Jeyamohan's Blog, page 616

March 7, 2023

எம்.ஏ.நுஃமான்

தனிப்பட்ட ரசனை அல்லது தனிப்பட்ட சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்ட சமநிலை கொண்டவையாக நுஃமானின் ஆய்வுகள் அமைந்தன. 1985 முதல் தமிழின் பின்நவீனத்துவச் சிந்தனைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பார்வையுடன் முன்வைக்கப்பட்டபோது அந்த மிகையான ஆர்வத்துக்கு எதிராக நிதானமான கல்வித்துறை சார்ந்த முறைமையை முன்வைத்து விவாதிப்பவராக நுஃமான் செயல்பட்டார்.

எம்.ஏ.நுஃமான் எம்.ஏ.நுஃமான் எம்.ஏ.நுஃமான் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 10:34

யானை டாக்டரும் உயர்நீதிமன்றமும்

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். விருதுநகர் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள லலிதா என்ற யானை பராமரிப்பு குறித்து உயர் நீதிமன்றம் 27.2.23 பிறப்பித்த உத்தரவின் முதல் பத்தி:

WP(MD)No.7655 of 2020

G.R.SWAMINATHAN, J.

“Shri.B.Jeyamohan is an eminent literary figure. One of his books“Aram” has recently been translated by Ms.Priyamvada and publishedunder the title “Stories of the True”. “Elephant Doctor” (யானை டாக்டர்) figuring in the book presents Dr.K not as a mere Veterinarian but as one who dedicated his entire life for elephant care. I wish the Veterinarians attachedto the Department of Forests and Department of Animal Husbandry read thisstory and imbibe the spirit of the protagonist. Only then Lalitha will becomewhat she was.”

தங்கள் பார்வைக்கு. இலக்கியம் சமூக விழிப்புணர்வு க்கு தன்பங்கை ஆற்றும் தருணம்.

நன்றி

அன்புடன்

பா.ரவிச்சந்திரன்

சென்னை

லலிதா என்னும் யானை

அன்புள்ள ரவிச்சந்திரன்

இது அந்நூலுக்கு மிகப்பெரிய கௌரவம். ஓர் இலக்கிய ஆக்கம் என்ன செய்ய முடியும் என்பதற்கான சான்று. இலக்கியத்தின் நோக்கம் என்ன என்பதையும் தெளிவாக்கும் நிகழ்வு.

இலக்கியம் என்பது போதனை அல்ல. இலக்கியவாதி போதகன் அல்ல. இலக்கியவாதி சான்றோனும் அல்ல. இலக்கியம் ஒரு ‘மெய்நிகர்’ வாழ்க்கையை உருவாக்கி காட்டுகிறது. கடந்துபோன காலங்களை மீண்டும் நிகழ்த்துகிறது. சான்றோருடன் சாமானியரை வாழும்படிச் செய்கிறது. வாழ்க்கையின் நுண்ணிய தருணங்களை, அறிதலின் உச்சக் கணங்களை மீண்டும் நிகழ்த்தி அதை அனைவரும் வாழும்படி அளிக்கிறது. சொற்கள் வழியாக அந்த வாழ்க்கையை மீண்டும் கற்பனையில் வாழ்பவனே வாசகன். அந்த வாழ்க்கையில் இருந்து அந்த வாசகன் அடைவதே அப்படைப்பின் ‘கருத்துக்கள்’ அல்லது  ‘அறங்கள்’

அது ஒரு சமூகம் தன்னைத்தானே அறிந்துகொள்வதுதான். ஒரு சமூகம் தன்னை திரும்பிப்பார்க்க, தொகுக்க, தன் விழுமியங்களை திரட்டிக்கொள்ள மேலும் என கனவுகாண இலக்கியம் உதவுகிறது. இலக்கியத்தின் பணி அதுவே. இந்த தீர்ப்பின் மனநிறைவூட்டும் அம்சம், இதில் மொழிபெயர்ப்பாளர் பிரியம்வதாவின் பெயரும் இருப்பதுதான். அது அவருடைய பணிக்குக் கிடைத்த கௌரவம். இந்த ஒரு மொழியாக்கம் வழியாக பிரியம்வதா அடைந்துள்ள விருதுகள், அங்கீகாரங்கள் மகிழ்ச்சியளிப்பவை. இது தொடர்ந்து நிகழவேண்டும்

ஜெ

ஆணை முழுமையாக

wpmdno7655-of-2020-461483

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 10:32

கடலூர் புத்தகவிழா- கடிதம்

இனிய ஜெயம்

சில வாரங்கள் முன்புதான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கடலூரில் புத்தக சந்தை இதுவரை நிகழாதது குறித்தும், அப்படி நிகழாமைக்கான கலாச்சார காரணங்கள் குறித்தும் எழுதி இருந்தேன்.

