Jeyamohan's Blog, page 632

February 5, 2023

லக்ஷ்மி சரவணக்குமார் விழா – உரை

லக்ஷ்மி சரவணக்குமார் படிகவிழா நிகழ்வில் ஆற்றிய உரை. நாள் 5 பெப்ருவரி 2023. இடம் கவிக்கோ அரங்கம் சென்னை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 10:36

சி.கன்னையா

[image error]

தமிழகத்தின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்றால் பலர் எம்.கே.தியாகராஜ பாகவதர் என்று சொல்லக்கூடும். அவருக்கும் முன்னால் நாடகமேடையின் உச்சநட்சத்திரமாக, பெருஞ்செல்வந்தராக விளங்கியவர் சி.கன்னையா. அவருடைய வாழ்க்கை வெற்றிகள் மட்டுமே அடங்கியது. தமிழ் நாடகம் பற்றி எழுதிய அனைவருமே அவரைப் பற்றி பெரும்பரவசத்துடன் பதிவிட்டிருக்கிறார்கள். தனி ரயில் வைத்து தன் ரசிகர்களை திருப்பதிக்கு அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைத்திருக்கிறார். திருவில்லிப்புத்தூர் உள்ளிட்ட ஆலயங்களுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்.

சி.கன்னையா [image error] சி.கன்னையா – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 10:34

மணிபல்லவம் – வாசிப்பு

முதுநாவல் வாங்க   முதுநாவல் மின்னூல் வாங்க

வணக்கம் ஆசிரியர் ஜெயமோகன்,

நான் தங்களின் புதிய வாசகன். இன்று நான் தங்களின் புனைவுக் களியாட்டு சிறுகதைகளில் ஒன்றான மணிபல்லவம் என்னும் கதையை வாசித்தேன். அது பல எண்ணத் தொடர்களை என்னுள் ஓட வைத்து, பல உருவங்களை என் அகத்திரையில் வந்து படிந்திட‌ செய்தது. தொடக்கத்தில் கதையை வாசித்து செல்லுகையில், இது மீனவர் அல்லது கடல் சார்ந்த மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காண்பிக்கும் என்ற தோற்றம் எழுந்தது. ஒரு மீனவ சமூகத்தில் ஒரு மீனவன் கரை திரும்பாமல் போனால் அச்சமூகம் அதை எவ்வாறு எதிர் கொள்ளும், அதனால் வரும் குழப்பங்களை விரித்துரைக்கும் என்று என் உள்ளம் தீர்மானித்தது.

ஆனால், கதை என்னுடன் உரையாடிக் கொண்டு இருக்கையில் அது நான் எதிர்பாராத ஒரு தலத்தில் வந்து நின்றது. அல்லது, ஓர் எதிர்பாராத ஒரு தலத்தை திறந்து காட்டியது. இதுவரை நான் கவனமாய் வரைந்து வைத்த என் அகஓவிங்கள் பொருள் இழந்து போயின‌. கதை தன் அடையாளத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டது போல் ஓர் உணர்வு. ஏதோ ஒரு மாயக்காரன்(magician) தன் வெளித்தோற்றத்தை கிழித்தெறிந்து வேறொரு தோற்றத்தை வெளிப்படுத்துவது போல். ஜெயமோகனால் மட்டும் இதைச் செய்யக் கூடும் என்று முறுவலுடன் எண்ணினேன்.

“மணிபல்லவம்… அப்டி ஒரு தீவு உண்டுன்னு சின்னவயசிலே கதை கேட்டிருக்கேன்” என்று ஆன்றப்பன் சொல்லுகையில், கதை தன் உருவத்தை சற்று மாற்றிக் கொண்டு என்னோடு பேசத் தொடங்குவது உணரமுடிந்தது. ஓரிடத்தில் அந்தோனி ஃபாதரிடம் தான் கண்டவைகளை கூறும் போது, கதை தன் புதிய தோற்றம் இது தான் எனத் துணிவாக காட்டிக்கொண்டு என்னோடு உரையாட தொடங்கியது. மனித உளவியலில் புதைந்து கிடக்கும் தொன்மம் எவ்வாறு யதார்த்தத்துடன் கலப்புறுகிறது என்ற காட்சியை வெளிப்படுத்தியது இக்கதை. என்ன செய்தாலும் நம் வாழ்வியலில் கீழ் படிந்து கிடக்கும் தொனமம் நம்முடன் இன்றும் உரையாடுகின்றன எனப் புரிந்து கொண்டேன். தொனமம் அது உண்மையோ பொய்யோ, ஆனால் அது சில சமயம் அதன் மறைவான் உறைவிடத்தை யதார்தத்திற்கு சுட்டி காண்பிக்கின்றது என்ற ஒரு தோணல் என்னுள். கடலில் மறைந்துக் கிடந்த அந்தப் பாறை அந்தோனிக்கும் இறுதியில் ஃபாதருக்கும் வெளிப்பட்டது போல.

ஆக மொத்தத்தில், இக்கதை மீனவர் வாழ்வியல் தான் பேசுகின்றது ஆனால் அந்த வாழ்வியலில் தொன்மம் வந்து பேச்சு வளர்க்க முற்படுவதை அழகாக காண்பிக்கின்றது. தங்களின் சிறப்பான பணி மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.

இப்படிக்கு,

ஜோசப் பால்ஸன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 10:31

புதுச்சேரி இலக்கிய முகாம், கடிதம்

வணக்கம்,

தங்கள் இணையதளத்தின் மூலம் அறியப்பெற்று புதுவையில் ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கான இலக்கியப்பயிற்சி முகாமில் பங்குப்பெற்றேன். வாய்ப்புக்கு  தங்களுக்கும் புதுவை வெண்முரசு கூடுகை நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

நண்பர்கள் முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். திரு. கடலூர் சீனு அவர்கள்

தமிழ் இலக்கிய வரலாறுதங்கள் இலக்கிய மரபுவாசிப்பில் செய்யக்கூடாதவைவாசிப்பின் வழிமுறைஇலக்கியத்தின் பயன்

ஆகியவற்றை எளிமையாகவும் செறிவாகவும் விளக்கினார். மேலும் ஐந்து சிறுகதைகள் மற்றும் ஐந்து கவிதைகளை எடுத்துக்காட்டாக கொண்டு இலக்கிய வகைமைகள் மற்றும் அவற்றை பொருள்கொள்ளும் முறையை விளக்கினார்.

மொத்தத்தில் என்னை போன்ற ஆரம்பக்கட்ட வாசகருக்கு மிகவும் உதவியாக இருந்தது.

பிகு:

திரு.கமலஹாசன் மூலமாக தங்களின் அறம் சிறுகதை தொகுப்பின் அறிமுகம் பெற்றேன். பின் தங்களின் இணையதளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கெழும் ஐயங்களும் குழப்பங்களும் தீர்த்து தங்கள் எழுத்து வழிகாட்டியாக இருக்கிறது. நன்றிகள் பல.

– தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம்

அன்புள்ள ஜெ,

ஈரோடு புதியவாசகர் சந்திப்பில் கலந்துகொண்டபிறகே எனது வாசிப்பிலும் இலக்கியத்தை அணுகும் முறையிலும் நிறைய மாற்றம் உண்டானது, இடைப்பட்ட வருடங்களில் செவ்வியல் நாவல்களை குறிவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன் டால்ஸ்டாய் தஸ்தவெய்ஸ்கியில் துவங்கி தற்போது ஆரோக்கிய நிகேதனம் வரை வந்திருக்கிறேன். இலக்கியத்தனிமையில் வாடும் புதியவாசகனுக்கு தாங்கள் முன்னெடுக்கும் வாசகர் சந்திப்புகள் வாசிப்பில் உள்ள சிக்கல்களை களையவும் புதிய வாசகநண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் உதவியாக இருப்பதை அனுபவத்திருக்கிறேன், மேலும் தொடர்ச்சியாக இலக்கிய விழாக்களில் சந்திப்புகளில் கலந்துகொள்வது நான் வாசிப்பில் நிகழ்த்தும் பிழைகளை சரிசெய்துகொள்ளவும், அடிப்படைகளை மீளமீள நினைவுறுத்திக் கொள்ளவும் உதவி செய்கிறது.

