Jeyamohan's Blog, page 654

December 28, 2022

தர்பாரி ராகம்- வெங்கி

ஸ்ரீலால் சுக்ல

அன்பின் ஜெ,

வணக்கங்களும் அன்பும்.

“சிவபால் கஞ்ச்”சின் தர்பாரில் சில நாட்கள் புன்னகையும், சிரிப்புமாய் கழிந்தன.

“என்னங்க பாவா சிரிச்சிட்டேயிருக்கீங்க?” – வாசித்துக் கொண்டிருந்த நான், அம்முவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். வாசிப்பின் நேரம் முழுவதும் என்னை அறியாமல், முகம் சிரிப்பில், புன்னைகையில் விரிந்த வண்ணமே இருந்திருக்கிறது. அம்முவிடம் “நீ இந்த நாவல் கண்டிப்பா படிக்கணும் அம்மு” என்றும் அச்சிரிப்பு மாறாமல்தான் சொன்னேன். “தர்பாரி ராகம்” உண்மையிலேயே ஒரு அட்டகாசமான “கேலிக்கூத்து” நாவல்! (நவீன “பிரஹசனம்” வகைமை என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்). ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு வரியையும் புன்னகையில்லாமல் கடக்க முடியவில்லை. சுவாரஸ்யமான வாசிப்பனுபவம்!. அலுவலகத்தில், கிறிஸ்துமஸ் ஏற்றுமதிகளால் பின்னிரவு வரை நீடிக்கும் பணிச்சுமை நேரங்களில், கிடைக்கும் தேநீர் இடைவெளிகளில் கணினி முன் பத்திருபது பக்கங்கள் வாசிக்கலாம் என உட்காரும்போது வாய்விட்டு சிரித்துவிடாமல் இருக்க மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டி வந்தது. பத்ம பூஷன் ஸ்ரீலால் சுக்லாவின் “தர்பாரி ராகம்” என்னை மிகவும் ஈர்த்துக்கொண்டது.

*

நகரில் வசிக்கும் ரங்கநாத், சரித்திரப் பாடத்தில் எம்.ஏ. பட்டதாரி. இப்போது ஆய்வு மாணவன். படித்துப் படித்துக் களைத்து உடல்நலம் குன்றவே, சிகிச்சையும், ஓய்வும் கொண்டு உடம்பைத் தேற்றுவதற்காக, “சிவபால் கஞ்ச்” கிராமத்தில் குடியிருக்கும் தன் வைத்தியர் மாமா வீட்டிற்கு வருகிறான். வைத்தியர் மஹாராஜ் ஊரில் பெரும்புள்ளி. பல பதவிகளை வகிப்பவர். ஊரின் ஆயுர்வேத வைத்தியசாலையையும், கூட்டுறவு சங்கத்தையும், சங்காமல் வித்யாலத்தையும் துவங்கியவர் அவர்தான். சங்காமல் வித்யாலயம் இப்போது இன்டர்மீடியட் காலேஜாக வளர்ந்திருக்கிறது. வித்யாலயத்தின் மேலாளர், கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர், ஊர்த் தலைவர் அனைத்தும் வைத்தியர்தான். சனீஸ்வரன் என்ற மங்கள் பிரசாத், வைத்தியரின் உதவி ஆள் (பங்கி பானம் தயாரிப்பதில் நிபுணன்).

வைத்தியருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ரூப்பனுக்கு 18 வயது. பள்ளியில் கடந்த மூன்று வருடங்களாக பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறான். வித்யாலய மாணவர் அமைப்பின் தலைவன். பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் கூட அவனிடம் மரியாதை கொண்டிருக்கிறார்கள் (வைத்தியரின் மகன் என்பதால்). இன்னொருவன் பயில்வான் பத்ரி. வயது 16 இருக்கலாம். கிராமத்தின் உடற்பயிற்சிக் கூடத்தில் வஸ்தாதுகளை உருவாக்குபவன். கிராமத்தில் நடக்கும் அடிதடிகளுக்கு அவனும், அவன் சீடர்களும்தான் உதவச் செல்வார்கள்.

துணிக்கடை வைத்திருக்கும், லேவாதேவி தொழில் செய்யும், கல்லூரி நிர்வாகக் கமிட்டியின் உப தலைவர் கயாதீனுக்கு ஒரு மகள். பெயர் பேலா. இருபது வயது அழகி. பேலாவை ரூப்பன் ஒருதலையாக காதலிக்கிறான். ஆனால் பேலாவும், பத்ரியும் காதலிக்கிறார்கள்.

கல்லூரியில் இரண்டு கட்சி உண்டு. துணை முதல்வராக ஆசைப்படும் சரித்திர ஆசிரியர் கன்னா கட்சி. இன்னொன்று முதல்வரின் கட்சி. முதல்வர் வைத்தியரின் ஆதரவு பெற்றவர். இரண்டு தரப்பும் அடிக்கடி மோதிக்கொள்கிறது. கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வருகிறது. வைத்தியர் தன் உதவியாளன் சனீஸ்வரனை ஜெயிக்க வைக்கிறார். பல ஆண்டுகள் நடைபெறாமலிருந்த கல்லூரி நிர்வாகக் குழுவைக் கூட்டி (கன்னா தரப்பின் அழுத்தத்தால்), மேலாளர் பதவிக்கு தேர்தலை அறிவித்து, “பிஸ்டல் மிரட்டல்” வழியைப் பயன்படுத்தி மீண்டும் கல்லூரியின் மேலாளராகிறார் வைத்தியர். கூட்டுறவு  சங்கத்தின் தானியக்கிடங்கில் இரண்டு வண்டி கோதுமை மூட்டைகளை பகலிலேயே எடுத்துக்கொண்டு தலைமறைவாகிறார் சங்கத்தின் சூப்பர்வைசர் ராம் ஸ்வரூப். அவ்விஷயம் அரசியல் மட்டத்தில் பெரிதாகி, வைத்தியர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைமை வருகிறது. அடுத்து அப்பதவிக்கு நடக்கும் தேர்தலில் தன் மகன் பயில்வான் பத்ரியை ஜெயிக்க வைக்கிறார். மாஸ்டர் கன்னாவும், அவர் தரப்பும் கல்லூரியிலிருந்து துரத்தப்படுகிறார்கள் (அல்லது அழுத்தம் கொடுக்கப்பட்டு ராஜினாமா செய்யவைக்கப் படுகிறார்கள்).

*

முதல் அத்தியாயத்தின் முதல் காட்சியில் தொடங்கும் அங்கதத்தின் அட்டகாசம் நாவலின் இறுதிவரை தொடர்கிறது.

ரங்கநாத்திற்கு சிவபால் கஞ்ச் செல்ல வேண்டும்; ரயிலைத் தவற விடுகிறான். இன்று ரயில் அவனை ஏமாற்றிவிட்டது. தினமும்போல லோக்கல் பாசஞ்சர் வண்டி இரண்டு மணி நேரம் தாமதித்து வரும் என நினைத்தே அவன் வீட்டிலிருந்து புறப்பட்டான். ஆனால் அது ஒன்னரை மணிநேரம் மட்டுமே தாமதித்து வந்துவிட்டுப் போய்விட்டது.

சாலை வழியாகச் செல்லலாம் என்று முடிவெடுத்து சாலைக்கு வருகிறான். பெட்ரோல் பங்கின் எதிர்புரம் வரிசையாய் கடைகள். பெரும்பாலான கடைகளில் மக்கள் விரும்பிப் பருகும் பானம் இருந்தது. அங்கு விரவி நின்ற தூசி, எண்ணெய்ச் சிக்கு, பலமுறை உபயோகித்த தேயிலைத் தூள், கொதிக்கின்ற தண்ணீர் ஆகியவற்றின் உதவிகொண்டு தயாரித்த அவ்வினிய பானம் தாராளமாய்க் கிடைத்தது. இரவு, பகல், காற்று, மழை, ஈ, கொசு போன்றவற்றின் இடைவிடாத தாக்குதல்களைத் தீரத்துடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் இனிப்புப் பலகாரங்களும் அங்கே இருந்தன.

டிரக் ஒன்று சாலையில் நின்று கொண்டிருக்கிறது. டிரைவரும், கிளீனரும் ஒரு கடையின் எதிரே நின்று தேநீர் பருகிக்கொண்டிருக்கின்றனர். டிரைவர் கண்ணால் கடைக்காரியையும் பருகிக் கொண்டிருந்தான். சிவபால் கஞ்ச் போகுமா என்று கேட்டு ரங்கநாத் டிரக்கில் ஏறிக்கொள்கிறான். கடாபுடா ஓசையுடன் டிரக் புறப்பட்டது. நகரத்தின் கோணல் மாணலான வளைவுகளிலிருந்து விடுபட்டதும் சற்றுத் தூரத்தில் நேரான, சீரான, சந்தடியற்ற பாதை வந்துவிட்டது. இங்கேதான் முதல்முறையாக டிரைவர் டாப் கியரைப் பிரயோகித்தான். ஆனால் அது நழுவி நழுவி நியூட்ரலில் விழலாயிற்று. நூறு கஜ தூரம் செல்வதற்குள் கியர் நழுவிவிடும். ஆக்ஸிலேட்டரை மிதித்ததும் டிரக்கின் கர்புர் ஓசை அதிகரித்து வேகம் குறைந்துவிடும். இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த ரங்கநாத்டிரைவர் சார்! உங்க கியர் நம்ம நாட்டு அரசாங்கம் போல்தான் இருக்கிறது. எத்தனை முறை டாப்கியரில் போட்டாலும் அது இரண்டு கஜ தூரம் சென்றதுமே நழுவி தன் பழைய இருப்பிடத்திற்கு வந்துவிடுகிறதேஎன்கிறான். டிரைவர் ரங்கநாத்திடம் “ஐயா, இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்க, ரங்கநாத் அவனிடம் “சும்மாதான், வரலாற்றில் எம்.. முடித்துவிட்டு திண்ணையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கிலீஸிலே இதைத்தான்ரிசர்ச்என்று சொல்லுகிறார்கள்” என்கிறான்.

பின்னாலிருந்து செக்கிங்கிற்கு வரும் ஸ்டேஷன் வாகன் ஹார்ன் அடித்து டிரக்கை நிறுத்தச் சொல்கிறது. ஸ்டேஷன் வாகனிலிருந்து அதிகாரி போன்ற தோரணையுடன் ஒரு பியூனும், பியூன் போலிருந்த ஒரு அதிகாரியும் இறங்குகின்றனர்.

இப்படி ஆரம்பிக்கிறது நாவல். தொடர்ந்து நாவல் முழுவதும் ஆயிரம் வாலா சரவெடிபோல் வெடித்துக்கொண்டேயிருக்கிறது!. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அங்கதம் தெறிக்கிறது.

சிவபால் கஞ்ச்சின் போலீஸ் ஸ்டேஷன் வர்ணனை, அபின் வியாபாரி ராமாதீனின் கதை, தாசில்தார் அலுவலகத்தில் ஒரு நகல் வாங்குவதற்காக மாதக்கணக்கில் போராடும் நொண்டியின் கதை, தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மூன்று வழிகளின் விவரிப்பு (ராம்நகர் வழி, நேவாதா வழி, மஹிபால்பூர் முறை), கயாதீனின் வீட்டில் திருடும் திருடன் ஜோக்நாத்தின் (வைத்தியரின் ஆள்) வழக்கு விசாரணை நீதிமன்றக் காட்சிகள், பொய்ச்சாட்சி ஸ்பெஷலிஸ்ட் பண்டிதர் ராதேலால், அவரின் சீடப் பிள்ளை பைஜ்நாத்தின் கதை… அனைத்தையும் விரிந்த புன்னகையுடன்தான் வாசித்தேன்.

*

இந்த குப்பை பத்திரிகைகளில் (இக்காலத்திற்குஇந்த குப்பை யு டியூப் சேனல்களில்என்றும் சேர்த்துக் கொள்ளலாம்) பெரும்பாலும் கோர்ட் விவகாரங்கள், நோட்டீஸுகள், தெருவிலே நடக்கும் சம்பவங்கள் ஆகியவையே இடம்பெற்றன. கூடவே, இந்தப் பத்திரிகைகளில் ஏதாவதொரு சர்க்கார் அதிகாரியின், நடிகையின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிய அவலங்கள் வெளிவந்தன. பேட்டியைப் போல் ஒரு பாத்திரம், இன்னொரு பாத்திரத்திடம், மதுப் புட்டிகள், பெண் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், நோட்டுக் கற்றைகள், ஊழல், லஞ்சம், சூதாட்டம் பற்றி விவரமாகக் கூறுவது போல் இது எழுதப்பட்டிருக்கும். இந்தக் குப்பைப் பத்திரிகைகளை கோர்ட் மற்றும் அதிகாரிகள் வட்டத்தில் மிக்கக் கவனத்துடன் படித்தார்கள். அதோடு இம்மாதிரிப் பத்திரிகைகளால் விளையும் ஆபத்தைக் குறித்தும் விவாதித்தார்கள்

இரவு கிட்டத்தட்ட ஒன்பது மணி இருக்கும். ஆனால் எங்கும் சந்தடி அடங்கவில்லை. தாலுக்கா ஆபீஸுக்கு முன்னால் வெற்றிலை பாக்குக் கடையில் பாட்டரியில் இயங்கும் ரேடியோ இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. திரைப்படப் பாடல்களிலிருந்து, “ஆசைகள், காதலனே, அழகிய மந்திரவாதியே, உன் பார்வை, என் லட்சியம், நீ எங்கே!, நெஞ்சம், மது, நெஞ்சோடு அணைத்துக்கொள், புன்சிரிப்பு, நெருப்பு, வாழ்க்கை, சாவு, இரக்கமற்றவனே, சித்திரம், வெண்நிலவு, வானம், இன்பக் கனவு, போதை…” ஆகிய சொற்கள் புத்தெழுச்சியின் செய்தியைப் பரப்ப முற்றிலும் பொருத்தமானவை என்ற முறையில் சராமாரியாக வந்து விழுந்துகொண்டிருந்தன

கார்த்திகைப் பௌர்ணமி அன்று சிவபால் கஞ்சிலிருந்து சுமார் ஐந்து மைல் தூரத்தில் திருவிழா நடக்கும். அது ஒரு காடு. காட்டினிடையேயுள்ள குன்றின்மீது தேவியின் ஓர் ஆலயம் உண்டு. அதைச் சுற்றிலும் நாலாப் பக்கமும் பழைய கட்டடத்தின் இடிபாடுகளைக் காணலாம். கருவேல மரம், காட்டு மணத்தக்காளி, இலந்தை மரங்கள் ஆகியவை புதர்களாக மண்டிக் கிடக்கும். மேடும், பள்ளமும், ஏற்றமும், இறக்கமுமான பூமி. முயலிலிருந்து ஓநாய் வரை, சோளக்கதிர் திருடனிலிருந்து வழிப்பறிக் கொள்ளைக்காரன் வரை இந்தக் காடுகளிலே எளிதாக ஒளிந்துகொள்ள முடியும். அக்கம்பக்கத்துக் கிராமங்களில் உள்ளத்தளவில் ஏற்படும் காதல் உறவுகளின் விளக்கத்தை இந்தக்காட்டில் உடலளவில் காணலாம்

