Jeyamohan's Blog, page 622

February 25, 2023

முகாம்கள், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குருஜியின் யோகா வகுப்பு முதல்முறை நடந்தபொழுதே பங்குபெற முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.

வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டால் தாமதமாகிவிடுமோ என்று வியாழனன்றே சென்றுவிட்டேன்.  நான் பாதி வழியில் திரும்பிவிடாமல் இருக்கவேண்டி ஶ்ரீநிவாசன் என்னை அழைத்துச்சென்று, அப்போதுதான் வந்துசேர்ந்த குருஜியிடமும் மணியிடமும் ஒப்படைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிப்போனார்.

10ஆம் தேதி காலை 9 மணிக்கு புத்தரையும் சாரதாவையும் பூஜித்து வகுப்பை ஆரம்பித்தார் குருஜி.

பஞ்சகோஷம் பற்றியும் பஞ்சப்ராணன் பற்றியும் ஒரு சிறு அறிமுகத்தோடு வகுப்பு தொடங்கியது. யோகப்பயிற்சியின் அவசியத்தை எளிமையாக எடுத்துக்கூறினார். ஆஸனங்கள் செய்யும்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது முறைப்படி அமையவேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

முதல் இரண்டு நாட்களில் மொத்தமாக 9 ஆசனங்கள், 4 மூச்சுப்பயிற்சிகள் மற்றும் 2 தியான பயிற்சிகளை கற்பித்தார். நிறைவு நாளன்று மொத்த பயிற்சிகளையும் ஒரு முறை செய்யவைத்த பின்னர் பஞ்ச மஹா யக்ஞம் என்பதை பற்றி விளக்கினார்.

எல்லா பயிற்சிகளுக்கும் அவரது மனைவி சாரதா செயல்முறைவிளக்கம் செய்தார். முக்கியமாக ஏகபாத ப்ரணாமாஸனா. அவர்கள் இருவரும் சேர்ந்து அதை செய்தபொழுது ‘சிவசக்தி நடனம் போல இருக்கு‘ என்று அஜி கூறினான். ‘அட, இவ்வளவுதானே‘ என்று நினைத்து செய்யும்பொழுது ஆடிப்போன எங்களை ‘பழகப்பழக சரியாயிடும்‘ என்று ஊக்கம் கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நாங்களும் ‘வாங்க பழகலாம்‘ என்று அப்பயிற்சிகளை தினமும் அழைத்துக்கொண்டிருக்கிறோம்.

யோகப்பயிற்சி தொடர்ந்து செய்வதனால் உடல், மனம், ஆத்மா எவ்வாறு பயன்பெறுகிறது என்று விளக்கினார். இன்றுள்ள பல நோய்கள் psychosomatic நோய்கள்தான் என்றும் யோகப்பயிற்சி அவற்றை எப்படி குறைக்கும் என்றும் விளக்கினார். 

இந்தியாவில் உள்ள 4 முக்கிய யோகா பள்ளிகளையும் குறிப்பிட்டார். இது போன்ற முகாம்களின் நோக்கம் யோக சாதகர்களை உருவாக்குவதே என்றார். 

இந்த பயிற்சிகளில் பாதி ஏற்கெனவே எனக்கு தனிப்பட்ட முறையில் குருஜி, குறிப்பிட்ட நிவாரணங்களுக்காக, கற்றுக்கொடுத்தவைதான். ஆனால் இந்த முகாமில் யோகமரபின் பின்னணி மற்றும் யோகாவின் ஒட்டுமொத்த பலன்கள் என்று ஒரு holistic approach கிடைக்கப்பெற்றது.

உங்களுக்கும் குருஜிக்கும் மீண்டும் நன்றிகள்.

சுதா

[image error]

அன்புள்ள ஜெ,

ஆலயக் கலை முகாம் இனிய நிகழ்வாக அமைந்தது. கலந்து கொண்ட அனைவருக்குமே ஆலயம் குறித்த அவரவர் பார்வையை இம்முகாம் மாற்றியிருக்கும் என்று தோன்றுகிறது. 

இந்த மூன்று நாட்கள் கற்பிப்பதற்கான சட்டகத்தை உருவாக்க ஜெயகுமார் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆலயக்கல்விக்கென முறைமை சார்ந்த சிறப்பான பாடத்திட்டத்தை  அவரால் உருவாக்க இயலும். அவர் கற்பித்த விதமும் அணுக்கமானதாக இருந்தது. எதிர்மறைக் கருத்துகள், வம்புகள், சுவாரசியத்துக்கென சில்லறை நகைச்சுவை என எதுவும் கலக்காமல் கற்றலின் இனிமையை உணரச் செய்வதாக இருந்தன அனைத்து வகுப்புகளுமே. வீணாக ஒரு சொல் கூட அந்த அரங்கில் ஒலிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

முடிந்து விடைபெறும்போது நண்பர் ஒருவர் ஜெயகுமாரிடம் ‘எனக்கு மகாபலிபுரத்துக்கு உங்களோட ஒரு முறை போகணும். அது எப்படினா, காதலிய கூட்டிட்டு போற மாதிரி‘ என்று சொன்னார். ஆம், ஆலயத்தை இனி காதலிக்க மட்டுமே முடியும்.

இந்த வாய்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும் அருமையாக நடத்திக்கொடுத்த ஜெயகுமாருக்கும் நன்றிகள் பல.

அன்புடன், 

 ஸ்ரீனிவாசன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:31

February 24, 2023

எழுகதிர்நிலம்- 6

நாங்கள் 2011ல் பூட்டான் சென்றபோது அங்கே முதன்மையாக சென்ற இடம் புலிக்குகை மடாலயம். செங்குத்தான மலையுச்சியில் அமைந்துள்ள அந்த பௌத்த ஆலயம்  பத்மசம்பவர் லடாக்கில் இருந்து ஒரு புலிமேல் வந்திறங்கிய இடம் எனப்படுகிறது. அங்குள்ள ஒரு குகையில் அவர் தவம் செய்தார் என்று நம்புகிறார்கள். பத்மசம்பவர் பூட்டான் செல்வதற்கு முன் அதே புலியில் வந்திறங்கி தவம் செய்து சென்ற இன்னொரு இடம் அருணாசல பிரதேசத்திலுள்ள புலிக்குகை மடாலயம்.

அங்கே செல்வதற்கு முடிவெடுத்து முன்னரே சொல்லிவைத்திருந்தோம். ஆனால் அங்கே செல்ல தனி அனுமதி தேவை என பின்னர் தெரிந்தது. பலவகை ராணுவ அனுமதிகள் பெற்றிருந்தாலும் அதைப் பெறவில்லை. செல்ல முடியாமல்போகும் என்னும் எண்ணம் சோர்வளித்தது. ஆனால் எங்கள் ஓட்டுநர் லக்கியின் சொந்த ஊரே அதுதான். அவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லக்கி ஓர் அற்புதமான பாடகர். அவரே பாடி இசைக்குறுவட்டுகள் வெளியிட்டிருக்கிறார். இதாநகரிலும் கௌகாத்தியிலும் இசையமைக்கப்பட்டவை. அவற்றை வண்டியில் எங்களுக்குப் போட்டுக் காட்டினார். பொதுவாகவே வடகிழக்கினரின் குரல் ஆழ்ந்தது, கனமானது. அதை இன்னும் ஆழ்ந்து பாடுகிறார்கள். பஞ்சாபில் எல்லா பாட்டும் குத்துப்பாட்டுதான். வடகிழக்கில் எல்லா பாட்டுமே மெலடிதான். டான்ஸ் ஐட்டம் என ஒன்றை போட்டுக்காட்டினார், அவரே பாடியது. அதுவும் கொஞ்சம் மெலடிதான்.

புலி மடாலய வாசலில் லக்கி எங்களுக்காக ஒரு பாட்டை பாடினார். பின்னர் அதை இன்னொரு முறை பாடச்சொல்லி பதிவுசெய்துகொண்டோம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்காக உங்கள் லக்கி டென்சின் அளிக்கும் பாடல்.

புலிமடாலயத்தின் அருகே சென்ற இரண்டாண்டுகளாகத்தான் புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என தெரிந்தது. பெரும்பாலும் எவருக்கும் பெரிதாகக் கட்டிடக்கலை தெரியவில்லை என்றும் தெரிந்தது. தோராயமாக கட்டிக்கொண்டிருந்தனர். எதிரே உள்ள மலைமேல் புலிக்குகை உள்ளது. பத்மசம்பவர் வந்தமர்ந்த இடம் அது. அங்கே செல்ல கொடிபோல மலைச்சரிவில் வளைந்தேறிச் செல்லும் ஒற்றையடிப்பாதை. கோடையில் மட்டுமே அங்கே செல்லமுடியும் என்றார் லக்கி. குளிர்காலத்தில் உள்ளூர் வேடர்கள் செல்வார்களாக இருக்கும்.

புலி மடாலயம் பழைமையானது. அங்கே எங்களைத் தவிர எவருமே இல்லை. பனி மலைச்சரிவில் இருந்து வழிந்து இறங்கி பரவியிருந்தது. அப்பால் ஊசியிலை மரங்கள் அடர்ந்த காடுகள் பனிமூடி நின்றிருந்தன. வானின் நீலநிறம் கண்ணை பறிப்பது. வான்நீலம் என நாம் ஒரு மங்கல்நிறத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இமையப்பனிமலைகளின்மேல் நின்றிருக்கும் வானம் அடர்நீலநிறம் கொண்டது. நீல வைரத்தின் நிறம்.

சுடர்விடும் ஒளி. சூரிய ஒளிக்கு அப்படி ஒரு சுடரழகை நம்மூரில் பார்க்க முடியாது. இங்கே தூசியை ஒளி சுடரச்செய்து, ஒரு படலத்தை அனைத்தின்மேலும் போர்த்திவிடுகிறது. காற்றிலுள்ள நீராவி ஒளியை தடுத்து காட்சிகளை மங்கலாக்குகிறது.பனிநிலங்களில் பனியே தூசியை மண்ணுக்கு கொண்டுவந்துவிடுகிறது. காற்றிலுள்ள நீராவி பனியாக பொழிந்துவிடுகிறது. ஆகவே துல்லியமான ஆகாயம்.  துல்லியமான காற்று. சுடரொளி. சுட்டும் விழிச்சுடரின் ஒளி. கண்ணனின் நிறமென பாரதி கண்ட நிறம். 

ஆனால் நேரடியாக முகத்தை அறைந்தது ஒளி. சில நிமிடங்களிலேயே தோல் சுடத்தொடங்கும். வெயிலும் பனிக்குளிருமாக முகங்களை கருகச் செய்துவிடும். இங்குள்ள மலைமக்கள் பொன்னிறமானவர்கள். ஆனால் முகங்கள் வெந்தவை போலிருக்கும். குழந்தைகளின் கன்னங்கள் ஆப்பிள் போலவே சிவந்திருக்கும். பெண்களின் கன்னங்களை நான் கூர்ந்து பார்ப்பதில்லை, இக்கட்டுரையை அருண்மொழி படிப்பாள் என்பதனால்.

