Jeyamohan's Blog, page 619
March 2, 2023
கோவையில் ஒரு சந்திப்பு
கோவையில் நண்பர் கவிஞர் ஆனந்த்குமார் (ஆனந்த்குமார் தமிழ் விக்கி) ஒரு புகைப்பட நிலையம் தொடங்கியிருக்கிறார். ஆனந்த்குமார் சிறுவர்களை புகைப்படம் எடுப்பதில் தனித்திறன் கொண்டவர். பிறந்தநாள் விழாக்கள் போன்றவற்றில் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதில் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்றிருந்தார். மனைவியின் பணி நிமித்தம் கோவைக்கு இடம்பெயர்ந்தமையால் இப்போது கோவையில் தன் மையத்தை தொடங்குகிறார். அதன் தொடக்கவிழாவுக்கு மார்ச் 5 ஆம் தேதி நான் கோவை வருகிறேன்.
ஆனந்த்குமாரின் ஸ்டுடியோ பெயர் கிடூ ஸ்டுடியோஸ். இடம் ஆனந்தாஸ் அருகே, வடவள்ளி, கோவை. தொலைபேசி 7829297409
அதையொட்டி கோவை விஷ்ணுபுரம் அலுவலகத்தின் மாடியிலுள்ள சந்திப்பிடத்தில் மாலை 5 மணி முதல் வாசகர்களையும் நண்பர்களையும் சந்திக்கலாமென நினைக்கிறேன். விஷ்ணுபுரம் பதிப்பக நூல்களை 10 சத கழிவுடன் வாங்கிக்கொள்ளலாம்.
இடம் : கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம்
நாள் – 5 மார்ச் 2023
பொழுது மாலை 5 மணி
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்புக்கு
admin@vishnupurampublications.com
+91 90802 83887பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்
விவாதத்தை தொடர விரும்பவில்லை. ஏனென்றால் இதைப்போன்ற ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருக்கும். மிகையுணர்ச்சியுடன் பேசுவது ஓர் தற்பிம்பத்தையும் அளிக்கும். வம்பின் கொண்டாட்டம் வேறு. இந்த தளம் அதற்கானதல்ல.
ஆனால் நாலைந்து பெண்களின் கடிதங்கள் வந்தன. அனைத்திலும் பொதுவான ஒரு வரி இருந்தது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கவேண்டாமா?
இன்று சமூகவலைத்தளங்களில் கூச்சலிடுபவர்கள் எவரும் அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுடன் நிலைகொள்பவர்கள் அல்ல. அவர்களின் அரசியலுக்கு உகந்தவர்கள்மேல் இதே குற்றச்சாட்டு வந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். குற்றம்சாட்டியவர்களைத்தான் இழிவுசெய்தனர். பாதிக்கப்பட்டவர்களை இன்றுவரை தொடர்ந்து வேட்டையாடுகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் நின்று கொண்டாடுகின்றனர். அதற்கான சப்பைக்கட்டுக்களை உருவாக்குகின்றனர். அதே குரல்கள்தான் கோணங்கியின் குருதிக்காக பாய்கின்றன.
அவர்களின் விதிகள் மிகமிக எளியவை. அவர்களுக்கு தேவை எளிய இலக்குகள். அதிகாரமுள்ளவர்களிடம் அடிபணிவார்கள். எளிய இலக்கு அகப்பட்டால் உச்சகட்ட குரூரத்துடன் எதிர்வினையாற்றுவார்கள். அதற்கு நியாயம், ஒழுக்கம், பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல் என பல பாவலாக்கள். வெற்றுக்கூச்சல்களுக்கு அப்பால் இவர்கள் செய்யக்கூடுவதொன்றில்லை. இவர்களிடமிருப்பது எந்த அறமும் அல்ல. இவர்கள் எவரும் ஒழுக்கவாதிகளும் அல்ல. இவர்களிடம் வெளிப்படுவது வெறும் அறிவியக்க எதிர்ப்பு. வேறொன்றுமில்லை.
நான் என்றுமே யதார்த்தத்தில் என்ன என்று பார்க்க முயல்பவன். இக்குற்றச்சாட்டுக்கள் எல்லாமே பல ஆண்டுகள் பழையவை. இன்று போதிய உடல்நலமில்லாமல், பணமோ அதிகாரமோ இன்றி, தனித்திருக்கும் 65 வயதான ஒருவரை இலக்காக்குபவை. குற்றம்சாட்டுபவரின் இயல்பென்ன, நோக்கம் என்ன, அக்குற்றத்தில் அவருடைய பங்கென்ன என்பதெல்லாம் எங்கும் விவாதிக்கமுடியாதவை.
குற்றச்சாட்டுடன் ஒருவர் பொதுவெளிக்கு வந்திருக்கிறார் என்பதனாலேயே, அவரை ஆதரித்து இன்னும் பலகுரல்கள் எழுந்தன என்பதனாலேயே, அவர்களுக்கு நல்லெண்ணத்தின் மதிப்பை அளித்து, அவர் சார்பில் நின்று இதை கடுமையாகக் கண்டிக்கிறோம். அது சமூகக் கடமை. ஆனால் ’இது உண்மையென்றால் கண்டிக்கிறோம்’ என்பதற்கு அப்பால் சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. தீர விசாரித்து எவரும் எதையும் சொல்லும் சூழல் இங்கில்லை. அதுவும் பத்தாண்டுகள் பதினைந்தாண்டுகளுக்கு முந்தைய செயல்பாடுகளை.