பங்கி பானம் தயாரிப்பு இருக்கிறதே, அது ஒரு தனிக் கலை, தனிக் கவிதை!, தனிச் சாமார்த்தியம், தனித் திறமை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியே இலையை வாயில் போட்டு மென்று சுவைத்துத் தண்ணீரைக் குடித்தாலே நல்ல போதை வந்து விடும். ஆனால் போதை ஏற்றிக்கொள்ள இந்த முறை மிக்க மலிவான சாதாரண முறையாகக் கருதப்படும். இலையுடன், பாதாம், பிஸ்தா, குல்கந்து, பால், பாலாடை போன்றவற்றைக் கலந்து தயாரிக்கும் பானம் மிக உயர்ந்தது. கல்லும் குழவியும் தேயத்தேய ஓட்டி ஓட்டி அரைத்துக் கலக்கிவிட்டு, குடிப்பதற்கு முன்னர், படைத்தவனைக் குறித்து இரண்டொரு ஸ்லோகங்களைச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியைத் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தாமல் அதற்கு ஒரு பொதுப்படையான அமைப்பையும் தரவேண்டும், அதில்தான் இதன் சிறப்பே உள்ளது

அரசியல் சாசனம் அமலுக்கு வந்தபின் சிவபால் கஞ்சில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்குகாந்தி சதுக்கம்என்று பெயரிட்டனர். இன்னுங்கூடச் சிலருக்கு நினைவிருக்கலாம், காந்தி என்பவர் பாரத நாட்டில் பிறந்தவர், இந்த மண்ணிலே தோன்றியவர். அவருடைய அஸ்திகளுடன் அவருடைய கொள்கைகளையும் திரிவேணி சங்கமத்தில் கரைத்தபின், அந்த மகானின் நினைவாக இனி பெரிய கட்டடங்களும், சதுக்கங்களும் எழுப்பப்படும் என்று முடிவெடுத்தபின் சிவபால் கஞ்சில்காந்தி சதுக்கம்தோன்றியது

*

“தர்பாரி ராகம்” நாவல் ஹார்ட் காப்பி இப்போது கிடைக்கிறதா என்று தெரியவில்லை ஜெ. NBT, மீள்பதிப்பை அவசியம் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், வேறு பதிப்பகங்களாவது உரிமம் வாங்கி பதிப்பைக் கொண்டு வரலாம். ஏனென்றால் “தர்பாரி ராகம்” நிகழகாலத்தின் நாவல்.

வெங்கி

“தர்பாரி ராகம்” நாவல் –  ஸ்ரீலால் சுக்ல

இந்தி மூலம்: Raag Darbari

தமிழில்: சரஸ்வதி ராம்நாத்

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

தர்பாரி ராகம் – இணையநூலகம் 

ஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 10:32

விசும்பு – ஒரு வாசிப்பு

விசும்பு அறிவியல் புனைகதைகள் வாங்க  விசும்பு மின்னூல் வாங்க 

தமிழில் அறிவியல் புனைக்கதைகளை சுஜாதா எனும் ராட்சஸ உருவத்தின் நிழல் படியாமல் எண்ணிப்பார்க்க இயலாது. இந்தக் குறிப்பை எழுதுவதற்காக சுஜாதாவின் சில அறிவியல் புனைக்கதைகளை இணையத்தில் மீள் வாசிப்பு செய்தேன் (www.sirukathaigal.com). முதல் சில கதைகளில் ஆச்சரியமும் பகடியுமாக நம்மை ஆக்ரமித்து மூன்று நான்கு ஐந்து ஆறாம் கதைகளில் ஒரு எழுத்தாளன் வாசகனுடன் நிகழ்த்தும் சுவாரசிய விளையாட்டாக மட்டுமே எஞ்சி சலிப்புணர்வை அளிக்கின்றன. அவர் உருவாக்கும் கதாப்பாத்திரங்கள் இந்திய மண்ணில் அமர்ந்திருப்பவை, அறிவியலின் மிகைச் சாத்தியங்களைக் கையாளுபவையாகவோ, அல்லது அறிவியல் உருவாக்கும் சூழலால் தீண்டப்பட்டவையாகவோ உள்ளனர். அவர்களின் எதிர்வினைகளுக்கான பிண்ணனி மறுபுறம் சுரண்டப்பட்ட ஒரு அழகிய ஒற்றைப்பரிமாண பொம்மையாகவே காட்சியளிக்கிறது.

சுஜாதாவின் பெரும்பான்மையான அறிவியல் புனைக்கதைகளில் இலக்கிய வாசிப்பு எனும் தளத்துக்குள் நுழைந்துவிட்ட வாசகனுக்கு, கவர்ந்திழுக்கும் நடை எனும் (தனித்துவமான) அம்சத்தைத் தாண்டி பெற்றுக்கொள்ள அதிகமில்லை.

மாறாக, விசும்பு தொகுப்பின் கதைகள் தத்துவம், மதம், அற உணர்வு, பிரபஞ்சத்தில் மனிதனின் இருப்பு, பண்பாடு, அறிவியலை ஒற்றைப்படையாக அணுகும் மனிதனின் இயல்பு, தேடலின் பித்து, பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் அடிப்படைகள் என பல தளங்களில் நிகழ்ந்து நம்மிடம் ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றன. அறிவியல் புனைகதைகள் எனும் வரையறைகளுக்கு அப்பால், இலக்கியத் தரமான சிறுகதைகள் நம்மில் தொட்டுச்செல்லும் அனைத்து அடிப்படைகளும் உள்ளடங்கியதாக விசும்பு தொகுப்பின் பல சிறுகதைகள் இருப்பதையும் உணரலாம்.

அறிவியல் புனைக்கதைகளைத் தொகுப்பாக வாசிக்கையில் அதற்கே உரிய மனநிலைகள் குவிந்துகொள்கின்றன. பிரபஞ்சம், பால் வீதி, வால் நட்சத்திரம், கோள்கள், பறக்கும் தட்டு, மனித மூளையின் சாத்தியங்கள், அதிசய மூலிகைகள், வலசைப் பறவைகள், மனிதனின் விசித்திர உணவுப் பழக்கங்கள் என கதைகளுக்கு வெளியே இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். தொகுப்பின் கதைகளில் அதற்கான முடுக்கிகள் இருந்தன. களிப்பு, தனிமை, ஆச்சரியம், மனித அறிவின் எல்லைகளை மீறியவற்றைத் தெரிந்துகொள்வதில் ஏற்படும் திகைப்பு, தத்துவார்த்தமான கேள்விகள் ஏற்படுத்தும் தவிப்பு என பல்வேறு உணர்வுநிலைகளின் ஊடாட்டம்.

தொகுப்பின் கதைகளில் நம் பண்பாட்டின் ஆழத்தில் நின்றுகொண்டிருக்கும், அறிவியலை அதன் நீட்சியாகவே அணுகும் கதைமாந்தரும், நவீனத்துவத்தின் கைகளைப் பிடித்துக்கொண்டு மூர்க்கமாக உரையாடும் தரப்பும் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார்கள் – கதைகளை நிகழ்த்திக்காட்டுபவர்களும் அவர்களே. பல சிறுகதைகள் பகடியும் துள்ளலுமான நடையுடன் அமைந்துள்ளன – அறிவியல் புனைகதைகளின் இறுக்கத்தை உடைத்து ‘பிரதியின் இனபம்’ என்பது சாத்தியமாக இது உதவுகிறது.

உதாரணம் ‘பூர்ணம்’ சிறுகதை:

டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள் ?‘

மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள்‘ என்றார் டாக்டர். ‘நான் மூளை ஆராய்ச்சியாளன் ‘.

மனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது.

ஜெயமோகன் வாசகர்களுக்கு இலக்கியத் தளத்தின் பல்வேறு வெளிப்பாடுகளை ஆழ்ந்து உள்வாங்கிக்கொள்வதற்கான பார்வைகளையும் அடிப்படைகளையும் அமைத்துக்கொடுக்கிறார். அறிவியல் புனைகதைகள் எனும், தமிழில் இன்னும் அரிய இலக்கிய வகைமையாகவே இருக்கும் இவ்வகைக் கதைகளிலும் அவருடைய ஆழ்ந்த தாக்கத்தை உணர்கிறேன். ஒரு வாசகனுக்குள் விசும்பு தொகுப்புக்குப் பின் அறிவியல் புனைக்கதைகளை அணுகுவதில் ஒரு மாற்றம் நிகழும் என்றே எண்ணுகிறேன். அதீதக் கற்பனைகளாகவும் முரடு தட்டிய தகவல் குவிப்புகளாகவும் உள்ள அறிவியல் புனைக்கதைகளில் ‘இங்கு மனித உணர்வுகளுக்கான இடம் எங்கே?’ என்று கேட்க நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு என உணர்த்துகிறார்.

ஐந்தாவது மருந்து  –

உயிர் வாழ்தல் என்பது மனிதனின் ஆதார விழைவு. இயற்கை நோய்களின் வடிவத்தில் மனிதனுக்கு அளிக்கும் தடைகளை, சமப்படுத்தும் போக்கை வெல்ல மனிதனின் முன்னெடுப்புகளில் மருந்துகளின் பங்கு அளப்பரியது. நோய்களுக்கு ஒரு அதிசய மருந்து எனும் கருத்து மனிதனின் நீடித்த கனவுகளில் ஒன்று. ‘ஐந்தாவது மருந்து’ சிறுகதை இந்தக் கருதுகோளை இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் பிண்ணனியில் பேச முனைகிறது. இப்படி ஒரு அதிசய மருந்தை உருவாக்கும் தளவாய் ராஜா எனும் மருத்துவர் கதையின் முடிவில் எடுக்கும் முடிவுக்குப் பின் வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமில்லை, அதில் இயற்கையின் இயங்குவிதிகளைப் புரிந்துகொண்ட, அதன் முன் பணியும் ஒரு சித்தனின் மனமும் உள்ளது.

நோய் என்பது நம் உடல் செயல்படும் முறையில், நாம் வாழும் வாழ்வின் ஒரு பகுதியா? நவீன மருந்துகள் முற்றிலுமாக நோயைக் குணமாக்குகிறதா? எதிர்விளைவுகள் இல்லாத மருந்துகள் சாத்தியமா? நோயை விளைவிக்கும் கிருமியை முற்றிலுமாக அழிப்பது இவ்வுலகின் இயங்கு விதிகளுக்கு எதிரானதாகாதா, சமநிலைகுலைவாகாதா? ஓரு நோயை மருந்துகள் இல்லாமல் இயல்பாக ஏற்றுக்கோண்டு வாழ்வது சாத்தியமா? இப்படிப் பல கேள்விகளை இந்தக் கதை நம்மிடம் கேட்கிறது. நோய் குறித்த நம் அணுகுமுறைகளும், அடிப்படைச் சிந்தனைகளும் நவீன மருத்துவ முறைகளை நோக்கியே பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

மனிதனின் நுகர்வு என்பதை இன்னும் ஆழமாக விரித்துக்கொள்ளலாம். இன்று நாம் புழங்கும் உணவுப் பொருட்களில் ‘பொறுப்பான முறையில் வளர்க்கப்பட்ட’, ‘இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட’ என்பது போன்ற பதங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பொறுப்புணர்வு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கும் இருக்கவேண்டிய அவசியத்தை கதை உணர்த்துகிறது. ஆனால் அதற்கான தத்துவக் கண்ணோட்டமோ, மாற்றுச் சிந்தனைகளோ நம்மிடம் உள்ளதா என்பதே இங்கு கேள்வி.

கோவிட் நோய்த்தொற்று குறித்தும், அதன் தடுப்பூசிகளின் சாதக மற்றும் பாதக விளைவுகள் குறித்தும் எழுந்த விவாதங்களின் எல்லா அடிப்படைகளும் இந்தச் சிறுகதையில் பேசப்பட்டுள்ளது, ஆனால் கதை எழுதப்பட்ட ஆண்டு 2000. 2000த்தில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை இருபது ஆண்டுகள் கடந்து தற்கால நோய்ச் சூழலின் எல்லாத் தளங்களையும் தொட்டுச் செல்வதை பிரமிக்காமல் கடக்கமுடியவில்லை.

இங்கே இங்கேயே  –

அறிவியல் புனைக்கதைகளில் வேற்றுலக வாசிகள் பூமிக்கு வருகைபுரிதல் எனும் தளம் நிறைய எழுதப்பட்ட ஒன்று. இந்தப் பிரபஞ்சத்தில் ‘நாம் மட்டுமே தனியர்கள்’ எனும் எண்ணத்தின் திகைப்பும், இதன் மறு எல்லையான பிற கிரகத்து மனிதர்களின் இருப்பும் நம் சிந்தனைகளை என்றுமே ஆக்ரமிக்கும் ஒன்று.

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரம்மாண்டம் இந்தப் பிரபஞ்சமும் வான் வெளியும். புலப்படாத ஒன்றைக் குறித்து கற்பனைகளை வளர்த்துக்கொளவது, இந்தக் கற்பனைகளை தர்க்கங்களுக்கு உட்படுத்தி அதன் சாத்தியங்களை அராய்ந்து அந்தப் பிரம்மாண்டத்தின் சில புள்ளிகளைத் தெரிந்துகொள்ளவது என்பதே இதுவரையிலான மனிதனின் நகர்வு. காடுகளிலும், மலைகளிலும் வாழும் பழங்குடி மனிதர்கள் இயல்பாகவே தர்க்கத்தை விலக்கி உள்ளுணர்வுகளால் வழிநடத்தப்படுகிறார்கள். ஒரு விஞ்ஞானியும், நாகரிக மனிதனும் அறிந்துகொள்ள முடியாத, அவர்களை அலைக்கழிக்கும் ஒன்றை பழங்குடி மனிதன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறது.

விசும்பு –

‘வலசை போதல்’ எனும் பதத்தை நாம் எல்லோரும் ஒருமுறையாவது கேட்டிருப்போம். விலங்குகளும், குறிப்பாக பறவைகளும் பருவகால மாற்றங்களை உணர்ந்துகொண்டு இடம்பெயர்வதைக் குறிக்கும் அழகிய மொழி வெளிப்பாடு. பறவைகள் ஆயிரமாயிரம் மைல்கள் பயணித்து செல்ல வேண்டிய இடத்தைத் துல்லியமாக அடைகின்றன. இப்படி இடம்பெயர்வதற்கான உந்துதல் பறவைகளுக்கு எப்படி ஏற்படுகிறது? வான் எனும் பிரம்மாண்டமான கூரையின் கீழ் பறக்க அவைகளுக்கு எங்கிருந்து சக்தி கிடைக்கிறது, இலக்குக்கான பாதைகளை, திசைகளை அவை எப்படித் தீர்மானிக்கின்றன என்று எண்ணும்போதே இயற்கை எனும் பேராற்றலின் வலிமை நம்மைத் திகைக்கவைக்கிறது.

