Jeyamohan's Blog, page 623

February 23, 2023

புதியவாசகர் சந்திப்பு ஏன்?

புதியவாசகர் சந்திப்பு அறிவிப்பு

அன்புள்ள ஜெ,

நான் புதியவாசகர் சந்திப்புக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது என்ற தயக்கம் வந்தது. நான் இன்னும் பெரியதாக எதையும் வாசிக்கவில்லை. எனக்கு மனிதர்களைச் சந்திப்பது பேசுவது எல்லாமே கஷடமாக உள்ளது. என்னால் வாசிக்கமுடியும். ஆனால் அதைப்பற்றி பேசுவது மிகவும் கடினம். ஆகவே தயக்கமாக உள்ளது. எழுதவேண்டுமென ஆசை உண்டு. ஆனால் பொருட்படுத்தும்படியாக எதையும் எழுதவில்லை. எழுத முடியுமா என்றும் தெரியவில்லை. ஆகவே தயக்கமாக உள்ளது. அதனால்தான் பதிவுசெய்யாமல் விட்டுவிட்டேன்.

இராம. குமரவேல்

***

அன்புள்ள குமரவேல்,

புதியவாசகர் சந்திப்பே உங்களைப் போன்றவர்களுக்காகத்தான்.

இலக்கியத்தில் முந்தைய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறை நோக்கி மொழியும், இலக்கிய வடிவங்களும், கருத்துக்களும் கைமாற்றப்பட்டுச் சென்றுகொண்டே இருக்கின்றன. அதில் நூல்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.ஆனால் அதற்கிணையாகவே தனிமனிதத் தொடர்புக்கும் இடமுண்டு. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி, எம்.கங்காதரன், பி.கே.பாலகிருஷ்ணன் என எனக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான முந்தைய தலைமுறை ஆசிரியர்களிடமிருந்தே நான் உருவாகி வந்தேன். 

ஏனென்றால் நூல்கள் ஒருவழிப்பாதை. நமக்கு அந்த ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள். அவர்கள் நம்மை அறிவதில்லை. நேரடி உரையாடலில் அவர்கள் நம்மை அறிகிறார்கள். நம்மை இடித்துரைக்கிறார்கள், திருத்தியமைக்கிறார்கள், வழிகாட்டுகிறார்கள். அது நம் உருவாக்கக் காலமான இளமையில் மிகப்பெரிய வாய்ப்பு. அந்த வாய்ப்பு அமையாதவர்கள், அந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் வாழ்க்கையில் பின்னர் ஒருபோதும் ஈடுகட்ட முடியாத இழப்பையே அடைகிறார்கள். 

பெருவிழைவுடன் என்னைச் சந்திக்க இளைஞர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு விழாவில் சந்தித்து ஹாய் சொல்வது போதாது. ஓரிருநாட்கள் உடன் அமர்ந்து பேசவேண்டும். அதன்பொருட்டே இந்தச் சந்திப்புகளை 2016ல் முதல்முறையாக ஒருங்கிணைத்தோம். அந்தச் சந்திப்புகளுக்கு வந்த பலர் இன்று அறியப்பட்ட எழுத்தாளர்களாக ஆகிவிட்டார்கள்.

மேலும் புதிய வாசகர் சந்திப்புகள் இணையான உள்ளம் கொண்ட நண்பர்களை அறிமுகம் செய்கின்றன. இலக்கியவாசகர்கள் பொதுவாக அகம்நோக்கி திரும்பியவர்கள். சாமானிய நட்புக்கூடல்களில் அவர்கள் தனிமையானவர்கள் ஆகிவிடுவார்கள். தங்களைப்போன்ற இன்னொரு வாசகர்களிடம் அவர்கள் எளிதில் நட்பு கொள்வார்கள். அணுக்கமாவார்கள். 2016 முதல் புதியவாசகர் சந்திப்புக்கு வந்தவர்கள் இணைந்து நட்புக்குழுமங்களை உருவாக்கினர். அந்தக் குழுமங்கள் இன்னமும்கூட அதே தீவிரத்துடன் செயல்படுகின்றன.

இங்கே வர விரும்புபவர்களின் தகுதி என்பது ஆர்வமிருக்கவேண்டும் என்பது மட்டுமே. பேச்சு வன்மை, ஆளுமைத்திறன் எல்லாமே இதைப்போன்ற சந்திப்புகள் வழியாகத்தானே உருவாகி வரவேண்டும்? இங்கே எவரும் தாழ்வாக, அன்னியமாக உணர நேராது. அதன்பொருட்டே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதைப்போல பிற எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கவும் உரையாடவும் ஏற்பாடு செய்யும் திட்டமும் உள்ளது.

இந்த சந்திப்புக்கு வரும் இளம் படைப்பாளிகள் தங்கள் ஒரு படைப்பை, தாங்கள் சிறந்தது என நினைப்பதை கொண்டுவரலாம். அவை சார்ந்த விவாதங்கள் நிகழும். அது அவர்களுக்கு தங்கள் எழுத்தை மதிப்பிட்டுக்கொள்ள உதவியாக அமையும்.

ஜெ 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:31

கடவுள் பிசாசு நிலம் – லோகமாதேவி

கடவுள் பிசாசு நிலம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

அன்புடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:31

கோவை சொல்முகம் – வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 25வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

முதல் அமர்வில், வெண்முரசு நூல் வரிசையின்  எட்டாவது படைப்பான “காண்டீபம்” நாவலின் பின்வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

 

பகுதிகள்:

முதல்நடம்

ஐந்துமுகத்தழல்

 

இரண்டாவது அமர்வில், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி அவர்களின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ – 2

(புத்தகம் 7 முதல் 12 வரை) நாவல் மீது கலந்துரையாடல் நிகழும்.

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 26-02-23, ஞாயிற்றுக்கிழமை. 

நேரம் : காலை 10:00 

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை. 

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2023 10:30

February 22, 2023

எழுகதிர் நிலம்- 4

பனியில் எங்கள் பயணம் தொடங்கியது. செல்லச்செல்ல குளிர் கூடிக்கூடி வந்தது. சாலையோரப் புற்கள் எல்லாம் பருத்திப்பூ போல பனி ஏந்தியிருந்தன. என்னைப்போன்ற பழைய ஆட்களுக்கு ‘நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப்பூமழை பொழிகிறது ஹொஹொஹொ’ பாட்டுதான் நினைவுக்கு வருமென நினைக்கிறேன். சாலையோரங்களில் முதலில் துளிகளாக, பின்னர் மணிகளாக, பின்னர் நுரையாக பனி தெரிந்தபடியே வந்து இறுதியில் மொத்த காட்சியே பனியாலானதாக ஆகியது. கரியபாறைகள் கலந்த பனிப்பரப்பு எனக்கு டென்மார்க் பசுக்களின் உடல்போல தோன்றியது.

யாக்குகள் ஆங்காங்கே நிச்சிந்தையாக படுத்துக் கிடந்தன. அவற்றின் அடிப்பகுதியில் ரோமம் மிகுதி. கடினமான முள்போன்ற முடி அது. அதைக்கொண்டு கம்பிளி ஏதும் செய்வதில்லை. அந்த முடிமேல் அவை படுத்திருப்பதனால் உடலில் பனிவெப்பம் ஏறுவதில்லை. அவை எங்களைப்போலவே பனிச்சட்டையும், குல்லாவும் அணிந்தவைதான் என்று தோன்றியது. அவற்றின் துரதிருஷ்டம் ஆடைகளை அவற்றால் கழற்ற முடியாதென்பது. என்ன தின்கின்றன என்று பார்த்தேன். பனியை மூக்கால் கிழித்து அடியில் உறைந்த புல்லை தின்கின்றன. அந்த புல்லில் விதைகள் மிகுதி. பனி உருகியதும் முளைக்கவேண்டும். ஆகவே யாக்குகள் பெரும்பகுதி புல்விதைகளை, அதாவது தானியங்களையே தின்கின்றன.

பனியை நம்மைப்போன்ற வெப்பநில மனிதர்கள் கொண்டாடுவதை அங்குள்ளோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என நான் எண்ணிப்பார்த்ததுண்டு.  அதை ஒருமுறை திருவண்ணாமலையில் கண்டேன். பவா செல்லத்துரையின் வாடகையில்லத்தில் ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒரு வெள்ளை இளைஞர் தங்கியிருந்தார். வெயில்பிரியர். திருவண்ணாமலை மொட்டை வெயிலில் மே மாதம் சைக்கிளில்  சுற்றிவருவார்.  ‘ஆகா இன்ப நிலாவினிலே ஓகோ ஜெகமே ஆடிடுதே’ என பாடுவாரோ என்னமோ.

