Jeyamohan's Blog, page 626

February 18, 2023

ஒலிநூல்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நம்முடைய ஒலி வடிவ புத்தகங்களை சென்னை ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்’ பகிர்ந்துள்ளேன். அது அங்கே வரும் பார்வையற்றோருக்கு ஒலி வடிவில் தரப்படும். தங்களின் “இந்திய ஞானம்”என்ற நூல் அங்கே யு.பி.எஸ்.சி  தேர்வுகளுக்கு மாணவர்கள் தேடி படிக்கும் ஒன்றாக இருக்கிறது என்பதை அங்கே பணியாற்றும் ஸ்மித் என்பவர் தெரிவித்தார். ஒலி வடிவ நூல்களுக்கான இணையதளம் (www.perutchevi.com)ஒன்றை வடிவமைத்துள்ளேன்.இதன் மூலம் புத்தகங்களின் பெயரைக் கொண்டும், எழுத்தாளர்களின் பெயரை கொண்டும் புத்தகங்களின் வகைகளை கொண்டும் சுலபமாக தேட முடியும். தங்களின் புத்தகங்களை பதிவிடுவதற்கு அனுமதி தந்ததிற்கு மிக்க நன்றி. குக்கூ சிவராஜ் அண்ணா அவர்கள் தன்னறம் நூல்வெளியின் மூலம் வெளிவந்த நூல்களை ஒலி வடிவில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.இந்த ஒலி வடிவ நூல்களை பார்வையற்றோர் பள்ளிகளுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையதளத்தை தேவையான நபர்களுக்கு பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி,அன்புடன்,மனோ பாரதி விக்னேஷ்வர். ஒலிநூல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2023 10:30

February 17, 2023

ஆங்கிலமும் நானும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

மும்மொழிக் கல்வி குறித்த தங்கள் பதிவினை வாசித்தேன். தாங்கள் கூறுவது போலவே, என் மூளையும் இரண்டு மொழிகளில் தமிழையே தேர்வு செய்தது. தமிழில் வெண்முரசை நேரம் போவது தெரியாமல் இன்பமாக வாசிக்கும் எனக்கு, ஆங்கிலத்தில் சேத்தன் பகத்தை தாண்டுவதே இயலாமல் உள்ளது. 80% வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் இல்லை. இலக்கணம் ஓரளவு நன்றாகவே அறிவேன். (பன்னிரண்டில் ஆங்கிலம் 192/200) ஆனாலும் ஏதோ ஒரு தடை. மூன்று நான்கு பத்திகளில் மூளை சோர்வடைகிறது. வலுக்கட்டாயமாக முயன்றால் வாசிப்பின்பம் மாறி வதை ஆகிறது. பல முறை ஆங்கிலத்துடன் முயன்று தோற்றுள்ளேன். ஆங்கிலம் கற்காமல் இனி விரிவு இல்லை. முடங்கியதாக உணர்கிறேன். 

ஆங்கிலத்தை தாங்கள் எவ்வாறு எதிர் கொண்டீர்கள்? தங்களுக்கும் ஆங்கிலத்துக்குமான உறவு அன்றும் இன்றும் எப்படி உள்ளது என்பதை அறிய ஆவல். உங்கள் பதில் பலருக்கு வெளிச்சமாக இருக்கலாம். 

(பிகு என்னை பற்றி: பள்ளிக்கல்வி முழுக்க தமிழ்வழி, கல்லூரி நான்காண்டு ஆங்கிலவழி, தற்போது மாநில அரசுத்துறை பணி – பணியிடத்தில் ஆங்கில தொடர்பு பெரிதாக இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் இயல்பாக உலாவுபவர் பெரிதும் விரும்பப்படுகிறார். தமிழுடன் பிழைக்க முடிகிறது. ஆங்கிலம் இயல்பாக புழங்குபவரால் இலகுவாக பறக்க முடிகிறது) 

இப்படிக்கு,

எம். நவீன் குமார், 

குமுளி.

***

அன்புள்ள நவீன்குமார்,

ஆங்கிலம் இன்றியமையாதது என்பதில் ஐயமே இல்லை. ஏன்? சில காரணங்களைச் சொல்லலாம்

அ. இன்றைய உலக அறிவுப்பரப்பை இன்றிருக்கும் நிலையில் ஆங்கிலம் வழியாகவே முழுமையாகத் தொடமுடியும். தமிழில் நிறைய நூல்கள் வருகின்றன. ஆனால் ஆங்கிலம் உருவாக்கும் விரிவான அறிவுலகு இன்னும் தமிழில் இல்லை

ஆ. தமிழில் கலைச்சொற்கள் இல்லை. ஆகவே நாம் இன்று உலக அறிவியக்கத்தை சரியாக தமிழ் வழியாக அறிந்துகொள்ளும் நிலையில் இல்லை.

இ. நாம் ஆங்கிலவழிக் கல்வியை அடைந்துள்ளோம். மேலதிக அறிதல் நாம் கற்ற கல்வியின் தொடர்ச்சியாக அமைவதென்றாலும் ஆங்கிலம் தேவை. 

ஈ. அறிவியக்க நெறிகள், ஆய்வுநெறிகள், நூலாக்க முறைமைகள் தமிழில் அனேகமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு பற்றியானாலும்கூட ஆங்கிலத்தில் வாசிக்கும் ஒருவரிடம் இருக்கும் முறைமைசார்ந்த பார்வை தமிழில் வாசிக்கும் ஒருவரிடம் இருப்பதில்லை என்பதை கண்கூடாகவே காணலாம்.

ஆகவே ஆங்கிலமின்றி அறிவியக்கம் பெரும்பாலும் இல்லை என்பதே இன்றைய நிலை.

