Jeyamohan's Blog, page 620

February 28, 2023

விடுதலை என்பது என்ன? நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு

நாமக்கல் கட்டண உரை வலையேறியுள்ளது. இந்த உரை அதுவரை நான் ஆற்றிய உரைகளின் தொடர்ச்சி. ஆனால் தனியாகவும் கேட்கத்தக்கது. இந்த உரைக்கு முன் ஆற்றிய உரைகளெல்லாம் பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுபவை. திருப்பூர் உரை முடியும் இடம் பண்பாட்டில் இருந்து ஆன்மிகம் நோக்கிய தொடக்கம் நிகழும் புள்ளி. கல்யானையும் கரும்பு வாங்கும் தருணம். இது அதிலிருந்து நீள்கிறது.

திருப்பூர் கட்டண உரை 

சென்னை கட்டண உரை  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:35

விடுதலை என்பது என்ன?நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு

நாமக்கல் கட்டண உரை வலையேறியுள்ளது. இந்த உரை அதுவரை நான் ஆற்றிய உரைகளின் தொடர்ச்சி. ஆனால் தனியாகவும் கேட்கத்தக்கது. இந்த உரைக்கு முன் ஆற்றிய உரைகளெல்லாம் பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுபவை. திருப்பூர் உரை முடியும் இடம் பண்பாட்டில் இருந்து ஆன்மிகம் நோக்கிய தொடக்கம் நிகழும் புள்ளி. கல்யானையும் கரும்பு வாங்கும் தருணம். இது அதிலிருந்து நீள்கிறது.

 

திருப்பூர் கட்டண உரை 

சென்னை கட்டண உரை  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:35

அய்யனார்குளம்

[image error]

அய்யனார்க்குளம் முந்தைய திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த சிறு கிராமம். இங்குள்ள இராஜப்பாறை குன்றின் மேல் அமைந்துள்ள இயற்கையான குகைத்தளத்தில் சமணப்படுக்கையும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன. இதன் அருகிலேயே நிலப்பாறை என்னும் மற்றொரு குன்றிலும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

அய்யனார்குளம் குன்றுப்பள்ளி அய்யனார்குளம் குன்றுப்பள்ளி அய்யனார்குளம் குன்றுப்பள்ளி – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:34

யோகப் பயிற்சி வகுப்பு

மார்ச் மாதம் 24, 25, 26 ஆம் தேதிகளில் மூன்றாவது யோகப்பயிற்சி முகாமை குரு சௌந்தர் நடத்துகிறார். பங்குபெற விழைபவர்கள் பெயர், வயது, மின்னஞ்சல் ஆகிய தகவல்களுடன் jeyamohan.writerpoet@gmail.com என்னும் விலாசத்திற்கு எழுதலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:31

ஆழி – ஓர் உரை

அன்புள்ள ஜெயமோகன் ,

நலம்தானே. பயணத்திற்கு பிறகான ஓய்வில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் (சந்தேகம்தான்). சென்ற ஞாயிறன்று நிகழ்ந்த வாசகசாலையின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் கமலதேவியின் ஆழி சிறுகதைத் தொகுப்பிற்கான அறிமுக உரையாற்றினேன். என் முதல் இலக்கிய மேடை உரை. எழுத்தாளர் காளிப்ரசாத் அண்ணாவிற்கு பதிலாக substitute playerஆக (முழு புத்தகத்தையும் வாசித்துவிட்டு) களமிறங்க வேண்டிய சூழலில் நிகழ்த்திய உரை.  உரையை இன்று காணொளியில் பார்த்தபொழுது இரண்டு விஷயங்கள் தோன்றியது . முதலில் முழுக்க முழுக்க உங்களை பிரதியெடுக்க முயற்சித்திருக்கிறேன். ஆனால் மை தீரப்போகும் பழைய ஜெராக்ஸ் மெஷின் அளவுக்கே பிரதியெடுத்திருக்கிறேன். அபத்தமான முயற்சியாக இருந்தாலும் தன் ஆதர்சமான ஆளுமையை பின்பற்ற நினைக்கும் எந்தவொரு மாணவனுக்கும் அது நிகழ்வதுதான் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் இத்தகைய முயற்சிகளின் வழியே எனக்கான தனி ஆளுமையை நான் கட்டமைத்துக்கொண்டால் அதுவே உங்களுடைய சரியான பிரதியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .

இரண்டாவதாக தோன்றிய எண்ணம் ஒழுங்காக மேடையுரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டபொழுதே பங்குபெற்றிருக்கலாம் என்பதுதான். அலுவலக பனிச்சுமையோடு சேர்த்து நம்மை யார் மேடையுரையாற்ற அழைக்கப்போகிறார்கள்? நமக்கு எதற்கு அந்த பயிற்சியெல்லாம்? என்று அபத்தமான சாக்கு போக்குகளை எனக்கு நானே சொல்லிக்கொண்டு மேடையுரை பயிற்சிக்கு வராமல் இருந்துவிட்டேன். ஆனால் விதி யாரை விட்டது. அங்கே சென்று மேடையில் தடுமாறிக்கொண்டிருக்கையில்தான் ஒழுங்காக பயிற்சிக்கு போயிருக்கலாம் என்று தோன்றியது. அடுத்த முறை வகுப்பு நடத்தப்பட்டால் முதல் ஆளாக வந்துவிடுகிறேன் . மற்றபடி முதல் இலக்கிய மேடைக்கான பாவனைகள், சமாளிப்புகள் என அனைத்தும் கொண்ட ஒரு சராசரி உரை இது. ஆனால் எதுவாக இருந்தாலும் உங்களோடு பகிராத என் எந்த செயலுக்கும் பொருளில்லை. எனவே காணொளியின் சுட்டியை இணைத்திருக்கிறேன்.

 

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

அன்புள்ள விக்னேஷ்

தொடக்கவுரை என்னுமளவில் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஓர் எளிய பயிற்சிவகுப்பில் அளிக்கப்படும் திருத்தல்கள், வழிகாட்டுதல்கள் இதைவிட பலமடங்குச் சிறந்த உரையை ஆற்றவைக்கும். உரையின் கட்டுமானம், அதற்கான தயாரிப்புகளைச் செய்யும் முறை, அதில் செய்யக்கூடாதவை என பல உண்டு. அவற்றை அறியாமலேயே நம் இலக்கியவாதிகளில் பெரும்பாலானவர்கள் உரையாற்றுகிறார்கள். ஆகவே அவர்களின் உரைகள் தாங்கமுடியாத பொறுமைச்சோதனைகளாக உள்ளன. இலக்கியக்கூட்டங்களில் ஐந்துபேர் ஆறுபேர் என அரங்கினர் வந்து அமர்ந்திருப்பதும் இதனாலேயே.

