Jeyamohan's Blog, page 617
March 5, 2023
அனந்தாயி
அனந்தாயி கதை தென் தமிழகத்தில் வழங்கும் நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. அனந்தாயி சிறுதெய்வமாக வழிபடப்படுகிறார். இக்கதையின் ஆதார நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ’வெள்ளமாரி அம்மன்’ என்ற பெயரில் அனந்தாயியை வழிபடுகின்றனர். ஆனால் சுவாரசியமான விஷயம் அனந்தாயி கதை அப்படியே மணிமேகலையில் உள்ளது. அந்தக்கதை பல சமண- பௌத்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள ஒன்று.
அனந்தாயி கதை
அனந்தாயி கதை – தமிழ் விக்கி
அறிபுனைவின் இடர் – கடிதம்
அன்புள்ள ஜெ
விசும்பு அறிவியல் சிறுகதைகளின் தொகுப்பை இப்போதுதான் வாசித்தேன். எனக்கு அறிவியல்கதைகள் மேல் பெரிய ஒரு சலிப்பு உருவாகியிருந்ததனால் என்ன பெரிதாக இருக்கப்போகிறது என்ற ஒரு விலக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் வாசிக்கவில்லை.
இன்றைக்கு உலகமெங்கும் அறிவியல்கதைகளிலே பெரிய ஒரு தேக்கநிலை உள்ளது. அறிவியல்கதைகளை இன்றைக்கு குழந்தையிலக்கியமாக உருமாறிவிட்டன. இன்றைய குழந்தைகளுக்கு இயற்கைமேல் ஆர்வம் கம்மி. அவர்கள் அனைவருமே இன்றைக்கு காட்ஜெட் அடிக்டுகளாக உள்ளார்கள். அவர்களைக் கவர்வதெல்லாம் அறிவியல் ஃபேன்டஸி கதைகள்தான். ஆகவே ஆங்கிலத்திலே அதேமாதிரியான கதைகள் குவிந்துகிடக்கின்றன. எல்லா ஜானரிலும் எழுதிவிட்டார்கள். எல்லா ஜாஸ்தி கற்பனைகளையும் எழுதிவிட்டார்கள்.
என்றைக்கு சயன்ஸ்பிக்சன் இந்தமாதிரி குழந்தைக்கதையாக ஆகியதோ அப்போதே அதன் லிட்டரி வேல்யூ இல்லாமலாகிவிட்டது. ஏனென்றால் எந்த சீரியஸ் கதையை படித்தாலும் அதைவிட தீவிரமான கற்பனை உடைய ஒரு குழந்தைக்கதை ஞாபகம் வருகிறது. இதை எப்படி வகுத்துக்கொள்வது என்று இன்றைக்கு மேற்கே பலருக்கும் தெரியவில்லை.
இதை இரண்டுவகையிலே அவர்கள் சமாளிக்கிறார்கள். சீரியஸ் சயன்ஸ் பிக்சன் என்பது இன்றைக்கு ஒருவகையான புதிர் மாதிரி இருக்கிறது. அதிலே வாழ்க்கை இல்லை. கதைவாசிக்கும் குதூகலமும் இல்லை. குறுக்கெழுத்துப் புதிர் மாதிரியான கதைகளான உள்ளன. இன்னொரு வகை நேரடியாக புராணமாகவே எழுதிவிடுகிறார்கள். சயன்ஸ் குறைவு.
சயன்ஸ் இருக்கவேண்டும், ஆனால் கதையின் சுவாரசியமும் இருக்கவேண்டும். கூடவே அது வாழ்க்கையைப் பற்றிய சீரியஸான கேள்விகளைக் கேட்பதாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட எழுத்துக்கள் இன்றைக்கு குறைவாகவே வருகின்றன. விசும்பில் உள்ள பல கதைகள் அபாரமானவை. இந்தியாவுக்குரிய ஓர் அறிவியலை வைத்து எழுதப்பட்டவை. அதில் அறிவியலும் உண்டு. கூடவே ஆழமான வாழ்க்கைவிசாரமும் உண்டு. அறிவியலாக இருக்கும்போதே அதெல்லாம் குறியீடுகளாகவும் ஆகியிருக்கின்றன.
