணுபுரத்தில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டபோது தான் என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணத்தை அடைந்தேன். மீண்டும் வெறுமே அறிவார்ந்த மதிப்பீடுகளுக்குள் செல்ல என்னால் முடியாது. ஒரு குறைகுடம்போல உணர்வுப் பெருக்கால் அலைக்கழிக்கப்பட்டு அனைத்துக் கேள்வியையும் எதிர்கொள்கிறேன். முனைகளுக்குச் செல்ல முடியாதெனினும் அறிவின் துணை கொண்டுதான் இவ்வுணர்வுகளையும் புரிய வேண்டியுள்ளது. பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. நீங்களும் குரூரமாக திட்டவட்டமான பதிலேதும் சொல்லாமல் கேள்வியோடு வந்து நிற்கும் போது மேலும் கேள்விகளையே அளிக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களின் வழி நுழைந்த நாள் முதற்கொண்டு கேள்விகளால் தான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். இந்த வாசிப்பு, இலக்கியச் செயல்பாடுகள், எழுத்து என யாவும் பதிலைப் பெறுவதற்காக என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவை மேலும் சரியான நல்ல கேள்விகளைப் பெறுவதற்காகத்தான் என்பதை உணர்கிறேன். ஒரு போதும் பதில் கண்டடையவியலாத புதிய கேள்விகளை நோக்கி முடுக்கும் ஆசிரியருக்கு நன்றி.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ.

பிரேமையுடன்

ரம்யா

விஷ்ணுபுர விழாவும் ஆண்டு நிறைவும்- இரம்யா 2021
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2022 10:30

December 29, 2022

முதற்காலடி

திசைகளின் நடுவே வாங்க திசைகளின் நடுவே மின்னூல் வாங்க

திசைகளின் நடுவே என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. 1990ல் திருவண்ணாமலையில் நடந்த கலை இலக்கிய இரவில் நண்பர் பவா செல்லதுரை எனக்கு அன்னம் அகரம் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் மீராவை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது என்னுடைய புகழ் பெற்ற சிறுகதைகள் வெளியாகிவிட்டிருந்தன. மீரா ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியிடும் எண்ணத்தை என்னிடம் சொன்னார்.

என்னிடம் எங்கும் பிரசுரமாகாத சிறுகதைகள் பல இருந்தன. ஏனெனில் அன்று நான் சிற்றிதழ்களில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். சிற்றிதழ்களில் பக்க வரையறை இருந்தது. நீளமான கதைகளை வெளியிட இதழ்கள் இல்லை. மும்மாத இதழ்கள் மட்டுமே அன்று வந்துகொண்டிருந்தன. அவையும் ஓர் இதழிலிருந்து இன்னொரு இதழுக்கு இடையே பலமாத கால இடைவெளிகள் விடுவது வழக்கமாக இருந்தது. சிறுகதை சற்று நீண்டுவிட்டால் அதைக் குறுநாவல் என்று பெயர் சூட்டி கணையாழி குறுநாவல் போட்டிக்கு அனுப்புவது அன்றைய ஒரே வழி. கணையாழி ஆண்டுக்கு பன்னிரண்டு குறுநாவல்களை தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் போட்டி என்னும் திட்டத்தின் கீழ் வெளியிட்டு வந்தது. என்னுடைய பல குறுநாவல்கள் அதில் வெளிவந்தன.

கையிலிருந்த கதைகளுடன் பிரசுரமான கதைகளையும் தொகுத்து மீராவுக்கு அனுப்பி வைத்தேன். மீரா அவற்றில் பலகதைகளை மீண்டும் படித்துவிட்டு உணர்ச்சிகரமாக எனக்கொரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அகரம் பதிப்பகத்தில் பிழை பார்த்துக் கொண்டிருந்த சுந்தர பாண்டியன் என்பவர் கதைகளைப்பற்றி மிகவும் உயர்வான கருத்தை என்னிடம் சொன்னார்.

தொகுதி வெளிவந்ததும் மிகப்பெரிய அளவில் ஒரு கவனம் அதற்கு உருவாயிற்று. மிக அரிதாகவே நம் சூழலில் அவ்வாறு ஒரு முதல் சிறுகதைத்தொகுதி இலக்கிய கவனத்தைப் பெறுகிறது. எனது தலைமுறையில் கோணங்கியின் மதினிமார்களின் கதை, என்னுடைய திசைகளின் நடுவே என இரு தொகுதிகளுக்கு மட்டுமே அவ்வாறு ஒரு கவனம் அமைந்தது. அத்தொகுதியில் அமைந்த பல கதைகள் ஏற்கனவே புகழ் பெற்றிருந்தன. ‘திசைகளின் நடுவே’ காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்தது. ‘படுகை,’ ‘போதி’ ஆகியவை நிகழ் இதழில், ‘மாடன் மோட்சம்’ பொன் விஜயன் நடத்தி வந்த புதிய நம்பிக்கை இதழில் வெளிவந்தன. ‘ஜகன்மித்யை’ கோமல் சுவாமிநாதனின் சுபமங்களாவில் வெளிவந்தது. அவை வெளிவந்த ஆண்டுகளில் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மை விவாதத்திற்குரியவையாக அக்கதைகள் அமைந்திருந்தன. இன்று முப்பதாண்டுகளுக்குப்பிறகு அவற்றில் பல கதைகள் அதே வீச்சுடன் இருப்பதைக்காண முடிகிறது.

சென்ற மே 31ம் தேதி கொலம்பியா பல்கலைக்கழக பேராசியரும் தமிழாய்வாளருமான டெய்லர் ரிச்சர்டை நியூ ஜெர்சியில் சந்தித்தபோது படுகை கதையைப்பற்றி வியந்து பரவசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதன் மூன்றடுக்கு கதை சொல்லும்முறை தமிழ் பண்பாட்டின் மூன்று அடுக்குகளாகவே அவருக்குத் தெரிந்தது. எழுதப்பட்ட காலத்தைவிட ‘படுகை,’ ‘மாடன் மோட்சம்’ஆகியவை மேலும் வளர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. ஜெயலலிதா நாட்டுப்புற தெய்வங்களுக்கு ஊன்கொடையை தடை செய்தபோது மாடன் மோட்சம் மிகத்தீவிரமான ஒரு மறுவாசிப்புக்குள்ளாகியது. இன்று அதன் உள்ளடுக்குகள் மேலும் அரசியல் அழுத்தத்துடன் வாசிக்கப்படுகின்றன.