அண்மையில் திருப்பூரில் ஓர் இலக்கியவிழாவுக்குச் சென்றுவந்த நண்பர் எழுதியிருந்தார். ‘இலக்கியவிழாக்களுக்கு வாசகர்கள் செல்வதில்லை, இலக்கியவிழாக்கள் முக்கியமானவை என்று நீங்கள் எழுதிக்கொண்டே இருந்தீர்கள். அதை நம்பி இந்த விழாவுக்குச் சென்றேன். ஓரிருவர் தவிர எவருக்குமே பேச்சு வசப்படவில்லை. எந்த பயிற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்னொருவரின் நேரத்தையும் எடுத்துக்கொண்டு பேசித்தள்ளினார்கள். என் வாழ்க்கையின் மிகமிக சலிப்பூட்டும் நாளாக ஒன்றை ஆக்கிவிட்டார்கள்’

ஆனால் அந்த எளிமையான பயிற்சியை எடுக்க இலக்கியவாதிகளின் தன்முனைப்பு அனுமதிப்பதில்லை, அதற்கு தன்னடக்கமோ தன்முனைப்போ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் – உங்களையும் சேர்த்தே சொல்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:31

அவை அங்கே இருக்கட்டும் – கடிதம்

முதுநாவல் வாங்க

முதுநாவல் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

அண்மையில் நடைபெற்ற கோவை நவீனஇலக்கிய மாநாட்டில் ஒரு முஸ்லீம் பேச்சாளர் பேசும்போது ‘ஜெயமோகன் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் பற்றி ஒன்றுமே எழுதவில்லை’ என்று சொன்னார். அங்கே உடனே சிலர் அப்படி இல்லை என்று சொன்னார்கள். அவர் தனக்கு அது தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.

தமிழில் இஸ்லாமிய சூஃபி மெய்ஞானம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகள் நீங்கள் எழுதியவை. முதுநாவல், படையல் இரண்டு கதைகளுமே எப்போது வாசித்தாலும் என்னை மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள். மேலும் பல இஸ்லாமியப் பின்னணி கொண்ட கதைகளையும் எழுதியிருக்கிறீர்கள். அவையெல்லாம் சும்மா இஸ்லாமியர்களுக்கு வேண்டியவர் என்று பாவலா காட்டும் கதைகள் இல்லை. இஸ்லாமிய மெய்ஞானத்தின் சாராம்சம் வெளிப்படும் கதைகள். இஸ்லாமியரை அன்பானவர்கள், பண்பானவர்கள், பாதிக்கப்படுபவர்கள் என்றெல்லாம் பாராட்டி போலியாக எழுதவில்லை.  அதில் வரும் கதாபாத்திரங்களெல்லாம் கெத்தேல் சாகிப் போன்றவர்கள்.

இதைப்போல கிறிஸ்தவக் கதைகளையும் நிறைய எழுதியிருக்கிறீர்கள். கிறிஸ்தவ ஆன்மிகம் வெளிப்படும் கதைகள் அவை. வெறும் முள் அவற்றிலே ஓர் உச்சம். இதையெல்லாம் இவர்கள் படிக்கவில்லை. அறம் தொகுதியையாவது ஒரு இலக்கியவாசகர் படிக்காமலிருப்பாரா? இந்தப்பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதை முறியடிக்க இஸ்லாமியக் கதைகளையும் கிறிஸ்தவக் கதைகளையும் தனித்தொகுப்புகளாக வெளியிடலாமே?

ஆனந்த் கண்ணன்

 

அன்புள்ள ஆனந்த்

அப்படி வெளியிடும் எணணமில்லை. இவர்கள் சொல்வது வேண்டுமென்றே. இவர்களிடமிருப்பது வெறும் சாதி -மதக்காழ்ப்பு மட்டுமே. அதை அணையாமல் பாதுகாப்பதற்காக எதையுமே வாசிக்காமலிருப்பார்கள்.

சரி, தொகுத்தளித்தால் என்ன ஆகிவிடும்? கதைகளை இவர்கள் வாசித்தால் என்ன ஆகிவிடும்? காழ்ப்புநோய் நீங்கி தெளிந்துவிடுவார்களா என்ன? அது அப்படி தீரும் நோயா? வாசித்தால்கூட ‘அதெல்லாம் உண்மையிலே சிறுபான்மை எதிர்ப்பு கதைகள் தெரியுமா? நல்லா உன்னிப்பா கவனிக்கணும் நீங்க…” என ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்தக் கதைகள் மெய்யான ஆன்மிகத்தேடல் கொண்டவர்களுக்கானவை. அவை அப்படியே அவர்களுக்காக மட்டும் இருந்துகொண்டிருக்கட்டும்.

ஜெ

முதுநாவல், கடிதங்கள்

முதுநாவல்- கடிதம்

முதுநாவல் முன்னுரை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2023 10:31

February 27, 2023

எழுகதிர் நிலம்- 9

(டைகர் மடாலயம். பாடல்)

பிப்ரவரி 16 ஆம் தேதி காலையிலேயே எழுந்து வெந்நீர்ல் குளித்து எதிரில் இருந்த உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றோம். சென்ற சீசனில் வாங்கி வைத்த உணவுப்பொருட்கள். பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் கெட்டுப்போகுமென்ற எண்ணமே பழங்குடிகளிடம் அனேகமாக இல்லை. நூடில்ஸ், அதாவது மாகி, ஒரு மாதிரி காரமாக இருந்தது. வழக்கம்போல அந்த கஞ்சியை குடித்துவிட்டு வயிறு நிறைந்துவிட்டது என கற்பனைசெய்துகொண்டு கிளம்பிச்சென்றேன்.

நாங்கள் அங்கு வந்ததே பாம்பூ டிராக் எனப்படும் மூங்கில்பாதை வழியாக ஒரு நடை செல்வதற்காகத்தான். வாக்கென் கிராமத்தின் காசி பழங்குடிகளின் கட்டுப்பாட்டிலுள்ள Mawryngkhang Trek எனப்படும் இந்த மூங்கில்பாதை முக்கியமான ஒரு சுற்றுலாக் கவற்சி. இன்று சுற்றுலாப்பருவத்தில் ஏராளமான பயணிகள் இங்கு வருகிறார்கள். நாங்கள் சென்றபோது அக்கிராமத்தில் தங்கி காலையில் நடைசென்றவர்கள் நாங்கள் மட்டுமே. பத்துமணிக்குமேல் ஷில்லாங்கில் இருந்து இளைஞர்குழுக்கள் வரத்தொடங்கின.

பனிமலையில் அரங்கா

இப்பாதை சுற்றுலாவுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. மேகாலயா பழங்குடிகளின் ஊர்கள் மிக மிக விலகி செங்குத்தான மலைகளின் மடிப்புகளுக்குள் உள்ளன. அங்கிருந்து அவர்கள் சந்தைகள், பொது இடங்களுக்கு வருவதற்கான தொடர்புக்காக இப்பாதைகளை அமைக்கிறார்கள். அதிலொன்றை சுற்றுலாப்பயணிகளுக்குரிய நடைபாதையாக மாற்றியிருக்கிறார்கள். மேகாலயா முழுக்க உருவாகி வரும் சுற்றுலா மலர்ச்சியின் ஒரு பகுதியாக இவை இப்படி உருமாற்றம் பெறுகின்றன.