சிறப்பான கதைகள். பித்தம் அதிலே ஓர் அற்புதமான கதை. பலமுறை படித்து சிரித்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருந்தேன். சயன்ஸ் ஆராய்ச்சியிலே ஒரு டிராப் இருக்கிறது. ஒரு புதைகுழி அது. அதை அற்புதமாகச் சொன்ன கதை அது.
ராகவ் ரங்கா
மரபும் சந்தமும் -உரை
மரபின்மைந்தன் முத்தையா உரை. மரபுக்கவிதையின் சந்தம் பற்றி. இளையதலைமுறையினரிடம் அறியப்படாத பல மரபுக்கவிஞர்களின் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார்.
மரபின்மைந்தன் முத்தையா தமிழ்விக்கி
தத்தமில் கூடினார்கள்- மரபின்மைந்தன் முத்தையா
அறம் ஆங்கில மொழியாக்கம் பற்றி – கடிதம்
Stories of The True பற்றி Hindustan Times-ல் விமர்சனம் எழுதிய சௌதாமணி ஜெய்ன் அக்கதைகள் கொடுக்கும் உணர்வுகளினால் இடையிடையே ஆசுவாசப்படுத்திக்கொண்டுதான் கதைகளை வாசிக்க முடிந்தது என்று சொல்லியிருந்தார். ப்ரியம்வதாவிற்கு இந்த மொழியாக்கத்திற்காக ,அ. முத்துலிங்கம் விருது கொடுக்கப்பட்ட விழாவில் பேசிய கீதா ராமசாமி அவர்கள், ஒரு பதிப்பாளராக பத்து புத்தகங்களை படிக்கும் அவர் Stories of The True கதைகளை ஒரே வீச்சில் அனைத்தையும் வாசிக்கமுடியவில்லை, கதைகள் கொடுத்த பாதிப்பால் ஒவ்வொரு கதை வாசிப்பின் நடுவிலும் இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டார்.
புதியதாக வாசித்த அவர்களுக்கு அப்படியிருந்ததென்றால், பலமுறை தமிழில் வாசித்த எனக்கும் அதே அனுபவம்தான். Stories of The True , ஆங்கிலத்தில் வாசிக்கும்பொழுது பாட்டில் நிறைய இருக்கும் தேனை நாளொன்றுக்கு ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்வது போல, ஒரு நாளைக்கு ஒரு கதையென அனுபவித்து வாசித்தேன்.. ப்ரியம்வதா அவர்களின் தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஒவ்வொரு கதையையும் ஒரு புதுவாசகனைப்போல அக நெகிழ்வுடன் வாசித்தேன்.பாத்திரங்களின் உரையாடலின் தன்மை, தீவிரம், சரியான வார்த்தைகளின் தேர்ச்சி, விவரணைகளின் சீர்மை என ஒவ்வொன்றையும் நேர்த்தியாக மூலத்திலிருந்து மொழியாக்க நூலிற்கு கொண்டு வந்திருக்கிறார்.மொழியாக்கம் செய்யப்பட்ட நூலை வாசிக்கிறேன் என்ற நெருடலே இல்லாமல் வாசித்தேன்.
புது வாசகன், பொது வாசகன், இலக்கிய வாசகன் என யாராயிருப்பினும் அறம் வரிசையில் ஒவ்வொரு கதையின் ஆரம்ப காட்சிகளும் நிகழ்வுகளும் உரையாடல்களும் வாசகனை அப்படியே உள்ளிழுத்துக்கொள்ளும். அறம் (Aram – The song of Righteousness) கதையில், கதைசொல்லி தனது காலணிகளைக் கழற்றிவிட, சாமிநாதன் நாயிடம் இருந்து அவைகளைக் காப்பாற்ற கையில் எடுத்துக்கொள்வது. சோற்றுக்கணக்கில் (The Meal Tally) அந்த சாப்பாட்டுக்கடை என எச்சில் ஊறவைக்கும் அறிமுகம். அம்மா மரணப்படுக்கையில் என எடுத்தவுடன் துயரத்துள் தள்ளும் நூறு நாற்காலிகள் . (A Hundred Armchairs). கதையின் தொடக்கம். ‘நீலம் நீலம்னா சொல்றே’ என பாலசுப்ரமணியன் உரையாடலில் தொடங்கும் மயில் கழுத்து (Peacock Blue). அசந்து உறங்குபவனை எழுப்பும் தொலைபேசி ஒலிக்கு கதைசொல்லி அடையும் எரிச்சிலை வாசகனுக்கு கடத்தும் யானை டாக்டர் (Elephant Doctor). ப்ரியம்வதாவின் மொழியாக்கத்தில் இவையாவும் சிறிதும் பிசிறில்லாமல் , அப்படியே வந்திருந்தன
