Jeyamohan's Blog, page 627

February 14, 2023

ஆலயம் தொழுதல்

1

நகைச்சுவை

தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு [ஏழும் இரண்டும் ஒன்பது] துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்‘ என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால் அதை இங்கே அளிக்கிறோம். சுருக்கமாக. ஆத்திகத்துக்குரிய அடாசு மொழி சற்றே நவீனப்படுத்தப்பட்டிருப்பதை ஆத்திக அன்பர்கள் மனமுவந்து மன்னிக்கவேண்டும்.

ஆலயம் என்பது இந்துப்பண்பாட்டின் அடிப்படையான அமைப்பாகும். ஆ+லயம் என்ற சொல்லாடியே ஆலயமானது என்று புராணகதாசாகரம் லட்சுமிகிருஷ்ணமாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டிருப்பதை இங்கே எடுத்துரைக்கிறோம். ஆ என்று வாய்திறந்து லயித்து நிற்பதற்குரிய இடமென பொருள்படும். இ·து. கோவில் என்றும் சொல்வதுண்டு. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அறிவுரை உள்ளதல்லவா? “go with will என்ற ஆங்கிலச் சொல்லாட்சியே அப்படி மருவிற்றென்று சிவநெறிக்காவலர் சிவ.வல.குழ.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் ஓருரையில் குறிப்பிட்டார்கள்.

ஆகவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று. நன்றே செய்க அதுவும் இன்றே செய்க. தீதும் நன்றும் பிறர்தர வாரா. நன்றுக்கும் தீதுக்கும் அ·தே துணை. [நினைவுக்கு வரும் இன்னவையன்ன பிற சொல்லாட்சிகளைச் சேர்த்துக்கொள்க. ஆசிரியர் குழு] ஆலயத்துக்குச் செல்லும்போது செய்யவேண்டிய சமயக்குறிப்புகளை இனி காணலாம்.

குளித்து கும்பிடுதல் நமது மரபு. ஆலயம் சென்று அங்குள்ள திருக்குளத்தில் நீராடி நீறோ மண்ணோ அணிந்து கைகூப்பி பக்தி மேலிட இறைநாமங்களைச் சொல்லியபடி ஆலயம்புகுதல் முறை. சுகாதாரம் கருதி ஆலயக்குளத்தில் நீராடுவதை தவிர்க்கலாமென்பது ஆஸ்திகமண்டலியின் கருத்து. ஆயினும் முறைவழுவலாகாது என்பதனால் வெளியே ரூ.இருபதுக்கு விற்கப்படும் குடிநீர்குப்பி ஒன்றைவாங்கிக் கொண்டு உள்ளே சென்று ஆலயக்குளத்தில் மெல்லமெல்ல வழுக்காமல் காலெடுத்து வைத்து இறங்கி கால்நகங்களை மட்டும் நனைத்து அக்கணமே மேலேறி குடிநீர் குப்பி திறந்து நல்லநீரால் கால்களை கழுவிக்கொள்ளவும். அவ்வாறு கழுவாமல் கோயிலுக்குள் செல்லக்கூடாது என்பதையே ‘அசுத்தம்செய்யாதீர்’ என்று ஆலய நிர்வாகிகள் அங்கே எழுதிவைத்திருக்கிறார்கள்.

ஆயினும் நம் சடங்குகளைக் கைவிடலாகாது. ஆங்கே பெரிய சாக்குப்பைகளில் வைத்து விற்கப்படும் பொரி சிலநாழி வாங்கி ஆலயக்குளத்தில் பக்தியுடன் கொட்ட வேண்டும். குளத்து மீன்கள் பலவருடம் முன்னரே இறந்துவிட்டிருக்குமென்றாலும் அவற்றின் ஆவிகளுக்கு நாம் தர்ப்பணம் செய்தாக வேண்டியிருக்கிறது. கைவசம் கொண்டுவந்த வீட்டிலுள்ள பழைய பூசனைப்பொருட்களான வாடிய மாலைகள் காகிதப்பூக்கள் எலிப்ப்புழுக்கை கலந்த மிஞ்சிய பொரிசுண்டல்கள் இன்னபிறவற்றையும் ஆலயக்குளத்தில் வீசலாம்.

அதன்பின்னர் நாம் ஆலயமுகப்புக்குள் செல்கிறோம். இங்கே கருங்கல் தரையில் பலவகையான மாந்தர் கால்களை நீட்டியும், குந்தியும், குடும்பமாகவும், குடும்பங்களை வெறித்துப் பார்க்கும் தனியர்களாகவும், பல கோணங்களில் நிரம்பி அமர்ந்திருக்கக் காணலாம். இவர்கள் நடுவே குழந்தைகள் வாழைப்பழம், தேங்காய், பொங்கல், சுண்டல் முதலியவற்றை தின்றும் அள்ளி இறைத்தும் மலசலம் கழித்தும் களித்து விளையாடுகின்றதைப் பார்க்கலாம். இங்குள்ள பெண்கள் சரம்சரமாக பூச்சூடி உரக்கப்பேசி ‘ய்யக்காவ்’ என்று அகவி  பிறரை அழைத்து தத்தம் இருப்பை நிறுவிக்கொண்டிருப்பார்கள். இவர்களினூடாக ஐம்புலன்களையும் குவித்து நடந்து உள்ளே செல்வதென்பது ஒரு வகை தியானமாகும்.

நுழையும்போதுள்ள மண்டபங்களில் பெரிய தூண்களில் ஏராளமான கருங்கற்சிலைகள் பல அடி உயரத்துக்கு நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். யாளிகளின் குறிகளை பார்க்கும் இளம்பெண்கள் கிளுகிளுத்து சிரித்து தோழிகளை கிள்ளுவதில் தவறில்லையென்றாலும் குலமாதர் தத்தம் கணவர்களை அழுத்தமாக கிள்ளியோ நகம் இல்லாவிட்டால் ஊசியால் குத்தியோ கவன ஈர்ப்பு செய்து பளபளக்கும் உருண்டைமுலைகளில் இருந்து மீட்டு உள்ளே கொண்டுசெல்லும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படி இருந்தும் கையெட்டும் உயரத்துச் சிலைகளில் முலைகள் தனி வழவழப்புடன் இருப்பதை ஆராய்ந்த மாதல்ல நாராயணையா கமிட்டி அவற்றில் இடமுலைகள் மேலும் எண்ணைப்பிசுக்குடனிருப்பதை அடிப்படையாகக் கொண்டு பெரும்பாலான தமிழர்கள் வலதுகையர்கள் என்ற முதற்கட்ட முடிவுக்கு வந்திருக்கிறது.

இப்பகுதியின் தூணிடுக்குகளுக்கும் சிற்ப இடைவெளிகளுக்கும் பலவகை பயன்கள் உண்டு. கோயில்பணியாளர்களின் செருப்புகள் மஞ்சள்பைகள் போன்றவற்றை இறுக்கி வைத்துவிட்டு போவதற்கும் வெற்றிலை எச்சில் துப்புவதற்கும் பிரசாதப்பொட்டலங்களைப் போடுவதற்கும் அவற்றைப் பயன்படுத்தலாம். தாம்பூலப்பழக்கம் உள்ளவர்கள் சற்று கவனித்தால் எந்தச்சிலைமீது சுண்ணாம்பு தடவுதல் அங்கே மரபென்பதை அறிந்துகொள்ளலாம்.

கொடிமரத்தை அணுகியதுமே ஆண்கள் கரசரணங்களை அங்குள்ள புழுதித்தரையில் அழுந்தப்பதித்து விழுந்து கும்பிடுதல் நன்று. பெண்கள் முழந்தாளிடலாம். குண்டு மாமிகள் முழந்தாளிடுவது எப்படி என்று தனி கைப்பிரசுரம் எங்களிடம் கிடைக்கும். சில எளிய செய்முறைகள் இதோ. முதலில் மெல்ல சரிந்து இடக்கையை தரையில் ஊன்றவும். அதன் பின் இடது காலை மெல்ல மடித்து பகவானே என்ற கூக்குரலுடன் மெல்லமெல்லச் சரிந்து அதன்பின் வலக்காலையும் மடிக்கவும். பின்பு இரு கைகளையும் தரையில் ஊன்றி தலையை நிலம் சேர்த்து வணங்கும்போது பின்னல் தரையில் வீழ்ந்து பிறரால் மிதிபடாமலிருக்கவும் நந்தியென எண்ணி பிறபக்தர் காதில் குறைகள் சொல்ல வராமலிருக்கவும் கவனம் கொள்ளவும். எழுந்திருப்பது எப்படியானாலும் உங்கள் கையில் இல்லை, காலிலும். கூடவே வலுவான துணை கொண்டு செல்லவும்.

