Jeyamohan's Blog, page 648
January 8, 2023
மைத்ரி விமர்சன அரங்கு- உரைகள்
ஜனவரி 7, 2023 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் அஜிதன் எழுதி வெளிவந்துள்ள மைத்ரி நாவலின் இரண்டாம் அச்சின் வெளியீட்டுவிழா – விமர்சன விழா நடைபெற்றது. அதில் ஆற்றப்பட்ட உரைகள். மணி ரத்னம், பார்க்கவி, சுனீல் கிருஷ்ணன், சாம்ராஜ் மற்றும் அஜிதன்
மைத்ரி நாவல் வாங்க மைத்ரி மின்னூல் வாங்க
நேற்றைய புதுவெள்ளம்
ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி
கவி தமிழ் விக்கி
விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி
நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம் அவை வங்க இலக்கியத்தின் நேரடியான பாதிப்பினால் விளைந்தவை என்பதில் உள்ளது. இந்தியாவெங்கும் நவீன இலக்கியம் உருவானதில் வங்க நவீன இலக்கிய அலையின் பாதிப்பு பெரும்பங்காற்றியிருக்கிறது.
தமிழில் பாரதி, வ.வே.சுப்ரமணிய அய்யர் முதலிய முன்னோடிகள் வங்கக்கதைகளை மொழியாக்கம் செய்தும் தழுவியும்தான் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தார்கள். அதன்பின்னர் மணிக்கொடி காலகட்டத்தில் வங்க இலக்கியம் தமிழில் பெருவெள்ளமாக பெருகிவந்தது கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி இருவரும் நேரடியாக வங்கக் கதைகளின் செல்வாக்குக்கு ஆளாகியிருந்தனர்.
சரத் சந்திரர்அதற்கடுத்த காலகட்டத்தில் வங்க வெகுஜனவாசிப்பு நாவல்களும் தமிழில் பெரும்வாசக ஆதரவைப்பெற்றன. குறிப்பாக சரத் சந்திரர் ஒருகாலகட்டத்தில் தமிழ் எழுத்தாளராகவே அறியப்பட்டவர். அ.கி.கோபாலன், அ.கி.ஜெயராமன், ஆர்.ஷண்முகசுந்தரம் மொழியாக்கத்தில் வெளிவந்த ஸ்ரீகாந்தன், தேவதாஸ் போன்ற நாவல்கள் தமிழில் விற்பனையில் சாதனை படைத்தவை. அ.கி.கோபாலன் அதற்கென ஜோதி நிலையம் என ஒரு பதிப்பகமே வைத்திருந்தார்.
ஆனால் என்ன காரணத்தாலோ அவருக்கு நிகரான வெகுஜனஎழுத்தாளரான பிமல் மித்ரா தமிழில் அறிமுகமாகவில்லை. அவர் இடதுசாரி எழுத்தாளர் என்பது காரணமாக இருக்கலாம். அக்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு இடதுசாரி அரசியலில் ஆர்வமிருக்கவில்லை.
ரவீந்திரநாத் தாகூர் அடைந்த பெரும் புகழும் வங்க இலக்கியம் இந்தியாவெங்கும் சென்று சேர ஒருகாரணம். தாகூர் 30களில் நாகர்கோயிலுக்கு வந்து ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில் பேசியபோது இரண்டாயிரம்பேர் வந்திருந்தனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தாகூரின் கோரா முதலிய நாவல்கள் காபூலிவாலா முதலிய கதைகள் அக்காலத்தில் இங்கே பெரிதும் விரும்பப்பட்டன.
அக்காலகட்டத்தில் கலைமகள் பதிப்பகம் தொடர்ந்து வங்கநாவல்களை நல்லமொழியாக்கத்தில் வெளியிட்டது. தாராசஙக்ர் பானர்ஜி, மாணிக்பந்த்யோபாத்யாய, விபூதிபூஷன் பானர்ஜி என்னும் முப்பெரும் பானர்ஜிக்களின் ஆக்கங்கள் தமிழில் பெரும் வாசிப்பைப்பெற்றன. த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி இருவரும் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்கள்.
வங்கப்பேரிலக்கியங்களான பதேர்பாஞ்சாலி [விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய] வனவாசி [மாணிக் பந்த்யோபாத்யாய] பொம்மலாட்டம் [மாணிக் பந்த்யோபாத்யாய] கணதேவதை [தாராசங்கர் பானர்ஜி] கவி, [தாராசங்கர் பானர்ஜி] ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி] ஆகியவை தமிழில் வெளிவந்து பேரிலக்கியமென்றால் என்ன என்று தமிழ் வாசகர்களுக்குக் காட்டின.
விபூதி பூஷன் பானர்ஜி
தாராசங்கர் பானர்ஜி
மாணிக் பந்த்யோபாத்யாயஅடுத்தகாலகட்டத்தில் மேலும் சில முக்கியமான ஆசிரியர்கள் தமிழுக்கு வந்தனர். முக்கியமாக அதீன் பந்த்யோபாத்யாய, [நீலகண்ட பறவையைத்தேடி] ஆஷாபூர்ணாதேவி [முதல்சபதம்] போன்றவர்களை குறிப்பாகச் சொல்லலாம். மொழிபெயர்ப்பாளரான சு.கிருஷ்ணமூர்த்தி தன் பெருமுயற்சியால் தொடர்ந்து வங்கப்படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவந்தார்.
அதற்கடுத்த அலை என ஒன்று வரவில்லை. மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டவற்றில் ஒருசில சுவாரசியமான வங்கப்படைப்புகள் உண்டே ஒழிய முதன்மையான பேரிலக்கியங்கள் ஒன்றுமில்லை. வங்க இலக்கியத்துக்கும் வங்க சினிமாவுக்கும் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. இந்தி என்னும் பேரலையில் வங்க சினிமா முழுமையாக அழிந்துவிட்டது. வங்க அறிவியக்கம் மொத்தமாகவே ஆங்கிலத்துக்கு மாறிவிட்டது. சென்ற இருபதாண்டுகளில் பேசப்பட்ட வங்க எழுத்தாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்கள்.
ஆஷாபூர்ணா தேவி
அதீன் பந்த்யோபாத்யாய்வங்க இலக்கிய அலை உருவாக்கிய நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. ஏராளமான நூல்கள் அ.கி.கோபாலனின் ஜோதி நிலையம், வை.கோவிந்தனின் சக்திபதிப்பகம், கலைமகள் காரியாலயம், அல்லயன்ஸ் பதிப்பகம் ஆகியவற்றால் வெளியிடப்பட்டவை. பெரும்பாலான நூல்கள் அறுபதுகளுக்குப்பின் மறுபதிப்பு வரவில்லை. சமீபகாலமாக உருவான புத்தகக் கண்காட்சி அலையில் சிலபதிப்பகங்கள் நூல்களைப்பற்றி எந்தக்குறிப்பும் இல்லாமல் அவற்றை மறுபதிப்பு செய்துள்ளன. சிலநூல்களில் மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூட காணப்படுவதில்லை. வங்க இலக்கியம் பற்றிய அறிமுகம் இல்லாத நிலையில் சரத்சந்திரரின் நூல்கள் மட்டுமே தொடர்ந்து விற்கின்றன.
த.நா.குமாரசாமி
சு கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பாளர்வங்க அலையின் நூல்களில் முக்கியமான நூல்களை மறுபிரசுரம் செய்யவேண்டிய அவசியம் இன்றுள்ளது. வெறுமனே வரலாற்றுப்பதிவாக மட்டும் அல்ல. அவற்றில் ஏராளமான படைப்புகள் இன்றும் முக்கியமானவை, தவிர்க்கமுடியாதவை. அம்மொழியாக்கங்கள் தமிழின் சொத்து எனச் சொல்லத்தக்கவை.
என் நூலகத்தை துழாவிக்கொண்டிருந்தபோது சிக்கிய ஆற்றுவெள்ளம் அதில் ஒன்று. குரு பப்ளிகேஷன்ஸ் மே 1966-இல் வெளியிட்ட இந்நூல் மறுபதிப்பு வரவில்லை. த.நா.சேனாபதி, எம்.ஏ. மொழியாக்கம் செய்திருக்கிறார்.
என்னிடமிருக்கும் இந்நூலின் சிறப்பு என்னவென்றால் இது இருமுறை அட்டைபோடப்பட்டிருக்கிறது. இதில் உள்ள சிறுகதைகள் எதற்குமே ஆசிரியர் பெயர்கள் இல்லை. ஆற்றுவெள்ளம், தலைநகரம், அந்தச்சிலை, அஞ்சனக்கோட்டை, புகையிருளிலே, சுறாமீன், புதிய சிஷ்யன் ஆகிய நீள்கதைகள் இத்தொகுதியில் இருக்கின்றன.
இக்கதைகளை வைத்துப்பார்த்தால் இவை எல்லாமே 1947-க்கு முந்தையவை. கிழக்குவங்கம் வங்காளத்தின் பகுதியாக இருந்தபோது எழுதப்பட்டவை. ஆற்றுவெள்ளம் கதை இன்று வங்கதேசத்தில் உள்ள பத்மாவின் கரையில் நிகழ்கிறது. அசாதாரணமான ஒரு மன எழுச்சியை அளிக்கும் மகத்தான கதை இது. பத்மாவில் வெள்ளம் வந்து ஒரு கிராமம் அழிகிறது. ஜமீன்தார் மேடான பகுதியில் புதியஊர் ஒன்றை அமைக்கிறார். அங்கே மின்சாரவசதி செய்கிறார். காலம் மாறத்தொடங்குகிறது.