புலி மடாலயம் (Taktshang Monastery) ஒரு மலைவிளிம்பில் உள்ளது. கீழிருந்து நோக்கினால் பறவைக்கூடு போல தெரியும் என்கிறார்கள். மூன்று அடுக்கு கொண்டது. மூன்றடுக்குகளிலும் தனித்தனியாக புத்தரின் சன்னிதிகள். உள்ளூர் வழிபாட்டாளர்கள்தான் அதிகமும் வருகிறார்கள் போல தோன்றியது. புத்தர், போதிசத்வர் கைகளிலெல்லாம் ரூபாய்களை மடித்து செருகி காணிக்கை செலுத்தியிருந்தனர். பொன்னிறப்பூச்சுள்ள மரச்சிலைகள். மைத்ரேயர், அமிதாபர், யோகாரூடர்.

உறைந்து கிடந்த பனிமேல் வெறுங்காலை தூக்கி வைத்து மடாலயத்தின் சுற்றுப்பிராகரத்தில் நடந்தோம். அரையிருள் நிறைந்திருந்த கருவறைக்குள் அமர்ந்திருந்த புத்தரை வணங்கினோம். பொயு எட்டாம் நூற்றாண்டில் பழைய காந்தார நாட்டில் அரசகுடியில் பிறந்து, பௌத்த யோகஞானம் அடைந்து, திபெத்திற்குச் சென்று, அங்கே வஜ்ராயன பௌத்த மரபை நிறுவிய பத்மசம்பவர் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். ( ஒரு மாவீரரின் நினைவில்...

மடாலய வளாகத்தில் உள்ளூர் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. மஞ்சள்நிறக் குழந்தைகளுக்கு ஒரு வகையான பொம்மைத்தன்மை உள்ளது. குழந்தைத்தன்மையின் அடையாளமே மூக்குப்பாலம் சப்பையாக இருப்பதுதான், இக்குழந்தைகளுக்கு எப்போதுமே மூக்கு மேலெழுவதில்லை. (எனக்கு அறுபது வயதான ஜாக்கிச்சான் சிறுவனாகவே தெரிகிறார்) 

ஒரு பையன் எங்களை திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அருகே போனால் ஓடிவிடுவான் என நினைத்தேன். ஆனால் பயமெல்லாம் இல்லை. நான் கன்னத்தை தொட்டு கொஞ்சினேன், எந்த உணர்ச்சியுமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான். உண்மையாகவே பயமில்லை. மலையின் விளிம்பில் அபாயகரமான சாலையில் ஒரு கையால் வண்டியோட்டவிருப்பவன். இசைப்பாடலை பாடி வெளியிடவிருப்பவன்.  

தவாங் நகருக்கு வந்துசேர்ந்தோம். அங்கே சுற்றுலாத்தொழில் சென்ற ஐந்தாறாண்டுகளாகச் சூடுபிடிக்க ஆரம்பித்திருப்பதன் தடையங்கள் எங்கும். ஏராளமான புதிய கடைகள், புதிய தங்கும் விடுதிகள், புதிய பௌத்த வழிபாட்டிடங்கள். தலாய்லாமாவின் கெலுக் பௌத்த மரபைச் சேர்ந்த பிரம்மாண்டமான அமிதாப புத்தரின் சிலை கான்கிரீட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் இருந்த கட்டுமானங்களின் பணி இன்னமும் முடியவில்லை.

பின்னணியில் மலைமுகடுகளும் வானும் விரிந்திருக்க புத்தரின் முகம் தெரியும் காட்சி கிளர்ச்சியூட்டுவது. பேருருவம். பெரும்பாலான பேருருவங்கள் எனக்கு ஒவ்வாமையை உருவாக்குபவை. புத்தர் விதிவிலக்கு. எல்லா மாபெரும் புத்தர் சிலைகளுமே திகைப்பையும் அமைதியையும் அளிப்பவையாகவே உள்ளன. புத்தர் ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதுதான் காரணம் என நினைக்கிறேன்.

தவாங் பௌத்த மடாலயத்திற்குச் சென்றோம். மதிய உணவு சாப்பிடவில்லை. மடாலயம் ஐந்து மணிக்கு மூடிவிடுமென சொன்னார்கள். மூன்று மணிக்குத்தான் தவாங் நகருக்குள் நுழைந்தோம். ஆகவே நேராகவே மடாலயம் நோக்கிச் சென்றோம்.

தவாங் மடாலயம் இந்தியாவில் திபெத் பௌத்த மடாலயங்களில் தொன்மையான சிலவற்றில் ஒன்று. இந்தியாவின் பெரிய மடாலயங்களில் இதுவும் ஒன்று. தலாய் லாமா 1959 மார்ச் மாதம் 31 ஆம் தேதி  இங்கே வந்து , பின்னர் இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் அவருடைய தலைமையிடம் அமைவது வரை தங்கியிருக்கிறார். பெரிய நிறுவனம் இது.பல பகுதிகளிலாக கல்விக்கூடங்களும், துறவியர் தங்குமிடங்களும் உள்ளன. அடுக்கடுக்காக கட்டிடங்கள். மொத்தம் 65 கட்டிடங்கள் உள்ளன. அவ்வழியாகச் செல்லும் பாதை மையமான ஆலயத்தைச் சென்றடைந்தது.

தவாங் மடாலயத்ம் Gaden Namgyal Lhatse ( முழுவெற்றியின் புனித மலர்த்தோட்டம்) என அழைக்கப்படுவது. ஐந்தாம் தலாய் லாமாவின் ஆணைப்படி லாமா லோட்ரே கியாஸ்டோ (Lodre Gyatso) 1680ல் இந்த மடாலயத்தை அமைத்தார்.

அதைப்பற்றி ஒரு கதை சொல்லப்படுகிறது. லாமா லோட்ரே கியாஸ்டோ இங்கே வந்து மடாலயம் அமைக்க இடம் தேடியபோது எதுவும் அமையாமல் சோர்வுற்று ஒரு குகைக்குள் சென்று நோன்பிருந்தார். அவர் வெளியே வந்தபோது அவருடைய குதிரையை காணவில்லை. அவர் அதை தேடிக் கண்டடைந்தபோது அது ஒரு மலைமேல் மேய்ந்துகொண்டிருந்தது. அந்த மலையின் பெயர் Tana Mandekhang. அது பழைய மன்னர் Kala Wangpo அரண்மனையை அமைத்திருந்த இடம். கியாஸ்டோ உள்ளூர் மக்களின் உதவியுடன் அங்கே இந்த மடாலயத்தை கட்டினார்.

தவாங் மடாலயம் மூன்று அடுக்கு கொண்டது. இரண்டு அடுக்குகளின் உயரத்திற்கு மாபெரும் புத்தர் சிலை பொன் சுடர அமர்ந்துள்ளது. கீழிருந்து புத்தரை அண்ணாந்து பார்க்கலாம். பக்கவாட்டு படிகளில் ஏறிச்சென்று மேலே முகத்தருகே நின்றும் பார்க்கலாம். 

தவாங் மடாலயத்திலுள்ள ஒரு திரைச்சீலையில் வரைந்துள்ள Palden Lhamo என்னும் பெண் தெய்வம் ஒரு சிறப்பு எனப்படுகிறது. திபெத்திய பௌத்த மரபின் முதன்மை காவல்தெய்வமான மகாகாலதேவரின் பெண்வடிவம்தான் இது. இந்து தெய்வமான காளியின் சாயல் கொண்டது. உக்கிரமான தோற்றமுடைய இந்த தெய்வம் இலங்கையில் ஒரு கொடிய அரசனால் உபாசனை செய்யப்பட்டு அடிமையாக இருந்தது என்றும் அங்கிருந்து தப்பி அருணாச்சலப்பிரதேசம் வந்தது என்றும் தொன்மம் உள்ளது. அது ஓர் உள்ளூர்க்கதை. திபெத்திய தாந்த்ரீக மரபில் மகாகாலன் காலத்தின் உக்கிரத்தோற்றம். இது அதன் பெண்வடிவம். மேலும் தியானம் சார்ந்த அர்த்தங்கள் இதற்குள்ளன

திபெத்திய மடாலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல. திபெத்திய பௌத்தத்தில் தலாய் லாமா அரசரும்கூட. ஆகவே இது அவருடைய ஆட்சியின் கீழ் ஒரு துணைந்நிர்வாக மையமாகவே இருந்துள்ளது. அதிகாரக் கைமாற்றத்திற்கான பல மாறுதல்கள் இதை மையமாக்கி நிகழ்ந்துள்ளன. ஆனால் பிற அரசதிகார மாற்றங்கள் போல அவையெல்லாம் வன்முறை சார்ந்தவை அல்ல. தத்துவக்கொள்கைகள் நடுவே நடைபெற்ற போர்களைச் சார்ந்தவை.

1914ல் இந்த மடாலயமும் இதைச்சூழ்ந்துள்ள பகுதியும் திபெத்திய தலாய் லாமாவின் ஆதிக்கத்தில் இருந்து பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. வடகிழக்கு எல்லைப்புற நிர்வாகம் என்னும் பொது ஆட்சியமைப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசு இப்பகுதியை ஆட்சி செய்தது. அது பின்னர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 2009ல் தலாய் லாமா இங்கே வந்தமைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால் அது இங்கே ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது. 2017லும் தலாய் லாமா இங்கே வந்தார்.

