Jeyamohan's Blog, page 645

January 14, 2023

அரிமளம் பத்மநாபன்

[image error]

அரிமளம் பத்மநாபன் இசைக்கலைஞர், இசை ஆய்வாளர். அரிமளம் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் தந்தை வழி சொந்த ஊர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். இசை சார்ந்த பண்பாட்டாய்வில் அரிமளம் பத்மநாபன் ஒரு முக்கியமான ஆளுமை என தமிழ் விக்கி வழியாகவே எனக்கு தெரியவந்தது

அரிமளம் சு.பத்மநாபன் அரிமளம் சு.பத்மநாபன் அரிமளம் சு.பத்மநாபன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:34

காமத்தின் கணம், கடிதம்

அனல் காற்று வாங்க

அனல் காற்று மின்னூல் வாங்க  

அன்புள்ள ஜெ

அனல் காற்று நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் உங்களுடைய பெரிய நாவல்களை எல்லாம் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நாம் வாழும் உலகத்தை அகற்றிவிட்டு அவற்றில் அமிழவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் அனல்காற்று அப்படி அல்ல. சாதாரணமாக வாசித்து முடித்துவிட்டேன்

உங்களுடைய வழக்கமான வாசகர்கள் இந்த நாவலை அதிகமாகப் பரிந்துரைப்பதில்லை. இது காமம் சார்ந்த நாவல். ஆனால் காமத்தின் கொண்டாட்டம் இதில் இல்லை. இதிலிருப்பது வலிதான். ஒரு தப்பான உறவு கதைநாயகனுக்கு இருக்கிறது. தப்பான என்று ஏன் சொல்கிறேன் என்றால் அதை மேலே கொண்டுசெல்ல முடியாது, எங்காவது முடித்தாகவேண்டும் என்பதனால்தான். அப்படி அதை எங்கே முடிப்பது என்பதுதான் சிக்கல். முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் உருவாகும் இடம் இன்னொரு பெண் உள்ளே வருவது. அதாவது சரியான ஒன்று நிகழ்வது. அப்போதுதான் வேறுபாடு தெரியும். அதை முடிக்கவேண்டும் என நினைக்க ஆரம்பித்தாலே நரகமாக ஆகிவிடுகிறது. எங்கே எப்படி முடிப்பதென்று தெரிவதில்லை. எங்கே முடித்தாலும் ஈகோ கிளாஷ் ஆகும். ரத்தம் கசியும்.

அந்நாவலில் பல இடங்களில் சைக்காலஜிக்கலான அணுகுமுறை நான் அறிந்ததை அப்படியே சொல்வதுபோல இருந்தது. அப்படி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் வாசிக்கும்போது சரிதானே என நினைத்தேன். உக்கிரமான விஷயம் கடைசியில் ரத்தத்தில் அவள் கிடப்பது. ஒரு வகையான பிரசவம் போல அது. எல்லாம் சட்டென்று முடிந்துவிடுகிறது. பிரசவம் மாதிரித்தான். அவ்வளவு ரத்தமும் அழுகையும் சட்டென்று முடிந்து இரண்டு உயிராக ஆகிவிடும்.

நான் அந்த நாட்களையெல்லாம் ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது பிரசவம் போல என நினைப்பேன். பிரசவம் எனக்கு ஒரு நைட்மேர் மாதிரி. அதுவும் அப்படித்தான் இருந்தது. அனல் காற்று நீங்கள் எழுதிய நாவல்களில் மிகமுக்கியமானது என நினைக்கிறேன். அதில் தத்துவம் எல்லாம் இல்லை. ஆனால் அந்த கணம் அதிலே உள்ளது. அது மிக அபூர்வமாகத்தான் எழுதப்பட்டுள்ளது. பாலகுமாரன் நிறைய வாசித்தவள். ஆனால் பாலா அங்கெல்லாம் பெரிய பேச்சுதான் பேசுவார். சைக்காலஜிக்கலாக உள்ளே போகமாட்டார்.

நன்றி

எம்

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:32

பூமணியின் பிறகு…

அன்பின் ஜெ,

நலம்தானே?

இந்த தீபாவளி சமயத்தில் பூமணியின் “பிறகு” படிக்க வாய்த்தது நற்செயல். சொந்த ஊர்விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், “பிறகு” ஊரில் நிலைக்க வைத்தது. படித்து முடிக்கும்வரை ஊரில் வெயிலின் வெம்மையில் சுற்றியலைந்ததுபோல் ஒரு நிறைவு. புத்துணர்ச்சி.

#தாத்தா தாத்தா அங்க ஊர்ல அனயம்பேரு தொப்பிவச்ச போலுசா வந்தாக. நான் பத்துப் படிச்சுட்டு பட்டாளத்துக்குப் போவென். அங்கயும் தொப்பி தருவாகல்ல.”

அழகிரிக்குச் சூடு கண்ணை முட்டியது. எச்சைக் கூட்டி விழுங்கினான்.

அதக்காட்டி பெரிய வேலைக்குப் போகணுண்டா.”

ஆவடையின் கைக்குள்ளிருந்து திமிறி ஓடிய சுடலை மந்தையில் அருகடைவரை எழும்பியிருந்த தீப்பெட்டியாபீஸ் சுவரில் ஏறிச் சுற்றி விளையாடத் தொடங்கினான்.

மரத்தடியிலிருந்து அழகிரி சத்தங்கொடுத்தான்.

அடேய் கீழ வுழுந்துறாதடா.”#

எத்தனை அழகான இறுதிக் காட்சி! பூமணிக்கு/அப்படைப்பு மனத்திற்கு இந்த இடத்தில் நாவலை நிறைவு செய்ய வேண்டும் என்று எப்படித் தோன்றியது?. “வுட்றாதடா. உன் தலைமுறையாவது நல்லாப் படிச்சி நல்ல வேலைக்குப் போகணுண்டா” அழகிரியின் கண்ணீர் பேரன் சுடலையிடம் சொல்லாமல் சொல்வது இதைத்தானே?.

துளியும் எழுத்தாளன் தலைநீட்டாத, பிரச்சாரத்தின் வாசம் சிறிதும் எழாத, இயல்பின் அழகியலோடு மண்ணிலிருந்து கிளைத்த மற்றுமொரு மகத்தான நாவல் “பிறகு” என்பது என் அனுமானம்.

நான் பிறந்த கிராமத்திலும் (மதுரை திருமங்கலம் கள்ளிக்குடி அருகே ஓடைப்பட்டி), எங்கள் வீட்டிலும் பேச்சு மொழி தெலுங்குதான். சுத்த ஆந்திரா தெலுங்கல்ல. கலந்து கட்டிய கதம்ப மணத் தெலுங்கு. தெலுங்கு பேச மட்டும்தான் தெரியும் எனக்கு. எழுத, படிக்கத் தெரியாது. இப்போது கூட வீட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அம்முவுடன் நான் பேசுவது தமிழில். ஆனால் அம்முவும், நானும் இயலுடன் உரையாடுவது தெலுங்கில்.

சில வருடங்களுக்கு முன் நானும், இயலும் திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தோம். தமிழினி அரங்கில் புத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது நாங்கள் பேசும் தெலுங்கைக் கேட்டு வசந்தகுமார் சார் புன்னகைத்தார். பின்னர் கண்காட்சி வளாகத்தின் வெளியே தேநீர் அருந்தியபடி அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது எங்களின் பூர்வீகம், மூத்த தலைமுறைகள் அநேகமாக ஆந்திரா தெலுங்கானாவின் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றார். பால்யத்தில் தம்பிகளுடனும், நண்பர்களுடனும் உரையாடல் மொழி தெலுங்கென்றாலும், சண்டை வந்தால் வார்த்தைகள் தமிழுக்கு மாறிவிடும். அச்சிறு பிராயத்தில் மனம் சிணுங்க வைக்கும் காரணங்களையும், வாக்குவாதங்களையும்,  சண்டைகளையும் இப்போது நினைத்துப் பார்த்தால் விரிந்த புன்னகை எழுகிறது.

“பிறகு” நாவலில் இடையிடையில் வரும் பேச்சுத் தெலுங்கின் வரிகள் மனதைப் பரவசம் கொள்ள வைத்தது. என் மண்ணையும், நிலத்தையும், வேர்களையும், பால்யத்தையும், கிராமத்தையும், மனிதர்களையும் எழுத்தில் கண்டால் எப்போதும் மனது மிகு நெகிழ்வு கொண்டு கரைந்து விடுகிறது. என் மண்ணின் மணம் கமழும்/நினைவூட்டும் எந்த எழுத்தும் மனதிற்கு மிக நெருக்கமாகி விடுகிறது. கி.ரா என் அய்யன். பூமணியின் பள்ளிக்கூடங்களில் நான் படித்திருக்கிறேன். இமையத்தின் ஆரோக்கியமும், செடலும் என் ஊர்க்காரர்கள். பெருமாள் முருகனின் கூளமாதாரி நடந்து திரிந்தது என் கிராமத்தில். “பிறகு”-ன் மஞ்சனத்தி மரங்களும், வேம்பும், ஆடு புலி ஆட்டமும் என் கிராமத்தையும் (கிராமத்தில் வீட்டிற்கு எதிரிலிருக்கும் முத்தியாலம்மன் கோயிலின் கல்தரையில் ஆடுபுலி ஆட்டக் கட்டங்கள் வரையப்பட்டிருக்கும்), பால்ய நண்பர்களுடனான என் இனிமையான நினைவுகளையும் மேல் கொண்டுவந்தன.

“பிறகு” பெரும்பாலும் உரையாடல்களால் ஆன நாவல். பேச்சுக்கள் முழுதும் மண்மணக்கும் வட்டார வழக்கு மொழியில்.இவ்வார்த்தைகளும் வரிகளும் பேச்சும்தான் என்னை நாவலோடு மனம் நெகிழ்த்தி ஒன்றவைத்தன.

நாவலின் ஒவ்வொரு பக்கத்தையும், ஒவ்வொரு மனிதர்களையும் மனதில் அருகாமையாய் உணர்ந்தேன். அழகிரி, ஆவுடை, முத்துமாரி, கருப்பன், சக்கணக் கிழவன், சித்திரன், கந்தையா, லெச்சுமி, முத்துமுருங்கன், மாடசாமி, வீரி, சுப்பையானாசாரி, அப்பையா, முனியாண்டி…எல்லோரையும்.