செல்லும் வழியில் மலைச்சரிவில் துடைப்பப்புல்லை வெட்டி சேகரித்துக்கொண்டிருந்தனர். அந்த மூங்கில்புல்லின் பூ செங்குத்தாக எழுந்து நின்று காற்றிலாடி கடலலைபோல விழிமாயம் காட்டியது. அதை சீராக அறுத்து கத்தைகளாக படுக்கவைத்தனர். மூங்கில் ஆண்டுதோறும் பூக்கவேண்டும் என்றால் அதை ஆண்டுதோறும் வெட்டிவிடவேண்டும். அப்போது செங்குத்தாக எழாமல் பல கிளைகளாக பக்கவாட்டில் விரிந்து பல பூக்கள் எழுந்து வரும்.

கிராமசபையின் பெண்மணி ஒருத்தி டிக்கெட் கொடுத்தாள். தலைக்கு நூறு நூபாய். மலையிறங்கிச் சென்று வாரூ (Wahrew)  ஆற்றை அடைந்தோம். அதன் கரையில் ஒரு சிறிய பெட்டிக்கடை. அங்கே அப்போது எவருமில்லை. அருணாச்சலப்பிரதேசத்தில் பனிமலைகள் உருகி வரும் நீர் மிகமிகமிகமிக தெளிந்தது. அதன் ஒளியலையால் மட்டுமே அந்த நீரை நாம் பார்க்க முடியும். அசைவற்ற இடத்தில் நீர் பார்வையில் இருந்தே மறைந்துவிடும்.

வாரூ ஒழுகி வரும் வழி முழுக்கவே செங்குத்தான மலயிறக்கம். ஆகவே மண்ணை நீரின் விசை அரித்து வெறும் பாறைத்தடமாக ஆக்கிவிட்டிருக்கிறது. வரும் வழி முழுக்க காடு. ஊர்களும் இல்லை. ஆகவே கழிவுகலப்பதில்லை. ஆகவேதான் அந்த தெளிவு.

வாரூ ஆற்றில்தான் இந்தியாவிலேயே பெரிய ரயில்வே இரும்புப்பாலம் இருக்கிறது. 22 ஜனவரி 2021 ல் முதல்வர் கான்ராட் சங்மா சோபார் என்னுமிடத்திலுள்ள அந்தப்பாலத்தை திறந்து வைத்தார்.  ஏறத்தாழ ஐம்பது கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் பாலம் 169 மீட்டர் நீளம் கொண்டது.

நாங்கள் மலையிறங்கி ஆற்றை நோக்கி வரும் வழியிலேயே ஒரு சிவப்பான பெண் நாய் எங்களை அணுகி நட்பை தெரிவித்தது. கனத்த முலைகள் அது குட்டி போட்டிருப்பதைக் காட்டின. பெட்டிக்கடையில் ஏதாவது வாங்கலாமென எண்ணினால் அங்கே ஒன்றுமில்லை.

ஆற்றில் இருந்து மூங்கில்பாதை ஆரம்பிக்கிறது. ஆற்றுக்குள் மூங்கில்களை x வடிவில் நாட்டி அதன்மேல் இருவர் நடந்துபோகுமளவுக்கு அகலத்தில் பாலம் போல பாதையை அமைத்திருந்தனர். ஆற்றிலுள்ள பெரிய பாறைகளையும், ஆற்றோர மரங்களையும் அதனுடன் இணைத்து பாலத்தை நீட்டிச் சென்றிருந்தார்கள். ஏறி இறங்க வேண்டிய இடங்களில் மூங்கில் வரிசைகளுக்கு குறுக்கே மரத்தண்டுகள் வைத்து கட்டி படிகள்.

இந்த மூங்கில் பாதை வாக்கென் கிராமத்திலுள்ள 200 வீடுகளில் வாழும் 1000 காசி இன மக்களால் அரசு அல்லத்து அயல் உதவி ஏதுமில்லாமல் முழுக்க முழுக்க உள்ளூர் தொழில்நுட்பத்தால் கட்டப்பட்டது. மூங்கில்களை கயிறுகளால் சுற்றிக் கட்டியிருக்கிறார்கள். ஆணி மிக குறைவு. கயிற்றுக் கட்டுகள் இறுக்கமானவை அல்ல, சற்று நெகிழ்வானவை. ஆகவே பாலங்கள் சற்று அசையும், ஆனால் அந்த அசைவு பாலத்தில் உருவாகும் அதிர்வுகளை வாங்கிக்கொள்ளும். பாலத்தின் அதிர்வு தூண்களுக்குச் செல்லாமல் தடுக்கும்.

ஆற்றின் மறுபக்கம், பாதையோரமாக ஒரு சிமிண்ட் கட்டுமானம். நாய் ஓடிச்சென்று தன் குட்டிகளை காட்டியது. மூன்று குட்டிகள். மூன்றுமே கொழுகொழுவென இருந்தன. ஒன்று மனிதர்களை கண்டதுமே ஓடி ஒளிந்துகொண்டது. அரங்கசாமி குட்டிநாய்களை கையில் எடுக்க முயல அன்னை அவர் கையை தன் கையால் தட்டி தட்டி விட்டது – கையில் எடுக்காமல் கொஞ்சு என்று சொல்கிறது. ஆனால் உறுமவோ, எச்சரிக்கவோ இல்லை. குட்டிகளைப் பற்றி அம்மாவுக்குப் பெருமைதான்.

ஆற்றுக்கு மறுகரையில் இருந்து மீண்டும் மூங்கில்பாதை செல்லத்தொடங்கியது. அது சில இடங்களில் உயரமான மூங்கில்கள்மேல் கட்டப்பட்ட பாலம். சில இடங்களில் காட்டு மரங்களின் கிளைகளை இணைத்துக் கட்டப்பட்ட அந்தரப்பாதை. கால்கீழே பார்த்தால் உடல் உதறிக்கொள்ளும். பல இடங்களில் எண்பது தொண்ணூறு அடி ஆழத்தில் மலைப்பள்ளங்கள் தெரிந்தன. சில இடங்களில் செங்குத்தான பாறைகளின் விலாவில், பாறைவிரிசல்களில் ஆணி அறைந்து தொட்டில்போல பாதை தொங்கவிடப்பட்டிருந்தது.

