Jeyamohan's Blog, page 630
February 8, 2023
காமம், உணவு, யோகம்-3
உணவைப் பற்றிய கேள்வி இல்லாத இந்துவே இருக்க முடியாது. எல்லா மதங்களிலும் ஆசாரவாதம் உண்டு. எல்லா மதங்களிலும் ஆசாரவாதம் சார்ந்த உணவுவிலக்குகள் உண்டு. இஸ்லாமியர் பன்றி உண்ணலாகாது. யூதர்கள் ஓடுள்ள உயிரிகளை உண்ணலாகாது, இப்படி. ஆனால் இந்துக்கள் இந்த ஆசாரவாத உணவு விலக்குகளை நேரடியாகவே ஆன்மிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். சொல்லப்போனால் உணவை மட்டுமே ஆசாரமாகக் கொள்கிறார்கள்.
இந்த மனநிலையை சுவாமி விவேகானந்தர் கடுமையாக கண்டித்து எள்ளிநகையாடியிருக்கிறார். கடவுளை விட ஆத்மாவை விட சோற்றைப் பற்றி நினைப்பதுதான் ஆன்மிகம் என்னும் நம்பிக்கையை நாம் எங்கும் காணலாம். இரண்டு இந்துக்கள் சந்தித்தால் எதை, எங்கு, எவருடன், எப்படிச் சாப்பிடலாம் என்று மட்டுமே பேசுவார்கள்; ஆனால் அதை மதம்சார்ந்த ஆன்மிக உரையாடல் என நினைத்துக்கொள்வார்கள்.
ஆசாரவாதத்தின் உணவுவிலக்குகளை நான் புரிந்துகொள்கிறேன். அவர்கள் அதை மூர்க்கமாக முன்வைப்பதும் இயல்புதான். அவர்களின் வழிமுறை என்பதே இவ்வுலகில் ஆற்றப்படும் புறவயமான ஒழுங்குமுறை, புறவயச் சடங்குகள் வழியாக அகவயமான ஒருங்குகுவிதலையும், விடுதலையையும் அடைய முயல்வதுதான். மற்றவர்கள் உணவைப்பற்றி மிகையாகக் கவலைப்படுவதென்பது ஒருவகை மனச்சிக்கல் என்பதற்கு அப்பால் வேறொன்றுமில்லை.
நம்மிடம் இந்த உணவு சார்ந்த உளச்சிக்கல் எங்கிருந்து வருகிறது? நமக்கு தொடர்ச்சியாக வந்த உணவுப்பஞ்சங்கள் இந்த மனநிலையை உருவாக்கினவா? அல்லது இந்த நாடு வெவ்வேறு உணவுப்பழக்கங்கள் கொண்ட மக்களின் திரள்களாக இருந்து காலப்போக்கில் ஒருங்கிணைந்து ஒரே சமூகமாக ஆனபோது ஒவ்வொருவரும் அவரவர் உணவுப்பழக்கங்களால் அடையாளம் காணப்பட்டதனால் உருவானதா?
இந்துமதத்திற்குப் பின் உருவான சமண, பௌத்த மதங்களில் கொல்லாமை நேரடியாக உணவுடன் சம்பந்தப்படுத்தப்பட்டது. ஆகவே கடும் விலக்குகள் உருவாயின. அந்த கொல்லாமை நெறி இந்தியாவுக்கு சமணம் அளித்த பெருங்கொடை. பழங்குடிப் போர்களால் கொந்தளித்துக்கொண்டிருந்த இந்த தேசம் எரியணைந்து குளிர அது வழிவகுத்தது. இன்னும் பலநூற்றண்டுகளுக்கு சமண முனிவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்.
ஆனால் சமணத்தில் இருந்து கொல்லாமை நெறியும் அதன் விளைவான உணவு விலக்குகளும் பௌத்தம், இந்து மதப்பிரிவுகள் அனைத்துக்கும் சென்றன. அவை ஒருவகை நோன்பாக மாறின. இன்று சமூகத்தடைகளாகவும் நீடிக்கின்றன. இந்த கொல்லாமை, சைவ உணவு சார்ந்த நெறிகள் எல்லாம் மகாபாரதத்தில் அல்லது உபநிடதங்களில் வலியுறுத்தப்படவில்லை.
உணவு பற்றிய இந்த மனச்சிக்கலுக்கு நமக்கு சில மூலநூல் சார்ந்த காரணங்களும் உள்ளன. பகவத்கீதை சாத்விக உணவு பற்றிச் சொல்கிறது. சரகசம்ஹிதை உணவு சார்ந்து சிலவற்றைச் சொல்கிறது. அதன்பின் வந்த ஆசாரநூல்கள் அவற்றையொட்டி உணவுத்தடைகளை, உணவுநோன்புகளை அழுத்தமாக வலியுறுத்தின.
அவை ஆசாரங்கள், ஆன்மிக நெறிகள் அல்ல. யோக முறையின் நிபந்தனைகளும் அல்ல. உணவு மட்டுமே எந்த சிந்தனையையும் மாற்றிவிடாது. எந்த உடலியக்க முறையையும் மாற்றிவிடாது. மிகையுணவும், கடுமையான உணவும் உடலுக்குச் சுமையேற்றுவன. ஊனுணவு சற்று கட்டுப்பாடு மீறினால்கூட மிகையுணவாகவோ கடுமையான உணவாகவோ ஆகக்கூடிய தன்மை கொண்டது.
உளவியல்ரீதியாக ஊனுணவுடன் இணைந்துள்ள கொலை நம்மை பாதிக்கிறது. கர்மவினை சார்ந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த ஊன்விலங்குக் கொலை மேலும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. ஆகவே ஊனுணவு அவர்களுக்கு உளச்சுமையே.
அத்துடன் மக்கள்தொகை மிக்க இந்தியா போன்ற நாட்டில் கட்டற்ற ஊனுணவு அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்தியாவில் விலங்குகளே இருந்திருக்காது. இங்கே வேட்டையே முன்பு ஊனுணவுக்கு முதன்மை ஆதாரமாக இருந்தது.
இப்படி பல காரணங்களால் நானும் ஊனுணவுக்கு எதிரானவனே. ஊனுணவை முற்றிலும் தவிர்க்க முடிந்தால் அது யோகப்பயிற்சி மட்டுமல்ல, அறிவுச்செயல்பாட்டுக்கும் நல்லது என்பதே என் எண்ணம். ஆயினும் ஒருவர் பிறந்து வளர்ந்த சூழலில் இருந்தே சுவை உருவாகிறது. ஒரு சுவையை முற்றிலும் தவிர்ப்பதென்பது கடும் நோன்பு. அதை இயற்றலாம். இயற்ற முடியவில்லை என்பதனால் குற்றவுணர்வு கொண்டால் அது ஆன்மிகம், அறிவுச்செயல்பாடு, உணர்வுநிலை ஆகிய மூன்றுக்கும் எதிரானதாகவே ஆகும்.
ஊனுணவால் செயல்திறன் கூடுமா? கூடாது. ஊனுணவால் நுண்ணுணர்வு குறையுமா குறையாது. ஊனுணவால் உளத்திட்பம் அமையுமா? அமையாது. ஊனுணவால் காமம் முதலிய புலன்நாட்டங்கள் கூடுமா? கூடாது.