பலநிகழ்வுகள் வழியாக இந்திய தேசிய எழுச்சியின் சித்திரம் விரிகிறது. ஜமீன்தாரின் மைந்தன் ரஜதன் காந்தியைப் பின்பற்றி சுதந்திரப்போரில் இறங்குகிறான். மொத்த ஊரே கொந்தளிக்கிறது. மீண்டும் வெள்ளம்பெருகும் பத்மா. ராஜா வெள்ளம்பெருகும் பத்மாவை நினைத்துக்கொள்கிறான் ‘உடை உடை தளைகளை எல்லாம் உடை’ என அது கூவுவதை அறிகிறான்.
பத்மாவின் வெள்ளத்தை அந்தக்காலகட்டத்தின் மாற்றத்தையும் உணர்வெழுச்சியையும் குறிப்பதற்காக பயன்படுத்தியிருக்கும் இக்கதை மிக அழகானது. குறியீட்டை அழுத்தாமல் முழுக்கமுழுக்க வாசக ஊகத்துக்கே விட்டிருக்கும் அழகு வியக்கச்செய்கிறது. அன்றைய வங்கத்தின் மனவேகத்தைச் சொல்லக்கூடிய அழகிய கதைகளில் ஒன்று இது. இதை நளினிகந்த பட்டசாலி எழுதியிருக்கலாமென நான் ஊகிக்கிறேன். ஆரம்பகால வங்க எழுத்தாளரான அவரது இதே பாணியிலான இன்னொரு கதையை நான் வாசித்திருக்கிறேன்.
நளினிகந்த பட்டசாலிஇத்தொகுதியின் எல்லா கதைகளுக்குமே வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. ஆணும்பெண்ணும் சரிநிகராகப் பழகத் தொடங்கிய காலகட்டத்தின் இனிய மோதல்களையும் கனவுகளையும் சொல்லும் ‘தலைநகரம்’ ஒரு அழகிய கதை. இந்திய தொல்லியல் ஆய்வுகள் தொடங்கிய காலகட்டத்தில் அவை உருவாக்கிய கனவுகளை புனைவாக்கிய ‘அந்தச்சிலை’யும் ஓர் அழகிய கதை.
இந்தத் தொகுதியை எவரேனும் கண்டுபிடித்து மறுபதிப்பு செய்தால் நல்லது. சேனாபதியின் நூல்கள் தேச உடைமையாக்கப்பட்டவை. ஆகவே பதிப்புரிமைச்சிக்கல்கள் இராது. வாசகர்களுக்கு அன்றைய வங்க இலக்கியத்தையும், அதையொட்டி உருவான தமிழ் நவீன இலக்கியப் பெருக்கையும் புரிந்துகொள்ள அது உதவும். நாம் எப்படி எழுதத்தொடங்கினோம் என நாம் உணரமுடியும்.
மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Sep 7, 2014
திருமணமாகாதவள் -சரத்சந்திரர்
தேவதாஸ்-சரத்சந்திரர்
சரத்சந்திரர் கடிதம்
–
பிரபஞ்சன்
பிரபஞ்சன் மறைந்து நான்காண்டுகள் கடந்துவிட்டன. பீட்டர்ஸ் காலனியில் அவருடைய பழைய அடுக்கில்ல வீட்டுக்குச் சென்று அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். நண்பர்கள் பலர் உடன்வந்துள்ளனர். ஓர் உரையில் பிரபஞ்சன் பசிக்காமல் வாழ வழியிருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருப்பேன் என்று சொல்கிறார். அது அந்நேரத்து உண்மை. முழு உண்மை அல்ல.
அவரிடமிருந்த ஒரு குணம், செழிப்பான குடும்பப்பின்னணியில் இருந்து வந்தது. கையில் பணமிருந்தால் அவர் ஒரு சீமான். டாக்ஸி பிடித்து நல்ல காபி சாப்பிடுவதற்காக நெடுதொலைவு செல்வார். உடன்சேரும் நண்பர்களுக்கெல்லாம் வாங்கிக்கொடுப்பார். நான் அவரை சந்தித்த எல்லா நேரத்திலும் ஓட்டல் பில்லை அவர்தான் கொடுத்தார். அது அவருடைய கௌரவப்பிரச்சினையும்கூட. அதுவும் மிகநல்ல ஓட்டலில் மிக நல்ல உணவை வாங்கித் தந்தபின்பு.
அக்கணங்களில் அவர் இளவரசன் போன்றிருப்பார். உயர்தர ஆடை, உயர்தர சிகரெட், உயர்தர வாசனைத் திரவியம். பிரபஞ்சன் வறுமையால் வாடவில்லை, அவருள் வாழ்ந்த கலைஞன் அவரை அவ்வாறு வாடவைத்தான். இறுதிநாட்களில் பவா செல்லத்துரை வேடியப்பன் போன்றவர்கள் நண்பர்களுடன் அவருக்கு சேர்த்தளித்த நிதி அவருக்கு பேருதவியாக அமைந்தது. ஓர் அரசு செய்யவேண்டியவற்றை பவா செய்கிறார்
பிரபஞ்சன்சுடர்களின் மது, கலை கார்ல்மார்க்ஸ்
கவிதைகள் எழுதப்பட்ட காலம் தொட்டே எப்போதும் எல்லோராலும் ரசிக்கப்படும் விரும்பப்பட்டும் வந்த வண்ணமே தான் இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை கவிதையின் முகங்கள் மரபுக் கவிதை புதுக்கவிதை உரைநடை கவிதை ஹைக்கூ என பலவாறு மாறி வந்திருக்கின்றதே தவிர கவிதைக்கான ‘கரு’க்கள் இன்னும் ஊற்று நீர் போல் சுரந்து கொண்டே தான் இருக்கின்றது. வாசகனின் ரசனையை பொறுத்து அவனது கவிதை வாசிப்பின் தன்மையானது மரபோ, புதுமையோ, உரைநடையோ என தனித்துவம் கொள்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் கவிதைகள் நவீனமடைந்து வாசிப்பவர்களை எளிதில் கவரும் வகையில் மிகவும் புழங்கும் வாழ்வியலை, நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் கவிதைகளாக உருமாற்றம் பெற்று வந்த வண்ணம் இருப்பதாக நான் கருதுகின்றேன்.பொதுவாக கவிதைகளை அதிகம் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும், எழுத்தாளர்கள் பலர் அறிவுறுத்தியதற்கு இணங்க சில கவிதை தொகுப்புகளை அல்லது கவிஞர்களை தேடி பிடித்து படிக்கும் பழக்கத்தை மட்டும் தற்சமயம் கைவசம் கொண்டுள்ளேன்.
அதன்படி கல்யாண்ஜி, நா.முத்துக்குமார், பிரான்சிஸ் கிருபா, மதார், இசை, நரன், ச.துரை, ஆனந்தகுமார் ஆகியோரை வாசித்து வருகின்றேன். இந்த வரிசையில் தற்போது என்னை ஆட்கொண்ட கவிஞன் இராயகிரி சங்கர். நம் நிகழ்காலத்தில் எத்தனையோ நிகழ்வுகளை, நாமும் அந்நிகழ்வுகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் வருடிக் கொண்டு காலத்தை ஓட்டிச் செல்கிறோம். அப்படி கடந்த சென்ற, காணுகின்ற சம்பவங்களை கவித்துவமாக ரசிக்கும்படி வார்த்தைகள் வாயிலாக ஓவியம் தீட்டி செல்கின்றார்கள், கவிஞர்கள்.
கவிஞர் இராயகிரி சங்கர் அவரது ‘சுடர்களின் மது’ (கிண்டிலில் கிடைக்கிறது), எனும் கவிதை தொகுப்பை வாசிக்கையில் அவருக்கே உரிய பாங்கில், அவர் கண்ட அனுபவித்த, கேட்ட பல நிகழ்வுகளை சொற்கள் கொண்டு கவி வடிவங்கள் ஆக்கி உள்ளார் என்பதனை அறிய முடிகிறது.
இராயகிரி சங்கரின் கவிதைகளில் யதார்த்தம் நிரம்பி வழிகிறது. காதல், காமம், பசி, ஏக்கம் பரிதவிப்பு, துக்கம், வன்மம், நகைச்சுவை என பல்வேறு தளங்களில் நம்மை இட்டுச் செல்கின்றார். சில கவிதைகள் வாசிக்கும் பொழுது நமக்காகவே எழுதியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுகிறது வாசிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவ்வாறு தோன்றவும் செய்யலாம் என கருதுகிறேன்.
இந்த தொகுப்பில் உள்ள 51 கவிதைகளிலும் ஏதோ ஒரு தனித்துவம் நிரம்பியுள்ளதாகவே எனக்கு தோன்றுகிறது. காதல் கவிதைகள் பெரும்பாலும் இத்தொகுப்பில் இருப்பினும் அவை வெவ்வேறு ரசனைகளை கொடுக்கிறது. சில கவிதைகள் வாழ்வின் தத்துவத்தை பேசுவதாக தோன்றுகிறது.
கணவனின் புகுந்த வீட்டின் பாதிப்பில் இருந்து விடுவித்துக் கொண்டு பிறந்த வீடு வரும் பெண்ணின் விடுதலையையும் அவள் தாயின் பரிதவிப்பையும் காட்டும் கவிதையும், இட்லி புராணத்தை கூறும் கவிதையும் எதார்த்தம். மெழுகு சிலை மனிதர் பற்றிய கவிதை இக்கால வாழ்வியல் நிதர்சனம். குமாரியக்கா கவிதை 400 பக்கங்கள் நாவலுக்கான கதைக்கரு… இப்படி ஒவ்வொரு கவிதையினுள்ளும் ஏதோ ஒரு சிறப்பு உள்ளதாய் தோன்றுகிறது.
