Jeyamohan's Blog, page 658
December 21, 2022
ஏழாம் உலகம் உரையாடல்
ஏழாம் உலகம் – நான் கடவுள் பற்றி ஓர் உரையாடல். யூடியூப் வழக்கத்திற்கு மாறாக இந்த உரையாடல் செறிவானதாக இருந்தது.
புதுவை வெண்முரசு வாசிப்பரங்கம்
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 55 வது கூடுகை 23 -12-2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது . பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி செ.அமுர்தவல்லி உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
கூடுகையின் பேசுபகுதி
வெண்முரசு நூல் வரிசை 6 “வெண்முகில் நகரம்” .
பகுதி 16 : 1 முதல் 6 வரை பகுதி
பகுதி 17 : வண்ணப்பெருவாயில் 1 முதல் 10 வரை
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306 ஜெ 60 தளம்:- https://jeyamohan60.blogspot.com
குள்ளச்சித்தனின் மறைஞானம்
அன்புள்ள ஜெ,
நான் பணியிலிருக்கும் நிறுவனத்திலும், பொது வெளியிலும் இந்தியர்கள் பெரும்பாலும் மதரீதியாக தங்களை எவ்வகையிலும் வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. ஊரிலிருந்து கொண்டு வரும் இந்துக் கடவுள் படங்களை சில வருடங்களுக்கு முன்பு வரை பொருட்களுக்குள் மறைத்து வைத்து விமான நிலையத்தை கடந்து வர வேண்டி இருந்தது (தற்போது அப்படி இல்லை). “தன் மதம்” சார்ந்த நம்பிக்கையான நண்பர் என்ற புரிதலுக்கு பிறகே ஒருவர் அவரவர் மதம் சார்ந்து ஏதேனும் பேசிக்கொள்கிறார்கள்.
எனக்கு மதம் கடந்து, மதம் பற்றி பேசிக்கொள்ள சில நம்பிக்கையான உள்ளூர் அரபி நண்பர்கள் (மட்டும்) இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பற்றி ஆச்சரியமாக கேட்பது “தொழுவதற்கென்று ஒரு இடத்திற்கு செல்லாமல், நாளின் குறிப்பிட்ட நேரத்தில் கடவுளை வணங்காமல் உங்களால் எப்படி இருக்க முடிகிறது” என்பது. அவர்கள் தங்கள் ஐந்து வேளை தொழுகையில் ஒன்றை ஏதாவது காரணத்தால் தவறவிட நேர்ந்தால் அந்த நேரம் கடவுளிடமிருந்து விலகி விட்டதாக உணர்கிறார்கள். அடுத்த வேளை கூடுதலான நேரம் தொழுது விட்டு வருவார்கள். நான் என் பணிச்சூழலின் கடினமான தருணங்களை கடந்துவந்த சமயங்களில் நேரடியாகவே “நீ எங்கு, எவ்வாறு, உன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தாய்” என்று கேட்டிருக்கிறார்கள்.
தொழுகை என்பது தவிர்க்க இயலாத நிகழ்வு. செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு தொழுகைக்குச் சென்று விடுவதை ஆச்சர்யமாக பார்த்திருக்கிறேன். தயக்கமே இல்லாமல் பாங்கு ஒலித்ததும் அருகில் இருப்பவர்களை சேர்த்துக் கொண்டு தொழுகைக்கு செல்வார்கள். மிக உக்கிரமாக எதிர்நிலையில் பணி சார்ந்து தர்க்கம் செய்து கொண்டிருக்கும் இரண்டு உள்ளூர் நண்பர்கள் தொழுகை நேரத்தில் இயல்பாக ஒருவரை ஒருவர் அழைத்து, கூட்டுத் தொழுகைக்கு செல்வதை சாதாரணமாக காணலாம். மேற்கல்வியை லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயின்று மேல் பதவிகளில் இருப்பவர்களும் இதில் விதிவிலக்கு கிடையாது.
அதுபோலவே கல்வி வேறு, மதம் வேறு என்று கல்விக்கும், மதத்துக்கும் இடையில் ஒரு தெளிவான பகுப்பை கொண்டிருக்கிறார்கள். கடவுள் மனிதனைப் படைத்தான் என்று நம்பி தொழுதுவிட்டு, டார்வினின் தியரியை படிப்பதில், நம்புவதில் என்ன குழப்பம் என்று கேட்கிறார்கள். இதை அவர்களின் அரபி பண்பாட்டின் பெருமிதத்திலிருந்து பெற்றுக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
மாறாக இந்தியாவில் நவீன கல்வி பயின்ற ஒருவர் மிக இயல்பாக தன்னுடைய மதத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் விலகிச் செல்வதை கண்கூடாகக் காணலாம். நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் கல்லூரி வரை படித்த இளைஞனிடம் மதம் பற்றி ஏதேனும் பேசிவிட முடியாது.
நவீன கல்வி புறவயமான தர்க்கத்தின் அடிப்படையில் சிந்திக்கும் பயிற்சியை அளிக்கிறது. அதன் அமைப்பின் படி கல்வியறிவு பெற்றவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள், மத விழுமியங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற கண்ணுக்கு தெரியாத மேலாடையை அணிந்து கொள்கிறார்கள். அதை அவர்களின் அறிவின் அடையாளமாக புனைந்து கொள்கிறார்கள். அதற்குப் பின் அவருக்கு கோவிலுக்குச் செல்வது, இறைவனிடம் முறையிடுவது, ஆன்மீக தரிசனம் போன்ற எல்லாமே நவீன கல்வித் தர்க்கத்தின் விதிகளுக்கு எட்டாமல், எளியவர்களின் வெளிப்பாடாக, புலம்பலாக, எளிய கொடுக்கல் வாங்கலாக தெரிய ஆரம்பிக்கிறது (ஆனால் சோதிடத்தில் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது!!!).
நானும் அப்படியே இருந்தேன். கொஞ்சம் வாசிக்க ஆரம்பித்த பின்பே, நவீன கல்வியின் “புறவயமாக நிறுவப்பட்ட தர்க்க அறிவியல்” என்பது பல்வேறு அறிதல் முறைகளில் ஒன்று என்றும், அதற்கு கிரேக்க தத்துவவியல் அடிப்படை என்றும், அந்த அறிதல் முறைக்கும் வரம்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்து கொண்டேன். அந்த தர்க்க அறிவியலின்படி இன்று சமூகத்தில் மிக பிரபலமான ஹோமியோபதி மருத்துவத்தை கூட விளக்க முடியாது என்பது சமீபத்தில் ஹோமியோபதி மருத்துவருடன் பேசும்போது அறியக்கிடைத்தது.
“நவீன தமிழிலக்கிய அறிமுகம்” புத்தகத்தில் மேலும் சில அறிதல் முறைகள் குறிப்பிடப்படுகின்றன.
“””வாழ்க்கையை அறிய மூன்று வகையான அறிதல் முறைகள் இருக்கின்றன. தியானம், கற்பனை மற்றும் தர்க்கம்.
1. கற்பனையைத் தன அறிதல் முறையாகக் கொண்டுள்ளவை கலைகள் எனப்படுகின்றன. அதன் அடிப்படை அலகு “குறியீடு”.
இசை, ஓவியம், நடனம், இலக்கியம் போன்ற அனைத்தும் கற்பனையை அடிப்படையான அறிதல் முறையைக் கொண்டுள்ளன.
2. தர்க்கத்தை அறிதல் முறையாகக் கொண்டுள்ள அனைத்தும் அறிவுத்துறை எனப்படும். அதன் அடிப்படை அலகு “வரையறை (definition)”.
தத்துவம், சமூக விஞ்ஞானம், அறிவியல், கணிதம் ஆகியவை தர்க்கத்தை அடிப்படையான அறிதல் முறையாகக் கொண்டுள்ளன.””””
இவற்றில் தர்க்கத்தை தாண்டிய மற்றைய அறிதல் முறைகள் ஒரு இந்திய, தமிழ் மாணவனுக்கு (நான் உட்பட) சமூக வழியில், கல்வி வழியில் இன்று அறிமுகம் ஆவதே இல்லை. இலக்கியம் ஒன்றே அத்தகைய தர்க்கம் தாண்டிய அறிதல் முறையை தெரிந்து கொள்ளும் வழி என்று தோன்றுகிறது. எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் “குள்ளச் சித்தன் சரித்திரம்” தர்க்கத்தை தாண்டிய வேறொரு அறிதல் முறையை வெளிப்படுத்திய மற்றும் அறிந்து கொண்டவர்களை பற்றிய நாவல்.
கரட்டுப்பட்டியில் சிகப்பியும் பழனியப்பனும் சந்திக்கும் பார்வையில்லாத ஒருவர் பூலாங்குறிச்சியில் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை தெளிவாக கண்டு சொல்கிறார். வலது கை கட்டை விரல் ரேகையை வைத்து அவர்களின் வரலாற்றை வைத்தீஸ்வரன் கோவிலில் வாசிக்கிறார்கள். “அப்படியெனில் வேறு எங்கோ எழுதி வைத்திருப்பதை இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ” என்று நாவல் கேட்கிறது.
அவ்வித அறிதல் பற்றி ஸ்ரீ முத்துச்சாமி “என்னைப் போன்றவர்கள் இன்னும் கொஞ்சம் அறைகளைத் திறந்து பார்ப்போமே என்னதான் இருக்கும் அதிலே என்று முயற்சி செய்கிறோம்” என்று சொல்கிறார். மேலும் அவர் “கால ஜடா பேதமற்ற பிரயாணத்தில் எங்கும் செல்லாமலேயே எங்கோ சென்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்கிறார். இத்தகையோர் எளிய மனிதத் தர்க்கங்களுக்கு அப்பால் சில செயல்களை செய்ய முடிகிறது. அது சாதாரண மனிதர்களுக்கு அற்புதங்களாக இருக்கிறது.