இது தனது முதல் மொழியாக்கம் அல்ல என நினைக்குமளவு ப்ரியம்வதா உரையாடலில் இருக்கும் உணர்வுகளை தரம் குறையாமல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு கடத்தியுள்ளார். மயில் கழுத்து வாசிக்க வாசிக்க பாலசுப்ரமணியன் யார், ராமன் யார் என அந்த உரையாடலின் வழி தெரிந்துவிடும். பாலசுப்ரமண்யன் ஒரு மாதிரி மென்மை என்றால், ராமன் அதைவிட மிகு மென்மை. ஆங்கில The Peacock Blue-விலும் இருவரின் மென்மையையும் அருகிலென உணர்ந்தேன். யானை டாக்டரில் கதைசொல்லி முதல் சந்திப்பில் யானை டாக்டரை மரியாதை நிமித்தமுடன் விசாரிக்கவில்லை என்ற சுயவருத்தத்தில் தன்னைத்தானே ‘சே.’ என்று நாக்கை கடிக்க, உடன் பயணிக்கும் மாரிமுத்து ‘என்ன சார்’ என்பார். அப்புறம் கதைசொல்லியின் மொட்டை ச் சமாளிப்பும் அக உணர்வுகளை வெளிப்படுத்தும் உரையாடலும் தடம் புரளாமல் வந்ததுபோலவே, தத்துவ விசாரங்கள் கலந்த உரையாடலும் மிகச்சரியாக மூலநூலின் சாரம் மாறாமல் அப்படியே வந்துள்ளன
யானை டாக்டரில் கதை சொல்லிக்கு புழுவை எப்படிப் பார்க்கவேண்டும் எனச் சொல்லிக்கொடுப்பது, One World கேரி டேவிஸ் தனிமையில் எப்படி இருப்பதென கதைசொல்லிக்கு பயிற்றுவிப்பது என சில உதாரணங்கள். யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் உருவமும், கோட்டி (Nutcase) பூமேடை ராமையாவின் உருவமும் தமிழில் வாசிக்கும்பொழுது என் அகத்தில் விழுந்த அழியா சித்திரங்கள். மொழியாக்கத்தை வாசித்தபிறகு அந்தச் சித்திரங்கள் மேலும் அழுத்தமாக.
Stories of The True-லிருந்து, கதை சொல்லியின் பார்வையில் Elephant Doctor – An oval face with no moustache. Thick tufts of grey hair shutting a forhead that extended into a bald pate. A becoming nose. The eyes of an enthusiastic young boy. Hair sticking out of the ears. Deep lines on either side of his small mouth adding a real intensity in his looks. But his smile, adorned by perfect teeth, affectionate.
மூல மொழியில் உள்ள பண்பாட்டு , உறவு, உணவு, வழிபாட்டு சொற்களை எப்படி மொழிபெயர்ப்பது; அல்லது அப்படியே விட்டுவிடுவதா என மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கும் சிக்கல் ஒன்று உண்டு. மூலமொழியின் சொல்லை அப்படியே உபயோகித்தால் இடாலிக்ஸில் போடவேண்டும். பக்கங்களின் கீழே அல்லது புத்தகத்தின் கடைசியில் குறிப்புகள் போடவேண்டும். இது எதுவும் இல்லாமல் ப்ரியம்வதா கதையின் நிகழ்தல் மாறாத வண்ணம் பாத்திரத்தின் உணர்வுகளை பண்பாட்டை அப்படியே எடுத்துச் செல்கிறார். அறம் கதையில் சாமி நாதன் எழுத்தாளரை அண்ணா என்று அழைப்பது, Brother என்று மொழியாக்கம் செய்திருந்தால், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் வாசிக்கும் வாசகன், கொஞ்சம் குழம்பிவிடுவான். வயதில் மூத்தவர்களை தமிழ் மக்கள் அண்ணா எனக் கூப்பிடுவது அவன் அறிந்த விஷயமாகவே இருக்கும். இல்லையெனினும், அவனுக்குத் தேடிப் புரிந்துகொள்ள தொழில் நுட்பத்தின் வளர்ச்சி இருக்கவே இருக்கிறது.