நான் கற்ற காலகட்டத்தில் ஒப்புநோக்க ஆங்கிலக் கல்வி கூடுதலாக இருந்தது. அன்றைய கல்வியில் அறிவியல்– தொழில்நுட்பம் ஆகியவை மிகக்குறைவு.  1992க்குப்பின் மெல்லமெல்ல நம் கல்வி தொழில்நுட்பக் கல்வியாகவே ஆகியது. விளைவாக எல்லா பண்பாட்டுக்கல்வியும், மொழிக்கல்வியும் தேய்வடைந்தன. விளைவாகவே ஆங்கில ஞானம் குறைந்தது.

நான் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்போதே எங்களுக்கு நான்கு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பாடமாக இருந்தன. சாமர்செட் மாம் நாவல்கள் பாடமகா இருந்தன. கல்லூரியிலும் Advanced English பாடம் இருந்தது. நான் என் கல்லூரி நாட்கள் முதல் ஆங்கிலத்தில் வாசிப்பவனாகவே இருந்தேன்.

ஆனால் 1991ல்  பழைய பிரிட்டிஷ் இலக்கியங்களை வாசிக்கையில் என் ஆங்கிலத்தின் குறைபாட்டை உணர்ந்தேன். அதை வெல்ல சில பயிற்சிகளை மேற்கொண்டேன். 

அ. வாசிக்கையில் ஒரு தெரியாத ஆங்கிலச் சொல்லைக்கூட விட்டுவிடுவதில்லை. அவற்றை ஒரு தனி கையேட்டில் அகரவரிசையில் எழுதிக்கொள்வேன். (டைரிகள் மிக உதவியானவை) அவற்றின் பொருளை குறிப்பேன்.

ஆ. அதன்பின் அவற்றின் வேர்ச்சொல், துணைச்சொற்களை அகராதியில் பார்த்து இன்னொரு குறிப்பேட்டில் விரிவாக எழுதிக்கொள்வேன். சொல்லாய்வில் எனக்கு எப்போதுமே ஆர்வமுண்டு. அன்று சேம்பர்ஸ் அகராதி எனக்கு மிகமிக ஆர்வமூட்டும் வாசிப்பனுபவத்தை அளித்தது. (இன்றும் அந்த அகராதியை வைத்திருக்கிறேன்) 

இ. ஆங்கிலத்தில் வாசிக்கையில் எப்போதும் இலக்கியரீதியாக நம்மை ஆட்கொள்ளும் நூல்களை, நம்மை கட்டாயமாக வாசிக்கச்செய்யும் நூல்களையே வாசிக்கவேண்டும். அதாவது வாசிப்பின்வழி நம்மையறியாமல் நம் மொழி மேம்படபேண்டும். நான் டால்ஸ்டாய் வழியாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொண்டேன். 

ஈ. ருஷ்யாவில் இருந்து மொழியாக்கமாக வந்த ஆங்கில நாவல்கள் வாசிக்க எளிமையானவை. அவற்றை தொடர்ச்சியாக வாசித்தேன். ஆங்கில திரில்லர் நாவல்களும் வாசிப்பை முன்னெடுப்பவை.வாசிப்பதொன்றே மொழியை மேம்படுத்தும் வழி

உ. ஆங்கிலத்தில் இருந்து தொடர்ச்சியாக மொழியாக்கங்கள் செய்தேன். ஒருநாளில் சில பக்கங்களாவது செய்தேன். எமர்ஸன், டி.எஸ்.எலியட். எலியட்டின் கட்டுரைகள் ஒரு தொகுப்பளவுக்குச் செய்தேன், அவை தமிழினி பதிப்பகத்தில் நூல்வடிவமாக இருந்தன. தொலைந்துவிட்டன. ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வது என் தமிழ்நடையை பாதிக்கிறதோ என்ற ஐயம் வந்தது. அதன்பின் ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்தேன். 2005 வரைக்கும்கூட என் முக்கியமான வருவாய் தரும் துணைத்தொழிலாக அது இருந்தது.

*

1987 ல் நான் ஆங்கிலத்தில் சொற்பொழிவுகள் ஆற்றியதுண்டு (தொழிற்சங்க அரசியல் சொற்பொழிவு). அன்று ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டும் இருந்தேன். 1988ல் ஆற்றூர் ரவி வர்மா நான் தமிழில் எழுதவேண்டும் என்றால் தமிழ் என் செவியிலும் நாவிலும் திகழவேண்டும் என்றார். மொழிக்குள் வாழ்வதே இலக்கியவாதியின் பணி என்றார். ஆகவே நான் காசர்கோட்டில் என் உயிர்நண்பர்கள், என் அரசியல்– இலக்கியக் களம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தமிழகம் வந்தேன். 

ஆற்றூரின் கருத்தே சுந்தர ராமசாமிக்கும். அது எம்.கோவிந்தனின் கருத்து சு.ரா என்னிடம் என்னிடம ‘ஒருமொழியில் ஆழ்ந்திருத்தல்’ என்பது எழுத்தாளனுக்கான அடிப்படை என சொன்னார். அதை அசோகமித்திரனும் பலவாறாக எழுதியிருக்கிறார். அது எனக்கும் சரியாக பட்டது. 

ஒருவரின் அகமொழி அவர் எழுதும் அதே மொழியைச் சார்ந்ததாகவே இருக்கவேண்டும், இல்லையேல் நடையழகு அமையாது என்பது சுந்தர ராமசாமியின் நம்பிக்கை. ஆகவே இன்னொரு மொழியில் பேசிப்புழங்கலாகாது என்று சுரா வலியுறுத்தினார். அவரால் ஆங்கிலத்தில் பேசமுடியும், ஆனால் பேசமாட்டார்.