ஸ்ரீ முத்துச்சாமி அவர்களோடு ஏற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவங்களையம் புத்தகமாக பதிவு செய்வதற்கு, அவர் சொல்லிய சில பெயர்களின் வழியாக வேறு வேறு இடங்களில் வேறு வேறு மனிதர்களை ஹாலாஸ்யம் சந்திக்கிறார். ராமாமிர்தத்தம்மாள், சென்ன கேசவ முதலியார் தம்பதியினருக்கு குழந்தை கிடைக்கச் செய்வது. பூ வியாபாரம் செய்யும் தாயாரம்மாள் அவளது பெண்ணின் பிரசவ காலம் வரை ஊரின் கண்களில் மறைந்து பின் கன்னியாகவே திரும்புவது, நடக்க இயலாத பெருமாள் குறை நீங்கி, அந்த அவதூதர் மறைந்த இடத்தில் உருவான கோவில் பூசாரியாக மாறுவது போன்ற கதைகளும், அவற்றை நிகழ்த்திக் காட்டும் வாமன சுவாமிகள், குள்ளச் சித்தர் போன்ற பெயர்களில் அற்புதங்கள் நிகழ்த்தியவர்கள் பற்றியும் தெரிய வருகிறது. அடுத்தடுத்து ஒன்றை ஒன்று பின்னிச் செல்லும் கதைகள். ஆசிரியர் க. நா. சு அவர்களின் “அவதூதர்” இதுபோன்றதொரு அற்புதங்கள் செய்யும் மெய்மையைப் பேசும் வேறொரு நாவல்.
என் தந்தை முன்பு இதுபோல சிலவற்றை சொன்னபோது காதுகொடுக்காது நகர்ந்திருக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக கேட்டிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
நான் தரையில் இருக்கும்போது எதிரே இருக்கும் மலையின் உச்சியைப் பார்க்கிறேன். என் அருகில் மரத்தில் அமர்ந்திருந்த பருந்து உயரே எழும்பி மலையின் அந்தப் பக்கம் இருப்பதை பார்க்க முடியும் என்பதை நானே என் புலன் வழியாக அறிந்து கொண்டால் மட்டுமே நம்புவேன் என்பது அறிவியல். அதற்காக விமானத்தை கண்டறிந்து உயரே போய் உறுதி செய்யலாம், ஆனால் பருந்தின் பார்வையை மூட நம்பிக்கை என்று இன்று என்னால் ஒதுக்க முடியவில்லை.
நாவல் அனுபவம் என்பதை யோசித்தால் ஆசிரியர் தனது பின்னுரையில் சொல்வதுபோல “பரிசோதிப்பதும் உறுதி செய்வதும் இரு துறைகளின் பணி, இந்த அனுபவக் கோணத்தின் இயல்பாக பொதிந்திருக்கும் புனைவுத் தன்மை” நல்ல வாசிப்பனுபவத்தை கொடுத்தது.
அன்புடன்,
சி. பழனிவேல் ராஜா.
December 20, 2022
எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கம்
நமது சொல்முகம் வாசகர் குழுமத்தின் இரண்டாவது இலக்கிய கருத்தரங்கு வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம். ஆசிரியருடன் உரையாடி மகிழ வேண்டுகிறோம்.
நாள் : டிசம்பர் 25, 2022, ஞாயிற்றுக்கிழமை,
நேரம் : காலை 10:00 – 04:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு:
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
விரியும் கனவுகள்- விஷ்ணுபுரம் 2022
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
விஷ்ணுபுரம் விழா முடிந்த மறுநாள் வழக்கமான நான் அந்திவரை இருப்பேன். அது ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக இருக்கும். இம்முறை முன்னரே கிளம்பவேண்டியிருந்தது. அது பலருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஏ.வி.மணிகண்டன் புகைப்பட – ஓவியக்கலை பற்றி நிகழ்த்திய வகுப்பு அளவுக்கே விரிவான உரையாடல் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றனர்.
ஏ.வி.மணிகண்டன் சர்வதேச அளவில் அறியப்படும் கலைநிபுணர். அவருடனான ஓர் உரையாடல் என்பது நம் சூழலில் எளிதாக அமைவது அல்ல. நான் எண்ணும் ஒரு கலாச்சார மையம் என்பது அவ்வண்ணம் எல்லா கலைகளும் ஒருங்கிணையும் ஓர் இடம்தான். திரைப்படம், இசை, ஓவியம் என அனைத்தும் ஒன்றை ஒன்று வளப்படுத்தும் ஒரு கூட்டு உரையாடல் நிகழும் புள்ளி.
விஷ்ணுபுரம் அமைப்பின் நிகழ்வுகளின் உச்ச சாதனையாக நான் எண்ணுவது ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் கவனம். இரவில் எந்நேரம் வந்திறங்கினாலும் எங்கள் விருந்தினர்களை ஒருவர் நேரில் சென்றழைத்து தங்கவைப்பார். ஒருபோதும் அதை ஓர் ஊழியர் செய்ய மாட்டார். ஒரு நல்ல வாசகர்தான் செய்வார். பலசமயம் எழுத்தாளர்கள் சந்திக்கும் முதல் தீவிர வாசகரே அவராகத்தான் இருப்பார்.
அதன்பின் முழுநிகழ்வுக்குப் பின்னர் ஒவ்வொருவரையாக வழியனுப்பி வைப்போம். அதுவும் இலக்கியவாசகர்கள் செய்வதே. விஷ்ணுபுரம் விழாவில் இருந்து கடைசியாகச் சென்றவர் தேவதேவன். அவருடைய ரயில் தாமதமாகியது. 19 ஆம் தேதி நள்ளிரவில் அவர் கிளம்பினார். அது வரை மூன்று நண்பர்கள் அவருடன் இருந்தனர். என்ன செய்தீர்கள் என்று கேட்டேன். அவரை ஓவியர் ஜெயராம் ரயில்நிலையத்தில் வைத்தே ஓர் ஓவியம் தீட்டினார் என்றனர்.
விஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் தொடங்கப்பட்ட காலம் முதல் தேவதேவன் வந்துகொண்டிருக்கிறார். அவருக்கு தொடக்ககால விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் அமைப்பின் ஏறத்தாழ எல்லா நிகழ்வுகளிலும் அவர் இருப்பார். பெரும்பாலும் ஒரு மௌனப்பங்களிப்பாளராக. ஆனால் அவருக்கென ஒரு சிறு வட்டம் இங்குண்டு.
அவர்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அவர்களும் பெரும்பாலும் அவரைப்போலவே கொஞ்சம் ஒதுங்கியவர்கள். அவரை ஒரு வகையான மறைஞானி என கருதுபவர்கள். எழுத்தாளர், கவிஞர் என வேறெவரையும் பொருட்படுத்தாதவர்களும்கூட. அவர்கள் வட்டத்திற்குள் ஒரு தனி வட்டம். அவர்களை நாடியே அவர் வருகிறார். ஆனால் பேசிக்கொள்கிறார்களா என்றால் அதுவும் பெரிதாக இல்லை.
சாரு நிவேதிதா திரும்பிச்செல்ல விமானம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஸீரோ டிகிரி ஸ்ரீராமும் காயத்ரியும் செல்லும் வண்டியில் பேசியபடியே திரும்பிவர விரும்பினார். மீனாம்பிகை, ஷாகுல், லெ.ரா.வைரவன், சுஷீல்குமார் ஆகியோர் அறைக்குச் சென்று அவரை வழியனுப்பி வைத்தனர்.
அதேபோல ஒவ்வொரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுக்கும் அவர்களுக்கான வாசகர்கள், சிலர் ரசிகர்கள், உள்ளனர். நாஞ்சில்நாடனுக்கு ஒரு குழு உள்ளது. லக்ஷ்மி மணிவண்ணனுக்கு என ஒரு கூட்டம். அண்மைக்காலமாக போகன் சங்கருக்கு. ஒரு நிகழ்வு முடிந்ததுமே இயல்பாக பாலில் உப்பு விழுந்ததுபோல பிரிந்துவிடுகிறார்கள்.
எல்லா ஆண்டும் குக்கூ- தன்னறம் – நூற்பு அணியின் பங்களிப்பு உண்டு. வாசலில் மலர்க்கோலம் போடுவது உட்பட. நுழைவாயில் கடையும் அவர்களுடையதுதான். இந்த ஆண்டு அவர்கள் நித்ய சைதன்ய யதி படம்போட்ட நாள்காட்டி ஒன்றை வெளியிட்டிருந்தனர். நண்பர் கொள்ளு நதீமின் சீர்மை பதிப்பக அரங்கும் அருகில்தான்.
ஒவ்வொன்றிலும் அந்தக் கவனம் இருந்தது. சிங்கப்பூர் சித்ரா “ஒரு இலக்கிய விழாவிலே இப்டி விருந்து போடுவீங்கன்னு எதிர்பார்க்கலை” என்றார். விருந்தினர்களான கனிஷ்கா குப்தா, மேரி தெரசி குர்கலங், மமங் தாய் மூவருமே அந்த விழாவில் இருந்த இளைஞர்களைப் பற்றித்தான் சொன்னார்கள். இத்தனை தீவிரமான இளைஞர்கூட்டம் இன்று இந்திய மொழிகளில் இலக்கிய அரங்குகளில் தென்படுவதே இல்லை.