ஆகவே உணவைச் சார்ந்து யோசிப்பதை தவிர்ப்பதே யோகம், பக்தி, ஞானம் ஆகிய மூன்று நிலைகளிலும் உகந்த வழி. ஒருவர் தனக்கு உகந்த உணவுப்பழக்கத்தை கைக்கொள்ளலாம், அது அவருக்கு சிறிதளவு உதவக்கூடும், ஆனால் அந்த உணவுப்பழக்கத்தால் மட்டுமே கிடைக்கும் எதுவும் யோகம், ஞானம், பக்தி முறைமைகளுக்குள் இல்லை. இதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
காமம் குரோதம் மோகம் பற்றிய ஆர்வத்தில் இருந்து எழுத்தாளர்கள் மீளவே முடியாது. மொத்த இலக்கியமே அதைப்பற்றித்தான். மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட எல்லா புராணங்களும் முதன்மையாகப் பேசுவது அதைப்பற்றித்தான். ஆனால் அதில் உழல்பவர்களால் அவற்றை சிறப்பாக எழுத முடியாது. ஒருபக்கம் அதில் உழல்கையிலேயே இன்னொரு பக்கம் விலகி நின்று அதைநோக்கி, அதை அறிந்து, அதை கடந்து சென்று, அறிந்தவற்றைத் தொகுத்துக்கொள்ளும் உளம்கொண்டவர்களால்தான் காமகுரோதமோகம் என்னும் ஒன்றை எழுதமுடியும்.
அவ்வாறு கடந்துசெல்ல உதவுபவை சில உண்டு. அவற்றையும் கீதையைச் சார்ந்தே சொல்லிவிடமுடியும். ஒன்று, செயல்- அதாவது கர்மம். இரண்டு, ஞானம் அதாவது அறிவிலாழ்தல். மூன்று, பக்தி, அதாவது தன்னளிப்பு. மூன்றுமே மூன்றுவகை யோகங்கள் என்றே கீதை சொல்கிறது. இம்மூன்றில் எதைக் கைக்கொண்டாலும் காமகுரோதமோகங்களில் அடித்துச்செல்லப்படாமலிருக்கும் பிடிமானம் ஒன்று அமைகிறது.
செயல், அறிவு, பக்தி என மூன்றும் வேறுவேறு மையம் கொண்டவை. செயலை சிறப்புறச் செய்து செம்மையாக்கிக்கொண்டே போய் அதில் தன்னை முழுமை எய்த வைப்பது ஒரு யோகம். எச்செயலானாலும் அதன் விளைவுகளில் விருப்பு கொள்ளாமல் அச்செயல் அளிக்கும் நிறைவை மட்டுமே கொள்பொருள் எனக்கொண்டு அதில் மூழ்குவது அது.
இணையானது அறிவு அளிக்கும் நிறைவு. அறிந்து மேலும் அறிந்து செல்வது. அறிதலின் இன்பத்தையே அறிவின் பெறுபயன் எனக் கருதுவது. அறிவு அளிக்கும் ஆணவத்தில் இருந்து தொடர்ச்சியாக விலக்கம் கொண்டிருப்பது.
பக்தி என்பது முழுமையாக தன்னை அளிப்பது. இறைவனுக்கு தன்னளிப்பது இறைபக்தி. ஒரு கொள்கைக்கு அளிப்பதும் பக்தியே.
இம்மூன்றும் ஒன்றையொன்று நிரப்பும்படி இணையவும்கூடும். அறிதலையே செயலென ஒருவர் கொள்ளலாம். அறிவியக்கம் மற்றும் அதன் ஆளுமைகள் மீதான பக்தி அவரிடம் இருக்கலாம். மானுடசேவையை ஒருவர் செயல் எனக்கொள்ளலாம், அதற்கான அறிவியக்கமும் தன்னளிப்பும் அவரிடம் இருக்கலாம்.
உலகியல்சூழலில் இருந்து அகன்று, நோன்பு என வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, குறுகிக்குறுகி உட்சென்று காமகுரோதமோகத்தில் இருந்து அகல்வது ஒரு வழி. உலகியலில் இருந்தபடி அவ்வாறு அகல்வதற்கு இருக்கும் ஒரே வழி மேலே நான் சொன்ன யோகம்தான்.
அந்த மூன்று யோகங்களில் எதில் இருக்கிறீர்கள்? அவ்வாறு எதிலும் இல்லாமல் சில யோகப்பயிற்சிகளைச் செய்வதனால் நீங்கள் எதையும் அறியவோ கடக்கவோ முடியாது. உணவுக்கட்டுப்பாடோ பிற நோன்புகளோ எவ்வகையிலும் அதற்கு உதவாது.
ஜெ
கீரனூர் சின்னத்தம்பி பிள்ளை
கீரனூர் ஜாகிர்ராஜா இன்றைய வாசகனுக்கு தெரிந்தபெயர். கீரனூர் சகோதரர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சென்ற காலகட்டத்தின் இசைமேதைகள். முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றால் முழுமையாகவே மறைந்துவிட வாய்ப்புள்ளவர்கள் முதன்மையாக இசைக்கலைஞர்களும் நிகழ்த்துகலை கலைஞர்களும்தான்.
கீரனூர் சகோதரர்கள்
கீரனூர் சகோதரர்கள் – தமிழ் விக்கி
இளையோர் சந்திப்புகள்
நேத்து (9/01/2023) உங்கள சென்னை புத்தகக்கண்காட்சில சந்திச்சேன். என்னை உங்க வாசகன்னு சொல்லி அறிமுகபடுத்திக்கிட்டேன். நீங்க எழுதின இரண்டு புத்தகத்துல உங்ககிட்ட கையெழுத்து வாங்கினேன்.
மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book வாங்கி மறுபடியும் உங்க கிட்ட கையெழுத்து வாங்க நீட்டினேன். நீங்க என்ன பாத்து ஒரு நொடி சிரிச்சுட்டு அந்த Bookல கையெழுத்து போட்டு கீழ உங்க Mobile Number எழுதி “Call பண்ணிட்டு ஒரு நாள் என்ன நேர்ல வந்து பாருங்க” னு சொன்னீங்க. எனக்கு சந்தோஷம் தங்கல.
அதான் உங்களுக்கு Call பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா எங்க நீங்க Busyஆ இருப்பிங்களோ, உங்கள Disturb பண்ணிடுவோமோனு தயக்கமா இருக்கு. அதே சமயம் உங்ககிட்ட பேசணும் உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு
பாலமுருகன்
***
அன்புள்ள பாலமுருகன்,
பொதுவாக இளைய தலைமுறையினரைச் சந்திக்க ஆர்வம் கொண்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் சந்தித்தவர்களில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தவர்களை மீண்டும் சந்திக்க விரும்பினேன். சந்திப்போம்.
இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் சென்ற கொரோனா காலகட்டத்திற்குப் பின் என்னை அறிமுகம் செய்துகொண்ட மிகக்குறைவான வயது கொண்ட பல இளைஞர்களைச் சந்தித்தேன். பலர் பொன்னியின் செல்வன் வழியாக என் பெயரை அறிந்தவர்கள். அவர்களில் பலர் என் ஓரிரு நூல்களையாவது படித்துமிருந்தனர். அந்த விசை எனக்கு மிக நிறைவளித்த ஒன்று.