முத்துமாரியின் மீதான கருப்பனின் காதல் வார்த்தைகளற்ற ஒரு இசைக் கவிதை. முத்துமாரியின் மீதான ஆவுடையின் அன்பு ஆழமான தாய்மையின் சாரல். கிராமத்தில் முத்துமாரியின் திருமணக் காட்சிகள் அழகோவியங்கள். திருமணமாகிச் செல்லும் முத்துமாரியை ஊர் எல்லையில் வழியனுப்பி விட்டு மகள் சென்ற பாதையை வெகுநேரம் ஆவுடை பார்த்துக்கொண்டிருக்கும் அக்காட்சி அபாரமான ஒன்று (நீங்கள் சங்கப்பாடல் ஒன்றுடன் இக்காட்சியை ஒப்பிட்டிருந்தீர்கள் என்று ஞாபகம்).

இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தில், தன் மனைவி காளியுடனும், இரண்டு வயது மகள் முத்துமாரியுடனும் துரைச்சாமிபுரத்திலிருந்து கிளம்பி மணலூத்திற்கு பஞ்சம் பிழைக்க வரும் அழகிரிப் பகடையுடன் நாவல் துவங்குகிறது. மணலூத்து ஊருணியின் மருகால்துறைக்கரையில் அடர்ந்து நின்ற புன்னை மரங்களையும், வடக்குக் கரையில் தலைவிரிகோலமாக விழுதுகள் தொங்கும் ஒற்றை ஆலமரத்தையும், அதுக்குக் கீழாக ஊருணிப் பாலத்தையும் தாண்டி களத்துமேட்டோரம் காளியம்மன்கோயில்முக்கில் நின்றுகொண்டு கிழக்கே குடியைப் பார்க்கிறான் அழகிரி.

கோயில்மேடையில் கட்டைவேம்பு நிழலில் உறங்கிக்கிடந்த கிழடுகளில் ஒண்ணு கண்சொருகலிலிருந்து மெல்ல விடுபட்டுக் கேட்டது.

ஏவூருப்பா

தொரச்சியாவரஞ்சாமி

தொரச்சியாவரத்தில யாரு

அழகிரிப்பகடங்க சாமி

இட்ட ஏமி குடியிருக்கவாரா

அவ்வுசாமி

ஓகோநேண்டு வாளு கந்தையா செப்பித்தி. போத்தம் போத்தம்

நானும் அழகிரியுடன் மணலூத்திற்குள் நுழைந்தேன். மணலூத்தின் வேம்பு காலாதீதத்தில் நின்று எல்லாவற்றையும் சாட்சியாய் பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெங்கி

பிறகு ” – பூமணி

நற்றிணை பதிப்பகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:31

கொற்றவை வாசிப்பனுபவம் – நரேந்திரன்

கொற்றவை நாவல் வாங்க

பெருநாவல்கள் முதன்மையாக அளிப்பதென்ன? தனிமனிதன் என்ற எண்ணத் தீவிரத்தின் முன் பெருங்கடல் நீரின் ஒரு துளி என்றும், பெருங்காட்டின் விரிவில் ஒரு சிறு இலை என்றும், பெரும்பாலையின் நிறைமணலில் ஒரு துகள் என்றும் உணர செய்வதுதான் என்று தோன்றுகிறது. இங்கு கடந்தும் எதிர்நோக்கியும் விரிந்திருக்கும் வரலாற்றின் ஒரு துளியாக எஞ்சி இருக்கும் அந்த மனநிலையை அடைந்து கொண்டே இருக்கும் கணங்கள் அச்சத்தின் நுனி முனையை உரசி அதே விரைவில் நிறைவின் நுனியையும் அடைந்து திகைக்க வைக்கிறது.

கொற்றவை – வாசிப்பனுபவம்

 

கொற்றவை, கவிதைகள்

ஆட்கொள்ளும் கொற்றவை

கொற்றவை எனும் புதுக்காப்பியம்-சூர்யப்ரகாஷ்

கொற்றவை- கரு.ஆறுமுகத்தமிழன் உரை

கொற்றவை, மானுட அழிவின் கதை

கொற்றவை- கடிதம்

கொற்றவை தொன்மமும் கவிதையும்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

கொற்றவை -கடிதம்

அக்னிநதி, கொற்றவை -கடிதங்கள்

கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)

வெள்ளையானையும் கொற்றவையும்

கொற்றவையின் தொன்மங்கள்

கொற்றவையின் நீலம்

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை பித்து- 3

கொற்றவைப் பித்து- 2

கொற்றவை பித்து-1

கொற்றவை- கனவுகளின் வெளி

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

கொற்றவை- கரு. ஆறுமுகத் தமிழன்

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

கொற்றவை ஒரு கடிதம்

கொற்றவை-கடிதம்

காடு, கொற்றவை-கடிதங்கள்

கொற்றவை – ஒரு கடிதம்

கொற்றவையும் சன்னதமும்

கொற்றவை கடிதம்

கொற்றவை-கடிதம்

கொற்றவை, ஒரு கட்டுரை

கொற்றவை-கடிதம்

விஷ்ணுபுரம், கொற்றவை…கடிதங்கள்

கொற்றவை கடிதம்

கொற்றவை

கொற்றவை – ஒருகடிதம்

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

இளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்

கொற்றவை,கடித ங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2023 10:30

January 13, 2023

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி

லோகிததாஸ்

லோகி நினைவுகள் மதிப்பீடுகள் வாங்க

(லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர் எஸ்.ஜே.சிவசங்கர் அனுப்பியிருந்தார்)

ஏ.கே.லோகிததாஸ் என்றறியப்படும் ஏ.கருணாகரன் லோகிததாஸ் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பல்லுறுத்தி என்ற கிராமத்தில் பிறந்தார். வணிக சினிமா என்றும் மக்களுக்கான சினிமா என்றும் சொல்லிக்கொண்டு கோமாளித்தனங்களையும், கேளிக்கை லீலைகளையும் திரைப்படமாக்கிக் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் இவர் முற்றிலும் மாறுபட்டவர். எம்.டி.வாசுதேவன் நாயர், பத்மராஜன் போன்ற மேதைகளின் வரிசையில் ஒரு திரைக்கதையாசிரியராக திரைத்துறைக்குள் நுழைந்தார். திரைத்துறைக்குள் வருவதற்கு முன்னரே ஒரு தீவிர நாடகாசிரியராக இயங்கிக் கொண்டிருந்தார். ‘’ சிந்து நதி சாந்தமாய் ஒழுந்நு ‘’  என்கிற முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நாடகாசிரியருக்கான (1985) மாநில விருதைப் பெற்றார்.

கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்ற ‘’தனியாவர்த்தனம்’’, ‘’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’’, ‘’மகாயானம்’’, ‘’மிருகயா’’, ‘’கமலதளம்’’, ‘’தசரதம்’’, ‘’கிரீடம்’’ என்று நீண்டு செல்லும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களின் கதை, திரைக்கதை,  வசனகர்த்தாவும் ஆவார். 1997 ஆம் வருடம் ‘’ பூதக்கண்ணாடி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இம்முதல் படத்திலேயே சிறந்த புதுமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார். மனித உறவுகளைப் பற்றிய மிக நுட்பமானப் பார்வையும் பல கோணங்களிலும் கதைப் பாத்திரங்கள் பற்றி ஆராயும் திறனும் கொண்ட இவர் மனசாஸ்திரம் பயின்ற ஒரு கலைஞராக மதிக்கப்பட்டு வருகிறார். பல முக்கிய பத்திரிகைகளின் பருவ இதழ்களில் சிறுகதைகளும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய திரைக்கதைகளுக்கு பெரும் தூண்டுதலாக இருந்த மனிதர்களைப் பற்றியும் சம்பவங்கள் பற்றியும் இவர் எழுதிய புத்தகம் ஒன்றும்  ‘கதையுட காணாப்புறங்கள்’’ என்கிற பெயரில் கரண்ட் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது மலையாளத்தில் வெற்றிபெற்ற ’கஸ்தூரிமான்’’ திரைப்படத்தை தற்போது தமிழில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன்: திரைப்படத்தை உங்கள் ஊடகமாகக் கொள்ள என்ன காரணம்? எப்படி அந்த ஆர்வம் ஏற்பட்டது?

லோகிததாஸ்: திரைப்படம் என் ஊடகமாக ஆனது மிகவும் பிந்தித்தான். முதன்முதலாய் நான் கண்டுகொண்ட ஊடகம் இலக்கியம். மிகச்சிறிய வயதிலேயே எழுத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சொல்லப்போனால் வாசிப்பை விடவும் முன்னதாகவே எழுத்து என்னிடம் வந்துவிட்டது.

ஜெயமோகன்: ஆமாம் பெரும்பாலும் அது அப்படித்தான்…

லோகிததாஸ்: ஒவ்வொரு குழந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனைகிறது. தன் இருப்பை நிறுவிக்கொள்ள முனைகிறது. அதன் இயல்புக்கும் திறமைக்கும் அது வாழும் சூழலுக்கும் ஏற்ப ஒரு வழிமுறையை கண்டடைகிறது. இசை , விளையாட்டு, படிப்பு  இப்படி நான் கண்டடைந்தது எழுத்தை. மிகச்சிறிய வயதிலேயே என் துக்கங்களையும் கண்ணீரையும் எழுதும்போது எனக்கு ஒரு அபூர்வமான வலிமை உருவாவதைக் கண்டுகொண்டேன். எழுதும்போது அந்தத் துக்கங்களை நான் வெல்வதுபோல்..அவை என்னைத் தொடமுடியாது விலகுவதுபோல்…

ஜெயமோகன்: உங்கள் இளமைப் பருவம் துயர் மிக்கது என்று தெரியும்.