ஒவ்வொரு விவாத அரங்கிலும் ஐநூறுபேர் திரண்டு அமர்ந்திருந்தனர். வழக்கமாக இலக்கிய அரங்குகளில் வெளியேதான் கூடிநின்று பேசிக்கொண்டிருப்பார்கள். அது ஒரு மோஸ்தராகவே ஆகிவிட்டது. ஆனால் விஷ்ணுபுரம் அரங்கில் அப்படி வெளியே நின்ற ஒருசிலர் நடுவயது கடந்த பழைய ஆட்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலக்கியச்சூழலில் பெரிதாக ஏதும் செய்யாமலேயே ஆண்டுகளை கடந்து வந்தவர்கள்.
அரங்கில் தெரிந்த அந்த ஆர்வம், அங்கே சம்பிரதாயமாக ஏதும் நிகழவில்லை என்பதனால் உருவாவது. விவாதம் எளிதாக தளம் மாறி வரலாற்றாய்வு, இலக்கியக் கோட்பாடு, ஈழ இலக்கியச் சூழல் என்று சென்றுகொண்டே இருந்தது. ஒரு மணிநேரம் என்பது மிகவிரைவாக ஓடிச்செல்ல அடுத்த அரங்கு தொடங்கியது.
விழாவில் சாரு நிவேதிதா பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுதியாகிய ‘தனிவழிப் பயணி’ வெளியிடப்பட்டது. 11 ஆம் தேதிவரை கையில் கிடைத்த கட்டுரைகளே அதில் இடம்பெற முடிந்தது. 12 அச்சுக்குப்போய் 15 மாலை நூல் தயாராகிவிட்டது. ஆனால் 18 ஆம் தேதிவரை கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. என்னுடைய கட்டுரை நூலில்தான் இடம்பெற்றிருக்கிறது.
இக்கட்டுரைகள் தன்னிச்சையான வாசக எதிர்வினைகளாக இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தேன். ஏனென்றால் இலக்கியப்படைப்பு கோரும் வாசிப்பு என்பது அதுவே. கல்வித்துறை சார்ந்து, அல்லது அரசியல் சார்ந்து, அல்லது போலிக்கோட்பாடுகளைச்சார்ந்து செய்யப்படும் ‘மூச்சுப்பிடிப்பு விமர்சனங்கள்’ மேல் எனக்கு கடும் ஒவ்வாமையே இன்று உள்ளது. அவை முதன்மையாக படைப்பை, படைப்பாளியை நோக்கிய மேட்டிமைநோக்கை கொண்டிருக்கின்றன. தனக்கு தெரிந்த, தான் படித்த எல்லாவற்றையும் கொண்டு வந்து சம்பந்தமே இல்லாமல் இலக்கியப்படைப்பின் மேல் போடுபவன் உண்மையில் மிகப்பெரிய அவமதிப்பு ஒன்றை நிகழ்த்துகிறான்.
விமர்சகன் முதன்மையாக வாசகனாக இருக்கவேண்டும், வாசகன் என்பவன் இலக்கியப்படைப்பின்மேல் வாழ்க்கை சார்ந்த உரையாடல் ஒன்றை அந்தரங்கமாக நிகழ்த்திக்கொள்பவன், ஆசிரியனுடன் தன் நுண்ணுணர்வால் உரையாடுபவன். அத்தகைய வாசகன் எப்படி பயிற்சியற்ற மொழியில் எழுதினாலும் ஆசிரியனுக்கு அவனிடம் பேச, அறிய ஏதோ ஒன்று உள்ளது. படைப்பின் அழகியலையோ ஆன்மிகத்தையோ அறியமுடியாத போலியறிவுப் பாவனையாளர்கள் படைப்பை தாக்கும் வைரஸ்கள்.
அந்த வகை கிருமிகள் ஐரோப்பிய இலக்கியத்தை ஏறத்தாழ அழித்துவிட்டன என்று நினைக்கிறேன். அதை நான் சொல்லும்போது ஐரோப்பிய படைப்பிலக்கியவாதிகள் மட்டுமல்ல, இலக்கிய ஆய்வாளர்கள்கூட இன்று துயருடன் ஆமோதிக்கிறார்கள். அது இங்கே நிகழக்கூடாது. இங்கே இலக்கிய விமர்சனம் முதன்மையாக வாசிப்பின் தீவிரத்திலேயே வேர்விட்டிருந்தது. வாசகனிடமிருந்தே உண்மையான ஏற்பும் மறுப்பும் வந்தன. இனியும் அவ்வாறே நிகழவேண்டும்.
டிசம்பர் 18 சாரு நிவேதிதாவின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட்டது. மேடையிலேயே ஒரு கேக் வெட்டி அதை கொண்டாடினோம். சாரு நிவேதிதா தன் வாழ்நாள் முழுக்க உடனிருந்தவர்களுக்கு நன்றி சொல்லும் தருணமாக தன் உரையை ஆக்கிக்கொண்டது மிக இயல்பான செயலாக இருந்தது.
இன்று, விஷ்ணுபுரம் விருதுவிழாக்களுக்கு ஒரு செயல்திட்டம், ஒரு கட்டமைப்பு இயல்பாகவே உருவாகி வந்துவிட்டது. வெவ்வேறு சந்திப்புகள் வழியாக பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல், அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்தல், தனிப்பட்ட பெருமைகள் கொள்ளாதிருத்தல் என இன்றியமையாத எல்லா இயல்புகளும் இன்று அமைந்துவிட்டிருக்கின்றன. பயிற்றுவிக்கப்பட்டு எவரும் இவற்றை அடைய முடியாது. செயல்களைச் செம்மையாகச் செய்யும்போது உருவாகும் கூட்டு மனநிறைவை அடைந்தால் இயல்பாக அந்த பண்புகள் உருவாகிவிடும்.
என்னுடைய பெருமிதம் என்பது இலக்கியம் என்னும் இலட்சியவாதம் இதைச் செய்ய வைக்கிறது என்பதே. இங்கே மதம் சார்ந்து மட்டுமே இத்தகைய ஒரு இலட்சியவாதம் உருவாகும். அரசியல் சார்ந்து ஒரு கூட்டான உத்வேகம் இருக்கும், ஆனால் அதில் இலட்சியவாதம் இருக்காது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட லாபங்கள், அதற்கான திட்டங்கள் இருக்கும். ஆகவே உள்ளூர கடும் பூசலும் ஓடிக்கொண்டிருக்கும்.
நான் என்றும் கனவுகண்டது இலக்கியத்திற்கு அவ்வாறு ஒரு மனநிலை அமையவேண்டும் என்பது. (இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் என க.நா.சு கனவு கண்டதும் அதுவே) அது தமிழ்ச்சூழலில் அமைவதில்லை என்பதை கண்டிருக்கிறேன். எப்போதும் ஓர் இலட்சியவாத மனநிலையில் ததும்பிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அவர்களால் பெருமுயற்சிகள் தொடங்கப்பட்டதும் உண்டு. அவை வெவ்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்படுகின்றன.
மிகச்சிறந்த உதாரணம், பவா செல்லத்துரை. 90’களில் அவரால் திருவண்ணாமலையில் முன்னெடுக்கப்பட்ட கலையிலக்கிய இரவு அப்படிப்பட்ட ஒரு முயற்சி. அன்றிருந்த கொண்டாட்டம், பரவசம் எல்லாம் எனக்கு இன்றும் நினைவுள்ளது. ஆனால் சில ஆண்டுகளிலேயே அரசியலால் அது கைப்பற்றப்பட்டது. அரசியல் பூசல்களால் அது தோற்கடிக்கப்பட்டு இன்று நினைவாக மாறிவிட்டது. பவா சோர்வுறாதவர். இன்றுவரை அவர் தனிமனிதராக திருவண்ணாமலையில் அந்த கனவை தக்கவைத்திருக்கிறார்.
சுந்தர ராமசாமிக்கு அக்கனவு இருந்தது. அவர் எடுத்த முயற்சிகள் அவர் இருந்தவரைத்தான் வெற்றி பெற்றன. அவர் இருந்தபோது நிகழ்ந்த தமிழினி 2000 ஒரு வரலாற்று நிகழ்வு. அவருக்குப்பின் அம்முயற்சி சரிவுற்றமைக்குக் காரணம் அவரிடமிருந்த பெருந்தன்மை, அனைவருக்கும் உரியவராக இருக்கும் தன்மை பின்பு இல்லாமலானது என நினைக்கிறேன்.
இங்குள்ள சிற்றிதழ்கள், இலக்கிய அமைப்புகள் எல்லாமே ஒரு கனவைப் பகிர்ந்துகொள்ளும் சிறு குழுவினரால் தொடங்கப்படுகின்றன. மிக மிக விரைவாக அவை உடைகின்றன. பூசலிடும் தரப்புகளாகி செயலிழக்கின்றன. அது ஏன் என பல ஆண்டுகள் கூர்ந்து கவனித்திருக்கிறேன். என் கண்டடைதல்கள் சில உண்டு.
விஜய் சூரியன்வீழ்த்தும் காரணிகளில் முதன்மையானது அரசியல் சார்பு. அரசியல் சார்பு பூசலையே உருவாக்கும். முதலில் அந்த அரசியலுக்கு எதிரானவர்களுடன் பூசலை உருவாக்கும். பின்னர் உட்பூசல்களை உருவாக்கும். இதை தவிர்க்கவே முடியாது. ஆகவே விஷ்ணுபுரம் அமைப்பை பொறுத்தவரை முழுக்க முழுக்க இலக்கிய- பண்பாட்டு இயக்கமாகவே இதை முன்னெடுக்கிறோம். இதில் அரசியல் இல்லை. அரசியல் விவாதங்களுக்கே இடமில்லை. விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அரசியல் விவாதிப்பதையே நாங்கள் ஏற்பதில்லை. அவரவர் அரசியல் அவரவருக்கு. இங்கு இடமில்லை.