உரையாடலின்போது ராஜன் சோமசுந்தரமும் இதையே குறிப்பிட்டுச் சொன்னார். ‘யானை டாக்டரில் பார்த்தீர்களா, Sir என்பதற்கு பதிலாக ‘Saar’ என்று பிராந்திய மக்கள் அழைப்பதுபோல உரையாடலை அமைத்திருக்கிறார்’ என்றார். எந்த இடத்தில் ஆங்கிலம் என்பதிலும் கவனமாக உள்ளார். வணங்கான் கதைசொல்லி மகன் என்பதால், ‘Father’ என்றே குறிப்பிடுகிறார். இந்தக் கதையில் அப்பா, அப்பா என்று திரும்பத் திரும்ப வந்திருந்தால் , வெகு உறுத்தலாக இருந்திருக்கும். கல்லில் இடித்துக்கொள்ளும்பொழுதும், எறும்பு கடிக்கும்பொழுதும், வலியில் முனுகும்பொழுதும் அந்தந்த பிராந்தியத்திற்கான சொற்றடர்களை அப்படியே உபயோகித்துள்ளார். ‘மத்துறு தயிர் (The Churning Curd) பேராசிரியரை குமாரு என்று மண்ணின் மணத்துடன் அழைக்க வைத்து கதையின் உயிர் துடிப்பை வேற்றுமொழியானுக்கு எடுத்துச் செல்வதில் ப்ரியம்வதா வெற்றி பெறுகிறார். கம்பராமாயணச் செய்யுளை அழகாக மொழியாக்கம் செய்து, பேராசிரியரின் மனவலியை , ராஜம் அண்ணாச்சியின் மனவலியை வாசகனை உணரவைக்கிறார்.
இந்த மொழியாக்க நூலை அமெரிக்க நூலகங்களுக்கு , குறிப்பாக நடுநிலைப் பள்ளிகள் , ஆரம்பப் பள்ளிகள் நூலகங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கச் சென்றால் கேட்கப்படும் கேள்வி குழந்தைகளுக்குப் பொருத்தமானதா என்பது. இல்லை என்பதே எனது பதில். செக்ஸ் விஷயமோ அடிதடியோ இல்லை. அப்புறம் என்ன? அறம், யானை டாக்டர் கதைகளைத் தவிர மற்ற கதைகளை, புரிந்துகொள்ள சமுதாய , பண்பாட்டுப் பின்னனி தேவை என்பதே சிக்கல். ஆனால், நடு நிலைப் பள்ளியில் இருக்கும் குழந்தைகள் உள்ள தமிழ்ப் பெற்றோர்கள் அவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். விளக்கங்கள் அளிக்கலாம். கோமல் சாமிநாதனையும், எம்.வி. வெங்கட்ராமனையும் , டாக்டர் கிருஷ்ணமூர்த்தியையும், பேராசிரியர் யேசுதாசனையும் அறிமுகம் செய்ய இணைந்து வாசிப்பதைவிட வேறு இலகுவான வழியில்லை. மேல் நிலைப்பள்ளி மாணவர்களும் அவர்களுக்கு மேல் உள்ளவர்களும் படிப்பதில் எந்த தடையும் இல்லை.
அந்த நூலகங்கள் கேட்டால் சரியான விளக்கங்கள் கொடுக்கலாம். நமது பரிந்துரையையும் தாண்டி நூலகர் வாசித்துவிட்டுத்தான் சொல்லுவார் என்பதை டாலஸ் மூர்த்தியின் முயற்சியின் வழியாகத் தெரிந்துகொண்டோம். ஏற்கனவே இது irving Library-யில் இருக்கிறது என்பதை அடுத்து முயற்சிப்பவர்கள் ஒரு உதாரணமாக சொல்லலாம். Stories of The True வரவிருக்கும் மொழியாக்கங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். ப்ரியம்வதா, இனிமேல் வர/வளர இருக்கும் மொழியாக்க வல்லுனர்களுக்கு A Goto Person. –
ஆஸ்டின் சௌந்தர்
March 4, 2023
மருத்துவர் ஜீவா பசுமை விருது விழா
இன்று காலை ( மார்ச் 5 ம் தேதி 05.03.23. ஞாயிறு) காலை 10 மணிக்கு, ஈரோடு வேளாண் கல்லூரி கூட்டரங்கில் மருத்துவ ஜீவா பசுமை விருதுகள் அளிக்கும் விழா நிகழவுள்ளது. எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், பவா செல்லதுரை மற்றும் அக்னி தங்கவேலு, அன்புராஜ், பாலு ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
நாட்டாரியல் ஆய்வாளரும், தமிழ் விக்கி தலைமை ஆசிரியருமான அ.கா.பெருமாள் அவர்களுக்கும் ; திருநங்கைகள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் ‘தோழி’ எனும் அமைப்பை 1990களில் தோற்றுவித்து முப்பது ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் திருநங்கை சுதா அவர்களுக்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது.
