Jeyamohan's Blog, page 628
February 12, 2023
இந்துமதமும் தாராளவாதமும்
இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் வாங்க
இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் மின்னூல் வாங்க
ஆலயம் எவருடையது? மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
சுதந்திரச் சிந்தனை (Free Thought) கோட்பாட்டை இந்து ஞானத்தில் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது? சற்று விளக்கவும்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி
ஏறத்தாழ 15 ஆண்டுகளாக நாளும் எழுதி வருகிறேன். ஆகவே எல்லாவற்றைப் பற்றியும் முன்னரே எழுதியிருப்பேன். மீண்டும் எழுதும்போது முன்னர் எழுதியவற்றையே விரிவாக்கி எழுதுகிறேன் என்று தோன்றுகிறது. அதுவும் நல்லதே. ஒரு சிந்தனையை உரையாடல் மூலம் நானே வளர்த்து முன்னெடுத்துச் செல்கிறேன் அல்லவா? இக்கடிதத்திற்கான பதிலை கலாச்சார இந்து என்னும் கட்டுரையில் எழுதியுள்ளேன். அத்தகைய கட்டுரைகள் ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளன.
நீங்கள் சொல்லும் சுதந்திரசிந்தனையே தாராளவாத சிந்தனை (Liberalism) என்றும் சொல்லப்படுகிறது. அதன் வரையறை இது. தனிமனிதனின் சிந்தனையும் வாழ்க்கையும் மதம், அரசு மற்றும் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படக் கூடாது. தனிமனிதன் தன்னுடைய மகிழ்ச்சி, ஆன்மிகமலர்ச்சி ஆகியவற்றை தானே தேடிக்கண்டடையும் உரிமை உடையவன். ஒரு தனிமனிதனின் சுதந்திரம் இன்னொரு தனிமனிதனின் சுதந்திரத்தை பாதிக்காதவரை அது அனுமதிக்கத் தக்கதே. அதற்கு உலகியல் சார்ந்த, நடைமுறை சார்ந்த கட்டுப்பாடுகள் இருக்கலாமே ஒழிய மனிதனுக்கு அப்பாலுள்ள எந்த நெறியும் அதை வரையறைசெய்யவோ வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ கூடாது’
இந்தக் கொள்கை, இதையொட்டிய மனநிலை பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் உருவானது. அதற்கான வரலாற்றுப்பின்புலம் இது. பொயு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்தவ மதத்தின் பேரமைப்பான கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பிய வாழ்க்கையை முழுமையாகவே கட்டுப்படுத்தியது. ஆன்மிகத்தை, சிந்தனைகளை, கலையை, அன்றாடவாழ்க்கையை, அகவாழ்க்கையை எல்லாம் வரையறைசெய்தது. நெறிவகுத்து, கண்காணித்து, மீறுபவர்களை கடுமையாக தண்டித்தது. அரசியலதிகாரம், பொருளியலதிகாரம், அறிவதிகாரம், மதஅதிகாரம் ஆகிய நான்குமே கத்தோலிக்கத் திருச்சபையிடமிருந்தன.
அந்த முற்றதிகாரத்திற்கு எதிராக மூன்று முனைகளில் ஐரோப்பாவில் கிளர்ச்சி உருவானது. அரசியல்களத்தில் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த நவீனத்தேசிய உருவகங்கள் உருவாகி, அவை தனிநாடுகள் என்னும் அமைப்பாகி, கத்தோலிக்கத் திருச்சபை என்னும் புனிதரோமப் பேரரசுக்கு எதிராக கிளர்ந்தன. பொருளியல் களத்தில் நிலவுடைமையாளர் (டியூக்குகள்) விவசாயிகள் மற்றும் கைத்திறன் பணியாளர் (மேசன்கள்) போன்றவர்களின் எதிர்ப்பு உருவானது. ஆன்மிகத் தளத்தில் மார்ட்டின் லூதர், ஜான் ஹுஸ் போன்றவர்களின் எதிர்ப்புகள் உருவாயின. ஐரோப்பா கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தை உதறியது.
அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமைகள் தேசியஅரசுகளை ஆட்சிசெய்த மன்னர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதற்கு எதிராக தனிமனிதனின் உரிமையை முன்வைத்த எதிர்ப்புகள் உருவாயின. பிரெஞ்சுப்புரட்சி முதலியவை அதன் வெளிப்பாடுகள். மன்னராட்சி வீழ்ச்சி அடைந்தபோது சர்வாதிகாரிகளின் ஆட்சிகள் உருவாகி மீண்டும் தனிமனிதனின் உரிமைகளை ஒடுக்கின. அதற்கு எதிராகவும் போராடவேண்டியிருந்தது.
இந்தப் போராட்டங்களின் விளைவாகவே ஐரோப்பா நவீன ஜனநாயகத்தை கண்டடைந்து வலுப்படுத்திக் கொண்டது. அங்கிருந்து ஜனநாயகம் உலகம் முழுக்கப் பரவியது. ஜனநாயகத்தின் அடிப்படையே தனிமனித உரிமைதான். சுதந்திரசிந்தனை இல்லாத இடத்தில் ஜனநாயகம் வாழமுடியாது. தன்னுடைய அரசு எப்படி இருக்கவேண்டுமென முடிவெடுக்கும் முழு உரிமையும் குடிமகனுக்கு இருக்கும் அமைப்பே ஜனநாயகம் என்பது. அதில் அவன்மேல் எந்த புறச்சக்தியும் கட்டுப்பாடு செலுத்தலாகாது.
தனிமனித உரிமையை மேலும் விரிக்கையில் தாராளவாதம் உருவாகிறது. தனிமனித உரிமை என்பது எப்போதும் சமூகச்சராசரி மனிதனை உத்தேசிக்கிறது. உரிமை அனைவருக்கும் உள்ளது என்னும் பார்வையில் சமூகத்தின் சராசரியாக இல்லாமலிருப்பவர்களின் உரிமையையும் கருத்தில்கொள்வதே தாராளவாதம். சமூகப்புறனடையாளர்கள், சிறுபான்மையினர், பலவகையிலும் குறைபாடு கொண்டோர் மட்டுமல்ல அச்சமூகத்திற்கு அன்னியமானவர்கள் ஆகியவர்களையும் உள்ளிட்ட உரிமைப்பார்வை அது. ஜனநாயகம் தனிமனித உரிமைகோரும் சுதந்திரசிந்தனையால் உருவாகி தாராளவாத சிந்தனையால் மேலும் வலுப்பெறுகிறது.
இனி, உங்கள் வினா. இந்துமதத்தில் சுதந்திர சிந்தனைக்கும் தாராளவாதத்திற்கும் உள்ள இடம் என்ன?
முதலில் சொல்லப்படவேண்டியது, இந்துமதம் நிறுவனரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதே. அதற்கு புறவயமான மையம் இல்லை. ஆகவே அது நேரடியாக எந்த சிந்தனையையும் கட்டுப்படுத்தவில்லை. எவ்வகையிலும் எவரையும் தண்டிக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. ஆகவே சென்ற ஆயிரமாண்டுக்கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தொடர்ச்சியாக மைய ஓட்டச் சிந்தனையை மீறிச்செல்லும் சிந்தனைப்போக்குகள் உருவாகி, நிலைபெற்றுக்கொண்டே இருப்பதைக் காண்கிறோம்.
