Jeyamohan's Blog, page 637
January 28, 2023
இராம. கண்ணபிரான்
இராம. கண்ணபிரான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர். நா. பார்த்தசாரதி பாணியில் அறப்பிரச்சாரம் சார்ந்த கதைகளை எழுதியவர். முக்கியமாக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூர் இலக்கிய உலகை உருவாக்கியவர் என்று கருதப்படுபவர்.
இராம.கண்ணபிரான்
இராம.கண்ணபிரான் – தமிழ் விக்கி
யாதுமாகி
(அ.முத்துலிங்கம் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)
எழுத்தாளர்கள் கி.ரா-வும், அ. முத்துலிங்கமும் எனது ஞானத் தந்தைகள் என்று சொல்லி நெருங்கியவர்களிடம் பெருமை கொள்வது வழக்கம். கி.ரா.வையாவது நேரில் பார்த்து இருக்கிறேன். என் அப்பாவும் உங்களைப் போல விவசாயி என்று அவரோடு உரையாடியிருக்கிறேன். அவரே எனது ஆதர்சம் என்று கட்டுரையும் எழுதியிருக்கிறேன். இரண்டாமவரை நான் பார்த்ததே இல்லை.
புலம்பெயர்ந்த இடத்தில், நேர்க்கோடு போட்டது போலச் செல்லும் வாழ்க்கையென புனைவுகளைப் படைக்கும் தமிழ் வளர்க்கும் பத்திரிக்கைகள். தட்பவெப்பம், நேற்று பார்த்த சினிமா, புதிதாக வந்த ஆப்பிள் ஃபோன், மைல் கணக்கில் நீளும் பாலங்கள், சொன்னதைக் கேட்கும் டால்ஃபின்கள் என்று தட்டையாக எழுதுகிற இவர்களின் மத்தியில் புலம்பெயர்ந்த வாழ்க்கையை அச்சு அசலாகச் சொல்பவர் யார் என்ற என் தேடலில் எனக்குக் கிடைத்தவர்தான் அ.முத்துலிங்கம்.
அவரது படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, புலம்பெயர்ந்த வாழ்வு பற்றிக் கற்க மட்டுமல்ல, மொத்த மானுடத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள அவரும் அவரது படைப்புகளுமே வழிகாட்டியெனக் கண்டுணர்ந்தேன்.
2003-ல் கூபர்ட்டினோ, கலிபோர்னியாவில் வசிக்கும்பொழுது பத்திரிக்கையில் செய்தி ஒன்றை வாசித்தேன். தனியாக வசிக்கும் ஒரு பாட்டியின் வங்கிக் கணக்கிலிருந்து அவர் அந்தந்த மாதங்களுக்குக் கட்டவேண்டிய மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் ஆட்டோமேடிக் பேமென்ட் வசதியில் பணம் எடுக்கிறார்கள். ஒரு சில நாட்களுக்கு அப்புறம் பணம் இல்லாமல் ஆகிவிடுகிறது. தொலைபேசியில் கூப்பிட்ட குரலுக்கு, பதிலில்லை. பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தால் அவர் இறந்துவிட்டது தெரிகிறது.
கணினித் துறையில் வேலை பார்க்கும் எனக்கு இந்தச் செய்தி ஆட்டோமேடிக் பேமென்ட் என்ற விஷயத்தை நினைத்தாலே வயிற்றைக் கலங்கவைத்துவிட்டது. கைவிடப்பட்டவர்களும், அன்றன்றைய சாப்பாட்டுக்கு, அன்றன்றே சம்பாதிப்பவர்களும் சுக வாழ்க்கை வாழ்பவன் கண்ணில் படுவதில்லை. ஆனால் அ.முத்துலிங்கம் கண்களில் இருந்து அவர்கள் தப்புவதில்லை. அவர்களது வேதனைகளை உள்வாங்கி எழுத அவரால் முடிகிறது.
‘கடைநிலை ஊழியன்’ கதையில் வரும் அப்துலாட்டி, ‘கருப்பு அணில்’ லோகிதாசன் போன்ற, வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்டவர்களின் கதைகளைச் சொல்லி வாழ்வின் நிதர்சனங்களைப் படம்பிடிக்கிறார். ரொட்டியும் மீனுமாகச் சாப்பிடும் நேரம் அவர்களின் நினைவு வர ஒரு ரொட்டி குறைவாக இறங்குகிறது.
காலை, மாலை, எனக்கு இந்த வேலை, உனக்கு அந்த வேலை எனத் திட்டமிட்டு வேலைபார்க்கும் என் போன்றோருக்கு லோகிதாசன் வாழ்க்கை கண்ணில் படுவதில்லை. தாமதமாக வேலைக்கு வரும் கடைநிலை ஊழியனிடம், காரணம் அறிந்திட எந்தவொரு அதிகாரிக்கும் மனம் இருப்பதில்லை. அ.மு-வின் கதைகளை வாசிக்கும் வாசகனை மேலாளராக அடைபவர்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள். அந்த மாயத்தை அவர் எழுத்து நிகழ்த்திவிடும்.
புலம்பெயர்ந்து, நினைத்த துறையில் பட்டம், கேட்டுக்கொண்டபடி சம்பளம் அப்பாடா என்று அமர வாழ்க்கை விட்டுவிடுமா என்ன? தெரிந்த நண்பரின் மனைவி ஒருவருக்கு பார்ப்பதெல்லாம் வெள்ளையாகத் தெரியும் என அவரது கண்ணின் பார்வை பழுதுபட, மருத்துவர் சொன்ன பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. அவர் புலம்பெயராமல் இருந்திருந்தால், இந்த பாதிப்பு வராமல் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார்.
ஆப்ரிக்காவில், சங்கீதாவும், கணேசானந்தனும் பிள்ளைப் பேறு அடைவதை குடியுரிமை கிடைக்கும் வரை தள்ளிப்போடுகிறார்கள். அ.முவின் ‘முழு விலக்கு’ கதையில் வாழ்க்கை அவர்களுக்குக் கொடுக்கும் தீர்ப்பு வேறாக இருக்கிறது. சொந்த நிலத்திலிருந்து மொத்த வாழ்க்கையையும் பெயர்த்து எடுத்து வந்தவர்களுக்கு மட்டும் என்று இல்லை; பிடித்ததைப் பார்க்க சில நாட்கள் வருபவர்களுக்கும் நினைத்துப் பார்க்காதது நடக்கலாம்.
‘விசா’ கதையில், கோணேஸ்வரன், இருபது வருடப் போராட்டங்களுக்குப் பிறகு, விசா கிடைத்து, தான் பார்க்க விருப்பப்பட்ட அதிசய வண்ணத்துப்பூச்சியைப் பார்க்க வருகிறார். விசா இல்லாமல் போக ஓர் இடம் இருக்க, எதற்கு இத்தனை போராட்டம் என்ற கேள்வியை முன்வைக்கும் நெகிழ்வுடன் கதை முடிகிறது.
விலகி நின்று பார்க்கும் அவரது பார்வையை ஒவ்வொரு கதையிலும் பார்க்கலாம். கல்வீட்டுக்காரி கதையில், அவள் வயிற்றுப் பசியை ஆழச் சொல்லி, அவளின் இன்னொரு பசியையும் சூட்சுமமாகக் காட்டி விடுகிறார். இந்தக் கதை பேசுவது வெகு ஆபத்தான பேசுபொருள். கல்வீட்டுக்காரியின் உடற்பசியைச் சொல்லி, அணிலை அடித்துக்கொன்றவனை வேலையை விட்டு எடுக்கும் அவள் அன்பைச் சொல்லி, எந்த ஒரு ஜட்ஜ்மென்ட்டும் இல்லாமல் அவளைப் பார்க்கும் கலைப்படைப்பைக் கொடுத்துவிடுகிறார்.
எந்தக் காலத்தில் என்ன நடந்தாலும், அந்தக் காலத்தில் வளரும் ஒரு இளைஞனாக, மாணவனாகவே கற்கவும் எழுதவும் தொடர்ந்து இயங்குகிறார். கம்ப்யூட்டரில் 486 ப்ராஸஸ்ஸர் அறிமுகம் ஆவதற்கும், ஊபர் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கும், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் இடைவெளி. கம்ப்யூட்டர் கதையில், டைரக்டரிவாரியாக தனக்குத் தேவையான ஃபைல்களை வைத்துக் கொள்வதில் புரிதல் இல்லாமல் வரும் சிக்கல் வைத்து கதைப் பின்னல். ஊபர் கட்டுரையில், ஒரு இடத்துக்குச் செல்வதற்கு ஊபர் பிடித்துச் செல்ல எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் சென்றதையும், டாக்ஸி பிடித்து இருப்பிடத்துக்குத் திரும்பிவர அவர் உயிர் பிழைத்து வருவதே அரிதாகிவிட்டது என நகைச்சுவையுடனும் சொல்கிறார்.
எர்னெஸ்ட் ஹெமிங்க்வேயின் Ten Indians என்ற கதையில், நிக் என்பவனின் காதலியை இன்னொருவனுடன் அவன் அப்பா பார்த்ததாகச் சொல்ல, நிக் தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு எனது இதயம் உடைந்துவிட்டது என்று புலம்புகிறான். முதல் காதல் தோல்வியை சித்திரிக்கும் சிறுகதைகளில் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படும் கதை இது. அ.மு-வின் ‘அக்கா’ கதையில், சிறுவன், “அக்கா குப்புறப்படுத்துக் கிடந்தா; திரும்பவே இல்லை. தடவிப் பார்த்தன்; முகமெல்லாம் நனைஞ்சு கிடந்தது’ என்கிறான். அக்காவின் அழுகைக்கு காரணம் புரியாத சிறுவனின் பார்வையில் சொல்லப்படும் அ.மு-வின் இந்த ஆரம்பகாலக் கதையும் முத்திரைக் கதையே.
முப்பத்தைந்து முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு, ‘உடும்புரித்தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி’ என புறநானூறு படிக்க, ஒன்றுவிட்ட அக்காவின் காதலை மீண்டும் சிறுவனின் பார்வையில் ‘உடும்பு’ கதையில் பதிவு செய்கிறார்.
நான் சிறுவனாக வானம் பார்த்த பூமியில் வாழ்ந்தபொழுது, உணவு அருந்தும்போது குடிப்பதற்கு ஒரு செம்பில் நல்ல தண்ணீர், சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ இன்னொரு செம்பில் உப்புத் தண்ணீர். என் சகோதரி மூன்று கிலோமீட்டர் சென்று நல்ல தண்ணீர் கொண்டு வரவேண்டும். இதில் எங்கே ஒரே தண்ணீரை குடிப்பதற்கும், கை கழுவவும் பயன்படுத்துவது?
‘ஒட்டகம்’ சோமாலியாவில், மைமுன் ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு நாளைக்கு பதினாறு மைல் நடக்கிறாள். அவள் தண்ணீர் சுமக்கும் கஷ்டத்துக்குத் தீர்வாக தனது காதலைத் துறந்து 50 வயது மாப்பிள்ளையை மூன்றாம் தாரமாக மணம் செய்துகொள்ள சம்மதிக்கிறாள்.
அ.மு-வின் கதைகளில் எனக்கு மிகவும் அணுக்கமானது இது என்றால், ‘பருத்திப் பூ’ வேறு ஒரு வகையில் அணுக்கமானது. சுடான் நாட்டின் கெஸுரா நீர்ப்பாசனத்துறையின் நீர்வள நிபுணராக தண்ணீர் பங்கீட்டைக் கண்காணிக்கும் பொறுப்பு வகிக்கும், கதையின் நாயகன் குணசிங்கம். தண்ணீர் அதிகம் செலவாகாமல் இருக்கும்பொருட்டு, ஷவரில் குளிக்காமல், வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிப்பார். என் தந்தையும் அமெரிக்காவில் எங்களுடன் இருக்கும்பொழுது இப்படித்தான் குளித்தார்.
இப்படி அவர் கதைகளை வாசிப்பவர்களின் உள்ளிருக்கும் வெவ்வேறு கதைகளின் கதவுகளைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். நாம் வந்து தேடினால் அவரைக் காணவில்லை. எங்கோ இருக்கை அமைக்க ,விருது கொடுக்க யாருக்கும் தெரியாமல் உதவப் போய்விடுகிறார்.
ஒரு மனிதன் எப்படி தொடர்ந்து இவ்வளவு நல்ல காரியங்களைச் செய்துகொண்டே இருக்கமுடியும் என்று நாம் ஆச்சர்யப்படுகையில், ‘ஹலோ எப்படி இருக்கிறீங்க. ஸோ பிஸி இல்ல. அதான் உங்களக் காணலை. வேலை வேலை என்று இருக்காமல் உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பரிவுடன் ஒரு கரிசனக் குரல் அலைபேசி வழியே. மறுபடியும் அ.மு-வைக் காணவில்லை.
எவ்வளவு பேர்கள்… எவ்வளவு கதைகள்… எவ்வளவு பணிகள் அவருக்கு! ‘அ.முத்துலிங்கம் கதைகள் – அணுக்கமான நண்பர்கள்’ என்று தலைப்பிட்டு அ.மு-விற்கு எனது எளிய வாசிப்பனுபவத்தை அனுப்பி வைத்தேன். அதை வாசித்துவிட்டுத்தான் முதன்முதலில் அவர் என்னை அழைத்தார். அதன் பின் வாரம் ஒரு முறை நடந்த உரையாடல்களில் தன்னை முன்னெடுக்காமல் தமிழை முன்னெடுக்கும் ஆளுமையாக அவரை நான் அறிந்துகொண்டேன்.
அவரின் கதைகளை, நானோ எனது நண்பர்களோ மொழியாக்கம் செய்கிறோம் என்று அணுகுவோம். மற்ற தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அடையாளப்படுத்தி அவற்றை மொழியாக்கம் செய்யச் சொல்லி, அன்புடன் கேட்டுக்கொள்வார். மொழியாக்கம் செய்து அனுப்பும் படைப்புகளை உடனுக்குடன் வாசித்து, அவரது கருத்துக்களைப் பரிமாறுவார். வளர்ந்த பிறகு அடிபட்ட பிறகு அனுபவத்துக்குப் பிறகு பலருக்கும் பண்பு வரும். ஆனால் அ.மு. ஐயா பிறக்கும்போதே அப்படித்தான் பிறந்திருப்பார் போல.
அவரை நான் அணுக அணுக, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டாலும், தமிழை விரும்பிப் பேசுபவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் இவரை அப்பா என்று அன்புடன் விளிப்பதைப் பார்த்து மெய்சிலிர்ப்பேன். அனைவரையும் கனிவுடன் வழிநடத்தும் இனிய தந்தை ஒருவர், இதைச் செய் என்று கேட்டுக்கொண்டால், மறுக்கும் மக்கள் உண்டா என்ன? தமிழ் இலக்கியத் தோட்டம் (கனடா), ஹார்வர்ட் தமிழ் இருக்கை, டொரான்டோ தமிழ் இருக்கை என அவர் தமிழ்த்தொண்டு தொடர்வதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
பரந்த வாசிப்பு. அம்மாவிடம் கற்றுக்கொண்ட கம்பராமாயணம் மஹாபாரதம் கதைகள் தொடங்கி நோபல் பரிசு பெற்ற அலிஸ் மன்றோ வரை தொடரும் நேர்காணல்களில் விரியும் அறிவின் விஸ்தரிப்பு, அவரது படைப்புகளில் வாசகனுக்குக் கிடைக்கிறது.
சில எழுத்தாளர்களைப் பற்றிய அவதானிப்புகள் வெவ்வேறு வாசகர்களிடம் வெவ்வேறாக இருக்கும். இந்தத் தொகுப்பில், இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும், அ.மு-வைப் பற்றி ஒருமித்த அவதானிப்பாக இருப்பதைப் பார்க்கலாம். கதையின் பெயர்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா, கொடுக்கும் தகவல்களுக்கு சரியான தரவுகள் உள்ளனவா என்ற எனது கேள்விகளுக்கு எல்லாம் போதிய ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எனது நன்றியும் வந்தனங்களும்.
இதில் பங்களித்த எழுத்தாளர்கள் பலரையும் பெரும்பாலோனோர் அறிவார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த வாசகர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு, ஒவ்வொரு கட்டுரையாளரைப் பற்றியும் ஒரு சிறிய அறிமுகக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர் என்று ஒன்று இருந்தால் போதும். மரம், அணில், பறவை, விலங்கு, தன் மொழி பேசுபவன், வேற்று மொழி பேசுபவன் என்று வேற்றுமை எதுவும் பார்க்காமல் விலகி நின்று கண்காணித்து தமது படைப்புகளின் வழியாக மானுடத்தை எடுத்துச் செல்பவர்.
யாதுமாகி நின்றாய் எந்தையே எனப் போற்றி, கி.ரா. விருது பெறும் இந்த நன்னாளில், அறியாச் சிறுவனாய் அறிமுகமில்லா வனத்தில் கால்சராயை இழுத்து விட்டுக்கொண்டு வியர்த்து விறுவிறுக்க மூச்சிரைக்க ஓடி ஓடி ஐயாவிற்காகக் கொய்து வந்த சில பூக்கள் இவை.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்.
நீர்நிலவும் வான்நிலவும்
அன்பின் ஜெ,
கூட்டத்துடன் தனித்திருத்தல் உரை மிகச் சிறப்பாக இருந்தது. வாழ்நாள் முழுமைக்கும் விரித்தெடுத்துக்கொள்ளக்கூடிய பல்வேறு படிமங்களின் வழி நிகழ்த்தப்பட்ட மிகச் செறிவான உரை.
