Jeyamohan's Blog, page 636
January 30, 2023
தீயரி எசமாரி- கடிதம்
கடந்த ஞாயிறு காலை… வரிசையாக இரண்டு நாள் விடுமுறை என்பதால் தூக்கம் கலைந்தாலும் சோம்பலுடன் படுக்கையிலே இருந்தேன். எப்பொழுதும் நான்தான் என் ஐந்து வயது மகனை துயிலில் இருந்து எழுப்புவேன். அன்று அவன் எழுந்து தூக்கமும் விழிப்புமாக உள்ள என்னுடன் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தான். திடீர் என்று ‘தீயாரி எசமாரி’ என்று பாட ஆரம்பித்து விட்டான். எனக்கு தூக்கம் போயே போச்சு… அவனை அள்ளி சேர்த்துக்கொண்டு ‘இந்த பாட்ட எங்கடா கேட்ட? என்றேன்.
‘தமிழ் படத்துலதான்… நாம போனோமே!’ என்றான்.
‘அந்த படம் உனக்கு ஞாபகம் இருக்கா…?’
‘அதெல்லாம்… ஞாபகம் இருக்கும்’ என்றான்.
நாங்கள் ஹைதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ பார்த்து அப்போதைக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகின்றன. படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே என்னுடைய 11 வயது பெண் ‘சோ… அப்பா’ என்று அலுத்துக்கொண்டு இருந்தாள். வெளியில் வந்த பிறகு என்ன வென்று கேட்டால்… ‘படம் புரியல அப்பா’ என்றாள் ‘உனக்கு தமிழ் புரியும்தானே!’ என்றேன். ‘மொழி இல்லப்பா… அந்த கேரக்டர்ஸ்…’ என்று சொன்னாள்.
என் மனைவியுடன் கேட்டேன்… ‘படம் நல்லாதான் இருக்கு’ என்று சொன்னாள். அவள் ஏ.ஆர். ரகுமானுக்கு மிகப்பெரிய விசிறி. அவள் வாழ்க்கையின் ஆதர்ஷ ஆண் அவர்தான். நான் ஏதாவது கோபப்பட்டாலோ, பெண்களை பற்றி ஒரு மாதிரி பேசினாலோ ‘ரகுமான் இப்படி பேசுவாரா… எல்லாரும் அவர் மாதிரி ஜென்டில் மேனா வரமுடியாது!’ என்பாள். அவரின் இசை இருந்தால் எல்லா படமுமே நல்ல படம் தான் அவளுக்கு… ‘எல்லாம் பார்த்துதான் அவர் பண்ணுவாரு!’ என்பாள்.
அன்று இந்த படத்தை பற்றி எதுவும் பேசாமல் வந்தது என் பையன் மட்டும்தான். அவனின் ஐந்துவயது மூளையில் பதிவானவை இப்பொழுதுதான் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. எங்களுக்கு அவனின் வளர்ச்சிமீது ஏதோ ஒரு சிறிய சந்தேகம் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. மூன்று வயதில் அவனுக்கு பேச்சு வரவில்லை. ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணரிடம் சென்றோம். ‘ஆட்டிசம் இருக்கலாம்’ என்று சொன்னார். அப்படியே ஆடிப்போய் விட்டோம். இரண்டு நாள்… கண்ணீருடன்தான் கடந்தோம். மூன்றாவது நாள்… ஆட்டிசம், வளர்ச்சிக்கான பரிட்சைகளுக்கு சென்றோம். அவனை பார்த்த உடனேயே ‘இவனுக்கு ஆட்டிசம் எல்லாம் இல்லீங்க’ என்றார் அங்குள்ள நிபுணர். இருந்தும் பல்வேறு தரவுகளுடனும், பெற்றோராக எங்கள் இருவரின் அந்யோனியத்தையும் கருத்தில் கொண்டு ’26 பாய்ண்ட்ஸ்’ போட்டார். அந்த பாயிண்ட்ஸ் 30 தாண்டினால் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் இருப்பதாக சொல்வார்கள். இவன் அதில் இல்லை என்றாலும்… ஸ்பீச் தெரபி, occupational therapy கொடுக்க சொன்னார். அப்படியே செய்தொம். ஆறு மாதத்துக்குள் பேச்சு வந்தது. இப்பொழுது நிறுத்தாமல் பேசிக்கொண்டு இருக்கின்றான். கடந்த வருடம் முதல் பள்ளியிலும் சேர்த்து விட்டோம். இப்பொழுது யூகேஜீ. அவ்வப்போது தெரபி-க்கு செல்கிறான். இதை பற்றி மீண்டும் உங்களுக்கு விரிவாக எழுதுகிறேன் ஜெ.
எங்களின் இந்த அனுபவங்களினால், அவனை எப்பொழுதும் சிறிய பதற்றத்துடன் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அவனின் சிறிய ‘அறிவுத்திறன்’ வெளிப்படும் எந்த தருணங்களும் எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். அன்று காலையில் அவன் ‘தீயாரி எசமாரி’ பாடிய பிறகு எனக்கு ஏற்பட்டதும் அவ்வாறான மகிழ்ச்சியே. இத்தனைக்கும் அவன் படத்தை பார்த்த பிறகு மீண்டும் அந்த பாடலை கேட்கவே இல்லை!
அன்று காலை, நானும் அவனும் கடைக்கு சென்று வந்து கொண்டு இருந்தோம்.
‘அப்பா… படத்தில் அவரை கொலை செய்வாரே யாரு. பெரிய கத்தியோட… ரத்தம் எல்லாம் வருமே’ என்றான். ‘ஆதித்த கரிகாலன் என்று சொன்னால் அவனுக்கு உச்சரிப்பு வராதோ என்று நினைத்து ‘விக்ரம்’ என்றேன்.
குதிரையில் போவாரெ… தீயாரி எசமாரி பாட்டுல அவரு?’
‘வந்திய தேவன்’ என்றேன்.
‘அவரை தெலுங்கில என்ன சொல்லுவாங்க’ என்றான்.
‘தெலுங்கிலும் வந்திய தேவன் தான்’ என்று சொன்னதும்… ஏனோ சிரித்து விட்டான்.
இப்பொழுதெல்லாம்… ஞாயிறுகளில் ‘ராட்சச மாமனே’ பாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
மொழி புரியாத போதும்… இசையுடனேயே இந்த படம் உலகத்தில் உள்ள சிறுவர்களுக்கு ரகுமான் சேர்த்து விட்டார் என்று நீங்கள் சொன்னதை பார்த்த பிறகு… இதை பகிரலாம் என்று தோன்றியது.