நம்பிக்கை தரும் தொடக்கமாக சுதந்திரத்துக்கு பிறகான வரலாற்றில், தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வாக பப்பாசியும் தமிழக அரசும் இணைந்து இன்று ‘முதல்’ புத்தக சந்தையை  துவங்கி இருக்கிறார்கள்.

ஆற்காடு மாவட்டமாக இருந்து, அதில் தென்னார்க்காடு மாவட்டமாக அறியப் பெற்றதே இன்றைய கடலூர் மாவட்டம். தென்னார்க்காடு மாவட்டதில் தோன்றி பணி செய்த சைவ வைணவ பக்தி இயக்கத்தின் தலை மகன்கள் பலர்.  வெள்ளையர் உருவாக்கிய பஞ்சத்தில் பெரிதும் பஞ்சத்தில் அடிபட்டு, எம் மக்கள் பராரிகளாக பஞ்சம் பிழைக்க சென்ற வரலாறும் கொண்ட மாவட்டம். இதன் பயனாக பசிப்பிணி தீர்க்கும்  வள்ளல் பெருமானின் தர்ம ஞான சபை தோன்றிய மாவட்டம். ஞானியார் சுவாமிகள் கல்வி உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு பணிகளை நிகழ்த்திய மாவட்டம். திராவிடக் கலாச்சாரம் உருவாக்கிய  பெருமிதம் என்று சொல்லத்தக்க சுந்தர சண்முகனார் வாழ்ந்து பணி செய்த மாவட்டம். புதுமைப்பித்தன் பிறந்த ஊர். ஜெயகாந்தன் பிறந்து பால்யத்தை கழித்த ஊர். கண்மணி குண சேகரனும் ராஜேந்திர சோழனும் விளைந்த மாவட்டம். இங்கே இப்போதுதான் முதன் முறையாக ஒரு புத்தகத் திருவிழா நடக்கிறது என்பது வரலாற்றுத் தருணம் தானே.

முதல் துவக்கம், குறைகள் இருக்கலாம், போதாமைகள் இருக்கலாம், பிழைகள் இருக்கலாம் மெல்ல மெல்ல ஒவ்வொரு வருடமும் அனைவரும் கூடிப் பேசி அதைக் களைந்து முன்னேற வேண்டும். கடலூர் மாவட்டம்  போல கல்விச் சூழல் மிக பின் தங்கிய மாவட்டங்களில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு வணிகம் என்பதை பின்னுக்கு நிறுத்தி ஒரு பண்பாட்டு அசைவை நிகழ்த்தப் போகிறோம் எனும் போதத்துடன் பப்பாசி பணி செய்ய வேண்டும். எல்லா விதத்திலும் இன்றைய அரசு அதற்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை இதுவரையிலான அதன் செயல்பாடுகள் வழியே என்னைப்போன்ற ஒரு எளிய வாசகனுக்கு இருக்கிறது.

இம்முறை நான் கண்ட போதாமைகள் மூன்று. ஒன்று பிற ஊர்களில் நடக்கும் புத்தக சந்தை முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கையில் இங்கே புத்தக சந்தை துவங்கியது. பெரும்பாலான பதிப்பகங்கள் தொழில் சிக்கல் காரணமாக குறைவான ஊழியர்களை கொண்டு இயங்குவது. எனவே அத்தகு பதிப்பகங்கள் ஒரு திருவிழா முழுதாக முடிந்த பிறகே அடுத்த திருவிழாவுக்கு வர இயலும். இரண்டு. மூன்று புறமும் வாசல் கொண்ட, மைய சாலையை நோக்கி திறந்த பெரிய  மைதானத்தில், வாசல் இல்லாத குறுகலான நான்காவது திசையில் சந்தையின் தலை வாயிலை அமைத்தது. மாவட்டத்தின் எல்லா பேரூராட்சியிலும் குறைந்தது 5 நாட்கள் முன்னர் வரும் விருந்தினர் பட்டியலுடன் விளம்பர பதாகைகள் அல்லது சுவர் செய்திகள் அமைக்க பட்டிருக்க வேண்டும். அது செய்யப்பட வில்லை. மேலும் இது பள்ளிகளில் இறுதி தேர்வு துவங்கி விட்ட வாரம். இத்தகு போதாமைகள் அடுத்த முறை களையப்பட வேண்டும்.