எவையெல்லாம் இந்து மதத்தின் அடிப்படைக் கருதுகோள்கள் என சொல்லப்படுகிறதோ அவையெல்லாமே முழுமையாக மறுக்கப்பட்டு, புதிய போக்குகள் உருவாகியிருக்கின்றன. கிளைபிரிந்து வளர்ந்து பரவுவதே இந்துமதத்தின் இயல்பாக உள்ளது. இது இந்துமதம் நிறுவப்பட்ட ஒன்றல்ல, பழங்குடி மரபுகளில் இருந்து நீண்டகால வரலாற்றால் மெல்லமெல்ல திரண்டு தன்னியல்பாக அதன் வடிவை அடைந்தது என்பதே காரணம்.
இந்த வாய்ப்பு எப்போதும் சுதந்திரசிந்தனைக்கு உகந்ததாகவே உள்ளது. ஓர் இந்து எந்த மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. தனக்கான சிந்தனையை, ஆன்மிகத் தேடலை அவன் அமைத்துக் கொள்ள எப்போதுமே வழி உள்ளது.
இரண்டாவதாக, இந்துமதம் சொல்லும் மீட்பு (முக்தி, மோட்சம்,வீடுபேறு) என்பது தனிப்பட்டை முறையில் ஒவ்வொருவரும் தேடி அடையவேண்டியது. அனைவருக்கும் உரிய பொதுவான மீட்பு என ஒன்று இதில் இல்லை. கூட்டான பயணமே இல்லை. முழுக்கமுழுக்க ஆன்மாவின் தனிப்பயணம். அந்த ஆன்மா மட்டுமே அறிந்த வழி அது. இறையுணர்வும், மீட்பும் மிகமிக அந்தரங்கமானவை என சொல்லப்பட்டுள்ளன. ஆகவே அந்தப் பயணம் எவராலும் கண்காணிக்கப்படுவதில்லை. கட்டுப்படுத்தப்படவில்லை.
இதுவும் ஒரு முக்கியமான வாய்ப்பு. ஓர் இந்து தன் மீட்பின் வழியை தானே தெரிவுசெய்துகொள்ளலாம். ஒரு வழியிலிருந்து இன்னொன்றுக்கு இயல்பாக மாறலாம். மத அமைப்பின் ஆணை எதுவும் அவனுடைய ஆன்மிகம் மேல் செலுத்தப்படாது. இறைவழிபாடு முதல் நானே இறை என உணர்வது வரை எல்லா வழிகளும் உள்ளன. நாத்திகத்திற்கும் இந்து மரபில் இடமுள்ளது. என்றும் இருந்து வந்துள்ளது. பல்வேறு மறைஞானச் சடங்குகளுக்கு இடமிருந்து வருகிறது. இதுவும் சுதர்ந்திர சிந்தனைக்கு மிக உவப்பானதே.
இந்து மரபில் சுதந்திரசிந்தனைக்கு எதிரான மனநிலைகள், அதற்கான கட்டுப்பாடுகள் எங்குள்ளன?
ஒன்று, ஆசாரவாதம். இந்து மரபில் கணிசமானவர்கள் இந்து மதத்தை ஆசாரவாதமாகவே அறிபவர்கள். ஆசாரவாதத்தை பொறுத்தவரை முன்னோர் சொற்கள் மட்டுமே எதற்கும் முடிவான விடையாக அமைபவை. அவற்றை முழுமையாக ஏற்று கடைப்பிடிப்பது மட்டுமே மீட்பின் வழி. அவ்வாறு கடைப்பிடிப்பதற்குரிய நெறிகள் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஆசாரவாதம் எந்தவகையான சுதந்திரசிந்தனைக்கும் எதிரானது. சுதந்திரசிந்தனை என்பதே மீறலும் பாவமும்தான். அதை ஆசாரவாதம் அமைப்புகள் வழியாகக் கட்டுப்படுத்தவில்லை – அத்தகைய அதிகார அமைப்புகள் இல்லை. அதை ஆசாரவாதம் கடுமையான பிரச்சாரம் மற்றும் குற்றவுணர்ச்சி வழியாக கட்டுப்படுத்தியது.
இரண்டாவது, இங்குள்ள மத அமைப்புகளுக்கு கட்டுப்பட்டிருப்பது சுதந்திரசிந்தனைக்கு எதிரானது. மடங்கள், மதவழிபாட்டு அமைப்புகள் உள்ளன. அவற்றில் நம்பிக்கைகொண்டு இணைந்திருப்பவர்கள் தங்கள் சுதந்திரசிந்தனையை முன்வைக்கமுடியாது. அவர்கள் அந்த அமைப்பின் பொதுவான நெறிகள், கொள்கைகளை ஏற்றாகவேண்டும். எந்த அமைப்பும் அந்நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும்.
அமைப்புகளுடன் இணைந்திருப்பதில் பல வசதிகள் உள்ளன. மரபை கற்க அது நிலையான கட்டமைப்புகளை அளிக்கிறது. கூட்டான செயல்கள் அளிக்கும் நிறைவும் உள்ளது. ஆனால் தனிச்சிந்தனை கொண்டவர்களுக்கு அங்கே இடமில்லை. ஆன்மிகத்தேடலை அகவயமாக ரகசியமாக வைத்துக்கொள்ளலாம். சிந்தனையை அப்படி வைத்துக்கொள்ள முடியாது.
ஆகவே, இந்து ஆசாரவாதத்தை ஏற்காத ஒருவர் எந்த அமைப்புகளுடனும் இணைந்திருக்கவில்லை என்றால் அவர் ஓர் இந்து என்னும் நிலையில் முழுமையான சிந்தனைச் சுதந்திரம் கொண்டவரே. அந்த வாய்ப்பை அளிக்கும் மதங்கள் உலகில் மிக மிக அரியவை. இந்துமதம் இன்றைய உலகில் முதன்மையான ஆன்மிக மரபு என நான் நினைப்பது இதனால்தான்.
இதற்கு அப்பால் இங்கே சுதந்திரசிந்தனைக்கு எதிராக இருப்பது சமூகக்கட்டுப்பாடுகள். நாம் தொன்மையான ஒரு பழங்குடிநாகரீகத்தின் தொடர்ச்சியை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். நம் சாதி, குலதெய்வம், குடும்ப மரபுகள் ஆகிய மூன்றுமே பழங்குடிப் பண்பாட்டில் இருந்து உருவாகி வந்து நீடிப்பவை. அவை நம் சிந்தனையை ஆழமாக கட்டுப்படுத்துகின்றன.
இந்து மதம் வேறு இங்குள்ள சமூக வழக்கங்கள் வேறு. ஆனால் இந்துமதம் சமூக வழக்கங்களை நிலைநிறுத்துவதற்கு உதவும்படி நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சமூக வழக்கங்களின் தேக்கநிலைகள் எல்லாமே இந்துமதத்தின் தேக்கநிலையாகவே அரசியலாளர்களால் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன
ஆனால் இந்துமதத்தின் மெய்யியலில் இருந்து உருவாகி வந்த ஞானிகளே இந்து சமூகத்தின் தேக்கநிலைக்கு எதிராக என்றும் போராடிவந்துள்ளனர். எல்லா மாற்றங்களும் அவர்களால் உருவாக்கப்பட்டவையே. ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார் வரை அதற்கு ஆயிரகணக்கான முன்னுதாரண ஆளுமைகளை நாம் சுட்டிக்காட்டமுடியும்.