அன்புடன்,
ராஜு
இந்து வெறுப்பு – கடிதம்
இனிய ஜெயம்
சமீபத்தில் ட்ரெண்டிங் ஆன உங்களது காணொளி தொடர்பாக ஒரு தோழர் அழைத்திருந்தார். ” நானும் இந்து மத வெறுப்பாளன்தான். உங்க ஆசான் சொன்ன கோடிகளை கொடுக்கும் முதலாளிகள் அட்ரஸ் கொடுத்தா நானும் ஒரு ரெண்டு மூணு கோடி வாங்கிக்குவேன்” என்றார் . காலாய்ச்சிட்டாராமாம்.
நான் சொன்னேன் ” முதலில் ஒன்றை சொல்பவருக்கு அதை சொல்லி ‘மக்கள் ஆதரவு திரட்டும் ஆற்றல் ‘ இருக்க வேண்டும். உங்கள் சொல்லை மட்டும் அல்ல, உங்களையே அவசரத்தில் உங்கள் மனைவி குழந்தை கூட மறந்து விடவே வாய்ப்பு மிகுதி. பாப்புலர் முகம் நோக்கி, அதை உருவாக்கி வைத்திருக்கும் திராணி உள்ளவனை நோக்கி, இத்தகு கோடிகள் தானாகவே தேடி வரும். மாறாக உங்களை போன்றோருக்கு பிச்சை கூட கிடைக்காது” என்றேன் அவர் கொதித்து ங்கோ என்று துவங்குகையில் துண்டித்து விட்டேன்.
இத்தகு அசட்டு செக்’கூலி’யர்கள் தான் இந்து பண்பாட்டின் முதல் எதிரி. மிக சாதாரணமாக புதுவையில் சண்டே மார்க்கெட் பகுதியில் பழைய புத்தக கடையில் பல நூல்களை பார்க்க முடியும். ” இந்தியா : தோமா வழி வந்த ஒரு கிறிஸ்துவ நாடே” “வள்ளுவர் ஒரு கிறிஸ்துவரே” ” இந்து வேதத்தின் பிரஜாபதி ஏசுவே” என்றெல்லாம் தலைப்பு கொண்டிருக்கும். உள்ளே புரட்டிப் பார்த்தால் அதன் பின்னணி முழுவதுமாகவே இருக்கும். இதை அடிப்படையாக கொண்டு ஆய்வு ஆதரவு நல்கிய பல்கலை கழகங்களின் வரிசை எல்லாம் அதில் உண்டு. இந்த அசட்டுத்தனங்களை ஆய்வு ஆதாரங்கள் என்று இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பரவ வைக்கவே பல்வேறு முதலீடுகள் இன்றுவரை தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. நாமும் சித்தாந்த சைவம் என்றால் என்ன என்று அந்த துறையில் வல்லமை அறிஞர்களை விட்டு விட்டு மேற்கண்ட வகை ஆய்வுகளை நம் தலையில் கொண்டு வந்து கொட்டும் கிறிஸ்துவ போதாகர்களை கேட்டுக்கொண்டு திரிவோம்.
சில வருடம் முன்பு டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் என்றொரு நூல் வெளியானது. இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்தேறிகள் என்று அண்மைய மரபணு ஆய்வுகள் நிறுவி விட்டன என்று சொல்லி ‘ஆரிய மரபணு’ உடைய எண் இதுதான் என்று அந்த நூலாசிரியர் சொல்லி இருந்தார். நூலாசிரியர் மரபணு அறிவியலாளர் அல்ல. ஒரு பத்திரிக்கையாளர். இந்திய ‘பன்மைத்துவம்’ மேல் மட்டற்ற பற்று கொண்டு ஒரு சேவையாக இதை எழுதி இருக்குறார். இதோ இன்று நமித் ஆரோரா என்பவர் எழுதிய இந்திய நாகரீகம் என்றொரு நூல் வந்திருக்கிறது. அவருக்கு தொழில் பொட்டி தட்டுவது. இந்திய பன்மைத்துவத்தின் மீதான பற்றுறுதி காரணமாக அண்மைய தரவுகள் எப்படி ஆரியர்கள் வந்தேறிகள் என்று நிறுவி இருக்கிறது என்று எடுத்தியம்பி இருந்தார். தவறாமல் சில வருடம் முன்னர் வந்த டோனி ஜோசப் நூல் அதில் மேற்கோள் மற்றும் உசாத்துணை வரிசையில் இடம்பிடித்திருந்தது. இங்கே இந்தியாவில் மரபணுவியல் போல இந்த துறை சார்ந்த ஆய்வாளர் குரல் நோக்கி எவருமே செவி கொள்ள மாட்டார்கள். ஆனால் மேற்கண்ட குப்பை நூல்கள் இந்தியாவின் செப்பு மொழி பதினெட்டிலும் வாசிக்கக் கிடைக்கும்.
இந்துமதம் என ஒன்றில்லை. இன்று இந்தியாவில் இவ்வாறு நாம் காணும் சாதி உள்ளிட்ட அனைத்தையும் சதி செய்து உருவாக்கியவர்கள் ஆரியர்கள். அவர்கள் வந்தேறிகள். வேதத்தில் சிவன் கிடையாது. ஆகவே சிவனை முதன்மை கொண்ட சைவம் இந்து மதத்தில் சேராது. வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்கம் இந்து மதத்தில் சேராது என்று பேச இன்று பல பத்து ஆதார பூர்வமான ‘ஆய்வுகள்’ இங்கே உண்டு. அதன்படி இந்துமதம் எனும் தொகுப்பை டிஸ்மாண்டில் செய்து விட முனைவதே இங்குள்ள பிரச்சார போக்குகள் கொண்டிருக்கும் இலக்கு.
இந்துக் கலாச்சாரம் இந்தியப் பண்பாடு உள்ளிட்ட ஒவ்வொரு அலகிலும் இதுதான் இன்றைய சிக்கல். 2019 பிப்ரவரியில் நான்கு வன உயிர் பாதுகாப்பு அமைப்புகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்திய வனக் குடிகளின் வன வாழ்வு உரிமை முற்றிலும் ரத்தானது. இந்த நான்கு அமைப்புகள் வாய் பின்னால் இருக்கும் மூளை எவருடயது? பீட்டா யார்? டில்லி போலவே தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க தடை சொல்லி கேட்டு ஒரு அமைப்பு வேலை செய்து கொண்டு இருக்கிறது. இத்தகு வழக்கு நிலவரங்கள் எதிலும் இந்திய சூழலியலாளர்கள் கருத்தை இந்திய நீதி அரசு அமைப்பு ஏன் கேட்பதே இல்லை?