‘திசைகளின் நடுவே’ ‘போதி’ போன்ற கதைகள் இன்றைய அரசியல் சூழலுக்கு மேலும் தீவிரமான பொருள் தருபவை என்று தான் தோன்றுகிறது. அண்மையில் ‘மாடன் மோட்சத்’தை மொழியாக்கம் செய்து மலையாள மனோரமா இதழுக்கு அனுப்பினேன். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கதையை என்னிடம் கேட்டு வாங்கிப்போடுவதுண்டு. மலையாள மனோரமாவின் ஆசிரியர் நண்பர் கே.சி.நாராயணன் அக்கதையை வெளியிடமுடியாது என்று எனக்குச் சொன்னார். இன்றைய அரசியல் சூழலில் மலையாள மனோரமா போன்ற ஒரு கிறித்தவ பத்திரிக்கை மீது கடுமையான மதவாத அழுத்தம் இருக்கையில் இந்துத்துவ மயமாதலை எதிர்க்கும் அந்தக் கதையை பிரசுரிக்க இயலாது, வேறு கதையை அனுப்பமுடியுமா என்று கேட்டிருந்தார். எனக்கு அதற்குப் பொழுதில்லை. கைப்பிரதியாகவே அந்தக்கதை எஞ்சியிருக்கிறது. இடதுசாரி இதழில் அதை வெளியிட எனக்கு உடன்பாடில்லை. அது நடுநிலைக்கதையாகவே இருக்கவேண்டும். இன்னொரு அரசியலுக்கான கருவியாக விடக்கூடாது என்று எண்ணியிருக்கிறேன்.

திசைகளின் நடுவே தொகுப்பிலுள்ள பல கதைகள் ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மிக அண்மையில் ஆங்கிலத்தில் மீண்டும் மொழியாக்கம் செய்யப்பட்ட ‘மாடன் மோட்சம்’ மிகத்தீவிரமான வாசிப்புக்குள்ளாகியது. இக்கதைகளை நான் கடந்துவந்த பாதை என நினைக்கவில்லை. அவை நான் வாழ்ந்த களங்கள். அவற்றை நான் கடந்து வரவில்லை. அங்கு மேலும் மேலும் புதியவற்றை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம்.

இத்தொகுதியை முதலில் வெளியிட்ட அன்னம் பதிப்பகம் மீராவுக்கும் அதற்கு உதவிய பவா செல்லதுரைக்கும் மறுபதிப்புகளை வெளியிட்ட நண்பர்களுக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெ

14.07.2022

குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:35

ஏ.பெரியதம்பிப் பிள்ளை -ஆசிரியர்களும் மாணவர்களும்

வரலாற்றை தோண்டும்போது எப்போதுமே சுவாரசியமான கதைகள் அகப்படும். அதிலொன்று ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் வாழ்க்கை.

சுவாமி விபுலானந்தரின் மாணவராக இருந்த ஏ.பெரியதம்பிப் பிள்ளை மதம் மாறி தீவிர கிறிஸ்தவராகவும் போதகராகவும் ஆனார். போதகர் பயிற்சிக்காக மதுரை பசுமலைக்கு வந்தார். மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் சுவாமி விபுலானந்தரைச் சந்திக்கும் அவர் அந்த உரையாடலுக்குப்பின் மீண்டும் இந்துவானார்.

ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் மாணவர் ஈழத்து பூராடனார் என்னும் க.தாவீது செல்வராசகோபால். ஈழத்து பூராடனார் அதிதீவிர கிறித்தவர். ஏசு புரணம் என்னும் காவியத்தை எழுதியவர். அவர் சொந்தச் செலவில் ஏ.பெரியதம்பிப் பிள்ளைக்கு ஈழத்தில் சிலை வைத்தார். பூராடனார் விபுலானந்தர் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்

விபுலானந்தரை ஏ.பெரியதம்பிப் பிள்ளை சந்தித்தார். செல்வராசகோபால் மதுரையில் இருந்து இந்துவாக மீண்டும் மாறி திரும்பிவந்த ஏ.பெரியதம்பிப் பிள்ளையை சந்தித்தார். இரு சந்திப்புகளை யாராவது கதையாக்கலாம்.

ஏ.பெரியதம்பிப் பிள்ளை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:34

யோக முகாம், கடிதம்

முழுமையான யோகம்

ஐயா,

முதலில் யோகா வகுப்பு அமைத்து தந்ததற்கு மிக்க நன்றி.

சௌந்தர் ராஜன் அவர்கள் புன்னகை, தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் தரும் விதம், ஆசனத்தின்  வேர் வரை சென்று விளக்குவது, பல உபநிஷங்கள் மேற்கோள் காட்டுவது, இவை அனைத்தையும் தாண்டி, நான் முன்பு சந்தித்த குருமார்கள் மேல் இருந்த ஒரு விலக்கம், இவரிடம் இல்லை, அதனால் மனம் திறந்து பேச முடிந்தது . இந்த அணுக்கம் காரணமாக, ஒரு முறை ஒரு நல்ல timing ஜோக்கை அடித்தார், நான் மனம் விட்டு சிரித்து, என் நீண்ட கால நண்பர்களுடன் கையை தட்டி மகிழ்வது போல, நான் சட் என்று அவருடைய கையை தட்டி மகிழ்ந்தேன்.

முன்பு நான் கற்ற யோக முறைகளில் எங்கும் தத்துவத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எங்கள் பயிற்சிக்கு பின், நீண்ட உரையாடலில் இன்னும் விரிவாக, தத்துவம் ஏன் முக்கியம் என்றும், தத்துவத்தின் வெளிப்பாடு தான் யோகம் என்றும் தெரிந்தது.

நான் விஷ்ணுபுரம் நண்பர்களுடன் மூன்று நாள் தங்குவது இதுவே முதல் முறை. அனைவருடனும்  எனக்கு இதுவே முதல் அறிமுகம். பயிற்சிக்கு பின்னான நீண்ட உரையாடலில், ஒருவர் தங்கள் கேள்வி/கருத்தை கூறும் போது, மற்றவர்கள், அதை கூர்ந்து கவனிப்பதும், அது முடிந்த பின்பு, தங்கள் கேள்வி/கருத்தை முன்வைப்பதும், யாரும் முறைப்படுத்தாமல், தன் இயல்பாக அமைந்தது  சிறப்பாக இருந்தது. அந்தியூர்  மணி மற்றும் சௌந்தர் ராஜன் இருவரும், ஜெயமோகன் போலவே, கேள்விகளுக்கு, நீண்ட ஆழமான விளக்கங்கள் அளித்தார்கள். மிக்காரைச் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

நாங்கள் கற்ற ஆசனத்தில், ஒற்றைக்கால் தவம், எனக்கு பல புதிய அனுபவங்களை தந்தது. மற்ற ஆசனம் போல அல்லாமல், செய்யும் போது, மிக சிறு பிழை இருந்தாலும் உடம்பு தடுமாற்றம் கண்டு விடும். உடல், மனம், இரண்டும் 100% சதவீதம் உடன்படாமல் சாத்தியமில்லை. இதை செய்து பிறகு, ஜெயமோகன் கதைகள் இன்னும் நன்கு உள்வாங்க முடிகிறது, இனி ஏக பாதத்தில் நின்ற பிறகு தான் புத்தகங்கள் படிக்க திட்டம்.