1992ல் நான் பிரிட்டிஷ் கௌன்சிலுக்குச் சென்றுகொண்டிருந்த நாட்களில் அசோகமித்திரன் என்னிடம் என் நடையின் அசலான அழகை ஆங்கிலம் வழியாக இழந்துவிடலாகாது என்று எச்சரித்தார். 

(தன் மொழிநடை அழகற்றது என்றும், அது ஆங்கிலச் சாயல் கொண்டது என்பது பெரிய குறைபாடு என்றும் அவர் நம்பினார். அவருக்கு தி.ஜானகிராமனின் நடையே உன்னதமானது என்று தோன்றியிருந்தது)

அதன்பின் நான் ஆங்கிலத்தில் பேச முயன்றதே இல்லை. என் தாய்மொழியான மலையாளத்திலும் மிகமிக அரிதாகவே பேசுகிறேன். பேச்சு, சிந்தனை, எழுத்து மூன்றுமே தமிழ்தான்.

ஆகவே நாவில் ஆங்கிலம் வருவது நின்றுவிட்டது. இயல்பாகவே மொழியாக்கம் செய்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குரிய சொற்தடுமாற்றம் உண்டு. ஆங்கிலத்திலும் மலையாளத்திலும். 

ஆனால் அண்மையில் வேறுவழியே இல்லாமல் ஆங்கில உரைகளை ஆற்றுகிறேன். இலக்கியச் சந்திப்புகளில் ஆங்கில உரையாடல்களை நிகழ்த்துகிறேன். இந்த ஒரு மாதத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மாறிமாறி பேசிக்கொண்டிருக்கிறேன். 

என் அகமொழியின் தமிழ் குலைந்துவிடுமோ என்ற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் சிந்தனையில் புதிய களங்களை எதிர்கொள்ள ஆங்கிலத்தில் வாசித்தாகவேண்டும், உரையாடியாகவேண்டும். ஓர் இழப்பு இருக்கலாம், ஆனால் எய்துவது கூடுதல். ஆங்கிலம் அகமொழிக்குள் ஒரு நிபந்தனையாக இருந்துகொண்டிருப்பது மொழியை செறிவாக்கவும்கூடும்

ஆனால் கவிஞர்களுக்கு ஆங்கிலம் அகமொழியில் புகுந்துவிட்டால் அவர்கள் அதன்பின் கவிதை எழுதமுடியாது. 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 10:35

ராஜாளியார்

[image error]

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் தஞ்சை ஹரித்வார மங்கலத்தில் வாழ்ந்த பெருநிலக்கிழார். கல்வியாளர், தமிழறிஞர். பாண்டித்துரை தேவருக்கு நிகராகவே தமிழ்ப்பணியாற்றினார். கரந்தை தமிழ்ச்சங்கம், மதுரை தமிழ்ச்சங்கம் நிறுவ பங்களிப்பாற்றினார். தொல்காப்பியத்தின் பிழையற்ற பிரதி இவர் இல்லத்தில்தான் முழுமையாகக் கிடைத்தது

ராஜாளியார் ராஜாளியார் ராஜாளியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 10:34

யோகம், கடிதம்

அன்புள்ள குருஜி அவர்களுக்கு,

வணக்கம். தங்களின் துடிப்பான முகம் தற்போதும் நினைவில் உள்ளது. தாங்கள் காரில் குடும்பத்தோடு வந்தது எதிர்பாரா உவகை அளித்தது. பயிற்சியில் ஒன்றியும், மற்ற கூடுகைகளில் இயல்பாக கலந்துகொண்டதும் தங்களின் தன்முனைப்பின்மையை காட்டுகிறது. தங்களை பற்றியும் ஜெயமோகன் அவர்களை பற்றியும் வாசித்து இருந்தாலும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை.

யோக வகுப்புகள் அனைத்தும் நிதானமாக தொய்வில்லாமல் மனதில் நன்கு பதியும் படி அமைக்கப்பட்டு இருந்தது. யோகம் என்றால் என்ன, யோகத்தின் லட்சியம், மரபார்ந்த யோகத்தின் நோக்கம், அதற்கான் தத்துவ விளக்கம், பஞ்ச கோஷம், பஞ்ச பிராணன், ஆயுர்வேத மரபின் பார்வை போன்ற பல விளக்கங்கள் உள்ளே எளிதில் சென்றன. பல தளங்களில் செயல்படும் யோக நித்ரா, அந்தர் மௌனா, ஆசனம், பிராணாயாமம் போன்ற யோக பயிற்சிகளில், பங்கெடுப்பவர்களையும் அவர்களது வாழ்வு முறைகளையும் கருத்தில் கொண்டு செய்முறை ஆணைகளையும் விளக்கங்களையும் அளித்தது தங்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. சந்தேகங்கள் எப்படி இருப்பினும் அதற்கு தீர்க்கமாக பதில் அளித்தீர்கள்.

சில நாட்கள் பயிற்சி செய்ததில் முதுகு வலியும் கால்களில் எடை சமநிலையின்மையும் குறைந்துள்ளது. ஆனால் பொறுமையின்மையால் பல நாட்களில் செய்ய முடிவதில்லை.

யோகத்தின் மீது எனக்கு ஏளனமும் பெரு விலக்கமும் இருந்தது. தற்போது ஏளனம் நீங்கி அண்மை ஆகிவிட்டிருக்கிறது. தங்கள் அன்பிற்கும் வெள்ளிமலை அனுபவத்திற்கும் நன்றி.

அன்புடன்

சிபி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 10:30

வைணவங்கள், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம், தாங்கள் நலம் தானே?