இந்துப்பண்பாடு ஓடையாய் கிளம்பி பெரு நதியாக கிளைவிரிக்குந்தோறும் ஒவ்வொரு ஞானிகள் தோன்றி அதை மீண்டும் சங்கிரஹம் செய்வர். பௌத்தத்தின் அத்தனை கிளைகளையும் தத்துவம் வழியே வென்று ஒருங்கு செய்தவர் நாகார்ஜுனர். கிளை பரப்பி அகன்று அகன்று சென்ற சமயங்களை ஒன்றிணைத்தவர் சங்கரர். மெய்மைக்கான அனைத்து வெவ்வேறு பாதைகளையும் ஒருங்கு கூட்டியது கண்ணனின் பகவத் கீதை. வரலாறு நெடுக இது இவ்விதம்தான். இன்று இந்தியாவின் சாராம்சமான அதை முற்றிலும் புறக்கணித்து, அதிகார வெறியின் பொருட்டு, தலை பெருக்கி ஓட்டு வாங்கும் வசதி நோக்கி , மதப் பண்பாட்டை வெற்று அரசியலாக மாற்ற அனைத்து தரப்பும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்தியமரபு மீதான காழ்ப்பு இந்தியாவை பீடித்திருக்கும் தொழுநோய். இந்துத்துவ அரசியல் இந்தியா மேல் கவிந்திருக்கும் கேன்சர் கட்டி. இரண்டில் எந்த ஆதிக்கம் வென்றாலும் அது இந்து மதத்தின் இந்துப் பண்பாட்டின் அழிவே. இந்த இரண்டுக்கும் வெளியே ஒவ்வொரு இந்தியப் பண்பாட்டின் அலகிலும் வாழ்வை அதற்கு ஈந்த அறிஞர்கள் இங்கே உண்டு. அமைப்பு பலமோ ஆதரவோ பிரபலமோ இல்லாத அவர்களின் குரல் மிக மிக மெல்லியது. ஆனால் அது மட்டுமே, அதை பொது மனம் செவிமடுப்பது மட்டுமே, இங்கே மீட்சிக்காக எஞ்சி இருக்கும் ஒரே வழி.
கடலூர் சீனு
இந்து மெய்மை வாங்க
—————————————————
ஏழாம் உலகத்து மக்கள்
ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது. கையில் கிடைத்ததும் உடனே எடுத்து வாசிப்பு பட்டியலில் அடுக்கிவிட்டேன். ஆனால் ஏனோ அந்நாவல் வரிசையில் இருந்து விரைவிலேயே முன்னகர்ந்து என் வாசிப்பிற்கு வந்துவிட்டது.
அன்று நாவலை வாசிக்க ஆரம்பித்த சமயம் என்னால் சில பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. அதன் மொழி எனக்கு சிக்கலாக இருந்தது. போதாததற்கு அந்த இளம் வயதில் முதல் பக்கத்திலே எல்லாம் புரிந்துவிட வேண்டும் என்ற பேராசையும் இருந்தது. ஆனால் அதன் பிறகு வாசிப்பு கொடுத்த அனுபவம் தைரியமாக இந்நாவலை இன்று வாசிக்க வைத்தது.
இயக்குனர் பாலாவின் நான் கடவுள்; இந்நாவலைத் தழுவிதான் எடுக்கப்பட்டது என்பது தெரிந்த ஒன்றுதான். அதுவும் அப்போதைய வாசிப்பு தடைக்கு காரணமாக இருந்திருக்கலாம். அதான் கதை தெரிஞ்சிப்போச்சே எதற்கு புத்தகமாகவும் வாசிக்க வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணத்தை வேறெப்படி சொல்ல.
இன்று இந்த நாவலை வாசிக்கும் போதும் கூட சில பக்கங்களில் திரையில் பார்த்த முகங்களாகவும் அதே கதாப்பாத்திரங்களாகவும்தான் தெரிந்தன. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க, மனதில் இருந்த நான் கடவுள் காணாமல் போய்; ஏழாம் உலகத்திற்குள் நுழைந்து விட்டேன். இந்நாவலை தவறவிட்டிருந்தால் எத்துணை பெரிய இழப்பாகியிருக்கும்.
நம்மால் சகிக்க முடியாத நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத போகிற போக்கில் நாம் விசும் சில்லறைகளை வாழ்வாதாரமாக அமைத்துக்கொள்ளும் பிச்சைக்காரர்களின் கதை; அவர்களின் வாழ்வு: அவர்களின் துயரம் இது. இயற்கையாக அல்லாமல் கல்நெஞ்சம் படைத்தவர்களால் கையுடைத்து காலுடைத்து கண்கள் குருடாக்கி பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டவர்களின் கதை.
வாசிப்பின் இடையில் என்னால் தொடர்ந்து வாசிக்க இயலவில்லை. கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ஒரு வாசகனாக மட்டுமல்லாமல், நானும் ஒரு ஆளாக அவர்களுடன் இணைந்துவிட்டேன்.
மனிதர்களின் பல்வேறான முகங்களை நாவலின் போக்கில் ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
வாசிக்கையில் பிச்சைக்காரர்களுக்காக அழுவதா அல்லது அவர்களை வதைக்கும் மனிதமிருகங்களைச் சபிப்பதா என்கிற திண்டாட்டம் இருக்கவே செய்தது.
தனக்கு லாபம் வருகிறது என்பதற்காக மனிதர்கள் எதற்கும் துணிவார்கள். தன் அதிகாரம் தன் தேவை பொருட்டு எல்லோரு மீதும் பாய்வார்கள் போன்ற மனித அவலங்களை மனம் கணக்கும்படி ஏழாம் உலகம் காட்டுகிறது.
உடல் சிதைந்த பிச்சைக்காரர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் நம்மையும் சிரிக்க வைக்கிறது. அவர்களால் சிரிக்க முடிகிறதே என வருந்தவும் வைக்கிறது. அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஆளுக்கொரு பதில் இருக்கவே செய்யும் என்ற தளத்தை மெல்ல மெல்ல நாவல் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இனியும் இந்த துயர வாழ்வை வாசிக்கத்தான் வேண்டுமா என எண்ணும் பொழுது நாவல் அதன் முடிவை நெருங்கிவிட்டது.
இந்நாவல் குறித்து அதிகம் பேச வேண்டியுள்ளது. பலரும் எழுதியிருக்கிறார்கள். இனியும் எழுதப்போகிறார்கள். ஏனெனில் ஒரு மனிதனை சிதைத்து அதன் வழி பணம் பார்க்கும் இன்னொரு மனிதன் இருக்கின்றவரை இந்த நாவலில் ஆயுள் நீண்டுகொண்டிருக்கும்.
இன்னும் சொல்வதென்றால் நாவலில் முடிவில் முத்தம்மையின் அலறல் மனித மிருக கொடுரங்களின் உச்சம்….
