Jeyamohan's Blog, page 621

February 27, 2023

புதைந்தவை

கறுப்புவெள்ளையில் இருப்பதனாலேயே சில பாடல்கள் யூடியூபில் கேட்கப்படுவதில்லை. இன்று வானொலி கேட்கப்படுவது குறைவு. பண்பலை வானொலியில் திரும்பத் திரும்ப ஒரே பாடல்கள்தான். என் இளமையில் இருந்து உடன்வரும் இந்தப்பாடலை கேட்ட இன்னொருவரை நான் சந்தித்ததில்லை. ஒருவேளை ஜெயச்சந்திரன் குரலில் மலையாளப்பாடல் போலிருப்பதுதான் காரணமா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2023 10:30

February 26, 2023

எழுகதிர் நிலம்- 8

பெப்ருவரி பதினான்காம் தேதி காதலின் நாள். அன்று பசுதழுவுதலை மைய அரசு அறிவித்திருந்தது. பசு தழுவ வடகிழக்கில் பெரிய வசதி இல்லை. அங்கே சாலைகளில் பசுக்கள் இல்லை. வரும் வழியில் யாக்குகள் இருந்தன. அவற்றை தழுவ மைய அரசின் அனுமதி உண்டா என்னும் ஐயம் இருந்தது.

காலையில் கௌஹாத்தியில் இருந்து கிளம்பி எங்கள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக மேகலாயாவுக்கு சென்றோம். புதிய இன்னோவா வண்டி ஒன்று வந்திருந்தது. பழைய டாட்டா சுமோ ஓட்டுநர் அவரே ஷில்லாங் வரை கொண்டு வந்து விடுவதாகச் சொன்னார். மறுத்தோம். ‘அந்த வண்டி பழுதடைந்தால் சொல்லுங்கள் , பறந்து வந்துவிடுகிறேன்….இரண்டு மணிநேரத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவேன்” என்றார்

காரில் சிரிப்பும் கேலியுமாகச் சென்றோம். எல்லாம் அந்த டாட்டா சுமோ பற்றிய கிண்டல்தான். 1990 களில் தான் வைத்திருந்த டாட்டா சுமோவை 160 கிமீ வேகத்தில் ஓட்டியதாக ராஜமாணிக்கம் ஒருமுறை சொல்லியிருந்தார். கீழே உருண்ட வேகத்தையே அவர் சொல்லியிருக்கலாம் என்பது வழக்கறிஞர் கிருஷ்ணனின் தரப்பு

ஷில்லாங் செல்லும் வழியில் உமையம் ஏரி (Umiam Lake) உள்ளது. 1960ல் அஸாம் மின்வாரியம் கட்டிய அணைக்கட்டின் புறநீர்ப்பிடிப்புப் பகுதி இது. சாலையில் நின்றாலே நீலநீர்வெளியை கீழே பார்க்க முடியும். குறிப்பிடத்தக்க செல்ஃபி மையம் இது. அங்கே நின்று வெள்ளரிக்காய், அன்னாசிப்பழக் கீற்றுகளை சாப்பிட்டோம். சம்பிரதாயமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.

செல்லும் வழியில் சாலையோரமாக ஸிப் என்னும் கயிற்றில் பறக்கும் பயிற்சிக்கான இடமிருப்பதை கண்டோம். தலைக்கு ஆயிரம் ரூபாய். அரங்கசாமியும் சந்திரசேகரும் அதில் ஏறி கொக்கியில் தொங்கிக்கொண்டு இரும்புக் கம்பி வழியாக ஒரு மலைப்பள்ளத்தாக்கை வானில் கடந்து சென்றார்கள். நான் ஏற்கனவே அமெரிக்காவில் அதில் சென்றிருக்கிறேன். அருண்மொழிகூட பறந்தாள். பார்க்கத்தான் பயங்கரமாக இருக்கும். என்ன ஏது என உணர்வதற்குள் வந்து சேர்ந்திருப்போம்.

ஷில்லாங்கை கடந்து சென்று குகைகளின் தோட்டம் (Bri Ki Synrang) என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இடத்திற்குச் சென்றோம். இது ஓர் இயற்கையான மலைப்பகுதி. பாறைகள் வழியாக அரித்துச்சென்ற மழைநீர் பலவகையான குகைகள், பாறைக்குழிகள், பாறைக்குடைவுகளை இங்கே உருவாக்கியிருக்கிறது. அவற்றை இணைத்து ஒரு சுற்றுப்பாதையை அமைத்து சுற்றுலா மையமாக ஆக்கியிருக்கிறார்கள்.

குளிர்ந்த குகைகளுக்குள் நீர் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. அருவிகளில் கொஞ்சமே நீர் விழுந்தது.  ஆனால் நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் துப்பாக்கிக் குண்டுகள் போல உடலில் பட்டன, மேலே பனியுருகி வந்த நீர் அது. அருவிகளினூடாக, பாறைகளின் இடுக்குகளினூடாக நடந்தோம். சட்டென்று மண்ணுக்குள் புகுந்து மறுபக்கம் வெளிவந்தோம். ஆனால் இவை சுண்ணாம்புக்கல் குகைகள் அல்ல. ஆகவே அத்தகைய குகைகளில் காணப்படும் ஸ்டால்கமைட் எனப்படும் சுண்ணக்குவைத் தொங்கல்கள் இங்கில்லை.

சிவனை குகேஸ்வரன் என்கிறார்கள். மனக்குகை என்கிறார்கள். குகைகள் மனத்திற்கு சரியான உவமை. ஸ்டால்கமைட் வடிவங்களால் விந்தையான, விளங்கமுடியாத, அருவ உருவங்கள் கொண்ட குகைகளும் மனங்கள்தான். அங்கே கனவு நிறைந்துள்ளது. இக்குகைகள் மௌனம் நிறைந்தவை. துளிச்சொட்டும் ஒலி மந்திரம் போல நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இவை ஊழ்கத்திலமைந்த குகைகள்

ஓர் அருவியில் அரங்கா குளித்தே ஆகவேண்டும் என்றார். சொல்லிப்பார்த்தோம், ஆனால் பொதுவாக ‘தண்ணிக்கோட்டி’ களை தடுக்க முடியாது. சட்டையையும் ஜீன்ஸையும் கழற்றிவிட்டு இறங்கிவிட்டார். அப்படியே செங்குத்தாக உறைந்து கீழே போய் மூச்சு வாங்க மேலே வந்து பாறையில் தொற்றி ஏறி அமர்ந்து ஹ்ஹ் ஹ்ஹ் என ஏதோ சொன்னார்.

என்ன சொல்கிறார் என்பதை மீண்டும் அவர் தமிழில் சொன்னபோது புரிந்துகொண்டோம். “தோலே உறைஞ்சு மரத்துப்போச்சு சார்”. தண்ணீருக்கு அதிதண்மை. அவர் சுட்ட சீனிக்கிழங்கு போல ஆனார். ஆனால் நல்லவேளையாக வெயில் இருந்தது. அதில் நின்று நின்று தன் உயிரை மீட்டுக்கொண்டார். சூரிய நமஸ்காரம் ஏதாவது செய்வார் என நான் எதிர்பார்த்தேன். சமயசந்தர்ப்பம் இல்லாமல் அவரிடமிருந்து பீரிடும் திருப்பாவை ஓங்கி எழ இருபது நிமிடங்கள் ஆகியது.

ஓர் அமெரிக்கர் அவருடைய நண்பரான ராணுவ அதிகாரியின் விருந்தினராக வந்திருந்தார். அவருக்குக் காவலாக ஒரு ராணுவக்குழு வந்திருந்தது. அவ்வீரர்கள் தமிழகத்தினர். அவர்களுடன் பேசினோம். அவர்கள் அனைவரிடமும் காணும் பொதுவான உணர்ச்சி ‘ஆத்தாடி எதுக்கு இவ்ளவு தூரம் வந்திருக்காங்க?’ என்னும் வியப்புதான். 

குகைத்தோட்டத்தின் அருகே ஓர் உணவகத்தில் நூடில்ஸ் சாப்பிட்டோம். நான் அதிலுள்ள நீரை மட்டுமே குடித்தேன். மேகாலயாவின் நூடில்ஸ்- மாகி- அனைத்திலும் தாராளமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் சத்து என்பது மிளகாய்ப்பொடிதான். மொத்த மிளகாயும் நம் சாத்தூரில் இருந்து கிளம்பிச்செல்வதாக இருக்கும்.

சிரபுஞ்சி அருகே உள்ள நோஹாலிகை (Nohkalikai Falls ) அருவி மேகாலயாவிலேயே உயரமானது. அவர்கள் அதை இந்தியாவிலேயே உயரமானது என சொல்கிறார்கள். இவை இன்னமும் பொதுவான நம்பிக்கைகளாகவே உள்ளன. சிரபுஞ்சி என்பது ஒரு ஓங்கிய மலைமுடி. வங்கக்கடல் நோக்கி திரும்பி நின்றிருக்கிறது. அதன்மேல் கடலில் இருந்து எழும் நீராவி வந்து மோதி முகில்களாகி மழை பொழிந்து பேரருவிகளாக பள்ளத்தில் விழுந்து மலைப்பள்ளத்தாக்கில் ஓடி மறைகிறது. சிரப்ஞ்சியில் இன்றும் மழை மிகுதி. ஆனால் கோடையில் குடிக்க நீர் இருக்காது.