பாண்டிச்சேரியில் கடலூர் சீனு அவர்களின் முன்னெடுப்பில்  தாமரைக்கண்ணன் மற்றும் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் இலக்கிய அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன், புதிய வாசகனுக்கு நீங்கள் அளித்த இரண்டு நாள் வகுப்பின் பாடத்திட்டத்தை செறிவுடனும் கூர்மையாகவும் கடலூர் சீனு அவர்கள் நிகழ்த்தினார். (நானும் கார்த்திக்கும் முன்னரே தங்களது வகுப்பில் கலந்து கொண்டிருப்பதை அறிந்து பாடத்தை பிற புதிய வாசகர்களிடம் ”லீக்” செய்துவிடவேண்டாம் என புன்னகையுடன் கேட்டுக்கொண்டார்). வகுப்பில் கலந்து கொண்ட அனைவரும் வாசகபர்வத்தின் துவக்கநிலையில் இருப்பவர்கள், இவன் தான் பாலா புத்தகத்தை வாசித்துவிட்டு ஜெயகாந்தனை தெரிந்து கொண்டு வாசிக்க முனைந்த வாசகர், பொழுது போகாமல் நூலகத்தில் நுழைந்து வாசிக்க முயன்றவர், தூக்கம் வரவில்லை அதனால் வாசிக்கத்துவங்கினேன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட வாசகர் என வெவ்வேறு வழியில் தமக்குள் இருக்கும் இலக்கிய உணர்கொம்பில் தடுக்கி விழுந்தவர்களாக இருந்தனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை அணுகுமுறைகளை இலக்கியத்தின் தோற்றத்தை அதன் பணியை, கலையில் அதன் இடத்தை புரிந்துகொள்வதற்கு ஏற்ற வகையில் வகுப்பை கடலூர் சீனு அவர்களின் வகுப்பு வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வுக்காக பதிவு செய்த அனைவருக்கும் முன்னரே ஐந்து சிறுகதைகளும் கவிதைகளும் அனுப்பப்பட்டிருந்தது, சிறுகதைகளை வாசித்துவிட்டு கட்டாயமாக அனைவரும் அதைக் குறித்த தங்களது எண்ணங்களை மதிப்பீடுகளை எழுதியனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். புதிய வாசகர் சந்திப்பில் கடைபிடிக்கப்படும் அதே கறார்விதிகள் இங்கும் கடைபிடிக்கப்பட்டது, வீணாக ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை வாசகர்களும் தொடர்ந்து சீனு அவர்களிடம் தங்களது சந்தேகங்களை எழுப்பியபடியே இருந்தனர்.

நிகழ்வின் துவக்கத்தில் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு பெரும் கோட்டுச்சித்திரமாக சங்ககாலம் முதல் தற்போதைய புதுவரலாற்றுவாதம் வரை கற்பிக்கப்பட்டது, பின்னர் இலக்கியத்தின் அடிப்படை அலகுகளான மொழி மற்றும் அதன் இயங்கு தளமான “Langue, Parol and Symbol” இவற்றை கடல் அதன் அலை என உவமைகளுடனும் குறியீடுகளால் அது வெளிப்படும் விதமும் எளியவாசகனுக்கான முறையில் விளக்கப்பட்டது, மேலும் உவமை, படிமங்கள், த்வனி என மொழியின் தளங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவதாக செய்யுளுக்கும் உரைநடைக்கும் இடையிலான வேறுபாடுகள் அதன் காலம்தோறும் மாறிவந்த உரைநடையின் முன்னோடிகள் அவர்களின் இலக்கியப் பங்கு, மீமொழி (metalanguage) என்றால் என்ன, புறவயமான எழுத்தைக்கொண்டு வேறொன்றை தொடும் subtext என்றால் என்ன, ஒரு படைப்பு அளிக்கும் தரிசனம் அதன் வழி அடையும் மீட்பு என இலக்கியத்தின் தளங்கள் விவரிக்கப்பட்டது.

இரண்டாம் பகுதியாக அழகியல் சார்ந்த அடிப்படைகளான எதார்த்தவாதம், விமர்சன எதார்த்தம், இயல்புவாதம், கற்பனாவாதம், இருத்தலியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் மற்றும் Neoclasscism வரை சிறுகதைகளை உதாரணமாகக்கொண்டு விளக்கினார், இதன்மூலம் புதிய வாசகன் கவனிக்கத்தவறும் படைப்பின் அழகியல், தனித்தன்மை, வடிவம், உள்ளடக்கம் மற்றும் படைப்பின் தரிசனம் ஆகியவை மீதான பிரக்ஞை உருவாக்கப்படுகிறது. கவிதைகளில் அதிக பரிச்சயத்தை இன்னும் ஏற்படுத்திக்கொள்ளாத எனக்கு ஒரு காலதீதமாக நிற்கும் கவிதைக்கான் இலக்கணமாக உண்மையின் தீவிரம், மொழிக்கு அது ஆற்றும் பங்கு, காலத்தை உதறி நிற்கும் பண்பு, தனித்தன்மை மற்றும் அதன் மீமொழியை குறித்தான அறிமுகமானது மேற்கொண்டு என் கவிதை வாசிப்பில் அடுத்தகட்ட நகர்வை நிச்சயம் உருவாக்கும் என நம்புகிறேன்.

Neoclassicsm என்ற வார்த்தையையே அன்று தான் முதன்முதலில் கேட்கிறேன், வெண்முரசு விஷ்ணுபுரம் போன்ற செவ்வியல் நாவலில் உள்ள நவீன இலக்கியத்தின் அனைத்து அழகியல் அம்சங்களையும் கடலூர் சீனு அவர்களின் உரையில் கோடிட்டு காட்டியபொழுதே  படைப்பின் வீரியத்தை எண்ணி பிரமிப்படைந்தேன், எங்கு துவங்கினாலும் விஷ்ணுபுரத்தில் வந்து முடிவடையும் அவருடைய பேச்சு, வாசிப்பில் அவருக்குள் இருக்கும் தீவிரம் என்னை மிகவும் வசீகரித்துவிட்டது (ஏனென்றால் இன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள இயலாத படைப்பாக விஷ்ணுபுரம் நீடிக்கிறது) ஞானத்தை கட்டுப்படுத்தும் சடங்காக கலையை அவர் முன்வைத்த விதத்தை இக்கணம் வரை மீள மீள எண்ணியபடியே உள்ளேன்.

நிகழ்வின் இறுதியாக கலந்துரையாடலில் வாசகர்கள் எழுப்பிய அடிப்படை சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து இலக்கியத்தில் கட்டாயமாகக் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்குமுறை குறித்தும் அறிவுறுத்தியவாறு நிறைவு செய்யபட்டது.

வெண்முரசு கூடுகைகளை மாதம் ஒருமுறை நிகழ்த்தும் நண்பர்கள், அதன் தொடர்ச்சியாக இவ்வகையான வாசகர் சந்திப்புகளை ஒருங்கிணைக்க உள்ளதாக தாமரைக்கண்ணன் தெரிவித்தார். இளம் வாசகர்களுக்கும், வாசிப்பில் தொடர்ச்சியாக தனது பிழையை திருத்தும் கைகளை எதிர்நோக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் கடலூர் சீனு மாதிரியான ஒரு தீவிர வாசகரின் அணுக்கம் மிக அத்தியாவசியமான ஒன்று.