தயாஜி
http://tayagvellairoja.blogspot.com/2022/09/blog-post_91.html
January 29, 2023
பழங்குடிகள் என்ன ஆவார்கள்?
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
ப்ரூனோ மன்ஸர் பற்றிய தமிழ் விக்கி பதிவை படித்துவிட்டு, அவரை பற்றிய டாக்குமெண்டரி ‘Bruno Manser-Laki Penan’ பார்த்தேன். அதன் இறுதியில் பழங்குடிகள் நவீன வாழ்க்கைக்குள் செல்வதை பார்த்து மனம்நொந்து ப்ரூனோ ‘Batu Lawi’ மலைகளுக்குள் சென்று மறைந்துவிடுகிறார்.
உங்களது குகைகளின் வழியே பயண நூலில் சட்டிஸ்கர் பழங்குடிகளை நவீன வாழ்க்கைக்குள் கொண்டு வரவேண்டிய தேவையை எடுத்து கூறியிருப்பீரகள். திரு. ராம்குமார் அவர்கள் உங்களை எடுத்த பேட்டி ஒன்றில் tribal life -> folk life -> feudal life -> modern life (capitalism) என்ற வரிசையில் சங்க இலக்கியத்தின் தொகுப்பு முறைபற்றி விளக்கிகொண்டிருந்த போது மனம் டக்கென்று அந்த வரிசையை பழங்குடிகள் நேராக tribal life -> modern life (capitalism) க்குள் வரநேர்வதை பிடித்துகொண்டது.
என்னுடைய சந்தேகம் இதுதான் ஐரோப்பா முன்னூறு வருடம் உரையாடி வளர்தெடுத்தது நவீன ஜனநாயக விழுமியங்கள். இந்தியா நிலபிரபுதுவத்திலிருந்து நேரடியாக ஜனநாயக யுகத்திற்குள் வந்து நாம் இன்றுவரை நிலபிரபுத்துவ விழுமியங்களை ஆழமாக சுமந்து நின்றுகொண்டு ஜனநாயக விழுமியங்களுடன் உரையாடலில் இருந்து கொண்டிருக்கும் சமூகமாகவே இருகிறோம் மேலும் தற்போதைய முதலாளித்துவ – நுகர்வு கலாச்சாரம் கருனையின்மையும், தீவிர போட்டி மனப்பான்மையும் கொண்டதாக இருக்கும்போது இதில் உலகம் முழுவதும் பழங்குடி வாழ்க்கையிலிருந்து நேரடியாக ஜனநாயக – முதலாளித்துவ சமூகத்திற்குள் நுழையும் இயற்கையின் ஒரு அங்கமாகவே வாழ பழகியிருந்த இம்மக்கள் நவீன உலகின் கருத்துக்கள், அரசியல், பொருளாதரம் பற்றிய எந்த ப்ரஞ்கையும் இல்லாமல் இதற்குள் தாக்குபிடிப்பது சாத்தியம் தானா?
இந்தியா, மலேசியா போன்ற ஏற்கனவே தீவிரமான போட்டிகள் நிகழும் இரண்டாம் உலக நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அங்குள்ள பழங்குடிகளின் வாழ்வை கருத்தில் கொள்ளுமா? அப்படி நவீன உலகிற்குள் வந்து தங்களை அதற்கு தகவமைத்து கொண்ட பழங்குடிகள் உள்ளனரா?
அன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி
அன்புள்ள வேலாயுதம்,
உண்மையில் இந்த விவாதம் மானுடவியலில் முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. வெரியர் எல்வின் என்னும் காந்தியவாதியான மானுடவியலாளர் பழங்குடிகளின் வாழ்க்கையை ஒரு நவீன அரசு பேணிக்காக்கவேண்டும் என்றும், அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் இயல்பாக வாழ அனுமதிக்கவேண்டும் என்றும், அவர்களே தங்களை மாற்றிக்கொண்டாலொழிய அவர்களை மாற்ற (அதாவது முன்னேற்ற) அரசுகள் முயலக்கூடாது என்றும் சொன்னார். அது வெரியர் எல்வின் கொள்கை (எல்வின் பாலிசி) என அறியப்படுகிறது. இந்தியா கொள்கையளவில் அதை கடைப்பிடிக்கிறது. ஜவகர்லால் நேரு எல்வினின் நண்பர். எல்வினின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவரும்கூட.
எல்வின் கொள்கைக்கு எதிராக மிகக்கடுமையான தாக்குதல்கள் இன்று நிகழ்கின்றன. எல்வின் கொள்கை பழங்குடிகளுக்கு மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம் ஆகிய நவீன வசதிகளை அளிக்காமல் அவர்களை கைவிடுவதாகவே உள்ளது என்றும்; அவர்களும் இந்தியக் குடிமக்களே எனும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் அவை என்றும் வாதிடப்படுகிறது. பழங்குடிகளை ’மேம்படுத்துவது’ அரசின் உரிமை என்றும், அது பிழை என்றால் பழைய கிராமங்களில் இருக்கும் சாதியமைப்பு, பஞ்சாயத்துமுறை, பழமையான வேளாண்மை முறை ஆகியவற்றை அரசு மாற்றியமைப்பதும் பிழைதானே என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.
எல்வின் கொள்கைப்படியே நிகோபார், செண்டினல் தீவுகளிலும் மற்றும் ஒரிசாவின் காடுகளிலும் பழங்குடிகள் விட்டுவிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை ‘நவீன நாகரீகம்’ நெருங்குவதை கட்டுப்படுத்த நம்மிடம் சட்டமும் காவல் அமைப்பும் இல்லை. (அண்மையில் நிகோபாரிகளை மற்றவர்கள் நெருங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது) இந்நிலையில் வணிகர்கள் பழங்குடிகளை அணுகி அவர்களை மது போன்ற பழக்க்கங்களுக்கு அடிமைப்படுத்துவதும், சுரண்டுவதும் நடைபெறுகிறது. அவர்களுக்கு நோய்கள் தொற்றுகின்றன. அவர்களில் பல குடிகள் இன்று அழிவின் விளிம்பில் உள்ளன.
ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்கக் கண்டங்களிலும் பழங்குடிகளை ‘நாகரீகப்ப்படுத்தும்’ முயற்சிகள் நூறாண்டுகளாக நிகழ்ந்தன. அவை கொள்கையளவில் கருணைகொண்ட முயற்சிகளாக இருந்தாலும் மிகக்கொடிய மானுட அழிவுக்கு வழிவகுத்த ஒடுக்குமுறைகளாகவே நடைமுறையில் இருந்தன. (Rabbit-Proof Fence போன்ற படங்களை பாருங்கள்) இன்று அந்த வன்முறை அங்குள்ள முற்போக்கினரால் மிக விரிவாக ஆவணப்படுத்தப்படுகிறது.