பனியில் நாங்கள் சினிமாக்களில் பலரும் செய்யும் ஒன்றை மட்டும் செய்யவில்லை. அதாவது பனியை உருட்டி ஒருவரோடொருவர் எறிந்து விளையாடவில்லை. ஏனென்றால் எங்கள் கற்பனாவாதக் கொண்டாட்டத்திற்கு அடியில் உடல் யதார்த்தவாதக் குளிரில் நடுநடுங்கிக்கொண்டுதான் இருந்தது. கையுறைகளுக்குள் விரல்களின் பூட்டுகளில் வலி. மூச்சு இழுப்பது குளிர்ந்த நீரை இழுத்து நெஞ்சுக்குள் நிறைப்பது போலிருந்தது. நுரையீரல் ஒரு குளிர்நீர் தோல்பை.

சாலையில் கிடந்த ஒரு பாறாங்கல்லை அணுகி என்ன வென்று பார்த்தேன். அது பனிப்பாளம். டைட்டானிக்கை கவிழ்த்த பனிப்பாளம் போல ஒரு சராசரி மாருதி காரை கவிழ்க்க வல்லது. அதை தூக்கமுடியுமா என பார்த்தேன், அசைக்க முடிந்தது. பனிப்பாறைகள் நீரில் மிதக்கின்றன. அவற்றுக்கு இவ்வளவு எடையும் கடினமும் உண்டு என இப்போதுதான் தெரிந்தது.

பனிமலைகளில் பனியாலான மரங்கள். அவற்றில் பனியாலான இலைகள். பனியாலான காற்று. பனியாலான ஒளி என்றும் தோன்றியது. மங்கலான திரவப்பரப்பினூடாக அனைத்தையும் பார்ப்பதுபோல் இருந்தது. காருக்கு வெளியே அவை வேறேதோ கிரகத்தின் விபரீத நிலக்காட்சி போல் மெல்ல ஒழுகி திரும்பி சென்றுகொண்டிருந்தன. உயரத்தால் காதும் அடைத்திருப்பதனால் ஓசைகளும் இல்லை. பனி என்பது ஒருவகை கொண்டாட்டம் என்னும் நிலையில் இருந்து மெல்ல மெல்ல அச்சமூட்டும் ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது.

சேலா பாஸ் என அழைக்கப்படும் மலைக்கணவாய் (திபெத்திய மொழியில் லா என்றால் கணவாய்) மேற்கு கமேனா மாவட்டங்களை தவாங் சமவெளியுடன் இணைக்கும் இந்த மலைக்கணவாய் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக கழுதைப்பாதையாக இருந்து பிரிட்டிஷ்காரர்களால் சாலையாக்கப்பட்டது. இன்று மிக விரிந்த தேசியநெடும்பாதையாக உள்ளது.

இப்பகுதியின் சாலைகள் மற்ற இமையமலைச் சாலைகள் போல ஆண்டுமுழுக்க செப்பனிட்டப்படியே இருக்கவேண்டியவை. வழி நெடுக சாலைப்பணியாளர்கள் பனித்திரையில் மைக்கறையால் வரையப்பட்ட ஓவியங்கள் போல தெரிந்தனர். சாலையோரமாகவே குடிலமைத்து தங்கி சாலையில் விழும் மண்ணையும் கற்களையும் அள்ளி அகற்றினர். பனியை ஒவ்வொரு நாளும் அகற்றவேண்டும். அதற்கு பெரிய இயந்திரங்கள் உள்ளன. 

அரிதாகச் சில இடங்களில் சாலை பிய்ந்து விழுந்து மலையில் புண் போல தெரிந்தது. ஒன்றை கவனித்தேன். மலையைச் சுற்றி வரும் சாலையில் சன்னல் வழியாக தொலைதூர மலைச்சரிவுகளை பார்க்கையில் தெளிவாகத் தெரிந்தது. இமையமலையின் மலைச்சரிவுகளுக்கு முதன்மையான காரணமே சாலைகள் அமைப்பதுதான். சாலை மலையின் பல்லாயிரமாண்டு அமைவமைதியை அழித்துவிடுகிறது. ஒரு புண் அது. மலை அதை குணப்படுத்த முயல்கிறது. தன்னை மலை மறு அமைப்பு செய்துகொள்கிறது.

ஆனால் இந்த சாலையமைப்புப் பணியும் தவிர்க்கக்கூடுவது அல்ல. மலை தன்னைத்தானேன் சீரமைத்துக்கொள்ள இடமளித்தபடி அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். இச்சாலைகளே அருணாச்சலப்பிரதேசத்தின் குருதிநாளங்கள். இவையே அதை உயிருடன் வைத்திருக்கின்றன மற்றபகுதிகள் நம்மூர் மழைக்காடுகள் போல உயிர் ஓங்கிய பரப்புகள் அல்ல. ஆழ்தியானத்தில் ஆழ்ந்த பனிமலைகளின் அடுக்குவெளி அது

சேலாபாஸ் வரவேற்பு வளைவை வந்தடைந்தோம்.  13700 அடி உயரத்தில் அமைந்த இந்த கணவாய் நாங்கள் இமாச்சலப்பிரதேசத்திலும் ஸ்பிடியிலும் சென்ற பல மலைக்கணவாய்களை நினைவுபடுத்தியது. அதே பனிமலைச் சூழ்வு. அதே தனிமை. அத்தனிமையை கலைக்க பயணிகளின் கார்களால் இயல்வதில்லை.

சேலாபாஸ் உச்சியில் ஒரு காட்சிமேடை கட்டப்பட்டுள்ளது. துணைராணுவப் படையினர் நடத்தும் ஒரு சிறு தேநீரகமும் உள்ளது. முன்பு இதே போன்ற ரோட்டோங் லா கணவாயில் துணைராணுவப்படையினரின் தேநீரகத்தில் கணக்கில்லாமல் தேநீரும் மோமோவும் சுடச்சுட அளித்தனர். இங்கே சூடாக தேநீரும் சூப்பும் மட்டும்தான். விடுதி வாசலில் தெளிந்த நீர் தேங்கியிருந்தது. நீர் அல்ல, பனி என கால் வழுக்கியபின்னரே தெரிந்தது

சேலா பாஸ் உச்சியில் இருந்து பார்த்தால் ஆங்காங்கே கண்கூசும் ஒளியுடன் பனித் தகடுகளாகத் தெரிபவை ஏரிகள். இந்த பகுதியில் 101 ஏரிகள் உள்ளன. அவை பௌத்த மதத்தினருக்கு முக்கியமான புனிதநீர்நிலைகள். 101 ஏரிகளையும் சென்று வணங்கும் ஒரு தீர்த்தாடன முறையும் இங்குள்ளது. 

சேலா ஏரி அண்மையில் இருக்கிறது. சேலா கணவாய் மலையுச்சியில் உள்ளது. அதற்கப்பால் சரிந்திறங்கும் பாதையில் இருந்து பக்கவாட்டில் இறங்கிச் செல்லவேண்டும். உறைந்து கண்ணாடியாலான ஒரு மைதானமாக தெரிந்தது ஏரி. அதைச்சுற்றிய பாதையும், அதன் கைப்பிடிகளும் எல்லாமே பனி. 

நூற்றியொரு ஏரிகளில் நான்கை சாலையில் சென்றபடியே பார்த்தோம். எல்லாமே உறைந்து வெள்ளித்தாலங்களாக மாறியிருந்தன. அப்பரப்பை மலைமேல் இறங்கியபடி பார்த்தால் அது சற்று நீலமாக மாறியிருப்பதை காணலாம். அதனுள் நீரின் வண்ணவேறுபாடுகள். வானின் பிரதிபலிப்பு உருவாக்கும் நிழலாட்டங்கள். எதையோ எண்ணி தன்னுள் ஆழ்ந்திருக்கும் உள்ளம் ஒன்றின் பருவடிவம் போல. நீண்ட வளைந்த கோடென ஒன்று ஏரிப்பரப்பின்மேல் ஓடிச் சென்றது. அது அந்த ஏரி முதலில் உறைந்த வடிவத்தின் எல்லை. பின்னர் தீர்மானித்துக்கொண்டு மேலும் உறைந்துவிட்டிருக்கிறது.

உறைந்த ஏரியின்மேல் நடமாடும் பறவைகளும் உண்டு. ஆங்காங்கே அவை பனி மெலிதாக இருக்குமிடத்தை கண்டு அங்கே உடைத்து மீன்களை பிடித்தன. ஓயாமல் தங்களுக்குள் பேசிக்கொண்டன. ‘இந்த ஆண்டு பனி கொஞ்சம் கூடுதல்’ என்ற வழக்கமான பேச்சைத்தான் பேசிக்கொண்டிருக்கும் போலும்.