ஜெ
தியான வகுப்புகள் எதற்காக?
ஒரு தியான வகுப்பு– அறிவிப்பு
அன்புள்ள ஜெ,
தமிழகத்தில் இன்று மிக அதிகமாக நிகழ்பவை தியான வகுப்புகள். வெவ்வெறு வகைகளில், வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இன்னுமொன்றை நீங்கள் ஒருங்கிணைக்கவேண்டுமா? பதிலுக்கு வேறு பயிற்சிமுறைகளை ஒருங்கிணைக்கலாமே? (மேலும் இதற்கான கட்டணங்களும் எல்லாருக்கும் உரியவை அல்ல)
ராகவேந்திரன் எம்
அன்புள்ள ராகவேந்திரன்,
இப்பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைப்பதன் காரணம் ஒன்றே. நான் எழுத்து வழியாக சில கருத்துக்களை தொடர்புபடுத்துகிறேன். என் வழிகாட்டுதல் வெறும் சிந்தனைக்காக அல்ல, செயல்பாடுகளுக்காகவும்தான். இயல்பாகச் சில ஒருங்கிணைக்கப்படாத சந்திப்புகள் நிகழ்கின்றன. அங்கே பல விஷயங்கள் பேசப்படுகின்றன. இலக்கியம், தத்துவம், இந்தியக்கலை, பண்பாடு, வாசிப்புப்பயிற்சி, அகப்பயிற்சி என பல தளங்களில் அவ்வுரையாடல்கள் நடைபெற்றன.
அப்போதுதான் நண்பர் கிருஷ்ணன் இப்படி முறையாக ஒருங்கிணைத்து அவற்றை செய்யலாமே என்ற ஆலோசனையைச் சொன்னார். எழுத்து என்றுமுள்ள ஆவணம், புறவயமானது. ஆனால் அதில் உரையாடல் இல்லை. நேரடி உரையாடல், நேரடிக் கற்பித்தல் ஒரு படி மேலானது. ஏனென்றால் கேட்பவர், கற்பவர் கண்முன் அமர்ந்திருக்கிறார். அவரை உணர்ந்து அவருக்கான உரையாடலையும் கற்பித்தலையும் செய்யமுடியும். பிழைகளை உடனே களைய முடியும். வழிகாட்டமுடியும். வளர்ச்சியை கண்காணிக்க முடியும்.
ஆனால் ஒருங்கிணைக்கப்படாத உரையாடல்கள் பெரும்பாலும் வீணாகின்றன. இன்ன தலைப்பில், இன்ன முறையில் உரையாடல் நிகழும் என்னும் அறிவிப்புடன், அதற்கான திட்டத்துடன் அமையும் கற்பித்தல் தேவை என்று கிருஷ்ணன் சொன்னார். அந்த வகையான திட்டமிட்ட சந்திப்புகளுக்கு ஒரு தொடர்ச்சியும் இருக்கமுடியும். சம்பந்தப்பட்டவர்கள் நம்மிடம் தொடர் உரையாடலில் இருக்கமுடியும்.
ஆகவேதான் புதுவாசகர் சந்திப்பை 2016ல் ஆரம்பித்தோம். அவை மிகமிக வெற்றிகரமானவையாக இருந்தன. அவற்றில் பங்குபெற்ற பலர் இன்று எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள். மிகச்சிறந்த வாசகர்களும் களப்பணியாளர்களும்கூட உருவாகி வந்தனர். விஷ்ணுபுரம் அமைப்பே இளைஞர்களால் நிறைந்தது.
