Jeyamohan's Blog, page 618
March 3, 2023
மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச்சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்தத் துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உண்டாக்கிக் காட்டியவர். அவர் உருவாக்கிய ‘கூட்டுறவு மருத்துவமனைகள்’ முன்னெடுப்பு இந்திய அளவில் முன்னுதாரணமானவை. நம் சமகாலத்தில் தோன்றிய முக்கியமானதொரு செயல்விசை மருத்துவர் ஜீவா. செயலூக்கியாக நிறைய இளையவர்களை அறம் நோக்கி வழிப்படுத்திய அவருடைய பெருவாழ்வு என்றுமே நம் வணக்கத்திற்குரியது.
மருத்துவர் ஜீவா அவர்கள் விட்டுச்சென்ற கனவுத்திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கு ஏதுவாக, நண்பர்களின் ஒருங்கிணைப்பில் ‘மருத்துவர் ஜீவா அறக்கட்டளை’ நிறுவப்பட்டது. இவ்வமைப்பின் செயல்நீட்சிகளில் ஒன்றாக, சமகாலத்தில் சமூகக் களமாற்றதிற்கும் சிந்தனைத் தெளிவிற்கும் காரணமாக அமையும் முன்னோடி ஆளுமை மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘பசுமை விருதுகள்’ அளித்து கெளரவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்தமுறை பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன.
2023ம் ஆண்டிற்கான பசுமை விருதுகள், நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் மற்றும் திருநங்கைகள் செயற்பாட்டாளர் சுதா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இலக்கிய ஆய்வாளரகத் தனது வாழ்வைத் துவங்கிய அ.கா.பெருமாள் அவர்கள், இன்று தமிழ்ச்சூழலின் நாட்டார்வழக்காற்றியல், கல்வெட்டு, தொல்லியல், சிற்பவியல் துறைகளில் மிகச்சிறந்த அறிஞராக கருதப்படுகிறார். நாட்டாரியலை கருத்தில் கொண்டு வரலாற்றாய்வை மேற்கொள்வது இவரது ஆய்வியல் வழிமுறையாக உள்ளது. எண்ணற்ற நாட்டார் நிகழ்த்துக்கலைகளையும், தொன்மங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், புதுதில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல முக்கியக் கல்வி அமைப்புகளில் இவரது ஆய்வுநூல்கள் பாடத்திட்டமாக உள்ளன.
திருநங்கைகள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் ‘தோழி’ எனும் அமைப்பை 1990களில் நண்பர்களுடன் இணைந்து தோற்றுவித்து, கடந்த முப்பது ஆண்டுகளாகச் செயலாற்றி வருபவர் திருநங்கை சுதா அவர்கள். இவர் இந்தியா முழுக்கப் பயணித்து திருநங்கைகளின் வாழ்வுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். திருநங்கையர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மதிப்பளிப்பு, வாழ்வியல் சவால்கள் உள்ளிட்ட நிறைய களங்களில் பலவித தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பணிசெய்கிறார். திருநங்கையர்களை ஒருங்கிணைத்து கலைநிகழ்வுகள் நிகழ்த்தி அவர்களின் கலையுள்ளத்தை புறவுலகுக்கு வெளிக்காட்டும் பெருஞ்செயலையும் ஒருங்கிணைக்கிறார். இன்றியமையாத சமூகச் செயல்பாடாக திருநங்கைகளின் கனவுகளை பொதுவெளியில் சாத்தியமாக்கும் தீராத அகத்துணிவுடன் களமியங்குகிறார் சுதா.
இவ்விரு ஆளுமைகளுக்கும் மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் அளித்து அவர்களை வணங்கிப் பாராட்டும் நல்லசைவென இவ்வாய்ப்பு அமைகிறது. விருதளிப்பு நிகழ்வு வருகிற 5ம் தேதி (05.03.23) ஞாயிறு காலை 10 மணிக்கு, ஈரோடு வேளாண் கல்லூரி கூட்டரங்கில் நிகழவுள்ளது. எழுத்தாளர்கள் சா.தமிழ்செல்வன், பவா செல்லதுரை மற்றும் அக்னி தங்கவேலு, அன்புராஜ், பாலு ஆகியோரின் பூரண முன்னிருப்பில் இந்நினைவேந்தல் நிகழ்கிறது.
மேலும் இந்நிகழ்வில், காந்தியக் கட்டிடக்கலைஞர் லாரி பேக்கரின் மனைவி எழுதி, மருத்துவர் ஜீவா தமிழில் மொழிபெயர்த்த ‘பறவைக்குக் கூடுண்டு : அனைவருக்கும் வீடு’ நூலானது ‘புத்தக தானம்’ முன்னெடுப்பு மூலம் விலையில்லா பிரதிகளாக ஆயிரம் வாசகர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆகவே, தோழமைகள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்க அன்புகூர்ந்து அழைக்கிறோம். களச்செயல்பாட்டு மனிதர்களைக் கண்டடைந்து மனங்குளிரப் பாராட்டும் மருத்துவர் ஜீவா அவர்களின் மாறாப்பண்பின் நீட்சியாக இந்நிகழ்வும் அருட்தன்மை கொள்க! எளிய மக்களின் வாழ்வுமீள்கைக்கான எத்தனையோ செயலசைவுகளின் முதற்துவக்கமாக அமைந்திட்ட பெருமனிதர் மருத்துவர் ஜீவா அவர்களின் அரூப இருப்பை வணங்கி, அவரது நினைவை மனதிலேந்துகிறோம்.
நன்றியுடன்,
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
ஈரோடு
எழுத்தாளன், புனிதன், மனிதன்
’எழுத்தாளனா இருக்கிறதுக்கு முன்னாடி முதல்ல மனுஷனா இருடா’ என்று எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எழுதும் பலருக்கு கோணங்கி என்பது வேறு ஒருவர் என்று தெரியவில்லை. பலர் இணையச் சில்லறைகள் வெட்டிச் சுழற்சிக்கு விட்ட ஒரு பத்தியை மட்டும் படித்திருக்கிறார்கள்.
எனக்கு அதிர்ச்சி, இவ்வாறு கடும் கண்டனங்கள் தெரிவித்திருக்கும் பலர் மிகப்பெரிய பாலியல் ஊழல்காரர்கள் என தெரியவந்தது. உண்மையில் யார் அதிகக் கூச்சலிடுகிறார்களோ அவர்கள்தான் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய கழுதைப்புலிகள். (அது இந்த உலகத்திலேயே எனக்கு மட்டும்தான் கடைசியாகத் தெரிகிறது). பல பெண்கள் ஆதாரங்களுடன் அனுப்பிய தனி மின்னஞ்சல்கள் ஒரு மாதிரி படபடப்பையே கிளப்பிவிட்டன. எல்லாம் இணைய ஆளுமைகள், அரசியல் ஆளுமைகள்.
அந்த வம்புகளுக்குள் செல்ல விரும்பவில்லை. இது இன்று என் மகள் வயதிலிருக்கும் பெண்களுக்கு ஓர் எச்சரிக்கையை அளிக்கவேண்டும். அதேசமயம் அவர்கள் இலக்கியத்தில் நுழைய, வெல்ல, இலக்கியத்தை வழிநடத்துபவர்களாக நாளை மலர உளத்தடையை அளிப்பதாக இருக்கலாகாது. எந்த தயக்கமும் அவர்களுக்கு வந்துவிடலாகாது. இப்போதே குடும்பம் கணவன் என்னும் பல தடைகளை கடந்தே அவர்கள் செயல்பட முடிகிறது. இந்த இணையச்சல்லிகள் இதை சந்தர்ப்பமாகக் கொண்டு ஒட்டுமொத்த இலக்கியம் மீதும் வீசும் சேறு அவர்களை தடைசெய்துவிடக்கூடாது.
(இதற்கும் வசையை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கலாம். அவர்களெல்லாம் அரசியல் சரிநிலைகளை காலை, மாலை, இரவு உணவாக உட்கொள்ளும் மனிதப்புனிதர்கள். ஒழுக்கக் குன்றேறிய தூயர்கள். இருபத்துநான்கு மணிநேர புரட்சியாளர்கள். அறக்களப்போராளிகள். அனைத்துமறிந்த மெய்ஞானிகள். அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு நடுகல் வரலாற்றில் தேவை. ஒப்புக்கொள்கிறேன்.)
*
இந்தச் சந்தர்ப்பத்தில் இலக்கியமறியாத பாமரர்களும் இலக்கியத்தை உள்ளூர அஞ்சும் இலக்கிய விரோதிகளும் எழுப்பும் வினாக்களை மீண்டும் எதிர்கொள்கிறேன். இந்த தளத்திலேயே பலமுறை ஏற்கனவே எழுதியதுதான்.
எழுத்தாளன் என்ன புனிதனா? எழுத்தாளனுக்கும் சைக்கிள் ரிப்பேர் செய்பவனுக்கும் என்ன வேறுபாடு? எழுத்தாளர்களை ஏன் கொண்டாட வேண்டும்? எழுத்தாளர்களுக்குச் சலுகை வேண்டுமா? எழுத்தாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டாமா? எழுத்தாளர்கள் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டாமா? எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லாசிரியர்கள் அல்லவா? இலக்கியம் ஒழுக்கத்தை போதிக்கவேண்டாமா?
இதெல்லாம் அலையலையாக வரும் கேள்விகள். இவற்றுக்காக சொன்ன பழைய பதில்களை மீண்டும் தொகுத்துச் சொல்கிறேன். இலக்கியப் பாமரர், இலக்கிய விரோதிகள் இரு சாராரும் இவற்றை வாசிக்கப்போவதில்லை. இதில் ஒரு நான்குவரியை பீராய்ந்து மிகைக்கொந்தளிப்பு அடைந்து ‘நானெல்லாம் பரம யோக்கியனாக்கும் தெரியுமா’ என காட்டிக்கொள்வார்கள். நான் எழுதுவது இலக்கிய வாசிப்பில் நுழையும் இளம் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்தான்.
எழுத்தாளன் சமூகத்தின் ’நுண்ணுணர்வு மிக்க’ ஓர் உறுப்பு. சமூகத்தின் ’மிகச்சிறந்த உறுப்பு’ அல்ல. நுண்ணுணர்வு (Sensibility) தான் அவனுடைய தகுதியும் சிறப்பியல்புமே ஒழிய நற்குண முழுமை (perfectness) அல்ல. வரலாறெங்குமே பெருங்கலைஞர்கள், கவிஞர்கள் பிழைபட்ட ஆளுமை கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். கம்பன் தாசித்தெருவில் அலைந்தவன், ஆணவம் மிக்கவன் என்றே கதைகள் சொல்கின்றன. கம்பராமாயணம் தமிழிலக்கியத்தின் உச்சம், தமிழ்ப்பண்பாட்டின் சாரம்.இது முரண்பாடு அல்ல. கம்பன் அத்தனை நுண்ணுணர்வு கொண்டவனாக இருந்தமையால்தான் கம்பராமாயணம் இயல்வதாகியது.
மிகச்சரியான மனிதர்களை கூர்ந்து கவனியுங்கள். அவர்களிடமிருப்பது உறுதி. அந்த உறுதி அவர்களின் ஆளுமையின் சாரம். உடலுக்குள் இரும்பாலான எலும்புகள் இருப்பதைப் போல. அவர்களின் நம்பிக்கைகள், கொள்கைகள் அனைத்திலும் அந்த உறுதி இருக்கும். சொல், செயல் அனைத்திலும் உறுதி இருக்கும். அவர்களாலேயே வாழ்க்கையை ஒரு நோன்பென நிகழ்த்த முடியும். அவர்களே சமூகத்தின் முன்னுதாரணங்கள். சமூகத்தின் இலட்சிய வடிவங்கள். சமூகம் உருவாக்கிய மிகச்சிறந்த ஆளுமைகள்.
அவர்கள் பலவகை. யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி போல, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் போல, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போல சேவைக்களத்தில் செயல்பட்டவர்களாக இருக்கலாம். நித்ய சைதன்ய யதி போல ஆன்மிகத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம். கெத்தேல் சாகிப் போல தங்கள் தொழிலையே யோகம் எனக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். நான் மீண்டும் மீண்டும் சொல்வது இதையே, எழுத்தாளன் அவர்களில் ஒருவன் அல்ல. அவர்களைப் பற்றி பாடி, பேசி, எழுதி வரலாற்றில் நிறுத்தவேண்டியவன் மட்டும்தான் எழுத்தாளன். அந்த இடமே அவனுக்குரியது.