 

காடுகளுக்குமேல், மலைகளுக்கு மேல் ஊர்ந்து செல்லும் உணர்வு. பல இடங்களில் வானில் செல்லும் பதற்றமே உருவாகியது. மலைப்பாறைகளின் பக்கவாட்டில் நகர்கையில் பாலம் மெல்ல அசைவது அடிவயிற்றை கலங்கச் செய்யும் அனுபவம். ஏறி இறங்கி, குடையப்பட்ட பொந்தினூடாக மறுபுறம் சென்று, மீண்டும் மரப்பாலத்தில் ஏறி, மீண்டும் மூங்கில் தொட்டிலில் ஆடியாடி….

அத்தனை நீண்ட பாதை என அறிந்திருக்கவில்லை. அத்தனை வெயில் இருக்குமென்ற கணிப்பும் இருக்கவில்லை. பாதை சென்று சென்று பாறைகளை இணைத்து நீண்டுகொண்டே இருந்தது. இறுதியாக செங்குத்தாக நின்ற பிரமிட் வடிவ பெரும்பாறை ஒன்றின் முனைவரை ஏற படியமைத்திருந்தனர். அதில் நின்று கீழே ஆழத்தில் ஒளிர்ந்து ஓடிய ஆற்றைப் பார்த்தோம். அதற்கப்பாலும் அந்தப்பாதை சென்றது. மலையின் மறுபக்கம் உள்ள ஒரு காசி கிராமம்தான் அதன் இறுதி புள்ளி. சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த மலையுச்சியே இறுதி.

அரசன், மனைவியுடன்

மாரிங்காங் (Mawryngkhang) என்றால் கற்களின் அரசன் என்று பொருள். இந்த மலையுச்சிப்பாறைதான் அந்த அரசன். காசி தொன்மங்களின்படி ஒருமுறை கற்கள், பாறைகள் நடுவே ஒரு பெரிய போர் நடைபெற்றது. அதில் வென்றது இந்த மாரிங்காங் பாறைதான். இப்பகுதியின் அரசன் அதுதான்.

மாரிங்காங் அருகே உள்ள கிதியாங் (Kthiang) என்னும் பாறையுடன் காதல்கொண்டது. மப்படார் (Mawpator) என்னும் இன்னொரு பாறை அதை எதிர்த்து கிதியாங்கை அடைய முயன்றது. அப்போது நடைபெற்ற போரி மாரிங்காங் மப்படாரை அறைந்து இரண்டாக உடைத்தது. வெற்றி பெற்று கிதியாங்கை மணந்தது. அங்கே மாரிங்காங் பாறைக்கு அருகே அதன் துணைவியான கிதியாங்கும், உடைந்த மப்படார் பாறையும் உள்ளன.

அங்கிருந்து திரும்பி வரும்வழியில் மூச்சிரைக்க பயணிகள் வருவதை கண்டோம். “தயங்கவேண்டாம், கொஞ்சம் முயன்றால் போய்விடலாம்” என அவர்களுக்கு ஊக்கமூட்டினோம். அனைவருமே இளைஞர்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் அனைவருக்குமே சிறுகுழந்தைகளுக்குரிய ‘செல்லக்கொழுப்பு’ கொண்ட உடல். வியர்வையால் முகங்கள் நனைந்து, வெயிலில் சுண்டிப்போயிருந்தன.

கீழே ஓர் அருவி. அங்கே இறங்கிச் சென்று நீராட மூங்கிலில் பாதை அமைத்திருந்தனர். செங்குத்தான பாதை. அதன் வழியாக இறங்க மூட்டுவலி, மிகுஎடை இருக்கலாகாது. மேகாலயாவின் மஞ்சளின மக்களுக்கு எடை இருப்பதில்லை. சிறிய உருவம் கொண்டவர்கள். அவர்களின் மூட்டுவலிமையும் நுரையீரல் வலிமையும் நம்மைவிட மிகுதி. அவர்கள் மலையில் பிறந்து வாழ்ந்து அங்கேயே பரிணாமம் அடைந்தவர்கள்.

கீழே அருவி ஒரு கண்ணாடித்திரைபோல விழுந்துகொண்டிருந்தது. நீலப்படிகம் போன்ற நீர். அந்த தெளிவே ஒரு கனவுத்தன்மையை அளித்தது. மதியவெயில் நீருக்குள் புகுந்து அருவிவிழுந்த குளத்தை ஒரு மாபெரும் நீலவைரமென காட்டியது. அதில் இறங்கி அதை தீண்டுவதே பாவமோ என்னும் தயக்கம் ஏற்பட்டது.

நீரின் அழகு அதன் தெளிவில் ஓர் அசாதாரணத் தன்மை கொள்கிறது. நமக்கு தென்னிந்தியாவில் அத்தகைய அசாதாரணத்தன்மை பழக்கமில்லை. நம் மண்ணில் உப்புகள் மிகுதி. சேறும் உண்டு. ஆகவே முழுத்தெளிவு நிகழ்வதில்லை. நாம் நன்கறிந்த உலோகம் தீட்டப்பட்டு கூர் கொள்கையில் அச்சமூட்டுவதாக ஆகிவிடுவதுபோலிருந்தது அந்தத் தெளிவு. தெளிந்த உள்ளங்களும் அத்தகைய விலக்கத்தை உருவாக்குகின்றனவா?

குற்றாலம் அருவியில் விடியற்காலைக் குளியலில்தான் அந்தத் தயக்கம் உருவாகும். நீர் ஒரு பனிக்கட்டியாக தோன்றியது. ஆனால் முழங்காலளவு நீரில் இறங்கும்போதுதான் குளிர் உலுக்கியது. பின்னர் உடல் குளிரை ஏற்றுக்கொண்டது. சற்று கடந்தபின் உடல்வெம்மை வெளிவந்து நீரின் தண்மையை எதிர்கொண்டது. உடல்வெம்மையும் குறைய தொடங்கும்போதுதான் வெடவெடக்கத் தொடங்கும். அதுவே நீராட்டின் எல்லை.

பாறைகளில் ஏறி உச்சிமுனை வழியாக நகர்ந்து நகர்ந்து சென்று அருவிக்குளத்தில் குதித்தோம். நீந்தியும் பாறைகளில் இருந்து தாவியும் அந்த நீரில் அளைந்தோம். குளிக்கக்குளிக்க காலம் மறந்து, உள்ளம் அழிந்து, உடல் மட்டுமே ஆன பெருந்திளைப்பு.

மீண்டும் மேலேறும்போது நான்கு மணிநேர நடை, ஒன்றரை மணிநேர நீச்சல், செங்குத்தான மலையேற்றமும் இறக்கமும் சேர்ந்து கெண்டைக்கால் தசையை இறுக்கமாக்கிவிட்டன. நல்ல வலி. இரண்டு இடங்களில் அமரவேண்டியிருந்தது. ஆனால் பெரிய ஓய்வை அளிக்காமல் நீவி நீவி விட்டபடி மெதுவாக ஏறினேன். பழகி இயல்பாகிவிட்டன.