இவை ’me too’ வகை குற்றச்சாட்டுக்கள். இவற்றால் எவரும் எதையும் நிரூபிக்க முடியாது. இவற்றின் நோக்கமே பொதுவெளியில் முன்வைப்பதன் வழியாக குற்றம்சாட்டப்பட்டவரை அவமானப்படச் செய்வதுதான். அந்த அவமானத்தையே தண்டனையாக அளிப்பதுதான். இங்கே இவ்விஷயத்தில் அது நிகழ்ந்துவிட்டது. அதற்குமேல் எதுவும் சாத்தியமும் இல்லை. நான் சொன்னது அதையே.
முகநூலில் இலக்கியத்தின் எதிரிகள் இதைப் பயன்படுத்தி உருவாக்கும் வெறிக்கூச்சல்களுடன் இலக்கியமென்றால் என்ன என அறிந்தவர்கள், இளம்படைப்பாளிகள், இன்றைய கூட்டுமிகையுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு இணைந்துவிடலாகாது. அதனால் அவர்களுக்கே இழப்பு. ’அவ்வளவுதாண்டா இலக்கியம்’ என்ற முடிவுக்கு இவர்களின் கூச்சல் வழியாகச் சென்றுசேரும் அசடுகள் இவர்களுடன் ஊழலரசியலுக்கு கொடிபிடிக்கப் போகலாம். அவ்வளவே இப்போது சொல்ல விரும்புகிறேன்.
சென்ற காலங்களில் இங்கே இதைப்போன்ற எல்லா சிக்கல்களிலும் பாதிக்கப்பட்டவர்களுடன் எல்லாவகையிலும் உடன்நின்றவர்கள் நானும் என் நண்பர்களும் மட்டுமே. தமிழகத்திலும் கேரளத்திலும். அதை இலக்கியச்சூழல் அறியும். இந்தக் கூச்சலிடும் கும்பலில் ஒருவரைக்கூட, ஒரே ஒருவரைக்கூட, பாதிக்கப்பட்ட எவரும் உதவிக்கு நாடமுடியாது என்பது முன்பு பாதிக்கப்பட்டவர்கள் அறிந்த உண்மை. என்றும் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாகவே நாங்கள் இருப்போம், உறுதியுடன், கடைசிவரை. எப்போதும் இருந்திருக்கிறோம்.
ஜெ
சிறுநூல்கள்
அண்மையில் நண்பர் போதகர் காட்ஸன் தன்னுடைய கிறிஸ்தவ சபையின் (ஆங்கிலிகன் சபை) 40 ஆவது ஆண்டுநிறைவுக்காக 5 மார்ச் 2023 ல் கொண்டாடும் விழாவில் பங்கேற்பாளர்களுக்கு சிறு நூல்களைப் பரிசாகக் கொடுக்க திட்டமிட்டார். ஆனால் அவ்வாறு கொடுக்க திருச்சபை பணத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அதற்காக அவர் என் தம்பி ஷாகுல் ஹமீதின் உதவியை நாடினார். ஷாகுல் நம் நண்பர்களிடம் உதவி தேட சங்கர் பிரதாப், அருண்குமார், சிட்னி கார்த்திக் (கார்த்திக் வேலு) ஆகிய நண்பர்கள் உதவினர். அந்த நிதியில் யானைடாக்டர், நூறுநாற்காலிகள், வணங்கான் ஆகிய சிறு நூல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன.
“ஒரு கிறிஸ்தவ சபையின் போதகர் கேட்டுக்கொள்ள ஓர் இஸ்லாமியர் உதவ இந்துக்கள் வாங்கி அளிக்க இந்நூல்கள் வழங்கப்படுகின்றன. இதுவே இந்தியாவின் ஆத்மா” என்று காட்சன் அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.
இந்நூல்கள் ஐம்பது ரூபாய் மதிப்புள்ளவை. ஒரு நல்ல காபியின் விலை. ஒரு கதை ஒரு நூல். சிறியவை. வாசிப்புப் பழக்கமுள்ளவர் அரை மணிநேரத்தில் வாசிக்கலாம். ஆனால் இவை வாசிப்புப் பழக்கத்தை அறிமுகம் செய்ய மிகமிக உதவியானவை. பெரிய நூல்கள் வாசிப்புப் பழக்கமில்லாதவர்களை அச்சுறுத்துகின்றன. சிறிய நூல்களை அவர்கள் உடனடியாக வாசிக்கிறார்கள். குறிப்பாக சிறுவர்களுக்கு இந்நூல்கள் மிக அணுக்கமானவை.
ஏற்கனவே ஈரோடு வாசிப்பு வட்டம் சார்பாகவும், தன்னறம் அமைப்பு சார்பாகவும் யானைடாக்டர் போன்ற நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் இவ்வாறு அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன. யானைடாக்டர் லட்சம் பிரதிகள் வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தலைமுறையில் தமிழில் மிகப்பிரபலமான சிறுகதை அதுதான் என நினைக்கிறேன்.
திருமண விருந்துகளிலும் பிற நிகழ்வுகளிலும் இந்நூல்களை அன்பளிப்பாக அளிக்கும் நண்பர்கள் உள்ளனர். கல்விநிலையங்களிலும் கொடையாளிகளால் இந்நூல் அன்பளிப்பாக அளிக்கப்படுகிறது. பல மாணவர்கள் தங்களுக்கே என பெறும் முதல்நூலாக இவை உள்ளன. இச்சிறு நூல்களைப் பார்க்கையில் ஒரு பெருமிதம் உருவாகிறது. ஆறு ஓடைகளாக மாறி சிற்றோடையாக பிரிந்து ஒவ்வொரு வயலுக்கும் சென்று சேர்வதுபோல இந்நூல்கள் தமிழக வாசகர்களைச் சென்றடைகின்றன.