(இதில் அரசியல் திருவுருக்கள் பெரும்பாலும் கிடையாது. அவர்களைப் பற்றி திட்டமிட்டு, பணம் செலவிட்டு உருவாக்கப்படும் போற்றிப்பாடடிகளும் இலக்கியம் அல்ல. எனக்கு உயர்மட்டம் மிக நன்றாக தெரியும். அங்கே என்னென்ன எப்படியெப்படி நடைபெறுகின்றன என்றும் தெரியும். இங்கே அரசியல்சரிகளுக்காக கொந்தளிப்பவர்கள் எவருக்கும் அரசியல் ஆளுமைகளின் சரிவுகளும் சிக்கல்களும் தெரிந்தாலும் பொருட்டாக தோன்றாது. ஏனென்றால் அவர்களிடமிருப்பது மிக எளிய அதிகார வழிபாடு மட்டுமே. அரசர்களின் பிறழ்வுகளைக் கொண்டாடிப் பழகியவர்கள் நாம்)
நான் முன்னரே சொன்ன அந்தச் சான்றோரின் எல்லைகள் எவை? மூன்று, சொல்லலாம். ஒன்று, அவர்களால் இன்னொருவராக ஆக முடியாது. அவர்களின் உறுதியே அதற்குத் தடை. இரண்டு, அவர்களால் தங்கள் பணிக்களத்துக்கு அப்பால் இன்னொரு களத்திற்குள் நுழைய முடியாது. அவர்கள் தங்கள் செயற்களத்தில் கட்டுண்டவர்கள். மூன்றாவதாக அவர்களின் இலட்சியவாதம். அது நன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அது அவர்களைச் செயல்புரியச் செய்கிறது. அது ஒரு கனவு. அது அவர்களை மனிதர்களின் இருண்ட பக்கங்களை, வரலாற்றின் சிடுக்குகளை பார்க்கமுடியாமலாக்குகிறது.
ஆகவே அவர்களால் இலக்கியம் எழுத முடியாது. மகத்தான அனுபவங்கள் கொண்டவர்களாக இருந்தும்கூட அவர்களின் தன்வரலாறுகளே எளிமையான ஆவணங்களாக இருப்பது அதனால்தான். அவர்களில் சிலர் புனைவும் எழுதியுள்ளனர், பெற்ற அம்மை தாங்கமுடியாது. அவர்களுக்கு அவர்களின் செயல்வட்டத்தை விட்டு எழுந்து மொத்தச் சமூகத்தையும் பார்க்க இயலாது. அவர்களின் எழுத்துக்களெல்லாமே ஒருவகை இனிய பொய்கள் – அவற்றில் கனவுகளும் நம்பிக்கைகளுமே உள்ளன.
இலக்கியவாதி மாமனிதர்களிடமிருந்து வேறுபடுவது தன் நுண்ணுணர்வால்தான். அந்த நுண்ணுணர்வு முதலில் அவனிடமிருந்து இல்லாமலாக்குவது அவனுடைய உறுதியைத்தான். அவனுடைய ஆளுமையில் நிலைத்தன்மையை அவன் அடைய முடியாது. அவனுடைய நம்பிக்கைகள், கொள்கைகள், உணர்ச்சிகள் எதிலும் நிலைத்தன்மையும் உறுதியும் உருவாவதே இல்லை. அவனுக்குள் அந்த இரும்பு இல்லை. ஆகவே வாழ்வை ஒரு நோன்பாக அவனால் நிகழ்த்த முடியாது. எதையும் முழுமூச்சாகக் கடைப்பிடிக்க முடியாது. எல்லா பக்கமும் சரிசமமாக வளர்பவனாக இருக்க முடியாது.
அந்த உறுதியின்மையால்தான் எழுத்தாளன் உலகியலில் பலவீனமானவனாக இருக்கிறான். அதனால்தான் அவனால் வணிகமோ தொழிலோ செய்யமுடியவில்லை. அவன் ஒரு படி குறைவான குடிமைப் பண்பு கொண்டவனாக இருக்கிறான். அவனால் நல்ல கணவனோ தந்தையோ ஆக இருக்க முடிவதில்லை. அதனால்தான் அவன் ஆளுமைப் பிறழ்வுகள் கொண்டவனாக இருக்கிறான். அவன் ஒரு சமூகம் உருவாக்கும் சிறந்த முன்னுதாரண மனிதன் அல்ல. அவன் சராசரி மனிதன்கூட அல்ல. அவன் சமூகத்தின் வழிபாட்டுப் பிம்பம் அல்ல.
நுண்ணுணர்வு என்பது அளவுக்கு மிஞ்சினால் ஒரு நோய்க்கூறு. அது ஒருவனை இயல்பாக வாழ விடுவதில்லை. மிகக்குறைவான காலம் ஏதேனும் ஒரு நுண்ணுணர்வு மிதமிஞ்சியிருக்கும் அனுபவம் அனைவருக்கும் இருக்கும். ஒரு தொழில் நசித்து அதில் இருந்து மீண்டுவரும் காலகட்டத்தில் நீங்கள் நுண்ணுணர்வு மிக்கவராக இருந்திருக்கலாம். உலகமே உங்களை ஏளனத்துடன் பார்க்கிறது என நினைத்திருப்பீர்கள். ஓர் அவமானம், ஒரு தோல்வி கொஞ்சநாள் உங்களை நுண்ணுணர்வு மிக்கவர்களாக ஆக்கியிருக்கும். தீவிரமான காதல் சில காலம் அப்படி ஆக்கும். அப்போது எப்படி இருந்தீர்கள்? நிலையழிந்து, அலைபாய்ந்து, கொந்தளித்தீர்கள் அல்லவா? அப்படி வாழ்நாள் முழுக்க இருக்க விதிக்கப்பட்டவன் எழுத்தாளன்.
இணையத்தில் எழுந்த பாமரக்குரல்களை தொகுத்து அனுப்பியிருந்தனர். ‘கடைக்குப்போய் கறிகாய் வாங்க தெரியாதவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் எழுதுவதற்கெல்லாம் என்ன மதிப்பு?’ என்று ஒரு குரல். “அரசியல் நிலைபாடு இல்லாதவனெல்லாம் என்ன எழுதினாலும் அவனை ஏன் மதிக்கவேண்டும்?” “ஒழுக்கமானவனே நல்ல எழுத்தாளன்” இப்படி பல கருத்துக்கள். நியூட்டனும் ஐன்ஸ்டீனும் கடைக்குப்போய் கறிகாய் வாங்கத் தெரியாதவர்களாகத்தான் இருந்தனர். தன் சொந்த வீட்டுக்கு திரும்பி வர இன்னொருவரின் உதவியை நாடுபவர்களாக இருந்தனர். இங்கே அவர்கள் வாழ்ந்திருந்தால் இந்த பாமரக்கும்பலால் மனநோய் விடுதிக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்.
(நடுவே ஒரு குரல். இலக்கியமறியாதவனை பாமரன் என்று சொல்லக்கூடாது என்று. இலக்கியமறியாதவன் இலக்கியப் பாமரனேதான். முற்றிலும் தெரியாதவன் அந்த அளவுக்கு பாமரன். பாமரனை பாமரன் என்று சொல்வதுதான் அந்தப் பாமரத்தனத்தை அடையாளம் கண்டுகொள்ள, அடுத்த தலைமுறையாவது அதிலிருந்து மீள ஒரே வழி)
இலக்கியவாதி மூன்று புள்ளிகளில் மாமனிதர்களிடமிருந்து வேறுபடுகிறான். தன் நுண்ணுணர்வால், கற்பனையால் அவன் இன்னொரு வாழ்க்கைக்குள் செல்லமுடியும். யானை டாக்டராக எழுத்தாளன் ஆகமுடியாது, ஆனால் யானைடாக்டராக தன் புனைவுலகில் வாழமுடியும், அதன் வழியாக யானைடாக்டரை மொழியில் நிகழ்த்திக்காட்டி வரலாற்றில் நிலைநிறுத்தமுடியும். காந்தியாகவும் ஐன்ஸ்டீன் ஆகவும் தன்னை ஆக்கிக்கொண்டு அவர்களின் அகவுலகை புனைவில் நிகழ்த்த முடியும். அவன் யோகி அல்ல. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சராகவும் தலாய் லாமாவாகவும்கூட அவனால் தன் புனைவுலகில் வாழமுடியும். அதனால்தான் எழுத்தாளன் சாமானியன் அல்ல என்கிறோம். சாமானியனால் இன்னொருவனாக ஆகவே முடியாது.
எழுத்தாளன் அவனுக்குரிய நுண்ணுணர்வால் ஒரு சமூகத்தின் மிகச்சரியான சராசரியாகவும் தன்னை உணரமுடியும். ஒரு பாமரனின் வாழ்க்கையை அப்பாமரனே உணராத நுட்பத்துடன் எழுத்தாளன் எழுதிவிடமுடியும். அதனாலேயே ஒட்டுமொத்த வரலாற்றின் சித்திரத்தையும் அவனால் காட்டமுடியும். பண்பாடுகளின் முழுமையான சித்திரம், வரலாற்றுத்தருணங்களின் முழுமையான சித்திரம் எழுத்தாளர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளன் ஒளியை நோக்கி எழும் ஆற்றல் கொண்டவன். இந்த மானுடச் சமூகம் இதுவரை உருவாக்கிய எல்லா ஆன்மிக உச்சங்களும், இலட்சிய உச்சங்களும் இலக்கியத்திலேயே அறியக்கிடைக்கின்றன. ஆனால் அவனால் இருளையும் பார்க்கமுடியும். அத்தனை மானுடக்கீழ்மையையும் இலக்கியம்தான் பதிவுசெய்துள்ளது. அந்த இருளிலிருந்து எழும் ஒளியையே அது முன்வைக்கிறது. தமிழ் இலட்சியவாதத்தின் உச்சம் கம்பராமாயணம், ஆனால் அதன் பெரும்பகுதி போர்வெறியையும் அழிவையும் சித்தரிக்கிறது.
உண்மை, எழுத்தாளன் முன்னுதாரண மனிதன் அல்ல. ஆனால் அவன் சாமானியனும் அல்ல. அவன் சராசரியில் ஒருவனாக இருந்தால் அவனால் அகவுலகின் உச்சத்திற்குள், வாழ்க்கையின் சாராம்சத்திற்குள் செல்லமுடியாது. பண்பாட்டின், வரலாற்றின் முழுமையைச் சொல்லிவிடமுடியாது. ஒளிக்கு நிகராக இருளையும் எழுதமுடியாது. யானைடாக்டரின் மேன்மையை எழுத முடிந்தவனால்தான் ஏழாம் உலகத்தின் சாக்கடையையும் எழுத முடியும்.
அந்த நுண்ணுணர்வாலேயே எழுத்தாளர்கள் பிறழ்வு கொண்டவர்களாக இருப்பதுண்டு. மிகச்சிலரிடம் அப்பிறழ்வு அதீதமாக இருக்கவும்கூடும். மௌனியும் ஜி.நாகராஜனும் விபச்சாரத்திலும் குடியிலும் திளைத்ததை அப்படித்தான் இலக்கிய உலகம் புரிந்துகொள்கிறது. சிஃபிலிஸ் வந்து இசைமேதை கிட்டப்பா மறைந்ததை அப்படித்தான் புரிந்துகொள்கிறது. தாசியின் வீட்டுத் திண்ணையில் நோயுற்றுக் கிடந்து மறைந்த இசைமேதைகள் தமிழகத்தில் உண்டு.
மேலைநாட்டுக் கலைஞர்கள், இலக்கியமேதைகளின் வாழ்க்கை முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கையின் அலைக்கழிப்புகளும் பிறழ்வுகளும் பலசமயம் அதீதமானவை. பெரும்பாலும் மிதமிஞ்சிய பாலியல் விழைவுகளும், அதேசமயம் பொறுப்பேற்கத் தயங்கி விலகிச்செல்லும் கோழைத்தனமும் அவர்களின் இயல்புகளாக இருந்துள்ளன. ப்ளேபர்ட், பால்ஸாக், துர்கனேவ் முதல் எஸ்ரா பவுண்ட் வரை முறைசாரா உறவுகள், அவ்வுறவில் பிறந்த ஏற்கப்படாத குழந்தைகள் என அவர்களின் தனிவாழ்க்கை மிகச் சிக்கலானதாகவே இருந்துள்ளது. ஒருபாலுறவினரும், குழந்தைகளை அதற்கு பயன்படுத்தியவர் என்று குற்றம்சாட்டப்பட்டவருமான ழீன் ழெனே போன்ற உச்சகட்ட விதிவிலக்குகளே ஏராளமானவர்கள் உள்ளனர்.
அவர்களை மேலைச்சமூகம் முன்னுதாரண மனிதர்களாக எண்ணவில்லை. ஆனால் நுண்ணுணர்வுள்ளவர்கள் என மதிப்பிட்டது. அந்த நுண்ணுணர்வு என்பது ஒரு சமூகத்தின் சொத்து. அச்சமூகம் தன்னைத்தானே பார்த்துக்கொள்ள, மதிப்பிட்டுக்கொள்ள, எதிர்காலத்திற்கான பதிவுகளாக விட்டுச்செல்ல தேவையான இலக்கியப்படைப்புகளை உருவாக்குவது அந்த நுண்ணுணர்வுதான். அந்த புரிதல் மேற்குலகுக்கு உள்ளது.
இலக்கியவாதிக்கு தேவை அந்த ஏற்புதான். அவன் தன் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோருகிறான். தன் குரல் கவனிக்கப்படவேண்டும் என்கிறான். அரசியல் கூச்சல்களுக்கும் வம்புகளுக்கும் கொடுக்கப்படும் கவனத்தில் ஒரு சிறு பங்காவது தனக்கும் அளிக்கவேண்டும் என்கிறான். சமூகத்தின் அறிவியக்கத்திற்கு தான் அளித்த பங்கு அவனுக்கு தெரியும், அது மதிக்கப்படவேண்டும், அது சமூகத்திற்கு முக்கியமானது என்று சொல்கிறான்.
