Jeyamohan's Blog, page 646

January 15, 2023

இயற்கை, மனிதன், கனவு- டெர்சு உசாலா

இயற்கையைக் கண்டடைதல்’ என்று ஒரு தனி நிகழ்வு உண்டு. நாம் எண்ணுவதுபோல அது இயல்பான ஒன்று அல்ல. அதற்கு முதலில் இயற்கையுடன் தொடர்பின்றி அகலவேண்டியிருக்கிறது. அதன் வழியாக ஒருவகை பழக்கமிழப்பு நிகழ்கிறது. அதன்பின் குழந்தைக்குரிய புதிய விழிகளுடன் நாம் இயற்கையைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இயற்கை புத்தம்புதியதாக நம் முன் தோன்றுகிறது. இயற்கை பிறந்து எழுகிறது

இயற்கையில் இருந்து நாம் விலகுவது நம் சிந்தனையால். அச்சிந்தனைகள் தங்களுக்குரிய வெளிப்பாட்டை இயற்கையில் கண்டடையும்போது இயற்கை படிமங்களாக பெருக ஆரம்பிக்கிறது. அதன்பின் நாம் காண்பது ‘அர்த்தம் ஏற்றப்பட்ட இயற்கையை’ . நம்முள் பெருகியிருக்கும் எல்லையின்மையை தன் உள்ளுறையாகக் கொண்ட இயற்கையை. 

அந்த இயற்கையின் முடிவின்மை ஒன்று உண்டு. அது நம் முடிவின்மையை தான் பிரதிபலிக்கத் தொடங்கும்போது ஒரு பெருவெளி உருவாகிறது. கலைடாஸ்கோப் போல கணந்தோறும் உருவாகும் முடிவிலா உலகம் அது.

இலக்கியத்தில் இயற்கை இவ்வண்ணமே நிகழ்கிறது. சங்கப்பாடல்களைப் பாடியவர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களின் பெயர்களே சுட்டுவதுபோல அவர்களில் பலர் ‘கிழார்’கள். பலர் பாணர்கள். அவர்களுக்கு இயற்கையிடமிருந்த தொலைவே அக்கவித்துவத்தை உருவாக்கியது.

கபிலனும் காளிதாசனும் உருவாக்கிய அந்த இயற்கைத்தரிசனம் இலக்கியத்தில் என்றும் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் அது அடுத்தகட்டத்தை எட்டியது. மதங்களிலும் தத்துவங்களிலும் நம்பிக்கையிழந்த ஒரு தரப்பு ‘நேரடியாக’ இயற்கையை நோக்கிச் சென்றது. இயற்கைவாதிகள் (Naturalists) என அழைக்கப்படும் அந்த அறிவுத்தரப்பின் முதன்மை ஆளுமைகள் கவிஞர்களும் ஓவியர்களும். அவர்கள் இயற்கையை வெறும் படிமவெளியாகக் காணவில்லை. அதை பிரபஞ்ச ரகசியங்கள் பொறிக்கப்பட்ட ஒரு பரப்பாக உணர்ந்தனர்.

உலகம் முழுக்க பத்தொன்பதாம்நூற்றாண்டுச் சிந்தனையில் இயற்கைவாதம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. அதன் விளைவாக இயற்கையை முற்றிலும் புதியதாக கண்டடையும் படைப்புகள் உருவாயின. இம்முறை பழங்காலப் படைப்புகளில் இல்லாத ஒரு கூறு இணைந்துகொண்டது. அறிவியல்.

அறிவியல் பதினெட்டாம் நூற்றாண்டில் நாம் இன்றுகாணும் பேருருவை அடையலாயிற்று. புறவயமான அணுகுமுறை, தொகுப்பு –பகுப்பு என்னும் ஆய்வுமுறை ஆகியவை உருவாகி வலுப்பெற்றன. அவை இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தியபோது பழைய கற்பனாவாதக் கவிதைகளின் உலகம் உரைநடையில் விரிவாக்கம் பெற்றது. அவற்றில் கற்பனாவாத மனநிலை உள்ளுறையாக இருந்தது, ஆனால் பேசும்முறை புறவயமான  அறிவியல்தன்மை கொண்டதாக அமைந்தது.

அத்தகைய உரைநடை ஆக்கங்கள் உலகமெங்கும் உருவாகி மிகுந்த வீச்சுடன் இயற்கையின் பெருஞ்சித்திரத்தை உரைநடையில் உருவாக்கத் தொடங்கின. அவற்றில் தொடக்ககால எழுத்துக்களுக்கு இரண்டு கதைவடிவங்கள் இருந்தன. ஒன்று, வேட்டை. உலகமெங்கும் அறியப்பட்ட நூல்களான ஹெர்மன் மெல்விலின் மோபிடிக், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும் ஆகியவை உதாரணம். இன்னொரு வகை வடிவம் பயணம். ஒருவன் ஏதோ ஒரு காரணத்தால் புதிய நிலமொன்றுக்குச் செல்கிறான். அங்கே புதிய ஒரு வாழ்க்கையைக் கண்டடைகிறான்.  அண்மையில் புகழ்பெற்ற ஓநாய் குலச் சின்னம் அத்தகைய நாவல்.

இந்தியமொழிகளில் விபூதிபூஷண் பந்த்யோபாத்யாயவில் வனவாசி (ஆரண்யக்) அத்தகைய பயணநூல்களுக்கு மிகச்சிறந்த உதாரணம். அதில் விரிந்து வரும் இயற்கைச் சித்திரம் இன்றுவரை இந்திய இலக்கியத்தை ஆட்கொள்ளும் ஒன்றாக உள்ளது. பங்கர்வாடி உட்பட பல நாவல்கள் அந்நிரையில் வருவன.

அத்தகைய பயணத்தன்மைகொண்ட இயற்கை விவரணையை முன்வைக்கும் நாவல்களில் ஒன்று விளாதிமிர் கே. ஆர்சென்யேவ் (Vladimir Klavdiyevich Arsenyev) எழுதி அவைநாயகன் மொழியாக்கத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் டெர்சு உஸாலா.  

ஆர்சென்யேவ்  பழைய ஜார் ஆட்சிக்காலத்தில் ராணுவ அதிகாரிக்கான பயிற்சி எடுத்துக்கொண்டவர். ருஷ்ய நிலப்பகுதிகளை நேரில் கண்டு ஆவணப்படுத்துவது, எல்லைகளை வகுப்பது ஆகிய பணிகளை அரசின்பொருட்டு மேற்கொண்டார். ருஷ்ய நிலங்களினூடே என்னும் தலைப்பில் அவருடைய பயணக்குறிப்புகள் நூல்களாக வெளிவந்தன.

ரஷ்யப்புரட்சியின்போது ஆர்சென்யேவ் கிழக்கு குடியரசின் இனச்சிறுபான்மையினருக்கான அதிகாரியாக பணியாற்றினார். 1922ல் கிழக்குக் குடியரசு தோற்கடிக்கப்பட்டு சோவியத் ருஷ்யாவுடன் இணைக்கப்பட்டபோது நாட்டை விட்டு வெளியேற மறுத்து  விளாடிவஸ்டாக்கிலேயே வாழ்ந்தார்.1930ல் மறைந்தார். அவர் மறைந்த பின் அவருடைய மனைவி மார்கரிட்டா கைது செய்யப்பட்டார். ருஷ்ய கம்யூனிசத்திற்கு எதிராகச் சதிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பத்தே பத்து நிமிடம் நீண்ட நீதிமன்ற விசாரணைக்குப்பின் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவருடைய மகளும் பின்னர் கொல்லப்பட்டார்.

இந்நாவல் உலக மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்று திரைவடிவங்கள் வெளியாகியுள்ளன. இந்நாவலின் ஒரு திரைவடிவம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழில் அவைநாயகனின் மொழியாக்கம் சரளமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக உள்ளது.

இது ஒரு நாவல் என முழுமையாகச் சொல்லிவிடமுடியாது. நாவலின் அமைப்பு இதற்கு உள்ளது. இது பழைய சோவியத் ருஷ்யாவின் வடகிழக்கு நிலத்தை அளந்து அடையாளப்படுத்த பயணமான ஓர் அதிகாரியின் பயணக்குறிப்புகளாக இந்நூல் அமைந்துள்ளது. விளாடிவாஸ்டாக் முதல்  ஜப்பான் கடலின் மேற்புறத்தில் பயணம் செய்து கபரோவ்ஸ்க் என்னுமிடத்தில் முடியும் பயணம் இது. 1902 ,1906, 1097 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த தனிப் பயணங்கள் இவை. 

இதில் அங்கே குடியேறியிருக்கும் சீனர்கள், கொரியர்கள், மற்றும் தொல்குடிகளின் கிராமங்கள் வழியாக செல்கிறார்கள். ஆறுகளையும், சதுப்புகளையும், புல்வெளிகளையும், குன்றுகளையும் கடந்து செல்கிறார்கள். பலசமயம் ஆறுகள் வழியாக படகுகளில் செல்கிறார்கள் .அந்தப் பயணத்தின் புறவயமான சித்திரங்கள் வழியாகச் செல்லும் நீண்ட விவரணையே இந்நூல். 

[image error] டெர்சு உசாலாவுடன்

இந்நூலின் ஆசிரியரே கதைசொல்லி. அவர் தன் பயணத்தில் சந்திக்கும் டெர்சு உஸாலா என்னும் ‘கோல்டு’ பழங்குடி மனிதனே கதைநாயகன். கதைசொல்லி இயற்கையை அறியவும், வெல்லவும் விழைவுகொண்டவர். டெர்சு உஸாலா இயற்கையின் ஒரு பகுதியாகவே வாழும் மனிதன். வியப்பும் மெல்லமெல்ல உருவாகும் வழிபாட்டுணர்வுமாக கதைசொல்லி டெர்சு உஸாலாவை அறிவதுதான் இந்நாவலின் கதையோட்டம் என்பது. அது இயற்கையின் நுட்பங்களை அறிவதாகவும், இயற்கையின் வெல்லமுடியாத பிரம்மாண்டத்தை உணர்வதாகவும் நாவலில் வெளிப்படுகிறது.