மருத்துவருமான தந்தை பறவைகளின் வலசை போதல் என்பதை இயற்கையின் அறிய முடியாத விந்தையாகக் காண்கிறார். மகன், அறிவியல் பார்வையுடன் இதை நோக்குகிறார். தந்தையின் பார்வையில் இது இயற்கையிலேயே பறவைகளுக்கு அமையப்பெற்ற உள்ளுணர்வு, மரபணுவில் கடத்தப்பட்டுவிட்ட ஒரு செய்தி. மகனுக்கு இதன் அடிப்படைகள் நவீன அறிவியல் நோக்கில் அறியப்பட வேண்டிய ஒரு சாத்தியப்பாடு. இருவருக்குமிடையில் மாட்டிக்கொள்ளும் ஒரு மேளாளரின் பார்வையில், பகடியான ஒரு நடையுடன் சுவாரசியம் குறையாமல் சொல்லப்பட்ட ஒரு கதை இது.

கதையின் முடிவில் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் முழுமையை, ஒத்திசைவைப் பறைசாற்றும் ஒரு முடிவு வருகிறது, சில வியப்பான சம்பவங்கள் நிகழ்கின்றன. ‘பிரபஞ்சம் என்பது முழுமை, அதன் துளிகளைத்தான் அறிவியல் எனும் பெயரில் ஆராய்கிறோம்’ எனும் தந்தை கருணாகர ராவின் சொற்கள் மனதில் ஆழமாக இறங்குகின்றன, ஒட்டுமொத்த கீழைத் தத்துவத்தின் குரலாக ஒலிக்கின்றன.

பூர்ணம் –

மனித மூளை, அதன் அமைப்பு, செயலபாடுகள் போன்றவை இன்னும் இயற்கை காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஒரு ரகசியப் பேழை – அதைத் திறந்து உள்ளிருக்கும் ரகசியங்களை அறிந்துகொள்ள பல நூறாண்டுகளாக மனிதன் முயன்றுகொண்டுதானிருக்கிறான். மூளைதான் நம்மைச் செயல்படுத்துகிறது, நாம் அதன் கட்டளைகளுக்கு அடிபணியும் உடல் மட்டுமே. மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் மூளையின் அமைப்பில் தனித்தன்மை உண்டு. பிறப்பில் அடைந்துகொண்டவற்றை சூழல், அனுபவங்கள் என நாம் ஒவ்வொருவரும் மெருகேற்றிக்கொண்டிருக்கிறோம். மூளை நரம்பியல் சார்ந்த வார்த்தைகளில் சொன்னால், மூளையின் நியூரான் இணைப்புகளை விரித்துக்கொண்டே செல்கிறோம்.

மூளையின் முழு ஆற்றலில் ஒரு சிறு பகுதியைத்தான் இத்தனை ஆயிரமாண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் மனிதனால் பயன்படுத்த சாத்தியமாகியுள்ளது. மனித மூளையின் நியூரான் இணைப்புகள் உடல் அளிக்கும் மின்னூட்டம் மற்றும் இன்னும் சில காரணிகளால் உயிர்ப்புற்று தகவல்களைச் சேகரிக்க, கடத்த, தொகுத்துக்கொள்ள ஒளிர்கிறது. பொதுவாகச் சொன்னால் எத்தனை நரம்பு இணைப்புகள் மூளையில் இருக்கின்றனவோ அத்தனை ஆற்றல் கிடைக்கப்பெறுகிறோம்.

மனித மூளையின் முன் பகுதியான Pre Fontal Cortex சிந்தனை, தகவல் தொகுப்பு, திட்டமிடல் போன்றவற்றுக்கு அடிப்படையானது. இந்த ஒரு பகுதியை மட்டும் அதீதமாக முடுக்கிவிட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது கதையின் மையம், இதை குறுகிய பார்வைகொண்ட ஒரு விஞ்ஞானி செய்து பார்க்கிறார். இயற்கை எல்லாவற்றையும் சமன்செய்யும் ஆற்றல் படைத்தது. நாம் இயல்பாகவே மூளையின் எல்லாப் பகுதிகளையும் பயன்படுத்தாமல் இருக்க வடிவமைக்கப்பட்டிருக்கிறோம், அது இயற்கையின் ஆணை. இதை மீற முயலலாம், ஆனால் வேறு ஏதோ ஒரு வகையில் இந்த மீறலின் விளைவுகள் சமன்செய்யப்படும். கதையின் முடிவில் இந்த உணமையின் ஒரு பகுதி ஒளிந்துகொண்டுள்ளது.

பித்தம் –

உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஒருவகை பித்து நிலையில், விளிம்பில் இயங்கும் மனிதர்களால் மட்டுமே சாத்தியமானது. அவர்களே கனவு காண்கிறார்கள், கனவை நோக்கிப் பயணிக்கும் துணிவைப் பெறுகிறார்கள், அந்தக் கனவுக்காக பலியாகியுமிருக்கிறார்கள். இந்தக் கதை அது போன்ற ஒரு பித்து நிலையில் உள்ள மனிதனையும் அவனுடைய தேடலையும் பேசுகிறது. பித்தன் கோவில் பண்டாரம், பித்து இரசவாதத்தால் தங்கத்தை உருவாக்குவது.

கதையில் கோலப்பன் எனும் பகுத்தறிவுவாதிக்கும், பண்டாரத்துக்குமான உரையாடலில் அறிவியல் புனைக்கதைக்கான கட்டுமானங்கள் விரிகின்றன. இந்தக் கதையில் தங்கம் என்பது பலி கேட்கும் ஒரு யட்சியின் குறியீடுதான். அது இடைவிடாது பண்டாரம் போன்ற ஆத்மாக்களின் மனதில் ஏறி அமர்ந்துகொண்டு தனக்கானதைப் பெற்றுக்கொள்கிறது.

இந்தக் கதையின் பண்டாரம் எனக்கு ‘மலைகளின் உரையாடல்‘ கதையின் சுதாகரையும், ‘குருவி‘ கதையின் மாடன்பிள்ளையையும், ‘மாயப்பொன்‘ கதையின் நேசப்பனையும் நினைவுபடுத்தியது. நம்பும் ஒன்றை எப்படியும் செய்து முடித்துவிடவேண்டிய தீரா விழைவும், அந்தச் செயலில் ஞானமும் பெற்ற அழகான கதாப்பாத்திரங்கள்.

உற்றுநோக்கும் பறவை –

தொகுப்பின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒரு நாவலாக விரிந்துகொள்ளுமளவுக்கு பல தளங்களைத் தொட்டுச்செல்கிறது. ஒரே மனிதனுக்குள் இருக்கும் இரண்டு குணங்களை ‘Schizophrenia’ மனநிலை, உளப்பிளவு (Split Personality) என்று கூறுகிறோம். இந்த அம்சம் கதையில் சொல்லப்பட்டு அறிவியல் புனைக்கதையாக மாறுகிறது. மதம், யோகம் மரபு, மூளையில் Dopamine சுரப்பி, உளவியல் மருத்துவம் என்று ஒரே கதையில் பல அடுக்குகளும், தகவல்களும் வருகின்றன.

நம் எல்லோருக்குள்ளும் இரண்டு மனிதன் ஒளிந்துகொண்டிருக்கிறானா? கடவுளை நம்பாதவன் மதத்தைக் கைவிடவேண்டும், அது முற்றிலும் சாத்தியமா? மதம் உருவாக்கிய குறியீடுகளை ஒருவனின் நனவிலி மனதிலிருந்து அழிக்கமுடியுமா? அப்படி அழித்துவிட்டு புதிதாகத் தொடங்கினால் என்னென்ன விளைவுகள் நிகழும் என கதை முழுக்க செறிவான கேள்விகளை கற்பனையைத் தூண்டும் வகையில் ஆசிரியர் நம்முன் வைக்கிறார்.

‘உற்றுநோக்கும் பறவை’ எனும் தலைப்பை பலமுறை மனதுக்குள் சொல்லிப் பார்த்தால் ஏற்படும் திகைப்பும் சலனங்களும் சிறிதல்ல.

நம்பிக்கையாளன் –

அணு ஆயுதப்போரினால் ஏற்படும் ஒரு பேரழிவுக்குப் பின்னான சூழலில் (Post Apocalyptic) ஒரு குகையில் வாழும் இறைநம்பிக்கையளர்களைப் பற்றிய சிறுகதை, அதில் ஒரு இளைஞனும் இருக்கிறான். போர் இறைநம்பிக்கையாளர்களுக்கும் மறுப்பாளர்களுக்குமானது. கதையின் இறுதியில் வளர்ந்த நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பவும் சேதங்களில்லாமல் இருப்பதும், கீழை நாடுகள் பேரழிவுக்குள்ளாகியிருப்பதும் சொல்லப்படுகிறது. கதையில் அந்த இளைஞன் எடுக்கும் முடிவுக்கான காரணங்களை வாசகனின் ஊகத்துக்கே கையளித்துவிடுகிறார் ஆசிரியர்.

இக்காட்டான சூழலிலும் அந்த இளைஞன் மனதில் அவனுடைய பாலைவன கிராமத்தையும், ஒளிமிக்க வானையும், பசுமைமிகுந்த பூமியையும் கற்பனை செய்துகொள்கிறான், கதையின் எழுச்சி மிகுந்த பகுதி இது. மத நம்பிக்கையும் மறுப்பும் அதன் அதீத இறுக்கத்தில் அடிப்படைவாதம் எனும் நிலையை அடைகிறது. அடிப்படைவாதம் என்பதை உணர்த்தும் ஒரு குறியீட்டம்சம் கொண்ட சிறுகதை என்றும் இதை வாசிக்கலாம்.

நாக்கு –

உணவுப் பழக்கங்கள் நம்மிடம் எப்படி கடத்தப்படுகின்றன? உணவுக்கான தேர்வு என்பது பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாக நம்மிடம் வந்து சேர்கிறது. நாக்கு உணவுத் தேர்வுக்கான செய்திகளை மூளைக்கு அளிக்கிறது. நூற்றாண்டுகளாக மரபணுவில் இந்தத் தேர்வு நம்மிடம் அளிக்கப்படுகிறது. குழந்தைகள் தந்தையோ அன்னையோ விரும்பி உண்ணும் உணவுகளைத் தாமும் விரும்புவதைப் பார்க்கிறோம்.

நாகரிகத்தின் சுவடுகள் எட்டாத அமேசான் காடுகளில் சில பழங்குடிகளிடம் ‘Cannibalism’ இன்னும் ஒரு வழக்கமாக எஞ்சியிருக்கிறது. மிருகங்களில் தன் குட்டிகளை உண்ணும் இனம் பற்றிய குறிப்புகளை வாசிக்கிறோம். வெண்முரசின் ‘மழைப்பாடல்’ நாவலில் சாதகப்பறவையில் தாய் ஒன்று தன் குஞ்சுகளுக்கு தன்னையே உணவாக அளிக்கும் அத்தியாயம் வருகிறது (அத்தியாயம் 88: புதிய காடு). பிணம் உண்ணும் அகோரிகள் இந்து மதத்தில் இன்னும் நீடிக்கிறார்கள். நாகரிக மனிதன் நரமாமிசம் உண்டிருப்பானா? இந்தப் பழக்கம் மருவி வேறொரு வடிவத்தில் தற்காலத்திலும் நீடிக்கிறதா எனும் கேள்விகளை சிறுகதை நம்முன் வைக்கிறது. நாக்கு எனும் உடலுறுப்பு நம்மால் குறைத்துமதிப்பிடப்படுகிறதோ எனும் வியப்பு ஏற்படுகிறது.

சிறுகதையை வாசித்ததும் விசித்திரமான உணவுப் பழக்கங்கள் குறித்த சிந்தனைகள் மனதில் தோன்றுகின்றன. பெரு நாட்டின் மதுவான ‘மஸாட்டோ’, வேர்க்கிழங்கை உண்டு ஊறிய எச்சிலைப் பயன்படுத்தி புளிக்கச்செய்து உருவாக்கப்படுவது என்ற செய்தி நினைவுக்கு வருகிறது. இந்திய உணவுமுறைகளில் எதேனும் விசித்திரமான பழக்கங்கள் உள்ளனவா?

நாம் எல்லோரும் தாய்ப்பால் அருந்தித்தானே வாழ்வையே துவங்குகிறோம்!

தமிழ் இலக்கிய வடிவங்கள்: நேற்று, இன்று, நாளை ஒரு ஆய்வு –

செவ்வாய் கிரகத்தில் நிகழும் கருத்தரங்கு ஒன்றில் ஜெயமோகன் எனும் பெயரை ‘உத்தேசித்துக்கொள்ளும்’ எழுத்தாளன் தமிழ் இலக்கியத்தின் எதிர்கால வடிவம் குறித்து உரையாற்றுகிறான். கருத்தரங்குக்கான காலம் நேரடியாக வரையறுக்கப்படவில்லை. பூமி முற்றிலும் அழிவுக்குள்ளானதால் பூமி வருடம், வெளி வருடம் எனும் பதங்களால் காலம் சுட்டப்படுகிறது. பூமி வருடம் 2868க்குப் பிறகான ஒரு வருடத்தில் நிகழும் கருத்தரங்கம் என்று புரிந்துகொள்ளலாம். கருத்தரங்கம் தமிழ் இலக்கியத்தின் ‘வடிவம்’ எனும் அம்சத்தை மையப்படுத்துகிறது.

அச்சுஊடகம் வழக்கொழிந்து ‘மின்நவீனத்துவம்’ எனும் கருத்து உருவாகிறது. 2055ம் ஆண்டுவாக்கில் அச்சு ஊடக நூல்கள் கலைப்பொருள் சேகரிப்புகளுக்காக மட்டுமே சில நூல்களை அச்சிடுகின்றன. மின்நவீனத்துவத்தின் முதல் சோதனை நாவலில் நிகழ்கிறது. உள்சுட்டிகள் மூலம் பக்கவாட்டில் பல திசைகளில் திறந்துகொள்ளும் ‘அதிநாவல்’ என்ற வடிவம் பிறக்கிறது. ஒரு பிரதியின் வடிவத்தை அதன் சுட்டிகள் மூலம் வாசகனே தீர்மானிக்கும் தன்மை வளர்கிறது. மின் ஊடங்களின் பெருக்கத்தால், தகவல் சாத்தியங்களால் எழுத்தாளன் வாசகன் எனும் நிலை இலக்கியத்திலிருந்து விலகுகிறது. பூமி அழிந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தமிழினம் இலக்கியங்களை அதன் ஆதி வடிவில் புத்தகங்களாகவும், எழுத்தாளுமைகளை வழுபடும் வழக்கங்களாகவும் நீட்டித்துக்கொள்ளும் சூழல் அமைகிறது.