மதியம் கடந்ததும் ஜங் அருவியை  சென்றடைந்தோம்.  நியூராங் அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது. சேலாபாஸ் மலைச்சரிவில் பனியுருகி வரும் நீர் நீயூராங் ஆறாக மாறி வந்து இங்கே செங்குத்தான பாறை விளிம்பில் இருந்து கீழே கொட்டி ஓடிச் சென்று  தவாங் ஆற்றில் கலக்கிறது.

இந்த ஆறு, அருவி பற்றி ஒரு கதை உள்ளூரில் புழக்கத்திலுள்ளது. 1962ல் இந்திய சீன போரில் சீனர்களால் கொல்லப்பட்டவர் ஜஸ்வந்த் சிங் ராவத் என்னும் ராஜஸ்தானிய வீரர். நான்காவது கர்வாலி ரைஃபிள் படையைச் சேர்ந்தவர். 1962 நவம்பரில் சீன ராணுவம் அருணாச்சலப்பிரதேசத்திற்குள் நுழைந்தபோது ஜஸ்வந்த் சிங் தன் தோழர்களான திரிலோக் சிங் நெகி, கோபால் சிங் குசேன் ஆகியோருடன் சீன படைக்குள் ஊடுருவிச் சென்று இந்தியர்களை சுட்டுக்கொண்டிருந்த ஓர் இயந்திரத் துப்பாக்கியை அணுகி, ஐந்து சீனர்களை தாக்கிக் கொன்று அதை செயலிழக்கச் செய்தார். திரும்பும் வழியில் தோழர்கள் உயிரிழந்தனர். ராவத் கடுமையான காயங்களுடன் திரும்பி வந்தார்.

அந்தப்போரில் இந்தியப் படையினர் 300 சீன வீரர்களை கொன்றனர், இந்தியப்படையில் இரண்டு இழப்புகளே இருந்தன என்றும்; அருணாசலப்பிரதேசத்தில் சீனர்களின் ஊடுருவல் நின்றுவிட அந்த போரே காரணமாகியது என்றும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியான தாக்குதல்கள் பல மாதங்கள் நீடித்தன. எண்ணிக்கை குறைவாக இருந்த இந்திய படை சேலா பாஸ் நோக்கி பின் வாங்கியபோது ராவத் மட்டும் அங்கே பனிமலைமேல் தனியாக தங்கியிருந்தார். 72 மணி நேரம் அவர் சீனப்படைகளை தாக்கி முன்னேற விடாமல் நிறுத்தினார்.

மீண்டும் உணவு, ஆயுதங்களைப் பெற்றுக்கொண்ட கர்வாலி படை சேலா பாஸில் இருந்து திரும்பி வந்து சீனப்படைகளை தாக்கியது. சீனர்கள் பும்லா பாஸுக்கு பின்னால் துரத்தப்பட்டனர். தவாங் மீட்கப்பட்டு இன்றும் இந்தியாவுடன் நீடிக்கிறது– சீனா அப்பகுதிக்கு இன்றும் உரிமை கொண்டாடுகிறது.

ராவத் அங்கே 72 மணிநேரம் தனியாகப் போரிட்டபோது அவருக்கு சேலா, நூரா என்னும் இரண்டு அருணாச்சல் பிரதேசத்து மோன்பா இனப்பெண்கள் உதவியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு உள்ளூர் கடைக்காரர் அளித்த உளவுச்செய்தியால் சீனர்கள் மலைமேல் ஒரே ஒருவர் மட்டுமே இருப்பதை அறிந்து திரளாக மலை ஏறி வந்தனர். ராவத் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். போருக்குப்பின் அவருடைய துண்டுபட்ட தலையை சீன படைத்தலைவர் இந்திய படையினரிடம் அளித்தார்.

ராவத் போரிட்ட அம்மலையுச்சியில் அவருக்காக ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. சே லா பாஸ், நூரா அருவி இரண்டும் அந்த அருணாச்சல பிரதேசப்பெண்களின் பெயரால் பின்னர் ராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டன.

ராவத்துக்கு பின்னர் இந்திய அரசு அளிக்கும் மிக உயர்ந்த ராணுவ விருதான பரம்வீர் சக்ரா அளிக்கப்பட்டது. அவர் சாகவில்லை, ஓய்வுபெறவுமில்லை என உருவகம் செய்யப்பட்டு அவருக்கு இன்று வரை பதவி உயர்வும், அவர் குடும்பத்திற்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. அவருடைய வாழ்க்கையை பற்றி 72 Hours: Martyr Who Never Died என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.

ஜங் அருவியின் கரையில் ஒரு சிறிய நீர்மின்சார நிலையம் உள்ளது. அதிலிருந்து வெளியாகும் நீர் பெரும் இரைச்சலுடன் கொட்டிக்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் முடிந்தபின் மழைக்காலத்தில் அருவியில் நிறைய நீர் கொட்டும். நாங்கள் செல்லும்போது பனியுருகிய நீர் மட்டுமே கொட்டிக்கொண்டிருந்தது.

மிக அமைதியான இடம். நாங்கள் அங்கே செல்லும்போது எங்களைத் தவிர எவருமில்லை. மது குடிக்க வந்த நான்கு இளைஞர்கள் வந்து அமர்ந்து அவசரமாகக் குடித்து அப்படியே எழுந்து சென்றனர். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அவர்கள் அருவியை பார்த்திருக்கவேண்டியதில்லை. குடித்த குடிக்கு கொஞ்சம் சலம்பியிருக்கலாம்.

அந்தியாகிக் கொண்டிருந்தது. அருவி ஒரு நீர்க்கடிகாரம் போல விழுந்துகொண்டிருந்தது. கடிகாரத்தின் முட்கள் காலம் காட்டவில்லை. வெள்ளிச்சிதறல். அருகே உடைந்து விழுந்து கிடந்த பாறை ஒன்று வெள்ளிப்பரப்புபோல ஜிப்சத்தை காட்டியது. பார்க்கவேபடாத அருவியில் காலம் உண்டா என்ன?

மலையின்மேல் ஓரிடத்தில் ஒரு சிற்றருவியைப் பார்த்தோம். உறைந்து கண்ணாடிப்படிகமென நின்றிருந்தது. அதனடியில் நிற்கையில் ஓரு படிமரத்தின் நிழலில் நின்றிருக்கும் உணர்வை அடைந்தேன். என் உளச்சித்திரம் ஓடும் நீரில் காலம் உள்ளது, உறைந்த பனி காலமற்றது என்பது. நீர் என்பது நினைவு. பனி என்பது கனவு. ஆனால் அவ்வாறல்ல என்று ஜாங் அருவி சொன்னது. அதுவும் காலமற்றதே என்று அங்கே தோன்றியது

பழைய நீர்க்கடிகாரங்கள் மேலிருக்கும் குடுவையில் இருந்து கீழிருக்கும் குடுவைக்கு நீரை சொட்டிக்கொண்டிருக்கும். நீர்விழும் அந்த கணமே க்ஷணம் எனக்கப்பட்டது. அக்குடுவையே நாழி அல்லது நாழிகை. ஒரு நாழிகை நேரமென்பது ஏறத்தாழ நாற்பது நிமிடம். அந்த நீர் உறைந்துவிட்டால் காலம் என்ன ஆவது? அந்த நீர் இந்த அருவிபோல முடிவிலாதது எனில் அதுவும் காலமின்மை அல்லவா?

இப்படி ஊர் பேர் தெரியாத இடத்தில் நின்றுகொண்டு, முன்பு கண்டிராத, ஒருவேளை இனியொருபோதும் காண வாய்ப்பில்லாத ஓர் அருவியை பார்த்துக்கொண்டு, பித்துக்குளித்தனமாக யோசித்துக் கொண்டிருப்பது ஓர் உயர்ந்த நிலைதான். இந்த சுதந்திரத்தை நான் அறிந்திருக்கிறேன். பெரிதாக அர்த்த ஒழுங்கு அமையாத சொற்பெருக்குகள் நம் அகத்தை களிப்புறச் செய்கின்றன. கடிவாளம் கழற்றப்பட்ட குதிரைக்குட்டி என துள்ளிக்குதிக்கச் செய்கின்றன.

நம் எண்ணங்களின் ஒழுங்கு என்பது புறவுலகின் ஒழுங்கேதான். பழகிய புறவுலகம் பழகிய தடத்தை சிந்தனைக்கும் அளிக்கிறது. நதிநீருக்கு கரைகள் அளிக்கும் பாதை போல. புதியநிலம் சிந்தனையை தன்னிச்சையாக நடைகொள்ள விடுகிறது. அமைதியான அசட்டையான நடை அது. எப்போதெல்லாம் நாம் சற்றுச் சலித்தவர்களாக, எதையும் குறிப்பிட்டு சிந்திக்காதவர்களாக, அசமஞ்சத்தனமாக இருக்கிறோமோ அப்போதுதான் நம் அகம் விடுதலை கொண்டிருக்கிறது.  