டெர்சு உஸாலா ஒரு வேட்டையன். வேட்டைவிலங்கு என்றே அவரைச் சொல்லிவிட முடியும். வேட்டையாடும் விலங்குகளுக்குள்ள கூர்ந்த புலன்கள் அவருக்கு உள்ளன. விலங்குகளின் காலடிகளைக்கொண்டு அவற்றின் எடையைக்கூட அவரால் சொல்லிவிட முடியும். வான்குறிகள் பறவைகளின் இயல்புகளைக்கொண்டு புயலை கணிக்கிறான். உணவுக்காக விலங்குகளைக் கொன்று சுமந்து செல்கிறான். முக்கியமாக, கடுங்குளிரிலும் திறந்தவெளியிலேயே தூங்குகிறான்

ஆனால் அவன் மனிதனும்கூட. நகரத்தினர் ஓர் இடத்தில் குடிலமைத்து தங்கியபின் விளையாட்டாக அந்த குடில்களை எரித்துவிட்டுச் செல்கிறார்கள், ஆனால் டெர்சு அதைச்செய்வதில்லை. அந்தக்குடிலில் தீப்பெட்டி, கொஞ்சம் அரிசி, உப்பு ஆகியவற்றை கட்டித்தொங்கவிட்டுச் செல்கிறான், அங்கே வரப்போகிறவர்களுக்காக. மனிதர்கள்மேல் ஆழ்ந்த நம்பிக்கையுடனும், நட்புடனும் இருக்கிறான்

அற்புதமான சைபீரிய நிகழ்வுகள் இந்நூலை தீவிரமான வாசிப்பனுபவமாக ஆக்குகின்றன. சைபீரியாவின் மாபெரும் பறவைப்பெருக்கின் சித்திரம், பனிப்புயலுக்கு முன் அவை அப்படியே மறைந்து விடுவதும், அவர்கள் பனிப்புயலில் சிக்கிக்கொள்ளும்போது புற்களை முறுக்கி கூடாரம் அமைத்து உள்ளே ஒடுங்கிக்கொண்டு உயிர்பிழைப்பதும் நுணுக்கமாக சொல்லப்பட்டுள்ளன. டெர்சுவுக்கு நீர் நெருப்பு எல்லாமே உயிருள்ள ஆளுமைகள்தான். குறும்பும், கனிவும், சீற்றமும் கொண்டவை. அவற்றுடன் அவர் கொள்ளும் உறவு ஒருவகை உறவாடல்தான் 

இப்போது வாசிக்கையில் கதைசொல்லியும் அவருடைய அணியும் இயற்கையை ஊடுருவுவதும், வெறுமே ஆர்வத்திற்காகவே உயிர்களைக் கொல்வதும் ஓர் இயற்கையியல் வாசகனுக்கு சிறு ஒவ்வாமையை அளிக்கலாம்.  ஆனால் இந்நாவல் இன்றைய இயற்கையியல் பார்வைகள் உருவாகாத காலத்தில் உருவான நூல் இது.

நுண்விவரணைகள் வழியாக உருவாகும் நிலச்சித்திரம் இந்நாவலின் பேசுபொருள். ஆனால் அதனுள் நுணுக்கமான ஒரு கற்பனாவாதம் உள்ளது. இயற்கையின் ‘கருணை’ அல்லது ‘நலம்பயக்கும் தன்மையை’ இந்நாவல் தொடர்ச்சியாக முன்வைக்கிறது. இயற்கையை ஒட்டி வாழும் வாழ்க்கையை  இலட்சியப்படுத்துகிறது. டெர்சு உசாலா இறுதியில் காப்டனால் நகரத்துக்கு கொண்டுவரப்படுகிறார். நீரும் விறகும் விலைக்கு விற்கப்படும் ஒரு வாழ்க்கையில், சிறு அறைகளுக்குள் மனிதர்கள் குளிர்கால வாத்துக்கள் பொந்துகளில் புகுந்து ஒண்டியிருப்பதுபோல அமைந்திருக்கும் சிறுமையில் அவர் திகைப்படைகிறார். மிக எளிதாக நோயுற்று மறையும் டெர்ஸு உஸாலாவின் கல்லறைகூட நகர்மயமாக்கத்தில் காணாமலாகிறது. வானில் செல்லும் பறவைகள் போல தடமில்லாது மறைகிறார்.

இந்நாவலுக்கு முன்னுதாரணமாக டால்ஸ்டாயின் கொஸாக்குகள் போன்ற நாவல்கள் ருஷ்ய மொழியில் எழுதப்பட்டுள்ளன. இந்நாவலின் வழிநூல்கள் இன்று வரை வெளிவந்துகொண்டிருக்கின்றன. பலமுறை திரைப்படமாகவும் வெளிவந்த இந்நாவல் இன்றும் வாசிப்பிற்கு கிளர்ச்சியூட்டும் அனுபவத்தை அளிப்பதாக, படிமங்களாக நம்முள் வளர்வதாகவே உள்ளது. 

டெர்சு உஸாலா விளாதிமிர் கே . ஆர்சென்யேவ்  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 10:35

மு.மு.இஸ்மாயில்

கம்பராமாயணத்தின் அழகில் ஈடுபட்ட இஸ்லாமிய அறிஞர்களில் முதன்மையாக சுட்டப்படுபவர் செய்குத்தம்பிப் பாவலர். இன்னொருவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல். அவருடைய கம்பராமாயண உரைகள் மிக முக்கியமானவை. கம்பராமாயணத்தின் பிழைநீக்கப்பட்ட முழுப்பதிப்பையும் வெளிக்கொண்டுவந்தார்

மு.மு. இஸ்மாயில் மு.மு. இஸ்மாயில் மு.மு. இஸ்மாயில் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 10:34

எழுதுக, கடிதம்

எழுதுக நூல் வாங்க 

அன்புள்ள ஜெ,

எழுதுக என்னும் புத்தகம் வாசித்த எனது அனுபவத்தை தங்களிடம் பகிரும் பொருட்டு அனுப்பும் மின்னஞ்சல்

ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும் பொழுது, இந்த எழுத்துக்களின் ஊடே உள்ள ரகசியங்களை தன்னுள் அடக்கி வைப்பதுண்டு. காரணம் நிலைகொள்ளாமை என்னும் அந்த அச்சம், எழுதுவதில் இருக்கும் அந்த வித்தையை மற்றவர்களும் அறிந்தால் மற்றவர்களும் அவர்களுக்கு ஈடாக வரும் பொருட்டு தான் இத்தனை நாள் மற்றவர்களை விட ஒரு படி மேல் என்ற அந்த மிதப்பு நிலைக்காது. ஆனால் அடுத்த தலைமுறையினர் அவர்களில் உள்ள வாசர்களையும் எழுத்தாளர்களையும் கண்டடைவது தமிழ் இலக்கிய சூழலுக்கு இன்றியமையாதது என்ற ஒரு அறிதல் ஜெயமோகன் அவர்களை வாசகரிடம் உரையாடல் ஊடாக வாசித்தல் மற்றும் எழுதுதல் குறித்த தெளிவான தீர்க்கமான கருத்துக்களை பகிரச் செய்திருக்கிறது. ஒவ்வொரு கேள்விக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அளித்த பதில்கள் ஒரு வாசகரையும் எழுத்தாளரையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.

எனக்கு சற்றும் ஒவ்வாத கதை உலகத்தில், நான் கேட்டிராத மொழிநடையில் உள்ள செவ்வியல் இலக்கிய படைப்புகளான ஒரு புளிய மரத்தின் கதை, கொற்றவை, புயலிலே ஒரு தோணி என்ற புத்தகங்கள் பாதியிலியே கிடப்பதை நினைவு கூர்கிறேன். என்னை போன்ற வாசகர்களுக்கும் இந்த எழுதுக என்ற புத்தகத்தில் ஒரு செய்தியை கொடுத்திருக்கிறார். விடுபட்ட இந்த புத்தகங்களின் வாசிப்பை தொடரலாம் என்ற எண்ணம் மலர்கிறது.

எது இலக்கியம்?, உலகியல் வாழ்வில் காலூன்றி நிற்பதன் அவசியம், தொடர்புத்திறனின் இன்றைய போக்கு என அனைத்து பதில்களும் அசாத்தியமான முறையில் பகுப்பாய்வுத் தன்மையோடு ஆழச் சென்று உதாரணங்களோடு விளக்கியிருப்பதனால் இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அறிவுக்கனம் புத்தகத்தின் ஸ்தூல கனத்தை விட அதிகமாக உள்ளது. இதைச் சுமையாக இல்லாமல் மிக இலகுவாக நம்மில் செலுத்திருப்பதே இந்த படைப்பின் வெற்றி

லோகி – சில நினைவுகளும் சில மதிப்பீடுகளும் என்ற இவரின் புத்தகத்திலும் இந்த பகுப்பாய்வுத் தன்மையை நான் உணர்ந்தித்திருக்கிறேன் . உதாரணத்திற்கு மலையாள திரைக்கதைகளில் இரண்டு விதமான கதைகள் இருப்பதை நிறுவியிருப்பார் , எம் டி வாசுதேவன் நாயர் அவர்களின் கதைகளில் சிக்கல்களை தன் புத்திசாலித்தனத்தால் அவிழ்த்து மீண்டு வரும் கதாநாயகன் மற்றும் லோகி போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் உள்ள மீள முடியாத சிக்கல்களில் அகப்பட்டு வாழவைத் தொலைக்கும் கதாநாயகன் . இப்படி பல தருணங்களில் என்னை அசர வைத்த படைப்பு லோகி என்ற அந்த புத்தகம் . அந்த படைப்புக்கு சற்றும் குறையாத படைப்பாக இந்த எழுதுக என்னும் இந்த கடித இலக்கியத்தை பார்க்கிறேன்.
கடைசியில் வரும் தீவிரவாதம் பற்றியான கட்டுரை இளைஞர்களை நல்வழிப்படுத்தவதற்காகவே தன் முனைப்போடு தர்க்க அடிப்படையில் உளமாற சொல்லிருப்பது கச்சிதம்.

