இயல் விருதுகள் – 2022

பாவண்ணன் தமிழ் விக்கி

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்  – இயல் விருதுகள் – 2022

வழக்கமாக வருடாவருடம் வழங்கப்படும் இயல்விருது, கோவிட் நோய்த்தொற்று காரணமாக 2020ம் வருடம் வழங்கப்படவில்லை. ஆகவே 2022ல், இரண்டு இயல் விருதுகள் அளிக்கப்படுகின்றன. அவை 2023 யூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

பாவண்ணன் (இயற்பெயர் பலராமன் பாஸ்கரன்)

தமிழ் இலக்கியத் தோட்டம், 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் இலக்கிய சாதனையாளர் இயல் விருதை, கடந்த 30  ஆண்டுகளுக்கு மேலாக  தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணன் அவர்களுக்கு வழங்குகிறது.

பாவண்ணன் 1980 களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களின் தலைமுறையை சேர்ந்தவர். ’தீபம்’ என்னும் இதழில் வெளிவந்த முதல் சிறுகதையை தொடர்ந்து சிற்றிதழ்களிலும், பெரிய இழழ்களிலும் இவர் இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்.

தமிழ் சிறுகதைகளையும், தமிழில் வெளிவந்த பிறமொழிச் சிறுகதைகளையும் முன்வைத்து திண்ணை இணைய இதழில் ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இவர் அந்தக் கதைகளில் காணப்பட்ட அழகியலையும் வாழ்வியலையும் இணைத்து புரிந்துகொள்ளும் விதமாக எழுதிய நூறு விமர்சனக் கட்டுரைகள் மிகப்பெரிய வாசக கவனத்தை பெற்றன.

ஐம்பது தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளை முன்வைத்து ’உயிரோசை’ இணையதளத்தில் ’மனம் வரைந்த ஓவியம்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. ரசனையை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் இவரை தமிழ் அழகியல் விமர்சகர்களின் முன் வரிசையில்  வைக்கத் தகுதியாக்கின.

பாவண்ணன், வளவனூர் என்னும் சிற்றூரில் அக்டோபர் 20, 1958 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை வளவனூரிலும் புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசுக் கல்லூரியிலும், பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்து தேறினார். கோட்டப் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருடைய கவிதை தொகுதிகள் மூன்றும், சிறுகதை தொகுதிகள் 21ம், நாவல்கள் மூன்றும், குறுநாவல்கள் மூன்றும், கட்டுரை தொகுப்புகள் 34ம்,  சிறுவர் இலக்கியத் தொகுப்புகள் ஒன்பதும், மொழிபெயர்ப்புகள் (கன்னடத்திலிருந்து) 24 நூல்களும், (ஆங்கிலத்திலிருந்து)  ஐந்து நூல்களும் (எல்லாமாக 99 நூல்கள்) இதுவரை வெளியாகியுள்ளன.

இவர் பெற்ற இலக்கிய விருதுகள்:

புதுச்சேரி அரசு சிறந்த நாவல் விருது – 1987இலக்கியச் சிந்தனை சிறந்த நாவல் விருது – 1995.கதா அமைப்பு சிறந்த சிறுகதை விருது – 1995.சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெர்ப்பு விருது – 2005தமிழக அரசு சிறந்த குழந்தை இலக்கிய விருது – 2009சுஜாதா – உயிர்மை அறக்கட்டளை சிறுகதை தொகுப்பு விருது – 2015என்.சி.பி.எச் சிறந்த கட்டுரை தொகுதி விருது – 2015இந்திய அமெரிக்க வாசகர் வாழ்நாள் சாதனை விருது – 2018விளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் விருது – 2019எம்.வி. வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது – 2021

இவருடைய இலக்கிய படைப்புகள் சக எழுத்தாளர்களின் மதிப்பை பெற்றவை. முக்கியமாக இவருடைய மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியத்தின் வளத்தை பெருக்கின. இவருடைய தமிழ் இலக்கியச் சாதனைகளைப்  பாராட்டி 2022ம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2022 09:07
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.