இந்தப் பகுதி கதை எனும் வரையறைக்குள் அடங்க மறுக்கிறது, அதீத கற்பனையால் இலக்கியத்தின் எதிர்காலத்தை ஊகம் செய்கிறது. முதலில் இதன் கருத்துக்களை ஒரு சுவாரசியத்துக்காக வாசித்து, பின் அதில் பேசப்படுபவற்றில் உள்ள உண்மைகளை மெல்ல நம் பிரக்ஞை உணர்ந்து திகைக்கிறது. தமிழ் விக்கி’ எனும் கலைக்களஞ்சியத்தின் கூறுகளை இந்தக் கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்கிறேன். ஒரு பதிவு பலநூறு பக்கங்களாக விரிந்து முழுமையடையும் மாயம் தொழில்நுட்பத்தின் இயல்புகளால் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் விக்கி குறித்த எண்ணங்கள் பல ஆண்டுகளாக ஆசிரியரின் மனதில் ஊறிக்கொண்டிருந்ததையும் இந்தக் கதை உணர்த்துகிறது.

அன்பும் நன்றிகளும்,

பாலாஜி ராஜூ

விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்

விசும்பு கடிதங்கள்.

விசும்பு மதிப்பீடு

அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2022 10:31

December 27, 2022

எண்திசைத் தேடல்

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம்  வெள்ளிவிழா செம்பதிப்பு  வாங்க

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் விஷ்ணுபுரம் புதிய பதிப்புக்கான முன்னுரை)

1997ல் டிசம்பரில் விஷ்ணுபுரம் முதல் பதிப்பு அச்சேறியது. அந்தக் கணக்கில் இது அந்நாவலின் வெள்ளிவிழா பதிப்பு. இருபத்தைந்து ஆண்டுகளில் இன்று அதை படிப்பவர்கள் மூன்றாம் தலைமுறையினர். அந்நாவல் வெளியானபிறகு பிறந்தவர்கள்.

விஷ்ணுபுரம் வெளியான பிறகு இன்றுவரை அதை வாசித்து அகக்கொந்தளிப்பும் கண்டடைதலும் ததும்பலுமாக எழுதப்பட்ட ஒரு வாசகர் கடிதமாவது வராத ஒரு வாரம் கூட கடந்து சென்றதில்லை. தமிழில் வேறெந்த இலக்கியப் படைப்புக்கும் இத்தனை நீடித்த தீவிர வாசிப்பு அமைந்ததில்லை. இத்தனை தொடர்உரையாடல் ஒரு படைப்பின் மீது நிகழ்ந்ததும் இல்லை. பல படைப்புகள் இளமைப்பருவத்தின் ஒரு பகுதியாக அனைத்து வாசகர்களைச் சென்றடைகின்றன. அவர்கள் பிறகு அதை கடந்து வந்து ஒரு கடந்தகால ஏக்கமாக நினைவுகூர்கிறார்கள். வாழ்நாள் முழுக்க உடனிருக்கும் ஒரு படைப்பையே செவ்விலக்கியம் என்கிறோம். விஷ்ணுபுரம் இயல்பாக அந்த தகுதியை அடைந்துவிட்ட ஒன்று.

விஷ்ணுபுரம் தமிழிலக்கியம் வாசிக்க வருபவனுக்கு ஓர் அறைகூவலாக நின்றிருக்கிறது. முதலில் பலமுறை தொடங்கி விட்டுவிடுகிறான். பிறகு அதில் ஈடுபடுகிறான். அவனுடைய வளர்ச்சியின் பல கட்டங்களில் வெவ்வேறு வகையில் அவன் அதை உள்வாங்கிக் கொள்கிறான். அதன் வாசகர்களில் அதை முழுக்கக் கடந்து சென்றவர்கள் என்று எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது தனக்குள்ளேயே மடிந்து மடிந்து விரியும் அமைப்பு கொண்டது. அதன் உள்விரிவு அந்நாவலை மட்டும் சார்ந்ததும் அல்ல, அது இந்திய மெய்ஞான மரபின் ஒரு பகுதியென தன்னை நிறுத்திக்கொள்வது. மெய்ஞான மரபைக் கற்கக் கற்க அது பெருகும். இன்று பல கடிதங்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதை வாசிப்பவர்களால் எனக்கு அனுப்பப்படுகின்றன.

ஓர் இலக்கிய விமர்சகனாக விஷ்ணுபுரம் பெற்ற இந்த ஏற்புக்கான காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்கிறேன். தமிழ் நவீன இலக்கியம் புதுமைப்பித்தன் காலம் முதலேயே நவீனத்துவ இலக்கியமாகவே தோன்றியது. புதுமைப்பித்தன் அதற்கு உருவாக்கிய திசைவழி என்பது மரபு எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய வழிபாடுதான். தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் மேலைஇலக்கியத்திலிருந்து வந்தவர்களே. மேலை இலக்கிய வடிவங்களை திரும்ப எழுதுவதே இங்கே இலக்கியத்தின் புதுமை என்று கருதப்பட்டது. நான் அறிந்தவரை அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என இலக்கிய முன்னோடிகள் அனைவருமே வெவ்வேறு வகையில் ஐரோப்பாவால் ஈர்க்கப்பட்டவர்கள்.

(அவர்களில் ஜெயகாந்தனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ரஷ்ய இலக்கியத்தின் மீது ஈடுபாடு உண்டு. ஆனால் அவர்கள் படைப்புகளில் ரஷ்யச் செல்வாக்கு என்பது அனேகமாக இல்லை.  அவர்கள் எழுதிய நவீனத்துவக் காலகட்டத்தின் அழகியல் ருஷ்யச்செவ்வியலுக்கு எதிரானது என்பதே முதன்மையான காரணம். ரஷ்யப் பெருநாவல்கள் தமிழில் எனது தலைமுறையில்தான் நேரடிச் செல்வாக்கை செலுத்தியிருக்கின்றன.)

விஷ்ணுபுரம் அவ்வகையில் ஒரு புதிய தொடக்கம். விஷ்ணுபுரத்தின் வடிவம், கூறுமுறை, உள்ளடக்கம் ஆகியவற்றில் இந்தியப் பெருங்காவியங்களின் செல்வாக்குதான் முதன்மையானது. தொன்மங்களை, அவற்றிலிருந்து உருவாகும் படிமங்களை பின்னி உருவாகியிருப்பது அதன் வடிவம். மனிதர்களையும் அது தொன்மங்களாக ஆக்குகிறது. அவ்வகையில் அது ஒரு நவீனப் புராணம். ரஷ்யப்பெருநாவல்களின் செல்வாக்கு அடுத்தபடியாக அதிலுள்ளது.  குறிப்பாக விரிந்த நிலச்சித்தரிப்பு, நுணுக்கமான காட்சி விவரணை ஆகியவற்றில் ரஷ்யப் பெருநாவலாசிரியர்களின் பயிற்சிக்களத்திலிருந்து நான் வந்திருப்பதை  இன்றைய வாசகன் காணமுடியும். அதற்கு முந்தைய தமிழ் நாவல் எவற்றிலும் அவ்வியல்பைக் காணமுடியாது.

நவீனத்துவ இலக்கியத்தின் மரபுஎதிர்ப்புத்தன்மை என்பது நடைமுறையில் வரலாற்றையும் தத்துவத்தையும் எதிர்ப்பதாக அமைந்தது. நவீனத்துவர்கள் பலர் ’தத்துவக்கிழவன்’ ’பாசிபடிந்த தத்துவம்’ என நிராகரிப்புத்தொனியில் எழுதியிருப்பதைக் காணலாம். அது ஒருவகையில் இந்திய எதிர்ப்பு, தமிழ் எதிர்ப்பு நிலைக்கு அவர்களைக் கொண்டுசென்று சேர்த்தது. அவர்களில் அனேகமாக எவருக்குமே தமிழ் வரலாறு அல்லது இந்திய வரலாறு பற்றிய பொதுவான அறிமுகம் கூட இல்லை என்பதை அவர்களுடைய படைப்புகள் காட்டுகின்றன. நவீன இலக்கிய வாசிப்பு – எழுத்து இரண்டுக்கும் அவை தேவையில்லை என்பதுடன், தடைகளும் ஆகும் என்று நான் எழுதவந்தகாலகட்டத்தில் சொல்லப்பட்டது. என்னிடம் சுந்தர ராமசாமியும் வெங்கட் சாமிநாதனும் அதை அழுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

நவீனத்துவர்களின் வினாக்கள், அலைச்சல்கள் அனைத்தும் அவர்களுக்குள்ளேயே இருந்தன. அவர்கள் எழுதியவை அனைத்துமே அவர்களைப் பற்றித்தான். அவர்களை விலக்கிவிட்டு அவர்களது படைப்புகளை பார்க்க  முடியாது. தனிமனிதனெனும் அடிப்படை அலகிலிருந்து எழுந்த அந்த எழுத்துக்கள் கலைத்தன்மையால் பல ஆழங்களைச் சென்று தொட்டிருக்கின்றன. தமிழில் பல சாதனைப்படைப்புகள் அவற்றில் உள்ளன.  ஆனால் அவற்றில் வரலாற்றின் நீட்சியும் விரிவும் இல்லை. அடிப்படையான தத்துவ உசாவல்கள் இல்லை, இருத்தல் சார்ந்த வினாக்கள் தவிர.

அவற்றுக்கு மாறாக தமிழில் இந்திய வரலாற்றை, தமிழ் வரலாற்றை, தத்துவத்தை, தரிசனங்களை கருத்தில் கொண்டு; அவற்றுக்கு எதிர்வினையாகவும் விரிவாக்கமாகவும் எழுதப்பட்ட நவீனநாவல் விஷ்ணுபுரம். அவ்வகையில் தமிழ்நவீனத்துவத்திலிருந்து மீறி எழுந்த முதல் பெரும்படைப்பும் அதுதான். அதன் பெரும்பாலான வாசகர்கள் நவீனத்துவ இலக்கியக் களத்திற்கு வெளியில் இருந்து வந்தார்கள்.  இன்றுகூட, தமிழ்ச் சிற்றிதழ்சார்ந்த இலக்கிய மரபில் இருந்து வரும் ஒரு வாசகனை விட ஆன்மிகத் தேடல்கொண்டு குர்ஜீஃப், ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, மகரிஷி மகேஷ் யோகி ,வேதாத்ரி மகரிஷி என்று சுற்றிவரும் ஒரு வாசகன் மிக எளிதாக விஷ்ணுபுரத்துக்குள் நுழைய முடியும் என்பதைக் காண்கிறேன்.

விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் நண்பர் ரமேஷ் பிரேதன் என்னிடம்  ’முதன்முறையாக நவீனத்துவத்தின் கோட்டை உடைக்கப்பட்டிருக்கிறது’ என்று சொன்னார். அன்று அப்படி நவீனத்துவம் குறித்த விமர்சனங்கள் எனக்கு இருந்தாலும் விஷ்ணுபுரம் அப்படி ஒரு நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் விஷ்ணுபுரம் முழுக்க முழுக்க ஒரு அந்தரங்கமான நாவல். என்னுடைய தனிப்பட்ட ஆன்மீகத்தேடல், அதன் விளைவான அகத்தத்தளிப்புகள் மட்டுமே அதில் உள்ளன. என்னையே வெவ்வேறு கதாபாத்திரங்களாக பிரித்து அதில் விரித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு நவீனத்துவ படைப்பைப் போல என்னுள்ளே நோக்கி அதிலேயே சுருங்கிவிடவில்லை. என்னை வெவ்வேறு தத்துவ பின்புலங்களில், வரலாற்றுக் காலகட்டங்களில் நிறுத்திப் புனைந்திருக்கிறேன். பிங்கலனும் திருவடியும் பாவகனும் நானே என்று இப்போது வாசிக்கையில் தோன்றுகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறானவர்கள், அவர்களின் தத்துவச் சிக்கல்களும் அவர்களின் வரலாற்றுப் பின்புலமும் முற்றிலும் வேறானவை. என்னுடைய அந்தரங்க மெய்த்தேடலை என்னுள் இருந்து வெளியே எடுத்து வரலாற்றில், தத்துவ மரபின் பெரும்பரப்பில் வைத்தேன். அது எட்டுதிசைக்கும் திறந்துகொண்டது. இது ஒற்றைத்திசை கொண்ட ஆறு அல்ல. திசைநிறைக்கும் பெருங்காற்றுச் சுழற்சி.

பெருநாவல்கள் ஒருபுறம் வரலாற்றையும் மறுபுறம் தத்துவத்தையும் இருபெரும் சிறகுகளாக கொண்டே எழுந்து பறக்க இயலும். தனி மனிதனின் வாழ்க்கைக்குள் செல்லும் நாவல்கள் இருநூறு பக்கங்களுக்கு மிகுமென்றால் தன்னிலேயே சுழலத்தொடங்கிவிடும். அவற்றால் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்க முடியாது. அது ஆசிரியன் அல்லது மையக்கதாபாத்திரம் சார்ந்து மட்டுமே எழுதப்படும். பிற அனைத்துமே பிற அல்லது  பிறராக இருக்கும். அந்த ஒற்றைப்படைத்தன்மையே நவீனத்துவப் படைப்பிலுள்ள ஒருமை எனப்படுகிறது. தொடக்ககால வாசகர்களுக்கு வடிவக் கச்சிதம் என்று தோன்றக்கூடிய ஒரு சிறப்பியல்பை அந்த ஒருமை அளிக்கிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நவீனத்துவ நாவல்களை பார்த்தால் அது தெரியும்.

மாறாக வரலாற்றையும் தத்துவத்தையும் பேசும் ஒரு நாவல் அதிலுள்ள அனைத்து கதாபாத்திரங்களையும் முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு களங்களில் கொண்டு நிறுத்தத் தொடங்குகிறது. அதில் ஒரு கதாநாயகன் இருப்பதில்லை. அவனுடைய மாற்று வடிவங்களும், எதிர்வடிவங்களும் அதே அளவு வல்லமையுடன் தோன்றுகின்றன. ஆகவே கதைமையம், அடிப்படை உசாவல் எல்லாமே பலவாகச் சிதறிவிடுகின்றன. அதில் ஒற்றைக் களம் இருப்பதில்லை. பலகளங்கள் அமைகின்றன. அமைந்த களங்களும் பெருங்காலப்பரப்பில் தொடர்ந்து உருமாறிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே அது ஒருமையை அடைவதில்லை. மாறாக, அது ஒத்திசைவையே இலக்காக்குகிறது. அந்த ஒத்திசைவென்பது அதன் வடிவத்தால் அடையப்படுவதல்ல. அதனுடைய மையத்தரிசனத்தால் அடையப்படுவது. (அந்த தரிசனம் எதிர்மறை தரிசனமாகக்கூட இருக்கலாம்) விஷ்ணுபுரத்தின் ஒத்திசைவு என்பது அதன் அடிப்படை உசாவல்களால் ,தரிசனங்களால், அவற்றை நிகழ்த்தும் படிமங்களால் ஆனது. ஒன்றைச் சொல்லி, அதன் எதிர்த்தரப்பையும் சொல்லி, சொல்லவிட்டுப்போன ஒவ்வொன்றையும் தேடித்தேடிச் சொல்லி நிறைத்தபடியே செல்லும் அதன் வடிவம் ஓர் எல்லையில் ஒரு முழுமையை அடைகிறது. முழுமையால்   அதன் ஒத்திசைவு கைகூடுகிறது.