ஆகவே இன்னும் சிலர் உதவியுடன் தொடர்ச்சியாக அமர்வுகளை ஒருங்கிணைக்கிறோம். இலக்கியம், தத்துவம், கலைகள் ஆகியவற்றில் கல்வியும் உரைப்பயிற்சி, வாசிப்புப் பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. இன்னும் அவை தொடர்ந்து நிகழும். எங்கள் நோக்கம் மேலோட்டமான கவனத்திற்கு அப்பால் ஏதேனும் களத்தில் தொடர்ச்சியான முறையான பயிற்சிகள் பெற்ற ஒரு வட்டத்தை உருவாக்குதல். மேலைத் தத்துவம், கல்வெட்டு வாசிப்பு, நாட்டாரியலாய்வு சார்ந்தும் வகுப்புகளை ஒருங்கிணைக்கும் எண்ணம் உண்டு.
ஆனால் கூடவே மேலும் சில பயிற்சிகளும் தேவை என உணர்ந்தோம். குறிப்பாக அகப்பயிற்சிகள். தங்களை செயலில் தொகுத்துக்கொள்வது இன்றைய வாழ்க்கையின் மிகப்பெரிய சவால். இன்றைய வாழ்க்கை நம்மைச் சிதறச் செய்தபடியே இருக்கிறது. நம்மை மிதமிஞ்சி அலைக்கழியச் செய்கிறது. ஆகவே உடல்நலம் குன்றி, உளக்குவிப்பின்றி அவதிப்படுகிறோம்
எனக்கு அதை எதிர்கொள்ள யோகப்பயிற்சிகள் உதவியுள்ளன. முதுகுவலி முதலியவற்றில் இருந்து அவ்வாறே விடுபட்டேன். உளப்பயிற்சிகளை என் ஆசிரிய மரபில் இருந்து கற்றேன். அவற்றை பொதுவாகப் பரிந்துரைத்தும் வந்தேன். பழைய கட்டுரைகளைக் காணலாம். ஆனால் இவையெல்லாம் மதச்சடங்குகள் அல்ல. நம்பிக்கைசார்ந்தவை அல்ல. பூசை வழிபாடுகள் அல்ல. நம்மை நாமே பயிற்றுவிக்கும் உடல்- உளப்பயிற்சிகள் மட்டுமே.
ஆனால் பொதுவாக இங்கே புகழ்பெற்றிருக்கும் தியான- யோக முறைகளில் இரண்டு குறைபாடுகளைக் கண்டேன்.
அ. அவை பெருந்திரளான மக்களுக்கு அளிக்கப்படுகின்றன. ஆகவே அவற்றை நடத்துபவர்களால் தனிப்பட்ட முறையிலான ஆசிரிய – மாணவ தொடர்பை உருவாக்கிக் கொள்ள முடிவதில்லை. அகப்பயிற்சிகளில் அந்த தொடர்பும் கண்காணிப்பும் மிக முக்கியமானது.
ஆ. அவை சராசரியினருக்காக வடிவமைக்கப்பட்டவை. ஆகவே பெரும்பாலும் குறைந்த அறிவுத்தளம் சார்ந்த விளக்கங்கள், மிக எளிய நம்பிக்கைகளுடன் இணைந்து சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. அவை வாசிக்கும் வழக்கம் கொண்ட, சிந்திக்கும் வழக்கம் கொண்டவர்களை அன்னியப்படுத்துகின்றன. கலையிலக்கிய ஆர்வம் கொண்டவர்களை அவற்றை அறிந்த ஒருவரே பயிற்றுவிக்க முடியும். அறிவுத்தளமும் கலைத்தளமும் செயல்படுவது எப்படி என அவர் அறிந்திருக்கவேண்டும். சாரு நிவேதிதாவுக்கு யோகம் சொல்லிக்கொடுக்க குருஜி சௌந்தரால்தான் இயலும். அவருக்கே சாரு எவர் என புரியும். பொதுவான யோகப்பயிற்சியாளர்களால் இயலாது. அவர்கள் கற்பிப்பவை அதனாலேயே பயனற்றவை.
ஆகவே எனக்கு முக்கியமானவர்கள் என்று படுகிற, நான் மதிக்கிறவர்களைக் கொண்டு பயிற்சி முகாம்களை நடத்தலாமே என நண்பர்கள் முடிவுசெய்தோம். இவை குறைந்த எண்ணிக்கையில் (அதிகபட்சம் 30 பேர்) மட்டும் கலந்துகொள்ளும் நிகழ்வுகள். இவற்றில் முக்கியமான அம்சமே நேரடியான தொடர்பும் உரையாடலும் வழிகாட்டலும்தான். இவை இன்றைய தலைமுறைக்கு உதவியானவை என நான் நினைக்கிறேன்.