பின்னர் எண்ணிப்பார்க்கையில் அந்தப் பொழுதுகளில்தான் ஆழ்ந்து எங்கோ சென்றிருக்கிறோமென உணர்கிறோம். அந்நிலங்களைத்தான் நினைவில்கொண்டிருக்கிறோம் என அறிகிறோம். பயணம் அதன்பொருட்டே.

மாலை மங்கிக்கொண்டிருந்த நான்கரை மணிப்பொழுதில் தவாங் சமவெளியை வந்தடைந்தோம். தவாங்குக்கு வரவேற்கும் வளைவை கண்டதும்தான் அதுவரை ஒரு பிரம்மாண்டமான சுழல்பாதையில் சுற்றிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். 

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:35

சரோஜா ராமமூர்த்தி

[image error]

சரோஜா ராமமூர்த்தி ஓர் இலக்கியக் குடும்பத்தை சேர்ந்தவர். காந்திய இயக்கப் போராளியாக ஒரு தீவிரமான வாழ்க்கையை வாழ்ந்தவர். இலக்கியம் வளர்ந்து உருமாறியபோது மறக்கப்பட்டார். மீண்டும் அவர் கண்டடையப்பட்டிருக்கிறார். நீலி இதழில் ரம்யா சரோஜா ராமமூர்த்தி பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். (குறைபடவே சொல்லல். சரோஜா ராமமூர்த்தி).

சரோஜா ராமமூர்த்தி சரோஜா ராமமூர்த்தி சரோஜா ராமமூர்த்தி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:34

ஆலயக்கலை முகாம், கடிதங்கள்

[image error]

அன்புள்ள அண்ணா,

ஆலய கலை வகுப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கின்றேன்.   ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல,  திருப்புள்ள மங்கை கோயில் அறிமுகமே,  எத்துணை பெரிய கலை பொக்கிஷங்களுக்கு மத்தியில் நாம் இருக்கின்றோம் என்ற பிரமிப்பை கொடுத்தது.    கலைகள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது என்பதையும்    திருஞான சம்பந்தரின் பதிகத்தை சிற்பி அவரது படைப்பில் எவ்வாறு கொண்டு வந்திருக்கின்றார் என்று விளக்கிய போது இலக்கியம் என்பது அனைத்து கலைகளோடும் உறவாடக்கூடியது என்பதை புரிந்து கொண்டேன். இளமுருகு உடனுறை அம்மையப்பர் (சோமாஸ்கந்தருக்கு) சொன்ன  தத்துவ விளக்கமும் மிக அருமை.  

வெண்முரசு வாசித்த போது ஆபரணங்களை பற்றிய வர்ணனை வரும் போது பொதுவாக நான் பார்த்த சிற்பங்களில் உள்ள அலங்காரம் மனதில் தோன்றும்.   ஆனாலும் எது எந்த வகை ஆபரணம் என்ற தெளிவு கிடையாது.   இந்த வகுப்பில் அதுவும் தீர்ந்தது.  

கூடிய விரைவில் ஆசிரியரோடு ஏதேனு ஒரு கோயிலுக்கு சென்ற வரக்கூடிய வாய்ப்பு வரலாம் என்று அஜிதன் கொடுத்த அறிவுப்பு மகிழ்ச்சி கொடுத்தது. வாய்ப்புக்காக காத்திருக்கின்றேன்.

இத்தகைய வாய்ப்புக்கு நன்றி.

விஜயசேகர் 

அன்புள்ள ஆசிரியருக்கு,

           மிக நீண்ட காலமாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த பயிற்சி முகாம் பற்றிய தகவலை உங்கள் தளத்தில் பார்த்தவுடன் மின்னஞ்சல் அனுப்பி வருகையை உறுதி செய்து கொண்டேன்.வெள்ளியன்று காலை அந்தியூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் பேருந்து பயணத்திலே நண்பர்கள் அறிமுகம் ஆகிவிட்டார்கள்  

       உள்ளே வந்தவுடன் மணி அண்ணா எங்களை வரவேற்று கிணற்று குடிலில் தங்க ஏற்பாடு செய்தார் குளித்துவிட்டு காலை உணவை முடித்து நேராக வகுப்புக்குச் சென்றோம். 

இந்த முகாமை நடத்தும் ஆசிரியர் திரு ஜெயக்குமார் அவர்கள் சிற்பவியல்  கோவில் கட்டிடக்கலை மட்டுமல்லாது இசை, நடனம், மொழி, புராணம் போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு முழு ஆளுமையாக இருந்தார், அவருடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது வீணான உரையாடல்களோ நேர விரையமோ இல்லை, மிகவும் பயனுள்ள மூன்று நாட்களை எங்களுக்கு உருவாக்கித் தந்தார்.

 இப்பயிற்சிக்கு முன் ஆலயம் என்பது அதன் கட்டிடமும் சிற்பமும் மட்டுமே என்று நினைத்திருந்தேன் ஆனால் ஆலயம் என்பது தத்துவமும் இசையும் பூசை முறைகளும் நடனமும் சேர்ந்தது என்ற புரிதல்  உருவாகியது. அவர் குறிப்பிட்ட புத்தகங்களும் சுட்டிய ஆளுமைகளையும் வாசிப்பதன் வழி நாங்கள் செல்ல வேண்டிய தூரம் எங்களுக்குத் தெரிந்தது. இப்படிப்பட்ட ஒரு முழுமையான ஆளுமையை நீங்களன்றி எங்களுக்கு வேறு எவரும் அறிமுகப்படுத்தப் போவதில்லை அதற்காக உங்களுக்கு நன்றி. 

மனமத்த பல நண்பர்கள் இங்கு எனக்கு கிடைத்தனர். இந்த முகாமின்  தொடர்ச்சியாக தாராசுரம் அல்லது மகாபலிபுரம் ஏதேனும் ஒரு இடத்தில் திரு.ஜெயக்குமார் அவர்களுடன் நேரடியாக சென்று சிற்பங்களை பார்க்கலாம் என்று அஜி கூறியிருந்தார், அந்த நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

சூழலின் ரம்யமும் அமைதியும் கற்றலுக்கு மிகவும் உகந்ததாய் இருந்தது பின் மூன்று வேளையும் மிக சுவையான உணவு எங்களுக்கு பரிமாறப்பட்டது அதனை ஒருங்கிணைத்த மணி அண்ணாவிற்கு நன்றிகள். இறுதியாக கற்றளின் இன்பத்தை  எழுத்து வழியாகவும் இதைப் போன்ற பயிற்சி வழியாகவும்  உருவாக்கித் தரும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

அன்புடன்

தினேஷ் ரவி

திருச்சி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:31

ஒலேஸ்யா, அலக்ஸாண்டர் குப்ரின்- வெங்கி

ஒலேஸ்யா வாங்க

அன்பின் ஜெ,

வணக்கம்.

குப்ரினின் “செம்மணி வளையல்” தொகுப்பில் “ஒலேஸ்யா” குறுநாவலை வாசித்தேன். இக்குறுநாவலிலும் குப்ரினின் எழுத்து மயக்குகிறது. வாசிப்பு, பனி வெளிகளிலும், காடுகளிலும், மழைச் சாலைகளிலும் காதலியின் அருகே பேசிக்கொண்டே நடை செல்லும் பரவசத்தை மனதிற்களித்து நினைவுகளில் மூழ்க வைக்கிறது. குப்ரின் எழுத்தாளுமையின் அவதானிப்புகள் அங்கங்கு பளிச்சிடத் தவறுவதேயில்லை. ஒலேஸ்யாவுடனும், அவள் பாட்டியுடனும் அவர்கள் வீட்டில் முதன்முதலாக இரவுணவு சாப்பிடும்போது, ஒலேஸ்யா உணவுண்ணும் அழகையே பார்த்துக் கொண்டிருக்கிறான் இவான். அவன் மனம் நினைக்கிறது…”சாப்பிடுகிற போதுதான் வேறு எந்த நேரத்தைக் காட்டிலும் மனிதர்கள் தங்களுடைய குணத்தை தெளிவாகக் காட்டுவார்கள் என்பதை எப்போதுமே நான் நம்பி வந்திருக்கிறேன்; அது உண்மைதான் போலும்.

