Jeyamohan's Blog, page 624
February 21, 2023
மீள்கை, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நேற்று என்னுடைய அகச்சிக்கல்களை எல்லாம் கேள்விகளாக தொகுத்து எழுதியிருந்தேன். இன்று அதற்கான பதில்கள் அனைத்தும் தன்மீட்சி நூலிலேயே வாசித்து பெற்றுக்கொண்டேன்.
இவ்வருட தொடக்கத்தில் தன்மீட்சி நூலை வாசித்தேன். ஆனால் என்னுடைய பிரச்சினைகள் என்னவென்றே தெரியாமல் தான் வாசித்தேன். இவ்வருடம் என்னை அறிந்தப்பின்பு தான் அகச்சிக்கல்களை கேள்விகளாக தொகுக்க முடிந்தது.
இன்று உள்ளுணர்வின் தூண்டுதலால் மறுவாசிப்பு செய்தேன். வருட இறுதியில் எனக்கான பதில்களை முழுமையாக பெற்றேன். ‘நான்கு வேடம்’ மற்றும் ‘தன்வழிச்சேரல்’ எனக்கான தனிப்பட்ட அறிவுரையாக அமைந்தது.
என் குருவிற்கு நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களும். இவ்வருடத்தை உங்கள் தத்துவ வகுப்புடன் ஆரம்பிப்பது மற்றுமொரு மகிழ்ச்சியான தொடக்கம்.
ஞானசேகரன்
அன்புள்ள ஞானசேகரன்
அகச்சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகளை பலர் எழுதுவதுண்டு. அதில் சில சொல்லியாகவேண்டுமென்றால் மட்டுமே நான் பதிலெழுதுகிறேன். ஏனென்றால் பலசமயம் தொகுத்து எழுதியதுமே பல சிக்கல்களுக்கு தெளிவு அமைந்துவிடும். ஒருவருடன் பேசி, அதை சிலநாட்கள் உள்ளத்தில் ஓடவிட்டாலே தெளிவு வரக்கூடும். உடனடியாக அதை விவாதித்து அதை ஒரு விவாதமாக ஆக்கினால் அது சிலசமயம் மேலும் சிக்கலாகவும் ஆகும்.
தன்மீட்சி பல பதில்கள் கொண்ட சிறு நூல். அந்த நூல் இன்னொருவருக்கு மீட்சி அளிப்பதை முன்வைக்கவில்லை. அதை எழுதியபோது நான் என்னளவில் அடைந்த மீட்சியையே முன்வைத்தேன்.
ஜெ
ஆலயக்கலை வகுப்பு, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு. வணக்கம்.
இந்தியா மற்றும் நேபாளத்தில் ஓரளவுக்கு கணிசமான கோயில்கள் பார்த்துவிட்டருந்தாலும் , இன்னும் சரியாக பார்கவில்லையோ என்றே ஒவ்வோரு முறையும் தோன்றும் எனக்கு. இந்த மனநிலையோடுதான் வந்தேன் “ஆலயக் கலை அறிய” என்ற கூடுகைக்கு. உங்களை காண இயலாது என்பது வேறு கூடுதல் கவலையாக இருந்தது.
கோயில் என்பது ஒரு கட்டிடமோ அல்லது நிலையான ஜடப்பொருளோ அல்ல என ஆரம்பித்தார் ஆசிரியர் திரு. ஜெயக்குமார். காலம், அரசியல், வரலாறு, பூகோள அமைப்பு, கட்டிடக்கலை,நாடகம் மற்றும் நடனக் கலை, இலக்கியம், இசை, ஓவியம்,கலாச்சாரம், பண்பாடு , சமூகப், பொருளாதாரம், பல தரப்பட்ட தத்துவங்கள், அதனுள் கிளைத்த மரபுகள் வழிபாட்டு முறைகள், பூஜைகள், ஆன்மீக விளக்கங்கள், சிற்பக்கலை , தொன்மங்கள் மற்றும் இதிகாசங்கள் என் இத்தனையும் ஊடுபாவுகளாக கொண்டு நெய்யப்பட்ட ஒரு ” மஹாபுருச அமைப்பு ” என்று சொன்ன போது , என்னுள் அத்தனை செல்களும் விழித்துக் கொண்டது, நாம் இருப்பது ஜெயமோகனின் குருகுலத்தில் என்று.
கோபுரம் என்ற சொல்லின் பரிணாமத்திலிருந்து ஆரம்பித்து குடைவரை கோயில்கள், மோனோலித்கள், பிற்கால கற்றளிகள் வரை விளக்கினார்.
வஸ்துவையும் வாஸ்துவையும் ஒப்பிட்டு , காலத்தை தாளத்தால் உருவகப்படுத்தியதுதான் வாஸ்து என்றார்.
நடராஜர் புத்தர் இரண்டுமே தியானநிலைகள் தான் என்ற போது துணுக்கென்றது. இந்த கூற்று எங்கள் முன் போடப்பட்ட பந்து, அவர் சொல்லிக் கொடுத்த விதிகளின்படி விளையாடும் போது தான் புரியும் எனக்கு. Static and dynamic both are ending in one result as ” Meditation” .
உருவ வகைகள், உருவ வழிபாடு, ஆகமங்கள், தந்த்ரம், மந்த்ரம், எந்த்ரம் என விரிவாகி கொண்டே சென்றது. ஆசிரியரின் தமிழ் புலமை, இசை ஞானம், நடன மற்றும் நாட்டிய புலமை, தொல்லியல் மற்றும் கல்வெட்டுகள் செப்பேடுகள் பற்றிய விளக்கங்கள் என அவர் வகுத்த வியூகம் இதுவரை நான் கண்ட அத்தனை இந்திய கோயில்களையும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது. ஒரு ஆலயத்தை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்பதைவிட , ஏன் இப்படியெல்லாம் பார்க்க வேண்டும் எனத் தெளிவாக்கினார்.
முதல் நாளிலேயே இவ்வளவு நடந்தது. ஒட்டு மொத்தத்தில்” ஜெயமோகன்” என்ற ஒரு மைய விசை என்னைப் போன்ற எத்தனையோ பேருக்குள் சுழல ஆரம்பிதுள்ளது . உங்கள் கதைகள், உரைகள் என்பதை தாண்டி நீங்கள் அனுப்பும் அத்தனை அஸ்திரங்களும் தாங்கள் இட்ட பணியை செவ்வனே நிகழ்த்துகின்றன என்பதற்கு வந்திருந்த நண்பர்கள் ஆசிரியர் இரண்டாம் நாள் பிற்பாதியில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த விதமே சாட்சி.
நித்யவனத்தில் ஒரு *அறச்சக்கரம் * சுழலுவதாகவே உணர்கிறேன்.
எல்லையில்லா நன்றியுடன்
சு. செல்வக்குமார்
மதுரை.
இனி நான் உறங்கட்டும், வெங்கி
அன்பின் ஜெ,
நலம்தானே?
நேற்று ஞாயிறு “இனி ஞான் உறங்கட்டே” வாசித்து முடித்தேன். சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும் மீண்டும் மனம் நிறைத்திருந்தார்கள்.
“மகாபாரதம்”, “ராமாயணம்”, “பாகவதம்” எனும் வார்த்தைகள் பார்வையிலும், காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும் முகங்கள் சில உண்டு. கிராமத்தில் பொட்டுத் தாத்தா, அம்மா வழித் தாத்தா சின்ன ராமசாமி (நாங்கள் “வண்டித் தாத்தா” என்று கூப்பிடுவோம்), பெரியப்பா வெங்கடாஜலபதி, பெருமாள் கோவில் அர்ச்சகர் ராஜர் (நம்பியின் அப்பா), சீனிவாசன் மாமா (தமிழாசிரியர்; மாமாவின் பெண் விஜயராணி என் வகுப்பு), திருமங்கலத்தில் உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் நண்பன் நாராயண மூர்த்தி மூலம் அறிமுகமாகி அன்பின் நெருக்கமான சாமிப் பாட்டி. அனைவரும் அப்புராணக் கதைகளை என் மனதிற்கு அறிமுகப்படுத்தி ஆழ் மனத்தில் பதியச் செய்தவர்கள். பால்யத்தில் எத்தனை நூறு கதைகள் கேட்டிருப்பேன் அவர்களிடம்!
கிராமத்தில் வண்ணமயில் கடைக்கு முன்னாலிருக்கும் காளியம்மன் கோயிலில் முன்னிரவுகளில் சுற்றிலும் கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருக்க தமிழ் பண்டிட் சீனிவாசன் மாமா சத்தமாய் ராகமாய் சுந்தரகாண்டம் படிக்கும் காட்சி இன்னும் பசுமையாய் நினைவுகளில் இருக்கிறது. நம்பியின் வீடு வசந்தா அத்தையின் வீட்டிற்கு முன்னால். நம்பியின் அப்பா ராஜர் தினமும் பாரதம் தொடர்ந்து சொல்ல (பாரதக் கதை சொல்லத் தொடங்கிய நாளிலும், முடிக்கும் நாளிலும் பூஜை செய்து பிரசாதங்கள் தருவார்), நாங்கள் சிறுவர்களும், அத்தையும், பாட்டியும் (வசந்தா அத்தையின் அம்மா), இன்னும் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்போம். தேவி பாகவதத்தை எனக்கு நெருக்கமாக்கியது பொட்டுத் தாத்தாவும், திருமங்கலம் சாமிப்பாட்டியும். பாரதமும், பாகவதமும் என்றும் வற்றாத கதைகளின் ஊற்று. இன்றும் வியப்பளிக்கும் பிரம்மாண்டம்.
பி.கே – வின் “இனி ஞான் உறங்கட்டே” – கனவுகளில்/முன் வெளிகளில் உலாவச் செய்யும், மயக்கும், சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தந்தது. அபாரமான நாவல். ஆ. மாதவனின் அற்புதமான மொழிபெயர்ப்பு. மொழியின் இனிப்பிலும், அந்த எழுத்தின் வசீகரத்திலும் இன்னும் கட்டுண்டுதான் கிடக்கிறேன்!. ஆரம்பத்தில் விலகி நின்று புன்னைகத்த மொழியிடம் மனம் குவித்து வேண்டிக் கொண்டேன் “என்னை உடன் அழைத்துப் போ” என்று. அதன்பின் அது கைபிடித்துக் கொண்டது. பிரமாதமான, சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, மனம் நெகிழ்த்தும் பயணம்.
செவ்வியல் கிளாஸிக் நாவல்களுக்கு வாசிப்பனுபவம் எழுதுவது இடர் தருவது. என்ன எழுதினாலும், எத்தனை எழுதினாலும் மனம் திருப்தி அடையாது. மனம் அந்நாவலின் ஆழத்தில், ஆன்மாவில் திளைத்துக் கிடக்கும்; அது குறித்து எழுதுவதெல்லாம் மேலோட்டமாகவே அமைந்து/உணர்ந்து விசனப்பட வைக்கும். எழுதாமல் தப்பிக்கலாம் என்றாலும் விடாது. அந்த எழுத்திலிருந்து கிடைத்தவற்றை தொகுத்துக் கொள்ள, சுவையின் ஒரு துளியையாவது பற்றிக்கொள்ள மனம் பதிந்துவைக்க விழையும்.
“இனி ஞான் உறங்கட்டே” நாவலில் மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்கள் பெரும்பாலானோர் வந்தாலும் முக்கியமாய் இது கர்ணனின் கதை. திரௌபதியின் கதையும் கூட. மனக் கொந்தளிப்புகளின் நாவல் என்று இந்நாவலைச் சொல்லலாமா?. மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வுகளின் போது மனதில் உருவாகும் தவிர்க்க முடியாத கேள்விகளை நாவலுக்குள் எழுப்பி அதற்கான விடைகளை அதன் பாத்திரங்கள் வாயிலாகவே எழுத்தினூடே கண்டடையும் ஒரு கவித்துவ நவீன மனத்தின் படைப்பு “இனி ஞான் உறங்கட்டே”.
யுதிஷ்டிரன், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரையும் போர்க்களத்தில் கொல்லும் வாய்ப்புகள் கிடைத்தும், தாய்க்கு தான் தந்த வாக்குறுதியால் அவர்களைக் கொல்லாமல் விடுகிறான் கர்ணன். கர்ணனிடம் நால்வரும் தோற்று போரில் உயிர் பிச்சை பெற்று பின்வாங்கும் காட்சிகள் நாவலில் அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
நாவலில் வரும் ஹஸ்தினாபுரத்தின் ஆயுத வித்தை அரங்குக் காட்சிகள், நாரதர்-யுதிஷ்டிரன் சந்திப்பு, குந்தி-கர்ணன் சந்திப்பு, கர்ணன்-கிருஷ்ணன் சந்திப்பு, இந்திரன்-கர்ணன் சந்திப்பு, சபையில் கிருஷ்ணையின் துகிலுறியப்படும் காட்சிகள், போர்க் களத்தில் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரை கர்ணன் சந்திக்கும் காட்சி, பீமனின் துச்சாதன வதம், அர்ஜுனனின் கர்ண வதம்…அனைத்தும் மிக அபாரமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன!
போர்க்களக் காட்சிகள் ஒரு விஷூவல் ட்ரீட்.