கவிஞர் இராயகிரி சங்கரின் முதல் கவிதை தொகுப்பாக இது இருக்கலாம் என்று கருதுகின்றேன். அதற்கான குழந்தைத்தனங்கள் ஆங்காங்கே காணவும் செய்கின்றது. எனினும் சில தவிர்த்து ஒட்டுமொத்தமாய் பார்க்கையில் கவிஞர் இராயகிரி சங்கரின் ‘சுடர்களின் மது’ கவிதை தொகுப்பினை ஓர் சிறந்த நல்படைப்பு என உறுதியாய் சொல்லலாம்.
கலை கார்ல்மார்க்ஸ்
திருவாரூர்
*
வெண்முரசுக்குப் பின்… சோழராஜா
இனிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் தானே. இங்கு எங்கள் வீட்டில் அனைவரும் நலம்.
ஈஸ்வர ஹிதம், இறை விருப்பம். என்ற ஒரு வார்த்தை ஒரு வாரமாக என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. எப்படி என்று தெரியாது , எங்கிருந்து என தெரியவில்லை பின்னர் தேடியதில் தளத்தில் படித்த கட்டுரை என தெரிந்து கொண்டேன்.
அந்த வார்தையினால் தான் இந்த கடிதம் எழுதும் ஊக்கம் பெற்றேன். இல்லை என்றால் என்னால் கடந்து சென்று எழுதிவிட முடியாது என இதை எழுதும்பொழுது நினைக்கிறேன்.
வெண்முரசு முதல் வாசிப்பை 22/12/2022 அன்று நிறைவு செய்தேன். கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகள். வெண்முரசு நான் 2021 ஜனவரி புத்தாண்டின் வாசிக்க தொடங்கினேன்.
வாசிக்க ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் படித்தேன். சில நாட்கள் இரவு பகல என படித்ததும் உண்டு . சில நாட்கள் ஒரு வரிக்கு மேல் செல்ல முடியாது . நான் நினைத்தது உண்டு, “தினமும் வந்தப்ப வாசிக்காம விட்டோமே” பிறகு யோசித்தால் கண்டுபாக முடியாது என தோன்றியது. ஒரு மரு அத்யாய திற்கும் 24 மணி நேரம் இடைவேளை, கண்டிப்பாக அதை என்னால் தாங்கி கொண்டிருக்க முடியாது. அடுத்து அடுத்து என என் மனம் பறக்க நிலைகொள்ளாமல் தங்களுக்கு மெயில் மழை பொழிந்திருப்பேன்.
என் நாட்கள் நீண்டு நீண்டு சென்றன. விதுரரின் வாசிப்புப் பரிந்துரையின் படி தினமும் காலையில் எழுந்தவுடன் காவியம்: அது செமஸ்டர் எக்ஸாமாக இருந்தாலும் , இரவு உறங்குவதும் காவியத்துடனே. சில நேரங்களில் ஆர்வத்தை அடக்க முடியாமல் lectures நடக்கும்பொழுது கூடவே வாசித்து உண்டு. பல நேரங்களில் இடையில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல்(சில நேரங்களில் யார் கேள்வி கேட்டார்கள், எங்கு இருக்கிறேன் என) முழித்து திட்டு வாங்கி உள்ளேன். I was obsessed with வெண்முரசு.
It was my only anchor of hope. கல் பெருஞ்சிறு நுரை நாவல் முன்னுரையில் நீங்கள் எழுதியது போல வெண்முரசு என்ற ஒரு வார்த்தையை பிடித்து கொண்டுதான் இந்த இரண்டு வருடங்களை நான் கடந்தேன். Those days were my toughest time.
Corona இரண்டு lock down, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அப்பா அம்மா இருவருமே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். தொடர் உடல் உபாதைகள், அதனுடன் சேர்ந்து மன அழுத்தம். Both were diagnosed for clinical depression and started taking medicine.
I have never seen my father in such a low state. It was a nightmare for me to see him in such a vulnerable state. At ine point he stopped speaking with us, although we stayed under one roof. It was a worst nightmare. I pray that I shall never see him again in that state.
அந்த நாட்களில் வெண்முரசு ஒன்றுதான் என் துணைக்கோள்.வீட்டில் நான் கதை சொல்லிகொண்டே இருந்தேன் எதை பற்றியும் எதை பார்தும் வென்முரடுடன் இணைத்து தங்கள் சொன்னவற்றை தொகுத்து வீட்டில் பேசிக்கொண்டே இருந்தேன்.
பலரது உண்மையான முகங்களை எனக்கு காட்டியது. கீழ்மையும் ஏளனமும் நிறைந்த பார்வை. நீ இவ்வளவுதான் நான் நினைத்தது சரி என இலிக்கும் விழிகள் பல நான் கடந்து வந்தேன். ஒருவன் கீழே சரியும் பொழுது மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு மகிழ்ச்சி ஜெ? இவர்களுக்கு அதில் என்ன கிடைக்க போகிறது, கைகொட்டி சிரித்த முகங்கள் ஒவ்வொன்றாக என் கண்களுக்கு முன் வருகிறது.
ஒருவகையில் வெண்முரசு என்னை திடப்படுத்தியது. வெண்முரசு வழியே நான் கண்ட பேராளுமைகளின் வீழ்ச்சியும் எழுச்சியும் என்னை ஒருவாறாக தேற்றியது. ஒரு நாள் எங்கேயோ ஆரம்பித்து, துருபதனின் கதையை அப்பாவிற்கு சொன்னேன். சொல்லச் சொல்ல கதை எழுந்து கொண்டே வந்தது என்னால் அவ்வளவு வரிகளையும் நினைவில் வைத்து சரளமாக கூறமுடியும் என்று அப்போது தான் தெரிந்தது. நான் நினைத்து கொள்வதுண்டு துரோணர் கர்ணன் , துரியோதனன் திருதராஷ்டிரர் விதுரர் முன் நான் எம்மாத்திரம். நெஞ்சை நிமிர்த்தி நேர்பட நிற்க வேண்டும் என்ற வெறியை என்னுள் வேரூன்றி விதைத்தது வெண்முரசு தான்.
அப்பவும் அம்மாவும் படிப்படியாக உடலும் உள்ளமும் தேறி வருகின்றனர். மாத்திரைகளின் power குறைந்துள்ளது ஆனால் இன்னும் மாத்திரையை நிறுத்தவில்லை. நீண்ட காலம் எடுத்து கொள்ள வேண்டும் என மருத்துவர் கூறுகிறார்.அப்பாவும் படிக்க ஆரம்பித்துள்ளார். மைத்திரி , குமரிதுறைவி வாசித்துள்ளார்.
Whenever I feel low i go and read இமைகணம் chapters where kannan speaks with karnan especially these lines. “தோற்கடிக்கப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர், அடக்கப்பட்டோர் அனைவருக்கும் இதுவே என் சொல். தோற்றீர்கள் எனில் வெல்க! வீழ்ந்தீர்கள் எனில் எழுக! அடக்கப்பட்டிருந்தால் ஆள்க! சிறுமைப்படுத்தப்பட்டீர்கள் என்றால் விரிக! அதற்குரிய இயலறிவே உங்களுக்குரியது. தனியறிவு அதற்கு உகந்தது அல்ல. கூரியதென்றாலும் ஒளியைக் கொண்டு காலில் தைத்த முள்ளை அகழ்ந்தெடுக்கவியலாது.
இங்குள்ளவை அனைத்தும் மீறவியலாதன என்றால் உங்கள் தோள்களுக்கு ஆற்றல் ஏன் அளிக்கப்பட்டது? உங்கள் சொற்களுக்கு ஏன் அனல் கூடுகிறது? களத்தை அமைத்த அதுவே கைகளையும் ஆக்கியது என்று உணராதவர் பேதைகளே.”..
வெண்முரசு மூலம் அடைந்தது என்ன? என்ற கேள்விக்கு கிருஷ்ணன் அண்ணா பெருவாழ்வையும், சுசித்ரா அக்கா தனக்கான இளைய யாதவனை கண்டுகொண்ட தையும், மீனாம்பிகை அக்கா, யாரையும் நான் சகித்து கொள்ள வேண்டியது இல்லை யாரையும் வெறுக்க வேண்டியதும் இல்லை என வெண்முரசு ஆவணப் படத்தில் கூறி இருந்தனர். இதே கேள்வி நானே எனக்கு கேட்டு கொள்கிறேன். நான் பெற்றது என்ன?
காவியம் என்பது தன்னுள் பல அடுக்குகளை கொண்டுள்ள ஒன்று. வியாசர் சொல்வது போல காவிய ஆழத்தில் ஒவ்வொரு சொல்லும் பெரும் பாறை என இருப்பவை அவற்றின் ஆழத்தில் ஒரு துளி ஒளி கூட செல்லமுடியாது. யாராலும் கண்டு கொள்ள முடியாமலும் போகலாம்.. என் வாசிப்பெனும் அகள்விலக்கை என் வாழ்க்கை அனுபவத்தை பெற்ற அறிவை கொண்டு ஒளிரசெய்து முன் செல்கிறேன். நான் அடைந்தவை யாவும் அதன் விளைவே. வெண்முரசு எனக்கே எனக்கான திறப்புகளையும் தந்துள்ளது.
வெண்முரசு என்னை பொறுத்தவரையில் மாபெரும் மீட்சியின் கதை. மீட்சியை பல்வேறு வகையில் நடத்தியுள்ள காவியம். எப்பேர்ப்பட்ட இடர் ஆயினும், அவமானம் ஆயினும், குரோதம் ஆயினும் அதில் இருந்து வெளியேற தேவை ஒரு பிடிமானம். அப்பிடிமானதை பற்ற மனம் திறந்திற்றுக வேண்டும். அப்பிடிமானம் அல்லது திறப்பு எங்கு வேண்டுமானாலும் நிகழலாம், புள்ளின் ஒரு அசைவில் சூரியனின் ஒரு கதிர் கீற்றில் , ஒரு துளி கண்ணீரில், குழல் இசையில், அன்னதில், ஒரு மலர் இதழில் அல்லது ஒரு தொடுகை அல்லது கன்னியின் கடை விழி பார்வையிலும் அது நிகழலாம். அதை கண்டறிவது நம் கையில் அல்லது அதற்கான தருணம் வாய்க வேண்டும். வாய்த பின் அதை விடாமல் பற்றி எழ வேண்டும். அதை விரித்து கொள்ள வேண்டும்.