அத்தகைய ஒரு நாவல் அதற்கு முன்பு தமிழில் வெளிவந்ததில்லை. அதுவே முந்தைய தலைமுறை வாசகர்களில் விஷ்ணுபுரத்திற்கு ஒரு எதிர்மனநிலையை உருவாக்கியது. இன்று தமிழின் செவ்வியல் படைப்பாகக் கருதப்படும் இந்த நாவல் வெளிவந்தபோது ஒப்புநோக்க எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பெற்றது. பெருமதிப்புக்குரிய முன்னோடிகளாகிய அசோகமித்திரன்,  இந்திராபார்த்தசாரதி போன்றோர்கள் அதை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பு என்றும் நூறாண்டுகால தமிழிலக்கிய வரலாற்றின் முதன்மைச் சாதனை என்றும் அடையாளப்படுத்தினார்கள். ஆனால் பொதுவாசகர்களும், சுந்தர ராமசாமி ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் அதற்குள் நுழையவே முடியாமல் இருந்தனர்.

நாவல் சிதறுண்டு கிடப்பதாகவும், ஒன்றுக்கொன்று முரண்பாடாக பேசிக்கொண்டிருப்பதாகவும், தனக்குள் தானே ஆக்கியும் அழித்தும் விளையாடிக்கொண்டிருப்பதாகவும் அன்று குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. ஆனால் அதுவே அதன் சிறப்பு. மையமற்ற வடிவம், மையங்களை அழித்து அழித்து விளையாடிச் செல்லும் பயணம், அதனூடாக உருவாகும் சுழற்சி ஆகியவை நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்தின் அடிப்படைகள். பின்நவீனத்துவம் என்ற பெயரை நான் தவிர்க்கிறேன். அதற்கான அழகியல் என வேறொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதனால்.

விஷ்ணுபுரம் அதன் அடிப்படைக்கேள்விகளால் வேறெந்த நவீனப்படைப்பையும் விட இந்தியாவில் வாழும் ஒருவரின் அந்தரங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஆலயங்களின் அருகே வாழ்கிறார்கள். பெரும்பாலான ஊர்களில் அண்ணாந்து பார்த்தால் தலைக்கு மேல் கோபுரங்கள் எழுந்து, தெய்வங்கள் குவிந்து கிடக்கின்றன. மனிதர்களைவிட அதிகம் தெய்வங்கள் வாழும் நிலம். இந்நிலத்தின் அக எதார்த்தம் ஒன்றுண்டு. அது பல்லாயிரமாண்டுக் காலப் படிமங்களால் ஆனது. அதை எவ்வகையிலும் கருத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க அகவயமான ஒருபுள்ளியிலேயே குவிந்தவை நவீனத்துவ படைப்புகள்.

நான் வாழும் இந்நகரத்தில் மையமென அமைந்திருக்கும் இத்தெய்வம் வரலாற்றில் என்னை எங்கே பிணைக்கிறது? நான் ஒருமுறை கூடச் செல்லாவிடினும் இந்த ஆலயத்தின் தெய்வங்கள் என்னுள்ளே எங்கேனும் வாழ்கின்றனவா ?எத்தனை விட்டுச் சென்றாலும் அகலாமல் உடன் வரும் எனது குலதெய்வம் என்னுடன் எவ்வகையில் தொடர்பு கொண்டது? இவ்வினாக்களை எழுப்பிக்கொள்ளாத இந்தியர்கள், தமிழர்கள் மிகக்குறைவே. அவ்வினாக்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடுவதனாலேயே விஷ்ணுபுரம் தமிழில் வாசகர்களுடன் மிக அதிகமாக உரையாடி, மிக அதிகமானவர்களை உருமாற்றி, மிக அதிகமாக அவர்களை கண்டடையச் செய்த படைப்பாக திகழ்கிறது.

அத்துடன் அதனுடைய சிக்கலான வடிவம் அல்லது வடிவ விளையாட்டுத்தன்மை என்பது முழுக்க முழுக்க இந்தியப்புராணங்கள் சார்ந்தது. கதைசொல்லிக்குள் கதைசொல்லி வருவதும், கதைக்குள் கதைசொல்லி திகழ்வதும், கதைகளே கதைகளை ஏற்றும் மறுத்தும் தங்களை நெசவு செய்து கொள்வதும் இந்தியப் பெரும்புராணங்களில் உள்ளவையே. அந்த இயல்பை நவீனப் புனைகதைக்குரியதாக மாற்றிக்கொள்கிறது விஷ்ணுபுரம். ஆகவே ஒருபக்கம் நவீனத்துவத்தைக் கடந்த புத்தம்புதிய அழகியல் ஒன்றை உருவாக்கும்போதே முற்றிலும் இந்தியத் தன்மை கொண்டதாகவும் தமிழ்த்தன்மை கொண்டதாகவும், பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்ட மரபின் நீட்சியாகவும் அது அமைந்திருக்கிறது.

இன்று எனது தொடர்வாசிப்பில் நான் உணர்வதென்று ஒன்று உண்டு. சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் விஷ்ணுபுரத்திற்கு நிகரான உலக இலக்கியப்படைப்புகள் மிகச்சிலவே எழுதப்பட்டுள்ளன. என்றேனும் அது உலக வாசகர்கள் மத்தியில் செல்லவும் கூடும். இத்தருணத்தில் விஷ்ணுபுரத்தை எழுத நேர்ந்தமைக்காக நிறைவு கொள்கிறேன். என் ஆசிரியர் காலடியில் இத்தகைய ஒரு நாவலை படைக்கும் ஒரு நல்லூழ் எனக்கு வாய்த்தமைக்காக பெருமிதம் அடைகிறேன்.

இந்நாவலின் முதல் பதிப்பை எனது பெருமதிப்பிற்குரிய அன்னம் மீராவின் மகன் கதிர் வெளியிட்டார். அகரம் வெளியீடாக வந்த அந்நாவல் அன்று பல நண்பர்கள் முன்பதிவு செய்து பணம் அனுப்பிய முதலீட்டில் அச்சாகியது. அதன்பின் கவிதா பதிப்பக வெளியீடாக பலஅச்சுகள் தொடர்ந்து வந்தன. பின்னர் நற்றிணையும் அதன்பின் கிழக்கு பதிப்பகமும் இந்நாவலை வெளியிட்டுள்ளன. இப்போது இந்நாவலின் பெயராலேயே நாங்கள் தொடங்கியிருக்கும் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதை வெளியிடுகிறது. இதன் முதல் வடிவை செப்பனிட்டு உதவியவர் எம்.எஸ். அவர்கள். அவர் இன்றில்லை.  இதனுடன் தொடர்புடைய ஒவ்வொன்றும் வரலாறாகிக் கொண்டிருக்கிறது.

அனைவரையும் நன்றியுடன் வணக்கத்துடனும் இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

ஜெ

நாகர்கோவில்

19.08.2022

விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 10:35

ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை துறந்து அலைந்த படைப்பாளிகள் கூர்ந்த அவதானிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஜி.நாகராஜன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 10:34

விஷ்ணுபுரம் விழா,கடிதம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

அன்புள்ள ஜெ

கடந்த வெள்ளியிரவு ரயிலேறி சனிக்கிழமையன்று விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் நேற்றிரவு இரயிலில் பயணித்து இன்று செவ்வாய் காலை வீடு திரும்பியாயிற்று. என் வாழ்நாளில் மேற்கொண்ட முதல் பெரிய பயணம் இதுவே. நாம் ஒரு பயணத்தை செய்திருக்கிறோம் என்ற உணர்வு செல்லும் உள்ள நிலக்காட்சிகள் மனதில் பதிவதால் நிகழ்வது. இப்பயணமோ இரவு ரயிலில் தூக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதால் விஷ்ணுபுரம் விழா கனவு போல இருக்கிறது. இனிய கனவொன்றின் மகிழ்வையும் ஊக்கத்தையும் கலைதலினால் வரும் சிறு துக்கத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது.

சனிக்கிழமை காலையில் அறைக்கு சென்று கிளம்பி நேராக விஜயபாரதி அண்ணா அவர்கள் மட்டுறுத்திய கார்த்திக் பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் அமர்வுக்கு வந்து சேர்ந்தேன். பாலசுப்ரமணியம் அவர்களின் படைப்புகளை படிக்க இயலவில்லை. நான் இறுதி நேரத்தில் ராச லீலாவை வாசித்து முடித்துவிட்டு நட்சத்திரவாசிகள் வாசிக்கலாம் என போட்ட கணக்கு தவறிவிட்டது. எனவே அவரது அமர்வை கவனிப்பதில் சிரமம் இருக்குமென நினைத்திருந்தேன். அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது படைப்புலகு சார்ந்து சில குறிப்பிட்ட விஷயங்களை அவர் எழுதும் ஐடி களம் சார்ந்து எழுந்த வினாக்களால் உள்சென்ற அமைய முடிந்தது.

பாலசுப்ரமணியத்தின் படைப்பில் ஏன் அடிப்படை வினாக்கள் எழுப்பப்படுவதில்லை என்று ரம்யா அக்கா எழுப்பிய கேள்விக்கு, தன்னை பாதிப்பவற்றையே தான் முடிகிறதென்றும். தான் அதிகமும் மிக சிறிய அன்றாட விஷயங்களாலேயே சீண்டப்படும் ஆளுமை கொண்டவன் என்றும் பதிலளித்தார். இக்கேள்வியை தொடர்ந்து அவரது நட்சத்திர வாசிகள் நாவல் ஐடி துறையை ஒரு காலக்கட்டத்து தமிழ் சூழலை குறியீட்டு ரீதியாக ஒட்டுமொத்தமாக பதிலளிக்குமா என்ற உங்களது கேள்விக்கு ஆம் என நம்புவதாக சொன்னார்.

நட்சத்திர வாசிகள் நாவலின் உருவாக்கம் குறித்து அவர் பேசியது, அடுத்த தலைமுறை இளம்படைப்பாளிகளுக்கான ஒரு படிப்பினை என்றே கொள்ள முடியும். மின்னணு தொழில்நுட்ப துறை குறித்து முன்னர் வெளிவந்த நாவல்களை வாசிக்காது எழுதிய முதல் பிரதியில் ஏறத்தாழ முக்கால் வாசி பகுதிகள் தன் முன்னோடி எழுத்தாளரை ஒத்திருந்தது என்று குறிப்பிட்டார். மேலும் ஐடி துறையில் கிடைக்கும் பணி நிறைவு அனுபவம் குறித்த அவரது புரிதல்கள், புதிதான துறையொன்று தமிழ் கதையுலகத்தில் நுழையும் போது அவர் கையாளும் கலைச்சொற்களுக்கான மொழியாக்கம் சார்ந்த செயல்களின் தன்மை சார்ந்து விவாதம் சிறப்பாக அமைந்தது. இது தவிர தனது நாவல்களில் ஏன் பாலியல் விஷயங்கள், கிளப்கள் பதிவாகவில்லை என்ற வினாக்களுக்கு தான் அத்தகைய அனுபவங்கள் எதையும் காணவில்லை என்று சொல்லியிருந்தார்.

சிறிய தேநீர் இடைவெளிக்கு பிறகு அடுத்து கமலதேவியின் அமர்வு ரம்யா அக்கா மட்டுறுத்துநராக செயல்பட தொடங்கியது. கமலதேவி தன் படைப்புகளின் மைய இழையாக அன்பே இருப்பதாக குறிப்பிடுகிறார். உங்கள் படைப்புலகில் ஏன் இருள் சார்ந்த விஷயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்ற கேள்விக்கு தான் அன்பில்லாத இருளிலிருந்தே எழுத தொடங்குவதாகவும் ஆனால் அன்புள்ள இடத்திற்கு வந்து சேர்வதாகவும் கூறியிருந்தார். அந்த அமர்வில் ஆரம்பத்தில் கமலதேவி பேச தொடங்கிய போது சாந்தமான ஒருவரின் குரல் போலிருந்தது.

ஆனால் அவர் கண்ணிவைத்த கேள்விகளை எதிர் கொண்ட விதத்தில் அவருக்குள்ளிருந்த துடுக்குத்தனமும் சாமர்த்தியமும் கொண்ட ஒருவர் எழுந்து வந்தார். குறிப்பாக நீங்கள் மனித மையத்தை வலியுறுத்தும் உங்களுடைய எழுத்துகளை பெண்களுக்கு எதிரான எழுத்து என்று கேட்ட கேள்விக்கு அளித்த பதிலில் காணமுடிந்தது. அவர் அன்பை நிலையானதாக நினைக்கிறாரா என்ற என் கேள்விக்கு நெகிழ்வானது என்று தான் கருதுவதாக பதிலளித்தார். ஒட்டுமொத்தத்ததில் கமலதேவியின் அமர்வு சுவரசியமான ஒன்றாக அமைந்தது.

மதிய உணவு இடைவெளிக்கு பிறகு நண்பன் விக்னேஷ் ஹரிஹரன் மட்டுறுத்த அகரமுதல்வன் அவர்களின் அமர்வு தொடங்கியது. இன்று தீவிரமாக எழுதி கொண்டிருக்கும் ஈழத்தின் இளம்படைப்பாளியான அவரது இவ்வருடத்தியே அமர்வுகளில் சிறப்பான ஒன்று. அவரது படைப்புகளில் பிரதிபலிக்கும் ஓங்கியெழும் சத்தத்தின் தன்மை அந்த அமர்விலும் பிரதிபலித்தது. அது நேர்மையாக இருந்தது எவருக்கும் துறுத்தலை கொடுக்கவில்லை.

அவரது படைப்புலகின் சத்தத்தை தான் பிறந்து வளர்ந்த வாழ்க்கை சூழலில் இருந்து பெற்று கொண்டதாக குறிப்பிட்டார். மேலும் நவீன தமிழிலக்கியம் கூறும் குறைத்து தன்மைக்கு மாற்றாக படைப்பில் வெளிப்படும் சத்தமும் ஒருமுறையாக இருக்கலாம் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சத்தம் என்பது அவர் படைப்புகளில் போர் பிரச்சாரம் போல் ஒலிக்கிறதே என்ற தங்கள் கேள்விக்கு தான் எப்போதும் போருக்கு எதிரானவன் மட்டுமே. தன்னுடைய சத்தமெல்லாம் போரால் நிகழ்ந்த மானுட அவலத்திற்கான குரல் என்றார்.

உங்களைஎந்த மரபின், எவரின் தொடர்ச்சியாக வரையறுத்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு தன்னை நவீன இலக்கிய ஆசிரியர்களின் தொடர்ச்சியாக கருதமால் தமிழ் சைவத்தின் நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் வழித்தோன்றலாக கருதுகிறேன் என்றார். நவீன தமிழிலக்கியமென்றால் பிரமிளை முன்னிறுத்துவேன் என்றார். தன்னை எப்போதும் முதன்மையாக ஒரு சைவனாகவே உணர்வதாக சொன்னார். இழந்து போன அவரின் நிலம் குறித்து காவிய நாவலொன்றை எழுதும் திட்டம் உள்ளதா என்ற உங்கள் கேள்விக்கு ஆம் என்றும் அதற்கு தன்னை தயார்படுத்தி கொண்டுவருவதாகவும் கூறியிருந்தார்.