அவர்கள் என்னிடம் கண்டது, நேர்நிலையான செயல்வேகம். வாழ்க்கையை நுட்பமாகவும் முழுமையாகவும் பார்க்கும் பார்வை. அரசியல் சார்ந்து அல்லது வேறேதேனும் தரப்புகள் சார்ந்து எளிமைப்படுத்தாமலிருக்கும் தீவிரம். அவர்களிடம் நான் கண்டது இன்றைய பொதுச்சூழலில் இருக்கும் கூச்சல்களை கண்டு கண்டு உருவான சலிப்பு. எதையாவது செய்யவேண்டும் என்னும் ஆர்வம்.
அந்த ஆர்வமே அவர்களை நோக்கி ஈர்க்கிறது
ஜெ
லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா
அன்புள்ள ஜெ,
உங்களுடைய சமீபத்திய உரையை கேட்டேன்.
அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பற்றி பேசுவதில், உள்ளுக்குள் வகுத்திருக்கும் சுய எல்லைகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள். நேர்ப் பேச்சிலும் சொல்லியிருக்கிறீர்கள். சில நேரங்களில் அது எனக்கு ஏமாற்றமாகக் கூட இருந்திருக்கிறது. அரிய பாதையை கதவடைத்து மூடிவிட்டது போல. அத்தகைய தருணங்களில், மேற்கொண்டு கேள்விகள் கேட்க வேண்டும் என்றும் தோன்றும். ஆனால் தீர்மாணமான உங்கள் முகபாவத்தை கண்டு அமைதியாகிவிடுவேன்.
இந்த உரையும் அக்குறிப்புடனே துவங்குவதால், தொடர்ந்து நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்று மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தேன். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ அத்தனையையும் சொல்லிவிட்டீர்கள். கறாரான விமர்சனங்கள். சிந்தனையை விரட்டும் கருத்துக்கள். எழுத்து பற்றிய நுட்பமான அறிவுறுத்தல்கள். ஒரு மாணவனாய் அவற்றை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
பெங்களூர் இலக்கிய விழாவில் சந்தித்தபோது, காட்சி ஊடகத்தின் எதிர்மறை தாக்கம் பற்றி உங்களிடம் கேட்டேன். திரைக்கதைகளின் பாதிப்பால் சமகால புனைவெழுத்தில், கதை எழுதுவதைக் காட்டிலும் கதை சுருக்கத்தை எழுதும் போக்கும் அதிகரித்திருக்கிறது என்று சொன்னீர்கள். அதுவே இந்த உரையில் இன்னும் நேர்த்தியாக விரித்தெடுக்கப்பட்டிருந்தது. ஒரு கவித்துவ கண்டடைதலாக முன்வைக்கப்படுகிறது. புனைவெழுத்து என்பது காலத்தை நீட்டிக்கும் செயல் என்று நீங்கள் சொன்னது அவ்வளவு துல்லியமான வரையறையாக இருந்தது.
கலை பற்றிய எந்த வரையறையும், கடைசியில், இந்த இடத்துக்கே வந்து சேரும் போல. சினிமா,காலத்தில் செதுக்குவது என்பது ஆந்த்ரே தர்க்காவ்ஸ்கியின் புகழ்பெற்ற சொற்றொடர். ஆனால், நீங்கள் அதை சொன்ன விதம் பரவசமாய் இருந்தது. எழுதும் முறையில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டி அதை இயல்பாக ஒரு தத்துவமாக விரித்துவிட்டீர்கள். இலக்கியத்துக்கும் நிஜ வாழ்க்கைக்குமான வேறுபாடு – ஓர் அனுபவத்தில் பங்கெடுக்கும்போதே அதை விலகி நின்று அறிவதற்கான இடைவெளியே. இலக்கிய எழுத்தாளன் மறுமுனையில் காலத்தை நீட்டித்து வைத்திருப்பதாலேயே அது நடக்கிறது என நம்புகிறேன்.
இலக்கிய படைப்புகள் மேல் சில வாசகர்கள் விசித்திரமான ஒரு விமர்சனத்தை முன்வைப்பார்கள். “ஒன்றுமே நடப்பதில்லை” என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாக இருக்கும். உண்மையில் இலக்கியப் படைப்பில், காலம் நீண்டுக் கொண்டேச் செல்கிறது. சுற்றியிருப்பவற்றை பார்ப்பதற்கான, தியானிப்பதற்கான அவகாசம் கிடைக்கிறது. உணர்ச்சிகளை புரிந்துகொள்ள முடிகிறது. மெல்ல துலங்கி வரும் உண்மையை உற்று கவனிக்க முடிகிறது. அவ்வகையில், உங்கள் உரை முக்கியமான தெளிவை அளித்தது. அல்லது கேடயம் போல ஒரு பாதுகாப்பினை.
ஒவ்வொரு புனைவுத் தருணத்திலும் எழுத்தாளன் தரித்து நிற்க வேண்டியிருக்கிறது. எழுத்தாளன் வெளிப்படுவது, “கதை” என்று நம்பப்படுகிற சம்பவங்களின் கோர்வையில் மட்டுமல்ல; விவரனை, எண்ணவோட்டம், படிமம் என்று புனைவில் அவன் தரித்து நிற்கும் இடங்களிலேயே தன்னை மீறி வெளிப்படுகிறான். அதாவது, காலத்தை விரித்தெடுக்கும்போது.
உங்கள் உரையின் கடைசி பகுதி அதே கருத்தை மேலும் ஆழமாக பேசியது. புனைவில் எழுத்தாளன் வெளிப்படும் இடமே, கலை மதிப்பு மிக்கது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டீர்கள். இதை நான் சொந்த அனுபவமாகவும் அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் தன் பாதையை தேர்ந்தெடுக்கும் விதம் தீராத புதிரே. எல்லா எழுத்தாளர்களுமே வெவ்வேறு வார்த்தைகளில் இதை சொல்லியிருக்கிறார்கள். சார்லஸ் சிமிக் தன் கவிதைகள் பற்றி ஆச்சர்யத்தோடு சொல்கிறார். “கடவுளே, இது எப்படி என் தலைக்குள் நுழைந்தது? இது எப்படி இந்த பக்கத்தில் வந்தது?”. மொழியின் நனவிலியும் எழுத்தாளனின் நனவிலியும் சந்திக்கும் இடத்தில்தான் ஒரு புதிய திறப்பு நடக்கிறது. மொழியில் கண் விழிக்கும் புதியதோர் பிரக்ஞை. அதனாலேயே எழுத்தாளன் தன் நனவிலியை தடுக்கும் எந்த தர்க்க கட்டுபாட்டையும் -அரசியல் சார்பு முதல் கோட்பாட்டுச் சார்புவரை- விலக்க வேண்டியிருக்கிறது.