1897-ல், மத்திய கிழக்கு ஐரோப்பாவில், போலந்திற்கும், உக்ரைனுக்கும், பெலாரஸிற்கும் மத்தியிலிருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வோலினியா மாகாணத்திற்கு முதல்முதலாக எஸ்டேட் மேலாளர் வேலைக்குச் செல்கிறார் குப்ரின். பின்பு அங்கிருந்து தெற்கு பெலாரஸின் இயற்கை எழில் சூழந்த, சதுப்பு நிலக் காடுகள் கொண்ட பொலேசியே-விற்கு பணி மாறுகிறார். அடுத்த வருட குளிர்காலத்தில், மத்திய ருஷ்யாவின் ஆற்றங்கரை நகரான ரியாஜனுக்கு சென்றபின் அங்குதான் “ஒலேஸ்யா”-வை எழுதுகிறார். “ஒலேஸ்யா”-வும், “தி ரிவர் ஆஃப் லைஃப்”-ம் குப்ரினுக்கு மிகவும் பிடித்தமான படைப்புகள்.

வோலினியா மாகாணத்தில், பொலேசியேவிற்கு அருகில் பிரெபிரோ கிராமத்தில் அலுவல் காரணமாக சில மாதங்கள் வசிப்பதற்கு வந்திருக்கிறான் இவான். இவானிற்கு எழுதுவதில் விருப்பம் உண்டு. உட்கோடியில் அமைந்த அக்கிராமத்து மக்களின் பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்வியல், அப்பகுதியின் பழமையான நாட்டுப்புறக் கதைகள் அனைத்தையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் அவனுக்கு.

இவான் தங்கியிருக்கும் வீட்டில் அவனுக்கு உதவியாக இருக்கும் பணியாள் யர்மோலா எழுதப் படிக்கத் தெரியாதவன்.  இவான் நகரத்திலிருந்து தன்னுடன் எடுத்து வந்த புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டான். உள்ளொடுங்கிய அக்கிராமத்தில், அருகிலிருக்கும் இரீனாவோ காட்டில் முயல் வேட்டையாடுவதைத் தவிர அவனுக்கு வேறு பொழுதுபோக்கு எதுவும் கிடையாது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் யர்மோலாவையும், நாய் ரியாப்சிக்கையும் கூட்டிக்கொண்டு பனிக்காட்டில் முயல் வேட்டைக்குச் செல்வது அவனது வழக்கம். யர்மோலா, கால் தடத்தை வைத்து முயல் எங்கு ஒளிந்திருக்கிறதென்று கண்டுபிடிப்பதில் கில்லாடி.

அந்த ஜனவரி இறுதியில் குளிர் காற்றும், பனிப்பொழிவும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. முயல் வேட்டைக்குக் கூட வெளியில் செல்ல முடியவில்லை. பொழுது போகாமல், ஏதாவது விபரங்கள் சேகரிக்கலாம் என்று நினைத்து, கணப்படுப்பை மூட்டிக்கொண்டிருக்கும் யர்மோலாவிடம் பேச்சுக் கொடுக்கிறான் இவான். யர்மோலா இவானுக்கு பிரெபிரோவின் மந்திரவாதக் கிழவி மனூய்லிகாவின் கதையைச் சொல்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது…

மனூய்லிகா வாய்த் துடுக்குக்காரக் கிழவி. அவளுக்கு மந்திர வித்தைகள் தெரியும். அவளுக்கு அல்யோனா என்று ஒரு பேத்தி இருக்கிறாள். பதின்ம வயது. மனூய்லிகாவிற்கு கிராமத்தில் அனைவருடனும் சண்டை. ஒருமுறை ஒரு இளம் மனைவியுடன் காசுக்காக சண்டை வர “நீ நாசமாப் போவ…” என்று சபிக்கிறாள். அவள் வாக்கு பலிக்கிறது. அந்த இளம்பெண்ணின் குழந்தை நோய்வாய்ப்பட்டு இறக்கிறது. கிராமத்திலிருக்கும் இளைஞர்கள் கோபமடைந்து மனூய்லிகாவிற்கு “சூனியக்காரி” என்ற பட்டம் கொடுத்து அவளையும், அவள் பேத்தியையும் ஊரைவிட்டு செர்ரி தோட்டங்களுக்கு அப்பால் சதுப்பு நிலப் பகுதிக்கு துரத்துகிறார்கள்.

ஒருநாள் யர்மோலாவுடன் முயல் வேட்டைக்குச் சென்றிருக்கையில், இரீனாவோ காட்டில் இவானுக்கு வழிதவறுகிறது. யர்மோலாவையும் நாயையும் காணவில்லை. சாலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தடுமாறி நடந்து நடந்து சதுப்பு நிலத்தில் தனியாக இருக்கும் ஒரு குடிசையைக் கண்டு அங்கு செல்கிறான். அது மந்திரக் கிழவி மனூய்லிகாவின் குடிசை.

கிழவியின் பேத்தி அல்யோனாவிற்கு இப்போது வயது இருபது. அவளுக்கு இன்னொரு பெயர் உண்டு – “ஒலேஸ்யா”. ஒலேஸ்யாவின் அசரடிக்கும் அழகும், பேச்சும், வெகுளித்தனமும், குழந்தைமையும் இவானை மிகவும் வசீகரிக்கின்றன. இவான் ஒலேஸ்யாவின் மேல் காதல் கொள்கிறான்.

காதலின் இசைக்கவிதை அங்கு தொடகுகிறது…

*

“ஒலேஸ்யா” – இளவேனிற்கால பௌர்ணமி; வெண்பனிக் காட்டின் வசந்தகால யட்சி; நீலி.

வெங்கி

“ஒலேஸ்யா” – அலெக்சாந்தர் குப்ரின் (ருஷ்ய குறுநாவல்) 1898

தமிழில்: நா. முகம்மது செரீபு

ராதுகா பதிப்பகம், மாஸ்கோ/போதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:30

நூலக அடுக்கிலே…

Stories Of The True -வாங்க

அன்புள்ள ஜெயமோகன்,

நலமே விழைகிறேன்.

கடந்த செப்டெம்பரில் ஊரிலிருந்து வரும்போது வாங்கிவந்த Stories  of  the True புத்தகங்களில் ஒன்றை டாலஸ் நூலகத்தில் சேர்த்துவிட திட்டமிட்டேன். இங்கு நூலகத்துக்கு யார் வேண்டுமானாலும் நூல்களை கொடையளிக்கலாம் என்பதால் எளிதாக முடியும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், கொஞ்சம் சிக்கலாகவே இருந்தது.

கொடையளிக்கப்படும் நூல் நேரடியாக நூலடுக்குக்கு செல்லாது. அது விற்பனைக்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் பணம் நூலகத்துக்கு செல்லும் என்பதே வழிமுறையாம். எனது நோக்கம் பலருக்கும் இந்நூல் வாசிக்கக் கிடைக்கவேண்டும் என்பதாக இருந்ததால், நூலக ஊழியர்களிடமும் தலைமை நூலகரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தேன். அவர்கள் கூறிய அதிகபட்ச வாய்ப்பு, அவர்கள் இணையப்பக்கத்தில் நமக்கு வேண்டிய நூலை வாங்குமாறு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணிக்கை மற்றும் புத்தக இருப்பு (அமெரிக்காவில்) போன்ற சில காரணிகள் இவ்வழியையும் அடைத்தது.

மேலும் சிலநாள் முயற்சியில், ஒரேயொரு வழி இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் கூறியது ராஜபாட்டை. ஆம், புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பவேண்டியது – அவர்களின் ஒரு குழு வாசித்து முடிவெடுக்கும். அவர்கள் ஏற்றால் நூல் நூலக அடுக்குக்கு செல்லும் – பொது மக்களுக்கு கிடைக்கும். இல்லையேல், முதல் வழி தான். இதைக் கேட்ட மறுநொடி தயங்காமல் சரியென்றேன் – கெத்தேல் சாகிப், டாக்டர் கே , வணங்கான் நாடார் எல்லோரையும் நம்பி…

மூன்று வார காத்திருப்பில், நூல் கடந்த வாரம்  இர்விங் பொது நூலக அடுக்கில் சேர்க்கப்பட்டது.

இனி அடுத்த கட்ட சோதனை, தொடர் சுழற்சி. நூல் தொடர்ந்து / குறிப்பிடத்தக்க அளவில் மக்களால் எடுக்கபடவேண்டும். இல்லையேல், மீண்டும் முதல் வழி தான். உங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் ஒரு பெரிய குழுவிற்கு அறிவிப்பதன் வாய்ப்பிருப்பதால் இக்கடிதம். தயவு செய்து உதவவும். நன்றி…

என்றும் அன்புடன்,

மூர்த்தி

டாலஸ் 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:30

February 21, 2023

எழுகதிர் நிலம்- 3

அருணாச்சலபிரதேசத்தை நாங்கள் பார்த்ததெல்லாம் தவாங் சமவெளி வரையிலான சாலையில்தான். உண்மையில் அச்சாலையில்தான் அந்த மாநிலமே உள்ளது. கீழே சமவெளியில் இதாநகரில் அதன் தலைநகர். ஆனால் அது புவியியல்ரீதியாக அருணாசலப்பிரதேசம் அல்ல. இதற்கப்பால் அருணாசலப்பிரதேசத்தைப் பார்க்கவேண்டும் என்றால் மலைச்சிற்றூர்களில் ஒருசில நாட்கள் தொடர்ச்சியாகத் தங்கும்படிச் செல்லவேண்டும்.