ஓர் இலக்கிய படைப்பில் ஒரு uncommon wisdom, அரிய மெய்மை வெளிப்பட்டாகவேண்டும் என்ற ஜெயமோகனின் கூற்றிற்கேற்ப இந்த படைப்பிலும் இதை காணமுடிகிறது.

இதில் வியப்பு என்ன என்றால் இந்த அறிய மெய்மையை சுழல்நிலையில் நிலை கொள்ளச் செய்து அந்த அரிய மெய்மையையின் தேவையை வலியுறுத்தி அதன் ஊடாக அரிய மெய்ம்மையே இன்னொரு அடுக்காக மருவுருவம் பெற்றிருப்பது தான்.

இவை அனைத்தையும் எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த குறைவான பக்கங்கள் கொண்ட ஒரு அறிவு களஞ்சியத்தை எல்லோரும் பருக வேண்டும். எழுதுக என்னும் நூலை ஜெயமோகன் அவர்களின் 60ஆம் அகவையை முன்னிட்டு விலையில்லா பிரசுரமாக பெற்ற 500 இளைஞர்களில் நானும் ஒருவன் என்பதனால் இதனை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். தன்னலம் இல்லாமல் இந்த அறிய செயல்பாட்டை செய்த தன்னறம் நூல்வெளிக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகள்.

அன்புடன்
அன்பு

 

ஜெயமோகன் நூல்கள்

வாசிப்பின் வழிகள் வாங்க

வாசிப்பின் வழிகள் மின்னூல் வாங்க

வணிக இலக்கியம் வாங்க

வணிக இலக்கியம் மின்னூல் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் வாங்க

இலக்கியத்தின் நுழைவாயிலில் மின்னூல் வாங்க

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 10:31

புறப்பாடு, ஒரு கடிதம்

புறப்பாடு வாங்க

மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு,

வணக்கம். எமது மகள் அங்கவை யாழிசை அவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து, சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். எமது இல்லத்திலேயே செம்பச்சை நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறோம். விடுமுறை நாட்களில் நிறையப் புத்தகங்களை அவர் படிப்பதுண்டு. படிக்கின்ற புத்தகங்களைக் குறித்தும் வாசிப்பு அனுபவத்தைக் குறித்தும் எழுதித்தரச் சொல்வது எமது வழக்கம். அண்மையில், தங்களது புறப்பாடு நூலைப் படித்து முடித்த கையோடு, அதன் வாசிப்பு அனுபவத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டார். அதைத் தங்கள் பார்வைக்கு அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியும் அன்பும். நன்றி.

மகராசன்

ஜெயமோகனின் புறப்பாடு: பயணங்களும் படிப்பினைகளும்.

 ..அங்கவை யாழிசை

நான் பதினோராம் வகுப்பு பயின்ற காலத்தில், தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்த ‘யானை டாக்டர்’ எனும் கதையைப் படித்தபோதுதான் ‘ஜெயமோகன்’ எனும் எழுத்தாளர் பெயர் அறிமுகமானது. ஜெயமோகன் எழுதிய கதைகளையும் மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது இருந்தது. இதைக் குறித்து எனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயமோகன் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும்  இருப்பதாகக் கூறினார். இரண்டொரு நாளிலேயே எங்களது ‘செம்பச்சை’ நூலகத்திற்கு ஜெயமோகன் நூல்கள் பலவற்றை வாங்கிவிட்டார் அப்பா.

எந்தப் புத்தகத்தையும் மாதக்கணக்கில் சிறுகச் சிறுகப் படிக்கும் என் அம்மாவை, ஒரே மூச்சில் படித்து முடிக்க வைத்த முதல் புத்தகம் ஜெயமோகனின் ‘எழுதுக’ எனும் புத்தகம்தான். அவரின் எழுதுக எனும் நூல் அவருக்கு மிக முக்கியமான நூல் என்பார். அந்தப் புத்தகத்தை அவர் படித்து முடித்த கையோடு, ஜெயமோகன் எழுதிய ‘புறப்பாடு’ எனும் நூலையும் படிக்கத் தொடங்கினார். எந்நேரமும் அந்தப் புத்தகமும் கையுமாகத்தான் இருந்தார். புறப்பாட்டைப் படித்து முடித்த பிறகு ஜெயமோகனின் மிகத் தீவிர ரசிகையாக ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயமோகனின் பேச்சுகளைக் காணொளி வாயிலாகப் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும்தான் இருப்பார்.

புறப்பாடு புத்தகத்தைப் பற்றி என் அம்மாவிடம் கேட்டபோது, அந்த நூலைப் பற்றி விரிவாக ஏதும் கூற மறுத்து விட்டார். “அந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள். மனுஷன் போய்க்கிட்டே இருப்பாரு… போய்க்கிட்டே இருந்திருக்காரு…” என்று மட்டும் சுருக்கமாகக் கூறிவிட்டார். அப்போதிருந்தே ஜெயமோகனும் புறப்பாடும் எனக்கு நன்றாகவே அறிமுகம்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, கல்லூரியில் சேர்வதற்கான காத்திருப்புக்கு இடையில் கிடைத்த விடுமுறை நாட்களில் நிறைய நூல்களை வாசித்திட வேண்டும் என, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நூல்களைச் சொல்லியிருந்தார் அப்பா.

போன மாதம் கிட்டத்தட்ட இதே நாளில்தான் புறப்பாடு வாசிக்கத் தொடங்கினேன். என் அப்பாதான் ‘இதை உன் அடுத்த இலக்காக வை. பெரும்பாலும் வரலாற்று நாவல்களையே வாசித்து உலவிய உனக்கு, இது ஒரு புது அனுபவமாக இருக்கும்’ என்றார்.

புறப்பாடு படிக்க ஆரம்பித்தேன். அதில் என் வாசிப்புப் பயணமும் ஆரம்பமானது. நூலின் கால்வாசிப் பக்கங்களை வாசித்த பின்பு நிறுத்திவிட்டேன். இதுவரை வாசித்தவற்றை நினைத்துப் பார்த்தேன். எவ்வளவு முயன்றாலும் அவரது சித்திரத்தை இந்தப் பயணத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. மீண்டும் படிக்கத் தொடங்கினேன். நூலில் வருகின்ற இந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்தவையா? புனைந்தவையா? இது நிகழ்ந்திருக்காது, நிகழ்ந்திருந்தாலும் இவருக்கு அல்ல என மீண்டும் மீண்டும் எனக்குள் பலவாறாகத் தோன்றியது.

அவர் வீட்டை விட்டு வெளியேறுவார். இல்லையெனில், ஓடி விடுவார். ஏதாவது ஒரு விடுதியில் தங்குவார். ஒரு சம்பவத்திற்குப் பிறகு வீடு திரும்புவார். நண்பனின் இறப்பு நிகழும். மறுபடியும் ஓடிவிடுவார். கங்கை, காசி, ஹரித்துவார், மும்பை எனப் பல இடங்களுக்குச் செல்வார். அதற்கு முன் பூனேயில் மண் சுமக்கும் வேலை, பிறகு சென்னையில் அச்சகத்தில் வேலை, அடுத்து வீடு திரும்புவார். சில காலம் கழித்து மறுபடியும் ஓடிவிடுவார். இப்படி எங்காவது ஓடிவிடுவார்; ஓடிக்கொண்டே இருப்பார். அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது என்ன எண்ணினார்? வெளியேறிய பின்பு வீட்டில் என்ன நினைப்பார்கள் என்று என்னவில்லையா? என, எனக்குத் தோன்றும்.

இந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவர் வீட்டை ஒரு விடுதியாகவே பாவித்தது போல் தோன்றியது. வருவார், தங்குவார், செல்வார். அவரது வீட்டில் அங்கு வாழவேயில்லை என்ற எண்ணம் தோன்றும். இப்படியெல்லாம் ஓடுவதும் வருவதும் போவதும் சாத்தியம்தானா? ஒரு வாலிபரால் அப்படி அவ்வளவு தூரம் பறக்க முடியுமா? ஆனாலும், அவர் அலைந்தார்; பறந்தார். எங்கும் நிலையில்லாத ஆற்று நீர் போல அலைந்து திரிந்து கடலில் கலந்திருப்பாரா? என்று தோன்றும். இல்லை, அவர் இன்னும் அலைந்து கொண்டிருப்பார் காற்றைப் போல.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்ததைக்கூட அப்படியே விவரிக்கிறார். அவரது ஞாபகத் திறன் வியக்க வைக்கிறது. அவர் சம்பவங்களை விவரிப்பதால் இப்படிக் கூறவில்லை. சம்பவங்களின் பின்னணியை விவரிப்பதன் நுணுக்கத்தை வாசிப்பில் உணர்ந்ததால் கூறுகிறேன். மிகச்சிறிய தகவலையும்கூடத் துல்லியமாக விவரிப்பது ஒரு கலைதான். அப்படிப்பட்டவர்களை நான் எப்போதும் ரசிப்பதுண்டு.

அவர் பல வேலைகளையெல்லாம் செய்திருக்கிறார். சிமெண்ட் வேலை, மணல் அள்ளுதல், பிழை திருத்தம், புத்தகம் படைத்தல் எனப் பல வேலைகள் செய்திருக்கிறார். ஆனாலும், புத்தகம் வாசிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை.