அப்படிச் சொல்லாத இலக்கியவாதிகள் இருக்கலாம். என்னிடம் ஒருவர் கேட்டார். ’சைக்கிள் ரிப்பேரும் இலக்கியமும் ஒன்றுதான் என்று இன்னார் சொல்கிறாரே’ என்று. நான் சொன்னேன், ’அந்த எழுத்தாளர் எழுதுவதை எழுத சைக்கிள் ரிப்பேர் செய்பவராலும் முடியும். நான் எழுதுவதை எழுத சாதாரண சைக்கிள் ரிப்பேர்காரரால் முடியாது’.
நான் எழுதுவது இலக்கியம் . இலக்கியம் எழுதவேண்டும் என்றால் ஒருவர் இயல்பிலேயே நுண்ணுணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். இளமையில் இருந்தே தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். தன் வாழ்க்கையையே ஒரு கற்றலாக, கல்விக்கான தேடலாக ஆக்கிக் கொள்ளவேண்டும். தன் ஆசிரியர்களைக் கண்டடைந்திருக்கவேண்டும். எந்த தொழிலுக்கும் உதவாத எழுத்தை ஒரு நீண்டகாலப் பயிற்சி என பயின்றிருக்க வேண்டும். அதன்பொருட்டு இந்த வாழ்க்கையிலுள்ள பணம், வெற்றி என வேறு அனைத்தையும் விலக்கி வைக்க துணிவு கொண்டிருக்கவேண்டும். எழுத அமரும் ஒவ்வொரு முறையும் ஒரு தியானம் போல மொழிக்குள் செல்லவேண்டும். தன்னுள் இருந்து தானே கலையைக் கண்டடையவேண்டும்.
அத்தனைக்கும் பின் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் எழுத்தை இச்சமூகத்தின் முன் வைக்கவேண்டும். இச்சமூகம் உதாசீனத்தையும் வசைகளையுமே அளிக்கும் என தெரிந்தும் ஒரு யோகம் என அதைச் செய்துகொண்டிருக்கவேண்டும். தன் அறிவுத்திறனில் நூறிலொன்றுகூட இல்லாதவர்கள், தன் உழைப்பில் ஆயிரத்திலொன்றைக்கூட இயற்றாதவர்கள், அடையும் கௌரவங்களில் ஒரு சிறு பங்கைக்கூட பெறாமல் மறையவேண்டும்.
அனைத்துக்கும் அப்பால், பாமரக்கும்பல் அவனிடம் ஓயாமல் நீயும் நாங்களும் ஒன்று, நீ கற்றதும் இயற்றுவதும் நாங்கள் வெட்டியாக இருப்பதும் சமம்தான், ஆகவே நீயும் எங்களைப்போல் இரு, நாங்கள் பேசுவதையே பேசு என்று கூவுவதை பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்கவேண்டும்.
எந்த இலக்கியவாதியும் தன்னை புனிதர் என்றும், உயர்ந்த ஆளுமை என்றும், இச்சமூகத்தின் சிறந்த உறுப்பினர் என்றும், இச்சமூகத்தை வழிநடத்தவும் அறிவுரை சொல்லவும் உரிமைகொண்டவன் என்றும் சொல்லிக் கொள்வதில்லை. அந்த இடத்தையும் கோருவதில்லை. கோரலாகாது. எழுத்தாளன் கோருவது தன் நுண்ணுணர்வுத்திறன் மதிக்கப்படவேண்டும், அது கவனிக்கப்படவேண்டும் என்று மட்டுமே.
தாகூருக்கே தெரியும், அவர் காந்தி அல்ல என்று. காந்திக்குத் தெரியும் தாகூரின் தீராத காதல்வேட்கைகள், அவருடைய எண்ணற்ற காமத்தொடர்புகள். தாகூர் மறைந்து ஐம்பதாண்டுகளுக்குப் பின்னரும் அவருடைய காதலிகள், ’கள்ளக்காதலி’கள் கண்டடையப்பட்டனர். ஆனாலும் தாகூர்தான் இந்தியாவின் கவிமுகம். அவர் மதிக்கப்பட்டது அவருடைய நுண்ணுணர்வாலும் அதன் வெளிப்பாடான கவிதையாலும்தான். அவர் நல்ல மனிதர் என்பதனால் அல்ல. அந்த வேறுபாட்டை உணராதவர்கள் பாமரர்களே.
இலக்கியவாதி உயர்ந்தோன் அல்ல. எவ்வகையிலும். ஆனால் அவன் சராசரியும் அல்ல. அவ்வாறு சசாசரியாக இருந்தால் அவனால் எதையும் எழுத முடியாது. சராசரியினர் அவனிடம் தங்கள் ஒழுக்க அளவுகோல்களை போடுவது அவனை ஒடுக்கும் வன்முறையாகவே மாறும். தங்கள் சராசரிக்கருத்துக்களைத்தான் அவன் சொல்லவேண்டும் என எண்ணுவது மேலும் பெரிய வன்முறை. மதம் ஓங்கியிருந்த ஐரோப்பாவில் அது நிகழ்ந்தது. கம்யூனிசம் ஓங்கிய ருஷ்யாவிலும் அது நீடித்தது.
சென்ற நூற்றாண்டில் ஓரினச்சேர்க்கையாளரான ஸக்கி தலைமறைவாக வாழநேர்ந்தது. பிறழ்வு குணம் கொண்டிருந்த டி.எச்.லாரன்ஸ், எட்கார் ஆலன் போ போன்ற பலர் தண்டிக்கப்பட்டார்கள்.அதில் இருந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் பண்பாட்டு மலர்ச்சியால், தத்துவஞானிகள் மற்றும் அரசியலறிஞர்களின் வழிகாட்டலால் மேலெழுந்தனர். இலக்கியவாதியின் நுண்ணுணர்வை அடையாளம் கண்டனர்.
நாம் இன்னும் மத்தியகால மனநிலையில் இருக்கிறோம். அதை நவீன அரசியல் சரிநிலைகளாக எண்ணி முன்வைக்கிறோம். அது தேங்கிப்போன நிலப்பிரபுத்துவக் கருத்துநிலை. அந்த மனநிலையை அடித்து உடைக்கவே ழீன் ழெனேயை ‘செயிண்ட் ழெனே’என்று சார்த்ர் சொன்னார். இங்குள்ள இந்தப் பிற்பட்ட- பாமர மனநிலையை இளைஞர்களாவது அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அந்த போலிச்சீற்றம், போலிக்கண்ணீரை ஏதோ உயர்மதிப்பீடுகளின் வெளிப்பாடு என நினைத்துவிடலாகாது.
இலக்கியவாதிக்கு ‘கொம்பு’ உண்டா என்கிறார்கள். ’உண்டு, அது உணர்கொம்பு. உன்னைப்போன்ற பாமரனுக்கு அது இல்லை, மூடுடா வாயை’ என்பதே அதற்கான பதில்.
இலக்கியவாதி சட்டத்திற்கு, பொது ஒழுக்க நெறிக்கு, குடிமைப்பண்புகளுக்கு அப்பாற்பட்டவனா? இல்லை. சட்டமீறல் என்றால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். ஒழுக்கநெறி சமூகத்திற்கு தீங்கானது என்றால் அவனை ஒதுக்கி வைக்கட்டும். குடிமைப் பண்புக்கு எதிரானவன் அவன் என்றால் அவனை கண்டிக்கட்டும். ஆனால் இதெல்லாம் இலக்கியத்திற்கு நிபந்தனை என ஒருவன் சொல்வான் என்றால் அவனை ‘அப்பால் போடா’ என்று சொல்லாமல் எழுத்தாளன் ஒரு வரியும் எழுத முடியாது. தன் செயல்பாட்டுக்காக தனக்கான சிலுவையை எழுத்தாளன் சுமக்கத்தயாராவான்,
அந்நுண்ணுணர்வின் அத்தனை வதைகளையும் அனுபவிப்பவனாகவும் அந்நுண்ணுணர்வின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பவனாகவுமே இலக்கியவாதி இருக்கமுடியும். அவனுடைய அந்த தனித்தன்மையை ஒரு பண்பட்ட சமூகம் சற்றேனும் புரிந்துகொள்ளவேண்டும். பாமரர் எங்குமுண்டு, அவர்களை ஒன்றும் செய்யமுடியாது, அதற்குமேல் பண்பாட்டை அறிந்த சிலராவது ஒரு சமூகத்தில் இருக்கவேண்டும்.
இலக்கியவாதியிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம். அதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்படவேண்டியதும்தான். ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடம் அவனுடைய படைப்புசக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன்பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்படலாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்.
*
ஓர் எழுத்தாளனாக நான் என்னைப் பற்றி எப்போதுமே இப்படித்தான் சொல்லி வருகிறேன். என் எழுத்துக்களில் மெய்ஞானத்தின் உயர்தருணங்கள் உண்டு. அவை ரமணர் தன் உச்ச தியானநிலையில் அடைந்தவற்றுக்கு நிகரானவை. வாழ்க்கையின் உயர்விழுமியங்கள் உண்டு. நூறாண்டு வாழ்ந்த பேரன்னையால் மட்டுமே அறியத்தக்கவை. நீங்கள் மெய்ஞானம் தேடுபவர் என்றால் என் எழுத்துக்கள் உங்களுக்கு உங்கள் ஆழத்தையும் உங்கள் மரபையும் காட்டும். நீங்கள் வாழ்க்கையை அறிய முயல்பவர் என்றால் உங்களுக்கு அவை ஆயிரம் வாழ்க்கைகளின் சாரத்தை அளிக்கும்.
ஆனால் நான் ரமணர் அல்ல. எழுதி முடிந்த கணமே சாமானியன். வாழ்வை அறிந்தவன் அல்ல, அருண்மொழி இல்லாமல் சேர்ந்து பத்து நாட்கள் வாழமுடியாதவன். நல்லவேளை என்னைவிட ஒன்பது வயது குறைந்தவள், தனியாகவிட்டுவிட்டுச் செல்லமாட்டாள் என அவ்வப்போது எண்ணி ஆறுதல் கொள்பவன்.
நான் எவருக்கும் வாழ்க்கையை அல்லது அறத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை. அதற்குரிய தகுதி கொண்டவர்களையே பரிந்துரைப்பேன். என்னிடம் சிலர் நீங்கள் யோகப்பயிற்சி செய்வதுண்டா என்பார்கள். நான் ஐம்பதாண்டுகளாக நகம் கடிக்கும் வழக்கம் கொண்டவன். ஐம்பதாண்டுகளாக அப்பா முதல் ஆசிரியர்கள் வரை அதைவிடும்படி ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். ஐம்பதாண்டுகளாக அதை விட்டுவிட ஆத்மார்த்தமாகவே விரும்புபவன். இன்றுவரை அது என்னால் இயன்றதில்லை. அது மட்டும் முடிந்தால் அடுத்ததாக யோகம் செய்ய முயல்கிறேன் என்று பதில் சொல்வேன்.
நான் என் வாழ்க்கையை வெளிப்படையாக வைத்திருப்பவன். எங்கும் எப்போதும் நண்பர் புடைசூழ வாழ்கிறேன். அதுவும் மிகப்பெரிய எண்ணிக்கையிலான நண்பர்கள். தனிவாழ்கையில் ஒழுக்கநெறிகளை மிகக் கறாராகப் பேணுபவன் – எனக்கு மட்டுமல்ல என் நண்பர்களுக்கும் அவை தேவை என நினைப்பவன். கூடவே உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகியவை சார்ந்த நெறிகளையும் கறாராகவே கடைப்பிடிக்கிறேன். குடிப்பழக்கமோ வேறுவகை பிறழ்வுகளோ கொண்டவர்களை நான் என் இலக்கியச் சுற்றமாக, நட்புச்சுற்றமாக ஏற்பதில்லை. விஷ்ணுபுரம் அமைப்பிலும் அவர்களுக்கு இடமில்லை. எங்கள் நிகழ்வுகளிலும் இடமில்லை. ஆகவே மடம் என்றும் ராணுவக்கட்டுப்பாடு என்றும் கேலிகள் உண்டு. இது என் இயல்பு, அவ்வளவுதான்.
என் எழுத்து என்பது பிறழ்வுகள் வழியாக உருவாவதல்ல, ஒத்திசைவு வழியாக உருவாவது. அதற்கு இந்த நெறிகள் வழியாக நான் என்னை ஒருங்கிணைவுடன் வைத்திருப்பது அவசியமானது. எந்த அளவுக்கு என் அகம் கூர்கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கே நான் எழுதுவதுபோன்ற எழுத்து வெளிப்படும். அதற்கு நான் என் மூளையை துல்லியமாக வைத்திருக்கவேண்டும். ஆகவே போதைப்பொருட்கள் மட்டுமல்ல, அலோபதி மருந்துகளைக்கூட கூடுமானவரை தவிர்க்கிறேன். ஆனால் இது எழுத்தின் ஒரு வகை மட்டுமே. இதை செவ்வியல் எனலாம். சிதறல்கள், பிறழ்வுகள் வழியாக வெளிப்படும் வேறுவகை எழுத்துக்கள் உண்டு.அவற்றை எழுதுபவர்களின் வாழ்க்கைமுறை வேறாக இருக்கலாம். அதை எப்போதும் புரிந்துகொள்கிறேன்.