கொடிமரத்தில் இருந்து வலம் வந்து ஆலயபிராகாரத்தை சுற்றிவரல் வேண்டும். மருமகளையும் பக்கத்து வீட்டுக்காரியையும் வைவது, பிறபெண்டிர் நகைகளை நோக்கி நொடிப்பது, சீரியல் விவாதம் போன்றவை இத்தருணத்தில் உகந்தவை. இளம்பெண்கள் தலையையும் கைகளையும் பலமாக ஆட்டி ஆனால் குரல் எழாமல் பேசிக்கொண்டு செல்லலாம். ஆண்கள் செல்போனை காதில் ஒட்டிவைத்து ”ஆ? ஆ? அப்டியா? ஆ? ஏ? ஓ! அதுசரி ! அஹ்ஹஹ்ஹா!!!” என்று கூவியபடி சுற்றிவரலாம். நடுவே கல்மேடாக எதைக் கண்டாலும் கவனம் நில்லாமலேயே கன்னத்தில் போட்டு கும்பிட்டுச் செல்லவேண்டும், சற்று பழகினால் தண்டுவடமே இதைச்செய்ய ஆரம்பித்துவிடும்.

சிவன் கோயிலில் இடப்பக்கம் சண்டிகேஸ்வரர் சன்னிதி கோயில் கருவறைச்சுவரை நோக்கி நெருக்கமாக இருக்கும். உள்ளேசெல்லும்போது ஆப்புபோல அவ்விடைவெளியில் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கும் என்பதனால் எடையர்கள் நின்றுவிடுதல் நன்று. சண்டிகேஸ்வரரை கைதட்டிக் கும்பிடுதல் வேண்டும்–நம்முடைய கையை. அது ஆட்டோ ரிக்ஷாவைக் கூப்பிடுதலாகவும் அமையலாகாது.பொதுக்கூட்டத்தில் தட்டுவதாகவும் அமையலாகாது.நடுவாந்தரமாக மென்மையாக அமையலாம். மிக்சர் பொரி சாப்பிட்டுவிட்டு கைகளை தட்டுவது போல.

அர்த்தமண்டபத்தில் பல வகையான சிலைகள். அவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான நோக்கம் உண்டு. சில சிலைகளின் மீது மிஞ்சிய குங்குமம் விபூதியை நாம் போடவேண்டும். சில சிலைகள் மீது வேட்டி, புடவை நுனிகளை பிய்த்து நூலைப்போட வேண்டும். சில சிலகளைப் பிடித்துக்கொண்டு எம்பி கருவறையைப் பார்க்கலாம். சிலசிலைகள் மீது நாம் கொண்டுபோகும் சிறு பைகளை தொங்கவிடலாம். அவற்றுக்கான அடையாளங்கள் அச்சிலைகள் இருப்பதை அவதானித்து அவற்றைச் செய்தல் நலம். புதுவேட்டி, புதுப்புடவை என்பதற்காக உள்ளாடைகளை வெளியே எடுத்து நூல் பிய்ப்பது மாண்பல்ல.

கோயில்கருவறைக்கு இருபக்கமும் இரு பெரும் சிலைகளைக் காணலாம். இவை துவாரபாலகர்கள் என்று சொல்லப்படுகின்றன. ‘ஒருரூபாய்’ என்று ஒரு சிலையும் ‘உள்ளே கொடுங்கள்’ என்று இன்னொரு சிலையும் கைகாட்டி மிரட்டி உறுத்து நோக்கி நம்மிடம் சொல்கின்றன. உள்ளே அர்ச்சகர்கள் இருபபர்கள். இவர்கள் கட்டுக்குடுமியை தளர்வாக கட்டி தோளில் தவிட்டுநிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் ஒரு நூல் அணிந்திருப்பார்கள். இவர்களை நூல்கள் நூலோர் என்று சொல்கையில் அவர்கள் தங்களை மேலோர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பத்துநாள் தாடி, காவிப்பல், கைதூக்கி அக்குள் சொறியும் பழக்கம், உடம்பெங்கும் தேமல் போன்றவை இவர்களின் தோற்ற இலக்கணங்கள்.சிவாச்சாரியார்களுக்கு பூச்சுத்தேமலும் பட்டர்களுக்கு பட்டைத்தேமலும் காணப்படும்.

கருவறைக்கு நேரெதிராக இருபக்கமும் இரு எவர்சில்வர் குழாய்கள் மாட்டப்பட்டு இடம் பிரிக்கப்பட்டிருக்கும். இறைச்சன்னிதி முன் பெண்டிரின் கற்பு காப்பாற்றவேண்டுமென்பதே நோக்கம். பெண்டிரை ஆண்கள் நேர்நின்று நோக்கும் வசதிக்கெனவும் ஆகமக்குறிப்பு உண்டு. கருவறைக்குள் இருட்டு நிறைந்திருக்கும். சிவாலயங்களில் தாழ்வான சிவலிங்கம் காணப்படும். அதனைச் சுற்றி வெள்ளியாலான வட்டம் அமைந்திருக்கும். இருபக்கமும் விளக்குகள் தொங்கி ஆடும். வைணவ ஆலயங்களில் கரியசிலைகள் நின்றோ படுத்தோ இருக்கையில் முன்னால் வெண்கலச்சிலைகள் அலங்காரங்களுடன் இருக்கும். அவையே கும்பிடுவதற்குரியவை. அவற்றைப்பற்றிய விவரணைகளுக்குள் செல்ல இங்கே இடமில்லை.

கருவறைக்குள் புகுதல் ஆகமமுறைப்படி வகுக்கப்பட்டுள்ளது. நூலோர் தவிர எலி, கரப்பாம்பூச்சி, பாம்பு, பல்லி, பூரான் போன்றவை உள்ளே அனுமதிக்கப்படலாம் எனினும் பெருச்சாளியே முதன்மையானது. பறப்பனவற்றில் வௌவாலுக்கு முதலிடம். இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல்வேண்டும். சாமிமீது கரப்பாம்பூச்சி ஊர்ந்து ஏறும்போது அங்கே கவனம் திரும்புதல் கூடாது. ”அம்மா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா பாத்தியா சாமி மேலே கரப்பாம்பூச்சி…அம்மா”என்று கத்தி நம் புடவையைபிடித்திழுக்கும் சிறு குழந்தைகளை மண்டையில் குட்டி அழச்செய்து வாயடைய வைக்க ஆகம அனுமதி உண்டு.

பொதுவாகவே குழந்தைகளை ஆலயங்களில் கண்டிப்பாக கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தடுப்புக் கம்பிகளில் ஏறி விளையாடுதல், சக குழந்தைகளை நோக்கி உதடுகளைக் கோட்டிக் காட்டுதல், கையில் உள்ள பொருட்களை உண்டியல் துளையில் போடுதல், நந்தியை அடையாளம் தெரியாமல் ”பண்ணி பாத்தியா ப்ப்ப்பண்ணி படுத்திருக்கு” என்று சொல்லி சுட்டிக்காட்டுதல் போன்றவை மன்னிக்கப்படலாமென்றாலும் சயனப்பெருமாளை நோக்கி ”சாமிக்கு ஜொரமா? படுத்தே கெடக்கு?” என்றும், நடராசரைப்பார்த்து ”இந்த சாமிக்கு காலிலே முள்ளு குத்திச்சு ..பாவம்” என்றும் சொல்லும் குழந்தைகள் ஆகமவிதிகளை மீறுகின்றன என்று உணரல் வேண்டும். குழந்தைகளை கட்டுப்படுத்த செவி என்ற உறுப்பை உருவாக்கிய வாஸ்துதேவனை நாம் இங்கே நினைவில் கொண்டு வழுத்துவோமாக.