நாவலில் எனக்குப் பிடித்த காட்சிகளைச் சொல்லவேண்டுமென்றால் பல பதிவுகள் எழுதவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு ஒன்று மட்டும்…
போர்க்களத்தில், போரின் நடுவில், அர்ஜுனனைப் பார்த்துவர யுதிஷ்டிரன் சொல்ல, பீமன் கௌரவர் சேனை நடுவே ரதத்தில் பாய்ந்து விரைகிறான். எதிரில் கர்ணன்…
உக்கிரமான போர் இருவரிடையிலும். வெற்றிக் களிப்பில் மனதை கட்டுப்பாட்டில் நிறுத்திய ராதேயன் கர்ணன் சின்னச்சின்ன சரங்களைத் தொடுத்துவிட்டு பீமனை வேடிக்கையாக கிச்சுக்கிச்சு மூட்டினான். தாயிடம் செய்துகொண்ட ஒப்பந்தம் நினைவில் வரப்பெற்றவனானான். வீமன் அருகே போய் வில்முனையால் தொப்பையில் கிசுகிசுப்பு மூட்டி வாய்விட்டு சிரித்தான். சகிக்கவொண்ணாத அவமானத்தால் சிலிர்த்த வீமன், அந்த வில்லினை பறித்தெடுத்து கர்ணனது உச்சிமேல் அடித்தான். விலகிக்கொண்ட கர்ணன் கேலியாக பின்னும் நகை செய்தான். “தொப்பை வயிற்றுக்காரனாகிய அடேய் கௌந்தேயா, விருந்து மண்டபம்தான் உனக்குத் தகுதியான இடம். நீ எதற்காக போர்க்களம் வரவேண்டும்…?. வில் வீரத்தில் அஞ்ஞானி நீ. மரத்தைப் பிடுங்கி அடித்துக் கொன்றிட இது, கிர்மீரனும், பகனுமல்ல…இது கர்ணன் என்பதை நன்றாக நினைவில் வை. கானகத்தில் அலைந்து திரிந்து காய்கனிகளைத் தின்று வயிற்றை நிரப்புவதல்ல போர் என்பதை அறியவில்லை நீ. உனக்குப் போரிட ஆசையாயின் உனக்குத் தகுந்தவரிடம் போய் போரிடு. அல்லது கிருஷ்ணார்ஜுனர்களின் நிழலில் போய் மறைந்துகொள். அவர்கள் உன்னைக் காப்பாற்றுவார்கள். அல்லது வேகமாக வீட்டை நோக்கி ஓடிவிடு. அதுதான் உனக்கு நல்லது…”
மாஸ்டர் பி.கே-விற்கும், தமிழில் தந்த ஆ. மாதவனுக்கும் நன்றியையும், வணக்கங்களையும், என்றென்றும் அன்பையும் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
வெங்கி
“இனி நான் உறங்கட்டும்” நாவல் – பி.கே.பாலகிருஷ்ணன்
மலையாள மூலம்: Ini Njan Urangatte…
தமிழில்: ஆ.மாதவன்
சாகித்ய அகாடமி வெளியீடு
February 20, 2023
எழுகதிர் நிலம் -2
பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலையே காசிரங்கா வனத்தங்குமிடத்தில் இருந்து கிளம்பி அருணாசலப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம். ஒரு கார், ஒரு குழு என்பது ஒருவகையான ஒருமையை அடைகிறது. மாறிமாறி கேலிசெய்துகொள்வதும் சிரிப்பதும் சற்று நேரம். கொஞ்சம் தீவிரமான உரையாடல் சற்றுநேரம். பயணம் என்பதே ஒரு சிறு அறைக்குள் நண்பர்கள் சேர்ந்து அமர்ந்திருப்பதாக ஆகிவிடுகிறது.
காசிரங்காவில் இருந்து தெஸ்பூரை கடந்து காமெங் ஆற்றின் கரை வழியாக சென்றோம். காமெங் ஆறு முன்பு பராலி என அழைக்கப்பட்டிருக்கிறது. மலையிறங்கி சமநிலத்தை அடைந்ததும் வண்டல்படிவை உருவாக்கி, அந்த வண்டலால் விரைவழிந்து, பல கிளைகளாக பிரிந்து பிரம்மபுத்ராவில் சேர்கிறது. அருணாசலப்பிரதேசத்தில் தவாங் சமவெளியில் கோரி சென் என்னும் மலைமுடியின் அடியிலுள்ள பனியேரி ஒன்றிலிருந்து தோன்றி தெஸ்பூரில் பிரம்மபுத்ராவில் இணையும் இந்த ஆறு நீர்ப்பரப்பு, அகலம் ஆகியவற்றின் அடிப்படையில் காவேரியைவிடவும் பெரியது. நாங்கள் செல்லவேண்டிய இடத்தில் இருந்து வந்த பெருக்கு.
ஆற்றங்கரை ஓரமாக சாலையில் சென்றுகொண்டிருந்தோம். மறைந்தும் தெளிந்தும் ஆறு உடன் வந்தது. அருணாசலப்பிரதேசம் பெரும்பகுதி காடுதான். அடிவாரத்தில் சோலைக்காடுகள், மேலே செல்லச்செல்ல ஊசியிலைக் காடுகள். சாலையை ஒட்டித்தான் ஊர்கள். ஊர்கள் என்றுகூட சொல்லமுடியாது, சாலைச்சந்திப்புகளை ஒட்டி கொஞ்சம் குடியிருப்புகள். பெரும்பாலானவை சுற்றுலாவீடுகள். கொஞ்சம் கடைகள். சாலைப்பணியாளர்களின் குடியிருப்புகள்.
இந்திய எல்லைப்புறச் சாலை நிறுவனம் (Border Road Organaization) இந்தியாவின் மிகமிகத் திறன்வாய்ந்த அமைப்புகளிலொன்று. இமையச்சாலைகளை அமைத்து நூறாண்டுக்கால அனுபவம் கொண்டது. உலகிலேயே அதுதான் அவ்வகையில் முதன்மையான அமைப்பு எனப்படுகிறது. இன்று பல்வேறு உலகநாடுகளில் மலைச்சாலைகளை அவ்வமைப்பு கட்டித்தந்துகொண்டிருக்கிறது.
ஆனால் அதிலுள்ள அறிவிப்புகளின் ’கவித்துவம்’ பல தளங்கள் கொண்டது. ‘This is a highway, not a runway’ போன்ற அறிவிப்புகள் பரவாயில்லை ரகம். I am curvaceous, go slow மேலும் சுவாரசியமானது. Steady your nerves on these curves உச்சகட்டம். ஆனால் After whisky, driving risky போன்ற அறிவிப்புகள் எந்த ஓட்டுநரையும் உடனே குடி நோக்கி ஈர்க்கும் ஆற்றல்கொண்டவை.
ஆற்றங்கரையில் நிறுத்தி நீரோட்டத்தை பார்த்தோம். பெருக்கு பலவகையில் சுழிகளும் அலைகளுமாகச் சென்றுகொண்டிருந்தது. அஸாம் – அருணாச்சல் சமவெளி என்பதே இந்த ஆறுகள் கொண்டு பரப்பிய இமையமலைப் புழுதியாலானது. ஈரமானால் சேறு, ஆனால் உலர்ந்ததுமே பொடியாக உதிர்ந்துவிடும். மொத்த அஸாம் படுகையே ஒரு மாபெரும் புழுதிக்களம். ஆகவே மழைக்காலம் தவிர எப்போதுமே புழுதியால் மூடியே அஸாம் தென்படும்.
கற்களில் பெரும்பகுதி உருளைக்கிழங்கு வடிவில் அமைந்தவை. ஆகவே களிமண் மிக அரிது. பழையபாணி இல்லங்கள் எல்லாமே மூங்கிலால் ஆன தட்டிகள் மற்றும் உருளைக்கற்களாலானவை. அண்மைக் கட்டிடங்கள் சிமிண்ட் சதுரக்கற்களால் கட்டப்படுகின்றன.
வழியில் ஒரு சிற்றருவி. பல அடுக்குகளாக விழுந்து சாலைக்கு அடியில் சென்று மறைந்தது. நல்ல குளிர் தொடங்கிவிட்டிருந்தது. மேலே உறைந்திருந்த பனிப்பாளங்கள் உருகி வரும் அருவிகள் இவை. இன்னும் இவை பெருகும். கோடைகாலம் முழுக்க இந்த அருவிகளின் வழியாக நதிகள் நீர் பெறும். பனியோ என ஐயமுறச்செய்யும் கடுங்குளிர் பொழிவுகள் இவை.
வழியில் சாலையோர கடைகள் பல. சூடாக தேநீர் குடிக்கலாம். தேநீர் தவிர எவையும் நம் சுவைக்கு உகந்தவையாக இருக்காது. ஒரு கடையில் நூற்றுக்கணக்கான புட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. பலவகையான காட்டுக்காய்களாலான ஊறுகாய்கள் அவை. இங்கே பல தரப்பட்ட நார்த்தங்காய்களின் காட்டுவகைமாதிரிகள் உள்ளன. காடுகளில் பொறுக்கி ஊறுகாய்போட்டு விற்கிறார்கள். காட்டுச்சுனைகளில் பிடிக்கப்பட்ட மீன்களின் கருவாடுகள். கருவாட்டு ஊறுகாய்கள்.
வெண்ணிறமாக புட்டிகளில் அடைக்கப்பட்டிருப்பவை மூங்கில்குருத்துகள். இங்குள்ளவர்கள் பலவகையிலும் விரும்பி உண்பவை அவை. கிழங்குச்சுவை கொண்டவை. பச்சையாகவும் உண்கிறார்கள். மூங்கில் வடகிழக்கே முக்கியமான உணவு.
வடகிழக்கில் காட்டுயிர்களே இல்லை. இங்குள்ள பெரும்பாலான பழங்குடிகள் வேட்டையர்கள். துப்பாக்கி வந்ததுமே அத்தனை விலங்குகளையும் வேட்டையாடி அழித்துவிட்டனர். பர்மா -அஸாம் வகை யானைகள்கூட முன்பு அருணாச்சலில் இருந்துள்ளன. இன்று ஒன்றுகூட இல்லை. பூட்டானில் சில பகுதிகளில் யானைகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது.
மாலையில் தவாங்- பொம்டிலா சாலையில் முன்னா காம்ப் என்னும் இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலுள்ள தெம்பாங் என்னும் கோட்டைக்கிராமத்தைச் சென்றடைந்தோம். வடகிழக்கு பகுதியில் மிகுந்த வரலாற்று பெறுமதி கொண்ட இடம் இது. பொமு முதல் நூற்றாண்டுக்கு முன்னரே இந்த இடம் நிறுவப்பட்டுள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர். தாமரையின் நகரம் (யுச்சோ-பெமா-சென்) என அழைக்கப்பட்டுள்ளது.
தெம்பாங் இன்றிருக்கும் இடத்தில் இருந்து பத்து கிமீ தொலைவில் சத்-த்ஸி ஆற்றின் படுகையில் இந்த ஊர் அமைந்திருந்தது. அங்கே ஒரு வெள்ளத்திற்கு பின் உருவான தொற்றுநோயில் பெரும்பாலும் அனைவருமே மடிந்தனர். எஞ்சியவர்களால் இன்றிருக்கும் இடத்திற்கு இந்த கிராமம் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலத்தில் இப்பகுதியின் அதிகார மையமாக இருந்தது. இந்த ஊரை மையமாக்கி தொடர்ச்சியான போர்களின் வரலாறு உள்ளது.
அருணாசலப்பிரதேசத்தின் மோன்பா (Monpa) பழங்குடியினரின் கோட்டையூர் இது.மோன்பா மக்கள் என்றால் சமவெளி மனிதர்கள் என பொருள். அருணாச்சலப்பிரதேசத்தின் ஒரே மேய்ச்சலின பழங்குடிகள் இவர்கள். யாக் மற்றும் செம்மரியாடுகளை மேய்ப்பதே இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. பூட்டானை மையமாகக் கொண்டு இவர்களின் பழங்கால நாகரீகம் பொமு 500 முதல் இருந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
பொயு 11 ஆம் நூற்றாண்டில் இவர்கள் திபெத்திய பௌத்தத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். ந்யிங்மா மற்றும் காக்யூ பௌத்த மரபுகள் இவர்களிடம் இன்றுள்ளன. இக்காலகட்டத்தில் இவர்களின் மொழிக்கு திபெத்திய எழுத்துரு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொயு 13 முதல் பௌத்த கெலுக் மரபுக்குள் சென்றனர் (இன்றைய தலாய் லாமா இம்மரபினர். இன்று முதன்மைச் செல்வாக்குடனிருக்கும் திபெத்திய மரபு இதுவே) இவர்களின் குடியைச் சேர்ந்த சங்யாங் கைஸ்டோ (Tsangyang Gyatso) ஆறாவது தலாய்லாமாவாக தெரிவுசெய்யப்பட்டார்.
இன்றைய மோன்பா மக்களின் தலைவர் தலாய் லாமாதான். இப்பகுதியின் எல்லா மடாலயங்களிலும் அவருக்கான சிம்மாசனம் உள்ளது. திபெத்தை சீனா ஆக்ரமித்தபோது தலாய் லாமா அருணாசலப்பிரதேசம் வழியாகவே தப்பி இந்தியாவுக்குள் வந்தார். அவர் வந்து தங்கியது தவாங் மடாலயத்தில்தான். தலாய் லாமாவுக்கு உலகளாவிய ஏற்பு உருவானபோது மோன்பா மக்களின் பண்பாடும் உலகமறியப்படலாயிற்று. இன்று அவர்கள் கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேறி வரும் மக்கள்.
ஆறாம் தலாய் லாமாசுவாரசியமான ஒன்றுண்டு. இந்திய இடதுசாரிகள், இந்தியா முழுக்க தனித்தேசியப் பிரிவினைவாதம் பேசுபவர்கள் வடகிழக்கிலுள்ள இனக்குழுக்களின் பிரிவினைவாதப் போராட்டத்தை சுதந்திரப்போர் என்றும், இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் அடையாளப்படுத்தி ஆதரிப்பார்கள். ஆனால் திபெத்தின் மீதான சீன ஆக்ரமிப்பை பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், அல்லது ஆதரிப்பார்கள்.
வடகிழக்கின் பிரிவினைப்போர்கள் உண்மையில் நாடு என்னும் புரிதலற்ற பழங்குடிகள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் பூசலே. ஒவ்வொரு பழங்குடியும் மற்ற அத்தனை பழங்குடிகளும் வாழும் நிலத்தை ஒட்டுமொத்தமாக தனது நிலம் என்று கேட்டு போரிட்டுக்கொண்டிருந்தது. உதாரணமாக நாகா பழங்குடிகள் கோரும் நாகாலாந்துக்குள்தான் அங்கமிகள் ,குக்கிகள் ஆகியோர் கோரும் தனி நாடுகளும் அடக்கம்.
ஆனால் திபெத் தனித்தன்மை மிக்க பண்பாடும், மதமும், இனக்குழு அடையாளமும் கொண்ட நாடு. நீண்டகாலம் தனிநாடாக விளங்கியது. அதன்மீதான சீன ஆக்ரமிப்பு என்பது ஹான் சீன பேரினவாதத்தின் இன ஆக்ரமிப்பு. பௌத்தமதத்தை அழிக்கும் பண்பாட்டு ஆக்ரமிப்பு. திபெத்திய கனிமவளத்தைச் சுரண்டும் பொருளியல் ஆக்ரமிப்பு. அதற்கு எதிராக எந்த முற்போக்கும் இங்கே முனகலைக்கூட எழுப்பியதில்லை.
சர்வதேச அரசியல் என்பது இங்குள்ள கருத்தியல் கூலிப்படைகளைக்கொண்டு புரிந்துகொள்ளத்தக்கதல்ல என்னும் தெளிவை அடையாமல் நாம் இவற்றைப்பற்றிப் பேசவே முடியாது. ஆனால் அதற்கு தனியனுபவங்கள் வழியாக அடையப்பெறும் ஒரு முதிர்ச்சி தேவையாகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தன்முனைப்பின்மையும் தேவை. பொதுவெளியில் தனக்கென ஒரு முற்போக்குச் சித்திரம் சமைத்துக்கொள்வதை பற்றி மட்டுமே எண்ணுபவர்களால் அதை எய்த இயலாது.