இந்தப் புத்தகத்தை முக்கால்வாசியளவு வாசித்து முடித்திருந்தபோது, எனக்குக் கவலையாகவும் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. நான் எனது புத்தக வாசிப்புப் பயணத்தை மிகத் தாமதமாக ஆரம்பித்து விட்டதாக ஒரு தவிப்பு தோன்றியது. இன்னும் முன்னரே வாசிப்புப் பயணத்தை ஆரம்பித்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. என்மேல் நானே கோபப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை, அப்போதுதான் அவரைப்போல நானும் சுற்ற வாய்ப்புகள் கிட்டும் என எண்ணி இருக்கலாம்.

இந்தப் புத்தகத்தில் வரும் அவருடைய மொழிநடையைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். எப்படி அப்படி எழுதினார்? எளிமையான சொற்கள்தான். ஆனாலும், இந்தப் புத்தகம் இன்னும் மெருகேற்றிய வாக்கியத்தால் ஆகியிருக்கிறது. என்றாலும், எல்லோராலும் இதை வாசிக்க முடியாது என்றே தோன்றியது. நான் அதைப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் இன்னும் பக்குவப்படவில்லையோ என எனக்குப் பட்டது. எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில், என் அப்பா தினமும் கேட்பார் “புறப்பாடு எப்படிப் போகுது?” என்று. எனது ஒரே பதில், வழக்கமான பதில் “போய்க்கிட்டே இருக்குப்பா”. ஆம், போய்க்கொண்டே, நீண்டு கொண்டே, விரிந்து கொண்டே சென்றது முடிவில்லாதது போல. எனக்கு ஒரு கட்டத்தில் அழுகை வந்துவிட்டது. எனக்கும்தான் அலைந்து திரிய ஆசை. ஆனால், முடியவில்லை. ஒரு கணம் அப்படியே கிளம்பினால் என்ன? என்று தோன்றும். அந்த எண்ணம் மறுகணம் செத்துப் போகும்.

இவர் குறிப்பிடும் ஒப்புமைகள் பிரமிப்பில் ஆழ்த்தும். அவரது ஒப்புமைப்படுத்தும் திறன் மகத்தானது. ஆங்கிலத்தில் அதை அனாலஜி என்கிறார்கள். எதையெதையோ எதனுடனும் ஒப்பிடுவார். அவ்விரண்டையும் வைத்து நான் கற்பனைகூட செய்திருக்க மாட்டேன். ஆனால், படித்த பிறகு சரிதானே என்று தோன்றும். அந்த ஒப்புமையைக் கண்டு நானே சிரிப்பேன். நனைந்த சாலைகளைச் சாக்கடைகள் என்பார். இரவில் சாலைச் சந்திப்புகளைப் பிரம்மாண்டமான ஒரு தோல் செருப்பின் வார் போல இருக்கிறது என்பார். ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருப்பதை, அது மூச்சிரைத்துக் கொண்டிருக்கிறது என்பார். ரயிலில் பயணம் செய்யும் பொழுது போடுகின்ற பாடல்கள் பயணிப்பவர்களின் பல உணர்வுகள் கொண்டாட்டங்கள் நிறைந்தது என்று கூறிவிட்டு, அதை ஓட்டல் தட்டுகள் என்பார். யார் யாரோ வந்து எதையெதையோ வைத்துத் தின்ற தட்டு என்று கூறுவார். இப்படி, சிறு பொருளையாவது ஒப்பிட்டுத்தான் எந்தவொரு காட்சியையும் நகர்த்துவார்.

சரம் சரமாகப் பேராசிரியர் பொழிந்து கொண்டிருந்த வகுப்பில் மதிய நேர மயக்கம். ஆங்கிலமும் தமிழும் எப்போதுமே சோற்றுக்கு மேலேதான் என்பார். இந்த வரியைத் தாமதமாகவே நான் புரிந்து கொண்டேன். உணவிற்குப்பின் பாடம் நடத்தப்படுகிறது என்று பிறகு புரிந்தது. புத்தகம் முழுவதிலும் சாமர்த்தியமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு மனிதரையும் ஒவ்வொரு பொருளையும் விவரிக்கும் அவரது கலை எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் அப்பா இந்தப் புத்தகத்தை என்னிடம் தரும்போதே ‘படித்து முடித்தபின் அதைப்பற்றி எழுத வேண்டும்’ என்று கூறிவிட்டார். அதற்காகப் படிக்கும்போதே குறிப்பு எடுக்கவும் சொன்னார். ஆனால், எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்படி எழுதுவது? அவர் இங்கு இருந்து அங்கு சென்றார். பிறகு அங்கிருந்து வேறு எங்கோ சென்றார். அங்கு இல்லாமல் எங்கெங்கோ சென்றார் என்பதையா எழுதுவது? சட்டென்று நான் ஒரு உதவாக்காரியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த விசாலமான பயணத்தையும், படைப்பாளரின் அந்த அறிவையும் எழுத்தாக்க என் அறிவு போதாது என்ற இயலாமையின் வெளிப்பாடு அது.

உலாவுதல் ஒரு உன்னதமான தியானத்தைக் கொடுப்பது. அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஞானத்திற்கு ஈடு இல்லை. ஜெயமோகனின் புறப்பாட்டை எண்ணிப் பார்க்கையில், அவர் பயணத்தை எழுத்தாக்கவில்லை. இதை எழுதுவதற்காகத்தான் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டாரோ என்று எண்ணத் தோன்றும்.

உலாவுதலில் கிடைக்கும் நிம்மதி வேறெதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் என்னவோ, நான் ஒரு சிறு தூரமேனும் உலாவுவேன். புதிதாய் ஒன்றைப் பார்ப்பேன். அதன் நினைப்பே கிளர்ச்சியூட்டும். இந்த எதிர்பார்ப்போடு புறப்பாடு என்னை மிகக் கவனமாக அந்தப் பயணத்தில் அழைத்துச் சென்றது. நாற்பது வருடங்களுக்கு முந்தைய பயணம். ஆனாலும், நான் காணாத பலவற்றை அந்தப் பயணத்தில் கண்டேன்; உணர்ந்தேன்.

ஒரு கட்டத்தில், யார் இந்த மனிதர்? சாமானியர்தானா எல்லாவற்றையும் செய்கிறார் என்று பட்டது. இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில்கூட, ஒரு பொருளின் மீதுகூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக் கொண்டார் போலும்.

புறப்பாட்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, “அவர் பிழைப்பிற்காக ஓடினாரா? இலக்கியத்திற்காக ஓடினாரா? என்றே தெரியாது” என அம்மா கூறினார். ஆம், இந்தப் பயணம் அவருக்கு ஒரு படிப்பினை. இந்தப் படிப்பினைகள்தான் படைப்பாளிக்கும் படைப்பிற்கும் அடிப்படையாக இருந்திருக்கலாம். பயணம் எல்லோருக்கும் படிப்பினைதானே.

ஜெயமோகனின் புறப்பாடு புத்தகமானது, இந்நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களின் பிம்பமாக – பிரதிபலிப்பாகவே இருப்பதாகப் பார்க்கிறேன். இந்தப் பயணத்தில் அவரோடு சேர்ந்து நானும் அந்த வாழ்வில் பங்கெடுத்தது போல உணர்கிறேன்.

சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும் போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன. சேரியில் அவர் தங்கி இருந்த பொழுது விவரிக்கும் பகுதிகள் அதிர்ச்சியூட்டுகின்றன. சேரியில் இரவில் கொசுக்கள் அளவுக்கு அதிகமாக மொய்க்கும். சேரியில் குழந்தைகள் பிறந்து சிறிது காலத்தில் இறந்து விடுவார்கள். அவற்றைக் கூறுகையில், அக்குழந்தை பிறப்பதற்கு ஒரே அர்த்தம்தான். கொசுக்களுக்குச் சில லிட்டர் ரத்தத்தை உற்பத்தி செய்து கொடுத்திருக்கிறது அவ்வளவுதான் என்பார். மழைக் காலங்களில் சாக்கடைகளை அடித்தளமாகக் கொண்ட குடிசைகள், சாக்கடைகள் பெருகி ஓடும்போது கட்டைகளில் பிணங்கள் முட்டி நின்ற சம்பவங்களையும் பதிவு செய்திருப்பார். இந்த வாழ்வெல்லாம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வு.

அதேபோல, மும்பையில் அவர் தங்கிய இடங்கள் பற்றிய விவரிப்பும் என்னை வெகுவாகப் பாதித்தது. அங்கெல்லாம் அப்படியான மனிதர்கள் வாழ முடியுமா? வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்கிறார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு,  “இந்த நாடு முழுக்க அவர்கள்தான் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஒரு போர்வையாக அவர்களை மறைத்து ஒளித்து வைத்திருக்கிறார்கள்” என்று பட்டது. அந்தவகையில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப் பக்கங்களையும் புறப்பாடு எனக்குக் காண்பித்திருக்கிறது.

காசியில் காளி வேசம் போடும் பெண்ணைப்பற்றிப் படிக்கையில் என் மூளை மரத்துவிட்டதுபோல இருந்தது. பெண் என்பவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், இந்தச் சமூகத்தில் எந்த வழியிலும் சுரண்டப்படுகிறாள் என்பதைத்தான் காளி வேடப் பெண்ணின் அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

ஜெயமோகன் ஓர் ஆணாக இருந்ததால் கிளம்பிவிட்டார்; ஓடிவிட்டார். பெண்ணாகிய நான் ஓட நினைத்தால், ஊர் சுற்ற நினைத்தால், உலாவ நினைத்தால் என்னாவது? என்னவெல்லாம் நடக்கும்? என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சமூகம் என்ன மாதிரியான படிப்பினைகள் தந்திருக்கும்? பெண்களை இந்தச் சமூகம் நடத்துவதும், பெண்களுக்கு இந்தச் சமூக மனிதர்களும் ஆண்களும் தருகின்ற மோசமான படிப்பினைகளை நினைக்கும்போதும் எனக்குப் பீதியூட்டுகிறது; பயமாய் இருக்கிறது. அதனாலேயே நான் ஓடிப் போகவும் ஊர் சுற்றவும் நினைத்த எண்ணம் செத்துப் போனது. ஆண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறு; பெண்களுக்கு இருக்கின்ற சுதந்திரமும் படிப்பினையும் வேறுதானே.