அர்ச்சகர் ஒரு பெரிய தட்டில் கற்பூரச்சுடர், பூக்கள் போன்றவற்றுடன் வருவதைக் கண்டு உடலில் உள்ள எல்லா சட்டைப்பைகளுக்குள்ளும் கையை விட்டு துழாவ ஆரம்பித்தல் பிழை. கோடுபோட்ட அண்டர்வேரை வெளியே எடுத்து பணம் எடுப்பது பாவம். பெண்கள் முந்தானை விலக்கி ஜாக்கெட்டுக்குள் இருந்து எடுப்பதில் பிழையில்லை.

எனினும் முன்னரே சில்லறை மாற்றி வைத்தல் நன்று. போடுவது ஒருரூபாய்க்கு குறைவல்ல என்று உறுதிசெய்யவே அவர் அவ்விளக்கை வைத்திருக்கிறார் என்றும் பேருந்து நடத்துனர் சீட்டு அளிப்பதுபோல மலர் அளிக்கிறார் என்றும் எண்ணற்க. பெருமாள் ஆலயங்களில் அளிக்கப்படும் துளசி தீர்த்தத்தை உதடுகளின் வைத்து உடனே எடுத்துவிடுதல் உடலாரோக்கியத்துக்கு நன்று. அமீபாசுரன் தூணிலும் துரும்பிலும் இருக்கும் மாயாவியென்க. கர்ப்பூரச்சுடரை தொட்டு கும்பிடும்போது அணைத்து வசைபெறல் உகந்ததல்ல.

இறை வழிபாட்டை மனமொன்றி செய்தல் வேண்டும்.ஆகவே கையில் உள்ள குப்பைகளை எங்குபோடுவதென்று அலைமோதலாகாது. அங்கேயே அபப்டியே போட்டுவிடுதல் நலம். அப்போது நினைவுக்கு வந்த பக்திப்பாடல்களை முன்னால் நிற்பவரின் செவி அதிரும்படி கதறுவது நெறியாகும். வரிகள் தெரியாதவர்கள் சிவசிவா என்றோ சம்போ மகாதேவா என்றோ நாராயணா பெருமாளே என்றோ கூப்பாடு போடலாம்.

கோயிலுக்கு நாம் என்ன செய்தாலும் அதை சாமி அறிந்து கொள்வதுடன் அவர் மறக்காமலும் இருக்க வேண்டும். ஆகவே நாம் அளிக்கும் பொருட்களில் நம் பெயரை குறித்து வைக்க வேண்டும். ஏழு ரூபாய் குண்டுபல்ப் வாங்கிக் கொடுத்தாலும் கூட ‘பல்ப் சுப . வல. அருணாச்சலம் செட்டியார் வகையறா உபயம்’ என்று எழுதி வைப்பது நல்லது. கோயிலை அத்தனை பெரிதாகக் கட்டிய பாண்டியர்களும் சோழர்களும் எழுதி வைக்காத காரணத்தால் எப்படி இருந்த இடம் தெரியாமல் போனார்கள் பார்த்தீர்கள் அல்லவா?

கருவறைக்கு முன் நாம் குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும். ”மஞ்சூ அம்மா கையை புடிச்சுக்கோ…டேய் ராகவ், தண்டக்கருமாந்தரமே எங்க போற…ஏண்டி அவனை புடிச்சுக்கச் சொன்னா அங்க என்ன செய்து எழவெடுக்கிறே” என்று கூவி நிலைமையை நம் கட்டுக்குள் கொண்டுவரலாம். ”வந்து தொலையேண்டி சனியனே”என்று மனைவியை அழைத்து அடுத்த சன்னிதிக்குச் செல்வது தொல் தமிழ் மரபு

மிஞ்சிய விபூதிகுங்குமத்தை சிலைமீது கொட்டிவிட்டு வெளியே செல்லும்போதே பேசி நிறுத்திய மிச்சத்தை தொடரலாம். வெளியே வெவ்வேறு இடங்களில் பலவகையான நூலோர் நின்று பலவகையான வழிபாடுகளைச் சொல்லி நம்மை ஈர்ப்பதைக் காணலாம். இவ்வாறு ஆலயங்களில் நாள்தோறும் புதுப்புது வழிபாட்டுமுறைகள் உருவாகி வருகின்றன. அவற்றை கணக்கிலெடுத்து ஆகமங்களை திருத்தியமைப்பதறகாக கமிட்டி ஒன்று செயல்படுகிறது. சராசரியாக நாள்தோறும் பதினேழு புதிய சடங்குகள் உருவாகி வருகின்றன என்பது கணக்கு. சிலவற்றை ஈண்டு பட்டியலிடுவாம்

ஆஞ்சனேயருக்கு வடைமாலை சார்த்துதல். காகிதத்தில் ராமஜெயம் எழுதி மாலையாகக் கட்டி அவர் கழுத்திலணிவித்தல். ஜெராக்ஸ், பிரிண்ட்அவுட் போன்றவையும் ஆகலாம் என்றானபின் கோடிராமநாமம் வழக்கமாக உள்ளது. நாநூறுகோடி ராமநாமத்தை சூப்பர் கம்ப்யூட்டர் உதவியுடன் அச்செடுத்து சமர்ப்பிக்கும் ஒரு வேள்விகூட இப்போது நிகழ்ந்தது. நிறைய அனுமன்கள் தேவைபப்டுவதனால் சில இடங்களில் சுக்ரீவன், வாலி, அங்கதன் போன்ற சிலைகளுக்கும் இதேவழிபாடு செய்யப்படுகிறது.

காலபைரவன் காளி போன்ற சிலைகள் மீது வெண்ணையை ‘பொச்சக்’ என்று தூக்கி வீசுவது. அதே வெண்ணை வழித்தெடுக்கப்பட்டு மீண்டும் உருட்டி விற்கப்படுவதால் நாற்றம் குமட்டும் என்பதனால் கையில் வாங்கியதுமே சிலையை நோக்கி ஓடுவோர் முந்தையோர் இட்ட வெண்ணையில் வழுக்கி விழுதல் நிகழ்வதுண்டு. பெருமாள் சிலைகளுக்கு மேலே சந்தனத்தை வீசுவதும் பிள்ளையார் மீது நாணயங்களை வீசுவதும் காணப்படுகிறது. நெல்லைமாவட்டத்தில் ஒரு ஆலயத்தில் ஆனாய நாயனார் மீது செல்பேசியை வீசும் மரபு இருப்பதாகச் சொல்லபப்டுகிறது.  ஆனால் குறிபார்ப்பதற்காக பலமுறை பொருட்களை சாமி முன்பு முன்னும் பின்னும் ஆட்டுவதும் ஒரு கண்ணைமூடிக்கொள்வதும் சம்பிரதாய விரோதமாகும்.

முஞ்சூறு சிலைகளுக்கு பூசை செய்து எலித்தொல்லை நீங்கப்பெறுதல். கோயில் சுவர்களில் உள்ள பல்லிசிலைகளுக்கு குங்குமம் சார்த்தி பூசை செய்தல். இதனால் பல்லிவிழுந்த தோஷம் நீங்கும் என்று புது ஐதீகம். ஒரு கோயிலில் தேள்கடித்த தோஷம் தீர அங்கே தேள்சிலைக்கு வெண்னைசாத்தும் வழக்கம் சூடுபிடித்தபோது ஆய்வுக்குழு சென்று நோக்கி அது தேளல்ல பத்து கை கொண்ட ராவணனே என்று நிறுவியபோது பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமையால் அந்த நிரூபணம் கைவிடப்பட்டது.

மூலமூர்த்திக்கு அபிடேகம் செய்த எண்ணையை ஒரு குழியில் சேமித்து அந்த எண்ணையை அள்ளி நல்மருந்தென வணிகம்செய்தல். எண்ணைத்தேவை அதிகரிக்க அதிகரிக்க வடை மற்றும் அதிரசம் சுட்ட எண்ணையும் அதில் கலக்கப்பட்டது. கன்னங்கரேலென இருப்பதனால் அதை குரூடாயில் என்று இந்திய எண்ணை சுத்திகரிப்பகத்துக்கு சிலர் செய்த புகார் தவறானது.