இன்று தங்களது ‘வைணவங்கள்’ உரை கேட்டேன். வெண்முரசு வாசிக்கும் சமயம் இளைய யாதவரை சுற்றி சில கேள்விகள் எழுந்ததுண்டு. விவேகியும், ஞானியும், பேரரசரும், மகத்தான ஆற்றல்கள் பொருந்தியவருமானவர் ஏன் இவ்விடத்தில், இவ்வடிவத்தில் மட்டும் தோன்றியிருக்கிறார். உலகனைத்தையும் காப்பவன் தானே அவன். மக்கட்செறிவு மிக்க உலகம் மிக விரிந்தது. அதில் எத்தனையோ இனங்களும், அவற்றில் சிக்கல்களும் இருக்கின்றன. பேரழிவின் விளிம்பில் நிற்கும் இனங்களும் உண்டு. திருமால் அங்கெல்லாம் தோன்றியிருக்கலாமே. ஆழியும், வெண்சங்கும், சக்கரமும் எதற்காக ஒரு இந்துவிற்கு மட்டும் பொருள் படவேண்டும் என எண்ணற்ற கேள்விகள். இவையானைத்திற்கும் விடை தங்கள் உரையில் கிடைத்தது.

மேலும் தங்களது இக்கட்டுரை ‘முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3’ என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இதுநாள் வரை அதை நான் வெறும் அறிவு என்ற கோணத்தில் மட்டும் வைத்து பார்த்தேன். இதன் சாரம் தங்கள் உரையில் பலவாறாக வெளிப்பட்டது. அதை நான் மிகமுக்கியமாக கருதுகிறேன்.

ஆசிரியருக்கு நன்றி,

சூர்ய பிரகாஷ்

அன்புள்ள ஜெ

வைணவங்கள் உரை கேட்டேன். இன்றைய நவீன மனதுக்கு மரபார்ந்த மதவிளக்கங்கள் நிறைவளிப்பதில்லை. அவை ஒருவகை புராணங்களாக மட்டுமே தெரிகின்றன. கடவுள், மதம், ஆன்மிகம் பற்றிய புதிய விளக்கங்கள் தேவையாகின்றன. அவை விளக்கங்கள் அல்ல, உண்மையான கண்டடைதல்கள். வைணவங்கள் உரை அவ்வகையில் மிக அற்புதமான ஒன்று. ஆனால் ஒலிப்பதிவு சுமார். எவராவது பின்னணி ஓசைகளை நீக்கி போட்டால் நல்லது.

ஸ்ரீனிவாஸன் எதிராஜன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 10:30

பிரயாகை முடிவில்…

பிரயாகை – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

பிரயாகை மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சென்ற வாரம் வெண்முரசின் ஐந்தாவது பாகமான பிரயாகையை வாசித்து முடித்தேன். அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வெண்முரசு படிக்கும் முன்பு நான் மஹாபாரத கதையை தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே அறிந்திருந்தேன். அதனால் பாஞ்சாலியை பாண்டவர்களின் மனைவி என்பதைத் தாண்டி, கர்ணன் – அர்ஜுனன் போன்று மாபெரும் ஆளுமையாக நான் நினைத்ததில்லை. இந்த நாவலை படித்த பின்பு பாஞ்சாலி மிக பிரமாண்டமான, அச்சம் கலந்த மதிப்புமிக்க ஆளுமையாக என் மனதில் பதிந்துவிட்டார். துருவனில் இருந்து ஆகாய கங்கை வழியாக வரும் அவளது அமானுஷ்ய தன்மை நிறைந்த பிறப்புக்கதை என்னை மிகவும் ஈர்த்தது.

பயணங்கள் எவ்வாறு வாசிப்பனுபவத்தை விரிவடையச்  செய்கிறது என்பதை இந்த நாவலை வாசிக்கும் போது உணர்ந்தேன். நான் இமய மலையில் மலையேற்றம் செய்து  மனதில் புதைந்த நினைவுகள், துருபதனின் இமய பயண வர்ணனைகள் மூலம் மீண்டெழுந்து வந்து வாசிப்பனுபவத்தை இனிதாக்கியது. சகுனியின் பாலைநிலப்பயணம் லடாக் நினைவுகளைத்தூண்டியது. இடும்பவன அத்தியாயங்களை படிக்கும் போது காட்டில் எந்த வித உடல் சிரமங்களும் இல்லாமல் சுற்றித்திரிந்தேன். மணாலியில் சென்ற ஹிடிம்பா தேவி கோவில் மனதில் மின்னி மின்னிச் சென்றது. அரக்கர்களின் கதைகளின் மூலம் முன்காலத்தில் எவ்வளவு பெரிய காடு இந்நிலத்தில் விரிந்திருந்தது என ஏக்கத்துடன் நினைத்துக்கொண்டேன்.

வெண்முரசின் அரசியல் உரையாடல்களில் உள்ள தர்க்கத்தை நான் பெரிதும் ரசிப்பதுண்டு. இந்த நாவலில், பீஷ்மர் விதுரரிடம் குந்தி ஆணையிட்ட மதுரா படையெடுப்பு எவ்வாறு அஸ்தினபுரியை காத்தது என்று விளக்கும் இடம் ஒரு சிறந்த உதாரணம். கிருஷ்ணன் இரவோடு இரவாக அஸ்தினபுரியின் படைகளை கங்கையில் ரகசியமா கொண்டு சென்று மதுராவை மீட்கும் அத்தியாயத்தை படிக்கும் பொது அர்ஜுனன் மட்டுமின்றி நானும் கண்ணனின் ஆளுமையால் முழுதாக ஆட்கொள்ளப்பட்டேன். அர்ஜுனன் குந்தியிடம் துவாரகையை வர்ணிக்கையில் எகிப்தில் உள்ள பிரமிடுகளை குறிப்பிடும் போது, கொற்றவையில் கிரேக்க தத்துவ ஞானிகள் குறிப்பிடப்படுவதை நினைத்துக்கொண்டேன்.