மீட்சி நேர்நிலையில் இருத்தல் அவசியம். வஞ்சம் கொண்டோ கோபம் கொண்ட எழும் எதுவும் பெரும் அழிவையே தரும். எதிர் நிலை எண்ணங்கள் யாவும் எதிர் நிலை முடிவையே தரும்.
Aristotle உடைய catharsis தியரியை நான் நன்றாக உணர்ந்து கொண்டது வெண்முரசின் மூலம்தான். Fall of great men is always been subject but in venmurasu , it describes about common man in every great men who is constantly flexes and wants normal like. his psyche and vulnerable states are addressed. they attain their greatness after their crisis or after a vantage point. They are great because they arise from that state and became what we see. A reader can easily pin the moment or the vantage point where his actions take a turn and he transforms. He or she already had all the qualities to be great inside them but the situation that instigated them made them poignant persistent even dogmatic at certain point. All those shaped them whom we see. We cannot deny their low points but accepting them gives us a complete picture of their self. Campbell describes it as hero’s journey in his book on same title.
அத்தனைக்கும் மேல் ஒன்று உண்டு. நான் என்னுடைய கண்ணனை கண்டது. சுசித்ரா அக்க சொன்னதை போல அனைவரும் அவர்களுக்கான கண்ணனை கண்டு கொள்வார்கள். நான் என்னவாக கண்டேன்? அதை கூறுவது கடினம். அவன் என் நினைவு தெரிந்த நாள் முதல் என் கை பிடித்து வருபவன். அறியா வயதில் என் கண்ணீரை துடைத்து குறை ஒன்றும் இல்லை என தேற்றியவன். வெண்முரசு அவனை வளர்ந்து விரிந்துள்து ஆனால் இன்னும் அவன் எனக்கு பொக்கை வாய் தோழன் தான்.
சில நேரங்களில் சில நிகழ்ச்சிகள் தர்கதிர்க்கு அப்பாற்பட்டு நடப்பவை. அவை ஏன் நடந்தது? எப்படி நடந்தது என கேள்வி கேட்டால் நமக்கு ஒன்றும் எஞ்சாது. மேலும் மேலும் மேலும் அதன் தீவிர தன்மை கூடிய படியே செல்லும் அதை அப்படியே விட்டு விலகி செல்வது தான் சிறந்த வழி.
அன்று வெண்முரசு இறுதி அத்தியாயங்களை படித்து கொண்டிருந்தேன். முதலாவின் அத்தியாயம்11 . இரவு மணி 2:30 மேல் இருந்து . பின் இரவானதால் மக்கள் நடமாட்டம் எதும் இல்லமல் தெருவே நிசப்தமாக இருந்தது. தர்மர் இளைய யாதவர் வின் எய்கிய செய்தி கேட்டு ஹஸ்தினபுரி சென்று கொண்டிருந்தான். அர்ஜுனனை கண்டான். ஊர் முழுவதும் யாதவன் விண் சென்ற செய்தி கேட்டு திருவிழா கோலம் பூண்டு ஆடி பாடி கொண்டாடி கொண்டிருந்தனர், “அப்போது எவனோ ஒரு பாணன் ‘**பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே’ என்று பாடிக்கொண்டிருப்பதை கேட்டேன்”
சரியாக அந்த வரி படிக்க, காதை கிழிக்கும் சங்க நாதம் எழுந்தது. அப்படியே உறைந்து விட்டேன். கிட்ட தட்ட ஐந்து நிமிடம் ஒளித்து கொண்டே இருந்தது. கண்களில் கண்ணீர் வர என்ன செய்வது என தெரியாமல் கும்பிட்டு என்னையே அறியாமல் அழுது கொண்டிருந்தேன். சங்கு சத்தம் நின்றதும் மீதம் இருந்த அத்தியாயங்களை படித்து முடித்தேன்.
மார்கழி மாதம், தினமும் விடியற்காலை சங்கூதி வந்து பாசுரம் பாடி சங்கூதுவார். 5 -6 மணிக்குள் வரும் சங்கூதி ஏன் அன்று 2:30 மணிக்கே வந்தார்? நான் ஏன் அன்று தூங்காமல் வாசித்தேன்? இரண்டு நாட்களுக்கு முன்பே அந்த அத்தியாயத்தை படிக்க வேண்டியவன் ஏன் இரண்டு நாட்கள் தவிர்த்து அன்று படித்தேன்? தெரியவில்லை ஜெ.
காலை முதல் வேலையாக பெருமாள் கோவில் சென்று வந்தேன். நாராயணனுக்கு அர்ச்சனை செய்தேன். கோவிலுக்கு வெளியில் ஒரு மாமரம் பூத்திரிந்தது. அதை வெறிக்க வெறிக்க பார்த்துகொண்டு நின்றேன். ஏனோ காமன் அம்புகளில் ஒன்று மாமலர் என லோகமாதேவி அம்மா அவர்கள் ஒரு கட்டுரையில் கூறியது நினைவிற்கு வந்தது.
மூன்று நாட்கள் யாரிடம் என்ன சொல்வது சொன்னால் நம்பிவார்களா என தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். சொன்னால் என்ன சொல்லுவார்கள் என்ற பயம் ஜெ. என்னை கேலி செய்து விட்டால் என்ன செய்ய, சற்று நேர்மாறாக யாரேனும் சொல்லி இருந்தால் கூட என்னால் அதை தாங்கி கொண்டிருக்க முடியாது. Am I crazy or hallucinating? என பல குழப்பங்கள். முதலில் என் தோழியிடம் தான் சொன்னேன். அவள் இது ஒரு good omen, congrats let it be a hint for a good start என கூறினாள் அப்பறம் தான் எளிதாக முடிந்ததும். பின்னர் அப்பா அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் நல்லதிற்கே என சொன்னார்கள். அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை உண்டு சுந்தரகாண்டம் படித்தால் அனுமார் வந்து கேட்பார் என. இதை நாராயணன் கேட்கிறான் என கூறினார். உனக்கு காட்டி விட்டார் என கூறினார்.
அந்த வாரம் கிளப் ஹவுசில் நாலாயிரம் திவ்யப்ரபந்த கூட்டு வாசிப்பு நண்பர்கள் தொடங்கினார்கள். நானும் சென்று இணைந்து கொண்டேன். ஜா.ராஜகோபாலன் அவர்களுடன் சேர்ந்து கூட்டு வாசிப்பு. ஆண்டாள் பாசுரங்களை வாசிக்க தொடங்கியுள்ளேம். அதில் ஒரு பாடலில் சங்கநாதம் பற்றி குறிப்பு வருகிறது. அதன் அர்த்தம் என்ன என கேட்டேன். ஜாஜா வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சங்கநாதம் எதை குறிக்கிறது என ஒரு நீண்ட விளக்கத்தை கூறினார். I was listening keenly. He termed it as a call in both symbolically and in literal ways: Call to arise for war , for prayer and also from ignorance. அன்று meeting முடிந்ததும் சென்று யோசித்து கொண்டிருந்த பொழுது தான் ஈஸ்வர ஹிதம் என்ற வார்த்தை எங்கிருந்தோ நினைவிற்கு வந்தது.
இதற்கு இடையில் தினமும் உங்களுக்கு கடிதம் எழுத நினைப்பேன். ஒன்றும் எழுத தோணாது. அப்படியே போனை வைத்து கொண்டு பார்த்து கொண்டும் இருப்பேன். வார்த்தைகள் மனதில் அலைபுரண்டு கொண்டிருக்கும் எழுத வராது.
வீட்டில் கோவில்களுக்கு போய் விட்டு வரலாம் என திடீர் திட்டமிட்டு 31 டிசம்பர் கிளம்பினோம். திருக்கடையூர் அபிராமியே சென்று வணங்கினேன்.. அடுத்த நாள் புத்தாண்டு, ஶ்ரீ ரங்கம் சென்றோம். மிகுந்த கூட்ட நெரிசல். ரங்கநாதனை விழி மூடாமல் பார்த்து கும்பிட்டு விட்டு வந்தேன். உற்சவர் மோகினி அலங்காரத்தில் ஒய்யாரமாக வளம் வந்தார். அவரை தொடர்து நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், செல்வதை கைகூப்பி வெறும் விழியாக நின்று பார்த்து கொண்டிருந்தேன். வெளியில் ஆயிரம் கால் மண்டபம் விட்டு வரும்பொழுது யதேச்சையாக இடப்புறம் பார்த்தேன், அங்கு பாண்டுரங்கன் நின்று கொண்டிருந்தான். தொலைவில் தெரிந்தான் கன்னங்கரியவன் இடையில் கைவைத்து ராஜ கோலத்தில் நின்றிருந்தான். தலைமீது கரம் கூப்பி கும்பிடிட்டு வந்தேன்.
வரும் வழியில் பேசிக்கொண்டே இருந்தேன். என்ன பேசினேன் என தெரியவில்லை. அப்படியே வீடு வந்தேன். நீலம் நாவல் பற்றிய பதிவை தளத்தில் பார்த்தேன். உடனே தங்களுக்கு எழுத ஆரம்பித்து விட்டேன். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது ஜெ. இதை கூறலாமா வேண்டாமா என. ஆனால் அந்த பதிவிற்கு பின் உங்களிடம் பகிர்வதை விட இதை யாரிடம் பகிர்ந்தாலும் பொருள் அற்றதே என தோன்றியது. நீங்கள் இதை அறிய வேண்டும் ஜெ.