இன்று புத்துணர்ச்சியுடன் மேலும் பிரக்ஞையுடன் இலக்கியத்தை சாதகம் செய்ய துவங்குவேன்.

இப்படிக்கு,

சூர்யப்ரகாஷ் பிச்சுமணி

மதுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 10:30

மேடையுரை, கடிதம்

 அன்புநிறை ஜெவிற்கு

ஜனவரி 20,21,22 நாட்களில் நடந்த மேடையுரை பயிற்சி முகாமில் பங்குகொண்டது பேருவகை நிறைந்த தித்திப்பை அளித்தது. அது இக்கணம்வரை இருக்கிறது, பெருகிக்கொண்டு. அறிவு செயல்பாட்டில் திளைக்கும் மனங்கள் மோகித்து நிற்பதை காண வாய்த்தது அங்கு. பனித்திரை சூழ்ந்த மலைவெளியில், முகாமிற்கு வந்த அனைவரும் ஒருவருக்காக ஏங்கி நின்றதை முதல் நாள் காலையில் கண்டேன். அவரை கண்டபின்னர், ஒரு கணமும் அருகிருந்து நீங்கலாகாது என்ற பாவனையும் தோன்றியது.

ஒவ்வொரு முகமும் அவரை சூழ்கையில் பிரேமை நிறைத்து நின்றன. அங்கிருந்து புறப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் உவகை மேல்லெழுகிறது. ஜோதி நிறைந்த கண்கள் ஒரு திசை நோக்கியிருந்தன. விவேகியாக, சிந்தனையாளராக, கலைஞனாக, ஆசிரியராக, களி நிறைப்பவராக, அத்வைதியாக அவ்விடத்தை ஆட்கொண்டது அவ்வுருவம்.

புகைப்படம் ஆகச்சிறந்த தருணங்களை அங்கேயே நிறுத்த முயல்கிறது. தன்னை தான் மறந்து ரசிக்கும் தருணம் அதில் ஒன்று. கடந்த 10 நாட்களாக இப்புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கையில், மிக மென்மையாக மனம் கொந்தளித்து அடங்கும். மீண்டும் எப்போது அருகிருப்பது? மீண்டும் அத்தனை பிரேமை நிறைந்த முகங்களை எங்கு காண்பது? என்ற கொந்தளிக்கும் கேள்விகள்.

ஒரு வகை பரவச நிலையில் நடமாடிய கால்களை கண்டேன். பூவிடைபடுதல் என்று சங்க இலக்கியம் சுட்டுவதை அங்கு உணர்ந்தேன். பாறையில் அமர்ந்து மொழிகையில் ஒரு சருகு அவர்மேல் உதிர்ந்தது. ஒரு சில வினாடி பேச்சை நிறுத்தி, பின் தொடர்ந்தார். அந்த கணங்களில் மனம் அச்சருகிடம் கோபம் கொண்டது. சுற்றி பார்க்கையில் அதே போன்ற கோபத்தை மற்ற முகங்களிலும் காண முடிந்தது.

பின்மதிய உறக்கத்திலும், இரவு உறக்க நேரத்தில் மட்டும் அவரது குரல் ஓய்ந்திருந்தன. குழந்தைமொழி கேட்க முந்தும் தந்தையர்யென ஒவ்வொருவரும் முன்வந்து நிற்க முனைந்தனர். நடக்கையில், அமர்கையில், நிர்க்கையில் அங்கிருந்து எழுந்த சொற்கள் புவியீர்ப்பென ஒருகனமும் அறுபடாத தாக்கத்தை மற்றவர்களில் செலுத்தியது. மேடைவுரைக்கான பயிற்சிதான் ஆயினும் அனைவரிடமும் இரவு பகலாக நீண்டது காதல் தான்.

**

ஜனவரி 20 காலையில் ஆர்தர் கோஸ்ட்லரின் ‘தி ஆக்ட் ஆப் கிரேஷன்’ புத்தகத்தில் கூறப்பட்ட மூன்று கலைகளின்(மேஜிக் , ஸ்டாண்ட் அப் காமெடி, சிறுகதை) வரலாற்றிலிருந்து மேடையுரைக்கான பயிற்சி தொடங்கியது. 7 நிமிட உரைக்கான கச்சிதமான தொடக்கம், முடிவு, உள்ளடக்கம் எவ்வாறு அமைதல்  வேண்டும் என்று விளக்கப்பட்டது. அங்கு தொடங்கி பேச்சை எவைகளை கொண்டு ஆரம்பிக்கலாம், பேச்சின் உடல் கட்டமைப்பில் (Body of speech) செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என நீண்டு அவை நாகரிகம் சொல்லி நிறைவுபெற்றது காலை வகுப்பு.

மாலை நண்பர்கள் 7 நிமிட உரைகளை ஆற்றத் தொடங்கினர்.  ஒவ்வொருவரும் பேசியவை அவர்களின் தனித்த சிந்தனையை முன்வைத்தது. முதல் உரை தடுமாற்றத்துடன்தான் பெரும்பாலானவர்களுக்கு அமைந்தது. ஆனால் அந்த சிந்தனையில் ஒரு தனித்தன்மை இருந்தது. அவ்வாறுதான் அமையவும் முடியும் என்பது ஆசிரியரின் வாசகர்களை கண்டால் தெரியும்.

பல மேடைகளை கண்டவர், உலக மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவர், அசல் சிந்தனையாளர் என்ற ஆளுமை ஒவ்வொருவரின் பேச்சிலும் மேன்படுத்த வேண்டியவை, தவிர்க்கவேண்டிய பிழைகள் என சிலவற்றை சுட்டிக்காட்டினார். அங்கு நிற்காமல், இதை இவ்வாறு சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமென பேசியவரின் கருப்பொருளை செறிவுடன் விரித்து பேச்சை முன்வைத்தார். உலகம் கொண்டாடும் வேறு கலைஞர்கள் யாராவது  முதல்முயற்சி மேடையுரைகளை அமர்ந்து கேட்டிருப்பார்கள் என்பதே சந்தேகம்.

இரண்டாவதாக ஆற்றப்பெற்ற உரைகள் மேலும் செறிவுடையதாக அமைந்தது. அனைவரிலும், முதல் உரையிலிருந்து இரண்டாவது உரைக்கான பெரிய முன்தாவளை அறியமுடிந்தது.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

என்ற குறளுக்கு ஏற்ப சொல் திறம் கொண்ட எழுத்தாளர் பயிற்சி அளித்தார் என்பது எங்களை கர்வம் கொள்ளச் செய்தது.

**

வரலாற்றின் மிக முக்கியமான இலக்கிய, அறிவியல் உரைகள் என  நீங்கள் கருதும் சிலவற்றை குறிப்பிட கோருகிறேன்.

பிரேமையுடன்
பரமகுரு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 05, 2023 10:30

February 4, 2023

லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழாவில் கலந்துகொள்கிறேன்

லக்ஷ்மி சரவணக்குமார் தமிழ் விக்கி

லட்சுமி சரவணக்குமாரின் எழுத்துவாழ்க்கையின் 15 ஆவது ஆண்டு நிறைவு கருத்தரங்கம். ஆகுதி ஒருங்கிணைக்கும் இவ்விழாவில் நான் கலந்துகொள்கிறேன். பகல் முழுக்க நிகழும் விழாவில் மாலை 7 ல் என் உரை . இடம் கவிக்கோ அரங்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 10:36

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

ஜார்ஜ் சாண்ட் நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா கதாநாயகி. நூல் வாங்க

ஜார்ஜ் சாண்ட் என்னும் இலக்கியவாதியை நான் கேள்விப்பட்டதே இல்லை, சைதன்யாவின் கட்டுரையை நீலி இதழில் பார்ப்பது வரை. அக்கட்டுரை ஒரு திகைப்பை அளித்தது. அதில் பேசப்பட்டிருக்கும் நாவலும் சரி, மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகளும் சரி ஒரு முதன்மையான பேரிலக்கியவாதி அவர் என காட்டுகின்றன. அவர் அக்காலத்தில் புகழுடனும் இருந்திருக்கிறார்.