மோன்பா பக்களின் பண்பாடு திபெத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டு தேங்கி நின்றுவிட்ட ஒன்று. பிரிட்டிஷார் 1914ல் சிம்லா ஒப்பந்தப்படி அன்றைய திபெத் ஆட்சியாளரான தலாய் லாமாவின் ஏற்புடன் மக்மோகன் எல்லைக்கோடு என்னும் எல்லைப்புரிதலை அடைந்தனர். அதன்படி மோன்பா மக்கள் பூட்டான், திபெத், அருணாசலப்பிரதேசம் ஆகிய மூன்று நாடுகளிலாகப் பிரிந்தனர். ஒருவரோடொருவர் தொடர்பற்ற இனக்குழுக்களாக இன்று நீடிக்கின்றனர்.
கடல்மட்டத்திலிருந்து 2300 அடி உயரத்திலுள்ள இந்த ஊர் உருளைக்கற்களாலான கோட்டையால் சூழப்பட்டிருந்தது. ஏறத்தாழ மூன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இரு வாயில்கள். அவை கற்களை அடுக்கி கட்டப்பட்ட கனமான சுவர்களால் ஆனவை. கற்கள் நடுவே சேறு அல்லது சுண்ணம் இல்லை. கற்களின் எடைதான் பிடிப்பு. கற்களுக்கு நடுவே மரத்தூண்களும் மரச்சட்டகங்களும் இன்றைய கட்டுமானங்களின் ‘பில்லர்’கள்போல உபயோகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளே கட்டிடங்களும் கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட தடித்த சுவர்களாலானவை. பல கட்டிடங்களுக்கு நாநூறாண்டுக்குமேல் பழக்கமுண்டு. மோன்பாக்களில் ஒரு பிரிவினரான திர்கிபா மக்கள் (Dirkhipa) இங்கே வாழ்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நூறாண்டுகளில் வெளியேறி வேறு ஊர்களில் வாழ்கிறார்கள். 42 வீடுகளிலாக 250 பேர்தான் இப்போது இங்கே குடியிருக்கிறார்கள். தெம்பாங் கோட்டையூர் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்படவுள்ளது (தெம்பாங். யுனெஸ்கோ அறிக்கை)
தெம்பாங் அருகே கற்கால நாகரீகத்தின் கருவிகள் கிடைத்துள்ளன. தெம்பாங் ஒரு காலத்தில் வல்லமைவாய்ந்த ஒரு மலையரசின் தலைநகராக இருந்துள்ளது. மோன்பா மக்களின் தொன்மங்களில் வாழும் மன்னரான சா சா ந்யெ(Cha-Cha-Nye) அப்பகுதியெங்கும் அதிகாரம் செலுத்தியிருக்கிறார். போடோக்கள் உள்ளிட்ட பிற இனக்குழுவினரிடம் அவர்களின் வேட்டை, வணிகப்பயணம் ஆகியவற்றுக்கு வரி வசூலித்திருக்கிறார்.
தெம்பாங்கை கைப்பற்ற பல போர்கள் நடைபெற்றுள்ளன. அவர்கள் தங்கள் அரசவம்சம் வாரிசற்று போனபோது திபெத்திய மன்னரின் மகனை திருடி வந்து அரசராக்கியதாகக்கூட கதைகள் உள்ளன. ஆனால் தெம்பாங்கின் தொடர்புகள் முழுக்க திபெத்துடன் மட்டுமே. போர்கள் பூட்டான் மற்றும் சிக்கிமுடன். இந்தியப்பெருநிலத்துடன் தொடர்பே இல்லை, வெள்ளையர் அந்நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வரை பௌத்தம் ஒன்றே தொடர்பு.
(ஆனால் அருணாச்சலப்பிரதேசம் அப்படி அல்ல பரசுராம்குண்ட் போன்ற இந்துப் பண்பாட்டு தொடர்ச்சி அருணாச்சலப்பிரதேசம் முழுக்கவே உண்டு. ஆண்டுதோறும் தீர்த்தாடகர்கள் வந்துகொண்டுமிருக்கிறார்கள்.)
நாங்கள் அங்கே செல்லவேண்டும் என்று சொன்னபோது ஓட்டுநர் ‘அங்கே என்ன இருக்கிறது? வெறும் சுவர்கள்” என்றார். அவரே முடிவெடுத்து தாண்டிச்சென்றுவிட்டார். நாங்கள் திரும்பச் சொல்லி, வற்புறுத்தி மேலேறிச் சென்றோம். நல்ல வேளை. நாங்கள் சென்றபோது ஏழாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் விழா நிகழ்ந்துகொண்டிருந்தது. திர்கிபா பழங்குடியினர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.
நாங்கள் தெம்பாங் ஊரில் இரவு தங்க விரும்பினோம். தங்கும் இடங்களுமுண்டு. ஆனால் விழா என்பதனால் எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள். நாங்கள் மேலேறிச் சென்றபோது சாலையெங்கும் கார்களைக் கண்டோம். பழங்குடிவிழாவில் கார்களா என வியந்தோம். ஆனால் பழங்குடிகள் இன்று சுற்றுலா வருவாயால் பெரும்பாலும் அனைவருமே சொந்த கார் வைத்திருப்பவர்கள்
விழா நடைபெற்றது ஊருக்கு அப்பால் உள்ள பள்ளி மைதானத்தில். அங்கே பனிப்புகைக்குள் கார்கள் நின்றிருந்தன. வண்ணமயமான பாரம்பரிய உடை அணிந்த மக்கள் கூடி ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். பெண்கள் வரிசையாக அமர்ந்து எதையோ கடைவிரித்திருந்தனர். எதையும் விற்கவில்லை, எல்லாமே மது. எல்லாமே இலவச மது. அளவின்றி. உள்ளூர் மதுவும் அயல்நாட்டு மதுவும் உண்டு. அயல்நாட்டு மது ரம், பிராந்தி. உயர்தர மதுவகைகள். அவற்றைச் சூடாக அருந்தினர்
எங்களை வரவேற்று மது அளித்தனர். மறுப்பது பண்பாடல்ல என்பதனால் நான் ஒரு மிடறு விழுங்கினேன். சாராய ஆவி மண்டையை அறைந்தது. அரங்கசாமி கொண்டாடினார். அவர்களுடன் ஒரு நடனம். உடலின் மீதான கவனத்தைவிட்டு நடனமாட எங்கள் எவராலும் இயலவில்லை, மதுவால் அரங்கசாமிக்கு மட்டும் இயன்றது.
ஊர்த்தலைவர் வந்து எங்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெண்ணிறப் பட்டு துண்டு அணிவித்து வரவேற்றார். அவரும் எங்களை மது அருந்தியாகவேண்டுமென வற்புறுத்தினார். அரங்கசாமி அவரை கௌரவித்து மீண்டும் மது அருந்தினார். அங்கிருந்த எல்லாருமே போதையில் இருந்தனர். ஆனால் எவருமே நம்மூர் போல சலம்பவில்லை. பூசல்களும் அத்துமீறல்களும் இல்லை. மது என்பது ஆடிப்பாடுவதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.
அரங்கசாமி அவர்களின் பள்ளிக்கு ரூ 15000 நன்கொடையாக வழங்கினார். தலைவர் எங்களுக்கு முகமன் உரைத்து துணைத்தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவருமே பாரம்பரியமான உடைகளில் இருந்தனர். தலையில் ஒரு வளையம்போன்ற அமைப்பை அணிந்திருந்தனர். அதுதான் சரித்திரம் வழியாக மணிமுடியாக பரிணாமம் அடைந்தது போலும்.
பெரும்பாலும் அனைவருமே ஆங்கிலம் பேசினார்கள். இளைஞர் பலர் கௌஹாத்தியில் படித்தவர்கள். ஒருவர் வேலூர் வரை வந்திருந்தார். இளைஞர்களும் பாரம்பரிய உடையிலிருந்தனர். அவர்களிடம் தென்னாடு பற்றி பேசும்போதே ஓர் உற்சாகம் வெளிப்பட்டது. வடகிழக்கினர் மிக அணுக்கமாக தென்மாநிலங்களை உணர்கிறார்கள்.
மைத்ரிகளை நிறையவே பார்த்தேன். ஆனால் தத்துவ மனநிலையில் இல்லை, மென்போதையில் கைகோத்து மெல்ல சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். நல்ல குளிர். இரண்டு டிகிரி. பல அடுக்கு உடைகள் அணிந்திருந்தாலும் கைகால்கள் இறுகி உடல் நடுநடுங்கியது. மது இல்லாமல் அக்குளிரைச் சமாளிப்பது கடினம்.
அருணாசலப்பிரதேசம் பௌத்தமாநிலம். பௌத்தம் இருக்குமிடங்களில் இந்தியத் தேசிய உணர்வு மிகுதி. தலாய் லாமாவிற்கு இந்தியா அளித்த ஆதரவே முதன்மைக் காரணம். அந்த மைதானத்திலேயே பலவண்ணக் கொடிகள் நடுவே இந்திய தேசியக் கொடி. அது ஒரு பழங்குடி விழா. ஆனால் அதை பௌத்தவிழாவாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த அனைவருக்குமே கர்நாடகத்திலுள்ள திபெத்திய பௌத்த மையமான பைலேகுப்பை ஊரை தெரிந்திருந்தது.
அங்கிருந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்பினோம். ஆனால் இரவு பத்துமணிபோல இருளும் குளிரும். சாலையில் அலைமோதி பலமுறை தொலைபேசி நாங்கள் தங்கவேண்டிய அன்னா ஹோம்ஸ்டேயை கண்டடைந்தோம்.
இங்கே, வடகிழக்கு முழுக்கவே எல்லா நிலமும், வீடும் பெண்களுக்கு உரியவை. ஆகவே எல்லா தங்குமிடங்களும் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. பலவேலைக்காரர்களில் ஒருவராக அவள் கணவரும் இருக்கக்கூடும். தங்குமிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. மேலைநாட்டவருக்குரிய தரத்தில்.
பொதுவாக வடகிழக்கினர் தூய்மைப்பழக்கமும், விருந்தோம்பும் மனநிலையும் உடையவர்கள். ஆகவெதான் இந்தியாவின் நட்சத்திரவிடுதிகள் பணியாளர்களாக வடகிழக்கினரையே தெரிவுசெய்கின்றனர். அவ்விரு பழக்கத்தையும் நம்நிலத்து இளைஞர்களுக்கு கற்பிப்பது மிகக்கடினம் என என்னிடம் ஒரு நட்சத்திர விடுதி நிர்வாகி சொல்லியிருக்கிறார். அவர்கள் அங்கிருக்கும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வழியாக இந்தியா முழுக்க வந்து பணியாற்றுகிறார்கள். இந்தியா என்னும் சித்திரம் அவர்களிடம் உருவாக அந்த இளைஞர்களும் முக்கியமான காரணம். நம்மவர் மிகுதியாக சுற்றுலா சென்று வடகிழக்கை அசுத்தப்படுத்தாமலிருக்கவேண்டும்.
இரவில் முதல்முறையாக நடுக்கும் குளிரை அனுபவித்தோம். வடகிழக்கில் பனிக்காலம் முடியும் பருவம் அது. சுற்றுலாவுக்குரியது அல்ல. நாங்கள் அந்த சூழலுக்காகவே வந்தோம். அறையை சூடாக்கும் கருவிகள் இல்லை. ஆனால் இரண்டு அடுக்கு மெத்தைகள் போர்த்திக்கொள்ள தந்தனர். அவை கதகதப்பூட்டின. ஏழரை மணிக்கு படுத்து மறுநாள் காலை ஏழரை மணிக்கு விழித்தோம். அப்போதுதான் விடியத் தொடங்கியிருந்தது.
இளவெயிலின் இனிமையை இந்தவகை குளிர்நிலத்திலேயே அனுபவிக்கமுடியும். வெயில் தித்திக்கும் என்று சொன்னால் அங்கே சென்றுவந்தவர்கள் நம்புவார்கள்
(மேலும்)
புதுவை வெண்முரசு கூடுகை
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 57 வது கூடுகை 24 -02-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி சித்ரா பரத்குமார் உரையாடுவார் .
நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, #
27,வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
https://venmurasu.in/indraneelam/
பேசு பகுதிகள்: வெண்முரசு நூல் ஏழு – இந்திரநீலம்
பகுதி. 3. வான்தோய் வாயில் (1 முதல் 5 வரை)
பகுதி. 4. எழுமுகம் (1 முதல் 3 வரை)
சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலையின் இயற்பெயர் நாகப்பன். ஒரு கூட்டத்தில் ராஜாஜி பேசும்போது இவர் பெயரை மறந்துவிட்டு செட்டிநாட்டரசர் அண்ணாமலை பெயருக்குப் பின் பேசியவர் என்னும் பொருளில் சின்ன அண்ணாமலை என்று சொன்னார். அதையே தன் பெயராகச் சூட்டிக்கொண்டார். தன் வரலாற்றை சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்ற தலைப்பில் எழுதினார். தேசியப்போராட்ட வீர வரலாறு கொண்டவர், சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவராக இருந்தார்.
சின்ன அண்ணாமலை
சின்ன அண்ணாமலை – தமிழ் விக்கி
கூத்தன் எழுந்தாடும் திருச்சிற்றம்பலம். – கடலூர் சீனு
கடந்த பிப்ரவரி முதல் வாரம் துவங்கி, சென்னை காஞ்சிபுரம், காரைக்குடி புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆரணி என கோயில் பண்பாட்டுப் பயணம் சுற்றத் துவங்கி நேற்று மகா சிவராத்திரி அன்று சிதம்பரதில் நிறைவு செய்தேன்.
திருமெய்யம் பெருமாளின் பிரபஞ்ச அறிதுயில் தோற்றம் துவங்கி சிதம்பரம் ஆடல்வல்லானின் பிரபஞ்ச நடனத் தோற்றம் வரை ஒரு சுற்று. இடையே நூறு நூறு காட்சிகள். குறிப்பாக திரு மெய்யம் சிவன் கோயிலில் கண்ட எட்டு அடி உயர லிங்கோத்பவர் படிமை இப்போது வெண்முரசின் கிராதம் நாவலில் வாசித்த சிவனின் சித்திரங்களுக்குப் பிறகு பார்க்கையில் என் உள்ளே வேறு விதமாக அது வளருகிறது. கிட்டத்தட்ட தமிழ் நிலத்தின் முதல் லிங்கோத்பவர் சிற்பங்களில் ஒன்று அது. அடியும் முடியும் காட்டப் பெறாமல் இருபக்கமும் தழல் அடுக்குகள் எழுந்து பறக்க நிற்கும் விஸ்வரூப தோற்றம். அங்கிருந்து வந்தால் காஞ்சி கைலாசநாதர் கோயில் லிங்கோபவர் படிமத்துக்கும் இதற்கும் இடையே எவ்வளவு வளர்ச்சி. பின்னர் வரும் சிலைகள் மெல்ல மெல்ல மாற்றம் கொண்டு,சிவனின் முடி தெரியும் வண்ணம் மாறி மேலே அன்னமும் கீழே வராகமும் கொண்டு செதுக்கப்பட்டிருக்கிறது.