மூன்று நாளும், அனைத்தும், நமது இந்திய குரு சிஷ்ய மரபுப்படி நடந்தாலும், குரு எனது முழு உடல் வணக்கத்தை அனுமதிக்கவில்லை.

மூன்று வேளையும்  சுட சுட சுவையான உணவு. அருமையாக சமைத்த அக்கா அவருக்கு உதவிய அவரது தம்பி.  தேநீரை அனைவருக்கும் வாஞ்சையாக அறை தேடி வந்து கொடுத்த சிறுவர்கள், எனக்கு தந்த மாஸ்டர் சாய், குடிக்க மனமில்லையென்றாலும் அவனது அன்பிற்காக குடித்த அந்த தருணம். அனைவருக்கும் அன்பாக பரிமாறிய ஆறுமுகம் அண்ணா, எனக்கு தடுமன் பிடித்த போது, சூடு நீருக்கு, அவரது பிளாஸ்க்கை தந்து உதவினார். நான் பரிமாறும் நேரத்தில் அன்பாக நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்டும் பல அன்பு உள்ளங்கள்.

எப்போது புல் புடுங்க்கும் யோகா என்று மாஸ்டரை விரட்டும் குட்டி (குழந்தை என்றால் அவளுக்கு கோபம் வருகிறது).

அனைத்தும் சிறப்பாக நடக்க, பம்பரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்தியூர் மணி அண்ணா, இடைப்பட்ட நேரத்தில், ஆசனத்தில் சற்று தூக்கம்.

கடந்த ஒரு வருடமாக, குடும்ப சூழ்நிலைகளால் மிகுந்த மன உளைச்சல்கள், அதனால் உடல் உபாதைகள் ஏற்பட்டு, முன்பு கற்ற யோகா பயிற்சியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தவித்த நேரம், இந்த யோக வகுப்பு அமைந்தது. கடைசி நேரம் வரை, சூழ்நிலைகள் காரணமாக, வகுப்புக்கு வர முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.  ஆனால், பல இனிமையான நினைவுகள்.

 

வள்ளிராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:31

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

அன்புள்ள ஜெ,

தமிழகத்தின் மாபெரும் இலக்கிய கொண்டாட்டமாக விஷ்ணுபுரம் விருது விழா அமைந்துள்ளது. கடந்த முறை முதன் முறையாக விழாவில் பங்கேற்றேன். அதே பேரார்வத்துடன் இந்த ஆண்டும் கலந்து கொள்ள முடிவுசெய்தேன். 18 காலை கோவை வந்தவுடனேயே  உங்களை சந்திக்க வேண்டும் என்ற பேரார்வத்தில் இருந்தேன். காலை 7 மணிக்கெல்லாம் மண்டபத்திற்கு வந்தேன் . அங்குள்ள வாயிற்காவலர் நீங்கள் உங்கள் படைபரிவாரத்தோடு தேநீர் நிலையம் சென்றுள்ளதை சொன்னார்.

உங்கள் அருகமர்ந்து உங்கள் உரையாடலை கேட்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. நான் பல்கலைக்கழக பட்டம் பெற்றவன் ஆயினும் கற்றது மிக சொற்பம்.உங்கள் வாசகன் ஆனபின்பு தான் உண்மையான கல்வியே தொடங்கியது போன்று உள்ளது. உங்கள் தளத்தை தினமும் பார்த்து கற்று உங்களின் தொலைதூர கல்வி மாணவனாக ஆனேன். ஆனால் உங்கள் அருகமர்ந்து நேரடி கற்றலில் ஈடுபட அன்று தான் வாய்ப்பு வந்தது. நீங்கள் அப்போது 3 நிமிடங்களில் ஒரு உரையை எப்படி கச்சிதமாக நிகழ்த்துவது என்பது பற்றி கூறிக் கொண்டிருந்தீர்கள். அ.முத்துலிங்கம் அவர்கள்  “ஒரு பல்கலைக்கழகம் செய்வதை  நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று உங்களைப் பற்றி சொன்னது எவ்வளவு உண்மை என்பதை அந்த கணம் புரிந்து கொண்டேன்.

அடுத்தடுத்து அமர்வுகளில் மமங்தாய் மற்றும் சாருவின் அமர்வுகள் மிக அற்புதமாக அமைந்தது. சாருவிடம்  அவர் கியூபாவிலிருந்து வெளிவரும் அரசு இலக்கிய இதழான ” கிராண்மா”( லத்தீன் அமெரிக்க இலக்கியம்) இதழ் குறித்து கேட்க நினைத்தேன்.அவர் அந்த இதழை பெற வேண்டி பிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதியதாகவும் அதன் பின் தொடர்ச்சியாக தனக்கு வருவதாகவும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். ஆதலால் அது குறித்து கேட்க நினைத்தேன்.ஆனால் எல்லோரும் அவருடைய நாவல் குறித்து மிக உள்ளார்ந்து கேட்கும் போது இது சற்று தட்டையாக அமையுமோ என தயங்கி கேட்காமல் விட்டேன்.விழா இடைவேளையில் உங்களின் ” பனிமனிதன்” புத்தகத்தை என் மகள் லக்ஷனாதேவிக்கு வாங்கினேன்.உங்கள் கையொப்பம் இட்டு என்னை பற்றியும் எனது இலக்கிய சேனல் குறித்தும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் கனவிலும் கற்கண்டாக இனிப்பவை. விழா ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டாக ஆகிவருவது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. உங்களுக்கும் ஒருங்கிணைக்கும் அனைத்து விஷ்ணு புரம் விழா குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பேட்டியை நமது தளத்தில் போட்டிருந்தீர்கள்.அந்த பேட்டியில் கடைசி கேள்வியாக உங்கள் பார்வையில் ideal reader யார்? என்ற கேள்விக்கு ” நான் பார்த்த ideal reader என்று “செல்வராஜ்” என என் பெயரைக் குறிப்பிட்டு “திசையெட்டும் தமிழ்” என்ற என் சேனல் மூலம் நான் புத்தக அறிமுகம் செய்வது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.(இது குறித்து அ.முத்துலிங்கம் ஐயா என்னிடம் தொலைபேசி வழி முன்பே  பேசினார்) இவை அனைத்தும் உங்கள் அணுக்க வாசகன் எனும் நிலையில் நான் அடைந்த பேறுகள். மனமார்ந்த நன்றி ஜெ.

அன்புடன்,

செல்வா,

பட்டுக்கோட்டை.