ஆனாலும், புறப்பாடு புத்தகமானது அதன் பயணங்களில் என்னையும் கூட்டிச் செல்வது போல் உணரும் நல்லதோர் பயணமாக, இயல்பான பயணமாக, பரபரப்பான பயணமாக இருந்தது. பயண அனுபவங்களை வாசிப்பின் மூலமாகப் பெறுவதற்கு, புறப்பாடு தந்த ஜெயமோகன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அ.ம.அங்கவை யாழிசை

15.12.2022

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 10:31

முதற்கனல் – விமர்சனம்

முதற்கனல் வாங்க

முதற்கனல் மின்னூல் வாங்க

சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க செய்யும் ஒரு அனுபவம் இந்த முதற்கனல். ஜெயமோகனின் மொழி ஆளுமையை பற்றி தனியாக சொல்ல வேண்டும். பல வார்த்தைகள் புரிவதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. இருந்தாலும் அந்த எழுத்து நடை மற்றும் கற்பனை அவ்வளவு அழகாக சொல்ல பட்டிருக்கிறது

வெண்முரசு 01 – முதற்கனல் – ஜெயமோகன் – புத்தக விமர்சனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2023 10:30

January 14, 2023

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி-2

லோகிததாஸ்

(ஏ.கே.லோகிததாஸ் பேட்டி தொடர்ச்சி)

ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்க வேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக் கூடாது. அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம் ஏதும் இல்லை. உண்மையை, யதார்த்தத்தை முன் வைப்பது மட்டுமே அவரது படைப்பியக்கத்தின்  நோக்கம்.

லோகிததாஸ்: உண்மையும் யதார்த்தமும் பலவிதமானவை. முடிவே இல்லாதவை. அவற்றில் சிலவற்றை மட்டும் தேர்வு செய்து ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அதன் நோக்கம்தான் அங்கே முக்கியம். உயர்ந்த கலையை உருவாக்க முடியாதவர்களின் சமாதானம் அல்லது சப்பைக்கட்டுதான் இது.

ஜெயமோகன்: நீங்கள் கூறுவதுபோல் ஒரு நோக்கம் இருக்கும்போது கலைக்கு ஒருமை உருவாகிறது. ஆனால் ஒருமையை மறுக்கக்கூடிய சிதைவை முன்வைக்கக்கூடிய கலைப்படைப்புகள் உள்ளன.

லோகிததாஸ்: அத்தகைய படைப்புகளை நான் ஏற்கவில்லை. இலக்கியத்தில் நேர்ந்த சிறு வட்டத்தில் அவை அதிர்வுகளை உருவாக்கலாம். சினிமா போன்ற பெரிய கலை வடிவில் அவை வெறும் சலசலப்பாக மட்டுமே முடியும். கலைஞனின் நோக்கமும் கலைப்படைப்பின் விளைவும் மிகமிக முக்கியமானவை.

ஜெயமோகன்: கலை வளர்வதில்லை. கூறுபொருள்தான் மாறுகிறது என்று ஒரு இடத்தில் டி.எஸ்.எலியட் கூறுகிறார்.

லோகிததாஸ்: உண்மைதான். கிரேக்க , சம்ஸ்கிருத நாடகங்களையும் இன்றைய நல்ல சினிமாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெரியும்.

ஜெயமோகன்: ஆனாலும் கலைஞர்களில் இருவகை உண்டு. சமன்குலைக்கும்  கலைஞர்கள் சல்வேடார் டாலி போல , விளாடிமிர் நபக்கோவ் போல. சமன் உருவாக்கும் கலிஞர்கள் தல்ஸ்தோய் போல .

லோகிததாஸ்: சமன் குலைப்பதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை நோக்கியே செய்ய முடியும் .டால்ஸ்டாய் இன்றும் உயிர்வாழ்கிறார். மேலான கலை உருவாக்குவதே சமன்தான். ஒரு நல்ல கச்சேரி கேட்டு வெளியே வந்தால் மனம் சட்டென்று கோபப்பட முடியாது. சட்டென்று பொறாமை வராது. மனம் சாந்தியடைகிறது. இது முன்பே கூறப்பட்ட விஷயம்தான். ரசங்கள் ஒன்பது. பிற அத்தனை ரசங்களும் சரியாக இணைந்தால் உருவாகும் ரசம் கடைசி ரசமான சாந்தம்தான். எல்லா ரசங்களும் அலையடிக்கும். மகாபாரதம் சாந்த ரசத்தை உருவாக்கும் இதிகாசம்.

ஜெயமோகன்: உங்கள் எழுத்தில் மகாபாரதம் உருவாக்கிய பாதிப்பு என்ன?

லோகிததாஸ்: இரு இதிகாசங்களும்தான் என் கற்பனைக்கு அடிப்படை. மகாபாரதத்தில் ஒரு துளி போதும் எனக்கு ஒரு கதையை உருவாக்க முடியும். மகாபாரதம் கடல் ஆகவே எனக்கு கதைகளுக்கும்  பஞ்சமே இல்லை. முன்பு என் கதைகளுக்கு என்ன மூலம் என்ற சர்ச்சை வந்தது. ஒரு கதாப்பிரசங்கக்காரர் அவரது கதையை நான் திருடிவிட்டதாகச் சொல்லி நீதிமன்றம் போனார். நான் நீதிமன்ற மேடையில் நின்று அக்கதையின் மகாபாரத மூலவடிவைச் சொன்னேன். நீதிபதி ஒவ்வொரு கதையாகக் கேட்டார். ஒவ்வொரு கதையாக விளக்கினேன். நீதிமன்றம் முழுக்க ஒரே கூட்டம். அன்றைக்கு. வாழ்க்கை நமக்கு சில அனுபவங்களை அளிக்கிறது. அவ்வனுபவங்கள் அளிக்கும் கேள்விகளை நாம் இதிகாசங்களின் அமைப்பில் அமைத்துக்கொண்டு முன்னகரும்போது அது படைப்பாக ஆகிறது.

ஜெயமோகன்: சரி ஒரு நேரடியானக் கேள்வி. நடிகர்களுக்க்காக நீங்கள் கதை எழுதியதுண்டா?

லோகிததாஸ்: இதை இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டும். நடிகர்களின் இமேஜை உருவாக்க, நிலைநிறுத்த நான் கதையையும், கதாப்பாத்திரங்களையும் உருவாக்கியதுண்டா? இல்லை. ஒருபோதும் இல்லை. அதேசமயம் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் மனத்தில் தெரிவது,ஒருவரை உத்தேசித்து எழுதுவது மிகவும் வசதியானது. ஒன்று படமாக்கும்போது பிரச்சினை இருக்காது. இரண்டாவதாக ஒரு மனித உடல், ஒரு முகம் நம் முன் தெரிகிறது. அது மிகவும் திட்டவட்டமானது.

ஜெயமோகன்: ஒரு கதாபாத்திரம் மம்மூட்டி என்றால் அது மாறுமா?

லோகிததாஸ்: வளரும். திட்டவட்டமாக மாறும். அது கம்பீர குரலும் அழகிய முகமும் கொண்டிருக்கும். உயர்சாதித் தோற்றம் இருக்கும். அதில் கோழைத்தனம் இருக்காது. உலகில் உள்ள சிறந்த திரைக்கதைகள் பலவும் முன்கூட்டியே நடிகர்களை உத்தேசித்தவை. சிலர் எப்போதும் ஒரே நடிகர்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

ஜெயமோகன்: நீங்கள் ஒரு திரைக்கதையாசிரியர். வெற்றிகரமானவர். எப்போது, ஏன் இயக்குநராக வேண்டுமென்று தோன்றியது?

லோகிததாஸ்: இயக்குநர் ஒரு படத்தின் தலைவர். ஒருங்கிணைப்பாளர். திரைக்கதையாளன் உருவாக்கும் சட்டகத்தை நிரப்புபவர். அந்த இடம் அனைவராலும் விரும்பப்படுவதாகவே இருக்கும். என் திரைக்கதைகளை என் விருப்பப்படி படமாக்க விரும்பினேன்.

ஜெயமோகன்: நீங்கள் அடிப்படையில் ஒரு திரைக்கதை ஆசிரியரானதால் உங்களால் தொழில்நுட்ப ரீதியாக இயக்குநராக ஏதேனும் சிரமம் இருந்ததா?

லோகிததாஸ்: இயக்குநர் வேலை என்பது அந்த அளவுக்கு தொழில்நுட்ப வேலை அல்ல. அது அதிகமும் நிர்வாக ஒருங்கிணைப்பு சார்ந்த வேலை. பலரிடமிருந்து வேலைகளைப் பெற்றுக் கொள்வது. அதற்கும் மேலாக உள்ள மூன்று விஷயங்கள் நடிப்பை வெளிக்கொணர்வது,காட்சிக் கோணங்களை அமைப்பது, காட்சிகளை வெட்டித் தொகுக்கும் பிரக்ஞையுடன் இருப்பது. இது மூன்றும் திரைக்கதையாசிரியனிடமும் இருந்தாக வேண்டும். நல்ல திரைக்கதையாசிரியன் உள்ளூர நல்ல நடிகனாக , நல்ல காட்சியமைப்பாளராக இருப்பான். கதையை வெட்டித்தொகுப்பது எந்த எழுத்தாளனிடமும் இயல்பாக இருக்கும் பிரக்ஞைதான்.