லோகிததாஸ்:  ஆமாம்..சிறுவயதிலேயே தந்தை எங்களை விட்டுப் போனார். பசித்து அனாதையாக வளர்ந்தேன். உறவினர் வீடுகள்தோறும் மாறிமாறித் தங்கி வாழ்ந்தேன். அப்போது எனக்கு எழுத்து பெரும் துணையாக இருந்தது. அடிப்படையில் நான் இலக்கியவாதி. இலக்கியம்தான் என் ஊடகம். என் இலக்கியத்துக்கு ஊடகமாக சினிமா உள்ளது. அதே சமயம் எனக்கு வெறும் எழுத்து போதுமானதாக இருக்கவில்லை. எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தது. நான் எழுதுபவற்றையெல்லாம் இயல்பாகவே மனதுக்குள் நடித்துக் கொண்டிருந்தேன். மெல்ல நான் நடிப்புக்குரிய வகையில் எழுத ஆரம்பித்தேன். அவை நாடக வடிவுக்குப் பொருத்தமாக ஆயின. என் பதினெட்டு வயதில் முதல் நாடகத்தை எழுதினேன். இருபத்திரெண்டு வயதுக்குள் கேரளம் முழுக்க கவனிக்கப்பட்ட நாடக ஆசிரியரானேன். திரைக்கதை எழுத வாய்ப்பு வந்தது. 1985ல் என் முதல் படம் ‘தனியாவர்த்தனம்’’ வெளிவந்தது. சிபிமலையில் இயக்குநர். அது நாடகமாக என் மனதுக்குள் உருக்கொண்ட கரு. நான் நாடகத்தை ஒரு அடிப்படைக் கலையாகக் கருதுகிறேன். இலக்கியத்தை விடவும் என் மொழியை விடவும் புராதனமான கலை நடிப்பு. எல்லா உயிர்களும் நடிக்கின்றன. நடிப்பு மிகமிக அடிப்படையான ஒரு விஷயம்.

ஜெயமோகன்: ஆமாம். ’காட்ஸ் மஸ்ட் பி கிரேசி’’ படத்தில் புஷ்மேன் வகை மனிதர்கள் தங்கள் வேட்டை அனுபவங்களை நடித்துக் காண்பிக்கும் காட்சி இருந்தது. அவர்கள் மொழி இன்றும் மொழியாகாத வெறும் ஒலிதான்..

லோகிததாஸ்: எல்லோரும் நடிகர்கள்தான். வாயால் பேசுவதுபோல் நாம் ஒவ்வொரு கணமும் உடலாலும் பேசிக்கொண்டே இருக்கிறோம். நம் மனத்தை ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறோம் . வளர வளர உடல் பற்றிய பிரக்ஞை அதிகமாகிறது. அந்த சுய உணர்வு நடிப்புக்குத் தடையாக ஆகிறது. ஒன்று கவனித்திருக்கிறேன். புத்திசாலிகளை விட சற்று மந்தமானவர்களை நடிக்க வைப்பது எளிது. இளம்வயதில் நடிப்பாற்றல் அனைவரிடமும் இயல்பாக இருக்கிறது.

ஜெயமோகன்: நாடகத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவு என்ன?

லோகிததாஸ்:  நடிக்கப்படும் இலக்கியமே நாடகம். ஏதோ ஒரு காலத்தில் நடிப்பும் இலக்கியமும் ஒன்றாகவே இருந்திருக்க வேண்டும். இன்று உலக இலக்கியத்தில் நமக்குக் கிடைக்கும் பேரிலியக்கியங்களில் கணிசமானவை நாடகங்கள்தான். கிரேக்க நாடகங்கள், சம்ஸ்கிருத நாடகங்கள்…

ஜெயமோகன்: பழைய தமிழ் மரபை வைத்துச் சொல்லப்போனால் இங்கு கவிதை, இசை, நாடகம் மூன்றும் பிரிக்கமுடியாதபடி ஒன்றாக இருந்தன. கவிஞன் பாடி ஆடி தன் கலையை நிகழ்த்தினான். சங்கப் பாடல்கள் அனைத்தும் நிகழ்த்துக் கலைக்கான பதங்கள்தான் என்றே நான் கருதுகிறேன். திணை துறைப் பிரிவினைகள் எல்லாம் ஆட்டப்பிரகாரங்கள்.

லோகிததாஸ்:  இன்னும் முக்கியமாக ஒன்று உண்டு; ரசங்கள். இலக்கியமும் சரி நாடகமும் சரி ரசங்களை உருவாக்குவதையே தங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

ஜெயமோகன்: பாலு மகேந்திரா , மீரா கதிரவன் மொழிபெயர்த்த ‘பெருவழியம்பலம்’ ( பி. பத்மராஜன்) திரைக்கதைக்கான முன்னுரையில் ஒரு விஷயம் கூறுகிறார். திரைகதை என்பது ஓர் இலக்கிய வடிவம் அல்ல அது வாசிப்புக்கு உரியதல்ல, அது இயக்குநருக்கான குறிப்புகள் மட்டும்தான் என்று.

லோகிததாஸ்: அது ஒரு கோணம். நான் வாதாட விரும்பவில்லை. நான் கூறுவது  என் கோணத்தை. என் வாசிப்பு மூலமும் என் படைபனுபவம் மூலமும் கிடைத்த அறிதலை. திரைக்கதை கண்டிப்பாக ஓர் இலக்கிய வடிவமே. வளர்ந்துவரும் இலக்கிய வடிவம் அது. திரைகதை இலக்கியமல்ல என்றால் நாடகமும் இலக்கியமில்லை அல்லவா? ஷேக்ஸ்பியர் படிப்பதற்காக எழுதவில்லை. நடிப்பதற்காகத்தானே எழுதினார்? இசைப்பாடல்கள் (கீர்த்தனை) பாடுவதற்காக எழுதப்படுகின்றன. அவையும் இலக்கியங்கள்தானே?  இலக்கியம்தான் அடிப்படை.

ஜெயமோகன்: எனக்கு மிகப்பிடித்தமான இயக்குநர் இங்மர் பர்க்மான் அவரது ‘ஏழாவது முத்திரை’ திரைக்கதை, மொழி சார்ந்தது அல்ல. காட்சிப் படிமங்களால் ஆனது. ஆனால் அதைப் படிக்கும்போது இலக்கியமாகவே அனுபவமாகிறது. நம்  கற்பனையில் உண்மையில் அந்தப் படிமத்தையும் விட மகத்தான சினிமா ஒன்று விரிகிறது.

லோகிததாஸ்: மனத்தால் நடித்து அகக்கண்ணால் கண்டு விரிவடையச் செய்ய முடிகிறது  என்பதாலேயே நாடகம் மிகச்சிறந்த கலையாக ஆகிறது. நம் கண்முன் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கையை நாம் நேரடியாகப் பார்க்கிறோம். திரைக்கதையும் அப்படித்தான்.

ஜெயமோகன்: ஆனால் திரைக்கதை சினிமா ஊடகத்தின் தேவைக்கு உட்பட்டே இயங்கமுடியும். அந்த எல்லைகள் அதற்குத் தடைதானே?

லோகிததாஸ்: சரி .நாடகத்திற்கு அதன் வெளி (  space ) பெரிய எல்லைதானே? அது ஒரு சதுரத்திற்குள் நடந்தாக வேண்டுமே? அனால் மிகப் பெரிய நாடகாசிரியர்கள் அந்த இயல்பையே அந்த வடிவத்தின் பலமாக மாற்றிக் கொண்டார்கள். ஒரு இடத்தில், ஒரு புள்ளியில் வாழ்வின் அனைத்து முரண்பாடுகளும் வந்து மோதித் துடிக்கும்படிச் செய்தார்கள். “ நாடகாந்தம் கவித்துவம் “ என்ற சொல்லாட்சி உருவானதே. அதே போலத்தான் திரைகதை. திரைகதை அனைத்தையும் காட்டியாக வேண்டும். அது யோசிக்க முடியாது. அது தியானிக்க முடியாது. அது காட்ட வேண்டும். ஆனால் அதுவே அதன் பலம். வாழ்கையின் முரண்களை, புதிர்களை, துக்கங்களை, சந்தோஷங்களை மிகச் சிறந்த திரைகதையாசிரியர்கள் காட்டியிருக்கிறார்கள். திரைகதை எப்படி இலக்கியமாக ஆகிறது தெரியுமா? நாம் வாசிக்கும்போது நமது கற்பனையில்தான்  அனைத்தும் நிகழ்கிறது என்பதால்தான்.

ஜெயமோகன்: இங்கே வரும் இந்த முரண்பாட்டுக்குக் காரணம் இதுதான். மலையாளத்தில் ஆரம்ப காலம் முதல் எழுத்தாளர்கள்தான் திரைக்கதை எழுதினார்கள். ஆரம்பகாலப் படமான “ நீலக்குயில்”க்கு உதூப் எழுதினார். தகழி சிவசங்கரப்பிள்ளை, வைக்கம்முகமதுபஷீர், எஸ்.கெ.பொற்றேகாட், பாறப்புறத்து, செ.சுரேந்திரன். என்று மலையாள சினிமாவின் இயல்பை முதல்தரப் படைப்பாளிகள்தான் தீர்மானித்தார்கள்.

லோகிததாஸ்:  கவனியுங்கள் இவர்கள் சினிமாவை மொழியை நோக்கிக் கொண்டு செல்லவில்லை. அதை ஒரு காட்சிக் கலையாக வளர்த்தெடுத்தார்கள். தோப்பில் பாசி,  எஸ்.எல்.புரம் சதானந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர், பி.பத்மாராஜன் என்று இன்றுவரை அந்த வரிசை நீள்கிறது. பத்மாராஜனும் எம்.டியும் இலக்கியவாதிகளாக புகழ்பெற்ற பிறகு திரைக்கதை எழுத வந்தார்கள். மிகமிக காட்சித்தன்மை கொண்ட திரைக்கதைகள் அவர்கள் எழுதியவை. இலக்கியப் படைப்புகளாகவும் இன்று அவை அங்கீகாரம் பெற்றுள்ளன. இதே போல இந்நூற்றாண்டு இலக்கியத்தை சினிமா போன்ற காட்சிக்கலைகளும் பெரிதும் பாதித்துள்ளன.

ஜெயமோகன்: ஒரு கதைக்கான தொடக்கம் எப்படி வருகிறது?

லோகிததாஸ்:  எப்படி ஒரு சிறுகதைக்கு, ஒரு நாவலுக்கு , ஒரு ஓவியத்திற்கு  தொடக்கம் வருகிறதோ அப்படி. ஒருபோதும் ஒரு கலைப்படைப்பு யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மனத்தில் ஒரு மின்னல் போல ஒரு தூண்டல் ஏற்படுகிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.

என்னுடைய அனுபவம் இப்படி. அது மழை கறுத்து இருண்டு மூடி நிற்பதுபோல. இதோ பெய்யும் என்று தோன்றும். சில சமயம் பெய்யாமலேயே போகும்.  எப்போது ஏன் பெய்கிறது என்று கூறவே முடியாது. ஒரு கணத்தில் சட்டென்று ஆரம்பித்து விடுகிறது. முதலில் துளிகள் பிறகு பெருமழை.

ஜெயமோகன்:  திரைக்கதையின் தொடக்கம் எப்போதும் ஒரு கதாபாத்திரம்தான் என்று கூறப்படுவது உண்டு .