ஐரோப்பாவில் கொண்டாடப்பட்ட பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் தனிவாழ்க்கை நாடகத்தன்மை கொண்டது. கதைகளாக அதை விரித்து விரித்து எழுதுவார்கள். தஸ்தயேவ்ஸ்கி, தல்ஸ்தோய், காஃப்கா ஆகியோரின் வாழ்க்கைகள் இன்றும்கூட மீள மீள எழுதப்படுகின்றன. அந்த வாழ்க்கையைக்கொண்டு அவர்களின் புனைவுலகங்கள் விரித்தெடுக்கப்படுகின்றன.

அவ்வகையில் பார்த்தால் ஜார்ஜ் சாண்டின் வாழ்க்கையும் மிகத்தீவிரமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. மீறல் ,அதன் விளைவான மோதல், அதன் துயர்கள், தன்னழிவுகள் என அன்றைய யுகத்தின் உச்சப்புள்ளியில் ஒன்று அது. அன்றைய காலகட்டத்தின் ஆன்மிக, அற, அறிவுக்கொந்தளிப்புகளையே அவர் வாழ்க்கையை வைத்து எழுதிவிடமுடியும்.

இருந்தும் ஏன் ஜார்ஜ் சாண்ட் மறுக்கப்பட்டார்? ஒருவர் கூட அவரைப்பற்றி நம்மிடம் சொல்லவில்லை?

இந்த அனுபவம் முன்னரே எனக்குண்டு. நான் என் வாசிப்பில் கண்டடைந்த ஒரு ‘மாஸ்டர்’ மேரி கொரெல்லி. உலகளவிலேயே மேரி கெரெல்லி என இணையத்தில் தேடினால் எனது இணையக்குறிப்புகளே கிடைக்கும் என்றுகூட கேலியாகச் சொல்வார்கள் நண்பர்கள். முழுக்க மறைந்துபோன ஒரு படைப்பாளி. ஆனால் நான் என் ஆன்மிக அலைக்கழிப்பின் நாடகளில், 1984ல் அவரைக் கண்டடைந்தேன். காஸர்கோடு நூலகத்தில். அங்கே 1920ல் பணியாற்றிய ஏதோ பிரிட்டிஷ் டாக்டரின் சேகரிப்பு அந்நூல்தொகை.

மேரி கொரெல்லி

என் அம்மாவுக்கு பிடித்த எழுத்தாளர் மேரி கொரெல்லி என்பது அந்த அட்டையை பார்த்ததும் ஞாபகம் வந்தது. அன்று என்னை ஆட்கொண்டு, பல வாரங்கள் உடனிருந்த பெரும்படைப்பு அது. அதன் பின் அதைப்பற்றி மிக விரிவாக பல கட்டுரைகள் தமிழிலும் மலையாளத்திலும் முன்பு வந்துகொண்டிருந்த ஆங்கில இலக்கிய இதழ் ஒன்றிலும் எழுதியிருக்கிறேன்.

ஆனால் சுந்தர ராமசாமி நான் வாயில் நுரைதள்ள பேசியதைக் கேட்டும் மேரி கொரெல்லியை நிராகரித்துவிட்டார் – படிக்காமலேயே. ‘அப்டி ஒரு காலகட்டத்தோட ரைட்டர்ஸ் பலபேர் இருக்காங்க. எல்லாரையும் நம்மாலே படிக்க முடியாது. கிரிட்டிக்ஸோட அங்கிகாரம் பெற்று காலத்தை தாண்டி வர்ரவங்களை மட்டும்தான் படிக்கணும். அதான் சாத்தியம்’ மேரி கொரெல்லிக்கு விமர்சன ஏற்பு அறவே இல்லை.

எடித் வார்ட்டன்

ஸ்வீடிஷ் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ் எழுதிய கெஸ்டா பெர்லிங் நாவலை க.நா.சு சுருக்கமாக மதகுரு என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார். அவருடைய மொழியாக்கங்களில் எவருமே கவனிக்காதது அது ஒன்றுதான். அவருக்கே அது தெரிந்திருந்தது. ’செல்மாவை ஒரு நல்ல படைப்பாளியாக விமர்சகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது’ என க.நா.சு எழுதினார்.

அன்றைய பொதுவான வாசிப்புப்பண்பாட்டால் பதப்படுத்தப்பட்ட நானும் மதகுருவை வாசிக்கவில்லை. இத்தனைக்கும் நானே பழைய புத்தகக்கடையில் வாங்கிய பிரதி என்னிடமிருக்கிறது. செல்மா ‘மரபான கிறிஸ்தவ மதிப்பீடுகளை மரபான முறையில் சொல்லும் எழுத்தாளர்’ என்று பொதுவாக மதிப்பிடப்பட்டார். ‘ஒரு மாதிரியான பாட்டி இலக்கியம்’ என்று சுந்தர ராமசாமி அதை மதிப்பிட்டார்.

செல்மா லாகர்லொவ்

இர்விங் வாலஸின் ‘The Prize’ என்ற நாவல் நோபல்பரிசின் நடைமுறைகள் பற்றியது. அந்நாவலில் வேறொரு பெயரில் செல்மா வருகிறார். ‘தவறுதலாக’ நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்ட ஒரு பாட்டி. அந்த குற்றவுணர்ச்சியால் நோபல் விழாக்களில் ஒருவகையான மன்னிப்புகோரும் பாவனையுடன், செயற்கையாகப்பேசி வளைய வருகிறார்.

நான் மேலும் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு மொழியாக்கத்தில் செல்மா லாகர்லெவ் எழுதிய தேவமலர் என்னும் கதையை வாசித்தேன். அக்கதையின் அபாரமான கவித்துவம் என்னை மின்னதிர்வு போல தாக்கியது. அதன்பின் செல்மாவை ஆங்கிலம் தமிழ் என தேடி வாசித்தேன். செல்மா முன்வைப்பது மதப்பிரச்சாரத்தை அல்ல, அறம் திகழும் மானுடக்கனவு ஒன்றை. அதை முன்வைக்க உள்ளம் சிறகு கொண்டு மேலெழுந்திருக்கவேண்டும், அதற்கு கள்ளமின்மையின் எடையின்மை இருந்தாகவேண்டும்.

செல்மாவை வாசிக்கையில் ஓர் இடத்தில் செல்மா லாகர்லெவ், இசாக் டெனிசன் போன்ற எழுத்தாளர்கள் என போகிறபோக்கில் ஒரு நையாண்டியை நியூயார்க்கர் இதழின் இலக்கியவிமர்சகர் நழுவவிட்டிருந்தார். இசாக் டெனிசனை தேடி வாசித்தேன். அதே பறந்தெழல், தேவதைகளும் சிறுமிகளும் சென்றடையும் மகத்தான உலகமொன்றை இசாக் டெனிசன் எனக்குக் காட்டினார். நான் அருண்மொழியிடம் கதைகளை அளித்து மொழியாக்கம் செய்யச்சொன்னேன். அவள் மொழியாக்கம் செய்த நீலஜாடி என்னும் கதை 1995 ல் சுபமங்களா இதழில் வெளிவந்தது.