’அறம்’ தொகுதி திருக்குறள், பாரதியார் பாடல்கள் போல தமிழகத்தின் பொதுநூல் என்னும் தகுதியை எட்டிக்கொண்டிருக்கிறது.
திணைகள் கவிதை விருது
திணைகள் கவிதை விருது 22 க்கு நவீனக் கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ 25000 மதிப்புள்ள விருது இது. திணைகள் கவிதை விருது அமைப்பு இப்போட்டியை அறிவித்துள்ளது.
கவிதைநூல் 2022 ல் முதல் பதிப்பு வெளிவந்ததாக இருக்கவேண்டும்
பலருடைய கவிதைகளின் தொகுப்போ மொழியாக்கமோ ஏற்கப்படாது.
மூன்று பிரதிகளை மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
முகவரி
திணைகள் கவிதை விருது. பழைய எண் 72 புதிய எண் 3
குமரன்நகர் இரண்டாம் மெயின்ரோடு
சின்மயா நகர் சென்னை 92
March 1, 2023
கோணங்கி, பாலியல்குற்றச்சாட்டு, எழுத்தாளர்கள்…
எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள், அது சார்ந்த வம்புகளில் நான் இன்று வரை கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. முதன்மைக் காரணம் அன்றன்றைய வம்புகளில் ஈடுபடுவதில்லை என்பது. இரண்டாவது காரணம், நான் அதில் என் கண்டனத்தை தனியாகத் தெரிவிக்க வேண்டியதில்லை, என் நிலைபாடு அனைவருமறிந்ததாகவே இருக்கும் என்பது.அதோடு, நான் தொடர்பு கொண்டிருக்கும் நபர்கள் மேல் அக்குற்றச்சாட்டுகள் வந்ததில்லை என்பதும் காரணம்.
ஆனால் அண்மையில் மூன்று நிகழ்வுகள்.
ஒன்று ,இருபதாண்டுகளுக்கு முன் என் நண்பராக இருந்தவரும் சொல்புதிது இதழுடன் தொடர்புகொண்டிருந்தவருமான செந்தூரம் ஜெகதீஷ் ஒரு பெண்ணிடம் பாலியல் மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு.
செந்தூரம் ஜெகதீஷுக்கு நான் பலவகையிலும் உதவிசெய்ததுண்டு. அவருக்கு வேலை வாங்கிக்கொடுத்ததும் நான்தான். என் சிபாரிசால் வெங்கட் சாமிநாதன் மற்றும் திலீப்குமார் இருவரும் என்.டிடி.வி தலைவர் ஜெனிஃபர் அருளிடம் பரிந்துரை செய்தார்கள். துணிக்கடை ஏஜெண்ட் ஆக இருந்த அவர் ஊடகவியலாளராக ஆனார் -போதிய கல்வித்தகுதி இல்லாதபோதிலும். அது நட்பு கருதி நான் செய்த உதவி.
ஆனால் செந்தூரம் ஜெகதீஷுடன் எனக்கு இருபதாண்டுகளாக அணுக்கமேதுமில்லை. என் வாசகர், நண்பராக அவர் இருந்த காலகட்டத்தில் அவருடைய ஆளுமையில் ஓர் அசட்டுத்தனத்தை மட்டுமே நான் கண்டிருக்கிறேன். அதை ஒரு நண்பராக நான் பொருட்படுத்தவுமில்லை. நானும் இன்னொருவகை அசடுதான். ஆனால் அவரது அந்த அசட்டுத்தனமே தீமையின் விளைவை அளிக்க ஆரம்பித்தபோது முழுமையாக விலகிக்கொண்டேன்.
செந்தூரம் ஜெகதீஷின் பிற்கால மாற்றங்கள் எனக்கு தெரியாது. அவர் மிகக் கடுமையாக என்னைப்பற்றி எழுதுகிறார் என்று சொல்லி அறிந்திருக்கிறேன். எதிர்வினையாற்றியதில்லை. அப்பாலியல் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் வெளிவந்ததை சுட்டிக்காட்டியிருந்தனர். என் பதில் இதுவே, இருபதாண்டுகளுக்கு முன் நானறிந்த செந்தூரம் ஜெகதீஷ் அல்ல அவர். என் பார்வையில் இலக்கியவாதி அல்லது இலக்கியவாசகர் என்னும் இரு தகுதிகளுமில்லாத, பலவகை உளச்சிக்கல்கள் கொண்ட எளிய மனிதர் அவர். அதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.
இரண்டாவதாக, இன்று மணல்வீடு ஹரிகிருஷ்ணன் பற்றிய ஓரினச்சேர்க்கைக் குற்றச்சாட்டு சதீஷ்குமார் என்பவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மணல்வீடு ஹரிகிருஷ்ணனை என் தளத்தில் நான் அறிமுகம் செய்திருக்கிறேன். நாட்டாரியல் சார்ந்து அவர் பணியாற்றுகிறார் என்பதனாலும், நாஞ்சில்நாடனின் சிபாரிசினாலும்தான் அதைச் செய்தேன். என் வாசகர்கள் பலர், குறிப்பாக வெளிநாட்டினர், அதன்பொருட்டு அவருக்கு உதவியும் செய்தனர்.
ஆனால் பின்னர் அவர் மேல் பல குற்றச்சாட்டுக்கள் நண்பர்களால் சொல்லப்பட்டன. நிதி ஒழுங்கு சார்ந்தவை. மிகத்தீவிரமானவை. ஆகவே அவரைப் பற்றிய எச்செய்தியையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் வெளியிடவில்லை. நிதியளிப்பவர்களுக்கும் அவருக்குமான சிக்கல் அது. அவரை நான் இலக்கியவாதியாகவோ இதழாளராகவோ எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவராக கருதவுமில்லை.