ஜெயமோகன்: திரைக்கதையை வசனத்துடன் முழுமையாக எழுதிவிடுவீர்களா?

லோகிததாஸ்: ஆமாம் அதுதான் சிறந்த முறை.

ஜெயமோகன்: வசனத்துடன் சேர்த்து எழுதக்கூடாது என்கிறார்களே. அப்படி எழுதினால் காட்சியமைப்புக்கு இடமில்லாமல் போய்விடும் என்கிறார்களே.

லோகிததாஸ்: அது சரியல்ல.. சினிமாவில் வசனமும் காட்சியும் ஒன்றையொன்று நிரப்புகின்றன. ஆகவே அதை உருவாக்கும்போதே முழுமையாக எழுதிவிடுவதே நல்லது. அப்போதுதான் சரளமான ஓட்டம் இருக்கும். சிலர் ஒரு கதையோட்டத்தை மட்டும் எழுதிவிட்டு அவ்வப்போது வசனத்தை எழுதுகிறார்கள். அப்போது வசனம் இயல்பாக திரைக்கதையின் ஒரு பகுதியாக இருக்காது. திரைக்கதை ஒரு இலக்கியப் படைப்பு. இலக்கியமாகவே அது எழுதப்பட வேண்டும்.

ஜெயமோகன்: இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் பலவகையான கதை சொல்லும் முறைகள் உள்ளன. யதார்த்தவாதம், மிகுபுனைவு, ஆவணப்பதிவு என்றெல்லாம் நான் எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்துகிறேன். ஆனால் சினிமாவில் இன்றும் ஒரே கூறுமுறைதான். யதார்த்தவாத அணுகுமுறை. சமீபத்தில் ஈரானியப் படங்களைப் பார்க்கும்போது ‘’பை சைக்கிள் தீவ்ஸின்’’ அதே அழகியல்தான் இன்றும் உள்ளது. வெவ்வேறு கூறுமுறைகள் என் இன்னும் சினிமாவில் பிரபலமாகவில்லை.

லோகிததாஸ்: சினிமாவிலும் ஃபாண்டசி, ஆவண முறை போன்றவை உள்ளன. அவை யதார்த்தவாத கூறுமுறையின் ஒரு பகுதியாகவே உள்ளன. ஏன் என்று யோசித்தால் கிடைக்கும் விடைதான். சினிமா வெகுஜனக்கலை. இங்குள்ள ஒரு சிறிய மாறுதல் கூட மொத்த சமூகத்தில் ஏற்படும் ஒரு உளவியல் மாற்றத்தின் விளைவுதான். சினிமா தன் விருப்பப்படி மாற முடியாது. கூடவே மக்களும் மாறவேண்டும். ஒரு தரப்பு இன்னொன்றை பாதித்து இருவரும் சேர்ந்து மாறவேண்டும். இன்று மக்கள் யதார்த்த வாழ்வை சினிமாவில் காண விரும்புகிறார்கள். சொல்லப்போனால் யதார்த்த உணர்வு வலிமை பெற்றே வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த ஃபாண்டசி அம்சங்கள் கூட இன்று சினிமாவில் இல்லை.ஏஎன் வெகுஜன எழுத்திலும் யதார்த்தவாதம்தானே உள்ளது. மக்கள் தங்கள் வாழ்வைப்போன்ற ஒன்றை திரையில் காணும்போதுதான் அதனுடன் ஐக்கியமாகிறார்கள்.

லோகி,நான், இணை இயக்குநர் மோகன் பையன்னூர், இன்றைய இயக்குநரும் லோகிக்கு பிரியமான உதவியாளருமான மீரா கதிரவன்

ஜெயமோகன்: உங்கள் இளமைப்பருவம் கேரளத்தில் இடதுசாரி தீவிரவாதம் தோன்றி வீழ்ந்த காலகட்டம். ஏராளமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதன் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் அதனால் பாதிப்பு அடையவில்லையா?

லோகிததாஸ்: கட்சி அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை. உண்மையான அரசியலில் ஆர்வம் உண்டு. அது கருத்துகளின் அதிகாரத்தின் அரசியல். அப்படிப்பட்ட அரசியலை ஒரு படத்தில் எழுத திட்டம் உள்ளது. பொதுவாக என் கவனம் எப்படியோ சமூகத்திடம் மோதி அன்னியமாகும் தனிமனிதர்களின் அவலத்திலேயே உள்ளது. இது என் இயல்பு சார்ந்ததாக இருக்கலாம்.

ஜெயமோகன்: நீங்கள் ஏன் ஒரு அரசியல் படம் எடுக்கவில்லை. சொல்லப்போனால் உங்கள் படத்தில் அரசியலே இல்லை.

லோகிததாஸ்: நான் எழுதவிருப்பது அதைப் பற்றித்தான். அந்த காலகட்டம் என்னிலும் அழுத்தமான சுவடுகளை விட்டுச்சென்றுள்ளது. அவற்றை என் கோணத்தில் பரிசீலிக்க விரும்புகிறேன்.

ஜெயமோகன்: கமர்சியல் படங்களைப் பார்ப்பீர்களா?

லோகிததாஸ்: எல்லா நல்ல படங்களையும் பார்ப்பேன். திரைப்படம் என்னுடைய ஊடகம் .அதன்மீது எனக்கு மோகம் உண்டு. கலைப்படம், கமர்ஷியல் படம் என்ற பிரிவினையே இல்லை. அது ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. கமர்ஷியல் நோக்குடன் எடுக்கப்படும் படங்களில் பத்துக்கு ஒன்பது படங்கள் தோல்விகள்தான். அப்படியானால் எப்படி அவற்றை கமர்ஷியல் படங்கள் என்கிறீர்கள்? கலைப்படங்களுக்கு கமர்ஷியல் நோக்கங்களே இல்லையா என்ன? இருவகையிலும் சில மாடல்களையும் ஃபார்முலாக்களையும் வைத்திருக்கிறார்கள். அதையே பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கிறார்கள். கமர்ஷியல் படமென்றால் பாட்டு,சண்டை ,கதாநாயகனின் வீரதீர பிரதாபங்கள் . கலைப்படமென்றால் இருட்டு மந்தத்தன்மை.

ஜெயமோகன்: பள்ளிக்கூடத்தில் சினிமாவைக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று  கூறப்படுகிறதே?

லோகிததாஸ்: கற்றுக்கொடுக்கலாம். ஆனால் முதலில் பள்ளிக்கூடத்தில் கற்பனையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை ஒன்றுதான். கற்பனை. இங்கே நம் கல்வியின் பிரச்சினை சினிமாக் கல்வி இல்லாமையோ, இசைக் கல்வி இல்லாமையோ அல்ல. கற்பனை இல்லாமைதான். சில சமயம் சிந்திக்கக் கற்றுக் கொடுக்கிறோம். கற்பனை இல்லாதபோது கலைகளை ரசிப்பதற்கான இயல்பே இல்லாமல் போய் விடுகிறது. சினிமாவுக்கு மட்டுமா ரசனை தேவை? இசைக்கு, ஓவியத்திற்கு? நம் கல்வி அமைப்புகளில்  கற்றுத் தேறியவர்கள் எத்தனைபேருக்கு அத்தகைய ரசனை உள்ளது? ரசனை உள்ளவர்கள் சுயமாக அதனை அடைந்தார்கள். தங்கள் உழைப்பால் அதை வளர்த்துக் கொண்டார்கள் . இலக்கிய வாசகர்களும் சினிமா ரசிகர்களும் எல்லாம் அப்படித்தான். நமது கல்விமுறையில் கற்பனை இல்லாமலிருப்பதனால் அது உலர்ந்து, வறண்டு காணப்படுகிறது. அதில் கருணைக்கும் கனிவுக்கும் இடமில்லாமல் இருக்கிறது. இதுதான் இன்று உள்ள முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

கலையை ரசிப்பதற்கான பயிற்சி என்பது உண்மையில் என்ன? சின்ன குறிப்புகளை கற்பனையால் பெருக்கி ஒரு முழுமையான அனுபவத்தை அடைவதுதானே? ராமன் வந்தான் என்று படிக்கும்போது தசரதன் மகனை கண்ணில் காண்பதற்கான மனநிலை. அதுதான் எல்லாக் கலைகளுக்கும் பொது இல்லையா?

ஜெயமோகன்: மலையாள சினிமாவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?

லோகிததாஸ்: பரதன். அவருடைய இலக்கிய ஞானம் முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இசையிலும் ஓவியத்திலும் ஆர்வமும் பயிற்சியும் உடையவர் அவர். இந்த மூன்று கலைகளையும் தன் சினிமாவில் அவர் இணைத்தார். அவரது படச்சட்டகங்கள்  மிகவும் அழகானவை. திரைக்கதையை உள்வாங்குவதில் அவர் மிகவும் நுட்பமானவர்.

ஜெயமோகன்: பிடித்த திரைக்கதையாசிரியர்?

லோகிததாஸ்:  பத்மராஜன்.  இலக்கியவாதியாக அங்கீகாரம் பெற்ற பிறகு சினிமாவுக்கு வந்தார் அவர். மிக இயல்பான வசனங்களிலும் நுட்பமான யதார்த்த சித்தரிப்பும், வலிமையான கதாபாத்திரங்களும் அவரால் உருவாக்கப்பட்டன. பத்மராஜனின் வசனங்கள் ஒருபோதும் பத்மராஜனுடையதாக இருக்காது. அது அந்தக் கதாபாத்திரம் கூறுவதாகவே இருக்கும். ஒருமுறை என் படத்தைப் பார்த்த பிறகு பத்மராஜன் என்னுடைய கதாபாத்திரங்கள் சொந்த ஆன்மாவால் உரையாடுவதாக கூறினார். நானும் “ பஞ்ச” வசனங்கள் எழுதுவதில்லை. வசனங்களை வைத்து விளையாட மாட்டேன். மிக இயல்பாக கதாபாத்திரங்களை உரையாட விடுவேன். பத்மராஜனின் கதைக்கருக்கள் விசித்திரமானவை. “ஓர் இடத்தில ஒரு பயில்வான் “ போல. ஒரு ஊருக்கு வரும் பயில்வானின் பிரச்சனைகள். அதை மிக நம்பகமாகவும், சுவாரசியமாகவும் கூறியிருந்தார். மலையாளத்தில் எனக்குப் பிடித்த படம் அது.