அருவி மிகமெலிந்து வெண்ணிறக் கோடாக விழுந்துகொண்டிருந்தது. 340 மீட்டர் உயரம் கொண்டது. சிரபுஞ்சியின் அருவிகளை ஆகஸ்டில்தான் பார்க்கவேண்டும். அவை ராட்சதத்தனமாக இரைந்துகொண்டிருக்கும். நான் முன்பு வந்து அவற்றின் பேருருவை கண்டிருக்கிறேன். இப்போது இன்னொரு மலைமுடியில் இருந்து அவை மெல்லிய சரிகை என அசைந்து கீழிறங்குவதைக் காண்பது ஒரு வகையான இனிய உணர்வை உருவாக்குவதாகவே இருந்தது

கா லிக்காய் (Ka Likai) என்னும் காசி பழங்குடி இனப்பெண்ணின் கதையை இந்த அருவியுடன் சேர்த்துச் சொல்கிறார்கள். கணவனை இழந்த லிக்காய் இன்னொரு மணம் செய்துகொண்டாள். குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக அவள் கடுமையான சுமைதூக்கும் வேலையைச் செய்து வந்தாள். அவள் வேலை முடிந்து ஒருநாள் திரும்பி வந்தபோது மாமிசம் சமைக்கப்பட்டிருந்தது. பசிவெறியில் அவள் அதை முழுமையாக உண்டாள். வெற்றிலை போட முயன்றபோது அங்கே தன் குழந்தையின் வெட்டுண்ட விரல் கிடப்பதை கண்டாள். அவளுடைய இரண்டாவது கணவன் குழந்தையை கொன்று சமைத்துவிட்ட செய்தி தெரியவந்தது. அவள் இந்த அருவியில் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

அந்தக் கொடூரமான கதைக்கும் மெலிந்த வெண்விழுதாக தெரிந்த அருவிக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் பழங்குடிகளின் பெரும்பாலான கதைகளில் உருவகங்களை விட யதார்த்தமே மிகுதி. இந்நிகழ்வும் உண்மையில் நடந்ததாக இருக்கலாம்

அருவியை பார்ப்பதற்காக ஓர் உணவகத்தின் பின்னால் வராந்தா ஒன்றை உருவாக்கியிருந்தனர். அது மாபெரும் மாளிகையொன்றின் உப்பரிகை போலிருந்தது. அங்கே அமர்ந்து ஒரு டீ குடித்தபடி அருவியை பார்த்துக்கொண்டிருந்தோம்

கீழே இறங்கிச் செல்ல பாதை இருந்தது. அங்கே சென்று கூடாரம் அமைத்து தங்குவது சுற்றுலா மரபாக இருக்கிறது. எறும்புகள் போல சிற்றுருவங்களாக கீழே அருவி பொழியும் இடத்தில் நின்றிருந்தவர்களை காண முடிந்தது. தேவர்கள் பார்ப்பதுபோல அவர்களை வான்விளிம்பில் நின்று பார்த்தோம்.

மாலையில் அந்திச்சூரியன் அணைவதை அந்த மலைமுகடின் விளிம்பில் நின்று பார்த்தோம்.எங்கள் பயணங்களில் முற்றிலும் புதிய ஊரில் கதிரணைதலைப் பார்ப்பதென்பது எப்போதுமே ஒரு வழக்கமாக உள்ளது. அது ஒவ்வொரு முறையும் வேறு வேறு சூரியன்தான். அந்த தருணத்தில் நம்முள் கைகூடும் அமைதி, தனிமை, சிந்தனையற்ற நிலை மிக அரிய ஒரு தருணம்

மாலையில் வாகென் (Wahken) என்னும் காசி இனக்குழுவின் ஊருக்குச் சென்றோம். இருபுறமும் மூங்கில்கள் செறிந்த சாலையின் வழியாக இருளில் சென்றுகொண்டே இருந்தோம். வழியில் விந்தையான விலங்குகள் செல்வதுபோல் தெரிந்து ஒருகணம் விழி திகைத்தோம். மலையில் இருந்து மூங்கில்பூக்களை வெட்டி பெரிய தொகுப்புகளாக முதுகில் சுமந்து செல்பவர்கள். அவைதான் அஸாம் புல் என்னும் பெயரில் நம் ஊரில் துடைப்பங்களாக விற்கப்படுகின்றன. அஸாம், மேகலாயா பகுதிகளில் வளரும் ஒருவகையான மூங்கிலின் பூக்கள் அவை. நான் நாணல் என்றுதான் முன்பு எண்ணியிருந்தேன்.

காசி ஊர் சிறியது . ஐம்பது குடும்பங்கள் இருக்கலாம். ஆனால் வறுமையானது அல்ல. வீடுகள் ஓரளவு புதிய கான்கிரீட் கட்டிடங்கள். ஓரிரு மரக்கட்டிடங்களும் இருந்தன. பழைய காசி முறைப்படி மூங்கில்தட்டிகளும் மரச்சட்டங்களும் கொண்டு கட்டப்பட்டவை. நல்ல குளிர் இருந்தது. வீடுகளின் நடுவே இருந்த பொது முற்றத்தில் ஒலிப்பெருக்கிப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடியிசை ஓடிக்கொண்டிருந்தது

எங்கள் தங்குமிடத்தை கண்டடைய கொஞ்சம் தாமதமாகியது. நாங்கள் வீடுவீடாகச் சென்று கேட்டுக்கொண்டிருந்ததை எங்களுக்கு பதிவுசெய்திருந்த இல்லத்தின் உரிமையாளர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் நாங்களே அவரிடம் சென்று கேட்கும்வரை அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களின் இயல்பு அது. இரண்டு அறைகள் எடுத்திருந்தோம்.

அந்த ஊர்ப்பொதுமுற்றத்தைச் சுற்றி நாலைந்து கடைகள், இரண்டு உணவகங்கள். நண்பர்கள் அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். அந்த உணவக உரிமையாளரான பெண்மணி சமைத்து வைத்திருந்த மொத்தத்தையும் அரங்கசாமியே உண்டுவிட்டதாக கிருஷ்ணன் சொன்னார். நாங்கள் இருந்த கட்டிடத்தின் முகப்புத் திண்ணையில் ஓர் அம்மாள் மீன் வைத்து விற்றுக்கொண்டிருந்தாள். நன்னீர் மீன். சாளை அளவுக்கு பெரியது. பல்வேறு காய்கறிகள், மூங்கில் குருத்துக்கள் விற்கப்பட்டன.

குழந்தைகள் கீச்சுக்குரலெழுப்பி விளையாடின. எல்லா குழந்தைகளும் போர்வையை மண்டையைச் சுற்றி கட்டி மோவாயில் இறுக முடிச்சிட்டு தோள்வழியாக போட்டிருந்தார்கள். சின்னக்குழந்தைகள் எங்களை வேடிக்கை பார்த்தன. வழக்கம்போல தம்பிகளை இடையில் தூக்கிக் கொண்ட அக்காக்கள் நிறைய தென்பட்டனர். பெரும்பாலான காசி இனப்பெண்கள் வாய் புண்ணாகுமளவுக்கு வெற்றிலை போடும் பழக்கம் கொண்டிருந்தார்கள்

இரவு எட்டு மணிக்கு சட்டென்று அங்கே ஓர் தேர்தல் பொதுக்கூட்டம் தொடங்கியது. மேடை எல்லாம் இல்லை. ஒரு மேஜை, நாலைந்து நாற்காலிகள், ஒரு மைக், அவ்வளவுதான். பேசியவர் மேகாலயாவின் சீமான். உக்கிரமான ஓங்கிய குரல், சட்டென்று எகிறும் ஓசை, உடனே தழைந்து நகைச்சுவை. எதையோ ஆவேசமாக வலியுறுத்தினார். எதையெதையோ நையாண்டி செய்தார். 

கூடியிருந்தவர்கள் சிரித்தனர். கைதட்டினர். நூறு நூற்றைம்பதுபேர் இருப்பார்கள். ஆர்வமாக அவர் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் பெண்கள்தான் இருந்தனர். ஆண்கள் அக்கிராமத்திலேயே அதிகம் தட்டுப்படவில்லை. குழந்தைகள் ஊடே புகுந்து விளையாடிக்கொண்டிருந்தன. 

அத்தனை தீவிரமான சொற்பொழிவு ஜெர்மனியில் இருந்து மேகாலயா வரை வந்திருக்கிறது வியப்புக்குரியதுதான். ஜனநாயகம் என்பது காற்று, மேடைப்பேச்சு அதனால் அடித்து வரப்படும் தூசு. அல்லது நேர் மாராகவா?