மூன்றாவதாக, இப்போது கோணங்கி மீது ஓரினச்சேர்க்கைக்கு தூண்டினார் என்று குற்றச்சாட்டுக்கள் பலரால், வெளிப்படையாக, இணையத்தில் முன்வைக்கப்படுகின்றன. கோணங்கி முப்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு வேண்டியவராக இருந்தார். அவருடன் பயணம் செய்துள்ளேன். அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட இயல்பின் எந்த ஒரு சான்றும் அவரிடம் நான் கண்டதில்லை. நேற்று காலைவரை எவரும் என்னிடம் ஒரு சொல்கூடச் சொன்னதில்லை. பவா செல்லத்துரையிடம் பேசினேன். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவரும் அதிர்ந்துபோயிருக்கிறார்.
அப்படியென்றால் இக்குற்றச்சாட்டை எப்படி எடுத்துக் கொள்வது? இளங்கோ கிருஷ்ணன் அவருக்கு முன்னரே தெரியும் என இப்போது சொல்கிறார். கடலூர் சீனு அவருடைய நண்பருக்கு இப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டதாக இப்போது குறிப்பிடுகிறார்.மேலும் பலர் ஆம் என்கிறார்கள். எனக்கு இவை முற்றிலும் புதிய செய்திகள். என்னிடம் இவை பற்றி எவரும் உரையாடுவதில்லை. அல்லது, இவை பற்றிய உரையாடற்களத்திற்கு வெளியே நானே என்னை வைத்திருந்திருக்கிறேன்.
ஆனால் பெரிய அதிர்ச்சி ஏதுமில்லை. கலைஞனின் மனம் இருளுக்குள்ளும் ஒளிக்குள்ளும் மாறிமாறிச் செல்வது. அவனால் கட்டுப்படுத்தப்பட இயலாதது. நுண்ணுணர்வு என்பது நேர்நிலையிலும் எதிர்நிலையும் செயல்படுவதுதான். பாலுணர்வு என்பதுக் கலைஞர்களிடம் ஒரு நோய்க்கூறாகவே ஆகக்கூடும். அவ்வியல்பை கருத்தில்கொண்டே அவனை, அவன் கலையை அணுகவேண்டும். அதற்குமேல் சொல்ல ஏதுமில்லை.
நான் ஓர் எழுத்தாளனாகவே இதைச் சொல்கிறேன். என் அக- புற நடத்தையை இதுவரை முற்றிலும் கட்டுப்படுத்தியே வந்துள்ளேன். பொதுக்களத்தில் ஒழுக்க எல்லைகளை நான் கறாராகப் பேணுவது என் படைப்பியக்கம் அதனால் பாதிக்கப்படலாகாது என்பதனால்தான். ஆனால் நான் ஒழுக்கவாதி அல்ல. ஒழுக்கத்தை மாறாநெறியாக நான் முன்வைப்பதுமில்லை. ஆகவே இப்போது பாய்ந்து குதறும் கும்பலில் நான் சேரப்போவதில்லை.
கோணங்கிமேல் இளைஞர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மை என்றால் வலுவான பொதுச்சமூகக் கண்டனத்திற்குரியது. முதிரா இளைஞர்களிடம் அவர் அவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அது சட்டப்படி குற்றமும் கூட. ஆகவே ஒரு சமூக உறுப்பினராக அச்செயலை கண்டிக்கிறேன். இளைஞர்கள் இனிமேல் அவரிடம் கவனமாக இருக்கலாம்.
கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம். அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சாந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்.
நான் கோணங்கியை அவருடைய தொடக்ககாலச் சிறுகதைகளுக்காக முதன்மையான இலக்கியக் கலைஞராகவே மதிக்கிறேன். இந்த விவாதத்தால் அம்மதிப்பீடு மாறப்போவதில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் மௌனியும் நகுலனும் தன்னிடம் அவ்வாறு நடந்துகொண்டதாகவும், அது கலைஞர்களின் வழிமுறை என்றும் கோணங்கி தன்னிடம் சொன்னதாக குற்றம் சாட்டுபவர் ஒருவர் எழுதியிருக்கிறார். அவ்வாறு சொல்லியிருந்தால் அது அந்த தேவையின்பொருட்டு சொல்லப்பட்டது. ஆனால் இந்த வம்புகள் வழியாக அது நினைவில் நிறுத்தப்பட்டுவிடலாம். அது முழுக்கவே பொய்யானது. அதை முன்வைக்கவேண்டிய கடமை உண்டு என்பதனாலேயே இதை எழுதுகிறேன்.
நகுலனை எனக்கு நன்றாகவே தெரியும். நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு அவர் மிக அணுக்கமானவர். அவர்மேல் அத்தகைய பேச்சு எதுவும் எழுந்ததில்லை. அவருக்கு பாலியல் சார்ந்த மிகத்தீவிரமான உடற்குறைபாடுதான் இருந்தது. வேறுபல உடற்சிக்கல்களும் குடிப்பழக்கமும் இருந்தன. அவற்றை நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோர் புனைவுகளில் பதிவு செய்திருக்கிறார்கள்
மௌனியின் குணச்சிக்கல்கள் பற்றி பலரும் எழுதியுள்ளனர். தாசிகளுடனான உறவு, சாராயம் குடிக்கும் வழக்கம், கூடவே சாதிமேட்டிமைத்தனம் ஆகியவை அவரை வழிபட்ட வெங்கட் சாமிநாதன் முதல் அவரை எதிர்த்த பிரமிள் வரை பலரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் பாலியல் சார்ந்து இப்படி ஒரு சித்திரம் பதிவானதில்லை. அவரை மிக அணுக்கமாக அறிந்த திலிப்குமார் போன்றவர்கள்கூடச் சொன்னதில்லை.