பொதுவாக கலைப்படைப்புகள் வழியாக Catharsis நிகழ்வதை கண்டிருப்போம். இம்முறை ஒர் உரையில் அது நிகழ்ந்தது.
கீதைத்தருணம் கட்டுரையில் முறிவுக்கணங்களில் பேதலித்த மனதின் கட்டற்ற அரற்றலைக் குறித்து எழுதியிருப்பீர்கள். கூட்டத்துடன் தனித்திருத்தல் உரையின் முதல் பகுதியில், அந்த பேதலித்த மனதுடன் அலையும் ஒருவனின் இடைவிடாத முட்டிமோதல்களை, விடைதேடி அலைதலை, ஆயிரம் பத்தாயிரம் எனப் பெருகும் எண்ண ஓட்டங்களின் தாளவியலா கொந்தளிப்பை, அந்த மனதுடன் இருக்க இயலாமல், அதிலிருந்து தப்பி ஓட அவன்செய்யும் பிரயத்தனங்களை என கிட்டத்தட்ட மேடையில் நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள். அது கேட்பவர்களின் மனதையும் அந்த முறிவுக்கணங்களுக்கு எடுத்துச் சென்று விட்டது.அவ்வுணர்வூட்டப்பட்ட நிலையிலிருந்தே, தேடலின் பாதை குறித்தான இவ்வுரை நிகழ்த்தப்பட்டதும், பெற்றுக்கொள்ளப்பட்டதும்.
உரையின் முதற்பகுதியில், தேடலின் பாதையில் ஒருவன் எதிர்கொள்ள நேரும் வெவ்வேறு கருத்துத் தரப்புகளின், தத்துவங்களின் மோதல்களுக்கு மத்தியில் தனது தேடலை, தனது சுயத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொண்டு, தனது பயணத்தை தனித்து மேற்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டது. இரண்டாம் பகுதி, தேடலில் உள்ள ஒருவன் உலகியலில் எதிர்கொள்ளும் அடையாளங்களையும் அவற்றிற்கு மத்தியில் தனது தன்னிலையை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதும் பேசப்பட்டது. ‘நான் அழிவதில்லை’ எனும் கீதையின் வரிகளோடு நிறைவு செய்யப்பட்டது.
இவ்வுரையின் தனித்துவமாக நான் கருதுவது, இதில் நிகழ்ந்த Catharsis அனுபவம்தான். முறிவுக்கணங்களுக்கு நம் உள்ளத்தை எடுத்துச் சென்று அதிலிருந்து கீதைத்தருணத்திற்கும் அங்கிருந்து தேடலின் பாதைக்கும் இட்டுச்சென்றது. இதில் பேசப்பட்ட சில கருதுகோள்கள் நமக்கு முன்னரே பரிச்சயமானவையாகக் கூட இருக்கலாம். ஆனால் மூன்று மணி நேரத்தில், தனித்தலைத்தலின் துயரத்திற்கும் அனந்த-ஆனந்தத்திற்குமான இந்தப் பயணம் என்பது, நம் முன்னோடி ஒருவன் நாம் இதுவரை கடந்துவந்த பாதையையும் இனி செல்லவிருக்கும் பாதையின் சாத்தியங்களையும் ஒளியூட்டி காண்பித்தது போல் இருந்தது. அது ஒரே நேரத்தில் ஆழ்ந்த துக்கத்திற்கும் பின் விடுதலையின் ஆனந்தத்திற்கும் கொண்டு சென்றது.
பருவ மழையை விட, கோடை மழை ஏன் மனதை அவ்வளவு பரவசம் கொள்ள செய்கிறது? கடும் கோடையில், ஓரிரு நாட்கள் மந்தாரமாக இருக்கும் வானம், ஒரு மாலையில் கருமேகங்கள் திரள, பூமி வெப்பமுற, பெரும் முத்துக்களென மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். பலத்த காற்றும் இடியும் மின்னலும் சேர்ந்து கொள்ள பறையோசையென,ஆர்ப்பரிப்பென, அரற்றலென, ஒப்பாரியென இரவு முழுவதும் கொட்டித் தீர்க்கும். நம் கனவுகளிலும் ஊடுருவிச் செல்லும். அவ்விரவு சரியான உறக்கமும் இருக்காது. விடிந்தால், வானம் வெளுத்து, தூய நீல நிறத்தில் இருக்கும். பஞ்சுப் பொதிகளென புத்தம்புதிய வெண்மேகங்கள் உலாவும். மரங்களில் செடிகளில் ஒட்டியிருந்த தூசு முழுதும் அகன்று, பூமியே துடைத்து வைத்தது போல் இருக்கும். நிலத்திலிருந்து மெல்லிய வெப்பம் கிளர்ந்து வரும், மண் வாசனையும் மழையீரத்தின் வாசனையும் சூழ்ந்துகொள்ளும். ஒர் இனிமை நம்முள் ஊற்றெடுக்கும், நம் இருப்பே மதுரமாக மாறி அக்காலையின் மென்னொளியை நோக்கி அமர்ந்திருக்கும். ஓர் இரவிற்குள், அரற்றலிலிருந்து ஆனந்தம் வரையிலான இம்மாற்றம், அதுவே கோடை மழையின் வசீகரம். Catharsis நிகழ்ந்த தருணங்களில் மனதில் தவறாது தோன்றும் படிமம் கோடை மழை இரவும் அதுமுடிந்த காலையும்தான். இவ்வுரை முடிந்ததும் மனதில் மீண்டும் வந்தது, அந்த அமைதியில், இனிமையில் அகம் நிறைந்து நின்றது.
இவ்வுரை முதன்மையாக தேடலின் பாதையின் சவால்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் குறித்து பேசியது. இவ்வுரையினூடே மேலதிகமாக எனக்கு நிகழ்ந்தது இப்பாதையில் நான் எங்கிருக்கிறேன் எனும் விழிப்புணர்வு. உரை நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, ஆழ்மனதில் நிகழ்ந்த அறிதல் அது. மலைப் பாதைகளில் வைக்கப் பட்டிருக்கும் வரைபடங்களில் பார்த்திருப்போம், மலைகளின் ஏற்ற இறக்கங்களை காண்பித்து You Are Here என்று வட்டமிடப்பட்டிருக்கும். அது போன்ற ஒரு சுட்டுதல் அல்லது வழிகாட்டுதல். நிகாஸ் கசந்த் ஸகீஸின் The last Temptation of the Christ நாவலில் வரும் வரி இது: The desert is not big enough for two. தேடலின் பாதை என்பது பெரும்பாலையில் தனித்தலைவது தான். அங்கு துணை வர சாத்தியமானது ஆசிரியரின் அல்லது மரபின் இது போன்றதொரு வழிகாட்டுதல் மட்டுமே.
Broken and broken again
in the water
there is still the moon.
– Ueda Choshu
இந்த நீர்நிலவிலிருந்து, அந்த வான்நிலவைச் சுட்ட ஓர் ஆசிரியன் அமைவதும், அவனுடன் அமர்ந்து அந்நிலவைக் காண வாய்ப்பதும் ஓர் நல்லூழ். அனைத்திற்கும் நன்றி ஜெ!
அன்புடன்,
கிருஷ்ணப்பிரபா,
பெங்களூரூ.
புத்தகக் கண்காட்சி சந்திப்புகள், கடிதம்
புத்தகக் கண்காட்சியில் நான் ஜனவரி-9’ என்கிற அறிவிப்பை முதல்நாள் இரவுதான் பார்த்தேன். எப்படியும் போய்விடுவது என அப்போதே முடிவெடுத்தேன். ஆனால் உங்களைப் பார்ப்பேன் என்ற நம்பிக்கை நாற்பது சதவீதம்தான். எங்காவது போகவேண்டுமென ஆசைப்படும்போது பையனுக்கு திடீர் காய்ச்சல் வரும், அலுவலகத்தில் அற்ப வேலை சள்ளையாக இழுக்கும், கணவர் அதிசயமாக்ச் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிட்டு “நீ இன்னும் கிளம்பலையா?” என்பார்.
அதனால் வீட்டில் யாரிடமும் அப்போது சொல்லவில்லை. காலையிலிருந்து ஒரே குறுகுறுப்பாக இருந்தது. யாருக்கும் தெரியாமலொரு பேரதிசயத்தைப் பொத்தி வைத்திருப்பது போல.
அலுவலகத்தில் (உங்களை) வாசிப்பவர்கள் யாருமில்லை “இன்னைக்கு பொன்னியின் செல்வன் ஸ்க்ரிப்ட் ரைட்டரைப் பார்க்கப் போறேன்” எனச் சொல்லி வைத்தேன். மாலை நான்கு மணிக்கு மாமியாரிடமிருந்தும், கணவரிடமிருந்தும் புக்ஃபேர் போய் விரைந்து திரும்பிவிடுவதாகப் பேசி அனுமதி பெற்றேன். வேலையும் 5.10க்குள் முடிந்தது.
புக் செய்த உடனே ஊபர் கிடைத்தது. “ட்ராஃபிக்ல வண்டி நிக்குது. சும்மா ஃபோனடிச்சுட்டிருக்கக் கூடாது” கோபமாகப் பேசினார் ஆட்டோக்காரர். வந்தால் சரி என நானும் வாசலுக்கு ஓட, ஒரு நிமிடம் கூட நிற்காமல் கேன்சல் செய்துவிட்டு யு-டர்ன் அடித்துப் பறந்துவிட்டார்!. என்னடாது சோதனை என ஓலா போட்டேன்.
ஆட்டோவில் மறுபடியும் அறிவிப்பைப் பார்த்துக் கொண்டேன். கண்ணில் படுமிடமெல்லாம் கல்லூரி மாணவர்கள் தென்பட, ஒய்.எம்.சி.ஏ உள்ளே நடந்துபோகும் போது நீங்கள் வந்திருப்பீர்களா? இன்றைக்கு நிச்சயமாகப் பார்த்துவிடுவோமா? என யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.
எண்ணூறாம் நம்பர் ஸ்டால் வழியாக நுழைந்து, ஊடாக நடந்து நூற்றுப் பதினைந்தைத் துளாவினேன். வலப்பக்கம் திரும்பியதுமே நீல நிறச் சட்டையில் நீங்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நினைத்தது போலவே உங்களைச் சுற்றி நிறைய பேர். அஜிதன் கூட இருந்தார்.
ஒருவர் உங்களுடன் பேசிக்கொண்டிருக்க, புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக நாலுபேர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
நானும் ‘ஈராறு கொண்டு எழும் புரவி’யை எடுத்துக்கொண்டு வரிசையில் சேர்ந்துகொண்டேன். (‘நீலம்’ வாங்கவேண்டுமென எண்ணியிருந்தேன். பக்கங்களைப் புரட்டியபோது பார்த்த வார்த்தைகளும், பின்னட்டையிலிருந்த விலையும் என்னைத் தயங்க வைத்தன.)
எல்லோரும் பெரிய புத்தகங்களாக எடுத்து வந்திருந்தனர். கையிலிருந்த சிறு புத்தகம் என்னைக் கூச வைத்தது. போய் நாமும் நீலத்தை எடுத்துவிடுவோமா என்று பார்த்தால் அதற்குள் வரிசை போய்விடும் போலிருந்தது. வரிசையிலில்லாமல் பின்புறம் இடப்புறம் நுழைந்து வேறு இரண்டு மூன்றுபேர் கையெழுத்து வாங்கி விட்டனர்.
இடையிடையில் “இந்த புக்கு நம்மளா போட்டோம்?” “என்ன முடிவுல வைட் அண்ட் வைட் போட்டு வந்திருக்கீங்க, இல்ல எனக்கு தெரிஞ்சாகனும்” “மாமீ… என்ன மாமி இப்ப வரீங்க?” தெரிந்தவர்களிடமெல்லாம் உற்சாகம் தெறிக்கப் பேசிக்கொண்டிருந்தீர்கள்.
என்முறை வந்தபோது என்னபேசுவதென்றே தெரியவில்லை. பெயரென்ன என நீங்கள் இருமுறை கேட்டும் நான் சத்தமாகச் சொல்லவில்லை. மூன்றாவது முறை கத்திச் சொல்லிவிட்டு பிறகென்ன பேசுவதெனத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். “உங்களைக் கனவுதான் சார் பார்த்திருக்கேன். நேர்ல பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை”
“நீங்க என்ன பண்றீங்க?”
“உங்க ஃப்ரண்டு யுவன் சந்திரசேகர் வேலைபார்த்தாருல்ல, அதே ஸ்டேட் பாங்க்லதான் நானும் வேலை பார்க்கறேன்.”
“அப்படியா, எந்த இடத்துல?” நான் வேலை பார்ப்பது சேத்துப்பட்டில். அங்கிருந்துதான் ஆட்டோ பிடித்து வந்திருந்தேன், ஆனால் அந்தக் கணத்தில் அது மறந்து போய்விட்டது. “அண்ணா நகர்” என்றேன். “அப்படியா, அவனும் அண்ணா நகர்லதான் வேலை பார்த்தான், சிட்லபாக்கத்துலேர்ந்து ட்ரெயின் புடிச்சு பஸ் புடிச்சு எப்படியெல்லாமோ வருவான். ஏதோ ப்ராஞ்சு சொல்வானே… நீங்க எங்க இருக்கீங்க?”. அப்பொழுதுதான் தப்பாகச் சொல்லிவிட்டது உறைத்தது. “வீடுதான் சார் அண்ணா நகர், நான் ஃபாரெக்ஸ்ல வர்க் பண்றேன்.”
‘உங்க சோற்றுக்கணக்கு, அறம் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும், படிச்சுட்டு லஞ்ச் ப்ரேக்ல லேடீஸ் ரூம்ல உட்கார்ந்து அழுதுருக்கேன். நற்றுணை கதையை நிறைய்ய நிறைய்ய தடவை படிச்சிருப்பேன். தம்பி படிச்சுட்டு, இப்படிக்கூட மனசு பிசகுமாவென பயந்து போயிருக்கேன். கொலை செய்தவன் யாருன்னு முதல் வரிலயே சொல்லிட்டு ஒரு த்ரில்லர் நாவலை சுவாரஸ்யமா எழுத முடியுமான்னு உலோகம் படிச்சுட்டு ஆச்சர்யப்பட்டிருக்கேன்.’ என்னென்னவோ சொல்ல நினைத்து கடைசியில் ஒரு அட்சரமும் வாயிலிருந்து வரவில்லை.
“எங்க வீட்டுல யாருக்குமே படிக்கற பழக்கம் இல்லை சார். நான் படிக்கறதே வேஸ்ட்டோன்னு தோண வைச்சிருக்காங்க. உங்க எழுத்துக்களைப் படிச்சதுக்கப்புறந்தான் எனக்கு ஒரு தெளிவு வந்துச்சு.” இதுதான் கடைசியாக உருப்படியாகப் பேசியது.
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார், அண்ணா நகர் வந்தா வீட்டுக்கு வாங்க சார்.” அத்தோடு விடைபெற்றேன். அதற்குள் மற்றுமொரு நால்வர் வரிசை சேர்ந்துவிட்டது. அடுத்து அஜிதனிடம் போனேன்.
அங்கயே இருந்த மைத்ரி நாவல் வாங்கிப் போய் கையெழுத்து வாங்கியிருக்கலாமா?, ‘உங்க ஜஸ்டினும் நியாயத் தீர்ப்பும் சிறுகதை அருமை. இயேசுவும், இறக்கை வைத்த காப்ரியேலும் இப்படியெல்லாம் தமிழ் பேசுவார்களா? புன்னகைக்காமல், மறுபடி படிக்காமல் அந்தப் பத்தியைக் கடக்கவே முடியவில்லை’ எனச் சொல்லியிருக்கலாமா? ஒன்றும் கிடையாது.
“உங்கப்பா எழுத்தெல்லாம் ரொம்பப் பிடிக்கும், ஒரு நாள் தவறாம டெய்லி வெப்சைட்ல படிப்பேன்’ என உங்களிடம் சொல்ல வேண்டியதெல்லாம் அஜிதனிடம் உளறிக்கொட்டினேன். அதற்கு மேல் அங்கு நிற்கவே முடியவில்லை. ஏனோ பதற்றமாகவே இருந்தது. விறுவிறுவென ஓட்டமும் நடையுமாக வெளியேறினேன்.
“ஒன்னுமே ஒழுங்கா பேசல… சொல்லவேண்டியத சத்தமா கூடச் சொல்லல.” தலையிலடித்துக்கொண்டே வந்தேன். வெளியில் வந்த போதுதான் வானம் இருட்டியிருப்பதும் வீட்டுக்கு சீக்கிரம் செல்ல வேண்டுமென்பதும் உறைத்தது.
வீதியை அடைத்தபடி வாகனங்கள். ஓலா ஊபர் எதுவும் கிடைக்கவில்லை. வழியில் வந்த ஆட்டோக்காரர்கள் அண்ணாநகரில் யாரோ அணுகுண்டு வைத்திருப்பதைப் போல பெயரைச் சொன்னவுடனே பேரம் கூட பேசாமால் போயினர்.