அவர் காங்கிரஸுக்கு ஆதரவான பேச்சாளர் என்று கேள்விப்பட்டேன். காங்கிரஸ் இம்முறை மேகலாயாவில் நேரடிப்போட்டியில் இல்லை. திருணமூல்காங்கிரஸாக மாறி வாக்கு கோருகிறது. இது காங்கிரஸை ஆதரிக்கும் ஒரு பழங்குடிச் சபையின் பேச்சாளர். மேகாலயாவில் ஆளும் கட்சி பாரதிய ஜனதா. முன்னாள் காங்கிரஸ் அரசியல்வாதி பி.ஏ.சங்மாவின் மகன் முதல்வர். மேகலாயாவில் பிரிவினைவாத அரசியல் இன்றில்லை. அவர்கள் அங்கே ஒரு தரப்பே இல்லை. முழுமையாகவே அவர்கள் அரசாலும் மக்களாலும் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அங்கே இன்றுள்ளது பிரிவினையை மையமாக்கிய அரசியல் அல்ல. மேகாலயா வளர்ச்சியின் சுவையை கண்டுவிட்டது.

ஒரு சொல் புரியாத பேச்சு. சீன மொழியின் ஒலி காதில் விழுந்தது. ஹ்வா வ்வா என்னும் வகையான நீட்சிகள். ஆனால் பேசப்படுவது புரிந்தது. ‘உங்களுக்கு எவரும் எதுவும் செய்யவில்லை. எல்லாவற்றையும் நாங்களே செய்வோம்’ அவ்வளவுதான். வேறென்ன ஒரு தேர்தல் பரப்புரையில் சொல்லிவிட முடியும்? நம்மூரில் என்றால் நிபுணர்கள் வந்து கொஞ்சம் புள்ளிவிவரங்களை சேர்த்து அதைச் சொல்வார்கள்

நல்ல குளிர். பத்து பத்தரைக்கெல்லாம் பேச்சு நிறைவுற்றது. அவ்வளவு நேரமும் ஒரே ஆள்தான் பொரிந்து கொண்டிருந்தார். கனமான போர்வைக்குள் இன்னொரு இரவின் தூக்கம்

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:35

ஆ.குப்புசாமி

[image error]

எந்தப் பண்பாட்டிலும் மிக எளிதாகப் புகழ்பெறுபவர்கள் நிகழ்த்துகலை ஆளுமைகள். சினிமாவும் ஒருவகை நிகழ்த்துகலைதான். மிக எளிதாக மறக்கப்படுபவர்களும் அவர்களே. ஏனென்றால் நிகழ்த்துகலை உடனடியாக முன்னாலமர்ந்திருப்பவர்களை கருத்தில்கொண்டு நிகழ்வது. ஆகவே உடனடியாகக் கவர்வது. தமிழக நிகழ்த்துகலை ஆளுமைகள் பெரும்பாலும் ஆவணப்படுத்தப்படாமல் மறைந்தனர், மறைந்துகொண்டிருக்கின்றனர். ஒப்புநோக்க மலேசிய, இலங்கை நிகழ்த்துகலை ஆளுமைகள் ஆவணப்படுத்தப்படுகின்றனர். ஆ.குப்புசாமி அவர்களில் ஒருவர். 

ஆ.குப்புசாமி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:34

ஆலயக்கலை, கடிதம்

[image error]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆலயத்தை வழிபாட்டிடமாக அணுகுவதில் இருந்த மனத்தடையை குறைத்தது. ஆலயம் பன்முக கலை பண்பாட்டு தொகை, அவை தொல்லியல் எச்சங்கள் அல்ல என அறிய உதவிய ஜெயக்குமார் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி. இந்த பயிற்சி முகாமின் அனுபவங்களை நான் இப்படி தொகுத்து கொள்கிறேன்.

ஆலயங்களின் முக்கியதுவம்

கோவில்கள் என்பவை வழிபாட்டு தலம். அவை ஒற்றை சிலையென மரத்தின் கீழ் அமைந்தோ அல்லது மிகப்பெரிய சிக்கலாக அமைந்த கற்றளியாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை வழிபாட்டிடங்கள் என மட்டும் குறுக்கி அறிவது தவறு. அவை பன்முக பண்பாட்டு பரிமாணங்கள் கொண்டவை.

1. கலை மற்றும் கலை வரலாறு: கோயில்கள் என்பவை சிற்ப தொகுதிகள், கட்டுமானங்கள், ஓவியங்கள் மற்றும் வழிபாட்டுடன் இணைந்த இசை, நடன, நாடக மரபுகளை கொண்டவை. அவை வரலாற்றின் கலை பரிணாமத்தின் தொகுதிகளாகவும் பார்க்க இயலும்.

2. ஆன்மீக தத்துவ மரபுகள்: கோயில் என்பது தத்துவத்தின் பௌதிக வெளிபாடே. அவை தத்துவ மரபின் வளர்ச்சியையும் அவற்றின் வரலாற்று பரிணாமத்தையும் பின்புலமாக கொண்டவை. தஞ்சை கோயிலின் வாயில் சிற்பமும், விமானமும், கருவறை தெய்வமும் எதை சுட்டுகின்றன என இலக்கிய தத்துவ பின்புலத்துடன் விளக்கியது மிகவும் அருமை.

3. வரலாற்று ஆவணங்கள்: கல்வெட்டுகள், செப்பேடுகள், இறையிலி நிலங்கள் என கோயிலுடன் இணைந்த வரலாற்று ஆவணங்கள் என கொள்ளலாம். பண்டைய கோவில்கள் அரசதிகாரத்திலும், பண்பாட்டிலும் மையத்தில் இணைந்த இடம். அவற்றின் வழியாக நிர்வாகமும் எப்படி இணைக்கப்பட்டது என்பது சுவாரசியமானது

4. தொன்மங்கள்: கோயில்கள் தொன்ம வரலாறுகளின் தொகையும் கூட. அவை வரலாற்று இருப்பையும் மீறி அமைபவை. அவற்றின் இருப்பு தொன்ம காலத்தில் தொடங்கி வரலாற்று காலம் வரை பல அடுக்குகளின் நிலைப்பவை. ஆலயங்களின் இருப்பு அதை அறிவோறின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

5.விழாக்கள்: கோயிலுடன் இணைந்த விழாக்களும் வரலாற்றின் முக்கியத்துவம் கொண்டவை. அவை தன்னளவில் ஒரு வணிக செயல்பாடு கொண்டது. மற்றும் அவை வரலாற்றில் வளர்ந்து வந்தவை என்பதால் அவற்றை ஒருங்கிணைப்பதும் எளிது. மேலும் அவை கோயில் மரபுடன் இணைந்த பல கலைகளுக்கும் இடமளிப்பது.

6. வழிபாடு: கோவில்கள் வழிபாட்டு  தலங்களே. அவற்றுடன் இணைந்த சடங்குகளும், கலைகளும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்தவை.

இத்தகைய பன்முக பரிமாணம் கொண்டதால் அவை எல்லோருக்குமான பண்பாட்டு மரபுரிமையை அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவருக்கேயான வாழ்க்கை நோக்கிற்கு இடமளிப்பவை. அவற்றை ஆன்மீகமாகவோ, கலையாகவோ, தத்துவத்ததிற்காகவோ, வரலாற்றிகாகவோ அல்லது அவை எல்லாவற்றிற்காகவும் அணுகலாம். அங்கே கடவுளின் இருப்பும் இன்மையும் அவரவரின் நோக்கை  பொறுத்தது    .

உருவவழிபாடு: சிலைகள் என்பவை உருவழிபாட்டை சுட்டுபவையா? இந்த கேள்வியின் வழியான உரையாடல் மிக முக்கியத்துவமானது. ஒரு நூலின் வழியே அறிந்த கருத்துதான். உருவம் அருவத்தை சுட்டி நிற்கிறது. ஆனால் இவ்வுரையாடல் மிகபெரிய திறப்பை அளித்தது. உருவம் தியானத்தில் தோன்றியது, தத்துவ பின்புலம் கொண்டது. அவ்வனுபவம் சொற்களாக்கி அளிக்கப்படுகிறது. அச்சொற்களுக்கான உருவம் சிற்பியால் அளிக்கபடுகிறது. அச்சிற்பம் ஒரு குறியீடென அந்த தியானத்தில் அடைந்த அனுபவத்தை சுட்டி நிற்கிறது. அப்படியென்றால் இது கவிதைக்கான வரையறையே கொண்டுள்ளது. ஞானியின் அனுபவத்தை, நோக்குபவனும் அறிய அக்குறியீடு நிலைபெற்றுள்ளது. இது தன்னளவில் நுண்மையாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் இடமளிக்கிறது. அப்படியெனில் படைப்பூக்க நிலையிலே சிற்பம் அர்த்தபடலாம், அர்த்தங்கள் நுண்மையாக வேறுபடலாம், வளர்ந்து செல்லலாம். பக்தனுக்கும் தத்துவ அறிஞருக்கும் மட்டுமல்ல, படைப்பூக்க மனத்திற்கு கோயில் ஒரு படிம தொகையையே அளிக்கிறது.

சிற்பமும் கலைகளும், இலக்கியமும்: ஆலயகலை தனித்து இயங்குவதில்லை. ஆலயம் ஓவிய இசை நடன நாடக  கலையுடன் இணைந்து பரிணாம மாற்றம் அடைவது. நாடக, இசை நாடக கலை, சிற்ப கலையின் படிமவியலுடன்  (முத்திரைகள், ஆயுதங்கள், ஸ்தானம், ஆடை, நகைகள்) கொண்டும் கொடுத்தும் வளர்வதை ஜெயக்குமார் சிறப்புடன் விளக்கினார். அவரின் கலாஷேத்ரா அனுவபம்  அவ்விணைப்பை     சிறப்புடன் கூற உதவியது. கிருஷ்ணனை காட்ட குழலை பயன்படுத்தும் பரத மரபும், பீலியை காட்டும் ஒடிசி மரபும் எப்படி வேறுபடுகிறது என முத்திரைகளின் மூலம் காண்பித்தார்.