மேலும் மௌனி 1907ல் பிறந்தவர். கோணங்கி அவரை முதன்முதலில் சந்திப்பது தன் இருபத்தியாறாவது வயதில் ,1984 ல். அதற்கு அடுத்த ஆண்டுதான் நான் கோணங்கியைச் சந்தித்தேன். சேர்ந்து மௌனியை சந்திக்கச் செல்லலாம் என கோணங்கி என்னை அழைத்தார். அப்போது மௌனிக்கு 77 வயது. அடுத்த ஆண்டு, 1985ல் மௌனி மறைந்தார்.
மௌனியின் முதுமை மிகத்துயரமானது. 1982ல் அவருடைய இரு மகன்கள் விபத்தில் மறைந்து இன்னொரு மகன் மனநோயாளியாகியிருந்தான். மௌனியின் கண் பார்வையும் பெரும்பாலும் போயிருந்தது. நரம்புச்சிக்கலால் அவரால் எழுந்து நடமாடமுடியவில்லை என்றும், கைகளை ஊன்றி நண்டுபோல தவழ்ந்தே வீட்டுக்குள் நடமாடினார் என்றும் திலீப்குமார் சொன்னார். (மௌனியுடன் கொஞ்சதூரம் என்னும் கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறார்)
நகுலன்நகுலனை கோணங்கி சந்திப்பது 1987 ல் குற்றாலம் கவிதைமுகாமில், அதன்பின்னரே அவரை தேடிச்சென்று இல்லத்தில் சந்தித்தார். அப்போது நகுலனுக்கு வயது 66 வயது. அதற்கு எட்டாண்டுகளுக்கு முன்னரே நகுலனுக்கு நரம்புத்தளர்ச்சியும் நினைவிழப்பும் தொடங்கியிருந்தது. பின்னர் அது அல்ஷைமர் நோயாக மாறியது. அவருடைய அந்த மறதிநிலையைத்தான் ’மிஸ்டிக் கிழவன்’ என்றெல்லாம் கோணங்கி போன்றவர்கள் ’ரொமாண்டிஸைஸ்’ செய்தார்கள். அவர்களால் அதை நோய் என உணர முடியவில்லை.
நான் நகுலனை 1985ல் என் இருபத்து மூன்றாவது வயதில் ஆ.மாதவனுடன் சென்று சந்தித்தேன். பலமுறை அவருக்கு பிடித்தமான மதுக்குப்பியுடன் சென்று பார்த்துள்ளேன். என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் 1987ல் நகுலனால் சீராக எந்த முகத்தையும் நினைவுகூர முடியவில்லை. இளமை முழுக்க அவருடன் அணுக்கமாக இருந்த நாஞ்சில்நாடனையே நீ யார் நீ யார் என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். அவரால் இயல்பாக நடமாட முடியாது. கைகால்களில் கடுமையான நடுக்கமும், நாக்குழறலும் இருந்தன.
ஆகவே இவ்விரு எழுத்தாளர்கள் பற்றியும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலரால் முன்வைக்கப்படும் அவதூறுகள் அருவருப்பானவை. இருவருமே மிக அபூர்வமான அறிவுத்திறன் கொண்டவர்கள். மௌனி ஒரு கணிதமேதை என்றே சொல்லத்தக்கவர். இசைவிற்பன்னர். நகுலனின் ஆங்கில அறிவு பிரமிப்பூட்டுவது. ஆனால் இருவரின் வாழ்க்கையும் இருவகையில் சிதைவுண்டது. இருவருமே இயல்பான வாழ்க்கை அமைந்திருந்தால் மிகப்பெரிய சமூகநிலைக்குச் சென்றிருக்கவேண்டியவர்கள். எழுத்தாளர்களாக எவ்வளவு மதிக்கத்தக்கவர்களோ, மனிதர்களாக அவ்வளவு பரிதாபத்திற்குரியவர்கள்.
மௌனி தொடர் பொருளியல் வீழ்ச்சிக்காளானார். அதன்பின் அவருடைய மொத்த வாழ்க்கையும் படிப்படியான சரிவுதான். நகுலனுக்கு அவருடைய ஐந்து வயதில் முதல் வலிப்பு நோய் வந்தது. மூளையில் உயிர்மின்சாரம் அதிகமாவதன் விளைவு. அன்றெல்லாம் அதற்குச் சரியான மருந்துகள் இல்லை. அவர் அம்மா அவரை தன் அருகிலேயே வைத்துக்கொண்டு வளர்த்தார். வலிப்புநோய் அடிக்கடி வந்து கடைசிவரை நீடித்தது. அதன்விளைவான உடற்குறையுடன் வீட்டுக்குள்ளேயே வாழ்ந்தமையால் உருவான ஆளுமைக்குறுகுதலும் அவருக்கு இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு எழுத்தாளர்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கவும், இலக்கிய முன்னோடிகளையே சிறுமைசெய்யவும் சமூகவலைத்தளக் கும்பல் ஒன்று முயல்கிறது. ஆகவேதான் இதை எழுதினேன். இதற்குமேல் விவாதமோ உரையாடலோ இல்லை.
கா.மு.ஷெரீப்
கவி கா.மு.ஷெரீப் ‘ஏரிக்கரை மேலே போறவளே’ ‘பூவாமரமும் பூத்ததே’ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர். இஸ்லாமிய அறிஞர். ம.பொ.சியின் தமிழரசு கட்சியில் தீவிரமாகச் செயலாற்றியவர். தேசியப்பார்வையை முன்வைத்தவர்
கா.மு.ஷெரீப் – தமிழ் விக்கி
சிப்பியின் வயிற்றில் முத்து – வெங்கி
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும். போதிசத்வ மைத்ரேய-வின் “சிப்பியின் வயிற்றில் முத்து” வாசித்தேன் (வங்க நாவல் தமிழாக்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி).