(வழக்கம்போல கிருஷ்ணன் நீராடவில்லை. ஆனால் அருவி வரை வந்து மீண்டார். அவருடைய கால்களும் அரங்கசாமி கால்களும் பலநாட்களுக்கு உளைச்சல் கொண்டிருந்தன என்றார்கள். ஒப்புநோக்க நான் கூடுதலாக நடந்துகொண்டிருக்கிறேன் என்பதே காரணம்)

மேலே வந்து சேர்ந்தபோது மீண்டும் வியர்வை வழியத் தொடங்கிவிட்டது. காரில் ஏறி அமர்ந்ததுமே தூக்கம் வந்து அழுத்தியது. பத்துநிமிடம் தூங்கினேன். அந்த வகையான குறுந்துயில்கள் இனியவை. சிறிய மிட்டாய் போல தித்திப்பவை. ஆழ்துயில் அல்ல. சூழல் தெரியும். ஆனால் ஒரு வண்ண ஓவியப் புத்தகத்தை எவரோ பிரித்துக் காட்டியதுபோல சம்பந்தமில்லாத பல சிறுகனவுகள் வந்து வந்து செல்லும்.

அங்கிருந்து இன்னொரு மலைமுடிக்குச் சென்றுவிட்டு ஷில்லாங் திரும்ப கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். ஆனால் சாலை மிகமிக கொடிதாக இருந்தது. மிக அகலமாக வெட்டி ஓர் ஆறுவழிச்சாலை போட்டுக்கொண்டிருந்தனர். அலைகளில் படகுபோல செல்லவேண்டும். கொஞ்ச தூரம் சென்றபின் திரும்பிவிடலாம் என முடிவெடுத்தோம். அந்திக்குள் ஷில்லாங் திரும்ப முடியாமலாகும் என தோன்றியது.

விஷ்ணுபுரம் அமைப்பின் பொறுப்பாளரும் எழுத்தாளருமான நண்பர் ராம்குமார் ஷில்லாங்கில் இந்திய ஆட்சிப்பணியில் சுகாதாரத்துறை செயலராக இருக்கிறார். (முன்பு மலைப்பகுதிகளில் சூரிய ஒளி மின்சாரம் கொண்டுசென்றமைக்காக தேசியா அளவில் கவனிக்கப்பட்டவர். அண்மையில் டிரோன்கள் வழியாக மலைப்பகுதிச் சிற்றூர்களுக்கு மருந்துகளை கொண்டுசெல்லும் ஒரு முறையை ராணுவ உதவியுடன் உருவாக்கி அமல்படுத்தி மிகுந்த பாராட்டு பெற்றிருக்கிறார். கான்ராட் சங்மா அரசின் சாதனைகளில் ஒன்றாக அது கருதப்படுகிறது)

ஷில்லாங் வந்து ராம்குமாரின் இல்லத்தில் ஒரு விருந்துண்டோம். அவர் மட்டுமே இல்லத்தில் இருந்தார். அசைவ, சைவ உணவுகள். அரங்கசாமியின் கீட்டோ முறைக்கு வேட்டையாக அமைந்த பலவகை இறைச்சிகள். மேகாலயாவில் எங்கும் எவ்விதத்திலும் பழைய இறைச்சிதான் கிடைக்கும். இதைப்போல முதன்மையான விருந்துகளில் நல்ல இறைச்சி கிடைத்தால்தான் உண்டு.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மேகாலயாவில் நான் கண்ட ஒன்று காடழிவு. மக்கள் தொகை அதிகரிக்கிறது. மக்களின் வாழ்க்கை வசதிகளும் கூடிக்கூடி வருகின்றன. அது நேரடியாக எரிபொருள் செலவை அதிகரிக்கிறது. பழையபாணி வடகிழக்கு இல்லங்கள் மூங்கில்தட்டிகளாலானவை. மிகச்சிறியவை.  இன்று பெரிய வீடுகளை கட்டுகிறார்கள். அவர்களின் எரிபொருள்தேவையில் பெரும்பகுதி மழைக்கால, குளிர்கால கணப்புகளுக்கே. அதற்கு விறகுகளையே பயன்படுத்துகிறார்கள்.

வடகிழக்கே ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டின் பாதியளவுக்கே பெரிய விறகு அடுப்புகளைக் கண்டோம். எல்லாமே மலைமரங்களை பிளந்து எடுக்கப்பட்ட கனமான விறகுகள். நம்மூர் போல தென்னை, பருத்தி போன்று விறகு அளிக்கும் பயிர்கள் அங்கில்லை. வரட்டி தட்டப்படுவதுமில்லை. இப்படியே சென்றால் வடகிழக்கின் காடுகள் தாங்காது.

தமிழகத்திலும் கேரளத்திலும் மலைப்பகுதிகளில் விறகு எரிப்பது அனேகமாக நின்றுவிட்டது. தென்னைமட்டை போன்றவற்றுக்கு விலையே இல்லை. மலைவிறகு எடுப்பது முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. மானியவிலையில் எரிவாயு அளிக்கப்படுவதனால் முழுக்க முழுக்க அதுவே பயன்பாட்டில் உள்ளது. தடையற்ற மின்சாரம், எரிவாயு அளித்து வடகிழக்கின் காடுகளை அரசு காப்பாற்றியாகவேண்டும்.

ஆனால் அருணாச்சல் மக்கள், மேகாலயா மக்கள் ஒப்புநோக்க நம்மைவிட தூய்மையுணர்வு கொண்டவர்கள். குப்பைகளை வீசுவது மிக அரிது. எங்கும் குப்பைக்கூடைகள் உள்ளன. அவற்றை முறையாக அழித்தும் விடுகிறார்கள். ஆகவே சுற்றுலாமையங்கள் தூய்மையாகவே உள்ளன. வடக்கு மையநில இந்தியாவின் பான்பூரி -பீடா சிறுவணிகர்கள் இங்கே வந்து குவிய எல்லா வாய்ப்பும் உள்ளது. அவர்கள் மிகநெரிசலான சந்துபொந்துகளில் எலிகள்போல வாழ்ந்து பழகிய மக்கள். தூய்மை என்பதையே வாழ்க்கையில் அறிந்திராதவர்கள். வடகிழக்கை அவர்கள் மாபெரும்குப்பைக்குவியலாக ஆக்கிவிடக்கூடும். சிம்லா சென்றால் தெரியும், அது ஒரு குப்பைமேடு.

அன்று மாலை கிளம்பி லைட்லம் (laitlum  Canyon) என்னும் மலைப்பள்ளத்தின் கரையில் அமைந்த லைட்லம் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். நல்ல குளிர் இருந்தாலும் போர்வைகள் சிறப்பாக இருந்தமையால் தூங்க முடிந்தது. இந்தப்பகுதி புகழ்பெற்று வரும் ஒரு சுற்றுலாமையம். இங்கே மலைவிளிம்புக்குக் கீழே ஒரு மாபெரும் மலைப்பள்ளம் உள்ளது. The Grand Canyon Of India என இது அழைக்கப்படுகிறது. அமெரிக்க கிராண்ட் கான்யன் போலவே தியானத்திலாழ்ந்த மலைமுடிகளின் கீழே அடுக்கடுக்காக மலைக்குவைகள், மலவிளிம்புகள், மலைமுகங்கள், மலைமாளிகைகள்.