இசாக் டெனிசன்

ஒரு நாடோடிக்கதை, ஒரு தேவதைக்கதை போல அழகானது நீலஜாடி. இசாக் டெனிசனின் அதேபோன்ற சிலகதைகளை மொழியாக்கம் செய்ய எண்ணினேன். அப்போது சொல்புதிது வெளிவந்துகொண்டிருந்தது. அதில் நான் எம்.எஸ். அவர்களை ஒரு மொழிபெயர்ப்பாளராக மறுஅறிமுகம் செய்திருந்தேன். அவருக்கு கதைகள் தெரிவுசெய்து அளித்து மொழியாக்கம் செய்யவைத்தேன். பல அழகிய கதைகளை மொழியாக்கம் செய்த எம்.எஸ். இசாக் டெனிசன் கதைகளை மட்டும் ‘பொறவு பாக்கலாம்’ என புன்னகையுடன் ஒதுக்கிவிட்டார். பிறகு புன்னகையுடன் ‘குழந்தைக்கதை மாதிரி இருக்கு’என்றார்.

அண்மையில் சுசித்ராவுக்கு இசாக் டெனிசன் பற்றி சொன்னேன். சுசித்ராவை ஆட்கொண்ட படைப்பாளிகளில் ஒருவராக இசாக் டெனிசன் ஆனார். ‘அது மாதிரி ஒரு கதை எழுதிட்டாப்போரும் சார்’ என அவர் பெரும் பரவசத்துடன் சொன்னார். சில கதைகளை மொழியாக்கம் செய்தார்.

அப்படி மறைக்கப்பட்டுவிட்ட பல படைப்பாளிகள் உண்டு. உதாரணமாக எடித் வார்ட்டன். (என் பேய்க்கதைகளில் எடித் வார்ட்டனின் நுண்செல்வாக்கு உண்டு. எனக்குத்தெரிந்து எந்த வாசகரும், விமர்சகரும் சொன்னதில்லை). என் எழுத்தில் , குறிப்பாக உளவிவரணைகளில் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய படைப்பாளி ஜார்ஜ் எலியட். குறிப்பாக உணர்வுகள ‘அடக்கி வெளியிட’ வேண்டியதில்லை என எனக்கு கற்பித்தவர். ஜார்ஜ் எலியட் பற்றியும் தமிழில் நான் மட்டுமே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

எடித் வார்ட்டன்

அப்படி என்னை ஆட்கொண்ட பல பெண் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் ஃப்ரான்ஸெஸ் பர்னி. அவருடைய உலகை மிக அணுக்கமாகத் தொடர்ந்து சென்று அவர் எழுதியிருக்கக்கூடியவற்றையும் என் கதாநாயகி நாவலில் எழுதியிருக்கிறேன். 1840ல் மறைந்த  ஃப்ரான்ஸெஸ் பர்னி அப்படி நூற்றி எண்பதாண்டுகளுக்குப்பின் அவர் கேள்வியே பட்டிருக்காத ஒரு மொழியில் மறுபிறப்பு எடுப்பதில் இலக்கியத்திற்கே உரிய பெரும் மர்மம் ஒன்று உள்ளது. முற்றிலும் புதியசூழலில் எழுந்து அவர் வந்து நின்றிருப்பதில் இலக்கியத்தின் அழிவின்மை வெளிப்படுவதாக எண்ணிக்கொள்கிறேன். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்று, சில ஆங்கிலேயர்களாவது வாசிக்கவேண்டுமென நான் விரும்பும் நூல்களிலொன்று கதாநாயகி.

இந்திய எழுத்தாளர்களிலேயே கூட குர்ரதுல்ஐன் ஹைதர், ஆஷாபூர்ணாதேவி இருவரும் பெரும்படைப்பாளிகள் என 35 ஆண்டுகளாக நான்தான் திரும்பத் திரும்பச் சொல்லி நிறுவினேன். வெங்கட் சாமிநாதனோ, சுந்தர ராமசாமியோ, வேதசகாயகுமாரோ அல்லது பிற விமர்சகர்களோ வாசகர்களோ அன்று சொன்னதில்லை.

ஜார்ஜ் எலியட்

சைதன்யாவின் கட்டுரை அவளுடைய ஆளுமையை நன்கறிந்த எனக்கு வியப்பூட்டவில்லை. அழுத்தமான, மென்மையான, பிரியத்திற்குரிய இயல்புகளுக்குள் திட்டவட்டமான ஒரு மீறலும் தனிப்பார்வையும் கொண்டவள். அவள் தலைமுறையில் தமிழில் அத்தனை தீவிரமான இலக்கியவாசிப்பு கொண்ட பெண்களை நான் கண்டதில்லை.மிகுந்த தெளிவுடன், ஓர் இலக்கியப்பேராசிரியரின் குரலில் பேசவும் அவளால் இயலும். இன்று அவள் பேசுவதன் வழியாகவே நான் இலக்கியத்தை புதியதாக அறிகிறேன். ஆனாலும் அவளுடைய கட்டுரைகள் எனக்கு புத்தம்புதியவையாகவே உள்ளன

இக்கட்டுரையில் சைதன்யா ஒருவகையில் western canon என்று சொல்லப்படும் இலக்கியத்தொகுதியையே நிராகரிக்கிறாள். அவை ஆண்களின் பார்வையில் உருவாக்கப்பட்டவை, ஆண்களுக்கு உகந்த உலகை உருவாக்குபவர்கள் மட்டுமே அதில் இருக்கிறார்கள் என்கிறாள்.

பதினெட்டு ,பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆண் இலக்கியவாதிகள் ஓர் உலகை மெல்லமெல்ல உருவாக்கிக் கொண்டார்கள். அது புரட்சிகள், புரட்சியின் வீழ்ச்சிகள், போர்கள் ஆகியவற்றாலான காலகட்டம். அதிலிருந்து நம்பிக்கை, நம்பிக்கைச்சரிவு, சோர்வு, இருண்மைநோக்கு, பொருளின்மையுணர்வு என அவர்கள் அடைந்த உணர்வுநிலைகளும் தீவிரமானவை. ஆனால் இவையே உலக உண்மை என அவர்கள் கற்பனைசெய்துகொண்டார்கள். இவற்றை முன்வைப்பதே உயரிலக்கியம் என்று வரையறை செய்துகொண்டார்கள். அதற்குள் வருவனவற்றையே முன்வைத்தார்கள்.

ஃப்ரான்ஸெஸ் பர்னி

ஆகவே பெண்படைப்பாளிகள் பலர் அவர்களின் உலகுக்குள் நுழையவே இல்லை. அவர்கள் உலகில் இடம்பெற்ற பெண்கள் இரண்டு வகையினர். ஒன்று, அவர்களால் காதலிக்கப்படும் தகுதி கொண்ட பெண்கள். அதாவது நுணுக்கமான பெண்மையுணர்வுகள் என ஆண்கள் எண்ணிய சிலவற்றை வெளிப்படுத்திய பெண் எழுத்தாளர்கள் – உதாரணமாக எமிலி புராண்டே போன்றவர்கள். பெரும்பாலும் ஆண்பெண் உறவின் நுட்பங்களை, மிகையற்ற நாடகத்தன்மையுடன் எழுதியவர்கள் இவர்கள்.