ஒரு வங்க எழுத்தாளர் எத்தனை நுண் அவதானிப்புகளுடன் தமிழர் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது!. வாசிக்க வாசிக்க பெரும் வியப்பு!. 1950-களின் முந்தியும், பிந்தியுமான காலகட்டத்தில், தூத்துக்குடி கடற்கரையோர மீனவ சமுதாய மக்களின் வாழ்வியலையும், தஞ்சாவூர் திருவையாறு பகுதியில் இசை, நாட்டியக் கலைகளை வாழ்முறையாகக் கொண்ட தேவதாசி இனத்தவர்களின் வாழ்வியலையும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறது நாவல்.
நாவலில் ஏராளமான கதாபத்திரங்கள் வருகின்றன. சிறிதும் கட்டுக்கோப்பு குலையாமலும், சுவாரஸ்யமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது நாவல். எஸ். கிருஷ்ணமூர்த்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். நாவலின் கச்சிதமும், நடையும், பேசுபொருளும் மிகவும் வசீகரித்தன. அன்றைய அரசியல் சூழலும் நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்னான சமூகச் சூழலும், அடைந்த பின்னான மாற்றங்களும், சமூக மனநிலையும், முதலாளித்துவமும், பொதுவுடமைச்சிந்தனைகளும், விவாதங்களாய் கதையோட்டத்துடன் விரிகின்றன.
வ.உ.சி-யை தன் அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவரும், இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரும், 1911-ல், மணியாச்சிரயில்நிலையத்தில், அப்போதைய திருநெல்வேலி கலெக்டராய் இருந்த பிரிட்டிஷ் அதிகாரி ஆஷ் துரையை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட வாஞ்சியின் நண்பரும்/சீடருமான வெங்கி அய்யர் நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். வாஞ்சி ஆஷைச் சுட்டுக் கொல்லும்போது அவரும் வாஞ்சி அய்யரின் அருகில் சம்பவ இடத்தில்தான் இருக்கிறார்.
இளம் இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி, சுதேசமித்திரன் ஆசிரியரும், பாரதியின் சீடருமான சி. ஆர். சீனிவாசன், ஐம்பதுகளில் மத்திய உணவு மந்திரியாக இருந்த கே.எம். முன்ஷி, அப்போதைய மெட்ராஸ் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக பதவி வகித்த குமாரசாமி ராஜா,தியாசஃபிகல் சொசைட்டியின் முதல்வராயிருந்த அன்னி பெஷன்ட், அருண்டேல், லண்டனில் இந்தியத் தூதரகத்தின் முதல் ஹை கமிஸனர் பொறுப்பிலிருந்த வி. கே. கிருஷ்ண மேனன், இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி. எஸ். சேனா நாயகே…அனைவரும் நாவலில் வருகிறார்கள்.
***
1950-ம் ஆண்டில், வங்க அரசின் மீன்வளத் துறையிலிருந்து இந்திய அரசாங்கத்தின் மீன்வளத் துறைக்கு மாறி, தமிழ்நாட்டின் தென்கோடியில்கன்னியாகுமரிக்கருகில் மன்னார் குடாக் கரையிலமைந்த தூத்துக்குடிக்கு வருகிறார் போதிசத்வ மைத்ரேய. #மீனவர்கள் பல்வேறு முறைகளில் மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு கடலில் அறுபது எழுபதடி ஆழத்துக்கு மூழ்கி சங்குகளும் முத்துச்சிப்பிகளும் எடுத்து வருவர். அவர்களுடைய வாழ்க்கை சுவையானது.சுற்றுச் சூழலும் அவ்வாறே. நிலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் செல்வம் இலக்கியம், சிற்பம், இசை, நாட்டியம். பின்னவை இரண்டும் தேவதாசி சமூகத்தின் பாரம்பரியம். இருந்தாலும் கடுமையான சாதி வேற்றுமைகள் நிறைந்தது தமிழ்நாடு# என்று குறிப்பிடுகிறார் போதிசத்வ.
எழுத்தாள நண்பர் அஜித் கிருஷ்ண பாசு, “தமிழ் சமூகம், தமிழர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைப் புரிந்துகொண்டு தமிழர்களை வைத்து நாவல், கதைகளை எழுதி தமிழ்நாட்டை வங்காளிகளுக்கு அரிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார். 1960-ம் ஆண்டிலிருந்தே தமிழர்களைப் பாத்திரங்களாக வைத்து பத்திரிகைகளில் சிறுகதைகள், நெடுங்கதைகள் எழுதத் தொடங்கியிருக்கிறார் போதிசத்வ. பிறகு 60/61-ல், மன்னார் குடாக் கரையில் வாழும் கத்தோலிக்க மீனவர் சமூகத்தைச் சித்தரித்து, “கல்பபாரதி” பத்திரிகையில் “சுக்தி சைகத்” என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதத் தொடங்கியிருக்கிறார். இரண்டு வருடங்களாய் வெளிவந்த அந்த நாவல் முற்றுப்பெறவில்லை. கிடப்பில் போட்டிருந்த அந்த நாவலை நண்பர்களின் வேண்டுகொளுக்கிணங்க, பத்து முறை திருத்தி திரும்ப எழுதுகிறார். நாவல் இப்போதிருக்கும் வடிவில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின் 80-ல் வெளியாகிறது.