இலக்கியதுடனான ஆலய கலையின் உறவு அஜிதன் அவர்களின் வினாவினால் விரிவடைந்தது. தாரசுரத்தின் ஐராவதேஸ்வர கோவில் சிற்பதொகைகளை பற்றிய வகுப்பில், பெரியபுராணமும் தாராசுர கோயிலும் கிட்டதட்ட சமகாலத்தவையென்றால், இலக்கிய பிரதி  படைத்த காலத்திலேயே புகழ்பெற்றிருந்ததா என்றதற்கு, அதன் முன்னோடி இலக்கியங்களான திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி அக்காலத்தில் சிற்பிகளின் பொது அறிவு பரப்பில் இருந்திருக்கலாம் என்றார் ஜெயக்குமார். மேலும் தஞ்சை கோயிலின் நாட்டிய சாஸ்திர நடன கரணங்களை கொண்ட சிற்ப தொகைகள், சிற்பிகளின் பல்கலை அறிவிற்கு சான்றாக அமைபவை.  அப்படியெனில் ஒரு சிற்பிகளின் குழு கோயிலின் கட்டுமான பணியின் காலம் முழுவதும் (6 வருடம் தஞ்சை பெரிய கோயிலுக்கு) படைப்பூக்க மனநிலையுடன் தொடர்ந்து செயல்படுவது ஒரு பெருங்கனவே. அதுவும் ஆயிரக்கணக்கான சிற்பிகள் ஒரு குழுவாக, சிற்ப கலையும் தத்துவத்தையும் இலக்கியங்களையும் மற்ற கலைகளை பற்றி உரையாடியும் களித்தும் செயல்புரிவது போன்ற கற்பனை மனதிற்கு இனியதாகும். இந்தப் பின்புலத்தில் ’ஆலயங்கள் அடிமைகளால் அமைக்கபட்டதா’ என சிறு நகைப்புடன் கூறப்பட்டது. மேலும் கருவறை சுற்றிய கோஷ்டங்களில் அமைக்கும் சிற்பங்களில், உள்ளுர் பண்பாட்டு சிற்பங்களுக்கும் இடமளிக்கும் ஆகம விதிகள் சிற்பிகளுக்கு அளிக்கும் சுதந்திரத்தையும் பன்முகதன்மையும் கொண்டது. ஆகவே ஆலயங்கள் அனைத்திந்திய தன்மையும், உள்ளூர் பண்பாட்டு சிறப்புகளும் ஒருங்கே கொண்டது.

ஆலய கலை பயிற்சி முகாமின் மூலம், ஆலய கலையை அணுகுவதற்கான அடிப்படைகளை விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது. கட்டுமான மற்றும் சிற்ப கலை விதிகள், விழாக்கள், மற்ற கலைகளின் பங்களிப்பு ஆகியவற்றை அறிய முடிந்தது. இத்தகைய சிறப்பு மிக்க இப்பயிற்சி முகாமை ஒழுங்கு செய்ததற்காக ஜெயக்குமார், அந்தியூர் மணி மற்றும் தங்களுக்கு நன்றி. களப்பயிற்சி பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இணையுள்ளங்களுடன் பயணிப்பது மகிழ்வான செயல்தான்.

அன்புடன்

ஆனந்தன்

பூனா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:33

கட்டண உரைகள், கடிதங்கள்

அன்பும் மதிப்பும் மிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் திருப்பூர் கட்டண உரை பாகம் ஒன்றை கேட்டேன்.    கல்தூணையும் வாழும் மரத்தையும் தொட்டு தங்கள் உரை எங்கு செல்கிறது என்று புரியாமல் தவித்தேன்.    எப்படி இணைத்து அர்த்தப்படுத்தப் போகிறார் என்ற தவிப்பு உருவானது.

பண்பாட்டின் இயல்புக்கு மாறான தேக்கநிலையை உருவாக்கி சமூகம் உறைந்து போவதையும்  வாழ்வின் உயிர்ப்பைத் தக்கவைக்க நெகிழ்வு இன்றியமையாதது என்பதையும் அழகாக சொல்லி உரையை நிறைவு செய்தீர்கள்.    அறிவார்ந்த செறிவான உரைக்கு அநேக நன்றிகள்.

தங்கள் வாசகனாக பெருமை கொள்கிறேன்.

ச. பாபுஜி

 

அன்புள்ள பாபுஜி

உருவகங்கள் வழியாகவே நான் சிந்திக்கிறேன். அது எழுத்தாளனின் சிந்தனை வழி. தத்துவவாதியின் வழி அல்ல. ஆகவே அதையே உரையாக முன்வைக்கிறேன். அந்த உருவகங்கள் வாசகனுக்குள் நிலைகொண்டால் நான் சொல்வனவற்றை அவனால் வளர்த்துக்கொள்ள முடியும்

 

ஜெ

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

கனிமரமும் கல்தூணும் கேட்டு முடிக்கவில்லை, அதற்குள் ஸ்ருதி டிவி ‘விடுதலை என்பது என்ன?’ என்கிற இரண்டு மணிநேர உரையைப் பதிவேற்றியிருக்கிறார்கள். இன்னும் படத்தின் டிரெயிலர்கூட வரவில்லை; பாடல் கேட்டேன், பிடித்திருக்கிறது. பிந்தைய உரையைக் கேட்கலாமா? மொத்தத்தையையும் கேட்டுவிட்டுப் படத்திற்குப் போவதில் பாதிப்பு எதுவும் இருக்காதே?

விஜயகுமார்.

 

அன்புள்ள விஜயகுமார்

உரைகளை முழுக்கக் கேட்பது நல்லது. ஒரு தொடர்ச்சி உண்டு. ஆனால் தனித்தனியாகவும் கேட்கலாம். தனி உரைகள்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:31

அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலம்

அகரமுதல்வன் தமிழ் விக்கி

அன்பின் ஜெ!

ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து இப்போது விகடன் பிரசுரத்தின் மூலம் பதிப்பாகியிருக்கும் “கடவுள் பிசாசு நிலம்” புத்தகம் பெருமளவில் வாசக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நூல் குறித்து ஒரு கலந்துரையாடலைச் செய்து ஒரு நேர்த்தியான படப்பிடிப்பின் வழியாக பதிவு செய்தேன். எழுத்தாளரும் விமர்சகருமான ஜா.ஜா, எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன், கவிஞர் வேல்கண்ணன் ஆகியோர் “கடவுள் பிசாசு நிலம்” குறித்த தங்களது மதிப்பீட்டையும், விமர்சனங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டனர். இதனை உங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=I7XOG217V0E

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2023 10:31

February 25, 2023

எழுகதிர் நிலம்-7

தவாங்கில் இருந்து பெப்ருவரி 13 ஆம் தேதி அஸாம் நோக்கி கிளம்பினோம். இந்த பயணத்தில் இரண்டுநாட்கள் அனேகமாக எதுவுமே பார்க்கவில்லை. ஆனால் பயணமே ஒரு பெரிய சுற்றுலா அனுபவமாக அமைந்தது. முதலில், முந்தையநாள் அரங்கசாமி இரவுணவை தடபுடலாகக் கொண்டாட விரும்பினார். அவர் பகலில் முழுமையாகவே எதுவும் உண்பதில்லை. இரவில் மாமிச உணவு ஒருவேளை. கீட்டோ டயட். இருபது கிலோ எடை குறைத்து தன்னை இளைஞனாக எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இணையத்தில் தேடிக்கண்டடைந்த உணவகத்திற்குச் சென்றோம். ஆளுக்கொன்றாக உணவு ஆணையிட்டனர். நான் ஒரு சிக்கன் சூப் மட்டும் அருந்த முடிவெடுத்தேன். அத்தனை உணவும் இருபது நிமிடங்களில் மேஜைக்கு வந்தபோதே யோசித்திருக்கவேண்டும். உணவகத்தில் நாங்கள் மட்டுமே உண்டவர்கள். மறுநாள் ஆனந்தகுமாருக்கு வாந்தி. எனக்கு வயிற்றுப்போக்கு. ஆனால் சீக்கிரமே சரியாகிவிட்டேன். சிக்கன் சூப்பை நானும் ஆனந்த்குமாரும் மட்டுமே குடித்தோம். அதில் ஏதோ இருந்திருக்கிறது

நாங்கள் தவாங்கில் இருந்து ஹெலிகாப்டரில் கௌஹாத்தி திரும்புவதாக இருந்தது. தவாங் வந்ததில் இருந்தே கௌஹாத்தியில் இருந்து ஹெலிகாப்டர் வருகிறதா என்னும் விசாரணை இருந்துகொண்டிருந்தது. அங்கிருந்து வரும் ஹெலிகாப்டர்தான் திரும்பச் செல்லவேண்டும். முந்தைய நாட்களில் அது மோசமான வானிலை காரணமாக ரத்துசெய்யப்பட்டிருந்தது. 