முந்தையநாள் எங்கள் ஸைலோ காரில் ஏதோ பழுது. இயந்திரம் சூடாவதை வெப்பமானி காட்டிக்கொண்டிருந்தது. அதை இரவோடு எங்கேயோ கொண்டுசென்று சீரமைத்து வந்தார் ஓட்டுநர். ஆனாலும் முழுக்கச் சரியாகவில்லை. அதே சிவப்பு எச்சரிக்கை வந்துகொண்டேதான் இருந்தது.

டிராங் என்னும் ஊரை வந்தடைந்தோம்.மேலேறுந்தோறும் குளிர் ஏறி ஏறி வந்தது. கிருஷ்ணன் வழக்கம்போல குளிராடைகள் போதுமான அளவு கொண்டுவரவில்லை. யாரோ கொடுத்த குளிர் உள்ளாடை ஒன்றும் ஒரு மழைக்கோட்டும் கொண்டுவந்திருந்தார். கேட்டதற்கு தன் ஆரோக்கியநிலைக்கு அதுவே போதும் என்றார். ஆகவே நான் முதல்நாள் ஒன்றும் சொல்லவில்லை. தெம்பாங் கிராமத்தில் அவர் மழைக்கோட்டு அணிந்திருந்தார். பணிந்து கூனி குறுகி நடுநடுங்கி வேறொருவராக இருந்தார். ஆனாலும் அவரே கேட்பது வரை எந்த ஆடையையும் அளிக்கவேண்டாம் என இருந்தேன்

டிராங் கிருஷ்ணனை வீழ்த்தியது. நான் அவருக்கு என்னிடமிருந்த குளிர்ச்சட்டையை அளித்துவிட்டு, என்னிடமிருந்த இன்னொரு குளிர்ச்சட்டையை அணிந்துகொண்டேன். அது நான் அண்மையில் ஸ்வீடன் சென்றபோது வாங்கியது. எடைமிக்கது. குளிரை அற்புதமாக தாங்கியது, அதாவது குளிர் நடுநடுங்கியபடி தாங்கிக்கொள்ளும்படி இருந்தது

இருபத்தைந்து கிமீ தொலைவில் உள்ள மண்டா-லா (மண்டலா) என்று அழைக்கப்படும் இடம் எங்கள் இலக்கிடங்களில் ஒன்றாக இருந்தது. நாங்களே இணையத்தில் தேடிக்கண்டடைந்தது. அது ஓர் மலைக்கணவாய். நெடுங்காலம் அதை மேய்ச்சல்மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். சுற்றுலாப்பயணிகள் அங்கே செல்வது அனேகமாக இல்லை. அண்மையில் அங்கே மண்டலா என்னும் பௌத்தமையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னமும் பணி முடியவில்லை.

மண்டலா மணிமுடிக்கு நாங்கள் இரண்டு உள்ளூர் கார்களில் மேலேறிச் சென்றோம். எங்கள் ஓட்டுநர் ஸைலோ காரை உள்ளூரில் பழுது நீக்கக் கொண்டுசெல்வதாகச் சொன்னார்.

மேலேறிச் செல்லுந்தோறும் குளிர் கூடிக்கூடி வந்தது .சாலையோரம்  புல் கடும்கோடையில் என கருகியிருந்தது. பின்னர் புல்மேல் வெண்பனிப்பூச்சை காணத்தொடங்கினோம். புல்நுனிகள் தீட்டப்பட்டு சவரத்தகட்டின் கூர்கொண்டுவிட்டதைப் போல. பின்னர் புல்லே பனியாலனாதாக் ஆகியது. பனிப்புல்சிற்பங்கள். பனிமரச்சிற்பங்க்கள். பனிமரச்சிற்பங்கலான காடு.

மண்டலாவில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. பல கடைகள் பூட்டியிருந்தன. ‘சீசன்’ காலகட்டத்தில் அந்த இடம் மிகப்பரபரப்பாக இருக்கும் போலிருக்கிறது.டீக்கடையில் கரடிகள்போல இமாலயநாய்கள். அடர்ந்த முடிகொண்டவை, லாப்ரடார் என தோன்றியது.  சந்திரசேகர் ‘ஆ, நாக்போ’ என்று கூவினார். (வெள்ளிநிலம்) ஆனால் நாக்போ போல இவை லாப்ரடார் அல்ல, முன்பு வெள்ளையர் இங்கே கொண்டுவந்த ரெட்ரீவர் வகை நாய்களின் வழித்தோன்றல்கள். பனியிலேயே யாக் போல இவையும் மந்தமாக படுத்துக் கிடந்தன. டீக்கடையில் கணப்புதான் அடுப்பு. அதைச்சுற்றி அமர்ந்து வெம்மையை உணர்ந்தபடி டீ குடிக்கலாம்.

மண்டலா என்பது நூற்றெட்டு சிறு கோபுரங்களால் ஆன ஒரு பெரிய வட்டம். ஒவ்வொன்றிலும் கெலுக் திபெத்திய பௌத்தத்தின் மங்கலச் சின்னங்களும், மதச்சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. ஓம் மணிபத்மே ஹம் என்னும் வஜ்ராயன பௌத்தத்தின் மந்திரம் அவற்றில் திபெத்திய எழுத்துக்களால் அமைந்திருந்தது. ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த வட்டங்களின் நடுவே மையத்தூபம். அது இன்னும் முடிவடையவில்லை.

மண்டலாவை மந்திரம் சொன்னபடிச் சுற்றிவந்தோம். அங்கே ஆக்ஸிஜன் மிகக்குறைவு. மூச்சுவாங்க நின்றபோது மத தத்துவம் பற்றிய பேச்சு வந்தது. அப்படியே வெவ்வேறு கருத்துக்கள் கனவுகள் என பேச்சு நீண்டது. அங்கே ஓர் உறுதிமொழி எடுத்தோம். ஒரு பெரும் செயல்திட்டம். ஐந்தாண்டுகளில் அதை முடித்து மீண்டும் அங்கே செல்வதென முடிவுசெய்தோம். அது என்ன திட்டம் என இப்போது சொல்லப்போவதில்லை.

மண்டலா அருகே ஒரு மேடையும் திறந்தவெளி அரங்கும் இருந்தது. அண்மையில் அங்கே விழா ஏதோ நடைபெற்றிருந்தது. தோரணங்கள் பனியில் உறைந்திருந்தன. அவற்றின் விளிம்பில் வெண்பனி மொட்டுக்கள் பளிங்கு மணிகள் போல தொங்கின. பனியே தோரணத்தை வெள்ளிச் சரிகைபோல விளிம்பு கட்டியிருந்தது. ஒரு அருணாச்சல் பிரதேசக் குடும்பம் குடும்ப பிக்னிக் வந்திருந்தது. சமைத்த உணவுகளை கொண்டுவந்து திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். குளிர் பூஜ்யத்திற்கு ஒரு பாகை கீழே.

பனியில் அங்கே சுற்றிவந்தோம். அருணச்சலில் நாங்கள் பார்க்கும் முதல் பனிப்பொழிவு அது. மெல்லிய துகள்களாக பனி கொட்டிக்கொண்டிருந்தது. ஆனால் பொருக்குகளாக படிந்து, உடனே உருகி, மீண்டும் பனியாகியது. நாய்களின் மயிர் முனைகளில் பனிப்பொருக்குகள். கையுறைக்குள் விரல்கள் சொடுக்கிக்கொள்ளும் அளவுக்கு குளிர்.

சாங்டி (Sangti) மடாலயத்திற்குச் சென்றோம். சாங்டி ஆற்றங்கரையில் இருப்பதனால் அப்பெயர். இது முன்னரே இருந்த சிறிய வழிபாட்டிடம். 1959ல் தலாய் லாமா இங்கே தப்பி வந்தபின்னர் விரிவாக்கிக் கட்டப்பட்டது. திபெத்திய மடாலயங்களுக்குரிய ஆழ்சிவப்பு முகப்பு. மஞ்சள் கொடிகள். கோபுரமற்ற கட்டிட அமைப்பு. 