நாணயமற்ற முதலாளிகளுக்கெதிராக, மீனவ சமுதாயத்தினரிடையே வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை உண்டாக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் உடல் வலு மிக்க மீனவர் மோசஸ் ஃபெர்னாண்டோ, கொடூரமான முறையில் நெஞ்சில் மூங்கிலால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அவர் பையன் பீட்டரையும் கொலை செய்வதற்காக கொலையாளிகள் தேட, பீட்டர் ஊரை விட்டுச் செல்கிறான். இரண்டு வருடம் கழித்து திரும்புகிறான். அப்போதும் அவன் உயிருக்கு ஆபத்துதான். ஊரில் மீனவர்களின் நிலைமைஇன்னும் மோசமாக இருக்கிறது.
நகரின் உட்புரத்தில் கன்னிமார் மடத்தின் மருந்தகத்தில் வேலை செய்யும் சிஸ்டர் சோஃபியாவைக் காதலிக்கிறான் பீட்டர். அவள் கன்னியாஸ்திரி ஆகுமுன்பே, ஒருமுறை அவளின் பதின்ம வயதில், கடலில் சுறாவிடமிருந்து அவளைக் காப்பாற்றியிருக்கிறான் பீட்டர். மைக்கேல், தோமஸ், மேத்யூ, சிங்கராயன், நாதன் ஐவரும் மீன்பிடி படகில் பீட்டரின் சிஷ்யர்கள்.
உப்பளங்கள், கப்பல் ஏஜன்ஸி, வங்கித் தொழில், டீ காபித் தோட்டம், லாரி, கான்ட்ராக்ட் தொழில், இன்னும் பலதரப்பட்ட தொழில்கள் செய்யும் (இலங்கை, ஹாங்காங், மலேயாவிலும் தொழில்கள் பரவியிருந்தன) தூத்துக்குடியின் பிரசித்திபெற்ற, பணம் படைத்த தொழிலதிபரும் இலங்கையின் முதல் பிரதமரின் தோழருமான “காட்வின் ஃபெர்னாண்டோ”, பீட்டரின் அப்பா மோசஸின் நண்பர். காட்வினின் மகன் அந்தோனி. தன்னை, அப்பா, ஜோசப் மாமாவின் பெரிய பெண் மார்ஸியை திருமணம் செய்ய வற்புறுத்துவது பிடிக்காமல் அந்தோனி, 1937 கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவு ஊரை விட்டு லண்டனுக்கு ஓடிப்போகிறான். பேராசிரியர் லாஸ்கியிடம் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் பெற்று, லண்டன் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றுகிறான்.
துறைமுகத்தில் “கார்தோஸா பிரதர்ஸ்” நிறுவனத்தின் முதலாளிகள் இருவர் – சுஸானும், மானுவலும். அவர்களின் உதவியாள் கிரிகோரி. கிரிகோரி கொலை பாதகத்துக்கும் அஞ்சாத முரடன். ஊரில் அரசியல் செல்வாக்குள்ள மற்றொரு பெரிய மனிதன் பேனி மிராண்டா.
தூத்துக்குடியிலிருந்து எட்டையபுரம் வழியாக ராமநாதபுரம் செல்லும் வழியில் மாதவபுரம் கிராமம். சுப்ரமணிய பாரதியின் நண்பர் வெங்கி அய்யர், நண்பனின் பெயரில் ஆரம்பித்த “பாரதி வித்யாலய”-த்தில் வேலை செய்கிறார் ஆசிரியர்/வீணை வித்வான் கோதண்டராமர் (ராமரும் பாரதியின் நண்பர்தான்). திருவையாறு சதாமங்கலம் மிராசுதாரும், வயலின் வித்வானுமாகிய அனந்தகிருஷ்ணரின் மகன்தான் கோதண்டராமன். ராமனின் சகோதரி தமயந்தி. ராமனின் நண்பன் ராமானுஜம். அனந்தகிருஷ்ணருக்கு தாசி நாட்டியக்காரி கனகம்மாவுடன் நெருங்கிய தொடர்பு. ராமனுக்கும் கனகம்மாவின் மேல் மிகுந்த அன்பு. ராமன் தன் பனிரெண்டாவது வ்யதில், அப்பாவின் நண்பர் தஞ்சாவூர் நரசிம்மனிடம் வீணை கற்றுக்கொள்கிறான். அவரிடம் ஆசி பெற்று வீணை ருக்மணி அம்மாளிடமும் பயிற்சி பெறுகிறான். ருக்மணி அம்மாளின் மகள் ரத்னாவை முதன்முதலில் திருச்சியில் காவிரிக் கரையில் சந்தித்தது முதல் காதலிக்கிறான். சட்டக்கல்லூரி மாணவனான ராமன் பின்னர் நாட்டியத்தில் விருப்பம் பெற்று, மெலட்டூர் நடேசய்யரிடமும், சிதம்பரம் நாராயண சாஸ்திரியிடமும் நாட்டியம் கற்கிறான். நாராயண சாஸ்திரி, ரத்னாவின் தாத்தா; ருக்மணி அம்மாளின் தந்தை.
காட்வின் முதுமையில் புற்று நோயால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களனைத்தையும் பீட்டரின் பேரில் எழுதி வைத்துவிட்டு இறக்கிறார். அந்தோனி லண்டனிலிருந்து 14 வருடங்களுக்குப் பின் தூத்துக்குடி திரும்புகிறான். பீட்டரைக் கொலை செய்ய முயலும் எதிரிகள், தவறுதலாக அவன் நண்பன் மைக்கேலைக் கொன்று விடுகிறார்கள்.
நாவலின் இறுதியில் தன் தந்தையின் மரணத்திற்குகாரணமாயிருந்தவர்களை பழிதீர்க்கிறான் பீட்டர்.