கோயில் கிணற்றில் சில்லறைகளை வீசுவது முறையென்றாலும் வீட்டிலெஞ்சிய செல்லாத சில்லறைகளை கொண்டுவந்து போடவேண்டிய இடமென அவ்விடத்தை எண்ணுதல் முறையன்று. பொதுவாக மூலச்சிலை அன்றி அத்தனை சிலைகளை நோக்கியும் சில்லரைகளை வீசியெறியலாம். திருப்பி நம்மை சாமி பணத்தால் அடிப்பார் என்பது ஆகம விதி. அதே மாதிரி சில்லறையால்தான் அடிக்கிறார், நோட்டைக் காணோமே என்றால் அது அவரவர் விதி.

செவிசாய்த்த நந்தியின் காதில் புருஷனைப்பற்றிய குறைகளைச் சொல்லலாம் என்பது சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒரு காதின் துளை வழியாக குச்சிவிட்டால் மறுகாதில் வெளிவரும் யாளியின் காதில் சொல்வது கணவனிடம் பேசும் இன்பத்தை சில பெண்டிருக்கு அளிப்பதனால் அதுவும் இப்போது மரபாகி வருகிறது. அந்த யாளி தன் வாய்க்குள் துப்பவோ விழுங்கவோ முடியாத கல்லுருளையுடன் நிற்குமென்றால் மேலும் விரும்பப்படுகிறது.

சிற்பக்கலையை ரசிப்பதற்கான எளியவழிகள் இப்போது அங்கீகாரம் பெற்றுள்ளன. தூண்களை சிறு கல்லால் தட்டிப்பார்த்து ஏழிசைக் கற்கள் என்று சொல்வது பல இடங்களில் உண்டென்றாலும் சில இடங்களில் நக்கிப்பார்த்து நவரசத்தூண்கள் என்று சொல்ல ஆரம்பித்திருப்பதை இன்னும் ஆகமக் கமிட்டி அங்கீகரிக்கவில்லை. பொதுவாக சிற்பங்களை கொட்டியும் தட்டியும் பார்த்து நல்ல ஓசை வரக்கூடிய சிற்பமெ சிறந்தது என்ற முடிவுக்கு வருதல் எளிய வழி.

இதைத்தவிர அர்ச்சனை சார்ந்த சில புதிய சடங்குகளும் உள்ளன. சிவலிங்கத்துக்கு அழுக்குத் துண்டால் இடைக்கச்சை கட்டி விடுதல், கல்லிலேயே அலங்கார உடையணிந்த அம்மனுக்கு அதற்குமேல் நாலரை ரூபாய் சீட்டிப்பாவாடையை எண்ணைபிசுக்குடன் கட்டிவிடுதல், கால்தூக்கி நின்றாடும் ஆடவல்லானுக்கு பஞ்சக்கச்சம் கட்டுதல், போர்கோலம் கொண்ட வீரபத்ரனுக்கு கோவணம் கட்டிவிடுதல் போன்றவை இப்போது பரவலாக கடைப்பிடிக்கப்படுகின்றன. திருவிடைநல்லூர் பக்கம் ஒரு கோயில்யானைக்கு ஜட்டி தைத்துபோட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவை ஆராயப்பட்டு முறைப்படி ஆகமங்களில் சேர்க்கப்படும்.

ஆகமம் என்பது மாறாத விதி அல்ல. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பதைப்போலவேதான் இதுவும். ‘Ah! Come! Come! ” என்ற சொல்லில் இருந்தே ஆகமம் வந்தது என்பதை தச்சநல்லூர் சங்கரநயினார் பிள்ளையவர்கள் ஒரு மேடையிலே அழகுற விளக்கினார் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.’நாலுபேருக்கு நல்லது செஞ்சா தப்பேயில்லை’ என்று சைதாபேட்டை பாலகுமாரசுவாமிகள் அருளிச்செய்ததும் நினைக்கற்பாலது.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 28, 2008

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:35

சண்முக செல்வகணபதி

[image error]

பேராசிரியர் சண்முக செல்வகணபதி தமிழிசை. சைவசித்தாந்தம் ஆகியவற்றில் ஆய்வுகளைச் செய்தவர். சொற்பொழிவாளர். தமிழ்மரபுசார் இலக்கியங்களை பொதுமேடைகளில் அறிமுகம் செய்பவர்

சண்முக செல்வகணபதி சண்முக செல்வகணபதி சண்முக செல்வகணபதி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:34

அம்புப்படுக்கை- கடிதம்

அம்புப்படுக்கை வாங்க சுனில் கிருஷ்ணன் விக்கி சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’

சுனீல் கிருஷ்ணனின் “அம்புப் படுக்கை” சிறுகதைத் தொகுப்பில் இறுதிக்கதையான “ஆரோகணம்” பற்றி..

ஆரோகணம்: இந்தக் கதைக்கு இதைவிடவும் சரியான தலைப்பு இருக்கமுடியாது. அந்தக் கடைசி கணத்தில் கூட – அது இர09ண்டா மூன்றா என்பது கூடத் தெளிவில்லாத நிலையில் கூட – சுய பரிசோதனை வேள்வித் தீ நாக்குகளைச் சுழற்றியபடி தொடர்ந்து எழுகிறது. ஒரு பார்வையில் வாழ்வின் அவரோகணமாக இருந்தாலும் மற்றொரு பார்வையில் அது உச்சத்துக்கு இட்டுச்செல்லும் ஆரோகணமே. அந்தக் கிழவருக்கே அவர் இதுகாறும் வாழ்ந்த வாழ்வை எங்கும் வெள்ளி போல பனி விழுந்துள்ள, திசைகள் கரைந்துபோய்விட்ட அந்த பனிப்பாலைவனத்தின் வெறுமை பிரதிபலித்தால் மற்ற சாமானியர்களின் வாழ்வை எது எப்படிப் பிரதிபலிக்கும் என்பது ஒரு பெருங்கேள்வி. ஒரு பனிப்பாலையோ, மணற்பாலையோ, அடர்ந்த காடோ, ஒரு முடிவற்ற உப்பளமோ எதுவாகவோ இருக்கலாம். ஆனால் அந்தப் பயணத்தினூடே தன் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது அனைவராலும் முடியுமா என்பது முயலுக்குக் கொம்பு முளைத்தாற்போலத்தான். கூடவே வரும் அந்த சுவானம் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கும் காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கணத்தில் நடைபெறும் சுய பரிசோதனைக்குமான சாட்சி. அதற்குப் பாலையும் ஒன்றுதான் பசுவயலும் ஒன்றுதான்.

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து ஒரு சிறுகதையாய் வடிப்பது பாராட்டவேண்டிய ஒரு முயற்சி. படித்தபின்னர் மிகுந்த அசௌகரியத்தை உருவாகும் ஒரு கதை. அனைத்திற்கும் பிறகு கிழவர் எடுக்கும் ஒரு தேர்வின் விளைவாக அவர் காண்பதெல்லாம் தன்னைத்தான் என்பது பென்னப்பெருங் கற்பனை. ஒரு உடோபியக் கற்பனையின் உச்சம். காந்தியம் என்ற ஒரு abstractஐயும் தாண்டிய ஒன்று.

மஹேஷ், சிங்கப்பூர்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:31

நடிகையின் நாடகம்

ஜெயகாந்தன் தமிழ் விக்கி

ஜெ,

நேற்று வீட்டின் பின்பகுதியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படித்துக் கொண்டிருந்தேன். மனைவி என்னிடம் எதோ கேட்டார். என்னை அந்த நூலில் இருந்து பிய்த்து எடுத்தது போல ஒரு பரிதவிப்பு. அவர் நகர்ந்து மீண்டும் நாவலில் மூழ்கிய பின்புதான் நிம்மதி. சமீபத்தில் படித்த எந்த ஆக்கமும் என்னை இப்படி ஆட்கொள்ளவில்லை. ஆங்காங்கே வரும் ‘உரக்கக் கூறுதல். தத்துவப் படுத்துதல்’ கூட தடையாக இல்லை.

