விஷ்ணுபுரம் 2022, கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழா சிறப்பாக நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட விழா மேலும் மேலும் என சிறப்பாகி கொண்டே செல்கிறது என சொல்வீர்கள். அதை கருத்தில் கொண்டே விழா ஏற்பாடுகள் திட்டமிடப்படும்.

சனிக்கிழமை காலை முதல் அமர்விலேயே கிட்டத்தட்ட ஐநூறு பேர் அமர்ந்திருந்தது ஞாயிறு மாலை விழாவில் பெருங்கூட்டம் வரப்போகிறது என்பதை உணர்த்தியது.சனிக்கிழமை மதிய உணவு சாப்பிட்டவர்கள் நானூற்றி முப்பது பேர்.

வாசகர்கள் அனைவருக்கும்,விழா நடக்கும் ராஜஸ்தானி பவன் அறைகள் நிரம்பியதால்,குஜராத்தி சமாஜ் மற்றும் டாக்டர் பங்களாவிலும் அறைகள் எடுத்திருந்தோம்.எழுத்தாளர்கள்,சிறப்பு விருந்தினர்கள் அருகிலேயே வேறு,வேறு விடுதிகளில் தங்கியிருந்தார்கள்.

இருநாள் இலக்கிய திருவிழாவின் இறுதி நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வில் எழுநூறு பேருக்கும் மேல் வந்து சிறப்பித்தனர்.இதுவரை நடந்த விழாக்களிலேயே இதுதான் அதிக எண்ணிக்கையில் விருது பெறும் ஆளுமையை வாசகர்கள் கூடி வாழ்த்தியது.

ஞாயிறு மாலை ஆவணப்படம் திரையிடும் முன்பே அரங்கில் நாற்காலிகள் நிறைந்து வாசகர்கள் நின்றுகொண்டிருந்தனர். ராம்குமார் அவர்கள் முன் வரிசையில் மேலும் நாற்காலிகளை போட சொன்னார்.அந்த நாற்காலிகள் நிரம்பியதும். ராம்குமார் மீண்டும் அழைத்து “ பாய் கோவை ஆட்சியர் சமீரன் வந்துகொண்டிருக்கிறார் மற்றும் நாம் அழைத்த சிறப்பு விருந்தினர்கள் சிலருக்கு நாற்காலிகள் வேண்டும்” என்றார்.

ராஜஸ்தானி பவனில் கிடைத்த அனைத்து நாற்காலிகளையும் அரங்கிற்கு கொண்டுவந்தும் இடம் போதாமல் அரங்கினுள் நின்றுகொண்டும்,அரங்கின் வெளியில் நின்று கண்ணாடி வழியாகவும் வாசகர்கள் விழாவை பார்த்து ரசித்து சாரு நிவேதிதாவை வாழ்த்தினர்.

விழா மிக சிறப்பாக நடந்து முடிந்தது.நீங்கள் சொல்வதுபோல் பத்தில் ஒரு பங்கு செலவு தான்.ஐநூறு பேருக்குமேல் ஆறு வேளை விருந்துணவு, தங்குமிடம், தேநீர், சிறப்பு விருந்தினர்களின் விமான,ரயில் கட்டணம்,அவர்களுக்கான சிறந்த விடுதியறை என கோடி ரூபாய் செலவாகும் இந்த நிகழ்வை சில லட்சங்களில் உங்கள் நண்பர்களின் கடும் உழைப்பால் சாத்தியமாக்கியுள்ளீர்கள்.

விழாவிற்கு நிதி கோரி அறிவிப்பு வந்த சில தினங்களில் சக்திவேல் நிதியளித்துவிட்டு எழுதிய கடிதத்தை கண்கள் நிரம்ப படித்தேன். (https://www.jeyamohan.in/173756/ ) இத்தனை சிறப்பாக விழா நடப்பதற்கு ஆதாரம் பணம்.விழாவிற்கு  தேவையான  நிதியை (ஐநூறு முதல் லட்சம் வரை)உலகெங்கிலிருந்தும் அனுப்பித்தந்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் விஷ்ணுபுரம் விழா குழு சார்பாகவும்,ஆசான் ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

விழாவிற்கு வர முடியாது என தெரிந்தும் இந்த திருவிழா சிறப்பாக நடக்கவேண்டும் எனும் நல்லெண்ணத்தில் நிதியளித்தவர்கள் நிறையப்பேர். விழாவுக்காக வாஷிங்டனிலிருந்து விஜய் சத்யா,வார இறுதியில் வந்த சவூதி  ஒலி சிவக்குமார்,சிங்கப்பூர் விஜி,லண்டன் ராஜேஷ்,நியூசிலாந்து என உலகம் முழுவதிலிருந்தும் வாசகர்கள் கலந்துகொண்டார்கள்.