சிதம்பரம் கோயிலில் வில்வப் பொதி மூடிய லிங்கோத்பவர் தனி சந்நிதியில் வலது புறம் ஒரு சிறிய தேவி படிமையுடன் இருக்கிறார். முதன் முறையாக லிங்கோத்பவர் தேவி துணையுடன் நிற்கக் கண்டேன்.
திருமெய்யம் கோயிலில் கருவறையின் குடைவரை தூண்கள் துவங்கி, வெளியே மண்டபத்தில் வாலி சுக்ரீவன், ரதி மன்மதன், குறவன் குறத்தி, கண்ணப்ப நாயனார் தூண்கள் வரை கோயிற் கலைப் பண்பாட்டில் தூண்களின் கலைப் பரிணாம வளர்ச்சியை ஒரே வீச்சில் பார்க்க முடிந்தது எப்போதும் போலவே இப்போதும் தீரா வியப்பை அளிப்பதாகவே இருந்தது. நாம் அங்கே சென்றிருந்த போது இருந்த அதே பட்டர். இன்னும் சற்று முதிர்ந்து சில பற்களை இழந்திருந்தார். அப்போது போலவே இப்போதும் காமனை ராமன் என்றே அறிமுகம் செய்தார். இருக்கட்டும் கா வுக்கும் ர வுக்கும் என்ன பெரிய பேதம் அத்வைத்த நோக்கின்படி எல்லாம் ஒரே அரிச்சுவடி வரிசைக்குள்ளேதானே இருக்கிறது என்று நானும் விட்டு விட்டேன். அங்கிருந்து வெவ்வேறு ஸ்தலங்கள், காலையிலேயே சூரியனை உறிஞ்சி பொன்னிறம் கொண்டு கொதிக்கும் பாறைகள் அதில் அமைந்த அருகர்கள் உறைவிடங்கள்…
இவ்வாராக ஊர் சுற்றி முடித்து கடலூர் திரும்பவும் சிவராத்திரி வரவும் சரியாக இருக்கவே உடனடியாக சிதம்பரம் கிளம்பினேன். சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தாமரைக் கண்ணன் வந்து இணைந்து கொண்டார் கூடவே மணி மாறனும். இரவு 9 மணிக்கு கடலூரில் பேருந்து ஏறினோம். சிதம்பரம் கடலூர் இடையே சாலைப் பணிகள். (இதன் பொருட்டு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வயதும் திகைக்க வைப்பன. நம்மைக் கொரானா கொண்டு போனதில் எந்தப் பிழையும் இல்லை. அதற்கு தகுதி கொண்டோர்தான் நாம்) தடவித் தடவி 11மணிக்கு சிதம்பரம் கோயில் கிழக்கு கோபுர வாசல் வந்து இறங்கினோம்.
கண்ட கணமே அள்ளிக்கொள்ளும் ராஜ கோபுரத்தின் எழில். இந்த கோபுர வடிவம் என்பதே யாக குண்டத்தில் எழுந்தாடும் அக்னியின் கல் வடிவ கலைத் தோற்றமே என்பார் ஆசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியம். 11ம் நூற்றாண்டுக்கு பிறகு கிருஷ்ணதேவ ராயார் காலம் தொட்டு 15 நூற்றாண்டு வரை கட்டப்பட்டவை இக் கோபுரங்கள். இக் கோபுர ஸ்தபதிகள் விருத்தாசலத்தை சேர்ந்த நால்வர். அவர்கள் பெயருடன் அவர்கள் சிலையும் கோபுரத்தில் உண்டு. கிருஷ்ணதேவராயர் கட்டிய கோபுரத்தில் நவ கிரக மூர்த்திக்கும் சிலை உண்டு. குறிப்பாக சூரியனுக்கு.
11 ஆம் நூற்றாண்டுக்கு முன்பான தில்லைக் கோயில் ராஜ கோபுரத்தை சோழர் கால ஓவியங்களில் இருந்து ஆவணப்படுத்தி இருக்கிறார் குடவாயில். மையத்தில் கீர்த்தி முகம் கொண்ட கேரளா பாணி வாயில் அது. சேர நிலத்துக்கும் இந்த கோயிலுக்குமான தொடர்புகள் நெடியது. களந்தை கூற்றுவ நாயனார் எனும் மன்னன் இப்பகுதி மன்னர்களை வென்று, அதன்படி சோழர்கள் போலவே இந்த தில்லைக் கோயில் வேதியர்களைக் கொண்டு, கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து மாமன்னன் என்று முடிசூட்டிக்கொள்ள விரும்பினான். தில்லை வேதியர்கள் அதை மறுத்து, அந்த மன்னன் ஆளும் நிலத்திலும் வாழ மறுத்து ஊர் நீங்கி சேர தேசம் சென்று, மீண்டும் இங்கே சோழர் ஆட்சி வந்த பிறகே அவர்கள் கோயிலுக்கு திரும்பியாதாக பெரிய புராண கதை உண்டு. 1684 இல் மாராட்டிய மன்னன் சாம்பாஜியின் குல குரு முத்தய்யா தீட்சிதர் சேர தேச சிற்பிகளை கொண்டு பொன்னம்பலத்தை சீர் செய்தார் என்பது திருவாரூர் செப்பேடு சொல்லும் செய்திகளில் ஒன்று.
10 ஆம் நூற்றாண்டுக்கு முன் நடராஜர் சந்நிதியான இந்த பொன்னம்பலம் எவ்விதம் இருந்திருக்கும்? இப்போது பொன் வேய்ந்த விமானத்துடன் இருப்பது இவ்விதமே இருந்திருக்கும் என சொல்லிவிட முடியும். மகாபலிபுரம் பீம ரதம் கண்டவர் அறிவர் அந்தக் கல் வடிவின், அதே வடிவே இன்றுள்ள சிதம்பரம் பொன்னம்பலம். இந்த விமான வடிவுக்கு சபாஹர விமானம் என்று பெயர். பெரிதும் சாக்த கோயில்களின் விமானமாக இது அமையக் காணலாம். உதாரணமாக ஒரிசாவில் விட்லா டியுல் என்று அழைக்கப்படும் சாமுண்டி கோயில். சுசீந்திரம் கோயிலில் ராஜ கோபுரத்துக்கு வலது புறம் அதை ஒட்டி அமைந்த சக்தி சந்நிதிக்கு மேலே இந்த சபாஹர விமானத்தின் சிறிய வடிவம் உண்டு. பவுத்த புடைப்பு சிற்பங்கள் பலவற்றில் புத்தர் இருக்கும் கோஷ்டம் இந்த விமானம் கொண்டதாகவே இருக்கும்.
நாங்கள் கருவறை நோக்கி நகர்ந்த போது உள்ளே இருந்த கட்டுக்கடங்கா கூட்டத்தை சமாளிக்க குறைந்தது 30 பவுன்சர்கள் இருந்தார்கள். ஒரு வகையில் இந்த பவுன்சர்கள் ‘பக்தர்கள்’ வசமிருந்து தில்லை வேதியர்களை காக்கவும்தான். கடந்த 15 வருடங்களாக தில்லை வேதியர்கள் மீது ‘பக்தர்கள்’ நிகழ்த்தும் வன்முறை சகிக்க இயலாதது. ( சில்லறைத் தனத்தில் ஈடுபடும் வேதியர்களும் அங்கே உண்டு, ஆனால் இது அதையும் கடந்த ஒன்றை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது ) கொஞ்சம் கொஞ்சமாக அங்கு அந்த வேதியர்கள் நிலை ‘பக்தர்கள்’ எனும் பெயரில் ‘யாரோ’வால் இறக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. உச்சம் பொன்னம்பலத்தில் ஜனநாயகம் தலைவிரித்து ஆடட்டும் என நீதிமன்றம் அளித்த அனுமதி வழியே நிகழ்ந்தது. எவரும் உள்ளே செல்ல அது என்ன சினிமா தியேட்டரா?
சங்கரர் வந்து நின்ற பீடம் என்பது ஐதீகம். தாத்ரீக குறியீடுகள் கொண்ட அர்ச்சனை முறை அங்கே உண்டு. எந்த தாத்ரீக மரபின் இருப்புக்கும் வலிமையான செய் செய்யாதேக்கள் உண்டு. பதஞ்சலி பத்தத்தி முறையில் அமைந்த வழிபாட்டு முறையும் அங்கே உண்டு. அதற்கான செய் செய்யாதேக்கள் பல உண்டு. இவை போக சிவனை நடராஜன் எனும் உருவமாக, ஸ்படிக லிங்கம் எனும் அரு உருவாக, ஆகாய ரூபம் எனும் அருவமாக என உருவம் முதல் அருவம் வரை மூன்று நிலையிலும் வைத்திருக்கும் சந்நிதி அது. இந்த நிலை கொண்டே அதற்கான தனிப்பட்ட வழிபாட்டு கட்டமைப்புகள் அங்கே உண்டு. அதற்கான விதி முறைகள் உண்டு. அந்த விதி முறைக்கு வாழ்வை ஒப்பு கொடுத்த அந்த வேதியர் நிற்கும் இடத்தில் ஜனநாயகம் எனும் பெயரால் சட்ட உரிமை எனும் பெயரால் பொது ஜனம் சென்று நிற்பது என்பது நம் கலாச்சார மேன்மை ஒன்றில் நமது கீழ்மையை நமது இழிவைக் கொண்டு கொட்டுவதன்றி வேறில்லை.
அதிகாலை 3.30 க்கு ஆடால்வல்லான் திருக்காட்சி கண்டோம். வெளியே மீண்டு, குளக்கரையில் அமர்ந்து, கொண்டு சென்றிருந்த பெருந்தேவி மொழியாக்கம் செய்திருந்த அக்கமகாதேவி கவிதைகளின் தொகுப்பான மூச்சே நறுமணமானால் தொகுப்பிலிருந்து ஐம்பது கவிதைகள் வரை வாய் விட்டு வாசித்தோம். (யாரரிவார் மாணிக்கவாசகர் எங்கிருந்தேனும் கேட்டுக்கொண்டிருக்கக் கூடும்). சென்ற முறை ஆனந்த் குமாரசாமி எழுதிய சிவானந்த நடனம் வாசித்தோம். முடித்து ஊர் கிளம்பும் முன்பாக ஒரு முறை கோயிலை சுற்றி வந்தோம். முன்பில்லாத அளவு யுவன் யுவதிகள் கூட்டம். இளம் தலைமுறை இத்தகு பண்பாட்டு விஷயங்களில் பெருகி நிற்பது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
நேரெதிராக, நாங்கள் சிதம்பரம் வந்து இறங்கியதுமே தெற்கு ரத வீதிக்கு ஓட்டமாக ஓடிச்சென்று கலந்து கொண்ட நாட்டியாஞ்சலியில் தாத்தா பாட்டிகள் மட்டுமே கண்ணில் பட்டனர். கண் முன்னால் ஒரு அழகிய பண்பாட்டு விழா கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருவதைக் காண்கிறேன்.
1980 யில் நாட்டியாஞ்சலி ட்ரஸ்ட் வழியே கோயில் வளாகத்தில் மிக சிறிய அளவில் ஆரம்பித்த விழா இது. எத்தனையோ வருடம். தேடிச் சென்று காணவும் சாத்தியம் அற்ற பல கலைஞர்களை ‘சும்மா’ பார்த்திருக்கிறேன் என்பதை இப்போது நினைக்க ஆச்சரியம் மேலிடுகிறது. இன்று உள்ள குறைந்த பட்ச கலை போதம் கூட அன்று என்னிடம் கிடையாது. அப்படிப்பட்டவனுக்கு கிடைத்த ஆசி அது. மெல்ல மெல்ல விழா மூன்று நாட்கள் விரிவு கொண்டது. இந்திய நிலத்தின் பல்வேறு நடனக் கலை ஆளுமைகளும் இங்கே அந்த விழா நோக்கி வர வர நேரம் போதாமல் ஆகி, சிவன் முன் நடனம் அது போதும் எனும் நிலையில் எல்லோரும் 15 நிமிடம் மட்டும் எடுத்துக்கொண்டு தங்கள் சிறந்த வெளிப்பாட்டை அங்கே காட்டிவிட்டு செல்ல துவங்கினர்.
2015 இல் தில்லை தீட்சிதர்கள் தனியே ஒரு ட்ரஸ்ட் துவங்கி அனைத்தையும் ஒருங்கிணைக்க துவங்க, குழப்பங்கள் துவங்கின. உரசல்கள் பெருகி கோயிலுக்குள் தனி நாட்டியாஞ்சலியும் அங்கே வர அதற்கான அதிகார விளையாட்டுகளும் துவங்க, பூர்வ ட்ரஸ்ட் கோயிலுக்கு வெளியே நாட்டியாஞ்சலியை ஒருங்கு செய்தது. கொண்டாட்டம் ஒருமை சிதைந்து போட்டி துவங்கியது. கலை பின்னுக்கு போய் ‘மக்களை’ கவரும் நோக்கில் நிகழ்வுகள் உரு மாறின. ( மேடை இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர, நாட்டியத் தாரகை வாண் டேம் போல காலை தூக்கி நின்றிருப்பார். கை தட்டு மழையில் நிகழ்ச்சியின் துவக்கமே டாப் கியரில் துவங்கும்) கொரானாவுக்கு பிறகு உத்ர ட்ரஸ்ட் நிகழ்ச்சி நடத்துவதை கை விட்டு விட, கோயிலுக்கு வெளியே உள்ள பூர்வ ட்ரஸ்ட் மட்டும் நிகழ்ச்சியை ஒருங்கு செய்கிறது ( ஒன்றுதான் இப்போது நிகழ்கிறது. ஆனாலும் கோயிலுக்குள் அனுமதி கிடையாது)
நாங்கள் உள்ளே சென்ற போது பிரமாதமான மேடை அலங்காரத்தின் பின்னணியில், அதிரடியாக ஒலிக்கும் பின்னணி இசையில் சில பெண்கள் ‘வித்தை’ காட்டிக்கொண்டு இருந்தார்கள். எப்போதும்போல மையத்தில் அரை டன் எடையில் ஒரு யுவதி திமிசு கட்டையால் தளத்தை சமன் செய்வது போல, அடவு எனும் பெயரில் மேடையை தடார் படார் என மிதித்து துவம்சம் செய்துகொண்டு இருந்தார். பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா என்றவன் வம்சாவளிதான் நான் என்றாலும் இத்தகு விஷயங்களை சகிக்கும் மன திடம் இன்னும் எனக்கு வாய்க்க வில்லை.