இதுவரை இப்படி ஒரு சந்தை இங்கே கடலூரில்  நிகழாததால் இங்கே மட்டும் காண முடிந்த சில அனாகரீகங்கள் எழ வாய்ப்பு உண்டு. குறிப்பாக மாலையில் பொழுது போகாத பல  பெருசுகள் உள்ளே புகுந்து புத்தக வணிகர்களை பிடித்து சேர் போட்டு அமர்ந்து கொண்டு எங்கூருல என ஆரம்பித்து பிலாக்கணம் வைக்க சிறந்த இடமாக பத்து நாட்களுக்கு இதை பார்ப்பார்கள். சிலர் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து பார்த்து அய்யோ இவ்ளோ விலையா என்று எட்டூருக்கு கேட்கும்படி கூவி அதிர்ச்சி ஆவார்கள். கடையில் கூட்டமே இல்லாவிட்டாலும் வணிகர்கள் இத்தகு ஆசாமிகளை தயக்கமின்றி தவிர்த்து விடலாம்.

மற்றபடிக்கு இந்த இனிய துவக்கம் வரும் ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து செழிக்கும் என்றே நம்புகிறேன்.  மகிழ்ச்சியுடன் சில புத்தகங்கள் வாங்கினேன். அவற்றில் மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்ட சோ.ந. கந்தசாமி அவர்கள் எழுதிய மணிமேகலையில் தத்துவச் சிந்தனைகள் எனும் நூல் முக்கியமானது. பில் பிரைசன் எழுதிய கிட்டத்தட்ட அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம் முன்பே இங்கே உண்டு. மிக மிக விசித்திரமான மொழியாக்கம். அதில் ஒரு தமிழ் பத்தியை எடுத்து கூகிளில் இட்டு ஆங்கிலத்துக்கு மாற்றினால், சாட்ஷாத் அந்த ஆங்கில மூல நூலில் உள்ள அதே பத்தி அப்படியே வந்து விடும் அப்படி ஒரு மொழியாக்கம். ஆகவே  இதுவரை அந்த நூலை நான் எவருக்கும் பரிந்துரை செய்ததில்லை. அந்த நூல் இப்போது மஞ்சுள் பதிப்பகம் வழியே, psv குமாரசாமி அவர்களின் மிக அழகிய மொழியாக்கத்தில் வெளியாகி இருக்கிறது. வாங்கினேன்.  அறிவியல் வரலாறு சார்ந்த பாப்புலர் நூல்களில் இதற்கு இணையான வாசிப்பு சுவாரஸ்யம் கொண்ட நூல் அரிதாகவே தமிழில் உண்டு. எட்டாம் வகுப்பு கடந்தோர் துவங்கி எந்த வயதினரும் வாசிக்கலாம். அவசியம் வாசித்திருக்க வேண்டிய நூல்.

வெளியேற முயலுகையில் துவக்க விழா மேடையில் இருந்து ஒரு டஜன் செய்தி சானல் மைக்குகள் என் முன்னால் நீண்டன. இந்த புத்தக சந்தை எந்த அளவு முக்கியம் என்பது குறித்தும், பிழைப்புக் கல்விக்கு வெளியே உள்ள பண்பாட்டுக் கல்வி ஒருவரின் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள எந்த அளவு முக்கியம் என்பது குறித்தும் இரண்டு நிமிடங்கள் பேசினேன். அநேகமாக 20 வினாடிகள் அது ஒளிபரப்பாகும் என நினைக்கிறேன்.