கீழே வெள்ளி ஓடையாக லைட்லம் ஆறு ஓடிச்செல்கிறது. மழைக்காலத்தில் அது ஒரு பெரும்கொந்தளிப்பாக ஓடும். அது அறுத்து உருவாக்கிய பள்ளம் இது. மேலிருந்து மானசீகமாக பறந்திறங்கி அதன்மேல் ஒழுகிச்செல்லலாம்.

அப்பகுதி ஜூனுக்குப் பின் பசும்புல்வெளியாக இருக்கும். நாங்கள் சென்றபோது பொன்னிறமாக புல் காய்ந்திருந்தது. விளிம்பில் நின்று சூரிய உதயத்தைப் பார்த்தோம். மலைப்பள்ளத்தின் கீழே ஆற்றங்கரையில் சிற்றூர்கள் உள்ளன. மேலிருந்து இயந்திரத்தால் இயக்கப்படும் கம்பிப்பாதை வழியாக பொருட்களை கீழே அனுப்புகிறார்கள்.

லைட்லம் மலையடுக்குகளில் எங்கள் பயணத்தை நிறைவுசெய்தோம். அங்கிருந்து நேரடியாக கௌஹாத்தி. நாங்கள் இரண்டு அணியாக கௌஹாத்தி செல்வதாக இருந்தோம். ராம்குமார் உட்பட ஐந்துபேர் ஷில்லாங்கில் இருந்து ஹெலிகாப்டரில் செல்வது. நானும் அரங்கசாமியும் காரில் செல்வது. காலை பத்துமணிக்கு கிளம்பவேண்டும். ஆனால் கார்கள் வந்தது 11 மணிக்கு. ஹெலிகாப்டரில் கிளம்பிவிட்டனர். நாங்கள் சாலை வழியாகச் சென்றோம்.

ஷில்லாங் கௌஹாத்தி சாலையில் மாபெரும் சாலைப்பணி நிகழ்கிறது. டாக்காவுடன் வடகிழக்கை இணைக்கும் வணிகச்சாலை. ஆகவே நூறு கிமீ தொலைவுதான் என்றாலும் சென்றடைய நான்குமணிநேரமாகும் (சாலை முழுமையானபின் ஒருமணிநேரம் போதும் என்கிறார்கள்)

வழியில் எங்கள் கார் நின்றுவிட்டது. எங்கள் விமானம் நான்குமணிக்கு. மூன்றுமணிக்கு விமானநிலையத்தில் இருக்கவேண்டும். ராம்குமாருக்கு போன் செய்தோம். அவர் மாற்று கார் ஏற்பாடு செய்தார். ஒரு வழியாக கடைசிக்கணத்தில் விமானநிலையம் வந்து சேர்ந்தோம். கடைசிநேர பரபரப்பு.

“இந்த பயணத்தில் மூன்று முறை கார் நின்னிடணும்னு பிராப்தம் இருக்கு சார்…அதான் இப்டி ஆயிருக்கு” என அண்மையில் அதிதீவிர வைணவராக ஆகிவிட்ட அரங்கசாமி சொன்னார்.

பெங்களூர் வந்து இறங்கியபோது மீண்டுமொரு கனவுப்பயணம் முடிந்த உணர்வு. உண்மையில் இந்த ஊர்களுக்குச் சென்று ஒருவாரம் அங்கேயே வாழ்ந்து மீண்டால்மொழிய அவற்றை ஓரளவேனும் அறியமுடியாதென்று தோன்றியது. நாங்கள் பார்த்துவந்தோம். உண்மையில் அங்கே வாழ்ந்து மீளவேண்டும்.

எவ்வளவு பெரிது இந்நிலம். இங்கே எவரேனும் வாழ்ந்து நிறைய முடியுமா என்ன?

(நிறைவு)

சிங்கநடை போட்டு சிங்கிள் டீ குடிக்க…

 

அருணச்சலபிரதேசம் கட்டுரைகள்

ப்ரோப்கா: வனம் எங்களின் அன்னை

மகிழ்ச்சியான-நாட்கள்-இப்போது-வெறும்-ஏக்கமாகிவிட்டது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2023 10:35

பாலாமணி

 

பாலாமணி நடத்திய நாடங்களில் ‘தாரா ஷஷாங்கம்’ பெரு வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பெரும் விவாதத்தையும், கிளப்பியது. அந்நாடகத்தில், தாரா என்னும் தேவகன்னிகை பூவுலகில் ஒரு ராணியாகப் பிறக்க சபிக்கப்படுகிறாள். ஒரு காட்சியில் சாபவிமோசனம் பெறுவதற்காக அவளுடைய காதலன் சந்திரனுக்கு, தாரா நிர்வாணமாக வந்து எண்ணெய் தேய்த்து விடுவாள். பாலாமணி துணிச்சலாக அக்காட்சியில் நடிக்க முடிவுசெய்தார்

பாலாமணி அம்மாள் பாலாமணி அம்மாள் பாலாமணி அம்மாள் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2023 10:34

சி.கன்னையாவும் வி.கே.ராமசாமியும்

[image error]

சி கன்னையா  தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ.,

‘சி. கன்னையா‘ பற்றிய விக்கி பதிவு வழக்கம்போல அன்றைய நாடக உலகம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை  அளித்தது. கன்னையா குறித்த இன்னொரு விரிவான பதிவு நடிகர் வி.கே.ராமசாமி எழுதிய ‘எனது கலைப் பயணம்‘ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) என்ற தன்வரலாற்று நூலில் கிடைக்கிறது.

மேலைநாடுகளிலேயே அரண்மனை, தோட்டம் என்று எழுதித் தொங்கவிட்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும் மேடை நாடகங்களிலேயே அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக‘ சீன்களும், செட்டிங்குகளும்‘ இடம்பிடிக்க ஆரம்பித்திருந்தன. அதைக்கண்ட பாலிவாலா பார்சிக் கம்பெனியினர் அதேபோல் தங்கள் நாடகங்களிலும் முயற்சி செய்தனர். அந்தக் கம்பெனியின் தமிழ் நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த கன்னையாவுக்கு அதேபோல தாமும் ஒரு கம்பெனி ஆரம்பித்தாலென்ன எனத்தோன்ற தனிக்கம்பெனி ஆரம்பித்தார் கன்னையா.