இரண்டு, ஆணவச்சிக்கல்கள். பெரும்பாலான தனிப்பட்ட இலக்கிய விவாதங்களுக்கு பின்னாலிருப்பது வெறும் ஆணவம். தன்னை முன்வைக்கும் முனைப்பு. தனி உரையாடல்களில் மிகக்கடுமையான கருத்துக்களைச் சொல்பவர்கள் உள்ளீடற்றவர்கள், கவனயாசகர்கள் என்றே உணர்ந்திருக்கிறேன். பலசமயம் கருத்தால் ஓர் அரங்கில் கவனம் பெற முடியாதவர்களின் உத்தி என்பது கலைத்து கவனம் பெறுவது
இலக்கிய விவாதத்தில் கறாரான பார்வைக்கு இடமுண்டு. ஆனால் அதை எழுத்தில், முறையான வாசிப்புடன் முன்வைக்கவேண்டுமே ஒழிய ஒருவரிடம் நேரில் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. எழுதவந்தமைக்காகவே ஒருவர் அவமானங்களைச் சந்திக்கவேண்டியதில்லை. கறாரான இலக்கிய விமர்சனம், உதாரணமாக விஷால்ராஜா எழுதியது (இடைவெளியும் தொடர்ச்சியும்- விஷால் ராஜா) போன்ற அணுகுமுறைகள், என்றும் இலக்கியச்சூழலில் மதிக்கப்படுபவை.
ஆகவே, நான் இது எந்நிலையிலும் இனிய, நட்பார்ந்த உரையாடலுக்கான களமாகவே இருக்கவேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்கிறேன். இங்கு வந்துசெல்லும் ஒரு வாசகர் தன்னைப்போல பல வாசகர்கள் இருக்கிறார்கள் என உணரவேண்டும். இலக்கிய இயக்கத்தின் ஒரு பகுதியாக தன்னை கருதிக்கொள்ள வேண்டும். அந்த இயக்கத்தில்தான் எழுத்தாளன் எனும் ஆளுமையும் இருக்கிறார், அவரும் தன் சகப்பயணிதான் என அறிய வேண்டும். அந்த தன்னுணர்வை உருவாக்குவதே முதன்மையாக இந்த விழாக்களின் நோக்கம்.
இத்தகைய விழாக்கள் ஏன் தேவையாகின்றன என்பதை நான் என் தொழிற்சங்கப் பின்னணியில் இருந்தே உணர்ந்தேன். தொழிற்சங்கம் என்பது உலகியல்சார்ந்த ஒரு செயல்பாடு, ஆகவே பூசல்களும் சலிப்பும் தவிர்க்க முடியாதவை. அது ஓர் அமைப்பு மட்டுமே. ஆண்டுதோறும் நிகழும் மாநில, தேசிய மாநாடுகளே அதை ஓர் உணர்வுசார்ந்த இயக்கமாக ஆக்குகின்றன. நம்மைப்போன்றவர்களை நாம் கண்கூடாகப் பார்ப்பது, உரையாடுவது, உடன்பழகுவது.
விஷ்ணுபுரம் விழா முடிந்தபின் மேடையில் விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகைப்படத்திற்காக வரும்படி அழைப்போம். ஆனால் இங்கே உறுப்பினர் என எவரும் இல்லை. எந்த பொறுப்பாளரும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட நூறுபேர் மேடைக்கு வருகிறார்கள். அவர்கள் இதை உரிமைகொள்கிறார்கள். நாங்கள் சந்தித்தே இராதவர்கள் மேடைக்கு வந்துள்ளனர். தயங்கி ஓரமாக நின்றுள்ளனர். அவர்கள் பின்னர் மையசெயல்பாட்டாளர்களாக ஆகியிருக்கின்றனர்.
இன்று இது ஒரு தாய் அமைப்பு. இதில் இருந்து ஆண்டுதோறும் புதிய அமைப்புகள் தோன்றி செயல்வேகம் கொள்கின்றன. இந்த 2022 ஆண்டில் உருவான மூன்று அமைப்புகள் தமிழ் விக்கி, நீலி மின்னிதழ் மற்றும் மொழியாக்கத்துக்கான மொழி அமைப்பு. அடுத்த ஆண்டுமுதல் பெண்களுக்கான நூல்களை வெளியிடும் நீலி பதிப்பகம் ஒன்றை தொடங்க ரம்யா திட்டமிட்டிருக்கிறார். இன்னும் கனவுகள் விரியும்.
புகைப்படங்கள் ஆனந்த்குமார் இணைப்பு
தமிழ்விரோதிகளின் பட்டியலில் ஓர் இடம்
கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப் புலவர்
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி பக்கங்களை படிப்பதுதான் இன்றைக்கு என்னுடைய முக்கியமான வாசிப்பு. இதற்குள் அந்த ஃபார்மேட் பழகிப்போய் சரளமாக வாசிக்க முடிகிறது. அதிகமும் பழந்தமிழ் அறிஞர்களைத்தான் வாசிக்கிறேன். அவ்வாறு வாசிக்கையில்தான் பல விஷயங்கள் திகைப்பூட்டுகின்றன. கருப்பங்கிளர் ராமசாமிப் புலவர் எவ்வளவு பெரிய அரும்பணி ஆற்றியிருக்கிறார். அவருடைய வரிசை இல்லாவிட்டால் பல தமிழறிஞர்கள் காணாமலேயே போயிருப்பார்கள். வறுமையில் இருந்தபடி அந்தப்பணியைச் செய்திருக்கிறார். தமிழ் தமிழ் என்று பேசும் கூட்டம் அவர் பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள்தான் தமிழ் விக்கி வழியாக வரலாற்றில் அவரை நிறுத்துகிறீர்கள்.
ஆனால் இணையத்தில் எங்கே பார்த்தாலும் தமிழர் விரோதி, தமிழரை இழிவுசெய்கிறவர் என்று உங்களைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் பொருட்படுத்தியபடி எழுதிய எழுத்தாளர்கள்கூட இந்த அற்பத்தனத்தையே செய்துகொண்டிருக்கிறார்கள். அது தினமும் கண்ணுக்குப் படும்போது ஆயாசமாக இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ரா. முருகானந்தம்
அன்புள்ள முருகானந்தம்,
அபிதான சிந்தாமணியை தொகுத்த ஆ.சிங்காரவேலு முதலியார், அகராதி உருவாக்கிய எஸ்.வையாபுரிப் பிள்ளை, கலைக்களஞ்சியம் எழுதிய பெரியசாமி தூரன் எல்லாம் எப்படி எதிர்கொள்ளப்பட்டனர்? வசைகள் அவமதிப்புகள் கேலி கிண்டல். தமிழர்விரோதி என்னும் பட்டம். அந்த வரிசையில் ஓர் இடமே நான் கனவுகாண்பது. அவர்களைப்போன்ற ஒரு மகத்தான தமிழ் விரோதி ஆவது.
இந்த வசைகளும் காழ்ப்பும் ஒரு பொதுமனநிலை. நமக்கு ஏதோ மனச்சிக்கல் உள்ளது. அறிவுச்செயல்பாடுகள் நமக்கு பெரிய அளவில் அச்சத்தை அளிக்கின்றன. நம் எழுத்தாளர்கள் கவிஞர்கள்கூட பெரும்பாலும் அந்த அற்ப மனநிலையில் இருப்பவர்களே. பொருட்படுத்தாமல் நம் பணியைச் செய்யவேண்டியதுதான். அதைச் செய்வதிலுள்ள இன்பமே முக்கியமானது.
ஜெ
ஆ.சிங்காரவேலு முதலியார் எஸ்.வையாபுரிப் பிள்ளை பெரியசாமி தூரன்
ஈழத்துப் பூராடனார்
ஈழத்துப் பூராடனார் என்று கேட்டதுமே சங்ககாலக் கவிஞர் என வினாடிவினாவில் பதில் சொல்லிவிடுவோம். அவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்ந்து மறைந்தவர். இயற்பெயர் க.தா. செல்வராஜகோபால். அவர் உள்ளம் நிகழ்ந்தது இன்றைக்கு இருநூறு முந்நூறாண்டுகள் முந்தைய ஒரு மொழிவெளியில்
ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால்
க.தா.செல்வராசகோபால் – தமிழ் விக்கி
பனிநிலங்களில். கடிதம்
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
தங்களது ஸ்கேண்டிநேவிய பயணம் நல்லபடியாக முடிந்து, எதிர்பார்த்தது போலவே பயணத்தொடர் வந்து கொண்டிருக்கிறது. ஆர்வமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னர் பணி நிமித்தம் காரணமாக எனக்கு ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் ஒரு வருட காலம் போல் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பம் இங்கிலாந்தில் இருக்க, நான் மட்டும் கோதன்பர்க் நகரில் தங்கியிருந்து மாதம் இரண்டு அல்லது மூன்று முறைகள் இங்கிலாந்து வீட்டிற்கு வந்து போய்கொண்டிருந்தேன். திங்கள் காலை 7:10 மணிக்கு லண்டன் ஸ்டன்ஸ்டட் விமான நிலையத்தில் விமானம் பிடித்தால் கோதன்பர்க் காலை 10 மணி மீட்டிங்கிற்கு போய்விடலாம் (லண்டனின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு செல்ல சில சமயங்களில் இதை விட அதிக நேரம் ஆகிவிடும்!).
அன்று அந்த நிலக் காட்சிகள் அளித்த பரவசங்கள் இன்னும் நினைவிருக்கிறது. பூமத்திய ரேகையில் இருந்து வெகுவாக விலகியிருக்கும் இப்பிரதேசங்களின் கால நிலைகளும் அவை மாறும் போது அதன் நில விளைவுகளும் நமக்கு, வருடம் முழுவதும் காலை 6 மணிக்கு சூரியன் எழுந்து மாலை 6 மணிக்கு மறையும் நிலத்திலிருந்து வரும் நமக்கு, மிக வித்தியாசமாக, புதிராக அமைகின்றன.