உள்ளே மையமாக அமிதாப புத்தர்.  அருகே யோகினியுடன் அமர்ந்த வஜ்ராயுத புத்தர். இன்னொரு பக்கம் புத்த மைத்ரேயர். பொன்பூசப்பட்ட சிலைகள். அவற்றின் நிமிர்வும் தியானமும். ஆழ்ந்த குளிர் கொண்ட அமைதி. அங்கே குரலெழுப்பிப் பேசவே தோன்றுவதில்லை. ஆனால் அது எல்லாருக்குமல்ல. அங்கு வந்தும் சளசளவென பேசித்தள்ளும் பெண்களை, கேலியும் கிண்டலுமாக கூச்சலிடும் இளைஞர்களை பார்த்திருக்கிறேன். குறியீடுகள் கலை வழியாக தொடர்புகொள்பவை. கலை அவற்றை காண மறுப்பவர்கள் முன் ஊமையாகிவிடுவது.

சாங்டி மடாலயத்தை சுற்றி வந்தோம். அங்கே மாணவர்கள் சிலர் படிக்கிறார்கள் என தெரிந்தது. பின்பக்கம் உள்ளாடைகள் காய்ந்துகொண்டிருந்தன. அந்திப்பிரார்த்தனைக்காக நூல்கள், இசைக்கருவிகள், முரசுகள் , கம்பிளி விரிக்கப்பட்ட இருக்கைகள் காத்திருந்தன. அதே வண்ணத்தில் அதே போன்ற ஒரு பிரார்த்தனை அறையை எனக்காக அமைக்கவேண்டும் என்னும் கனவும் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது. அந்த ஆழ்சிவப்பு மெத்தைகள், கம்பிளிகள். ஆனால் அந்த குளிரை தனியாக உருவாக்கவேண்டும். ஊட்டியில் சாத்தியமாகலாம்.

இமையமலைப் பகுதிகளில் எஞ்சியிருக்கும் பௌத்தம் நம் ஆழுள்ளத்தில் நாம் கொண்டிருக்கும் ஒரு கனவு. ஒரு நனவிலி நினைவு. அதற்கு இந்தியப் பண்பாட்டில் இன்று மிக முக்கியமான பங்குண்டு. திபெத்தின் தலைவராயினும் தலாய் லாமா நாம் பெருமைகொள்ளவேண்டிய இந்தியர். காந்திக்கு பின் உலகை நோக்கி நமக்காகப் பேசுபாவ்ர் அவரே. 

யோக–ஊழ்கப்பயிற்சியை பொறுத்தவரை இந்தியாவின் பிற அமைப்புகள் எல்லாமே பொயு 7 ஆம் நூற்றாண்டு முதல் நலிவுறலாயின. அப்போதுதான் பக்தி இயக்கம் தொடங்கியது. உணர்ச்சிகரமான வழிபாடும் சரணாகதியுமே மீட்பின் வழி என அவை முன்வைத்தன. யோகமும் ஊழ்கமும் பொதுவாக புறக்கணிக்கப்பட்டன, சில மரபுகளால் தடுக்கவும்பட்டன.  அவை சித்தர்மரபாக ஒடுங்கி, தலைமறைவாக நிகழ நேர்ந்தது

பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் படையெடுப்பு, போர்ச்சூழலில் பக்தி இயக்கம் தாக்கப்பட்டது. ஆலயங்கள் அழிந்தபோது பஜனை முறை வட இந்தியாவில் ஓங்கி அதுவே மைய வழிபாட்டு முறையாக ஆகியது. தென்னகத்தில் எஞ்சியிருந்த யோக – ஊழ்கப் பயிற்சிகள் கூட வடக்கே இல்லாமலாயின. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் கூட யோக– ஊழ்க பயிற்சிகளை பிராமணிகள் போன்ற ரகசிய வழிபாட்டுமுறைகள் கொண்ட அலைந்து திரியும் சாக்தமத சாதகர்களிடமிருந்து கற்கவேண்டியிருந்தது. சமண மரபின் அடிப்படையே யோகம்தான், யோகத்திலமர்ந்தவர்கள் அவர்களின் தீர்த்தங்காரர்கள். ஆனால் அவர்களிடம் யோகமுறையே இல்லை.

ஆனால் திபெத்திற்கும் இமையமலையடுக்குகளுக்கும் அந்தச் சிக்கலே இல்லை. அங்கே பக்தி மரபு ஊடுருவவே இல்லை, அயல்படையெடுப்பும் இல்லை. ஆகவே யோகமும் ஊழ்கமும் அங்கே நவீன காலகட்டம் வரை அப்படியே நீடித்தன. அவற்றுக்கான முறையான கல்வியமைப்புகள், ஆசிரிய மரபுகள், பயிற்சி முறைகள் இருக்கின்றன. இந்தியாவின் யோகப்பயிற்சிகள் திபெத்திய மரபில் இருந்துதான் மீண்டும் இந்து மரபு நோக்கி வந்து தொடர்ச்சியை அடைந்தன என்றுகூட ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.

உலக அளவிலேயே கூட திபெத் பௌத்தமும், ஜென் பௌத்தமும்தான் உச்சகட்ட யோக – ஊழ்கப் பயிற்சியை அறுபடாமல் தக்கவைத்துக்கொண்ட மரபுகள். இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. ஆழ்ந்த குறியீடுகள் மற்றும் கடும் நோன்புகள் வழியாக திபெத்திய பௌத்தம் யோகத்தை முன்வைக்கிறது. குறியீடுகளே இல்லாத , நோன்புகளே இல்லாத வெற்றிருத்தல் வழியாக யோகத்தை ஜென் கற்பிக்கிறது.

யோகம் —ஊழ்கம் ஆகியவற்றைப் பயில்வதற்கு நமக்கு தடையாக இருப்பவை வரலாற்றுப்பரிணாமத்தில் நம்மை வந்தடைந்த ஆசாரவாதமும் பக்தி இயக்கத்தின் மனநிலைகளுமே. ஆசாரவாதம் புறவய வாழ்க்கைநெறிகள் மட்டுமே ஆன்மிகமென நம்புகிறது. பக்தி இயக்கம் மிகையான உணர்வுநிலைகளை நோக்கி கொண்டுசெல்கிறது. இரண்டுமே யோகத்திற்கு எதிரானவை. யோகம் அகவயப்பயிற்சியையே முதன்மைப்படுத்தும். எதையும் உள்ளது உள்ளபடி காண முயலும். 

பக்தி இயக்கத்தில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட மிகையுணர்ச்சியால் யோகத்தை அணுகும்போதுதான் நம்மிடையே இன்று பரவலாக உள்ள யோகம் பற்றிய பலவகையான கற்பனைகள் தோன்றுகின்றன. நான்குநாட்கள் யோகம் பயின்றபின் ‘அதிர்வு’ ‘ஒளி’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்கிறோம். ஆசாரவாதம் இன்னொரு எல்லை. அதில் இருப்பவர்கள் திபெத்திய பௌத்தம் அல்லது ஜென் பௌத்தத்தை ‘என்ன இருந்தாலும் அவங்கள்லாம் மாமிசம் சாப்பிடுறவங்க’ என்று ஒதுக்கிவிட்டு ஆசாரமாகச் சாப்பிடுவதே  மீட்பின் ஒரே வழி என பேச ஆரம்பிப்பார்கள்.

நாங்கள் மாலையில் தங்கவேண்டிய இடம் சாங்டி ஆற்றின் கரையில் இருந்தது. முன்னரே பதிவுசெய்த இடமல்ல, அங்கே சென்றபின் தொலைபேசியில் பதிவுசெய்தோம். பெரும்பாலான சுற்றுலா தங்குமிடங்கள் காலியாகத்தான் இருந்தன. ஆகவே இடமிருந்தது. ஆநால் இடத்தைக் கண்டுபிடிக்க கொஞ்சம் சுற்றிவந்தோம்

நோர்புவின் விடுதி சாங்டி ஆற்றங்கரையில் இருந்தது. அருகே ஓடும் நதியை நாற்காலி போட்டு அமர்ந்து பார்க்கலாம். தெள்ளத்தெளிந்த நீர். இமையமலையின் பனிக்காலத்தில் பேரழகு என்பது இந்த பனியுருகிய தெள்நீர்தான். பிரம்மனின் விழிநீர் என அதை கவிஞர்கள் பாடுகிறார்கள். நோர்பு சூடான தேநீர் தயாரித்துத் தந்தார்.

நோர்புவின் ஆறுவயதான மகள் ஓர் உற்சாகமான பெண். அயலவர் விருந்தினராக வருவதையே வாழ்வெனக் கொண்டவள். அத்துடன் பெண்களுக்கே உரிய துடிப்பு. பையன்கள் இந்த வயதில் சொங்கி போல் இருப்பார்கள். நாம் இந்த வயதுக்குப்பின் பெண்களை ஒடுக்க ஆரம்பிக்கிறோம். அருணாச்சலில் அது நிகழ்வதில்லை. எல்லா பெண்களும் உயர்மின்னழுத்தக் கருவி போல் உயிர்த்துடிப்புடன் இருந்தனர்.

