Jeyamohan's Blog, page 629
February 10, 2023
இலக்கியவிமர்சனம் தேவையான ஒன்றா?
தற்பொழுது சுனில் கிருஷ்ணன் 2023 கான வாசிப்பு சவாலில் வாசித்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு கேள்வி..
நாம் அனைவரும் வாசிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு படைப்பு ஒரு அனுபவத்தை கொடுக்கிறது. அது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அதற்கு காரணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை அனுபவம் சார்ந்தது என கூறி இருக்கிறீர்கள்.
அப்படி இருக்க ஏன் நாம் வாசிப்பை , அதன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர் பார்வை அல்லது நுணுக்கம் எனக்கு கிடைக்கும் என்றாலும் கூட அது என் அனுபவம் அல்லவே?
ஒரு படைப்பு என் வாழ்வின் ஒவ்வொரு கால தருணத்திலும் வெவ்வேறாக எனக்கு பொருள்படும் என்றால் நான் ஏன் மற்றவர் அனுபவத்தை எனதாக கொள்ள வேண்டும்? எனது வாழ்வனுபவம் தரும் ஒரு பார்வை மட்டும் கொண்டு நான் வாசித்து செல்லலாம் தானே?
மேலும் நான் ஒரு படைப்பை வாசிக்கும் முன் அதன் அழகியல், வடிவ மற்றும் அனுபவ குறிப்புகளை வாசிப்பது இல்லை. அப்படி குறிப்புகள் வாசித்து பின் நான் செய்யும் ஒரு வாசிப்பு ஒரு பழுதுபட்ட, முழுமை பெறாத வாசிப்பாகவே கருதுகிறேன்.
முன்பே முத்துகள் இருக்கும் இடம் தெரிந்து முத்து குளிப்பது போன்ற ஒரு உணர்வே மிஞ்சுகிறது. எனது வாசிப்பு அதன் அனுபவம் என்னுடையது… அது அதை படைத்த கலைஞன் உடையது கூட கிடையாது. அதுவே என்னை வாசகன் ஆக்குகிறது என எண்ணுகிறேன்.
இவ்வெண்ணங்களில் பிழை உண்டு எனவும் எனக்கு தெரியும் ஏதோ ஒன்றை உணர , ஒப்ப மனம் தடுக்கிறது என்று. அது எது?
சில நேரம் நாம் வாசித்து பெறக்கூடியது ஒரு அனுபவம். ஒரு நுண் உணர்ச்சி, ஒரு sublimity… அதை வார்த்தைகளால் வடித்து கொள்வது வெறும் தருக்கம் சார்ந்த மூளையின் வேலை மட்டுமே என் தோன்றுகிறது. வாசிப்பு இதயத்திற்கானது அல்லவா?
அன்புடன்
அரவிந்தன்
இராஜை
***
அன்புள்ள அரவிந்தன்,
இந்த வினாவுக்கான விடையை முன்னரும் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன்.
ஒரு வாசகர் இலக்கிய விமர்சனம், இலக்கியவிவாதம் ஆகியவற்றை ஒரு சொல்கூட வாசிக்காமலிருந்தால்கூட அவர் வாசிப்பது சமூகக் கூட்டுவாசிப்பின் பகுதியாகவே. முற்றிலும் தனிப்பட்ட வாசிப்பு என ஒன்று இல்லை.
ஏன்? மொழி நமக்கு வந்துசேரும்போது மொழியின் சொற்கள், சொற்றொடர்கள் வழியாகவே இலக்கியக் கல்வியும் ஓரளவில் வந்து சேர்கிறது. அதன்பின் கல்விக்கூடங்கள் வழியாக இலக்கியப் பயிற்சி வருகிறது. அத்துடன் நம் பொது ஊடகச் சூழலும் இலக்கியப் பயிற்சியை அளிக்கிறது.
எண்ணிப்பாருங்கள், திருக்குறளையோ மு.வரதராசனாரையோ நாம் பள்ளியிலேயே கற்றுவிடுகிறோம். கண்ணதாசன் பாடல்கள் தொலைக்காட்சி வழியாகவே அறிமுகம் ஆகிவிடுகின்றன. அவை சார்ந்து ரசனை உருவாகிவிடுகிறது. அதிலிருந்து எவர் தப்ப முடியும்?
ஒரு பொதுவாசகன் வாசிக்கையில் அவன் ‘காலியான’ உள்ளத்துடன் வாசிப்பதில்லை. மேலே சொன்ன வாசிப்புப் பயிற்சியை அடைந்தவனாகவே வாசிக்கிறான். ஆகவேதான் ஒரு சினிமாப்பாட்டில் ஒரு வரி சிறப்பு என அவன் சொல்கிறான். ஒரு சினிமா வசனத்தை ரசிக்கிறான்.
இலக்கிய விமர்சனப் பயிற்சி, இலக்கிய விவாதப் பயிற்சி என்பது அந்த பொது இலக்கியப் பயிற்சியிலிருந்து மேலதிகமாக ஒரு பயிற்சியை அடைவதற்காகவே. அது இல்லையேல் நீங்கள் ‘தூய’ உள்ளத்துடன் வாசிக்க மாட்டீர்கள், மாறாக சூழலில் இருக்கும் பொதுவான வாசிப்பையே அளிப்பீர்கள்.
இலக்கிய விமர்சனப் பயிற்சியும் இலக்கிய விவாதப் பயிற்சியும் எதற்காக என்றால் அந்த பொதுவாசிப்புப் பயிற்சியிலுள்ள குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காகவும், அவற்றை கடந்து சென்று இன்னும் கூரிய வாசிப்பை அடைவதற்காகவும்தான். அவை உங்களை இன்னமும் தயார்ப்படுத்தவே செய்யும்.
எப்படி இருந்தாலும் நாம் இலக்கியப்படைப்புகளை நம் வாழ்க்கையைக்கொண்டே வாசிக்கிறோம். அவ்வாசிப்பில் நாம் சூழலில் இருந்து நமக்கு கிடைத்த இயல்பான பயிற்சியை பயன்படுத்துகிறோம். இலக்கிய விமர்சனப் பயிற்சி என்பது எதையெல்லாம் கவனிக்கவேண்டும், எப்படியெல்லாம் பொருள்கொள்ளவேண்டும் என நம்மை பயிற்றுவிக்கிறது.
இலக்கிய விமர்சனம் அளிக்கும் பயிற்சிகளில் முக்கியமானவை மூன்று. ஒன்று, அழகியல் அறிமுகம். இரண்டு, தத்துவ, வரலாற்றுப் பின்புல அறிமுகம். மூன்று, வாழ்வனுபவங்களுடன் படைப்பை பொருத்திக்கொள்வதற்கான வேறுவேறு வாய்ப்புகளை அளித்தல்.
உதாரணமாக, ஓர் இலக்கிய ஆக்கத்தை வாசிக்கிறீர்கள். அதில் ஏராளமான நுண்தகவல்கள் உள்ளன. பொதுப்பயிற்சி மட்டுமே கொண்ட வாசகன் அவற்றை எளிதாக கடந்துசென்று கதை என்ன என்று மட்டும் வாசிப்பான். இலக்கிய அழகியலில் அறிமுகம் இருந்தால் அவ்வாசகன் அப்படைப்பு இயல்புவாதப் படைப்பு என்றும், இயல்புவாதப் படைப்பில் கதையோ உணர்வுகளோ முக்கியமல்ல என்றும் அறிந்திருப்பான். புறவயமான உலகை நுண்ணிய தகவல்கள் வழியாகச் சித்தரிப்பதே இயல்புவாத அழகியலின் வழிமுறை. அதை அறிந்தால் அவன் நுண்செய்திகளை கூர்ந்து கவனத்தில்கொண்டு வாசிப்பான். அந்த இலக்கியப்படைப்பை முழுமையாக உள்வாங்குவான். உதாரணமாக, பூமணியின் பிறகு நாவலைச் சொல்லலாம்.