வெளியேறி நடக்கையில் நண்பர் வானத்தை சுட்டிக் காட்டினார். வழக்கத்தை விட பெரிய சைஸ் நட்சத்திரங்கள் இரண்டு அருகருகே நின்றிருந்தன. அது வெள்ளியும் வியாழனும் என்று நண்பர் சொன்னார். மிக அபூர்வமான வானியல் நிகழ்வாம். இந்த நாளுக்கு இந்த அளவு அபூர்வங்கள் போதும்.

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 10:31

குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

குருகு இணைய இதழ் மார்ச் 2023 இலக்கத்தை  தியடோர் பாஸ்கரன் மலராக வெளியிட்டிருக்கிறது. தமிழ் பெருமைகொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் தியடோர் பாஸ்கரன். அறிவியல்சார்ந்த நிதானம் கொண்ட அவருடைய சூழியல்– சினிமா கட்டுரைகளால் மட்டுமல்ல. அவற்றின் படைப்பூக்கம் கொண்ட நடையாலும். முக்கியமான ஒரு வெளியீடு இது

குருகு தியடோர் பாஸ்கரன் மலர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 07, 2023 10:30

March 6, 2023

பத்து சட்டைகள்

1

அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது, செல்லும் வழியில், சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும்.

அந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீன்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் ஜீன்ஸ் போட்டது பத்துவருடம் முன்பு. அப்போது சின்னப் பையனாக இருந்தேன் என்று நினைப்பு. இலக்கிய உலகை திருத்திவிடலாம் என்ற திட்டமெல்லாம்கூட இருந்தது என்றால் கண்டிப்பாக சின்னப்பையன்தான் இல்லையா?

”சீச்சீ நானா ஜீண்ஸா?” என்றேன். ”இல்லை ஒண்ணு இருக்கட்டும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி போட்டுக்கொண்டு வரச்சொன்னார்.நான் உள்ளே போய் ஒரு குட்டிஅறைக்குள் நின்றுகொண்டு உடைமாற்றினேன். சட்டென்று தூக்கிவாரிப் போட்டது. கண்ணாடிப்பிம்பம் என்னை வேடிக்கை பார்த்தது. வேறு அன்னியனுடன் இருப்பது போல.

வெளியே வந்து ”வசந்தபாலன், இது வேண்டாம். இது வேறென்னவோ போல இருக்கிறது” என்றேன்.

”ஏன் சார்?”

”இதைபோட்டா நான் ஜெயமோகன் மாதிரி இல்லை” என்றேன்.

”சார் இதை போட்டுக்கிட்டா நீங்க வேற ஜெயமோகன். அந்த வழக்கமான சட்டையில் நீங்க பேங்க் ஆபீசர் மாதிரி இருக்கீங்க… எங்க, லோன் வேணுமான்னு கேட்டிருவிங்களோன்னு பயமா இருக்கு”

வேறுவழியில்லாமல் ஜீன்ஸையும் சட்டைகளையும் அமெரிக்கா கொண்டுபோனேன். ஆனால் வழக்கமான பாண்ட்- முழுக்கை சட்டையில்தான் நான் போனேன். அமெரிக்காவில் முதல்முறையாக பாஸ்டனில் பாஸ்டன் பாலாவுடன் உலவச் சென்றபோது  ஒன்றைக் கவனித்தேன். அந்த நகரத்திலேயே நான் மட்டும்தான் அப்படி சம்பிரதாய உடை அணிந்திருந்தேன். மற்றபடி ஆண் பெண் எல்லாருமே டி ஷர்ட் தான். பாஸ்டன் பாலா சாயம்போன ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்தார்.

”இங்கெல்லாம் ஹாலிடேன்னா எவருமே வழக்கமான டிரெஸ் போட்டுக்க மாட்டாங்க சார்…டி ஷர்ட் ஷார்ட்ஸ் தான்” என்றார் பாஸ்டன் பாலா.

ஆனால் அங்கே யாரும் நம்மை கவனிப்பதில்லை. இருந்தாலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் என்னிடம் இருந்தது இரண்டே டி ஷர்ட்டுகளும் ஒரு ஜீன்ஸ¤ம்தான். ஆகவே அடிக்கடி மாற்ற முடியாது.