மாலை நடையின்போது மனம் விரிந்து கிடந்தது. எதிரில் வருபவர்களை எல்லாம் பார்த்து புன்னகை வந்தது. உள்ளே “அழகு…அழகு…, நீ  நடந்தால்  நடை  அழகு .. அழகு, நீ  சிரித்தால்  சிரிப்பழகு அழகு” என்ற பாடல் அதிலும் “அழகு…அழகு…” என்ற ஹம்மிங் ஓடிக்கொண்டே இருந்தது. நான் அந்தப் பாடலை சமீபத்தில் கேட்டது இல்லை. எந்த படம், யார் இசை, யார் பாடியது என்று கூட அப்போது ஞாபகம் இல்லை. இந்த நாவலில் இருந்து இது எப்படி எழுந்து வந்து ஒட்டிக்கொண்டது என்று அப்போது புரியவில்லை. இன்று காலைதான் புரிந்தது.

இரு நாட்கள் முன்புதான் ஏ கே லோகிததாஸை நீங்கள் எடுத்த பேட்டியை படித்திருந்தேன். அதிலிருந்து நான் பெற்றுக்கொண்டது ‘அன்பு, கருணை, அறம், நீதி என்பவையெல்லாம் மனிதனின் இயற்கையான குணங்கள் அல்ல. அவற்றை மீண்டும் மீண்டும் பேசி நிறுவியாக வேண்டி இருக்கிறது. கலை அதையே செய்ய வேண்டும்’ என்பதே. நீங்கள் எப்படி மடக்கினாலும் அவர் இந்த தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அதைத் தான் ஜெயகாந்தன் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் செய்திருக்கிறார். இதன் அடியில் “அன்பு… அன்பு… அன்பு…” என்ற இசை ஓடிக்கொண்டிருக்கிறது. 

மற்றவரை கட்டுப்படுத்தாத, அவர்களை ‘உள்ளது உள்ளவாறு’ ஏற்றுக்கொள்ளும் அன்பை முன்வைக்கிறார். அதற்கு தன் மீதான அன்பும், தன் சுயத்தை தியாகம் செய்யாத பண்பும், தன் மகிழ்ச்சியைத் தன் உள்ளேயன்றி வெளியில் தேடாத மாண்பும் தேவை என்கிறார். இதற்கு உதாரணமாக கல்யாணி. அவர் வாழ்க்கையில் காணாத ஆனால் இருக்கவேண்டிய முன்மாதிரி. இதற்கு எதிராக மண உறவில் ஆண் ஆதிக்கவாதத்திலிருந்து வெளிவரமுடியாத ரங்கா. வளர்ப்பு சார்ந்த பண்புகளில் ஜாதி, வீதி, குடும்பம் போன்றவற்றில் இருந்து வெளியே வந்து கல்யாணியை விரும்பி மணக்க முடிந்த ரங்காவுக்கு, ஆண் என்ற கட்டுமானத்தில் இருந்து வெளிவர ஏலவில்லை. 

ஓரே ஒரு எதிர்மறை பாத்திரம் கூட இல்லாத நாவல். அவரவர் இயல்பு, கருத்து, நம்பிக்கை, பண்பாட்டின்படிதான் இருக்கிறார்கள். மற்றவர் செயலை, கருத்தை ஏற்க மறுக்கிறார்கள். சண்டையும் இடுகிறார்கள். கல்யாணி–ரங்கா மணமுறிவுவரைக் கூடச் செல்கிறார்கள். ஆனால், ஒருவருக்கொருவர் மீதான அன்பு மறைவதில்லை. அவனை மதிக்கும், அவன்மேல் அன்பு காட்டும் தொத்தா குடும்பத்தினருக்கும், ஆதிகேசவலு நாயுடு வீதியினருக்கும் அவன் கல்யாணியை மணப்பதில் கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், அவனது அறை, தவறிப்போன ஆடு திரும்பிவரும் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக அவன் குழந்தையை வளர்த்து, அவனுக்கு இறந்து போன மனைவியின் தங்கையை மணமுடிக்கக் காத்துக் கொண்டிருக்கும் மனைவி குடும்பம் அவனை விலக்கி வைப்பதில்லை. ரங்காவுடன் கடும் கருத்து பேதம் உடைய அண்ணாசாமி கல்யாணி அவனை காதலிப்பதை அறிந்து மகிழவே செய்கிறார். 

இந்தக் கதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் தான்தான் என்கிறார் ஜெயகாந்தன். எல்லோருடைய கதையையும் நல்லதாக் முடித்து வைக்கிறார், அவரது அன்பு. எளிதில் வணிகக் கதையாகக் கூடிய ஒன்றை இலக்கியமாக மாற்றிய மாயம் நிகழ்த்தி இருக்கிறார்.

பா ராஜேந்திரன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:31

பெங்களூர் சந்திப்பு, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் படைப்புக்களை பதினைந்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். உங்கள் கட்டுரைகள் மற்றும் உரைகள் எப்போதும் எனக்குள் பெரும் திறப்புகளாக இருந்து வருகின்றன.

காந்தியை மறுகண்டுபிடிப்பு செய்ததும், எந்த ஒரு கருத்தையும் வரலாற்று மற்றும் கலாச்சார பின்புலத்தில் வைத்து  பார்க்கக் கற்றுக் கொண்டது உங்கள் தளத்தின் மூலம் தான்.

உங்கள் கட்டுரைகளை போலவே உங்கள் புனைவுகளும் (அறம் தொடர், ஊமைச்செந்நாய், மாடன் மோட்சம், ஏழாம் உலகம்) கலாச்சசாரம், ஆழ்மனம் மற்றும் உளவியல் என்று பல தளங்களை தொட்டு செல்கின்றன.

தங்களை சமீபத்தில் நடந்த பெங்களூர் கட்டண உரை நிகழ்ச்சியில் முதன்முறையாக சந்தித்தேன். முதல் நாள் மாலை நீங்கள் தங்கியிருந்த அறைக்கு நான் வந்தபோது நீங்கள் சில வாசக நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களிடம் கேட்க வேண்டிய பல கேள்விகள் மனதில் இருந்து வந்திருக்கின்றன என்றாலும் அன்று உங்களுடன் உரையாடும் நம்பிக்கையில் நான் வரவில்லை. உங்களையும் மற்ற வாசகர்களையும் நேரில் பார்க்கும் ஆவலில் மட்டுமே வந்திருந்தேன்.

உங்களுடன் ஓரிரு வார்த்தை பேசும் சந்தர்ப்பமும் அங்கு கிடைத்தது மகிழ்ச்சியே. நீங்கள் பேசும்போது ஒரு முறை நான் குறுக்கிட்டது உங்களை சற்றே எரிச்சலுறச் செய்தது. புதிய கருத்தை அணுகும்போது அதற்குத் தடையாக இருக்கும் சில fallacy-களைப் பற்றி அப்போது குறிப்பிட்டு பேசினீர்கள்.

அடுத்த நாள் உரையின்போது metaphysics பற்றியும் ஒரு காலத்தில் அது முக்கியத்துவத்தை இழந்து பின்பு மீட்சி அடைந்தது என்றும் பேசினீர்கள். நான் அப்பொழுது குறிப்பிட்டது போல physics-ஐ  metaphysics-லிருந்து பிரித்து முதன் முதலில் விடுதலை தந்தது நியூட்டன் தான் என்று தோன்றுகிறது. அவருக்கு முன் இருந்த அறிஞர்கள் ஒரு இயக்கத்தை விளக்கும் போது அது எப்படி இயங்குகிறது என்பதுடன் அது ஏன் இயங்குகிறது (metaphysics)  எது சரியான இயக்கம் எது தவறான இயக்கம் (morality) என்ற வழிகளிலேயே சிந்தித்து வந்திருந்தனர். நியூட்டன் அந்த சிந்தனை முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு இயக்கத்தை புரிந்துகொள்ள ‘ஏன்’ என்ற கேள்வி தேவை இல்லை, அது எப்படி இயங்குகிறது என்று கவனித்து அறிந்தால் மட்டுமே போதுமானது என்பதைச் செயல்படுத்தி  காட்டினார். அவரின் இந்த பங்களிப்பே புதிய அறிவியலுக்கு வழிகோலியது எனலாம்.

