ஸதீநாத் பாதுரியின் விடியுமா? – வெங்கி

அன்பின் ஜெ,

நலம்தானே?

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களின் வரிசையில் ஸதீநாத் பாதுரியின் வங்க நாவல் “விடியுமா?”-வை (தமிழாக்கம் என்.எஸ். ஜகந்நாதன்) சென்ற வார இறுதியில் வாசித்தேன். ஆச்சர்யமும், வியப்பும், நிறைவும்.

1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்க காரணமானவன் நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு“. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான்.

அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது.  

ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார்.

அதன்பின்பு… 

***

பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் “ஜாகரி” (“விடியுமா?”) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்ன என்ன என்பதை பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் “ஸரோஜ் பந்தோபாத்யாய“. முன்னுரையிலிருந்து…

*

ஸதீநாத் பாதுரியின்ஜாகரிவங்காள அரசியல் நாவல் இலக்கியத்துக்கு ஒரு புது பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் இசைத்து வந்தகோஷ்டிகானஅமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்து விட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. “ஜாகரி“-யில் வர்ணிக்கப்படும்மாஸ்டர் ஸாகிப்பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது

*

முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள் தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது. 

அருமையான நாவல்! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழிற்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்!. முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (“வெள்ளையனே வெளியேறு“) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைப்படுத்தியது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் “விடியுமா?”.

நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புற கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான்.***

முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் “ஜாகரி“(“விடியுமா?”)-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – “மனிதன்“. 

வெங்கி

“விடியுமா?” – ஸதீநாத் பாதுரி 

(வங்க நாவல்; மூலம்: “Jagari” 1945)

தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.