ஆகவே ஒன்று செய்தேன், முழுமையான சுற்றுலா இடங்களுக்குப் போகும்போது அந்த டி ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டேன். கண்ணாடிச் சன்னல்களில் பார்ப்பதை தவிர்த்தேன். வேறு ஒரு ஜெயமோகன் அமெரிக்காவைப் பார்ப்பதற்கா நான் கஷ்டப்பட்டு வந்தேன்?

நலைந்து நாளில் பழகிவிட்டது. அப்போதுதான் நான் ஒன்றைக் கவனித்தேன், டி ஷர்ட் போட்ட அந்த ஜெயமோகன் கொஞ்சம் வேறு மாதிரியான ஆள். கொஞ்சம் சல்லிசாக இருக்கிறார். அதிகமாக யோசிப்பதில்லை. சின்ன விஷயங்களில் அவருக்கு அடிக்கடி மனம் ஈடுபடுகிறது.

ஒன்று கண்ணில் பட்டது, விடுமுறையின் போது ஒரு பூங்காவில் அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் இளநீல நிறத்தில் முழுசூட் உடை அணிந்து சென்றுகொண்டிருந்தார். அப்பழுக்கில்லாத கனவான் உடைகள். தொப்பி பூட்ஸ். நான் பாஸ்டன் பாலாவிடம் கேட்டேன்.

”அவர்களின் உடை வழக்கம் இது. வெச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை. ஒன்று கலர்கலராக சட்டை பளபளக்கும் பாண்ட் இரும்புச்சங்கிலிகள் என்று இருப்பார்கள். இல்லாவிட்டால் இப்படி இருப்பார்கள்” என்றார் ”அந்த உடைக்கு எதிர்வினை இந்த உடை. இந்த உடைக்கு எதிர்வினை அந்த உடை. அவர்கள் எதையுமே எதிர்வினையாகத்தான் செய்வார்கள். இந்த நாட்டில் அவர்களின் உளவியல் அப்படிப்பட்ட்து”

உடைகள் வழியாக எதை தேடுகிறோம்? எதைச் சொல்கிறோம்? எதை முன்வைத்துக்கொண்டே இருக்கிறோம்?  நான் நெடுநாள் கையில்லாத சட்டையே போட்டதில்லை. பதினொராம் வகுப்பு படிக்கும்போது போட்டிருக்கிறேன். அதன்பின் முழுக்கைச் சட்டைதான். ஆனால் ஒருமுறை நண்பன் தண்டபாணி என் வீட்டுக்கு வந்திருந்தான். உங்களுக்கு தெரிந்த ஆசாமிதான். யுவன் சந்திரசேகர் கதைகளில் கிருஷ்ணனுக்கு மாயமந்திர ‘மாற்று மெய்மை’ கிலிகளை மூட்டும் சுகவனம் கிட்டத்தட்ட அவன்தான். அவன் ஒரு கோடுபோட்ட அரைக்கை சட்டை வைத்திருந்தான். ”டேய் இதை போடுடா” என்றான்

போட்டுப் பார்த்தால் எனக்கு பாதி உடல் நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. இரு கைகளும் இரு அன்னியர்கள் இருபக்கமும் நெருக்கிக்கொண்டு நிற்பது போல  இருந்தன. ”அய்யய்யே” என்றேன்.

”நல்லா இருக்குடா’ என்று இழுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

அந்த சட்டையை எனக்கே கொடுத்துவிட்டான். அதன்பின் நான் அடிக்கடி கையில்லாத சட்டை போட ஆரம்பித்தேன். அது என்னைகொஞ்சம் இலகுவாக்குகிறது என்று பட்டது.

‘ஆடைகள் ஒருவனின் சருமங்கள்’ என்று மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில் சொல்கிறார். இறந்தவனின் சட்டைகள் என்ற கவிதை. இறந்து போனவனின் சட்டைகளை என்ன செய்வது? அவற்றை  எப்படி எரிக்க முடியும்? இறந்தவனை மீண்டும் கொல்வதா? இன்னொருவருக்குக் கொடுத்து விடலாமா?  இறந்தவன் நம் எதிரே திடீரென்று வந்து திடுக்கிட வைப்பானே…என்ன செய்வது? எதுவுமே செய்யமுடியாது, இறந்தவனை என்ன செய்கிறோம்?