ஆனால் கொந்தளிப்புகள் எல்லா வகை எழுத்துக்களுக்கும் ஒரே அளவிலானவை. நானும் நிலையற்றவனே. நானும் கற்பனைகளில் அலைக்கழிபவனே. பலவகை நரம்புச்சிக்கல்கள் இருந்துள்ளன. பல சிக்கல்கள் தொடர்கின்றன. என் அகக்கொந்தளிப்புகள் என்னை பைத்தியத்தின் விளிம்பு வரை கொண்டு சென்றிருக்கின்றன. மருத்துவச் சிகிழ்ச்சைக்குக் கூட சென்றிருக்கிறேன். விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், வெண்முரசு போன்ற படைப்புகளில் அந்த பெருங்கொந்தளிப்பை எவரும் காணலாம். அக்கொந்தளிப்பை அடையாமல் எவரும் அவற்றை எழுதவும் முடியாது. ஒரு கெட்ட தேவதையை உபாசனை செய்வதுபோலத்தான் இது. சொந்த தசையை அறுத்து பலியிடாமல் இந்த தெய்வம் கனியாது.
என்னை நிலைப்படுத்த தொடர் அலைச்சலில் இருந்துகொண்டிருக்கிறேன். உலகமெங்கும். என் கட்டற்ற கோபத்தை கட்டுப்படுத்துவதே இதுவரை என் வாழ்க்கையின் பெரும்சவாலாக இருந்துள்ளது. அதன்பொருட்டு என் உற்றார், நண்பர்களுடன் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என் சமநிலை என்பது இயல்பானது அல்ல, அது நான் முழுவிசையுடன் பேணிக்கொள்ளும் ஒரு புள்ளி மட்டுமே. அதன்பொருட்டு நான் நன்றி சொல்லவேண்டியது முதன்மையாக அருண்மொழிக்கு, பின் என் நண்பர்களுக்கு.
ஆகவேதான் ஓர் ஆளுமையாக என்னை நான் முன்வைப்பதில்லை. மாறாக, பொதுப்பணியாற்றும் ஒவ்வொருவரையும் போற்றி முன்வைக்கிறேன். அவர்களை பற்றி எழுதுகிறேன். அவர்களே முன்னுதாரணங்கள் என்பதனால்.
ஆனால் ஓர் எழுத்தாளனாக என்னை இளம்வாசகர்கள் அணுகுவதை நான் ஊக்குவிக்கிறேன். என்னிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு இருப்பது என் முன்னோடிகளிடமிருந்து என் வரை வந்துசேர்ந்த அறிவை. இலக்கியம், தத்துவம், பண்பாடு சார்ந்த புரிதல்களை. அத்துடன் நுண்ணுணர்வை படைப்பாக்கமாக ஆக்கிக்கொள்ளும் முறையை. படைப்பிலக்கியம், கலை சார்ந்த சில புரிதல்கள் நேரடி உரையாடல்கள் வழியாக, அவற்றில் உருவாகும் சிந்த தருணங்களில் சொல்லப்படும் வரிகள் வழியாக, செய்முறைப் பயிற்சிகள் வழியாக மட்டுமே கற்கத்தக்கவை.
நூல்கள் உள்ளன. அவற்றில் சிந்தனை உள்ளது. ஆனால் சிந்தித்தல் என்னும் செயல்பாட்டை சிந்திக்கும் ஒருவரிடமிருந்து நேர்ப்பழக்கம் வழியாக மட்டுமே சரியானமுறையில் அறியமுடியும். அவ்வாறுதான் மானுடம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை ஆசிரியர் – மாணவர் உறவினூடாக அறிவு கைமாறப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இன்றும் அவ்வாறே அறிவு பரிமாறப்படுகிறது. ’நூல்களே போதும், நூலாசிரியர்கள் தேவையில்லை’ என்பவர்கள் நூல்களையும் வாசிக்கும் வழக்கமில்லாதவர்கள்.
எல்லா எழுத்தாளர்களும் ஆசிரியர்களா? இல்லை. நானறிந்தவரை பிரமிள் நல்ல ஆசிரியர் அல்ல. அவருடைய குணம் விசித்திரங்கள் கொண்டது. முற்றிலும் நிலையற்ற மனிதர். சுந்தர ராமசாமி மகத்தான ஆசிரியர். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் குடிகாரர். பி.கே.பாலகிருஷ்ணனும் குடிகாரர். ஆனால் முன்னவர் மோசமான ஆசிரியர். பாலகிருஷ்ணன் மாபெரும் வழிகாட்டி. அந்த வேறுபாடு முக்கியமானது. தனக்கான ஆசிரியரை கண்டடையும் நுண்ணுணர்வு மாணவர்களுக்குத் தேவை.
எழுத்தாளன் வைக்கப்படவேண்டிய இடம் இதுவே.ஞானியாக அல்ல, வழிகாட்டியாக அல்ல, முன்னுதாரண மனிதனாக அல்ல, மிகச்சிறந்த குடிமகனாகவோ நல்ல மனிதனாகவோ அல்ல. நுண்ணுணர்வு கொண்ட ஒருவனாக மட்டுமே அவன் மதிக்கப்படவேண்டும். அந்நுண்ணுணர்வு ஒரு சமூகத்தின் கூரிய உணர்வுநிலை என்று அச்சமூகம் உணரவேண்டும். அதன் விளைவாக உருவாகும் இலக்கியம் அச்சமூகத்தின் சொத்து என அறியவேண்டும். அதை உருவாக்குபவன் என்றவகையில் அவன் ஆதரிக்கப்படவேண்டும்.
எல்லா வாசகர்களும் இலக்கியவாதியை அணுகவேண்டியதில்லை. அணுகினால் இலக்கியவாதி தாங்கவும் முடியாது. ஆனால் இலக்கியமரபை, அறிவியக்க மரபை தொடரவேண்டுமென விரும்பும் அடுத்த தலைமுறைக்கு ஆசிரியராக அணுக முன்னோடிகள் இன்றியமையாதவர்கள். அவ்வாறான தேடல்கொண்ட மாணவர்களிடம் நான் ஒன்றையே சொல்லமுடியும், இந்த தலைமுறையின் தலைசிறந்த ஆசிரியர்களில் நானும் ஒருவன்.
சுப்ரமணிய ராஜூ
அகாலமரணத்தால் சற்று மிகையாக மதிப்பிடப்பவர் சுப்ரமணிய ராஜூ .பெருநகர் சார்ந்த நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை அன்றைய புதிய வார இதழ்களின் தேவைக்கேற்க சற்றுமென்மையாகவும் நுட்பமாகவும் எழுதினார். இன்று அவை அக்காலகட்டத்தின் சித்தரிப்புகளாக மட்டுமே நிலைகொள்கின்றன.
சுப்ரமணிய ராஜூ
சுப்ரமணிய ராஜூ – தமிழ் விக்கி
கேரள இலக்கியவிழா உரையாடல்
கேரளத்தில் கோழிக்கோடு நகரில் நிகழ்ந்த இலக்கிய விழாவில் நான் ஈடுபட்ட உரையாடல். நடத்துபவர் கே.சி.நாராயணன்
தியான வகுப்பு- அறிவிப்பு
இரண்டுவகை தியானப் பயிற்சிகள் உள்ளன. மெய்மையை அறிந்து அதுவாக ஆதலின் பொருட்டு செய்யப்படுபவை. அவையே சாதகம் எனப்படுகின்றன. இன்னொன்று, இந்த அன்றாட உலகியலில் தன்னைத் தானே தொகுத்துக் கொள்ளும்பொருட்டு செய்யப்படும் தியானங்கள். ஒப்புநோக்க எளியவை. சென்ற காலத்தின் தியான மரபுகளில் இருந்து இன்றைய காலகட்டத்திற்காக எடுத்துத் தொகுக்கப்பட்டவை.
அத்தகைய தியானப் பயிற்சியின் தேவை ஒன்று உள்ளது என பல நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே நண்பர் தில்லை செந்தில் பிரபு அவர்களைக் கொண்டு தியான முகாம் ஒன்றை ஒருங்கமைக்கலாமென்று எண்ணினேன். நவீன மனிதனுக்கான தியானம் இது. மனித வழிபாடுகள், மாயங்கள் போன்றவை இல்லாமல் புறவயமான தர்க்க அடிப்படை கொண்டது. பெருந்திரளாக அன்றி குறைந்த எண்ணிக்கையிலான சிலருக்காக அளிக்கப்படும் தனிப்பட்ட பயிற்சி
தில்லை செந்தில் பிரபு பல முக்கியமான தியான மையங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றவர். Ananda Chaitanya Foundation என்னும் தியான அமைப்பை நடத்தி வருபவர். கல்விப்பணிகள், ஆளுமைப் பயிற்சிப்பணிகளை ஒருங்கிணைக்கிறார்.
வரும் மார்ச் 17, 18 19 (வெள்ளி சனி ஞாயிறு) நாட்களில் ஈரோடு அருகே நிகழும் தியான முகாமில் இக்கல்வி கற்றுத்தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள மின்னஞ்சலுக்கு தங்கள் பெயர் மற்றும் தகவல்களுடன் விண்ணப்பிக்கலாம்
எழுகதிர்நிலம், கடிதங்கள்
சார்,
எழுகதிர் நிலம் 7, 8 ரகளயாக இருக்கிறது, ஒரே மனநிலையில் எழுதப்பட்டது போல! மேகாலயாவின் சீமான் பற்றிய குறிப்புகள் அபாரம்.
வெண்பனி நிலங்களில் நீங்கள் ஏன் கறுப்புக் கண்ணாடி இடுவதில்லை என்கிற கேள்வி எப்போதும் தோன்றுகிற ஒன்று. தம்பிகளைச் சுமக்கும் அக்காக்களைப் பற்றிய குறிப்பில் இங்கே கலாப்ரியா வந்துவிட்டார்.
விஜயகுமார்.
திரு ஜெ,
தாங்கள் கட்டண உரை ஆற்றச் செல்லும் இடங்களில், அப் பகுதியைச் சேர்ந்த ஆளு மைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி உரை தொடங்கு வதைப் போல ‘எழுகதிர் நிலத்தில்’ ஜஸ்வந்த் சிங் ராவத்தைப் பற்றி எழுதியதை வாசித்து மேல் அதிகமாக அவர் புகைப்படம் மற்றும் திரைப்படத்தை பார்த்ததும், முன்னாள் ராணுவ வீரரான என் தந்தை, திருநெல்வேலி வல்லநாடு வேலன்குளம் என்ற குக் கிராமத்திலிருந்து 60 களில் ராணுவத்தில் சேர்ந்து madaras engr group ல் பயிற்சி முடித்து ஆறரை வருடங்கள் அஸ்ஸாமில் பணியில் இருந்தார்கள். தேர்ந்த இலக்கியம், இசை, இந்திய ஞானம், தத்துவம், காந்தி என வாசகர்களுக்கு தெரியப் படுத்தி வரும் தாங்கள் இதுபோல் மறக்கப்பட்ட Unsung Hero வைத் தெரியப் படுத்திய தற்கு நன்றிகள்.
அன்புடன்
சேது வேலுமணி,
சென்னை.
முதற்கனல், மாணவியின் கடிதம்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு
வணக்கம்.
தங்களது வெண்முரசு தொடரில் முதற்கனல் தொகுதியினை வாசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழில் நான் வாசித்த சிறார்களுக்காக எழுதப்படாத முதல் நூல் இதுவேயாகும். என் அன்னையின் ஆசிரியரான மதிப்பிற்குரிய பேராசிரியர் லோகமாதேவி அம்மா அவர்களால் இந்நூல் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு இக்கடிதத்தின் மூலம் எனது நன்றியினை உரிதாக்குகின்றேன்.
இணைய வழியில் ஏனோ என்னால் ஒரு அத்தியாயத்தைக் கூட முழுமையாகப் படிக்க இயலவில்லை. அஞ்சல் வழியில் செம்பதிப்பு வந்தவுடன் பல மாதங்கள் காத்திருந்த ஆவலால் கைகள் சற்றே செயலிழக்க மெல்ல உரையைப்பிரித்தேன். அடுத்த நாள் நிகழவிருந்த தமிழ்த்தேர்வையும் பொருட்படுத்தாமல் அன்றே வாசிக்கத் தொடங்கினேன் பின் புத்தகத்தை மூடாமலானேன்.
நாவல் வடிவிலான மகாபாரதம் என்பது என்னை முதலில் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் என் போன்ற இளம்தலைமுறை வாசகர்கள் மகாபாரத காவியத்தின் நுட்பங்களையும் அது வெளிப்படுத்தும் கருத்துக்களையும் தெரிந்துகொள்ள மட்டுமல்லாமல் அவற்றை ஆராய்ந்து தங்களுக்கென அதிலிருக்கும் பொருளைத் தாமே வடித்துக்கொள்ள வெண்முரசு உதவுகிறது என்று நம்புகிறேன் ஐயா. மேலும் அத்தகைய வடிவத்தின் முழுமையை நோக்கிய தேடலை துண்டுவதாக முதற்கனல் எனக்கு அமைந்திருந்தது.