நான் முக்கியமாக சந்திக்கவேண்டும் என விரும்பியவர்கள் சிலர் விழாவுக்கு வரவில்லை. பாண்டி அரிகிருஷ்ணன்,சிவாத்மா,வளவ துரையன்,மணி மாறன்,விழுப்புரம் திருமலை மற்றும் நேரில் வாழ்த்து கூற விரும்பிய அறம் மொழிபெயர்ப்பாளர் சகோதரி பிரியம்வதா .

இந்தியாவின் நடந்த ஆக சிறந்த இரு நாள் இலக்கிய திருவிழாவின் ஒருங்கிணைப்பில்,சிறு பணிகள் செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

ஷாகுல் ஹமீது ,

நாகர்கோயில் .

அன்பின் ஜெ

சிறுவர்களுக்கு தீபாவளியைப்போல எங்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா.

அறிவித்த நாள்முதலே ஆவலோடு காத்திருந்து விழா நாளன்று நிகழ்வுக்கு வந்திருந்தோம். வழக்கம்போல மிக நேர்த்தியாக அனுபவம் மிகுந்த நெறியாளர்கள் (ராஜகோபால், செல்வேந்திரன்)தூண்ட, விருந்தினர்களோடு உரையாடும் நிகழ்வுகளில் சலனமற்ற அரங்கில் வாசகர்களின் கவனம் யாவும் ஒரே குவியத்தில்.

முன்னோடியும் பின்னோடியும் இல்லாத அசல் சக்தியான சாரு நிவேதிதா அவர்களுக்கு விஷ்ணுபுரம்விருது வழங்கியது மகிழ்வான நிகழ்வு.

கவிஞர் போகன் சங்கர் கூறும்போது அனல்வாதம் புனல்வாதம் அருட்பா மருட்பாவை சுட்டிக்காட்டி வாதமும் இலக்கிய சண்டையும் இலக்கியம் வளர்கத்தான் என்கிற positive approach நேர்மறை சிந்தனையை வளர்க்கும்.நீங்கள் course correction செய்வதாக போகன் கூறியது உங்கள் பொருப்பையும் பெருந்தன்மையையும் பறைசாற்றுகிறது.

விமர்சனங்கள் கடந்து நண்பர்கள் துணையோடு சாதித்துள்ளீர்கள்.நீங்கள் சொன்னதுதான் ‘இருத்தலியம் பேசுபவர்கள் காலாவதியாவதில்லை.’அறிவை அள்ளிக்கொண்டு மீண்டோம்.வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிதினும் பெரிது கேட்போம்.நீங்கள் அதனினும் பெரிது தருவீர்கள்.

நன்றி.

அன்புடன்

மூர்த்தி விஸ்வநாதன்

வாழப்பாடி.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருதுவிழா ஒரு பேரனுபவம். தமிழ்ச்சூழலில் வாழும் எந்த இலக்கிய வாசகருக்கும் ஒரு தனிச்சிக்கல் உண்டு. இங்கே அவன் தனிமையானவன். சூழலில் எங்குமே வாசிப்புக்கு துணை கிடையாது. மதிப்பு கிடையாது. இந்த விழாக்களில் அத்தனை வாசகர்களைப் பார்ப்பதும் உரையாடுவதும் நாம் ஒரு இயக்கம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. நம்முடைய செயல்கள் எல்லாமே அர்த்தபூர்வமானவையே என்ற நம்பிக்கை உருவாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழா உருவாக்கும் நம்பிக்கை, ஊக்கம் எல்லாமே அற்புதமானவை. விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்ததுமே வெறியுடன் வாசிக்க ஆரம்பிப்பது என் வழக்கம். இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது செய்யும் வெறியுடன் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்னும் ஆசை உருவாகிறது. இலக்கியவாசகன் என்பது ஒரு ரகசியம் அல்ல என்ற நிலை தோன்றுகிறது.

அற்புதமான நாட்கள். என் மனம் கவர்ந்த இலக்கியவாதிகளைப் பார்த்தேன். பேசிக்கொண்டிருந்தபோது சும்மா கேட்டுக்கொண்டு பக்கத்திலே நின்றேன். பேசுமளவுக்கு எனக்கு இன்னும்கூட திடம் வரவில்லை. ஆனால் அற்புதமான அனுபவமாக இருந்தது.

உணவு, மற்ற ஏற்பாடுகளெல்லாமே சிறப்பானவையாக இருந்தன. நான் என் நண்பனின் ஹாஸ்டலில் தங்கினேன். அடுத்தாண்டு குஜராத்தி பவனில் எல்லார் கூடவும் தங்கவேண்டும் என நினைத்தேன். இரவிலே எல்லாரும் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். மிஸ் ஆகிவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.

வாழ்த்துக்கள்

ராஜ்குமார்  மணிவண்ணன்

புகைப்படங்கள் தொகுப்பு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.