தவாங்கில் இருந்தபோது பும்லா பாஸுக்கான வழி திறந்திருக்கிறதா என்னும் கேள்வி அலைக்கழித்தது. நாங்கள் வருவதற்கு முன்பு இரண்டுநாட்கள் அது கடும் பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்தது. அன்றுதான் திறந்தது. ஆகவே ஹெலிகாப்டரும் வருமென நினைத்தோம். அதற்கேற்ப அன்று வானிலை நன்றாக இருந்தது.

ஆனால் மறுநாள் வானிலை மிக மோசமாக ஆகிவிட்டது. இமையமலை பகுதிகளில் ஹெலிகாப்டர் பயணமென்பது மரணத்தை எதிர்நின்று பார்ப்பதுதான். ஹெலிகாப்டர்கள் பழையவை. அரசு பராமரிப்பவை. அத்துடன் இந்திய ஹெலிகாப்டர்கள் பனிப்பொழிவை எதிர்கொள்ளத்தக்கவை அல்ல. பலமுறை அமைச்சர்களே விபத்துக்குள்ளாகி மறைந்துள்ளனர். 2011ல் அருணாச்சல் முதல்வர் டோர்ஜி காண்டுவும் நால்வரும் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர்.

ஹெலிகாப்டர் வரவில்லை என்பது உறுதியாகியது. ஆகவே காரிலேயே கௌஹாத்திக்கு புறப்பட்டோம். ஆனால் எங்கள் ஸைலோ கார் வழியில் முக்கி முக்கி நின்றுவிட்டது. ஒரு கிலோமீட்டர் ஓடும், நின்றுவிடும். வழியில் ஓரிடத்தில் பழுதுபார்க்கச் சென்றோம். அங்கே ஒருமணிநேரம் தாமதம். அங்கே பார்க்கத்தக்க பழுது அல்ல என்று தெரிந்தது இறுதியாக முன்னா காம்ப் என்னும் இடத்தில் நின்றுவிட்டது.

இன்னொரு வண்டிக்கு போனிலேயே பேசி ஏற்பாடு செய்தோம். ஒரு சிறிய கடையில் ஒரு மணிநேரம் காத்திருந்தோம்.இப்பகுதியில் சிறிய வீடுகள், கடைகள் கூட ஏராளமான பூந்தொட்டிகளுடன் அழகாக பேணப்படுகின்றன. டீ குடித்தோம். ஒருவழியாக ஒரு வண்டி வந்தது. ஏற்கனவே அதைப்போன்ற ஒரு வண்டியை பார்த்து கேலிசெய்திருந்தோம். அதைவிட மோசமான வண்டி. டாட்டா சுமோ. அதன் சக்கரங்கள் பரிபூரணமான வழுக்கை.

ஆனால் வேறுவழியில்லை. ஓட்டுநர் இரவு பத்துமணிக்கே கௌஹாத்தி கொண்டுசென்று விட்டுவிடுவதாகச் சொன்னான். ஏழு மணி நேரம் பயணம் என்றது கூகிள். அப்போது முன்மதியம் பதினொரு மணிதான். அப்படியென்றால் போய்விடலாமே என முடிவெடுத்தோம். வெறும் 295 கிமீதான் இருந்தது. ‘ஒய் நாட்?’ என்றார் காப்டன் கிருஷ்ணன். ‘சலோ கௌஹாத்தி!”

எத்தனை அப்பாவிகள் என எங்கோ எவரோ சிரித்திருக்கவேண்டும். டாட்டா சுமோ எங்களை அதிரடித்தது. பாதை மொத்தமாகவே ஒரு மாபெரும் ஸ்க்ரூ போலிருந்தது. சுழன்று சுழன்று சுழன்று….மாலையானதும் நான் சொல்லிவிட்டேன். இனி பயணம் செய்ய என்னால் முடியாது என்று. ஒருவழியாக கிருஷ்ணனும் அந்த வண்டி அப்படி போய் சேர்ந்துவிடாது என்பதை ஒப்புக்கொண்டார். தங்க இடம் தேடினோம்.ஷெர்கோவான் என்னும் இடத்தில் ஒரு விடுதி கிடைத்தது.

நல்ல விடுதிதான். புதியதாகக் கட்டப்பட்டது. கித்தாரெல்லாம்கூட வைத்திருந்தனர். பாலாஜி ,சந்திரசேகர் ஆகியோர் அதை கையில் வைத்துக்கொண்டு படம் எடுத்துக்கொண்டனர். அது வீணை என்று சந்திரசேகர் கண்டுபிடித்தார். கவுண்டராக இருந்தும்கூட அது ஓர் இசைக்கருவி என அவரால் கண்டடைய முடிந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.சமையலறை இருந்தது. அங்கேயே சப்பாத்தி சுட்டு சாப்பிடத்தந்தனர். நான் எதுவும் சாப்பிடாமல் படுத்துக்கொண்டேன். அங்கே ஒரு சிறு நூலகத்தில் ஹெலென் கெல்லரின் வாழ்க்கை வரலாறு இருந்தது. க.நா.சு மொழியாக்கத்தில் முன்னர் வாசித்திருந்தேன். இன்னொருமுறை வாசித்தேன்.

கண்,காது, வாய் மூன்றையும் இழந்த ஹெலென் உலகை அறிமுகம் செய்துகொள்வது இப்போதும் எனக்கு ஒரு மாபெரும் ஆன்மிக நிகழ்வாகவே தெரிந்தது. குளிர், தென்றல், சூடு ஒவ்வொன்றுக்கும் சொற்கள் உண்டு என அவர் அறிந்துகொள்கிறார். அதேபோல அன்பு, பாசம், வெறுப்பு அனைத்துக்கும் சொற்கள் உண்டு என. சொற்கள் வழியாகவே அவ்வுணர்வுகளை தனித்தனியானவையாக அவர் பிரித்துக்கொள்கிறார். மொழி வழியாக அறிகிறாரா, மொழி வழியாக அவற்றை புனைந்துகொள்கிறரா என்பது முடித்துச் சொல்லிவிட முடியாத ஒரு வினா.

ஆத்மா புறவுலகை கண்டடைவதில்லை, தன்னைத்தானே புறவுலகின் வழியாக கண்டடைகிறது என்னும் பௌத்த மெய்யியல் கொள்கை நினைவுக்கு வந்தது. ஆகவேதான் அது ஒவ்வொரு முறை உலகப்பொருள் ஒன்றை முதன்முறையாக அறியும்போதும் துணுக்குறுகிறது. அந்த அறிதலை அகப்பொறிநிகழ்வு – அந்தகரண விருத்தி என்றே நூல்கள் சொல்கின்றன. அறியபப்டுவது அகமே.

இத்தகைய பயணங்களிலும் எதையாவது படிக்கவேண்டுமா என்ற கேள்வி எனக்கெ உண்டு. ஆனால் இப்படி சம்பந்தமில்லாத இடங்களில் படித்த நூல்கள் நன்றாகவே நினைவில் நீடிக்கின்றன. படித்த இடம்கூட அப்படியே நினைவில் அமைந்துவிடுகிறது. ஹெலென் கெல்லர் என்றாலே இனி இந்த விடுதியைத்தான் நினைத்துக் கொள்வேன் என நினைக்கிறேன்.

இரவில் நெடுநேரம் சுழன்று சுழன்று தூங்கத்திற்குள் அலைந்து கொண்டிருந்தேன். என் உடலுக்குள் இருந்த திரவங்கள் சுழற்சிக்குப் பழகிவிட்டன. உடல்நின்றாலும் அவை இன்னும் நிலைகொள்ளவில்லை. அத்திரவங்களில் நுண்மையான அலையென என் பிரக்ஞை. நீருக்கு தன்னினைவு உண்டு என்றும், அதை உலோகங்களை கலந்து மாற்றியமைப்பதே ஹோமியோபதியின் செயல்முறை என்றும் சொல்கிறார்கள். என் திரவநினைவில் இந்த மலை புகுந்துவிட்டிருக்கிறது

விடுதியில் இருந்து காலையில் எழுந்து கிளம்பினோம். முந்தைய முழுநாளும் காற்றில் இறகுபோலச் சுழன்றிறங்கிக்கொண்டிருந்தோம்.பனிபடர்ந்த மலைகள் மறைந்தன. மரங்கள் செறிந்த காடுகள் வந்தன. வெம்மை தொடங்கியது. அதாவது முந்தைய பனியோடு ஒப்பிட வெம்மை. மற்றபடி நம்மூர் குளிர்காலக் குளிர் உண்டு. கிளம்பும்போது மதியம்தாண்டி கௌகாத்தி என்னும் கணக்கு இருந்தது. தெய்வம் தோற்கடிக்கிறது என்பதனால் மனிதன் கணக்குபோடாமல் இருந்துவிடுகிறானா என்ன? கிருஷ்ணன் மனிதருள் ஒரு மனிதர்.

சாலை மேலும் குறுகிய வளைவுகளாக ஆகியது. நான் என்னை ஒரு பேனாவாக உணர்ந்தேன். என்னைக்கொண்டு சுழித்துச் சுழித்து எவரோ எழுதிக்கொண்டிருந்தார்கள். விரிந்த மலைச்சரிவுகளில். மலையாளத்தில் எழுதுகிறார்கள் என உணர்ந்தேன். எல்லா எழுத்துக்களுமே வளையங்கள்தான். தமிழில் ஒரு ட அல்லது ப போடமாட்டார்களா என ஏங்கினேன்.