ஆடைகள் உடலுக்காகவே அளவிவிடப்படுகின்றன என்று தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியா? அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே? நிறங்கள் வடிவங்கள்  அடையாளங்கள் எல்லாமே மனத்தின் அளவுகளுக்குப் பொருந்துபவை அல்லவா?

அப்படியானால் ஆடைகள் யாருடைய சருமம்? அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா? நாம் நம்மை ஆடைகள் வழியாக முன்வைக்கிறோம். நான் சம்பிரதாயமானவன் நான் நேர்த்தியானவன் நான் எளிதானவன். நாம் ஆடைகள் வழியாக நம் சமூகசுயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.

ஆனால் நாம் அதுவா? இல்லை நம் விருப்பங்கள்தாமா அவை? அந்த ஆடைகள் வழியாக நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆடைகளுக்குள் நாம் ஒளிந்துகொண்டிருக்கிறோம். என் ஆடைகளுடன் பேசு என எதிரில் இருப்பவர்களிடம் சொல்கிறோம்.

நான் தனிப்பட்ட முறையில் ஆடைகளை எப்படித் தேர்வுசெய்கிறேன்? என்னுடைய முதல் எண்ணமே வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதே. என்னை எவரும் தனியாகக் கவனிக்கக் கூடாது. சாலையில் ஒருவர் தூக்கிய புருவத்துடன் என்னைப்பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுகிறது. எதுவோ தப்பாக ஆகிவிட்டது என்ற எண்ணம் எழுகிறது

நான் சாதாரணமாக இருக்கவேண்டும். அதற்காகவே உடை. அந்த உடை எனக்கு இச்சமூகத்தில் ஓர் இடத்தை உருவாக்கி அளிக்கிறது. நான் என் அலுவலகத்தில் பெரும்பாலும் பழைய, மிகச்சாதாரண உடைகளையே அணிவேன். ஏனென்றால் நான் ஒரு இடைநிலை ஊழியன், குமாஸ்தா. என்னைப் போன்றவர்கள் எந்த உடை அணிகிறார்களோ அதுவே எனக்கும். அதிகாரிகள் அணிவதுபோல நான் அணிவதில்லை. என் இருபத்தைந்தாண்டுக்கால அலுவலக வாழ்க்கையில் சட்டையை உள்ளே விட்டு பான்ட் போட்டுக்கொண்டு நான் அலுவலகம் சென்றதே இல்லை.

ஓரளவுக்கு நேர்த்தியான ஆடைகளை வெளியே செல்லும்போது அணிகிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்து அரசூழியன் என என்னை அவர்கள் எண்ணட்டும். நல்ல கணவன்,நல்ல அப்பா,நல்ல குடிமகன். வம்புதும்பு கிடையாது. தப்பாக எதுவுமே செய்துவிட மாட்டேன். டீஏ அரியர்ஸ், சம்பளக் கமிழ்ஷன், ரியல் எஸ்டேட் விலை, சூர்யா விஜய் அஜித் ஜெயலிதா ஸ்டாலின் தவிர எதையுமே பேசாதவன். அதாவது ரொம்ப ரொம்ப நார்மலானவன். அதற்குள் எனக்கு வசதியாக ஒளிந்துகொள்ள இடமிருக்கிறது. நல்லது.

ஆனால் அதற்குள் நான் இருக்கிறேன். அந்தச் சட்டைகள் அச்சையும் உயிர் என்னுடையது. என்னுடைய உற்சாகங்களையும் தயக்கங்களையும்தானே அந்த சட்டைகள் நடிக்கின்றன? நீங்கள் அவற்றை பார்த்தால் என்னை பார்க்கிறீர்கள்.

நண்பர்களே இந்தபத்து நூல்களும் பத்து சட்டைகள். மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பத்து என்னை நான் காட்டியிருக்கிறேன். அரசியல் தத்துவம் ஆன்மீகம் இலக்கியம்…இவற்றுக்குள் நான் இருக்கிறேன்.  ஆனால் ஒளிந்திருக்கிறேன்.