ஏறத்தாழ எழுநூறு பிட்சுக்கள் இங்கே உள்ளனர். இந்த மடாலயம் 17 பௌத்த ஆலயங்களையும் இரண்டு துறவியர் மடங்களையும் இன்று நிர்வாகம் செய்து வருகிறது. மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. மடத்தின் இப்போதைய தலைவர் கியால்ஸி ரிம்போச்சே (Gyalsy Rinpochey)யின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இந்த மடாலயத்தின் சுவர்களிலுள்ள மண்டலா என்னும் ஓவியங்கள் புகழ்பெற்றவை. உட்சுவர்கள் முழுக்க செறிந்த ஓவியங்கள் உள்ளன. அவற்றில் போதிசத்வர்களும் திபெத்திய பௌத்த தெய்வங்களும் பல்வேறு லாமாக்களின் ஓவியங்களும் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மடாலயம் ஒரு பெரிய ஓவியத்தொகை போன்றது. பலநாட்கள் தங்கி ஆய்வுசெய்பவர்களே இதை ஓரளவேனும் பார்த்து முடிக்க முடியும்

மடாலயத்தின் மாபெரும் பிரார்த்தனைக்கூடத்தில் கருஞ்சிவப்பு கம்பிளி விரிக்கப்பட்ட மணைகள், வாத்தியங்கள் அரையிருளில் ஓர் ஓவியத்திலென அமைந்திருந்தன. பொன்னிற புத்தரின் பெருந்தோற்றம் எங்கிருந்தாலும் நம்மை அறிவதாகவும், நாம் நோக்குகையில் நம்மை நோக்காததாகவும் இருந்தது

பௌத்த மடாலயங்களில் நான் எப்போதுமே உணரும் ஆழ்ந்த தனிமையை, நிறைவை இம்முறையும் அடைந்தேன். ஆலயங்கள் எங்குமுள்ளன. இந்த பௌத்த மடாலயங்கள் ‘தேவதாத்மா ஹிமாலயா’ என்னும் மாபெரும் மரத்தில் பழுத்த பழங்கள். 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2023 10:35

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

[image error]

ஓர் எழுத்தாளர் எழுதியவை இரண்டே நாவல்கள். ஒன்று, அவர் வாழும் காலத்தில் வெளிவந்தது, ஆனால் கவனிக்கப்படவில்லை. இன்னொன்று முப்பதாண்டுகளுக்குமேல் அவருடைய நண்பரின் கையிலேயே இருந்து அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அச்சேறியது. ஆனால் அவர் எழுதிய எல்லாமே அடுத்த தலைமுறையினரால் விரும்பிப் படிக்கப்பட்டன. அவருடைய நடையும் பார்வையும் காலாவதியாகவே இல்லை. அவர்தான் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2023 10:35

சுக்கிரி, கடிதம்

 ஆசிரியருக்கு வணக்கம்,

 சுக்கிரி குழுமம் 2020 ஆம் ஆண்டு உங்களின் உலக வாசகர்களால் தொடக்கப்பட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் இரண்டு கதைகள் என விவாதித்தோம்.மாலை ஆறு மணிக்கு துவங்கிய விவாதம் எட்டு மணிக்கு பின்பும் தொடர்ந்ததால்.வாரம் ஒரு கதையை விவாதிப்பது என மாற்றியமைத்தோம்.

இந்திய நேரப்படி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஜூம் சந்திப்பு  துவங்குவதால் ஆஸ்திரேலியாவிலிருந்து கலந்து கொள்ளும் சகோதரி கலாதேவிக்கு மீட்டிங் முடிந்து படுக்கைக்கு செல்ல நள்ளிரவு ஆனது. அதனால் மாலை ஆறு மணிக்கு பதிலாக ஐந்து மணிக்கு என மாற்றியபோது அமெரிக்காவில் வாழும் நண்பர்கள் அழைப்பான் வைத்து எழுந்து அதிகாலை ஆறரை அல்லது அதற்கு முன்பே மீட்டிங்கில் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

 ஐரோப்பிய நண்பர்களுக்கு மீட்டிங்குக்கு வர உகந்த நேரமாக இருந்தது. லண்டன் ராஜேசுக்கும் ஜெனீவாவில் வாழும் கணேஷ் பெரியசாமிக்கும் நண்பகல் வேளை  கத்தார் பழனிவேல் ராஜாவுக்கும் உகந்த நேரம்தான் பணி இல்லாத நாளாக இருந்தால்.இப்படி பத்துக்கும் மேலான டைம் ஸோன்களிருந்து நண்பர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கிறார்கள். கப்பல் காரானுக்கு விடுறையில் வீட்டில் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

  சுக்கிரி கதை விவாதம் மட்டுமல்லாமல் ஒரு நல்ல நட்பு வட்டத்தையும் உருவாக்கியுள்ளது.கடந்த மாதம் மெல்போர்னிலிருந்து இந்தியா வந்த கலாதேவியை சென்னையில் மது சம்பத்,விஜயலட்சுமி,டாக்டர் முத்துகிருஷ்ணன்,கமலநாதன்,வைஜெயந்தி மாலா என சுக்கிரியன்ஸ்  நேரில் சந்தித்தனர்.கொரியாவின் சதீஷை மதுரையில் திருச்சி சரவணகுமார் மற்றும் மதுபாலா சந்தித்து சிறப்பித்தனர்.

 மூன்றாண்டுகள் முடிந்து சுக்கிரி விவாத குழுமம் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்க போகிறது.கோவிட் காலத்தில் நிகழ்ந்த நன்மைகளில்  சுக்கிரியும் ஒன்று. தமிழ் சூழலில் இலக்கிய ஆர்வம் இருந்து கதை ஒன்றை வாசிப்பவர் வெளியில் எங்கும் அது பற்றி ஒரு வார்த்தை பேசவோ,விவாதிக்கவோ ஒருவரை கண்டுபிடிப்பது அரிது.

  அன்னிய தேசத்தில் ஏதோவொரு மூலையில் இலக்கியம் வாசித்த ஒருவருக்கு இணை மனங்களுடன் வாரத்தில் ஒருநாள் கூடி இரண்டு மணிநேரம் விவாதிக்க சுக்கிரி களம் அமைத்து கொடுத்தது. வாசித்ததில் தவறவிட்டதையும்,ஒரே கதையை வேறொருவர் இன்னொரு கோணத்தில் வாசித்ததையும் இங்கே கண்டு கொண்டனர் இந்த கூட்டு விவாதத்திற்கு பின் வாசிப்பின் குறைகள் நீங்கி,எதை வாசிக்கவேண்டும் என தெளிவானதோடு மட்டுமில்லாமல் மிக நேர்த்தியாக குடும்பத்தை நிர்வகிக்க முடிகிறது என நடுவயதை நெருங்கும் பெண்கள் சொல்வது கண்டு வியப்புற்றேன்.

 சுக்கிரியில் உள்ள சகோதரிகள் துவக்கத்தில் இயல்பான கூச்சம் காரணமாகவும்,அன்னிய ஆண்கள் இருக்கும் கூட்டங்களில் பேசி பழக்கமில்லாததாலும் அமைதியாக கவனித்துகொண்டு இருந்ததார்கள். இக்குழுவின் கட்டுகோப்பு, பிறரை மதிக்கும் உயர்பண்புகளால் இப்போது தங்கள் வாசிப்பு அனுபவத்தை உரக்க பதிவு செய்கிறார்கள்.

    கடந்த டிசம்பர் விஷ்ணுபுரம் விழாவில் லண்டன் ராஜேஷ் தலைமையில் தனிக்குழுவாக அமர்ந்திருந்த சுக்கிரியன்ஸ் சுக்கிரிக்காக மார்கெட்டிங் செய்ததில் திருநெல்வேலி,பெங்களூர் என வாசகர்கள் இணைந்தார்கள்.அதில் நியுசிலாந்து நாட்டில் பணிபுரியும் தங்கவேலும் ஒருவர்.விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியவர் கடந்த வாரம் உங்களின் வெண்கடல் தொகுப்பின் விருது கதை விவாதத்தில்  இணைந்தபோது அவருக்கு நேரம் நள்ளிரவு பன்னிரெண்டரை மணி அதிகாலை மூன்றரை மணி வரை நடந்த சந்திப்பில்  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தனது வாசிப்பை பதிவு செய்தார். கேப்ரியல் எனும் புயல் தாக்கிய அவ்வூரில் சிறிதாய் நிலநடுக்கம் ஒன்றும் ஏற்பட்டிருந்தது சில தினங்களுக்கு முன்.

 முதலில் உங்களது புனைவு களியாட்டு கதைகளை விவாத்தித்தோம் இரண்டாண்டுகளுக்கு மேலாகியது நூறு கதைகள் முடிய. பின்னர் அ முத்துலிங்கம் ஐயாவின் மகராஜாவின் ரயில் வண்டி சிறுகதை தொகுப்புக்குப்பின்,உங்கள் வெண்கடல் தொகுப்பை கடந்த சனிக்கிழமை விவாதித்து முடித்தோம்.

   வரும் சனிக்கிழமை (18-02-2023) முதல் தமிழின் முதன்மை படைப்பாளியான  புதுமைபித்தனின் கதைகளை விவாதிக்க துவங்குகிறோம்.தான் வாசித்ததை யாரிடம் பேசுவது என தெரியாமல் திக்கற்று நிற்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தங்களது வாசிப்பின் குறைபாட்டை களையவும், இணை மனங்களுடன் கூடி விவாதிக்கவும் சுக்கிரி களம் அமைத்து தருகிறது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும்  இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம்.