பின்னர் நந்தனம் மெட்ரோவுக்கு நடந்து போனேன். மெட்ரோ ட்ரெயினிலும் ஏகக் கூட்டம். உங்களின் உற்சாகப் பேச்சும், அஜிதனின் சோழிப்பல் சிரிப்பும் (எடுத்துப் போட்டு பல்லாங்குழி ஆடலாமா?) கண்ணுக்குள் சுழன்று கொண்டேயிருந்தன. என்னருகில் நின்ற இரண்டு கல்லூரி மாணவிகள் சன்னமான குரலில் சினிமா பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தனர். என் நினைவுகளுக்கு பேக்ரவுண்ட் ம்யூசிக் போட்டது போல் கேட்க மிக இனிமையாயிருந்தது. அந்தப் பெண்ணின் க்ளிப் போட்ட பழுப்புப் பற்கள் கூட அழகாகத் தெரிந்தது.
உங்களின் கதையில், ஒரு கண் தெரியாத மாட்டுக்குப் பக்கத்தில் அதன் கன்றை நிறுத்தியவுடன் பதட்டம் நீங்கி மதுரமாகிப் போனதுபோல் அன்றாடச் செயல்களின் சலிப்பிலிருந்து விலக்கி அந்த மாலையையை ரம்மியமாக்கியது உங்களுடனான சந்திப்பு.
உங்களுக்கு சில கடிதங்களைத் தட்டச்சு செய்தும், பல கடிதங்களை மனதால் எழுதிப் பார்த்தும் எதையும் அனுப்பியதில்லை. என் சந்தேகங்களுக்கு நீங்கள் எதைப் பற்றியோ எழுதிய கட்டுரையில் விடையிருக்கும். எனக்கு மிகப் பிடித்த கதையை என்னைவிட அருமையாகச் சிலர் விமர்சித்திருப்பர். உங்களுடனான ஒரு உரையாடலைக் தொடங்குவதற்கான தைரியத்தை அளித்தது இந்தச் சந்திப்பு.
புத்தகக் கண்காட்சிக்கு வந்தமைக்கும், எளிமையாக அணுகத் தகுந்த வகையில் இருந்தமைக்கும் அன்பான நன்றிகள்.
காயத்ரி.ய
அன்புள்ள காயத்ரி,
புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்திப்பதில் ஒரு தயக்கம் இருந்தது, காரணம் அதில் என்னை நான் ஒரு விஐபி ஆக வைத்துக்கொள்ளும் ஒரு சூழல் அமைகிறது. அப்படி அமையாமலிருக்க அனைவரிடமும் கூடுமானவரை அதிகமாகப் பேச, தனிப்பட்ட உறவை மேற்கொள்ள முயல்கிறேன். ஆனால் பொழுதில்லை. வாசகர் சந்திப்புகள் அப்படி அல்ல .அவை இணையாக உரையாட, பழக வாய்ப்பளிப்பவை.
ஆனால் இச்சந்திப்புகளுக்கு இன்னொரு பயன் உள்ளது. ஒரு வாசகர்சந்திப்புக்கு தயக்கமிருக்கும் புதியவாசகர், வெறுமே ஓர் அறிமுகம் வழியாக ‘பனிக்கட்டியை உடைக்கும்’ ஆசை கொண்டவர் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கும் கண்கூடாக அத்தனை வாசகர்களைப் பார்க்க நேர்வது ஒரு நல்ல அனுபவம். ஒருவகை விராடரூப தரிசனம் அது. ஆம், வாசிக்கிறார்கள் என நானே எனக்குச் சொல்லிக்கொள்ள முடிகிறது. என் நூல்களை கட்டாக ஒருவர் வாங்கிச் செல்லும் காட்சி ஒரு பெருமிதத்தையும் அடக்கத்தையும் ஒருங்கே உருவாக்குகிறது.
ஜெ
January 27, 2023
பெங்களூர் கட்டண உரை, மற்றும் பயணங்கள்…
அகரமுதல்வன் அழைத்திருந்தார், அப்போது நான் டெல்லியில் இருந்தேன். ‘தேவதச்சனின் வண்ணத்துப் பூச்சி காட்டை காலில் தூக்கிக் கொண்டு அலைவதுபோல நீங்கள் இலக்கியத்துடன் பறந்துகொண்டிருக்கிறீர்கள்’ என்றார். காலில் காடு இருக்கும் நினைவே இல்லை. ஆனால் உடனிருந்துகொண்டிருந்தது.
இந்த ஜனவரி மாதம் 2 ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து கிளம்பியநான் இன்னும் ஊர் திரும்பவில்லை. ஒரே பயணத்தில் பல இலக்கிய நிகழ்வுகள். பிரியம்வதாவுக்கு Storie of the True மொழியாக்கத்துக்காக அ.முத்துலிங்கம் விருது அளிக்கும் விழா கோவையில் 19 ஜனவரியில் நடைபெற்றது. புத்தகக் கண்காட்சியில் இருந்து நேராக அதற்குச் சென்றிருந்தேன். அங்கே அனிதா அக்னிஹோத்ரியையும் கீதா ராமசாமியையும் சந்தித்தேன்.
மிக உற்சாகமான நிகழ்வு. கோவையின் முகங்கள் அனைவரும் வந்திருந்தனர். நாஞ்சில்நாடன், மரபின்மைந்தன் முத்தையா, எம்.கோபாலகிருஷ்ணன். ஒவ்வொருவரின் உரையும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவை. அறம் கதைகளை பற்றி அவர்கள் சொன்னவை நிறைவூட்டும் சொற்கள் எனக்கு.
பிரியம்வதா மொழியாக்கத்திற்கு இன்றிருக்கும் சிக்கல்களைப் பற்றிச் சொன்னது முக்கியமான ஒரு கருத்து. இன்றைய ஆங்கில வாசிப்பு என்பது முதன்மையாக பலவகையான அரசியல் முன்முடிவுகளாலானதாக உள்ளது. அவற்றை உருவாக்குபவை நம் ஆங்கில கல்விநிலையங்கள். இலக்கியம் பெண்ணியம்,தலித்தியம், பின்காலனித்துவம் என்றெல்லாம் உடனடியான எளிய பகுப்புகளுக்குள் சென்றுவிடுகிறது. அவற்றைக்கொண்டே இலக்கியம் அளவிடப்படுகிறது.
இந்த மேலோட்டமான தளத்திற்கு அடியில் மெய்யான வாசிப்பு உள்ளது. அதுவே உண்மையான விசை. ஆனால் பதிப்பகங்கள் அதை கவனிப்பதில்லை. அவை திரும்பத் திரும்ப மதிப்புரைகளின் தேய்வழக்குகளையே அளவுகோலாகக் கொள்கின்றன. அது படைப்புகள் ஆங்கிலத்தில் சென்றடைவதற்கான பெருந்தடையாக இன்றுள்ளது.
மறுநாள் ஈரோட்டுக்கு அருகே சொற்பொழிவுப் பயிற்சி. நான் சர்வதேச முறைமையுடன் உருவாக்கிய அப்பயிற்சிமுறை நடைமுறையில் வெல்லுமா என்னும் ஐயமிருந்தது. ஆனால் அங்கேயே முதல்முறை பேசியவர்களிடம் இரண்டாம் முறை பேசும்போதிருந்த மாபெரும் மாற்றம் இந்த பயிற்சி முறை என்பது எத்தனை மகத்தானது என்னும் எண்ணத்தை அளித்தது. பலருடைய உரைகள் தமிழில் எங்கும் ஆற்றப்படும் தொழில்முறை உரைகளைவிட பலமடங்கு மேலானவை. ‘வெள்ளைக்காரன் என்றால் சும்மா இல்லடா’ என்று நானே சொல்லிக்கொண்டேன்.
அங்கிருந்து மீண்டும் கோவை. ஜிஎஸ்எஸ்வி நவீன் –கிருபா இல்லத்தில் ஒருநாள் தங்கி என் பெங்களூர் உரையை தயாரித்தேன். முழுநாளும் அதற்குச் செலவாகியது. நடுவே கிருபா அளித்த காபியை குடித்துக்கொண்டே இருந்தமையால் அன்றிரவு தூக்கமே இல்லை. அதிகாலையில் டெல்லிக்கு பயணம். கோவையில் வடவள்ளியில் காலை மழைவேறு பெய்துகொண்டிருந்தது. டெல்லி விமானம் 9 மணிக்கு. ஆனால் ஆறரைக்கே அங்கிருக்கவேண்டுமென்றனர். குடியரசு தின கெடுபிடிகள்.
விமானத்தில் சற்று தூங்கினேன். 12 மணிக்கு டெல்லி. அங்கே பிரியம்வதா விமானநிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார். நேராக ஓட்டல். இரண்டு மணிநேரம் ஓய்வுக்குப்பின் குளித்துவிட்டு குன்ஸும் புக்ஸ் என்னும் கடையில் அமைந்த மொழியாக்க கருத்தரங்குக்குச் சென்றோம்.
பிரிட்டிஷ் கௌன்ஸில் மற்றும் இரண்டு மொழியாக்க உதவி அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்த நிகழ்வு. முதன்மைப் பங்களிப்பாளர்கள் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் முதலிய பதிப்பாளர்கள். என் இலக்கிய முகவர் கனிஷ்கா குப்தா, மொழியாக்க மேற்பார்வையாளர் அருணவா சின்ஹா ஆகியோரைச் சந்தித்தேன்.
ஆசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் ஒருவரோடொருவர் பதினைந்து நிமிடம் உரையாடவேண்டும். அதன்பின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். நிகழ்ச்சி இத்தகைய நிகழ்ச்சிகள் எப்படி நிகழுமோ அப்படி நிகழ்ந்தது. பெரும்பாலும் சம்பிரதாயமான உரையாடல். எழுத்தாளர்கள் தீவிரமாக எதையாவது சொல்ல முயன்றால்கூட அதற்கான இடம் அங்கில்லை.
ஒரு வாசகநண்பர் அங்கே அறம் பற்றி மிக உணர்ச்சிகரமாக இரண்டுநிமிடம் பேசினார். எனக்கு ஒரு பூங்கொத்துடன் வந்திருந்தார். அவருடைய வருகை அந்த சூழலை ஒருவகையில் குழப்பியது, ஆனால் அவர்களுக்கு புதியதாகவும் இருந்தது. அங்கிருந்த எல்லாருமே ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள். ஆகவே பிற எழுத்துமேல் பெரிய ஈடுபாடு இல்லாத உயர்வட்டத்தினர். உணர்ச்சிகரமான ஒரு வாசகரின் குரல் அவர்களுக்கு முற்றிலும் புதியது. Stories of the True நிகழ்ச்சிக்குப்பின் அதிகமாக விற்க அந்த வாசகரின் குரல் காரணமாகியது.
ஹார்ப்பர் காலின்ஸ் பிரசுரத்தை முன்பு Stories of the True வெளியீட்டுக்காக அணுகியபோது ஓர் ஆசிரியர் ஆங்கிலத்தில் அறிமுகமாக சிறுகதைத் தொகுப்பு சரியான வழி அல்ல, நாவல்தேவை என்றனர். இப்போது தங்கள் கணிப்பு பிழையாக ஆகிவிட்டது என்று அவர்களே சொன்னார்கள்.
டெல்லியில் இருந்து 25 ஜனவரி மாதம் நேராக பெங்களூர். நண்பர் கோகுல கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தேன். அவருடைய நண்பர் கமலக்கண்ணன், பெங்களூர் ஏ.வி.மணிகண்டன் ஆகியோர் வந்திருந்தனர். மறுநாள் அதிகாலையில் கட்டண உரை. அருகே ஒரு கல்யாணமண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. அங்கே பல நண்பர்கள் வந்து தங்கியிருந்தனர். மாலை ஐந்து மணிக்கு அங்கே சென்றேன்.
பெரிய கூட்டுஅறையில் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடத் தொடங்கினேன். கிட்டத்தட்ட ஐம்பதுபேர் அங்கேயே கூடிவிட அதுவே ஓர் இலக்கிய அரங்குபோல் இருந்தது. மேலைத்தத்துவம், உடனே சினிமா என எல்லாவற்றையும் தொட்டுச்சென்ற உரையாடல். திருமணவீடு போலத்தான். ஒரு நண்பர்கூடுகை என்பது எத்தனை ஊக்கமூட்டும் நிகழ்வு என புதியதாக வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
நான் பத்துமணிக்கெல்லாம் வந்து படுத்துவிட்டேன். கோகுலின் இல்லம், அரங்கை ஒட்டிய அறைகளில் நண்பர்கள் நள்ளிரவு ஒருமணி, விடிகாலை மூன்றுமணி என வந்துகொண்டே இருந்தார்கள். நான் மூன்றரை மணிக்கு யாரோ வந்து, நாய்கள் குரைத்த ஓசை கேட்டு விழித்துக்கொண்டேன். அதன்பின் தூக்கமில்லை.
இந்த விழாவை கோகுல கிருஷ்ணன், மருதப்பன், புவனேஸ்வரி, சதீஷ், ஜெகன், பிரவீன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். பெங்களூரில் ஒரு விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் அமைந்துவிட்டது.
இந்த விழாவை காலை ஆறரைக்கு முடிவுசெய்தமைக்குக் காரணம், பெங்களூரில் போக்குவரத்துச் சிக்கல் குறைவாக இருக்கும் பொழுது, அல்லது இல்லாமலேயே இருக்கும் பொழுது இது என்பதுதான். அந்த முடிவை எடுத்தபின் அமைப்பாளர்களுக்கு குழப்பங்கள் இருந்தன. போதிய அளவில் பங்கேற்பாளர்கள் வருவார்களா, வெளியூரில் இருந்து வர முடியுமா? முதல்சிலநாள் மிகச்சிலர் மட்டுமே பதிவுசெய்திருந்தனர். ஆனால் கூட்டம் வந்துவிட்டது, அதன்பின்னரே நிறைவு உருவானது.
ஆறரை மணிக்குக் கூட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்தபின் இந்த ஆறரை மணி என்பது ஒரு நல்ல பொழுது என்ற கருத்துக்கள் பலரால் சொல்லப்பட்டன. ஏனென்றால் மனம் துல்லியமாக, ஒரு ஆழமான உரையை கேட்பதற்கான உளஒருமையுடன் இருக்கிறது. நகரத்தில் அன்றைய வேலைகளை முடித்துவிட்டு, களைத்து, போக்குவரத்துச்சிடுக்கில் மாட்டி எரிச்சல் கொண்டு வந்து சேர்ந்து அமர்ந்திருக்கும் உளநிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
காலை ஆறேகாலுக்கு அரங்குக்குள் பார்வையாளர் விடப்பட்டனர். ஆறரை மணிக்கு அரங்கு நிறைந்திருந்தது. (பிந்திவந்த ஏழுபேரை அனுமதிக்கவில்லை. இந்த உரையில் உரை தொடங்கியபின் எவரையும் அனுமதிப்பதில்லை) பெங்களூரில் குளிர் 12 டிகிரி வரை இருந்து சற்று குறைந்திருந்தது. ஆனாலும் குளிர்தான். ஆறேமுக்காலுக்கு உரை. ஒருமணிநேரம் முதல் பகுதி. அதன்பின் காபி. மீண்டும் ஒருமணிநேரம். மொத்தம் இரண்டு மணிநேர உரை.
தமிழகத்தில் இரண்டுமணிநேர உரை என்பது மிகச்சாதாரணம்தான். எந்த தயாரிப்பும் இல்லாமல் மூன்றுமணிநேரம் பேசுபவர்களே மிகுதி. ஆனால் இந்த உரை அப்படி அல்ல. இது தத்துவம், ஆன்மிகம், இலக்கியம் என்று தொட்டுச்செல்லும் உரை. வெற்றுச்சொற்கள் குறைவு. அதைவிட பதினைந்தாண்டுகளாக நான் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அனைத்தையும் வாசித்த நண்பர்கள் பலர் அரங்கில் உண்டு. அவர்களுக்கும் புதியதாக இருக்கும்படி பேசியாகவேண்டும். அந்த உரையை திரும்ப நிகழ்த்தவும் முடியாது. உண்மையில் ஒரு நூறுபக்க நூலாக விரிவாக்கம் செய்யத்தக்க உரை இது.
இந்த உரையின் தனித்தன்மை என்ன? யோகேஸ்வரன் போன்ற நண்பர்கள் மாயவரத்தில் இருந்து பயணம் செய்து எல்லா கட்டண உரைகளையும் நேரில் கேட்டிருக்கிறார்கள். அவை இணையத்தில் பின்னர் வெளிவரும். ஆனால் நேரில் கேட்பது வேறொரு அனுபவம். அதை அடைந்தவர்கள் அதை தவறவிடுவதில்லை. என் நண்பர்களான அரங்கினருக்கும் எனக்கும் நான் ஆற்றிய எல்லா உரைகளுமே அற்புதமான அனுபவ நினைவுப்பதிவகளாகவே உள்ளன
ஏன்? ஒன்று இணையுள்ளங்களுடன் சேர்ந்து அரங்கென அமர்வதன் உளநிலை. அது கூர்ந்த கவனத்தை, ஒருங்கிணைவை உருவாக்குகிறது. அத்தகைய கூர்நிலை வேறெந்த தருணத்திலும் அமைவதில்லை.
இரண்டு, பேசுபவருடனான நேருக்குநேர் தொடர்பு. நம் கண்முன் ஓர் ஆளுமை நின்று நம்முடன் நேரடியாக உரையாடுகிறது என்னும் உணர்வு. முகபாவனைகள், குரல் எல்லாம் உருவாக்கும் நிகழ்த்துகலை அனுபவம். அதில் பேச்சாளரின் தீவிரம் மட்டுமல்ல, அவர் குழம்புவதும் தயங்குவதும் யோசிப்பதுமெல்லாம்கூட நமக்கு அனுபவங்களாகின்றன. அந்த சிந்தனையுடன் நாமும் ஒழுகிச்செல்கிறோம்.