இரண்டாவது வகையினர், பெண்ணியம் உருவானபிறகு எழுதவந்தவர்கள். சிமோன் த பூவாவின் வழித்தோன்றல்கள். ஆண்களின் உலகைச் சீண்டுபவர்கள், உடைக்க முயல்பவர்கள். இவர்களை ஆண் எழுத்தாளர்கள் கொண்டாடுவதற்கு இரு காரணங்கள். ஒன்று ‘நாங்களும் முற்போக்குதான்’ என காட்டிக்கொள்வது. (ஆம், சாட்டையடி பதிவு தோழி, ஆணாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன் தோழி வகை வெளிப்பாடேதான்) இரண்டு, பெண்களின் இந்த வகை சீண்டல்கள் ஆணின் ரகசிய பால்விருப்பையும் தூண்டுகின்றன. தன்னைச் சீண்டும் பெண்மேல் விருப்பு கொள்வது ஆண்களின் ரசனைகளிலொன்று. அது விலங்குகளிலும் வெளிப்படும் காமம்.

எவர் புறக்கணிக்கப்பட்டார்கள்? ஆண்களைப்போலவே அதே நிமிர்வுடன், அதே விரிவுடன், பலசமயம் அதைவிட தீவிரத்துடன் உலகை, வரலாற்றை, ஆன்மிகத்தை ஆராய்ந்த பெண் எழுத்தாளர்கள். அவர்களே உண்மையான பேரிலக்கியவாதிகள். ’பேரிலக்கியமெல்லாம் ஆண்கள் எழுதிக்கொள்கிறோம். நீ போய் பெண்ணிலக்கியம் படை’ என்று ஐரோப்பிய விமர்சன மரபு பெண் எழுத்தாளர்களிடம் சொல்லியது. இன்றும் பெண் எழுத்தாளர்களில் பலர் செய்வது அதைத்தான். ‘நீ ஒன்று பணிவாக செல்லமாக இரு. அல்லது சீண்டு, துள்ளிக்குதி. ஆழ்ந்த படைப்புகளெல்லாம் நீ எழுதமுடியாது. அதை முயற்சி செய்யாதே’ இதைத்தான் இந்த ஐரோப்பிய விமர்சகர்கள் பெண்களிடம் சொல்கிறார்களா?

சைதன்யா ஃப்ளாபர்ட், தஸ்தயேவ்ஸ்கி முதலிய நவீன இலக்கிய முன்னோடிகளை முழுமையாகவே ‘நிலவறை மனிதர்கள்’ என்கிறாளா? அவர்களால் தங்கள் அன்னையென நிலைகொண்ட பெரும் பெண்படைப்பாளிகளை புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் அவர்களிடம் அடைக்கலம்புகாமலும் இருக்க முடியவில்லை.

எனக்கு எப்போதுமே இந்த ‘நோயுற்ற’ எழுத்தாளர்கள் மேல் ஒவ்வாமை உண்டு. நான் ஃப்ளாபர்ட் முதல் காஃப்கா வரையிலானவர்களை பொருட்படுத்தியதில்லை. ஏனென்றால் நான் அவற்றை வாசிக்கையில் ஒரு நிலவறை மனிதன். இருளில் இருந்து ஓளிக்காகத் துழாவியவன். ஒளியை அளித்தவர்களே எனக்கு முக்கியமானவர்கள். எவருடைய நோய்விவரணை அறிக்கையையும் படிக்க எனக்கு மனமில்லை. எனக்கு ஆஷாபூர்ணாதேவிதான் அணுக்கமானவர்.

சைதன்யாவின் கட்டுரை வழியாக செல்லும்போது இவ்வெண்ணங்களே என்னை ஆட்கொள்கின்றன. இத்தனை ‘ஒதுக்குபுறமான’ ஒருமொழியில் இந்த பெரும்படைப்பாளிகள் மீண்டெழுவதை ஐரோப்பாவில் எவரேனும் என்றேனும் காண்பார்களா? அவ்வப்போது எனக்கும் சைதன்யா ஓர் ஆணாதிக்க முத்திரை அளிப்பதுண்டு. ஆனால் இக்கட்டுரையை ஒட்டி யோசிக்கையில் நான் கொஞ்சம் தப்பிவிட்டேன் என்றே தோன்றுகிறது. ஒரு பக்கம் விசாலாட்சியம்மாவும் மறுபக்கம் சைதன்யாவுமாக என்னை முழு ஆணாதிக்கவாதியாக ஆகவிடாமல் காத்துவிட்டிருக்கிறார்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 10:35

இந்து பாக சாஸ்திரம்

[image error]

இந்து பாகசாஸ்திரம் தமிழில் வெளிவந்த முதல் சமையல்கலை நூல். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படைப்பு இது. இதற்குப்பின்னர்தான் தமிழில் இலக்கியம், வணிகஎழுத்து எல்லாமே தொடங்கின. இணையம் வரும்வரை தமிழில் மிக அதிகமாக விற்பனையானவை சமையல்கலை நூல்களே. இன்று இணையத்தில் மிக அதிகமாக மக்களால் பார்க்கப்படுவது சமையல் காணொளிகள். சமையல் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு? ஏனென்றால் இங்கே சமையல் வெறும் உணவு மட்டுமல்ல. அது சமூகப்படிநிலையில் மேலேறுவதன் வெளிப்பாடும்கூட

இந்து பாக சாஸ்திரம் [image error] இந்து பாக சாஸ்திரம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 10:34

பினாங்கு இலக்கியவிழா, கடிதம்

வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ்

மலேசியா வாரம்-1

மலேசியா வாரம்-2

மலேசியா வாரம்-3

அன்புள்ள ஜெவுக்கு வணக்கம்

ஜார்ஜ் டவுன் இலக்கியத்திருவிழாவுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்திப்பதில் உள்ளூர பரவசமும் சற்றே தயக்கமும் இருந்தது. பார்த்து பெயர் சொன்னவுடன் அணைத்துக் கொண்டு தமிழ்விக்கி பணியைப் பற்றி குறிப்பிட்டீர்கள். உண்மையிலே நெகிழ்வாக இருந்தது. அடுத்த சில மணி நேரங்களுக்கு அதையே எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் விக்கி பணிக்காக அளிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தைப் பெறும் போதும் கைகள் நடுங்க பெற்றேன். ரெண்டு கையால புடிங்க என வலக்கையைப் பிடித்து கண்ணாடி நினைவுச்சின்னத்தின் கீழே பற்றக் கொடுத்தீர்கள். தமிழ் விக்கி பணி நிச்சயமாக நிறைவளித்த பணிகளில் ஒன்றுதான்.தேடல் சோம்பல் ஒட்டிக் கொள்ளும் போது மட்டுமே கொஞ்சம் சுணக்கம் இருந்தது.

சரவாக் மாநிலத்தின் பழங்குடிகளைப் பற்றி எழுதும் போது, அவர்களில் சில இனத்தவர்களைப் பற்றி அண்மைக்காலத்தில் யாரும் எழுதாதது வியப்பாக இருந்தது. இந்த நாட்டில் அரசியல், பொருளியல் வலிமை பெற்ற சமூகங்களுக்கிடையிலான குறித்தே அதிகமும் பேசப்படுகின்றன. மலேசியத்தேசிய அருங்காட்சியகத்தின் வெளியே நீண்ட மரத்தால் அழகிய பூவேலைப்பாடுகளும் விலங்குகளும் கொண்டு செதுக்கப்பட்ட கெலிரியாங் எனப்படும் தூண் ஒன்றிருக்கிறது. சரவாக் மாநிலத்தின் காஜாங் பேரினப் பழங்குடிக் குழுவின் குலத்தலைவர்கள் இறந்து போனதும் அவர்களின் உடல் கிடத்தி வைக்கப்படும் பெருந்தூண்தான் கெலிரியாங். அந்தத் தூணுடன் இறந்த குடித்தலைவர்களுக்குத் துணையாக ஏவலர்களும் தூணில் பிணைக்கப்பட்டு உணவின்றி நீரின்றி பலியிடப்படுவார்கள். அந்தக் குடியினர் பெரும்பான்மையோர் கிருஸ்துவத்தைத் தழுவியப் பின்னர் அந்தத் தூணை அரசு கையகப்படுத்தி அருங்காட்சியில் வைத்திருக்கிறது

தமிழ்விக்கி பணிக்காக சரவாக் பழங்குடிகளை எழுதும் போதே இத்தகவல் கிடைத்தது. மானுடவியலின் பெருஞ்செல்வம் மெல்ல மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மண்ணில் இந்தப் பதிவு கொஞ்சமெனும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். ஒவ்வொரு விக்கிப் பதிவும் கெலிரியாங் தூண்களாகவே தெரிகின்றன.