வழியில் ஓர் இடத்தில் டீ குடிக்க நிறுத்தினோம். கீழே பார்த்தால் ஒரு  செம்பாலான புத்தர் சிலை நீல தார்ப்பாயால் பாதி மூடப்பட்டிருந்தது. புத்தர்சிலை செய்யும் கலைக்கூடம். உடனே கீழிறங்கிச் சென்றோம். எங்களை தமிழ்நாட்டில் இருந்து வருவதாகச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டோம். அவர்கள் உபசரித்து சிலைகளை காட்டினர்

பத்தடி உயரமான ஒரு புத்தர் சிலை தயாராகிக்கொண்டிருந்தது. இரும்பாலான அடிப்படைக் கட்டுமானம் மீது செம்புத்தகடுகளாலான சிலைப்பகுதிகளை பொருத்தி, உருக்கி ஒட்டி, சிலையை செய்துகொண்டிருந்தனர். செம்புத்தகடாலான சிலைப்பகுதிகள் உலையில் காய்ச்சி வார்க்கப்பட்டு சுத்தியலால் அடிக்கப்பட்டு நுண்மைகள் செதுக்கப்பட்டு தயாராகிக்கொண்டிருந்தன

தரையில் விரல்கள் தனித்தனியாகக் கிடந்தன. மிகப்பெரிய விரல்கள். அந்த புத்தர் கால்வாசி செய்யப்பட்டு பின்பக்கம் இருந்தார். இருபதடி உயரமானவர். அவருடைய ஒரு பகுதி மட்டும் உருவாகி வந்திருந்தது. ஆனால் இரு சிலைகளிலும் ஊழ்கத்திலாழ்ந்த முகம் இருந்தது. 

சிறிய சிலைக்கு ஐம்பது லட்சம் ஆகும் என்றும், பெரிய சிலைக்கு ஒருகோடிக்கு சற்றுமேல் ஆகும் என்றும் சொன்னார்கள். சிறு சுத்தியலால் சிலையின் ஆடையாக அமையப்போகும் பகுதியில் மிகச்சிறு பூவேலைப்பாடுகளை இரு இளைஞர்கள் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். 

நாம் தென்னகத்தில் இத்தனை பெரிய உலோகச்சிலைகளைச் செய்வதில்லை. இங்குள்ள நமது பெரிய சிலைகளெல்லாமே கருங்கல்லால் ஆனவை. திபெத்திய பௌத்தத்தில் கல்லால் சிலை வைப்பது மிகக்குறைவு– அனேகமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அங்கே நல்ல கல் உண்டுதான். ஆனால் கற்சிற்பக்கலை உருவாகவில்லை. அதற்கான காரணங்கள் என்ன என தெரியவில்லை. சமணச்சிலைகள் பெரும்பாலும் கல்லால் ஆனவை என்பதை ஒப்பிட்டு யோசிக்கவேண்டும். இந்தியப்பெருநிலத்தில் மாபெரும் கல்புத்தர்கள் ஏராளமாக உள்ளனர்

திபெத்திய  புத்தர்கள் மரத்தால் செய்யப்பட்டு பொன்பூசப்பட்டவர்கள். அல்லது இதைப்போல செம்பு தகடுகளாலானவர்கள். அண்மையில் சிமிண்டால் ஆன சிலைகளைச் செய்கிறார்கள். அவை சிலைகள் அல்ல, பெரிய கட்டிடங்கள்.  பெருஞ்சிலைகள் பெரும்பாலும் அமுதவர்கள். மிக அரிதாகவே மைத்ரேயர்கள். லடாக்கில் சில இடங்களில் மலைப்பாறையில் மெல்லிய கோடாகவோ புடைப்பாகவோ புத்த மைத்ரேயர் சிலைகளை செதுக்கியிருக்கிறார்கள்.

நம்மூர் உலோகச் சிலைகள் பொள்ளல், வார்ப்பு என இரு முறைப்படி செய்யப்படுகின்றன. இந்த சிலையை பொள்ளல் முறைப்படி செய்யப்பட்டது என வகுக்கலாம். இது எங்கே அமையப்போகிறது என்று கேட்டு அங்கே சென்று பின்னர் பார்க்கவேண்டும் என நினைத்தேன். அதன்பின் அப்படி பெரிய பெரிய கடன்களை இந்த வயதுக்குமேல் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை என விட்டுவிட்டேன்.

மீண்டும் படியேறி வந்து காரில் கிளம்பினோம். மாலைக்குள் சென்றடைந்துவிடலாமென நம்பினோம். எத்தனை தோற்கடிக்கப்பட்டாலும் மனிதன் திட்டமிடாமல் இருப்பதில்லை. கிருஷ்ணன் திட்டமே இயல்பாக ஆனவர். மாலைக்குள் செல்லும் வழியில் பார்க்கவேண்டிய ஓர் அருவியை திட்டமிட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஆணையிட வழி, நேரம் எல்லாவற்றையும் புதிய ‘அப்ரசண்டி’யான பாலாஜிதான் செய்யவேண்டும். நடுவே பாலாஜி சந்திரசேகரை போட்டோக்கள் எடுக்கவேண்டும்.

சந்திரசேகர் தன் மகனின் கறுப்புக் கண்ணாடியை கொண்டு வந்த சந்திரசேகர் வெளிச்சமுள்ள இடத்தை பார்த்ததுமே ‘பாலாஜீ’ என்பார். ‘பாஸ்’ என காமிராவுடன் பாலாஜி எழுவார். கணிசமான புகைப்படங்களில் கண்ணில்லா சந்திரசேகரின் பெரிய முகமும் பின்னணியில் ஏதோ சில மங்கலான காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன. சந்திரசேகருக்கு எதிர்காலத்தில் மொட்டையடித்துக்கொண்டு அகன்ற புன்னகையுடன் தன் கணிப்பொறி நிறுவன விளம்பரங்களில் நடிக்கும் எண்ணம் உண்டு. இளம்நடிகைகளுடன் நடனமும் ஆட விருப்பம்.

சந்திரசேகரின் கறுப்புக்கண்ணாடி அணிந்த தோற்றத்தைப் பார்த்து பார்த்து பழகிப்போய் புத்தருக்கு கறுப்புக் கண்ணாடி இல்லாமல் முகம் மழுக் என இருப்பதுபோல தோன்றலாயிற்று. ‘உலகம் நம்மை பார்க்கவேண்டும், நாம் நம்மையே பார்க்கவேண்டும்’ என்னும் கொள்கையின் வடிவம் கறுப்புக் கண்ணாடி. அதுவும் ஒரு தத்துவம்தானே?

வழியில் கார் சக்கரம் காற்றிழந்து நின்றுவிட்டது.மொட்டைச்சக்கரத்துடன் அந்த வண்டி எப்படி அதுவரை வந்தது என்பதே விந்தைதான். கார்ச் சக்கரம் உபரியாக இருந்தது. அதாவது இன்னும் மொட்டையான ஒன்று. ஆனால் தூக்கி இல்லை. ஓட்டுநருக்கு கவலை இல்லை. எங்களுக்கும்தான். சாலையில் பேசிச்சிரித்து நின்ற எங்களைக் கண்டால் அப்படி சிரிப்பதற்காக நாங்களே வண்டியை நிறுத்தியிருப்பதாகவே தோன்றும்.

சாலையில் அனேகமாக  போக்குவரத்து இல்லை. அவ்வப்போது கௌஹாத்தி லாரிகள். ஏனென்றால் அது மையப்பாதை அல்ல. இன்னொரு பாதை உள்ளது. அதன் வழியாகச் செல்லலாமே என ஏற்கனவே ஓட்டுநரிடம் கேட்டோம். ‘அது நல்ல சாலைதானே?” என்றோம். அவரும் ஒப்புக்கொண்டார். “ஆனால், அந்த வழியாக போகவேண்டுமென்றால் லைசன்ஸ் கேட்பான்” என்றார்.

ஒருமணி நேரத்தில் ஒரு டிரக் நின்றது, அவர்களிடம் தூக்கி இருந்தது. சக்கரம் மாற்றிக்கொண்டிருந்தபோது அந்த ஓட்டுநர் கேட்டார். “என்னிடம் தூக்கி இல்லை என்றால் என்ன செய்வாய்?” எங்கள் ஓட்டுநர் “எவரிடமாவது இருக்கும்” என்றார். “இதுவே இரவென்றால் நான் நிறுத்தியிருக்க மாட்டேன்” என்றார் அந்த ஓட்டுநர். “எவராவது நிறுத்துவார்கள்” என்றார் எங்கள் ஓட்டுநர். மானுடம் மீதுள்ள்ள நம்பிக்கையே அவருக்கு லைசன்ஸை விட வண்டியோட்ட அவசியமாக இருந்திருக்கிறது

முறையான லைசன்ஸ் இல்லாமையால் பூட்டான் எல்லைக்குள் நுழைந்து பலவகையான கிராமங்களின் வழியாகச் சென்றோம். கேரளம்போலிருந்தது நிலக்காட்சி. குழந்தைகள் கூட்டம் கூட்டமாக பள்ளியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தன. சிறுமிகளும் சிறுவர்களும் சைக்கிளில் சாலைகளில் சென்றனர். இனிமையான ஒருவகை மணிவெளிச்சம். அறுவடை முடிந்த வயல்கள்.