பேச்சாளனாக எனக்கும் அரங்கின் முன் நிற்பது ஓர் அரிய அனுபவம். எனக்கு எப்போதும் அந்த நடுக்கம் உண்டு. சிறிய உரைகளுக்குக் கூட. உரை சரிவர நிகழாமல் போய்விடுமோ என்னும் பதற்றம். அந்தப்பதற்றத்தை இழக்கலாகாது என உறுதியுடன் இருக்கிறேன். ஆகவேதான் மேலோட்டமான கவனம் கொண்ட அரங்குகளை தவிர்க்கிறேன் – கல்லூரிகளை தவிர்ப்பது அதனால்தான். வாயைப்பிளந்து அமர்ந்திருக்கும் அசட்டு மாணவர்கள் நடுவே நின்றால் ஒருவகை கூச்சம் உருவாகிறது.
கூடுமானவரை எல்லா சம்பிரதாய உரைகளையும் தவிர்க்கிறேன். எல்லா உரைகளிலும் புதியதாக ஏதேனும் ஒன்றைச் சொல்ல முயல்கிறேன். உரையை எப்போதுமே அந்த மேடையில் எனக்கு அரங்குக்கும் இடையே நிகழும் ஓர் அந்தரங்கமான உரையாடலாக ஆக்கிக்கொள்கிறேன். நான் ஓர் அவையுடன் சேர்ந்து சிந்திப்பதுதான் என்னைப் பொறுத்தவரை உரை என்பது. அது படையுடன் போருக்குச் செல்வதுபோல. அல்லது கூட்டுப்பிரார்த்தனைபோல.
ஆகவே எனக்கு என் உளநிலையுடன் இசைந்து செல்லும் அரங்கு தேவை. விழாக்களில் அது அமைவதில்லை. பெருந்திரளிலும் அமைவதில்லை. உள்ளரங்குகளே உகந்தவை. எனக்கு அரங்கின் கண்கள் தேவைப்படுகின்றன. கோவையின் திரள் எனக்கு மிக உவப்பானது.
கட்டண உரை என்னும் கருத்து உருவானது ஒரே காரணத்தால்தான், ஓர் ‘இலட்சிய’ அரங்கை உருவாக்க. அங்கே நான் ‘முழங்குவதில்லை’ . அறுதியாக எதுவும் சொல்வதுமில்லை. அது ஒருவகை கூட்டுச் சிந்தனைதான். அங்கே பங்குகொள்பவர்களுக்கு என்னுடன் சேர்ந்து சிந்திக்கும் அனுபவமே அமையும். அதில் என் உறுதிப்பாடுகளுக்கு பதிலாக கேள்விகளும் கண்டடைதலும் முன்னகர்தலுமே இருக்கும்.
அப்படி ஓர் அரங்கின் கூட்டுமனநிலை சட்டென்று சில வரிகளை ஒளிமிக்கதாக்குகிறது. இத்தகைய அரங்கில் உருவாகும் ஆன்மிக உச்சநிலைகளை, உணர்வுநிலைகளை வேறெங்கும் அடைய முடியாது. அது ஒரு நல்ல நிகழ்த்துகலை உருவாக்கும் உச்சங்களுக்கு நிகரானது.
உரைக்குப்பின் உணவு. அதன்பின் கோகுல் வீட்டுக்கு வந்து மதியம் வரை பேசிக்கொண்டிருந்தோம். மதிய உணவுக்குப்பின் நான் பெங்களூர் விமானநிலையம் வந்தேன். அங்கிருந்து சென்னை. ஒரே நாளில் பெங்களூர் உரை போன்ற ஒரு தத்துவ– அழகியல் உச்சநிலை. அதன்பின் சினிமா விவாதம், தயாரிப்பாளருடன் சந்திப்பு. நான் அந்த உரையில் முன்வைத்ததே அந்த பன்முகநிலையைப்பற்றிய என் எண்ணங்களைத்தான்.
நடுவே கடல்-அருண்மொழி நங்கை
(அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுதிக்கு அருண்மொழி நங்கை எழுதிய தொகுப்பாளர் உரை)
அ.முத்துலிங்கம் இந்தியா பற்றி எழுதியதில்லை. தமிழகம் அவருடைய களமே அல்ல. ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகவே அவர் வரையறை செய்யப்படுகிறார். ஆனால் நான் உட்பட தமிழ் வாசகர்கள் பெரும்பாலும் அவரை ஈழப்படைப்பாளிகளின் வரிசையில் வைப்பதில்லை. அதேசமயம் தமிழகப்படைப்பாளிகளின் வரிசையிலும் அவர் இல்லை. அவ்வாறென்றால் அவருடைய நிலம் எது? அவருடைய வேர்கள் எங்கே விரவியுள்ளன?
மனித மனமும் பிரக்ஞையும் வாழும் மண்ணோடும் சூழலோடும் பிணைக்கப் பட்டவை. பிரக்ஞை முதலில் தொட்டுணரும், கண்டுணரும் , முகர்ந்தும், கேட்டும் உணரும் அனைத்தும் அவனைச் சூழ்ந்தவையே. இதையே அகம் காலத்தாலும், இடத்தாலும் பிணைக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே ஒரு சமூகத்தின் பிரக்ஞையின் கூர்முனையென திகழும் படைப்பாளியும் அவ்வாறே. அவனைச் சூழ்ந்த மண்ணை, இயற்கையை, பருவகாலத்தை, மனிதர்களையே படைக்கிறான். திரும்பத் திரும்ப அவன் அகம் சென்று படியும் இடம் அதுவே.
மகத்தான படைப்பாளிகள் மனிதகுலத்தின் ஆதார சிக்கல்களை பேசுவதற்கு ஒரு நிலத்தை, ஒரு பண்பாட்டை மாறாத களமாகக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் அரங்கு. அவர்களின் நிலம் நங்கூரம் போல் நிலையாகப் பிணைக்கிறது. உதாரணமாக, தாரா சங்கர் பானர்ஜி, பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய போன்ற வங்கப்படைப்பாளிகளையோ, சிவராம காரந்த், எஸ்.எல்.பைரப்பா போன்ற கன்னடப்படைப்பாளிகளையோ சொல்லலாம். தகழி சிவசங்கரப்பிள்ளையை ஆலப்புழையில் இருந்தும் தி.ஜானகிராமனை தஞ்சையிலிருந்தும் பிரிக்கமுடியாது.
அவ்வாறு, மாபெரும் மானுடநாடகத்தின் அரங்கமாக ஆகும்போது நிலம் ஆழ்ந்த பொருள்கொள்கிறது. அவ்வாறு அல்லாமல் வெறும் கதைப்புலமாக, ஆசிரியர் அறிந்த பின்புலமாக மட்டுமே நிலைகொள்ளும்போது நிலம் ஒரு சிறையாக ஆகிறது. ஆசிரியனின் புனைவை அழுத்தும் ஒரு பாறாங்கல்லாக மாறுகிறது.
புலம்பெயர் எழுத்தாளர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தங்கள் இளம்பருவ, வளரிளம் பருவ வாழ்க்கையையும், அது நிகழ்ந்த நிலத்தையும் மட்டுமே எழுதுவதை நாம் பார்க்கலாம். புலம் பெயர்ந்து வாழ நேரிடும் அனேக படைப்பாளிகள் அங்கு சென்று வாழும் நிலத்தையோ, மனிதர்களையோ, அப்பண்பாட்டையோ துளியும் பிரதிபலிப்பதில்லை. அவர்களின் அகம் கதவுகளை உட்பக்கமாக தாளிட்டு கொள்கிறது. அப்படி மீறி பதிவு செய்பவரிலும் சுற்றுலா பயணிகள் வெளிநாட்டினரை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வை மட்டுமே உள்ளது.
ஏனென்றால் அப்படைப்பாளிகள் மானசீகமாக பிறந்த மண்ணை விட்டு வெளியேறவில்லை. அவர்களின் நனவிலியை அறிந்த நிலமும், மனிதர்களும் நனைத்த சாக்குத்துணி போல் மூடிக் கொண்டுள்ளனர். புதிய மண்ணை, அதன் மனிதர்களை, பண்பாட்டை அவர்களின் அகம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே ஒரு கட்டத்தில் எழுத்து என்பதே கடந்தகால ஏக்கம் என ஆகிறது. கெட்டிப்பட்டுப்போன அந்த உணர்வுநிலை சிதறடிக்கப்படுவதே இல்லை.
அ. முத்துலிங்கம் நிலம் கடந்த படைப்பாளி. உலகநிலத்தில் வாழ்பவர். வெவ்வேறு நாடுகளின், பண்பாட்டின், சூழலின் கதைகளாக அவர் எழுதிய ஏராளமானவற்றில் 12 கதைகளை அவர் அனுமதியுடன் தொகுத்துள்ளோம்.
பொதுவாக மனிதனின் தன்னிலை என்பது அவனுடைய பண்பாடே, தன் நடைமுறை பழக்கவழக்கங்களே , தன் மொழியே உலகிலேயே உயர்ந்தது என்னும் உணர்வுதான். அவ்வுணர்வு ஓர் உயர்ந்த பண்பாகவும் விழுமியமாகவும் முன்வைக்கவும் படுகிறது. மக்கள் திரளின் உணர்வாக ஆகிறது.
ஆனால் தன் ஆளுமையின் பெருமிதத்தை உணராத, சுய மதிப்பில்லாத ஒருவரே தன் இனத்தின், குலத்தின், மொழியின், நாட்டின் பெருமையைத் தன்னுடையதெனக் கொள்வார். மெய்யான அறிவுஜீவி எப்போதும் கூர் தீட்டி வைத்திருக்கும் நுண்ணுணர்வால் தன்னைச் சார்ந்த இவை அனைத்தின் மேலும் ஒரு விமரிசனத்துடன் இருப்பார். அதன் போதாமைகளையும், கீழ்மைகளையும் உணர்ந்திருப்பார்.
ஆனால் படைப்பாளி இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு மனநிலையில் இருப்பார். பற்று உணர்வுரீதியாக அவரை ஆள்கிறது. அறிவார்ந்த அணுகுமுறை அவரை சமநிலையில் வைத்திருக்கிறது. அந்தச் சமநிலையே இலக்கியப்படைப்புக்கு கட்டுப்பாடான வெளிப்பாட்டை அளிக்கிறது. அ.முத்துலிங்கத்தின் கலை அத்தகையது.
சாமானியன் பிற பண்பாட்டை நேரிடும்போது அதுவரை தனக்கு வழிவழியாக சொல்லப்பட்ட மதிப்பீடுகள், ஒழுக்க வரையறைகளின் அடிப்படைகளைக் கொண்டே அதை பரிசீலிக்கிறான். இந்த சரி-தவறுகள் அவன் பார்வைக் கோணத்தில் ஒரு குறுகலைத் தருவது மாத்திரமல்ல, எதையும் திறந்த மனதுடன் அணுக முடியாமல் செய்துவிடுகிறது. இதற்கு படைப்பாளிகளும் விலக்கல்ல.
ஆனால் முத்துலிங்கம் ஒரு குழந்தை திறந்த மனதுடன் புதிய பண்பாட்டை நேரிடுவதுபோல் எதிர்கொள்கிறார். அதை உற்சாகமான மொழியில் பதிவுசெய்கிறார். வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் பார்வை அல்ல அவருடையது. அப்பண்பாட்டின் சாரத்தை தன் திறந்த கண்களால், ஆர்வம் வற்றாத அகத்தால் பார்த்து அள்ளிக் கொள்கிறார். அதற்கும் நமக்கும் உள்ள ஒரு உலகளாவிய பொதுமை அவரது நுண்ணுணர்வுக்கு மட்டுமே தட்டுப் படுகிறது. அதனாலேயே முத்துலிங்கம் மிக, மிக தனித்துவம் பெற்ற படைப்பாளியாகிறார்.
எல்லா மனிதர்களையும் இணைக்கக் கூடிய உலகளாவிய விழுமியம் என்ன என்றால் பெரும்பாலானவர்கள் மானுடநேயம், அன்பு, கருணை, இரக்கம் என்று கூறுவார்கள். இவையனைத்தையும் விட மனிதனை அடிப்படையில் ஒன்றிணைக்கக் கூடியது சுவை. சுவை என்பது ருசி மட்டும் அல்ல. ரசனை, அழகு, காட்சி துய்ப்பு அனைத்துமே அடங்கும். சுவையின் நுண்ணிய பேதங்களுக்கு அடியிலுள்ள ஒருமையே மனிதனை அடிப்படையில் ஒன்றிணைக்கின்றது. ஏனென்றால் சுவை உடல்சார்ந்தது, மானுட உடல் ஒன்றே. உடலில் இருந்து அது உள்ளத்துக்குச் செல்கிறது. பண்பாடாக ஆகிறது.
ஆகவே தான் அ.முத்துலிங்கம் கதையில் உயர்தர ஐரோப்பிய வைனை ஒரு ஜப்பானியன் மெய்மறந்து சுவைக்க முடிகிறது, ஆப்பிரிக்க உணவை வேறு தேசத்தவன் லயித்து சாப்பிடுகிறான். காபூல் திராட்சையின் சாறு அந்நிலத்தின் அடையாளமாக ஆகிறது. ஒரு உள்வட்டாரத்தின் பாடலை, நடனத்தை வேறு தேசத்தவன் ரசிக்கமுடிகிறது.
பெண்ணழகுகள் எத்தனை விதமானவை. முத்துலிங்கம் குறைவான சொற்களில் காட்டும் பெண்களில் எத்தனை வகைகள், மஞ்சள் இனத்தவர் , கருப்பினம் , வெள்ளையர், மத்திய ஆசியர் என எல்லா வகையினரும் உள்ளனர். மிகச் சிறு உடலமைப்பு கொண்ட மஞ்சள் இனத்திலிருந்து ஓங்கு தாங்காக , நாவல்பழக் கருமையின் பளபளப்புடன் இருக்கும் ஆப்பிரிக்க இனப் பெண்கள் வரை. பொன்னிறக் கூந்தல் முதல் கறுத்து சுருண்ட பாம்புகுட்டி கூந்தல் அழகிவரை. அந்தச் சுவையறிதல் வழியாகவே அ.முத்துலிங்கம் உலகை தரிசிக்கிறார்.
அவருடைய கதைகள் காட்டுவது உலகின் சுவையை. மானுடரின் சுவை என்னும் ஒற்றைச்சரடை. ஆனால் அ.முத்துலிங்கம் வெறுமே வேடிக்கை பார்ப்பதில்லை. தான் உணர்ந்த சுவைப்புள்ளியை குறியீடாகவோ அல்லது படிமமாகவோ மாற்றுகிறார். அப்போது அச்சுவை அப்பண்பாட்டின் வெளிப்பாடாக ஆகிறது. அப்பண்பாடு பல்லாயிரமாண்டுகளாகத் திரட்டி எடுத்தது அந்தச் சுவையைத்தான் என்று தோன்றுகிறது. அதுதான் அவர் கதைகளுக்கு மேலதிகமான ஆழத்தையும், ஒரு கவித்துவத்தையும் தருகிறது.
உதாரணமாக ‘குதம்பேயின் தந்தம்’ கதையில் கொல்லப்பட்டு ட்ரக் வண்டியில் ஏற்றப்பட்ட பெரும் யானை மல்லாக்க தன் கால்களை வானை நோக்கி விரித்தவாறு கிடப்பது அவருக்கு சிலுவையில் அறையப்பட்ட யேசுவாக தோற்றமளிக்கிறது. உலகின் பாவங்களுக்காக தன் புனித ரத்தத்தை சிந்தியவன்.
‘பூமாதேவி’ கதையில் எல்லா அழுக்குகளையும் வெளுக்கும் பொது உபயோகத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் மாபெரும் வாஷிங் மெஷின் பூமித்தாயாக உருவெடுக்கிறது. அழுக்குகளை செரித்து சுத்தப்படுத்தி நமக்கு தூய்மையாக்கி அளிப்பவள். அதிலும் கதைசொல்லியும் அவர் மகளும் ஒரு குறிப்பிட்ட மெஷினில் மட்டுமே அவர்கள் துணிகளை தூய்மை செய்கின்றனர். அந்த இயந்திரத்திற்கு அவர்களோடு ஒரு உயிர்ப்புடன் கூடிய நிலைத்த பந்தம் வந்துவிடுகிறது.
‘கறுப்பு அணில்’ கதையில் தரைக்கு அடித்தளத்தில் ஒரு பெருச்சாளியின் வாழ்க்கைக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும், கிட்டத்தட்ட தன்னிரக்கத்தின் உச்சிக்குப் போய் உலகமே தன்னை கைவிட்டு விட்டதாக உணரும் ஒருவன் தன் தளத்தின் சாளரம் வழியாக பார்க்கிறான். வெளியே தோட்டத்தில் பாய்ந்து செல்லும் அதுவரை அவன் பார்த்திராத கறுப்பு அணிலை கண்ட அந்த கணத்தில் அவன் மனம் மலர்கிறது. அதோடு தன்னை இணைத்து பார்த்துக் கொள்கிறான். வாழ்க்கையே திருப்பிப் போடப்பட்டதுபோல் உணர்கிறான். இனி அவன் வாழ்வில் சோர்வில்லை , கழிவிரக்கமில்லை, அவன் வேறு ஒருவனாகிவிட்டான்.