மூன்று நாட்கள் மூன்று உரைகள். ஒவ்வொரு நாளும் தளத்துக்குச் சென்று வாசிப்பது இல்லாமல் நேர்ச்சொல்லை பெறுவது நல்லனுபவமாக இருந்தது. தமிழ் அறிவுச்சூழலில் இருக்கும் அரசியல் தரப்புகளால் எவ்வாறு அறிவுப்பணி ஒற்றைப்படையாக அணுகப்படுகிறது என்றும் மக்களால் திரட்டித் தொகுக்கப்படும் அறிவுப்பணி எவ்வாறு சரியானதாக அமைகின்றது என்பதைப் பற்றியும் குறிப்பீட்டீர்கள். அத்துடன், மலேசியாவுக்கு 1950களில் வந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்த்திரி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தைப் பயிற்றுமொழியாகப் பரிந்துரை செய்தார் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கும் உரையில் பதில் தரப்பட்டது. தொல் மலாயாவில் இருந்த இந்திய பண்பாட்டின் தாக்கத்தை அறிந்து கொள்ள சமஸ்கிருதம் உதவிகரமானதாக இருந்தது என்பதனாலே அம்மொழி பரிந்துரைக்கப்பட்டது என்பது புதிய தகவலாக இருந்தது.  இரண்டாம் நாள், சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர் பி.கிருஷ்ணன் அவர்களின் படைப்புலகக் கருத்தரங்கில் கட்டுரை படைத்தேன். உலக மொழிகளில் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்ற வானொலி நாடகங்களாக மாற்றி எழுதிய சருகுகள் தொகுப்பைப் பற்றிய கட்டுரை. நாடகங்களாக மாற்றப்பட்டிருப்பதால் அவை அடைந்திருக்கும் மிகையுணர்ச்சித் தருணங்கள், நுண்ணுணர்வு, உயிர்ப்பான உரையாடல்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டேன்.

மூன்றாம் நாள், நிகழ்ந்த எழுத்தாளர் நவீன் ஒருங்கிணைத்த கேள்வி பதில் நிகழ்ந்கது. ஒவ்வொரு பதிலும் முன்னர் ஏதோ உரையில், கட்டுரையில், நூலில் சொன்னதைப் போலவே இருந்தாலும் புதியதாக ஏதோ ஒன்றைப் பெற்றதாகவும் நேர்சொல்லாகக் கேட்கையிலும் சிறப்பானதாக அமைந்திருந்தது. ஆமை கடற்கரையில் முட்டையிடுவதை மட்டுமே செய்கின்றன. கடல் முன் நீந்தி உயிர்வாழ்தல் என்பது குஞ்சுகளின் உயிர் ஊக்கத்தில் இருக்கின்றன எனப் படைப்பூக்கத்துக்கும் விமர்சனத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்தீர்கள். அதைப் போல, நண்டு பொறித்த அரியணையை வடிவமைக்க தச்சனை சீன மன்னர் அழைக்கின்றார். அதனைப் பொறிக்க ஐந்தாண்டுகள் தேவைபடுவதாகவும் உணவும் வேண்டுமென தச்சன் சொல்கின்றான். ஐந்தாண்டுகளும் தியானம் செய்து உண்டு நண்டு பொறிக்காமல் வெறுமனே தச்சன் இருக்கின்றான். தன்னை ஏமாற்றுகின்றான் என மன்னர் உணர்ந்து ஐந்தாண்டு நிறைவடைய இருக்கும் கடைசி அந்திப் பொழுதில் பணி முடியவில்லையெனில் கொன்றுவிடுங்கள் என ஏவலர்களுக்குக் கட்டளையிடுகிறான். இன்னும் ஒரு நாழிகை எஞ்சியிருக்கும் போது தச்சன் கடற்கரை மணலில் வரைந்த நண்டு ஒடியத் தடத்தைச் சுட்டி இதுதான் நண்டு எனச் சொல்கிறான். அதனை எடுத்துக் கொண்டு மன்னர் அவைக்கு வருகிறார்கள். மன்னர் உட்பட அனைவருக்கும் அது நண்டு படமில்லை எனத் தெரிகிறது. மன்னரின் ஒரு வயது மகள் அவைக்கு வந்து அந்தப் படத்தைப் பார்த்து அதனை நண்டெனச் சொல்கின்றாள் என்ற கதையைக் குறிப்பீட்டிர்கள். வெண்முரசுக்குப் பிறகு எழுதப்பட்ட கதைத்திருவிழா கதைகள் விளையாட்டாக எழுதப்பட்டவையா என்ற கேள்விக்கு அவை அளிக்கும் நேர்நிலை உணர்வும் அதனுள் இருக்கும் நுண்ணுணர்வுத் தடத்துக்குமாக இந்தக் கதையைக் குறிப்பீட்டிர்கள்.

இந்த மூன்று நாட்கள் முடிவில், உரைகளும் கேள்விப்பதில்களுமாக நேர்சொல்லாக எனக்கான சொற்களைச் சேமித்துக் கொண்டேன் என்ற நிறைவு இருக்கிறது. ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்கள்.

அரவின் குமார்

பி.கிருஷ்ணன் அரங்கு உரைகள்

மலேசியா உரைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 10:31

பஞ்சும் பசியும் -வெங்கி

பஞ்சும் பசியும் தமிழ் விக்கி

ரகுநாதன் தமிழ் விக்கி

அன்பின் ஜெ?

நலம்தானே?

“பஞ்சும் பசியும்” சமீபத்தில்தான் வாசிக்க வாய்த்தது. சோஷியலிசக் கூறுகளும், யதார்த்தவாதச் சித்தரிப்புகளும் கொண்ட ஒரு நேர்கோட்டு நாவல். வாசித்தபின் நினைவுக்காக தொகுத்துக் கொண்டேன். 

1940-களின் அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்). ஊருக்கு நடுவில், சந்நதித் தெருவும், கீழ, மேலத் தெருக்களும் சங்கமிக்கும் இடத்தில் லோகநாயகி அம்மன் கோயில். முகப்பில் விசாலமான கல்மண்டபத்தில்தான் “வள்ளுவர் வாசக மன்றம்” போர்டு தொங்குகிறது (ஆகஸ்டு புரட்சிக்குப் பின் ஆரம்பித்தது). அங்கு மாலை வேளைகளில் செய்தித்தாள்கள் படிக்கக் கிடைக்கும். அருகிலேயே மூப்பனாரின் சிறிய வெற்றிலை பாக்குக் கடை. ஊர் முழுவதும் பிரதானமாக கைத்தறி நெசவாளர் சமூகம்.