உங்கள் உரையின் அடுக்குமுறையும் முக்கியமானது. வாசகர்கள் பற்றி முதலில் பேசி, பிறகு எழுத்தாளன் நோக்கி சென்று, இலக்கியம் ஓர் உரையாடல் என்பதை நிறுவுகிறீர்கள். இலக்கியம் அந்தரங்கமான ஓர் உரையாடலாக இருப்பதனாலேயே, புனைவில் இயல்பான மலர்ச்சி நிகழும்போது, அதை வாசகன் உடனடியாக அடையாளம் கண்டுபிடித்துவிடுகிறான். போலவே அத்தகைய மலர்ச்சி நடக்காதபோதும் அவனால் உடனே இனங்காண முடிகிறது. “ஒரு கதை சமைக்கப்பட்டது” என்று வாசகன் சொல்லும்போது அது ஆதாரமில்லாத நிரூபிக்கமுடியாத கருத்து போல தோன்றும். ஆனால் நேர்மையான ஒரு வாசகனால் அதை சரியாகவே கணித்துவிட முடியும்.
ஒரு கதை தன்னில் வளராமல் – முடிவற்ற பெருக்காய் மாறாமல்- ஓர் எல்லைக்குள் சுருங்கும்போது அக்கதை நிகழவில்லை; சமைக்கப்பட்டிருக்கிறது என்று வாசகன் உணர்கிறான். சமைக்கப்பட்ட எழுத்து என்று நாம் சொல்வது, எழுத்து நிகழாமல், எழுத்தாளன் தன் திட்டத்தில் துளி பிசிறில்லாமல் எழுதுவது. அல்லது தன்னை முன்வைப்பது. நல்ல வாசகர்களையும் சமயங்களில் திட்டமிட்ட எழுத்து ஏமாற்றிவிடும். அதைவிட பெரிய துரதிருஷ்டம் எழுதிய எழுத்தாளர்களையும் ஏமாற்றிவிடும் என்பதுதான். அதனாலேயே “எச்சரிக்கை தேவை” என்று மந்திரம் போல தனக்குள்ளேயே சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றது விதி வழி!
இந்த மாலைப் பொழுது உங்கள் பேச்சால் அழகாய் மாறியிருக்கிறது. தன்னம்பிக்கையும் பணிவும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன. கலை நம்மை மீறி நிகழ்வது என்பது மிக மிக எளியவனாக உணர வைப்பதோடு நிறைவையும் கொடுக்கிறது.
நன்றிகள்!
“காலமும் ஐந்து குழந்தைகளும்” கதையில் அசோகமித்திரன்,
“நான் ரெயிலைப் பிடிக்க வேண்டும். அல்லது அது என்னை விட்டுப் போய்விட வேண்டும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரை நிமிடம். அதிகம் போனால் ஒரு நிமிடம். ஆனால் இதென்ன மணிக்கணக்காகச் சிந்தனைகள்? எத்தனை சிந்தனைகள், எவ்வளவு எண்ணங்கள்! எண்ணங்கள் என்பது வார்த்தைகள். வார்த்தைகள் காலத்துக்கு உட்பட்டவை. இவ்வளவு நேரத்தில் அதிகபட்சம் இவ்வளவு வார்த்தைகளே சாத்தியம் என்ற காலவரைக்கு உட்பட்டவை. ஆனால் மணிக்கணக்கில் எண்ணங்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கிறேன்! கடவுளைக்கூடக் கொண்டு வந்துவிட்டேன்! கடவுள் காலத்துக்கு உட்பட்டவரா?
எனக்குத் தெரியாது. எனக்கு காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை, இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது இரண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுதத்து என்று ஏற்படும்போதுதான் காலம்”
அன்புடன்,
விஷால் ராஜா
கொல்வேல் அரசி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கீதையில் அர்ஜுனன்
சஞ்சலம் ஹி மன்: க்ருஷ்ண ப்ராமதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ சுதுஸ்கரம்
என மனதை அலையும் தன்மையுடது, திகைக்கக் செய்வது, வலிவுடையது,திடமுடையது, அதை அடக்குவது காற்றை அடக்குவது போல இயலாத காரியமாக சொல்கின்றான்.
அதற்கு கண்ணன் “குந்தியின் மைந்தா அதை அப்பியாசத்தாலும், வைராக்கியத்தாலும் அடக்கலாம்” என சொல்கின்றான்.
கொல்வேல் அரசியில் நீங்கள் சொன்ன ‘ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும்’ (அர்ஜுனன் கூற்று) ‘நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை. இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன்’ (கண்ணன் காட்டிய வழி)
என்பது கீதை உரையாடலினை கண் முன் நிறுத்தியது. நாடிய லட்சியத்து அல்லது வழிபடு தெய்வத்திடத்து மனதை திருப்புவது அப்பியாசமாகும் என சித்பவானந்தரின் கீதை உரையில் வரும். எழுத்து என்னும் வழிபடு தெய்வம் கொல்வேல் தேவியாக உடனிருந்து அருளியது தெரிகின்றது.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தனக்கு இட்டுக் கொண்ட ஆணை போல தனக்கு இட்டுக் கொண்ட கட்டளை இருக்கிறது.
படைப்பூக்கம் தெய்வம். அது வியாரிடத்து விநாயகனாக வந்தது. குமரகுருபரரிடத்தும், அருணகிரிநாதனிடத்தும் முருகனாக வந்தது. காளிதாசனிடம் அது காளியாக நின்றது. சமகாலத்தில் ஆசானுக்கு கொல்வேல்தேவியாக தரிசனம் தருகின்றது.
அன்புடன்
நிர்மல்
February 7, 2023
தவாங் சமவெளி பயணம்
இன்று (8 பெப்ருவரி 2023) காலை எட்டு மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பி அருணாச்சலப்பிரதேசம் டவாங் சமவெளிக்கு ஒரு பயணம். நண்பர்கள் கிருஷ்ணன், சந்திரசேகர், அரங்கசாமி, திருப்பூர் ஆனந்த் மற்றும் பாலாஜி உடனிருக்கிறார்கள். 17 மாலைதான் திரும்புவோம். நீண்டகாலம் திட்டமிட்டு தவறிப்போன பயணம். உரிய ராணுவ அனுமதிகள் எடுக்க சில சிக்கல்கள். தவாங்கில் இப்போது பனிப்பொழிவு உள்ளது. 12 கிலோ மீட்டர் மலையேற்றப்பயணமும் எங்கள் திட்டத்தில் உண்டு.
காமம், உணவு, யோகம்-2
Eliza Lynn Tobinயோகமரபு காமத்தை ஒரேவகையாக விளக்கிக் கொள்ளவில்லை என்னும் தெளிவு நமக்குத் தேவை. பலசமயம் ‘முதிரா யோக’ வகுப்புகள் அந்த குழப்பமான புரிதலை அளித்துவிடுகின்றன.
காமம் உயிர்விசை. அதன் ஆற்றல் எதிர்மறையானது அல்ல. நித்யசைதன்ய யதியிடம் நடராஜ குரு சொல்வது அதையே. அதை ‘அறியச்’சொல்கிறார். அஞ்சி விலக்கச் சொல்லவில்லை. ஒடுக்கச் சொல்லவில்லை.
காமம் மட்டுமாக எங்கும் பேசப்படுவதில்லை என்பதை நினைவுகூர்க. காமமும் குரோதமும் மோகமும் இணைத்தே எப்போதும் பேசப்படுகின்றன. காமம் என்பது ஓர் உயிர் பெருகி நிறைவதற்காகக் கொள்ளும் விழைவு. மோகம் என்பது அது உலகை நிறைப்பதற்குக் கொள்ளும் விழைவு. அவ்விரு விழைவுகளும் தடைபடும்போது உருவாவது வஞ்சம், கோபம். அதுவே குரோதம்.