ஒரு வாய்ப்பை அளிப்பதுதான் நோக்கம். அவை மிகமிகப் பயனுள்ளவையாக உள்ளன என்றும், பலர் வாழ்க்கையையே மாற்றியமைத்துள்ளன என்றும் தெரியவருகிறது. அதுவே இலக்கு.
ஜெ
பிகு: கட்டணம் இன்றி இவற்றை நடத்த முடியாது. உணவு உறைவிடம் ஏற்பாடு செய்யவேண்டும். மிகக்குறைந்த செலவிலேயே ஒருங்கிணைக்கிறோம். கட்டணம் கட்டமுடியாதவர்களுக்கு நிதிப்புரவலர்களைக் கண்டடைகிறோம். மாணவர்களுக்காக நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கையில் புரவலர்களை கண்டடைகிறோம். ஆனால் எங்கள் நோக்கம் பரவலாக ‘அனைவரையும்’ சென்றடைவது அல்ல. கட்டணம் கட்டி இதற்கென்றே வந்து அமர்பவர்களிடம் இவற்றை கொண்டுசென்றால்தான் பயன் உண்டு. அவர்களே நீடிப்பார்கள். குறைந்தபட்ச ஆர்வமும் தீவிரமும் கொண்டவர்கள் மட்டுமே எங்களுக்குத் தேவை.
சுதா
சுதா திருநங்கையருக்கான நலப்பணிகளில் ஈடுபடும் திருநங்கை. அவருடைய தோழி என்னும் அமைப்பு கொரோனா காலகட்டத்தில் செய்த பணிகள் ஊடகங்களால் கவனிக்கப்பட்டன. திருநங்கையருக்கான உறைவிடத்தை சென்னையில் உருவாக்கியிருக்கிறார். 2023 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ஜீவா பசுமை விருது பெறும் முன்னுதாரணமான ஆளுமைகளில் ஒருவர்
காணொளிகள்
அன்புள்ள ஐயா,
இன்று உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் புத்தகங்களை நிறைய படித்து உள்ளேன். உங்களின் எழுத்துகளின் கோர்வையில் கட்டுண்டு போனேன்.நான் ஒரு Youtube சேனல் வைத்து இருக்கிறேன். அதில் புத்தகங்களை பற்றிய கதைகள் மற்றும் விமர்சனம் செய்து வருகிறேன். அதில் சில பதிவுகளை அனுப்பியுள்ளேன். உங்கள் கருத்துகளையும் மற்றும் விமசர்னங்களையும் எதிர்பார்த்து இருக்கிறேன்.காடுhttps://youtu.be/wqNsArQqzBUயானை டாக்டர்https://youtu.be/BLF0ZNVlrVYசோற்று கணக்குhttps://youtu.be/H9da5tcUPXcவணங்கான்https://youtu.be/yhkinFVW_tEஅறம்https://youtu.be/83AY5HlSt7Eஉலகம் யாவையும்https://youtu.be/ppW0CsLgoEcபனிமனிதன் வாசிப்பு
பரிணாம வளர்ச்சி நிகழாத ஒருகாலகட்டத்தை நினைவுதெரிந்ததிலிருந்து கற்பனைசெய்துபார்த்ததில்லை. இதில்வரும் மரம்விட்டு மரம்தாவும் குதிரைகள், யானை அளவு பூதாகரமான பசுக்கள், முயல்போன்ற உயரமுடைய யானை, கால்கள் படைத்த பாம்பு, பயணத்தில் உறுதுணையாக நிற்கும் வௌவால்கள்,பாறைமாதிரியான ஆமைகள் போன்றவை ஆச்சரியத்துக்கு ஆளாக்கின. ஃபிராய்ட் அறிமுகப்படுத்தும் ‘மேல்மனம், ஆழ்மனம், அடிமனம்’ குறித்த தகவல்கள் சிந்தினையைத் தூண்டுகிறது.
பனிமனிதன் விமர்சனம்பயணம்,பெண்கள் -கடிதம்
ஜெயமோகன் அவர்களுக்கு
அன்பு வணக்கம். தினமும் உங்களுடன் நான் பயணிப்பதுபோன்றே எழுகதிர் நிலம் எனக்கு இருக்கிறது. நான் ஒரு ஆணாகஇருந்தால் உங்களோடு எத்தனை இடம் சென்றாலும் பயணத்தை தொடர்ந்து இருப்பேன். ஓ கே சிலநேரம் பொறாமை, பெருமையும்அடைகிறேன். வாழ்த்துகள்.