அடுத்த அமர்வில் மணவாளன் அவர்கள் மட்டுறுத்த மொழிப்பெயர்பாளர் குளச்சல் மு.யூசுப் பங்கேற்றார். தனது பின்தங்கிய வாழ்க்கை சூழலில் இருந்து வாசிப்பின் மேலான தீரா ஆர்வத்தை பகிர்ந்து கொண்டார். அதற்கு உதாரணமாக மலையாளமும் ஆங்கிலமும் படிக்க தெரியாத போதே அம்மொழிகளில் வரும் இதழ்களை வாங்கி தன் சேகரிப்பில் வைத்திருந்ததை கூறிப்பிட்டார். தமிழ் இலக்கியத்திற்கான யூசுப்பின் முதன்மை பங்களிப்பு பஷீரின் நாவல்களே. அம்மொழியாக்கம் குறித்த கேள்விகள், அப்பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் வாசகர்களுக்கும் அறிதலானவை.

உதாரணமாக மொழியாக்கத்தில் ஒரு கலாச்சாரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கொண்டு வரும்போது என்னென்ன மாற்றங்களை மேற்கொள்கிறீர்கள் என்ற விக்னேஷின் கேள்விக்கு தான் மாற்றங்களை செய்வதில்லை என்றும் மாறாக முடிந்தவரை பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இணை வைக்கிறேன் என்றார். இம்மாதிரியான பதில்களை கூர்ந்து கவனித்து உள்வாங்கி கொள்ளுதலின் அவசியம் உள்ளது. மேலெழுந்தவாரியாக மாற்றமும் இணை வைத்தலும் என்று தோன்றலாம். ஆனால் மாற்றம் என்று கொள்கையில் மனம் இயல்பாகவே தனக்கு சாதகமான வடிவத்தில் பிறமொழி படைப்பை வளைத்து மொழியாக்கம் செய்யும் தன்மையை பெற்று விடுகிறது என்று கொண்டால் நன்று.

அவர் கையாளும் அரபு சொற்களை குறித்து பேசுகையில் முடிந்தவரை தான் தமிழ் சொற்களையே கையாள்வதாகவும் அவற்றை சங்கத்தமிழில் இருந்து கொணர்வதால் சற்று வித்தியாசமாக தோன்றுவதாக கூறினார். மொழியாக்கத்திற்கான படைப்புகளை தேர்வு செய்தல் குறித்து சொல்லுகையில் தன்னுடையது புறவயமான அளவுகள் இல்லையென்றும் இதுவரையிலான தன் வாசிப்பு ரசனையிலான அகத்தேர்வே என்று முன்மொழிந்தார்.

திருடன் மணியன் பிள்ளை போன்ற நூல்களை ஏன் மொழிப்பெயர்கிறீர்கள் என்று வினவிய போது அவை தான் கனவில் மட்டுமே செய்யும் செயல்களை பார்க்கும் பரவசத்தை அளிப்பதால் செய்கிறேன் என்றார். மலையாளத்தின் முக்கிய ஆசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களை மொழியாக்கம் செய்வது குறித்த தங்கள் கேள்விக்கு அவை தனக்கு மறக்கவில்லை என்றும் அவற்றை செய்யும் திட்டம் உள்ளது என்றும் கூறினார்.

மாலை தேநீர் இடைவெளிக்கு பிறகு கார்த்திக் புகழேந்தி அவர்களின் அமர்வு புதுவை தாமரைக்கண்ணன் மட்டுறுத்த தொடங்கியது. புகழேந்தியின் அமர்வில் முக்கியமாக என்னை கவர்ந்தது, தனக்கு இருக்கும் ஊசலாட்டங்களை வெளிப்படையாக முன்வைத்தமை. இதற்கு சான்றாக அவரது கதைகளில் கதைச்சொல்லலுக்கு நிகராகவே தெரிந்த தகவல்கள் அனைத்தையும் கொட்டிவிடும் தன்மை மிகுந்து இருக்கிறேதே என்ற ரம்யா அக்காவின் கேள்விக்கு ஆம் தன்னிடம் தொடர்ச்சியாக அந்த ஊசலாட்டம் இருக்கிறது என்றும் முன்பை விட இப்போதும் கட்டுப்படுத்தி ஒழுங்காக்கியும் வருகிறேன் என்று சொன்னார். அதே போல வற்றாநதி தொகுப்பு குறித்து எழுந்த கேள்வியின் போது தான் எழுத வந்த பின்புலத்தை பகிர்ந்துகொண்டார்.

2011 ஆம் ஆண்டு வாக்கில் தான் எழுத தொடங்கிய காலத்தில் ஏடிம் இயந்திர காவலர் பணியில் இருந்ததையும் அப்போது தனக்கு முறையான இலக்கிய பரிச்சியம் இல்லாத காலக்கட்டமாதலால் பொது ரசனை கதைகளை எழுதி வந்ததையும் அது தன் வளர்ச்சியில் வேகத்தடையாக அமைந்ததையும் குறிப்பிட்டார். நாட்டுப்புற இலக்கியம் மற்றும் கள ஆய்வுகளில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கான காரணங்களை வினவியபோது இயல்பாகவே சிறு வயதில் தனக்கு கதை கேட்பதன் மீதான ஆர்வம் இருந்ததால் அத்துறை பக்கம் சென்றதாகவும் ஆனால் அதை அதி தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அவருடைய சிந்தனை இடதுசாரி குரல் ஒலிக்கிறதே என்ற வினாவிற்கு தனக்கு அரசியலியக்கங்கள் வழி அச்சிந்தனை அமையவில்லை என்று சொன்னார். வாழ்க்கையில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட பார்வைகள் தன்னை இடதுசாரி சிந்தனை கொண்டவனாக வெளிக்காட்டுகின்றன என்றார்.

அமர்வின் இறுதி கேள்வியாக ராஜகோபாலன் சார், கி.ரா அவரது வாழ்வில் செலுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார். ஆய்வாளர் கழனியூரன் அவர்களின் வீட்டில் தனக்கு கிடைத்த வேலையின் அவரது மிகப்பெரும் நூலகத்தை பயன்படுத்தி கொள்ள கிடைத்த வாய்ப்பு மறக்க முடியாதது. அங்கே தான் முதன்முதலில் கதைசொல்லி இதழை வாசித்தேன். கழனீயூரன் அவர்கள் கி.ரா விடம் பேசி அவ்விதழை மீள கொண்டு வர ஏற்பாடு செய்தார். அப்பணிக்கு தனக்கு கிடைத்தது பெரும் அறிதலை தந்தது. முதன்மையாக தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளை படிக்கும் வாய்ப்பும் அவர்களை நேரில் சென்று சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது. இக்காலத்திலேயே எனக்கு கி.ரா வுடன் நெருக்கம் ஏற்பட்டது. தாத்தா தான் இன்றுள்ள தன் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார் என்று சொல்ல வேண்டும். அவரிடமிருந்து தான் தனக்கு முறையான இலக்கிய பரிச்சியம் ஏற்பட்டது என்று தன் நன்றியுணர்வை மேடையில் நினைவுகூர்ந்தார்.

அன்றைய நாளின் இறுதி அமர்வு யோகேஸ்வரன் அண்ணா மட்டுறுத்த மூத்த பெண்ணெழுத்தாளர் அ.வெண்ணிலா அவர்களுடன் நிறைவுற்றது.

வெண்ணிலா அவர்களின் அமர்வு பெரிதும் அபுனைவும் புனைவும் சார்ந்த கேள்விகளலான சுவாரசியம் நிறைந்த ஒன்றாக அமைந்தது. அவரது படைப்பில் புனைவுக்கு நிகராகவே அபுனைவு சார்ந்தும் பெரும்பகுதி வந்துள்ளது பதிப்பு பணியில் அனந்தரங்கம்பிள்ளையின் டைரி குறிப்புகளை பதிப்பித்தது குறிப்பிடத்தக்கது.

போகன் சங்கர் சார், கங்காபுரத்தில் வரும் ஹிரண்ய கர்ப்பம் என்ற சடங்கின் அர்த்தத்தை எப்படி நேரெதிராக மாற்றலாம் என்ற கேள்வியை எழுப்பினார். அதனை தொடர்ந்து நீங்களும் டி.டி.கோசம்பியின் ஆய்வுகளை சுட்டிக்காட்டி ஹிரண்ய கர்ப்பம் என்பது பாரம்பரியமாக மறுபிறப்பு இன்மைக்காக செய்யப்படுவது, சென்ற நூற்றாண்டு வரைக்கும் கூட திருவனந்தபுரத்தில் நடைப்பெற்றதை சுட்டி காட்டினீர்கள். இந்நிலையில் அதை எப்படி மாற்றலாம் என்ற கேள்விக்கு முழுமை ஏற்பை தருமளவு பதில் அமையவில்லை. அந்த அமர்வின் சூடான ஒருபகுதியான இருந்தது.

இது தவிர, அவர் தற்போது எழுதி கொண்டிருக்கும் நீரதிகாரம் குறித்து சொன்னவை, அபுனைவுகளை வாசிக்கவோ எழுதவோ சுவரசியமான வழிமுறைகளை எடுத்து காட்டின. முதன்மையாக அத்தொடர் பெரியார் அணை பற்றிய தகவல்களால் நிரம்பியது என்றாலும் அதன் உருவாக்கத்தில் பங்கு கொண்ட வாழ்க்கை பின்னணியை ஆய்வு செய்து எழுதுவதன் ஊடாக முழுமை பார்வையை அடைய முடிகிறது.

புனைவாசிரியன் புனைவல்லாத விஷயங்களை அணுகும் போது கைக்கொள்ளும் முறையாக அதனை பார்க்கலாம். தேவதாசிகளின் வாழ்க்கை முறை நாயக்கர்கள் காலத்திலேயே சரிவடைய தொடங்கியது என்று கூற காரணத்தை வினவுகையில் நாயக்கர் காலத்திலேயே ராஜதாசி என்ற முறை உருவாகியதை கோடிட்டு காட்டினார். வெண்ணிலா அவர்களின் களம் பெரிதும் தரவுகள் மேல் வரலாற்று குறிப்புகளை கொண்டு புனைவுகளையும் ஆய்வுகளையும் நிகழ்த்துவதால் தகவல் சார்ந்த தன்மை கொண்டிருந்தது.

இரவுணவுக்கு பின் செந்தில் சாரின் வினாடி வினா போட்டி தொடங்கியது. முதலில் அது கொஞ்சம் தீவிரமும் இறுக்கமும் நிறைந்ததாக இருக்கும் என்று கற்பனை இருந்தது. ஆனால் விஷ்ணுபுரம் அமைப்பின் எந்த தீவிரமும் பெருங்கொண்டாட்டமாகவே நிகழும் என்பதற்கு அந்நிகழ்வு ஒரு உதாரணம். என்னால் இரு கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது ஆச்சர்யம் தான். இரண்டும் எளியவை என்பதே காரணம். பெரும்பாலான கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் விடைகள் வந்த வண்ணம் இருந்தன. கடினமான கேள்விகளும் சில நிமிடங்களில் தீர்க்கப்பட்டு விட்டன. அற்புதமான இரவு போட்டியாக அமைந்தது.

மறுநாள் காலை குவிஸ் செந்தில் சார் மொழிப்பெயர்ப்பாளராகவும் மட்டுறுத்துனராகவும் செயல்பட இலக்கிய முகவர் கனிஷ்கா குப்தாவும் கலச்சார செயல்பாட்டளர் மேரி தெரசி குர்கலங்கும் பங்குபெற்ற அமர்வு நடந்தது. இந்திய அளவிலான இலக்கிய மொழியாக்கங்கள் ஆங்கிலத்தில் எவ்வாறு பதிப்பிக்க படுகின்றன என்பது குறித்த அறிமுக அமர்வாக இருந்தது. இன்று பெரும் பதிப்பகங்களுக்கு மாற்றாக சிறிய பதிப்பகங்களும் எழுந்து வருவது பதிப்பு வாய்ப்புகளை அதிகரித்துள்ளன. நல்ல இலக்கிய பிரதிகளை தேர்ந்தெடுத்து பதிப்பகங்களிடம் கொண்டு சேர்க்க இலக்கிய முகவர்களின் பங்கு இன்றியமையாததாக மாறியுள்ளது.

இலக்கிய முகவரின் வருமானம் என்பது எழுத்தாளரின் ராயல்டியில் இருந்தே பெறப்படுகிறது. எனவே எழுத்தாளருக்கும் முகவருக்குமான சிறப்பாக அமைய வேண்டியுள்ளது. பொதுவான சந்தேகத்திற்கு மாறாக இலக்கிய முகவர்கள் எழுத்தாளர்களுக்கு சார்பானவர்கள். ஏனெனில் அது நீடித்த வளர்ச்சியின் குறியீடாக அமைகிறது. இவற்றை கனிஷ்கா அவர்களின் பேச்சின் சாரம்சமாக தொகுக்கலாம். இது தவிர பதிப்பு பணியில் ஏற்பாடும் வெவ்வேறு பட்ட சந்தேகங்கள் குறித்து அவ்வமர்வு மிக சுவராசியமாக அமைந்தன. கேள்விகள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருந்தன. ஆங்கிலம் ஒரு தடையாக அமையவில்லை. மொழிப்பெயர்ப்பும் நன்றாக இருந்தன.

அடுத்த அமர்வு இந்திய ஆட்சி பணியிலிருக்கும் ராம் அவர்கள் மட்டுறுத்த சிறப்பு விருந்தினர் மமங் தாய் பங்கேற்றார். அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளரான மமங் தாய் தான் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வான காலக்கட்டத்தை குறித்து பேச தொடங்கினார். அவர் இந்திய ஆட்சி பணிக்கு தேர்வான காலத்தில் தென்கிழக்கு மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இந்திய ஆட்சி பணி அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று அதனுடைய முக்கியத்துவம் எங்களுக்கு புரிந்திருக்கவில்லை. எனவே அவ்வேலையை விட்டுவிட்டு இதழாளராக பணிபுரிய தொடங்கிவிட்டேன். இன்று ஒருவர் அப்படி ஆட்சி பணியில் இருந்தால் அதை விடாமல் அதன் சலுகைகளை பயன்படுத்தி கொண்டு முன்னேறவே அறிவுறுத்துவேன் என்று ராம் அவர்களை சுட்டிக்காட்டினார். மமங் தாய் அவர்களை அறிமுகப்படுத்துகையில் ராம் அவர்களும் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். இதன் பின் கேள்விகள் எழ தொடங்கின.