இம்மூன்றையும் ஒட்டுமொத்தமாக மேலை உளவியலில் id என்கிறார்கள். அடிப்படை உணர்ச்சிநிலைகள். அவையே மானுடனின் தன்னுணர்வு ஆகின்றன. நாம் அதையே அகங்காரம் என்கிறோம். அகம் என்றால் நான் என்னும் நிலை. அகங்காரம் என்பது நான் என நாம் நம்மை உணரும் விதம்.
இரண்டுவகையான வாழ்வுப்பாதைகள் உள்ளன. ஒன்று செயலூக்கம் கொண்டு விரிவது. இன்னொன்று ஒடுங்கிச் சுருங்கி உள்ளே செல்வது. இரண்டுமே நிகரானவையே. அவரவர் இயல்புக்கு ஏற்ப அவை அமைகின்றன.
செயலூக்கம் கொண்ட பாதையில் காமம் ஆற்றலின் ஊற்றாக அமையும். சிந்தனைத் திறன், கலைத்திறன் ஆகியவற்றின் ஊற்றுக்கண் அது. மோகம் கற்பனை, இலட்சியவாதம் ஆகியவற்றின் வேர். அதன் விளைவு குரோதம். அதை எந்த அளவு வெல்ல முடியுமோ அந்த அளவு நல்லது. ஆனால் செயலூக்கத்தின் பாதையில் குரோதத்தை முழுக்க தவிர்க்க முடியாது.
காமத்தை இழக்குந்தோறும் நாம் அந்த அடிப்படை செயல்விசையை இழப்போம். மோகம் மடிந்தால் செயல்கள் பொருளில்லாதவையென தோன்றும். ‘காமமோகிதம்’ எனப்படும் நிலையை ரதி என சொல்கிறார்கள். அதுவே பற்று. அது இல்லாத நிலை அரதி. அதுவே சோர்வு சலிப்பு. விரதி என்றும் விரக்தி என அதைச் சொல்கிறார்கள்.
காமகுரோதமோகங்களில் உள்ள குரோதத்தை முற்றிலும் வெல்லவேண்டும் என்றால் காமமும் மோகமும் அகலவேண்டும். அதன்பொருட்டு தன்னை முற்றாக ஒடுக்கிக் கொள்பவர்கள் இன்னொரு வழியில் செல்கிறார்கள்.
துறவிகளிலேயே இந்த இருவழிகளும் உண்டு. செயலூக்கத்துடன் உலகை எதிர்கொள்பவர்கள், உள்ளூர தன்னை ஒடுக்கிக் கொள்பவர்கள். பௌத்த துறவியர்களில் இவ்விரு பிரிவுகளும் மிக தெளிவான இரு மரபுகளாக பிரிந்தன. ஒடுங்குபவர்கள் ஹீனயானிகள் அல்லது தேரவாதிகள் (ஸ்தவிரவாதிகள், அதாவது நிலைகொள்பவர்கள்) செயலூக்கம் கொண்டவர்கள் மகாயானிகள்.
செயலூக்கம் கொள்பவர்களின் வழி காமத்தை அறிந்து கடத்தல். அதற்கும் இரண்டு வழிகள் உண்டு. காமத்திலாடி அதை அறிபவர்கள் தாந்த்ரீகர்கள். இன்னொரு வழி காமத்தை குறியீடுகள் வழியாக, கலைவழியாக, உன்னதமாக்கி கடத்தல் (sublimation). அது அழகியல் வழி. முதல்வழி வாமம் (இடப்பக்கம்) என்றும் இரண்டாம் வழி தக்ஷிணம் (வலப்பக்கம்) என்றும் சொல்லப்படுகிறது.
தந்த்ரா ’அனுபவத்தை விலக்கத்துடன் ஈடுபட்டு அறிவது’ என்னும் வழிமுறையை முன்வைப்பது. அகப்பயிற்சி வழியாகவும் பலவகை குறியீட்டுச் சடங்குகள் வழியாகவும் அந்த விலக்கத்தை அவர்கள் அடைகிறார்கள்.
அழகியல் வழிமுறையின் கலையிலக்கியங்கள் வழியாக, பல்வேறு குறியீடுகள் வழியாக காமத்தை உன்னதப்படுத்துகிறார்கள் (sublimation) சௌந்தரிய லகரி , அஷ்டபதி போன்ற கவிதைகளில் வெளிப்படுவது அந்த உன்னதமாக்கலே. அஜந்தா ஓவியங்கள் பௌத்த துறவிகள் தங்கள் காமத்தை உன்னதமாக்கிக் கொள்ள கலையை பயன்படுத்தியமையின் வெளிப்பாடுகள்.
ஒடுக்கிக் கொள்ளும் முறையை பின்பற்றுபவர்களுக்கு அவர்களுக்கான கடும் நெறிகள் உண்டு. அன்றாடவாழ்க்கையின் எல்லா களங்களிலும். பேச்சு, உணவு, உறைவிடம் அனைத்திலும். அந்த வழி உலகியலில் ஈடுபடுபவர்களுக்குரியது அல்ல. தாந்த்ரீக வழிமுறையும் அன்றாட உலகியலுக்குள் இயற்றப்படுவதல்ல.
உலகியலில் ஈடுபடும் துறவியருக்குரிய வழி என்பது உன்னதமாக்கல் மட்டுமே. அழகியலால், கலையால் காமகுரோதமோகங்களை அறிந்து கடந்துசெல்லுதல். முற்காலத்தில் புராணங்கள் அதற்குரியவையாக இருந்தன. இன்று அந்த இடத்தில் இலக்கியத்தை வைக்கலாம். நித்ய சைதன்ய யதி விக்டர் ஹ்யூகோவின் லெ மிசரபில்ஸ் நாவலை ஒரு பெரும்புராணமாகக் கண்டு ஆழ்ந்து பயின்றிருக்கிறார்.
இப்பின்னணி விளக்கத்துடன் உங்கள் கேள்விக்கு வருகிறேன். நீங்கள் யார்? ஆசாரவாதத்தை தெரிவுசெய்துள்ளீர்களா? அல்லது துறவுபூண்டு ஒடுங்கும் வழியை தெரிவு செய்துள்ளீர்களா? இரண்டில் எதற்காவது ஆம் என்றீர்கள் என்றால் நீங்கள் காமகுரோதமோகங்களை ஒடுக்கவேண்டும். அதன்பொருட்டு உணவுக்கட்டுப்பாடுகளை பேணவேண்டும்.
ஆனால் நினைவில்கொள்ளுங்கள். காமத்தை மட்டுமாக ஒடுக்க முடியாது. கூடவே மோகமும் ஒடுங்கும். செயலூக்கமும் ஒடுங்கும். அது உலகியலில் நாம் தேடும் அமைதி அல்ல, அது ஒருவகை அடங்கி அமைதல் மட்டுமே. உலகியலில் நமக்கு பல இன்பங்கள் உள்ளன. உணவு, காமம் போன்ற உடலின்பங்கள் மட்டுமல்ல. கலையின்பம், அறிதலின் இன்பம் போன்றவையும் உள்ளன. அவையும் மெல்ல இல்லாமலாகக் கூடும்.