மறுபக்கம், பழங்குடிகளை ’நவீனமயமாக்குதல்’ என பேசும் தரப்புகளின் பின்னணி எப்போதுமே ஐயத்திற்குரியதாக உள்ளது. காடுகளை ஆக்ரமிக்கும் தொழிலமைப்புகளின் குரல்களாகவோ அல்லது மதமாற்றச் சக்திகளின் தரப்பாகவோ அவர்களில் பலர் ஒலிக்கின்றனர். இந்தியாவில் ஒரிசாவிலும் மத்தியப்பிரதேசத்திலும் இடம்பெயர்க்கப்பட்ட பழங்குடிகள் எவர்களும் வாழ்க்கையில் முன்னேறவில்லை, புதியசூழலுக்குள் வந்ததில்லை. அவர்கள் அடையாளமின்றி அழிந்துபோவதே நடந்துள்ளது.
இந்த வகை முயற்சிகளின் உச்சகட்ட முன்னுதாரணங்கள் அமெரிக்கா, கனடா நாடுகளின் செவ்விந்தியர்கள். அவர்கள் அந்த அரசால் ‘பேணப்படும்’ காட்சிப்பொருட்களாக, குடிகாரர்களாக தனிப்பட்ட முகாம்களில் மெல்லமெல்ல அழிந்துகொண்டிருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான அவர்களின் பண்பாடு அழிந்து, வெறும் காட்சிப்பொருளாக எஞ்சுகிறது. அவர்கள் வாழ்ந்த இயற்கையுடன் இணைந்த மகிழ்ச்சியான எளிய வாழ்க்கையின் சாயலே கூட அவர்களிடமில்லை. அவர்களை அப்படி அழிக்க ’நாகரீக’ உலகுக்கு என்ன உரிமை என்னும் குரல் அங்கே வலுவாக உள்ளது. ஆனால் அங்கிருக்கும் அமைப்புகளின் நிதியைப்பெறும் இங்குள்ள ‘என்.ஜி.ஓ’ அமைப்புகளே பழங்குடிகளை நாகரீகப்படுத்துவது பற்றிப் பேசுகின்றன.
இங்கே எல்வின் கொள்கை இருந்தபோதிலும்கூட சென்ற ஐம்பதாண்டுகளாக பழங்குடிகள் அணைக்கட்டுகள் போன்ற ‘வளர்ச்சி’ பணிகளுக்காக இடம்பெயர்க்கப்பட்டு அவர்களுக்கு தொடர்பே இல்லாத முகாம்களில் ஒருவகை உதிரிவாழ்க்கைக்கு செலுத்தப்படுகின்றனர். அண்மையில் உலகநிதிய அமைப்புகளின் கட்டாயத்தால் மலைப்பகுதிகள் விலங்குகளின் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு பழங்குடிகள் அங்கிருந்து ஊர்களுக்கு துரத்தப்படுகின்றனர். அவர்கள் அரசதிகாரிகளின் கருணையில் வாழவேண்டியிருக்கிறது. அவர்களின் வாழ்வின் எல்லா களியாட்டங்களும் இன்பங்களும் காடுசார்ந்தவை என்பதனால் அவர்கள் உதிரிகளாக, குடியடிமைகளாக ஆகி அழிகிறார்கள்.
இரண்டு எல்லைகள் நடுவே என்ன செய்வது என்பது ஒரு பெரிய கேள்விதான். இந்திய அரசு ‘அவர்களின் கோரிக்கைக்கு உகக்க உதவுவது’ என்னும் அதிகாரபூர்வ நிலைபாடு கொண்டுள்ளது. அதுவே ஓரளவுக்கேனும் சரியானது என்று படுகிறது. அவர்களுக்கு கல்வி, மருத்துவம், சாலை போன்றவை மறுக்கப்படலாகாது – ஆனால் அவை அவர்கள்மேல் செலுத்தப்படலாகாது. அவர்களை மற்றவர்கள் சுரண்டுவது சட்டபூர்வமாகத் தடுக்கப்படவும் வேண்டும்.
உலகம் முழுக்க நிகழ்வனவற்றை கருத்தில்கொண்டு பார்த்தால் நூறாண்டுகளில் உலகில் பழங்குடிகள், நாடோடிக்குடிகள் இருக்க வாய்ப்பில்லை. தகவல்தொடர்பு – சாலை வசதிகள் உச்சமடைகின்றன. அவற்றிலிருந்து எவர்களும் தப்ப முடியாது. பலநாடுகளில் பழங்குடிகள் மற்றும் நாடோடிக் குடிகள் மறைந்துவிட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டிலும் மற்ற குடிகளைப் போல ‘இயல்பான’ மக்களாக ஆகவில்லை. எங்குமே அவர்கள் நவீன வாழ்க்கையில் பொருந்தவில்லை, வெல்லவில்லை. அவர்களின் பண்பாட்டுத் தனித்தன்மைகளுக்கு இன்றைய நவீன வாழ்க்கையில் எந்த மதிப்பும் இல்லை என்பதுடன் அவையெல்லாம் மிகப்பெரிய பலவீனங்களாகவும் தடைகளாகவுமே உள்ளன. அவர்கள் தங்களை உருமாற்றி, ‘பிறர்’ போல ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களில் சிறப்பாக ‘நடிப்பவர்கள்’ சற்றேனும் வெல்கிறார்கள்.
அதாவது பிற மக்கள் ஐந்தாயிரமாண்டுகளில் அடைந்த மாற்றங்களை அவர்கள் ஐம்பதாண்டுகளில் அடையவேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் அடையாளத்தை, கலாச்சாரத்தை முழுமையாக துறந்துவிட வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் மொழியில் கல்விகற்க முடிவதில்லை. உதாரணமாக, தமிழகப் பழங்குடிகள் தமிழில் கல்விகற்கவேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழ் முழுமையாகவே அன்னியமான மொழி அவர்களுக்கு என்பதை கண்டிருக்கிறேன்.