ஒருவகை இனிய சலிப்பு நிறைந்த மதியம். அரைத்தூக்க நிலையில் அந்த நிலத்தை பார்த்துக்கொண்டு காரில் அமர்ந்திருந்தோம். எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தது வண்டி. புழுதிமண்டிய கிராமத்துச் சாலைகள். சிறு சிறு ஓடைகள் குறுக்கே செல்லும் வயல்பக்கச் சாலைகள். பூட்டானுக்குள் நுழைந்து மீண்டும் அஸாமுக்குள் திரும்பி மீண்டும் பூட்டானுக்குள் சென்று… ஆனால் எங்கும் வறுமை கண்ணுக்குப்படவில்லை. ஆங்கிலக்கல்வி நன்றாக உள்ளது என சீருடைகளும், வழிதோறும் தெரிந்த பள்ளிகளும் காட்டின.

கௌஹாத்தியை வந்தடைந்தபோது இரவு பத்து மணி கடந்துவிட்டிருந்தது. ஓர் அரைநட்சத்திர விடுதியில் அறைபோட்டோம். வசதியாகவே இருந்தது. நல வெந்நீர். அது வரை எல்லா இடங்களிலும் ஒரு பக்கெட் வெந்நீர்தான் கிடைத்தது. வியர்வை இல்லை என்பதனால் சூடான நீரை அள்ளி உடலில் விட்டுக்கொண்டாலே போதும் என்னும் நிலை இருந்தது. இங்கே வரும் வழி முழுக்க புழுதி. அருணாசலப்பிரதேசமே புழுதியாக மாறி அஸாம் நோக்கி இறங்கிக் கொண்டிருப்பதுபோல. நன்றாகக் குளித்தபோதுதான் மீளமுடிந்தது

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:39

முக்தா சீனிவாசன்

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டம் முதல் தமிழ் வார இதழ்களில் முக்தா சீனிவாசனின் கதைகள் கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. நினைவில் நிற்கும் ஒரு கதைகூட இல்லை. பெரும்பாலானவை கதைச்சுருக்கங்கள் மட்டுமே. ஆனால் அவர் எழுதிய திரையுலக அனுபவங்கள் சுவாரசியமானவை. நாயகன் படம் எடுக்கப்பட்டபோது நிகழ்ந்தவற்றை மணி ரத்னம் எழுதினால் இன்னும் சுவாரசியமாக இருக்கக்கூடும்.  

முக்தா சீனிவாசன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:34

தத்துவ அறிமுகம், கடிதம்

அன்புள்ள ஜெ,

தத்துவ அறிமுக பயிற்சி வகுப்பு முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அமர்வும் தீவிரமும் ஆழமும் சரிவிகிதமாக கலந்திருந்தமையால் சலிப்பின்றி கற்க முடிந்தது. இந்திய சிந்தனை மரபிற்கும் மேற்கத்திய சிந்தனை மரபிற்குமான பொதுவான மற்றும் முக்கியமான வேறுபாடு, தத்துவம் என்னும் கலைச்சொல்லில் இருந்து தொடங்கி படிப்படியாக முன்சென்றது, குறிப்பாக ஒரு ஊர்தியை உவமையாக்கி தத்துவத்தை விளக்கியது  அற்புதமான ஒன்று. நான் அந்த ஒரு உவமையின் வழியே முன்பின் சென்று இயன்ற அளவு கற்றவற்றை நினைவுறுத்திக் கொண்டேன்.

பொதுவாக குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் மீண்டும் மீண்டும் பிழை களைந்து கற்க வேண்டியவற்றை பிழையின்றி, சலிப்பின்றி மூன்று நாட்களில் கற்றுக் கொள்ள முடிந்தது, என்பது எங்களது நல்லூழ். ஆசிரியரின் பெருங்கருணை  குறித்து சம்பவனுக்கு திரௌபதி கூறியதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

வகுப்பில் எடுத்த குறிப்புகளை வைத்தும் இடையில் பொது உரையாடல்களில் நீங்கள் பேசியதை வைத்தும் விரித்து எழுத ஆரம்பித்துள்ளேன் .

கிடைத்தற்கரிய இவ்வாய்ப்பிற்கு மனமார்ந்த நன்றிகள் ஜெ.

சங்கரன் இ.ஆர்

*

தத்துவ வகுப்பிற்கு நன்றி சார் இன்று இணையத்தில் வந்த உங்கள் வரிகளைத்தான் குறிப்பிட விரும்புகிறேன் “தத்துவக் கல்வி என்பது உண்மையில் தத்துவம் என்னும் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கான கல்வி அல்ல. எல்லா அறிதல்களையும் தர்க்கபூர்வமாகவும் முழுமையாகவும் நிகழ்த்திக் கொள்வதற்கான பயிற்சி.அது சிந்தனைப் பயிற்சியேதான். அதற்கு வெறுமே ‘தெரிந்துகொள்வது’ மட்டும் உதவாது. அதற்குமேல் பல செயல்முறைகள் தேவை.

வழிகாட்டுதல்களும் தேவை.-ஜெ” இந்த எண்ணம் எனக்கு அங்கிருந்து வந்ததிலிருந்தே இருக்கிறது கற்றல், புரிதல்,மகிழ்ச்சி,ஆசீர்வாதம் என்று பல இருந்தாலும் வேறொரு தத்துவ பின்னிருந்து வந்த எனக்கு முதல் வகுப்பு என்பது  “தெரிந்துகொள்வது” தான்  கற்ற அனைத்தையும் நினைவிலிருந்து practicing process செய்துகொண்டிருக்கிறேன் குறைந்தது இன்னும் மூன்று வகுப்புகள் இதே போன்று அல்லது இன்னும் கூடுதல் கட்டுப்பாட்டுடன் உங்களிடமிருந்து தேவை ஆகவேதான் நேரிலும் தொடர் வகுப்புகளுக்கு அழையுங்கள் என்றேன்,அதனால் தான் இங்கு வந்து உங்களுக்கு கடிதமும் எழுதவில்லை ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவை அனைத்தும் என் வாழ்வின் மறக்கவியலாத ஒரு அனுபவமாக மாறியிருக்கிறது தெளிவாக சொல்லனும்னா உங்கள் வரி தான் நினைவிலிருந்து எழுகிறது

`நான் அவ்வண்ணம் கிளம்பிச்சென்ற பொழுதுகள் எல்லாமே இன்று எண்ணும்போது அக்கல்வி அளவுக்கே முக்கியமானவையாக உள்ளன.-ஜெ” அத்தகையதொரு அனுபவத்தை அருளியதுக்கு நன்றி ஆசான் ஜெ.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

-அன்பு ஹனிஃபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:31

சுபிட்சமுருகன் – வெங்கி

சுபிட்சமுருகன் வாங்க 

அன்பின் ஜெ,

அன்பும், வணக்கங்களும்.

நேற்று சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” வாசித்தேன்.

மேம்போக்கான, வணிக நாவல் வாசகர்கள் துணுக்குறல்களையும், அதிர்ச்சிகளையும் சந்திக்கக் கூடும். ஆழமான, பாதிக்கும் மேல் வேறொரு தள்த்தில் நிகழ்வதுமான நாவல்; சித்தர் அனுபவங்களும், தேடலின் பித்தும், குடும்பத்தில் முன் தலைமுறைகளின் கர்மத் தொடர்வால் உண்டான திரிபுகளின் அலைதல்களும், வலியும், கண்டடைதலின் பரவசமும், ஆழமன படிமங்களின் மொழியும் அபாரமான வாசிப்பனுபவத்தைத் தந்தன. “திரிபுகளின் பாதை” என்ற தலைப்பிலான உங்களின் முன்னுரை பல திறப்புகளை அளித்தது.

என் இருபத்தி நான்காவது வயதில், 1997 ஜனவரியில் அம்மா இறக்கும்போது, மனம், பெரும் அதிர்ச்சியையும், தாங்க முடியாத வெற்றிடத்தின் அழுத்தத்தையும் நேர்கொண்டது. நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் அப்பா இறந்த போது கூட இத்தனை மன அழுத்தத்தை நான் சந்தித்திருக்கவில்லை; அப்பா இல்லாத அந்த வெற்றிடத்தை அம்மா அன்பினால் சேர்த்து நிரப்பிக் கொண்டிருந்தார். ஆனால், அம்மாவின் இழப்பு பேரிடியாய் இருந்தது; மனம் அந்த உண்மையை/நிதர்சனத்தை ஏற்க மறுத்தது. அதன்பின்னான நாட்களில் இயந்திரம் போல் அன்றாடத்தின் காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அம்மாவின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, தம்பிகளை அவரவர் கல்லூரிகளில் விடுதியில் விட்டுவிட்டு ஓசூர் திரும்பினேன். மனம் “இனி என்ன?” என்ற கேள்விக்கும், சூனியத்தின் இருளுக்கும் மாறி மாறிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஓர் முன்னிரவு, பெட்டியைத் துழாவிக் கொண்டிருந்த போது, அம்மா முன்னர் எழுதிய போஸ்ட் கார்டுகளும், நீல நிற இன்லேன்ட் கடிதங்களும் கிடைத்தன. அம்மாவின் கையெழுத்து…கன்னத்தில் வழியும் நீருடன்தான் எல்லாக் கடிதங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். நெஞ்சிலும், தொண்டையிலும் அதிகரித்துக் கொண்டிருந்த கனம் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமலாகியது; மூச்சுத் திணற ஆரம்பிக்கவே, கைகளில் கடிதங்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தேன். நட்சத்திரங்களில்லாத இருண்ட வானம் பார்த்து கதறி அழுதேன்.