ஏனென்றால் இன்பம் என்பது விழைவின் மறுபக்கமாக நாம் அடையும் நிறைவு. விழைவடங்கினால் இன்பம் இல்லை. விழைவும் அதன் நிறைவும் நம்மில் உருவாக்குவது ஒருவகை கொந்தளிப்பையும் அலையையும்தான். ஆசாரவாதம், ஒடுங்கும்தவம் இரண்டுமே அந்த கொந்தளிப்பு, அலை இரண்டையுமே எதிர்நிலையாகப் பார்ப்பவை.
உங்கள் வழி மேலே சொல்லப்பட்ட இரண்டும் இல்லை என்றால் உங்களுக்கான வாழ்க்கைமுறை வேறு. நீங்கள் பக்தி, யோகம், ஞானம் என மூன்றிலொரு வழியை கடைப்பிடித்தால் ஆசாரவாதத்தின் இறுக்கமோ, ஒடுங்கும்முறையின் நோன்புகளோ தேவையில்லை. அவற்றை நிபந்தனைகளாக ஆக்கிக்கொண்டு குற்றவுணர்ச்சி அடையவேண்டியதில்லை.
நீங்கள் உலகியலில் இருக்கிறீர்கள். அன்றாடவாழ்க்கையை இயற்றவேண்டியிருக்கிறது. அதில் உங்கள் அகங்காரம் செயல்பட்டே ஆகவேண்டும். அகங்காரம் என்பது காம-குரோத-மோகம் வழியாகவே செயல்பட முடியும். ஆகவே காமத்தை முற்றொடுக்குவதெல்லாம் உங்கள் வாழ்க்கைச் சூழலில் இயல்வதே அல்ல.
இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள், காமகுரோதமோகத்தை ஒறுத்தல் என்பதை இயற்றுபவர்கள் தங்கள் புறவாழ்க்கையை மிகமிகமிகச் சிறியதாக ஆக்கிக் கொள்ளவேண்டும். ஆசாரவாதிகள் மிகச்சிறிய வாழ்க்கைவட்டத்திற்குள் மீண்டும் மீண்டும் ஒன்றே நிகழும் வாழ்க்கையை வாழ்வார்கள். மாற்றமே இல்லாத அன்றாடம் கொண்டிருப்பார்கள். ஒடுங்குதவம் மேற்கொள்பவர்கள் ஆசிரமங்களில் தனிமையில் வாழ்வார்கள். அவர்கள் புறவுலகுடன் கொள்ளும் உறவும் மிகக்குறைவாக இருக்கும்.
அத்துடன் இந்த கட்டுப்பாடு நோன்புகள் காமத்தை ஒடுக்குதலாக மட்டுமே நிகழமுடியாது. ஐம்புலன்கள் மீதும் கட்டுப்பாடுகள் தேவை. குறிப்பாக கண். நீங்கள் ஒவ்வொருநாளும் தொலைக்காட்சியில் அழகிகளை பார்த்தபடி உள்ளத்தை ஒடுக்க முடியாது. நாக்கு இணையாகவே முக்கியமானது. ஒடுங்குதவம் செய்பவர்கள் நேரடியாகச் செல்வது மௌனம் நோக்கி. பேச்சு பேசுபவனின் அகத்தை உலகம் நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே தொடர்ச்சியாக தியான மந்திரங்களை அகத்தும் புறத்தும் சொல்கிறார்கள்.
புறஉலகத்தை விலக்குபவர்கள் புற உலகம் தங்களையும் அவ்வாறே விலக்கவேண்டும் என நினக்கிறார்கள். ஆகவே காவி போன்ற ஆடைகள். தீக்ஷை (தாடி) போன்ற தோற்றங்கள்.
இத்தனை செயல்பாடுகளுடன் இணைந்தே உணவுக் கட்டுப்பாடுகள். அதாவது உடலை வளர்க்கும் தன்மைகொண்ட உணவுகளை தவிர்த்தல். புலன்தூண்டும் உணவுகளை தவிர்த்தல். சாத்விக உணவு எனப்படுவனவற்றை மிகக்குறைவாக உண்ணுதல்.
மற்றபடி நீங்கள் எண்ணுவதைப் போல உணவை மட்டுமே குறைத்துக்கொண்டால் காமமோ குரோதமோ மோகமோ மட்டுப்படாது. அது ஒரு தற்பாவனை மட்டுமே. பிறப்புச்சூழலால் சாத்விக உணவு மட்டுமே உண்ணும் பழக்கம் கொண்டவர்கள் உண்டு. அவர்களெல்லாம் காமகுரோதமோகங்களை வென்றவர்கள் அல்ல. பலசமயம் சராசரியை விட அவை அவர்களிடம் கூடுதலாகவே இருப்பதைக் காணலாம். காரணம், தங்கள் உடல் பலவீனமானது என்னும் எண்ணமே அவர்களை காமகுரோதமோகங்களை உள்ளூர பெருக்கிக்கொள்ளச் செய்கிறது.
யோகத்தின் வழிமுறைகளை சரியாக பின்பற்றுபவர்கள் முதலில் தாங்கள் எந்நிலையில் இருக்கிறோம் என்பதையே உணர்வார்கள். அந்நிலையில் இயற்றப்படத்தக்கது என்ன என்பதை வகுத்துக் கொள்வார்கள். அதற்குத்தான் நல்ல யோக ஆசிரியர் வழிகாட்டுவார். யோகம் பயில்வது என்பது ஒருவகை கல்விதான். அகக் கல்வி. கல்வி எந்நிலையிலும் மகிழ்ச்சியையே அளிக்கும். கற்கக் கற்க மகிழ்ச்சி பெருகும்.
ஆகவே கடுமையான நிபந்தனைகள், எய்தமுடியாத இலக்குகள், அவை சார்ந்த குற்றவுணர்ச்சிகள் ஆகியவை யோகத்தின் வழிமுறைகளாக இருக்க முடியாது. காமகுரோதமோகங்களை பெருக்குவது யோகம் அல்ல. அவற்றை ஒடுக்க முயல்வதும் யோகம் அல்ல. அவற்றை அறிந்து இயல்பாக கடந்தமைய வழிவகுப்பதே யோகம்
(மேலும்)
அழகியநாயகி அம்மாள்
அழகியநாயகி அம்மாள் தமிழில் ஒரே ஒரு நூல்தான் எழுதியிருக்கிறார். அதை அவர் மகன் எழுத்தாளர் பொன்னீலன் தொகுத்து நூல்வடிவாக்க தூயசவேரியார் கல்லூரி நாட்டாரியல் துறை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த தன் வரலாறுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று அந்நூல். ‘கவலை’ ஒரு சாமானியப்பெண்ணின் வாழ்க்கை சென்றநூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதை பதிவுசெய்கிறது.
அழகியநாயகி அம்மாள்
அழகியநாயகி அம்மாள் – தமிழ் விக்கி
எமிலி,மோகனரங்கன் – தேவி.க
அன்புள்ள ஆசிரியர்க்கு,
இந்த உலகம் அழகாலும் இனிமையாலும் நிறைந்துள்ளது. காய்ந்து உதிர்ந்து கிழே விழுந்துகிடக்கும் இலைச்சருகு மேல் வெயில் படரும் போது அது கொள்ளும் அழகு அத்தனை தனித்துவமானது. எவ்வளவு குழப்பங்களுடனும் சோர்வுடனும் மனம் இருந்தாலும் சாலையின் ஓரத்தில் பூத்திருக்கும் சிறிய மஞ்சள் நிற பூக்கள் கவனத்தை ஈர்த்து விடுகின்றன நொடியில் ஒரு மலர்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்து விடுகிறது.