இங்கிலாந்து வந்த புதிதில் இங்குள்ள ஆங்கிலேயரிடம் இதை (வருடம் முழுவதும் சூரிய உதய/அஸ்தமனம் ஒரே நேரத்தில்) என்று சற்று பெருமையாக (!) சொன்னபோது Oh that must be boring என்றார். முதலில் சற்று திகைத்தேன்!
முக்கியமாக பனிக்காலத்தையும் கோடைக்காலத்தையும் மென்மையாக இணைத்துக்கொள்ளும் வசந்த காலமும் இலையுதிர் காலமும் இம்மாற்றங்களை தெளிவாக காட்டுகின்றன. எனக்குப்பிடித்த பருவங்களும் கூட. ஒரு வருடத்தின் அனைத்துப் பருவங்களையும் ஸ்வீடனில் கழித்ததில் எனக்கு மிக திருப்தி!
ஸ்வீடனில் எனக்கு முதலில் பளிச்சென பட்ட விஷயம், மிகக்குறைந்த மனித நடமாட்டம்… கிட்டத்தட்ட நம் ஊர்களின் “பந்த்” நாட்களைப் போல்! ஷாப்பிங் மால்களிலும் விளையாட்டு அரங்களின் உள்ளும் நகர் மத்தியிலும் மானுடர்கள் நிறைந்திருந்தாலும் வெளியே மனித நடமாட்டம் மிகக் குறைவு. அங்கிருந்து திரும்ப செம்ஸ்போர்ட்டிற்கு வந்தால் கிட்டத்தட்ட சென்னை துரைசாமி சப்வேற்கு அருகில் வந்தது போல் இருக்கும்.
முதன் முறையாக கோதன்பர்க் நகரின் சிட்டி ஏர்போர்ட்டில் இரவு 9.30 மணி போல் இறங்கி வெளியே வந்தால் கடும் காடு. என்னைத் தவிர யாருமே டாக்ஸிக்கு காத்திருக்கவில்லை. கிட்டத்தட்ட “துணிவே துணை” ஜெய்சங்கர் போல் விழித்து விட்டு, சரி ஏர்போர்ட்டிற்குள் நுழைந்து டாக்ஸி பற்றி விசாரிக்கலாம் என்று திரும்ப வாயிலுக்கு வந்தால்…ஏர்போர்ட்டைப் பூட்டிவிட்டார்கள். காலை 6 மணிக்குத்தான் திறக்கப்படுமாம்… பின்னர் அரை மணி போல் காத்திருந்து (“நம்பிக்கைத்தானே வாழ்க்கை”!) வழி தவறி வந்து நின்ற டாக்ஸியின் வலது பக்க கதவை வழக்கம் போல் திறந்து ஸ்டீயரிங் வீலைக் கண்டு திகைத்து, வழிந்து, எதிர்ப் பக்கம் போய் அமர்ந்த சென்ற பொழுதில் இருந்து அடுத்த ஒரு வருடம் வாழ்நாளில் ஓர் மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.
வித்தியாசமாக உணர்ந்த இன்னொன்று – ஸ்வீடனில் அலுவலகத்திலும் வெளியிலும் என்னை நிற வேறுபாடு இல்லாமல் உணர்ந்தேன். பிரிட்டனில் என்ன இருந்தாலும், எத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் சின்ன “அந்நியன்” ஹாஷ்டேக், மெல்லிய நோட்டு வெள்ளிக்கம்பி போல் உணர்வோம். ஸ்வீடனில் அப்படியில்லை…
அதாவது, ஆரம்பத்தில் அப்படியில்லை! ஆனால் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயம் உணர்வோம். நாம் மிக சிறுபான்மையினராக இருக்கும் வரை, மதிப்பும் புதியவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் உண்டு. Mini indisk ஆக இருக்கும் வரை. அது மாறும் போது உள்ளூரார் மெல்ல பதற்றமும் எதிர் வினைகளை கொள்வது தெரியவரும். அது இயல்புதான்.
அமெரிக்க மற்றும் ஸ்வீடிஷ் தமிழர்கள்/இந்தியர்களை உங்கள் அனுபவத்தில் ஒப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.முன்னேறிய நாடுகளை ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவை (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற) மற்றும் ஆங்கிலம் அல்லா தாய்மொழியைக் கொண்ட நாடுகள் என பிரித்துக் கொள்ளலாம்.
இரண்டாம் வகையில் வரும் இம்மாதிரியான ஸ்கேண்டி நேவி நாடுகளின் தாய்மொழியே குடியேற்றவாசிகளின் முதல் தடை. ஸ்டாக்ஹோம், கோபன்ஹேகன், கோதன்பர்க் போன்ற பெரிய நகரங்களில் ஆங்கிலத்தை வைத்து ஓரளவிற்கு சமாளித்துவிடலாம் என்றாலும் உள்ளூர் மொழி அவசியம். பத்து வருடங்களுக்கு முன் பெரும்பாலான உள்ளூர் இணையதளங்கள், அரசாங்கத்திடமிருந்து வரும் கடிதங்கள், மருத்துவமனைகள் எல்லாம் ஸ்வீடிஷ் மொழியில் மட்டுமே இருந்தது மிக சங்கடத்தை கொடுத்திருந்தது. (சூப்பர் மார்க்கெட்டில் பால் வாங்க போய் தயிர் வாங்குவதும், தயிர் வாங்கப்போய் பால் வாங்கிவருவதும் (இரண்டு அட்டைப்பெட்டிகளிலும் பசு இருந்ததே!). இன்று நிலைமை முன்னேறியிருக்கும். அன்று நான் பணிபுரிந்த வால்வோ கார் நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிய வந்திருந்த டர்பன் சீக்கியருடன் உணவு கூடத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ள சிறு வரிசையை கண்ட நினைவிருக்கிறது.
நீங்கள் குறிப்பிட்டது போல் அமெரிக்காவுடன் ஒப்பிட இங்கு இந்தியர்கள்/தமிழர்கள் மிகக் குறைவு. அதற்கு முதன்மையான காரணம், சமீபகாலமாகத்தான், இரண்டாயிரத்திற்கு பின்னர்தான், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் ஆய்வுத்துறையிலும் நம்மவர்கள் வர,வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்.
அமெரிக்கா, பிரிட்டன் போல் 60 களிலிருந்து இல்லாமல் இங்கு குழந்தைகள் பெரும்பாலும் முதல் தலைமுறை. எனவே படிப்பிற்கான பரபரப்பு/பதற்றம் இன்னும் இல்லை. இருந்தும் எனக்குத் தெரிந்தே நிறைய குடும்பங்கள் குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்காக இங்கிலிஷ் அல்லாத ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கோ/அமெரிக்கா/ஆஸ்திரேலியா போன்ற இங்கிலிஷை முதன்மொழியாக கொண்டநாடுகளுக்கு குடியேற்றம் செய்திருக்கிறார்கள்/வாய்ப்பிற்கு காத்திருக்கிறார்கள். நானுமே ஓர் உதாரணம்தான். ஸ்வீடனுக்கு நிரந்தரமாக குடியேறியிருக்கலாம்; மகனின் மேல்நிலை/கல்லூரிப் படிப்பை உத்தேசித்துதான் பிரிட்டனில் தொடர்வது எனும் முடிவை ஏதோ ஒரு கணத்தில் எடுத்தோம்.
இன்னொரு காரணம், ஒருவேளை இந்தியாவிற்கு திரும்பி செல்லும் சூழ்நிலை அமைந்தால், ஆங்கில வழி கல்வியில் தொடர குழந்தைகளுக்கு வசதியாக இருக்கும் என்பதே.
தங்களின் நம் அமெரிக்க குழந்தைகள் தொடருக்கான கடிதங்களில் திரு.நியாண்டர் செல்வன் என்பவர் குறிப்பிட்டிருந்தது போல (“சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே”) எந்த பெற்றோருக்குமான கவலை/எதிர்பார்ப்பு. அமெரிக்காவில் ஹார்ட்வேர்ட் எனில் பிரிட்டனில்/ஐரோப்பாவில் ஆக்ஸ்பிரிட்ஜ் (Oxford/Cambridge). எல்லா பெற்றோர்களுக்கும் இருக்கும் எதிர்பார்ப்புதான் இது,
மற்றபடி, எல்லோரையும் போலவே, இங்கும் தாண்டியா ஆர்த்தி, தீபாவளி போன்ற சீசனல் கொண்டாட்டங்கள், ரஜினி பட ரிலீஸ், கிரிக்கெட் (குளிர்காலத்தில் உள்ளரங்கில்!)…
தங்களின் பயணக்கட்டுரையின் மூலம் எனது பழைய அனுபவத்தை சற்று நினைவு கூர்ந்தேன்! நான் தங்கியிருந்த அபார்ட்மெட்ண்டின் எதிரில் சற்றே பெரிய குன்று – ஏறி இறங்கி சுற்றி வர ஒரு ஆறு மைல்கள் பிடிக்கலாம்.
என்னுடன் பணிபுரிந்து/வசித்துகொண்டிருந்த தமிழ், தெலுங்கு நண்பர்கள் வார இறுதி நாட்களில் படு பிஸியாக, இன்டர்நெட்டில் லேட்டஸ்ட் தமிழ், தெலுங்கு திரைப்படங்களை தரவிறக்கி (இணையத்தின் வேகம், அதி வேகம்) பார்த்துக்கொண்டிருக்க, எனது வார இறுதி காலைகள் அக்குன்றில்தான்.