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவில் இரண்டு நாட்களும் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியான தருணம். இந்த முறை உங்களிடம் நீலம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கினேன். என் பெயர் கேட்டு எழுதி தந்தீர்கள். பொதுவாக  kindle-ல் படிக்கலாமா என்று தெளிவு படுத்திக் கொண்டேன். விழாவில் எனக்கு பிடித்தது அதன் நேர கட்டுப்பாடு மற்றும் கச்சிதமான ஒழுங்கமைப்பு. தங்குமிடம் மற்றும் உணவு உபசரிப்பு அருமையாக இருந்தது. ஓர் இடத்தின் அத்தனை பேரும் ஒத்த மனநிலையுடன் இருப்பது மிக அபூர்வம். மிக தீவிரமான இலக்கிய வாசகர் கூட்டம்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தது.

அன்பும் நன்றியும்.

ஸ்ரீதரன்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் முழுநேரமும் அரங்கம் நிறைந்திருந்தது. ஓர் இளம் எழுத்தாளர் தன் முதல் வாசகர் சந்திப்பில் 600 பேர் அமர்ந்து பார்ப்பதை கண்டால் அவருடைய நம்பிக்கை எந்த அளவுக்கு பெருகும் என நினைத்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரிடமும் மிகக்கூர்மையான கேள்விகள் வந்தன. அவர்களின் படைப்புகளைக் கூர்ந்து வாசித்து எழுப்பப்பட்ட கேள்விகள். அவர்கள் இதேபோல இன்னொரு அவையை சந்திக்க இன்னும் நீண்டநாட்களாகும் என்பதுதான் பிரச்சினை.

நான் தமிழகத்தில் நிகழும் பல இலக்கிய அமர்வுகளை பார்த்தவன். அவை எப்படி நிகழுமென தெரியும். ஆழ்ந்த வாசிப்பும், விவாதமும் மிக அரிதானவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. அகரமுதல்வனும் வெண்ணிலாவும் கமலதேவியும் தன்னம்பிக்கையுடன் பேசினர். கார்த்திக் புகழேந்தியும் கார்த்திக் பாலசுப்ரமணியனும் கொஞ்சம் தயங்கி பேசினர். அதெல்லாமே அவர்கலின் இயல்பை ஒட்டியவையாக அழகான உரையடல்களாக அமைந்தன. மூத்த எழுத்தாளர்கள் அத்தனைபேரை அரங்கிலே பார்த்தது இனிய அனுபவம்.

சிவக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:31

“சோழப்பதாகை”யும் அதன் நிகழ்காலமும்

எழுதும் அளவுக்கு மனது இன்னும் ஒருங்கு கூட வில்லை. தஞ்சைக்கு பயணம்  செய்தது குறித்து எழுதுவதை தள்ளிப்போட்டு கொண்டே வந்தேன் ஆயினும் உங்கள் தளத்தின் வீச்சு தெரியும் என்பதால், ஒருங்கமையா மனதுடன் இருப்பினும் எழுதுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னமே தஞ்சை எனது பயணத்திட்டங்களுக்குள்  இருந்தது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர்தான் எவ்வித முன் தயாரிப்புகளும் இன்றி  அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணத்தின் சில வாரங்கள் முன்புதான் குடவாயில் பாலசுப்ரமணியம் குறித்த உங்கள் உரையை கேட்டு இருந்தேன். பயண அனுபவங்களுக்கு பின் உங்கள் உரை குறித்து எழுதலாம். அது ஒரு தெளிவான “நிகழ்கால நிலை“யை முன்னிறுத்தும் என்பதால்.

சூரியன் எழும் அதிகாலையில் அல்லது அந்தி சாயும் வேலைகளிலோ இத்தகைய இடங்களுக்கு செல்வது என் வழக்கம். அந்த பொன்னொளியில் கலை வடிவங்களின் அழகு கூடுவதாக என் எண்ணம். நான் பெரிய கோயிலுக்கு சென்றது பொன்னிற அந்தியில். கோயில் வளாகத்தில் நுழையும் முன்பே அதன் பிரம்மாண்டம் நம்மை கவருகிறது. 

கோயில் வளாக முகப்பில் இருக்கும் இரண்டு கோபுரங்களின் அழகையும், வடிவ நேர்த்தியையும், பிரமாண்டத்தையும்  முழுமையாக அனுபவித்து, அந்த நுழைவாயில்களில் விழவுகள் எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும் என எனது கற்பனை குதிரையை தட்டி விட முயன்று கொண்டிருந்த போது, என்னை அணுகிய ஒருவர், ” ஏய் செருப்பு , அங்க” என்றார். நான் திகைத்து அவரை பார்த்தபோது மீண்டும் “செருப்பெல்லாம் அங்க” என்று நுழைவாயிலின் வலப்பக்கத்தினை சுட்டிக்காட்டினார். நல்ல வேளை, நான் தனியாக வந்தேன். ஒரு வேளை குடும்பத்தோடு வந்திருந்தால்! “ஏய் செருப்புகளெல்லாம் அங்க” என சொல்லி இருந்தால்!!! 

செருப்படிக்கு (அடுப்பு இருக்கும்  இடம் அடுப்படி என்றால் செருப்பு வைக்கும் இடம்) செல்லும் வழியில் பணத்தை பறிக்கும் கும்பல் வரிசையாக. ஒரு நூல் விற்பனையகம், குடவாயில் சுப்பிரமணியம் நூல் ஒன்று கூட இல்லை. ராஜராஜன் குறித்த வரலாற்று நாடக நூல்கள் அதிகம் கண்ணில் பட்டன.பின்னர் செருப்படியில் பத்து பேர் கொண்ட ஓர் குடும்பத்தலைவரை நோக்கி, அங்கி பணிபுரியும் ஒருவர் “போடா மயிரே சில்லறை தர முடியாது” என்றார். 

நான் வாய்த்த கண் வாங்காமல் திட்டியவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் திட்டுவதற்கு வாய் திறந்த அவர், ஏதோ கூச்ச உணர்வு ஏற்பட்டு, என்னை நோக்கி, “டோக்கன் வாங்கிட்டியா?” என்றார். இல்லை என்ற பின், எந்த விளையும் குறிப்பிடப்படாத தாள் ஒன்றை நீட்டி “4 ரூபா குடு” என்றார். நீயே போய் உன் செருப்பை வச்சுட்டு, வெளிய போகும் போது எடுத்துக்கணும் சரியா என்றார். நான் “ம்” என்றேன். “போ, உள்ள போயி பாரு. நல்லா இருக்கும் என்றார்.

ஒரு ஐஸ் கிரீம் கடை. வெண்ணிலா ப்லேவர் மனம் நிரம்பி அடித்தது.  அது தவிர சில நினைவு பரிசுகள் வாங்கும் கடைகள்.