லோகிததாஸ்: கண்டிப்பாக , அது முக்கியம்தான், ஒரு நாடகம் அல்லது திரைகதை என்பது வாழ்கையின்  ஒரு பகுதி. யாருடைய வாழ்கை என்ற கேள்வி உடனே முளைத்து விடுகிறது. ஆகவே கதாபாத்திரம் என்பது திரைக்கதையின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அதே சமயம் ஒரு முரண்பாட்டுமுனை, ஒரு அடிப்படையான கேள்விகூட திரைக்கதையின் தொடக்காமாக இருக்கமுடியும். தனியாவர்த்தனம், கிரீடம், போன்ற திரைக்கதைகளில் மையக் கதாபாத்திரம்தான் தொடக்கம்.‘பாதேயம்‘,  ‘எதிர்ப்புறங்கள் ‘ போன்றவற்றிற்கு மைய முரண்தான் தொடக்கம்.

ஜெயமோகன்: ஒரு கருது அல்லது அவதானிப்பு அப்படி தொடக்கமாக அமைந்ததுண்டா?

லோகிததாஸ்:  அபூர்வமாக அப்படி அமையலாம். என்னுடைய திரைக்கதைகளில் ஜாதகம் அப்படிப்பட்டது. சோதிட நம்பிக்கையைப் பற்றிய ஒரு விமரிசனம் அது. இன்னொரு விஷயம் உண்டு. ஒரு திரைகதை ஏதேனும் வடிவில் தொடங்குவதற்கு வெகுகாலம் முன்பே அதன் விதை நம் மனதுக்குள் விழுந்துவிடுகிறது. அங்கே அது முளைத்து தன் இருப்பைத் தெரிவிக்கிறது. படைப்புக்கான தவிப்பு, அல்லது நிம்மதி இன்மை அங்கேயே தொடங்கிவிடுகிறது. உண்மையான தொடக்கம் அதுதான்.

உதாரணமாக, நான் இயக்கிய முதல் படமான ‘பூதக்கண்ணாடி’ . சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதைப் பற்றிய செய்தி ஒன்று என் மனதுக்குள் எப்போதோ புகுந்தது. நாட்கணக்கில் அது என்னை தொந்தரவு செய்தது. குறிப்பாக ஒரு போட்டோ . பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு சிறுமியின் புத்தகப்பையின் படம் அது. புத்தகங்கள் சிதறி, சோற்று டப்பா திறந்து சிந்தி.. அந்த அவஸ்தை என்னில் உச்சம் கண்டபோது நான் கண்டுகொண்டேன். அச்சம்பவத்தை நான் ஒரு தந்தையின் கண்ணால்தான் பார்கிறேன் என்று!   அந்தக் கோணத்தை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரமாக வித்யாதரன் உருவாகி வந்தான். அவனுக்கு சமகால வாழ்க்கையைப் பற்றி பதற்றமும் பயமும் அதிகம்.  ஆனால் ஒன்றும் சொல்வதற்கில்லை. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த கோழை அவன். ஆகவே அவன் மனம் சிதைகிறது. பிளக்கிறது. அவனுடைய பார்வைகள் வழியாக அந்த பிரச்சினையை நான் ஆராய்ந்தேன்.

ஜெயமோகன்:  நான் ஒரு நாவல் எழுதினால் முழு வேகத்துடன் அதை எழுதிவிடுவேன். பிறகுதான் அதை என் எடிடர்களுடன் விவாதிப்பேன். ஆனால் இங்கே திரைக்கதைகள் கரு நிலையிலேயே விவாதிக்கப் படுகின்றன. படிப்படியாக உருவாக்கப்படுகின்றன.

லோகிததாஸ்: என்னுடைய திரைக்கதைகள் நீங்கள் நாவல் எழுதுவது போலவே உருவாக்கப் படுகின்றன. நான் எப்போதும் விவாதிப்பதைத் தவிர்ப்பவன் . எழுதிய பிறகு இயக்குநரிடம் நடிகர்களிடம் விவாதிப்பேன். கதைக் கருவை விவாதித்து உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது. அது செயற்கையான கதையைத்தான் உருவாக்கும்.

ஜெயமோகன்:  எப்போதாவது விவாதித்திருக்கிறீர்களா?

லோகிததாஸ்: ஒருமுறை முயன்று பார்த்தேன். ‘விசாரணை’ என்ற என் திரைக்கதை ஓர் இடத்தில் முட்டி முன்னகராமல் நின்று விட்டது. ஒரு  விஷயம் தெரிந்தது. கதை விவாதத்தில் அதுதான் முக்கியமான சிக்கல் . நாம் ஒரு கருவைச் சொல்லும்போது அது கேட்பவர்களில் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு வகையான உணர்வுகளையும் எண்ணங்களையும் உருவாக்குகிறது. அதன்பிறகு விவாதம் என்பது கண்ணைக் கட்டிக் கொண்டு சண்டை போடுவது போலத்தான். அந்தக் கருவை நான் முழுமையாக உணர்வுரீதியாகவும் கதையளவிலும் விரிவுபடுத்தி முன்வைத்தால்தான் என் தரப்பு அவர்களிடம் போய்ச்சேர முடியும். திரைக்கதையின் சில தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி மட்டுமே நாம் பிறரிடம் விவாதிக்க முடியும்.

ஜெயமோகன்: ஆனால் இங்கே இன்னும் விவாதம் மூலமே உருவாகிறது…

லோகிததாஸ்:  இங்கே சினிமா பல்வேறு கேளிக்கைகளை ஒரு விஷயத்திற்குள் இணைக்க முயல்வதாகவே உள்ளது. திரைகதை அவையனைத்தையும் இணைக்கும் ஓர் அமைப்பு .அதை படிப்படியாக விவாதித்து உருவாக்கலாம். அதற்க்கு சில வழிமுறைகள் உருவாகியும் உள்ளன.

ஜெயமோகன்: தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் , தேவர் ஃபிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் கதை இலாகா வைத்திருந்தன. கதை விவாதம் என்பது அங்கிருந்து உருவாகி வந்தது என்று எண்ணுகிறேன். ஹாலிவுட் படங்கள் கூட கதை இலாகாக்கள் மூலம் உருவாக்கப் படுகின்றன.

லோகிததாஸ்: பல சமயம் வெளியே இருந்து எடுத்த கதையைத்தான் அப்படி விவாதித்து விரிவுபடுத்துகிறார்கள். கதையின் ஆன்மாவை அப்படி விவாதித்து உருவாக்கி விட முடியாது . இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

ஜெயமோகன்: விவாதித்தோமென்றால் உருவானது என்னவாக இருக்கும்?

லோகிததாஸ்: மிகவும் புத்திசாலிகள் விவாதிக்கிறார்கள் என்று வைப்போம். பல நல்ல இடங்கள்  உருவாகும். ஆனால் அவை ஒரே உணர்ச்சியால் ஒரு பார்வையால் இணைக்கப்பட்டிருக்காது. திரைக்கதையில் ஒருமை இருக்காது.

ஜெயமோகன்: சினிமாவில் எதை விவாதிப்பீர்கள்?

லோகிததாஸ்: சினிமா என்பது ஒரு கூட்டான கலை அதில் நடிப்பு, இசை, புகைப்படக்கலை, எனப் பல கலைகள் உள்ளளன. இந்தக் கலைகளை நாம் பலருடன் விவாதித்துத்தான் உருவாக்க முடியும். நான் கூறுவது திரைக்கதையை. அது ஒரு தனிமனிதனின் படைப்பு. இசையும் கலையும் எல்லாம் அப்படித்தான். இசையில் என்ன தேவை என்று இயக்குநர் இளையராஜாவிடம் கோரமுடியும். பிறகு அது இளையராஜாவின் இசைதான்.

ஜெயமோகன்: பூதக்கண்ணாடி பற்றிச் சொன்னீர்கள். அந்தப் படத்தில் அந்தப் படிமம் மிகவும் புகழ்பெற்றது. வாட்ச் ரிப்பேர் பார்க்கும் வித்யாதரன் ஒரு கண்ணில் பூதக்கண்ணாடி அணிந்திருக்கிறான். மறு கண் சாதாரணம். இரு பார்வையும் அவரிடம் உள்ளது. படிமங்களை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள்.

லோகிததாஸ்:  நான் பொதுவாக படிமங்களைத் தனித்து நிற்கும்படி பயன்படுத்துவனல்ல. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைக்கதையில், காட்சியமைப்பில் ‘செலுத்தப்படும்’ படிமங்கள்  படைப்பை பலவீனமாக்குகின்றன. பூதக்கண்ணாடி எடுக்க கதை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் நான் ஒரு முறை ஒரு வாட்ச் ரிப்பேர் கடைக்குள் மழைக்கு ஒதுங்கினேன். அங்கே வாட்ச் ரிப்பேர் செய்பவர் வேலை செய்தபடியே என்னிடம் பேசினார். சட்டென்று அவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. சகஜ வாழ்வைப் பார்க்கும் ஒரு கண். அதிநுண்ணிய உலகைப் பார்க்கும் இன்னொரு கண்.  அதுதான் வித்யாதரனின் இயல்பு என்று பட்டது.

அதே சமயம் அந்த படிமத்தை நான் திணிக்கவில்லை. வாட்ச் ரிப்பேர் செய்வது வித்யாதரனின் தொழில், அவ்வளவுதான். நீங்கள் மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களை அளிக்காவிட்டால் அது ஒரு தகவல் மட்டுமே. பூதக்கண்ணாடியில்  வித்யாதரன் சாலையில் போகும்போது வழிமறிக்கும் அத பாம்பு . அது வேண்டுமென்றால் காமத்தின் குறியீடு. ஒடுக்கப்பட்ட காமத்தை அது குறிக்கிறது. அப்படி பொருள் தராதவர்களைப் பொறுத்த மட்டில் அது சாதரணமான பாம்பு. அவனுடைய பயங்கொள்ளித்தனத்தைக் காட்டுவதற்காக உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் . ஒரு சினிமாவில் எல்லாமே குறியீடுதான். குறியீடாகத் தனியாக ஏதும் இருக்கக் கூடாது.

ஜெயமோகன்: ஏன்?