ஒரு கற்பனாவாத நாவலை வாசிக்கும் பொதுரசனை கொண்ட வாசகன் அதில் யதார்த்தமான கேள்விகளைப் போட்டுப்பார்ப்பான். ‘இப்படி வாழ்க்கையில் நடக்குமா?’ என்ற கேள்வியை மட்டும் போட்டுப்பார்த்தால் எந்த கற்பனாவாதப் படைப்பும் செயலற்றதாக ஆகிவிடும். கற்பனாவாதம் நிகழ்வது ஆசிரியரின் கற்பனையின் பரப்பில்தானே ஒழிய அன்றாட யதார்த்ததில் அல்ல என உணர்ந்த வாசகன் கற்பனாவாதம் மட்டுமே அளிக்கும் நுண்மையான கவித்துவத் தருணங்களை, அவற்றில் நிகழும் உன்னதமாதலை (sublimation) சென்றடைவான்.
சில படைப்புகளுக்கு மேலதிகமாக தத்துவ அறிதலோ வரலாற்றறிதலோ தேவையாகும். அவை இருந்தால் அந்தப்படைப்புகள் மேலும் தெளிவடையும். தத்துவப்புரிதல் விஷ்ணுபுரம் நாவலை விரிவான புரிதலுடன் வாசிக்கச் செய்யும். வரலாற்றுப் பின்புலம் அறியப்பட்டால் சிக்கவீரராஜேந்திரன் நாவல் இன்னும் தெளிவாகும். அந்த விரிவுக்கு இலக்கியவிமர்சனம் உதவும்.
நாம் இலக்கியப் படைப்புகளை நமது வாழ்வனுபவம் சார்ந்த ஒரு கோணத்தில் மட்டுமே பார்ப்போம். அதுவே அப்படைப்பு என நினைப்போம். இன்னொரு கோணத்தில் இன்னொருவர் பார்த்து எழுதியதை வாசித்தால் அக்கணமே நாம் அவராக நின்றும் அப்படைப்பைப் பார்போம். நம் பார்வை பலமடங்கு விரிவடையும். அதையும் இலக்கிய விமர்சனமே அளிக்கும்.
வாசிப்பு என்பது ஒருவர் தன்னிச்சையாக தனக்குத் தோன்றுவதை அடையும் ஒரு நிகழ்வு அல்ல. அவர் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் ஒரு சமூகத்தின் உறுப்பினர். அந்த சமூகத்தின் வாசிப்பையே அவர் நிகழ்த்துகிறார். எண்ணிப்பாருங்கள் நாம் இன்று திருக்குறளை வாசிக்கும் போது அளிக்கும் அர்த்தத்தையும், அடையும் அனுபவத்தையும் நூறாண்டுகளுக்கு முன் அதை வாசித்தவர் எய்தியிருப்பாரா?
அந்த சமூகத்தின் சராசரியாக நின்று வாசிக்கிறோமா அல்லது அதன் மிகச்சிறந்த உறுப்பாக அமைந்து வாசிக்கிறோமா என்பதே வாசிப்பின் தரத்தை நிர்ணயம் செய்கிறது. சிறந்த உறுப்பாக அமைந்து வாசிக்கவேண்டுமென்றால் அச்சமூகத்தின் சிந்தனையின் உச்சத்தில் நாமும் இருக்கவேண்டும். அதற்கு இலக்கியவிமர்சன அறிமுகம், இலக்கியவிவாதப் பயிற்சி தேவை.
அப்படி இல்லை என்றால் நாம் ஒரே வாசிப்பையே திரும்பத் திரும்ப அளிப்போம். நம் முடிவே அறுதியானது என நம்பி அமர்ந்திருப்போம். அப்படி பலரை நாம் காணலாம். இருபது வயதில் கல்கியோ மு.வரதராசனாரோ வாசித்தபின் அதிலேயே நின்றுவிட்டவர்கள் இப்படித்தான் நிகழ்கிறார்கள்.
இரண்டு வினாக்கள் எஞ்சியிருக்கின்றன. இன்னொருவரின் வாசிப்பு நமது சொந்த வாசிப்பை தடைப்படுத்துமா? ஓரளவு வரை தடைப்படுத்தும். இன்று முகநூலில் இலக்கியவாதிகள்மேல் முத்திரைகுத்தி திரித்து களமாடும் அரசியல்சழக்கர்கள் உருவாகி வரும் வாசகர்களை இலக்கியத்தில் இருந்து விலக்கும் செயலைச் செய்துவருகிறார்கள். ஒருசாரார் நிரந்தரமாகவே இலக்கியவாதிகள்மேல் அவநம்பிக்கைகொண்டு விலகிச்செல்லவும் வழிவகுக்கிறார்கள்.
முன்பு மதவாதிகள் செய்த அதே செயலை இன்று இவர்கள் செய்கிறார்கள். இலக்கியம் உருவாக்கும் நேரடியான உரையாடலை அரசியலாளர்கள அஞ்சுகிறார்கள். இலக்கிய ரசனைக்குள் வந்துவிட்ட எவருக்கும் கண்மூடித்தனமான அரசியல்விசுவாசம் உருவாகாது. (தன்னலத்துக்காக சிலர் அவ்வாறு நடிக்கலாம். அவர்களை அரசியலாளர் நம்பமாட்டார்கள்). ஆகவே இந்த திசைதிருப்புதல் நிகழ்கிறது.
இத்தகைய திசைதிருப்பல்களில் இருந்து தப்ப ஒரே வழி நம் வாசிப்பனுபவத்தை நாம் நம்புவது. இன்னொருவரின் சொற்களை அப்படியே எடுத்துக்கொள்ளாமலிருப்பது. ஏற்போ மறுப்போ. ஆனால் உண்மையில் நல்ல வாசகர் இயல்பாகவே அப்படித்தான் இருக்கிறார். கடுமையான நிராகரிப்பினால் எவரும் நல்ல படைப்பை தவறவிடுவதில்லை. செயற்கையான கொண்டாட்டங்களால் மோசமான படைப்பு ஏற்கப்படுவதுமில்லை.
இரண்டு, நம் சொந்த அனுபவங்கள் பிறருடைய அனுபவங்களால் சிதறுண்டுபோகுமா? அப்படி ஆவதில்லை. வாசிக்க ஆரம்பிக்கும்வரை சில முன்முடிவுகளை அவை உருவாக்கலாம். நல்ல ஆக்கங்கள் அதன்பின் வாசகனை ஈர்த்து தன்னுள் வைத்துக்கொள்கின்றன. அவனுடன் அந்தரங்கமாக உரையாடுகின்றன. அவனுடைய அனுபவங்களை கிளர்த்துகின்றன.
பேரிலக்கியங்கள் எனப்படுபவை பல தலைமுறைகளாக வாசிக்கப்பட்டவை. பல்வேறு வகையான வாசிப்புகளை அடைந்தவை. நம் மொழியில், சூழலில் அவற்றைப்பற்றிய மதிப்பீடுகளும் ரசனைகளும் உள்ளன. அவற்றை நாம் தவிர்க்கவே முடியாது. ஆனாலும் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவை அவர்களுக்கான அனுபவங்களையே அளிக்கின்றன.
கடைசியாக, அலசல்விமர்சனம் பற்றிச் சொல்லவேண்டும். ஒரு படைப்பை பகுப்பாய்வு செய்யும் விமர்சனங்களை வாசகன் தவிர்ப்பதே நல்லது. இலக்கியப் படைப்பு வாசிப்புக்கும் ரசனைக்கும் உரியதே ஒழிய ஆய்வுப்பொருள் அல்ல. ஆய்வுப்பொருளாக இலக்கியப்படைப்பைக் காணும் போக்குகள் இலக்கியநிராகரிப்புத்தன்மையை தவிர்க்கமுடியாத உள்ளடக்கமாக கொண்டவை. அவை இலக்கியவாசகனுக்கு எவ்வகையிலும் உகந்தவை அல்ல.