அடுத்த இரண்டு வருடங்கள் மனதில் பெருகிய கேள்விகளோடு இலக்கில்லாமலும், வாழ்வு, மரணம் குறித்த தேடல்களோடு எதன்மேலும் பிடிப்பில்லாமலும் அன்றாடங்களில் உழன்று கொண்டிருந்தேன். ஓஷோவும், ஜேகேயும் அண்மையானார்கள். மனம் பக்தியிலிருந்து கேள்விகளுக்கு/தேடலுக்கு நகர்ந்திருந்தது. யோகாவும், தியானங்களும் கொஞ்சமாக கற்றுக்கொண்டேன். பல ஆசிரமங்களுக்குச் சென்று சில நாட்கள் தங்கி திரும்பி வந்தேன். தத்துவ நூல்களில் மனம் லயித்தது. நண்பன் செல்வா, அப்போது ஓசூரில் பிரபலமாயிருந்த ஜோசியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றான். என் கைரேகையை மையிட்டு அச்செடுத்து பார்த்த

அவர், எனக்கு எப்போது திருமணமாகும், எத்தனை குழந்தைகள் பிறக்கும், எப்போது வெளிநாடு போவேன் என்று வழக்காமான கணிப்புகளைச் சொல்ல ஆரம்பித்தார். அப்போதிருந்த மனநிலையில் திருமணத்தின் எண்ணச் சுவடே இல்லை என்னிடம். “துறவுப் பாதைக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?” என்று நான் கேட்க அவர் நிமிர்ந்து பார்த்தார். “அது நம்ம கையிலயா இருக்கு?” என்றவர், என் கை ரேகைகளில் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லையென்றும், வேண்டுமென்றால் என் மனச் சாந்திக்காக ஸ்படிக லிங்க சிவ ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்யுமாறும் கூறினார்.

மெய்த் தேடலை அந்தக் காலகட்டத்தில், எத்தனை குழந்தைத்தனமாக, எத்தனை இலகுவதானதாக எண்ணிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது இத்தனை வருட அனுபவங்களுக்குப் பின்/தேடலுக்குப் பின் இப்போது புரிகிறது. நான் தயாராகும் வரை, அது எனக்கு வெளிப்படாதிருப்பது, அது என்மேல் கொண்ட கருணை என்று இப்போது உணர்கிறேன். அதன் ஒளியை, விராடத்தை, உடலும், மனமும் தாங்குமா என்ன?; மனப்பிறழ்வு கொண்டு அலையமாட்டோமா?. யோசித்தே பார்க்கமுடியாத, அன்றாடங்களுக்கு முற்றிலும் அந்நியமான விஸ்வரூபப் பேரன்பின் விகசிப்பை நெஞ்சறிந்தால் அல்லது பரிசளிக்கப்பட்டால் நாம் இயல்பில் இருப்போமா?. “அதை நோக்கி நாம் போகவேண்டுமா அல்லது அது நம்மை நோக்கி வருமா?” என்ற கேள்விக்கு பெரியவர்களிடத்தில் பதில் தேடினேன். “தேடலின் பாதைகள் ஆயிரம்/லட்சம்/கோடி. நீ செய்வதெல்லாம் வெறும் தயாரிப்புகள் மட்டுமே; தயாரிப்பு பூரணமடைந்ததும், முன்பு துளித்துளியாய் பரிச்சயப்பட்ட அவ்வினிப்பின் சுவை, அக்கணத்திலேயே மழையாய்/அமிர்த சாகரமாய் பொழியும்; உனை நனைக்கும்” என்று அறிவுறுத்தப்பட்டேன். பொறுமையின், காத்திருப்பின் தவம் புரிந்தது. அதுவரை, தேடல் எதுவாக? எதுவாகவோ, அதுவாக?…அதுவான பின்னும் கருணையினால் இதுவாக…

இது ஒரு வழியென்றால், மறுபக்கம், லௌகீகத்தில் எவ்விசையாலோ திரிபடைந்து, எதனாலோ உந்தப்பட்டு, எம்மாயத்தினாலோ நகர்த்தப்பட்டு, கர்ம பலனாய், பந்து, “அதை” நோக்கி உதைக்கப்படும் செயல் நடக்கும். அப்பக்கததின் நாவலிது. நாவலை வாசித்து முடித்ததும் இந்நாவலுக்கு எப்படி வாசிப்பனுபவம் எழுதப் போகிறோம் என்று மலைப்பாயிருந்தது. எழுதாமல் விட்டுவிடலாமா என்றும் தோன்றியது. என் மனப் பதிவிற்காகவாவது சின்னதாய் ஒரு குறிப்பெழுதி வைக்கலாம் என்று நினைத்தேன்…

நாவலில்…

அவரோடு நடக்கையில்எது விஷம்னு எப்படிக் கண்டுபிடிக்கறது?” என்றேன். “இப்ப அதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போற. விஷத்துக்கிட்ட குறுகுறுப்போட விரும்பிப் போகக்கூடாது. நம்மையறியாமல் நாக்கில பட்டுரும். ஒருவகைல, நாம கூட பல நேரங்கள்ல பாம்பு மாதிரிதான். நாக்கால மட்டும் யாரையும் தீண்டிடக் கூடாது. நம்பிப் பக்கத்துல போனா எதுவுமே விஷமில்ல. புல், பூண்டு, பூச்சினு யாரோட எல்லையிலும் கால் வைக்காதஎன்றார்

வெப்பமும் குளிர்ச்சியும் சரிவிகிதத்தில் அமைவதே சமன்பாடு. வெப்பம் அந்த மலையில் இருக்கிறது. வெப்பத்தைத் தணிக்கிற குளிர்ச்சி, அடி நிலமொன்றில் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது. பெண் தன்மையுடையது அது என எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மேலே கொண்டு வருவதற்கான கரங்களுக்காகத்தான் காலம் காத்துக் கிடந்ததுஎன்றது அந்தக் குரல்.

சிலையா அது?” என்றேன்.

உடமைப்பட்டவனைப் பொறுத்து வெளிச்சத்தில்தான் அது உருக்கொள்ளும்என்றது அந்தக் குரல்.

அதை எதற்கு எடுக்க வேண்டும்?” என்றேன்.

பூ பூக்கஎன்றது அந்தக் குரல்.

யாரிடம் அதைக் கொடுக்க வேண்டும்? என்றேன்.  

எடுப்பது உன் வேலை; செல்வது அதன் வேலைஎன்றது.

இடத்தைச் சொல்லிவிட்டால் போய் எடுத்து வந்துவிடுவேன். எதற்காக அந்த மலைக்குப் போகவேண்டும்?” என்றேன்.

ஒரு காதை ஒரு சொல்தான் போய் அடையும். தேர்ந்தெடுக்கப்பட்ட காது நீஎன்றது.

பின்னர் அதுவே தொடர்ந்ததுசொற்களை ரசவாதம் செய்தவனின் சொல் அது. நெய்யிட்டு உருக்குகிறவனின் வலிமையான மந்திரச் சொல். ஆனால் அதைக் கேட்பதற்கு நீ அனுமதி வாங்க வேண்டும். அனுமதி கொடுக்கிற அதிகாரம் என்னிடம் இல்லைஎன்றது.

யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்?” என்றேன்.

ஏற்கனவே சொன்னேனேபெயர்களெல்லாம் நீங்கள் வைத்துக் கொண்டதுஎன்றது.

அவர் யார்?” என்றேன்.

அவர்தான் மூலம்என்றது.

மூலம் என்றால் என்ன?” என்றேன்.

அவரே உருக்குகிறவர்என்றது.

எதை உருக்குகிறவர்?” என்றேன்.

நீ தேடுவதைஎன்றது அந்தக் குரல்.

 

“சுபிட்ச முருகன்”-ன் சித்தர் பகுதிகளும், படிம மொழியும், ஆழ்மனப் பதிவுகளின் வடிவத் துலக்கலும்… இனிப்பின் இயங்கியல்; பஞ்சாமிர்தத்தின், லட்டுப் பூரணத்தின் பூந்தித் துளியின் சுவை; உயிர் நனைக்கும் மழை; மஞ்சள் நாகத்தின் ஒளித் தீண்டல்; பச்சைப் பட்டுக் கருணையின் முதுகுத் தண்டு ஸ்பரிசம்; நீலத்தின் மற்றுமொரு மின்னல் வெளிச்சக் கீற்று…

வெங்கி

“சுபிட்ச முருகன்” – சரவணன் சந்திரன்

டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2023 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.