ஆவலோடு கிளம்பி வந்திருந்த மணிமாறன் அழாக்குறையாக ‘என்னங்க இது’ என்றார். “பதற்றம் ஆகாதீங்க இதுக்கு இடையில்தான் பல அற்புதங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படி அற்புதம் நிகழும் என நம்புவோம்” என்று சொல்லி அவரை சமாதானம் செய்தேன். அடுத்து வந்த தீக்க்ஷா, ரேவதி ராகத்தில் அமைந்த போ சம்போ (இதுவும் பின்னணி இசையாகவே அதிர அதிர ஒலித்தது) பாடலுக்கு நடனம் ஆடினார். மோசமில்லை ரகம். தகவல் மற்றும் ரசனை உதவிக்கு துணை நின்ற தாமரைக் கண்ணன் நாட்டியக் கலையின் அடிப்படைகளை கற்றவர். அடுத்த நிலைக்கு போகும் முன் வேலை வந்து, மனைவி வந்து, இப்போது மேலும் என்னென்னவோ வந்து விட்டது. (முதன் முறையாக அப்போதுதான் தாமரை கண்ணனை பார்க்கிறார் தேவ தேவன். தேவ தேவன் தாமரை வசம் கேட்ட முதல் கேள்வி ” நீங்க டான்சரா” என்பதே. தாமரை இப்போதும் அது எப்புடி என்ற அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை).
நம்பிக்கை வீண்போக வில்லை. அடுத்து மேடைக்கு வந்த மேக்னா ராஜு மற்றும் சஹானா ஸ்ரீதர் இருவரும் நடனக் கலையின் அழகு எதுவோ அதை மேடையில் எழுப்பிக் காட்டினார்கள். (பக்கத்தில் அமர்ந்திருந்த தாமரையை காணவில்லை. எப்படியோ கூட்டத்தில் ஊடுருவி முன்வரிசைக்கு போய்விட்டார்) இரண்டு பகுதிகள் கொண்ட நடனத்தில் இருவரில் ஒருவர் சிவம் என்றும் மற்றவர் சக்தி என்றும் அமைந்து அலாரிப்பு வரிசை வழியே பார்வையாளர்களை மெல்ல தங்கள் கலையின் உள்ளே இழுத்துக் கொண்டார்கள். இரண்டாம் பகுதி ஆதி சங்கரர் இயற்றிய பஞ்சாட்சர ஸ்துதி. உமையும் சிவமுமாகவே மாறிப்போனார்கள் இருவரும். குறிப்பாக சிவம் ஆலகாலம் அருந்துகயில் உமை அதை அவரது கழுத்தில் வைத்து தடுக்கும் காட்சி அத்தனை அழகாக இருந்தது.
அடுத்து ஹைதராபாத் பள்ளி ஒன்றின் மாணவர்கள் குழு நிகழ்த்திய குச்சுபுடி நடனம். வெவ்வேறு இடங்களில் இருந்து துண்டு துண்டாக பாடல்களை இணைத்து அந்த பின்னணியில் பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்த நடனம். நல்ல பரத நாட்டியமும், நல்ல குச்சுபுடி யும் அடுத்தடுத்து பார்த்தது ஒரு பயிற்சி போல அமைந்தது. குறிப்பாக ஒரே விஷயத்துக்கு இரண்டு நடனங்களும் காட்டும் கை முத்திரை வேறுபாடுகள். மெய்ப்பாடுகளில் குச்சுபுடி பரத நாட்டியத்தைக் காட்டிலும் மேலதிகமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம். பரத நாட்டியம் சில அலகுகளில் நிறைகயில் பல்ப் அணைந்தது போல சட் என நிற்க, குச்சு புடியோ ஸ்விட்ச் அனைத்த பிறகு மெல்ல மெல்ல சுழற்சி ஓய்ந்து நிற்கும் மின்விசிறி போல தனது ஆட்டத்தை நிறைவு செய்கிறது. இப்படி பற்பல விஷயங்கள்.
அடுத்து வந்தது ஒடிசி. அந்த நாளின் அந்த இறுதி முக்கால் மணி நேரம் ஒரு அற்புதம் என்றே சொல்வேன். அற்புதத்தை நிகழ்த்தி காட்டிய இளம் கலைஞரின் பெயர் அனிஷ் ராகவன். இரண்டு பகுதிகளாக அமைந்த அவரது நிகழ்வின் முதல் பகுதி நடராஜ கெளஸ்த்துபம். நதியின் பாதையில் ஒழுகிச் செல்லும் பூமாலை போல அதிலேயே நான் அவருடன் ஒழுகி செல்ல துவங்கி விட்டேன். என்னென்னவோ என்னில் இருந்து எடுத்துக் காட்டினார். தன்னில் இருந்து என்னை இழுத்து கைப்பிடித்து எங்கெங்கோ கூட்டி சென்று காட்டினார். அவர் ஆடை அணி சூடி கிளம்பி விட்டதாக செய்து காட்டிய பாவம், சிவனின் திருவிளையாடலில், பாற்கடலை கடைகயில் எழும் ஆல கால நஞ்சை உண்பது, இந்த நஞ்சு அமுத சண்டையில் எதிரி துரத்த பயந்து ஓடும் சந்திரனை சிவன் சடையில் தரித்து அபயம் அளிப்பது என முக்கால் மணி நேரத்தில் ஆயுள் முழுக்க நீளும் படிமங்களை என்னில் நிறைத்து விட்டார். அவர் உருவாக்கிய எல்லா படிமங்களையும் ஆட்ட நிலைகளையும் ஏதேதோ சிற்பங்களில் 7 ஆம் நூற்றாண்டு துவங்கி 13 ஆம் நூற்றாண்டு கோனார்க் கோயில் சிற்பங்கள் வரை ஒரிசாவில் கண்டிருக்கிறேன். ஆம் அவர் நிகழ்த்திக் காட்டிய சிவ நடனம், ஒரிசாவில் சாமுண்டி கோயிலில் விமான கீர்த்தி முகத்தில் கண்ட அதே நடராஜர் தான். ஒரே கணத்தில் ஒரிசா சிற்பங்கள் சுட்டுவதும் ஒடிசி நடனம் சுட்டுவதும் ஒன்றேயான ஒரு கலை வெளியில் நின்றிருந்தேன். எண்ண எண்ணப் பெருகும் சித்திரங்கள். ஒரிசா நடராஜர் கொண்ட திரிபங்க நிலை மனித உடலில் உண்மையில் சாத்தியம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இன்று கண்டேன் நடனத்தில் குறிப்பாக இந்த ஒடிசியில் ஒரு ஆண் உடலில் எழும் நளினத்தை எந்த வடிவழகு கூடிய பெண்ணாலும் விஞ்சிவிட இயலாது. எல்லாவற்றையும் விட இந்த நடனத்தில் நான் உணர்ந்த தனித்தன்மை, இதில் வெளிப்படும் பாவம் அல்லது மெய்ப்பாடு என்பது முழுக்க முழுக்க அகத்துறை உணர்வு போல, அல்லது அதற்கு இணையான ஒன்றை கொண்டிருக்கிறது. இப்போதுதான் புரிகிறது ஒடிசி யில் ஏன் ராதா மாதவ பாவம் அஷ்டபதி இந்த ஆழம் வரை சென்று செல்வாக்கு செலுத்துகிறது என்பது. பாரத செவ்வியல் நடனங்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து துலாவின் மறு தட்டில் ஒடிசி ஐ வைத்தால் துலா முள் சமன் கண்டு நிற்கும் என இக்கணம் தோன்றுகிறது.
இறுதி நிகழ்ச்சி. குரு கைகாட்ட அவருடன் அனிஷ் கிளம்பும் முன்பாக ஓடிச்சென்று அவரை சந்தித்து என்ன சொல்வது என்றே தெரியாமல், ரொம்ப நல்லா இருந்தது எனும் சொல்லையே மந்திரம் போல திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆவலுடன் நீங்க டான்சரா என்று கேட்டார். இல்லை என்றேன். ஆச்சரியம் ஆனார். அப்பறம் எப்டி என்றார். நீங்கள் கேளுச்சரன் மகோபாத்ரா பற்றி சொன்னது வழியே கொஞ்சம் ஒடிசி பற்றி பார்த்தும் வாசித்தும் தெரிந்திருக்கிறேன் என்றேன். ஜெயமோகன் எங்கள் ஆசிரியர் என்று சொல்லி நாங்கள் என்ன செய்கிறோம் என்று சொல்லி தாமரை இணைந்து கொண்டார். அவர் கேள்வி வழியாகவே அனிஷ் பாண்டிச்சேரி காரர் என்பதும், ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இன்றைய நாள் போல மேலும் சில நிகழ்வுகள் முடித்து பின்னர் ஜெர்மன் போய்விடுவேன் என்றார். எங்கோ வானத்திலிருந்து ஒரு தேவன் இக்கணம் இந்த கணத்துக்காக மட்டும் மண்ணில் இறங்கிவர் போல என்னருகே நின்றிருந்தார். அவரது உடல் மொழியும் குரலும், மையிட்ட விழியோடு இணையும் அவரது புன்னகையும் என… சரி நான் கிளம்பறேன் என சட்டென விடை பெற்றார். குரு முன்னால் செல்ல பின்னால் சென்று பார்வையில் இருந்து மறைந்தார். வெகு தூரத்தில் எங்கோ தில்லைக் கோயிலுக்குள் இருந்து எதிரொலித்து அடங்கியது எக்காளம் ஒன்று.
கடலூர் சீனு
பின்குறிப்பு.
உங்களுக்கு இக்கடிதத்தை எழுதி முடித்து உறங்கச் செல்கையில் அதிகாலை ஆகிவிட்டது. அதிகாலைக் கனவில் மந்தாகினியும் அளகனந்தா வும் கூடும் பிராயாகையில் நின்றிருந்தேன்.
மேக்னா சஹானா இணையரின் நடனம் என்னை எங்கே சென்று தீண்டி இருக்கிறது என்பதை விழித்த பின்னரே உணர்ந்தேன். பஞ்சாட்சர ஸ்துதியில் இரண்டாவது அட்சரமான ம, மந்தாகினி என்று துவங்கும்போது அக் கணம் ஒருவர் இமய முடி என்றும் மற்றவர் மந்தாகினிப் பிரவாகம் என்றும் மாறிப் போயினர்.
ஒரு நிலப்பரப்பை அதன் தொன்மை உருவகங்கள் உள்ளே பொங்கப் பொங்க நேரில் சென்று பார்ப்பதன் பின்னுள்ள உவகையை இன்று மீண்டும் அடைந்தேன்.
கட்டறற்ற இயற்கையின் ஒரு பகுதியான இமயத்தையும் மந்தாகினிப் பிரவாக்கத்தையும் கட்டுக்குள் நின்று பெருகும் கலையாக நேற்று அவர்களிடம் கண்டிருக்கிறேன் என்று இப்போது அறிகிறேன்.
ஆலயக்கலைப் பயிற்சி, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடந்த மூன்று நாட்கள் ஆலயக்கலை அறிமுக வகுப்பு, இயற்கை சூழல், நண்பர்கள் அறிமுகம் என மனநிறைவாக இருந்தது.
வகுப்பில்
– இயற்கை -> மிருகம், அணங்கு -> நடுக்கல் -> கோவில், உருவம் என தமிழகத்தில் வழிபாட்டின் பரிணாமம்
– மரம்/செங்கல் -> குடைவரை -> ஒற்றைக்கல் -> கல் கட்டுமானம் என கோவில் கட்டிடத்தின் வளர்ச்சி
– கோவில் கட்டிட வளர்ச்சியில் பல்லவர் முதல் நாயக்கர்களின் பங்கு
– வாஸ்து, சிற்ப, ஆகம முறைகளின் அறிமுகம் மற்றும் கோவில் நிர்மாணத்தில் அவற்றின் பங்கு
– திராவிட, வேசர, நாகர கோவில் பாணிகள்
– கோபுரம் முதல் விமானம் வரையிலான கோவில் அமைப்பு
– விமான அமைப்பு, கோஷ்ட அமைப்பு, தூண் அமைப்பு
– சிற்பங்களின் முகபாவங்கள், ஸ்தானங்கள், ஆசனங்கள், முத்திரைகள், ஆபரணங்கள், மகுடங்கள், ஆயுதங்கள்
– பல்வேறு சிவ, திருமால் மற்றும் தெய்வ வடிவங்கள்
ஆகியவை விவரிக்கப்பட்டது.
அடுத்து தஞ்சை பெரிய கோயில் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் அமைப்பு, தத்துவம் மற்றும் சிற்பங்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது. தாராசுரம் விமானம் நோக்கி செல்லும் சுந்தரர் மற்றும் சேரமான் சிற்பத்தை கொண்டு விமானத்தை கயிலாகமாக விளக்கியது, எவ்வாறு பல்வேறு பகுதிகளை இணைத்து பொருள் கொள்ள வேண்டும் என்று உணர்த்தியது. அதேபோல் தேவார பாடல் மற்றும் கல்வெட்டு கொண்டு தஞ்சை கோவில் விமானத்தை கயிலாகமாகவும், மேரு மலையாகவும் பொருள் கொடுத்தது நல்ல பாடம்.
மேலும் கோவில் ஒரு வழிபாட்டு தளமாக மட்டுமின்றி, எவ்வாறு பாட சாலை, மருத்துவ சாலை, ஊர் நிர்வாகம் என்று சமூக செயல்பாட்டின் மையமாக இருந்தது, எவ்வாறு இசை, நடனம் போன்ற பிற கலைகளை பேணியது என்று விளக்கப்பட்டது.
திரு. ஜெயகுமார் எடுத்த வகுப்பு மட்டுமின்றி அவர் பாடிய பாடல்களும் அருமை.இனி கோவில் செல்லும் போது அதன் நுட்பங்களை கவனிக்கவும், பொருள் உணரவும் இந்த வகுப்பு நல்ல தொடக்கம்.
ஒருங்கிணைத்தமைக்கு நன்றி.
– தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம்
பெருங்காதலின்பயணம் – மாமலர்
அன்பு ஜெ,
மாமலர் இன்று நிறைவுசெய்தேன். நீண்ட நெடும் பயணத்தின் களைப்பும், பிடித்தமான பயணம் தரும் மகிழ்வும், இந்தக் கண்டடைதலின் பாதையில் ஏதோ ஒன்று கூடியிருப்பதன் நிறைவும் ஒரு சேர உணர்கிறேன் இந்த நொடி. இக்காவியத்தின் நாயகர்கள் அலைக்கழிப்புடன் செய்யும் ஒவ்வொரு பயணத்திலும் என்னையும் உடன்செலுத்தி பயணித்து பார்க்கிறேன். ஒவ்வொரு பயணத்தின் வழி நான் என்னையும் கண்டடைகிறேன். ”நான்” என்று உணர்ந்த தருணங்களிலெல்லாம் மேலும் ஆழமாக பயணம் செய்ய முடிந்தது. அந்தப் பயணம் அதை உதிர்க்கச் சொல்லி நின்றது. கை கொள்ள வேண்டியது எது என்று உணர்த்தியது.
வேறெவரையும் விட பீமனின் இந்தப்பயணம் எனக்கு அணுக்கமானது. வேறு எவரின் பயணத்திலும் இத்தகைய உள எழுச்சியை நான் அடையவில்லை. அல்லது அதைவிட ஒருபடி மேலாக அடைந்தேன் எனலாம். ஒருவேளை நான் பயணம் செய்வேனேயானால் அது பீமனின் பயணத்துடன் மட்டுமே அணுக்கமாக உணரக்கூடியதாக இருக்கமுடியும். பெருஞ்செயல்களின் நிமித்தம் மட்டுமே அர்ஜுனனுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. பெருங்காதலின் நிமித்தமே இத்தகைய தீவிர பயணத்தை என்னால் மேற்கொள்ள முடியும் என்று தோன்றியது. அதுவும் முண்டன் போன்ற ஒரு வழிகாட்டியின் துணையுடன்.
திரெளபதியின் கண்கள் வழி ஐவரை நோக்கும்போது அவள் பெருங்காதல் கொள்ளமுடியுமானால் அது அர்ஜுனன் மேல் என்று தான் நினைத்திருந்தேன். விழைவின் தெய்வமான இந்திரனின் மகன், செயல் செயல் என திகழ்ந்து கொண்டிருப்பவன், அவள் ஆணவத்தை சீண்டும் குணம் இருப்பவன் என திரெளபதியின் நாயகனாக அவனையே கற்பனை செய்திருந்தேன். தர்மன் சொல்லாடுதற்கு இனியன், சகதேவனும் நகுலனும் பிள்ளை என மடியில் கிடத்தி அன்பு செய்ய ஏதுவானவர்கள். ஆனால் பீமன் காட்டாளன், அன்னத்தின் மேல் பற்று கொண்ட பேருடலன், தனக்கென ஒரு விழைவு கொண்டிராதவன். அவனுக்கு இணையானவள் என இடும்பியையே சொல்ல இயலும். திரெளபதியுடன் அவன் இணைந்திருக்கும் அத்தனை இடங்களிலும் மெல்லிய புன்னகையின் காதலோடே வாசித்திருந்தாலும், அது இத்தனை பெருகி மாமலர் என எழுந்து நிற்கும் சித்திரமளவு வருமென எதிர்பார்த்திருக்கவில்லை. கர்ணனின் நிமித்தம் பீமனிடம் எனக்கு சிறு கசப்பு முந்தைய நாவல்களின் வழி நஞ்சாக எஞ்சியிருந்தது. அது முற்றிலும் கரைந்து அவன் இந்த ஊழின் பகடையென் இறுதியில் நிற்கும் கணத்தால் அணுக்கமாகிவிட்டான்.
*
இந்நாவலில் பலவகையான ஆண் பெண் உறவுகள் வருகின்றன. முதலில் வருவது பிரஹ்பதியின் மனைவியான தாரை சந்திரனை விழையும் பிறழ்வுறவு. அகன்று செல்ல முற்பட்டும் நிகழ்ந்த ஒரு உறவால் தங்களைக் கண்டுகொண்ட இருவரில் தெரிவது எது என்று சிந்தித்திருந்தேன். “ஓர் உறவே அவர்களின் உடல்கள் அதன்பொருட்டென்றே அமைந்தவை என அவர்களுக்குக் காட்டியது. அதுவன்றி பிறிதுநினைப்பே இல்லாமலாக்கியது.” என்ற வரிகள் அதற்கான விடையை அளித்தது. அங்ஙனம் சில சமயம் ஓர் உறவு நிகழ்ந்துவிடுகிறது. அதைக் கைவிட இயலாமல் அது அழைத்துச் செல்லும் திசையில் அடித்துச் செல்லப்படுவதைக் காண்கிறோம். ஒழுங்கின் நிமித்தம் சந்திரனைப் பிரிந்து தேவர்களின் குருவான பிரஹஸ்பதியுடன் மீண்டும் கூடி வாழ்ந்து அவள் பெருவது சந்திரனின் புதல்வனான புதனைத்தான். ஒருமுறை கண்டடைந்தபின் அந்தக் காதலிலிருந்து மீட்பில்லை என்றே நினைக்கிறேன்.
அதன்பின் புரூரவஸ்-ஊர்வசி; ஆயுஸ்-இந்துமதி; அசோகசுந்தரி-நகுஷன்; தேவயானி-கசன்; யயாதி-சர்மிஷ்டை என பல ஆண்-பெண் வழி ஊடுருவும் காதலையும் காமத்தையும் பார்த்திருந்தேன். இந்திரன் இறந்துவிட்டதாக நினைத்து மண்ணின் இந்திரனாகும் பொருட்டு இந்திராணியை கைக்கொள்ளத் துணிந்த நகுஷனிடம் “நான் ஏன் இக்காதலுடன் இருக்கிறேன் என எண்ணுக! ஏன் என் உள்ளத்தில் அவர் நினைவு அழியவில்லை? ஏனென்றால் இன்னமும் எங்கோ இந்திரன் என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முற்றழியவில்லை. அவர் எங்கோ அவ்விழைவுடன் எஞ்சுவதுவரை இங்கு நானும் இப்படியே இருப்பேன்.” என்கிறாள் இந்திராணி. உண்மையாக காதல் கொண்டவர் அழியும் வரை அவர்கள் மனதில் கரந்திருக்கும் விழைவின் நிமித்தம் காதல் பிறிதொருவரிடத்தில் எஞ்சியிருக்கிறது. ஆம்! இருவரின் மனதிலிருந்தும் விழைவுகள் அழியாதிருக்கும் வரையில் காதல் முற்றழிவதில்லை.
இக்காதல்களில் மாமலர் என நாவலில் விரவியிருப்பது தேவயானி கசன் மேல் வைத்திருந்த காதல் தான். பெருங்காதலைப் பற்றி வாசித்துக் கொண்டிருக்கையிலேயே ஆழத்தில் வலியென சுரந்து வருவது பிரிவின் வலி பற்றிய எண்ணம். ”பெருங்காதல் அதன் பெருவிசையாலேயே இயல்பற்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. இயல்பற்ற ஒன்று எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற ஐயம் அதற்கே எழுகிறது. விரைந்தெழுவது நுரை. மலைப்பாறைகளின் உறுதி அதற்கில்லை என்பதை அதுவே அறியும்” என்ற வரி இக்காதல் பயணத்தை தொடங்கும் இடத்தில் வருகிறது. உண்மையில் அப்படியல்லாத ஒன்றைப்பற்றிய ஏங்கும் போது ”நுரையென எழுந்து பாறையென்றாகி முடிவிலிவரை நீடிக்கும் ஒரு பெருங்காதல் இம்மண்ணில் நிகழக்கூடாதா என்ன?” என்ற வரியும் உடனெதிர் வந்து நிற்கிறது. இந்த முரண் எக்காலமும் நின்று கொண்டிருக்கிறது.
பெருங்காதல் எதைக் கொண்டு அளவிடப்படுகிறது என்று யோசித்திருக்கிறேன் ஜெ. அது பிரிவின் வலியின் உக்கிரத்தைக் கொண்டே அளவிட முடியும் என்பதை “காமத்தின் பெருந்துன்பம் பிரிவு. பிரிவு பேருருக்கொள்ள வேண்டுமென்றால் அரிதென ஓர் உறவு நிகழவேண்டும். பெருங்காதல் உனக்கு அமையும். அதை இழந்து பிரிவின் துயரை அறிவாய்! அறிந்தபின்னரே அதை கடப்பாய்” இவ்வரிகளின் வழியே உணர்ந்தேன். இந்நாவலின் மையமாக அமைந்திருப்பது, அனலாக எழுவது தேவயானியின் “பிரிவின் வலி” தான். ஜெயந்தியின் அனல் அனைத்தையும் தாங்கிப் பிறந்து கொதித்துக் கொண்டிருந்த தேவயானி அவ்வனலை பிரிவின் வலியால் உறையச்செய்து அதை ஆணவமென மாற்றிக் கொண்டு செயல் செயல் என திகழ்ந்து பேரரசியாகிறாள்.
இந்நாவல் வரிசையில் முதல் முறை தேவயானி அறிமுகப்படுத்தப்படுவதே அவளின் மணிமுடியைக் கொண்டு தான். “தேவயானியின் மணிமுடி” என்ற வியப்பின் படிமமே அவளை ஒவ்வொரு அஸ்தினாபுரி அரசிகளுக்கும் உச்சமான இலக்கென ஆக்கியது. தேவயானியின் மணிமுடி கிடைத்த திரெளபதி அதைச் சூடிக் கொள்ளாமல் அதற்கு இணையான ஒன்றையே செய்தாள் என்பது தேவையானியின் கதை நோக்கிய ஆர்வத்தை வெண்முகில் நகரத்திலேயே எழச் செய்தது. அசுரகுலகுருவான சுக்ரரின் மகளாக வளரும் பேரழகியான தேவயானி, பேரழகனும், தேவர்களின் குலகுருவான பிரஹஸ்பதியின் வளர்ப்பு மகனாகிய கசன் மேல் பெருங்காதல் கொள்கிறாள்.
சூழ்ச்சியின் நிமித்தம் சஞ்சீவினி மந்திரத்தை சுக்ரரிடமிருந்து பெற மனித உருவெடுத்துவரும் கசன் தன் பிறப்பின் நினைவுகளின்றி உண்மையில் தேவயானி மேல் காதல் கொள்கிறான் தான். ஆனால் மூன்று முறை இறந்து மறு பிறப்பெடுத்து சஞ்சீவினி மந்திரத்தை கற்றபின் முற்பிறப்பை உணர்ந்து தான் வந்த வேலை முடிவு பெற்றபின் அவளைத் துறந்து செல்லும் தருணம் ஒன்று உள்ளது.
”உங்கள் காலடிகளில் அடிமையென இருக்கவும் சித்தமாகிறேன். பெண்ணென்றும் முனிவர் மகளென்றும் நான் கொண்ட ஆணவம் அனைத்தையும் அழித்து இங்கு நின்று இறைஞ்சுகிறேன். என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்” என்றாள். அச்சொற்களை சொன்னமைக்காக அவளுக்குள் ஆழ் தன்னிலை ஒன்று கூசியது. எத்தனைமுறை எத்தனை ஆண்களிடம் பெண்கள் சொல்லியிருக்கக்கூடியவை அவை!” இந்தவரிகள் ஒட்டுமொத்தமாக இவ்வுலகில் பெண்கள் காதலுக்காக ஆண்களிடம் இறைஞ்சும் தருணத்தை சொல்லக் கூடியது.
தேவையானி இந்தப்புள்ளியில் வந்து நின்ற கணத்தைக் கடக்க முடியவில்லை ஜெ. இதனை ஒத்த தருணம் அம்பைக்கு மட்டுமே வாய்த்திருந்தது. ஆனால் இந்த இடம் அதைவிட கலங்கச் செய்வது. ஏனெனில் அம்பை பெருங்கனலாகி வஞ்சமென அமைந்துவிட்டாள். ஆனால் தேவையானி இங்கு உறைந்துவிட்டாள். மானுடப் பெண்களாலும் தொடர்பு படுத்திக் கொள்ளக்கூடிய நிலை “உறைதல்” மட்டுமே. எத்தனை இறைஞ்சியும் “அதுவல்ல” என விலகிச் செல்லும் ஒருவனை தடுப்பதற்கான எந்த ஆயுதமும் இல்லாமல் வெறுமே உறைய மட்டுமே முடியுமான நிலை அது.
தேவையானி கசன் சென்ற பின் உறைந்து நிற்கும் இறுதிச் சித்திரம் திகைக்க வைத்தது. இங்கு வீட்டின் மேல் மாடியிலிருந்து பார்த்தால் மேற்கு வானில் மாலை மயங்கும் வேளையில் மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அருகில் ஒற்றை நட்சத்திரம் உதிக்கும் ஜெ. எத்தனைவிதமான வானங்களில் அவற்றை ரசித்திருக்கிறேன். ஆனால் எப்போதும் கரும் இரவுகளிலேயே அது பிரம்மாண்டத்தை அளிக்கும். அது ஓர் மூக்குத்தி எனவே எப்போதும் நினைப்பேன். இன்றைய இரவு வானின் நட்சத்திரங்கள் யாவும் நோக்கு கொண்டிருந்தது. அது காத்திருப்பின் நோக்கு என்று நினைத்தபோது மேலும் மனம் கனமாகியது. அதை குமரி முனையில் நின்றிருக்கும் கன்னியுடன் தொடர்புபடுத்தியது மேலும் பிரம்மாண்டத்தைக் கூட்டியது. புவியியலின் படி மேற்குத்தொடர்ச்சிமலை என்பது அதன் கண்டத்தட்டு சற்று தெற்கு நோக்கி சாய்ந்திருப்பதால்(escarpment) உருவான மலை மட்டுமே. இன்று இந்த சித்திரத்தின் வழி நோக்குகிறேன். தென்கிழக்கில் நின்றிருக்கும் அன்னையின் பிரிவின் கணத்தினால் மட்டுமே அத்தகைய எடையை நல்க முடியும் என்று நினைக்கும் போது சற்றே சிலிர்ப்பானது.
தாங்கவியலாத iப்பிரிவிற்கு முன் தேவயானி இனித்து இனித்து சாவது பற்றிய இடம் வருகிறது. ”அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது… முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா? இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள்?”. இனித்தினித்து சாவது தரும் ஒன்றே இறப்பிற்கு இணையான பிரிவையும் நல்க முடியும். இவையெல்லாம் எங்கிருந்து மானுடருக்கு அளிக்கப்படும் உணர்வுகள் ஜெ? இத்தனை மதுரத்தையும், பிரிவின் வலியையும் தெய்வமல்லாத ஏதொன்று தர இயலும்? இந்த தூய இனிக்கும் காதலும், இறப்பின் பிரிவும், மாளாத் துயரும் வெறும் மானுடரால் தாங்கவும் இயலாது என்றே நினைக்கிறேன். அதைத்தாண்டி வந்தவன் உணர்வது வேறொன்றை/வேறு உலகத்தைச் சார்ந்த ஒன்றை என்றே நினைக்கிறேன்.