கடிதம் மிகவும் நீண்டு விட்டது. தங்கள் நேரத்தை அதிகமாக எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும். வெண்முரசு பின் சில வாசகர்கள் வெறுமையை உணர்ந்ததாக கூறினார். எனக்கு இப்பொழுது இருக்கும் நிலை என்ன என எழிதில் கூறிவிட முடியாது. நான் தொடர்ந்து வாசிக்க வேண்டும் , எழுத வேண்டும் என மட்டும் தோன்றுகிறது .
நன்றி என ஒரு சொல்லில் கூறிவிட முடியாது. இருப்பினும் அதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை ஜெ. நன்றி . தங்களை நேரில் பாரிக ஆவலுடன் இருக்கிறேன்.
இப்படிக்கு அன்புடன்
சோழ ராஜா
அன்புள்ள சோழராஜா
வெண்முரசை ஒட்டுமொத்தமாக வாசிப்பதென்பது ஓர் ஆட்கொள்ளும் அனுபவம். எது இலக்கியம் வழியாக இயல்வது என அறிந்துகொள்ளும் தருணம் அது. வெண்முரசு உங்களுடன் இருக்கட்டும். பெரும்பாலானவர்கள் அதை வாசித்து முடித்தபின் மீண்டும் அதில் நுழையப்போவதில்லை என எனக்கு எழுதியிருக்கிறார்கள். ஆனால் மிகப்பெரும்பாலும் அனைவருமே அதில் ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துப் படித்து அப்படியே மீண்டும் உள்ளே சென்றுகொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கும் நிகழ்க
ஜெ
சென்னை புத்தகக் கண்காட்சியில் நான்
சென்னை புத்தகக் கண்காட்சியின் விஷ்ணுபுரம் அரங்கு எண் 115 மற்றும் 116. அரங்கில் 09 ஜனவரி 2023 மாலை 5 மணிமுதல் நான் இருப்பேன். பார்க்க, நூல்கள் வாங்கி கையெழுத்திட விரும்புபவர்களை அழைக்கிறேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் பதிப்பகம்January 7, 2023
கொல்வேல் அரசி
(இக்கட்டுரை சென்ற 2017ல் வெண்முரசு தொடங்கி ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுக்கு பின் எழுதப்பட்டது. இன்று படிக்கும்போது அன்றிருந்த வேகம், அதிலிருந்து உருவான எழுத்து வியப்பூட்டுகிறது. ஓர் இலக்கியப்படைப்பு அதன் ஆசிரியனை ஏந்திக் கொண்டுசெல்லும் விதம் இக்கட்டுரையில் பதிவாகியிருக்கிறது)
நேற்றுமுன்தினம் [14-4-2017] என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை.
மறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் பார்த்துவிட்டு மறுஅமைப்பு செய்தாகவேண்டும், அதிலுள்ள அனைத்து தகவல்களும் போய்விடும் என்றான். அதில் என்னென்ன இருக்கிறதென்றே எனக்குத்தெரியாது. சரி, செய் என்றேன். எப்போது கிடைக்கும் என்றபோது ‘நாங்கள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை காலை கிடைக்கும்’ என்றான்.
வேறுவழியில்லை. ஒர் இணையநிலையம் சென்றேன். அங்கே தமிழ்ச்செயலி இல்லை. தரவிறக்கம் செய்ய ஒப்புதலும் இல்லை. சுரதா தளத்திற்குச் சென்று பத்தி பத்தியாக தட்டச்சு செய்தேன். ஒரு பத்தி எழுதவே அரைமணிநேரம். நாம் தட்டச்சு செய்வது ஆங்கில எழுத்தாகத்தான் தெரியும். ஆகவே பிழைகள். அதைத் திருத்துவது மிகப்பெரிய பணி. வெட்டிவெட்டி ஒட்டவேண்டும்.நான்கு மணிநேரத்தில் ஒருவழியாகத் தொட்டுத்தொட்டு ஒரு பகுதியைத் தட்டச்சுசெய்து இணையத்தில் ஏற்றிவிட்டு வந்தேன்.
காலையில் இரண்டாவது மடிக்கணினியுடன் மீண்டும் பழுதுபார்க்குமிடம் சென்றேன். அங்கே காலை பத்துமணிவரை எவரும் வரவில்லை. இணையநிலையங்கள் எவையும் திறக்கவில்லை. பத்தரைமணிக்கு வந்த ஒருவரிடம் கணிப்பொறியை கொடுத்தேன். ஆட்கள் வரவில்லை, வந்து பார்த்துத்தர மதியம் ஆகும் என்றார்.
நகரில் இணையநிலையங்கள் எல்லாமே மூடிக்கிடந்தன. வெயில் கொளுத்தியது. இரவு மழை இருந்தமையால் கடுமையான வெக்கை. வியர்வை ஆறு. கடைசியில் ஓர் இணையநிலையத்தைக் கண்டடைந்து உள்ளே சென்றதுமே மின்சாரம் போய்விட்டது. “இனிமேல் சாயங்காலம்தான் சார் வரும். அதுவரை ஒன்றும்செய்யமுடியாது” என்றார்.இணையநிலையங்கள் எல்லாமே பழங்காலத்தின் இடிபாடுகள் இன்று. ஓட்டை விசைப்பலகைகள். நான் முந்தையநாள் தட்டச்சு செய்த விசைப்பலகையில் பல எழுத்துக்களை ஓங்கி குத்தி அழுத்திப்பிடிக்கவேண்டியிருந்தது.
என்ன செய்வதென்று தெரியவில்லை. சக்ரவர்த்தி திரையரங்கு சென்று காற்றுவெளியிடை பார்த்தேன். இடைவேளையில் கூப்பிட்டுக் கேட்டபோது கணிப்பொறியை பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். படம் முடிந்து மீண்டும் கூப்பிட்டால் ”என்ன சார் பிரச்சினை? கம்ப்யூட்டரா? எங்க குடுத்தீங்க?” என்றார்கள்.
வெறிகொண்டு ஆட்டோ பிடித்து பழுதுபார்க்கும் நிலையம் சென்றேன்.அங்கே ஒரு புதுப்பையன். அவனிடம் கேட்டால் “எனக்கு ஒன்றுமே தெரியாது சார், நான் கிளம்பிட்டிருக்கேன்” என்றான். உரிமையாளரிடம் சென்று முறையிட்டேன். அவர் அவனைக்கூப்பிட்டு நல்லவார்த்தை சொல்லி மன்றாடியபோது முறைத்தபடி எடுத்துச்சென்று ஒருமணிநேரத்தில் மறுஅமைப்பு செய்து தந்தான்.
வீட்டுக்கு வந்தபோது நாலரை மணி. பசி, புழுக்கம். அருண்மொழி மூடிவைத்துவிட்டுச் சென்றிருந்த சாம்பார், மோர், சோறு மூன்றையும் கலந்து நாலைந்து வாய் சாப்பிட்டேன். எலுமிச்சை பிழிந்து உப்பு போட்டு குடித்துவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். எழுந்தபோது மணி ஆறு. அருண்மொழி வந்துவிட்டாள். வெண்முரசு எழுதவேண்டும்.
ஆனால் உடற்களைப்பு படைப்பூக்கத்திற்கு மிக எதிரானது. களைத்திருக்கையில் எதையும் எழுதலாம், கதை மட்டும் எழுதமுடியாது. பொதுவாகவே மாலையில் எழுதுவது கடினம். அந்த முழுநாளின் வண்டலும் உள்ளே படிந்திருக்கும். காலையில் தன்னிச்சையாக வந்து அமையும் கதையை மாலையில் சொல் சொல்லாக உந்திக்கொண்டு செல்லவேண்டியிருக்கும். ஆனால் எழுதியாகவேண்டும். எழுத அமர்ந்தால் தொடங்குவதற்கே எட்டுமணி ஆகிவிட்டது.
எழுதி, நிறுத்தி, கொட்டாவி விட்டு, மீண்டும் எழுதி, மீண்டும் சொல் சிக்கி, மீண்டும் எழுதி எழுதியதை முழுமையாகவே அழித்தேன். கைகளில் தலையைத் தாங்கியபடி காத்திருந்தேன். எழுதியே ஆகவேண்டும், வேறு எவருக்காகவும் அல்ல- எனக்காக. இது எங்காவது நின்றுவிட்டால் பின்னர் தொடங்காமலேயே போய்விடக்கூடும் என்னும் அச்சமே என்னை சவுக்காலடித்துத் துரத்துகிறது. இது எவ்வகையிலும் என் கையில் இல்லை. இதோ நின்றுவிட்டது என ஒவ்வொரு இடைவெளியிலும் உளம் பதறுகிறது, எங்கிருந்தோ பறவை மீண்டும் வந்தமர்கிறது.
நடந்ததை அறிவித்து ஒருநாள் வாய்ப்பு கோரலாம்.ஆனால் வெண்முரசு தொடங்கியபின் இதுவரை எழுதாமல் நின்றதில்லை. ஒரே ஒருமுறை வலையேற்றம் இரண்டுமணிநேரம் பிந்தியிருக்கிறது. ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும். நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை. இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன். அத்தனை எழுத்தாளர்களும் அறிந்த ஒன்று உண்டு, இலக்கியம் தன்னிச்சையான வெளிப்பாடு. ஆனால் அதற்கு புற உந்துதல் தேவை. கடைசிக்கெடு கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
மீண்டும் எழுதிச்சென்றபோது ஓரு வரியில் அனைத்தும் தொடங்கியது – அந்த வரி எது என வெண்முரசின் வாசகர்கள் சொல்லிவிடமுடியும். சரசரவென எழுதி முடித்து வலையேற்றியபோது இரவு 1150. மெய்ப்பு நோக்கும் ஸ்ரீனிவாசனும் சுதாவும் தூங்கிவிட்டிருப்பார்கள், பாவம்.