1500/1600-களில் தூத்துக்குடியின் வரலாற்றுச் சித்திரத்தின் கீற்றும் நாவலில் இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தின் ராக ரசனைகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நாட்டியச் சிற்பங்களின் சாஸ்திரங்களும், மீனவ சமுதாய வாழ்க்கையின் பண்பாடுகளும் நுட்பமான அவதானிப்புகளாய் நாவலில் விஸ்தாரமாய் வருகின்றன.
போதிசத்வ மைத்ரேய-விற்கும், தமிழ் மொழியாக்கம் செய்த எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கும் மனதுக்குள் வணக்கங்களையும், அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.
வெங்கி
“சிப்பியின் வயிற்றில் முத்து” – போதிசத்வ மைத்ரேய
வங்க மூலம்: “Jhinuker Pete Mukto”
தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
குறுந்தொகை வகுப்புகள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். 2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், காந்தியரான கண்ணன் தண்டபாணியின் மனைவியும் மருத்துவருமான நித்யா என்னைச் சங்க இலக்கியம் கற்றுத்தர இயலுமா எனக் கேட்டார். Zoom மூலமாக நண்பர்கள் சிலர் சேர ஒரு வியாழனன்று வகுப்பு தொடங்கியது.
ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தொடர்ந்து, வியாழக்கிழமைகளில் வகுப்பு எடுத்து, இதோ 23.2.23 அன்று முழுமையாக குறுந்தொகை 401 பாடல்களும் பாடமாக நடத்தப்பட்டுவிட்டன.
நான் பார்வைத் திறனற்ற சில மாணவிகளுக்கும் பாடங்களை ஒலிப்பதிவு செய்து தருவதுண்டு.தமிழைப் பயிலும் அம்மாணவிகள்.
பாடல்களைப் பிரித்துப்படித்து பொருள் கூறுபவர்களைத் தான் தேடுகிறார்கள்.மரபு வழியில் பாடம் நடத்துவது போன்றே இந்தக் குறுந்தொகை பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.
உங்கள் தளத்தில் வெளியிட்டால், இன்னும் நிறைய பேர் பயன்பெறுவார்கள்.
வணக்கத்துடன்
சித்ரா பாலசுப்ரமணியன்.
குறுந்தொகை வகுப்புகள் இணைப்புவல்லினம், மார்ச் 2023
வல்லினம் மார்ச் இதழ் பதிவேற்றம் கண்டது. அண்மையில் மரணமடைந்த ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம் இவ்விதழில் முதன்மையானது: தான் வாழும் வரை அதனை எங்கும் வெளியிட வேண்டாம் என ந. பாலபாஸ்கரன் கேட்டுக்கொண்டதால் இன்று அதனை வெளியிடுகிறோம்.
ந. பாலபாஸ்கரன் குறித்த விரிவான கட்டுரை ஒன்றை லதா எழுதியுள்ளார்.
ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்
முதன்முறையாக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் சிறுகதை இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. சாம்பல்நீண்ட நாட்களுக்குப் பிறகு நானும் ஒரு சிறுகதை நூல் விமர்சனம் எழுதியுள்ளேன்.
அத்தர்: அன்னையர்களின் கண்ணீர் குப்பி
மேலும் மூவிலை தளிர், உய்வழி, அன்னம், பிரிட்னி, வீடு திரும்புதல் ஆகிய சிறுகதைகளும் பட்டவன் என்ற குறுநாவலும் இவ்வல்லினத்தில் இடம்பெற்றுள்ளது.அ. பாண்டியன், அரவின் குமார் ஆகியோர் கட்டுரைகளையும் வாசிக்கலாம். வல்லினம் இணைய இதழ்ம.நவீன்
அன்புள்ள நவீன்,
கடலூர் சீனு, பிரதீப் கென்னடி, கிருஷ்ணன் சங்கரன் என புதிய கதையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். லெ.ரா.வைரவன் , லோகேஷ் ரகுராமன் என அறிந்த பெயர்களும். சிறப்பு
ஜெ
February 28, 2023
கல்வியாளர் ஜெயபாரதிக்கு கிருஷ்ணய்யர் விருது
சமூகச் செயற்பாட்டுக் களத்தில் தொடர்ச்சியாக இயங்கும் ஆளுமைகளுக்கு, முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் பெயரால் ‘நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுந்தர்லால் பகுகுணா, சபனா ஆஸ்மி, கொடிக்கால் சேக் அப்துல்லா, மருத்துவர் வெ.ஜீவானந்தம் உள்ளிட்ட நிறைய இந்திய ஆளுமைகளுக்கு இதுவரையில் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில், இவ்வாண்டுக்கான சமூகநீதி அறப்போர் விருது கல்வியாளர் ஜெயபாரதி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாவுடைய கல்விப்பணி எவ்விதத் தேய்வுமின்றி நீட்சியுற்றுள்ளது. எண்ணற்ற சாட்சிமனிதர்களை உருவாக்கி வளர்த்தெடுத்த நல்லாசிரியர் ஜெயபாரதி அவர்கள். மருத்துவர் ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு, சமூகப் பணிகளுக்கான அறக்கட்டளையைத் துவங்கி, மருத்துவர் ஜீவா விட்டுச்சென்ற செயற்கனவுகளை நிறைவேற்றும் உளவூக்கத்துடன் தொண்டாற்றி வருகிறார். இவ்விருதளிப்பு கல்வியாளர் ஜெயபாரதி அவர்களின் இத்தனை ஆண்டுக்கால கல்விப் பணிகளுக்காக வழங்கப்படுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம். உங்களுக்கும் நண்பர்களுக்கு இச்செய்தியைப் பகிர்வதில் இன்னும் மகிழ்வு கொள்கிறோம்.
கல்வியாளர் ஜெயபாரதி நேர்காணல் காணொளி இணைப்பு :
~
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