பாத்திரங்களின் நீட்டிக் கொண்டிருக்கும் காதுகளை மடக்கி விடுவதன் மூலம் அதிகமான பாத்திரங்களை கப்பலில் ஏற்றலாம் என அறிபவனின் கதையில் அந்த சிறு மடங்கிக்கொள்ளுதல் ஒரு குறியீடாகிறது. மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இயைந்து, மற்றவர்களோடு பொருத்திக் கொண்டு, முட்டிக்கொள்ளாமல் இருப்பது வழியாக அடையும் ஒரு நிலையை அது குறிப்பதாகவும் கொள்ளலாம். முத்துலிங்கத்தின் தரிசனமே அதுதானா?
‘தொடக்கம்’ கதையில் ருஷ்யாவின் வடமூலையில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு வலசை வரும் Saker Falcon கதைசொல்லியின் கண்ணாடியில் மோதி அர்த்தமற்று இறக்கிறது.
‘விருந்தாளி’ கதையின் தொடக்கத்தில் வரும் ஆதியாகமத்தின் வரிகள் கதையை முடிவில்லா காலத்துடன் இணைக்கின்றன. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களைக் கழுவி ,மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள். நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டு வருகிறேன். அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம். மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்தான். அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். வெண்ணையையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்து அவள் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் புசித்தார்கள்.— ஆதியாகமம் 18.
உங்கள் எளியவர்களுக்குச் செய்தது எனக்குச் செய்தது போல என்னும் கிறிஸ்துவின் வரியுடன் கதையை இணைக்கிறது இந்த முகப்புவரி. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற குட்டிக்கதையை நினைவூட்டுகிறது.
இதயம் கனிந்து ஒரு அன்னை சொல்வதுபோல. ‘விருந்தாளி’ கதையில் நீண்ட பயணத்தில் சிக்கான செம்மண் புழுதி படிந்த தலையும் அழுக்கு உடையுமாக ஒருவர் வருகிறார். முன்பின் அறிந்திராதவர். அவருக்கு சமைக்க கதைசொல்லி வேலைக்காரனைப் பணிக்கிறார். வேலைக்காரன் சனூசி அன்று அம்ருதமாக சமைக்கிறான். அளவான வெந்தயம் இட்டு வெந்தயக் குழம்பு மணக்க, ஆப்பிரிக்க முறைப்படி வைத்த இறைச்சியும், ருசிக்கும் சம்பலுமாக. அவன் கைகளிலும் புகுந்த அன்னைமையும், கருணையும் தான் அதற்கு காரணம்.
இருப்பதிலேயே உயர்தர கபெர்னெ சாவினொன் வைனை அவரோடு பகிர்கிறார். சுவைக்கிறார்கள். டேப் ரிகார்டரில் காருக்குறிச்சி சக்கனி ராஜ நட்டநடு நிசியில் ஆப்பிரிக்க காட்டில் மரவீட்டில் இவர்களுக்காக வாசிக்கிறார். கண்ணீர் உருண்டோடுகிறது. கரகரப் பிரியாவில் மனம் நெகிழ்ந்து. இறுதியில் உருதுக் கவிதை ஒன்று வாசிக்கிறார்கள். வாழ்வின் உன்னத சுவைகள் எல்லாம் ஒன்றாகும் தருணம்.
அ.முத்துலிங்கம் அடிப்படையில் ஒரு மனிதாபிமானி. நம்பிக்கைவாதி. மனிதனின் நேர்நிலைத் தன்மையை சொல்லக் கூடியவர். அவரை படிப்பது எப்போதுமே சோர்வூட்டக் கூடியது அல்ல. எல்லா வாசிப்புகளுமே நிறைவூட்டும் அனுபவமாகவே இருக்கின்றன.. உற்சாகமான கதைகள்.
நவீனத்துவக் கதைகளில் காணப்படும் இருண்மை, எதிர்மறைத் தன்மை அனேகமாக முத்துலிங்கம் கதைகளில் இல்லை எனலாம். மனிதனின் எல்லா இன்னல்கள், கீழ்மைகள், சிறுமைகள், இவற்றுக்கு அப்பால் பரிமாறிக்கொள்ளக்கூடிய புன்னகை அவருடைய எல்லா கதைகளிலும் உள்ளது. ஒரு புன்னகையால், மௌனத்தால், கண்ணசைவால் சரிசெய்து கொள்ளக்கூடியவைதான் எல்லாம். அதற்கு அவ்வளவு முஷ்டி பிடிக்கதேவையில்லை என்பதுபோல. ஒரு நல்ல சுவையால் மானுடம் எல்லா பேதங்களையும் கடந்து இணைந்துவிடலாம் என்பதுபோல.
விதிவிலக்காக, மனிதனின் இருட்டையும் கசப்பையும் சொல்லக்கூடிய ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ போன்ற சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். கலாசாரங்களுக்கு இடையே உள்ள பொதுமையை அவர் கதையில் இயல்பாக எப்படி சாதிக்கிறார்? தன் மரபின் வேரிழைகளை அவர் தான் எதிர்கொள்ளும் பண்பாட்டின் வேர்களுடன் பின்னிக்கொள்கிறார். இதை ஊடுபாவாக நெய்யும் ஒரு அழகிய மொழியின் தறி அவரிடம் உள்ளது.
அவருடைய சுவை தொன்மையான தமிழிலக்கியங்களிலும் தோய்ந்தது. ஆகவே அது ஓர் இக்கட்டில் கச்சியப்பரின் கந்த புராணத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. ‘ஒரு சாதம்’ கதையில் அவ்வையார் வரப்புயர என்று மட்டும் சொல்லி நிறுத்தி, எப்படி என்று மன்னன் கேட்டதும் வரப்பை சிறிது உயர்த்தினால் அது எப்படி அரசனையே உயர்த்தும் என்று விளக்குவதை கூறுகிறார். கணிப்பொறியின் பிழையை நாட்கணக்காக அறிய முயலும் நாயகனின் சாகசத்துக்கு கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியின் மேல் ராவணன் மறைத்து வைத்த காதலை தேடிப் போகும் ராமனின் அம்புக்கு உதாரணமாக சொல்கிறார். சிறுத் தொண்டர் புராணம், சிற்றிலக்கியங்கள், கலிங்கத்துப் பரணி, கம்பனின் வரிகள், கபிலன், சங்கக் கவிதை, மஹாபாரதக் கதை மாந்தர்கள் என்று அ.முத்துலிங்கத்தின் கதையுலகம் இலக்கியக் குறிப்புகளின் களமும் கூட.
அதே இயல்பு கெடாமலே ஆப்பிரிக்க பழமொழியும் [ஆற்றில் ஆழம் பார்க்க இரண்டு காலையும் விடாதே, ஒரு காலை மட்டும் விடு முட்டாளே}, கிரேக்க புராணத் தொன்மங்களும், பல தேச நாட்டுப்புறக் கதைகளும், அமெரிக்க, தென்னமெரிக்க எழுத்தாளர்களும் ஊடாக செல்கின்றனர். இந்த ஊடுபிரதித் தன்மையை [Inter texuality] அவர் எழுத்தின் தனித்தன்மை எனலாம் பல மொழிகளின் சாராம்சமான துளிகளை சேகரித்து வைத்த அழகிய தடாகம் என அவர் ஆழ்மனதை சொல்லலாம். எட்ட நிற்கும் மரத்தின் வேர்கள் பூமிக்கு கீழ் உரசிக் கொள்வதைப் போல அவருக்குள் உலகப்பண்பாடுகள் அனைத்தும் கைகோர்த்துக் கொள்கின்றன. இந்நூற்றாண்டின் உலகமனிதனின் ஆழம் அவருடைய புனைவுலகு.
அருண்மொழி நங்கை
இரா. திருமாவளவன்
இரா. திருமாவளவன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொணர்ந்திருக்கிறார். கணினி தொடர்பான கலைச் சொற்கள், கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்நோய் தொடர்பான 118 கலைச்சொற்களையும் உருவாக்கியுள்ளார். பயன்பாட்டில் உள்ள பல அயல் சொற்களுக்கான தனித்தமிழ்ச்சொற்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றார்.
இரா. திருமாவளவன்
இரா. திருமாவளவன் – தமிழ் விக்கி
பாகுலேயன்பிள்ளை,நான்,அஜிதன் – கடிதங்கள்
பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
அன்புள்ள ஆசிரியருக்கு
வணக்கம். நான் கடந்த 25 வருடங்களாக தங்களை, தங்கள் நூல்களின், இணைய தளத்தின் வழியாக தொடர்பவன். தங்களுக்கு கடிதம் எழுத பலமுறை முயற்சித்து, தயக்கத்தினால் விட்டுவிட்டேன்.எனவே இது நான் தங்களுக்கு அனுப்பும் முதல் கடிதம்.
‘பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்‘ கட்டுரை ஒரு அற்புத மந்திர சாவியாக பல திறப்புகளை, ஒரு ஆண் குழந்தையின் தகப்பனான எனக்கு அளித்தது.
நான் என் மகனிடம் (இப்போது அவனுக்கு ஏழு வயது) ஏன் மிக கடுமையாக நடந்து கொள்கிறேன்? ஏன் அவனிடமிருந்து அளவுக்கு மீறி எதிர்பார்க்கிறேன்? அவன் தவறு செய்யும் போது ஏன் நான் கரிசனங்காட்டுவதில்லை? அடுத்தவர் முன்னிலையில் ஏன் அவனை பாராட்டுவதில்லை? அடுத்தவர் அவனை பாராட்டினால் நான் ஏன் மிகுந்த பதற்றத்திற்கு உள்ளாகி விடுகிறேன்? இப்படி பல ‘ஏன்‘கள். இத்தனைக்கும் அவன் பல திறமைகளை வெளிக்காட்டி கொண்டிருக்கிறான். அப்படியும் என் மனது சஞ்சலபடுகிறது.
இதெற்கெல்லாம், மேற்கண்ட தங்களுடைய கடிதம் அருமையான பதிலை தந்துள்ளது. நன்றி. மேலும், தங்களின் பதில் ‘ஆனையில்லா‘ கதைக்கு புதிய பரிமாணத்தை கொடுத்ததை வாசித்து துணுக்குற்றேன்.
சரிதான். யானை அதற்கான பெருங்காட்டை கண்டுகொண்டு அதில் அரசாள வேண்டும். அதை விடுத்து, இல்லற மற்றும் இதர சில்லறைகளில் மாட்டி கொண்டால், அந்த யானை படும் அவஸ்தை இந்த உலகத்திற்கு பெருங்களிப்பான கொண்டாட்டம் தான்.
நன்றி.
பவுல் ராஜ்
கமுதி, ஐதராபாத்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம், நீண்ட இடைவெளிக்குப்பின் எனது இந்தக் கடிதம்; நலம் பிரார்த்திக்கிறேன்.
உங்களின் தந்தையைப் பற்றிய எந்த ஒரு பதிவையும் (கட்டுரை / கதைகள்) மனம் நெகிழாமல் படிக்க முடிந்ததில்லை. மகனாக தந்தையைப் பற்றி எழுதியவற்றை தாண்டி, தானும் ஒரு தந்தை என்ற இடத்திலிருந்து தங்களின் தந்தையை அவதானித்தது இன்றைய பதிவு – நிச்சயம் ஒரு படி மேல்தான்.
தன்னை மகன் சரியாகப் புரிந்து கொண்டான் என்பதும் தங்கப்பன் நாயரை சின்னக்குழந்தையாக மாற்றும் மந்திரம் அல்லவா ?
நன்றி,
வெ கண்ணன்
பெங்களூர்.
அன்புள்ள ஜெயமோகன்;
என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரி–யை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன் திருத்தியிருப்பார்? அதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவு சொன்னாலும், மனம் சஞ்சலம் கொள்கிறது.
ஒரு வேளை ஜெயமோகனை விட நன்றாக எழுதியிருந்து, எனக்கு ஜெயமோகனைப் பிடிக்காமல் போய்விட்டால் ? – இது கொஞ்சம் அதிகம்?புத்தகக் கண்காட்சியில் அஜிதனைப் பார்த்தேன் – விஷ்ணுபுரம் நாவலை வாங்கிவிட்டு அதற்கு பணத்தை அஜிதனிடம் தான் கொடுத்தேன். ‘அப்பா வரவில்லையா‘ என்று கேட்டுவிட்டு வந்துவிட்டேன். கூட வந்திருந்த என் மகனிடம், இவர் தான் ஜெயமோகனின் மகன் என்று சொன்னதற்கு அவன் ‘ஆராஞ்சுப் பழத்தின் சாறை மட்டும் சாப்பிட்டவர்தானே (தன்னறம்)’ என்று கேட்டான். அவன் அதை நினைவில் வைத்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
அஜிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே தான் மைத்ரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒன்றை வாங்கி அஜிதனிடம் கையெழுத்து வாங்கியிருந்தால் குழந்தை மகிழ்ந்திருப்பானென்று தோன்றியது. ஒருவகையில் நான் அவனுக்கு சித்தப்பாவல்லவா என்றும் தோன்றியது. ஆனால், அஜிதன் அதெற்கெல்லாம் அப்பாற்பட்டவராக சிரித்த முகத்துடன் இருந்தார். இன்றுபோல் என்றும் சிரித்த முகத்துடன் இருக்கவேண்டுமென மனதிற்குள் வாழ்த்தினேன்.
விஷ்ணுபுரம் இது மூன்றாவது முயற்சி – இரு முறை நூலகங்களில் எடுத்து இருபது முப்பது பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. வீட்டிலேயே கையருகில் இருந்தால் முடித்துவிடுவேனென்று நினைக்கிறேன். இன்னொரு பெரிய கடிதம் எழுதி பாதியில் இருக்கிறது, அஜிதன் முந்திவிட்டார்.
அன்புடன்,
கணேசன்.
மைத்ரி நாவல் வாங்க மைத்ரி மின்னூல் வாங்கமுதற்கனல் அன்னையரின் கதை
வெண்முரசின் முதல் நாவல் முதற்கனல்.ஆழமானது. செறிவானது. கலைடாஸ் கோப்பை திருப்பி பார்ப்பது போல நாவலை மீளமீள அணுகும் தோறும் வண்ணம் பல காட்டுவது.அவ்வாறு ஒரு கோணத்தில் அன்னையரின் கதையாக முதற்கனலை காண முயலுவது இது.
‘அன்னையரை அவர்களிடமிருந்து வரப்போகும் தலைமுறைகளையும் சேர்த்துதான் மதிப்பிட வேண்டும் ‘ என்ற இந்நாவலின் வரியொன்றையே இதன் மையச் சரடாகக் கொள்ளலாம்.பல்வகைப் பட்ட அன்னையாளுமைகள் ஊடும் பாவுமாக அஸ்தினபுரி அரசியலில் அதன் மூலம் பாரதவர்ஷத்திலும் நிகழ்த்துவனவற்றை காட்டுவதாக முதற்கனலைப் பார்க்கலாம் .அன்னையரின் இயல்புக்கேற்ற அவர்களின் எண்ண நுண்வடிவம் குழவியாக உருப்பெறும் தருணங்களை நாம் முதற்கனலில் மீளமீள காண்கிறோம் .
மானசாதேவி முதற்கனலில் வரும் முதலன்னை.நாகர்குலத் தலைவி மானசாதேவி ஆஸ்திகனின் தாய்.ஆஸ்திகன் ஆற்றும் பெருஞ்செயலுக்கான ஆதாரம்.ஜனமேஜயன் செய்யும் சர்பசத்ர வேள்வியால் சத்வகுணம் மேலோங்கி தமோ ரஜோ குணங்கள் இல்லாமலாகி பிரபஞ்சம் சமநிலை குலையும் நிலையை மாற்றுகிறான் ஆஸ்திகன்.
அப்பெருஞ்செயலுக்காகவே அவனை ஈன்றெடுத்து, அதற்கான கல்விகளை ஊட்டி வளர்த்து, அவன் ஆற்ற வேண்டியதை வழிகாட்டி அனுப்புகிறாள் அவள்.மானசாதேவியின் நுண்வடிவமான எண்ணம் ஆஸ்திகனின் பருவடிவ பெருஞ்செயலாக நிகழும் சித்திரத்தை முதற்கனலில் காண்கிறோம்.
பாரதக்கதை அறிந்ததிலிருந்து பெண்ணியத்தின் முகமாக நாம் பார்க்கும் அம்பையை ஒரு பேரன்னையாக முதற்கனலில் உணர்கிறோம்.மீளமீள வருணைகள் வழியாகவும், வேறுவேறு பாத்திரங்களின் கூற்றுகளின் வழியாகவும் எரிகழல் கொற்றவையாக பிரபஞ்சத்தின்
பேரன்னையாக பேருரு கொண்டெழுகிறாள் அம்பை. பாய்கலை ஏறிய பாவை போன்றவள் எனவே அறிமுகமாகிறாள்.
‘இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது.’ என்று அவள் கொற்றவையாக மாறும் தருணத்தை கூறுகிறது வெண்முரசு.