லோகமாதேவி டீச்சர் மமங் தாய் அவர்களின் படைப்புகளில் வெளிப்படும் இயற்கை குறித்த அவதானிப்புகள் பழங்குடி தாவரவியலில் சிறப்பு பட்டம் பெற்று பணியாற்றி வரும் பேராசிரியையாக தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் அது குறித்த அவரது பார்வைகளை பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார். இதழாளராக மாறவில்லை என்றாலும் தானும் தாவரவியலாளராக மாறியிருப்பேன் என்று கூறிய மமங் தாய் தன் சொந்த ஊருக்கு செல்கையினூடாக இயற்கையுடன் தன்னை பிணைத்து கொண்ட விதத்தை கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பாக பென்சாங்கை மையப்படுத்தி எழுதுவது குறித்த கேள்விக்கு தான் முதலில் அருணாச்சலம் என்று குறிப்பிட்டே எழுதியதாகவும் பின்னர் பதிப்பாளர் அதன் தனித்தன்மை குறித்து வினவிய போது பென்சாங் என்றும் குறிப்பிட்டார். மேலும் பென்சாங்கில் தான் எழுதுவது தன்னுடைய ஆதி குடியை குறித்தே. அருணாச்சலம் முழுக்க பல்வேறுபட்ட மக்கள் உறுதியான இணைப்பு பாலங்கள் தனித்தனி இனங்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார். அவரது எழுத்தின் கச்சா பொருட்களை பற்றி கூறுகையில் தன் கிராமத்து உறவினர்களுடனான உறவும் பயணங்களுமே என்று குறிப்பிட்டார்.

மேலும் தன்னுடைய பார்வை வெளியிலிருந்து உள்சென்று பார்ப்பவரின் கோணமாகவே உள்ளார். இது தவிர அண்டை நாடுகளால் சூழப்பட்டு இருப்பது குறித்து வினவப்படுகையில் அதன் அரசியல் நிலையின்மைகளால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வருத்தத்தையும் குறிப்பிட்டார். அப்புறம் அவர்கள் மாநிலத்தில் செய்யப்படும் இலக்கிய விழாக்கள், மொழி வளர்ச்சிக்கான காரணங்கள் என மமங் தாய் அவர்களின் அமர்வு சிறப்பாக நிறைவுற்றது.

மதிய இடைவெளிக்கு நீங்கள் மட்டுறுத்த சாரு நிவேதிதா அவர்களின் அமர்வு தொடங்கியது. இன்றைய பதிவில் நீங்கள் எழுதியது போலவே சாருவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பிசிறில்லாத கேள்விகளால் சிறப்பாக நடைப்பெற்றது அவ்வமர்வு. சாரு அவரின் படைப்புகளின் மொழி போலவே பட்டும்படாமலும் சுற்றி வளைத்து குழப்பமூட்டும் வகையில் பதிலளித்த படி இருந்தார். அவர் இவ்வகை படைப்பிற்கு வருவதற்கான காரணம் என்ன என்று வினவுகையில் அது தன்னை குறித்த ஆவணப்படத்தில் உள்ளது என்று சொன்னவர் அதோடு விடாது இக்கேள்விக்கு என்னை விட ஜெயமோகனே நல்ல பதில் கொடுப்பார் என்றார்.

இப்படியாக அவரது பாணி தொடர்ந்தது. இதேபோல உங்களுடைய ஔரங்கசீப் நாவலின் பார்வையில் மட்டும் ஒரு ஒருங்கிணைவு தன்மை உள்ளதே என்ற கேள்விக்கு நினைவில் குறித்து கொண்டேன், தளத்தில் எழுதுகிறேன் என்று விட்டார். உங்கள் படைப்பில் தாக்கத்தை செலுத்திய தமிழ் படைப்பாளிகள் என்ற வினாவுக்கு ஓரிரவு தேவைப்படும் பதிலளிக்க என்றார். அவரது படைப்புகளின் கட்டமைப்பு குறித்து வினவுகையில் அதன் உள்ளோட்டம் நனவிலியாலும் திருத்தம் பிரக்ஞையுடனும் மேற்கொள்ளப்படுகிறது என்றார். சாருவின் அமர்வு சாருவிய பதில்களாலும் ஜெ விய கேள்விகளாலும் சிறப்புற அமைந்தது என்றால் இது ஒரு சாருவிய பாணியிலான வரியாக அமைந்து விடுகிறது.

இந்த அமர்வுகளில் இளம் படைப்பாளிக்களுக்கான அமர்வுகளில் அளிக்கப்பட்ட சில பதில்கள் விழாவிற்கு முன்னதாக தளத்தில் வெளியான விஷால் ராஜா அவர்களின் கட்டுரையின் விமர்சனங்களுக்கு சான்று கொடுப்பது போல் இருந்தன. இவ்விடத்தில் அது குறித்து விவாதிக்க இயலாது. ஆனால் அவ்விமர்சன கட்டுரையின் மேலான விவாதங்கள் நிக்ழ்வது அவசியம் என்று மட்டும் படுகிறது. (இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா )

அடுத்து ஐந்தரை மணி அளவில் சாரு நிவேதிதா குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அன்றைய நிகழ்விலேயே சாரு அப்பட உருவாக்கத்தின் இறுதி நேர நெருக்கடியை பற்றி கூறி கொண்டே இருந்தார். சாருவின் நண்பர்களால் எடுக்கப்பட்ட படம், அவரின் படைப்புலகை கச்சிதமாக பிரதிபலிப்பதாக அமைந்தது. சில விடுபடல்கள் இருந்தன. அவை சீர்மை செய்யப்பட்டு வெளியிடப்படும் என அராத்து சாருவின் தளத்தில் எழுதியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். மற்றபடிக்கு சாருவின் ஆவணப்படம் அவரை போல இருந்தது.

ஆவணப்பட திரையிடலுக்கு பின் விழா நிகழ்வு விரைவாக தொடங்கியது. சாரு குறித்த உரைகளை இங்கே சொல்ல அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இத்தகைய ஒவ்வொரு விழாவின் உரையும் தமிழிலக்கியத்திற்கு ஒரு பெருங்கொடை.

விழாவிற்கு பின் இறுதியாக மேடை புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்பாவிடம் அடம்பிடித்து கூட்டி வர சொல்லி எடுத்து கொண்டேன். பின்னர் வெவ்வேறு நண்பர்களை சந்திக்க முடிந்தது. சந்திக்க நினைத்து தவறியவர்களும் உண்டு. விஷ்ணுபுரம் விருது விழாக்களில் இரவு கொண்டாட்டமான உங்கள் பேச்சை கேட்க வர இயலவில்லை. மறுநாள் ஜெ இருப்பார் என்று நினைத்தது தவறாக போய்விட்டது. இல்லையெனில் அன்றிரவே நானும் வந்து சேர்ந்திருப்பேன். நீங்கள் காலையில் கிளம்பும் செய்தியை கேட்டப்பின் என் தங்கும் அறை வரை ஒலித்த நண்பர்களின் சிரிப்பொலி ஏக்கத்தை வரவழைத்தது. அடுத்த முறை தவற விடக்கூடாது என முடிவு.

அடுத்த நாள் குஜராத்தி சமாஜில் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைக்கு நண்பகல் வரைக்கும் ஏவி மணிகண்டன் அவர்கள் நிகழ்த்திய புகைப்பட கலை குறித்த உரை சிறப்பாக அமைந்தது. புகைப்பட கலைக்கும் ஓவிய கலைக்குமான தொடர்புகள், ஒன்று மற்றொன்றை பாதித்த விதம், ஒரு கலை அணுகுவதற்கான கலச்சார பின்னணியும் அதன் மூலம் கிடைக்கும் கலையனுபவமும் என்று விரிவாக்க அமைந்தது. மதிய பிறகு நண்பர்களை சந்தித்து பேசியவாறு அவரவர் நேரத்திற்கு ஏற்றவாறு கிளம்பி சென்றோம்.

இந்த பயணம் இத்தனை இனிமையாக சாத்தியப்பட்டது என் அப்பாவிற்கு முதற்பொறுப்பு உண்டு. அவருக்கு என் நன்றிகள் சொன்னால் அது பொருத்தமற்றது. அவர் மகிழும் வண்ணம் சிறப்புற என்னை தகவமைத்து கொள்வதே அவருக்கு என் நன்றியாக இருக்கும். எல்லா பிள்ளைகளை போலவே எனக்கும் அப்பாவின் சிந்தனையோட்டத்துடன் மன விலக்கம் உண்டு. ஆனாலும் அவரே என் அடித்தளம். அங்கிருந்தே நான் எழுந்து பறக்கும் தூரங்கள் சாத்தியப்படுகிறது. மேலும் என் அம்மாவும் தம்பியும் முக்கியமானவர்கள். அப்பாவின் தயக்கத்தை களைய எனக்கு பெரிதும் பக்கபலமாக இருப்பது அம்மாவின் சொற்கள். குடும்பத்தில் இருந்து பெற்று கொண்டே இருக்கிறேன். அவர்களுக்கு என்று எதையாவது என்னால் கொடுக்க முடியுமெனில் அறிவில் ஒளி கொள்ளுதல் மட்டுமே.

அடுத்ததாக நண்பர்களின் அன்பும் உதவியும் நன்றிக்குரியவை. முதலாவதாக தளத்தில் வந்த என் கடிதத்தை பார்த்துவிட்டு பயணத்திற்கான விதை நட்டவர் கணேஷ் பெரியசாமி அண்ணா. அவரது ஊக்கத்தின் அடிப்படையிலேயே வீட்டில் இப்பேச்சை எடுத்தேன். வீட்டில் சம்மதம் கிடைத்த பின்னரும் ரயில் பயண செலவும் கிண்டிலில் விருந்தினர்களின் நூலை வாங்கி தந்தும் உதவினார். அவருக்கு என் நன்றிகள்.

உடன் வந்த நண்பர்களான விக்னேஷ், கமலநாதன்,விஜயபாரதி அண்ணாக்களுக்கு நன்றி. இரண்டு நாட்களுக்கும் சக்கர நாற்காலி ஏற்பாடு செய்து காலையில் ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வந்த ஆனந்த அண்ணாவிற்கு அன்பும் நன்றியும், புத்தகங்கள் வாங்கி கொடுத்த மனோபாரதி அக்கா மற்றும் புதுவை உமா வாசகர் அவர்களுக்கும் நன்றிகள். சாருவின் தனிவழி பயணி கட்டுரை தொகுப்பை எனக்கென எடுத்து வந்திருந்த ரம்யா அக்காவிற்கு அன்பு.

சக்திவேல்

இப்படியாக என் நன்றி பட்டியலை சொல்ல வேண்டுமென்றால் அதுவே ஒரு பக்கத்திற்கு சென்று விடும். எனவே இங்கே நிறுத்தி கொள்ளலாம். விஷ்ணுபுரம் அமைப்பாளர்களுக்கு நன்றிகள். சிறப்பான தங்குமிடமும் உணவும் அருமை. இத்தகைய கனவு விழா ஒன்றிற்கான மைய விசையாக இருக்கும் உங்களுக்கு அன்பும் நன்றியும். உங்கள் மாணவனாக என் அர்ப்பணிப்பை வழங்குகிறேன் ஜெ.

அன்புடன்

சக்திவேல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 10:34

இவான் கார்த்திக் எழுதிய ‘பவதுக்கம்’

இவான் கார்த்திக் எழுதிய ‘பவதுக்கம்’ நாவலை யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அச்சில் வருவதற்கு முன்பே இதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அளித்த பரவசத்தை, ஜெயமோகன் உள்ளிட்ட இலக்கிய உலக நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

புத்தகம் வெளிவந்ததும் முறையான விமர்சனக் குறிப்பொன்றை எழுதலாம் என ஆரம்பித்ததும் பெரும் தயக்கம் எழுந்தது. இறுக்கமாக பின்னப்பட்ட நிகழ்வுகள், அன்றாடத்தில் எதிர்கொள்ள அரிதான கதாபாத்திரங்கள், உறவுகள் சார்ந்தும் உணர்வுகள் சார்ந்தும் மிக நுட்பமான விவரணைகள் போன்றவற்றால் ஆக்கப்பட்ட இப்படைப்புக்கான விமர்சனம் சுவாரஸ்யச் சிதைவாக (spoiler) மட்டுமே எஞ்சிவிடுமோ என்று தோன்றியது. பாவனைகள் ஏதுமின்றி இயல்பாக, அதே சமயம் கச்சிதமான வடிவத்தில் சொல்லப்பட்டிருக்கும் இக்கதைக்கு விமர்சன வழிகாட்டுதல் ஏதும் தேவை இல்லை என்பதே உண்மை. படிக்கத் தொடங்கியதுமே வாசகனை அணுக்கமாக உணரச்செய்யும் கதையாடல் நிகழ்ந்துள்ளது.

நார்வே நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் முன்சின் நோயறையில் மரணம்’ என்ற ஓவியம் ஒன்றைக் கண்டபோது இந்த நாவலுக்கான கரு முளைவிட்டு அதனை தன் கனவுகள் வழியே விரித்தெடுத்ததாகக் கூறுகிறார் இவான் கார்த்திக். தமிழ்ச் சூழலுக்கு அந்நியமானதென்று சொல்லத்தக்க ஐரோப்பியப் பின்னணி கொண்ட ஒரு ஓவியத்தால் உந்தப்பட்டு கற்பனை மூலமாக நிகர்வாழ்வொன்றையும், அவ்வாழ்வெனும் நாடகத்தின் கதாபாத்திரங்களையும் அச்சு அசலாக படைத்து நம் முன் நிகழ வைத்துள்ளார்.

மரணத்தோடும் அதற்குக் காரணமான நோயோடும் துவங்குகிறது ‘பவதுக்கம்’. வஞ்சமும், துரோகமும், ஏமாற்றமும்,  முறைமீறிய உறவும் வாழ்வெனும் பெருங்கடலை நிறைத்திருக்கின்றன. அக்கடலில் எழுவதெல்லாம் துன்ப அலைகளே. இனியதென்று ஒன்று கூட இல்லையா என்ற கேள்வி துரத்திக்கொண்டே வருகிறது. ஆனால் வாசித்து முடிக்கையில் கிடைக்கும் நிம்மதி அலாதியானது. நாவலில் இடம்பெறும்  எதிர்மறையானவை அனைத்தும் நம்மை பதட்டத்துக்குள்ளாக்காமல், ‘பவதுக்க’த்தில் தள்ளாமல் ஒருவகை ஆறுதலை, அமைதலை, நிறைவை  அளிக்கின்றன.

இவான் கார்த்திக், ஆனந்த் ஸ்ரீனிவாசனுடன்

மரணத்தைச் சொல்வதன் மூலம் வாழ்வை, நோயின் விவரிப்பு வழியே நல்வாழ்வை, வாழ்வின் பொருளின்மையைச் சுட்டுவதன் மூலம் வாழ்வின் பொருளை நம் முன் படைக்கிறது பவதுக்கம். இந்த முரணே, புனைவுலகில் இப்படைப்பிற்கு தனி இடம் பெற்றுத் தருகிறது.

இவான் கார்த்திக் புதுயுகப் புனைவுலகில் ஒரு இனிய வரவு.