நவீன சுதந்திரசிந்தனை இந்தியாவுக்கு ஐரோப்பாவில் இருந்து வந்தது. ஐரோப்பா மாபெரும் போராட்டங்கள், ஒடுக்குமுறைகள் வழியாக இருநூறாண்டுகளில் வந்தடைந்தது அந்த உச்சம். ஆனால் இங்கே எந்த வகையான ஒடுக்குமுறைகளும் இல்லாமல், வெறும் கருத்துமோதல் வழியாகவே நவீன சுதந்திரசிந்தனை வேரூன்றி நிலைகொண்டதை வரலாறு காட்டுகிறது. இங்கே பழமைவாதிகளோ அமைப்புகளோ எந்த வன்முறையையும் செலுத்தவில்லை. கருத்தியல் களத்தில் அவர்கள் வெல்லப்பட்டனர்.
அவ்வாறு நவீன சுதந்திரசிந்தனையை உடனே ஏற்றுக்கொண்டவர்கள் தயானந்த சரஸ்வதி, ராஜா ராம்மோகன் ராய், விவேகானந்தர், நாராயணகுரு, காந்தி போன்ற இந்து மெய்யியல் ஞானிகள் என்பதை கவனிக்கவேண்டும். அவர்களால்தான் இங்கே பழமைவாதம் தோற்கடிக்கப்பட்டது.
இந்தியாவில் நவீன ஜனநாயகம் வெறும் முப்பதாண்டுக்காலத்தில் அறிமுகமாகி உறுதியாக நிலைகொண்டது. அதற்குக் காரணம் இந்தியாவின் அடிப்படையான மரபு இந்துமதமாக இருப்பதுதான். அதைநம்பியே இங்கே ஜனநாயகம் இன்னும் நிலைகொள்கிறது. நமக்கு அண்மையிலுள்ள பிறநாடுகளை நம்முடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இதை நம்மால் உணரமுடியும்.
இந்துமதம் சுதந்திரசிந்தனைக்கு சாதகமான ஆன்மிக மையமும், தத்துவ உள்ளடக்கமும் கொண்டது. இந்துமதத்தின் வரலாற்றுப்பரிணாமம் அதை மையம் சார்ந்ததாக ஆகாமல் விரிந்து பரவுவதாக ஆக்கியுள்ளது. பிறவற்றை அழித்து தன்னை நிறுவிக்கொள்வது அதன் வழி அல்ல, பிறவற்றை உள்ளிழுத்து தன்னை விரித்துக் கொள்வதே அதன் வழி. அது ஜனநாயகத்தின் அடிப்படையான இயல்பு.
சுதந்திரசிந்தனையின் விரிவாக்கமான தாராளவாத சிந்தனையும் இந்தியாவில் இயல்பாகவே ஏற்பு பெற்று வந்ததையே வரலாறு காட்டுகிறது. பிறநாடுகளில் பெரும் பழமைவாத எதிர்ப்புகளைச் சந்தித்த புதியசிந்தனைகள் இங்கே இயல்பாக ஏற்கப்பட்டன. இந்து வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்த இந்து சிவில் சட்டம் ஏற்கப்பட்டது ஓர் உதாரணம். இன்று, மூன்றாம்பாலினத்தவர், மாற்றுப்பாலுறவினர் உரிமை வரை அனைத்தையும் பெரிய எதிர்ப்புகளில்லாமல் இந்து சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையில் இதிலுள்ள ஏற்கும்தன்மை, உள்ளிழுக்கும் தன்மையே காரணம்.
இத்தனையையும் சொல்லி முடிக்கும் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். இந்துமதம் அதன் உள்ளிழுத்து விரியும் தன்மை, சமரசத்தன்மை, தனிமனிதத் தேடலை அனுமதிக்கும் தன்மை, ஆன்மிகத்தை அந்தரங்கப்பயணமாகவே முன்னிறுத்தும் தன்மை , மைய அமைப்புகளில்லாத தன்மை ஆகியவற்றின் வழியாக சுதந்திர சிந்தனையையும் தாராளவாதத்தையும் இயல்பாக ஏற்பதாக உள்ளது. ஆனால் இவ்வியல்புகள் எல்லாமே அதிகாரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எதிரானவை.
ஆகவே மதம்சார்ந்த அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ள முயல்பவர்கள் இவற்றுக்கு நேர் எதிரான இயல்புகளை இந்துமதத்தின்மேல் ஏற்றமுற்படுகிறார்கள். இந்துமதத்தை சமரசமற்றதாக, அன்னியரை விலக்குவதாக, தனிமனித தேடலுக்குப் பதிலாக திரள்மனநிலையை உருவாக்கக்கூடியதாக, மையமான அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆக்க முயல்கிறார்கள். அண்மைக்காலமாக நாம் கேள்வியே பட்டிராத மதஅமைப்புகள் ஆணைகளை பிறப்பிக்க ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். மதஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியலதிகாரத்தை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.அதாவது, இந்துமதம் எந்த இயல்பால் இன்றைய உலகின் மிக அரிய ஞானமரபாக உள்ளதோ அந்த இயல்பு அழிக்கப்படுகிறது.
இரு நிலைகளிலும் அந்த அழிப்பே நிகழ்கிறது. இந்து மரபின் அரவணைக்கும்தன்மை, தனிமனித விடுதலை சார்ந்த ஆன்மிகம், மையமற்ற ஜனநாயகத்தன்மை ஆகியவற்றை முற்றாகவே மறுத்து அதை ஒரு தேங்கிப்போன அடக்குமுறை கருத்தியலாக முத்திரையிட்டு, இழிவுசெய்து ஒழித்துவிடும் பெருமுயற்சிகள் நிகழ்கின்றன. அவை முற்போக்குச் சிந்தனை என்றபெயரில் உலகளாவிய நிதியுதவியுடன் நிகழ்கின்றன. இந்துமதம் அழியவேண்டுமென்னும் குரல் காதில் விழாமல் நம்மால் ஒருநாள் கூட நம்மால் வாழமுடிவதில்லை. உலகின் எந்த மதத்தின்மீதும் இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதல் இன்று நிகழவில்லை
அவர்கள் இந்து சமூகத்தின் எல்லா சமூகவியல் பிரச்சினைக்கும் இந்துமதமே காரணம் என வாதிடுகிறார்கள். கருணையை, சமத்துவத்தை முன்வைத்த மாபெரும் இந்துஞானியர் எல்லாருமே கொடிய அடக்குமுறையை பரப்பியவர்கள் என்கிறார்கள். ஆனால் கத்தோலிக்கச் சபையும் போப்பாண்டவரும் நேரில் ஈடுபட்டிருந்த போதிலும்கூட செவ்விந்தியர்களையோ ஆஸ்திரேலிய தொல்குடிகளையோ முற்றழித்ததும், கறுப்பின மக்களை அடிமையாக்கி வணிகம் செய்ததும் சமூகசக்திகளே ஒழிய கிறிஸ்தவத்திற்கு அதில் பங்கில்லை என வாதிடுவார்கள்.
மறுபக்கம் இவர்கள் சொல்லும் இதே முத்திரைகளை அப்படியே வாங்கிக்கொண்டு, அதற்குச் சாதகமானவகையில் இந்து மதத்தை ஆக்கும்படியாக மதவாத ஆதிக்க அரசியலை நிகழ்த்துபவர்கள் செயல்படுகிறார்கள்.