எல்லா இலக்கியப்படைப்புகளும் கொல்லிப்பாவைகளே. மயக்கி உயிர்குடிப்பவை உண்டு. நிழல்போல தொடர்ந்து திசைமாற்றுபவை உண்டு. கெடுகனவுகளில் ஆழ்த்தி பித்தனாக்குபவை சில. இது ஆயிரம் கைகளுடன் என் மேல் எழுந்து நெஞ்சில் காலூன்றி நின்றிருக்கும் கொற்றவை.
***Apr 17, 2017
இன்னிலையும் கைந்நிலையும்
சென்ற நூற்றாண்டில் நடந்த ஒரு விவாதம், இன்னிலையா கைந்நிலையா என்பது. வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலை என்னும் நூலை பதிப்பித்து அது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என்றார். அனந்தராம ஐயர் கைந்நிலை என்னும் நூலை பதிப்பித்து அதுவே பதினென்கீழ்க்கணக்கு நூல் என்றார். வ.உ.சி பதிப்பித்த நூல் போலியானது, அதை சொர்ணம் பிள்ளை என்பவர் பொய்யாக எழுதி வ.உ.சியிடம் கொடுத்து பெரும்பணம் பெற்றுச் சென்றுவிட்டிருந்தார். வ.உ.சியின் கடைசிக்காலத்தில் மிகுந்த உளச்சோர்வை அளித்த செய்தி இது.
எனக்கு அந்த சொர்ணம்பிள்ளை ஆர்வமூட்டும் நபராக தெரிகிறார். தமிழறிஞர்களையே ஏமாற்றுமளவுக்கு பழந்தமிழ்நூலை எழுதும் ஆற்றல்கொண்டவர் அல்லவா?
இன்னிலை
இன்னிலை – தமிழ் விக்கி
கைந்நிலை
கைந்நிலை – தமிழ் விக்கி
சு.வேணுகோபால், தன்னறம் விருது
“உலகப் படைப்பாளிகள் பூராவுமே, தன்னையும் தன் சமூகத்தையும் கடைந்து கடைந்து, அமுதத்தையும் விஷத்தையும் காட்டி, ஏதோ ஒரு வகையில சமூகத்தை முன்னெடுத்துத்தான் கொண்டுபோயிருக்கான். வால்மீகி படைப்பாளி ஆகலைனா, அவர் வேற ஒன்னா இருப்பார். நானும் கூட அப்படித்தான். ஆனால் அந்தப் படைப்பு மானுட சமூகத்துக்கு எப்போதுமே ஒரு கனிவு, அல்லது ஒரு தாய்மையைச் சுரந்து கொடுத்துகிட்டேதான் இருக்கும். அதை நோக்கத்தான் எல்லா படைப்பாளியும் எழுதுறான். மணிமேகலைல, அந்த படைப்புல எத்தனைகுறைபாடுகள் இருந்தால்கூட, அதுல அமுதசுரபி என்கிற ஒரு கற்பனை வடிவம் இருக்கில்லீங்களா, அது நாம எங்க பசியைப் பார்த்தாலும், நாம ஒரு ரூபாய் எடுத்துப் போடுறோமில்ல, அது அமுதசுரபிதான்.
எனவே, இந்த உலகத்தினுடைய பெரும்கனவுகள், இந்த சமூகத்தின் மீதான மாபெரும் அக்கறையினால்தான் முந்தைய படைப்பாளிகளெல்லாம் இன்னிக்கு முன்னாடி நிற்கறாங்க. அந்தக் கனவுகளோட ஒரு படைப்பாளி எண்ணும்போதுதான், இன்னிக்கு இல்லைனாலும் ஒரு ஐம்பது வருஷம் கழித்து அவன் பேசப்படுவான். அப்படித்தான் புதுமைப்பித்தனைப் பேசிட்டிருக்கோம். அப்போ, அந்த தார்மீக உணர்விருக்கில்லீங்களா, அதோட எந்த படைப்பாளியும் செயல்படணும். சில அற்ப சந்தோசங்கள் வரும் போகும். அவன் அங்கீகரிக்கலை, இவன் அங்கீகரிக்கலை, இவன் பப்ளிஷ் பண்ணலை, இதைப் பற்றிக் கவலைப்படாம, அதை நோக்கிப் போயிட்டே இருக்கவேண்டியதுதான். படிக்கிறவன் படிக்கட்டும். படிக்காதவன் போகட்டும். ஆனால், மாபெரும் அந்த இடத்தை தரிசிக்கணும்கிறதுதான் என்னோட கனவு”
எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் பதாகை இதழுக்குத் தந்த நேர்காணலில் உரைத்த வார்த்தைகள் இவை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய யதார்த்தவாதப் புனைவுப் படைப்புகளால் மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்பைத் தமிழுக்கு ஆற்றியிருக்கிறார் சு.வேணுகோபால் அவர்கள். அவ்வகையில் இவரை புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாரயணன், ஜி.நாகராஜன், ஆ.மாதவன் என நீளும் நவீனத்துவ சிறுகதைப் படைப்பாளிகள் வரிசையின் சமகாலத்திய முன்னோடி ஆளுமை எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். இவர், எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் தூண்டப்பெற்று எழுதத் தொடங்கியவர்; எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களால் தாக்கம்பெற்றுத் தன்னுடைய இலக்கியப் பார்வையை வகுத்துக்கொண்டவர்.
தமிழின் யதார்த்தவாதச் சிறுகதையுலகில் தீமையின் கொடும்பரப்பை எழுதி, இலக்கியம் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்தி விளக்கமுயலும் படைப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த வித்து புதுமைப்பித்தன் இட்டது. ஆனாலும், யதார்த்தத்தின் இருளை சிறுகதையின் கருப்பயையாகக் கொண்டு, உள்ளசையும் சினையாக வாழ்வு மீதான நம்பிக்கையைத் தருகிற புனைவுப் படைப்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைவரை ஆயுள்நீளும் ஆற்றலைப் பெற்றுவிடுகின்றன. அவ்வாறு, தமிழ் மண்ணின் வேளாண் வாழ்வியலைத் தன்னுடைய பிரதானக் கதைக்களமாகக் கொண்டு சிறுகதைகளும் நாவல்களும் எழுதும் முன்னோடிப் படைப்பாளுமை திரு சு.வேணுகோபால்.
தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, எல்லா தரப்புக்கும் உரிய நேர்மறையாளர்களாகத் திகழ்கிற முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், இளைய வாசிப்பு மனங்களுக்கு அவர்களை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் ‘தன்னறம் இலக்கிய விருது’ வருடாவருடம் வழங்கப்படுகிறது. அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இவ்விருது, படைப்பாளுமை சு.வேணுகோபால் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
வருகிற ஜனவரி 8ம் தேதி சென்னையிலுள்ள கவிக்கோ அரங்கில் இதற்கான நிகழ்வு நிகழவுள்ளது. இவ்விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் தொகையும் விருதாளருக்கு வழங்கப்படுகிறது. மேலும், சமகால இளம் வாசிப்புமனங்கள் ஆயிரம் பேருக்கு சு.வேணுகோபால் அவர்களின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ தொகுக்கப்பட்ட புத்தகமும் விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தையும் முன்னெடுக்கிறோம். மேலும், சு.வேணுகோபால் அவர்களின் தன்னுபவப்பகிர்வு நேர்காணலும் காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகிறது.
காணொளி இணைப்பு:
அசாத்தியமான தன்னுடைய இலக்கியப் பங்களிப்பின் காரணமாக சமகாலத்தில் இன்றியமையாத இலக்கிய ஆளுமையாக உயர்ந்துநிற்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும், உயிர்ப்புமிகு தனது படைப்புகளாலும் மொழிபெயர்ப்புகளாலும் நல்லதிர்வின் நீட்சியைப் பரப்பிய மூத்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்களும், சமகால முதன்மைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவரும் ‘தமிழினி’ இதழின் ஆசிரியருமான கோகுல் பிரசாத் அவர்களும் இவ்விருதளிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கிறார்கள். இலக்கியத் தோழமைகள் மற்றும் நண்பர்கள் பங்கேற்கும் ஓர் நற்தினமாக அந்நாள் தன்னளவில் முழுமைகொள்ளும் என்று நம்புகிறோம்.
மனித அகத்தின் ஆழங்களையும் சலனங்களையும் மண்ணுயிர்ப்புடன் இலக்கியத்தில் பதியமிட்ட தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளுமையை மனமேந்திக் கொண்டாடும் இந்நிகழ்வுக்கு தோழமைகள் அனைவரையும் நிறைமகிழ்வுடன் அழைக்கிறோம். நம் எல்லோரின் நல்லிருப்பும் இந்நிகழ்வுக்கான நிறையாசியாக அமையும். எப்பொழுதும் துணையருளும் எல்லாம்வல்ல இறையும் இயற்கையும் இப்பொழுதும் உடனமைக!
~
நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
www.thannaram.in
மைத்ரிபாவம் – பி.ராமன்
(மலையாளக் கவிஞர் பி.ராமன் 7 டிசம்பர் 2022 அன்று சென்னையில் நிகழ்ந்த மைத்ரி விவாத அரங்கில் முன்வைத்த உரையின் எழுத்துவடிவம்)
அன்புடையீர்
வணக்கம்.
அஜிதன் எழுதிய மைத்ரி எனும் இந்த முதல் நாவலின் விமர்சன நிகழ்வில் பேச என்னை அழைத்தமைக்கு மகிழ்ச்சியும் வியப்பும் தோன்றுகிறது. காரணம் தமிழிலக்கியத்தை முன்வைத்து விரிவாகப் பேசுவதற்குரிய பின்னணி அறிவு எனக்கு இல்லை என்பது அஜிதனுக்கும் தெரியும் என்பதுதான். கவிதைகளும் கதைகளும் வாசிப்பவன் என்றாலும் பெரிய நாவல்களை வாசித்த அனுபவம் கூட எனக்கில்லை. இருந்தும் என்னை அழைத்தமைக்கு எனக்கு தோன்றும் ஒரு காரணம் உண்டு. அது இதுதான்.