இலக்கியக்கோட்பாட்டு ஆய்வுகள், கல்வித்துறை ஆய்வுகள், சமூகவியல் ஆய்வுகள், அரசியல் ஆய்வுகள் எவையாயினும் அவை வாசகனுக்கு எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக அவை வாசகனின் தனியனுபவத்தைச் சிதைக்கின்றன. வாசகனின் நுண்ணுணர்வு மழுங்கும்படிச் செய்கின்றன. அவற்றை வாசிக்கும் வாசகன் மொத்தமாகவே ஆளுமை மழுங்கி வீணாகிப்போவதையும் கண்டிருக்கிறேன்.
அத்தகைய ஆய்வுகளை ஒரே ஒரு சாரார்தான் வாசிக்கவேண்டும். இன்னொரு ஆய்வாளர். ஆய்விலிருந்து ஆய்வு உருவாகிறது. உதாரணமாக, ஒரு புளியமரத்தின் கதை நாவலை சமூகவியல்கோணத்தில் ஆய்வுசெய்யும் ஒரு கட்டுரை சமூகவியலுக்கு தேவையானது, இலக்கியத்தை வெறும் சமூகவியல் கச்சாப்பொருளாகக் குறுக்குவது. பாரதியார் கவிதைகளை மொழியியல்கோணத்தில் அணுகும் கட்டுரை மொழியியலுக்கு தேவையானதாக இருக்கலாம், பாரதியாரை அது சிறுமைப்படுத்தாமலிருக்க வாய்ப்பே இல்லை. இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகள் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள மட்டுமே உதவியானவை.
இதை உலகளவில் இலக்கியப்படைப்புகள் பற்றி நிகழ்த்தப்பட்ட புகழ்பெற்ற ஆய்வுகள் நூறையாவது வாசித்தபின்னரே சொல்கிறேன். இல்லை, தங்களுக்கு அவை உதவியானவை என நினைப்பவர்கள் வாசிக்கலாம். அவர்களிடம் எனக்குப் பேச ஒன்றுமே இல்லை.
ஜெ
பூவண்ணன்
முனைவர் பூவண்ணன் தமிழகச் சிறார் இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. குழந்தை இலக்கியத்தை நிலைநிறுத்த நாற்பதாண்டுகள் பணியாற்றியவர். இன்று தமிழ்க் குழந்தைகள் தமிழில் வாசிப்பது அருகிவரும் சூழலில் பூவண்ணன் ஒரு வரலாற்றுநினைவாகச் சுருங்கிவிட்டிருக்கிறார்
பூவண்ணன்
பூவண்ணன் – தமிழ் விக்கி
லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் நீங்கள் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் படிக விழாவில் ஆற்றிய உரையை கேட்டேன். தொடர்ந்து அது குறித்து விஷால் ராஜா உங்களுக்கு எழுதிய கடிதத்தையும் தளத்தில் வாசித்தேன். ஒரு மாணவர் என்ற முறையில் அவர் உங்கள் உரையின் சாரத்தை நன்றாகவே தொகுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதில் ஒரு சிறிய திரிபு நிகழ்கிறது. நீங்கள் ஆற்றிய அவ்வுரையின் நுண்மையான அதே சமயம் புறவயமான ஒரு பேசுபொருளை அவர் மேலும் பூடகமாக்கி புரிந்துகொள்கிறாரோ என சந்தேகம் எழுகிறது. மேலும் அவரது தனிப்பட்ட அழகியலுக்கு தங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி மதில் அமைத்துக் கொள்கிறார் எனவும் தோன்றுகிறது.
உங்கள் உரையில் நீங்கள் குறிப்பிடும் ‘புனைவில் காலம்’ குறித்தான அவதானம் நுண்மையானது. ஆனால் அது எவ்விதத்திலும் சம்பவங்களின் கோர்வையான “கதை” சொல்லலை மறுதலிக்கவில்லை. மாறாக கதையை, சம்பவங்களை காலத்தில், வெளியில் அகமும் புறமும் என விரிப்பதையே சொல்கிறீர்கள். விஷால் ராஜா தனது கடிதத்தில் “கதை” (இந்த இரட்டை மேற்கோளில் அவரது மெல்லிய பரிகாசம் இருப்பதை காண்கிறேன்) என்பதை நுட்பமாக விவரணைகள், எண்ணவோட்டங்கள், படிமங்கள் அல்லாத சம்பவங்களின் கோர்வை என மாற்றுகிறார். ஆனால் மாறாக இவைவே கதையை செழுமையாக்கும் கருவிகள். இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டியது கதைக்கு எதிராகவோ மாற்றாகவோ அல்ல. இதை குறித்த உங்கள் எண்ணம் உங்கள் கதைகளை வாசிப்பவர்களுக்கும் தெரியும். புற சம்பவம் என்பது செறிவானதாக இருக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் அர்த்தமற்று சிதறி கிடக்கும் சம்பவங்களை உங்கள் படைப்புலகில் எங்கும் காணமுடிவதில்லை.
விஷால் ராஜா சம்பவங்களின் கோர்வையான “கதை”யை மறுப்பதன் வழியாக மறுபுறம் கோர்வையற்ற விவரணைகள், கோர்வையற்ற எண்ணவோட்டங்கள், படிமங்கள் ஆகியவற்றை (சற்று கூடுதலாகவே) கலைமதிப்பு கொண்டதாக நினைப்பதாக எண்ணம் எழுகிறது. ஆசிரியருக்கு மிக அகவயமாக தோன்றும் ஒரு உணர்வுநிலையும், பொருள்/பொருளின்மையும் போதும் என கருதுவதாக படுகிறது.
மேலும் அபாயகரமான மற்றொரு முடிவுக்கு அடுத்த கட்டமாக அவர் செல்கிறார். அர்த்த ஒருமை கூடும் எந்த கதை மேலும் வைக்க சாத்தியமான “சமைக்கப்பட்டது” என்னும் குற்றச்சாட்டு அது. இது அவர் கடிதத்தில் பூடகமான ஒரு விமர்சன அதிகாரமாக வெளிப்படுகிறது. அவ்வுண்மை தேர்ந்த வாசகர்களையும் ஏமாற்றவல்ல, எழுத்தாளரையே கூட ஏமாற்றவல்ல ஒன்று. குறிப்பிட்ட சிலர் அதன் உண்மையை உள்ளுணர்வால் கண்டுகொள்வார்கள் என்கிறார்.
அர்த்த ஒருமை கூடிய உலகின் மகத்தான கதைகள் பலவும் அசாதாரணமான திட்டமிடல் தன்மை கொண்டிருக்கும். அதன் ”அசாதாரண” தன்மையே அவற்றை இலக்கியமாக்குகிறது திட்டமிட்ட தன்மையல்ல. அந்த அசாதாரண தன்மை அதன் எளிமையிலோ, செறிவிலோ இருக்கலாம். மாறாக திட்டமிட்ட தன்மை என்று ஒன்றை வகுத்து அது போதமனது செய்ததா அல்லது நனவிலியில் தோன்றியதா என்பதை பேசுவது ஒரு வகையில் விமர்சனத்துக்கு எதிரானது. அதில் இரு தரப்புக்கும் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க பொது தளம் இல்லாமல் ஆகிறது. உளவியல் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை உளவியலாய்வு செய்யப்படுபவர் எந்நிலையிலும் மறுக்கமுடியாது என்பது தான் அது. “நான் அப்படி நினைத்ததே இல்லை” என்பதற்கு உளவியலாளரின் பதில் “ஆனால் உங்கள் நனவிலியில் அப்படி நினைக்கிறீர்கள், அது உங்களுக்கு போதமனதில் தெரிய வாய்ப்பில்லை” என்பது தான. ஒரு விதத்தில் விஷால் ராஜாவின் குற்றச்சாட்டு இதற்கு நேர் எதிராக உள்ளது. ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னையும் அறியாமல் போதமனதில் “சமைக்கப்பட்ட” கதையை எழுதிவிட வாய்ப்புள்ளது, தேர்ந்த வாசகர்களும் அதை அவ்வாறே அறியாமல் படித்துவிடவும் வாய்ப்புள்ளது என்கிறார். நனவிலி மேல் சத்தியம் பூண வேண்டும் என்கிறார்.