லோகிததாஸ்: ஏனெனில் காட்சிக்கலை என்பது நேரடியாக மனதைப் பாதிக்கும் ஊடகம். சிந்தனையைப் பாதித்து அதன்வழியாக மனதைப் பாதிப்பதல்ல. அது மனத்தைக் கவர்ந்து அதன் வழியாகச் சிந்தனையைப் பாதிப்பது. எந்தக் காட்சிககலையானாலும் அது நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நாமை அதில் ஆழ்ந்து போக வைக்கிறது. ஆகவேதான் காட்சிக்கலை என்பது எல்லாக் காலத்திலும் எளிய மக்களின் ஊடகமாக இருந்து வந்துள்ளது.  அது தேர்வு செய்யப்பட்ட சிறுபான்மையினருக்கு உரியதல்ல. அறிஞர்களுக்கும் பயிற்சி உடையவர்களுக்கும் உரியதல்ல. காட்சிக்கலையில் அம்மாதிரி செயற்கையான படிமங்களைப் புகுத்தினால் அனுபவத்தில் ஒருமை சிதறும். அதில் ரசிகன் ஈடுபட முடியாமலாகும்.

ஜெயமோகன்:  லோஹி.. இதை ஒரு கோட்பாடாகவே சொல்லி வருகிறீர்கள். நல்ல திரைப்படம் என்பது எளிய மக்களும் பார்த்து ரசிப்பதாக இருக்கவேண்டும் என்றும் திரைப்படம் ஒரு வெகுஜனக் கலை என்பதையும்.

லோகிததாஸ்:  ஆமாம்.. அதை நான் உறுதியாகவே நம்புகிறேன். தகுதியான சிலருக்காக நடத்தப்படும் பல கலைகள் உள்ளன. உதாரணம் சங்கீதம். சினிமா அப்படி அல்ல . சினிமா முழுக்க முழுக்க காட்சிக் கலை சரசரவென்று கண்ணில் ஓடும் காட்சிகளினால் ஆன கலை . சினிமாவை நிறுத்தி நிறுத்தி ரசிக்க முடியாது. இரண்டரை மணிநேரம் லயித்து பார்த்தாக வேண்டும். ஆகவே சினிமா இரண்டரை மணிநேரம் நம்மை லயிப்பிக்க வேண்டும்.

நான் யாருக்காகக் கதை சொல்லுகிறேன்? சாயங்காலம் வேலை முடிந்து கைகால்களை சேறுபோகக் கழுவி மண்வெட்டியைச் சாத்திவிட்டு வந்து அமரும் விவசாயிக்காக. அவனுடைய அறிவுத்திறன் குறைவு என்றோ பழுதுபட்டது என்றோ நான் நம்பவில்லை. அவனுடைய அற உணர்வு நம் அனைவருடைய அற உணர்வையும் விடவும் எவ்வளவோ மடங்கு மேலானது. அவனை நம்பி என் கதையைச் சொல்லுகிறேன். நான் இன்றுவரைத் தரக்குறைவான எதையும் எழுதியதில்லை. என் படங்கள் அடைந்து வரும் தொடர் வெற்றி அவன் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையைத்தான் உறுதிப் படுத்துகிறது.

ஜெயமோகன்: லோஹி .. அப்படியானால் நான் இப்படிக் கேட்கக் கூடாது ? கோடிக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கும் வணிகப் படங்கள்தான் நல்லப் படங்களா?

லோகிததாஸ்: இல்லை .நான் என் மதிப்பீடுகளில் ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறேன். ‘வினோதம்’ ‘வித்தியாப்பியாசம்’ ( கேளிக்கை, கற்பித்தல்) நம்மை ஈர்த்து தன்னில் ஈடுபட வைக்கவேண்டிய வலிமை கலைக்கு இருந்தாக வேண்டும். இது முதல் தேவை. அடுத்தபடியாக அதற்கு கற்பிக்கும் பண்பு இருக்க வேண்டும். மூளைக்குள் கற்பித்தலைச் சொல்லவில்லை. ஆத்மாவுக்கு கற்பித்தலைப் பற்றி சொல்கிறேன். நல்ல கலை மனதைப் பண்படுத்தும். நல்ல கலையின் நோக்கமே  மனதைப் பண்படுத்துவதுதான். நம்மை ஈர்த்து ஆழமான அனுபவத்தை அளித்து நம்மை மேம்படுத்துவது எதுவோ அதுவே சிறந்த கலை .கலையனுபவம் உருவாவதில்லை. அறிவு சார்ந்த அனுபவம் மட்டுமே உருவாகிறது. அம்மாதிரி பரிசோதனை முயற்சிகளை நான் குறைகூற மாட்டேன். அதெல்லாம் தேவைதான். பரிசோதனைகள் பல புதிய சாத்தியங்களைத் திறக்கின்றன. ஆனால் கலை ரசிக்கப்படும் விதம் எப்போதும் ஒன்றுதான்.

ஜெயமோகன்: அது என்ன?

லோகிததாஸ்: கலையனுபவம் என்பது எப்போதும் ஒருவகை தியான அனுபவம் . ஒருவன் தன்னுள் ஆழ்ந்து தன்னை அறிந்து அனுபவித்து அமர்ந்திருக்கிறான். இசை, ஓவியம், நாடகம், சினிமா எல்லாமே அப்படித்தான். சங்கீதத்திலேயே நம்மை தியானத்தில் ஆழ்த்தும் இசையும் உண்டு ,கணக்கு வழக்காக உள்ள இசையும் உண்டு. யோசித்துப் பாருங்கள் இந்த நிமிடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்குகளில் எத்தனை லட்சம் மக்கள் தங்களை மறந்து ஒருவருக்கொருவர் ஒன்றாகி ஒரே மனதாக அமர்ந்திருக்கிறார்கள் என்று ! எத்தனை மகத்தான விஷயம் அது. ஒரு நல்ல சினிமா அவனை எந்தெந்த மன உச்சங்களுக்கு கொண்டு செல்கிறது. அங்கே அவன் நீதியை, அழகை மட்டுமே நாடுகிறான்.

திரையரங்கில் ரசிகனின் மனம் கருணையால் நிரம்பியிருக்கிறது. பெருந்தன்மையால் விரிந்திருக்கிறது. உயர்ந்த விஷயங்களுடன் அவன் சட்டென்று இணைந்து கொள்கிறான். நல்லவர்களுடன் தன்னை அடையாளம் காண்கிறான். சிறிய அநீதியைக் கூட அவன் அங்கே ஏற்பதில்லை. ஒரு குற்றவாளி தண்டிக்கபடாமல் விடப்பட்டால் அந்தப் படம் ஓடாது. அங்கே வந்து அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் யோக்கியமானவர்கள் அல்ல .அவர்களுள் மோசடிக்காரர்கள் , குற்றவாளிகள், கோழைகள் இருக்கலாம் . அங்கே அந்த இருளில் அவர்களின் மனங்கள் உருகி ஒன்றாகி உச்சம் நோக்கி நகர்கின்றன. அது பெரிய தியானம். சினிமாவை இகழும் அறிவுஜீவிகள் நம் சமூக மனத்திற்கு சினிமா அளிக்கும் இந்தப் பெரும் பங்களிப்பைப் பற்றி அறிவதில்லை.

ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியை, கருணையை, அன்பைப் பற்றித்தானே பேச முடியும்?

லோகிததாஸ்: அதைப்பற்றி மட்டும்தான் பேச வேண்டும். நூற்றாண்டுகளாக அதைப் பற்றிதான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப்பற்றித்தான் பேசும் .

ஜெயமோகன்: மீண்டும் மீண்டும் ?

லோகிததாஸ்: ஆமாம் மீண்டும் மீண்டும் ஓயாமல். ஏனென்றால் நீதியும், கருணையும், அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும், குரோதமும் , போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும். ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்து விட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம் கருணை அன்பு என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இலக்கியமும் நாடகக்கலையும் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம் அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணிநேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றன.  நம்பிக்கையூட்டுகின்றன.

இப்படிப் பார்க்கும்போது நல்ல சினிமாவுக்கும் மோசமான சினிமாவுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகிறது .நல்ல சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்குத்  தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனத்தில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான்.

(தொடரும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 10:35

அ.மா.சாமி

ராணி இதழின் ஆசிரியரான அ.மா.சாமியை பெரும்பாலும் எவருக்கும் தெரிந்திருக்காது. ராணி இதழில் குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன், கும்பகோணம் குண்டுமணி போன்ற பெயர்களில் அவர் எழுதிய நாவல்களில் எதையாவது ஒன்றை வாசிக்காதவர்களும் குறைவு. அ.மா.சாமிக்கு ஆய்வுலகில் ஒரு முக்கியமான இடமுண்டு. தமிழ் இதழ்களின் வரலாற்றை விரிவான தரவுகளுடன் எழுதியவர் அவர்

அ.மா.சாமி அ.மா.சாமி அ.மா.சாமி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 10:34

பெருங்கை, கடிதங்கள்

பெருங்கை

அன்புள்ள ஜெ,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கேசவனின் பெருங்கையால் ஆசீர்வாதம். இதை விட சிறப்பான தொடக்கம் ஒரு புதிய ஆண்டுக்கு அமைந்து விட முடியமா என்ன? நீல வளையல்களை வைத்துக் கொண்டு கேசவன் ஆடும் விளையாட்டு, அழகும் குறும்பும் மிளிர்கின்ற கவிதை.

மலை மேல் பாறைகளின் அடியில் ஒட்டிக்கொண்டு  வாழும் மனிதர்கள் போல, கேசவன் அருகில் குடிலில் வாழும் அவன், அவனுக்கு ஒரு பெயர் கூட இல்லை கதையில். காட்சிகளும் உரையாடல்களும் கவிதையாய் வழிந்தோடுகிறது கதை முழுவதும். சில சமயம் ஒரு பஷீர்தன்மை வந்து விடுகிறது உங்கள் எழுத்தில். பஷீர் இந்த கதையை வாசித்தால் உங்களை கட்டி பிடித்து முத்தமிட்டு விடுவார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் லஷ்மி என்றொரு யானை இருந்தது. சமீபத்தில்தான் இறந்தது. டிசம்பர் மாதம் காலண்டர் புகைப்படம் மாற்றும்போது, லஷ்மி யானையின் புகைப்படம் கண்டு திகைத்து விட்டேன். டிசம்பர் முழுவதும் லஷ்மியின் முகத்தை பார்த்தபடி ஒரு பித்து நிலைதான். ‘வலம் இடம்’ சிறுகதையில் தாய் எருமை இறந்தவுடன், வாழ்வா சாவா, வலமா இடமா என்று நடு வீதியில் நின்று தவிக்கும் போது, ஒரு புதிய எருமை கன்றுக்குட்டி வாயில் செம்பருத்தி கிளையை கவ்வியபடி துள்ளி குதித்து ஓடி வரும். வாழ்வில் நம்பிக்கையுடன் பற்றி கொள்ள சிறு செம்பருத்தி கிளை ஒன்று போதுமே. லஷ்மி யானையால் உருவான வெற்றிடத்தை கேசவனின் ஆசீர்வாதத்தால் நிரப்பிக்கொண்டேன்.