இந்த இருமுனைத் தாக்குதல்களில் இருந்து இந்துமதம் காக்கப்படவேண்டும் என்றால் அதன் ஆன்மிகம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படவேண்டும். அதன் அடிப்படை சுதந்திரசிந்தனையே என நிறுவப்படவேண்டும்
ஜெ
சூறாவளி
[image error]சூறாவளி இதழ் க.நா.சுப்ரமணியத்தால் நடத்தப்பட்ட நூல்வடிவ சிற்றிதழ். இலக்கிய இதழான இதற்கு ஏன் சூறாவளி என்று பெயரிட்டார் என தெரியவில்லை. சூறாவளிவிமர்சனங்களும் அதில் இல்லை. ஆனால் அன்று கநாசுவுக்கு 27 வயதுதான். சூறாவளி என பெயர் வைத்து ஒரு சிற்றிதழ் நடத்தும் சின்னப்பையனாக க.நா.சுவை கற்பனைசெய்யவே முடியவில்லை. அப்போது விடுதலைப்போர் நடந்துகொண்டிருந்தது. க.நா.சு அதில் அக்கறையே காட்டவில்லை. அவர் கவனம் உலக இலக்கியத்திலேயே இருந்தது.
சூறாவளி இதழ்
சூறாவளி இதழ் – தமிழ் விக்கி
ஒரு வரம் – கடிதங்கள்
புனைவுக் களியாட்டுச் சிறுகதை தொகுதிகள் வாங்க
புனைவுக் களியாட்டு மின்னூல்கள் வாங்க
அன்புள்ள ஜெ ,
நலம் தானே.
நேற்று தை வெள்ளிக்கிழமை. கற்பகாம்பாள் சன்னதியில் நுழையும் போது நடைதிறந்து தீபாராதனை நடந்தது. அம்மா தங்கக் காசுமாலை அலங்காரத்தில், தீப ஒளியில் ஜொலிக்க விழிநீர் மல்கி , மெய்ப் புளகம் அரும்பி சுயத்தை மறந்த நிலை . உடனே ‘வரம்’ கதையில் ஸ்ரீதேவிக்கு திருடன் பரிசாக அளித்த மேப்பலுர் பகவதி தரிசனம் நினைவுக்கு வந்தது. எப்பொழுதும் எங்களை இப்படி கண்ணீரில் மிதக்க வைக்கிறீர்களே. இது நியாயமா ?
இன்னுமொரு நூற்றாண்டு இரும் .
வாழ்த்துக்களுடன்
சுந்தரம் செல்லப்பா
***
அன்புள்ள ஜெ
சென்ற செப்டெம்பரில் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. எலும்பு முறிவால் மூன்றுமாதம் படுக்கை. வெளியுலகமே இல்லை. முதலில் நான் சென்றிறங்கியது சமூக வலைத்தளங்களில்தான். வாசிக்க வாசிக்க ஒரு எரிச்சல், நமைச்சல். ஆனால் விட்டுவிடவும் முடியாது. ஒருநாளில் நூறுதடவை உள்ளே செல்வது, வாசிப்பது, எரிச்சலடைவது. இரண்டுமூன்று தடவை தேவையில்லை என வெளியே வந்தாலும் மீண்டும் உள்ளே இழுத்தது. (அந்த செட்டப்பே அப்படித்தான். டிலிட் செய்து வெளியே வந்தால் மீண்டும் உள்ளே வர அழைத்துக்கொண்டே இருக்கும். மின்னஞ்சல்கள் வரும். ஒரு கிளிக் பண்ணினால் அப்படியே உள்ளே போகலாம். எதுவுமே கேட்காது. மீண்டும் இன்ஸ்டால் ஆகிவிடும். அப்படி ஏராளமானவர்கள் நாள்தோறும் வெலியே வந்து மீண்டும் உள்ளே போகிறார்கள் போல)
ஃபேஸ்புக் என்பதே ரிட்டயர்ட் ஆனவர்கள், ஐம்பது வயது கடந்தவர்கள் அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த அரசியலைப் பேசிக்கொண்டிருக்கும் இடம். அங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாதிமத அரசியல் வன்மங்கள்தான் வெளிப்படுகின்றன. அதைத்தாண்டி ஒரு வேடிக்கை வெளியாவதுகூட மிகமிகக்குறைவுதான். இந்த கஷ்டத்தை ஏன் வாங்கி வைத்துக்கொள்கிறேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஆனால் வெளிவருவது கஷ்டம். அப்போதுதான் உங்களுடைய வரம் என்ற கதை வாசித்தேன். அது எனக்களித்த ஒரு பெரும்பரவசமும் நிறைவும் அற்புதமானது. அந்த நாளே ஒளியாக ஆகிவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த நாளை கழித்தேன்.
அதன்பின் உங்கள் கதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். புனைவுக்களியாட்டுச் சிறுகதை தொகுதிகளை வாங்கி வாசித்தேன். எல்லாவற்றையும் வாசித்தேன். இன்னும்கொஞ்சம் கதைகள் மிச்சமுள்ளன என நினைக்கிறேன். அந்த நூல்கள் எனக்கு அளித்த நிறைவு என்னை மீட்சி அடையவைத்தது. சலிப்பு கிடையாது. சோர்வு கிடையாது. வாழ்க்கையே இனிமையாக ஆகிவிட்டது. செயற்கையான இனிமை அல்ல. ஒரு அற்புதமான மனநிலை. வாழ்வது இனிது என்று அக்கதைகள் சொல்லிக்கொண்டே இருந்தன. புனைவுக்களியாட்டு கதையின் சிறந்த மெடபரே வரம் கதைதான். கதவைத்திறந்து தெய்வத்தை காட்டிவிட்டீர்கள். நன்றி ஜெ
விருத்தகிரீஸ்வரன் எம்.ஆர்
யோகம், கடிதம்
வணக்கம்
பதம் பணிதல் என்பதற்கான வரையறை நம் மரபில் இலக்கிய மரபில் சாதுக்கள் சன்னியாசிகளுக்கு ஆனது ஏனையோருக்கானது அல்ல என்ற கருத்து யோக முகாம் மூலமாக நிறைவு நாளன்று அருகில் இருந்த அந்தியூர் மணி அண்ணன் மூலம் எனக்கு பகிரப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் மிகச் சிறந்த ஆளுமைகளுக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். யோக முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனியாக விதம் விதமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உடல் மனம் புத்தி ரீதியான மாற்றத்திற்கு வித்திட்ட உன்னத நிகழ்வு ஒரு கூட்டு முயற்சியே குழு செயல்பாடே, அதனால் தான் நாம் அனைவரும் அனைவருக்கும் நன்றி உள்ளவர்கள் ஆகிறோம்.
கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் குறைந்த நேரத்தில் அதிக பாடத்திட்டம் மற்றும் நடைமுறை விளக்கம் என மிகுந்த கண்டிப்புடன் வேறு சில யோக முகாம்களில் கலந்து கொண்ட என் போன்ற சிலருக்கு தொடர்ந்து முகாம் நிகழ்வுகள் ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்து கொண்டே இருந்தது என்பது உண்மைதான் இது ஒரு ஏமாற்றம் போல் அந்த நேரத்தில் இருந்தாலும் பரிசு என்னவோ சமமாக எளிதாக அனைவரும் யோக சாதகராய் ஆக வேண்டும் என்பதே இலக்காக கொடுக்கப்பட்டது. வனம் என்றாலே தானாகவே தன் இயல்பாய் வளமாக தானே இருக்கிறது. நித்திய வனமும் எங்களது ஒவ்வொருவரின் உள்ளத்தையும் வளமாக்கியது என்பதில் எள்ளளவும் எவருக்கேனும் ஐயம் இருக்காது என்பது என் சிறு கருத்து.