உங்கள் கேள்விக்கான பதில் இதுதான். இன்றுள்ள சமூக அமைப்பில் பழங்குடிகள் பழங்குடிகளாக இருக்க முடிவதில்லை. அவர்கள் மைய ஓட்டத்தில் கலந்து வாழவும் முடியவில்லை. என்ன செய்வது? எதிர்காலத்தில் அவர்கள் தங்களை உருமாற்றிக்கொள்ளாமலேயே வெற்றியடையக்கூடிய சமூக அமைப்பு உருவாகலாம். அவர்களின் தனித்தன்மைகளே தடையாக ஆகாமலிருக்கும் சூழல் அமையலாம். எத்தனையோ நல்ல மாற்றங்கள் நடந்து வருகின்றன. இதுவும் நடக்கலாம்
ஜெ
எம்.ஆஷாதேவி
[image error]ம.நவீன் எழுதிய சிகண்டி திருநங்கைகளின் உலகை மலேசியச் சூழலில் சித்தரிக்கும் நாவல். அதில் வரும் திருநங்கை ஒருவர் பேரரசியின் நிமிர்வுடன் இருப்பார். அதை வாசித்தவர்களுக்கு இன்னொரு கோணத்தில் எம்.ஆஷாதேவி தோற்றமளிக்கக் கூடும். மலேசிய இந்திய திருநங்கைகளுக்கு அரணாகத் திகழ்ந்தார். திருநங்கைகளால் ‘ஞானி’ என்றும் ‘பாட்டி’ என்றும் அழைக்கப்பட்டவர்.
எம். ஆஷா தேவி
எம். ஆஷா தேவி – தமிழ் விக்கி
கமலதேவியின் ‘ஆழி”
நம்பள்ளி வயதில் கணித வகுப்பில் கைகளில் காம்பஸ்ஸுடன் அமர்ந்த அந்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். தொடங்கிய வட்டத்தை முடிக்கும் பதட்டத்துடன், நம்முடைய அனைத்து புலன்களையும் அந்த சிறுபுள்ளியில் குவித்து அந்த வட்டத்தை நிறைவு செய்யத் தொடங்கினோம். சிலருக்கு முதல் முயற்சியில் சரியான வட்டம் வந்துவிடும். சிலருக்கு சற்று விலகியும், சிலருக்கு மிக விலகியும், இன்னும் சிலர் தொடங்கிய இடத்திலேயே நின்றிருந்தோம்.
கமலதேவி தன் ஆழி தொகுதிக்கு எழுதிய முன்னுரைபெருங்கை, கடிதம்
அன்புள்ள ஜெ.,
தங்களுடைய ‘பெருங்கை’ சிறுகதை நீங்கள் எழுதிய யானைக்கதைகளில் இன்னொரு முத்து.உங்களுடைய ‘மத்தகம்’ குறுநாவலில் மாவுத்தர்களின் பிறழ்வு வாழ்க்கையையையும் அதன் பின்னணியையும் அலசியிருப்பீர்கள். அதே உலகம். ஆனால் அதில் காமம் கொப்பளிக்கும் வாழ்க்கை. இதுவோ பூரணமான காதல் கதை. என்ன, இந்தப் பூர்ணம் ‘வல்லினம் இணைய இதழ்’ இணைப்புச் சுட்டிக்குள் கொழக்கட்டைக்குள் பூர்ணம் போல உள்ளதால் பலரும் தவறவிட வாய்ப்புண்டு.
கதைசொல்லி, சந்திரிகை, ஆசான்,முத்தய்யன், வளையக்காரக் கிழவி, முக்கியமாக ‘கேசவன்’ என்கிற யானை என்றொரு சிறுஉலகத்துக்குள்ளேதான் மொத்தக்கதையும். இருக்கிற ஒற்றை ஜன்னலையும் தன்னுடைய உடலால் மூடி எந்தப்பகலையும் இரவாக்கிவிடுகிற கேசவன்தான் கதைசொல்லியின் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட ஒளிவெள்ளத்தைக் கொண்டுவந்து விடுகிறான்.
“என்ன மேகம் கெளம்பியாச்சுண்ணு தோணுது? இன்னிக்கு மழை உண்டு” என்று கதைசொல்லி புகைபிடிப்பதை கிண்டலடிக்கும் சந்திரிகையின் நகைச்சுவையுணர்வு அவளை அனைவருக்கும் பிடித்துப்போகச் செய்துவிடுகிறது. இன்னொரு இடத்தில் “சாராயம் குடிச்சு நாலு காலுல வந்து சேரும்” என்று அப்பனைப்பற்றிச் சொல்கிறாள். இது ஒன்றும் அத்தனை பெரிய நகைச்சுவை இல்லைதான். நாம் எத்தனை நகைச்சுவையுணர்வுள்ள பெண்களை சந்தித்திருக்கிறோம் என்பதன் பின்னணியில் இதை நினைத்துப் பார்க்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை பூடகமான நகைச்சுவையைப் புரிந்துகொண்டு ரசிப்பதே பெண்களின் அதிகபட்ச நகைச்சுவையுணர்வாகக் கண்டிருக்கிறேன். சத்தம் போட்டுச் சிரிப்பதும், எதைப்பேசினாலும் சிரித்துக்கொண்டே பேசுவதும் நகைச்சுவையுணர்வு இல்லை என்று இவர்களுக்கு யாராவது சொல்லமாட்டார்களா என்று நினைத்துக் கொள்வேன். இப்படிப்பட்ட பெண்களைத்தான் உறவுவட்டத்திலும், அலுவலகத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம்.
மாவுத்தர்களின் பிறழ்வு வாழ்க்கை, அதை இயல்பாக அங்கீகரிக்கும் பெண்கள், யானையோடு பழகிப் பழகி தன்னையும் உடலால் யானையாக உணரும் கதைசொல்லி (அவர்களுடைய பெருங்காமத்திற்கும் அதுவே காரணமாக இருக்கலாமோ?) , யானையின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மரணத்தையும் எதிர்நோக்கியிருக்கும் மாவுத்தன்,வட்டார வழக்கு, நகைச்சுவை என்று இயல்பாக இன்னோரு உலகத்தைப் படைத்துவிடுகிறீர்கள். வெண்முரசில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நீங்களும் கொஞ்சம் இருப்பீர்கள். இதில் நீங்கள் ‘கேசவன்’ தான். பெரும்பாறைகளை வைத்து ‘வெண்முரசு’ போன்ற கோட்டையை எழுப்பிய வேழம் எடுத்துவைத்த ஒற்றை மல்லிகைப்பூ இந்தச் சிறுகதை.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
சுவாமிநாத ஆத்ரேயன் -கடிதம்
அன்பு ஜெ சார். நலமா
முதலில் பொன்னியின் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
இன்று சுவாமிநாதன் ஆத்ரேயன் பக்கம் படித்தேன். முன்பு சில கிறித்துவ இஸ்லாமிய தமிழறிஞர்கள் பற்றிய பதிவுகளையும் படித்தேன்.