மிக்க நன்றி.

அன்புடன்,

வெற்றிராஜா

 

பெருங்கை. எவ்வளவு அழகான கதை! ஒரு யானையின் Feather touch. ‘பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும்’ என்ற குறுந்தொகை வரியை வெகு நேரம் அசைப்போட்டுக் கொண்டிருந்தேன். அந்த அசைவில் உள்ள பெருந்தன்மை. கவனம். ‘நசை பெரிது’.

ஆனால் இன்னொன்றும் சொல்ல வேண்டும். மீண்டும் கதையின் முதல் வரியை படிக்கும் போது ஒரு சின்ன நடுக்கம் ஏற்பட்டது. “கேசவன் எப்போது வேண்டுமானாலும் ராத்திரியைக் கொண்டுவரக்கூடியவன்.” கதை முழுவதும் யானையின் இருட்டு எப்படியெல்லாம் உருமாறிக்கொண்டே வருகிறது என்பது தான் எனக்கு இந்தக் கதையின் மாயம். அந்த டிவினிட்டி சிலிர்க்க வைக்கிறது. யானை ஒரு தெய்வம்.

சுசித்ரா

அன்புள்ள ஜெ

பெருங்கை ஓர் அழகான கதை. ஒரு புத்தாண்டில் ஒரு நல்ல கதையுடன் தொடங்குவதே அழகானது. நான் இந்த ஃபேஸ்புக் நடையில் எழுதப்படும் சுருக்கமான சம்பவக்கதைகளைக் கண்டு சலித்துப்போயிருந்தேன். இந்தக்கதையிலுள்ள ’டீடெயில்’ எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒரு நாவலுக்குரிய முழுவாழ்க்கைக் களமும் கதையில் இருந்தது. முழுமையான கதாபாத்திரங்கள். ஒரு முழுசினிமாவாகவே இந்தக்கதையை எடுக்கலாம். இதில் கதைநாயகனின் சப்கான்ஷியஸ் அல்லது soul தான் யானை. அவனுக்குள் இருக்கும் பெரிய ஒருவனின் கைதான் யானையின் தும்பிக்கை.

செல்வக்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 10:33

முதுநாவல், கடிதங்கள்

அன்புள்ள ஜெ

அண்மையில் ஒரு நீண்ட பைக் பயணத்திற்குப் பிறகு திரும்பும் வழியில் கங்கைகொண்டான் அருகே வரும்போது நல்ல மழை. மேலே போக முடியாமல் அங்கேயே ஒரு சின்ன தர்கா மாதிரி ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினேன். பழைய தர்கா. யாருமில்லை. விளக்கு மட்டும் எரிந்தது. ராத்திரி ஒரு ஒன்பது மணி இருக்கும். சாலையில் நடமாட்டம் இருந்தது. ஆனால் அங்கே நடு இரவில் தனியாக இருப்பதுபோல இருந்தது. ஒரு அமானுஷ்யமான உணர்வு உருவானது. ஒரு அரைமணிநேரம் நின்றிருப்பேன். அதற்குள் சிலிர்த்துவிட்டேன்.

என்ன நடந்தது என்று தெரியவில்லை. அது ஒரு மிஸ்டிக் அனுபவம் எல்லாம் இல்லை. ஆனால் பயமும் இல்லை. ஒரு எலிவேஷன் என்று சொல்லலாம். காரணம் நான் முதுநாவல் கதை படித்திருந்ததுதான் என்று தோன்றியது. ஆகவே திரும்ப வந்ததும் முதுநாவல் கதைத்தொகுப்பை மீண்டும் வாசித்தேன். அதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையான மிஸ்டிக் அனுபவம் என்று நினைத்தேன்.

மிஸ்டிக் அனுபவம் என்றால் தெய்வத்தை அறிவது என்று இருக்கவேண்டியதில்லை. நாம் வாழும் இந்த அன்றாட வாழ்க்கையைவிட்டு கொஞ்சம் மேலே போனாலே நமக்கு சிலிர்த்துவிடுகிறது. முதுநாவல் கதையில் சில பறவைகள் அப்படித்தான் என்று படித்தபோது மீண்டும் அதே சிலிர்ப்பு ஏற்பட்டது. பல கதைகள் திரும்பத் திரும்ப அந்தச் சிலிர்ப்பை அளிப்பவையாக இருந்தன.

அண்மையில் வாசிக்க நேர்ந்த தொகுப்புகளில் முக்கியமானது என்று முதுநாவல் கதைத்தொகுப்பைச் சொல்வேன். இணையத்தில் பார்த்தால் அதைப்பற்றி ரொம்ப கொஞ்சமாகவே ஏதாவது அபிப்பிராயம் வாசிக்கக்கிடைக்கிறது. அது இயற்கைதான். அந்த மிஸ்டிக் அனுபவத்தை பொதுவாகச் சாதாரணமான வாசகர்கள் அறியமுடியாது. அதிலும் அதிகமாகக் கதைவாசிக்கும் வயதிலுள்ள இளைஞர்களுக்கு அது பிடிகிடைக்காது. கொஞ்சம் ஏதோ தியான அனுபவம் இருந்தாலொழிய பிடிகிடைக்காது.

எனக்கே அப்படி ஒரு அனுபவம் என் 40 வயதில்தான் முதலில் கிடைத்தது. அப்பாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக ராமேஸ்வரம் போனோம். அப்பாவின் அஸ்தியுடன் ஒரு லாட்ஜ் அறையில் நான் ஒரு மணிநேரம் தனியாக இருந்தேன். அப்போது ஒரு shudder ஏற்பட்டது. அந்த அனுபவத்திலிருந்து மீள ஒரு நாள் ஆகியது. அதன்பிறகுதான் நாம் மனசு என நினைப்பது நாம் அறிந்த விஷயமே அல்ல என்று தெரிந்துகொண்டேன். அது ஒரு தொடக்கம்.

நன்றி. முதுநாவல் ஒரு நல்ல தொகுப்பு. மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டிய நூல்.

மரு.கோதண்டராமன்

முதுநாவல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 10:31

காந்தி காட்சிகள், காகா காலேகர் -பிரவீன்குமார்

காகா காலேகர் காந்தியைப் பற்றி தன்னுடைய நினைவுக் குறிப்புகளை “காந்தி காட்சிகள்” என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காந்தியை பற்றி அவருடைய அணுக்கர்கள் எழுதிய பெரும்பாலானவை வழிபாட்டுணர்வுடனும், மிகை துதியும் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு சிறு விசயத்தையும் கூட சற்றே மிகையாக்கி, அவர் சொன்ன எளிய வார்த்தைகளுக்கும் கூட தெய்வத்தன்மையைத் தந்து அவரை கடவுளுக்கு மிக அருகில் கொண்டு சென்று அமர்த்தக் கூடிய எழுத்துக்களை அவர்களால் வேறெப்படி எழுதிவிட முடியாது என்று தோன்றும். (அந்நூல்களுள் கடும் ஒவ்வாமையை கொடுத்த நூல் ‘நவகாளி யாத்திரை. சாவி எழுதியது. ஒரு கேளிக்கை நூலை படிப்பது போல இருக்கும். நவகாளியாத்திரையை ஒரு கேளிக்கை யாத்திரை என்பது போன்ற கண்ணோட்டத்தில் எழுதிவைத்திருப்பார். காந்தி கோயிலுக்குச் சென்று அங்கிருந்த நாயன்மார் சிலைகளுக்கு தரிசனம் கொடுத்தார் என்றெல்லாம் எழுதிவைத்திருப்பார்.)

இந்த நூலிலும் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. காகா காந்திக்கு மிக நெருக்கமான மாணவராக, உரிமை எடுத்துக் கொள்ளும் செல்லப்பிள்ளையாக இருந்திருக்கிறார் என்று அவரது எழுத்துக்களில் புலப்படும். அதனால் அவரால் நிதானமாக எழுத முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் பரவசமும் அப்படியே பதிவாகியிருக்கிறது. சில சம்பவங்கள் எழுதப்பட்ட விதம் ஒரு குன்றிமணி அளவிற்கு ஏற்றிச் சொல்லியிருந்தால் கூட அது தொன்மக்கதையாக புராணக்கதையாகவோ மாறியிருக்கக் கூடியவையாக இருந்தன.

காந்தி ஒரு கிராமத்தில் வந்து தங்கிவிட்டு கிளம்ப இருக்கிறார். காந்தி அவர்களை விட்டு கிளம்புவதற்கு மக்கள் விரும்பவில்லை. முடிந்த வரைக்கும் கிளம்பும் நேரத்தை தாமதப்படுத்தவே முயன்றனர். அவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய வண்டி பழுதாகிவிட்டதென்று சாக்கு சொல்கிறார்கள். பொறுத்துப் பார்த்து கோபமுற்று காந்தி கால்நடையாக நடந்து செல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார். அப்போதும் பாதையை மாற்றிச் சொல்லிவிட்டால் வழிமாறி போய்விட்டு திரும்பி கிராமத்திற்கே வந்துவிடுவார் என்று கணக்கு போடுகிறார்கள். இறுதியில் பாதை மாறிச்சென்று கால்களில் முள் குத்தி காயங்களோடு வந்த காந்தியை பார்த்து வருந்தியிருக்கிறார்கள்.