பின்னர் நந்தி மண்டபத்தில், நந்திக்கு தனது புட்டத்தை காட்டியபடியும், தனது நாக்கினை பக்கவாட்டில் வெளித்தொங்க விட்ட கொற்றவை போலவும், தன இரு கண்களை தாங்களே குத்த முழுவது போலவும்  “selfie”க்களை  எடுத்துக்கொண்டு இருந்தனர் என் வயதையொத்த யுவன் யுவதிகள். நான் எங்கள் ஊர் சிவன் கோவிலுக்கு செல்லும்போது, நந்தி முன்னால் நிற்கக்கூடாது என்றும், நந்தியான அவருக்கும் சிவலிங்கத்திற்கு இடையில் அற்பமான மனிதராகிய நாம் சென்று நந்திக்கு தரிசனத்தினை மறைக்கக்கூடாது என்றும் எனது பாட்டி சொல்லித்தந்ததை எண்ணி சிரிக்காமலில்லை.”2K kids” பொன்னியின் செல்வன் பாடல்களைக்கொண்டும், 90s Kids ஆயிரத்தில் ஒருவன் பாடல்களைக்கொண்டு REELSம் எனும் காணொளிகளை பதிவு செய்துகொண்டிருந்தனர்.

நடைபாதைகளை தவிர அனைத்து இடங்களிலிலும் மக்கள். புல்வெளிகளில் படுத்துக்கொண்டும், சிற்பங்களை தழுவிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வததில் மும்முரமாக திரிந்தலைத்தனர். ஒப்பீட்டளவில் வட இந்தியர்கள் தேவலாம் ராகம். ஒழுங்கின்றி ஓடிய தனது குழந்தையை “ச்சுப்! மந்திர் ஹே! க்யா கர் ரஹா ஹே து” என அரட்டினார். மஹாராஷ்டிரத்தை  சேர்த்த ஒரு குடும்பம் அவர்களின் பாரம்பரிய உடை அனைத்து கோபுரத்தை தெளிவாக காணும் தொலைவில் அமர்ந்து கொண்டு, எதுவும் பேசாமல் கோபுரத்தையே நோக்கி கொண்டு இருந்தனர். 

முழுமையாக தன்னை மறைத்துக்கொண்டு கண்கள் மட்டும் வெளித்தெரிய புர்கா அணிந்த பெண்மணி, கோயில் குறித்து தன் குழந்தைக்கு சொல்லிக்கொண்டிருந்தார். நான் தனியனாக அமர்ந்து கோயில் குறித்து நான் அறிதவற்றையும், உங்கள் உரையையும் நினைவில் இருந்து மீது கொண்டு இருந்தேன்.

நிகழ்காலம்

கோவில் விற்பனைக்கான இடம் அல்ல. அதுவும் உணவு பண்டங்கள். மிகக்கறாராக இருக்க வேண்டிய தளம். ஐஸ் கிரீம் கடையில் இருந்து உருவாகும்  ஐஸ் கிரீம் குப்பைகளும் அருகே, கோயில் வளாகத்திற்கு உள்ளேயே.இது மாபெரும் இழிவு. கோயில் வளாகத்திற்குள் உணவுப்பண்டங்கள். இது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். பிரசாதங்கள் கூட தவிர்க்கப்படலாம். அங்கு வருவோர் அதற்காக வருவதில்லை. கோவிலை முழுசுற்று சுற்றி முடிக்கும் வேளையில், அறநிலையத்துறையும் வியாபாரம் செய்து கொண்டு இருந்தது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் அம்மனுக்கு சாற்றப்பட்ட புடவைகளை “சகாய” விலையில் ஒலிபெருக்கி மூலம் கூவி விற்றுக் கொண்டிருந்தனர். இழி நிலையின் உச்சம். 

தஞ்சை பெரிய கோயிலின் மாதிரி ஒன்று கழிப்பறைக்கு அருகில் மிகவும் வருந்தத்தக்க நிலையில் கேட்பாரற்று கிடந்தது. இது அவலம். அவலத்தின் உச்சம். நம் நாட்டின் கலைஉச்சங்களுள் ஒன்றின் மாதிரி, கழிவறைக்கு அருகில், புழுதிக்கூட்டின் மத்தியில் இருக்கிறது. அதுவும் ஒரு நாளில், பல நாடுகளில் இருந்து வரும் பல்லாயிரம் பேர் கூடும் இடத்தில். வெளிநாட்டினர் எப்போதும் ஏளனம் செய்ய நமே வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது போல் ஆகாதா?  மேலும், இச்செயல்பாடு நம் கலையின் உருவக மதிப்பை நாமே நசுக்குவது. இது உடனடியாக  தக்க இடத்தில் காட்சிக்கு (பேருந்து நிலையம் , சாலை சந்திப்புகள். ரயில் நிலையங்கள்) வைக்கப்பட வேண்டும்.

புகைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று எல்லை மீறும் பொது மக்கள், சிலைகளில் தொங்கிக்கொண்டு, குழந்தைகளை அதன் மீது அமர வைத்தும் இழிவு செய்யும் அவலம். அரசாங்கமே புகைப்படம் எடுப்பதற்கென, “vantage point” களை கண்டறிந்து கோவிலின் அமைப்பிலோ அல்லது கட்டிட கலையிலோ “கை”  வைக்காமல், புகைப்படங்கள் எடுக்க வசதிகள் ஏற்படுத்தித் தரலாம்.

குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய நூல்கள் விற்பனைக்கு வைத்தல். அவர் படைப்புக்களை ஒப்பந்த அடிப்படையில் தயார் நிறுவனங்கள் மூலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விற்பனை செய்யலாம். அங்கு கூடும் வெளிநாட்டோர் மற்றும் தமிழ் தெரியாத நம் நாட்டவர்க்கும் சேர்த்து நம் பெருமைகளை எடுத்துச் சொல்ல.  அரசாங்கம் மொழி பெயர்த்தால்   கண்டிப்பாக “மொழி ” பெயர்க்கப்பட்டு விடும் அவலம் உள்ளது. சிறந்த உதாரணம்: சாஹித்ய அகாடமி மொழிபெயர்ப்புகள்.

இன்னும் சில சொல்ல முடியாத நிகழ்வுகளும் உள்ளன. அலட்சிய போக்கு மட்டுமே இதன் வேர். ஏதேனும் ஒரு IAS அதிகாரி நினைத்தால் எளிய விதிகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வர இயலும் தவறுகளே. இத்தவறுகளை சில காலத்திற்கு தொடர் கண்காணிப்பு மூலமும், எளிய அறிவிப்புகள் மூலமுமே வழிக்கு கொண்டு வரலாம். உடனடியாக இல்லாவிடிலும், நீண்ட கால அளவில் இவை பயன்  தரும்.  விதிகளை மதிக்கும் எதிர்கால சந்ததிக்காக நமது அதிகாரிகள் இதனை முன்னெடுக்கலாம்.

பயண முடிவில் பாண்டிய நாட்டின் வம்சக்கொடியான ரீமாசென், ஒளிந்து வாழும் சோழ அரசனை பார்த்து, 

“இது நின்ன சோழ நாட?”

“நின்ன சோழ மக்களா?”

என சொல்லும் வரிகள் நினைவில் எழுந்தன. 