இவ்வாறு எழுத்து போதத்தை பூடகமாக்குவதினால், விளைவாக அதை சந்தேகிப்பதினால் எழுத்தாளர் ‘திட்டமிடல்’ என தோன்ற வாய்ப்புள்ள எல்லா வகை கலை ஒருமையையும் அர்த்த ஒருமையையும் மறுதலிப்பவர் ஆகிறார். இந்த குற்றச்சாட்டை பயந்தே அவர் கோர்வையற்ற அக/புற சித்தரிப்புகளிலும், படிமங்களிலும் தஞ்சம் புகுபவர் ஆகிறார். கதைக்கு எதிரான இச்செயல் உண்மையில் என் வரையில் இலக்கியத்திற்கும் ஓரளவு எதிரானதே. அந்த பாணியில் சில நல்ல கதைகள் அவ்வபோது தோன்றலாம். ஆனால் அவை ஒருபோதும் மகத்தானவையாகவோ, நேர்நிலையானதாகவோ இருப்பதில்லை.
எழுத்தும் வாசிப்பும் முற்றிலும் அகவயமான செயல்பாடு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விமர்சனம் அப்படி இருக்க இயலாது. படைப்பு செயல்பாட்டை முடிந்த அளவு தர்க்க நிலையில் வைத்து ஆராய்வதே விமர்சன மரபு. அதை பூடகமாக்கி ஆயுதமோ கேடயமோ செய்து கொள்வது அல்ல. அது அந்த விமர்சகனையும் சரி அதை கைகொள்ளும் எழுத்தாளனையும் சரி தொடர்புறுத்தலுக்கு அப்பாலான ஒரு தீவில் தேக்கி நிறுத்திவிடும். இளம் எழுத்தாளரான விஷால் இதை கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.
அன்புடன்
வெங்கடரமணன்
***
முப்பது நாட்கள் முப்பது நூல்கள் – நிறைவு
சென்னை புத்தக கண்காட்சி அறிவிப்பு அளித்த ஒரு உற்சாகத்தில் முப்பது நாட்களில் முப்பது நூல்களை அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துவிட்டாலும் முதல் நூலான நாரத ராமாயணத்தை அறிமுகம் செய்தபோதே இந்த வரிசையில் இருக்கும் அக, புற சவால்கள் தெளிவாகத் தெரிந்துவிட்டன. புறச்சவால் நேரம்தான். தினம் அலுவலகம் சென்றுவந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டும். பிரியா தான் ஒவ்வொரு நாளும் ஒளிப்பதிவு செய்தாள். அவளிடம் சொல்லிக்காட்டி திருத்தங்கள் செய்து பதிவு செய்வதற்கு தினம் நாற்பதிலிருந்து அறுபது நிமிடங்கள் ஆகிவிடும். அதற்கு முன்னோ பின்போ இரவுணவு தயார் செய்ய வேண்டும். எங்கள் ஊரில் நெட்வொர்க் இருக்கும் வேகத்துக்கு பதிவேற்றவும் அலைபேசியை அங்குமிங்கும் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். தூங்கி எழுந்தால் காலையில் செய்ய வேண்டிய வேலைகள் காத்திருக்கும்! பிரியாவின் ஈடுபாடு இல்லாமல் இதில் ஒரு காணொளிகூட பதிவு செய்திருக்க முடியாது. விடுமுறை நாட்களில் இரண்டு மூன்று காணொளிகள் பதிவு செய்து வைத்துக் கொள்ளும்படி நண்பர்கள் சொன்னார்கள். என் சுபாவத்துக்கு அது ஒத்துவரவில்லை. அகச்சவால் என்று சொன்னேனே அது இதுதான். ஒவ்வொரு நூல் பற்றியும் சம்பிரதாயமாக சில வரிகளைச் சொல்வதோ நூலினைப் பற்றி ‘ஜல்லியடிப்பதோ’ இல்லாமல் வாசிக்க இருப்பவர்களை மனதில் வைத்தே ஒவ்வொரு காணொளியையும் பதிவு செய்வதால் ஒவ்வொரு காணொளிக்கும் பொருத்தமான சொற்களை யோசித்தே பேச வேண்டியிருக்கிறது. பேசியதும் மூளை ஒரு மாதிரி சோர்வுற்றுவிடும். ஆகவே இரண்டு மூன்று காணொளிகள் யோசனையை ஒரு சில நாட்களில் மட்டுமே செயல்படுத்த முடிந்தது.
*
அறிமுகம் செய்த நூல்களும் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அளிக்கின்றன. பதினோரு மொழிபெயர்ப்பு நூல்கள்! புனைவிலக்கியம் என்ற எல்லையைக் கடந்து பொருளாதாரம்,தத்துவம்,சூழியல், இயற்கை வேளாண்மை, பண்பாட்டு ஆய்வு,வரலாறு என எல்லா தளங்களையும் இந்நூல்கள் தொட்டுச் சென்றிருக்கின்றன. இந்த முப்பது நூல்களையும் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர் தமிழ் அறிவுச் சூழல் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தைப் பெறுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்தக் காணொளிகளை மொத்தமாகப் பார்க்க மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்கள் ஆகலாம். ஆனால் அது நிச்சயம் பயனுள்ள நேரமாக அமையும். புதுமைப்பித்தனில் தொடங்கி காந்தியில் முடித்திருக்கிறேன். இக்காணொளிகளைப் பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தக் காணொளிகளை தங்களுடைய வாட்ஸ்அப் ஸ்ட்டேஸ்களிலும் முகநூல் பக்கங்களிலும் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் நன்றி. காணொளிகளின் சுட்டிகள் வரிசையாக கீழே…
1.நாரத ராமாயணம் – புதுமைப்பித்தன்
https://youtu.be/XsgWcwJJTwM
2.கருணாகரத் தொண்டைமான் – குடவாயில் பாலசுப்ரமணியன்
https://youtu.be/1iJwKE5mPhQ
3.கடுகு வாங்கி வந்தவள் – பி.வி.பாரதி(தமிழில் – கே.நல்லதம்பி)
https://youtu.be/nMk15fIOPbc
4.காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக்(தமிழில் – கே.நல்லதம்பி)
https://youtu.be/znbZ1Drp1Kc
5.பால்யகால சகி – வைக்கம் முகம்மது பஷீர் (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)
https://youtu.be/sXby1mjVYLs
6.எம்ஜிஆர் கொலைவழக்கு – ஷோபாசக்தி
https://youtu.be/wlVnlEZ0H08
7.மணல் – அசோகமித்திரன்
https://youtu.be/RC8VUcZmWio
8.மிக்காபெரிசம் – சிவானந்தம் நீலகண்டன்
https://youtu.be/XJkRSRah14Y
9.சடங்கில் கரைந்த கலைகள் – அ.கா.பெருமாள்
https://youtu.be/9X8ewEcx030
10.விருந்து – கே.என்.செந்தில்
https://youtu.be/8n4DkvvKuLQ
11.விசும்பு – ஜெயமோகன்
https://youtu.be/XNbAROe6JNg
12.வீடியோ மாரியம்மன் – இமையம்
https://youtu.be/67B0AdtcbN4