தொடர்புக்கு,

கணேஷ் பெரியசாமி

+41 77 943 00 54

சந்தோஷ் +91 996 531 5137

சுக்கிரிக்காக,

ஷாகுல் ஹமீது .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2023 10:32

ஜிஜுபாய் பதேக்காவின் “பகல் கனவு” -வெங்கி

அன்பின் ஜெ.ஜிஜுபாய் பதேக்காவின் “பகல் கனவு” வாசித்தேன். கல்வியியல் சார்ந்த மிக நல்ல படைப்பு. 1910-களில் கல்வித் துறையில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் கனவும் செயல்முறைகளும கொண்டது. சுவாரஸ்யம் மிகுந்த, அருமையான சிறிய நூல். 1932-ல் குஜராத்தியில் வெளிவந்திருக்கிறது. சங்கரராஜுலு தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இன்றைய ஆசிரியப் பணியில் இருக்கும் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய அழகான நூல்.  என் பால்யத்தின் பள்ளிகளையும், மனதுக்கு நெருக்கமான அன்பான ஆசிரியர்களின் நினைவுகளையும் மனதுள் மலர்த்தியது.நான் 77-ல் ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த, பள்ளி முதல் நாள் நினைவடுக்கில் இன்னும் மெலிதாய் ஞாபகம் இருக்கிறது. அப்பாதான் கூட்டிக்கொண்டு போனார். ஆரஞ்சு மிட்டாய்களுடனும், மஞ்சள் பையுடனும் போனேன். ஓடைப்பட்டிக்கும், மேலப்பட்டிக்கும் சேர்த்து ஐந்தாம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மேலப்பட்டி கிராம எல்லையில் ஜீவா வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பழைய ஓடு வேய்ந்த ஒற்றைக் கட்டிடத்தில் நடந்து வந்தது (ஜீவா என் வகுப்புதான். பின்னால் எட்டாம் வகுப்பு வரை உடன் படித்தார்). பெரியப்பாதான் அதன் தலைமையாசிரியர். என் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தது பெரியப்பாதான். அப்போது வாரம் இரண்டோ/மூன்றோ நீதிபோதனை வகுப்பிருக்கும். பாடநூல்கள் தவிர, மாணவர்கள் வாசிப்பிற்கான, பல்வகை நூல்களை ஒரு பெரிய டிரங்குப் பெட்டியில் அழகாக அடுக்கி வைத்திருப்பார் பெரியப்பா. நான்காம்/ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நீதிபோதனை வகுப்புகளில் பலமுறை புத்தகங்கள் படித்துவிட்டு வகுப்பிற்கு முன்சென்று கதைகள் சொல்லும்படி சொல்லியிருக்கிறார். மாமா பெண்கள் ஹேமலதாவும், விஜயராணியும் என் வகுப்பில் பின்னர் நண்பர்களானார்கள்.6,7,8 பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். ஹேமா, ஜீவா, ராணி, இன்னும் சில நண்பர்கள் ஓடைப்பட்டியிலிருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுவந்தோம். அதன் தலைமையாசிரியர் டேவிட் சுந்தர் சிங். அவரும், அறிவியல் ஆசிரியரும், கைத்தறி ஆசிரியரும் தினமும் திருமங்கலத்திலிருந்து வந்து போய்க்கொண்டிருந்தனர். டேவிட் சார் என் புத்தக வாசிப்பார்வத்தை வெகுவாகத் தூண்டிவிட்டவர். அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர், காமிக்ஸ்கள் என்று அனைத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். திடீர் திடீரென்று அன்று ஆசிரியர்கள் வருகை இல்லாத வகுப்புகளுக்கு வந்து, மாணவர்களை வைத்து உடனடி நாடகங்கள் போடுவார். பள்ளியின் கலைநிகழ்ச்சிகளில் அவரின் பல நாடகங்களில் நாங்கள் நடித்திருக்கிறோம் (கள்ளிக்குடியில் ஒரு விழாவில் பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் நான் அலாவுதீன் கில்ஜியாக நடித்தது இன்னும் பசுமையாய் ஞாபகம் இருக்கிறது!). கணக்காசிரியர் சென்னம்பட்டியில்தான் தங்கியிருந்தார். விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து நாங்கள் மொத்த வகுப்பும் அருகிலிருக்கும் தோப்புகளுக்கும், காடுகளுக்கும்  செல்வோம். மதிய உணவு எங்களுடன் எடுத்துச் செல்வோம். பாட்டும், கூத்தும், விளையாட்டுகளுமாய் மாலை வரை நேரம் போவதே தெரியாது. சட்டென்று நாடகப் போட்டிகளும்/நடிப்புப் போட்டிகளும் நடக்கும். ஒருமுறை முதல் ரேங்கிற்கு என்னுடன் போட்டிபோடும் சத்யமூர்த்தி, பிட்டுக்கு மண்சுமந்த கதையை நடித்தான். நான் ஒரு துப்பறியும் கதையில் நாயாக நடித்தேன். ஆசிரியருடன் சேர்ந்து தோப்பில் வெடிதேங்காயும் போட்டிருக்கிறோம்.ஒன்பதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தது திருமங்கலம் பி.கே.என்-னில். அங்கும் வகுப்பாசிரியரும், ஆங்கில ஆசிரியரும் (வரதராஜன்), தமிழாசிரியரும் அற்புதமாய் அமைந்தார்கள். வகுப்பாசிரியர் போட்டிகளில் பரிசுகளாக புத்தகங்கள்தான் கொடுப்பார். சாண்டில்யனும், ராஜேஷ்குமாரும், பி.கே.பி-யும், சுபாவும், சுஜாதாவும் அப்போது மிக விருப்பம். விடுதி வார்டன் ராதாகிருஷ்ணன் சார் ஆங்கிலத்தில் own creative writing-ஐ கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்தினார்.“பகல் கனவு” நூலில் கிருஷ்ணகுமாரின் முன்னுரையிலிருந்து… – சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேய அரசாங்கம் இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களை சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்தச் சூழலிலேயே நமது ஆசிரியர்கள் தொடர வேண்டியதாயிற்று. இதற்கிடையே கல்வி முறையின் விரிவாக்கம் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கல்வியைக் கொண்டுசென்றது. ஆசிரியர்களின் அக்கறையின்மையை லட்சக்கணக்கான குழந்தைகள் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. குழந்தைகளுக்குப் பிடித்தமான ஆயிரக்கணக்கான விஷயங்களை – மண்ணில் இருக்கும் பூச்சி புழுக்களிலிருந்து வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வரை – வகுப்பறைக் கல்விக்கு ஏற்றதல்ல என்றே நம் நாட்டில் நிலவிய கல்விமுறை கருதி வந்தது. தனக்கு கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்தேதான் கற்பிக்க வேண்டும், குழந்தைகளைப் பரீட்சைகளுக்குத் தயார் செய்யவேண்டும் என்ற நோக்கிலேயே சராசரி ஆசிரியர் எவரும் வேலை செய்கிறார். குழந்தையின் அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்கு தீனிபோட்டு வளர்க்கவேண்டும் என்பது தனது கடமை என்று எந்த ஆசிரியரும் கருதவில்லை. அப்படி எண்ணினாலும் அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்குரிய சூழ்நிலையை பள்ளிகள் கொண்டிருக்கவில்லை.இச்சூழலில்தான் குஜராத் மாநிலத்தின் சிறந்த ஆசிரியரும், கல்வியாளருமான ஜிஜுபாய் பதேக்கா (1885-1939), “குருட்டு மனப்பாடக் கல்வி”-யிலிருந்து விலகிய, குழந்தைகள் தற்சார்பும், நம்பிக்கையும், தெளிவும் கொண்டு உற்சாகத்துடன் பயிலும் ஒரு நடைமுறைக் கல்விச் செயல்திட்டத்தை கனவு காண்கிறார். 1916-ம் ஆண்டு குஜராத்தின் பவநகரில் செயல்பட்ட தக்ஷிணாமூர்த்தி பாலமந்திரின் நான்காம் வகுப்பில் தன் கனவின் கல்விப் பரிசோதனைகளை மேற்கொள்கிறார்.***கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை என்னுடன் படித்த நண்பன் ராஜ் இன்று பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உயர் அதிகாரியாக இருக்கிறான். படிக்கும் காலத்திலேயே தனித்துவமான, வித்தியாசமான, ப்ராக்டிகலான கோட்பாடுகள் கொண்டவன். காதல் திருமணம் செய்துகொண்டான். சௌமி, கவின் என்று அழகான இரு குழந்தைகள். இருவரையும் ஆரம்பத்திலிருந்தே போட்டிக் கல்வி முறையில் சேர்க்கவில்லை அவன். “ஓபன் சிலபஸ்”-ல்தான் படித்தார்கள். பன்முகத் திறன் கொண்டவர்களாய் வளர்ந்தார்கள். சௌமி +2 முடித்து இன்று வி.ஐ.டி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். அசாத்திய துணிச்சலும், தெளிவும் கொண்ட ராஜுவின் மேல் எனக்கு எப்போதும் ஆச்சர்யம் உண்டு.ஜிஜுபாய் பதேக்காவின் கனவு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்தபின்னும், இன்றும் உயிர்ப்பின் பசுமையுள்ளது. அதன் ஆன்மா இக்காலகட்டத்திலும் அவசியம் உணரப்பட வேண்டியதும், முக்கியத்துவமானதும் ஆகும்.வெங்கி“பகல் கனவு” – ஜிஜுபாய் பதேக்காகுஜராத்தி மூலம்: Divaswapna 1932தமிழில்: சங்கரராஜுலுநேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2023 10:31

இந்து மரபு – இருநூல்கள்- கடிதம்

[image error]

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க

இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள்- மின்னூல் வாங்க

இந்து மெய்மை மின்னூல் வாங்க

இந்து மெய்மை வாங்க

பேரன்புக்குரிய ஜெ,

இந்து மெய்மை

இந்து மதம் பற்றிய நுணுக்கமான புரிதல் இக்கட்டுரைகள் வாயிலாக அடைய முடிகின்றது. பொதுவாகவே ஒன்றை நாம் கொண்டாடும் போதும் எதிர்க்கும் போதும் முதலில் ஒன்றை பற்றிய நுணுக்கமான புரிதல் வேண்டும். இக்கட்டுரைகள் பல வகையான நுணுக்கமான கேள்விகளை முன் வைக்கின்றது. குறிப்பாக இந்து மதம் இந்து வழிபாடு சமகால அரசியலில் இந்துவின் இடம் இந்து மரபு தொடங்கிய இடம் அதன் தொடர்ச்சி சந்தித்த சந்திக்கின்ற சவால்கள் என எண்ணற்ற விவாதங்கள் அதற்குரிய தெளிவான பதில்கள் என நீள்கிறது. 

முதலில் இந்து மதம் என்பது ஒரு அமைப்பல்ல அது ஒரு ஞானமரபு என்பதை ஜெ முன்வைக்கும் இடம் சிறப்பானதொரு ஆராய்ச்சியினை வெளிப்படுத்துகிறது.

மேலும் மதம் சார்ந்த அரசியல் குறிப்பாக தமிழகத்தில் எப்படி நடந்து கொண்டிருக்கின்றது என்பது குறித்த விளக்கங்களும். அனைத்தையும் தாண்டி ஒரு தனி மனிதன் அவன் மதம் சார்ந்த மரபுகளை பற்றிய ஆய்வை மேற்கொள்ளாமல் பொதுவான கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொண்டு எதிர்வினை ஆற்றுவது எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஒரு விடயத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு சிந்தனையையும் வெளிப்படுத்துவதற்கு முன்பாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய செயல் என்றால் அது அச்செயலின் உண்மைத் தன்மையை ஆழமாகச் சென்று கண்டறிவது ஆகும்.

இந்திய மரபு மற்றும் இந்து ஞான மரபு இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், மதத்திற்கும் மரபிற்கும் உள்ள வேறுபாடுகள் தரிசனங்கள், அவற்றின் தொடக்கம் என பல தகவல்களை ஆழமாக ஆராய்ந்து ஜெ இப்படைப்பில் அளித்துள்ளார்.

வேதங்கள், தரிசனங்கள், மதங்கள், தத்துவங்கள் இவற்றை பற்றிய அடிப்படைகளை சாதரணமாக புரிந்து அறிந்துகொள்வது என்பது அறிய காரியம். 

இன்றைய சூழலில் ஒரு குழந்தைக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் மேலோட்டமாக எதையும் சொல்லி நகர்ந்து விட முடியாது. ஏனென்றால் இக்கால குழந்தைகள் கேள்வி ஞானம் அதிகம் கொண்டவர்களாகவே கருத்தரிக்கிறார்கள். 

முதலில் இன்று நடக்கும் மத அரசியல் சூழலில் ஒருவர் ஒரு மதத்தை பற்றி முழுமையாக வெளிப்படையாக அறிந்து கொள்வதே சிரமம் தான். அதையும் தாண்டி ஒரு மரபினை தெரிந்து கொள்ள பயணிக்கும் போது அதற்கு தேவையான சரியான தரவுகள் கிடைக்க வேண்டும் என்பது இரண்டாவது தடை.

சரி, அனைத்து தடைகளையும் கடந்து வரும் ஒருவனுக்கு மரபு என்றால் என்ன, தத்துவம் என்றால் என்ன, மதங்கள் என்றால் என்ன, அது எங்கு தொடங்கியது, இப்போது எப்படி அதனை அறிந்து கொள்வது, எப்படி அது வகைப்படுத்தப்படுகிறது, எல்லாவற்றையும் தாண்டி எப்படி தத்துவத்தை பற்றிய அடிப்படைகளை கற்பது எனும் வினா எழும் பட்சத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ஒரு சிறந்த பரிந்துரையாக அமையும்.