லெட்சுமி நாராயணன்
கீழநத்தம்
திருநெல்வேலி 

அன்புள்ள லெட்சுமிநாராயணன்,

தமிழகத்தில் ‘சோழர்களை இழிவுசெய்துவிட்டார்கள்’ என எதற்கெடுத்தாலும் கொதிக்கும் பலர் உள்ளனர். அரசியலாளர்கள், யூடியூப்வாயர்கள். ஆனால் உண்மையில் நம்மை நாமே இழிவுசெய்துகொண்டே இருக்கிறோம். அதைப்பற்றி எவருக்கும் அக்கறை இல்லை. எந்த அரசியலாளரும் பேசுவதில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2022 10:31

December 28, 2022

அரூ சிறுகதைப் போட்டி

அன்புள்ள வாசகர்களுக்கு

நான்காவது அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியைத் தற்போது அறிவித்துள்ளோம்.

போட்டி விபரங்கள்: https://aroo.space/contest-2022/

இதுவரை நடத்தப்பட்ட மூன்று போட்டிகளில் தேர்வான கதைகளும் நடுவரின் மதிப்புரையுடன் மூன்று அச்சு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. தமிழில் அறிவியல் புனைவு எழுத ஒரு சிறு உந்துதல் தருவதே இப்போட்டியின் நோக்கம்.

நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவுக்கு எங்களின் அன்பும் நன்றியும்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,

அன்புடன்,
அரூ நண்பர்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 20:17

முழுமையான யோகம்

அன்புள்ள ஜெ,

20 வருடங்கள் முன்பு வேதாத்ரி மகரிஷி அவர்களின் காயகல்ப பயிற்சியில் கலந்து கொண்டு சில நாட்கள்/வாரங்கள் அவற்றை செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.  நான் முறையாக உடல் சம்பந்தபட்ட ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றது அதுவே முதலும் கடைசியுமாகும்.

இயல்பிலே உடற்சிக்கலுக்கு அதிகமாக ஆட்படாமல்,  ஒரளவு உணவு கட்டுப்பாடு, அவ்வப்போது விளையாட்டுகள், உடற்பயிற்சி கூடம் செல்லுதல் மற்றும் இளமை காலம் வழியாக இவ்வளவு காலம் தப்பித்து வந்தேன்.  இயற்கை மருத்துவமுறை பின்பற்ற ஆரம்பித்தபோது, அதற்கு உடற்பயிற்சி தேவையில்லை என முட்டாள் தனமாக புரிந்து கொண்டு, நடைபயிற்சி செய்வதையும் நிறுத்தி விட்டேன்.  6 வருடங்களுக்கு முன்னால் 20 வருட தகவல் தொழில்நுட்பத்துறையில் உட்கார்ந்து பணியாற்றியதின் பரிசாக முதுகு வலி வந்து சேர்ந்தது. கடுமையான அளவுக்கு இல்லாததால் சில உடற்பயிற்சிகளை செய்து சமாளித்து மேலும் சில வருடங்கள் தள்ளி வந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் 25 வருட வேலைக்கு விடை கொடுத்தவுடன், உடலுக்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்து மலையேற்றம், உடற்பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியும் முதுகு பிரச்சினை தீரவில்லை, இந்த நேரத்தில் உங்களுடனான டெக்கான் ட்ராப் பயணத்தில் இது பற்றி பேசும் பொழுது எப்படி அமர வேண்டும், சத்யானந்த யோக மையம் நடத்தும் செளந்தர் (குருஜி) அவர்கள் மூலம் உங்கள் முதுகு வலி பிரச்சினை தீர்ந்ததையும், என்னையும் அவரிடம் செல்ல பரிந்துரைத்ததிலிருந்து    எப்படியாவது அவரை சந்தித்து ஆலோசனை கேட்க வேண்டும் என்று முயன்றும் ஒரு வருடமாக தள்ளி போனது. மனைவிக்கும் பெண்களுக்கான உடல் சிக்கலினால் சிரமங்களில் இருந்தார்.

தங்களுடைய முகாம் பற்றிய அறிவுப்பு வந்ததுமே, உடனே மனைவிக்கும் சேர்த்து முன்பதிவு செய்தேன். அப்படியும் சோதனையாக மழையினால் சில மாதங்கள் தள்ளி போயிற்று.  கடைசியாக சென்ற வாரம் மூன்று நாட்கள் 25 சக நண்பர்களுடன் முகாமில் பங்கேற்று திரும்பிய பிறகு் மிகச் சிறப்பாக உண்ர்கிறேன்.

வாட்ஸப் குழுவில் சேர்ந்தபிறகு பார்த்தால் பெரும்பாலனவர்கள் எனக்கு புதியவர்கள், விஷ்ணுபுரம் நண்பர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்(!!) என்பதால் ஒரு வேளை எல்லோரும் நம்மைப்போல மத்தியவயது தாண்டியவர்கள் போலும் என்று நினைத்து புன்னகைத்து கொண்டேன்.  வியாழன் இரவே சென்று சேர்ந்தோம், குருஜியும் அன்றே வந்தார்,

குருஜி மூன்று நாளும் தன்னை முன்னிறுத்தாமல் அவருடைய குரு பரம்பரை மற்றும் மரபார்ந்த யோகாவை மட்டுமே பேசினார்.  நண்பர்களுடைய வற்புறுத்தலின் பேரில் மட்டுமே தன்னை பற்றி சில நிமிடங்கள் பகிர்ந்து கொண்டார். இயல்பாக எல்லோருடனும் பழகி அவர்களுடைய கேள்விகளுக்கு பொறுமையாகவும் நகைச்சுவையுடனும் பதிலளித்தார்.

அறிமுக வகுப்பில் மரபு சார்ந்த யோகாவிற்கும் மற்ற யோக பயிற்சிகளூக்கும் உள்ள வித்தியாசத்தை விரிவாக அறிமுகம் செய்தார். ஏன் நாமாக இணையத்தில் தேடி செய்யும் மற்ற யோக பயிற்சிகள் பலனிலப்பதில்லை அல்லது சிக்கலை அதிகப்படுத்துகின்றன, பயிற்சியாளருக்கு ஏற்படும் குழப்பங்களையும் சிக்கலையும் கேட்டு தெளிவு பெற ஆசிரியர் ஒருவர் இல்லாததால் ஏற்படும் சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்.  சில உடல், மன சிக்கல்களுக்கு மட்டும் யோகாவை பயன்படுத்துவதைவிட ஒரு முழுமையான பயிற்சி எவ்வாறு  உடல், மனம், ஆற்றல் ஆகியவற்றை சீராக வைத்து இனி வேறு சிக்கல்கள் வராமல் தடுப்பதில் பங்காற்றுகிறது என்பதை விளக்கினார்.