மானசாதேவி சொன்ன “நாகம்“ என்ற சொல்லின் பொருள் என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது. பருப்பொருள்களின் பொருளினை (பெயரின் பொருளும் அப்பொருள் வெளிப்படுத்தும் உணர்வு அல்லது அது விளக்க விழையும் பொருளும்) ஆராய்ந்து அறியும் வேட்கையை மொழியறியத் தொடங்கும் குழந்தைகளிடம் கண்டுள்ளேன். அது உண்மையில் மறைந்து விடுவதில்லை நம்முள் என்றும் புதைந்தே இருக்கிறது என்பதை நாகத்தின் பொருளைப் படித்த அக்கணம் என்னால் உணர முடிந்தது. ஆனால் மனிதர்களின் அகவை கூடிச்செல்கையில் இந்த வேட்கையை ஏன் அவர்கள் பேணுவதில்லை என்ற கேள்வியே என்னுள் எழுந்தது. காலவெள்ளத்தின் ஓட்டத்தில் இந்த வேட்கை பல சமயங்களில் பொருளற்று போகின்றது. உள்ளத்தின் ஆர்வத்தினைத் தூண்டும் ஒரு கண நொடியில் அவ்வேட்கை மீண்டும் உயிர்த்தெழுகிறது என்று புத்தகத்தின் முடிவில் புரிந்துகொண்டேன்.
பனிமனிதன் நாவலின் முலம் “நான்” என்ற உணர்வில் எழும் அகங்காரத்தினையும் உடையாள் நாவலின் முலம் “நான்” என்ற உணர்விலிருந்தே அறிவு தொடங்குகிறது என்பதையும் அறிய முடிந்தது.முதற்கனல் மூலம் அவ்வுணர்விலிருந்தே இப்பிரபஞ்சத்தில் பிறப்பு என்பது உருவானது என்று தெளிவடைய முடிந்தது. அவ்வுணர்வே வாழ்வின் இச்சையென உருவாகி மற்ற அனைத்து உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆகையால் “நான்” என்ற உணர்வைக் குறித்த தேடலை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைத்திருப்பதாக எண்ணுகிறேன்.
இச்சை, நாகத்தின் கண்களாக ஆதித்யர்களும் சந்திரர்களுமாக உருவெடுத்ததை வாசித்த போது இப்பிரபஞ்சத்தின் அசைவுகள் அனைத்தும் இச்சையினாலேயே நிகழ்த்தப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டேன்.ஆயினும் மனித இச்சை என்பது மனித மனம் ஞானத்தை அடைய ஒரு திரையென திகழ்கிறது. அதை விலக்கியே மெஞ்ஞானத்தை அடையமுடியும் என்பதற்கு சுகதேவர் சான்றாகத் திகழ்கிறார். அதே சமயம் அத்திரையினைச் சற்றே ஊடுருவிச்சென்று வியாசர் ஞானத்தை அடைந்திருக்கிறார் என்றே எனக்கு தோன்றியது. மறுபக்கம் வெறும் இச்சையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சந்தனு சான்றாகிறார். ஆனால் இன்று பல மனிதர்கள் சந்தனுவையும் விஞ்சியே இருக்கிறார்கள். அவர்கள் இச்சையினையே விழியாகவும் மனமாகவும் கொண்டு தங்களின் பிரக்ஞையை இருளிலில் ஆழ்த்துகிறார்கள்.வினைகளின் விளைவுகளை உணராமல் முடிவில் அவர்களின் இச்சைகளினாலேயே அழிக்கப்படுகிறார்கள்.
ஜரத்காரு முனிவரின் சாபம் முதலில் என்னை சற்றே வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திகன் ஆயுள் முழுமை பெற மாட்டான் என்ற சாபம் “சிரஞ்சீவியாக இரு” என்பதற்கு ஈடாகவே எனக்கு ஒலித்தது.சில கணங்கள் கடந்தே அது நிறைவினை வேண்டி தவம் செய்த மானசாதேவிக்கு வாழ்வில் நிறைவின்மையை அளிக்கும் சாபமென தெளிந்தேன். “உன் முதுமையை நான் பார்க்கவேண்டியதில்லை” என்று மானசாதேவி ஆஸ்திகனிடம் கூறுகையில் தான், ஆஸ்திகனுக்கு முதுமை இல்லாவிட்டாலும் அவன் இளமையாக இருக்க, அவன் அன்பு செலுத்திய சுற்றமும் நட்பும் முதிர்ந்து வருந்துவதைக் கண்டு தவிக்கும் நிலையை அவனுக்கு கொடுக்கும் அச்சாபத்தின் வீரியம் என்னவென்பதை முழுமையாக உணரமுடிந்தது. அப்போது வியாசர் முதுமையில் வாழ்ந்துகொண்டிருக்கையில் அவர் கண் முன்னே இளம் தலைமுறைகள் அறியாமை இருளில் மடிவதைக் காணும் அவரின் நிலை, ஆஸ்திகனின் நிலைக்கு நேர்மாறாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது.
ஜனமேஜெயன் பகடை ஆட்டத்திற்கு அடிமைப்பட்டிருப்பதை வாசிக்கையில் இன்றைய இணைய விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுடன் அவனை ஒப்பிட்டு எண்ணிக்கொண்டேன். காலம்காலமாக பொறுப்பின்மையால் தேவையற்றவைக்கு அடிமைப்பட்டு அறியாமையின் இருளில் முழுவதுமாக மறைந்துவிட்டிருக்கின்றனர் பலர். இன்றும் அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இவை அனைத்தும் தட்சனின்வடிவமே என்று அச்சமயம் கண்டுகொண்டேன்.
உத்தங்கர் கூறியதைப்போல “விதியின் ஆட்டத்தைப் பற்றிய முழுமையான அறியாமை கொண்டவர் அல்லாமல் பிறர் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது” எனில் இன்று பலர் அவ்வாறே உள்ளனர்.
குருஷேத்திரப்போரின் முடிவை தர்மத்தின் வெற்றி என்றே எண்ணி வந்தேன். ஆனால் அவ்வெற்றிக்காக சிந்தப்பட்ட கண்ணீர்த்துளிகளையும் இரத்தத்துளிகளையும் உத்திரையின் வழி காணுகையில் என்னுள் இருந்த அப்பிம்பம் உடைந்து தெறித்தது. பரீட்சித்தை கொல்ல விதி பின்னிய வலையைத் தட்சன் நடத்திய சுவாரிசியமான நாடகம் என்றே உணர்கிறேன்.சமீகரின் மௌனத்தைக் கண்டவுடன் பரீட்சித்தினுள் எழுந்து ஆணவப்படம் விரித்து அவ்வினையை நடத்தினான் தட்சன். குருஷேத்திரக்களத்தில் பரீட்சித் நின்று இருக்கையில் எனக்குள்ளும் ஒரு கணம் ஒரு கசப்பான மௌனம் படர்வதைக் கவனித்தேன்.
பரீட்சித்தின் தவம் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.அதை மனிதமன உறுதியின் உச்ச கட்டம் என்று அறித்தேன். அகங்காரத்தை வென்றுவிட்டேன் என்னும் அகங்காரத்தைக் கண்டவுடன் இன்று பலரும் அத்தகைய அகங்காரத்தையே கொண்டுள்ளனர் என்பதில் தெளியலானேன்.
ஷிப்ரதேஜஸின் கதை என்னை நடுங்கச் செய்தது. ஷிப்ரதேஜ்ஸின் விழிகளைப் பறித்தமைக்காக சரமையின் சாபத்தினைப் பெற்ற ஜனமேஜெயன் போலவே இன்று மிகுதியானோர் உள்ளனர். .புறத்தின் கண்களால் அனைத்தையும் கண்டாலும் அகத்தின் விழிகள் இழந்தவராக திரிகின்றனர் பலர்.அவர்களின் பிரக்ஞை விழியற்றதனால் வண்ணகளற்று தவிக்கிறது.
வியாசரின் தவத்தில் அவர் அடைந்த முதல் எழுத்தான “மா” வின் தனித்துவத்தைப் பின்னரே கவனித்தேன் .உலகின் பெரும்பாலான மொழிகளில் தாயைக்குறிக்கும் எழுத்தாக அது இருக்கிறது என்றால் வியாசரின் முதல் எழுத்து அன்னையைக் குறிக்கிறது.தாய்மையே உலகின் மிக வலிமையான முழு முதற்சக்தி என்பதை இது உணர்த்துவதாக உள்ளது..மேலும் இப்போரானது தாய்மையால் உருவானது என்பதை இது காட்டுகிறது. சத்தியவதி என்னும் மச்சர் குல பெண்ணின் தாய்மை அது.
ஜனமேஜெயனின் வேள்வி முடிவுபெற வேண்டும் என்ற எண்ணமே முதலில் என்னுள் இருந்தது. ஏனெனில் ஜனமேஜெயனைப் போலவே நானும் குருஷேத்திரங்களற்ற பூமியினைப் பெற விரும்பினேன்.வியாசரின் கூற்றைக் கூட என் மனம் முழுமையாக ஏற்க மறுத்தது.ஆனால் புத்தகத்தின் பக்கங்களின் போக்கில் தட்சனின் அவசியம் குறித்து புரிந்து கொண்டேன்.இவ்வுலகில் இருள் என்பது இல்லாவிட்டால் ஒளி என்பது போற்றப்படாது.இச்சையினாலேயே இப்பிரபஞ்சம் அசைகிறது எனில் அசைவற்ற பிரபஞ்சத்தில் வாழ்வின் இச்சையற்ற உயிர்கள் வாழ்வதென்பது அர்த்தமற்றது. அத்தகைய உலகில் மெய்ஞானத்தையும் எவரும் அடையமுடியாது ஏனெனில் மெய்ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணமே ஓர் இச்சை தான் என்று தெளிவுற்றேன்.
சந்தனுவின் அஸ்தினபுரியின் அறிமுகமே திகைப்பூட்டும் வகையில் இருந்தது.வியக்கதக்க ஒரு செங்கோல் அரசாக அது மின்னியது. ஹஸ்தியின் கதையில் அவனுடைய பலத்தையும் அவனுடைய சிறு வயது நண்பர்களையும் கண்டு நான் சற்றே அச்சம் கொண்டேன்.யானைகளின் எழிலை நான் ரசித்ததுண்டு. முக்கியமாக அவற்றின் சின்னஞ்சிறு கண்களைக் கண்டு நான் பூரிப்பேன். அவை ஏனோ ஒரு சிறு குழந்தையின் கண்கள் போல எனக்கு தோன்றும். அச்சம்,ஆர்வம்,மென்மை என அனைத்தும் கலந்திருக்கும் அவற்றில் உள்ள தூய்மையை நான் எப்பொழுதும் ஆச்சரியப்பதுண்டு. ஆயினும் அவற்றின் பெரு உருவம் கண்டு நான் கொள்ளும் அச்சமே ஹஸ்தியின் மேல் நான் கொண்ட அச்சமாய் இருந்தது.
புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் பல தருணங்களில் நான் காஞ்சனத்தைக் குறித்து சிந்தித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் வருந்ததக்க நிலை அதற்கு என்ற எண்ணமே என்னுள் எழும். பல தலைமுறைகளாக அஸ்தினபுரியில் நிகழும் அனைத்தையும் ஆடி ஆடி அறிவித்தும் நிகழும் அனைத்தையும் முதலில் அறிந்தும் தன் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத நிலை.காஞ்சனத்தால் பேச முடிந்தால் அது என்ன பேசியிருக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்ததுண்டு.ஆனால் அனைத்தும் அறிபவர்கள் என்றுமே பேசுவதற்கு விதிக்கப்படவில்லை என்ற நிதர்சனம் அக்கணம் என்னுள் மலர்ந்தது.
அஜபாகனின் தோற்றம் கண்டு திகைத்தேன்.அவனது கணிப்புகள் கண்டு வியந்தேன்.இக்கதையில் உள்ள அனைத்து கணிப்புகளும் அப்படியே.நடக்கப்போவது அனைத்தையும் கண்ணால் கண்டவரென கணிக்கும் நிமித்தகர்களையும் நாகசூதர்களையும் விண்ணிலிருந்து வழி தவறி வந்த யட்சர்களெனெவே காண்கிறேன்.
அருந்ததிக்கு நிகரான எரி விண்மீன் என்ற சொற்றொடரை வாசித்தப்பொழுது ஒரு திடுக்கிடும் உணர்வு என்னுள் நிறைந்தது.அம்பையின் குணங்களை கண்டவுடனேயே இவளே அந்த எரிவிண்மீன் என்றும் என்ன நடக்கப்போகிறது,யாருக்கு நடக்கப்போகிறது என்று அறியாவிட்டாலும் கூட விதி வலையில் இவள் ஒரு முக்கியமான முடிச்சு என்றும் என்னால் யூகிக்க முடிந்தது.