அரிச்சந்திரன் கதையை எடுத்துக்கொண்டால் சத்தியம் என்ற ஒன்றையே வலியுறுத்தும். நளாயினி என்றால் கற்பின் பெருமை, சாவித்ரி என்றால் பதிபக்தி என்று ஒரு குறிப்பிட்ட அம்சத்தைச் சுற்றியே  இருக்க, பல  அம்சங்களை உள்ளடக்கிய ‘தசாவதார‘த்தை தன்னுடைய துருப்புசீட்டாக எடுத்துக்கொண்டார் கன்னையா. ராமாயணமும், மகாபாரதமுமே கூட அதன் உள்ளடங்கியது. தான் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைக்கொண்டு தசாவதாரத்திற்கான சீன், செட்டிங்குகளை சேர்க்கத்தொடங்கினார் கன்னையா. அவருடைய பேரதிர்ஷ்டமாக எஸ்.ஜி.கிட்டப்பா கிடைத்தார். ராமாவதாரத்தில் பரதனாகத் தோன்றி ‘தசரத ராஜ குமாரா ..அலங்காரா..சுகுமாரா …அதிதீரா‘ என்றும் கூர்மாவதாரத்தில் மோகினியாகத் தோன்றி ‘தேவர் அசுரர் குலத்தோரே திவ்ய தேவாமிருதம் உமக்கே தருவேனே‘ என்றும் இசையை தேவாமிருதமாகப் பொழிந்து தமிழ்நாட்டையே அடிமைப்படுத்தினார் கிட்டப்பா. எங்கும் ‘கன்னையா கம்பெனி..கிட்டப்பா…தசாவதாரம்‘ என்றே பேச்சு. நினைத்தும் பார்க்க முடியாத பணமும் புகழும் என புதிய உயரங்களைத் தொட்டார் கன்னையா.

தசாவதாரம் நாடகத்தில் பாற்கடலில் பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் காட்சியை மேடையில் கண்டு மக்களனைவரும் எழுந்துநின்று வணங்கியிருக்கிறார்கள். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைவதையும், காளிங்க மர்த்தனத்தின் போது பாம்பு விஷம் கக்குவதையும், குருஷேத்திரப் போரையும் மேடையிலே தத்ரூபமாகக் காண்பித்து ‘இவருக்கு முன்னும் பின்னும் இதுபோல யாரும் செய்ததில்லை‘  என்ற வகையில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் கன்னையா.

ஒரு கட்டத்தில் கிட்டப்பா விலகி, தனிக்கம்பெனி ஆரம்பிக்க கன்னையாவிற்கு சற்றுப் பின்னடைவு. ஆனாலும் தளராமல் மகாராஜபுரம் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ( பாடகர் மகாராஜபுரம் சந்தானத்தின் சித்தப்பா) கிருஷ்ணனாக நடிக்க பகவத்கீதையை அரங்கேற்றினார். அர்ஜுனனாக சி.வி.வி.பந்துலு. இருவருமே பின்னாளில் திரையுலகில் பிரபலமடைந்தனர். பகவத்கீதை நாடகத்திலேயே, கலியுகம் பிறந்ததற்கு அறிகுறியாக ‘மோரிஸ் மைனர்‘ காரை மேடையிலேயே காட்டி ‘க்ளாப்ஸ்‘ அள்ளியிருக்கிறார் கன்னையா.  சில வருடங்கள் நாடகமேடைகளை ஆண்டது ‘பகவத்கீதை‘.

கன்னையா தன்னுடைய இறுதிக்காலத்தில் தான் சேகரித்த விலையுயர்ந்த நகைகளையும், கிரீடங்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு அளித்துவிட்டார். சீன்களையும், செட்டிங்குகளையும் தன்னுடைய சகோதரர் கிருஷ்ணய்யாவிடம் அளித்துவிட்டார். தன்னுடைய நாடகங்களுக்கான ‘செட்டிங்கு‘களை வாடகைக்கு எடுக்கவரும் வி.கே.ராமசாமியிடம் தன்னுடைய சகோதரரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார் கிருஷ்ணய்யா. 

‘எனது கலைப் பயணம்‘ நூலில், தன்னுடன் நடித்த  முக்கியமான நடிகர்களின் ‘நல்ல’ பக்கங்களை அவர்களைப்  பற்றிய அத்தியாயங்களில்  சொல்லியிருக்கிறார் வி.கே.ஆர். மிகை நவிற்சிதான். நூலுக்கு முன்னுரை மட்டுமே இருபது திரைப்பிரபலங்கள் எழுதியிருக்கிறார்கள். அதே மிகைநவிற்சி,விதந்தோதல்கள். கமல்ஹாஸன் மட்டும் ‘நானும்,ரஜினியும் எங்களைப்பற்றிய அத்தியாயங்களுக்கு முற்றிலும் தகுதியற்றவர்கள்’ என்று அடக்கமாகச் சொல்லிக்கொள்கிறார். ஆனாலும், ஒரு சாதாரண நகைச்சுவை நடிகரிடமிருந்து வந்துள்ள இந்நூல் இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கடவுளின் அருளால் நடைபெறும் அதிசயங்கள் மற்றும் பாவமன்னிப்பு இந்து மதத்திலும் உண்டு என்று வலியுறுத்தும் நொண்டி நாடகங்கள்(அதாவது நொண்டி தனக்கு கடவுள் அருளால் தனக்கு கால் எப்படி சரியானது என்று கூறும்) , தாழ்த்தப்பட்டோரிடையே ஊடுருவிய மதமாற்றங்களைத் தவிர்க்க முயற்சித்த பள்ளு நாடகங்கள், விரசத்தின் எல்லையைக் காட்டிய ‘கள்ளபார்ட்‘ நாடகங்கள்,  விடுதலைப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஸ்வநாததாஸின் நாடகங்கள் போன்ற பல புதிய முயற்சிகள். 

தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த நல்லதங்காள் கதையை மலையாளத்தில் படமாக எடுத்தபோது ஹீரோ நல்லண்ணனாக நடித்த பின்னணிப்பாடகர் கே.ஜே.யேசுதாஸின் தந்தை அகஸ்டின் ஜோசப், ஆங்கிலஅரசின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்திற்குள் நடந்தே வந்து நடித்துக்கொடுத்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, ‘டம்பாச்சாரி’ நாடகத்தில் பதினோரு வேஷங்களை மின்னல் வேகத்தில் மாற்றி பிரமிக்கவைத்த ‘இந்தியன் சார்லி’ சி.எஸ்.சாமண்ணா, நடிகைகளின் அங்கலாவண்யங்களை மனம்போன போக்கில் வருணித்து ‘டார்ச்சர்’ பண்ணிய எம்.எஸ்.முத்துகிருஷ்ணன், ‘சுருளி மலை மேவும் சீலா’ , ‘ ஐயா பழனி மலை வேலா’ என்று நாடகத்திற்கு நடுவே பாடி ‘அப்ளாஸ்’ அள்ளிய ‘ஹார்மோனிய’ சக்ரவர்த்தி காதர்பாட்சா, ‘ராமன் ஷத்ரியன், அவன் மீசையோடிருந்திருக்கவே வாய்ப்பு அதிகம்’ என்று வாதிட்டு கடைசிவரை மீசையை எடுக்காமலேயே ராமனாக நடித்த கமலாலய பாகவதர் என்று விதம்விதமான நாடகக்கலைஞர்கள். 