‘அவள் நகரை நீங்கி புறங்காடுவழியாக சென்றாள்.அவளை அன்று கண்ட மிருகங்களும் பறவைகளும்கூட தலைமுறை தலைமுறையாக அவளை நினைத்திருந்தன. அங்குள்ள அத்தனை உயிர்களும் ‘மா!’என்ற ஒலியைமட்டுமே எழுப்பின. பின்னர் கவிஞர் அதை மாத்ருவனம் என்று அழைத்தனர்.’ என்று வருணித்து செல்வது அவளை ஆதியன்னை என நம்மை உணரச் செய்வது.
‘கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது‘ என வரும் இடம் கொற்றவையில் வெளிப்படும் கனிவெனக் கொள்ளலாம்; பேரன்னையாக அஸ்தினபுரியிடம் அவள் காட்டும் பெருங்கருணை என்றும் ஒரு வகையில் சொல்லலாம்.
மற்றுமொரு வடிவில் சிகண்டியின் அன்னையாக அவளாகும் தருணம் வெண்முரசுக்கேயான தனித்துவத்துடன் கவித்துவத்துடன் முகிழ்கிறது.
‘அவன் பிம்பத்தை தன்னுள் வாங்கிச்சுருட்டிக்கொண்ட கிண்ணக்குமிழ் போல அவள் அவனை தன்னுள் அள்ளிக்கொண்டாள். மடியில் அதைப்பெற்று அள்ளி மார்போடணைத்து முலையூட்டினாள்‘
சிகண்டி அம்பையின் குழந்தையாகும் தருணமது.
‘கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”’ என்று தொடங்கும் அக்னிவேசரின் கூற்றின் மூலம் தந்தையைக் கொல்ல விழையும் அக்கணமே காலமாக ஆகிய மைந்தன் என சிகண்டியைக் காட்டுகிறது முதற்கனல்.
பேரன்னையாக விளங்கும் கொற்றவையாகவும்,பீஷ்மரைக் கொல்ல பிறப்பித்த சிகண்டியின் அன்னையாகவும் இருமுக அன்னையாக அம்பையைக் காண்கிறோம். ஆனால் உர்வரையாக பீஷ்மரையே காக்க முனையும் அன்னையின் மற்றுமொரு மூன்றாம் முகத்தையும் நுட்பமாக காட்டிச் செல்கிறது முதற்கனல்.
பிறப்பால் மச்சர்குலத்தவளான சத்யவதி விழைவால் ஒரு தூய சத்ரிய அன்னையாக பேருரு கொள்வது முதற்கனலில் நிகழ்கிறது. முழுத் தகுதி கொண்ட தேவவிரதனை வனத்திற்கு அனுப்பி தன் குருதியினரை முன்னிறுத்தும் அவளின் ஆளுமை நாவலுக்குள்ளேயே இராமனை காட்டுக்கு அனுப்பி பரதனை நாடாளச் செய்த கேகய அரசியுடன் ஒப்புநோக்கப் படுகிறது. சத்யவதியின் மனநிலையின் மூன்று தருணங்கள் எவ்வாறு மூன்று வேறு வேறு ஆளுமை கொண்ட வியாசர்,சித்ராங்கதன், விசித்திரவீர்யன் என்ற மூன்று மைந்தர்களாக உருவாகுகிறார்கள் என்பது வாசிக்குந் தோறும் நமக்குள் ஆழமாக விரிவது.
தன் குருதி மண்ணாள வேண்டுவதற்காக அவள் இயற்றும் ஆணைகளை காட்டிக் கொண்டே செல்கிறது முதற்கனல்.
விசித்திரவீர்யன் பகடியாக சொல்லும் ஓரிடம் “அன்னையே, இந்தக் கோடைகாலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே” ஆணைகளால் எவ்வாறு அஸ்தினபுரியை நடாத்தி செல்கிறாள் எனக் காட்டுவது அது.பிடித்தமான மைந்தனாகிய பரசுராமனால் கொல்லப்பெறும் அன்னை ரேணுகையின் கதையையும் பிடித்த சித்ராங்கதனின் இறப்புக்கு காரணமாகும் சத்யவதியையும் உடன்நிறுத்தி முதற்கனல் நமக்கு காட்டும் சித்திரம் சத்யவதி எவ்வாறு பெருவலிவுடைய கொல்வேல் பேரரசப் பேரன்னையாக திகழ்கிறாள் என்பதே.
சத்யவதியின் எதிர் முனையாக கங்கையைக் காணலாம். மச்சர் குலத்திலிருந்து எழுந்து வந்து அஸ்தினபுரியின் அரியணையமர்ந்து பாரதவர்ஷத்தையே ஆளும் பெருவிழைவு கொண்ட மனவலிவும் திறனும் கொண்ட அரசன்னையாக சத்யவதியைக் காண்கிறோம்.கங்கையோ தான் பிறந்த மலைநாட்டையும் கங்கையையும் கடக்க முடியாதவளாக வருகிறாள்.காளிந்தியின் வண்ணம் கொண்டவள் சத்யவதியென்றால் கங்கையின் வண்ணம் கொண்ட தெய்வத்தன்மை கூடிய பெண்ணாக வரும் கங்கை மலைநிலத்திற்கும் சமநிலத்திற்கும் இடையே ஊசலாடும் அன்னையாக பரிணமிக்கிறாள். இழந்த குழந்தைகளை சுமந்து கொண்டே பரிதவிக்கும் கங்கையின் மைந்தன் தேவவிரதன் அன்னையைப் போலவே தன் உடன் பிறந்தோரை தோளிலிருந்து இறக்க இயலாதவராய் காண்கிறோம்.கங்கையின் தத்தளிப்பும் ,ஏழு குழந்தைகளை இழந்த பெரும் பாரமும் ,மலைநாட்டுக்குரிய அவளின் வெல்லவியாலா பெரு உடல் வலிமையும் பீஷ்மர் என்ற மைந்தனின் உருப்பெறுகிறதெனலாம்.
சூரியனில் தகிக்கும் சிபி நாட்டு சுனந்தை சூரியஒளியை விலக்கும் தேவாபிக்கு அன்னையாகும் விந்தையைக் காட்டுகிறது முதற்கனல். சுதந்திரமாய் சுற்றியலைந்த சிபிநாட்டு இளவரசி கட்டுண்ட அஸ்தினபுரியின் அரசியாக நேரும்போது அவளைடையும் மூன்று மனநிலைகள் தேவாபி சாந்தனு பால்ஹீகன் என மூன்று மைந்தராகும் பரிணாமத்தை நாவல் காட்டி விரிந்து செல்கிறது.
விசித்ரவீர்யனில் தான் விழையும் பெருவலுவை ஏற்றிப் பார்க்கும் நுண்தருணத்தை திருதராஷ்டிரன் என்ற மைந்தனாகப் பெற்றெடுக்கிறாள் அன்னையாகிய அம்பிகை.தனது குழந்தைமையால் களித் தோழனாக, கைப்பாவையாக விழையும் கணவனின் உருவையே பாண்டு என்னும் மைந்தனாகப் பெறுகிறாள் அன்னை அம்பாலிகை.
காவியங்கள் கற்ற சிவை காவியமியற்றும் ஒருவருடனேயே இணையப் பெறும் வாய்ப்பை பொற்தருணமாக்கி நிறைமதியின் பூரண அறிவுடைய மைந்தனைப் பெற்றெடுக்கும் அன்னையாகிறாள் .
ரஜோ,தமோ, சத்வ மூன்று குணங்களின் தருணத்தை அம்பை,அம்பிகை,அம்பாலிகை என்ற மூன்று தேவியரைப் பெறும் புராவதி அன்னை. அம்பை நிலையெண்ணி அவள் சிதையேறும் வரை அன்னையின் தூய பேரன்பை அவளில் உணரலாம்.
இவ்வாறு அன்னையரின் நிரையையும்,அவர்களின் மக்களின் நிரையுமே முதற்கனலாகக் காணும் தருணத்தில், மானசா தேவியை விசாலாட்சியன்னையாகவும் ஜெயமோகனை ஆஸ்திகனாகவும் காணலாம். அன்னையின் நுண்விழைவே மைந்தனின் வெண்முரசென்னும் பருவடிவம் எனலாம்.
சிவமீனாட்சி செல்லையா
January 26, 2023
தமிழவன் -தமிழ்ச்சிந்தனையின் மடிப்புமுனையில்…
[ 1 ]
குமரிமாவட்டத்தின் அறிவுக்கொடைகளில் ஒருவர் தமிழவன். நான் பணியாற்றிய, என் குடும்ப வேர்கள்கொண்ட பத்மநாபபுரத்திற்கு அருகே பிறந்தவர். நேரடியாக அவருடைய புனைவுகளில் குமரிமாவட்டம் குறைவாகவே வந்திருக்கிறது. அறிவுக்களமாக அவர் பாளையங்கோட்டையையும் பின்னர் பெங்களூரையுமே கொண்டிருந்தார். எனினும் அவரை குமரிமாவட்டம் உரிமை கொண்டாட முடியும் என்று நினைக்கிறேன். இருபதாண்டுகளுக்கு முன்பு நண்பர் பச்சைமால் அவர்கள் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் கூட்டிய ஒரு கூட்டத்தில் குமரிமாவட்ட எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்றாக ஒரே மேடையில் அமரச்செய்தார். சுந்தர ராமசாமி, நீலபத்மநாபன் முதல் நான் வரை அங்கே அமர்ந்திருந்த நினைவு எழுகிறது. என் விமர்சனநூல் ஒன்றை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
தமிழவனின் புனைவுலகு, விமர்சன உலகு பற்றி விரிவாக எழுதவேண்டும் என்பது என் இருபதாண்டுக்கால திட்டம். அது தவறிச்சென்றுகொண்டே இருக்கிறது. இந்த தருணத்தில் சுருக்கமாக அவருடைய கொடை என்ன என்று வகுத்துக்கொள்ள இயலுமா என்று பார்க்கிறேன். பின்னாளில் விரித்து எழுதுவதற்குரிய முன்வரைவாக இது இருக்கவேண்டும். நான் எழுதவந்த எண்பதுகளில் தமிழில் அதிகமாகப் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று தமிழவன். அவருடன் முரண்பட்டு எதிர்நிலையில் நின்று விவாதித்தே நான் என்னை உருவாக்கிக்கொண்டேன். சற்று காலம் கடந்தே அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டவற்றை பற்றிய தெளிவை அடைந்தேன். ஆகவே இது என்னுடைய புரிதல்களை நானே மதிப்பிட்டுக்கொள்வதும்கூட.
தமிழவனின் அறிவுச்செயல்பாட்டை புனைவு, விமர்சனம் என இரண்டாகப் பிரிக்கலாம். அதில் முதன்மையானது இலக்கிய விமர்சனமே. இலக்கிய விமர்சனத்திலேயேகூட அவருடைய கோட்பாட்டு அறிமுகக் கட்டுரைகளும் நூல்களுமே முதன்மையானவை. அவர் தமிழில் நினைவுகூரப் படவிருப்பது முதன்மையாக அவர் இங்கே அறிமுகம் செய்து, விவாதங்களை உருவாக்கிய இலக்கியக் கோட்பாட்டுகளின் வழியாகவே. இலக்கியக் கோட்பாட்டாளர், இலக்கிய விமர்சகர், இலக்கியப் படைப்பாளி என்னும் வரிசையில் அவரை நாம் மதிப்பிடலாம்.
தமிழவன் இலக்கியக் கோட்பாடுகளை தமிழில் முன்வைத்து விவாதித்த சூழலை இன்று விளக்க வேண்டியிருக்கிறது. அன்றைய இலக்கியக் கருத்துக்களம் இரண்டாகப் பிரிந்து ஒன்றுடனொன்று தீவிரமான உரையாடலில் இருந்தது. இலக்கியத்தை முழுக்க முழுக்க அகவயமான ஒரு செயல்பாடாகக் காணும் தரப்பு ஒருபக்கம். இலக்கியத்தை முழுக்க முழுக்க புறவயமான செயல்பாடாகக் காணும் மார்க்ஸியத் தரப்பு இன்னொரு பக்கம் என சுருக்கமாக வகுத்துக் கொள்ளலாம் அகவயப்பார்வை கொண்டவர்களை அழகியல்வாதிகள் என்றும் புறவயப்பார்வை கொண்டவர்களை பொதுவாக முற்போக்குத் தரப்பினர் என்றும் சொல்லலாம்.
அந்த இரு தரப்பினரின் குணாதிசயங்களையும் இந்தச் சித்தரிப்புக்காக இருமுனைப்படுத்தி அமைத்துப் பார்க்கலாம். இருசாராருமே அன்று வெளியுலகம் அறியாமல் சிற்றிதழ்களுக்குள்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அழகியல்வாதிகள் மணிக்கொடி, எழுத்து, கசடதபற என சிற்றிதழ்களை நடத்தினர். முற்போக்கினர் சரஸ்வதி, சாந்தி, தாமரை, நிகழ், படிகள் என சிற்றிதழ்களை நடத்தினர். ஆனால் இந்த அணிபிளவு முழுமுற்றானது அல்ல. இங்கிருப்பவர்கள் அங்கும் அங்கிருப்பவர்கள் இங்கும் எழுதுவது சாதாரணம். சுந்தர ராமசாமி தூய அழகியல்வாதி, அவர் சரஸ்வதியில் இருந்து வந்தவர். நான் என்னை அழகியல்வாதி என்றே சொல்லிக்கொள்வேன். நான் அதிகமும் நிகழ் இதழிலேயே எழுதினேன்.
தமிழிலக்கியத்தின் அழகியல்நோக்கு வ.வே.சு அய்யரிடமிருந்து தொடங்குகிறது. அதன்பின் ரா.ஸ்ரீ.தேசிகன், ’ஹிந்து’. சுப்ரமணிய அய்யர் என சில பெயர்களுக்குப்பின் அத்தரப்பை ஒரு வலுவான இலக்கியமரபாக நிலைநாட்டியவர்கள் க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவரும். வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, நகுலன், வேதசகாயகுமார் என அந்த விமர்சன மரபுக்கு ஒரு தொடர்ச்சி அமைந்தது. தமிழ் முற்போக்குத் தரப்பு எஸ்.ராமகிருஷ்ணன், நா.வானமாமலை, கைலாசபதி. கா.சிவத்தம்பி, சி.கனகசபாபதி என ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டது.
இந்த அரைநூற்றாண்டு அறிவு விவாதத்தில் தமிழகக் கல்வித்துறைக்கு அனேகமாக எந்தப்பங்கும் இல்லை என்பதைச் சொல்லியாகவேண்டும். சி.கனகசபாபதி, தமிழவன், வேதசகாயகுமார் உட்பட பலர் கல்வித்துறை சார்ந்தவர்களே ஆனாலும் அவர்கள் கல்வித்துறைக்கு வெளியே வந்து பேசியவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு கல்வித்துறை அடையாளமோ, அங்கே ஏற்போ இருந்ததில்லை. இந்த விவாதத்தில் திராவிட இலக்கியம் ஊடாடவே இல்லை. சிலருக்குத் திராவிட இயக்கத்தின்மேல் ஈடுபாடு இருந்தது என்று வேண்டுமென்றால் சொல்லலாம். திராவிட இயக்கத்தின் தரப்பு என ஒன்று இந்த விவாதத்தில் ஒலிக்கவில்லை. தமிழின் பிரபலமான வணிக எழுத்துலகம் முற்றிலும் தொடர்பில்லாமல் வேறெங்கோ கல்கி முதல் சுஜாதாவரை ஒரு தனிச் சரடென ஓடிக்கொண்டிருந்தது.
இந்த விவாதம் அதன் ஓர் உச்சநிலையில் தெளிவான துருவப்படுத்தலாக மாறியது. அழகியல்வாதிகள் புறவுலகை அகம் நிகழும் களம் மட்டுமே என்று மதிப்பிட்டனர். அகத்திற்கு படிமங்களை அளிப்பதற்கு அப்பால் அது ஆற்றுவதொன்றுமில்லை. அன்றைய அழகியல் பார்வையை மூன்று அலகுகளால் ஆனது என வகைப்படுத்தலாம். தனிமனிதன், வடிவம், தத்துவம். தனிமனிதனின் அகவுலகின் வெளிப்பாடே இலக்கியம். அது சரியாக அமைவதே வடிவம். அவ்வடிவத்தினூடாக அது சென்றடையும் ஒட்டுமொத்தமான பார்வையே தத்துவம். இந்த மூன்று அலகுகளும் நவீனத்துவத்திற்கு உரியவை. எண்பதுகள் தமிழ் நவீனத்துவத்தின் உச்சக் காலகட்டம்.
தனிமனிதனை அடிப்படை அலகெனக் கொண்டமையால் சமூகம் தனிமனிதனை எப்படிப் பாதிக்கிறது, அவனில் எப்படிச் செயல்படுகிறது என்றே அன்றைய அழகியல்வாதிகள் கருத்தில் கொண்டனர். சமூகம் என்பதே தனிமனிதர்களின் தொகை என கருதப்பட்டது. அன்றைய புனைகதைகளின் அழகியல் வடிவம் என்பது தனிமனித அகம் செயல்படும் இயக்கத்தின் மொழிப்பதிவே. நகுலனின் நினைவுப்பாதை, சு.ந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் ஆகியவை வெறும் அகவெளிநிகழ்வுகளால் ஆனவை. சமூகச்சலனங்களைச் சொல்லும் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு, ஆதவனின் என்.பெயர் ராமசேஷன் போன்ற நாவல்களும் கூட தனிமனிதனுக்குள்ளேயே நிகழ்கின்றன.