ஒருமுறை ஊரில் கோவில் விழாவில் உற்சவர் ஆலயத்தை சுற்றி வரும் போது எல்லோருமே பக்திப்பெருக்கில் திருநாமங்களை கூவிக்கொண்டு இருந்த போது மேற்கே சூரியன் அஸ்தமித்த வண்ணம் இருந்தது மேகங்கள் அற்ற வானில் அடர்சிவப்பில் வெய்யோன் காட்சி அளித்தார் நான் பார்த்த மிகச்சிறந்த அஸ்தமனம் அது. மெல்ல கூட்டத்தில் இருந்து விலகி வந்து தனியே நின்ற என்னை வசைபாடி அழைத்து சென்றார்கள். நம் மரபு அழகையும் இனிமையையும் விலக்கவில்லை மாறாக அதன் வழியே சென்று எய்த வேண்டியதை எய்தலாம் என்கிறது.
இமைக்கணத்தில் திரெளபதி கிருஷ்ணிடம் “யாதவனே, எனக்கு நீ விழிநிறைக்கும் அழகும் உளம் நிறையும் இனிமையும் மட்டுமே. பீலியும் குழலும் அன்றி வேறல்ல.” என்கிறாள். நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ எனக்கு ஒன்றுமில்லை எனக்கு நீ என் கண் நிறைக்கும் அழகு மட்டுமே என்கிறாள். அழகு அன்றி எதையுமே தன்னால் நினைக்க கூடவில்லை இனிமையை விலக்கியதும் இல்லை என்கிறாள் அவ்வழியே செல்லும் தனக்கு அருள வேண்டுகிறாள். கிருஷ்ணனும் ஒரு அழகையும் ஒருத்துளி இனிமையையும் விலக்க வேண்டியதில்லை அனைத்து அழகுகளையும் அத்தனை இனிமைகளையும் சூடுக என்கிறார். அனைத்து பாதைகளும் அங்கே சென்று சேரும் எல்லோருக்குமான பொதுபாதை ஒன்றில்லை ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய வழி உண்டு. அழகும் இனிமையும் உண்மையும் ஞானமும் சென்று சேரும் இடம் ஒன்றே என்கிறார்.
எமிலி டிக்கின்சன் கவிதை ஒன்று
க. மோகனரங்கன் அவர்கள் மொழிப்பெயர்த்தது..
” அழகிற்காக வேண்டி நான் மரித்தேன்.
கல்லறைத் தோட்டத்திலோ பற்றாக்குறை.
உண்மையின் பொருட்டு இறந்த ஒருவர் அடுத்திருந்த இடத்தில் கிடத்தப்பட்டார்.
அவர் மெல்ல வினவினார்
எதனால் நான் மூச்சிழந்தேன்?
‘அழகிற்காக வேண்டி‘ பதிலளித்தேன்
‘நான் உண்மையின் பொருட்டு இரண்டும் ஒன்றே:
நாம் சோதரர்கள்‘ அவர் சொன்னார்
ஆக ஒரிரவில் சந்திக்க வாய்த்த உற்றார் போலும்
நாங்கள் படுக்கைகளுக்கிடையே பேசிக்கொண்டோம்
பாசி எம் உதடுகளை மேவும் வரையிலும்
படர்ந்து எமது பெயர்களை மூடும் மட்டும்.”
எமிலி டிக்கின்சன் கவிதைகளில் தொடர்ந்து கடவுளும் மரணமும் மரணமின்மையும் தனிமையும் பேசப்படுகின்றன. டிசம்பர் 10 1830 ல் மாசசூசெட்ஸ் நகரில் பிறந்த ஒரு அமெரிக்க பெண் கவிஞரான அவர் தான் வாழ்ந்த காலத்தில் அறியபடாதவராகவே இருந்தார். அவரைப் பற்றிய தகவல்கள் பல ஆச்சரியம் அளிப்பவை கூடவே துயரத்தையும். எமிலி வாழ்வின் பெரும் பகுதியை தனிமையில் கழித்தார் குறிப்பிட்ட காலத்திற்கு பின் வீட்டை விட்டு எங்கும் சென்றதில்லை எப்போதும் வெள்ளைநிற ஆடைகளையே அணியும் வழக்கமுள்ளவராக இருந்துள்ளார் அவர் இருந்த வரை பத்திற்கும் குறைவான கவிதைகளே வெளியாகியுள்ளன. 1886 மே 15ல் அவர் மறைந்தார். அதன் பிறகு அவரின் அறையில் இருந்த ஒரு பெட்டியில் இருந்து எமிலியின் தங்கை லவினியா கவிதைளை கண்டெடுத்தார் ஏறத்தாழ 1800 கவிதைகள். எமிலி டிக்கின்சன் முதல் கவிதைத் தொகுப்பு 1890 ல் வெளியிடப்பட்டது ஆனால் அவை பலமுறை திருத்தப்பட்டே வெளிவந்தன காரணம் கவிதைகளின் பேசுப்பொருள் அக்காலத்திற்கு மீறியதாக இருந்ததாக எண்ணியது தான். அதன் பிறகு 1955 ல் அறிஞர் தாமஸ் எச். ஜான்சன் “The poems of Emily Dickinson” என்ற முழுத்தொகுப்பை வெளியிட்டார்.
எமிலியின் கவிதைகளிலும் கடிதங்களிலும் திரும்ப திரும்ப ஒரு பெயரை நீக்கம் செய்துள்ளதாக The New York times 1998 ல் அறிக்கை வெளியிட்டது, “சூசன்” என்பதே அப்பெயர். சூசன் ஹண்டிங்டன் கில்பர்ட் டிக்கின்சன் எமிலியின் தோழியும் அவரது அண்ணனின் மனைவியும் ஆவார். எமிலி தன்னுடைய எண்ணங்களையும் கனவுகளையும் அலைபாய்தல்களையும் அதிக அளவில் சூசனிடம் பகிர்ந்துக் கொண்டுள்ளார் மேலும் அவருடைய கவிதைகளை வாசித்த ஒரே நபராக சூசன் இருந்துள்ளார் சில கவிதைகள் அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே இருந்த உறவின் தீவிரத்தை பற்றிய கருத்துக்கள் இருவேறாக இருக்கலாம். எவ்வண்ணம் இருப்பினும் கவிஞர்கள் கவிஞனாகவே நீடிக்கிறார்கள்.
பொறாமையுடைய கடவுள்
கடவுள் மெய்யாகவே பொறாமைபிடித்தவர் ,
அவரோடில்லாமல் நாம்
ஒருவரோடொருவர் விளையாடிக் கொள்வதை
காணப் பொறுக்காது அவருக்கு .