தாதுலிங்க முதலியார் ஊரின் பெரு முதலாளி. செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர் (எந்த வழியிலும்). வீட்டில் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். ஊரின் மிகப்பெரிய “தனலட்சுமி ஸ்டோர்ஸ்” அவருடையதுதான். அவரின் மனைவி தர்மாம்பாள். அவர்களுக்கு இரு குழந்தைகள். மகள் கமலாவிற்கு 20 வயதாகிறது. மகன் இளைஞன் சங்கர் பொதுவுடமைச் சிந்தனைகளில் ஆர்வமுடையவன். அப்பாவிற்கும் மகனுக்கும் சித்தாந்த அளவில் கடும் கருத்து முரண்பாடுகள் உண்டு. சங்கரும் கமலாவும் நகரில் கல்லூரியில் படிக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்க, கீழ் நிலையிலிருந்த கைலாச முதலியார், தாதுலிங்க முதலியாரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி முதல் போட்டு வணிகத்தில் சிறிது சிறிதாக முன்னேறுகிறார். நாணயமானவர். கைத்தறி நெசவாளர்களின் கஷ்டங்கள் அறிந்தவர். தீவிர முருக பக்தர். அவர் மனைவி தங்கம்மாள். அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் மணிக்கு 23 வயது. இளையவன் ஆறுமுகத்திற்கு 10 வயது. மணியும், சங்கர், கமலா படிக்கும் கல்லூரியில்தான் படிக்கிறான். மணியும், கமலாவும் காதலிக்கிறார்கள்.

சுப்பையா முதலியார், தாதுலிங்க முதலியாரின் உறவினர். ஊரில் என்ன நடக்கிறதென்று முதலாளிகளுக்கு துப்பு கொடுப்பவர். மைனர் அருணாச்சல முதலியார், கோயில் தர்மகர்த்தா. கோயில் கணக்கு வழக்குகளில் தகிடுதத்தங்கள் செய்பவர்; தாதுலிங்கத்தின் நண்பர். வடிவேலு முதலியார் நெசவாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்; ஓரளவு படிக்கத் தெரிந்தவர். இருளப்பக் கோனார், கைலாச முதலியாரிடம் வேலை செய்கிறார். அவரின் மனைவி மாரியம்மா. மகன் வீரையா சிறுவயதிலேயே ஒரு சம்பவம் காரண்மாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடுகிறான்.

ஜவுளி ஏற்றுமதிக்கு தடை வருகிறது. அரசின் தவறான ஜவுளிக் கொள்கையால், நெசவாளர்களின் நிலைமை படு மோசமாகிறது. எங்கும் பசி, பஞ்சம், பட்டினி, தற்கொலைகள். கைலாச முதலியார் நொடித்துப் போகிறார். நெசவாளர்களின் வாழ்வில் சூறாவளி வீசுகிறது.

***

“விஷக்கன்னி“-யின் கீற்று இந்நாவலிலும் ஓரிடத்தில் இருந்தது…

கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல் இருளப்ப கோனார் தவித்துக்கொண்டிருந்த இந்த வேளையில்தான் மேற்கு மலைத்  தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒரு கங்காணி கூலிக்கு ஆள்பிடிக்க வந்தான். இருளப்ப கோனாருக்கு தேயிலைத் தோட்டத்திற்கு வேலை செய்யச் சென்றவர்களின் கதியைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். மருதுத் தேவரின் மகன் மாடசாமித் தேவர் நாலு வருஷங்களுக்கு முன்னால் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்று, அங்கு பட்ட அடி உதைகளால் வர்மத்தில் விழுந்து பிறந்த மண்ணில் வந்து மண்டையைப் போட்டதும், அமாவாசிக் குடும்பனின் மனைவி சுடலி, மலைக்குச் சென்று தேயிலை கிள்ளிப் பிழைத்ததும், அங்கிருந்து உடம்பெல்லாம் அழுகி வடியும் மேகத் தொழும்புப் புண்கள் பெற்று, வேலையை இழந்து திரும்பி வந்ததும், வாசுதேவநல்லூர் ரோட்டுப் பாதையில் அவள் பிச்சையெடுத்துப் பிழைத்ததும், அழுகி நாற்றமெடுத்துச் செத்ததும் அவருக்கு மறந்துவிடவில்லை. இன்னும் இவர்களைப்போல் தேயிலைக் காட்டுக்குச் சென்று மலைக் காய்ச்சல் பெற்று, ‘ஆஸ்பத்திரி மருந்துஎன்னும் பச்சைத் தண்ணீரைக் குடித்து பரலோகம் சென்ற அப்பாவிகளையும் அவர் அறிவார். மேற்கு மலை தேயிலைத் தோட்டம், வெள்ளை முதலாளிகளும், உள்நாட்டு முதலாளிகளும் ஒன்றுசேர்ந்து கொள்ளையடிக்கும் ஒரு வேட்டைக்காடு 

“நாமக்கல் ஏகாம்பர முதலியார் என்னும் கைத்தறி நெசவாளி பிழைப்புக்கு வழியில்லாமல் பதினைந்து நாட்களுக்கு மேல் பட்டினி கிடந்து இன்று காலமானார்” என்ற செய்தியை தினசரியில் படிக்கிறார் கைலாச முதலியார்.  ‘கொஞ்ச நாட்களாகவே இப்படிப்பட்ட செய்திகளைத்தான் அவர் பத்திரிகைகளில் படித்து வருகிறார். அன்றொரு நாள் ராசிபுரத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மனைவி பசிக்கொடுமை தாங்காது தன் இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் விழுந்து இறந்ததாக அவர் செய்தி படித்தார்; மற்றொரு நாள் காஞ்சிபுரத்தில் இருபத்தி ஐந்து வயது நெசவுத் தொழிலாளி ஒருவன் வறுமையின் காரணமாக பட்டினி கிடந்து மாண்டதாகப் படித்தார்; இன்னொரு நாள் வேறொரு கைத்தறித் தொழிலாளி ரோட்டடிச் சாலைப் புறத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தொங்கி தற்கொலை செய்துகொண்டதை வாசித்தறிந்தார்; குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்கமுடியாத தாயொருத்தி தன் பிள்ளையை ஒன்றரை ரூபாய்க்கு விற்றுவிட்ட பாரிதாபக் கதையையும் அவர் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது.’

***

சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அறுபதுகள்/எழுபதுகள் வரையிலான நாவல்களைப் படிக்கும்போது, அதில் பதியப்பட்டிருக்கும் பல வாழ்வுகளை அறியும்போது, நம் முந்தைய முந்தைய தலைமுறைகளின் பாடுகளையும், கண்ணீர்களையும், சோகங்களையும் உணரும்போது மனம் கனத்து மூழ்கி விடுகிறது. நிகழ்காலத்தின் எச்சிறு குறையையும், புகாராக வாழ்வின் முன் முறையிட நாம் கொஞ்சமேனும் சங்கோஜப்பட வேண்டாமா?.

நடந்து முடிந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இயல் கடைசி நாளில்தான் அவசர அவசரமாகச் சென்றுவர முடிந்தது (ஜனவரி 17 வரை இங்கு கென்யாவில் இருந்தார்). செந்திலையும், மீனாம்பிகையையும் அவசர அவசரமாக விஷ்ணுபுரம் ஸ்டாலில் சந்தித்திருக்கிறார்.அகநியில் ட்டி. டி. ராமகிருஷ்ணனின் “மாதா ஆப்பிரிக்கா” நாவலை (தமிழ் மொழிபெயர்ப்பு – குறிஞ்சி வேலன் ஐயா) கண்டிப்பாக வாங்கி வைக்கச் சொல்லியிருந்தேன். விரைவில் வாசிக்க ஆர்வமாயிருக்கிறது. அதில், அறிய, இன்னும் எத்தனை எத்தனை வாழ்வுகள் பதிந்திருக்கின்றனவோ?. 

வெங்கி

பஞ்சும் பசியும் வாங்க

“பஞ்சும் பசியும்” (நாவல்) – தொ. மு. சி. ரகுநாதன்

NCBH/பாரதி புத்தகாலயம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 04, 2023 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.