உணர்வற்றவர்களும், கணங்களில் வாழ்ந்து யாவற்றையும் கரைத்து ஓடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு போதும் அக்கணத்தை அறியாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது என்றே நினைக்கிறேன். சிற்றின்பங்களில் மூழ்குபவர்களால் பேரின்பத்தையும், பெருங்கசப்பையும் தாங்கிக் கொள்ள இயலாது. அவர்கள் உண்மையில் பாவம்.
பிரிவுக்கணங்கள் முறிவுத்தருணங்கள் என புனைவுகளில் வாசித்தவற்றை காட்சியாக கனவில் நீட்டிக் கொண்டவற்றை இந்த இரவு மீட்டிக் கொண்டிருக்கிறேன். ராஜமார்த்தாண்டனை நினைத்துக் கொண்டேன். புத்துயிர்ப்பின் கத்யூஷாவின் முகம் நினைவிலெழுந்தது. வயல்வெளிகளெல்லாம் ஓடி விழுந்தெழுந்து மூச்சிரைக்க அந்த ரயிலை அடைந்து நெஹ்லுதாவால் காணமுடியாத சாளரத்தின் வழியே அவனை, அவனின் சிரிப்பை, அவளை மறந்த உள்ளத்தை அவள் கண்டபோதிருந்த மன நிலையை மீட்டினேன். புத்துயிர்ப்பில் அவள் முழுவதுமாக உறைந்த கணம் ஒன்று இருக்குமானால் அது அந்தக் கணம் தான். தான் மிகவும் நேசிக்கும் ஒருவரது சிந்தனையில் கூட சிறு அளவு காதலின் சுவடுகள் தெரியாத போதும், இத்தனை உணர்வெழுச்சிக்கு ஆளாக்கிய ஒருவர் அதன் தீவிரத்தை அல்லது அதையே கூட அறியாமல் இருக்கும்போது அது மேலும் வலியின் தீவிரத்தை அதிகரித்ததும் நினைவிலெழுந்தது.
கசன் காதலையோ காமத்தையோ அளிக்காமல் இல்லை. ஆனால் அவன் பிறந்திறந்து கொண்டே இருந்தான். அவன் ஒவ்வொரு முறை இறந்து பிறக்கும் போது ஒவ்வொரு உலகத்திற்குள் சென்று வந்தான். மீண்டும் திரும்பிச் செல்லும் இடத்தில் தேவையானியோ, காதலோ இல்லை என்பது அவனுக்கு இயல்பான ஒன்று. பிறந்திறக்காத அதே வாழ்வைக் கொண்டிருக்கும் தேவையானிக்கு அது தாங்கிக் கொள்ளவியலாத உணர்வென்பதைப் புரிய முடிந்தது.
“அறியாத ஊழ் கொண்டவள். யுகங்களுக்கொருமுறை தெய்வங்கள் தேர்ந்தெடுத்து மண்ணுக்கு அனுப்புபவர்களில் ஒருத்தி.” என்ற அவளின் அறிமுகத்திலிருந்து, துள்ளும் இளமையை இழந்து “துய்த்து தூக்கி எறிந்து செல்லும் இழிமகளென்று என்னை எண்ணினீர்களா? பிறிதொரு எண்ணமிலாது உங்கள் காலடியில் பணிந்தமையால் எளியவளென்று நினைக்கிறீர்களா?” என்று கெஞ்சிய தேவயானியை அடைந்து, உறைந்து, பின் பேராணவமும், பெருவஞ்சமும் கொண்டு யயாதியை மணந்து பேரரசியாக மாறும் அவளின் ஆழத்தில் படிந்திருக்கும் பரிவின் வலியை என்னால் உணர முடிந்தது. கசனை தீச்சொல்லிடவும் தயங்கியவளால், யயாதிக்கு இயல்பாக தீச்சொல்லிட முடிகிறது. என்றும் தேவயானியின் காதலென கசனைத் தவிர வேறெவரையும் அருகில் வைக்க முடியாது.
*
அதன் பின் மிகவும் ரசித்த இடம் யயாதி சர்மிஷ்டையுடன் கொள்ளும் உறவை. ஓர் ஆணின் கண்கள் வழியான காதலை, காமத்தை முழுதெடுத்துரைக்கக் கூடியது அது. தனக்கு இணையான அழகும், அறிவும், ஆணவமும் கொண்ட பெண்களைத் தாண்டி எளிய, பயம் கொண்ட, அழகற்ற பெண்களின் மேல் ஆண் கொள்ளும் விருப்பை புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான முதற்காரணமாக முதுமை அடைந்து கொண்டிருப்பதன் மேல் ஆண் கொள்ளும் அச்சம் என்பதை யயாதி வழி புரிய முடிந்தது.
“அஞ்சும் ஒரு மெல்லியலாளை தோள் சேர்த்தணைக்கும்போது மட்டுமே ஆணுக்கெழும் நிறைவை அப்போது அடைந்தான்.” என்ற வரியை வாசிக்கும்போதே, “அவள் எளியவள் அல்ல என்பது அவனை எழுச்சிகொள்ளச் செய்தது. ஊடியும் முயங்கியும் வென்றும் அடங்கியும் சொல்லாடியும் சொல்மறந்தும் அவர்கள் காதல் கொண்டாடினர்.” என்ற வரி நினைவுக்கு வந்தது. சந்திர குலத்தில் இத்தகைய பெருங்காம விழைவு கொண்டவர்களில் யயாதியும் ஒருவரே. அவரின் வழி வெறும் காமத்தை, முழுமையான காமத்தை என தரிசிக்க முடிந்தது. இறுதியாக புருவிடமிருந்து இளமையைப் பெற்றுக் கொண்டு அஸ்ருபிந்துமதியுடன் தன் காமத்தை முழுமையாக நிறைவு செய்து கொண்டவரை கொணர்ந்து பீஷ்மரில் பொருத்திப் பார்த்தேன். அகத்தாலத்தில் அவர் தன் முன்ஜென்மம் புருவாக இருக்கும் என்று நினைத்து பார்த்த போது “யயாதி” தெரிந்தது ஏன் என்று புரிந்தது. அத்தனை இறைஞ்சல்களுக்குப் பின்னும் அம்பையை அவர் விலக்கியதன் காரணமும் விளங்கியது.
“இறுதியில் இவ்வளவுதான் என காமம் தன்னைக் காட்டுகிறது. அனைத்தையும் இறுதியில் உடலென ஆக்கியாக வேண்டியிருக்கிறது. வெறும் உடலென. பிறிதொன்றும் இல்லை என. எஞ்சுவது இதுவொன்றே எனில் எதன்பொருட்டு எல்லாம் என.” எனத் தோன்றுவதற்கு காமத்தின் முழு நிறைவை அடைந்திருக்க வேண்டும். அதை எய்தியவர்களால் மட்டுமே முழு ஒறுத்தல்களைச் செய்ய முடியும் என்று தோன்றியது.
*
இங்கிருந்து மீண்டும் பீமனில் திரெளபதியைத் தேடுகிறேன்.“என்னை ஆழ்ந்து திளைக்கச்செய்வது அவள்மேல் கொண்ட அணுக்கம். அதை காமம்என்றால், காதல்என்றால் அச்சொல் என்னை கூசவைக்கிறது. அவள் அண்மையைவிட கூர்ந்தது அவளை எண்ணிக்கொள்ளல். எண்ணி மகிழ்வதைவிட நுண்ணியது கனவில் அவள் எழல். அனைத்தையும்விட ஆழ்ந்தது அறியாக்கணமொன்றில் அவளென நான் என்னை உணர்வது” என்று சொல்லும் பீமன் பெற்றுக் கொள்ளவேண்டியதே அம்மலர். இக்காடேகிய பயணத்தில் தங்கள் பெருங்காதலை மேலும் மேலும் என பெருக்கிக் கொண்ட திரெளபதியையும் பீமனையும் புன்னகையோடே நானும் ரசிக்கிறேன்.
*
“நேற்றுவரை நீங்கள் கொண்டிருந்த அனைத்தையும் உதறியாகவேண்டும். ஒவ்வொரு அடியிலும் அவற்றிலிருந்து நீங்கள் விலகிக்கொண்டிருக்கவேண்டும். முற்றிலும் விலகியபின் அடைவதே அம்மலர்.” என்ற வரி இவ்வுணர்வுகள் யாவும் கடந்து துறக்கப்பட வேண்டியது என்பதையே உணர்த்துகிறது. “நேதி நேதி” என விலக்கிச் செல்லும் பயணத்தில் இன்னொரு முக்கியமான இடத்தைக் கண்டுகொண்டேன். நன்றி ஜெ. ஊழின் கைகளில் எந்தப்பகடைக் காய் என்று கண்டபின் தொடர்ந்த தீவிரமான பயணம் என்பதைத் தவிர ஏதும் முக்கியமில்லை என்று உணர்கிறேன்.
ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் அவரவர் கண்டடைவது ’தான் எந்தப் பகடை’ என்பது மட்டுமே. தன்னை உருட்டி விளையாடும் தெய்வத்தின் அகத்தை தரிசிக்க, தன்னை அகழ்ந்து சென்று, அமையும் பயணத்தைத் தான் என்று பயணத்தின் இறுதியில் புரிந்து கொண்டேன். ”என்ன அடைந்தாய்” என்ற தர்மனின் கேள்விக்கு “அறியேன், சிலவற்றைத் துறந்தேன்” என்கிறான் பீமன். ஆம்! அடைவதற்கான பயணமல்ல. துறந்து, எஞ்சியவையைக் கடக்க வேண்டிய பயணமே முன் உள்ளது என்பதை உணர்கிறேன் ஜெ. எத்தனை அறிதல் அமைந்தபின்னும் உள்ளிருக்கும் “அது” அதற்கு விதிக்கப்பட்ட பயணத்தையே தேர்ந்தெடுப்பதையும் பீமன் வழி பார்க்கிறேன்.
பயணத்தின் இறுதிச்சொல் முண்டனிடமிருந்து வந்தது. “வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும்.” ஆம்! அது போதும் என்ற எண்ணமெழுந்தது.
இந்த நாவல் கல்யாணசெளந்திகம் என்ற படிமத்தாலும், நினைப்பவர்கள் கொள்ளும் மணத்தாலும் முழுவதும் நிறைந்தது. பெருங்காதலை அம்மாலராலன்றி வேறெந்த படிமத்தால் நிறைத்துக் கொள்ள முடியும். இப்பயணம் என்னில் நிகழச் செய்ததற்கு நன்றி ஜெ.
பிரேமையுடன்
ரம்யா
February 19, 2023
எழுகதிர்நிலம்-1
நானும் நண்பர்களும் 2015 ல் நடத்திய வடகிழக்குப் பயணத்தில் பெப்ருவரி 19 ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஒரு குறும்பயணம் மேற்கொண்டோம். அன்று கூகிள் உலகம் உருவாகவில்லை. ஆகவே தோராயமாக காகித வரைபடத்தை நினைவில்கொண்டு பயணத்திட்டத்தை வகுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றோம். அருணாசலப் பிரதேசம் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு என்னும் எண்ணமே இல்லை. சென்று சென்று சென்று ஒரு நாள் முழுக்க பயணம் செய்து லோகித் ஆற்றங்கரையில் பரசுராம்குண்ட் என்னும் இடத்தையும் ஒரே ஒரு பௌத்த மடாலயத்தை பார்த்துவிட்டு திரும்பினோம். அப்போதே அருணாசலப்பிரதேசப் பயணம் ஒன்றை வகுத்துவிட்டிருந்தோம்.
ஆனால் அதன் பின் பல சிக்கல்கள். நாங்கள் செல்ல உத்தேசித்திருந்த பகுதியின் அருகிலேயே சீன ஊடுருவல் நிகழ்ந்து, போர்ச்சூழல் எழுந்தது. நாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு ராணுவ அனுமதி தேவை, அது கிடைக்காமலாகியது. நடுவே வேறு பயணங்கள் நடைபெற்றன. இறுதியாக இப்பயணம். இம்முறை எச்சரிக்கையாக மொத்த அருணாச்சலப் பிரதேசத்தையும் பார்ப்பது என்றெல்லாம் திட்டமிடவில்லை. அருணாச்சலப்பிரதேசத்தின் ஒரு பகுதியான தவாங் சமவெளி மட்டுமே எங்கள் திட்டத்தில் இருந்தது.
அருணாசலப்பிரதேசம் ஏறத்தாழ எண்பத்துநாலாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. மக்கள் தொகை பதிநான்கு லட்சம் மட்டுமே. ஒரு லட்சத்தி முப்பதாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட தமிழகத்தின் மக்கள் தொகை எட்டு கோடிக்கு மேல். அதாவது தமிழகத்தின் மக்கள் செறிவு அருணாச்சலப்பிரதேசத்தை விட தோராயமாக பதினாறு மடங்கு. முற்றிலும் காலியாக கிடக்கும் மாபெரும் நிலப்பரப்பு. ஆங்காங்கே சிற்றூர்கள், சிறு நகரங்கள், இடாநகர் என்னும் தலைநகரம் தவிர மொத்த மாநிலமும் மலையும் காடும்தான்.
அருணாசலப்பிரதேசத்திற்கு செல்ல நாங்கள் ஆறுபேரையே திரட்டினோம், ஒரு காரில் அமரும் அளவுக்கு. அதற்குமேல் நண்பர்கள் என்றால் வண்டி, தங்குமிடம் எல்லாமே சிக்கல். நான், ஈரோடு கிருஷ்ணன், அரங்கசாமி, திருப்பூர் ஆனந்த்குமார், ஓசூர் பாலாஜி, ஈரோடு சந்திரசேகர். அரங்கசாமி நேராக கௌஹாத்தி சென்று அங்கே ஒரு விடுதியில் தங்கினார். நாங்கள் ஐவர் பெங்களூரில் இருந்து பிப்ரவரி எட்டாம் தேதி காலை விமானத்தில் கௌஹாத்தி சென்றோம். அரங்காவை கூட்டிக்கொண்டு நேராக அருணாசலப்பிரதேசம்.