நீங்கள் சொன்னது போல metaphysics இல்லாமல் இயங்கும் அறிவியக்கத்தில்  ஒரு கட்டத்துக்கு மேல் தேக்க நிலை ஏற்படுகிறது. Gödel’s incompleteness theorems குறிப்பிடுவதுபோல் எந்த ஒரு அமைப்பும் (system) தன்னுள்ளேயே முழுமை பெறுவதில்லை அதற்கு வெளியே உள்ள ஒன்றை (metaphysics) சார்ந்தே இருக்க முடியும்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் உங்களின் பலதரப்பட்ட வாசகர்களையும் அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பையும் ஆச்சர்யத்தையும் நேரில் பார்க்கக் கிடைத்தது. நீங்கள் உருவாக்கி முன்னெடுத்துவரும் ஒரு பெரிய எழுத்து இயக்கத்தின் ஒரு சிறு பகுதியை பார்த்த பிரமிப்புடன் வீடு திரும்பினேன்.

முக்கியமான ஆனால் அதிகம் கவனிக்கப்படாத சில புனைவுகள் பற்றி உங்கள் கருத்தை கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளது. அதைப்பற்றி விரிவாக எழுதி உங்களுக்கு அனுப்ப திட்டம் உண்டு ஆனால் அது உங்களுக்கு நேர விரயமோ என்ற தயக்கமும் உள்ளது.

இப்படிக்கு

சுரேஷ்குமார்

***

அன்புள்ள சுரேஷ்,

எரிச்சலடைந்தேன் என்று தெரிந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் எரிச்சலடையவில்லை. அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு சில அடிப்படைகளைச் சொன்னேன். அதை வலியுறுத்திச் சொல்லவேண்டிய தேவை நம் சூழலில் உள்ளது. காரணம், இங்குள்ள விவாதச் சூழல். நாம் முறையான விவாதப்பயிற்சியை எங்கும் பெறுவதில்லை. கல்விநிலையங்களில், பயிற்சிநிலையங்களில் அளிக்கப்படுவதில்லை.

ஆனால் நாம் மிகநெருக்கமாக வாழும் மக்கள். மிக தீவிரமான ஜனநாயகம் செயல்படும் நாடு. ஆகவே விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். விளைவாக, நம்மிடம் ஒரு மூர்க்கமான விவாதமோகம் உள்ளது. அரட்டை என நாம் நினைப்பதே விவாதத்தைத்தான். எதிர்தரப்பை கவனிக்காமலிருப்பது, எதிர்த்தரப்பை திரிப்பது, விவாதமுறைமை இல்லாமல் பேசுவது, நம் தரப்பை எந்நிலையிலும் விடாமலிருப்பது என பல இயல்புகள் நம்மிடமுண்டு. முன்பு நடந்த டீக்கடை விவாதங்கள் இன்று அப்படியே இணையத்திற்குச் சென்றுவிட்டன.

இந்தவகை கட்டற்ற விவாதங்கள் தத்துவம் போன்ற நுண்ணிய, அகவயமான புரிதலைக்கோரும் விஷயங்களில் மிகவும் பிழையானவையாக ஆகும். நேரவிரயம் நிகழும். நான் இந்த வீண் விவாதங்களை முப்பதுநாற்பதாண்டுகளாகக் கண்டுவருபவன். ஆனால் முறையான தத்துவ விவாதப்பயிற்சியும் எடுத்தவன். ஆகவே கூடுமானவரை வீண்விவாதங்களை தவிர்ப்பேன். தகுதியற்றவர்களிடம் விவாதிக்க மாட்டேன், முழுமையாக புறக்கணித்துவிடுவேன்.நட்புச்சூழலில் விவாதநெறிகளை வகுத்து முன்வைப்பேன்.

அன்றும் நண்பர்சூழலில் அவ்வாறு முன்வைக்க முயன்றேன், அவ்வளவுதான். எரிச்சல் அடையவில்லை. எரிச்சலூட்டும்படி நீங்கள் ஒன்றும் சொல்லவுமில்லை. இயல்பான ஒரு கருத்தையே முன்வைத்தீர்கள்.

நியூட்டன் பற்றி நீங்கள் சொன்னவற்றை நானும் யோசித்தேன். நிரூபணவாத அறிவியல்முறைமைதான் மீபொருண்மைவாதத்தின் இடத்தை இல்லாமலாக்கியது என்பதே என்புரிந்தல். பிரான்ஸிஸ் பேக்கன் முன்வைத்தது அது. அதுவே தொடக்கம். நிரூபணவாதத்தின் உச்சம் நியூட்டன் என்பதனால் நீயூட்டனில் அந்த மீபொருண்மை மறுப்புப் போக்கு முழுமையடைந்தது என்று கொள்ளலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:30

February 13, 2023

ஆசிரியரை அணுகுதல்

அன்புள்ள ஜெ

வணக்கம்…

கடந்த ஒரு வாரமாக நேரில் எப்படியாவது ஒருமுறையேனும்  உங்களை பார்த்துக்கொண்டே இருந்தேன் அதுவொரு அகநிறைவை தந்தது படைப்பூக்கத்தோடு  இருக்க செய்தது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் “எதுவும் நிகழட்டும் என் குரு அருகிலிருக்கிறார்” என்று தோணியது. நேற்றும், இன்றும் அது நிகழாமல் ஏதோ ஒரு பறி கொடுப்பு நிலையை உணர முடிகிறது என்னவென்றே தெரியாமல் குரோம்பேட்டை தேவாலயத்தில் வந்து அமர்ந்திருக்கிறேன்.

இங்கு வந்தும்  காதுகளில் நாகூரில் உள்ள அமீர் ஹம்ஷா என்ற பக்கீர் ஷா(சூபி யாசகன்) முகமதுவை பார்க்க நினைத்து பாடிய பிரார்த்தனை பாடலின் வரிகள் (அலை கடல் துரும்பென ஆடுது என் மனம் ஆர்வத்தின் காரணத்தால்…. நபி மீது ஆசையின் காரணத்தால்…. அவன் அருளாளன்… அன்பாளன்… மக்கத்தில் பூத்த மலர். மதினாவின் வாச மலர்… திக் எட்டும் போற்றுகின்ற மலர்… தெய்வீக ஞான மலர்… வாடாத மலர் முகத்தை நானும் காண்பேனா…. திக்கு திசை புகழும் மக்கா முகமதுவை நேரில் காண்பேனா… அமீர் ஹம்ஷாவின் இரு கண் குளிர காண நாடும் இறைவா….) ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஒருவகை தனிமையும், சோகமும்  சூழ்ந்திருக்கிறது.

அதிலிருந்து ஏதேனும் ஓர் விடுதல் கிடைக்குமென நேற்று விஷ்ணுபுரம் ஸ்டாலுக்கு சென்று அஜிதனை பார்த்து பேசிவிட்டு வந்தேன். இன்று மீண்டும் அந்த படலம் தொடங்கி விட்டது என்ன செய்வதென்று புரியவில்லை உங்கள் இளம் வயதில் இதுமாதிரியான உணர்வலைகள் இருந்திருக்கிறதா சார் குரு யதி, சு ரா வை சந்தித்து விட்டு திரும்பிய தருணங்களில்? எப்படி இதை கையாளுவது அல்லது புரிந்து கொள்வது?

அன்பு ஹனிஃபா

சென்னை

***

அன்புள்ள ஹனீஃபா

உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் உணர்வுகளை மிக அணுக்கமாகப் புரிந்துகொள்கிறேன். ஏனென்றால் நான் எப்போதுமே அப்படித்தான் இருந்து வருகிறேன். நான் ஓர் எழுத்தாளனாக ஆவதற்கு முன் தொடர்ச்சியாக என் ஆதர்ச ஆளுமைகளை தேடிச்சென்று சந்தித்திருக்கிறேன். அதீன் பந்த்யோபாத்யாயவை சந்திக்க வங்காளத்திற்குச் சென்றேன். கேளுசரண் மகாபாத்ராவை சென்று சந்தித்தேன். லாரி பேக்கர், வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி என நான் சந்தித்த ஆளுமைகள் பலர். அனைவருமே என்னை ஒரு தீவிர நிலையை நோக்கிச் செலுத்தினர். நான் எழுத்தாளனாக அறியப்பட்டபின்னரும்கூட அந்த மனநிலைதான். நீண்ட இடைவேளைக்குப் பின் ஸகரியாவை சந்தித்தேன். அதே உணர்வெழுச்சி.