எரவாடாவில் சிறைப்பட்டிருந்த காந்தியை சரியாக பேணக்கூடாது என்று தீர்மானித்த சிறையதிகாரி அவருக்கு துணையாக ஒரு ஆஃப்ரிக்க கைதியை நியமிக்கிறார். சிறைக்குள் இந்துக்களும் முகமதியரும் காந்தியை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவே அவர்களை விடுத்து இந்த ஆஃப்ரிக்கனை நியமிக்கிறார். மொழிகூட தெரியாத அவனுக்கு காந்தியையும் தெரியாது என்பது அவனது எண்ணம். தனக்கு தெரிந்த ஒன்றிரண்டு சொற்களையும், சைகை மொழியைக் கொண்டும் காந்தியோடு உரையாடி பணிவிடை செய்து வருகிறான். அவனுக்கு கையில் ஒரு நாள் விஷத் தேள் கொட்டிவிடுகிறது. காந்தி அவனது கையை பிடித்து கடிபட்ட இடத்தை சுத்தம் செய்து, விசத்தை வாயில் உறிஞ்சி எடுத்துத் துப்பி முதலுதவி செய்கிறார். மீண்டு வந்தவன் காந்தியின் நிழலைப் போலவே ஆகிவிடுகிறான். காந்தி ராட்டையில் நூல் நூற்பதைக் கவனித்து வந்தவன், அதற்காக உதவி வந்தவன், தானும் அவரிடம் நூல் நூற்க கற்றுக்கொள்கிறான். மேலும் நெருங்கியவனாகிப் போகிறான்.

மற்றொரு சிறையில் இருக்கும் போது, காலில் நோவு கொண்ட ஒரு மராட்டிய கைதி ஒருவனை காந்தி கவனிக்கிறார். நொண்டி நொண்டி நடக்கும் அவனுக்கு சிறையதிகாரி மருத்துவ சிகிச்சை கொடுப்பதைக் பார்த்துவிட்டு அவரது அனுமதியோடு சிகிச்சையளிக்கத் துவங்குகிறார். குடல் சுத்தத்தில் துவங்கி உணவுக்கட்டுப்பாடு, மருந்துகள் என்று அவனை பேணுகிறார். கொஞ்ச நாட்கள் சென்றதுமே அவன் மீண்டுவிடுகிறான்.நெடு நாட்கள் கழித்து, அந்த கைதி பம்பாய்க்கு பயணம் வந்திருந்த பாபூவை சந்திக்க வருகிறான். ஒரு பலகார கடை வைத்து நல்லபடியாக வாழ்வதை காந்தியிடமும் காகாவிடமும் சொல்கிறான். நேரம் குறைவாக இருந்ததால் அவனை மறுநாள் வருமாறு கூறுகிறார் காந்தி. மறுநாள் வராத அவனை எதிர்பார்த்துவிட்டு காகாவிடம் “சரி வியாபாரம் செய்யும் கடையை விட்டுவிட்டு அவனால் நேற்று வந்ததே பெரிது” என்று வருந்துகிறார்.

காந்தி ஒவ்வொரு முறை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் போதும் அவரது சீடர்களை கனிவு வார்த்தைகள் சொல்லி சமாதானம் செய்த பிறகே நோன்பிருக்க முடிகிறது. நோன்பிருக்கக் கூடாது என்று வாதிடுகிறார்கள். சண்டைபிடிக்கிறார்கள். தங்களுக்குள் “இந்த கிழவன் இருக்கானே..”என்று எரிச்சலோடு அங்கலாய்க்கிறார்கள். அவையெல்லாவற்றையும் மீறி வாதிடமுடியாமல் போகும் போது அவர்களும் பாபூவுடன் சேர்ந்து விரதமிருப்போம் என்று கோருகிறார்கள். அன்பாக மிரட்டுகிறார்கள். எல்லோரையும் காந்தி சமாளிக்க வேண்டியிருக்கிறது. அவர்களை களப்பணியை, அதன் முக்கியத்துவத்தை ஞாபகப்படுத்தி அவர்களை தடுக்கிறார்.

பலதரப்பட்ட மக்கள்-பெரும் பணக்காரர்கள், முதலாளிகள், கடை முதலாளிகள் முதல் கடைக்கோடி மக்கள் வரை சிறிதும் பெரிதுமாக பாபூவிற்கு பணத்தை காணிக்கையாக அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். கல்யாண தம்பதிகளிடம் கட்டாயமாக ஹரிஜனங்களுக்காக பணம் பெற்ற பிறகே ஆசிர்வதிக்கிறார். பாபூ நலனில் அக்கறை கொண்ட மருத்துவர் அவரை பரிசோதிக்க விருப்பத்தை தெரிவிக்கும் போது அவரிடம் கட்டணம் பெற்றுக்கொண்டே தன்னை சோதிக்க அனுமதிக்கிறார். பள்ளிக்கட்டடம் கட்ட பணம் கொடுத்த தனவந்தர்கள் அங்கே எல்லா சாதிகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கப் பட உள்ளது என்பதையறிந்து அவரிடம் முறையிடுகிறார்கள். இந்த சாதிக்காரர்களை உள்ளே விடாமல் இருந்தால் நாங்கள் பணம் தருகிறோம் என்றவர்களிடம் அப்படியொரு நிபந்தனையுடன் இந்தியாவிற்கு சுயராச்சியமே கிடைத்தாலும் இந்தியா அதை ஏற்காது. உங்கள் பணத்தை எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று மறுதலித்துவிடுகிறார்.

ஒரிசாவில் சுற்றுப்பயணம் சென்ற போது ஏழை மக்களிடம் பணம் பெற்றதைப் பற்றி சொல்கிறார்: ஏழைமக்களுக்கு தாமிரத்தில் செய்யப்பட்ட ஓட்டைக் காலணாக்களைப் பார்ப்பதே பெரிய அதிசயம். அப்படிக்கிடைக்கும் சொற்ப காசுகளையும் அவர்கள் செலவளிக்க மனமின்றி துணியில் முடிந்து மண்ணில் புதைத்து வைத்துவிடுகிறார். அதனால் பாசம் பிடித்து பச்சைபசையேறி இருக்கின்றன காசுகள். அவற்றை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள் திரள். ஒரு கட்டத்தில் பச்சை பாசியாகிவிட்ட தன் கையை பாபூவிடம் காட்டி, பேச ஒரு வார்த்தையின்றி நீர்தளும்ப வெறுமே பார்க்கிறார்.

“ஏன் பாபூ இவர்களிடம் இருந்து பணம் பெறவேண்டுமா?” “அது நாம் பெறக்கூடிய புண்ணிய தானமல்லவா? நமக்குக் கிடைக்கும் தீட்சை இவை. ஏமாற்றத்திலேயே இருந்த அவர்களுக்கு இது நம்பிக்கையை உண்டாக்கும் என்று நம்புகிறேன். இந்தக்காசுகள் நம்பிக்கையின் சின்னம். நமக்கு இனி நல்லது நடக்கும் என்று அவர்கள் நம்பத் தொடங்கியதாலே அவர்கள் நமக்கதை மனமுவந்து அளிக்கிறார்கள். எனவே இருதரப்புக்கும் இத்தானத்தில் மேன்மையே” என்கிறார்.

காந்தி தன் சீடர்களுடன் கொண்டிருந்த உறவு வெளிப்படும் பல இடங்கள் வருகின்றன. பாரிஸ்டராகி இந்தியா வந்த வல்லபாய் பட்டேல் ஒரு வெற்றிகரமான வக்கீலாகி சம்பாதித்துவிட்டு மாலைகளில் குடித்து சீட்டாடிக்கொண்டிருக்கிறார். தலைவரென்று வரக்கூடியவர்களோடு பேசி அவர்களை ஆழம் பார்த்து எடைபோட்டபின் அவர்களை ரகளை செய்து கொண்டிருந்தார். காந்தியை பற்றி கேள்விப்பட்டு அவரையும் வெளிநாட்டில் படித்துவிட்டு இங்கே வந்து நாட்டை மாற்றிவிடுவோம் என்று நினைக்கக் கூடிய ஒருவராக இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் அவரை சந்தித்து உரையாடுகிறார்.முடிவில் இவர் மற்ற எல்லா மனிதர்களைப் போன்றவர் இல்லை என்று கண்டுகொள்கிறார். அவரது தொண்டராகிறார். மக்கள் அவரை குருட்டு பக்தர் என்று அழைக்கிறார்கள். வல்லபாய் பட்டேல் சரிதான் என்று ஆமோதிக்கிறார்.

ஒரு முறை தமிழக பயணத்தின் போது கன்னியாகுமரியில் கடலில் சிறிது நேரம் நீராடுகிறார் காந்தி. விவேகானந்தர் பாறையை எல்லம் கண்டுவிட்டு திரும்பியவர், காகாவை அழைத்து உனக்கு இந்த கடலைப் பார்ப்பது பிடிக்குமென்று தெரியும் நீ மறுபடி ஒருமுறை சென்று நிதானமாக பார்த்துவிட்டு வா என்று அனுமதிக்கிறார் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கார் வந்து விட்டதா என்று விசாரித்து துரிதப்படுத்துகிறார். இதே போன்ற அக்கறை வேறொருவரிடமும் வெளிப்படுகிறது.மஹாதேவ் பாபுவோடு சென்ற ஒரு ரயில் பயணத்தில் தொடர்ச்சியாக பத்து மணி நேரத்திற்கும் மேல் தூங்காமல் எழுத்து வேலையில் இருக்கிறார். வேலை முடிந்ததும் களைத்து போய், எழும்ப வேண்டிய நேரம் தாண்டியும் தூங்கிக் விட்டிருக்கிறார். காந்தி அவருக்காக தேநீரும், ரொட்டியும் வெண்ணெயும், தயாரித்து விட்டு எழுப்புகிறார். எழுந்தவருக்கு நாணம் உண்டாகிறது. நேரம் தாண்டி தூங்கியதற்காகவும், பாபூவிடம் மறைத்து வைத்திருந்த தேநீர் பழக்கம் அவரால் கண்டுபிடிக்கப்பட்டதே என்றும். காந்தி அவரை பலவாறாக சமாதானம் செய்து இனிக்க இனிக்க பேசி அவரை சாப்பிட வைக்கிறார். (எனக்குப் பிடித்த காட்சி இது தான்)

காகா காந்திக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று தெளிவாகப் புலப்படும் காட்சியிது: இதே மகாதேவ் தன் நண்பருக்கு ”கிழவன் என்னை நல்லா வேலை வாங்கிக் கொண்டிருக்கிறான்.” என்று அங்கலாய்த்து கடிதமெழுதுகிறார்.அலுவல் ரீதியான கடிதமாக இருக்கக் கூடும் என்று பிரித்துப் படித்துவிட்டு வருந்துகிறார் பாபூ. கிழவனிடம் மன்னிப்பு கின்னிப்பு எல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதே அவ்வளவு தான் உன்கதை நான் சொல்வதைப் போல செய் என்று ஆற்றுப்படுத்துகிறார் காகா. “ அதெப்பிடி நீங்கள் கடிதத்தை படிக்கலாம். நல்லவேளை இன்னும் மோசமாக எழத இருந்தேன். எழுதாமல் விட்டேன் பாபூஜி.. நாங்கள் எளியவர்கள் உங்களையன்றி யாரை இப்படி பேசுவோம், இப்படிக் கூட இளைப்பாறுதல் இல்லாமல் நாங்கள் வேறெப்படி இயல்பாக இருப்பது. இப்படியெல்லாம் உம்மைபேசித்தானே எங்கள் பக்தியை அதிகமாக்க முடியும்?” என்று எழுதச் சொல்கிறார். அதற்கு நல்விதமாக பலன் கிட்டுகிறது.