13.ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிமும் – ராஜ் கௌதமன்
https://youtu.be/IuaLi7Funfw
14.நானும் ஒருவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
https://youtu.be/Ajup9vggcFU
15.நிழலின் தனிமை – தேவிபாரதி
https://youtu.be/ZE_2OyOjyZs
16.பன்கர்வாடி – வேங்கடேஷ் மாட்கூல்கர் (தமிழில் – உமா சந்திரன்)
https://youtu.be/kpVTEJuOBR8
17.நினைவில் நின்ற கவிதைகள் – எம்.கோபாலகிருஷ்ணன்
https://youtu.be/xxjEWKGjhqU
18.ப்ராப்ளம்ஸ்கி விடுதி – டிமிட்ரி வெர்ல்ஹஸ்ட் (தமிழில் – லதா அருணாச்சலம்)
https://youtu.be/P54TBSrLnXw
19.வடக்கேமுறி அலிமா – கீரனூர் ஜாகிர்ராஜா
https://youtu.be/QHwqJxI5b_s
20.மழைமான் – எஸ்.ராமகிருஷ்ணன்
https://youtu.be/xEKZiAdAGTo
21.நீர்ப்பறவைகளின் தியானம் – யுவன் சந்திரசேகர்
https://youtu.be/emFRs2hVU_8
22.ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா (தமிழில் – பூவுலகின் நண்பர்கள்)
https://youtu.be/XNYA3Rm0bUw
23.இயற்கையை அறிதல் – ரால்ஃப் வால்டோ எமர்சன் (தமிழில் – ஜெயமோகன்)
https://youtu.be/vV6t2ST_nbA
24.கன்யாவனங்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா (தமிழில் – ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்)
https://youtu.be/4isccWXkuZE
25.அவன் காட்டை வென்றான் – கேசவ ரெட்டி (தமிழில் – ஏ.ஜி.எத்திராஜுலு)
https://youtu.be/mBQ-WnznQVE
26.நிலைத்த பொருளாதாரம் – ஜே.சி.குமரப்பா (தமிழில் – அ.கி.வெங்கட சுப்ரமணியன்)
https://youtu.be/2Ym1TBUqQvA
27.கவிதை: பொருள் கொள்ளும் கலை – பெருந்தேவி
https://youtu.be/1uTlgaB8hUI
28.சமணர் கழுவேற்றம் : ஒரு வரலாற்றுத் தேடல் – கோ.செங்குட்டுவன்
https://youtu.be/kie1tqQJfUM
29.வாஸவேச்வரம் – கிருத்திகா
https://youtu.be/cjMA6WJHcaI
30.இந்திய சுயராஜ்யம் – மகாத்மா காந்தி (தமிழில் – ரா.வேங்டகராஜூலு)
https://youtu.be/ZgdpwYCUyTE
வெண்முகிலில் வாழ்தல், கடலூர் சீனு
வெண்முகில் நகரம் மின்னூல் வாங்க
இனிய ஜெயம்
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக வெண்முகில் நகரத்தில் வாழ்ந்தோம். இறுதி பகுதி குறித்து ஆஞ்சேநேய ஜெயந்தி அன்று உரையாடினோம். உண்மையில் இந்த நாவல் திரௌபதி நீராடி, தொய்யில் எழுதி, அணிபூண்டு அன்னையை திரும்பிக் கூட பார்க்காமல் நகர்வலம் சென்று, சுயவரம் காணும் போதே துவங்கி விடுகிறது. அஸ்தினாபுரி அரியணையில் துரியனும் கர்ணனும் வாளேந்தி பக்கம் நிற்க அவள் அமர்வது வரை வந்து முழுமை கொள்ளும் நாவல் இது.
இன்று திருப்பூர் சென்னை என்று இரண்டு இடங்களில் இருந்து உங்கள் வாசகிகள் அழைத்து வெண்முரசு முற்றோதல் இன்றுடன் நிறைவு கண்டதை சொன்னார்கள். இருவருக்குமே இலக்கியம் புதிது. எந்த தயக்கமும் தடையும் இன்றி தினமும் வாசித்து (சந்தேக நிவர்த்திக்கு கடலூர் சீனு) முடித்திருக்கிறார்.
இந்த நாவலின் இறுதி பகுதிகளை பேசிய அமிர்த வல்லி அவர்களுக்கும் இலக்கிய முன் வாசிப்பு என ஏதும் இல்லை. தமிழை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை இரண்டாம் மொழியாக கற்ற அளவு மட்டுமே தொடர்பு கொண்டவர். இறுதி அத்யாய உளவியல் நுட்பங்கள் உணர்வுகள் அனைத்தையும் தேர்ந்த ரசனையுடன் தொட்டு விரித்து உரையாடினார். (வாசகருக்கான மாலை சிற்றுண்டியும் அவரே கொண்டு வந்து விட்டார்).
அம்பை பித்து கொண்டு திரிந்த நாட்களை விவாதித்தது எங்கோ போன ஜென்ம நினைவு போல இருக்க, இதோ அஸ்தினாபுரி துறைமுகத்தில் நூறு மணப்பெண்கள் நகர் நுழைய காத்து நிற்கின்றனர். நீர்ச் சுடரில் ஒவ்வொருவராக விழுந்து மாயப்போகும் கங்கை.
இந்த நாவல் நேற்று வாசித்து முடித்தாலும், இதோ இக்கணம் வரை திருதா கொண்ட துயரம் உள்ளே உறுத்திக்கொண்டே இருக்கிறது. விழியற்றவன் அறியும் உண்மை என்ற ஒன்று உண்டு. பிரத்யட்சமோ அனுமானமோ ஊகமோ வழி என அமைந்த உண்மை அல்ல அது. ‘நான் அறிவேன்’ எனும் நிலையில் உள்ளே அமைத்த முற்ற முழுதான உண்மை. எல்லாவற்றையும் அவன் அந்தக கண் கொண்டு பார்த்து விட்டான். இனி அவன் பார்த்த காட்சி அவன் நிகர் வாழ்வில் வந்து சேரும் வரை அவன் காத்திருக்க வேண்டும். வெறுமனே காத்திருக்க மட்டுமே அவனால் முடியும். எதையுமே அவனால் மாற்ற முடியாது. எத்தனை பெரிய துயர்.
நாங்கள் இங்கே இப்போது இந்த உணர்வில் கிடக்கிறோம். உங்களைக் கேட்டால் இது எல்லாம் நான் என்றோ கண்டு முடித்து கடந்த கனவு என்று பதில் சொல்வீர்கள். இன்னும் நெடுந்தொலைவு உள்ளது நாங்கள் முதலாவிண் காண. இடையே உள்ளது யுகம் யுகம் என்று நீளும் நூறு நூறு வாழ்வு.
கடலூர் சீனு
வெண்முகில் நகரம்- சுரேஷ் பிரதீப் வெண்முகில்நகரம் மையம் வெண்முகில்நகரம் – வாசிப்புFebruary 9, 2023
மலபார் நண்பர்களுடன் மூன்றுநாட்கள்
எனக்கு என் மலபார் நண்பர்களுடானான நட்பைப்பற்றிச் சொன்னால் அரசுப்பணியில் இருந்த பெரும்பாலானவர்கள் திகைப்படைவதைக் கண்டிருக்கிறேன். ஓர் அலுவலகத்தில் பணியாற்றி மாற்றல் பெற்றுச் சென்றால் ஆறுமாதகாலம் நட்புகள் நீடித்தால் அது அரிய செய்தி. நான் காசர்கோடிலிருந்து கிளம்பியது 1989ல். என் நண்பர்களுடன் முப்பத்திநான்கு ஆண்டுகளாக நட்புடன் இருக்கிறேன். சந்தித்துக்கொண்டு பேசிக்கொண்டும் இருக்கிறோம்.