ஒரு வாசிப்பில் முழுவதுமாக அறிந்து அனுபவித்து விட முடியாத, கல்லாதது உலகளவு என்பதை உணர்த்தியது. துறை சார்ந்து இயங்குவதற்கும் அறிவு சார்ந்த மேம்படுதலுக்கும் மேலும் தர்க ரீதியாக ஒரு செயலை எதிர்கொள்வதற்கும் அகதிறப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி கலந்த பேரன்புடன்

இரா.மகேஷ் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2023 10:31

February 23, 2023

நற்றுணை கலந்துரையாடல் கூட்டம், சிறை வாழ்க்கைகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

பிப்ரவரி மாத நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வ தமிழின் தலைசிறந்த சிறை இலக்கியங்களான 

சுவருக்குள் சித்திரங்கள்

கம்பிக்குள் வெளிச்சங்கள்” 

ஆகிய புத்தகங்களை முன்வைத்து நிகழவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேரடி அமர்வாக சென்னை கவிக்கோ அரங்கத்தில் நிகழும்

இதில் கலந்துகொண்டு உரையாற்றுபவர்கள் :-

கவிஞர் இசை

எழுத்தாளர் கவின்மலர்

கவிஞர் லிபி ஆரண்யா

கவிஞர் சாம்ராஜ்

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்

கலந்துரையாடல் மற்றும் ஏற்புரை :-

தோழர் தியாகு

நாள்:- 25-02-2023 சனிக்கிழமை

நேரம் :- மாலை 05:30 முதல் 08:30 வரை

இடம்:- கவிக்கோ அரங்கம் சென்னை

நண்பர்கள் அனைவரையும்அன்புடன் அழைக்கிறோம்

அன்புடன்,

நற்றுணை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:36

எழுகதிர் நிலம் 5

பிப்ரவரி 15 ஆம் தேதி தவாங் நகரில் ஒரு ‘ஹோம் ஸ்டே’ இடத்தில் தூங்கி எழுந்தோம். அங்கே இருட்டிய பின்னர் வந்து சேர்ந்தமையால் அறையின் தரம் பற்றி பெரியதாக கருத்தில் கொள்ளவில்லை. காலையில் எழுந்ததும் ‘பனிமலை தெரிகிறது, பனிமலை’ என ஒரே கூக்குரல். இளவெயிலில் தொலைவில் பனிமலை தெரிந்தது. அது நாங்கள் செல்லப்போகும் பும்லா பாஸ் என்னும் மலை.

எங்கள் ஸைலோ வண்டி மீண்டும் பழுது. இன்னொரு காரை ஏற்பாடு செய்துகொண்டோம். அதை ஓட்டியவர் லக்கி என பெயர் கொண்ட மோன்பா இளைஞர். டென்சின் என தொடங்கும் அசல் பெயர். இன்றைய தலாய்லாமாவின் இயற்பெயரிலும் இதேபோல டென்சின் உண்டு என நான் அவரிடம் சொல்ல மகிழ்ந்து சிரித்தார்.

வெள்ளிப்பனிமலை மேல் ஏறலானோம். உலாவ தோதில்லை, கால்கள் உறைந்துவிட்டிருந்தன. காரில் உலவினாலும் கணக்கில் சேர்த்திதான். பனியின் நிறம் மாறிக்கொண்டிருந்தது. இப்போது பனி அடர்வெண்மை, ஒளிபுகும் படிகம், கருங்கல்லின் கடுமை. கண்கூசும் வைரப்பரப்பு ஒன்றுக்குள் சென்றுவிட்டதுபோல.

உண்மையில் நல்ல வெயில் அடித்தது. ஆனால் அந்த வெயில் எங்கள் நான்கடுக்கு ஆடைக்குமேல் தொலைவில் எங்கோ விழுந்துகொண்டிருந்தது. வெயில் கண்கலங்கச் செய்தது. ஏற்கனவே பனி கலங்கச் செய்த கண்கள். அனைவர் மூக்கும் காரட், தக்காளி போல் இருந்தன. 

வழியெங்கும் ராணுவ வண்டிகள். சீன எல்லை பும்லா பாஸ் கணவாய்க்கு அப்பால் உள்ளது. அருணாசலப்பிரதேசம் அண்மைக்காலம் வரை முழுக்கமுழுக்க ராணுவத்தால் மட்டுமே ஆளப்பட்ட நிலம். ஆள்வதும் ஆளப்படுவதும் ராணுவம். மக்கள் அனேகமாக இல்லை. அந்த வழி பண்டைக்காலத்தில் சீனாவுடன் (அல்லது சீனப்பகுதியான திபெத்துடன்) அருணாச்சலப்பிரதேச மக்கள் தொடர்பு கொண்டுவந்த வணிகப்பாதை. கோடையில் மட்டும் கழுதைகள் செல்லும். அதாவது இரண்டு மாதம். எஞ்சிய காலம் முழுக்க பனியமைதி.

பலர் அறிந்திராத ஒன்றுண்டு. திபெத் என்பது ஏதோ இமையமலைமேல் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு நிலம் அல்ல. திபெத் ஒருகாலகட்டத்தின் பேரரசு. அப்போது திபெத் ஆட்சியில் இருந்த நிலத்தின் அளவை நோக்கினால் மொத்த இந்தியாவை விட பெரியது. அதன் எழுபது விழுக்காடு இன்று சீனாவுடன் உள்ளது. பூடான், அருணாசலப்பிரதேசம், சிக்கிம், லடாக், ஸ்பிடி சமவெளி ஆகியவையும் அடங்கியது பழைய திபெத். 

சீனா மொத்த திபெத்தும் தன்னுடையதென நினைக்கிறது. இந்த உச்சிப்பனிமலையை அது குறிவைப்பது இங்குள்ள அளவில்லாத கனிமவளத்தின்பொருட்டு. இந்தியா இங்கே இன்னமும் கனியகழ்வை தொடங்கவில்லை. இன்று இந்நிலத்தை இந்தியப்பெருநிலத்துடன் வணிகம் பண்பாடு ஆகியவற்றால் இணைப்பதையே நாம் செய்துவருகிறோம். அவ்விணைப்பு அண்மையில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்பதை அருணாச்சலப்பிரதேசம் செல்லும் எவரும் காணமுடியும்

1962 செப்டெம்பர் 8 ல் சீனா போரைத்  தொடங்கும் வரை இப்பகுதியைப் பற்றிய எந்த புரிதலும் இந்திய அரசிடம் இருக்கவில்லை. இங்கே முறையான ராணுவநிலையங்கள் இருக்கவில்லை. பிரிட்டிஷார் உருவாக்கிய ராணுவநிலைகள் மட்டும் பெயரளவுக்கு அப்படியே நீடித்தன. அங்கே பழைய முதல் உலகப்போர்க்கால ரைஃபிள்களுடன் பழைய பிரிட்டிஷ் ராணுவப்பயிற்சி பெற்ற வீரர்கள் காவலிருந்தனர்.

அருணாசலப்பிரதேசத்தில் கண்ணுக்குப்படும் எல்லா ராணுவ வீரர்களும் இன்று இளைஞர்களாகவே இருந்தார்கள். ஓரிருவர் தமிழர்கள். பார்த்ததுமே தெரிந்தது. ஒருவர் வேலூர், இன்னொருவர் சங்கரன்கோயில். கொதிக்கும் சங்கரன்கோயிலை இந்தப் பனிவெளியில் இருந்து நினைத்துக் கொள்வாரா? இன்று தங்குமிடங்கள் வசதியானவை.பனியாடைகளும் உகந்தவை. அவருடைய முன்னோர் இங்கே யாக்குகளைப்போல பனியில் வாழ்ந்திருக்கிறார்கள். தல்வி எழுதும் குறிப்பில் கால்களில் புல்லை சுருட்டி பெரிய பந்து போல கட்டிக்கொண்டு பணியாற்றிய ராணுவ வீரர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

ஆனால் இன்றும்கூட பிற பகுதிகளுடன் ஒப்பிட அருணாச்சலப்பிரதேசத்தின் ராணுவ மையங்கள் எளிமையான கட்டிடங்களே. பெரிய வளைப்புகள் இல்லை. உயர்ந்த காவல்மாடங்களுமில்லை. அங்கே கட்டிடங்களை எழுப்புவது இன்னமும்கூட செலவேறிய, கடுமையான ஒரு செயலாகவே இருக்கிறது.

இன்று அருணாச்சலப்பிரதேசத்தின் மலையடுக்குகள் முழுக்க அக்காலகட்டத்தின் ‘பங்கர்’ என்னும் கல்கட்டுமானங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன. மலையில் இருந்து கற்களைப் பொறுக்கி, சிமிண்ட் இல்லாமல் அடுக்கி, கட்டப்பட்ட நான்கடி உயரமான எட்டடிக்கு எட்டடி கட்டுமானங்கள் அவை. தரையோடு தரையாக அமைந்து, பனிமூடி கிடக்கின்றன. அவற்றில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதே திகைப்பூட்டும் கற்பனை.

அன்று உணவு கழுதைப்பாதை வழியாக வரவேண்டும். எரிபொருளாக பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். ராணுவ வாகனங்கள் முதன்மையாக கழுதைகள். நடைமுறையில் உணவு அங்கேயே வேட்டையாடி பெறப்பட்டது அங்கே நியமிக்கப்படும் படைவீரர்கள் பலசமயம் ஆண்டுக்கணக்கில் மறக்கப்பட்டு அங்கேயே வாழநேரிட்டது. சாலைகள் துண்டிக்கப்பட்டால் ஓராண்டுகூட தொடர்பில்லாமல் ஆகிவிடும் நிலை இருந்தது. இந்தியாவின் சீனப்போர் பற்றிய நூல்களில் இவற்றை வாசிக்கலாம்.

நேரு உலகம் நல்லெண்ணத்தால் இயங்குவது என நம்பிய இலட்சியவாதி. சீன கம்யூனிஸ்டு அரசு பற்றி அவருக்கிருந்தது கற்பனாவாதப் புரிதல். பொதுவாகவே அவருக்கு கம்யூனிசம் பற்றிய மெல்லிய பரவசம் இருந்தது. அதை சோஷலிசம் என சொல்லிக்கொண்டார். சீனாவுக்கு ஆதரவாக அவர் ஐநா சபையில் குரலெழுப்பினார். ஆகவே சீனா இந்தியாவின் நண்பன் என நம்பினார். 1954ல் பஞ்சசீலக் கொள்கையில் சீனா கையெழுத்திட்டது. இந்தி-சீனி பாய்பாய் முழக்கம் அன்று ஓங்கியிருந்தது. இந்திய இடதுசாரிகளுடன் ஒரு தேனிலவில் இருந்தார்.