ஒற்றைப் பெண்ணால் ஒரு மாபெரும் வலிமை மிக்க அரசும் அரச வம்சமும் முற்றிலுமாக அழியப்போகிறது என்பது முதலில் என்னால் நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.ஆனால் நடந்த வினைகளையும், அநீதிகளையும் , அதனால் நிகழ்ந்தனவற்றையும் காணுகையில் அது சூரியன் கிழக்கில் உதிப்பது போன்ற இயல்பென ஆகிவிட்டது.
பலபத்ரர் கொண்டு சேர்த்த ஓலையும் எனது ஆர்வத்தைத் தூண்டியது.உண்மையில் உரையின்றி அதன் பொருளை என்னால் அறிந்து கொண்டிருக்க முடியாது.அக்காலத்தில் குறிப்பு வைத்து எழுதப்படும் ஓலைகளைக் குறித்து கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் அத்தகைய ஓலைகள் எந்த அளவிற்கு இரகசியமாக எழுதப்பட்டிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.குறிப்புகளை அறிந்தவரால் மட்டுமே அதன் பொருளை அறியமுடியும் அன்றைய காலத்தில் வாழ்தவர் பலராலும் கூட “கொற்றவைக்கு பலியிடப்படும்” என்பதன் மூலம் போர் நடக்கவிருக்கிறது என்று மட்டுமே அறியமுடியும் என்று நினைக்கிறேன்.
பலபத்ரர் தெய்வங்களின் கண்களில் என்றும் அழியாமல் இருக்கும் துயரம்குறித்து கூறுகையில் என் மனம் ஆமோதித்தது. மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் தெய்வங்களை நினைத்துக்கொண்டே இருந்தாலும் துயருரும் பொழுதில் தான் அவர்களிடம் மன்றாடுகிறோம்,அவர்களின் இன்றியமையாமையை உணர்கிறோம்.ஆனால் தெய்வங்களின் துயரத்திற்கு காரணம் இதுவல்ல என்பதை அக்கணமே புரிந்து கொண்டேன்.பெரும்துயரும் பேரின்பமும் ஒன்றினுள் ஒன்று கலந்தவை என்பதை உணராமல் வாழ்நாள் எல்லாம் தவிக்கும் நமது அறியாமையைக் கண்டே தெய்வங்கள் தவிக்கின்றன என்று அடுத்த வரியை வாசித்த பின் தெளிந்து கொண்டேன்.
சிறுவயது பீஷ்மரின் தனிமையின் ஒரு துளியை நானும் உணர்ந்திருக்கிறேன்.என் பெற்றோரைத் தவிர்த்து பிற அனைவரிடமும் அத்தகைய தனிமையை நான் உணர்வதுண்டு.எனக்கும் என்னை சுற்றி இருப்போருக்கும் இடையிலான ஒரு திரை போல அது என்னை எப்பொழும் சூழ்ந்தே இருக்கும்.சில நேரங்களில் அத்திரையினுள் நான் பாதுகாப்பை உணர்வதும் உண்டு.
அகத்தின் கண்கள் திறந்திருந்தால் பல நேரங்களில் பொய்யைக் காட்டும் புறக்கண்கள் அவசியமில்லை என்பதை தீர்கசியாமர் மூலம் தெரிந்து கொண்டேன். மேலும் வரலாற்றையும் நிகழ்வனவற்றையும் ஒரு சேர அறிபவர்களால் மட்டுமே அடைய முடியும் ஞானத்தை அவர் கொண்டுள்ளார் என்பதை வியப்புடன் உணர்ந்து பூரித்தேன்.
நான் கதைகளை வாசிக்கும் போதும் வயலின் கருவியை இசைக்கும் போதும் ஓவியங்களைத் தீட்டும் போதும் என்னுள் வெவ்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுவதையும், அவை வெவ்வேறு விதமாக வெளிப்படுவதையும் கவனித்துள்ளேன்.அவை ஏன் என்று பராசரரின் நாரதர் உடனான சந்திப்பில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.கதைகளில், நிதர்சனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவளாக உணர்கிறேன்.ஓவியத்தில், அந்நிதர்சனத்தில் முற்றிலும் ஒன்றியவளாய் தெரிந்த நான் இசையில், அவ்விரண்டிற்குமான நடுக்கோட்டில் நிற்பவளாக உணர்கிறேன்.
சித்ரகர்ணி விளக்கிய உண்மை நான் அறிந்தும் அறியாதது என்று தோன்றியது.நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் இடையிலும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றும் அத்தொடர்பு நம்மையும் சேர்த்தே இணைத்துக்கொள்கிறது என்றும் நான் நம்பியிருந்தேன்.ஆனால் அத்தொடர்பு பல பிறவிகள் தாண்டியும் தொடர்கிறது என்பதை சித்ரகர்ணி புரியவைத்தது.
பீஷ்மரின் தனிமை வியாசரால் நீங்கியதை விதி ஏற்படுத்தும் விசித்திர தொடர்புகளுள் ஒன்றாகவே கருதினேன்.தன் அகத் தனிமை போக்கும் தமையனை ஒரு ஷத்திரியன் ஒரு ரிஷியில் காண்பானென்று கூறுவதே விசித்திரம் என மனதில் பட்டது.
“வானை எட்டமுடியாத எளிய மனிதர்கள் கோபுரங்களை உருவாக்கிக்கொள்கின்றனர்” என்ற வியாசரின் கூற்று முதலில் எனக்கு புரியவில்லை மீண்டும் மீண்டும் வாசித்தும் கூட முழுபொருள் விளங்கவில்லை. புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டு மீண்டும் அந்த வரிகளை வாசிக்கையில் சட்டென விளங்கியதும் “ஆம்” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். கோபுரமென உயர்ந்து நிற்கும் மாமனிதர்கள் எப்பொழுதும் தங்களைத்தாமே முழுமையாக செதுக்கியவர்கள் அல்ல, அவர்கள் சுற்றத்தாலும் சூழ்நிலையாலும் செதுக்கப்பட்டு தன்நிலை மாறாமல் இருந்தவர்களேயாவர் என்பதை புரியலானேன்.
“உயிரற்றவைக்கு மட்டுமே கச்சிதம் கைகூடுகிறது” என்று பீஷ்மர் கூறியது என்னை சிந்திக்க வைத்தது. அப்படியானால் இன்றைய மனிதசெயல்களில் பெரும்பாலானவை உயிரற்றவையே என கண்டு திகைத்தேன்.ஆனால் இயற்கையோடு ஒன்றும், இசையும் எழுத்தும் கற்பனையும் மற்ற சில செயல்களும் அவ்வாறில்லை என்று அறிந்தேன்.மேலும் இதன் மூலம் இயற்கையே கச்சிதமற்றது என்னும் கருத்தை ஆழமாக புரிந்து கொள்ளமுடிந்தது.
வியாசரின் கேள்விக்குப் பதிலளித்த பீஷ்மரின் சொற்களைக் கண்டவுடன், போரில் கொல்லப்படுபவனின் குழந்தைகளைக் குறித்து எண்ணும் ஒரு வீரன் ஷத்திரியனாக இருக்க இயலாது என்ற எண்ணமே என்னுள் உதித்தது. அவர் “ஷத்திரியனை விட மனிதன் என்ற இடம் பெரிதென்றும்”எண்ணுவதாக கூறுகையில் அவர் மீது இருந்த மதிப்பு சற்றே கூடியது.ஆனால் தவறொன்றில் தர்மம் பிறழுகிறதா என்று சிந்திக்கும் ஷத்திரியர்கள்,தங்களின் தர்மத்தினால் ஏற்படும் தவறுகளை ஒருபோதும் எண்ணுவதில்லையா? என்று எண்ணிக்கொண்டேன்.
இக்கேள்விக்கான பதில் அடுத்த பக்கத்திலேயே காத்திருந்தது. பசுவினைக் கொல்வது சிங்கத்தின் தர்மம் என்று வியாசர் கூறியதும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இயற்கையின் முறையே இங்கு தர்மம் எனப்படுகிறது என்று விளங்கியது.
சிபியின் கதையின் பாதியையே அறிந்திருந்திருந்தேன். தனது தொடை சதையைப் புறாவிற்குப் பதிலாக கொடுத்தான் என.தன் முன் சிரம் தாழ்த்தி அடைக்கலம் கோரிய சிபியை உணவென ஏற்க மறுத்த ஷத்திரியனான சித்ரகன் என்னும் பருந்தைக் குறித்து முதற்கனல் வழியே தெரிந்து கொண்டேன்.ஷத்திரியரின் இயல்பு கண்டு வியந்தேன்.
ஸதியின் கதையின் இவ்வடிவத்தை நான் கேட்டதில்லை.ஸதி ஒரு நாகமென பிறந்தவள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.சிவபெருமானின் மனைவியான ஸதி வேள்விக்கு அழையாவிருந்தாளியாக சென்று தந்தை செய்த அவமதிப்பை தாளாமல் அக்னியில் எரிந்து சாம்பலானாள் என்றே தெரிந்திருந்தேன்.ஆனால் அவள் தந்தையால் அவமதிக்கப்பட்டு கணவனாலும் கைவிடப்பட்டு பின்பு மீண்டும் கணவனை அடையும் பொருட்டே வேள்வி நெருப்பில் தன்னை அழித்துக்கொண்டாள் என்று சூதர்களால் சொல்லப்பட்டது என்று வாமதேவர் கூறியதைப் புத்தகத்தின் முடிவில் நினைவு கூர்ந்தேன்.அவ்வொரு கருத்தே அம்பையின் வாழ்வின் சுருக்கம் எனத் தோன்றியது.
தனது தந்தையால் நிராகரிக்கபட்டு பின் கணவனென ஏற்றவனிடம் எள்ளிநகையாடப்பட்டு கொற்றவை என கோபம் கொண்டு பிடாரியென கோலம் கொண்டு பித்தியென திரிந்து இறுதியில் உயிருடன் சிதைநெருப்பேறிய அம்பை இறந்தும் பீஷ்மரைப் பின் தொடர்ந்தாள் என்பதை சிகண்டியின் கனவின் மூலம் அறிய முடிந்தது.
“அதிகாரம் எப்போதுமே நாடகங்கள் அடையாளங்கள் வழியாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிக்கிறது” என்ற புராவதியின் கூற்று என்றைக்குமான பல்வேறு வகையான அதிகாரங்களுக்கு பொருந்தக்கூடியதாக அமைந்திருந்தது. பல்வேறு வகையான நாடகங்களின் வழியாகத்தான் அவை தங்களின் பலத்தை பிரதிபலித்து நிறுவி அவ்வதிகாரத்தை நிலைக்கொள்ளச் செய்கின்றன.இக்கருத்தை முக்கியமாக ஹிட்லருடன் ஒப்பிட்டு பார்த்துக்கொண்டேன்.
அம்பையின் வீரம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது. ஒரே கணத்தில் திகைக்காமல் தன்னை நெருங்கியவனை வெட்டி வீழ்த்தும் துணிவு கொள்வதே வீரம் என்பேன் நான். இன்றைய தற்காப்பு கலைகள் அனைத்தும் அத்தகைய வீரத்தையே அளிக்கின்றன.வீரத்தில் பீஷ்மருக்கு நிகரானவள் அம்பை மட்டுமே என்ற எண்ணம் பீஷ்மர் வியப்பதை கண்டு என்னுள் உண்டானது.
“வெள்ளிநிற மலர்போலச் சுழன்ற வாளைப்பார்த்து” என்ற உவமை எனக்கு ஏனோ மிகவும் பிடித்திருந்தது.வெற்றுப் பெருமைக்காக பீஷ்மரை பின்தொடர்ந்து சென்ற சால்வனை கண்டு இப்படியும் ஒரு அரசன் என சொல்லிக் கொண்டேன்.உண்மையில் சால்வனைப் போன்றோரே இன்றைய உலகில் நிறைந்துள்ளனர்.
சந்தனுவுடைய தனிமை, தனிமையின் மற்றொரு முகம்.பீஷ்மரின் தனிமையை விட அது முற்றிலும் மாறுபட்டது.எவரும் தன்னை தங்களுக்கு சமமானவராக அவரை எண்ணாத்தால் ஏற்படும் தனிமை பீஷ்மருடையது.அவரால் அத்தனிமையில் சில கணங்கள் பாதுகாப்பை உணரமுடியும்.ஆனால் சந்தனுவோ பாதுகாப்பின்மையையே தனிமையாகக் கொண்டவர்.தனக்கென தன்னுடன் விளையாட பேசி மகிழ ஒரு நல்ல தோழனையே அவர் பெற விரும்பினார். அதனாலேயே தனக்கென ஒரு தமையன் என்பதில் ஆனந்தம் கொண்டு அவரை நேசிக்கிறார்.ஆனால் அவரை நேசிக்க பால்ஹிகன் வந்தவுடன் அத்தகைய நேசத்தினை முதல்முறை கண்டவுடன் அதுவே தான் விரும்புவது என புரிந்துகொண்டு அதற்காக ஏங்குகிறார்.