விடுதலைப் போராட்ட காலத்தில் ஒளி விட்டுச் சுடர்ந்த பிராமண, கிறித்துவ, இசுலாமிய மகான்களையும் அவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தோடும் இறுகப் பிணைந்து ஒற்றைக்குரலில் முழங்கி ஒட்டுறவாய் குருதியுறவாய் இணங்கி வாழ்ந்த கோலம் நினைத்துப் பார்க்கிறேன்.
இன்று அவர்களெல்லோருமே தனித்தனித் தீவுகளாக ஒதுங்குகிறார்களே. காரணங்களைச் சொல்கிறார்கள்தான். பார்ப்பன வெறுப்பும் கடவுள் மறுப்பும் இடஒதுக்கீடு மூலம் தகுதி தன் தகுதியிழக்க வைக்கப்பட்டதும் பிராமணர்களுக்கு குலப்பகையாகி இன்று இந்துத்வா என்ற ஒற்றைக்குடை கீழ் திரண்டு விட்டார்கள். மறுபுறமும் அதே இந்துத்வா பெயரைச் சொல்லி இசுலாத்திற்குள்ளும் கிறித்துவத்திற்குள்ளும் வெறுப்பைப் பரப்புகிறார்கள்.
குருக்ஷேத்திரம் தொடங்கி உக்ரேன் வரை வன்முறை, ஆயுதங்கள் போன்றவை தீராத துயரையே தரும் என்ற வரலாற்றுப் பாடத்தை மக்கள் உணர்ந்து கொள்ள அவகாசமே தராமல் வெறியூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அவரவர்க்கு அவரவர் ஆதாயம்.
தனிமனிதத் தீவிரவாதத்தை வேரோடொழிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து ஏதுமில்லை என்று நன்கறிந்தும், ஒரு வெடிப்பின் மூலம் தேடியலையும் அரசையும் காவல்துறையையும் மூச்சுவிடக் கூட நேரம் தராமல் கேள்விப்பட்டியல் அரசியல் பண்ணுகிறார்கள்.
கறுப்புக்கொடி காட்டிய கூட்டத்திற்குள் துள்ளிக்குதித்து மின்கம்பத் தூண்மேல் தாவியேறி மக்கள் திரளோடு கலந்த பிரதமர் நேரு. சேறும் சகதியும் நிறைந்த நவகாளித் தெருக்களில் வெற்றுக்காலில் நடந்து வாளேந்திய, வஞ்சம் தாங்கிய கூட்டத்தைக் கட்டித்தழுவி ஆற்றுப்படுத்திய தேசத்தந்தை காந்தி. இதுபோன்ற ஒரு தலைவர் கூட கோவை தெருக்களில் இறங்கி வேலை செய்யவில்லையே. வழிதவறிப் போகும் இளைஞர்களிடம் உரையாடி மடைமாற்ற ஒருவருமில்லையே.
அரசல்புரசலாக இருக்கும் வேறுபாடுகளைக்கூட மறக்கடித்து மக்களனைவரையும் ஒற்றுமையாகவும் சாந்தி சமாதானத்தோடும் வாழவைக்கப் பாடுபடுவோர்களை இனி அரசியல்கட்சிகளில் தேடமுடியாது.
சமுகவலைத்தளங்களின் சக்தி பரந்து கிடக்கும் இந்தக் காலத்தில் அன்பையும் கருணையையும் வலுவான வாதங்களோடு பரப்பும் இணையபக்கங்கள் வேண்டும். மறுபடியும் இங்கு பிராமணர்களும் சிறுபான்மையோரும் அவரவர் தீவுகளை விட்டு ஏனைய மக்களோடு ஒன்றாகி இணங்கி இணைந்து வாழும் நிலை வரவேண்டும்.
அன்புடன்
ரகுநாதன்
***
ஆலயக் கலை அறிய ஒரு பயிற்சிமுகாம்
அன்புள்ள நண்பர்களுக்கு,
நான் என் நண்பர்களுடன் தொடர்ச்சியாக ஆலய- கலைப்பயணங்களை மேற்கொள்ளும்போதெல்லாம் வாசகர்கள் எழுப்பும் வினா என்பது எப்படி நம் ஆலயக் கலையை அறிந்துகொள்வது என்பதே. நான் தொடர்ச்சியாக நூல்களைப் பரிந்துரைப்பது வழக்கம். ஆனால் நூல்களைக் கொண்டு ஆலயத்தின் கலையை புரிந்துகொள்வது எளிதல்ல. அதற்கு பொறுமையான வாசிப்பு தேவை.
ஒரு முகாமில் சில அமர்வுகளில் ஆலயத்தின் சிற்ப அமைப்பை, அதன் குறியீட்டுக் கட்டுமானத்தை, ஆலயத்தின் பொதுவான கலைவரலாற்றுப் பரிணாமத்தை கற்பிக்க இயலுமா என என்னிடம் பலர் கோரியதுண்டு. ஆனால் அதில் நான் இன்னும் மாணவனே என்பது என் பதில்.
ஆலயக்கலை ஆய்வில் நீண்டகால தேர்ச்சிகொண்ட, கற்பிக்கும் திறன் கொண்ட ஒருவர் அதை நடத்தலாமென எண்ணினேன். நான் அறிந்தவரை அத்தகைய ஒருவர் ஜெயக்குமார் பரத்வாஜ். கலாக்ஷேத்ரா மாணவர். இந்தியக் கலைகள், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
அவர் ஒரு பயிற்சி வகுப்பை நடத்த ஒத்துக்கொண்டுள்ளார். நாள் பிப்ரவரி 17, 18, 19 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் ஒரு வகுப்பை நடத்துவார். ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில். இது மதவகுப்பு அல்ல. வழிபாட்டு முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் கற்பிக்கப்படாது. அவற்றில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டவர்கள் இந்தக் கல்வியில் இருந்து மேலே தாங்களே தேடிச்செல்லலாம். இது இந்து ஆலயங்களை அறிவதற்கான ஒரு தொடக்கப் பயிற்சி மட்டுமே. சாதி, மதம் சார்ந்த எந்த பார்வையும் இல்லை. இந்திய மரபை அறிவதற்கான ஒரு பயணம் இது.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர், வயது மற்றும் தொலைபேசி எண்ணுடன் jeyamohan.writerpoet@gmail.com என்னும் முகவரிக்கு எழுதலாம்
ஜெ
January 28, 2023
அழைப்பை எதிர்நோக்கியா?
நீங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டுவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் மட்டும் தமிழ்நாட்டு அரசை நான்கு காணொளிகளில் புகழ்ந்திருக்கிறீர்கள். ஆனால் உங்களை எந்த இலக்கியவிழாவிலும் அவர்கள் அழைப்பதில்லை. அழைக்கவும் போவதில்லை. இலையை போட்டுக்கொண்டு நீங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என் அனுதாபங்கள்.