சென்ற ஆண்டு என் அறுபதாம் அகவைநிறைவை நண்பர்கள் செறுவத்தூர் (பையன்னூர்) ஊரில் கொண்டாடினார்கள். அப்போது அவர்கள் நாகர்கோயிலில் என்னுடன் தங்க வருவதாகச் சொன்னார்கள். ஆனால் திட்டங்கள் தவறித்தவறிச் செல்ல இப்போதுதான் வருகையை உறுதிசெய்ய முடிந்தது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3 வரை நான்கு நாட்கள் பாலசந்திரன், கருணாகரன், எம்.ஏ.மோகனன், பவித்ரன், புருஷோத்தமன், சுஜித், ரவீந்திரன் கொடகாடு ஆகிய ஏழு நண்பர்கள் நாகர்கோயில் வந்தனர்
நான் 29 ஆம் தேதிதான் சென்னையில் இருந்து திரும்பி வந்தேன். பெங்களூர் கட்டண உரை முடிந்து நேராக சென்னை சென்று இரண்டுநாட்கள் சினிமா வேலைகள் முடிந்து 28 தான் கிளம்ப முடிந்தது. 20 ஆம் தேதி நேரில் சென்று நண்பர்களுக்கு நாகர்கோயில் விஜய்தா ஓட்டலின் அறைகள் பதிவுசெய்தேன். நாகர்கோயிலிலேயே வசதியான விடுதி அதுதான். பயணத்திட்டங்களை வகுத்தேன். இரண்டு வாடகைக்கார்களுக்கு ஏற்பாடு செய்தேன்.
நண்பர்கள் திருவனந்தபுரத்தில் வந்திறங்கி அங்கிருந்து இன்னொரு ரயில் ஏறி காலை ஏழுமணிக்கே வந்து சேர்ந்தனர். நான் ரயில்நிலையம் சென்று அவர்களை எதிர்கொண்டு அழைத்து விடுதிக்குக் கொண்டுசென்று விட்டேன். காலையுணவை அவர்களுடன் உண்டபின் வீட்டுக்கு திரும்பி வந்தேன். அவர்கள் சற்று ஓய்வெடுக்க விரும்பினர். மதியம் கிளம்பி அவர்களை சந்தித்து சேர்ந்து உணவுண்டோம்.
எங்கள் நட்புக்கூடல் எப்போதுமே பேச்சும் சிரிப்பும் பாட்டும் மட்டுமே கொண்டது. நான் மலபாரில் சென்றமைந்ததுமே கண்ட முதல் தனித்தன்மை அங்கே நண்பர்கள் புறம்பேசுவதில்லை என்பதே. நேரடியாக சிலவற்றைச் சொல்லக்கூடும். ஆனால் எவரையும் எதிர்மறையாகப் பேசுவதில்லை. ஆனால் மலபாரில் வந்து வேலைபார்க்கும் தெற்குக்கேரளத்தவர்கள் பிறரை நக்கலும் நையாண்டியுமாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். நான் தெற்கனாக இருந்தும் வடக்கர்களிடம் அணுக்கமானது அவர்களின் இயல்பான உற்சாகம், நகைச்சுவை, மற்றும் கள்ளமின்மையைக் கண்டுதான்.
சென்ற நாட்களில் நடந்த வேடிக்கைகளை பேசிக்கொண்டிருந்தோம். ரவீந்திரன் கொடகாடு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கூட்டுறவு அமைப்பு ஒன்றின் தலைவர். பாலசந்திரன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் வட்டத்தலைவர். ஆளும்கட்சி. ஆனால் கேரளத்தில் அது எந்த வகையிலும் அதிகாரம் அல்ல. பணமும் அல்ல. சேவை மட்டும்தான். இருவருடைய தந்தையரும் புகழ்பெற்ற கம்யூனிஸ்டு தலைவர்களாக இருந்தவர்கள்.
முதல்நாள் மதியம் கிளம்பி தேவசகாயம் பிள்ளை குன்றுக்குச் சென்றோம். ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள இந்தக் குன்றில்தான் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை கொல்லப்பட்டார் என்று தொன்மம். அங்கே ஒரு பெரிய நினைவகம் உள்ளது. தேவசகாயம் பிள்ளை இன்று புனிதர் பட்டம் பெற்றுவிட்டமையால் அந்த இடம் சுற்றுலா மையமாக அமைந்துவிட்டிருக்கிறது.
அங்கிருந்து திருக்குறுங்குடி (திருக்கணங்குடி) ஆலயம் சென்றோம். எங்கள் பிரியத்திற்குரிய பேராலயம் அது. ஆளரவமில்லாத விரிந்த பிராகாரங்கள், கல்மண்டபங்கள், மகத்தான சிற்பங்கள். அந்தி மயங்கும் வேளையில் அங்கிருப்பது எப்போதுமே ஒரு கனவுக்கு நிகரான அனுபவம்
அடுத்தநாள் கன்யாகுமரியில் விஸ்வா கிராண்ட் என்னும் விடுதியில் அறை போட்டிருந்தேன். இணையம் வழியாக சைதன்யா கண்டுபிடித்த விடுதி. புதிய விடுதிதான், நட்சத்திர தகுதி கொண்டது என்று சொல்லிக்கொண்டது. ஆனால் அங்கே சென்றால் மேலும் கட்டணம் கேட்டனர். (நாங்க அவங்களுக்கு கமிஷன் கொடுக்கணும், எங்களுக்கு கட்டுப்படியாகாது சார்). அறைகள் புதியவை. ஆனால் மிக மோசமான உணவு, அக்கறையே இல்லாத ஊழியர்கள். இந்திய சுற்றுலாத்தலங்களின் விடுதிகள் போல எரிச்சலூட்டும் மோசடிகள் வேறில்லை.
கன்யாகுமரியில் ஒரு முழுநாளும் அவர்கள் தங்கினர். மறுநாள் திருவட்டாறு ஆலயம், திர்பரப்பு அருவி, சிதறால் மலை ஆகியவற்றை பார்த்தோம். திர்பரப்பு அருவியில் அந்தக்காலத்தில் நானும் நண்பர்களும் நடந்தே வந்து குளித்துச் செல்வோம். அன்றைய திர்ப்பரப்பு ஆளரவமில்லாத தனித்த பொழிவு. அன்றைய குதூகலம் மிக எளிதில் மீட்டு எடுக்கத்தக்கதே என தெரிந்தது. நீர் என்றும் இப்படி கருணையின் பொழிவாகவே இருந்துகொண்டிருக்கும்
அன்றுமாலை எங்கள் வீட்டில் விருந்து. அருண்மொழி இரண்டுவகை சிக்கன் கறி, சப்பாத்தி, பிரியாணி என தடபுடலாகச் சமைத்திருந்தாள். பொதுவாக மலபார் நண்பர்கள் அசைவப்பிரியர்கள். அங்கே சைவ உணவே அனேகமாக இல்லை. ஓணத்துக்கே அசைவம்தான். இரவு 11 மணிக்கு அவர்களை மீண்டும் விஜய்தா விடுதிக்குக் கொண்டுசென்று விட்டேன்.
மறுநாள் காலை பத்மநாபபுரம் அரண்மனை, குமாரகோயில், எங்கள் குலக்கோயிலான மேலாங்கோடு ஆலயம் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். மதிய உணவுக்கு பின் நான் இல்லம் திரும்பி ஓய்வெடுத்தபின் மீண்டும் விடுதிக்குச் சென்றேன்.
மாலை நாகராஜா ஆலயம் சென்றோம். அங்கே நாகராஜா திடலில் ஓர் இசை நிகழ்வு. அதை இரண்டுமணிநேரம் பார்த்தோம். நள்ளிரவில் அவர்களுக்கு ரயில். அதில் ஏற்றிவிட்டுவிட்டு திரும்பி வந்தேன்.