அவரவர் தம் இயல்பில் பண்பில் பழக்க வழக்கத்தில் இருந்து கொண்டே உடல் சார்ந்த உள்ளம் சார்ந்த உயர்ந்த விழிப்பு நிலை சார்ந்த பயிற்சிகளை தொடர்ந்து நடைமுறையில் பழக்கப்படுத்திக் கொண்டே வருவதன் மூலமாக தானாகவே அவரவர்களுக்கு எது தொடர வேண்டும் எது விலக வேண்டும் என்ற குழப்பத்திற்குள் நாம் சிக்காமல் நம் முயற்சியால் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அதுவே (உடல் ,மனம்,அறிவு.)தன் தேவையை தானே பூர்த்தி செய்து கொள்ளும் என்ற உயரிய கருத்தை முத்தாப்பாய் நல்கிய யோகா ஆசான் சௌந்தர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இத்தகையான குருகுல சூழல் ஏற்படுவதற்கு வாய்ப்பு வழங்கிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
கண்டிப்பும் கடுமையும் அவசியம்தான் அதுவே குருகுலத்தில் கரிசனமாக மாறி அனைவருக்கும் வழங்கப்பட்டது. குருவின் குருவான நித்திய சைதன்ய யதிக்கும் மற்றும் நம் அனைவரின் குரு பரம்பரையில் உள்ள அனைத்து குருமார்களுக்கும் நாம் தினசரி முயன்று செயலாற்றும் பயிற்சிகளையே குரு காணிக்கை ஆக செலுத்தி மகிழ்வோம். உளத்தில் பெற்ற வளம் காப்போம். வனம் காப்போம். நன்றி.
அன்புடன்
ஆறுமுகம்
***
அன்புள்ள ஆறுமுகம்,
மகிழ்ச்சியளிக்காத எதும் நீண்டநாள் தொடராது. யோகமே ஆனாலும் செய்யுந்தோறும் நிறைவும் மகிழ்வும் அளிக்கவேண்டும். அது நோன்பு அல்ல. ஒரு பயணம். அதில் எல்லா காலடிகளும் இனிதாக அமையவேண்டும்
ஜெ
ஆவணம்,கலை -கடிதம்
தமிழ் விக்கியில் தம்பிரான் வணக்கம் படித்தேன். ரோமன் கத்தோலிக்க மதத்தின் குழந்தைகளுக்கு செபங்களின் அறிமுகமாக ‘சின்னக் குறிப்பிடம்’ என்ற புத்தகம் கொடுக்கப்படும். முதலில் ‘பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே’ என்று நெற்றி, நெஞ்சில் தொட்டு சிலுவை வரையும் செபம் இருக்கும். ஆறுலட்சண மந்திரம் அடுத்ததாக இருக்கும். நாங்கள் பள்ளியில் ராகம் போட்டு வாய்ப்பாடு படிப்பதுபோல் சொல்வோம். ‘ஒண்ணாவது சர்வேசுரன் தாமாய் இருக்கிறார், இரண்டாவது துவக்கமும், முடிவும் இல்லாதிருக்கிறார்’ என்று போகும். அடுத்து விசுவாசப் பிரமாணம். முதலில் தம்பிரான் வணக்கத்தில் இருந்ததுபோல்தான் இருந்திருக்கும். நாங்கள் சொல்லும்போது கொஞ்சம் மாறி இருக்கும்.
‘பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்பொழுது தனித்தமிழில் சொல்ல வேண்டும் என்று எல்லா மந்திரங்களையும் மாற்றி இருக்கிறார்கள். விசுவாசப் பிரமாணம் என்று இல்லாமல் ‘நம்பிக்கை அறிக்கை’ என்று மாற்றப்பட்டுள்ளது.
‘விண்ணையும், மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன்’. இது பாடம் படிப்பது போல் இருக்கும். எனக்கு இன்னும் இந்த புது அறிக்கை பழகவில்லை. எல்லோரும் வழிபாட்டில் சொல்லும்போது நான் மெதுவாக பழைய விசுவாசப் பிரமாணத்தை சொல்லிக்கொள்வேன். எப்படி எல்லாம் இந்த மந்திரங்கள் மாறிவந்திருக்கிறது என்று பார்க்க வியப்பாய் இருக்கிறது. இப்படியான வரலாறுகள் 100 வருடத்தைக் கொண்டாடும் எங்கள் குருத்துவக் கல்லூரியில் இல்லை. (எங்கள் கல்லூரியின் வரலாறே சரியாக இல்லை என்பது வேறு விஷயம்). நிறைய கிறிஸ்தவ பண்பாட்டின் காரியங்கள் தமிழ் விக்கியில் இருக்கிறது. வாழ்த்துக்கள் சார்.
டெய்ஸி பிரிஸ்பேன்
***
அன்புள்ள டெய்ஸி
இன்னும் பலநூறு பதிவுகள் கிறிஸ்தவ ஆன்மிகம், மதஞானிகள், பணியாளர்கள் பற்றி எழுதவேண்டியிருக்கிறது. மலைப்பூட்டும் பணி. பார்ப்போம்,
ஜெ
அன்பு நிறை ஜெ
வணக்கம் !
வெளியிலிருந்து ஏதோ ஒரு கருணை நம்மை சதா காத்துகொண்டிருக்கிறது!
உங்கள் வார்த்தைதான், நீங்கள் சொன்னது தான்! அது போலதான் எங்கோ இருக்கிறீர்கள், ஆனால் எங்கும் உடன் இருக்கிறீர்கள். இன்று தி ஜா வின் தமிழ் விக்கி வாசித்தேன். என் போன்றவர்களுக்கோ அல்லது எனக்கு மட்டுமோ! தெரியாது
எனக்கு மயில்கழுத்தில் உள்ள தி ஜா தான் தி ஜா.தி ஜா வின் எல்லா எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன் கடைசியாக வாசித்தது உயிர்த்தேன்!
ஆனால் அதற்கும் சமீபத்தில் வாசித்தது “மயில் கழுத்து“ தமிழ் விக்கியில் மயில் கழுத்து பற்றி எதுவுமே இல்லாது வியப்பாக உள்ளது.
ரகுபதி
கத்தார் .
***
அன்புள்ள ரகுபதி,
மயில்கழுத்து போன்ற கதைகளில் உள்ளவை வாழ்க்கை ஆவணங்கள் அல்ல. அவை ஓர் ஆளுமையை ஒட்டி கலைஞன் புனைந்த சித்திரங்கள். அப்படி எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் புனைவது உலகம் முழுக்கவே உள்ளது. இன்று எழுத்தாளர்கள் எழுதிய கதைமாந்தர்களேகூட மீண்டும் புனையப்படுகிறார்கள். (ரோடின் வடித்த பால்ஸாக்கின் சிற்பம் வேறு மனிதர்களை மாதிரியுருக்களாகக் கொண்டு, பால்ஸாக்கின் உடலுடன் பெரிய தொடர்பில்லாமல், அவருடைய ஆளுமை பற்றிய ரோடினின் தரிசனத்தை முன்வைப்பதாக அமைந்தது. அத்தகைய கலைமுயற்சிகளுக்கு ஆவணமதிப்பு இல்லை.
ஜெ
***
February 11, 2023
தத்துவத்தின் முன்னிலையில்
அன்புள்ள ஜெ
தத்துவ வகுப்புகள் எவருக்கு ? பதிவை வாசித்தேன். எனக்கு தத்துவ வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உண்டு. என் உடல் நிலையாலும் குடும்ப சூழல்களாலும் இப்போதைக்கு வர முடியாது. ஆனால் தகுந்த வாய்ப்புக்காக எதிர்பார்த்தபடியே இருக்கிறேன். என் காய்கள் செல்லும் என்ற உணர்வு கிடைத்துவிட்டால் வந்து விடுவேன்.