சுயம்வர அத்தியாயம் நாவலின் மகுடமாக அமைந்திருந்தது. சுயம்வர அரங்கின் வர்ணிப்பு, அங்கு மக்களிடம் நிலவிய  உற்சாக மனநிலை, மன்னர்கள் உள்ளே நுழைந்த விதம், அவர்கள் பிற மன்னர்களுடன் பரிமாறிக்கொண்ட பார்வைகள் என அனைத்தும் சேர்ந்து ஒரு பெரும் திருவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற உணர்வை அளித்தது. அரங்கில் கர்ணன் எழும் பொழுது, அவன் வெல்ல மாட்டான் என அறிந்திருந்தும், அவன் வெல்லவேண்டும் என ஏங்கினேன். ஆனால் வெல்லாததனாலேயே அவன் வரலாற்று தொன்மமாக நீடிக்கிறான் என்று எண்ணிக்கொண்டேன். நாவலின் அட்டை ஓவியத்தில் உள்ளது  அர்ஜுனன் எனவே நான் நினைத்திருந்தேன். அது கர்ணன் என  அறிந்த பின் அதுவே பொருத்தமானது என நினைத்துக்கொண்டேன். திரௌபதி ஐந்து பேரை மணந்ததன் பின்னுள்ள வரலாற்று அரசியல் காரணங்களையும் இந்நாவலின் மூலமாக அறியமுடிந்தது.

நாவலை படிக்கும் போது திருவட்டாறு கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு கர்ணன் மற்றும் அர்ஜுனனின் சிலைகளை பார்க்கும் போது எனக்கு அணுக்கமான, நான் நன்கறிந்த இரு மனிதர்களை நோக்குவதுபோலிருந்து. நீங்கள் உங்கள் “கரு” கதையில் குறிப்பிட்டது போல, உண்மை (factual) தகவல்களும் புராணங்களும் இணையும் புள்ளியிலேயே நாம் ஒரு இடத்தை முழுமையாக உணர்கிறோம். இந்நாவல் அவ்விரண்டையுமே அளிப்பதாகவிருந்தது. வானில் தெரியும் துருவ நட்சத்திரம் கூட இப்போது ஆழ்ந்த பொருள் நிறைந்த ஒன்றாக தெரிகிறது.

அன்புடன்

கார்த்திக்
கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2023 10:30

February 16, 2023

விரைவுவாசிப்பு – சில குறிப்புகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 

“ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று.

எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று  கற்றுக்கொடுங்கள் ஜெ. 

பொறுமையாக ஆழ்ந்து வாசிக்கிறேன் ஆனால் அது கதையாகவும் அப்போது எழுந்த உணர்வாகவும் மட்டுமே நினைவில் எஞ்சிகிறது. உங்கள் பதிலுக்கு காத்திருக்கும் வாசகன்.

ஞானசேகரன்

***

அன்புள்ள ஞானசேகரன்,

விரைவு வாசிப்பு என்பது உலகமெங்கும் ஒரு கலையாகவே பயிலப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று அது. உண்மையில் இன்று நாம் தொடர்ச்சியாக விரைவு வாசிப்பை செய்துகொண்டேதான் இருக்கிறோம். தொழில்முறை மின்னஞ்சல்கள், சமூகவலைத்தளப் பதிவுகளை மிக வேகமாகவே வாசிக்கிறோம். அறிவிப்புகளை நாம் வாசிக்கும் வேகத்தை எண்ணிப்பாருங்கள். சென்ற தலைமுறையினர் அவற்றை வாசிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்துடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.

விரைவு வாசிப்புக்கு சில தேவைகள் உள்ளன. சில பயிற்சிகளும் உள்ளன. சில அடிப்படை வேறுபாடுகளும் உள்ளன.

தேவைகள்

அ.துறைசார் ஈடுபாடு. அதற்கான தேர்ச்சி. ஒரு துறையில் வாசிப்பதற்கு அதற்கான  ஈடுபாடு நமக்கிருக்கவேண்டும். நான் கணிப்பொறியியல் சார்ந்த ஒரு கட்டுரையை வாசிக்கமாட்டேன். ஈடுபாடே இல்லை. ஆனால் கட்டுமானப் பொறியியல் சார்ந்த ஒரு கட்டுரையை விரும்பிப் படிப்பேன். ஆனால் அதில் தேர்ச்சி இல்லை. இலக்கியம், தத்துவம், மெய்யியலில் தேர்ச்சி உண்டு. ஆகவே கட்டுமானத்துறை கட்டுரையை அத்தனை வேகமாக வாசிக்கமுடியாது. இலக்கியக் கட்டுரையை விரைவாக வாசிப்பேன்.

ஆ. கவனம். வேகமான வாசிப்புக்கு அடிப்படைத்தேவைகளில் கவனம் முக்கியமானது. கவனம் சிதறும் மன அமைப்பு நமக்கிருந்தால், சூழல் இருந்தால் வேகமாக வாசிப்பது கடினம் . கவனத்தை உருவாக்கிக்கொள்வதெப்படி என பயிலவேண்டும்.அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். கவனம் சிதறுவதற்கு எதிராக தற்கட்டுப்பாடுகளை மேற்கொள்ளலாம். 