ஒரு கட்டத்தில் இரு உறவுகளுமே தன்னை விட்டுச்செல்ல,அவரது நோயானது பல்கியிருக்க வேண்டும்.ஆனால் எதை நாம் அறிந்து உணர்ந்ததில்லையோ, அதன் இல்லாமையால் ஏங்கமுடியாது என்பதுபோல அவர் கண்டு ஏங்குவதற்கு ஏதுமில்லை ஆதலால் அவர் ஏங்கவில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் பால்ஹிகனோ தன் தமயனையே உலகமெனக் கொண்டவன்.ஆதலால் அவரின் பிரிவைத் தாளாமல் தனக்குள் எழுந்த நெருப்பு அவன் கண்களை மறைத்துவிடவே ஏதுமறியா சந்தனுவின் மேல் அவச்சொல் இட்டுவிட்டான்.எனினும் சந்தனுவின் அகநெருப்பாக எழுந்த பொறாமையும் கூட அவரின் (தேவாபியின்) துரதிஷ்டத்திற்கு வித்திட்டிருக்கலாம் என்று தோன்றியது.
சந்தனு தனிமையிலிருந்து தனக்கு கிடைக்கப்பெறாத விடுதலை பீஷ்மரால் அவருக்கு கிடைத்தால் அவருள் அழியாதிருந்த உசகன் பீஷ்மரில் தன் அன்னையை கண்டான் என நினைக்கிறேன்.இக்காரணத்தினாலேயே தீர்கசியாமர் “தலைமுறைக்கு ஒருமுறையே ஒவ்வொரு காலடியையும் மண்மகள் கைவிரித்துத் தாங்கும் குழவியர் மண்ணில் பிறக்கின்றனர்“ என்று கூறுகிறார் போலும்.
அம்பை காசிநாட்டுக்கு மீண்டும் வந்து நிற்கையில் “இளவரசி” என்று கூவிவந்த ஃபால்குணர் உண்மையான பாசத்துடனும் பற்றுடனும் திகழ்ந்தாலும் அரசின் ஆணைக்கு கட்டுப்படும் கைப்பாவையாகவும் இருப்பதனால் எதை தன்னால் கனவிலும் கூட செய்ய முடியாதோ அதை செய்யத் துணிகிறார். அம்பையை தன் மகவுகளில் ஒன்றாகவே கருதியிருந்தார் போலும்.மீண்டும் பேசுகையில் அவர் அவளை “அஸ்தினபுரியின் அரசி” என்று கூறுகையில் அவரின் குரல் என் செவிகளில் எதிரொலித்தாற்போல் தோன்றியது.உண்மையில் அம்பையின் சொற்கள் ,அவற்றின் பின்னால் இருந்த ஏக்கம், குழந்தை மனம் ஆகியவற்றை தாண்டி எவ்வாறு ஃபால்குணர் அதை செய்தார் என்பது எனக்கு ஒரு புதிராகவே உள்ளது.
அம்பை “ஃபால்குணரே, இதெல்லாம் என்னை சோதிப்பதற்குத் தானே?” என்று கேட்கையில் என் கண்களிலும் நீர் நிறைந்து விட்டது.ஷத்திரியனை வாளால் வீழ்த்தவில்லை எனினும் அதை விடக் கூரான சொற்களால் வென்று வந்தவளை ஏன் ஏற்க மறுக்கிறது இந்த ஷத்திரிய அறமும் கோழை அரசுகளும் என்று சினம் கொண்டேன். அவளின் ஏக்கத்தினை ஒரு மகளென என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.இறுதியாக தன் தாயை இறைஞ்சுகிறாள். அவள் அன்னையை அறிந்திருக்கிறாள் என்று எண்ணினேன்.அவ்வாறே புராவதி சினந்தெழுந்து அம்பை அல்லால் பிறிதொன்றை எண்ணாமல் வனம்புகுகிறாள்.மஹிஷாசூரமர்த்தினியாய் அவள் தன் அம்பையையே காணுகிறாள் என்று தோன்றியது. அன்னை மகற்கிடை தொடர்பு என்றும் மாறாமலிருப்பது, அவ்வாறே நெருப்பென திகழ்ந்தவளை எண்ணி இறுதியில் நெருப்புடனேயே இணைந்துவிட்டாள் புராவதி.இதையே நாகசூதன் கூறியதாக கருதுகிறேன்.
அம்பிகை அனைத்தையும் கண்டு வியக்கும் அந்நொடியில் தன் தன்மானத்தையும் அதனோடு பிணைந்திருந்த ஆவேசத்தையும் மீட்டெடுத்து வாராபடை அவற்றை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிக் கொள்வது அவளின் உள்ளம் ஒரு குழந்தையாகவும் ஷத்தியப் பெண்ணாகவும் மாறி மாறி அலைவதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.அம்பாலிகையை கிள்ளுவதும் அவள் சற்றே நகர்ந்து அமருவதும் அப்படியே.அம்பாலிகையின் உரையாடல் பகுதிகளை வாசித்த போது வாய்விட்டு சிரித்துக்கொண்டேன் நான்.
விசித்ரவீரியன், எனக்கு வாழ்வை கற்றுக்கொடுப்பதாகக் கொள்கிறேன்.ஒரு கணத்தில் நூறு நினைவுகளும் நூறு எண்ணங்களும் சேர்ந்துவிடுகின்றன. வாழ்வு மிகச்சிறியது என்றெண்ணி ஓடாமல் ஒவ்வொரு கணத்திலும் நின்று வாழத் தெளிவுற்றேன்.
“வாழாது இருந்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் தான் மரணம் என்பது இழப்பு” என்ற வரி இப்பிரபஞ்சத்தின் மாபெரும் இரகசியம் ஒன்றை மெல்ல என் காதருகே உரைப்பதாக அமைந்திருந்தது.தசகர்ணனில் எழுந்த வாக்தேவி சொன்னதைப் போல அவனே அந்நாட்டின் அழியா மணிமுத்து.
வெள்ளிநிலம் நாவலில் மக்களின் பயங்களிலிருந்தே உருவானவை தெய்வங்களும் மதங்களும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.அக்கருத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாக “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை” என்ற சத்தியவதியின் கூற்றைக் காண்கிறேன்.
சிவை, கிருபை இருவரின் வாழ்கை என்றும் அழியாமலிருக்கும் பாகுபாடுகளைக் காட்டுகிறது.அவர்களின் பேச்சு நகைப்பூட்டலாக இருந்தது.அம்பிகையும் அம்பாலிகையும் கலந்ததைப் போல சிவையைக் கண்டேன்.அறிவிருந்தும் நல்லுள்ளமிருந்தும் பிறப்பாலும் சூழ்நிலையாலும் இத்தகைய வாழ்வை அவள் வாழ்வது என்னை பெருமூச்சு விடசெய்தது.
நிருதன் அம்பைக்கு ஒரு படகோட்டி மட்டுமே என இருந்தும் அம்பையை தன் தங்கையென கொண்ட பாசம்,அவள் பித்தியான போதும் பல வருடங்கள் கழிந்த பின்னும் அங்கேயே இருக்கச்செய்தது என்பதை எண்ணி வியந்தேன்.
சிகண்டியின் கதை பதைப்பூட்டுவதாக இருந்தது.எது கிடைத்தாலும் தன் அன்னையிடம் கொண்டு செல்லும் ஒரு குழந்தையென அன்னை மீது அவள் கொண்ட அன்பே, அன்னை அம்பையாக மாறியதும் சிகண்டினி கூறிய சொற்களாகவும் கூறாத சொற்களாகவும் அமைந்திருந்தது.அப்பொழுது அவளை உண்மையில் ஈன்றெடுத்த அன்னை யாராக இருக்கும் என எண்ணினேன்.
அன்னை “மகன்” எனத் தன்னைக் கண்டதும் தாயிற்கென உயிர்தரிக்க புது ஜென்மம் கொண்ட மகனாய் மாறிவிட்டான் சிகண்டி.என்றும் அம்பை கண்ணீருடன் சிதையேறிய அக்காட்சியையும் அவளின் சொற்களையும் கனவுகளில் தொலைத்து விடக்கூடாது என்பதாலேயே அவன் பிறகெப்பொழுதும் கண் மூடவில்லை எனத் தோன்றியது.இதுவே அவன் அம்பை மீது கொண்ட தூய அன்பையும் தீரா பற்றையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.புறத்தால் அழுவதனால் அவளின் நினைவுகள் கண்ணீரில் கரைந்து விடுமோ என்று எண்ணியே அவன் அழவில்லை என நினைக்கிறேன்.
மனதினை வைரமென செதுக்கி ஸ்தூனகர்ணன் முன் செல்லும் முன்னரே தனது வாழ்வின் அர்த்தத்தினை உணர்ந்து விட்டதனால்,அகத்தாலும் உயிராலும் ஆண் என ஆகிவிட்டிருந்ததனாலேயே அவன் தனது நோக்கத்தில் சிறிதும் பிறழாமல் ஸ்தூனகர்ணனை எதிர் கொண்டான் என்று எண்ணுகிறேன்.அவன் வைரத்தை உண்ட அக்கணம் அவன் வாழ்வு முற்றிலும் தன் அன்னைக்கு என உறுதி செய்து விட்டதைக் காட்டுவதாக அமைந்திருந்தது.ஆதலால் அவனும் அம்பையும் வேறில்லை என்பது மெய்யாகிறது.
இவ்வுலகில் இருப்பு என்பதே ஆன்மா .அது வசிக்கும் உடலானது நிலையற்றதாக இருப்பினும் , அதில் அது வசிக்கும் வரை அது உயிர் எனப்படுகிறது எனில் உயிர் என்பது நமது இச்சைகளாலும் நினைவுகளாலும் உணர்வுகளாலும் இணைந்து செதுக்கப்படுவதே என்று எண்ணுகிறேன்.அவ்வகையே அம்பையின் இச்சையை தனதாக்கி,அவளின் நினைவுகளில் வாழ்ந்து, அவளின் குரோத உணர்வே உருவென திகழும் சிகண்டி அம்பையின் ஆன்மாவை முழுதும் பெற்றவனாகிறான்.மேலும் சிவனின் வரத்தால் பீஷ்மரை கொல்லக் கூடியவனுமாகிறான்.அவன் முழுமையாக “சிகண்டி” என மாறிவிட்ட போதிலும் அவனை விட்டு நீங்காத பெண்மை அம்பையே என நான் கருதுகிறேன்.
இன்று ஈன்றெடுத்த அன்னையையே முதியோர் இல்லங்களில் சேர்க்கும் சுயநலமே உருவானவர்கள் சிகண்டியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில்,தன்னை ஈன்றவள் முகமறியாமல், தான் அவளிடம் பெற்ற தாய்ப்பாலால் உருவான பந்தத்தினால் மட்டுமே அவளை தன் அன்னை என உணர்ந்து அந்நன்றி உணர்வால்
“என் ஏழு பிறப்பும் என் அன்னைக்குரியவை” என்று தன் வாழ்க்கையை அவளின் பாதத்தில் இட்டு அவள் உயிரை தனதெனக் கொண்ட ஒரு மகனை கண்டு அவர்கள் தங்களை நோக்கி கூசிக்கொள்ள வேண்டும்.
அக்னிவேசர் துரோணருக்கு அளித்த அறிவுரையானது கற்றலின் மூலப்பாடம் என்று கருதுகிறேன் .கற்றல் என்பது கற்றலின் ஆனந்ததிற்காகவே என்று அவர் விளக்குகையில் அதை போலவே வாழ்வில் எதையும் எதிர்பார்த்து ஒரு செயலை செய்வது அர்த்தமற்றது என்று புரிந்து கொண்டேன்.
ஊர்வையும் சிகண்டியும் கண்ட கனவு எனக்கு முதலில் புரியவில்லை. என் அன்னையுடன் அதைக்குறித்து கலந்துரையாடிய பின்னரே “உன்னுடன் இருந்தால் நான் தப்பிவிடுவேன் என்று எனக்கும் தெரியும்” என்று பீஷ்மர் கூறியதன் அர்த்தம் புரிந்தது.
பால்ஹிகன் உடனான சிகண்டியின் உரையாடல் என்னை சிந்திக்க வைத்தது. ஆடி பிம்பத்திற்கும் நிழலுக்கும் என்ன வேறுபாடு என்று நெடுநேரம் எனக்குள் கேட்டுக்கொண்டிருந்தேன்.பிறகு அதை நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்.ஆடி பிம்பமானது நம்மில் இருக்கும் ஒளியையும் இருளையும் ஒருசேர பெற்றது .ஆதலால் அது நமக்கு இணையென ஆகிறது.ஆனால் நிழலானது நம்மில் பாதியான இருளையே அதன் முழுமையாகக் கொண்டது.ஆதலால் நம் இருளை நமக்கெதிராக உபயோகிக்கும் வல்லமை பெற்றது.
நாகசூதன், பீஷ்மர் இனி திருதிராஷ்ட்ரனையும் பாண்டுவையும் சுமப்பார் என்று உரைத்தது பீஷ்மர் என்றும் தனக்காக வாழ விதிக்கப்பட்டவர் அல்ல என்பதை மீண்டும் கூறுவதாக அமைந்திருந்தது.