ஏன்? நான் வாழநேரிட்டிருப்பது அன்றாடத்தின் உலகியலில். அதற்கு அப்பால் ஒரு ரகசிய நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் அறிவியக்கத்தில், அதன் ஆன்மிகத்தில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். அப்போது மட்டுமே என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதை உணர்கிறேன். அன்றாடத்தின் எளிய அரசியல், எளிமையான சழக்குகள் என்னை சீண்டினால் எதிர்வினையாற்றிவிடக்கூடும். ஆனால் உடனே என் ஆற்றலையும் இழக்கிறேன். உள்ளூரக் கூசுகிறேன். நான் என்னை எப்போதும் வேறொன்றின் தொடர்ச்சியாக முன்வைத்துக்கொள்ள முயல்கிறேன். ஆனால் அன்றாடம் பேராற்றல் மிக்கது. நம் ஆணவம், நம் நுகர்வுவிழைவு ஆகியவற்றை காட்டி நம்மை ஈர்த்துக்கொண்டே இருப்பது. ஆகவே இது இன்றுவரை நீளும் ஒரு தொடர்போராட்டமாகவே உள்ளது.

அந்த மனநிலையை நாம் பொதுவாகப் பகிர முடியாது. உடனே உலகியலாளர்களிடமிருந்து ஆலோசனைகள் கிளம்பி வரும். ‘எதையுமே தர்க்கபூர்வமாக அணுகவேண்டும்’ ‘எவரையுமே முழுக்க ஏற்றுக்கொள்ள கூடாது’ என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் அவர்களின் மதத்தையும், சாதியையும், அரசியலையும், அதன் தலைவர்களையும் கடவுள்நிலையில் வைத்து வெறிகொண்டு வழிபடுவதை அவர்களிடம் நாம் சுட்டிக்காட்டவே முடியாது. அந்த மனநிலையை நமக்கேயான ஒரு பிடிமானமாக, நாம் நம்மை வைத்திருக்கும் ஓர் அந்தரங்கமான அறையாக மட்டுமே கொண்டிருக்கவேண்டும்.

ஆனால் நான் அப்படி வைத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் எனக்கு எப்போதுமே பொதுமக்கள் மனநிலை பற்றிய ஒவ்வாமை உண்டு, முன்பு அலட்சியமும் எரிச்சலும் இருந்தது, இன்று அனுதாபம் மட்டுமே. ஆகவே நான் என்னுடைய பற்றுகளை, உணர்வுகளை மிக வெளிப்படையாக எல்லா மேடைகளிலும், எல்லா நூல்களிலும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். இதை ஒரு மனிதர், ஒரு தரப்பு மீதான பற்றாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு மரபு, ஒரு பெருக்கின் மீதான ஈடுபாடாக மட்டுமே நாம் வகுத்துக் கொண்டால்போதுமானது.

அந்த உணர்வுநிலைகளை பேணிக்கொள்க. எதுவரை நீடிக்குமோ அது வரை அது நீடிக்கட்டும். காதல் புனிதமானது என்பார்கள். அதைவிடப் புனிதமானது நம்மை வந்தடைந்திருக்கும் அறிவு மரபின்மேல் நமக்கிருக்கும் பிரியம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 10:35

கண்மணி

கண்மணி

 

கண்மணி குணசேகரன் நடுநாட்டு இலக்கியம் என்னும் வகைமையின் முதன்மை எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.நாட்டார்த்தன்மையும் இயல்புவாத அழகியலும் கலந்த வகையான எழுத்து அவருடையது

கண்மணி குணசேகரன் கண்மணி குணசேகரன் கண்மணி குணசேகரன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 10:34

குமரி – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க 

வணக்கம் மதிப்பிற்குரிய திரு ஜெ அவர்களே,

தங்களது குமரித்துறைவி என்ற மங்கல நாவலை நான் சென்னை புத்தக திருவிழாவில் வாங்கினேன். வாங்கிய பின் படிக்க நேரம் ஒதுக்காமல் சிறிது காலம் தாழ்த்தினேன். பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் படிக்கலானேன். படித்தேன் என்பதை விட வாழ்ந்தேன் என்பதே சாலத்தகும்.

குறிப்பாக அதன் நாயகனாக வரும் செண்பகராமனை நான் திரு ஜெ வாகத்தான் பார்த்தேன். நானும் நாகர்கோயில் நகரை சார்ந்தவன் என்பதால் அதில் வரும் இடங்களில் மிக மிக எளிதாக என்னை தொடர்பு படுத்திக்கொள்ள இயன்றது.இதுவரை இப்படி ஒரு மங்கல நாவலை படித்தது இல்லை. மீனாட்சி சுந்தரேஷஸ்வரரை தரிசனம் தந்தமைக்கு கோடி நன்றி.அந்த திருமண வைபோகத்தில் கலந்து கொள்ள செய்தமைக்கு மீண்டும் வணக்கத்தை சொல்லி கொள்கிறேன். அது எப்படி உங்களால் மட்டும் எப்படி முடிகிறது என்பது புரியவில்லை. இன்றுவரை அந்த திருமண நிகழ்வு என் கண்முன் நிழலாடுகிறது. குறிப்பாக அட்டை படம் வெகு சிறப்பு. தங்களிடம் மேலும் பல விந்தை மிகு கதைகளை எதிர்பார்க்கின்றோம். ஒரு சில கேள்விகள் உங்கள் பார்வைக்கு

குமரித்துறைவி எழுதிய பின் உங்களின் கருத்து என்னவாக இருக்கின்றது?இதே போல் வேறு ஏதேனும் நவீன தமிழ் இலக்கியத்தில் ஒரு மங்கல நாவல் இடம்பெற்றதுண்டா? யாரேனும் மாற்று கருத்துகளையோ அல்லது விமர்சங்களையோ கூறி இருக்கின்றனரா குமரித்துறைவிக்கு ?

நன்றி

க ராஜாமணி

***

அன்புள்ள ராஜாமணி,

குமரித்துறைவிபோன்ற அதே மனநிலை கொண்ட நாவல்கள் உலகமெங்கும் உண்டு. நம்பிக்கையும் ஒளியும்கொண்டவை. க.நா.சு சுருக்கமாக மொழியாக்கம் செய்த, செல்மா லாகர்லெவ் எழுதிய மதகுரு (Gösta Berling’s Saga) ஓர் உதாரணம். இதைப்போல வரலாற்றுத் தொன்மப்பின்னணியில் எழுதப்பட்ட படைப்பு என்றால் க.நா.சு மொழியாக்கம் செய்த பரபாஸ் (அன்புவழி என்றபெயரில் முதலில் வெளிவந்தது). பார்லாகர்க்விஸ்ட் எழுதியது.