Reality Hunter
***
அன்புள்ள Reality Hunter,
வேட்டை சிறப்புற வாழ்த்துக்கள்.
நான் 1988ல் எழுத வந்தபோது என்னிடம் சுந்தர ராமசாமி சொன்னார். ‘தமிழ் பொதுவாசிப்புக் களத்தில் சாதி ஒரு முக்கியமான கணக்கு. நீங்கள் அன்னியர். மலையாளி. ஆகவே உங்களுக்கு சிற்றிதழ்ச்சூழலுக்கு வெளியே ஏற்பு அமையாது. பல்கலைக் கழகங்களின் அழைப்புகள், விருதுகள், அரசாங்க அங்கீகாரம் கிடைக்காது. அந்த எதிர்பார்ப்பு இருந்தால் இப்போதே கழற்றி வைத்துவிடுங்கள்’.
என் முதல்நூல் வெளியானபோது பின்னட்டையில் என் தாய்மொழி மலையாளம் என்றே குறிப்பிட்டேன். என்னிடம் பலர் அது மிகப்பெரிய பிழை, என்னை முற்றிலுமாக அன்னியப்படுத்திவிடும் என்றனர். எனக்கு எப்போதும் ஒளிக்க ஒன்றுமில்லை, என் ஆளுமையை முழுக்க முன்வைக்கவே வந்தேன் என்று நான் பதில் சொன்னேன். எப்போதுமே அந்த அடையாளத்துடனேயே இருந்து வருகிறேன். தொடர்ச்சியாக வசைகள் என் மலையாளப்பின்னணி சார்ந்து வருகின்றன. நான் அவற்றை பொருட்டாகக் கருதுவதில்லை. பொருட்படுத்துபவர்கள் என் வாசகர்களும் அல்ல. அவர்களும் எனக்கு ஒரு பொருட்டு அல்ல.
ஆனால் மலையாளத்தில் ஒருபோதும் என் சாதி – மொழி அடையாளத்தை முன்வைப்பதில்லை. திட்டவட்டமாக ‘தமிழ் எழுத்தாளர்’ என்றே குறிப்பிடுவேன். மலையாளத்தில் எழுதுபவர் என்றுகூட சொல்லிக் கொள்வதில்லை. மலையாளப்பண்பாட்டின் எந்த அம்சத்தையும் தமிழுடன் ஒப்பிட்டு, தமிழின் தரப்பில் நின்று விமர்சிக்க தயங்கியதில்லை. அண்மையில் கோழிக்கோடு இலக்கிய விழாவில் ஒரு கேள்வி. அதில் யானைடாக்டர் மலையாள வடிவில் யானைடாக்டர் ‘காட்டில் நுழையும் மலையாளி ஒரு பொறுக்கி’ (செற்ற) என்று சொல்வதை பற்றி கேள்வி எழுப்பினார். ‘அது உண்மைதான், அந்த உண்மையைச் சொல்லாமல் இருப்பது என் இயல்பு அல்ல’ என்று பதில் சொன்னேன். எந்த மழுப்பலும் எங்கும் இல்லை. தமிழ் எழுத்தாளன், தமிழ்க் கதாபாத்திரத்தைக் கொண்டு மலையாளியை வசைபாடுகிறான் என ஒருவர் எண்ணினால் அவர் என் வாசகர் அல்ல, அவ்வளவுதான்.
எனக்கு கிடைத்திருக்கும் வாசகர்கள் என்னுடைய இந்த தயங்காமையின், வெளிப்படைத்தன்மையின், உணர்ச்சிகரத்தின் மேல் ஈடுபாடு கொண்டு என்னை அணுகுபவர்கள்தான். அவர்களுக்கு என் சிக்கல்கள், தயக்கங்கள், குழப்பங்கள் தெரியும். நான் உறுதியான நிலைபாடுகளில் தேங்கிவிட்டவன் அல்ல. தொடர்ந்து சிந்தித்துச் செல்லும் எழுத்தாளன். கற்பனை, உணர்ச்சிகரம், ஊழ்கம் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டவன். ஆகவே பிழைகளும் நிகழும் என அறிந்தவனே என் வாசகன். என் பிழைகளை என் வாசகனளவுக்கு எதிரிகள்கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அண்மையில் கோவை விழாவுக்கு வந்த கீதா ராமசாமி சொன்னார். என் வாசகர்களின் திரள் இந்தியச் சூழலில் ஒரு பெருநிகழ்வு என. ஆங்கிலத்தில் எழுதும் எவரும் அதை அடைய வாய்ப்பே இல்லை என. அது உண்மை. அது தொடர் உரையாடல் வழியாக உருவாவது. ஒவ்வொரு நாளும் என் வாசகர்களுடன் நானும் இருந்துகொண்டிருக்கிறேன்.
நான் இன்று இனி எத்தனை ஆண்டுகள் என கணக்கிடும் இடத்தை அடைந்துவிட்டேன். என் கனவுகள் பெரியவை. ஆகவே இனி கசப்புகள், காழ்ப்புகள், வம்புகளுக்கு இடமில்லை. சிறியவற்றுக்கு அளிக்க நேரமே இல்லை. கணக்குகளும், எதிர்பார்ப்புகளும்கூட எவ்வகையிலும் பொருட்டல்ல.
இந்நாள் வரை எனக்கு கிடைத்துள்ள ஏற்புகள் நான் எழுதி உருவாக்கிக் கொண்டவை. இன்று நான் விருதுகள் வழங்குபவனாக இருக்கிறேனே ஒழிய எதிர்பார்ப்பவனாக அல்ல. அரசுகள், கல்வியமைப்புகள் எனக்கு இன்று ஒரு பொருட்டு அல்ல. நீங்கள் சொல்வது உண்மை. அரசுகளின், அமைப்புகளின் கணக்குகளில் சாதி, இனம், மொழி, அரசியல் கணக்குகள் உள்ளன. ஆனால் அவை எப்போதுமே உண்டு. எழுத்து வாழ்வது அதற்கு அப்பால் வாசகர்களின் கவனத்தில்தான்.
உங்கள் கடிதமே சொல்லுகிறது நீங்கள் யார் என்று. திமுகவின் அடிநிலை இணையப்பிரச்சாரர்கள் ஒருவகை பதற்றத்தில் இருக்கிறீர்கள் என தெரிகிறது. சரி, உங்கள் திருப்திக்காக நானே அறிவித்துவிடுகிறேன், அரசின் எந்த இலக்கியவிழாவிலும் கலந்துகொள்ளப் போவதில்லை. அவர்களுக்கும் எனக்கும் சங்கடமில்லை. உங்களுக்கும். சரியா?
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