நான்காம் தேதி காலை நான் மாத்ருபூமி இலக்கிய விழாவுக்குச் செல்லவேண்டியிருந்தது. நான்கும் ஐந்தும் மாத்ருபூமி விழா. ஐந்தாம் தேதி மதிய விமானத்தில் சென்னை. அங்கே லட்சுமி சரவணகுமாரின் விழா. நாட்கள் பறந்துகொண்டிருக்கின்றன.
என்னுடன் இன்றிருக்கும் நண்பர்கள் எல்லாருமே இலக்கிய வாசகர்கள். எப்போதும் இலக்கியம், தத்துவம். அது ஒரு கொண்டாட்டம். நான்குநாட்கள் இலக்கியமே பேசவில்லை. அரசியலும் பேசிக்கொள்ளவில்லை. புதிய கண்களுடன் மலபாருக்கு சென்றிறங்கிய 25 வயதான இளைஞனாக இருந்தேன்.
கே.ஆர்.வாசுதேவன்
கே.ஆர்.வாசுதேவனுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு, அவர் அதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. நான் எழுதிய இளமைக்கால கதை ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார். இதழாளர், எழுத்தாளர் எனும் நிலையில் நீண்டகாலம் செயலாற்றியவர்.
கே.ஆர்.வாசுதேவன்
கே.ஆர்.வாசுதேவன் – தமிழ் விக்கி
பெண் எழுதும் அழகியல்
சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]நீலி இதழில் சுசித்ரா பெண் எழுத்தின் அழகியலை உலகளாவிய பார்வையுடன் எழுதும் தொடர் அண்மையில் தமிழில் வெளிவரும் மிக முக்கியமான ஓர் இலக்கிய ஆய்வு. ஒன்றில் இருந்து ஒன்று தொட்டு விரியும் சிந்தனைகள் ஒருபக்கம் ஒரு தனிப்பார்வையை அளிக்கின்றன. இன்னொரு பக்கம் உலக இலக்கியத்தின் பெண் எழுத்தை அறிமுகமும் செய்கின்றன
மாத்ருபூமி இலக்கிய விழா, கடிதம்
மாத்ரு பூமி இலக்கிய விழா 2023-யில் தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை பார்த்தேன். ’அசுரன்’ ஆனந்த் நீலகண்டன் தங்களுடன் உரையாடல் நிகழ்த்தியிருப்பார். இங்கு சென்னையில் ‘தி இந்து’ இதற்கு முன்பு பத்தாண்டுகள் நடத்திய ‘Lit for Life’ நினைவுகள் கிளர்ந்தன. அந்தளவுக்கு தீவிர சிற்றிதழ் இலக்கியவாதிகளை பார்க்கவில்லையென்றாலும் – அங்குதான் ஒட்டுமொத்தமாக – பொதுவாக பன்னாட்டு இதழாளர்கள், ஆங்கிலத்தில் எழுதும் பிரபலமான எழுத்தாளர்கள் – என்றாலும், அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்து கொண்டிருந்தது. அதில் தமிழ் இலக்கியவாதிகளுக்கு மிகக் குறைவான இடமே இருந்தது.
மலையாளத்தில் நடந்து கொண்டிருக்கும் ’மாத்ரு பூமி’ விழா ஒப்பீட்டளவில் இலக்கியம் குறித்து தீவிரமாக இருப்பதாக அங்கு பங்கேற்பாளர்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ‘தி இந்து’ விழா கொரானா பெருந்தொற்று நடந்த 2020 ஆண்டு முதல் நடைபெறுவதில்லை. மலையாளத்தில் பேசவும், புரிந்து கொள்ளவும் செய்யும் எனக்கு எழுத வராது. இருந்தாலும் இன்று (சென்னை) செண்ட்ரல் ஹிக்கின்பாதம்ஸ்-சில் அப்துர் ரஸாக் குர்னா, சுஜொன், கதிஜா அப்துல்லா பஜ்பர், கௌர் கோபால் தாஸ், தமிழின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான மினி கிருஷ்ணன், நீதிபதி சந்துரு, காலச்சுவடு கண்ணன், டியெம் கிருஷ்ணா, அமிதவ் கோஷ், அடூர் கோபாலகிருஷ்ணன், சமத் சமதானி வாசுதேவன் நாயர் என 52 ஆளுமைகள் stamp size புகைப்படங்களில் ஒருவராக தங்களைப் பார்த்ததுமே இதழை வாங்கிவிட்டேன். இதில் சிலர் ‘மாத்ருபூமி’ அச்சிதழில் புகைப்படமாக வரவில்லை, எனினும் அவர்களின் வலைத்தளத்தில் உள்ளனர். இதில் நிறையபேரை நான் இன்னும் கேள்வியும்பட்டதில்லை, அதனாலென்ன – இனி கொஞ்சம் கூகுள் செய்து பார்த்துக் கொண்டு பிறகு அவர்களின் படைப்புகளை படிக்க தொடங்க வேண்டும். பன்னாட்டு இலக்கிய விழாக்கள் உள்ளபடியே ஒரு அறிமுகத்தை, தொடக்கப் புள்ளியை ஆரம்பித்து வைக்கிறது.
ஜேனியஸ் பரியத்தும், ஜானவி பருவாவும் விஷ்ணுபுரம் வழியாகவே இங்கு அறிமுகமானார்கள். அண்மையில் நடந்து முடிந்த சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அஜ்மல் கமால் என்னும் பாகிஸ்தானியரை சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. Kaushalya Kumarasinghe என்பவர் சிங்களத்தில் ஒரு நாவலை எழுதியுள்ளார். அவருடன் ஒன்றாக தங்கியிருந்து இங்கு இந்தியாவில் ph.d. செய்து கொண்டிருக்கும்போது அவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல உருது மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது என்பதை அறிந்து வியப்பாக இருந்தது. இங்கு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக அமைந்திருந்த இலங்கை அரங்கில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை “இரகசிய சாளரத்தில் உற்று நோக்கின்” உடனே வாங்கிக் கொண்டேன், இனிமேல்தான் படிக்க வேண்டும்.
சென்னையில் ஆப்ரிக்க, மத்திய கிழக்கு, தூர கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் இலக்கியத்துக்காக சென்னை வந்து சென்றிருக்கும் இந்த பொங்கலின் நல்ல நாளில் உலக இலக்கியம் மேலும் அதிகமாகும் வாய்ப்பு கூடுமென்கிற நம்பிக்கை பிறக்கிறது.
இலங்கை ஏறாவூரைச் சேர்ந்த சப்ரி முஹம்மத் இலங்கை நீதி அமைச்சின் கீழ் சிறைத்துறையிலுள்ள அரசு ஊழியர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வந்து கொண்டிருந்தவர், இந்த ஆண்டு முதல் சென்னைப் புத்தகக் கண்காட்சி பன்னாட்டு நிகழ்வாக மாறியதையொட்டி சிங்கப்பூர், இலங்கை, மலேசிய நாடுகளுக்கு அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட போது சொந்த விடுப்பு எடுத்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் அங்கு இலங்கையில் கிடைக்கும் அத்தனை நூல்களையும் கொண்டு வந்து ஒரு கடைக்குள் / அரங்கில் கிடைக்கும்படி செய்தார்.
இந்த எல்லா நடைமுறைகளின்போது உடனிருந்து கவனித்தவன் என்கிற வகையில் பொருளாதார ரீதியாக அவருக்கு அத்தனை இலாபம் ஒன்றுமில்லை. சி.சு.செல்லப்பா “எழுத்து” இதழ்களையும் பிற நூல்களையும் மூட்டை கட்டிக் கொண்டு கல்லூரிகள்தோறும் சுமந்து சென்றார் என்று படித்திருக்கிறேன். அதேபோல் சப்ரி போன்றவர்கள் நாடு கடந்து, மொழி கடந்து இலக்கியத்துக்காக தங்களால் இயன்றதைவிட அதிகமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.