எழுதுவது ஓர் உச்சநிலை. எழுதிய பின் அந்த மலையில் இருந்து இறங்கிவிடுகிறோம். வாசகர்கள் ஏறிச்செல்வதை பார்த்துக்கொண்டு நான் கீழே நின்றிருக்கிறேன். கீழே நின்றுகொண்டு விமர்சனம் செய்பவர்களைக் கண்டால் புன்னகைதான்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

ஆங்கிலத்திலேயே 99 சதவீதம் வாசிக்கிறேன். அரசியல், பொருளியல் கட்டுரைகளை மிகுதியாக வாசிக்கிறேன். என் தொழிலே வாசிப்பைச் சார்ந்ததுதான். தமிழில் வாசிக்கவேண்டுமென்ற உத்வேகம் பல ஆண்டுகளாக இல்லை. அண்மையில் ஒரு நண்பர் குமரித்துறைவி நாவலை பரிசாகத் தந்தார். மூன்றுமாதம் என் மேஜையருகே கிடந்தது. நேற்றிரவு  ஏதோ ஒரு மனநிலையில் கொஞ்சம் படித்தேன். அப்படியே உள்ளே கொண்டுசென்றுவிட்டது. பரவசம், கண்ணீர். எல்லாமே எனக்கு நிகழும் என நானே நினைத்துப்பார்த்திராதவை. அப்படி என்ன அதில் பரவசமான, கண்ணீர்வரும் விஷயங்கள் உண்டு என்றால் ஒன்றுமில்லை. அதிலுள்ளது goodness தான். அந்த விஷயம் நம்பகமாகச் சொல்லப்பட்டு நமக்கு நேரடியாகக் கடத்தப்படுகிறது. வாழ்க்கையை அடிப்படையில் நிலநிறுத்தும் ஒரு விஷயம் அதிலுள்ளது. ஏன் தமிழில் வாசிக்கவேண்டும் என்றல் இதனால்தான் என்று மனைவியிடம் சொன்னேன். என் மொழியிலே இதை வாசிக்காமல் எனக்கு இந்த அனுபவம் கிடைக்காது. உலக இலக்க்கியங்களை வாசிக்கலாம். இதுதான் அசல் அனுபவம். நன்றி

ஜி. ஆர். ராகவன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 10:31

ஆற்றின் கதைகள்

நடந்தாய் வாழி காவேரி வாங்க

நடந்தாய் வாழி காவேரி தமிழ் விக்கி

தி.ஜானகிராமன் தமிழ் விக்கி

கெடிலக்கரை நாகரீகம் தமிழ் விக்கி

சுந்தர சண்முகனார் தமிழ் விக்கி

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம்,  இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு வைகை ஆற்றின் கரை வழியாகவே பேருந்தில் செல்லும் போது வைகை ஆறானது நீரின்றி அவற்றில் வளர்ந்து ஆளுயர நின்றிருக்கும் நாணல்கள் எனக்குள் ஒரு சில கேள்வி எழுப்பின. அவற்றை தங்களிடம் பகிர்ந்துகொள்ள (பதில் அறிய) விரும்புகிறேன்.

எழுத்தாளர் தி.ஜானகி ராமன் அவர்களின் நடந்தாய்  வாழி காவேரி என்னும் காவிரி ஆற்றின் வழியான  பயணக் கட்டுரை நூல் (படிக்க நிறைவை தந்த புத்தகம்) போன்று வைகை ஆற்றைப் பற்றி  பயணக் கட்டுரையோ , ஆய்வு நூலோ எழுதப்பட்டுள்ளதா?2) அவ்வாறு வைகை ஆறு வரலாறாகவோ, ஆய்வு நூலாகவோ, பயணக் கட்டுரையாகவோ பதிவு செய்யப்பட்டவில்லை எனில் அதற்கான காரணம்?

அன்புடன் –   வர்ணிகா இளவேனில்.

(தங்களுக்கு முதல் கடிதம் – என் மகளின் பெயரில் கடிதம் எழுதியுள்ளேன் (ராஜ்குமார்))

***

அன்புள்ள ராஜ்குமார்

நடந்தாய் வாழி காவேரி நூலே முறையாக எழுதப்பட்ட ஒன்றல்ல. அதில் பயணத்தேதிகள்கூட இல்லை. தரவுகள் கொஞ்சமாவது சேகரித்திருக்கவேண்டும். காவேரியை ஒட்டி நடைபெற்ற வரலாற்றுநிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஆலயங்களைப் பற்றி சொல்லியிருக்கவேண்டும்,. தி.ஜானகிராமனுக்கு வரலாற்று ஆர்வமில்லை. அவருடையது உரையாடல் சார்ந்த உள்ளம். அது ஒரு புனைவுபோல வாசிக்கத்தக்கது, அவ்வளவுதான்

ஆனால் நானறிந்து வைகை, தாமிரவர்ணி பற்றியெல்லாம் அப்படி ஒரு நூல் எழுதப்பட்டதில்லை. சுந்தர சண்முகனார் எழுதிய கெடிலக்கரை நாகரீகம் என ஒரு நூல் உள்ளது. கடலூர் வழியாக ஓடும் கெடிலம் ஆற்றை ஒட்டி உருவான நாகரீக வளர்ச்சி பற்றியது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 10:31

கீதை, நூல்கள் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளருக்கு,

வணக்கம். உங்கள் யானை டாக்டர் கதை வழியாகவே உங்கள் இணைய தளம் எனக்கு அறிமுகம். பின்பு அறம் சிறுகதை தொகுப்பின் கீழ் உள்ள மற்ற எல்லா கதைகளையும் இணையம் வழி வாசித்தேன். அதன் பின்னர் புத்தகமாக வாங்கி மறுபடியும் மறுபடியும் வாசித்தேன். பிள்ளையார் சுழி யானை டாக்டர் கதைதான். பின்பு விஷ்ணுபுரம், ரப்பர், அனல் காற்று, இரவு, பின் தொடரும் நிழலின் குரல், வெண் முரசு, பனி மனிதன், காடு, வெள்ளை யானை என்று வாசிப்பு தொடர்கிறது.

உங்கள் எழுத்தின் உச்சமாக நான் நினைப்பது காடு நாவல். எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் முதல் இடம். காடு நாவல் வாசித்து பித்து பிடித்து கிடந்த நாட்கள் பல. குட்டப்பன் மிகவும் அனுக்கமான நண்பனாக மாறி விட்டான். எல்லா கதாபாத்திரங்களும் மனதிற்கு மிக நெருக்கமாக மாறி விட்டது.

இரண்டாவதாக பின் தொடரும் நிழலின் குரல். தோழர் அருணாவுக்கு ஏற்பட்டது போல் எனக்கும் பைத்திய நிலை வந்து விடுமோ என்று பீதி ஏற்பட்டு நாவலை தனியாக எடுத்து வைத்து விட்டேன். பின்பு படிக்காமலும் இருக்க முடியவில்லை. சிறிது காலம் கழித்து வாசித்து முடித்தேன்.

இவ்வளவு அனுபவங்களை தந்தமைக்கு மிக்க நன்றி. எனக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பகவத் கீதை பற்றி எழுதிய கட்டுரைகளை வாசித்துள்ளேன். இன்னும் ஆழமாக பகவத் கீதை பற்றி தனி ஒரு நூலாக உங்கள் நடையில் எழுத வேண்டுிறேன். இது எனது சுயநலமான கோரிக்கை. வெண் முரசு வாசித்தபோது பகவத் கீதை பற்றி தனி நாவல் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சொல்வளர் காடு நாவலில் பகவத் கீதையின் சாரம் உள்ளது என்று ஒரு கட்டுரையில் பின்னர் குறிப்பிட்டிருந்தீர்கள். மிக ஏமாற்றமாக இருந்தது.

உங்களை நேரில் மதுரை புத்தக கண்காட்சியில் பார்த்துள்ளேன் . ஏழாம் உலகம் புத்தகத்தில் உங்கள் கையெழுத்து வாங்கினேன். எனக்கு தெரிந்த ஒரு சகோதரிக்கு பரிசளிக்க. மேடையை விட்டிறங்கி வேகமாக எங்கோ கிளம்பி சென்று கொண்டு இருந்தீர்கள். அதனால் எதும் பேச முடியவில்லை. சந்திப்போம் என்று நம்புகிறேன்.

இன்னும் நான் சொல்வதற்கு,  உங்களுக்கு எழுதுவதற்கு அதிகம் உள்ளது. ஒரு வாசகனாகவும் நான் எழுதிய முதல் கடிதம் இதுதான். தயக்கம் காரணமாக இத்தனை நாளும் எழுதவில்லை.  நீங்கள் என் தந்தையின் வயதில் உள்ளீர்கள். நான் கேட்பதற்கும் அதிக கேள்விகள் உள்ளது. இனி வரும் நாட்களில் எழுதுகிறேன்.

அன்புடன்

நாகராஜன்

***

அன்புள்ள நாகராஜன்

பகவத்கீதை பற்றி எழுதவேண்டும் என்னும் எண்ணம் உண்டு. இப்போது கிட்டத்தட்ட பெரிய அலைபாய்தலுடன் பலவேலைகளில் இருக்கிறேன். சற்று விலக்கம் அதற்கு தேவை. அதன்பின் எழுதும் எண்ணம் உண்டு

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2023 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.