பிரியம்வதாவுக்கு அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம்.  எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டும் பொருட்டு, அருண்மொழி அவர்களும் , நானும் தொகுத்த நூல்கள்  வெளியீட்டு விழாவில், கோயம்புத்தூர் விஜயா பதிப்பக உரிமையாளர் மு. வேலாயுதம் அவர்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்படும் நூல்களில் சிறந்த ஒன்றுக்கு வருடந்தோரும் விருது ஒன்று கொடுக்கவிருப்பதாக தெரிவித்தார். அ. முத்துலிங்கம் பெயரில் கொடுக்கப்படவிருக்கும் அந்த விருதிற்கான பொருளுதவியை, அந்த நிகழ்வில் பங்கு கொண்ட கோயம்புத்தூர், காரமடை Dr சசித்ரா தாமோதரன் அவர்கள் ஏற்றுக்கொள்வார் என்பதையும் அறிவித்தார்.

2022-ற்கான அ.முத்துலிங்கம் விருது , தங்களின் அறம் நூலின் உண்மை ஆளுமைகளின் கதைகளை ஆங்கிலத்தில் Stories of The True என்ற பெயரில் மொழியாக்கம் செய்த பிரியம்வதா ராம்குமார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உங்களுக்கும் பிரியம்வதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். Stories of The True – முதல் பதிப்பில் வந்த மூவாயிரம் புத்தகங்கள் விற்று, இரண்டாவது பதிப்பு வெளிவந்துவிட்டது.  எட்டு அல்லது ஒன்பது முக்கிய ஆங்கிலப் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வந்துள்ளன. அமெரிக்காவில் நேரடியாக விற்கப்படவில்லையெனினும், எனக்குத் தெரிந்து 300 முதல் 350 புத்தகங்கள் நண்பர்களே வாங்கிப் பரிசாக கொடுத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் ‘எப்படா இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் வரும்’ அதை. ஆங்கிலம் பேசும் நண்பர்களுக்கு, பிறந்ததிலிருந்து அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்காக  கொடுப்பதற்கு எனக் காத்திருந்தவர்கள். நூலில் இருக்கும் அறத்தின் வழி நின்ற ஆளுமைகளின் கதைகளின் தீவிரம் ஒரு புறம் இருக்க, அதை ஆங்கிலத்தில் சரியாக கொண்டு சேர்த்த பிரியம்வதாவிற்குப் பெரும் பங்கு உண்டு. சிறந்த மொழியாக்கம் என நான் நினைப்பது மூலநூலில் இருக்கும் உணர்வுகளை, அந்தப் பாத்திரங்களின் பண்புகளை, அப்படியே மொழியாக்க நூலை வாசிக்கும் வாசகனுக்கு கடத்துவதில் உள்ளது. தமிழில் அறம், சோற்றுக்கணக்கு, வணங்கான், நூறு நாற்காலிகள் கதைகளை வாசித்துவிட்டு எப்படி உணர்வுப்பிளம்புகளாக பெற்றோர்கள் என்னிடம் பேசினார்ளோ, அப்படி இப்பொழுது அவர்களது குழந்தைகள் ஆங்கிலத்தில் வாசித்துவிட்டு தங்கள் உணர்வுகளை என்னிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.

Whatsapp-ல், சோஸியல் மீடியாவில் என எனக்குத் தெரியும் முன், இந்த விருது அறிவிப்பை, விஜயா மு. வேலாயுதம் முறையாக சொல்வதற்காக போனில் அழைத்தார். அப்பொழுது நான் எனது ஒரு வேண்டுகோளை வைத்தேன். விருது கொடுக்கும் நாள், 19 ஜனவரி, அ. முத்துலிங்கம் அவர்களின் பிறந்தநாள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா, அ. முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டும் பொருட்டு ஒரு இசை ஆல்பம் தயாரித்துள்ளது. அதை அந்த விழாவில் வெளியிடமுடியுமா என்று கேட்டேன். அவர் அன்புடன் அதை ஏற்றுக்கொண்டார்.  

அ. முத்துலிங்கம் அவர்களின் கடவுள் தொடங்கிய இடம் நாவல், இலங்கையிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் இன்னல்களையும், இறுதியில் வெற்றியையும் முன்வைக்கும் நாவல். பொதுவெளியில், புலம் பெயர்ந்தவர்களின் அவலம் பேசப்படும் அளவு, அவர்களது வெற்றியை  கொண்டாடுவதில்லை. இந்த இசைக்கோவை புலம்பெயர்ந்தவர்களின் வெற்றியையும், அ. முத்துலிங்கம் அவர்களின் சிறப்பையும், அயராது உழைக்கும் அவர் தமிழ்த் தொண்டையும் முன் வைக்கிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்த வெண்முரசு ஆவணப்படத்திற்கு இசையமைத்த ராஜன் சோமசுந்தரத்தின் இசையில், பாடகர் ஸ்ரீனிவாசன் அவர்கள், கனடாவில் வாழும், வளர்ந்துவரும் பாடகிகள் விதுசாய்னி, சின்மயி அவர்கள் பாட K2BDance Studios நடனக்குழுவினர் நடனமிட என இந்த இசைக்கோவை தயாராகியுள்ளது. கவிஞர் சாம்ராஜ் அவர்களும், ராஜன் சோமசுந்தரம் அவர்களும் பாடலை எழுதியுள்ளார்கள்.

தமிழின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரின் பெயரில் கொடுக்கப்படும் விருது இன்னொரு ஆளுமையின் மொழியாக்கத்திற்கு கொடுத்துச் சிறப்பிக்கும் இந்த விழா ஒரு சரித்திர நிகழ்வு.  19-ஜனவரி-2023, மாலை 5:15-ற்கு கோவை பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவில்  நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவும்.

நிகழ்வை முன்னின்று நடத்தும் விஜயா மு. வேலாயுதம் அவர்களுக்கும், Dr. சசித்ரா தாமோதரன் அவர்களுக்கும் எனது நன்றி. கலந்துகொண்டு உரையாற்றாவிருக்கும், தினமணி ஆசிரியர் வைத்யநாதன், விரிவுரையாளர் இந்திராணி, வங்கமொழி எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் கீதா ராமஸ்வாமி அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2023 10:36
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.