அந்தத் தனிமனிதன் கண்டடையும் அகமெய்மையே இலக்கியத்தின் தத்துவமாக இருக்கமுடியும் என்று அழகியலாளர் நம்பினர். அதை தரிசனம் என்றனர். அதைக் கண்டடையும் எழுத்தாளனின் அகநுண்மையை உள்ளொளி என்றனர். ஆகவே அன்றைய அழகியல்சார்ந்த இலக்கிய விமர்சனம் என்பது இரண்டு அளவீடுகளால் ஆனது. ஒன்று வடிவம். இன்னொன்று உள்ளொளியின் விளைவான தரிசனம். ‘நல்லா அமைஞ்சு வந்திருக்கு’ என்பது ஓர் இலக்கிய பாராட்டு. அதற்குமேல் படைப்பாளியின் உள்ளொளி வெளிப்படும் தருணங்கள் கருத்தில் கொள்ளப்படும். அதற்கு அப்பால் ஒட்டுமொத்தமாக அப்படைப்பின் தரிசனம் என்ன என்பது தொகுத்துரைக்கப்படும்.
மறுபக்கம் முற்போக்குத் தரப்பினர் தனிமனிதன் என்பதையே மறுத்தனர். தனி அகம் என ஒன்றில்லை. இருப்பது சமூகம் மட்டுமே. அது அடிப்படை பொருளியல் விசைகளால் இயங்குவது. அப்பொருளியல் விசைகளின் விளைவாக சமூகம் எப்படி இயங்குகிறது, சமூகத்தின் பகுதியாக மனிதன் எப்படி இயங்குகிறான் என்று பார்ப்பது மட்டுமே இலக்கியத்தின் பணி என்றனர். ஒருவனை தொழிலாளி என்றோ முதலாளி என்றோ குட்டிமுதலாளி என்றோ வகுத்துக் கொள்வது அவனை அறுதியாக புரிந்துகொள்வதுதான் என்று நம்பினர். ஆகவே இலக்கியப் படைப்பில் முதன்மையாக வெளிப்படவேண்டியது ஒரு வாழ்க்கைக் களத்தின் அடிப்படையான பொருளியல் கட்டுமானமும், அதன் பொருளியல் விசைகளும்தான் என வாதிட்டனர். இலக்கிய ஆக்கங்களையே அவ்வாறு வாசித்தனர்.
உதாரணமாக இரு வாசிப்புகளைச் சொல்லலாம். அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு நாவல் ஓர் இளைஞனின் ‘வயதடைதல்’ சார்ந்தது என்பது அழகியல் மதிப்பீடு. அவன் தன்சூழலில் இருந்து தன் அகத்தை பிரித்துக் காணும் தருணம், தன்னுள் தன் தனித்துவத்தை கண்டடையும் தருணம் அதன் உச்சம். அதன் பின் அவன் சிறுவனல்ல, தனிமனிதன். ஆனால் முற்போக்குப் பார்வையில் அவன் ஒரு குட்டிபூர்ஷுவா. வரலாற்றின் முன் செயலற்று நின்றிருப்பது குட்டிபூர்ஷுவாவின் இயல்பு. அவன் அந்த தருணத்தை அடைவதே அந்நாவலின் உச்சம். அதற்கப்பாலுள்ள அவனுடைய அகநிகழ்வுகளெல்லாம் வெறும் பாவனைகள் மட்டுமே.
ஒருபக்கம் அழகியல் தூய்மைவாதம், இன்னொரு பக்கம் மார்க்ஸியக் குறுக்கல்வாதம். ஒரு பக்கம் தனிமனிதவாதம் இன்னொரு பக்கம் சமூகவாதம். ஒருபக்கம் வடிவவாதம் மறுபக்கம் உள்ளடக்க வாதம். ஒருபக்கம் மனித சாராம்சம் என்ன என்னும் வினா. இன்னொரு பக்கம் மனிதாபிமானப் பிரச்சாரம். இவ்வாறு அது பெருகிச்சென்றது. விவாதம் வசையாகி வசை விவாதமாகியது. இன்று அவ்விவாதத்தில் சில கவனத்திற்குரியவையாக எஞ்சுகின்றன. மு.தளையசிங்கத்தின் முற்போக்கு இலக்கியம் மற்றும் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி. வெங்கட் சாமிநாதனின் மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல், இசைக்கும் ஃபாஸிசத்திற்குமான உறவு குறித்து வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி தரப்புக்குமான விவாதங்கள்.
இதில் இரு தரப்பினருக்குமே போதாமைகள் இருந்தன. அவற்றை இப்படிச் சுருக்கிக்கொள்ளலாம். அழகியல்வாதிகளுக்கு சில தனிப்பட்ட கலைச்சொற்கள் இருந்தன, அவை அவர்களுக்குள் பொருள் அளித்தன. அவர்களால் கலைநிகழ்வை, வடிவஒருமையை, உள்ளொளியை புறவயமாக வரையறை செய்ய முடியவில்லை. அவற்றை முழுமையாக புறவயமாக வரையறை செய்துவிட முடியாதுதான். ஆனால் வரையறைக்கே அவர்கள் முயலவில்லை. ஒரு விவரிப்பு எப்போது எப்படி படிமம் ஆகிறது, ஒரு சொல் எப்படி அர்த்தவிரிவு கொண்டு கவித்துவத்தை நிகழ்த்துகிறது, ஒரு படைப்பு எப்படி பன்முக வாசிப்புக்கு ஆளாகிறது, ஒரு படைப்பாளியின் உள்ளத்திற்கும் மொழிவடிவ வெளிப்பாட்டுக்குமான உறவு என்ன, எந்த வினாக்களையும் அவர்கள் சந்திக்கவில்லை. அவற்றைப் புறவயமாகப் பேச முடியாது என்று சொல்லி கடந்துசென்றனர்.
முற்போக்கினரைப் பொறுத்தவரை மனிதர்களின் அந்தரங்கமான பெரும்பாலான உணர்வுகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே அவையெல்லாமே வெறும் பாவனைகள் அல்லது பிரமைகள் என அவர்கள் கடந்து சென்றனர். ஒரு மலர் மனிதனுக்கு அளிக்கும் மகிழ்ச்சி எதனால் நிகழ்கிறது? காதல் கொண்டவன் அடையும் பரவசம் என்ன? மனித உணர்வுகளை ஆட்டிப்படைக்கும் நான் என்னும் பிரக்ஞையின் ஊற்றுக்கண் என்ன? மொழியில் இருந்து மனிதர்கள் பெற்றுக்கொள்ளும் அர்த்தம் தொடர்ந்து வளர்வது எப்படி? எந்த வினாவையும் இடதுசாரிகள் எதிர்கொள்ளவில்லை. அவையெல்லாமே தனிமனிதனின் உள்ளத்தில் நிகழும் பொருளில்லா உணர்வுகள் மட்டுமே என்று கூறினர். ’ஒரு ரோஜா அளிக்கும் இன்பத்தை விளக்க மார்க்ஸியத்தால் இயலாது’ என்ற வரி அன்று புகழ்பெற்றது.
முற்போக்குத் தரப்பை பொறுத்தவரை பொருளியல் என்பது உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் ஆகியவற்றாலானது. உற்பத்தி, வினியோகம் ஆகியவற்றின் பொருட்டு சமூகக் கட்டமைப்பு உருவாகிறது. சமூகக் கட்டமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டு அதற்கான உணர்வுகளை சமூகம் உருவாக்கிக் கொள்கிறது. எல்லா உணர்வுகளும் அவ்வாறு உருவாக்கப்பட்டு நீடிப்பவை. அவற்றின் பல்லாயிரம் திரிபு நிலைகள், வளர்ச்சிநிலைகளையே அழகியல்வாதிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இருமுனைப் போரில் கோவை ஞானி ஒரு முக்கியமான இடைநிலைக் குரல். முற்போக்குத் தரப்பில் இருந்து எழுந்து அழகியல் வினாக்களை எதிர்கொண்டவர் அவர். தனிமனிதனை வெறும் சமூகக்கொள்கைகள், பொருளியல் கொள்கைகளைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாது என்று அவர் கூறினார். தனிமனிதனின் அழகியல் நாட்டத்தை, அகவயத்தேடல்களை, தன்னுணர்வின் நிலைகளை மார்க்ஸியச் சட்டகத்திற்குள் நின்று அறிந்துகொள்ள முயன்றார். அதன்பொருட்டு ஐரோப்பிய மார்க்ஸியத்தை கருத்தில் கொண்டார். ஆனால் அவருடைய இலக்கிய விமர்சனம் மரபான மார்க்சிய விமர்சனப் பாணியிலேயே அமைந்திருந்தது.
தமிழவனின் பங்களிப்பு இந்தச் சந்திப்புமுனையில்தான் நிகழ்ந்தது. நா.வானமாமலையின் மாணவராக ஓர் இளம் மார்க்சியராகவே அவர் இலக்கிய விமர்சனத்திற்குள் நுழைந்தார். தொடக்ககால விமர்சனங்கள் எல்லாமே இலக்கிய ஆக்கங்களில் பொருளியல் அடிப்படைகளை, அதன் விளைவான அரசியலைக் கண்டடையும் முயற்சிகள்தான். ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் ஞானியை தொடர்ந்து அவர் மேலைமார்க்சிய கருத்துக்களுக்குள் சென்றார். அங்கிருந்து அல்தூசர் வழியாக அமைப்பு வாதத்தைச் சென்றடைந்தார். பின்நவீனத்துவச் சிந்தனைகளை தமிழில் தொடங்கி வைத்தார்.
பழையகால கேரள இல்லங்களில் மூலைக்கட்டை என்று ஒன்று உண்டு. இரு சுவர்களின் சந்திப்புமடிப்பில் கூரையின் மூலைஉத்தரத்தை தாங்கி சுவரில் அமைந்திருப்பது. அதற்கு கல்லை வைக்க மாட்டார்கள், கல் காலப்போக்கில் எடைதாளாமல் விரிசலிடும். எடைதாளக்கூடிய காஞ்சிரம், அல்லது தோதகத்தி மரக்கட்டைகளை வைப்பார்கள். நூற்றாண்டுகளுக்குப் பின் வீட்டை இடித்து விற்கும்போது அந்த கட்டைகளுக்கு தனிவிலை இருக்கும். பலசமயம் அந்த வீட்டில் மீண்டும் பயன்படுத்தும்படி அவையே எஞ்சியிருக்கும். தமிழ்ச்சிந்தனையுலகின் ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தின் மூலைக்கட்டை என தமிழவனைச் சொல்ல முடியும்
[ 2 ]
தமிழவனின் கோட்பாட்டுச் செயல்பாட்டை ‘கோட்பாட்டு அறிமுகம்’ என்று சுருக்கிவிட முடியாது. இயல்பாக அந்த வார்த்தை வந்தாலும்கூட அதிலுள்ள படிநிலைகளை நாம் கவனம் கொள்ளவேண்டும். ஓர் அயல்சூழலில் உள்ள சிந்தனையை எளிமையாக, அடிப்படைகளை சுருக்கி இன்னொரு சூழலுக்கு அறிமுகம் செய்யும் நூல்களை நாம் நிறையவே வாசித்திருப்போம். தமிழவனின் நூல்கள் அத்தகையவை அல்ல. அவை தமிழில் அன்றிருந்த இலக்கிய – அரசியல் விவாதங்களை கூர்ந்து அவதானித்து, அவற்றின் வினாக்களுக்கு விடைகளாகவும் வேறுவகை ஆய்வுமுறைமைகளாகவும் முன்வைக்கப்பட்டவை.
தமிழவன் மேலைமார்க்ஸியத்தின் அன்னியமாதல் கோட்பாட்டையும் பின்னர் அமைப்புவாதத்தையும் அன்றைய அறிவுச்சூழலில் ஒரு வலுவான தரப்பாக கொண்டு வந்து நிறுத்தினார். அதன் வழியாக அன்றைய விவாதங்களை நிலைகுலையச் செய்தார். அத்துடன் தன்னுடைய சீண்டும்தன்மை கொண்ட விமர்சனங்கள் வழியாக அவற்றை தவிர்க்கமுடியாத குரல்களாகவும் நிலைநாட்டினார். அதன் வழியாக மொத்த விவாதத்தையும் நிலைமாற்றம் அடையச் செய்தார். அவருடைய முதன்மைப் பங்களிப்பு என இந்த விவாத ஊடுருவலையே சொல்லவேண்டும்.
தமிழவனின் தரப்பை சுருக்கமாக இவ்வாறு கூறலாம். அவர் அல்தூசரில் இருந்து தொடங்குகிறார். உழைப்பின் படைப்பூக்கத்தில் இருந்து மனிதன் அன்னியமாகிறான். விளைவாக ஆளுமைப்பிளவை அடைகிறான். சமூகக் கட்டமைப்பினால் அவன் அடிமைப்படுகிறான். அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் பொருட்டு இன்னொரு அகத்தை கற்பனையால் உருவாக்கிக் கொள்கிறான். அன்னியமாதல்- அதை வெல்லும்பொருட்டு உருவாக்கிக்கொள்ளும் இணைஆளுமை என்னும் இரு நிலைகளில் இன்றைய மனிதனின் அகநிகழ்வுகளை புரிந்துகொள்ள முடியும்.
மனிதன் ஒரே சமயம் வரலாற்றின் பெருக்கிலும் இருக்கிறான். அவனுடைய அகம் அதற்கு எதிரான உருவகங்களையும் சமைத்துக் கொண்டிருக்கிறது. அதையும் தன் ஆளுமையாகக் கொண்டிருக்கிறான். அவன் அவ்விரு விசைகளின் சமநிலைதான். இயல்பாக சமூகக்கட்டமைப்பு, அதற்கு ஆதாரமான பொருளியல் அடித்தளம் இரண்டும்தான் மனிதனின் பண்பாட்டை தீர்மானிக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து மீறி எழுந்து அவன் உருவாக்கிக் கொள்ளும் அகத்தின் தேடலும் பண்பாட்டை தீர்மானிக்கிறது.
மனிதனின் பண்பாட்டுத் தன்னிலை என்பது முழுக்க முழுக்க பொருளியல்-சமூக அடித்தளத்தால் உருவானது அல்ல. அதற்கு தனக்கான தனித்தேடலும் தனியடையாளமும் இருக்கலாம். ஆகவே பொருளியல் அடித்தளமானது பண்பாட்டு மேற்கட்டுமானத்தை எப்படித் தீர்மானிக்கிறதோ அதற்கிணையாக பண்பாட்டு மேற்கட்டுமானமும் பொருளியல் அடிப்படையைத் தீர்மானிக்கக்கூடும்.
ஆகவே இலக்கியங்களை வெறுமே பொருளியல்- சமூகவியல் அடிப்படையில் அணுகலாகாது. அவை தனிமனிதனில் வெளிப்படும் தேடல்களும் கண்டடைதல்களும் அடங்கியவையே. அவற்றின் போக்கு தன்னிச்சையானது, ஆராயத்தக்கது, பொருளியல் அடிப்படையில் குறுக்கப்படவேண்டியது அல்ல. ஆனால் அது உள்ளொளியாலோ வேறுவகை ஆன்மிகத்தாலோ நிகழ்வது அல்ல. அதை மறைமுகமாக நிகழ்த்துவதும் பொருளியல்- சமூகவியல் சூழல்களே. அன்னியமாக்குதலினூடாக. அவற்றுக்கு புனிதமோ மர்மமோ ஒன்றுமில்லை.
இந்தக் கருத்துக்களில் இருந்து எழுந்த மேலதிக வினாக்கள் ஒரு இலக்கியப்பிரதி எப்படி உருவாகிறது என்பது. எது ஒரு மொழிக்கட்டுமானத்தை இலக்கியப் படைப்பாக ஆக்குகிறது? எது ஒரு நேரடியான பிரச்சார எழுத்தில் இருந்து இலக்கியப் படைப்பை வேறுபடுத்துகிறது? இலக்கிய ஆக்கமும் வாசிப்பும் அகவயமாக எப்படி நிகழ்கின்றன? உள்ளொளி என்றும் வடிவக்கச்சிதம் என்றும் அழகியலாளர்களால் சொல்லப்படுவன புறவயமாக எப்படி வரையறை செய்யப்படத்தக்கவை?
இக்கேள்விகளுக்கு விடை தேடி தமிழவன் அமைப்புவாதத்திற்குள் சென்றார். மிகயீல் பக்தினின் ரஷ்ய உருவவாதம், சசூரின் குறியியல் ஆகியவற்றினூடாக பின்னர் ரோலான் பார்த்தின் அமைப்புவாதத்தைச் சென்றடைந்தார். 1982ல் பாளையங்கோட்டையில் இருந்து வெளிவந்த ஸ்டக்சுரலிசம் என்னும் நூல் அவ்வகையில் முன்னோடியானது. தொடர்ச்சியாக அந்நூலை ஒட்டி விமர்சனங்களையும் விவாதக்குறிப்புகளையும் எழுதினார். அதன் வழியாக ஒரு முழுமையான ஊடுருவலை நிகழ்த்தினார்.
சிக்கலான புதியகொள்கைகள் கொண்ட அந்நூலின் உள்ளடக்கத்தை மிகச்சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். மொழி நேரடியாக சொல் – அதன் பொருள் என்னும் முறைப்படி இயங்கும் ஒரு கருவி அல்ல. அது ஒரு மாபெரும் கட்டமைப்பு. அது இரு பகுதிகளால் ஆனது. பரோல் எனச் சொல்லப்படுவது ஒலிக்குறிகளால் ஆன கட்டமைப்பு. அந்த ஒவ்வொரு ஒலிக்குறியும் சுட்டும் குறிப்பொருட்களால் ஆனது லாங் எனப்படும் அகமொழிக் கட்டுமானம். அதுவே பண்பாடு என்றும் உள்ளம் என்றும் சொல்லப்படுகிறது. உள்ளம், பண்பாடு ஆகியவை மொழியன்றி வேறல்ல.