கேரளத்துக் கோயில்களில்  உள்ளே நுழைய சட்டைகளைக் கழற்ற வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அந்த வழக்கம் உண்டு என்பார்கள். ஒரு கதை உண்டு. இதயம்பேசுகிறது மணியன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றபோது சட்டையைக் கழற்ற தயங்கினாராம். அப்போது அங்கே இருந்த சாது அப்பாத்துரை [இவரைப்பற்றி பிரமிள் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். சாது அப்பாத்துரையின் தியானதாரா ] ”ஏம்பா இந்தச் சட்டையைக் கழட்டவே இந்த மாதிரி கஷ்டப்படுறியே. அங்க போறப்ப அந்தச் சட்டைய எப்டி கழட்டுவே?” என்று கேட்டாராம்.

அனைத்துச் சட்டைகளையும் கழட்டிவிட்டு செல்லவேண்டிய சில சன்னிதிகள் உண்டு. சட்டைக்கு மெய்ப்பை என்று ஒரு சொல் உண்டு. மெய்யே ஒரு பைதான். பையை தூக்கிப்போட்டுவிட்டு மெய்யை மட்டுமே அது எடுத்துக்கொள்கிறது.

நான் சட்டைகளைக் கழற்றும் இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே நானிருக்கும் இடம். அங்கே எல்லா ஆடைகளையும் கழற்றிவிடுவேன். சருமத்தையும் சதைகளையும் எலும்புகளையும். ஆம், என் புனைகதைகளில் நான் என்னை நிர்வாணமாக்கிக் கொள்கிறேன். நான் அவற்றை எழுதுவதே அதற்காகத்தான்.

ஒருவன் நிர்வாணமாக கையில் வேட்டியுடன் சாலையில் சென்றானாம். பிடித்து விசாரித்த போலீஸ்காரரிடம் ”அய்யா நான் உடைமாற்றிக்கொள்ள ஒரு மறைவிடம் தேடி அலைகிறேன்” என்றானாம். புனைவிலக்கியம் எழுத அமரும்போது நான் பலசமயம் அப்படி உணர்வதுண்டு. நிர்வாணமாக வந்தமர்ந்து கொண்டு நான் ஆடைகளை அணிய ஆரம்பிக்கிறேன்.

ஏனென்றால் அந்த நிர்வாணத்தை அத்தனை பேரும் பார்க்க நான் விரும்பவில்லை. நான் உடை களையும் நடனம் ஆடுபவன் அல்ல.  அது யோகியின் நிர்வாணம். அங்கே என்னை வந்து பார்க்கவேண்டுமானால் நீங்களும் சட்டைகளை கழற்ற வேண்டும். எனது நிர்வாணத்தை உங்கள் நிர்வாணத்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அதற்காகவே இத்தனை மொழியாக பெரிய ஒரு சுழல்பாதையை அமைக்கிறேன்.  வாழ்க்கையின் அத்தனை அம்சங்களாலும்  ஆக்கபப்ட்ட ஒரு வட்டப்பாதை அது. அன்பு பாசம் காதல் துரோகம் வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளாலும் ஆனது. எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் அரசியலும் பேசப்படுவது.

ஒவ்வொரு விஷயமும் ஒரு முள். ஒவ்வொன்றிலும் சிக்கி நீங்கள் உங்கள் உடைகளை இழந்தால் ஒழிய அந்த இடத்திற்கு வர முடியாது. அவ்வாறன்றி நான் அறிவுஜீவி நான் அரசியல்ஜீவி நான் இலக்கியஜீவி என்று அவரவர் சட்டைகளுடன் அந்தப்பாதையின் ஏதோ ஒரு வழியில் நின்று சுழன்றுகொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறேன்.

அந்த எல்லைகளைக் கடந்து என் அந்தரங்கமான கருவறைக்குள் வந்தீர்கள் என்றால் என் நிர்வாணம் ஏன் என்று உங்களுக்குத்தெரியும். நான் கருவறைக்குள் இருக்கிறேன். இன்னமும் நான் உருவாகவே இல்லை.

அவ்வாறு வரும் வாசகன் கண்டடையும் அந்த ஜெயமோகன் யார்? அது அந்த வாசகனின் ஓர் அந்தரங்கமான ஆடிப்பிம்பமாக இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.