ஜெயமோகன்: ‘பெருவழியம்பலம்’, ‘கள்ளன் பவித்ரன் ‘எல்லாம் அதே மாதிரியான படங்கள். அவை ஒரு சிறு பையனின் பார்வையால் அள்ளப்பட்ட சித்திரங்கள் போல உள்ளன.

லோகிததாஸ்: பத்மாரஜனின் பலமே அதுதான்.

ஜெயமோகன்: சரி பிடித்த நடிகர்?

லோகிததாஸ்: என்னுடைய பல நல்ல கதாபாத்திரங்களை மோகன்லாலும் மம்மூட்டியும் செய்திருக்கிறார்கள் . மிகமிக வலுவாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் இந்தியத் திரையின் சிறந்த நடிகர்கள். ஆனால் ஒரு ரசிகனாக மலையாளத்தில் எனக்குப் பிடித்த நடிகர்கள் கோபியும் நெடுமுடிவேணுவும்தான்.

ஜெயமோகன்: திலகன்?

லோகிததாஸ்: மிக நுட்பமான நடிகர். எனது பல கதாபத்திரங்களுக்கு உயிர் கொடுத்து கொண்டு வந்தவர். ஜாதகம் படத்தைப் பாருங்கள். அதில் அந்த நாயர். அடிக்கடி தலையை வருடுவார். தலைக்குள் ஒரு எரிமலை புகைவது படத்தின் கடைசியில்தான் வரும். திலகனின் கண்கள் மாறும் விதம் நடிகர்கள் பார்த்துப் படிக்க வேண்டிய விஷயம். ஆனால் திலகனுக்கு பல வரையறைகளும் உண்டு. உடல் குரல் என. நெடுமுடியும் கோபியும் அப்படியல்ல. அவர்கள் எங்கும் போக முடியும். எப்படியும் மாறமுடியும். ‘வீண்டும் சில வீட்டு காரியங்கள்” படத்தில் நெடுமுடிவேணு தோன்றும்போது பின்பக்கம் தெரியும் பாருங்கள். அவர் ஓர் அற்பர் அயோக்கியர் என்று அந்த பின்பக்கமே சொல்லிவிடும்.

ஜெயமோகன்: லோஹி மிகமிக உணர்சிகரமான மனிதர். அப்படிப்பட்டவர்கள் குரூரமானவர்களாகவும் சில சமயம் வெளிப்படுவார்கள்..

லோகிததாஸ்: குரூரமாக  நான் நடந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை. சிறுவயதில் நான் குரூரமாக நடத்தப்பட்டதனால் அப்படி இருக்கலாம். இல்லை என் பயம் காரணமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக என் கலை என்னை சுத்திகரிப்பதனால் அது நிகழ்ந்திருக்கலாம்.

ஜெயமோகன்: உங்களுக்கு நரம்புப் பிரச்சினைகள் உண்டா? கலைஞர்களுக்கு அது இருக்கும்.. குரல்கள் கேட்பது, கண்களில் ஒளி தெரிவது, உடல் நடுங்குவது.

லோகிததாஸ்: ரொம்ப உண்டு..ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மனநோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறேன்.

ஜெயமோகன்: எப்படிப்பட்ட பிரச்சினை?

லோகிததாஸ்: உணர்ச்சிகள் என் கட்டுக்குள் நிற்காது .நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பேன். உருக்கமான இடங்களைப் படித்தால் கதறிக் கதறி அழுவேன். சிறிய விஷயத்தில் கூட என்னைக் கட்டுப்படுத்த முடியாது. தூக்கத்தில் பயங்கரமாக அழுவேன். என் அழுகையைக் கேட்டு நானே திடுக்கிட்டு விழித்துக் கொள்வேன்.

ஜெயமோகன்: ‘துளை விழுத்த மூங்கில்தான் பாடும்’ என்று வயலாரின் வரி ஒன்று உள்ளது.

லோகிததாஸ்: இருக்கலாம் ஆனால் துளை விழுவது என்பது மிகவும் வலி தருவது .

ஜெயமோகன்: மலையாள இலக்கியத்தில் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் யார்?

லோகிததாஸ்: பஷீர், மாதவிக் குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர்

ஜெயமோகன்: மூவருமே உங்கள் ஊர்க்காரர்கள் ,வள்ளுநாடு

லோகிததாஸ்: ஆமாம் கேரளத்தின் கலாச்சார மையம் அல்லவா அது.

  ( நீலவல்லி அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஐவிட் வெளியீடாக ’திரை’’ இதழில் 2005- ம் ஆண்டு வெளியான நேர்காணல்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:35

அரிமளம் பத்மநாபன்

[image error]

அரிமளம் பத்மநாபன் இசைக்கலைஞர், இசை ஆய்வாளர். அரிமளம் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் தந்தை வழி சொந்த ஊர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். இசை சார்ந்த பண்பாட்டாய்வில் அரிமளம் பத்மநாபன் ஒரு முக்கியமான ஆளுமை என தமிழ் விக்கி வழியாகவே எனக்கு தெரியவந்தது

அரிமளம் சு.பத்மநாபன் அரிமளம் சு.பத்மநாபன் அரிமளம் சு.பத்மநாபன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:34

காமத்தின் கணம், கடிதம்

அனல் காற்று வாங்க

அனல் காற்று மின்னூல் வாங்க  

அன்புள்ள ஜெ

அனல் காற்று நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் உங்களுடைய பெரிய நாவல்களை எல்லாம் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நாம் வாழும் உலகத்தை அகற்றிவிட்டு அவற்றில் அமிழவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அனல்காற்று அப்படி அல்ல. சாதாரணமாக வாசித்து முடித்துவிட்டேன்

உங்களுடைய வழக்கமான வாசகர்கள் இந்த நாவலை அதிகமாகப் பரிந்துரைப்பதில்லை. இது காமம் சார்ந்த நாவல். ஆனால் காமத்தின் கொண்டாட்டம் இதில் இல்லை. இதிலிருப்பது வலிதான். ஒரு தப்பான உறவு கதைநாயகனுக்கு இருக்கிறது. தப்பான என்று ஏன் சொல்கிறேன் என்றால் அதை மேலே கொண்டுசெல்ல முடியாது, எங்காவது முடித்தாகவேண்டும் என்பதனால்தான். அப்படி அதை எங்கே முடிப்பது என்பதுதான் சிக்கல். முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாகும் இடம் இன்னொரு பெண் உள்ளே வருவது. அதாவது சரியான ஒன்று நிகழ்வது. அப்போதுதான் வேறுபாடு தெரியும். அதை முடிக்கவேண்டும் என நினைக்க ஆரம்பித்தாலே நரகமாக ஆகிவிடுகிறது. எங்கே எப்படி முடிப்பதென்று தெரிவதில்லை. எங்கே முடித்தாலும் ஈகோ கிளாஷ் ஆகும். ரத்தம் கசியும்.

அந்நாவலில் பல இடங்களில் சைக்காலஜிக்கலான அணுகுமுறை நான் அறிந்ததை அப்படியே சொல்வதுபோல இருந்தது. அப்படி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் வாசிக்கும்போது சரிதானே என நினைத்தேன். உக்கிரமான விஷயம் கடைசியில் ரத்தத்தில் அவள் கிடப்பது. ஒரு வகையான பிரசவம் போல அது. எல்லாம் சட்டென்று முடிந்துவிடுகிறது. பிரசவம் மாதிரித்தான். அவ்வளவு ரத்தமும் அழுகையும் சட்டென்று முடிந்து இரண்டு உயிராக ஆகிவிடும்.

நான் அந்த நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது பிரசவம் போல என நினைப்பேன். பிரசவம் எனக்கு ஒரு நைட்மேர் மாதிரி. அதுவும் அப்படித்தான் இருந்தது. அனல் காற்று நீங்கள் எழுதிய நாவல்களில் மிகமுக்கியமானது என நினைக்கிறேன். அதில் தத்துவம் எல்லாம் இல்லை. ஆனால் அந்த கணம் அதிலே உள்ளது. அது மிக அபூர்வமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. பாலகுமாரன் நிறைய வாசித்தவள். ஆனால் பாலா அங்கெல்லாம் பெரிய பேச்சுதான் பேசுவார். சைக்காலஜிக்கலாக உள்ளே போகமாட்டார்.

நன்றி

எம்

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:32

பூமணியின் பிறகு…

அன்பின் ஜெ,

நலம்தானே?

இந்த தீபாவளி சமயத்தில் பூமணியின் “பிறகு” படிக்க வாய்த்தது நற்செயல். சொந்த ஊர்விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், “பிறகு” ஊரில் நிலைக்க வைத்தது. படித்து முடிக்கும்வரை ஊரில் வெயிலின் வெம்மையில் சுற்றியலைந்ததுபோல் ஒரு நிறைவு. புத்துணர்ச்சி.

#தாத்தா தாத்தா அங்க ஊர்ல அனயம்பேரு தொப்பிவச்ச போலுசா வந்தாக. நான் பத்துப் படிச்சுட்டு பட்டாளத்துக்குப் போவென். அங்கயும் தொப்பி தருவாகல்ல.”

அழகிரிக்குச் சூடு கண்ணை முட்டியது. எச்சைக் கூட்டி விழுங்கினான்.

