பெருங்கை, கடிதம்

பெருங்கை

அன்புள்ள ஜெ.,

தங்களுடைய ‘பெருங்கை’ சிறுகதை நீங்கள் எழுதிய யானைக்கதைகளில் இன்னொரு முத்து.உங்களுடைய ‘மத்தகம்’ குறுநாவலில் மாவுத்தர்களின் பிறழ்வு வாழ்க்கையையையும் அதன் பின்னணியையும் அலசியிருப்பீர்கள். அதே உலகம். ஆனால் அதில் காமம் கொப்பளிக்கும் வாழ்க்கை. இதுவோ பூரணமான  காதல் கதை. என்ன, இந்தப் பூர்ணம் ‘வல்லினம் இணைய இதழ்’ இணைப்புச் சுட்டிக்குள் கொழக்கட்டைக்குள்  பூர்ணம் போல உள்ளதால் பலரும் தவறவிட வாய்ப்புண்டு.

கதைசொல்லி, சந்திரிகை, ஆசான்,முத்தய்யன், வளையக்காரக் கிழவி, முக்கியமாக ‘கேசவன்’ என்கிற யானை என்றொரு சிறுஉலகத்துக்குள்ளேதான் மொத்தக்கதையும்.  இருக்கிற ஒற்றை ஜன்னலையும் தன்னுடைய உடலால் மூடி எந்தப்பகலையும் இரவாக்கிவிடுகிற கேசவன்தான் கதைசொல்லியின் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட ஒளிவெள்ளத்தைக் கொண்டுவந்து விடுகிறான்.

“என்ன மேகம் கெளம்பியாச்சுண்ணு தோணுது? இன்னிக்கு மழை உண்டு” என்று கதைசொல்லி புகைபிடிப்பதை கிண்டலடிக்கும் சந்திரிகையின் நகைச்சுவையுணர்வு அவளை அனைவருக்கும் பிடித்துப்போகச் செய்துவிடுகிறது. இன்னொரு இடத்தில் “சாராயம் குடிச்சு நாலு காலுல வந்து சேரும்” என்று அப்பனைப்பற்றிச் சொல்கிறாள். இது ஒன்றும் அத்தனை பெரிய நகைச்சுவை இல்லைதான். நாம் எத்தனை நகைச்சுவையுணர்வுள்ள பெண்களை சந்தித்திருக்கிறோம் என்பதன் பின்னணியில் இதை நினைத்துப் பார்க்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை பூடகமான நகைச்சுவையைப் புரிந்துகொண்டு ரசிப்பதே பெண்களின் அதிகபட்ச நகைச்சுவையுணர்வாகக் கண்டிருக்கிறேன். சத்தம் போட்டுச் சிரிப்பதும், எதைப்பேசினாலும் சிரித்துக்கொண்டே பேசுவதும் நகைச்சுவையுணர்வு இல்லை என்று இவர்களுக்கு யாராவது சொல்லமாட்டார்களா என்று நினைத்துக் கொள்வேன். இப்படிப்பட்ட பெண்களைத்தான் உறவுவட்டத்திலும், அலுவலகத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உளவியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம்.

மாவுத்தர்களின் பிறழ்வு வாழ்க்கை, அதை இயல்பாக அங்கீகரிக்கும் பெண்கள், யானையோடு பழகிப் பழகி தன்னையும் உடலால் யானையாக உணரும் கதைசொல்லி (அவர்களுடைய பெருங்காமத்திற்கும் அதுவே காரணமாக இருக்கலாமோ?) , யானையின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ள மரணத்தையும் எதிர்நோக்கியிருக்கும் மாவுத்தன்,வட்டார வழக்கு, நகைச்சுவை என்று இயல்பாக இன்னோரு உலகத்தைப் படைத்துவிடுகிறீர்கள். வெண்முரசில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நீங்களும் கொஞ்சம் இருப்பீர்கள். இதில் நீங்கள் ‘கேசவன்’ தான். பெரும்பாறைகளை வைத்து ‘வெண்முரசு’ போன்ற கோட்டையை எழுப்பிய வேழம் எடுத்துவைத்த ஒற்றை மல்லிகைப்பூ இந்தச் சிறுகதை.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2023 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.