ஆயுர்வேத மருத்துவமுறையும் (வாதம், பித்தம், கபம்) யோக மரபும் (உடல், மனம், ஆற்றல்) எப்படி ஒன்றை ஒன்று விவாதித்து நிரப்பிக்கொண்டன என்பதையும் பல தரவுகளுடன் விவரித்தார். ஆயுர்வேதம் வயிற்றையும், யோகம் முதுகெலும்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது கூடுதல் தகவல்.  யோகத்திற்கும் சாங்கிய தரிசனத்திற்கும் உள்ள உறவு, பதஞ்சலி, திருமூலர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் பங்கு, வேதகாலதிருந்து சுமார் 6000 வருடமாக அறுபடாமல் இன்று வரை தொடரும் மரபு என்று வரலாறு, மரபு சார்ந்த பற்றி ஒரு ஒரு விரிவான வரைபடத்தை அளித்தார்.  உங்களுடைய  தத்துவ வகுப்பில் கலந்து கொண்டதனால் மேலும் தொடர்பு படுத்தி புரிந்து கொள்ள முடிந்தது. ராஜ, கர்ம, ஞான, பக்தி யோகங்களை ஒரு வகுப்பில் விரிவாக விளக்கி இந்த பயிற்சி வகுப்பு ராஜ யோகம், அதற்கு கீழே ஹட யோக கிளையில் சிறு பகுதிதான் என்றார்.

ஆசனப்பயிற்சி மட்டும் செய்ய வந்திருப்பதாக நினைத்து வந்தவர்களுக்கு இந்த வரைபடம்  ஒரு ஆச்சர்யமாக இருந்திருக்கும்.

9 ஆசனப் பயிற்சிகளையும்,  3 மூச்சுப் பயிற்சிகளையும், 2 தியானப்பயிற்சி  முறைகளையும் 3 நாட்களில் அறிமுகம் செய்து, முந்தைய வகுப்பில் செய்த பயிற்சிகளை மறுபடியும் சுருக்கமாக கூறி கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்தார். மூச்சு மற்றும் தியான பயிற்சிகள் விபாசனா போன்ற தியான வகுப்பு செல்வதற்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும் என்றார்.

இறுதியாக, நண்பர்கள் எல்லோரையும் தினமும் பயிற்சி செய்ய வலியுறுத்தி, தினமும் குறைந்தது 30 நிமிடம்,  90 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை தொடர்ந்து செய்தால் ஒருவருடைய உடல், மனம், ஆற்றல் சீராக இருந்து முழுமையான/நிறைவான வாழ்க்கை வாழலாம், அடுத்த நிலை செல்வதற்கான் பாதை தானாகவே  திறக்கும் மற்றும் தொடர்ந்து வருகிற வருடங்களில் அடுத்த நிலைக்கான பயிற்சி்யில் சந்திக்கலாம் என்று முடித்தார்.

நம்முடைய வழமை போலவே, வகுப்பில் கற்றது மட்டுமல்லாமல் பயிற்சி இடைவேளை, உணவு கூடத்தில் என்று பார்த்த இடத்தில் எல்லாம் கேட்ட நண்பர்களின் கேள்விகளுக்கு குருஜியின் பதில், விவாதங்கள் வழியாக கற்றது மேலும் பல.

வீடு திருப்பியபிறகு குருஜியின் இணையதளத்தின் மூலமும், அவருடைய குரு மரபு பற்றி மேலும் தெரிந்து கொண்டபிறகு நான் காத்திருந்தது எல்லாம் இந்த சரியான முறையை கற்பதற்க்காகவும் இந்த பந்தம் இந்த முகாமுடன் முடியாமல் என்னுடைய ஆன்மீக பயணத்திற்கு உதவியாக தொடரும் என்று உள்ளுனர்வு சொல்கிறது.

மூன்று நாட்கள் இதமான மலைவாசஸ்தலத்தில் மரபு சார்ந்த யோகப்பயிற்சி பெற்றது என் பேறு, மற்ற நண்பர்களுக்கும் அவ்வாறே என நினைக்கிறேன். என்னை போல நம்முடய நண்பர்களும் இது போன்ற முகாமில் அடிக்கடி கலந்து கொண்டு பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கும், குருஜிக்கும் மனமார்ந்த வணக்கம்,  சிறப்பாக நிர்வகித்த அந்தியூர் மணிக்கு நன்றி.

 

அன்புடன்,

திரு

திருவண்ணாமலை

 

https://www.jeyamohan.in/173872/

https://www.jeyamohan.in/156241/

 

அன்புள்ள திரு,

நம் நண்பர்கள், குறிப்பாக இளைஞர்கள், அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மை. ஏனென்றால் நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதாவது நோய் வந்தால் மட்டுமே ஒரு சிகிழ்ச்சையாக யோகப்பயிற்சிகளைச் செய்யவேண்டும் என நினைக்கிறோம். அது ஒரு மருத்துவமுறை அல்ல, ஒரு வாழ்க்கைமுறை. அந்த வாழ்க்கைமுறையை அதற்குரிய தத்துவப்பின்னணியுடன், அறிவார்ந்த வாழ்க்கை விளக்கங்களுடன் அறிமுகம் செய்ய இன்றுள்ள மிகச்சிலரில் ஒருவர் குருஜி சௌந்தர்.

யோகாசன பயிற்சிகளை ஓரளவு தெரிந்த எவரும் அளிக்கமுடியும். புத்தகம் வாங்கிக்கூட செய்ய முடியும். ஆனால் அதன் தத்துவம் அறிந்து, அதைச்சொல்லித்தரும் ஓர் ஆளுமை- ஒரு குரு – இல்லாமல் கற்பது பெரும்பாலும் நேரவிரயம். அந்த ஆசிரியர் கற்பவரின் வாழ்க்கைப்பிரச்சினை, உளச்சிக்கல்கள் உட்பட எல்லாவற்றுக்கும் ஒரு வழிகாட்டும் தகுதிகொண்டிருக்கவேண்டும்.

ஆகவேதான் சௌந்தர் மேலும் அதிகமான பேருக்கு முறையாகச் சென்று சேரவேண்டுமென விரும்புகிறேன். அதேசமயம் இன்று நிகழும் யோக வகுப்புகள் போல ‘நேரம்கிடைத்தால்’ கொஞ்சம் கற்பது, வேறுவேலை செய்தபடியே ஸூம் செயலியில் கவனிப்பது போன்றவற்றைச் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

முறையாக, அதற்குரிய சூழலுடன், முழுமையான கவனக்குவிப்புடன் அதை அறிமுகம் செய்யவேண்டும். அதைக் கற்பவர்கள் அதற்காக தங்கள் நேரம். பணம் ஆகியவற்றில் சிறிது ஒதுக்குபவர்களாகவும், அதன்பொருட்டு சற்று முயற்சி எடுப்பவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்களுக்குக் கற்பிப்பதே பயனுள்ளது.