நோர்புவின் விடுதிக்கு கொஞ்சம் முன்னரே வந்துவிட்டோம். ஆகவே நதிக்கரையில் ஒரு மாலை எங்களுக்கு அமைந்தது. மாலை என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன், அது பின்மதியம் மூன்று மணி. ஆனால் மலையடுக்குகள் மஞ்சள் ஒளியில் மயங்கிக்கொண்டிருந்தன. குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. வானில் முகில்கள் இல்லை, ஆனால் ஒளி மங்கி அது எண்ணைக்காகிதம்போல் பரவியிருந்தது. 

மாலையில் ஆற்றங்கரையோரமாக ஒரு நடை சென்று வந்தோம். ஆற்றில் இறங்கி அதில் போடப்பட்டிருந்த மரப்பாலம் வழியாக மறுகரை சென்றோம். குளிப்பதற்கு அரங்கசாமி துடிதுடித்தார். அவரை அடக்கினோம், நீரின் வெப்பநிலை மூன்று பாகைதான் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. “தெளிஞ்ச தண்ணி தமிழனுக்கு விதிக்கப்படலையே சார்…” என அரங்கசாமி வருந்தினார்.

சாங்டி ஆற்றங்கரையில் ஓர் ஓட்டப்போட்டி நடத்தினோம். அரங்கசாமி முதலில் தனியாக ஓடினார். அதன்பின் எனக்கும் ஆனந்துக்கும் ஒரு போட்டி, எவர் முதலில் களைப்படைவது என பார்க்கவேண்டும். நாலைந்து சுற்றுக்குப்பின் ஆனந்த் நின்றுவிட்டார். எனக்கு இன்னும் கொஞ்சம் கடந்தே மூச்சடைக்க ஆரம்பித்தது.  ஆனந்த் என்னைவிட பதினைந்து வயது இளையவர்

என் உடலின் எடை சற்று கூடியிருந்தாலும் தொடர்ச்சியான நடை, பழங்களை உண்பது, நீண்ட தூக்கம் ஆகியவை என்னை ஆற்றல்மிக்கவனாகவே வைத்திருக்கின்றன. அதை இப்படி அவ்வப்போது சோதனை செய்து நிறுவிக்கொள்வது வழக்கம். கம்போடியா பயணத்தில் எனக்கும் என்னைவிட இருபதாண்டு இளையவரான லண்டன் முத்துக்கிருஷ்ணனுக்கும் நீச்சல்போட்டி. வென்றவர் எவர் என சொல்லவேண்டியதில்லை

பிளாக் நெக் கிரேன் என்னும் பறவை அந்த ஆற்றங்கரையில் வலசை வரும் என்றும், அது வரத்தொடங்கிவிட்டது என்றும் நோர்பு சொன்னார். ஆகா பறவைகள் என கிருஷ்ணன் துடித்து கிளம்பியதும் ‘இரண்டே பறவைகள்தான் வந்துள்ளன. தேடினால் கிடைக்கும்’ என்றார் நோர்பு. கிருஷ்ணன் சோர்ந்து அமர்ந்துவிட்டார்

ஆனால் அன்று மாலை நதிக்கரையில் அமர்ந்திருக்கையில் இரண்டு சாம்பல்கழுத்து நாரைள் ஜோடியாகச் செல்வதை கண்டோம் ‘சார், அதேதான் ….அதே ஜோடிதான்’ என்று கிருஷ்ணன் கூச்சலிட்டார். எங்களுக்கு ‘ஷோ’ காட்டுவதற்காகவே இரண்டு முறை சுற்றிவந்து பறந்து சென்றன. 

இரவு தீமூட்டி அதைச்சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய மாலை முதல் நடைபெற்ற எல்லா உரையாடல்களும் வழக்கமான வேடிக்கைகள்தான். ஆகவே அன்று மாலை சற்று தீவிரமான தத்துவ உரையாடல். ஆனந்த், பாலாஜி, சந்திரசேகர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அவர்களுக்கு நல்ல அசைவ உணவு நோர்புவின் மனைவியால் சமைத்து வழங்கப்பட்டது.

குளிர்

குளிர் வலுக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்திற்குப் பின் குளிர் என்பது ஓர் இறுக்கம், ஓர் எடை, ஒரு வலி. நான் அறைக்குள் சென்றதுமே சப்பட்டையாக கட்டிலில் படிந்து என்மேல் கிடைத்த அத்தனை மெத்தைப்போர்வைகளையும் எடுத்து போர்த்திக்கொண்டேன். போர்வைக்குவியல்களுக்குள் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அதிகாலையில் உள்ளே நாமே உருவாக்கிய நமது சூடு நிறைந்திருக்கும். அது நாம் நம் அன்னையிடமிருந்து அவள் கருப்பைக்குள் வாழும்போது பெற்றுக்கொண்ட குருதிவெம்மை.

எனக்கு கொஞ்சம் ‘செர்விக்ஸ்’ பிரச்சினை உண்டு. தீவிரமாகவே இருந்தது. குருஜி சௌந்தரின் ஆலோசனைப்படி எளிய யோகப்பயிற்சிகள் (மகராசனம்) வழியாகச் சரிசெய்துகொண்டேன். அது கொஞ்சம் வெளிப்படுவது நீண்ட தொலைவு காரில் செல்லும்போது மட்டும். அதுவும் கழுத்துக்கு தாங்கு இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும்போது.  இந்தப்பயணம் ஒரு சுழல்படி வழியாக சென்றுகொண்டே இருப்பது. அல்லது ஒரு மாபெரும் இசைத்தட்டில் ஊசியாகச் சுழல்வது. ஆகவே படுக்கையில் படுத்து என் முகுளத்தின் சமநிலையை மீட்டெடுக்கவேண்டியிருந்தது. படுத்தால் கட்டிலும் சேர்த்தே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால் கருப்பைக்குள் சுருள்வதுபோன்ற அந்த அமைதி அழகானது. நல்ல தூக்கம், பன்னிரண்டு மணிநேரம்

 

 

 

 

 

 

 

 

 

என்னுடைய பசி மிகவும் மந்தித்துவிட்டது. குளிரில் நன்றாகப் பசிக்கும் என்பார்கள். நேர்மாறாக இந்தச் சுழற்பயணத்தால் எனக்கு ஒரு மெல்லிய குமட்டல் இருந்துகொண்டிருந்தது. ஆகவே பசியே இல்லை. காலையில் கொஞ்சம் பசிக்கும். ஒரு சோளரொட்டி அல்லது ஒரு சாண்ட்விச். அதன்பின் இரவில் பழங்கள். நடுவே தேநீர், அதுவும் சர்க்கரை இல்லாமல், பால் இல்லாமல். யாக்கின் பால் கடினமானது, ஆனால் கொஞ்சம் சுவை குறைவானது.

அதுவும் நல்லதுதான் என்று தோன்றியது. இந்த மலைகளின் பாதைகளில் ஏறுவதற்கு எந்த அளவுக்கு செரிமானப்பணி குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உடல் தன்னை தயாரித்துக் கொள்கிறது. இவர்களின் உணவில் எண்ணை அனேகமாக இல்லை. எல்லா வகை எண்ணை வித்துக்களும் கீழிருந்து வரவேண்டியவை. கீழுலகுடன் இவர்களுக்கு தொடர்பே இல்லை. இவர்களின் உணவில் கொழுப்பு என்பது பன்றி, யாக் ஊனில் இருந்து வருவது. அந்த ஊனையும் பொரிப்பதில்லை, சூப்பில் அல்லது நூடில்ஸில் போடுவதுடன் சரி. ஆனால் இன்று சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லாவகை பொரித்தல்களையும் செய்கிறார்கள். தாங்களும் உண்கிறார்கள்.

நோர்புவின் இல்லத்தில் இருந்து காலையில் கிளம்பினோம். நாங்கள் சென்றடையவேண்டிய இடமான தவாங் சமவெளியே இனிமேல்தான். சமவெளி என அதைச் சொல்லக்கூடாது. மலைமேல் ஒரு சமவெளி. பீடபூமி என்று சொல்லவேண்டும். திபெத்தை உலகின் கூரை என்பார்கள். தவாங், ஸ்பிடி இரண்டு இடங்களையும் இந்தியாவின் கூரைகள் எனலாம். ஒரே கூரையின் இருபுறச் சரிவுகள்

 

(மேலும்)

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2023 10:35

கலைச்செல்வி

கலைச்செல்வி தமிழில் ஒரு தனித்தன்மை கொண்ட எழுத்தாளர். தமிழில் காந்தியை பற்றிய புனைவுகளை மிகுதியாக எழுதியவர் அவர்தான். காந்தியையும் அவர் மகன் ஹரிலாலையும் பற்றிய ஹரிலால் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்

கலைச்செல்வி கலைச்செல்வி கலைச்செல்வி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2023 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.