அஜிதன் குழந்தையாக இருக்கையில் அவனை நான் முதலில் கண்ட நிகழ்வுடன் இணைத்துப்பார்க்கத்தக்கது என் வாசிப்பு. அது குற்றாலத்தில் தமிழ் மலையாளக் கவிஞர்களின் ஓர் உரையாடல் அரங்கில், இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு. அன்று அஜிதனுக்கு ஆறோ ஏழோ வயது. திடீரென்று அஜிதன் காணாமலானான். அனைவரும் திகைப்புடன் எல்லா இடங்களிலும் தேடினோம். இறுதியில் ஒரு சந்துக்குள் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கிராமத்து தேர் பார்த்து வியந்து நின்றிருந்த அஜிதனை கண்டுபிடித்தோம். பின்னர் அஜிதனை எப்போது பார்த்தாலும் அந்த தேருடன் இணைத்தே அஜிதனை நான் நினைவுகூர்கிறேன் என்று அண்மையில் ஜெயமோகன் பற்றி எழுதிய சியமந்தகம் என்னும் நூலில் இடம்பெற்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஏழாம் வயதில் அஜிதனுடன் சேர்ந்து நான் கண்ட அந்த அற்புதமான தேர்தான் இப்போது மைத்ரி என்னும் நாவலாக உருக்கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அறுபதம் நிறைந்த இமையமலைக்கு என்னை அழைத்துச்செல்லும் தேர் இந்த மைத்ரி. இதன் வாசிப்பனுபவம் தமிழர்களுக்கு கிடைக்குமளவுக்கு மலையாளியான எனக்கு அமையுமா என்பது எனக்கு சந்தேகம் உண்டு. ஆகவே ஒரு மலையாளியின் வாசிப்பனுபவத்தை அந்த எல்லைக்குள் நின்றபடி முன்வைக்கவே நான் முயல்கிறேன்.
இமையமலைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கேரளத்தில் அண்மையில் மிகவும் அதிகரித்துள்ளது. மதநம்பிக்கை சார்ந்த சார்-தாம் பயணங்களை விட இன்று அதிகரித்திருப்பது சுற்றுலாப்பண்பாட்டுடன் இணைந்த இமையப் பயணங்கள். கூட்டம்கூட்டமாக இமையம் ஏறியிறங்குகிறார்கள். செல்பவர்கள் அங்கே இங்கிருந்து கொண்டுசெல்லும் குப்பைகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மொழியில் அங்கிருந்துகொண்டுவரும் பயண இலக்கிய குப்பைகளை கொட்டுகிறர்கள். இமையமலையின் மகத்துவத்தையும் உன்னதத்தையும் மிகமிக குறைத்து அதை அருகிலிருக்கும் குன்றாக மாற்ற அவர்களால் இயன்றிருக்கிறது. மேலும் அதேபோன்றவர்களை அந்த மலைநோக்கி செலுத்தும் பயணவழிகாட்டிகளாக மாறியிருக்கின்றன ஒவ்வொரு நூலும்
இந்தப்பின்னணியில் இமையமலைக்கு நீங்கள் செல்லவேண்டாம், இங்கிருந்து நீங்கள் வாசிக்கும் இந்த கதையே இமையம்தான் என்று காட்டும் நூல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அஜிதனின் மைத்ரி அத்தகையது. தன் புனைவு வழியாக அஜிதன் உருவாக்கும் இமையத்தில் வாழ்வதற்குத்தான் வாசகனுக்கு தோன்றும். மொழியில் உருவாகும் இமையத்தில் இருந்து இறங்கி பருவடிவ இமைய மலையை ஆக்ரமிப்பதற்கான நம்முடைய துடிப்பை மிக அழகாக தடுக்கிறது என்பதுதான் மைத்ரியின் மிக முக்கியமான சிறப்பு என நான் கருதுகிறேன்
கலைஞன் காட்டும் இமையம் போதும், நேரில் சென்று பார்த்தால் அக்கனவு உடைந்துவிடும் என்று நான் முதலில் உணர்ந்தது என் இளமையில் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் போன்ற கதகளி நடிகர்கள் அரங்கில் ராவணன் கைலாய மலையை தூக்கி விளையாடும் கைலாசோத்தாராணம் ஆட்டத்தைக் கண்டபோதுதான். பலமணி நேரம் அந்த காட்சியை ஆடுவார்கள். அதை பார்த்தபடி அமர்ந்திருக்கையில் கற்பனையில் இமையமலை அடுக்குகள் நம்முள் விரிகின்றன. நேரில் காண்பதைவிட பேரழகு கொண்டவை அக்கற்பனையில் விரியும் மலைகள் என்று நம்மை நினைக்கவைக்க மாபெரும் கதகளிக் கலைஞர்களால் இயன்றது.
சற்று வளர்ந்தபின் தபோவன சுவாமிகள் எழுதிய இமையமலைப் பயணக்கட்டுரையான ஹிமகிரிவிஹாரம் வாசித்தபோது இமையத்திற்கு போகவேண்டிய அவசியமே இல்லை என்ற எண்ணமே வந்தது. அது ஒரு பயணக்கட்டுரை நூலாக இருந்தபோதிலும் இமையமலையின் மானுடத்திற்கு அதீதமான ஓர் அம்சத்தை எனக்கு உணர்த்தியது அந்நூல்.
அஜிதனின் மைத்ரி வாசித்தபோது ஹிமகிரி விஹாரத்தில் இருந்த பழைய ஒரு சிறுகுறிப்பு எனக்கு உதவியாக இருந்தது. தபோவன சுவாமிகள் அந்நூலில் மிக அதிகமாகப் பயன்படுத்திய சொல் சிரத்தாதேவி என்பது. இன்றுபோல பயண வசதிகளேதும் இல்லாத 1920 களில் இமையத்தில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வைத்துத்தான் செல்லவேண்டும். கவனத்தை , சிரத்தையை, தபோவன சுவாமிகள் ஒரு தெய்வமாக கண்டார். அந்த சிரத்தா தேவியின் மேலும் கச்சிதமான கவித்துவ வடிவம் இந்நாவலில் வரும் மைத்ரி என்னும் இளம்பெண் என்று எனக்கு வாசிப்பில் தோன்றிக்கொண்டே இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மிகக்கூர்ந்து கவனிக்கும்போது அஜிதனின் அழுத்தம் மைத்ரிபாவத்தில் (ஒருமையுணர்வில்)தான் அமைகிறது என்பது என்னை வியப்பிலாழ்த்தியது.
காளிதாசனின் குமாரசம்பவம் வாசித்தபோதும். ரோரிச்சின் இமையமலை ஓவியங்கள் பார்க்கும்போதும் இமையமலை மிக தொலைவிலுள்ள தொன்மையின் மர்மத்துடனேயே என்னுள் நீடித்தது. இதுதான் இமையம், இனி நான் அந்த மலையைச் சென்று பார்க்கவேண்டியதில்லை என்ற எண்ணத்தை உருவாக்குகின்றவைதான் பெரிய கலைப்படைப்புகள். கலையைவிட யதார்த்தம் பெரியது என்ற எண்ணத்தை உருவாக்குபவை ‘மைனர்’ படைப்புகள். இத்தனை சுற்றுலாக் கட்டுரைகளுக்கு பின்னரும் அஜிதனின் மைத்ரி, இதோ இதுதான் இமையம், அங்கிருப்பதல்ல என்று என்னை நிறைவடையச்செய்தது. அந்த ஒரே காரணத்தாலேயே மைத்ரி என் பார்வையில் ஒரு ‘மேஜர்’ கலைப்படைப்பு.
ஒரு கலைப்படைப்பில் என்னென்ன இல்லை என்று எண்ணிப் பட்டியலிடும் செயலாக கேரளத்தில் இன்று வாசிப்பு மாறியிருக்கிறது. இந்தப்படைப்பில் அரசியல்சார்பில்லை, இதில் சமூகப்பொறுப்பு இல்லை, இதில் பெண்ணியம் இல்லை, இதில் தலித் சார்புகள் இல்லை, இதில் பின்நவீனத்துவ வடிவம் இல்லை என்றெல்லாம். ஒருபடைப்பை நிராகரிப்பதற்கு இப்படி சில குறைபாடுகளை அதில் கண்டடைவது மலையாளத்தில் வழக்கம். தமிழிலும் அண்மையில் இந்த முதிர்ச்சியின்மை ஓங்கி வருகிறதா என ஐயப்படுகிறேன். எனக்கு கலைப்படைப்பில் இருப்பது என்ன என்பதே முக்கியம். அதைத்தேடி ஆழ்ந்து வாசிக்கையில் மைத்ரி எனக்கு முக்கியமான நூலாகிறது.ஏனென்றால் இது எனக்கு தீவிரமான ஓர் அனுபவமாக ஆகிறது.