ஆனால் சீனா அப்போதே இந்தியாவை தாக்கும் கனவில் இருந்தது. அதற்கு எதிர்காலத் திட்டங்கள் இருந்தன. உண்மையில் 1950 முதலே சீனா திபெத்திற்குள் ஊடுருவத் தொடங்கிவிட்டிருந்தது. திபெத்தின் எல்லையில் பிரிட்டிஷார் உருவாக்கியிருந்த ராணுவக் காவல்நிலைகளை நேரு சீனா கேட்டுக்கொண்டதன்பேரில் நீக்கினார். அதைப் பயன்படுத்தி சீனா மக்மோகன் எல்லைக்கோட்டை மீறி திபெத்துக்குள் நுழைந்தது. அதை நேரு எதிர்க்கவில்லை. அது நட்புநாடுகளுக்குள் பேசிமுடிக்கவேண்டிய சிறு பிரச்சினை என நினைத்தார்.

1959ல் திபெத்தை சீனா கைப்பற்றியது. தலாய் லாமா இந்தியாவுக்கு தப்பி வந்தார். அப்போதுகூட இந்தியா கடும் எதிர்ப்பை அளிக்கவில்லை. சீனா இந்தியாமேல் படைகொண்டுவருமென நினைக்கவுமில்லை. எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரதேசமான திபெத் சீனாவின் ஆதிக்கத்தின்கீழ் சென்றது. இன்றுவரை சுதந்திரப்போராட்டம் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது

திபெத்தை இந்தியா கைவிட நேர்ந்தது. அது ஒரு மாபெரும் வரலாற்றுப்பிழை என்றே நான் நினைக்கிறேன் – நேருவை வழிபடுபவன் என்றபோதிலும். ராணுவத்தால் நாடுகள் அமைந்திருக்கும் வரை ராணுவமே எல்லைப்பிரச்சினைக்கு தீர்வு. பேருரைகள் அல்ல. இலட்சியவாதமும் அல்ல.

நான் இளமையில் படித்த பிரிகேடியர் ஜான் தல்வி எழுதிய  Himalayan Blunder என்னும் நூல் உட்பட பல சீனப்போர் நூல்களில் எல்லையில் சீனா அத்துமீறி பல மாதங்களாகியும் செய்தி டெல்லியை வந்தடையவில்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. எம்.ஓ.மத்தாய் எழுதிய பெரும்பாலும் நேரு துதிகளே கொண்ட நேரு யுக நினைவுகள் ( Reminiscences of the Nehru Age) நூலில்கூட படையெடுப்புச் செய்தி பல மாதங்கள் கழித்தே படேலுக்கு தெரியவந்ததாகவும், அதை அவர் சொல்லியே தலைமைத் தளபதி பிரான்நாத் தாப்பர், ராணுவ அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் ஆகியோரும் பின்னர் நேருவும் அறிந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

தாப்பர், வடகிழக்குக்குப் பொறுப்பாக இருந்த லெப்டினெண்ட் ஜெனரல் பிரிஜ்மோகன் கௌல் ஆகியோர் நேரு குடும்பத்திற்கு அணுக்கமானவர். கிருஷ்ணமேனன் நேருவின் நண்பர். போரின் தோல்விக்குப்பின் அவர்கள் பதவி விலகினர். நேருவின் புகழ் அதன்பின் இறங்குமுகமாகியது. இரண்டே ஆண்டுகளில் நேரு மறைந்தது அவருடைய கௌரவத்தை  காப்பாற்றியது என்றே சொல்லவேண்டும்.

சீனா போரில் அக்காய்சின் பகுதி உட்பட11,000 சதுர கிலோமீட்டர் பகுதியைக் கைப்பற்றியது. இன்று அப்பகுதியில் பெரும் சாலைகள் அமைத்துள்ளது. பிரம்மபுத்ரா நதியின் நீரை தடுத்து அணைகளை கட்டியுள்ளது. இந்தியா அந்தப் போரில் அடைந்த தோல்வியின் விளைவுகளை இன்றுவரை சந்தித்துக்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக பிரம்மபுத்ராநீர் குறைந்து வருவதனால் எதிர்காலத்தில் அஸாம் நீர்ப்ப்பற்றாக்குறையைக்கூட சந்திக்க நேரலாம்.

சீனா அப்போரில் அருணாச்சலப்பிரதேசத்தை கைப்பற்றாமல் ஆனது இந்தியப்படைகளின் கடுமையான எதிர்ப்பினாலும், ருஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக வந்தமையாலும்தான். இரண்டாவது காரணத்தை முதன்மைப்படுத்தி முதலாவது காரணத்தை ஏளனம் செய்து இந்தியாவின் மேட்டிமைவாத இதழாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அன்றைய இந்திய ராணுவம் பிரிட்டிஷாரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டது, உலகப்போர்களைக் கண்டது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அன்றைய சீன ராணுவம் ஒப்புநோக்க அந்த அளவுக்கு பயிற்சியோ அனுபவமோ கொண்டது அல்ல.

இன்று சீனா அருணாசலப்பிரதேசத்தையும் லடாக்கையும் கோருகிறது. 1914 ல் போடப்பட்ட மக்மோகன் எல்லைக்கோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் அன்றைய சீன அரசுடன் போடப்பட்டது, அது தங்களை கட்டுப்படுத்தாது என்கிறது. இன்று இருநாடுகளும் அணுவாயுதம் கொண்டவை, பெரும் ராணுவம் கொண்டவை. இனி ஒருபோதும் எல்லைக்கோட்டை மாற்றியமைக்க முடியாது. இருந்தும் இந்த பூசல் நீடிப்பதற்கு ஒன்றே காரணம். இப்பூசலை பயன்படுத்தி சீனா இந்தியாமேல் பலவகையான வணிக நிர்ப்பந்தங்களை அளிக்கிறது.

எல்லைப்புற மாநிலங்களில் பயணம் செய்பவர்கள் தெளிவுறக் காணும் ஒன்றுண்டு. சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரை, அதாவது 2000 த்தில் நான் செல்லும்போது வரை எல்லைப்புற மாநிலங்கள் கைவிடப்பட்டு, சாலை வசதிகளில்லாமல், ராணுவப்பாதைகள் மட்டுமே கொண்டதாகவே இருந்தன. இன்று அப்படி அல்ல. எல்லைப்புறத்தில் பெரும் சாலைகள் அமைந்துவிட்டன. மேலும் மேலும் பெரும் சாலைகள் அமைகின்றன. மிக வலுவான ராணுவநிலைகள் இன்றுள்ளன.

பும்லா பாஸ் செல்லும் வழியில் பச்சைநிறமான ராணுவ லாரிகள், டிரக்குகள், ஜீப்கள் சென்றுகொண்டே இருந்தன. வண்டிகளின் சக்கரங்களில் சங்கிலி கட்டிக்கொள்ளவேண்டும். இல்லையேல் சக்கரங்கள் பனியில் சுழல ஆரம்பிக்கும். எங்கள் ஓட்டுநர் சங்கிலி ஏதும் கட்டிக்கொள்ளவில்லை.

அதன் விளைவு தெரிந்தது. பனியில் எங்கள் வண்டி சிக்கிக்கொண்டது. இறங்கி அதை தள்ளினோம். அப்படி எத்தனை ஊர்களில் எத்தனை கார்களை தள்ளியிருக்கிறோம் என எண்ணிக்கொண்டோம். கார்களை தள்ளுவதில் ஒரு வீரவரலாறே உள்ளது. அதில் உச்சம் அக்காமலை என்னும் இடத்திற்கான பாதையில் ஒரு மட்டடோர் வேனை முழுநாளும், ஆம் காலைமுதல் மாலைவரை, தள்ளி நகர்த்தமுடியாமல் கைவிட்டு, நடந்தே அக்காமலை வழியாக பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்து, நள்ளிரவில் பாதையோரம் படுத்து உறங்கிய சாகசம். 

 ‘நாங்கள்லாம் கப்பலையே இறங்கி தள்ளினவங்க’ என்று கிருஷ்ணன் பெருமிதம் கொண்டார். அது பத்துசத உண்மை. முன்பு ,2009ல் நாங்கள் கோதாவரியில் பயணம் செய்தகாலத்தில் படகை அங்கே போ அங்கே போ என தூண்டி, ஓட்டுநரின் விருப்பத்தை புல்லென மதித்து அங்கே செல்லவைத்து, படகை மணலில் சிக்கவைத்தோம். நாங்களே இறங்கி தள்ளி அதை மீட்டோம். கப்பல் அல்லதான். ஆனால் மூன்றடுக்கு படகு ஒரு சிறு கட்டிடம் அளவுக்கு பெரியது

பனியில் காரை தள்ளுவதன் தொழில்நுட்பச் சிக்கல்களை கற்றுக்கொண்டேன். கார்ச்சக்கரம் பனியை அள்ளி என்மேல் பொழிந்தது. என் சப்பாத்துகளுக்குள் பனி புகுந்து ‘என்னுள்ளில் ஏதோ சில்லென்றது’ அது உருக உருக கால்களில் ஒரு வகை மரப்பு. ஆனால் ஆச்சரியம், அந்தப் பனியை நான் என் உடல் வெம்மையால் சூடாக்கி ஆவியாக்கி உலரவைத்துவிட்டேன். (ஆன்மவெம்மையால் என்றும் சொல்லலாம்) 

பும்லா பாஸ் இன்னொரு மலைக்கணவாய் உச்சி. அங்கே வழக்கம்போல ஒரு துணைராணுவப்படையின் தேநீர் விடுதி. அங்கே வந்த பிரிகேடியர்களுடனான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். சூப், டீ ஆகியவை கொதிக்கக் கொதிக்கக் கிடைத்தன. கழிப்பறைகள் இருந்தன. 

கூடத்தில் கரிபோட்டு எரியவிட்ட அடுப்புக்கணப்பின் அருகே அமர்ந்து டீ சாப்பிட்டோம். ஏதோ சைபீரியப் பனிநிலத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணிக்கொண்டோம். 1981ல் ல் நான் இந்தியா சீனா போர் பற்றி தல்வி எழுதிய ஹிமாலயன் பிளண்டர் நூலின் சுருக்கத்தை அன்றைய இதழ் ஒன்றில் மனக்கொந்தளிப்புடன்  வாசித்தபோது அதில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு இப்படி வந்தமர்ந்து டீ குடிப்பேன் என நினைத்திருப்பேனா?  