சிலருக்கு கவனமான வாசிப்புக்குரிய மேலதிகப் பயிற்சிகள் தேவைப்படலாம். அவை ஒவ்வொருவருக்கும் ஒன்று. சிலருக்கு கேள்விப்புலன் கூர்மையாக இருக்கும். வாசிக்கும்போதே அதன் ஒலியும் சேர்ந்து வந்தால் விரைவாக வாசிப்பார்கள். சிலருக்கு வாசிப்பவற்றை அவ்வப்போது எழுத்தில் தொகுத்துக்கொண்டால் விரைவான வாசிப்பு அமையும். அவரவர் வழியை அவரவரே கண்டடையவேண்டும்

கவனமான வாசிப்புக்கு தடையாக அமைவன சில உண்டு. வெவ்வேறு விஷயங்களை வாசிக்கையிலேயே இணைத்துச் சிந்தித்தல், வாசிப்பவற்றுடன் முரண்பட்டபடியே வாசித்தல் போன்றவை. வாசிப்பும் யோசிப்பும் சேர்ந்து செய்யப்படலாகாது.

பயிற்சிகள்

அ. மொழிப்பயிற்சி. விரைவான வாசிப்புக்கு மொழிப்பயிற்சி இன்றியமையாதது. பொதுவான மொழிப்பயிற்சி, துறைசார் தனிமொழிப்பயிற்சி என அது இருவகை. மொழிப்பயிற்சி தொடர் வாசிப்பால் தானாகவே அமைவது. கூடுதலாக சில செய்முறைகள் உண்டு. உதாரணமாக, கண்ணில்படும் அரிய சொற்களை  பொருள் உணர்ந்தபின் தனியாக அகரவரிசையில் ஒரு குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளலாம். ஒவ்வொருமுறையும் அகராதி பார்ப்பதை விட இது எளிது. ஒரு சொல்லை அவ்வண்ணம் எழுதி பலமுறை பார்த்தால் நாளடைவில் மொழிப்பயிற்சி எளிதாகிவிடும்.

ஆ. குறிப்புப் பயிற்சி. பலசமயம் விரைவான வாசிப்பு நிகழாமைக்குக் காரணம் வாசித்தவை புரிபடாமல் இருப்பது. அதற்கு சிறந்தவழி வாசித்தவற்றை குறிப்புகளாகத் தொகுத்துக் கொள்வது. குறிப்புகள் எழுதிக்கொள்வதற்குச் சில அடிப்படைகள் உள்ளன. அவற்றை பயில்வது நல்லது. (உதாரணமாக குறிப்புகள் ஓர் அட்டவணை, ஒரு வரைபடம் வடிவில் இருக்கவேண்டும். எப்போதுமே அவை முழுமையான சொற்றொடர்களாக அமையவேண்டும். அவற்றில் முதன்மைச் சொற்கள் இருந்தாகவேண்டும்)

இ. பார்வைப்பயிற்சி. சிலர் வரிகள் வழியாக விழியோட்டி வாசிப்பார்கள். அது வாசிப்பை வேகம்கொள்ளச் செய்ய பெரிய தடை. வரிகளின் நடுப்பகுதியை மட்டுமே பார்த்து வாசிக்கவேண்டும். வாசிக்கையில் வாய்க்குள் சொல்லிக்கொள்வது, உள்ளத்துள் சொல்லிக்கொள்வது கூடாது. வாசிப்பதென்பது எழுத்துக்களை பார்ப்பதுதான்.

வேறுபாடுகள் 

அ. விரைவான வாசிப்பு என்பது கவனமற்ற வாசிப்பல்ல. பலர் வேகமாகத் தத்திச்செல்வதை விரைவு வாசிப்பு என்று சொல்கிறார்கள்

ஆ. விரைவு வாசிப்பு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாசிப்பதல்ல. எல்லாவற்றையும் வாசிப்பதுதான்

இவையெல்லாம் ஒருவருக்குச் சொல்லித்தரக்கூடியவை. ஆனால் ஒரு பயிற்சியமர்வு மிக எளிதாக இவற்றைக் கற்பிக்கக்கூடும். நான் 1993ல் ஒரு பயிற்சியை மேலைநாட்டு தொழில்முறைப் பயிற்சியாளர் ஒருவரிடமிருந்து எடுத்துக்கொண்டேன். மேலைநாடுகளில் தொழில்முறையாகவே இவற்றைக் கற்பிப்பவர்கள் உள்ளனர். இங்கும் செய்துபார்க்கலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2023 10:35

எலிசபெத் சேதுபதி

[image error]எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியர். தேவாரம் பாடும் ஓதுவார்களை பற்றி முனைவர் பட்டஆய்வறிக்கை எழுதினார். பிரஞ்சு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

எலிசபெத் சேதுபதி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2023 10:34

தேவியும் மகளும் -கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க குமரித்துறைவி மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

நண்பர் ஒருவருக்கு குமரித்துறைவி நாவலை அன்பளிப்பாக அளித்திருந்தேன். அவர் அவ்வளவாக படிக்கும் வழக்கம் இல்லாதவர். முன்பு அத்தகைய நண்பர்களுக்கு நான் அறம் பரிசாக அளிப்பதுண்டு. அதற்கு முன் நான் அளித்த இரு நூல்கள் சங்க சித்திரங்கள், பொன்னிறப்பாதை.