இளமையை மிக இயல்பாக எழுதிச்செல்கிறது என்பதுதான் இந்த நாவலின் முதன்மையான சிறப்பு. இளமையின் பொறுமையின்மை மிகுந்த ஏற்புணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவலில். மைத்ரியின் கலைச்சிறப்பை மற்றொருவருக்கு சொல்லிபுரியவைப்பது கடினம். அவர்களுக்கு அந்த அம்சம் சற்று செயற்கையானதாகத் தெரியலாம். ரிஷிகேசில் இருந்து சோனாபிரயாகைக்குச் செல்லும் பேருந்தில் ஹரன் என்னும் தமிழ் இளைஞன் மைத்ரி என்னும் கட்வாலி இளம்பெண்ணை சந்திக்கிறான். சட்டென்று அவளுடன் நெருக்கமாகிறான். அவள் அவனை தன் வீட்டுக்கு கூட்டிச்செல்கிறாள். அங்கிருந்து அவர்கள் அவளுடைய பூர்விக ஊருக்குச் செல்கிறார்கள். இதுதான் கதையின் அடிப்படைச் சட்டகம். பஸ்ஸில் தற்செயலாகச் சந்திக்கும் ஓர் இளம்பெண் இத்தனை எளிதாக இத்தகைய ஒரு பயணத்திற்கு தயாராகும் அளவுக்கு நெருக்கமாவதன் இயற்கைத்தன்மையின்மை இன்னொருவருக்கு நாம் இந்நாவலைப் பற்றிச் சொல்லும்போது தோன்றக்கூடும்.
ஆனால் நாவலை வாசிக்கையில் மிகமிக இயல்பான ஓர் அழைப்பாகவே அது நமக்கு அனுபவம் ஆகிறது. இமையமலையின் இயற்கையின் ஆழம் நோக்கி காதலின் அழைப்பு அன்றி வேறு எது இட்டுச்செல்ல முடியும்? அந்த அழைப்பை ஏற்று அங்கே இறங்கி அமிழ்ந்துசெல்லும் ஓர் இளைஞனின் தன்னறிதலின் (போத உதயத்தின்) கதையாக மைத்ரி மாறுகிறது. காதலின் இன்னொரு சொல்லே மாயை என்று கண்டடையும் இளமையைப் பற்றியது இந்நாவல். இமையமலைமுடிகள் காதலின் உச்சிவளைவுகள் அல்லவா, காளிதாசனின் குமாரசம்பவம் எழுதப்பட்ட காலம் முதலே?
நிலத்தை, இயற்கையை, இடத்தை எழுதுவதற்கு மலையாள இலக்கிய எழுத்துமரபில் அதிக இடமில்லை என்பது ஓர் உண்மை. நிலத்தில் இருந்து தொடங்கும் புனைவெழுத்துக்கள் மிக விரைவிலேயே மனிதகதையை சொல்வனமாக ஆவதை பல மலையாள நாவல்களில் காணலாம். இதற்கு மாறாக நிலத்தை உயிர்ப்புடன் கதையில் நிகழ்த்திய இரு படைப்பாளிகள் சி.வி.ராமன்பிள்ளையும் எஸ்.கே.பொற்றேக்காடும்தான். வைக்கம் முகமது பஷீர், தகழி, உறூப், எம்.டி. உட்பட மற்ற புனைவெழுத்தாளர்களின் படைப்புகளில் நிலம் ஒரு கதைமாந்தராக உருவெடுப்பதாகக் காணமுடிவதில்லை. மார்க்ஸிய சமூகவியல்-அழகியல் பார்வைகள் கேரள இலக்கியத்தில் செலுத்திய செல்வாக்கின் விளைவாக இவ்வாறு நிலச்சித்திரங்கள் மனிகதைகளாக மாறுகிறது என்று தோன்றுகிறது.
அஜிதனின் மைத்ரி என்னை கவர்வதற்கான காரணம் நிலம் அதன் அத்தனை நுண்விவரணைகளுடனும் கதாபாத்திரமாகவே இந்நாவலில் வருகிறது என்பதுதான். இதில் மைத்ரியுடன் ஒப்பிடத்தக்க முன்னோடி உதாரணமான படைப்பு பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவின் ஆரண்யக் நாவல் (தமிழில் வனவாசி) ஆரண்யக் நாவலும் சரி, மைத்ரியும் சரி மனிதனை மையமாக்கிய புனைவெழுத்துமுறையில் இருந்து விலகிச்சென்று இயற்கையை மையமாக்கிய புனைவெழுத்துமுறை கொண்டவை. அந்த வேறுபாடே மலையாளியாகிய எனக்கு ஆர்வமூட்டும் வாசிப்பாக அமைந்தது
இந்நாவலில் முக்கியமானது என நான் கருதும் ஒன்றைச் சொல்லி இப்பேச்சை நிறைவுறச்செய்கிறேன். இமையம் எப்படி பண்பாட்டுரீதியாக இந்தியாவையும், உலகையேகூட ஒன்றாக்குகிறது என்று ஏராளமான நுண்குறிப்புகள் வழியாக அஜிதன் இந்நாவலில் காட்டுகிறார். நாலாவது அத்தியாயத்தின் இறுதியில் சௌந்தரிய லஹரியும் சங்கரரும் புனைவின் ஓட்டத்தில் இயல்பாக தோன்றுகிறார்கள். மைத்ரி சொன்னதன்படி சோனா பிரயாகில் நாகேந்தர் தாதாவின் குதிரைலாயத்திற்கு ஜீப்பில் சென்று இறங்கி ஹரன் செல்லும் இடம். ஜீப்பில் இருந்து இறங்கிய பயணியாகிய கட்வாளி பெண்ணிடம் ஜீப் ஓட்டுநர் ஏதோ சொன்னபோது அவள் சிரித்து புருவத்தை வில்போல வளைத்து ஏதோ பதில் சொன்னாள். உடனே சௌந்தரிய லகரியின் மன்மதனின் வில் போன்ற புருவங்கள் என்னும் வர்ணனை ஹரனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆதிசங்கரர் கேதார்நாத்துக்கு செல்லும்போது தன் வயதுதான் அவருக்கும் என்று ஹரன் எண்ணிக்கொள்கிறான். புருவம் வளைத்து சிரிக்கும் இந்த கட்வாலி பெண்ணின் மூதன்னையரில் எவரையாவது ஆதிசங்கரர் பார்த்திருக்கலாம். மலையாளியாகிய ஆதிசங்கரும் தமிழ்நாட்டு இளைஞனாகிய ஹரனும் கட்வாலி பெண்ணின் புருவங்களுக்கு கீழே ஒருவரை ஒருவர் கண்டடைகிறார்கள். இருவருக்கும் அவர்களுக்குரிய அழகியல் பரவசங்கள் உருவாகின்றன.
ஐந்தாம் அத்தியாயத்தில் கட்வாலி கிராமத்தில் கேட்ட மசக்பின் என்னும் குழல்வாத்தியத்தைப் பற்றிச் சொல்லும்போது ஸ்காட்லாந்தில் இருந்து வந்த அந்த இசைக்கருவி உத்தரகண்ட் பண்பாட்டின் பகுதியாக மாறியது எப்படி என்று ஹரனின் உள்ளம் தேடிச்செல்கிறது. பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து கட்வாலிகள் அந்த இசைக்கருவியை கற்று அதை கட்வாலி நாட்டாரிசைக்கு பழக்கப்படுத்துகிறார்கள். மனிதன் இந்த மலையில் வாழவேண்டுமென்றால் இந்த இசை இருந்தாகவேண்டும் என்கிறார் ஆசிரியர்.
இமையமலையின் தேவதாரு மரங்களைப் பற்றி விவரிக்கும்போது ஆறாம் அத்தியாயத்தில் ஓங்கி வளர்ந்து நின்றிருக்கும் அவற்றை பற்றிய வர்ணனையில் கேரளத்தின் பூரத்திருவிழாக்களில் அடுக்கடுக்காக விரியும் குடைகளைப் பற்றி ஹரன் எண்ணிக்கொள்கிறான். உத்தரகண்டின் மலையடுக்குகளில் வரும் ஃபுல் டேயி என்னும் வசந்தவிழாவை கதாசிரியர் விவரிக்கையில் ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் பூக்கோலம் அமைக்கும் ஓணத்தைப் பற்றி மலையாளி வாசகன் எண்ணாமலிருக்க மாட்டான். வனதேவதைகளின் பின்னால் சென்ற ஜிது பட்வலின் கதையை வாசிக்கையில் இடைசேரியின் பூதப்பாட்டும் டபிள்யூ.பி.யேட்ஸின் அலையும் ஈஞ்சஸ் தேவனின் பாடல் வரை (Song of wandering Aengus) நினைவிலெழுகிறது. கட்வாலி தனித்தன்மையை தொட்டு காட்டும்போது இப்படி உலகநாகரீங்களின் சங்கமம் ஆக இமையத்தை வாசகன் உணரும்படிச் செய்ய ஆசிரியரால் இயன்றுள்ளது இந்நாவலில்.
மைத்ரியின் இந்த வாசிப்பனுபவத்தை வாசகர்களிடம் நேரில் மலையாளத்தில் சொல்லவேண்டும் என எண்ணி பயணத்திற்கு நான் தயாரான நேரத்தில் எதிர்பாராதபடி என் அம்மா மறைந்தார். அம்மாவுக்கு 85 வயது, ஆனால் குறிப்பிடத்தக்க நோய் எதுவும் இருக்கவில்லை. சட்டென்று வந்த மரணம். தாராசங்கர் பானர்ஜியின் பிங்கலகேசினி அம்மாவை வந்து அழைத்துச்சென்றார். ஆகவே என்னால் சென்னைக்கு வர இயலவில்லை, இந்த தருணத்தில் மைத்ரி வாசிப்பனுபவத்தை முன்வைத்தேயாகவேண்டும் என்பதனால் சுருக்கமாக எழுதி அனுப்பியிருக்கிறேன்.
மரணத்தினுடையதானாலும் வாழ்வினுடையதானாலும் வாசல்களெல்லாம் திறப்பது நாம் எண்ணியிராத கணங்களில்தான். ஸோனாபிரயாகிற்குச் செல்லும் பஸ்ஸில் அஜிதனின் கதைநாயகன் ஹரன் அமர்ந்திருப்பதுபோல அடுத்த கணத்தை எதிர்நோக்கி நாமனைவரும் சென்றுகொண்டிருக்கிறோம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