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

பவதுக்கம் – இவான் கார்த்திக் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 10:31

பனிநிலங்களில்.. கடிதங்கள்

அன்புள்ள ஜெ

பனி நிலங்களில் கட்டுரைத் தொடர் அழகான ஓர் அனுபவம். இதுவரை நீங்கள் சென்ற நிலங்களிலேயே இது மாறுபட்ட ஒன்று. இன்றைக்கு ஒருவர் கூகிள் எர்த் – விக்கிபீடியா வழியாகவே இதையெல்லாம் தகவல்களாகத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்தக் கட்டுரையில் மேலதிகமாக என்ன உள்ளது? பனியில் உறைந்த மரங்கள் வானில் தெரியவருவதை மெல்லிய தோலில் தெரியும் நரம்புப் பரவல் என எழுதியிருப்பதைப்போன்ற் நுட்பமான வர்ணனைகளும், ஸ்வீடனின் பண்பாடு பற்றிய விவாதங்களும், அதேபோல சில கூர்மையான மனப்பதிவுகளும்தான். நன்றி

ஜி.கோபாலகிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெ,

பனிநிலங்களில் கட்டுரையில் உள்ள தொடுப்புகள் வழியாக மேலும் மேலும் வாசிக்க முடிந்தது. ஃபின்லாந்து, கலேவலா, அஸ்கோ பர்ப்போலா,,,, ஸாமி மக்கள்,ஸ்டாக்ஹோம் நூலகம் ஆகியவற்றை வாசித்துக்கொண்டே செல்லச் செல்ல இந்தக் கட்டுரைத் தொடர் பல மடிப்புகளாக விரிந்துகொண்டே இருந்தது. ஸ்வீடனின் நூலகம் பற்றி பொதுவாக எங்கும் எந்தப் பயணியும் எழுதப்போவதில்லை. அங்கே வாழ்பவர்களுக்கே தெரிந்திருக்காது. லட்சக்கணக்கான நூல்களை ஒரே பார்வையில் பார்ப்பதென்பது ஒரு அற்புதமான அனுபவம்தான். அதை ஸ்டாக்ஹோமின் மூளை என சொல்லியிருப்பது இன்னும் அழகான அனுபவம்.

எஸ்.பிரபாகர்

பனிநிலங்களில் -8

பனிநிலங்களில்- 7

பனிநிலங்களில்-6

பனிநிலங்களில்- 5

பனிநிலங்களில்-4

பனிநிலங்களில் -3

பனிநிலங்களில்- 2

பனிநிலங்களில்- 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2022 10:31

December 26, 2022

அறிவின் விளைவா உறுதிப்பாடு?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நம்முடைய இறப்பை நம்மால் தத்துவார்த்தமாக கையாள முடிகிறது. நான் கடந்த மூன்று வருடமாக stoicism படித்து வருகிறேன். அதில் என்னுடைய இறப்பின் நிகழ்வின் வரை கொடுக்கப்பட்ட நேரத்தை அர்த்தமாக்கிக்கொண்டு வாழ வழி சொல்கிறது. ஆனால் மற்றவர்களின் இறப்பை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. நம்முடன் வாழ்வில் பயணம் செய்தவர்கள் இறக்கும் போது வெறும் லௌகீக தேவையில் மூழ்கி அந்நிகழ்வை கடப்பது அவர்களுக்கு மரியாதை தரும் ஒன்றாக எண்ணால் நினைக்க முடியவில்லை.

விஷ்ணுபுரம் நாவலில் என்னால் பிங்கலன் மனநிலையில் இருந்து கடந்து செல்ல முடிகிறது, பிங்கலனை நானாக எண்ணி கடக்க முடிகிறது. ஆனால் வீரன் இறந்ததை அப்படி கடக்க முடியவில்லை. அந்த பாகனாக என்னால் வலியை கடக்க முடியவில்லை. அது ஏன் ? நான் என் ஆணவத்தை அறிந்து வெறும் பிரபஞ்சத்தில் என்னை ஒரு சிறு துளியாக எண்ணி என் இறப்பை எண்ணி பயமோ பதட்டமோ அடைவதை தடுக்க முடிகிறது. ஆனால் மற்றவரின் இறப்பை அப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன்?

ஞானசேகரன் ரமேஷ்

*

அன்புள்ள ஞானசேகரன்,

இது பொதுவான, அறுதியான பதில் ஒன்றைச் சொல்லும்படியான கேள்வி அல்ல. அடிப்படைவினா.

அடிப்படை வினாக்களை இரண்டுவகையாக எதிர்கொள்ளலாம். ஒன்று தன் அனுபவம், இலக்கிய அனுபவம் வழியாக. அதற்கு தர்க்கப்படுத்துதல் பெரிய தடை. தர்க்கமற்ற ஒருவகையான அகநிலையில் கற்பனை மற்றும் உள்ளுணர்வு வழியாக அந்த வினாக்களை எதிர்கொள்ளலாம். விடைகள் நம்முடையவை. அவற்றை நாம் மொழிவெளிப்பாடாக முன்வைக்கலாம். இலக்கியமாக.

அவ்வாறு அனுபவம் சார்ந்து நீங்கள் பேசுவீர்கள் என்றால் அங்கே விவாதம் இல்லை. ஏனென்றால் அது உங்கள் அனுபவம். மேலதிக விடைகளையும் நீங்களே கண்டடைய வேண்டியதுதான்.

இரண்டாம் வழிமுறை தத்துவார்த்தமானது. அங்கே தர்க்கமே ஆயுதம். அதற்கு தத்துவத்தை முறையாகக் கற்கவேண்டும். உறுதிப்பாட்டுவாதம் கிரேக்கத் தொல்தத்துவங்களில் ஒன்று. அதிலிருந்தே பிற்கால கிறிஸ்தவ இறையியல்வாதங்களின் பல கொள்கைகளும் உருவாயின.

நம் மரபில் அதற்கு மிக அணுக்கமானது பகவத்கீதை முன்வைக்கும் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் கொள்கை. இன்பதுன்பங்களில் நிலைகுலையாமல், நெறிகளில் நின்று வாழும் நிறைநிலை, பௌத்தமும் சமணமும் அதையே கூறின.

உறுதிப்பாட்டு வாதம் உலகில் உருவானது மானுடநாகரீகத்தின் தொடக்ககாலத்தில். அன்றைய சூழலில் அது மிகமிகப் பெரிய ஒரு தத்துவ தரிசனம், சிந்தனையில் ஒரு பாய்ச்சல். கிரேக்கப் பண்பாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மையமே விழைவுகளை தொடர்ந்துசெல்லுதலும், ஆற்றலால் அவற்றை வென்று நிறைவுறுதலுமே. யுலிஸஸ், அக்கிலிஸ், ஹெர்குலிஸ் எல்லாருமே அத்தகைய நாயகர்கள்தான். அச்சூழலில் விழுமியங்களில் உறுதிப்பாடு கொள்ளுதலே உயர்நிலை என்று கூறும் சிந்தனை அது.

உறுதிப்பாட்டுவாதத்தை ஒரு தத்துவமாக அறியவேண்டும் என்றால் அதை ஏற்றும் மறுத்தும் பின்னால் உருவான தத்துவங்களுடன் இணைத்துப் பார்க்கவேண்டும். அதை கிரேக்க தத்துவத்தின் பொதுவான பரப்பிலும் மேலைத்தத்துவக் களத்தின் பரப்பிலும் பொருத்திப் பார்க்கவேண்டும். இல்லையென்றால் உதிரிக்கருத்துக்களாக நாம் அவற்றை அறிந்துகொள்ள நேரிடும். தத்துவக் கொள்கைகளை விவாதப்பரப்பில் வைத்து அறிவதே முறையானதாகும்.

எவரும் எளிதாக விழுமியங்களில் உறுதிப்பாடு கொண்ட வாழ்க்கையை அடையமுடியாது. உறுதிப்பாடு என்பது சிந்தனையால் அடையப்படுவது அல்ல. உண்மையில் அங்கே சிந்தனையின் இடம் பெரிதாக ஏதுமில்லை. விழுமியங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே சிந்தனை உதவுகிறது. ஏற்றுக்கொண்டபின்னர் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு சிந்தனை பயனற்றது. உறுதிப்பாடு சிந்தனையின் விளைவல்ல.

நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளுதல், கடப்பதற்கான வழிகளை தானே கண்டடைதல், அதனூடாக தன்னை மெல்ல மெல்ல கண்டடைந்து தன் ஆளுமையை தனக்கும் பிறருக்குமாக நிறுவிக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாகவே விழுமியங்கள் வாழ்க்கையாகின்றன. அவ்வாறுதான் உறுதிப்பாடு உருவாகிறது, உறுதிப்பாடு செயல்வடிவமாகிறது.

அதாவது விழுமியங்கள் என்பவை சிந்தனைக்கான கருப்பொருட்கள் அல்ல, அவை செயல்முறை நெறிகள்.  அவற்றை வெறுமே தத்துவார்த்தமாக விவாதிப்பது வழியாக எவரும் அவற்றை  தலைக்கொள்ள முடியாது.

இனி, உங்கள் வினாவுக்கு வருகிறேன். உறுதிப்பாட்டு வாதம் வழியாக நீங்கள் உங்கள் சாவு பற்றிய ஐயங்களையும் அச்சங்களையும் கடக்கமுடியுமா? சாவின் பொருளை ‘அறிந்துகொண்டால்’ மட்டும் அதை எதிர்கொள்ள முடியுமா? அதேபோல பிறர் சாவு அளிக்கும் துயரையும் வெறுமையையும் வெறுமே எண்ணங்களையும் புரிதல்களையும் கொண்டு எவரேனும் கடக்கமுடியுமா?

கடக்கவேண்டும் என்னும் நிலைபாட்டை வந்தடைய மட்டுமே அந்தக் கொள்கை உதவும். எஞ்சியிருப்பது நடைமுறை மட்டுமே. நடைமுறையில் சாவு குறித்த அச்சங்களையும் ஐயங்களையும் சற்றேனும்  கடந்திருப்பவர் எவர்? பெருஞ்செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே. அன்றாடத்தை செயல்வழியாக அர்த்தப்படுத்திக் கொண்டே இருப்பவர்கள்.

அதாவது இப்படிச் சொல்கிறேன். அர்ஜுனனைப் போல களத்தில் நிற்பவர்கள் மட்டுமே. உண்மையில் களத்தில் நிற்பவர்கள், அதிலிருந்து கேள்விகளை அடைபவர்கள் மட்டுமே தத்துவத்தைப் புரிந்துகொள்ளவும் திராணி கொண்டவர்கள்.

கீதை ஸ்திதப்பிரதிக்ஞனின் இயல்பெனச் சொல்வது ஆகவே செயல்புரிக என்பதே. நிலைபேறு கொண்ட சித்தத்துடன் செயல்புரிக என அது சொல்வதை நிலைபேறு கொண்ட சித்தத்தை அடைவதற்கான வழியாகச் செயலாற்றுக என்றும் கொள்ளலாம். வெறுமே நிலைபேறு மட்டும் எவருக்கும் அமைவதில்லை.

நிலைபேறுடன் செயலாற்றுபவன், அச்செயலின் இறுதியில் அடையும் மெய்யறிதலையும் அதனூடாக அடையும் விடுதலையையும், அறுதியான நிறைநிலையையும் கீதை மோட்ச சன்யாச யோகம், விபூதியோகம் என்று கூறுகிறதென்றாலும் அங்கு செல்வதற்கான வழி கர்மயோகமும் ஞானயோகமும்தான். அதாவது தொடர்செயலும் ,சலியாத அறிதலும்தான்.

நம் மரணம் நமக்கு எப்போது பொருளற்றுப் போகும்? நாம் வாழ்ந்தோம் என உணரும்போது. நாம் செய்யவேண்டியதைச் செய்தோம் என அறியும்போது. வாழ்வை இயற்றி நிறைந்தோம் என உணரும்போது. அப்படி பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் தங்களுக்குரிய களத்தில் பெருஞ்செயலாற்றியவர்கள்.

பிறர் மரணம்? அதைக் கடக்க நாம் அவர்களுடனான உறவுகளை கடக்கவேண்டும். பற்றற்ற நிலையை அடையவேண்டும் துறவு வழியாக அதை நோக்கிச் செல்லவேண்டும். இந்திய மதங்கள் துறவு இல்லாமல் ஸ்திதப்பிரதிக்ஞன் என்னும் நிலை முழுமையாகச் சாத்தியமில்லை என்றே சொல்கின்றன.  உலகியலில் இருந்தபடி அதை முழுமையாக எய்த முடியாது என்றே நானும் எண்ணுகிறேன்.

எய்தலாம். தன்னலம் மிகுந்தும் கருணையற்றும் ஆகும்போது. அது விடுதலை அல்ல. அந்நிலையில் தன் மரணம் மிகமிகப்பெரிதாக ஆகிவிடும். அது இரும்புக்குண்டு போல தன் கழுத்தில் தொங்கும்.

ஆகவே தன் அகம்நிறையும் செயல்களை ஆற்றும் வாழ்க்கை வழியாக தன் சாவு குறித்த அச்சத்தையும் ஐயத்தையும் ஒருவன் எதிர்கொள்ளலாம். மிகப்பெரிய இலட்சியங்களுக்கும் செயல்களுக்கும் தன்னை ஒப்பளிக்கும்போது பிறர் மரணம் அளிக்கும் துயர்களிலிருந்து ஓரளவு விடுபடலாம். அவ்வளவே உலகியலாளனுக்கு இயல்வது.  அதுவே போதுமானதும்கூட

ஜெ

 

ஜெயமோகன் நூல்கள்

 

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 10:35

கோவை சொல்முகம் அரங்கும் எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கும்

கோவை வடவள்ளியில் அமைந்துள்ள விஷ்ணுபுரம் பதிப்பக அலுவலகத்தின் மாடியில் ஒரு குடில் அமைக்கப்பட்டுள்ளது. இலக்கியச் சந்திப்புகளுக்கான இடம். ‘சொல்முகம் வாசகர் குழுமம்’ செயல்படும் இடம் இது. 30 பேர் வரை அமர முடியும். 24 டிசம்பர் 2022 அன்று எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அலுவலகம் வந்திருந்தார். அரங்கை அவரும் எம்.கோபாலகிருஷ்ணனும் திறந்து வைத்தனர்.

எம்.கோபாலகிருஷ்ணன் அரங்கை திறந்து வைத்து விளக்கேற்றுகிறார்

நாஞ்சில் நாடா வெட்டி திறந்து வைக்கிறார். திறப்பதற்கு முன்னரே உள்ளே பூந்திருப்பது ஜெ.சைதன்யா.

கோவை சொல்முகம் வாசகர்குழுமம் சார்பில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள் பற்றி நிகழ்ந்த வாசகர் அரங்கம். எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள் வாசகர்கள் பேசினர். எம். கோபாலகிருஷ்ணன் ஏற்புரை வழங்கினார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 10:34

மயிலை சீனி வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமியின் பங்களிப்பு இன்று நோக்குகையில் இவ்வாறு சொல்லற்குரியது. தமிழ் இலக்கியமரபை எழுதிய முன்னோடிகள் சமண- பௌத்த மரபுகளுக்கு அளிக்கத் தவறிய இடத்தை ஆய்வின் விளைவான விரிவான தரவுகளுடன் நிறுவியவர்.

மயிலை சீனி.வேங்கடசாமி  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.