நாங்கள் முதலில் வந்த அருணாசலப்பிரதேசத்தில் இருந்து இன்றைய அருணாசலப் பிரதேசம் மிகப்பெரியதாக மாறிவிட்டிருந்தது. முதன்மையாக பெரும் சாலைகள் போடப்பட்டு போக்குவரத்து பலமடங்கு பெருகியிருந்தது. இன்றைய மைய அரசின் சாதனை என ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் வடகிழக்கே அவர்கள் அமைத்துள்ள மாபெரும் சாலைத்திட்டங்களைச் சொல்லவேண்டும். இன்னும் ஏராளமான சாலைகள் கட்டுமானநிலையில் உள்ளன. சில சாலைகள் வங்கதேசம் டாக்காவுக்குச் செல்பவை. பர்மா வழியாக சிங்கப்பூர் வரை செல்லும் ஒரு பெரும்சாலைத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது. இவை முழுமையடையும்போது இன்றைய வடகிழக்கின் முகம் முழுமையாகவே மாறியிருக்கும். நவீனமயமாதல் நிகழும், இயற்கை கொஞ்சம் அழியும், ஆனால் வறுமையும் மறைந்துவிட்டிருக்கும்.
வடகிழக்கு முன்பு மிகமிக மோசமான சாலையால் பெயரளவில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்திய மையநிலத்தின் வணிகத்தொடர்பும் பிற தொடர்புகளும் மிகமிக குறைவாக இருந்தன. அங்கே தீவிரவாதம் வளர்வதற்கான முதன்மைக்காரணம் இந்த பண்பாட்டு அன்னியத்தன்மையும், வணிகம் வளராமையால் உருவான வேலையில்லா திண்டாட்டமும்தான்.
பல்லாண்டுகளாக டெல்லியின் நிர்வாகம் அரசு உயரதிகாரதிகாரிகளுக்கே விடப்பட்டிருந்தது. அவர்களின் திமிரும் பொறுப்பின்மையும் இங்கே தீவிரவாதம் வளர்வதற்கு இன்னும் முக்கியமான காரணம். நான் எப்போதும் சொல்வதொன்றுண்டு, மிகச்சிறந்த அதிகாரியைவிட மிக மோசமான அரசியல்வாதி ஜனநாயகத்தில் சிறந்த பங்களிப்பாற்றுபவன். அஸாம் பிரச்சினைக்கு இந்திரா காந்தியின் காலகட்டத்தில் இருந்த அதிகாரி ஆதிக்கமும் சமையலறை நிர்வாகமும் வகித்த பங்கு நாம் என்றும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. வடகிழக்கே அம்மக்களின் பங்களிப்புள்ள ஓர் அரசு அமையாமல் பார்த்துக்கொண்டார்கள். அமைந்த அரசுகளை ஈவிரக்கமில்லாமல் கலைத்துக் கொண்டிருந்தார்கள். ராணுவ ஆதிக்கமே போதும் என நம்பினார்கள்.
விளைவாக வடகிழக்கு நீண்டகால தீவிரவாதத்தால் உறைந்து நின்றுவிட்டிருந்தது. 1986ல் நான் வந்த அஸாம் ஒரு பாழடைந்த நிலம். கௌகாத்தியின் சந்தையிலேயே மக்கள் திரள் மிகக்குறைவாக இருக்கும். பெரும்பாலும் உள்ளூர் உணவுப்பொருட்கள் மட்டுமே விற்கப்படும். 1986ல் நான் எழுதிய ஒரு கடிதத்தில் அஸாமில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களே விற்கப்படுவதில்லை என திகைப்புடன் எழுதியதை அண்மையில் காசர்கோட்டில் இருந்து வந்த என் நண்பர்கள் பகிர்ந்துகொண்டார்கள். வெறிச்சிட்ட கடைகள், சிதிலமான கட்டிடங்கள். தெருக்களில் இளைஞர்களை பார்ப்பதே குறைவாக இருந்தது. இன்று அஸாம் பொருளியல் பாய்ச்சலில் உள்ளது. கௌஹாத்தி ஒரு மாநகரமாக வளர்ந்துள்ளது.
அன்றைய அஸாம் எப்படிப்பட்டது என உணர பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கிய நதி நாவலை வாசிக்கலாம். அஸாம் பிரச்சினையை அமைதியடையச் செய்ய நிகழ்ந்த முயற்சிகள் ஒரு பக்கமும், அங்கிருந்த நிலைமையை பயன்படுத்திக்கொண்டு நிகழ்ந்த ஊழலின் சித்திரம் இன்னொரு பக்கமுமாக விரியும் நாவல் அது.
அஸாமின் மீட்புக்கு உண்மையான முயற்சி எடுத்துக்கொண்டவர் ராஜீவ் காந்தி. 1985ல் அஸாம் உடன்படிக்கை வழியாக அஸாமில் மாணவர் கிளர்ச்சியாளர்களே ஆட்சியமைக்க வாய்ப்பளித்தார். இந்தியாவின் வரலாற்றிலேயே இன்றுவரை படுகேவலமாக நிகழ்ந்த ஓர் ஆட்சியை 1985ல் தேர்தலில் வென்று வந்த மாணவர்தலைவர் பிரபுல்லகுமார் மகந்தா தலைமை தாங்கி நடத்தினார். அதன்பின் மீண்டும் பலவகை அஜகுஜால் வேலைகள் வழியாக 1991ல் பதவிக்கு வந்தார். அவர்கள் உருவாக்கிய சீரழிவுகளை அதன்பின் வந்த அரசுகள் மெல்லமெல்ல மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறார்கள். அஸாம் மாணவர் கிளர்ச்சியாளர்களை மக்கள் இன்றுவரை பெரும் கசப்புடன் மட்டுமே நினைவுகூர்கிறார்கள்.
வடகிழக்கின் பிரிவினைவாதத்தை அமைதியடையச் செய்ததில் பெரும்பங்களிப்பு நரசிம்மராவுக்கு உண்டு. இன்றுள்ள கட்சி சார்ந்த அரசியலெழுத்துக்களில் அவரைப் போன்றவர்களின் பங்களிப்புகள் மறைந்துவிடும். நாம் நினைவுகூர்ந்தபடியே இருக்கவேண்டும். வடகிழக்கின் பிரிவினைப்போர்களுக்கு பர்மா, சீனா அளித்துவந்த ஆதரவுகளை ராஜதந்திர நடவடிக்கை வழியாக அவர் இல்லாமலாக்கினார். நேரடியாக பேச்சுவார்த்தை வழியாக அவர்களை சரணடையவும் வைத்தார்.
அந்த அமைதியின்மீதுதான் இன்றைய அரசு வளர்ச்சிப் பணிகளை நிகழ்த்துகிறது. மெய்யாகவே வடகிழக்கு முழுக்க வளர்ச்சியை உருவாக்கிக் காட்டி அதன் அரசியல் லாபங்களையும் அடைகிறது. வடகிழக்கின் இன்றைய பாய்ச்சலுக்கு இன்று பாராட்டப்படவேண்டியவர் சாலைநிபுணர் என அழைக்கப்படும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. அவருடைய நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும் சாலைப்பணிகள் இன்றைய இந்தியாவில் நிகழும் மிகப்பெரிய வளர்ச்சித்திட்டங்களில் ஒன்று.
அஸாமின் பாரதிய ஜனதாக் கட்சி முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் சர்மா வளர்ச்சிப்பணிகள், களஅரசியல், சூழ்ச்சி அரசியல் மூன்றிலுமே நிபுணர் என்கிறார்கள். ஒரு நாள் பாரதியஜனதாவின் பிரதமர் வேட்பாளர் ஆகக்கூடும் என்று பரவலாக பேச்சு உள்ளது. அவருக்கும் ஆதித்யநாதுக்கும் நடுவேதான் போட்டியே என்கிறார்கள்.மேகாலயா, மணிப்பூர், மிஸோரம் ஆகியவையும் வளர்ச்சிப்பாதையில் உள்ளன.ஒப்புநோக்க் பின்தங்கியிருப்பது மணிப்பூர். தீவிரவாத சிந்தனை கொஞ்சம் எஞ்சியிருப்பது நாகாலாந்து.
ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மாஅருணாசலப் பிரதேசம் பௌத்த பெரும்பான்மை கொண்டது, ஆகவே அங்கே பிரிவினைவாதம் இருந்ததில்லை. ஆனால் சாலைவசதியின்மையால், மிக ஒதுங்கி இருந்தமையால் அது வளர்ச்சியற்ற நிலையில் இருந்தது. இன்று சாலை, விமானம், ரயில் ஆகியவற்றால் இணைக்கப்பட்ட பின் அது மிகவேகமான வளர்ச்சிப்பாதையில் உள்ளது. இன்று லடாக்கும் அருணாசலப்பிரதேசமும்தான் இந்தியாவின் எதிர்காலச் சுற்றுலா பகுதிகள்.
இமையமலையின் எல்லா பருவங்களும் வெவ்வேறு வகை சுற்றுலாவுக்கு உகந்தவை. பனிக்காலம் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு ஐரோப்பியரை வரவழைக்கிறது கோடைகாலம் இந்தியர்களை. அண்மையில் நிகழ்ந்த சுற்றுலாப்பெருக்கு அருணாசலப்பிரதேசத்தை உயிர்த்துடிப்பு கொள்ள செய்துள்ளது. எங்கு பார்த்தாலும் ‘ஹோம் ஸ்டே’ பலகைகளுடன் வீட்டுத்தங்கல் வசதிகள். நட்சத்திர விடுதிகள். அருணாசலப்பிரதேசம், மேகாலயா போன்ற ஊர்களுக்கு அந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு மும்மடங்கு பயணிகள் சென்ற ஆண்டு வந்து சென்றிருக்கிறார்கள்.
சுற்றுலாவை தீவிரவாதம், அயல்நாட்டு ஊடுருவல் இரண்டுக்கும் எதிரான ஆயுதமாக வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள். பல நூற்றாண்டுக்கால பழங்குடி வாழ்வும் ஐம்பதாண்டுக்கால தேக்கநிலையும் அளித்த வறுமை நீங்கி மக்கள் பணத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டதன் மலர்வை எங்கும் பார்க்க முடிகிறது. வடகிழக்கு இன்று இந்தியாவுடன், குறிப்பாக தென்னிந்தியாவுடன், மிக அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. பெங்களூர், சென்னை ஆகியவை அவர்களின் கல்வி மற்றும் மருத்துவ மையங்கள். பணிக்காக பல ஆயிரம் இளைஞர்கள் தென்னகத்தில் உள்ளனர்.
நிதீன் கட்கரிஆகவே இன்று இந்தியாவின் எந்தப்பகுதியும் அவர்களுக்கு அன்னியமல்ல. இந்தியாவின் பகுதியெனவே அவர்கள் உணர்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சொன்னாலும் அறிந்துள்ளனர். சுற்றுலாப்பயணிகள் வழியாகவும் தங்கள் பயணங்கள் வழியாகவும். தமிழ்நாடு என்றதும் வேலூரை பலர் குறிப்பிட்டனர். இங்குள்ள்சிஎம்சி மருத்துவமனை அவர்களுக்கு மிகவும் தெரிந்த ஒன்று. அதன்பின் இங்குள்ள கல்லூரிகள். ஒரு பெண்மணி சென்னை கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவராக இருந்தார். தமிழ் மலையாளம் கன்னடம் ஆகியவற்றை குழப்பிக்கொள்ளும் வேடிக்கையும் உண்டு.
சென்ற முப்பதாண்டுகளாக இந்தியாவெங்கும் பிரிவினைவாதம் பேசிய அரசியல் குற்றமைப்புகள் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வீரநாயகர்களாக கட்டமைத்த வடகிழக்கின் பிரிவினைவாதிகள் உண்மையில் வறுமையை மட்டுமே உருவாக்கிய, தங்களை பலவகையிலும் செழுமைப்படுத்திக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஊழல்வாதிகள் மட்டுமே என்பதை இன்று வரலாறு காட்டிவிட்டது. ஐரோம் ஷர்மிளா முதல் எத்தனை போலி முகங்கள் இங்கே. நினைக்கவே கசப்பு எஞ்சுகிறது. எளிய மக்களின் குருதியை குடிப்பவர்கள் முதன்மையாக தங்கள் போலிக்கொள்கைகளுக்கு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கும் இரக்கமற்ற அறிவுஜீவிகளே என சொல்லத் தோன்றுகிறது.
கௌகாத்தியில் நாங்கள் அமர்த்திக்கொண்ட வண்டி, ஸைலோ மகேந்திரா. வண்டி கொஞ்சம் பழையது. வழியில் ஓர் இடத்தில் நிறுத்தி பிரம்மபுத்திராவின் கிளைநதியான காமெங் ஆற்றை பார்த்தோம். அஸாமின் புதிய ஜனநாயகம் எங்கும் கண்ணுக்கு பட்டது. சுற்றுலா விளம்பரங்களுக்கு அடுத்ததாக தெரியவந்தவை எல்லாம் அரசியல் விளம்பரங்கள்.
வழியில் ஒரு டீக்கடையில் நிறுத்தினோம். அருகே ஒரு சிறு கோயில். புதியதாகக் கட்டப்பட்டது. ஆனால் அதைச்சுற்றி ஏராளமான பெருங்கற்கால கல்தூண்கள் நின்றிருந்தன. வடகிழக்கில் பெருங்கல்பண்பாடு இன்றுமுண்டு, ஆனால் இவை பண்படாத கற்களாக இருந்தன. பெருங்கற்காலத்தையவை என்பதில் ஐயமில்லை. அவை நெடுங்காலமாக வழிபாட்டில் இருந்து அண்மையில் கோயில் கட்டப்பட்டிருக்கலாம்.
மாலை காசிரங்கா காட்டுக்கு அருகில் ஒரு விடுதியில் தங்கினோம். காசிரங்காவுக்கு 2015ல் வந்து மிக விரிவான பயணம் செய்திருந்தோம். அன்று நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். இருபதுநாட்களுக்கான வெண்முரசை எழுதி முடித்திருந்தேன். கடுமையான உளக்கொந்தளிப்பாலும், உணவுநோன்பாலும் மிகமெலிந்தும் இருந்தேன்.
இம்முறை நீண்ட பயணம் என்பதனால் வழியில் ஏதோ ஒன்றை பார்த்ததாக இருக்கட்டும் என்று காசிரங்கா காட்டில் காலையில் ஒரு சிறு உலா திட்டமிட்டிருந்தோம். ஆனால் சென்று சேர்ந்தது இரவு. அதிகாலையில் கிளம்பாமல் வழியே இல்லை. ஆகவே அன்றிரவு குளிரில் தூங்கி காலையில் குளிரிலேயே அருணாச்சலப்பிரதேசத்தை நோக்கி சென்றோம்
(மேலும்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