இன்று எவரெல்லாம் தத்துவ கல்வியை அடைய முடியாது என ஒரு பட்டியலிட்டு இருக்கிறீர்கள். அதிலொன்று நோய்கள் கொண்டவர்கள். எனக்கு எந்தவித உள நோயும் இல்லை. ஆனால் உடலில் நோயுடனேயே வாழ விதிக்கப்பட்டிருக்கிறேன். இது தன் பங்குக்கு உளத்தில் பாதிப்பை செலுத்தவே செய்கிறது. அதை மீறியே என் கற்றல் நிகழ்கிறது. இந்த வாழ்க்கையில் நான் அடையும் முதன்மையான இன்பம் கல்வி மட்டுமே. பிற எதுவும் எனக்கு இல்லை. இந்த வரி எழுதி முடிக்கையில் கண்களில் நீர் வழிய கேட்கிறேன். நாளை ஒருநாள் தத்துவ கல்விக்கு வர. விருப்பம் தெரிவித்தால் என் நோயின் பொருட்டு கல்வி எனக்கு மறுக்கப்படுமா ? நீங்கள் உண்மையை சொல்லுங்கள். அது என்னை வதைக்கும் என்றாலும் பரவாயில்லை.
அன்புடன்
சக்திவேல்
***
அன்புள்ள சக்திவேல்,
தத்துவ வகுப்பில் கலந்துகொள்வதற்கான தகுதிகள் என்று சொன்னதன் உட்பொருளை எளிதில் உங்களால் புரிந்துகொள்ளமுடியும். ஒரே அடிப்படைதான். நீடித்த கூர்ந்த கவனத்தை அளிக்க முடியுமா? ஆம் எனில் தத்துவம் அவர்களுக்குரியது. இல்லையென்றால் அவர்களுக்குரியது அல்ல.
தத்துவம் பிற அறிவுத்துறைகள்போல தரவுகளாலானது அல்ல. அதன் அடிப்படை தர்க்கம். அந்த தர்க்கம் பலசரடுகளாக சென்று ஓரிடத்தில் ஒரு முடிச்சாகிறது. அந்த முடிச்சை நோக்கிச் செல்வதற்கான பயிற்சியை தத்துவ வகுப்புகள் அளிக்கின்றன. அந்த வகையான முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான பயிற்சியை அந்த மாணவர் தானே கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான அறிவுத்திறன் வேண்டும். அந்த அறிவை பயன்படுத்துவதற்கான பொறுமை வேண்டும். தீவிரமான ஆர்வம் மட்டுமே அந்தப்பொறுமையை அளிக்கும்.
அந்த ஆர்வத்தை மட்டுப்படுத்தும் விசைகளில் முதன்மையானது நோய்தான். நோய் அதையன்றி வேறெதையுமே நினைக்கமுடியாத ஒருநிலையை உருவாக்குகிறது. ஏற்கனவே அழ்ந்த தத்துவப்பயிற்சியும் அதில் முயற்சியும் கொண்டவர் நோயை தத்துவப் பயிற்சியாலேயே வெல்லமுடியும். அதை அறிமுகம் செய்துகொள்ள நோயாளியால் முடியாது.
நாம் இன்று நோய்க்கு அளிக்கும் சிகிழ்ச்சைகள் பெரும்பாலும் மூளையை மந்தமாக்குபவை. நினைவுத்திறனை அழிப்பவை. தத்துவம் தொடர்ச்சியான நினைவாற்றல் தேவையான ஒன்று. இப்படிச் சொல்லலாம். ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டி எழுப்பப்படும் கட்டிடம், ஒவ்வொரு செங்கல்லையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். கட்டிடக்கலையையும், பொறியியலையும் அதைக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும்.
நீங்கள் உடல்சார்ந்த இயலாமைகள் கொண்டவர் பிறவியிலேயே. அது நோய் அல்ல. அக்குறைபாட்டைக்கொண்டே வாழ பழகியும் இருப்பீர்கள். அக்குறைபாட்டை கழிவிரக்கம் தேடுதலாக, எதிர்மறைமனநிலையாக ஆக்கிக் கொள்ளாதவரை தத்துவம் உங்களுக்கு இயல்பாக அமையும். சொல்லப்போனால் தத்துவம் உங்கள் உடலைக் கடந்த ஆளுமையை உங்களுக்கு அளிக்கும். உங்களை ஒரு தத்துவ நிலையாக நீங்கள் பார்க்க ஆரம்பிப்பீர்கள். அது பெரிய விடுதலை.
ஜெ
கி.சரஸ்வதி அம்மாள்
கி.சரஸ்வதி அம்மாள் ஜஸ்டிஸ் வி.கிருஷ்ணசாமி ஐயரின் மகள். அவர்கள் இல்லத்தில் கி.சரஸ்வதி அம்மாள், கி.சந்திரசேகரன் அனைவருமே எழுத்தாளர்கள். கிருஷ்ணசாமி ஐயர் காங்கிரஸ் காரர். ஆனால் தன் மகள்களுக்கு குழந்தைமணம் செய்துவைத்தார். வெங்கட் சாமிநாதன் கி.சரஸ்வதி அம்மாள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் (நீலி இணைய இதழ் ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல்: வெங்கட் சாமிநாதன்)
கி.சரஸ்வதி அம்மாள்
கி.சரஸ்வதி அம்மாள் – தமிழ் விக்கி
லட்சுமி சரவணக்குமார் உரை – விவாதம்
அன்புள்ள ஜெ,
என்னுடய சமீபத்திய கடிதத்துக்கு வந்த பதில் கடிதத்தை வாசித்தேன். என் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கலாம் என்று தோன்றியது. [என் வாழ்க்கையின் பெரும் பகுதியை மறுப்பிலும் விளக்கத்திலுமே கழிக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்கிறது. விதி என்மேல் கருணையோடிருக்கட்டும்!]
முதலில், நான் “கதை” அம்சத்தை முழுமையாக மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை. அப்படி புரிந்துகொள்வது பிழை. எழுத்தாளன் வெளிப்படுவது “கதை” என்று நம்பப்படுகிற சம்பவங்களின் கோர்வையில் மட்டும் அல்ல – இதுவே நான் சொன்னது. இவ்விடத்தில் “மட்டும்” எனும் சொல்லை, எந்த பரிகாசமும் இல்லாமல், இரட்டை மேற்கோள்களுக்குள் சுட்டிக் காட்டுகிறேன்.