இந்த நூல்களெல்லாமே பாஸிட்டிவான மனநிலையை உருவாக்குபவை. வாசிப்பவர்களை அலைக்கழிப்பதில்லை. நவீன இலக்கியம் ஒருவகை அலைக்கழிப்பை அளிக்கிறது. விளைவாக தொழிலில் இருப்பவர்கள் அதை விரும்புவதில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட அலைக்கழிப்பு. ஆனால் இந்நூல்கள் மேலோட்டமானவையும் அல்ல. வாசித்தவர்கள் வாழ்க்கையை பற்றிய ஆழமான புரிதலை அடைவார்கள். வாழ்க்கைமுழுக்க ஞாபகமும் வைத்திருப்பார்கள்.

குமரித்துறைவியை அந்நண்பர் பலமாதகாலம் வாசிக்கவில்லை. அண்மையில் அவர் மனைவி வாசித்தார். உடனே மதுரைபோய் மீனாட்சியை தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. நண்பருக்கு இரண்டு மகன்கள். இரண்டுபேருமே அமெரிக்காவில். அவர் மனைவி புத்தகமெல்லாம் படிக்காதவர். ஆனால் குமரித்துறைவி வாசித்து அழுதுகொண்டே இருந்தாராம்.போகும் வழியில் இவர் வாசித்தார். இவரும் நெகிழ்ந்துவிட்டார்.

மதுரை அம்மன் முன் நின்ற அனுபவத்தை ஃபோனில் சொன்னார். அதுவரை தெய்வமாக தெரிந்த மீனாட்சி மகளாக தெரிய ஆரம்பித்தார். அங்கேயே அழுதுவிட்டார். அவர் மனைவி காரில் திரும்பும்போது அதையே சொன்னார். மகளையே பார்த்ததாக. அப்படி பார்க்கலாமா என்று ஒரு பெரியவரிடம் கேட்டாராம். பார்க்கலாம். எல்லாம் பக்தியின் பாவனைகள். அது பித்ருஃபாவம் என்றாராம. கடவுளுக்கே தந்தையாக பாவனை அடைவது அது.

நண்பர் தன் வாழ்க்கையில் திருப்புமுனை உருவாக்கிய நூல் அது என்று சொன்னார். எஞ்சியவாழ்நாளை அழகாக ஆக்கிவிட்டது என்றார். இனிமேல் மாதம்தோறும் மதுரை செல்லப்போவதாகச் சொன்னார். (ஆனால் அதற்குள் ஒருமாத காலத்தில் இரண்டுமுறை போய்விட்டார்) உங்களுக்கு எழுதவேண்டுமென தோன்றியது.

எம்.பழனிக்குமார்

நாளொன்றும் தவறாமல் தினம் எங்கள் வீட்டுக்கு எதாவது ஓர் ஆலயத்திலிருந்து பிரசாதம் வரும். ஜோதிட ஆலோசனை வழியே பரிகாரம் செய்ய ஆலயம் செல்பவர்கள் வழியே கிடைக்கும் பேறு. குரியர் கம்பெனி பையன்கள் அனைவரும் மிகவும் பழக்கமாகிவிட்டனர்

இன்று ஆலயம் தொடர்பான பிரசாதம் போலவே பரிசு கிடைத்தது. நண்பர் யோகேஸ்வரன் நான்கு நாட்கள் முன்பு whatsapp chat ல் வந்து என் புது இல்ல முகவரி வினவினார். என்ன காரணம் என்று கேட்டேன். மங்கலமான புத்தகம் ஒன்றை அனுப்ப விரும்புவதாகச் சொன்னார். முகவரி கொடுத்திருந்தேன் இன்று குரியரில் அந்தப் புத்தகம் வந்தது.. ஜெயமோகன் படைப்பு குமரித்துறைவி

ஒரு பெரிய விஷயம் என்னை கேள்வி வடிவத்தில் உறுத்திக் கொண்டிருந்தது குமரித்துறைவியின் முன்னுரையில்

மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒன்றை ஒன்று ஆடிபோல பிரதிபலித்து பெருக்கிக் கொள்கின்றன. அலகிலா ஆடலுடைய தெய்வம் தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டி வைக்கிறது

என்னை உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. ஜெயமோகன் வரிகளிலேயே பதிவு செய்வது எனில் உடல் கரைந்து பறப்பது போன்ற உணர்வினை உருவாக்கியது

சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2023 10:31

அஜிதன், மைத்ரி- கடிதம்

அன்புள்ள ஜெ

சீண்டுவதற்கான கேள்வி அல்ல இது. என்னைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் சொன்னதை சொல்கிறேன். இப்படி ஒரு கேள்விக்கான இடமிருக்கிறது. அஜிதனின் மைத்ரி நூலின் பின்னட்டையில் உள்ள குறிப்புகளை எழுதிய அ.முத்துலிங்கம், தேவதேவன், அபி அனைவருமே உங்களுக்கு நெருக்கமானவர்கள். உங்களால் கௌரவிக்கப்பட்டவர்கள். இது ஒரு கொடுக்கல் வாங்கல் என்று சொல்லலாமா?

மாதவ்

***

அன்புள்ள மாதவ்,

கொடுத்து, வாங்கி எதை அடைகிறோம். எங்கள் உலகுக்கு அப்பாலுள்ள, எங்கள் எழுத்துக்களின் அழகையும் ஆன்மிகத்தையும் எந்த வகையிலும் புரிந்துகொள்ளும் திராணி அற்ற, ஒரு வட்டத்தின் ஏற்பையா? அவர்கள் என்ன செய்தால் எங்களை ஏற்றுக்கொள்வார்கள்? எங்கள் எழுத்துக்களின் அழகையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்ளும் எங்கள் வாசகர்களிடம் நாங்கள் மேற்கொண்டு எந்த ஏற்பை அடையவேண்டும்?