இலக்கியம் வழியாக மொழி, நாடு, இனம், மதம் கடந்து செல்ல வேண்டும் என்கிற தன்முனைப்பும், தீராத ஆர்வத்தையும் கண்டு தலைவணங்குகிறேன். அங்கு திருவனந்தபுரத்தில் ”ஷ்ருதி டிவி” கபிலன் இல்லை, தங்களின் உரையை, கலந்துரையாடலை மாத்ரு பூமி விழாக் குழுவினர் பதிவு செய்திருந்தால் வெளியிடவும். மலையாளத்தில் இருந்தாலும் பரவாயில்லை. கேட்க ஆவலாகவுள்ளேன். நன்றி.
https://www.epw.in/engage/article/case-collaborative-translation-literary-texts-south-asia
கொள்ளு நதீம்,
ஆம்பூர்.
***
வெண்முரசு, நிறைவின் கணம்
ஜெயமோகன்அன்புள்ள ஜெமோ,
கடந்த இரண்டரை வருடங்களாக வெண்முரசு வாசித்து இன்றுடன் நிறைவடைந்தது. இந்த வாசிப்பனுபவத்தை விவரிக்க என்னால் சொல்கோர்க்க முடியவில்லை. ஆனாலும் இந்த அனுபவத்தை எங்களுக்கு அளித்த உங்களுக்கு நன்றி சொல்வதே இந்த கடிதத்தின் நோக்கம். நீங்கள் வெண்முரசு எழுத ஆரம்பித்த பொழுது அதை வாசிக்க முயற்சி செய்தேன், ஆனால் அப்பொழுது என்னால் உங்கள் எழுத்தை பின்தொடர முடியவில்லை. ஆனால் அதன் பின் உங்களின் பல நூல்களை வாசித்தேன், பல ஆசிரியர்களின் நூல்களை வாசித்தேன். 05-ஜூலை-2020 வெண்முரசு குரு பூர்ணிமா நாள் நிகழ்வுகளில் இணைய வழி மூலம் கலந்து கொண்டேன். அன்று வெண்முரசு வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டரை வருடங்கள், வேலை மாற்றம், குடும்பம் என பல சவால்கள் வந்தாலும் தொடர்ந்து வாசித்து இன்று முடித்தேன். நான் இது போல ஒரு உந்துதலுடன் தொடர்ந்து ஆண்டு கணக்கில் என் உழைப்பை அளித்தது, பொறியியல் முதுநிலை நுழைவு தேர்வுக்கு என்று நினைக்கிறேன். அதில் தோல்வி உற்று மனப்பிறழ்வு வரை சென்று திரும்பினேன். ஒரு விதத்தில் அந்த முயற்சியும் அந்த தோல்வியும் தான் என்னை இலக்கிய வாசிப்பு பக்கம் அழைத்து வந்து இங்கே நிறுத்தி உள்ளது.
வெண்முரசு ஆயிரக்கணக்கான நிகர் வாழ்வை வாழ வைத்துள்ளது. எத்தனை சிரிப்பு, கண்ணீர், வஞ்சம், நெகிழ்ச்சி. மகனாக பாண்டுவின் தோளில் ஏறி காட்டை சுற்றி இருக்கிறேன், திருதராஷ்டிரரின் பெருந்தோள்களில் விளையாடி இருக்கிறேன். அதே நேரத்தில் அவர்களாக ஆகி, ஒரு பெருத்தந்தையாகி மகிழ்ந்தும் துயருற்றும் இருக்கிறேன். பீமனின் சமையல், காதல், அர்ஜுனனின் காமம், கர்ணனின் நிமிர்வு அழகு, துரியோதனனின் நட்பு பாசம், தருமனின் அலைக்கழிவு, துரோணரின் கீழ்மை, துருபதனின் அழியா நெருப்பு, இளைய யாதவனின் ஞானம்… இன்னும் எத்தனை எத்தனை. இதில் எவர் பக்கம் அறம் உள்ளது என்பதை யாரும் கண்டறிய முடியாது. என்னளவில் நான் அதிகம் கண்ணீர் சிந்தியது துரியோதனனுக்காக.
தான் வளர்த்த பாண்டவர்களின் புதல்வர்களில் ஒருவரை கூட அவன் கொல்ல ஒப்பவில்லை… கிருஷ்ணையிடம் பரீக்ஷித் பாதுகாப்பாக இருப்பானா என்ற கேள்விக்கு “அவள் துரியோதனனின் மகள்” என்று பதில் கூறப்படுகிறது. இது போல இதில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களையும் அணுகி, விலகி பார்க்கலாம் அவர்களாக மகிழலாம், துயர் கொள்ளலாம், அல்லது ஒட்டுமொத்தகமாக இதற்கெல்லாம் என்ன பொருள் என்று மெய்வழி நோக்கி, இளைய யாதவனை நோக்கி செல்லலாம், அல்லது மீண்டும் மீண்டும் இதன் உள்ளேயே பல நிகர் வாழ்கையை வாழ்ந்து, அவர்களுடன் பாரதவர்ஷத்தை சுற்றி திரிந்து நிறைவடையலாம். ஒரே நேரத்தில், உலகின் அனைத்து வினைகளுக்கும் கேள்விகளுக்கும் பொருளையும், பொருளின்மையையும் பெற்ற உணர்வை வெண்முரசு வாசிப்பு ஏற்படுத்துகிறது.
நீங்கள் பலர் வெண்முரசை ஒரு முறைக்கு மேல் வாசிக்க மாட்டேன் என்று கூறியிருப்பதாக எழுதி உள்ளீர்கள். ஏன் நீங்களே, வியாசனனின் குரலாக அதற்கான காரணத்தையும் முதலாவிண்ணில் சொல்லி விட்டீர்கள். ஆனால் என்னளவில் நான் வெண்முரசுவில் இருந்து மீள்வேன் என்றோ, மீள வேண்டும் என்றோ தோன்றவில்லை. “இப்படி படித்து என்ன அடைந்தீர்கள்,” என்று என்னிடம் கேட்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்று தான். “இனி என் வாழ்நாள் முழுக்க என்னை ஒரு இருட்டறையில் அடைத்து வைத்தாலும், வெண்முரசின் ஒவ்வொரு கதை மாந்தரையும் மீட்டி மீட்டி, அதே இடத்தில் நிறைவான நூறு வாழ்வை என்னால் வாழ முடியும். வேறெதுவும் தேவையில்லை.“ என் வாழ்வில் இன்னும் இரண்டு முறையேனும் வெண்முரசை முழுமையாக படிக்கவேண்டும்.
இந்த பெரும் காவியத்தை அளித்த வியாசனின் பாதங்களை பணிகிறேன்.
நன்றி
பிரதீப்
***
அன்புள்ள பிரதீப்,
பலர் வெண்முரசை மீண்டும் மீண்டும் வாசிக்கிறார்கள். எட்டாண்டுகளாக அதிலேயே வாழும் பலரை நான் அறிவேன். அது செவ்விலக்கியங்களின் இயல்பு, அவை ஒன்றிலேயே அனைத்தையும் காட்டுபவை. பெருங்கோயில்களுக்கும் அவ்வியல்புண்டு. பலர் அவற்றிலேயே வாழ்ந்து நிறைவடைவார்கள்.
செவ்விலக்கியங்கள் அனைத்தையும் காட்டிவிடுகின்றன. அந்த அனுபவம் ஒவ்வொன்றையும் அவற்றின் இடத்தில் சென்றமையச்செய்கிறது. ஒட்டுமொத்தப்பார்வையை அளிக்கிறது. அது ஒரு முழு வாழ்க்கையையும் வாழ்ந்தமைந்த நிறைவை அளிக்கிறது.
எனக்கும்தான்
ஜெ
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