இந்த யோகப்பயிற்சி முகாம்களை மேலும் முன்னெடுக்கவேண்டுமென்னும் எண்ணம் உண்டு. கால்ப்போக்கில்தான் இந்த முயற்சியின் முக்கியத்துவம், இது எத்தனை அரியது என்பது, நம்மவருக்கு புரியும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 10:35

வடதிருமுல்லைவாயில் புராணம்

வடதிருமுல்லை வாயில் சென்னைக்கு அருகே ஆவடி அருகே உள்ள தலம். இங்கே மாசிலாமணீஸ்வரர் ஆலயம் உள்ளது. பாடல்பெற்ற தலம். இதன் தலவரலாற்றை திருமயிலை சண்முகம் பிள்ளை எழுதியிருக்கிறார். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட தலபுராணங்களில் மிகக்குறைவானவையே கிடைக்கின்றன. அவற்றிலொன்று இது

வடதிருமுல்லைவாயில் புராணம்

தலபுராணங்கள் எதன்பொருட்டு?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 10:34

விஷ்ணுபுரம் விழா 2022 கடிதங்கள்

அன்பு ஜெ,

வணக்கம்.நலம் விழைகிறேன்.

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா தான் நான் கலந்து கொண்ட முதல் இலக்கியநிகழ்வு. என் முதல் மேடையும் கூட. முதல் நூலான சக்யை வெளியீட்டிற்கு மட்டுமே சென்னைக்கு சென்றேன்.

முதல் நாள் காலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்கொள்வதே எனக்கு சவாலாக இருந்தது. என்னுடன் வந்த தங்கை ‘திருதிருன்னு முழிக்காத’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வழக்கம் போல எனக்கு நிறைய கவனக்குறைவுகள் இருந்தன. குறிப்பாக தேவதேவன் அய்யா தன் அலைபேசியிலிருந்து எனக்கு மிஸ்டு கால் தந்து வாட்ஸ்ஆப்பை திறக்கச்சொன்னார். அவரே சரியாக செய்தப்பின்னும் நான் தடுமாறிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர் சிவா அருகில் இருந்து என்ன பண்றீங்க? என்று சிரித்தார். அவரும் அவர் மனைவியும் எங்களுடனே இருந்தார்கள். இந்த மாதிரியான முதல் கூட்டத்தில் நட்பின் துணை மறக்க முடியாத வாழ்நாள் நினைவாக இருக்கும்.

என்னை நெறிப்படுத்திய ரம்யா பழகுவதற்கு எளியவர். எழுத்தாளர் நவீனை தான் முதன்முதலாக சந்தித்தேன். என்னை அழைத்து செல்ல மனைவியுடன் வந்திருந்தார். இவர்களின் துணை இந்த விழாவை எளிதாக கையாள உதவியது.

இந்த விழாவில் நான் முதன்முதலாக சந்தித்த மூத்த எழுத்தாளர்களின் வரிசை நீண்டது. அவர்களுக்கு அவர்களாக வந்து பேசுவதில் எந்தத் தடையும் இல்லை. இது இலக்கியம் அளிக்கும் மனவிசாலம். அவர்கள் நம் இயல்பை எளிதாக புரிந்து கொள்கிறார்கள்.  வாசகர்களும் இனிமையானவர்கள். இளம்வாசகி காயத்ரி எனக்கு ஒரு பேனாவை அன்புடனும் தயக்கத்துடனும் அளித்தார். எழுதுபவர்களுக்கு பேனா அளிப்பது என்பது அழகான அன்புப்பகிர்தல்.

என்னால் தன்னியல்பாக கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியும் என்று நானே தெரிந்து கொண்டேன். இதுவரை எந்த மேடையிலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசியதில்லை. முதல் புத்தக வெளியீடு முடிந்து திரும்பும் போது, சென்னையின் இரவில் மேடையில் சரியாக பேசமுடியாததையே நினைத்துக்கொண்டிருந்தேன். முதல்புத்தக வெளியீட்டின் மகிழ்வு இல்லாமல் போயிருந்தது. அப்போதும் தங்கை ஐந்து நிமிடம் என்றாலும் சரியாகத்தான் பேசினாய் என்றாள்.

விஷ்ணுபுரம் விழா முடிந்து ஜனசதாப்தியில் திரும்பும் போது மனம் அமைதியாக கடந்து செல்லும் பசுமையை,காவிரியை பார்த்துக்கொண்டிருந்தது. நான் விரும்புவது இந்த மன சஞ்சலமின்மையை தான். ஒரு சிட்டுக்குருவி ஒரு மரக்கிளையில் தன் இயல்பை மறந்து ‘சிவனே’ என்று அமர்ந்திருப்பதை போன்றது. எழுதத்தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் நான் அகஅளவில் வெகுவாக மாறியிருக்கிறேன் என்பதை இந்த விழா எனக்கே சொல்லியிருக்கிறது. எனக்கு இலக்கியம் எத்தனையோ விஷயங்களை அளித்திருக்கிறது. என் இயல்பு தெரிந்து இலக்கியத்தை நம்பியே அய்யா புத்தகங்களை என் கைகளில் தந்திருக்கிறார்.

நான் வெளியில் செல்வது அரிது. ஒரு சொல்லை மீற முடியாமல்தான் விழாவிற்கு வந்தேன். அந்த சொல்லிற்கு எப்போதும் என் அன்பு.

அன்புடன்,

கமலதேவி

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழாவுக்கு 2012ல் வந்திருந்தேன். இப்போது பத்தாண்டுகளுக்குப் பிறகு வருகிறேன். இப்போதைய விழா மிகச்சிறப்பாக வளர்ந்துவிட்டிருக்கிறது. மிகமிக நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு இலக்கியத் திருவிழா மாதிரியே இருக்கிறது. இன்று தமிழிலக்கியத்திற்கு இடமுள்ள ஒரே இலக்கியத் திருவிழா இதுதான் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் நடந்த ஆங்கில இலக்கிய விழாவனா ஹிந்து லிட் ஃபெஸ்டும் நின்றுவிட்டது. ஸ்பான்ஸர்கள் இல்லாமல்.

ஆனால் 2012 ல் இருந்த அதே ஸ்பிரிட் இப்போதும் உள்ளது. அன்றும் ஊக்கமாக இளைஞர்கள் அலைந்துகொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் இலக்கியப்பேச்சுகளாக இருந்தது. இன்றைக்கும் அதைத்தான் பார்க்கிறேன். அதே வேகம். மெக்கானிக்கலாக எதுவுமே இல்லை. ஏராளமான துடிப்பன இளைஞர்கள். புதிய புதிய எழுத்தாளர்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், தேவிபாரதி, சு.வேணுகோபால் போன்ற சீனியர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டே இருந்தார்கள். மிகச்சிறப்பான நிகழ்வு. என் வாழ்த்துக்கள்

எஸ்.தேவநாராயணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 10:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.