பெரும் மான்கள், அவற்றை விட சற்றே குறைந்த அளவிலான முயல்கள், இன்னும் சற்று குறைவான காளான்கள் கொண்ட அப்பிரதேசத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். “காடு” நாவலின் பாதியை அங்குள்ள மரத்தின் அடியில் அமர்ந்து வாசித்தது இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.
செப்டம்பர்/ அக்டோபர் மாலை மதியங்களின் வானங்கள் அத்தனை வண்ணமயமானவை. பார்த்துக்கொண்டிருக்கவே சிவப்பும், மஞ்சளும் நீலமும் கலந்து ஏதோ ஒரு பூமியை விட்டு இன்னொரு கிரகத்தில் இருக்கும் கிறக்கத்தைக் கொடுப்பவை. நான் மட்டுமே அதற்கு சாட்சி(என் பழைய மொபைல் போனும்!). Contact Ellie போல் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக வைத்துக் கொண்டிருக்கிறேன். சில படங்களையும் இணைத்திருக்கிறேன்.
ஸ்வீடன் போன்ற நாடுகளின் பொது மனநிலை என்பது பண்பாட்டுத் தாராளவாதமே. அந்த மனநிலையுடன் உரையாடும் தமிழ், இந்தியப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்டடைந்து அவற்றை வளர்த்துக்கொள்வதே இன்று அவசியமானது. அவ்வண்ணம் ஓர் உண்மையான பண்பாட்டு செயல்பாடு ஐரோப்பியத் தமிழர்களிடையே நிகழ்ந்து, அதன் விளைவான ஓர் அடையாளம் அங்கே அவர்களுக்கு உருவாகுமென்றால் அதுவே நாம் இன்று காணத்தக்க பெருங்கனவு.
aம், பெருங்கனவு… எந்த நிலப்பரப்பிலும் குடியேறிய முதல் தலைமுறை எதிர்நோக்கிய சவால்கள் அதிகம். முதல் குழந்தையை வளர்த்து அதன் அனுபவங்கள்/தவறுகள் மூலம் குழந்தை வளர்ப்பைக் கற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் போல் அந்த முதல் தலைமுறை தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து நின்று கற்றுக்கொண்டவை ஏராளம். மற்ற தேசங்களைப் போலவே இந்த நிலத்திலும் இந்த தலைமுறை வேரூன்றி ஆரோக்கியமாக வளரும் என்று நம்புவோம்.
பயணக்கட்டுரைகளுக்கு மிக்க நன்றி ஜெ
பின்குறிப்பு:
இப்போதுதான் படித்தேன் – பனி நிலங்களில் -6. துருவ ஒளியை பார்க்க முடியவில்லை என்பது நிச்சயம் ஏமாற்றம் தான் இருக்கும். . துருவ ஒளி- என் கனவுப் பயணப் பட்டியலில் உண்டு; அண்டார்டிக்கா பயணமும் . நிச்சயம் ஒரு நாள் இவைகளைப் பார்த்து விடுவோம் ஜெ!
சிவா கிருஷ்ணமூர்த்தி
ஷேக்ஸ்பியர், அருண்மொழி உரை- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
மலேசிய விக்கி அறிமுக விழாவில் பி .கிருஷ்ணன் அவர்களின் ஷேக்ஸ்பியர் படைப்புக்களின் மொழியாக்கம் குறித்த அருணாவின் உரையை கேட்டேன், மிக முக்கியமான உரை அது. நேரடியாக மொழியாக்க படைப்பு குறித்த உரையை துவங்காமல் இளைஞர்கள் நிறைந்திருந்த அந்த அரங்கில் ஷேக்ஸ்பியரின் மூன்று பெரும் படைப்புகள் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்துவிட்டு பின்னர் மொழியாக்கத்தை குறித்து பேசியது சிறப்பு. அரங்கில் இன்னும் ஷேக்ஸ்பியரை வாசிக்க துவங்கி இருக்காதவர்களும் இருந்திருப்பார்கள்.
முன்னரே வாசித்திருந்தாலும் அருணாவின் உரை மீள வாசிக்க வேண்டும் என தோன்ற வைத்திருக்கும். வழக்கம் போல தன் மனப்பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டி அந்தந்த பத்திகளில், வரிகளில் மானசீகமாக நின்றுகொண்டு நிதானமாக பேசினார்.
ஷேக்ஸ்பியரின் இல்லத்தை சென்று பார்த்த தன் நினைவுகளிலிருந்து உரையை துவங்கியது மிக சுவாரஸ்யமாகவும்,பொருத்தமாகவும் இருந்தது. எழுத்தாளரின் மீதிருக்கும் பிரமிப்பை எழுத்துக்களின் மீதும் கொண்டிருக்கும் அருணாவுக்கு வாசிப்பில் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு வியப்பூட்டுகிறது.
அருணாவின் நினைவாற்றல் மற்றும் வாசிப்பனுபவம் குறித்த பிரமிப்பு எனக்கு எப்போதும் உண்டு. இந்த உரையிலும் மூன்று பெரும்படைப்புக்களிலும் இருக்கும் மிக முக்கிய வசனங்கள், காட்சிகளை அழகாக விளக்குகிறார். எத்தனை கத்திக்குத்து என்னும் எண்ணிக்கை, எவரெவருக்கிடையில் எங்கு போர், என்ன வசனம் எப்போது யார் யாரிடம் பேசுகிறார்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் என சரளமாக சொல்லிக்கொண்டே போகிறார். குறிப்பெடுத்துக் கொண்டு வந்தவற்றை கடைசி நிமிடங்களில் தான் எடுக்கிறார்.
அருணா சொல்லியிருக்கும் //பெரும் படைப்புக்களில் நாம் ஈடுபட்டிருக்கும் காலம் முக்கியம்// என்பது கவனிக்க வேண்டியது. துன்பியல், இன்பியல், துன்ப இன்பியல், பகடி என்று நாடகங்களின் பல வடிவங்களை விளக்கி அவரது பிற படைப்புகளையும் சொல்லி ஷேக்ஸ்பியர் என்னும் பெரும் படைப்பாளியையும் அறிமுகப்படுத்துகிறார்
மேக்பெத்தின் சாராம்சத்தை, தீமையின் உள்முரணை, தீமையின் விதை உள்ளே விழுந்து மெல்ல மெல்ல விஷ விருட்சமாவதை, தீமை என்னும் முதல் படிக்கட்டில் கால் வைக்கும் ஒரு கதாபாத்திரம் அப்படியே முழுக்க தீமைக்குள் சென்று விடுவதை சொல்லி விளக்குகிறார். லேடி மேக்பெத் தனது கட்டுக்குள் எப்படி அவனை கொண்டு வருகிறாள் என்பதை, கதையை துவங்கும் முன்பே மூன்று சூனியக்காரிகள் வருவதன் அவசியத்தை, ’கோரஸ்’ உத்தியை சொன்னதெல்லாம் ஒரு பெரும் படைப்பை எப்படி அணுகுவது என்பதற்கு மிக உதவியாக இருந்தது.
அவ்வப்போது தான் சொல்லிக்கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவே மாறி எதிரில் இருக்கும் கதாபாத்திரத்திடம் பேசுகிறார், சிரித்துக்கொள்கிறார். உணர்வுபூர்வமான உரை. பல கவிதை தருணங்களை அப்படியே அழகாக கண் முன் நிறுத்துகிறார்.
இரண்டாவதாக ஒத்தெல்லோ எனும் துரோகத்தின் கதையையும் அப்படியே விளக்குகிறார்.
’’தன்னை வஞ்சித்துவிட்டு செல்லும் மகள் உன்னையும் வஞ்சிப்பாள்’’ என்னும் வரிகளின் ஆழத்தை சொல்லிவிட்டு அதை சிலாகித்துக்கொண்டு பின்னர் அடுத்ததை துவங்குகிறார். ஆன்மாவின் மகிழ்ச்சியே, மூர்க்கமான அன்பு போன்ற முக்கியமான வசனங்களையும் அனுபவித்து சொல்கிறார்
மூன்றாவதாக ஜூலியஸ் சீசரையும் நேரமின்மையால் சுருக்கமாக அதன் புகழ்பெற்ற வசனங்களுடன் பேசினார். குறிப்பாக கத்திகுத்து காயங்கள் உதடுகளை போல தங்களுக்கான நியாயங்களை கேட்பதை, குருதி துளி தன்னை குத்தியது யார் என்று பார்க்க வெளிவந்ததை சொல்லுகையில் அருணா அந்த காட்சியின் உள்ளேதான் சென்று நிற்கிறார்
இன்னும் கொஞ்சம் நேரம் அளிக்கப்பட்டிருந்தால் உரை இன்னும் சிறப்பாக இன்னும் முழுமையாக இருந்திருக்கும். அருணா இப்படி பெரும் படைப்புக்களை காணொளியில் அறிமுகப்படுத்தி உரையாற்றி தனித்தனியே வலையேற்றினால் இளம் வாசிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்
அன்புடன்
லோகமாதேவி
December 19, 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
இம்முறையும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் எல்லா உத்வேக மனநிலைகளும் மாற்றமின்றி தொடர்ந்தன. நானும் அருண்மொழியும் சைதன்யாவும் 16 காலையிலேயே வந்து இறங்கினோம். சில குடும்பச் சந்திப்புகள். மாலையிலேயே நண்பர்கள் வந்து கூடத் தொடங்கினர். ராஜஸ்தானி பவன் மண்டபத்திலேயே அறை. வழக்கமான அறை, 101 .