பும்லா பாஸ் கணாவாய்க்கு அப்பால் சீன எல்லை தெரியும். அதைப்பார்ப்பது ஒரு சுற்றுலாக்கவற்சியாக உள்ளது. பயணிகளை சிறு குழுக்களாகப் பிரித்து எண்கள் அளித்து அழைத்துச் செல்கிறார்கள். உரிய பனியாடைகளும், சப்பாத்துக்களும் அணிந்திருக்கவேண்டும். ஆரோக்கியமும் வேண்டும். ஆக்ஸிஜன் குறைவென்பதனால் நெஞ்சை காற்று அழுத்திப்பிசையும். முழங்கால்களில் கடும் பிடிப்பு உண்டு. மிகத்தொலைவில் கண்கூசும் வெண்பனி விளிம்பில் எதையோ காட்டி அதோ சீனக்கொடி என்பார்கள். வைணவர்கள் கருடன் பார்ப்பதுபோலத்தான். நம்பியாகவேண்டும். 

சாங்ஸ்டர் ஏரி ( Sangestar Tso) நம்மூர் மொக்கைகளால் இன்று மாதுரி ஏரி என அழைக்கப்படுகிறது. அங்கே மாதுரி தீட்சித் ஒரு சினிமாப்பாட்டுக்கு ஆடினாராம். கடல்மட்டத்தில் இருந்து12,165 அடி உயரத்திலுள்ள இந்த ஏரி பெரும்பாலும் உறைந்தே இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியாக நீர் வரத்தும் போக்கும் இருப்பதனால் முழுக்க உறைவதுமில்லை. வெண்பனிக்குள் கரியநீரின் தீற்றல்கள். அங்கே விதவிதமான பனிநாரைகளின் கூச்சல்

பனியில் நின்றும் அமர்ந்தும் படமெடுத்துக் கொண்டோம். ஏரிக்கரையோரமாக நடந்துசெல்வதற்கான கைப்பிடி வேலி. அது எதற்காக என்று நடந்தபோது தெரிந்தது. மூச்சுவாங்கும்போது பிடித்துக்கொண்டு நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். பனியின் வெளி ஒருவகையாக கண்ணுக்குப் பழகி அங்கே எவராவது வண்ண ஆடையுடன் தெரிந்தால் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது.

பனியில் உறைந்த ஏரிகளை கண்கூச கண்கூச பார்த்தபடி திரும்பி வந்தோம். எங்கள் பயணத்தின் உச்ச எல்லை வரைச் சென்றுவிட்டோம். இனி திரும்பும் வழிக்காட்சிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிம் அருகே ஸீரோ பாயிண்ட் என்னும் இடத்தில் இந்திய சீன எல்லையை கண்டோம். அதன்பின் லடாக்கில்  பாங்காங் ஏரியில் மீண்டும் சீன எல்லையை கண்டோம். இது மூன்றாவது.

சாங்ஸ்டர் கொண்டான் என நானே என்னை பாராட்டிக்கொண்டேன். இந்த ஏரிக்கு வந்து நின்று செய்வதற்கொன்றே உள்ளது. விழிவிரிய பார்த்து நிற்பது. அதை விதவிதமாக நம் உள்ளம் கற்பனைசெய்துகொள்வதை அனுமதிப்பது. விழுந்துடைந்த மாபெரும் நிலைக்கண்ணாடி. சரிந்து விழுந்து மடிந்து பரந்த நீலப்பட்டாடை….பார்க்கப் பார்க்க பார்க்க மட்டுமே செய்கிறோம் என்னும் தவிப்பு. இத்தகைய காட்சிகளின்போது அதில் பாய்ந்து திளைத்து துழாவி எழுந்தால் அதை வென்று அடைந்த நிறைவு உருவாகுமென தோன்றும், ஆனால் அதுவும் ஒரு மாயைதான்.

(மேலும்) 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:35

ஆத்மாநாம்

ஆத்மாநாம் மறைந்தபின் இருபதாண்டுக்காலம் பிரம்மராஜன் அவரை தமிழில் நிலைநிறுத்த பங்களிப்பாற்றியிருக்கிறார். கவிஞர்களுக்கிடையே அத்தகைய நட்பு உலகமெங்கும் காணப்படுவதும்தான். ஆனால் ஆத்மாநாம் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. அவருடைய பெற்றோர் பற்றிய செய்திகளை தேடிச் சலித்துவிட்டோம். ஆத்மாநாம் மறைவுக்குப்பின் எழுதப்பட்ட நினைவுக்குறிப்புகள் மிகப்பெரும்பாலும் மிகமேலோட்டமானவை. பொத்தாம்பொதுவான சில வாசகங்கள். அது இயல்பே. புனைவெழுத்தாளன் அன்றி எவரும் எதையும் புறவயமாகக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஸ்டெல்லாபுரூஸ் எழுதிய ஒரே ஒரு நினைவுக்கட்டுரை மட்டுமே அவ்வகையில் முக்கியமானது

ஆத்மாநாம் ஆத்மாநாம் ஆத்மாநாம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:34

காமம், உணவு, யோகம்- விளக்கம்

காமம், உணவு, யோகம்-3 காமம், உணவு, யோகம்-2 காமம், உணவு, யோகம் 1

அன்புள்ள ஜெ.

நண்பர் பாலசுப்ரமணியன் அவர்கள் கேட்ட கேள்வியும் அதையொட்டிய உங்களுடைய விரிவான பதிலும் முழுமையாக இருந்தது, 

யோகமரபில் இது சார்ந்து மேலும் சில புரிதல்கள் இருப்பதால் அவற்றையும் இணைத்து சொல்லிவிடலாம் என தோன்றியது. 

இந்த பதிலுக்காக மற்றுமொரு காரணம், நமது யோக முகாம்களில் கேட்கப்படும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது  என்பதும் தான்.

உலகம் முழுவதும் இன்று எட்டு லட்சம் யோக ஆசிரியர்களும், இரண்டு லட்சம் யோக பள்ளிகள், நிறுவனங்களும் உள்ளன.  ஆகவே இயல்பாக இரண்டு முக்கியமான கிளைகளாக யோகம் இன்று பிரிந்து பரவியிருக்கிறது.

முதலில் NON TRADITIONAL YOGA எனப்படும் ஒரு குறிப்பிட்ட உடல் அல்லது மன அவஸ்தையை போக்க கற்றுக்கொள்ளப்படும் பாடத்திட்டம்.   முதுகுவலி இருக்கும் ஒருவர் அல்லது மனக்கொந்தளிப்பு கொண்ட ஒருவர் முதலில் தனக்கு அப்படி ஒரு அவஸ்தை உள்ளது என்பதை கண்டறிவதும், பின்னர் அருகிலுள்ள ஒரு யோக மையத்தில் சென்று அதற்கான பயிற்சிகளை கற்று கொண்டு சிறிது நாட்கள் செய்து பார்ப்பதும். அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலனை அடைவதும், தான் இதன் முதன்மை நோக்கம்.

இன்று உலக அளவில் யோக பயிற்சி செய்பவர்களில் எண்பது விழுக்காடு இந்த முறையை சார்ந்தவர்கள் தான்.  இதன் இலகுவான அணுகுமுறையாலும் எங்கும் எளிதில் கிடைப்பதாலும், இது வெகுஜனத்திற்கான ஒன்றாக மாறியிருக்கிறது. 

இதிலிருக்கும் சவாலே,  இதன் முழுமையற்ற தன்மை தான். உதாரணமாக முதுகுவலி உள்ள ஒருவர் இணையத்தில் கூட ஒரு யோக ஆசிரியரிடம் அதற்கான பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும். அவருடைய முதுகுவலிக்கு உண்மையில் காரணம் அவரது அழுத்தப்பட்ட உணர்ச்சிகளாக இருக்கலாம், அதை சரியாக நிர்வகிக்காமல் வெறுமனே ஆசன பயிற்சிகள் செய்வது தலைவலியை நீக்க மருந்து கடையில் வாங்கி போட்டுக்கொள்ளும் மாத்திரைக்கு சமம்.

ஆக, ஒரு நோய்க்கூற்றை அல்லது அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளாமல் செய்து பார்க்கப்படும் பயிற்சிகளாக இவை எஞ்சுகின்றன. அதிர்ஷ்டவசமாக இவ்வகை பயிற்சிகள் பலனளித்து விடுவதால். மேலும் மேலுமென இதற்கு வரவேற்பு அதிகரிக்கிறது. 

அடுத்ததாக வருகிறது மரபார்ந்த யோகம். TRADITINAL YOGA. இது மரபானது என்கிற காரணத்தாலேயே தனித்து இயங்காது, மேலும் சில மரபுகளை உள்ளிழுத்தும், மாற்று அறிவியலின் நிருபிக்கப்பட்ட நற்பண்புகளை தன் பாடதிட்டத்துடன் இணைத்தும், ஒரு மாபெரும் பயிற்சி திட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது. 

இதன் அடிப்படை என்பது ஆயுர்வேதத்தின் உடலியலும், தாந்த்ரீக மரபின் விஞ்ஞானமும், பக்தி மரபின் நம்பிக்கையும், ஸாங்கியத்தின் தத்துவமும் கொண்ட ஒரு முழுமையான பார்வையுடையது. 

உதாரணமாக தூக்கமின்மை எனும் பிரச்னையுடன் ஒருவர் மரபார்ந்த ஆயுர்வேத வைத்தியரை காணச்சென்றால், அந்த வைத்தியர், வந்தவரின் குல, நலன்கள், அன்றாடங்கள்,  மன அமைப்புகள் என சிலவற்றை விசாரித்துவிட்டு, வயிற்றை சுத்திகரிக்கக்கூடிய ஒரு அரிஷ்டத்தையோ, சூரணத்தையோ கொடுப்பார். நமக்கு இதில் மருத்துவத்தின் மேல் சற்று சந்தேகம் வரலாம். ஆனால் ஆயுர்வேதம் ஒரு மனிதனின் நோய் உருவாகும் காரணிகளில் முதன்மையானது என வயிற்றை தான் சுட்டுகிறது. ஆகவே வயிற்றை முதலில் சுத்திகரித்து விட்டு பின்னர் மருத்துவம் தொடங்கும்.

மரபார்ந்த யோகமும் இவ்வகை நோக்கு கொண்டதே. அது மனிதனை மூன்று தோஷங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஷங்கள், இருபத்தைந்து குணங்கள் என ஒருமுழுமையான பார்வையை கொண்டு ஒரு பயிற்சியை அந்த முதுகுவலி நபருக்கு வழங்குகிறது. 

அந்த பயிற்சியில் குறைந்தது உடல், உடலியங்கியல், மனம் என்கிற மூன்று அடுக்குகளுக்காவது பயிற்சிகள் இருக்கும். ஒரு நாளில் அரைமணி நேரம் மட்டுமே பயிற்சிக்காக ஒதுக்கமுடியும் என்பவருக்கு கூட அந்த அரைமணி நேர பாட திட்டத்தில் இவை மூன்றும் இருக்கும். 

மேலே சொல்லப்பட்ட இருநூறு வகையான யோக அமைப்புகள் இருந்தாலும், உலகளவில் நான்கு யோக கல்வி நிலைகள் மட்டுமே,  முழுமையான கல்வியை மையமாக கொண்டு இயங்குகிறது.  