பாலாபிஷேகம் செய்யவோ…ஜெயச்சந்திரன் அவர்கள் பாடலை
Air chennai Tamil Radio அடிக்கடி ஒலிபரப்பு செய்ய கேட்டு இருக்கிறேன். இனிய பாடல்.நன்றி!
தொடர்ந்து வரட்டும் உங்கள் பயணங்கள் .
அன்பு ராணி
அன்புள்ள அன்புராணி
மெய்யாகவே பெண்களுக்கு பயணங்களில் பல எல்லைகள் உள்ளன. குறைந்தபட்சம் இந்தியாவில். இந்தியா பெண்களின் சுதந்திரமான பயணத்துக்கு உகந்த நாடு அல்ல. ஆப்ரிக்க நாடுகள் அளவுக்கு இல்லை என்றாலும் பொதுவாக இந்திய மக்களில் கணிசமான சாரார் குற்றத்தன்மை ஓங்கியவர்கள். ஒரு வாய்ப்பு வந்தால் குற்றம் செய்யத் தயங்காதவர்களே எங்குமுள்ளனர்.
இன்று, பெரும்பாலான இந்திய ஊர்கள் போதையடிமைகள், குற்றவாளிகள், உதிரிகளின் ஆக்ரமிப்பிலேயே உள்ளன. இந்தியாவில் எந்நகரமும் இரவு 11 மணிக்குமேல் அவர்களிடம் சென்றுவிடுகிறது. இந்தியக் காவல்துறை ஒருவகையில் குற்றவாளிகளுடன் இசைந்து செல்ல முயல்வது. ஏனென்றால் குற்றச்செயல்பாடுகளுடன் சாதி, அரசியல், வணிகம், ஆகியவை இணைந்துள்ளன. பணம் குற்றங்களில் ஊடுருவியிருக்கிறது.
இந்திய நீதிமுறை பொதுவாக குற்றவாளிகளுக்கு ஆதரவானது. நாளிதழ்களிலேயே பார்க்கலாம், பல கொடுங்குற்றங்களில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் மிக எளிதாக ஜாமீனில் வெளிவந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டு, மீண்டும் கைதாவார்கள். காவல்துறைக்குச் சமானமாகவே ஊழல்மிக்கது இந்திய நீதித்துறை.
இதனால் முதன்மையாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். அவர்களின் பயண உரிமை, தனித்துவாழும் உரிமை இதனால் பறிக்கப்படுகிறது. ஆனால் இந்த நிலையைச் சுட்டிக்காட்டினால் நம்மூர் முற்போக்காளர்கள் குற்றவாளிகளின் ‘ஜனநாயக’ உரிமைக்காகவே குரல்கொடுப்பார்கள். அது அரசியல்சரி என்றும், அதைச் சொல்பவர் லிபரல் என்றும் இங்கே நம்பப்படுகிறது.
ஒப்புநோக்க ஐரோப்பா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு. காரணம் சட்டத்தின் ஆட்சி. ஆனால் அண்மையில் பிரான்ஸ், இத்தாலி போன்றவை அவ்வாறல்லாமல் ஆகிவிட்டன எனப்படுகிறது. நானறிந்தவரை இன்று பெண்கள் பயணம் செய்ய பாதுகாப்பான நாடு என்பது அமெரிக்காதான்.
இந்தியாவில் பயணம் செய்ய விரும்பும் பெண்கள் தங்களுக்கான சிறு கூட்டுக்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும். முறையான ஏற்பாடுகள், தொடர்புகளை உருவாக்கிக்கொண்டு திட்டமிட்டு பயணம் செய்யவேண்டும். அப்படி நம் அமைப்பின் பெண்கள் பல பயணங்களைச் செய்திருக்கிறார்கள்.
எங்கள் பயணங்கள் கொஞ்சம் சாகசத்தன்மை கொண்டவை. நடுச்சாலையில் தெரியாத ஊரில் நள்ளிரவில் நின்றிருக்கும் சாத்தியம் கொண்டவை. பெண்களை சேர்த்துக்கொள்ளவே முடியாது.
ஜெ
புதைந்தவைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