வழக்கமான டிசம்பர் குளிர். மதிய வெயிலில் கூட இதமான வெப்பம் மட்டுமே இருந்தது. விருந்தினர்களில் கனிஷ்காவும் மேரியும் வந்து அருகே விடுதியில் தங்கியிருந்தனர். அங்கே சென்று அவர்களை பார்த்துவிட்டு நடந்தே வரமுடிந்தது. டிசம்பரில் தமிழகத்தில் சென்னையே கூட அழகானதாகத் தெரியும்.
17 காலையில் எழுந்து கீழே வந்தால் ராஜஸ்தானி அரங்கை ஒட்டிய மூன்றடுக்கு மாளிகையின் எல்லா அறைகளும் நிறைந்துவிட்டிருந்தன. குஜராத்தி பவன் மாளிகையும், டாக்டர்ஸ் பங்களா மாளிகையும் விரைவாக நிறைந்துகொண்டிருந்தன. வழக்கமான ஊர்வலநடையாகச் சென்று வழக்கமான டீக்கடையில் கடைநிறைய அமர்ந்து டீ குடித்தோம்.
10 மணி அரங்கில், ஐநூறுபேர் அமர்ந்து அவை நிரம்பிவிட்டது. தன்னறம், சீர்மை, தமிழினி, விஷ்ணுபுரம், யாவரும், பாரதி புத்தகநிலையம் புத்தகக்கடைகளில் நூல்கள் அடுக்கப்பட்டு விற்பனை தொடங்கிவிட்டிருந்தது. நூற்பு கடையில் கைத்தறி சட்டைகள்.
சுற்றிலும் தெரிந்த முகங்கள். நாஞ்சில்நாடன், தேவதேவன், எம்.கோபாலகிருஷ்ணன், சு.வேணுகோபால், காலப்பிரதீப் சுப்ரமணியம், லக்ஷ்மி மணிவண்ணன் எல்லாம் ஆண்டுதோறும் வருபவர்கள்.தமிழினி கோகுல்பிரசாத், கார்த்திகை பாண்டியன், ராஜ சுந்தரராஜன், தேவிபாரதி, எஸ்.ஜே.சிவசங்கர், பேரா.முஜிப் ரஹ்மான் என எழுத்தாளர்கள். கோவையின் இலக்கிய முகங்களான செந்தமிழ்த் தேனீ, சி.ஆர்.ரவீந்திரன் என பலர்.
இம்முறையும் இலக்கிய அரங்கு வழக்கம்போல கலவையானது. இளம்படைப்பாளிகளான கார்த்திக் பாலசுப்ரமணியன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, கமலதேவி என ஓர் அணி. மொழிபெயர்ப்பாளர் மு.யூசுப், பதிப்பாளர் விஜயா வேலாயுதம் என இன்னொரு அணி. இவர்களுடன் மூத்தபடைப்பாளியான அ.வெண்ணிலா.
எல்லா அரங்குமே நிறைந்திருந்தன. நான் உலக இலக்கிய விழாக்களை நிறையவே பார்த்திருக்கிறேன். இத்தனை நிறைந்த அரங்கை எங்கும் கண்டதில்லை. இந்த இலக்கிய விழா ஒரு fair அல்ல ஒரு தீவிரமான இலக்கிய உரையாடற்களமும் கூட. நிகழ்வை நடத்துபவர் கேள்விகளை பெரிதாக தயாரிக்க வேண்டியதில்லை, அரங்கில் இருந்து எழும் கேள்விகளே தீவிரமான வாசிப்பின் வெளிப்பாடாகவே அமையும். ஒரு மாதகாலம் வாசிப்புக்காக அளிக்கப்படுவதன் விளைவு அது.
ஆனால் எந்த விவாதமும் நட்பின் எல்லையை கடக்கலாகாது என்பது எங்கள் நெறி. உவப்பத் தலைகூடி உள்ளப்பிரிதல் – அதுவே மாறாத கொள்கை. ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வுகளும் இனிய நினைவுகளாக சேர்ந்தபடியே உள்ளன. அரங்குகள் நிறைந்து வழியும் கூட்டம் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
இம்முறை அமர்வுக்ளை ஏழுடன் நிறுத்திக்கொண்டோம். ஆகவே இரண்டு முறையாக மொத்தம் மூன்றரை மணிநேரம் இடைவெளி விட முடிந்தது. அது நிகழ்வுக்கு வருபவர்கள் ஒருவரோடொருவர் சந்தித்து, பேசி , உளம்பரிமாற பொழுதளித்தது. அத்துடன் கூட்டம் மிக அதிகம். ஒவ்வொரு வேளையும் ஐநூறுபேருக்குமேல் உணவருந்தினர். நான்கு பந்திகள் நிகழவேண்டியிருந்தது.
ஒவ்வொரு அரங்கிலும் ஒருவகையான தீவிரம். அகரமுதல்வனின் குரலில் ஈழப்போராட்டத்தின் களத்தில் இருந்து வந்த ஒருவருக்குரிய தீர்மானத்தன்மை. கமலதேவியின் குரலில் தனக்குரிய உலகை தெளிவாகவே வகுத்துக்கொண்ட ஒருவரின் திட்டவட்டத் தன்மை. அ.வெண்ணிலாவின் பேச்சில் கள ஆய்வு செய்து எழுதுபவரின் விரிவு. எவர் பேச்சிலும் தயக்கங்கள் இல்லை.
ஒன்று கவனித்தேன். என் தலைமுறையில் சிற்றிதழ்சூழலைச் சேர்ந்த இலக்கியவாதிகள் மேடையில் பேச தடுமாறுவார்கள். சந்திப்புகளில் குழறுவார்கள். எதையுமே சொல்லாமல், சொல்லமுடியாமல் பொதுவாகவே பேசிக்கொண்டிருப்பார்கள்.அதுவே இலக்கியத்தின் இயல்பு என்றும் சொல்ல முயல்வார்கள். அரசியலியக்கம் சார்ந்த எழுத்தாளர்களே பேசுவார்கள், ஆனால் அது வேறொருவகை பேச்சு.
இந்த தலைமுறை எழுத்தாளர்கள் எல்லாரிடமும் மேடைக்கூச்சமோ தயக்கமோ இல்லை. காரணம், இன்று மேடைகள் பெருகியுள்ளன. எப்படியோ எல்லாருமே பேசவேண்டியிருக்கிறது. இலக்கியத்திற்கு வெளியேகூட இன்று எழுந்து நாலு வார்த்தை சொல்ல தெரிந்திருப்பது ஓர் அவசியமாக ஆகிவிட்டிருக்கிறது.
எந்த அரங்கிலும் எதையும் சொல்லி நிலைகொள்ள, கவனம்பெறத் தெரியாதவர்கள் அரங்கக் கவனத்திற்காகச் செய்யும் உத்திகள் சென்றகால தீவிர இலக்கிய அரங்குகளில் நிகழும். அதற்கு ஓர் ஏற்பும் சூழலில் இருந்தது-மீறல், தீவிர என்றெல்லாம் சிலரால் அது புரிந்துகொள்ளவும் பட்டது. இன்று பார்வையாளர்களே நல்ல கேள்விகள் வழியாக கவனம்பெறும் சூழலில் அந்த வகையான செயல்பாடுகள் எளிய கோமாளித்தனங்களாக கருதப்படுகின்றன.
மதிய உணவுக்கு கூடம் நிறைந்து இரைந்துகொண்டிருந்தது. 2010 முதல் விழாவில் தயிர்சாதம் – புளிசாதம் பொதிகள் வரவழைத்து சாப்பிட்டோம். அதைத்தான் சிறப்பு விருந்தினரான மணி ரத்னத்திற்கும் கொடுத்தோம். 2014 நிகழ்வில் அரங்கசாமி அன்று சாப்பிட்டுக்கொண்டிருந்த நீண்ட வரிசையை பார்த்து கண்கலங்கி ‘இதான் சார் கனவு, இலக்கியத்தை ஒரு பெரிய குடும்பமா ஆக்குறது’ என்றார். இன்று ஐந்து மடங்குபேர் ஆகிவிட்டனர்.
இரவு 830க்கு அரங்குகள் முடிந்தன. 930 முதல் ஒரு மணிநேரம் இலக்கிய வினாடிவினா. விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவரான குவிஸ் செந்தில் நடத்துவது. விளையாட்டாக ஆரம்பித்த நிகழ்வு இன்று ஒரு நல்ல கொண்டாட்டமாக ஆகிவிட்டது.
நல்ல வினாடிவினா நிகழ்வில் எல்லா கேள்வியும் கடினமானதாக இருக்கலாகாது, பார்வையாளர் விலகிவிடுவார்கள். எல்லா கேள்வியும் எளிதாக இருந்தால் சுவாரசியம் இருக்காது. செந்திலின் கேள்விகள் கலவையானவை. ஆனால் மிகமிக சிக்கலான, அரிய தகவல்களால் ஆன கேள்விகளுக்குக் கூட பதில்கள் வந்தன.
காரணம் தேர்ந்த வாசகர்களால் ஆன அவை அது என்பதே. ஒருவேளை தமிழகத்தின் அத்தனை நல்ல வாசகர்களும் அடங்கிய அவை.ஆகவேதான் ஏதோ ஒரு அமெரிக்க கவிஞரின் குரலை மட்டும் போட்டு யார் என்று கேட்டால் நான்குபேர் கையை தூக்குகிறார்கள். ஒரு பாடலின் ஒரு வரி தவறாக கேட்கப்பட்டு அது ஒரு நூலின் தலைப்பாக ஆனது என்று கேட்பதற்குள் பதில்கள் முளைத்தெழுந்துவிடுகின்றன.
இரவு அறைக்குச் சென்று 12 மணி வரை மேலும் பேசிக்கொண்டிருந்தோம். அது சிரிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த அமர்வு. விஷ்ணுபுரம் அரங்குகளில் இருக்கும் தனித்தன்மை, வாசகர்கள் பெருகிக்கொண்டே இருப்பதற்கான காரணம் அதுவே.