கதை எனும் புனைவுக் கட்டுமானம் (narrative plot) பேரில் எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது. சொல்லப்போனால், கதையம்சத்திற்காகவே நான் விக்டோரிய காலத்து பேய்க் கதைகளை தேடி தேடி படிப்பதுண்டு. தமிழில் நான் “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று நினைப்பது இரண்டு ஆசிரியர்களை. ஒன்று புதுமைப்பித்தன். இன்னொன்று ஜெயமோகன். இரண்டு பேருமே கதைக் கட்டுமானங்களின் பேரில் பெரும் ஈடுபாடு கொண்டவர்கள். விதவிதமாக கதை எழுதியவர்கள். எனவே “கதை” மேல் எனக்கு எந்த விலக்கமும் இல்லை என்பதை ஐயம் தெளிய தெரிவித்துக் கொள்கிறேன். “கதை நீக்கம்” பற்றி பேசுகிற சிந்தனைப் பள்ளியில் நானில்லை. செவ்வியல் நூல்களின் வாசகனாக கதையம்சம் மேல் எனக்கு தீராத பிரமையே உண்டு. (இதுவரை என் கதைகள் அப்படி அமையவில்லை என்பது வேறு விஷயம்). எனவே வெங்கட்ரமணன் மட்டுமில்லாமல், வேறு யாரும் தவறான முன்முடிவை வளர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஜெவுடைய உரையின் தொடர்ச்சியாகவே என் கருத்து அமைந்திருக்கிறது. அந்த சட்டகத்தை கழற்றிவிட்டு தன் வசதிக்கு பேசினால், சீன முனுமுனுப்பு விளையாடிய கதையாகிவிடும். ஜெ தன் உரையில் மேற்கோள் காட்டுவது புதுமைபித்தனை அல்ல; மௌனியையே என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். மௌனியின் கதைகளில் எந்த புறக் கட்டுமானமும் கிடையாது. அவை வெறும் நிழலாட்டங்கள்தாம். போலவே, ஜெ அந்த உரையில் மேற்கோள் காட்டுகிற அசோகமித்திரன் கதைகளும் கூட கதைக் கட்டு கொண்டவை அல்ல. வெறுமனே வேடிக்கை பார்க்கும் மனதின் வெளிப்பாடுகள். இந்த அழகியலை முன்வைத்துதான் நான் அக்கருத்தை கூறினேனேத் தவிர, இது முழுமுற்றான உண்மை என்று எங்கும் சொல்லவில்லை.
கதையும், கதையின்மையும் என்று எதிரீட்டினை உருவாக்குவது என் கடிதத்தின் நோக்கமல்ல. அப்படியொரு இருமையை வெங்கட்ரமணன் தான் கட்டமைக்கிறார். “கோர்வையற்ற” எனும் சொல்லே என் கடிதத்தில் இல்லாதபோது தன் கற்பனை மோதலுக்காய் அவர் திரும்ப திரும்ப அதை பயன்படுத்துகிறார். ஒரு பரபரப்பான திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு, அழுத்தமான கதைக்கட்டு கொண்டு நாவல் “வெள்ளை யானை”. அதே சமயம் அந்நூலில் விவரனை, எண்ணவோட்டம், படிமம் இவை எல்லாமும் இருக்கின்றன. இப்படி, ஒன்றுக்கொன்று வலு சேர்க்கிற புனைவுக் கூறுகளை எதிரீடுகளாக எண்ண வேண்டியதில்லை.
வெங்கட்ரமணனின் பதிலில் மொத்தமாக ஒரு தொனி இருக்கிறது. நான் ரொம்ப பிடிவாதமாக சில கருத்துக்களை முன்வைப்பதாய் அவர் கருதுவதாக தெரிகிறது. அவருக்கு அந்த கவலையே வேண்டாம். எனக்கு அப்படி எந்த பிடிவாதமும் கிடையாது. லஷ்மி மணிவண்ணன் கவிதையில் சொல்வது போல, இடத்துக்கு தக்கனதுதான் என்னுடைய இருப்பும். ஆனால் வேறொரு விஷயத்தை நான் தொடர்ந்து கவனிக்கிறேன். பொதுவாக இன்றைய சூழலில் தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பது குறைந்துவிட்டதால், “தீவிரம்” என்பது “ஒற்றைப்படைத் தன்மை” என்றும் “பிடிவாதம்” என்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அப்படி தவறாக புரிந்துகொள்பவர்கள் பெரும்பாலும் மதம் மாற்றும் மனப் பாங்கு கொண்டிருக்கிறார்கள் என்பது என் ஆச்சர்யமான அவதானிப்பு. அதாவது தங்களுடைய பிடிவாதத்தை பகிர்ந்துகொள்ளவே அவர்கள் மற்றவர்களை அழைக்கிறார்கள்.
வெங்கட்ரமணின் பதிலில் இன்னொரு குழப்பமும் இருக்கிறது. எழுத்து சார்ந்த திட்டமிடல், எழுத்தாளன் வெளிப்படும் இடம், அர்த்த ஒருமை – இவற்றையெல்லாம் அவர் மானாவாரியாக கையாள்கிறார். எந்த எழுத்தாளனுக்கும் புனைவு சார்ந்த ஒரு திட்டமிடல் இருக்கும். யாரும் எந்த யோசனையும் இல்லாமல் எழுத உட்காருவதில்லை. அந்த திட்டமிடலை நான் மறுக்கவில்லை. தஸ்தயேவ்ஸ்கி “அசடன்” நாவல் எழுதுவதற்கு முன்னால் “கிறிஸ்து போல், ஓர் அழகிய ஆன்மாவை உருவாக்கப் போகிறேன்” என்று குறிப்பு எழுதுகிறார். பூமியில் மேன்மையை நிலைநிறுத்த அவர் விரும்புகிறார். இதை தோராயமாக திட்டம் என்று சொல்லலாம். ஆனால் அசடன் நாவலில் மிஷ்கின் கடைசியில் பைத்தியக்கார விடுதிக்கு போகிறான். இது எழுத்தாளன் தன் திட்டத்தை தானே மீறும் இடம். இதனால்தான் கரமசோவ் எழுதும்போது தன் கதாபாத்திரங்கள் பேசும் விதத்தை கண்டு அவரே ஆச்சர்யப்பட்டுவிட்டதாக தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிடுகிறார். வடிவத் திட்டமிடல்களுக்கும் இந்த நியதி பொருந்தும்.
வரிசையாக நிறைய உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். படைப்புச் செயல் பற்றி W.H.ஆடனின் கருத்து புகழ்பெற்றது. “உருவாக்குதல், அறிதல், மதிப்பிடுதல்” (Making, Knowing and Judging) என்று ஓர் அடுக்குமுறையை அவர் சொல்கிறார். அதாவது உருவாக்கத்திற்கு பின்புதான் எழுத்தாளனாலேயே அது என்ன என்று அறிய முடியும். வெவ்வேறு எழுத்தாளர்கள் இப்படி வெவ்வேறு விதமாக இக்கருத்தை சொல்லியிருக்கிறார்கள். வெள்ளைத் தாளில் முன்னேறு என்கிறார் நிக்கனோர் பர்ரா. யார் என்ன சொன்னாலும், தன் வாழ்வில் சொந்த அனுபவமாக அறியாத ஒருவரிடம், இதை சொல்லி புரியவைத்திட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. இது இலக்கியம் பற்றி என்னுடைய எந்த கருத்துக்கும் பொருந்தும்.
வெங்கட்ரமணனுடடைய பதிலில் அபாயகரமான ஓர் இடம் உண்டு. இலக்கியம் சார்ந்த உரையாடலில் “விமர்சன அதிகாரம்” எனும் பிரயோகத்தை கொண்டு வருவதன் வழியே, நம் சூழலை நச்சுப் புகையாய் மூடியிருக்கும் ஆபத்திற்கு அவரும் தெரிந்தோ தெரியாமலோ துணை போகிறார். மார்க்சியத்தில் ஆரம்பித்து கோட்பாட்டு விமர்சகர்களால் சுவீகரிக்கப்பட்டு இப்போது முகநூல் வம்புச் சூழலில் நிலைபெற்றிருக்கும் இக்கருத்தை எந்த அழகியல் விமர்சகனும் தன் முழு ஆற்றலாலும் மறுக்க வேண்டியிருக்கிறது.