யோக பயிற்சிகளை தேர்ந்தெடுக்கக்கூடியவர்கள் முதலில் இந்த இரண்டு வகை பாடத்திட்டத்தில் தான் எதில் இருக்கிறார்? என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.அதன் பின்னர் தான் உணவு சார்ந்த தீவிர முடிவுகளுக்கு வரவே கூடும். 

இருபத்தியோரு யோக உபநிஷத்துகளும், முக்கியமான யோக நூல்களும் சாதகனுடயை பயிற்சிகள், செல்லவேண்டிய தூரங்கள், வரும் இடையூறுகள், அடையவேண்டிய சிறு சிறு இலக்குகள் என தெளிவாக கூறுகின்றன, அவற்றில் உணவு சார்ந்த கட்டுப்பாடு என்பது பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். 

பதினாறாம் நூற்றாண்டிற்கு பின்னர் தொகுக்கப்பட்ட நூல்களே இன்று யோகா குருமார்கள் அதிகமும் பயன்படுத்தும், சுட்டிக்காட்டும், நூல்களாக உள்ளது. அவற்றில் ஹட யோக பிரதீபிகை, சிவ சம்ஹிதை, கெஹரண்ட சம்ஹிதை, போன்ற நூல்கள் அதன் நூற்றுக்கணக்கான சூத்திரங்கள், சுலோகங்கள் வழியாக சாதகனை நோக்கி பேசுகிறதே தவிர, ஆச்சாரங்களில் சுருங்கி விடவில்லை. 

ஹடயோக பிரதீபிகையில்  சாதகன் தனிமையில் சென்று சாதகம் செய்யவேண்டும், அவன் அமைத்துக்கொள்ள வேண்டிய குடில் எப்படி இருக்க வேண்டும், மனிதர்களோடு கலக்கக்கூடாது, போன்ற சில கட்டுப்பாடுகளை முன்வைக்கிறது, அதே நூல் ‘மித ஆஹாரம்‘ எனும் பகுதியில் உணவு பற்றிய கட்டுப்பாடுகளை அதிகம் விதிக்காமல், முக்கியமாக அசைவம் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற நேரடி கூறுகள் எதையும் முன்வைக்கவில்லை. இது போன்ற நூல்களிலேயே கூட, சாதகனை நோக்கி ஒரு குரல் தீவிரமாக, பேசுவதும், சாமானியனை நோக்கி ”படிப்படியாக வந்து சேர்” என மென்மையாக பேசுவதும் காணக்கிடைக்கிறது. 

ஆகவே நாம் அசைவம், காபி, போன்ற உணவு சார்ந்த சந்தேகங்களுக்கு, பழமையான நூல்களை சார்ந்திருக்கையில், தீவிர  சாதகனா? சாமானியனா? என்பதில் ஒரு தெளிவுக்கு வந்தபின் அவற்றின் துணையுடன் உணவு கட்டுப்பாடுகளை நமக்கு நாமே விதித்துக்கொள்ளலாம். நூல்களை அடுத்து நாம் குருமரபும், அதன் ஆசிரியர்களும் சொல்லும் சொல்லை செவிகொள்ளலாம். 

சுவாமி சிவானந்தர் {ரிஷிகேஷ்} கடந்த நூற்றாண்டில் உலக யோக மரபுக்கு அளித்த கொடை சாதாரணமானதல்ல. இன்று உலகின் எந்த மூலையில் மரபார்ந்த யோக கல்வி நிறுவனம் இருந்தாலும் அதன் ஆசிரியர் அல்லது அவரின் ஆசிரியர் சிவானந்த மரபில் வந்தவராகவே இருப்பார். சுவாமி சிவானந்தர் அவரது காலத்தில் எட்டு முக்கியமான சீடர்களை உருவாக்கி உலகம் முழுவதும் அனுப்புகிறார்,  இன்று நாம் கேள்விப்படும் சாதனை படைத்த குருமார்கள், சுவாமி  சித்தானந்தர், சின்மயானந்தா அமைப்பு, பீகார் யோக பள்ளியின் சத்யானந்தர், ப்ரம்மானந்தர், கிருஷ்ணானந்தர், கோவை integral yoga சுவாமி சச்சிதானந்தர்   என ‘சரஸ்வதி‘ மரபில் வந்தவர்கள் அனைவரும் சிவனந்தரின் சீடர்களே. நான் என்னை சிவானந்த மரபின் மாணவன் என்றே எங்கும் முன்வைப்பேன்.

சுவாமி சிவானந்தர் தஞ்சை மருத்துவ கல்லூரியில் நவீன மருத்துவம் படித்த, மருத்துவரும் ஆவார், அன்றைய மலேயாவில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்து, அதை விடுத்து முழுநேர துறவியாக மாறியவர். உணவு சார்ந்தும், ஆரோக்கியம் சார்ந்தும் நிறைய நூல்கள் எழுதியவர். எனினும் நாம் உணவு கட்டுப்பாட்டின் மூலம் சுய குற்றவுணர்வு கொள்ளுமளவுக்கு எங்கும் எழுதவில்லை. பண்ணிரண்டு வருடங்களாக இந்த குருநிலையில் கற்றவன் என்கிற அனுபவத்தில், உணவு சார்ந்த தீவிர நிலையை அங்கே வலியுறுத்துவதில்லை. 

ஒரு சுவாரசியமான சம்பவத்தை சுவாமி சச்சிதானந்தர் பதிவு செய்கிறார்.

சிவானந்தர் புகழின் உச்சியிலிருக்கிறார், அவரை கண்டு துறவறம் பூணவேண்டுமென  இளம் வயதில் ரிஷிகேசம் சென்று சந்திக்கிறார் சச்சிதானந்தர், இவருடைய வேட்டி சட்டை கோலத்தை பார்த்த சிவானந்தர் ”வாங்கோ வாங்கோ… மதராஸா?” என கேட்க இவருக்கு ஒரே உற்சாகம். அடிபணிகிறார். ”வாங்கோ காபி சாப்பிடலாம்” என சிவானந்தர் அழைக்க, வந்தவருக்கோ ஒரே அதிர்ச்சி, அதை சிவனந்தரிடம் வெளிப்படுத்துகிறார். ”நீங்கள் ஒரு மாபெரும் துறவி என நினைத்து உங்களிடம் துறவு பூண வந்தேன், நீங்கள் இவ்வளவு எளிமையாகவும், காபி அருந்திக்கொண்டும் இருக்கிறீர்களே?உங்களுடைய உணவு சார்ந்த நூல்களில் காபியை தவிர்ப்பது பற்றி எழுதியிருந்தீர்களே? என சிறு அதிர்ச்சியுடன் வினவ.

சிவானந்தர் வெடித்துச்சிரித்து ‘அதெல்லாம் அங்கே வாழக்கூடிய குடும்பஸ்தர்களுக்கு, நாம் துறவிகள் ஆனந்தமாக கொண்டாட்டமாக இருக்க பிறந்தவர்கள், ஆகவே  வாங்க காபி சாப்பிடலாம்‘ என முடிக்கிறார்.

அதன்பின் சச்சிதானந்தர் உலகம் முழுவதும் யோக கலையை அறிமுகம் செய்த முதல் தலைமுறை துறவிகள் பட்டியலில் வருகிறார்.

இப்படி நமது முன் உள்ள குருமார்கள், அசைவம், காபி, தேநீர் சார்ந்து அதிபயங்கர சித்திரங்களை ஏற்படுத்தவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் இன்று நமக்கிருக்கும் சவால், ஆசிரியருடனான தொடர்பின்மை தான், கூட்டமாக சென்று தியானமோ, யோகமோ கற்கிறோம். அதன் பின் நமக்கு ஏற்படும் அனுபவங்களை சொல்ல, மேம்படுத்த, வழிகாட்ட, தடுத்து நிறுத்த, முதற்கட்ட ஆசிரியர் குழுமம் என ஒன்று நமக்கு அமைவதில்லை. ஆகவே கட்டணம் கட்டி பயின்றபின் நமது அனுபவங்களை அதிகபட்சம் ‘கால்செண்டர்கள்‘ தான் கேட்கின்றன. அவற்றால் நம்மை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. 

ஆகவே நமக்கு கற்றுத்தரும் ஆசிரியரோடு குறைந்தபட்ச தொடர்பிலேனும் இல்லாத பட்சத்தில், உணவு, காமம், கட்டுப்பாடு போன்ற விஷயங்களில் மேலும் மேலும் குழப்பமே நிகழ்கிறது.

இறுதியாக, ஆரோக்கியம், நலம் சார்ந்த விஷயங்களில் ஆச்சாரத்தை போட்டுக்குழப்பிக்கொள்ள வேண்டாம், நல்ல ஆசிரியர்கள், வைத்தியர்கள் இதை திறம்பட கையாள்வதை கவனித்திருக்கிறேன். எனது உறவினர் தீவிர வைணவர், அவருடைய மகளுக்கு உடல்சோர்வு, மற்றும் தொடர்ந்து மெலிதல்  சார்ந்து அனைத்துவகை மருத்துவமும் பார்த்துவிட்டு இறுதியில்  ஆயுர்வேத மருத்துவத்தை எடுத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அதுவும் பலனளிக்காத நிலையில், வைத்தியர் மிகத்துல்லியமாக ”சற்று மாமிசத்தால்” சரி செய்யவேண்டிய குறைபாடு இது என சொல்ல. என் உறவினர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.  வைத்தியர் பெரிதாக வற்புறுத்தாமல், அதே வேளையில் மாற்று மருந்து என ‘அஜ மாம்ச ரசாயனம்’ எனும் ஒரு லேகியத்தை கொடுக்கிறார். மூன்று மாதத்தில் அந்த பெண் உடல் தேறுகிறார். வனப்பு கூடுகிறது. சோர்வு நீங்குகிறது. 

அந்த லேகியம் ஆட்டு இறைச்சியில் தயாரிக்கப்பட்டது என்பது அந்த பெண்ணின் அப்பாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அல்லது நன்றாகவே தெரிந்திருக்கலாம். 

ஆகவே அசைவம் உண்ணுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காக சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டாம்.

உங்கள் ஆசிரியரிடம் தொடர்பிலிருங்கள். ஒரு தொலைபேசி, ஒரு சொல் , ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாத ஆசிரியரிடம், எந்த நம்பிக்கையில் நாம் மேற்கொண்டு பயணிக்க முடியும்? 

ஆரம்ப கட்ட சாதகனுக்கு எல்லா வகையிலும் ஆசிரியரின் தொடர்பும், ஸ்பரிசமும் தேவையாக உள்ளது, அதன் பின் அவன் ஆசிரியரை மானசீகமாக ஸ்பரிசித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் நடந்து கடந்து சென்றுவிட முடியும்

அன்புடன் 

சௌந்தர்.G

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.