மறுநாள் காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தபோது டீ குடிக்கப்போவதற்காக பெரும் கும்பல் காத்து நின்றது. டீ குடித்துவிட்டு வருவதே ஓர் இலக்கிய ஊர்வலம். போக்குவரத்து நின்று தயங்கும் அளவுக்கு.
முதல் அரங்கில் நூல் பதிப்பின் இன்றைய சூழல் பற்றிய உரையாடல். கனிஷ்கா குப்தா மேரி . இரண்டாம் அரங்கில் அருணாச்சல பிரதேச எழுத்தாளர் மமங் தாய் அவர்களுடன் ஒரு நேருக்குநேர் சந்திப்பு. சிறப்பு விருந்தினர்களில் போகன் ஏற்கனவே எங்கள் அரங்கில் வாசகர்களைச் சந்தித்துவிட்டார்.
உணவுக்குப்பின் சாரு நிவேதிதாவுடன் ஒரு சந்திப்பு. நான் அதை மட்டுறுத்தினேன். அதாவது மேடையில் பெரும்பாலும் சும்மாவே இருந்தேன். கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. சாரு நிவேதிதாவின் புனைவுகளை வெவ்வேறு கோணங்களில் அணுகும் தீவிரமான வாசிப்பு சார்ந்த கேள்விகள் மட்டுமே வந்தன. சாருவுடன் சம்பந்தப்படும் முகநூல் விவாதங்கள் சார்ந்த ஒரு கேள்விகூட இல்லை. அது சாருவுக்கு ஆச்சரியமாக இருந்தது, எனக்கு ஆச்சரியமேதுமில்லை.
காரணம் விஷ்ணுபுரம் அரங்குக்கு வருபவர்களில் முகநூலர் மிகமிகச் சிலரே. பலருக்கு அந்த சலம்பல்கள் பற்றிய செய்திகளே தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு சாரு நிவேதிதா எக்ஸிஸ்டென்ஷலியசமும் ஃபேன்சி பனியனும் முதல் ஔரங்கசீப் வரையிலான நூல்களை எழுதிய ஆசிரியர் மட்டுமே.
அந்தி விழாவுக்கு முன் இரண்டரை மணிநேர இடைவெளியில் அந்த பகுதியே நூற்றுக்கணக்கான இலக்கியக் குழுக்களாக ஆகி முழங்கிக்கொண்டிருந்தது. அப்பகுதியினூடாக செல்கையில் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த வெடிச்சிரிப்புகளே ‘ஆம், எண்ணியது இதையே’ என என்னை பெருமிதம் கொள்ளச் செய்தன.
மாலை அமர்வு நிகழ்வுகள் முழுமையாகவே சுருதி டிவியால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அராத்து இயக்கிய தி அவுட்சைடர் என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்ட பின் நிகழ்வு இரண்டு மணிநேரத்தில் கச்சிதமாக நிறைவுற்றது. அதன்பின் முதன்மை ஆளுமைகளை வழியனுப்பி வைத்தல், சிற்றுரையாடல்கள்.
விஷ்ணுபுரம் விழாவின் முகப்பில் நூல்விற்பனை அரங்கில் வழக்கம்போல நூல்கள் வெளியிடப்பட்டன. சுனில்கிருஷ்ணனின் ‘மரணமின்மை என்னும் மானுடக்கனவு’ லெ.ரா.வைரவனின் இரண்டாம் சிறுகதைத்தொகுதியான இராம மந்திரம் , அவருடைய தம்பி இவான் கார்த்திக்கின் முதல்நாவலான பவதுக்கம், , சுஷீல்குமாரின் மூன்றாம் சிறுகதை தொகுதியான அடியந்திரம் கா.சிவாவின் மூன்றாம் சிறுகதை தொகுதியான கரவுப்பழி . ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த அனிதா அக்னிஹோத்ரியின் உயிர்த்தெழல் என்னும் நாவல்.மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களின் ‘ஆழம்.
இவான் கார்த்திக்கின் பவதுக்கம் அண்மையில் தமிழில் வெளிவந்த அற்புதமான நாவல் என்று அதை மெய்ப்பு நோக்கிய ஸ்ரீனிவாசன் பதினைந்துமுறைக்குமேல் பரவசத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார்.
இரவு பத்து மணிக்கு கூட்டமாக சென்று மீண்டும் ஒரு டீ. வழக்கமான அதே படிக்கட்டில் அமர்ந்து நையாண்டியும் சிரிப்புமாக ஓர் உரையாடல். ஒருங்கமைப்பாளரான செந்தில்குமாருக்கு பொன்னாடை போர்த்துதல். மீண்டும் அறைக்குள் சென்று இரவு 2 மணி வரை அரட்டை. விழாவின் நிறைவு உடல் அளவிலேயே தாளமுடியாத எடையாக ஆகும் வரை நீண்ட நாள்.
இந்த விழாவின் உரையின் இறுதியில் நான் சொன்ன ஒன்று உண்டு. இதன் மூலம் நன்மைபெறுபவர்கள் முதன்மையாக இலக்கியவாதிகள். சாரு நிவேதிதா முதல் நான் வரை, அரங்கில் ஏதேனும் வகையில் வெளிப்பட்ட படைப்பாளிகள் அனைவரும்தான். ஆனால் எந்த பயனும் பெறாதவர்கள் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள். பலநாட்கள் இரவுபகலாகப் பணிபுரிந்து இதை நிகழ்த்தியவர்கள்.
இதை வழக்கமான ஒரு உபச்சாரமாகச் சொல்லவில்லை. இதே விழாவை எந்த பெரிய உழைப்பும் இல்லாமலும் நடத்திவிட முடியும் – மூன்று மடங்கு செலவாகும் அவ்வளவுதான். இந்தியாவின் முக்கியமான இலக்கிய விழாக்களில் ஒன்றாக ஆகிவிட்டிருக்கும் இந்நிகழ்வு இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் மிகச்சிறிய இலக்கிய விழாவுக்கு ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவில் நிகழ்கிறது. அதுதான் உழைப்பை கோருகிறது.
இங்கே பெரும்பகுதி பணிகள் இலவசமாக நிகழ்கின்றன. நிகழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் கார்கள் அனேகமாக எல்லாமே நண்பர்களுடையவை. ஓட்டுநர்களும் அவர்களே. ஒவ்வொரு விருந்தினரையும் உபசரித்து திருப்பியனுப்பும் வரை பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் வாசகர்களே. அந்த நிதியையும் வாசகர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறோம்.
அந்த உழைப்பை வழங்குபவர்கள் பெரும் வாசகர்கள், முழுக்க முழுக்க இலக்கியம் மீதான பற்றில் இருந்தே அதைச் செய்கிறார்கள். திரும்ப எதையும் பெற்றுக்கொள்வதில்லை. அத்தகைய தீவிரமான பற்றை இலக்கியம் உருவாக்குகிறது என்பதே இலக்கியத்துடன் ஏதேனும் வகையில் தொடர்புகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பெருமைகொள்ளவேண்டிய விஷயம். நாம் நம்பும் ஒன்றின் ஆற்றலுக்கான சான்று. நாம் செய்வன உகந்தவையே என நாமே உறுதிசெய்துகொள்ளும் நிகழ்வு அது.
இந்த விழாவை ஒருங்கிணைப்பதில் செந்தில்குமாருடன் விஜய்சூரியன் (சூரியன் சொல்யூஷன்ஸ்) நடராஜன் (டைனமிக் மெட்டல்ஸ்) மீனாம்பிகை (விஷ்ணுபுரம் பதிப்பகம்) ராம்குமார் (இ.ஆ.ப, மேகாலயா) செல்வேந்திரன் (அர்த்தமண்டபம் மக்கள் தொடர்பகம்) என ஒவ்வொருவர்பங்களிப்பும் பெரியது. விருந்தினர் உபசரிப்பு மற்றும் பயணங்களை நரேன் (மொழிபெயர்ப்பாளர்) சுதா ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் பார்த்துக்கொண்டார்கள். சுஷீல்குமார் (சிறுகதை ஆசிரியர்) ஆனந்த்குமார் (கவிஞர்) ஆகியோர் எல்லா பணிகளிலும் இருந்தனர்
ஜா.ராஜகோபாலன் அரங்கை ஒருங்கிணைத்தார். அவருக்கு உதவியாக ஷாகுல் ஹமீது இருந்தார். ஷாகுல் இருப்பது ஒரு பெரும்பலம். இயற்கையாகவே சேவைமனநிலை அமைந்தவர். அரங்கை ஒருங்கிணைப்பதில் உதவிய யோகேஸ்வரன், அனங்கன், கதிர் முருகன் ஆகியோர். அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலாக இலக்கியம், நல்ல இலக்கியம் மட்டுமே இருக்கமுடியும் என்பது அளிக்கும் நம்பிக்கை போல இத்தருணத்தில் ஆற்றலின் ஊற்று பிறிதில்லை.
ஒவ்வொரு விஷ்ணுபுரம் அரங்குக்குப் பின்னரும் ஒரு பெருமுயற்சிக்கான முடிவை எடுப்பதன் காரணமே அந்த ஆற்றல்தான். 2021 டிசம்பரில் விழா முடிந்தபின் தமிழ்விக்கி தொடங்கும் முடிவை திடீரென எடுத்தேன். இம்முறை அப்படி இன்னொரு பெரிய அமைப்பை தொடங்கும் முடிவை எடுத்திருக்கிறேன்
எல்லாம் கைகூடும், ஏனென்றால் நான் என் ஆசிரியரின் கனவின் எளிய சேவகன்.
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க் பார்க்க இரண்டாம் நாள் புகைப்படங்கள்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