எல்லாவற்றையும் அதிகாரத்துக்கான முனைப்பாக பார்ப்பது ஒருவகையான குறுக்கல்வாதம். அதிகாரத்தின்மேல் மோகம் கொண்டவர்களுக்கு எல்லாமே அதிகாரப் போட்டியாகவே தெரியும். இலக்கிய உரையாடலில் இந்த போக்கை அனுமதிக்க முடியாது. அழகியல்வாதிகள் தம் வசதிக்காக இதை பயன்படுத்தினால் அதன் கூர்முனை, நாளை அவர்கள் கழுத்துக்கே திரும்பும். “விமர்சன அதிகாரம்” எனும் சொற்றொடரை வைத்து எதிரேயிருப்பவரை நாசூக்காக முத்திரைக் குத்திவிட முடியும். நீ மேட்டிமைவாதி. நீ இடதுசாரி. நீ இந்துத்துவவாதி. நீ அப்படி. நீ இப்படி. அடிப்படை நல்லெண்ணம் இல்லாத இடத்திலோ இலக்கிய உரையாடல் நிகழ முடியாது.
இந்த “சமைக்கப்பட்டது” எனும் விமர்சனம் பற்றியும் என் கருத்தை கூற விரும்புகிறேன். இதுவும் ஜெவுடைய உரையின் தொடர்ச்சிதான். ஒரு வாசகனால் எழுத்தாளன் வெளிப்படும் இடத்தை கண்டுபிடிக்க முடியும் என்றால், அப்படி நடக்காத இடத்தையும் கண்டுபிடிக்க முடியும் தானே? இந்த எளிய உண்மையை எதிர்கொள்வதில் ஏன் இவ்வளவு பதற்றம்? எழுத்தாளன், ஏதோவோர் தருணத்தில், தான் புத்திசாலியாக இருந்து வாசகனை ஏமாற்றிவிட முடியும் என நினைத்தால் அது அபத்தமானது. இதையே நான் சுட்ட விரும்பினேன். எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் மந்திரமாக. மற்றபடி அதை ஓர் இலக்கிய அளவுகோலாக நான் முன்வைக்கவில்லை.
என் இலக்கிய அளவுகோலை தெரிந்துகொள்ள என் கட்டுரைகளை படிக்கலாம். வெங்கட்ரமணன் என் இலக்கிய கட்டுரைகளை படித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி படித்திருக்கும்பட்சத்தில் இலக்கிய விமர்சனத்தில் நான் புறவய வரையறைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பதும், தனிமனித ரசனையை எப்படி என் அளவுகோலாக கொண்டிருக்கிறேன் என்பதும் அவருக்கு தெரிய வந்திருக்கும். “பூடமாக்குதல்”, “தர்க்க ஆராய்ச்சி” இவை பற்றியெல்லாம் இங்கே பேசவே வேண்டியதில்லை என்பதை அறிந்திருப்பார்.
இந்த பேச்சில், கடைசியில், எஞ்சியிருக்கும் ஒரே கேள்வி – நேர்மையான வாசகன் என்பவன் யார் என்பதுதான். இதற்கு உறுதியாக பதிலே சொல்ல முடியாது. அந்த வாசகன் இன்று இருக்கலாம். நாளை வரலாம். எழுத்தாளன் பார்க்கலாம். பார்க்காமல் போகலாம். ஆனால் அப்படி ஒரு நபரை எழுத்தாளன் நிச்சயம் உருவகிக்க வேண்டியுள்ளது.
ஒருவரோடு உரையாடும்போது அவர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு புரிந்துகொள்ள முயற்சிப்பது ஒரு நல்ல பழக்கம். முக்கியமாக ஒருவரை மறுக்க முற்படும்போது அவர் சொற்களுக்கு முழுமையாக காதுகொடுப்பது அவசியம். எல்லோராலும் பின்பற்றக்கூடிய பழக்கம் அல்ல இது. ஆனால் நல்ல பழக்கம். போலவே, எதிர் தரப்பினர் மேல் முத்திரைக் குத்தாமல் இருப்பதும், தந்திரமான சொற்களால் பயமுறுத்த நினைக்காமல் இருப்பதும் நல்ல பழக்கங்கள். வெங்கட்ரமணன் இவற்றை கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.
அன்புடன்,
விஷால் ராஜா.
***
சி.பி.சிற்றரசும் தமிழ்விக்கியும்
[image error]அன்புள்ள ஜெமோ,
நான் இலக்கிய வாசிப்பிற்கு வந்த புதிதில் உங்களின் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” புத்தகம் மூலமே நான் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்கள், புத்தகங்கள் ஆகியவற்றை கண்டடைந்தேன்.அதில் குறிப்பு எடுத்துகொண்டு நான் வாங்கி சேர்த்த நூல்களே இன்றும் என் புத்தக அலமாரியில் பெரும்பாலானவை. இன்று அந்த இடத்தை தமிழ்விக்கி நிரப்பியிருக்கிறது இன்னும் பிரம்மாண்டமாக,ஆனால் இன்னும் எளிமையாக. நான் இது வரை வாசித்திறாத எழுத்தாளர்கள்,குறிப்பாக இளம் எழத்தாளர்கள் ஆகியோரின் புத்தகம்,அவற்றை பற்றிய விவரம் ஆகியவற்றை இம்முறை தமிழ்விக்கியிலிருந்தே எடுத்து சென்று ,சென்னை புத்தகக்கண்காட்சியில் சுமார் 50 புத்தகங்களை வாங்கிவந்தேன். மேலும் புத்தகக்கண்காட்சியில் ஒரு ஆசிரியரோ ,புத்தக பெயரோ நினைவில் வந்தால் அதை தமிழ்விக்கியில் தேடி வேண்டிய விவரங்களை எடுத்துகொண்டேன்.தமிழ்விக்கி எங்களுக்கு உங்கள் படைப்புகளுக்கிணையாண கொடை. தங்களுக்கும் தமிழ்விக்கிகாக உழைக்கும் அனைத்து தோழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்,
பிரதீப் சபா
***
அன்புள்ள ஜெ
தமிழ்விக்கி பற்றிய வம்புகளை பேசிக்கொண்டே இருந்த ஒரு நண்பனுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். அங்கே புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே தேடினோம். உ.வே.சாமிநாதையர் பற்றி ஒரு சந்தேகம். உடனடியாக அவனே தமிழ்விக்கியை பார்த்து சொன்னான். கொஞ்சநேரத்தில் சி.பி.சிற்றரசு பற்றி தேடவேண்டியிருந்தது. தேவையான தகவல்கள் முழுமையாகவும் ஒழுங்காகவும் தமிழ்விக்கியில் மட்டுமே இருந்தன. அப்போதுதான் கலைக்களஞ்சியம் என்றால் என்னவென்றே தெரிந்தது. ஆனால் நண்பன் ஒப்புக்கொள்ளவில்லை. ’இதெல்லாம் பொதுவெளி தகவல்கள். யார்வேண்டுமென்றாலும் போடலாம்’ என்று சொல்லிவிட்டான். இந்த கடிதம் அவனும் படிக்கவேண்டும் என்பதனால் எழுதப்படுகிறது.
ஜெய்சிங் ஞானம்
தையல் சொல்- ஏ.வி.மணிகண்டன்
இசக் டினேசனின் கதையை முன்வைத்து ஏ.வி. மணிகண்டன் எழுதிய இக்கட்டுரை மேலை கீழை கலைமரபுகளை கருத்தில்கொண்டு விரிவான ஓர் ஆய்வை முன்வைக்கிறது. அகழ் பிப்ரவரி மாத இதழ் முக்கியமான கட்டுரைகள் கதைகளுடன் வெளிவந்துள்ளது. விஷால்ராஜா, அஜிதன், பாலசுப்ரமணியம் பொன்ராஜ் கதைகள் வெளியாகியுள்ளன.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



