ஆலயக்கலை முகாம், கடிதங்கள்

[image error]

அன்புள்ள அண்ணா,

ஆலய கலை வகுப்பில் கலந்து கொண்டு திரும்பியிருக்கின்றேன்.   ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல,  திருப்புள்ள மங்கை கோயில் அறிமுகமே,  எத்துணை பெரிய கலை பொக்கிஷங்களுக்கு மத்தியில் நாம் இருக்கின்றோம் என்ற பிரமிப்பை கொடுத்தது.    கலைகள் ஒன்றோடொன்று பின்னி பிணைந்தது என்பதையும்    திருஞான சம்பந்தரின் பதிகத்தை சிற்பி அவரது படைப்பில் எவ்வாறு கொண்டு வந்திருக்கின்றார் என்று விளக்கிய போது இலக்கியம் என்பது அனைத்து கலைகளோடும் உறவாடக்கூடியது என்பதை புரிந்து கொண்டேன். இளமுருகு உடனுறை அம்மையப்பர் (சோமாஸ்கந்தருக்கு) சொன்ன  தத்துவ விளக்கமும் மிக அருமை.  

வெண்முரசு வாசித்த போது ஆபரணங்களை பற்றிய வர்ணனை வரும் போது பொதுவாக நான் பார்த்த சிற்பங்களில் உள்ள அலங்காரம் மனதில் தோன்றும்.   ஆனாலும் எது எந்த வகை ஆபரணம் என்ற தெளிவு கிடையாது.   இந்த வகுப்பில் அதுவும் தீர்ந்தது.  

கூடிய விரைவில் ஆசிரியரோடு ஏதேனு ஒரு கோயிலுக்கு சென்ற வரக்கூடிய வாய்ப்பு வரலாம் என்று அஜிதன் கொடுத்த அறிவுப்பு மகிழ்ச்சி கொடுத்தது. வாய்ப்புக்காக காத்திருக்கின்றேன்.

இத்தகைய வாய்ப்புக்கு நன்றி.

விஜயசேகர் 

அன்புள்ள ஆசிரியருக்கு,

           மிக நீண்ட காலமாக நான் எதிர்பார்த்து கொண்டிருந்த பயிற்சி முகாம் பற்றிய தகவலை உங்கள் தளத்தில் பார்த்தவுடன் மின்னஞ்சல் அனுப்பி வருகையை உறுதி செய்து கொண்டேன்.வெள்ளியன்று காலை அந்தியூரில் இருந்து வெள்ளிமலை செல்லும் பேருந்து பயணத்திலே நண்பர்கள் அறிமுகம் ஆகிவிட்டார்கள்  

       உள்ளே வந்தவுடன் மணி அண்ணா எங்களை வரவேற்று கிணற்று குடிலில் தங்க ஏற்பாடு செய்தார் குளித்துவிட்டு காலை உணவை முடித்து நேராக வகுப்புக்குச் சென்றோம். 

இந்த முகாமை நடத்தும் ஆசிரியர் திரு ஜெயக்குமார் அவர்கள் சிற்பவியல்  கோவில் கட்டிடக்கலை மட்டுமல்லாது இசை, நடனம், மொழி, புராணம் போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு முழு ஆளுமையாக இருந்தார், அவருடன் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது வீணான உரையாடல்களோ நேர விரையமோ இல்லை, மிகவும் பயனுள்ள மூன்று நாட்களை எங்களுக்கு உருவாக்கித் தந்தார்.

 இப்பயிற்சிக்கு முன் ஆலயம் என்பது அதன் கட்டிடமும் சிற்பமும் மட்டுமே என்று நினைத்திருந்தேன் ஆனால் ஆலயம் என்பது தத்துவமும் இசையும் பூசை முறைகளும் நடனமும் சேர்ந்தது என்ற புரிதல்  உருவாகியது. அவர் குறிப்பிட்ட புத்தகங்களும் சுட்டிய ஆளுமைகளையும் வாசிப்பதன் வழி நாங்கள் செல்ல வேண்டிய தூரம் எங்களுக்குத் தெரிந்தது. இப்படிப்பட்ட ஒரு முழுமையான ஆளுமையை நீங்களன்றி எங்களுக்கு வேறு எவரும் அறிமுகப்படுத்தப் போவதில்லை அதற்காக உங்களுக்கு நன்றி. 

மனமத்த பல நண்பர்கள் இங்கு எனக்கு கிடைத்தனர். இந்த முகாமின்  தொடர்ச்சியாக தாராசுரம் அல்லது மகாபலிபுரம் ஏதேனும் ஒரு இடத்தில் திரு.ஜெயக்குமார் அவர்களுடன் நேரடியாக சென்று சிற்பங்களை பார்க்கலாம் என்று அஜி கூறியிருந்தார், அந்த நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

சூழலின் ரம்யமும் அமைதியும் கற்றலுக்கு மிகவும் உகந்ததாய் இருந்தது பின் மூன்று வேளையும் மிக சுவையான உணவு எங்களுக்கு பரிமாறப்பட்டது அதனை ஒருங்கிணைத்த மணி அண்ணாவிற்கு நன்றிகள். இறுதியாக கற்றளின் இன்பத்தை  எழுத்து வழியாகவும் இதைப் போன்ற பயிற்சி வழியாகவும்  உருவாக்கித் தரும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

அன்புடன்

தினேஷ் ரவி

திருச்சி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2023 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.