“அவரும் நானும் ஒன்றே என உணர்ந்தேன்” என்று சிகண்டி சொன்னதும் பீஷ்மருடனான புறப்போர் என்பது பொருளற்றதாகிறது.அகத்தால் தன்ன்னை தானே வெல்பவனே புறத்தாலும் தன்னை வெல்ல முடியும்.அவ்வகையில் சிகண்டி வென்று விட்டான் என்றே எண்ணுகிறேன்.ஏனெனில் தானும் தன் பகைவனும் ஒன்றே என்று அறியும் எவ்வீரனும் வல்லமை மிக்கவன் ஆகிறான்.அவ்வாறு அறிந்தவுடன் பால்ஹிகனைப் போல பின்னடையாமல் முன் செல்ல துணிந்து விட்டதே அவனின் வெற்றி.மேலும் இந்நிகழ்வின் மூலம் அகப்போரின் இன்றியமையாமை குறித்து தெளிந்து கொண்டேன்.இந்த அகப்போர் களப்போருக்கு மட்டுமல்ல என்றும் வாழ்கைப்போரில் ஒவ்வொரு நொடியும் இதனை நாம் வெவ்வேறு விதங்களில் எதிர்க்கொள்கிறோம் .
சிகண்டியின் வார்த்தையால் பீஷ்மர் தன்னுள் கனத்த , சூழ்நிலையால் அவர் இழைத்த பெரும் பாவத்தினை வியாசரின் சொல்லுக்கிணங்க தனது ஊனாலும் குருதியாலும் ஈடுகட்ட எண்ணியே தனது காலனுக்கு தானே கற்பிக்க ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் தன்னை கொல்ல தனது வரத்தால் சிகண்டிக்கு தனது ஆசியின் மூலம் அனுமதி அளித்தார் என்றே என் சித்தம் சிந்தித்தது.
அஸ்தினபுரியில் விழுந்த முதல் கண்ணீர் சுனையின் கண்ணீர் என்றால் அதன் கனல் இரு வித்ததில் வெளிப்படக் கண்டேன்.ஒன்று விசித்திரவீரியன் கூறியதைப் போல அவ்வம்சத்தில் தழைத்த நோய். மற்றொன்று சத்யவதி.
குருஷேத்திரத்தை பின்னிய விதியின்
March 2, 2023
பலிகளும் பயணிகளும்
இரண்டு நாட்கள் முன்பு (பிப்ரவரி 10) கூகுள் டூடுலில் பி கே ரோஸி என்னும் மலையாள சினிமா நடிகையின் புகைப்படத்தை வைத்து அவரது 120 ஆவது பிறந்த நாளை கூகுள் கெளரவப்படுத்தி இருந்தது. ஒரு தென்னிந்திய நடிகைக்கான கூகுளின் இந்த அங்கீகாரம் எனக்கு ஆச்சரயமளித்தது. பி கே ரோஸியை குறித்து தேடித்தேடி படித்தேன். புனைவுகளை மிஞ்சும் வாழ்க்கை அவருடையது. தலித் சமூகத்தை சேர்ந்த பெண், முதல் படத்தில் நாயர் பெண்ணாக நடித்தற்கே உயர் சாதியினரின் எதிர்ப்பில் அவரது வீடு கொளுத்தப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பி லாரியில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். பின்னர் அந்த லாரி டிரைவரையே திருமணமும் செய்து தமிழ்நட்டில் கடைசிக்காலம் வரை இருந்திருக்கிறார்.
எனக்கு ரோஸியின் வாழ்க்கை உங்களின் பழைய முகம் கதையை நினைவு படுத்தியது, அதில் வரும் விஜயா என்கிற கல்பனாஸ்ரீ. அதுபோலவே அழகிகள் மர்மங்கள் பதிவில் விஜயாஸ்ரீ, அந்த அருவிக்குளியல் படப்பிடிப்பு, கொலையா தற்கொலையா என்று தெரியாமல் போன அவரது மரணம். முதற்காதலின் பொன்மணிக்கிளையில் சாந்திகிருஷ்ணா என்று ஒன்றின் பின்னால் ஒன்றாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். (முதற்காதலின் பொன்மணிக்கிளை )
விஜயஸ்ரீ பதிவில் சொல்லி இருப்பீர்கள்
‘’சினிமா உலகம் என்பது மூன்று விசைகளால் உருவாக்கப்படும் ஒரு பெரும்புனைவு. சினிமா என்னும் புனைவு, சினிமாக்காரர்களின் வாழ்க்கை என்னும் புனைவு, பார்வையாளர்களின் கற்பனை என்னும் புனைவு. அது வானம்போல முடிவில்லாதது. அதில் விண்மீன்கள் தோன்றி மறைகின்றன’’ (அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்) என்று. அப்படி பி கே ரோஸி என்னும் ஒரு விண்மீனின் வாழ்க்கையில் தெரிந்தவைகளே இத்தனை என்றால் உண்மை இன்னும் எவ்வளவு இருந்திருக்கும்?
பி கே ரோஸியினால் நான் இன்றைக்கும் இந்த மூன்று நடிகைகளின் உலகிற்குள்லேயே சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.
பன்னீர் புஷ்பங்களில் ’’பூந்தளிர் ஆட’’ பாடலை மீண்டும் கேட்டேன். அந்நாட்களில் அடிக்கடி லவ்டேலுக்கு போவோம். ஒவ்வொரு முறையும் எனக்கு ரயில் நிலையத்தில இறங்குகையில் இந்தப் பாடல் நினவுக்கு வந்துகொண்டே இருக்கும். இந்தப்பாடல் என்னை என் இளமைக்காலத்துடன் இணைக்கும் கண்ணி என இப்போது கேட்கையில் தோன்றுகிறது.
’’பழைய முகத்தில்’’ ஒரு பாடலை கேட்கையில் கதை நாயகன் நினைத்துக்கொள்ளுவான் ’’யாருமே சாகிறதில்லை, சாகவும் முடியாது என்று’’. ஓயாமல் பலரின் மனதுக்குள் இதுபோன்ற நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கையில் இவர்களுக்கெல்லாம் சாவு இல்லைதானே! ( பழையமுகம் (சிறுகதை))
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள லோகமாதேவி
பி.கே.ரோஸி பற்றி செல்லுலோய்ட்- முன்னோடியின் கதை என்னும் கட்டுரையில் எழுதியிருந்தேன். பி.கே.ரோஸி நாகர்கோயிலில் வாழ்ந்தார். பி.கே.ரோஸி பற்றி வினு ஆப்ரகாம் எழுதிய நஷ்டநாயிகா என்னும் நாவல் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் அந்நாவல் The Lost Heroine என்ற பேரில் ஆங்கிலத்தில் வெளியாகியது.
பி.கே.ரோஸி என ஒருவர் இருந்தார் என்பதையே சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன்தான் கண்டுபிடித்தார். அவரை நாகர்கோயிலுக்கு வந்து சந்தித்திருக்கிறார். அவரைப் பேட்டிகண்டு எழுதியுமிருக்கிறார். அப்போது ரோஸி வறுமையில் இருந்தார். சிறிய நிதி வசூலித்து அளிக்கவும் கோபாலகிருஷ்ணனால் முடிந்தது.
இந்தக்கதைகளில் எல்லாம் உள்ள பொது அம்சம் என்பது இவர்களெல்லாமே பலியாடுகள்தான் என்பதே. ஆனால் அன்றைய வாழ்க்கையில் அப்படி எத்தனை பலியாடுகள்! குடும்பங்களில், அலுவலகங்களில். ரோஸியின் வாழ்க்கையில் அவர் அன்றைய வரலாற்றுக்கணம் ஒன்றுடன் தற்செயலாகச் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதே வேறுபாடு.
ரோஸியை இன்று ‘மலையாள சினிமாவின் அன்னை’ என்றெல்லாம் எழுதுகிறார்கள். அது இன்னொரு எல்லை. அவர் சினிமாவில் வேண்டாவெறுப்பாக நடித்தார், அதனால் அவமானப்பட்டார். ஆனால் எதிர்க்கவோ போராடவோ இல்லை. வரலாற்றின் களப்பலி அவர். வரலாற்றில் நினைவுகூரப்படவேண்டியவர், நம் கீழ்மையின் ஓர் அடையாளமாக. நாம் கடக்கவேண்டியவற்றின் அறிவுறுத்தலாக. ஆனால் அவர் வரலாற்றுநாயகி அல்ல. வரலாற்றில் நின்று பொருதி எவ்வகையிலேனும் அதை வென்றவர்களே வரலாற்றின் தலைவர்கள்.
வரலாறு ஒரு சிம்மம். அதன் பலிகள் பல்லாயிரம்பேர். சிம்மவாஹினியாக அதில் ஏறியமர்ந்தவர்களே முதன்மையான ஆளுமைகள். அவர்கள் பலர் உள்ளனர். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போல.
ஜெ
PK Rosy: The mother of Malayalam cinema
PK Rosy’s story: How Malayalam cinema’s first woman actor was forced to leave the state
தி.சதாசிவ ஐயர்
இலங்கையில் ஒரு காலகட்டத்தில் சம்ஸ்கிருதக் கல்வி செழிப்புற்றிருந்தது. இலங்கையின் சைவ வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியது. அதற்கு வழியமைத்த அறிஞர்களில் ஒருவர் தி.சதாசிவ ஐயர்
தி.சதாசிவ ஐயர்
தி.சதாசிவ ஐயர் – தமிழ் விக்கி
யோக முகாம், கடிதம்
இந்த முகாமிற்கு பதிவு செய்தது முதல், அறிமுகமே இல்லாத நபர்கள் , ஏதுமே அறிந்திராத யோகாவுடன் மூன்று நாட்கள் எப்படி இருக்கப்போகிறது என்ற சிறு பதற்றத்துடனே இருந்தேன், ஆனால் இந்த மூன்று நாட்கள் சிறந்த அனுபவமாக இருந்தது.
குருஜி சௌந்தர் அவர்கள் இந்த பயிற்சி முகாமை பயிற்சிகளும், உரைகளுமாக வடிவமைத்தவிதம் மிக சிறப்பாக இருந்தது. வகுப்புகள் முடிந்த பிறகான இடைவேளைகளிலும், ஓய்வு நேரங்களிலும் கூட அவர் கற்பித்துக்கொண்டே இருந்தார். இந்த மூன்று நாட்களும் முழுநேரமும் உற்சாகமாகவும், முற்றிலும் நேர்மறையாகவுமே இருந்தார், உரைகளிலும், நேர்ப்பேச்சுகளிலும் அவரிடம் இருந்து ஒரு எதிர்மறை கருத்துகூட வரவில்லை, மாற்று மருத்துவமுறைகளின் போதாமைகளைக்கூட அவற்றின் எல்லைகளாகவே குறிப்பிட்டார்.
யோக மரபில் இப்பயிற்சிகளின் தேவை என்னவாக இருந்தது, யோகப்பயிற்சிகளின் பின்னுள்ள தத்துவ விளக்கங்கள் மற்றும் ஆயுர்வத்திற்கும் யோகாவிற்கு உள்ள பிணைப்பு என முழுமையான பின்னணி விளக்கம் அளித்தார். மரபார்ந்த யோகாவிற்கும் , மரபுசாரா பயிற்சிகளும் உள்ள வேறுபாடுகள், யோக பயிற்சிகளால் என்ன பலன்கள் கிடைக்கும் முக்கியமாக என்னென்ன பலன்கள் கிடைக்காது என தெளிவுபடுத்தினார்.
இந்தமுகாமின் நோக்கம் பங்கேற்பாளர்களை யோக சாதகராக மாற்றுவது தான், இந்த பயிற்சிகள் எந்த பக்கவிளைவுகளும் இல்லாத, அனைவருக்கும் ஏற்றவை என தொடக்கத்திலேயே விளக்கியதோடு, இந்தியாவில் மரபான யோக கல்வி அளிக்கும் குருநிலைகளை அறிமுகபடுத்தியபின் அவரின் நெகிழ்ச்சியான நன்றியுரை மற்றும் குருபிரசாதத்துடன் விடைகொடுத்தார்.
அந்தியூர் மணி அவர்கள் ஒவ்வொரு வேளையும் சுவையான உணவு, தங்குமிடம் என சிறப்பான கவனிப்பு அளித்தார். முக்கியமாக ஓய்வு நேரங்களில் அவருடனான பேச்சில் சைவ சித்தாந்தம், மனு நீதி, அந்தியூர் பகுதி வரலாறு என வரலாற்று பூர்வமான தகவல்களை தெரிந்து கொண்டேன், அவர் இயல்பான, வரலாற்றுபார்வை கொண்ட பேச்சுக்கு ரசிகனாகிவிட்டேன்.
இரண்டாம் நாள் இரவில் அருண்மொழிநங்கை அவர்களின் இசை குறித்த சிற்றுரை சிறப்பாக இருந்தது.
புதிய அறிதல்கள், புதிய நண்பர்களின் அறிமுகம், ரம்மியமான சூழல், சுவையான உணவு என இந்த பயிற்சி முகாம் சிறப்பான அனுபவமாக இருந்தது.
அனைவருக்கும் நன்றி.
மணிகண்டன். கோவை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