 ‘ஸ்பெஷல் நாடக‘ வைரங்கள் பி.எஸ்.வேலுநாயர் மற்றும் பெண் வேடத்தில் சாதனை புரிந்த கே.எஸ்.அனந்தநாராயணய்யர்,  பி.ராஜாம்பாள், டி.பி.ராஜலக்ஷ்மி,’ஸ்ரீவை நார்ட்டன்’ எஸ்.டி.சுப்புலக்ஷ்மி, மேடைநாடகத்திலேயே ‘நிர்வாணக்காட்சி’யில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய கும்பகோணம் பாலாமணி போன்ற பெரும் கலைஞர்கள்.  விசா,பாஸ்போர்ட் எதுவும் இல்லாமல் நினைத்தபடி கப்பலில் கடல் கடந்து சென்று நாடகம் நடத்திய காலம் அது. கப்பல் கட்டணம் பர்மாவிற்கு பதினாறு ரூபாய் எட்டணா. சிங்கப்பூருக்கு இருபத்திரண்டு ரூபாய் எட்டணா.  இது போன்ற புதுப்புது செய்திகள்.  

கேரளா முழுதும் ஐயப்பன் வரலாறை நாடகமாக நடத்தியும், இயேசுபிரான் வரலாற்றை வெள்ளைக்காரர்களே வியக்கும் வண்ணம் நாடகமாக நடத்தியும், காந்தியடிகளே கண்டு வியக்கும் வண்ணம் ‘நந்தனார்’ நாடகம் நடத்தியும் பெரும் ஜாம்பவானாகத் திகழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. ஆங்கிலமெட்டில் அமைந்த ‘சுவிசேஷ’ கீதங்களுக்கு தமிழில் பாடல்கள் செய்த சங்கரதாஸ் சுவாமிகள். பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகப் பங்களிப்பு. இவைகளைக் குறித்து பல அத்தியாயங்கள் இருபதாம் நூற்றாண்டின் நாடக உலகின் சிறப்பை தெளிவாகக் காட்டுகின்றன. 

எம்.எஸ்.சுப்புலஷ்மியின் ‘மீரா’ படப்பாடல்களை தினமும் தியேட்டருக்கு வெளியே காரில் அமர்ந்தபடி கேட்டுவிட்டுச் செல்லும் பி.யு.சின்னப்பா, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நண்பனின் தோளை அழுத்திக்கொண்டு மேடையின் திரைமறைவிலிருந்து உச்சஸ்தாயி பாடல்களைப் பாடிய எஸ்.ஜி.கிட்டப்பா, நவாப் ராஜமாணிக்கத்தின் நாடகக்கொட்டகையில் மணக்கும் சாம்பிராணியின் மணம் என்று பல நுண்ணிய தருணங்களையும் பதிவு செய்துள்ளார் வி.கே.ராமசாமி. 

நாடகத்துறையில் பல புதுமைகளைப் புகுத்தி, மறுமலர்ச்சி உண்டாக்கி, பல நாடகக்கம்பெனிகளுக்கு வழிகாட்டியாகவும் இருந்து,  நாடகக்கலை வேரூன்ற பெரும்பங்களிப்பு செய்த கன்னையா போன்ற ஒரு கலைஞருக்கு சென்னையில் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை என்ற வருத்தத்தையும் பதிவுசெய்கிறார்  வி.கே.ராமசாமி.  

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2023 10:31

வாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

நண்பர் இயக்குனர் ரத்த சாட்சி ரஃபீக் அவர்களின் அழகியதொரு குறும்படம் கண்டேன். தமிழ் நிலத்தின் நகரம் ஒன்றில் நாளை எனும்  நிரந்தரமின்மை அளிக்கும் பதற்றம் கொண்டு இன்றைய நாளை நகர்த்தும், தனித்து வாழும் (அழகுக்கலை நிபுணி) வட புல நிலத்தை சேர்ந்த வந்தேறி இளம் தாய் ஒருவரை மையம் கொள்ளும் கதை.

மிக அழகிய படம்.கதையாக இதன் பெண் உலகு அதன் அன்றாடம் மற்றும் உணர்வு தளம் அசோகமித்திரன் கதைகளுக்கு இணையானது.எல்லாமே அத்தனை நம்பகம் கொண்ட முகங்கள். அத்தனை நம்பகம் கொண்ட நடிப்பு.

உன் வேலை நிரந்தரம் இல்லை என்று சொல்வதும் ஒரு பெண் குரலே. அந்த பெண்ணும் இந்த கதையின் நாயகி போலவே அதே நிலையிலும் இருக்கவும் கூடும்.நாயகி தோளில் குழந்தையாக தூங்குவதும் பெண்தான். நாயகி எனும் பெண்ணின் அம்மாவின் அதே வாழ்வை அவ்வாறே தொடர போகிற மகள் எனும் மற்றொரு பெண்.வெளி மற்றும் உள்ளரங்க சூழல் சித்தரிப்பு காட்சிகளும், அதற்கான ஒலிக்கலவையும், நிகர் வாழ்வுக்கு அத்தனை அணுக்கமாக அமைந்திருக்கிறது. படத்தின் பன்னிரண்டு நிமிடத்துக்குள் 12 மணிநேரத்தை செறிவாக்கி பொதிந்து தரும் எடிட்டிங்.

இரவு கவிழும் நாளிறுதியில் வீடுகளிலும் தெரு மின்கம்பத்திலும் எழும் ஒளிச்சுடர்களும், அதற்கான ஒளிப்பதிவும் இருப்பதே தெரியாமல் எழும் அந்த மெல்லிய பின்னணி இசையும் படத்தின் இறுதி அளிக்கும் ஆசுவாச உணர்வை இன்னும் அழுத்தம் பெற வைக்கிறது.

தமிழ் கலைப்பட ஓடையில் வசந்த் சாய் அவர்கள் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் கதை வரிசையில் நிற்கும் வகையிலான வலிமையான ஆக்கம்.உலக அளவில் எனில் பெலா தார் இயக்கிய டுயுரின் ஹார்ஸ்  படத்தை குறுநாவல் எனக் கொண்டால் இந்தப் படத்தில் இறுதியில் செய்வதறியாது அந்தத் தாய் அமர்ந்திருக்கும் காட்சியை அதே டுயுரின் ஹார்ஸ் படத்தின் காட்சித் தீவிரம் கொண்ட சிறுகதை என்று சொல்லலாம்.

அந்த இனிய அனுபவம் இதோ உங்கள் பார்வைக்கும்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2023 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.