நீங்கள் உங்கள் கேள்வியாக முன்வைக்கவில்லை, சரி. ஆனால் அக்கேள்வி எழும் சூழலில் இருந்தீர்கள் என்றாலே ஒரு கீழ்நிலை வம்புச்சூழலில் இருக்கிறீர்கள். எந்த ஒளியும் சென்றுசேரா இருள் அது. அறிவுச்செயல்பாடேகூட அந்த இருளுக்கு ஒருவரை இட்டுச்சென்றுவிடக்கூடும். எந்த இலக்கிய நுட்பத்தையும் அந்த உலகைச் சேர்ந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு இலக்கியமென்பதே ஒரு ஓயா வம்புச்செயல்பாடு மட்டுமே.

உங்கள் கேள்வி ஆத்மார்த்தமானது எனில் இதுதான் பதில். சிந்தித்துப்பாருங்கள். பத்துகோடிபேர் வாழும் தமிழ்ச்சமூகத்தில் ஏதேனும் வாசிப்பவர்களின் வட்டமென்பது சில லட்சம் பேர் அடங்கியது. அதில் பெரும்பாலானவர்கள் பக்தி, அன்றாட அரசியல் ஆகிய இரு களங்களைச் சேர்ந்தவர்கள். மிகச்சிறிய ஓர் உள்வட்டமே இலக்கியவாசகர்கள். அந்த இலக்கியவாசகர்களின் வட்டத்திற்குள் ஒரு மிகச்சிறிய வட்டம் என்பது இலக்கியத்தின் அழகியலையும், ஆன்மிகத்தையும் முதன்மையாக முன்வைப்பது. அந்த வட்டத்திற்குள் நான் செயல்படுகிறேன்.

அந்தச் சிறுவட்டத்திற்குள் உள்ள இன்னொருவரையே என்னால் முழுமையாக ஏற்கமுடியும், ரசிக்கமுடியும், முன்வைக்க முடியும். முன்வைப்பதே என் செயல்பாடு. அதையே செய்து வருகிறேன். அந்த வட்டத்திற்கு வெளியே உள்ள அரசியல், சமூகவியல் எழுத்துக்களையும் ; உத்திச்சோதனை முயற்சிகளையும் அவற்றின் இடத்தில் வைத்து மதிப்பிடவும் ஏற்கவும் செய்கிறேன். அவற்றையும் அடுத்தபடியாக முன்வைக்கிறேன். அறிவியக்கச் செயல்பாடென்பதே இதுதானே? ஒருவர் தன் தரப்பை முன்வைப்பது, அதன்பொருட்டு நிலைகொள்வது, அதை உருவாக்குவது.

ஆகவே எனக்கு தேவதேவனும் அபியும் அ.முத்துலிங்கமும் முக்கியமானவர்கள். ஏன் என விரிவாக எழுதியிருக்கிறேன். என் உள்ளமும் அவர்களின் உள்ளமும் ஒன்றென உணரும் உச்சப்புள்ளிகள் பல உள்ளன. அங்கே நான் அவர்களைக் கண்டடைவதுபோலவே அவர்கள் என்னையும் கண்டடைகிறார்கள். நான் அவர்களை முன்வைப்பதுபோலவே அவர்கள் என்னையும் முன்வைப்பார்கள். நாங்கள் ஒட்டுமொத்தமாக முன்வைப்பது ஓர் அழகியல்தரப்பை. ஓர் ஆன்மிகத்தரப்பை. ஓர் இலக்கிய மரபை.

எந்த அழகியல் வழியாக நான் தேவதேவனை கண்டடைந்து கொண்டாடுகிறேனோ அந்த அழகியல் வழியாகவே அவர் அஜிதனை கண்டடைகிறார். மைத்ரி அந்த உலகைச் சேர்ந்தது. அது கவிஞர்களின் நுண்ணுலகம் சார்ந்த படைப்பு. ஏதேனும் ஒரு காரணத்தால் அக்கண்டடைதலை அவர்கள் முன்வைக்கவில்லை என்றால்தான் அது பிழை.

அந்த அழகியலை, அது வெளிப்படும் நுண்களத்தை முற்றிலும் உணராத ஒருவர் வெளியே இருந்து கேட்கும் கேள்வியாகவே உங்கள் கடிதத்தை எடுத்துக் கொள்கிறேன். அதற்குரிய பதில் ஒன்றே, வாசித்துப் பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த அழகியல் பிடிகிடைக்கக் கூடும். அதன்பின் கேள்வி எழாது. அவ்வாறு அது பிடிகிடைக்க இயல்பான நுண்ணுணர்வு இருக்கவேண்டும். மொழி, இலக்கியவடிவம், தத்துவம், வாழ்க்கை சார்ந்த பயிற்சி கொஞ்சம் வேண்டும். அனைத்துக்கும் மேலாக உண்மையாக முயல்வதற்கான நல்லெண்ணம் வேண்டும். இந்த வம்புகள் முதலில் தகர்ப்பது அந்த நல்லெண்ணத்தையே.

உங்கள் கேள்வியின் சாரமாக அமைந்துள்ள ஓர் அறவீழ்ச்சி பற்றிச் சுட்டிக்காட்டவேண்டும். நம் காலகட்டம் உருவாக்கிய மாபெரும் கவியுள்ளங்களை, படைப்பாளிகளை நீங்கள் உங்கள் வம்பின் களத்திற்கு இழுக்கிறீர்கள். அவர்களை உங்களைப்போன்ற ஒருவராக எண்ணிக்கொள்கிறீர்கள். அவ்வாறு எண்ணிக்கொள்ளும் ஒருவர் என்றேனும் இலக்கியத்தைச் சென்றடைய முடியுமா?

ஜெ

மைத்ரி நாவல் வாங்க 

மைத்ரி மின்னூல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2023 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.