காந்தி அரசாங்கங்களின் பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு தீர்க்கிறார். எளிய பையன் ஒருவனின் கல்யாணத்திற்காகவும் தீர்வளிக்கிறார். முரண்டு பிடிக்கும் மணமகனை சமாதானம் செய்து வழிக்குக் கொண்டு வருகிறார். பிறகு மணப்பெண்ணிடம் இப்படியொரு முரண்டு பிடிக்கும் பையன் உனக்குத் தேவைதானா என்று கேட்டு கல்யாணத்தை நிறுத்துகிறார். ”காகா.. நமக்கு கோ ரட்சை மட்டுமா முக்கியம் இப்படிப்பட்ட வாயில்லா பெண்களை காப்பாற்றுவதும் முக்கியம்” என்கிறார். சம்ப்ரான் போராட்டம் எத்தகைய மகத்தான போராட்டம்? அதில் பங்கெடுத்துக் கொண்டபடியே ஆசிரமத்தில் புதிய கழிவறையை கட்ட வேண்டிய கட்டாயத்தை தபால் அனுப்பி நினைவூட்டுகிறார். அங்கிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்து புதிய பள்ளியின் செயல்பாடுகளை மேற்பார்வை பார்த்துச் செல்கிறார். தனக்கு வரும் கடிதங்களைல் காலி பக்கங்களில் பதிலெழுதி அனுப்புகிறார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி விட்டு உடைத்துச் சேமித்து அடுத்த நாளுக்கு வைத்துக் கொள்கிறார். ஒரு சிறையதிகாரி காந்தியின் அறையில் மேசை நாற்காலி, விளக்கு என்று வசதி செய்து கொடுத்து விட்டு, மாதச் செலவிற்கு 300 ரூபாய் அரசிடம் கேட்டு கடிதமெழுதுகிறார். குவளையையும் தட்டையும் எடுத்துக் கொண்டு மற்றெல்லாவற்றையும் ஒதுக்கிவிடுகிறார். மாதம் 70 ரூபாய் கூட தன்னால் செலவாகாது என்கிறார். இன்னும் இன்னும் பல காட்சிகளில் காந்தி என்ற மனிதரின் குணங்கள், குணவிசித்திரங்கள், மேன்மை, பல பரிமாணங்களில், பல கோணங்களில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. காகா காந்தியை ரசித்து, வழிபட்டு, ஒவ்வொரு சிறு தெறிப்புகளையும் விடாது, நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.

பிரவீன்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 10:30

January 12, 2023

அறமெனும் பரிசு

அன்புள்ள ஜெ

இணையத்தில் இந்த புகைப்படத்தைப் பார்த்தேன். முதல்வருக்கு அரசியல்வாதி ஒருவர் அறம் நூலைப் பரிசளிக்கிறார். இது எப்படி நடந்தது என்ற ஆச்சரியம் இருந்துகொண்டே இருக்கிறது.

கே. பிரபாகர் மருது

அறம் (தமிழ்)வாங்க  Stories of the True வாங்க

அன்புள்ள பிரபாகர்,

அறம் மு.கருணாநிதி அவர்களுக்கு எஸ்.கே.பி.கருணா அவர்களால்   பரிசாக அளிக்கப்பட்டு அவரால் படிக்கப்பட்டிருக்கிறது. அவர் மேஜையில் அது இருக்கும் படமும் வெளியாகியிருக்கிறது. வெவ்வேறு ஆளுமைகளுக்கு அது பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்குமுன்புகூட ஒரு மாவட்ட ஆட்சியரால் அது முதல்வருக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அது ஒரு சிறந்த பரிசுப்பொருளாக கருதப்படுகிறது. திருமணங்களில், விழாக்களில், வெவ்வேறு அமைப்புகளின் நிகழ்வுகளில் அது தொடர்ச்சியாக பரிசாக வழங்கப்படுகிறது.

அது ஏன் பரிசாக வழங்கப்படுகிறது என்று என் கோவை நண்பர் ஒருவர் சொன்னார். ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்கினால் அதை வாங்கியவர் எப்போதேனும் அதைப் படித்துவிட்டு, படித்ததைப் பற்றிச் சொல்லவேண்டும். அது வெறும் காகிதத்தொகுப்பாக, அடையாளமாக நின்றுவிடக்கூடாது. என் நூல்களில் அறம், சங்கசித்திரங்கள், பொன்னிறப்பாதை ஆகிய மூன்றுக்கும் அந்த தகுதி உண்டு. அவற்றைப் பெற்றவர்கள் ஒரு கதையாவது, கட்டுரையையாவது படிப்பார்கள். உடனே அழைப்பார்கள். பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் முதல் வாசிப்பனுபவமாக அத்தருணம் அமைந்துள்ளது.

அறம் இலக்கியவாசகர்களுக்கு மட்டும் உரிய நூல் அல்ல. இலக்கியவாசகன் அதன் ஆழத்து கட்டங்களை பலவகையிலும் கண்டடையலாம். யானைடாக்டர் படிக்கும் ஒரு பொதுவாசகர் டாக்டர் கே என்னும் ஆளுமையின் மாண்பையும் காடுகளின் அழிவையும் உணர்வார். இலக்கியவாசகர் அதில் புழுவுக்கும் யானைக்குமான ஓர் படிம உரையாடல் இருப்பதை கண்டடைந்து விரிவாக்கிக் கொள்வார். மிக அரிதாகவே நூல்கள் அத்தகைய இலக்கியத்தகுதியையும் பொதுவாசிப்புக்கான தகுதியையும் அடைகின்றன. அறம் அதிலொன்று. இன்று குமரித்துறைவி அத்தகைய ஒரு தகுதி கொண்ட நாவலாக உள்ளது.

அனைவராலும் உணரப்படும் எளிய விஷயங்கள் கூட அரசியல்நிறக்குருடு கொண்டவர்களுக்கு புரியாது. (இங்கே அரசியலென்பது பெரும்பாலும் சாதியும் மதமும்தான்)  அவர்கள் எதையும் தங்கள் அரசியலுக்குள் கொண்டுவந்தே புரிந்துகொள்வார்கள். அவர்களால் அறம் கதைகளில் திகழும் அடிப்படையான விழுமியங்களையும் உணர்வெழுச்சிகளையும் தொட்டறிய முடியாது. அவர்களால் அது எப்படி அரசியல் எல்லைகளை கடந்துசெல்கிறதென்பதையும் அறியமுடியாது. அத்தகையவர்களிடமிருந்து உங்களுக்கு வந்த வியப்பு இது என்று புரிந்துகொள்கிறேன்.

அறம் தொகுதியின் கதைகள் ஏன் எழுதப்பட்ட கணம் முதல் இன்றுவரை அதே தீவிரத்துடன் வாழ்கின்றன? ஒரே காரணம்தான், அவை பேசும் விழுமியங்கள் என்றுமுள்ளவை, இன்றைய காலகட்டத்தில் ஆழ்ந்த ஐயங்கள் அவற்றின்மேல் எழும் சூழலில் ஆழ்ந்த கவனத்திற்குரியவை.

என்னிடம் ஒருவர் கேட்டார்,  ‘நான் ஏன் சுயநலமாக இருக்கக் கூடாது? ஏன் அறத்துடன் இருக்கவேண்டும்? ஒரு காரணம் சொல்லமுடியுமா?’ இது ஒரு வழக்கமான கேள்வி. “இப்பல்லாம் எங்கசார் அறம்? எல்லாம் சுயநலமாப்போச்சு”

மாபெரும் போர்களும் பஞ்சங்களும் நிகழ்ந்த காலங்களைக் கடந்து வந்து இருநூறாண்டுகளாகவில்லை. மனிதர்களை மனிதர்கள் அடிமைகளாகப் பிடித்து விற்ற நாட்கள், மனிதர்களை மனிதர்கள் விலங்குகளாக நடத்திய நாட்கள் வழியாக வந்தே இந்தக் காலத்தை அடைந்துள்ளோம். அறம் அறம் என ஒவ்வொரு நாளும் சொல்லிச் சொல்லி அணுவணுவாக நகர்த்தி இங்கு வந்துள்ளோம். இனியும் முன்னகர்வோம்

அந்த நண்பருக்கு நான் சொன்னேன். “நீங்கள் அறத்துடன் இருக்கவேண்டியதில்லை என்றே கொள்வோம். ஆனால் உங்களைச் சூழ்ந்திருப்பவர்கள் அறத்துடன் இல்லை என்றால் நீங்கள் ஒருநாள்கூட வாழமுடியாது”

நீங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கடப்பதே அறம் என ஒன்று இங்கே திகழ்வதனால்தான். அறத்தில் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர் ‘இது நியாயமா?” என்று எந்நிலையிலும் எவரிடமும் கேட்கக்கூடாது. “இது நியாயமல்ல” என்று எந்நிலையிலும் எவரையும் கண்டிக்கக்கூடாது. எவரிடமும் எந்த நல்லெண்ணத்தையும் எதிர்பார்க்கக்கூடாது. அவ்வண்ணம் ஒரு மனிதர் இங்கே வாழமுடியுமா?

ஏழாம் உலகத்தில் மனிதர்களை விற்கும் போத்திவேலு பண்டாரம்கூடத்தான் “இது நியாயமா?” என்கிறார். அவருக்கும் அவர் செல்லும் தொலைவுக்கு ஓர் அறத்தின் எல்லை உள்ளது.

அறம் என்றும் பேசுபொருள்தான். ஏனென்றால் அது பேசிப்பேசி வளர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒன்று. நாள்தோறும் வளர்ந்து விரிவாகிக்கொண்டிருப்பது. நாம் இங்கு வாழ்வது அதன்மேல்தான். அந்தக் காலடிநிலத்தைப் பற்றி பேசுவதனால்தான் அறம் என்றும் கவர்வதாக உள்ளது. இக்கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே வீரியத்துடன் நீடிக்கும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2023 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.