ஒவ்வொரு சொல்லும் ஒரு குறி. அக்குறியால் குறிப்பிடப்படுவன சமூகத்தின் கூட்டான உள்ளத்தில் உள்ளன. ஒரு சொல்லை அச்சொல் குறிக்கச்சாத்தியமான அதிகபட்ச பொருள்விரிவுடன் அமைப்பதே படைப்புச் செயல்பாடு என்பது. அச்சொற்களால் ஆன புனைவுக்கட்டுமானமும் அவ்வாறே அமைக்கப்படுகிறது. அதுவே படைப்பின் நுண்செயல்பாடு, அதில் மர்மமோ புனிதமோ ஒன்றுமில்லை. மொழிதல் என்பதே சொற்களைக் கொண்டு அர்த்த உற்பத்தி செய்வதுதான். புனைவு என்பது மேலதிக அர்த்த உற்பத்தி செய்வது. அந்த அர்த்தமென்பது வாசிப்பின்போதுதான் முழுமையடைகிறது.
அமைப்பியல் என ஸ்டக்சுரலிசத்தை தமிழவன் மொழியாக்கம் செய்தார். பின்னர் வந்த அறிஞர்கள் அமைப்புவாதம் என்பதே சரி, அமைப்பியல் ஒரு கொள்கையே ஒழிய தனியான அறிவுத்துறை அல்ல என்று வகுத்தனர். அமைப்பியலின் கொள்கைகளின்படி ஒரு சொல்லானது சொல்லுதல், புரிந்துகொள்ளுதல் என்னும் இரு தளங்களிலும் எப்படிப் பொருளேற்றம் செய்யப்படுகிறது, என தமிழவன் விளக்கினார். தொடர்ச்சியாக நிகழும் இச்செயல் அதற்குப் பின்புலமாக உள்ள மொழி என்னும் மாபெரும் கட்டமைப்புக்குள் நிகழ்கிறது.
உதாரணமாக மலர்நெஞ்சம் என்னும் ஒரு சொல் கவிதையில் பயன்படுத்தப்படுகிறது. மலர் என்பதற்கு மொழியின் பண்பாட்டுப் பின்புலம் பல அர்த்தங்களை ஏற்கனவே கட்டமைத்துள்ளது. நெஞ்சம் என்பதற்கும் அவ்வாறே. மலர்நெஞ்சம் என்னும் இணைப்பு அவ்விரு அர்த்தப்புலங்களையும் இணைத்து புதிய ஒன்றை உருவாக்குகிறது. இது சாதாரண உரையாடலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இலக்கியச் செயல்பாடு என்பது மேலும் பயிற்சி கொண்டவர்களான உள்வட்டத்தினருக்குள் நிகழும் திட்டமிட்ட நுண்மையான மொழிச்செயல்பாடுதான்.
தமிழவனுக்குப்பின் தமிழில் பின்அமைப்புவாதமும் பின்நவீனத்துவக் கொள்கைகளும் முன்வைக்கப்பட்டன. மொழியை ஓர் அமைப்பாக காணும் பார்வை மறுக்கப்பட்டது. ஒரு கூற்று என்பது ஒரு சொற்கட்டமைப்பு அல்ல ஒரு சொல்விளையாட்டு மட்டுமே, அதன் அர்த்த உருவாக்கமும் அர்த்த ஏற்பும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்னும் தெரிதாவின் பார்வை முன்வைக்கப்பட்டது. அவ்விவாதங்கள் எல்லாம் தமிழவன் தொடங்கிவைத்த மொழியியல் நோக்கின் நீட்சியாகவே இங்கே நிகழ்ந்தன.
தமிழவனின் இந்த ஊடுருவலின் மதிப்பு என்ன? அவை ஒரே சமயம் அழகியல் பார்வையில் இருந்த பொதுக்கூற்றுக்களையும் புனிதப்படுத்தல்களையும் உடைத்தன. இலக்கிய அழகியல் செயல்பாடு என்பது புரிந்துகொள்ள முடியாத அகவயநிகழ்வு மட்டுமே என்னும் பார்வையை அறைகூவின. அவற்றை மொழி என்னும் புற- அகக் கட்டுமானத்தின் விதிகளைக் கொண்டு விளக்கிவிட முடியும் என்று காட்டின. ஒரு கவிதை எப்படி எழுதப்படுகிறது, எப்படி பொருள் கொள்ளப்படுகிறது என்பதை பெரும்பாலும் காட்டிவிடமுடியும் என நிறுவின.
தமிழ் அழகியல் விமர்சனம் அதன்வழியாக அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்றது. மிகச்சிறந்த உதாரணம் வேதசகாய குமார். அவர் தமிழவனின் எதிர்த்தரப்பு. ஆனால் பிற்கால விமர்சனங்களில் அவர் பண்பாட்டையும் படைப்புச் செயல்பாட்டையும் அகநிகழ்வாக மட்டுமன்றி சமூகப்பொருளியல் காரணிகளையும் கருத்தில் கொண்டு, பண்பாட்டுக் குறியீடுகளின் துணையுடன் விளக்கத்தலைப்பட்டார். அவரிடம் தமிழவனின் நேரடிச்செல்வாக்கு உண்டு.
அதேபோல முற்போக்கு நோக்கில் இருந்த எளிய அரசியல்மையப் பார்வையை மறுத்தன. அழகியலை புறவயமாக அணுகும் புதிய முறைமையை அவை காட்டின. ஆனால் துரதிருஷ்டவசமாக முற்போக்கு அணியில் அவை பெரிய அளவில் செல்வாக்கு என எதையும் செலுத்தவில்லை. அவர்கள் இலக்கியத்தை அணுகிய பார்வையில் மாற்றமும் உருவாகவில்லை. இன்னமும் அதே இயந்திரத்தனமான அரசியலணுகுமுறையே நீடிக்கிறது. சொல்லப்போனால் எதிரிகளும் கவனித்துப் பயிலும்படி தமிழவன் உருவாக்கிய பார்வையில் இருந்து மிகமிக பின்சென்று எளிய மேடையரசியல், வசைபாட்டு வெளியாக முற்போக்கு விமர்சனம் உன்று உருமாறியிருக்கிறது.
தமிழவனின் கோட்பாட்டு விவாதச் செயல்பாடுகளில் இரு நிலைகள் கவனிக்கத்தக்கவை. ஒன்று அவர் கோட்பாடுகளை அறிமுகம் செய்தபின் அவற்றை பழந்தமிழ் இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தின்மேல் செயல்படுத்திக் காட்டி எழுதிய கட்டுரைகளும் நூல்களும். தமிழவன் அமைப்புவாத அடிப்படைகளின்படி சங்ககால அழகியலையும் தொல்காப்பிய திணைக்கொள்கையையும் அணுகி விரிவான ஆய்வுகளை முன்வைத்திருக்கிறார். நவீன இலக்கிய விமர்சனத் தளத்தில் இருந்து சென்று திணைக்கொள்கையை புதிய முறையில் பார்த்து விளக்கிய முதல்விமர்சகர் அவர்.
ஏற்கனவே அதன் முன்னோடி வடிவை ஐயப்பப் பணிக்கர் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதியிருந்தாலும் தமிழவனின் பார்வை முழுமையாகவே மொழியியலின் அமைப்புவாத நோக்கில் அமைந்தது. தமிழர்களின் தனித்த அழகியல்பார்வை என அதை அவர் வரையறை செய்கிறார். பின்னர் அந்த நோக்கில் இருந்து மொத்த தமிழிலக்கிய மரபையும் தொல்காப்பிய மரபுடனான இணக்கம், விலக்கம் என்னும் அளவுகோலைக் கொண்டு விளக்குகிறார்.
கோட்பாட்டை அறிமுகம் செய்து, அதை பிரயோகித்தும் பார்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் தமிழ் பண்பாட்டு ஆய்வில் முக்கியமானவை. அவ்வரிசையில் மூன்று நூல்களை குறிப்பிடவேண்டும். புனைவு நிகழ்வதை- வாசிக்கப்படுவதை மொழியியல் கொள்கைகளின்படி விளக்க முற்படும் ‘படைப்பும் படைப்பாளியும்’ குறியியியலின் பார்வையில் தமிழ்தொல்லிலக்கியங்களை ஆராயும் ’தமிழும் குறியியலும்’, பிற்கால மொழிதல் கோட்பாடுகளின் அடிப்படையை முன்வைக்கும் ’தமிழில் மொழிதல் கோட்பாடு.’
தமிழவனின் கோட்பாட்டு விவாதங்களின் இரண்டாவது நிலை என்பது கோட்பாடுகளை அவர் இங்கே கொண்டுவரும்போது இயல்பாக உருவாகும் மாற்றம் அல்லது திரிபு. இதை புரிதல்குறைபாடு என நான் இருபதாண்டுகளுக்கு முன்பு மூலங்களுடன் ஒப்பிட்டு வாசிக்கையில் எண்ணினேன். இன்று அந்த மாற்றம் அல்லது திரிபின் வழியாகவே ஒரு கோட்பாடு இன்னொரு பண்பாட்டுச் சூழலில் செயல்பட முடியும் என நினைக்கிறேன். அந்த மாற்றம் அல்லது திரிபு அவருடைய படைப்பூக்கம் கொண்ட பங்களிப்பென இன்று மதிப்பிடுகிறேன்.
மிகவிரிவாகவே இந்த அம்சத்தை ஆராயவேண்டும். இங்கே ஓர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். குறியியல் மொழிக்குறிகளை முதன்மையாக்கி பண்பாட்டை ஆராயும் அறிவுமுறை. தமிழவன் திணைக்கோட்பாட்டை ஆராயும்போது பண்பாடுக்குறிகள், வரையறைகளை முதன்மைப்படுத்தி மொழிக்குறிகளை அதன் தொடர்விளைவுகளாக பார்க்கிறார். திணைக்கோட்பாடு பற்றிய அவருடைய எல்லா குறிப்புகளிலும் இந்த உருமாற்றத்தைக் காணமுடிகிறது. அதாவது திணைப்பகுப்பு என்பது தமிழரின் வாழ்வில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தே நிகழ்ந்து மெல்ல மொழிக்குறியாக மாறிய ஒன்று என மதிப்பிடுகிறார்.
உண்மையில் அறிஞர் என்னும் நிலையில் இருந்து மூலச்சிந்தனையாளர் என தமிழவன் உருமாறும் இடம் இதுவே. இந்தத் தளத்தில் அவருக்குப் பின்னால் வந்த ஆய்வாளர்கள்தான் நிறைய நோக்கி எழுதியிருக்கவேண்டும், அவருடைய பங்களிப்பை வரையறை செய்திருக்கவேண்டும். என்னைப்போன்ற புனைவெழுத்தாளன், அழகியல் இலக்கிய விமர்சகன் செய்யவேண்டிய பணி அல்ல அது. அதை இங்கேச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழவன் தொடக்கம் முதலே கருத்துப்பூசல் [polemics] தன்மை கொண்ட கட்டுரைகளை நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய கோட்பாட்டு ஆய்வுகளின்மேல் கவனத்தை ஈர்க்க்க, விவாதத்தை முனைப்பாக்க அவை உதவின. ஆனால் எனக்கு இலக்கியத்திலுள்ள கருத்துப்பூசல்களுக்கு ஒரு சிறு பங்களிப்பு உண்டு என்னும் எண்ணம் இருக்கிறது. கோட்பாட்டு – தத்துவக் களத்தில் அவை என்ன பயன் அளிக்கின்றன என்று தெரியவில்லை. அவற்றை நான் கருத்தில்கொள்வதில்லை.
பின்னாளில் தமிழவன் தமிழ்த்தேசிய அரசியலை ஒட்டி நிறைய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அவர் முப்பதாண்டுக்காலம் முன்வைத்த ஆய்வுமுறைமைகள் இல்லாத எளிய அரசியல் துருவப்படுத்தல்களும் மேலோட்டமான அரசியல் நிலைபாடுகளும் கொண்டவை அவை. அவற்றையும் நான் கருத்தில் கொள்ளவில்லை.
தமிழவனின் ஆய்வுமுறைமையை நான் ஆழ்ந்து வாசித்து மேலும் மூலநூல்களை படித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். அதை எப்போதும் குறிப்பிடுவதுமுண்டு. என்னை ஓர் அழகியல்வாதியாக, தமிழவனுக்கு எதிர்நிலை கொண்டவனாகவே குறிப்பிடுவேன். அவ்வகையில் அவரிடமிருந்து பெற்றவற்றை தொகுத்துக்கொள்ள விழைகிறேன்.
புனைவின் உருவாக்கமும் வாசிப்பும் எந்நிலையிலும் தன் மர்மங்களை முழுமையாக கடந்துவிடுவதில்லை என நான் நினைக்கிறேன். அது ‘புனிதமானது’ அல்ல. அது ஒருசிலருக்கு மட்டுமே உரியது என்பது அசட்டுத்தனம். ஆனால் சொல்லித்தீராத ஒரு மர்மம் கொண்ட, வருங்காலங்களிலும் முடிவில்லாமல், விவாதிக்கப்படுகிற ஒன்று அது என்பதே என் புரிதல். அமைப்புவாதமும் குறியியியலும் அதை முற்றிலும் மர்மநீக்கம் செய்துவிட்டதாக தமிழவன் எண்ணுவது அவருடைய நிலைபாடு, அவ்வளவே.
அமைப்புவாதமும் பின்அமைப்புவாதமும் வந்து வலுவிழந்தபின்னர் மூளைநரம்பியலில் இருந்து அழகியலை வகுத்துரைக்கும் கொள்கைகள் வந்தன. ஆலிவர் சாக்ஸ், வில்லியனூர் ராமசந்திரன் போன்ற அறிவியலாளர்கள் அக்கொள்கைகளை மிக விரிவாக முன்வைத்தனர். இன்று அடுத்தகட்டமாக உயிரியல் சார்ந்து மூளையையே ஒரு தனி உயிரியாகக் கண்டு அழகியலை அதன் வெளிப்பாடு என வகுக்கும் உரையாடல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
தமிழவன் பேசிக்கொண்டிருந்தபோதே பின்நவீனத்துவத்தின் வரலாற்றுநோக்கு குறுகலானது என வரையறை செய்யப்பட்டுவிட்டது. தமிழவன் ஓர் அமைப்புவாதி என்னும் வகையில் மொழியில் உறையும் வரலாற்றை மட்டுமே அவர் கருத்தில்கொள்கிறார், அது அந்த அறிவுத்துறையின் நெறிகளுக்கு உகந்ததே. ஆனால் பின்அமைப்பியலுக்கு பின்னர் புதுசரித்திரவாதம் போன்றவை எழுந்து வந்து ஒட்டுமொத்த வரலாற்றொழுக்கை கருத்தில் கொண்டாகவேண்டும் என்ற நிலையை சிந்தனையில் உருவாக்கின.
முற்போக்குத் தரப்பினரின் மரபான வரலாற்றுவாதமும் அதன் விளைவான அறுதியான கூற்றுக்களும் இன்றைய இலக்கியத்தில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. வரலாற்றுப்பிரக்ஞை மேலும் விரிந்த வடிவில் மேலும் நுண்ணியவகையில் இன்றைய சிந்தனையில் பங்காற்றுகிறது. இன்றைய எழுத்தை வடிவமைப்பதே ஆசிரியனின் வரலாற்றுணர்வே. சென்ற இருபதாண்டுகளில் வெளிவந்து நூலகங்களில் நிறைந்திருக்கும் நூல்களை மேலோட்டமாக பாருங்கள், பெரும்பாலும் அனைத்துமே ஏதோ ஒருவகையில் வரலாற்றைக் கையாள்பவை. புனைவும் புனைவிலா எழுத்தும்.
எத்தனை நுண்ணிதின் சென்றாலும் உருவவாதம், அமைப்புவாதம், பின்அமைப்புவாதம் ஆகியவை அனைத்துமே அமெரிக்க பிரதிமையவாதம் அல்லது புதுத்திறனாய்வு முறையின் நீட்சிகள்தான். பிரதியை, அதன் மொழிக்கட்டமைப்பை மட்டுமே கருத்தில்கொண்டு ஆராய்பவை அவை. பிரதிக்குள் மிதமிஞ்சிச் செல்லும் வழியை தவிர்த்து அதை வரலாற்று அடுக்குகளுக்குள் வைத்துப்பார்க்கும் புதுவரலாற்றுப் பார்வை தமிழவன் அமைப்புவாதத்தை அறிமுகம் செய்த காலத்திலேயே வந்துவிட்டது.
வரலாறு என்பது ஒரு புறவயமான கட்டமைப்பு அல்ல. அது வரலாறுகளின் தொகுப்பு. வரலாறுகளின் மோதலும் முயக்கமும் நிகழும் முரணியக்கத்தின் வெளி. ஒவ்வொரு புனைவும் ஒரு துளி வரலாறுதான். வரலாற்றில் இருந்துகொண்டு வரலாற்றைப் புனையும் ஒரு தொடர்செயல்பாடே புனைவெழுத்து என்பது. புனைவின் சொற்களுக்கு பொருள்வெளி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