(க. மோகனரங்கன். )
எவ்வளவு சத்தியம் எமிலியின் இந்த வரிகள். கடவுளை விட பொறாமை பிடித்தவர்கள் யாராவது இருக்க முடியுமா? எத்தனை சீக்கிரத்தில் ஆட்டத்தையே மாற்றிவிடுகிறார். இதோ இந்த உறவு இப்படியே தான் தொடரப்போகிறது நானும் நீயும் கண்ணில் நீர் வர சிரித்து ஆடுகிறோம் இது முடிய போவதில்லை என்னும் கணத்தில் எல்லாம் கலைந்து விடுகிறது ஏன் என்று சமயங்களில் தெரியாமல் கூட போய்விடும். இப்போது தெரிகிறது எல்லாம் பொறாமை பிடித்த கடவுளின் காரியம்.
வேலிக்கு அப்பால்
வேலிக்கு அப்பால்
ஸ்ட்ராபெர்ரிகள் விளையும்
நான் முயன்றால் வேலியைத்
தாண்டிக் குதித்துவிட
என்னால் முடியும்.
நான் அறிவேன்
பெர்ரிகள் சுவையானவை
ஆனால் என்ன செய்வது?
எனது மேலங்கியை நான் அழுக்காக்கிக் கொண்டால்
கடவுள் நிச்சயமாகக் கோபிப்பார்
அன்பே நான் யூகிக்கிறேன்
அவர் ஒரு சிறுவனாக இருந்தால்
அவரும் எட்டிக் குதிக்கவே செய்திருப்பார்.
( க. மோகனரங்கன்)
வேலியை தாண்ட முயலாதவர் எவர்? அந்த பக்கம் இருப்பது எப்போதுமே சுவையாகவும் இனிமையாகவுமே இருக்கிறது நம்மை இழுத்த வண்ணமே உள்ளது அது. தாண்டினால் எல்லாமே அழுக்காகி விடும் அதனால் அது கடவுளின் பெயரால் மறுக்கப்படுகிறது அச்சுறுத்தப்படுகிறது. உள்ளம் வேலியை தாண்டுவதையே எண்ணுகிறது சமயங்களில் தாண்டிவிடுகிறது ஆனாலும் அங்கியாகிய உடல் அழுக்காகிவிடும் என்றும் பதறுகிறது. சிறுவர்களுக்கு கள்ளமில்லை ஏனெனில் அங்கிகளை பற்றி அறியமாட்டார்கள் அவர்கள் தாண்டலாம். கடவுளுக்கும் வாய்ப்பு குறைவுதான் ஒருவேளை அவர் சிறுவனாக மாற முடிந்தால் தாண்டி குதிக்கலாம்.
க. மோகனரங்கன் அவர்களுக்கு நன்றி.
மிக்க அன்புடன்
தேவி. க
ஆவடி.
புத்தகக் காட்சியில்…கடிதம்
நான் தங்களையும் அஜிதனையும் 10.01.23 அன்று புத்தக கண்காட்சியில் சந்தித்த தருணம் என் வாழ்நாளில் மற்றுமொரு இனிய மறக்கவியலாத நன்னாள். இனிய முகத்துடன் இருவரும் உரையாடியது மனதை நெகிழவைத்தது. முதல் சந்திப்பென்பதால் சிறிது தயக்கமும் கூச்சமும்.
நான் தமிழ்நாடு அரசின் துணைச்செயலாளர் பணியிலிருந்து 2010 செப்டம்பர்மாதம் ஓய்வு பெற்றேன். எனது துணைவியார் BSNL ல் பணிபுரிந்து விருப்ப ஓய்வு(2013) பெற்றவர்.எனது தாத்தா 6-7 வயதினிலேயே தினமணி நாளிதழைஎன்னை வாசிக்கச்சொல்வார்கள். இது வாசிப்பார்வத்தை தூண்டும் காரணியாக அமைந்தது எனலாம்.
காடு நாவல் தவிர்த்து மற்றவை அனைத்தும் வாசித்ததாக நினைவு. தங்கள் வலைத்தளத்தினை தினமும் பார்த்து வருகிறேன்.வட்டார எழுத்தாளர் முதல் அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளை பணியிலுள்ளபோதும் பணிநிறைவடைந்தபின்னரும்(திரு.பொன்னீலன் அவர்களின் தாயார் எழுதிய வாழக்கைகுறிப்புகள் உட்பட)வாசிக்கும் பேறுபெற்றேன். சொல்வனம் ,வல்லினம், பேராசிரியை லோகமாதேவி வலைத்தளங்கள்அறிமுகமாகின.
தங்கள் பயணக்கட்டுரைகளை வாசிக்கும் தருணம் நானும் தங்களுடனேயே பயணிக்கும் உணர்வு.வல்லினம் தொடர்வாசிப்பின் காரணமாக திரு.நவீன் அவர்களின் சிகண்டி,பேய்ச்சி நாவல்களை புத்தக கண்காட்சியில் வாங்கியுள்ளேன்.கவ்வாலி இசை பற்றி தெரிந்துகொண்டது உங்கள் மூலமாகத்தான்.பிறமொழி எழுத்தாளர்கள் பற்றியும் அவ்வாறே.
வெண்முரசு எந்த மோனநிலையில் தாங்கள் எழுதினீர்களோ அதே நிலையில்தான் நானும் வாசித்தேன். குருசேத்திர போர் வர்ணனையை தாங்கள் எனக்குமட்டும் விவரிப்பதாக இருந்தது.
முனைவர் மதுரை சரவணன் உள்ளிட்ட இதர ஆர்வலர்கள் வெண்முரசு வாசிப்பனுபவம் குறித்த பதிவுகளுடன் வெண்முரசினை மீள்வாசிப்பு செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். இறையருள் வேண்டும். தங்கள் பதிவொன்றி்ல் வாசகர்கள் இலக்கியவாதியாகவோ விமர்சகராகவோ இருத்தல் அவசியமில்லை அவரவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்.அதன்படி எனக்குத்தேவையானவற்றினை எடுத்துக்கொள்கிறேன். என்னை ஈர்த்த கூற்றுக்கள் தந்தையர் மைந்தரிடத்து நீர்க்கடன் தவிர்த்து பிறிதொன்றும் எதிர்பாரக்கலாகாது -திருதராஷ்ரன் மரணம்அவரவர் இடத்திலேயே நிகழவேண்டும்
தங்கள் அடுத்த நாவல்(அசோக வனம்) எப்போது?நிறைவாக தமிழ் விக்கி -தமிழுலகில் தங்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்
அஜிதனின் புன்னகை என் நினைவில் மறையாது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மீண்டும் எனது வாழ்த்துகள்
சோ.மரகதம்
சென்னை 91
***
அன்புள்ள மரகதம் அவர்களுக்கு,
இலக்கியவாசகர் இலக்கியவிமர்சனப் பார்வை கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை. எழுத்தாளர் வாழ்க்கையை இலக்கியமாக்குகிறார். வாசகர் இலக்கியத்தை திரும்ப வாழ்க்கையாக ஆக்கிக்கொள்கிறார். வாழ்க்கை சார்ந்த ஒரு புரிதலை வாசகர் அடைந்தால் அதுவே நல்ல வாசிப்பு. அது அந்த ஆசிரியர் அளிக்கும் அறவுரை அல்ல. அந்த வாசகர் தானே கற்பனையில் ஒருவாழ்க்கையை வாழ்ந்து அடைவது மட்டுமே
சந்தித்ததில் மகிழ்ச்சி
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