அதக்காட்டி பெரிய வேலைக்குப் போகணுண்டா.”

ஆவடையின் கைக்குள்ளிருந்து திமிறி ஓடிய சுடலை மந்தையில் அருகடைவரை எழும்பியிருந்த தீப்பெட்டியாபீஸ் சுவரில் ஏறிச் சுற்றி விளையாடத் தொடங்கினான்.

மரத்தடியிலிருந்து அழகிரி சத்தங்கொடுத்தான்.

அடேய் கீழ வுழுந்துறாதடா.”#

எத்தனை அழகான இறுதிக் காட்சி! பூமணிக்கு/அப்படைப்பு மனத்திற்கு இந்த இடத்தில் நாவலை நிறைவு செய்ய வேண்டும் என்று எப்படித் தோன்றியது?. “வுட்றாதடா. உன் தலைமுறையாவது நல்லாப் படிச்சி நல்ல வேலைக்குப் போகணுண்டா” அழகிரியின் கண்ணீர் பேரன் சுடலையிடம் சொல்லாமல் சொல்வது இதைத்தானே?.

துளியும் எழுத்தாளன் தலைநீட்டாத, பிரச்சாரத்தின் வாசம் சிறிதும் எழாத, இயல்பின் அழகியலோடு மண்ணிலிருந்து கிளைத்த மற்றுமொரு மகத்தான நாவல் “பிறகு” என்பது என் அனுமானம்.

நான் பிறந்த கிராமத்திலும் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி), எங்கள் வீட்டிலும் பேச்சு மொழி தெலுங்குதான். சுத்த ஆந்திரா தெலுங்கல்ல. கலந்து கட்டிய கதம்ப மணத் தெலுங்கு. தெலுங்கு பேச மட்டும்தான் தெரியும் எனக்கு. எழுத, படிக்கத் தெரியாது. இப்போது கூட வீட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அம்முவுடன் நான் பேசுவது தமிழில். ஆனால் அம்முவும், நானும் இயலுடன் உரையாடுவது தெலுங்கில்.

சில வருடங்களுக்கு முன் நானும், இயலும் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தோம். தமிழினி அரங்கில் புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் பேசும் தெலுங்கைக் கேட்டு வசந்தகுமார் சார் புன்னகைத்தார். பின்னர் கண்காட்சி வளாகத்தின் வெளியே தேநீர் அருந்தியபடி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது எங்களின் பூர்வீகம், மூத்த தலைமுறைகள் அநேகமாக ஆந்திரா தெலுங்கானாவின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றார். பால்யத்தில் தம்பிகளுடனும், நண்பர்களுடனும் உரையாடல் மொழி தெலுங்கென்றாலும், சண்டை வந்தால் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும். அச்சிறு பிராயத்தில் மனம் சிணுங்க வைக்கும் காரணங்களையும், வாக்குவாதங்களையும்,  சண்டைகளையும் இப்போது நினைத்துப் பார்த்தால் விரிந்த புன்னகை எழுகிறது.

“பிறகு” நாவலில் இடையிடையில் வரும் பேச்சுத் தெலுங்கின் வரிகள் மனதைப் பரவசம் கொள்ள வைத்தது. என் மண்ணையும், நிலத்தையும், வேர்களையும், பால்யத்தையும், கிராமத்தையும், மனிதர்களையும் எழுத்தில் கண்டால் எப்போதும் மனது மிகு நெகிழ்வு கொண்டு கரைந்து விடுகிறது. என் மண்ணின் மணம் கமழும்/நினைவூட்டும் எந்த எழுத்தும் மனதிற்கு மிக நெருக்கமாகி விடுகிறது. கி.ரா என் அய்யன். பூமணியின் பள்ளிக்கூடங்களில் நான் படித்திருக்கிறேன். இமையத்தின் ஆரோக்கியமும், செடலும் என் ஊர்க்காரர்கள். பெருமாள் முருகனின் கூளமாதாரி நடந்து திரிந்தது என் கிராமத்தில். “பிறகு”-ன் மஞ்சனத்தி மரங்களும், வேம்பும், ஆடு புலி ஆட்டமும் என் கிராமத்தையும் (கிராமத்தில் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முத்தியாலம்மன் கோயிலின் கல்தரையில் ஆடுபுலி ஆட்டக் கட்டங்கள் வரையப்பட்டிருக்கும்), பால்ய நண்பர்களுடனான என் இனிமையான நினைவுகளையும் மேல் கொண்டுவந்தன.

“பிறகு” பெரும்பாலும் உரையாடல்களால் ஆன நாவல். பேச்சுக்கள் முழுதும் மண்மணக்கும் வட்டார வழக்கு மொழியில்.இவ்வார்த்தைகளும் வரிகளும் பேச்சும்தான் என்னை நாவலோடு மனம் நெகிழ்த்தி ஒன்றவைத்தன.

நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு மனிதர்களையும் மனதில் அருகாமையாய் உணர்ந்தேன். அழகிரி, ஆவுடை, முத்துமாரி, கருப்பன், சக்கணக் கிழவன், சித்திரன், கந்தையா, லெச்சுமி, முத்துமுருங்கன், மாடசாமி, வீரி, சுப்பையானாசாரி, அப்பையா, முனியாண்டி…எல்லோரையும்.

முத்துமாரியின் மீதான கருப்பனின் காதல் வார்த்தைகளற்ற ஒரு இசைக் கவிதை. முத்துமாரியின் மீதான ஆவுடையின் அன்பு ஆழமான தாய்மையின் சாரல். கிராமத்தில் முத்துமாரியின் திருமணக் காட்சிகள் அழகோவியங்கள். திருமணமாகிச் செல்லும் முத்துமாரியை ஊர் எல்லையில் வழியனுப்பி விட்டு மகள் சென்ற பாதையை வெகுநேரம் ஆவுடை பார்த்துக்கொண்டிருக்கும் அக்காட்சி அபாரமான ஒன்று (நீங்கள் சங்கப்பாடல் ஒன்றுடன் இக்காட்சியை ஒப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்).

இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தில், தன் மனைவி காளியுடனும், இரண்டு வயது மகள் முத்துமாரியுடனும் துரைச்சாமிபுரத்திலிருந்து கிளம்பி மணலூத்திற்கு பஞ்சம் பிழைக்க வரும் அழகிரிப் பகடையுடன் நாவல் துவங்குகிறது. மணலூத்து ஊருணியின் மருகால்துறைக்கரையில் அடர்ந்து நின்ற புன்னை மரங்களையும், வடக்குக் கரையில் தலைவிரிகோலமாக விழுதுகள் தொங்கும் ஒற்றை ஆலமரத்தையும், அதுக்குக் கீழாக ஊருணிப் பாலத்தையும் தாண்டி களத்துமேட்டோரம் காளியம்மன்கோயில்முக்கில் நின்றுகொண்டு கிழக்கே குடியைப் பார்க்கிறான் அழகிரி.

கோயில்மேடையில் கட்டைவேம்பு நிழலில் உறங்கிக்கிடந்த கிழடுகளில் ஒண்ணு கண்சொருகலிலிருந்து மெல்ல விடுபட்டுக் கேட்டது.

ஏவூருப்பா

தொரச்சியாவரஞ்சாமி

தொரச்சியாவரத்தில யாரு

அழகிரிப்பகடங்க சாமி

இட்ட ஏமி குடியிருக்கவாரா

அவ்வுசாமி

ஓகோநேண்டு வாளு கந்தையா செப்பித்தி. போத்தம் போத்தம்

நானும் அழகிரியுடன் மணலூத்திற்குள் நுழைந்தேன். மணலூத்தின் வேம்பு காலாதீதத்தில் நின்று எல்லாவற்றையும் சாட்சியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெங்கி

பிறகு ” – பூமணி

நற்றிணை பதிப்பகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:31

கொற்றவை வாசிப்பனுபவம் – நரேந்திரன்

கொற்றவை நாவல் வாங்க

பெருநாவல்கள் முதன்மையாக அளிப்பதென்ன? தனிமனிதன் என்ற எண்ணத் தீவிரத்தின் முன் பெருங்கடல் நீரின் ஒரு துளி என்றும், பெருங்காட்டின் விரிவில் ஒரு சிறு இலை என்றும், பெரும்பாலையின் நிறைமணலில் ஒரு துகள் என்றும் உணர செய்வதுதான் என்று தோன்றுகிறது. இங்கு கடந்தும் எதிர்நோக்கியும் விரிந்திருக்கும் வரலாற்றின் ஒரு துளியாக எஞ்சி இருக்கும் அந்த மனநிலையை அடைந்து கொண்டே இருக்கும் கணங்கள் அச்சத்தின் நுனி முனையை உரசி அதே விரைவில் நிறைவின் நுனியையும் அடைந்து திகைக்க வைக்கிறது.

கொற்றவை – வாசிப்பனுபவம்

 

கொற்றவை, கவிதைகள்

ஆட்கொள்ளும் கொற்றவை

கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்

கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம்

கொற்றவை தொன்மமும் கவிதையும்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

கொற்றவை -கடிதம்

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

வெள்ளையானையும் கொற்றவையும்

கொற்றவையின் தொன்மங்கள்

கொற்றவையின் நீலம்

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை பித்து- 3

கொற்றவைப் பித்து- 2

கொற்றவை பித்து-1

கொற்றவை- கனவுகளின் வெளி

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

கொற்றவை ஒரு கடிதம்

கொற்றவை-கடிதம்

காடு, கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை – ஒரு கடிதம்

கொற்றவையும் சன்னதமும்

கொற்றவை கடிதம்

கொற்றவை-கடிதம்

கொற்றவை, ஒரு கட்டுரை

கொற்றவை-கடிதம்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

கொற்றவை கடிதம்

கொற்றவை

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்

கொற்றவை,கடித ங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.