ஆகவே இந்த பத்து வாசல்களை உங்களுக்காக திறந்து வைக்கிறேன். வருக

[19 -12- 2009 அன்று சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் உயிர்மை வெளியீடாக வந்த 10 நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையின் முன்வரைவு]

மறுபிரசுரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:35

ராய.சொ

தமிழ்க்கடல் என்ற பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டவர் ராய.சொக்கலிங்கம். மேடைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்துவதில் அவர் தமிழகத்திலேயே முதன்மையானவர் என்கிறார்கள். கம்பராமாயணப் பாடல்களை ஆயிரக்கணக்கில் நினைவில் வைத்திருந்தவர். காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தலைவர். ஊழியன் இதழாசிரியர். காந்தியவாதி.

ராய.சொக்கலிங்கன் ராய.சொக்கலிங்கன் ராய.சொக்கலிங்கன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:34

ஜார்ச் சாண்ட்,தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி -விவாதம் பிரதீப் கென்னடி

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் -சைதன்யா

விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி – சுசித்ரா

விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – சிமோன் தி பொவா – விக்னேஷ் ஹரிஹரன்

நிலவறை மனிதனின் அன்னை – சைதன்யா

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி ஜெயமோகன்

ஜார்ஜ் சாண்ட், தஸ்தயேவ்ஸ்கி, விவாதம்- சக்திவேல்

அன்பு ஜெ,

சென்ற பொருநை இலக்கியத்திருவிழாவில் இப்படிச் சொல்லியிருந்தீர்கள் “நவீன இலக்கியத்திற்கு மரபிலக்கியம் மேல் ஓர் கவனம் இருந்தாக வேண்டும். எழுதவந்த காலகட்டத்தில் புதுமைப்பித்தன் தனிநபர்வாதத்தை, தனிவாழ்க்கையை எழுதினார். அதன்பின் சமூக உண்மைகளை எழுதினார்கள். இன்றைக்கு நாம் வந்திருப்பது வரலாற்றை எழுதுமிடத்தில். ஒரு மனிதனை ஒட்டுமொத்த வரலாற்று, பண்பாட்டு பின்புலத்தில் வைத்து பார்க்குமிடத்தில். பண்பாடு என்பது தன்னிச்சையானது அல்ல. முந்தைய தலைமுறையால் பின்னி முடைந்து உருவாக்கப்பட்டது. அதை அறிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நவீன வாசகனுக்கு உள்ளது. தமிழில் ஒரு புது நாவல் வர வேண்டும் என்றால், தமிழ் மரபிலக்கியத்தின் மேல் நவீன இலக்கியவாதிகளின் பார்வை இன்னும் ஆழமானதாக விரிவானதாக வரலாற்றுப் பூர்வமானதாக விமர்சனப்பார்வையாக மாற வேண்டும். மரபும் நவீனமும் தழுவி முன்னகர வேண்டும்.”

நவீன இலக்கியத்தில் அப்படி ஒரு போக்கை நோக்கி முன்னகர்த்திச் சென்றவர் நீங்கள் தான். சு.ரா-விலிருந்து முரண்பட்டு எந்தப்பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை இப்போது தான் மிகச்சரியாக என்னால் உணர முடிகிறது.

உலக இலக்கியத்தில் பெண்கள் பற்றி நண்பர்கள் சைதன்யா, சுசித்ரா, விக்னேஷ் ஹரிஹரன், நந்தகுமார், எழுதி வருவதை நான் இங்கு தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் பொருத்திப் பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் உலகபோர்களின் பேரழிவும் அதன் பின் எழுந்த இருத்தலியல் சார்ந்த எழுத்தின் கசப்பும் ஐரோப்பாவை நிறைத்தது. இந்த வரலாற்றின் புகைபடிந்த ஆடி வழியாக பார்க்கும் நவீன வாசகனுக்கு ஃப்லாபர்ட்டின், தஸ்தயெவ்ஸ்கியின் இருண்ட எழுத்து உண்மைக்கு அருகில் வருவதாக தெரிகிறது. ஜார்ஜ் சாண்ட் போன்றவர்கள் அரிதாகவே வாசிக்கப்படுகிறார்கள். ஆனாலும் இந்த நிலவறை மனிதர்களின் எழுத்தின் உச்சத்தில் வெளிப்படும் அன்னை உருவின் முன் மண்டியிடாமல் அவர்களால் கடக்க முடிவதில்லை. என்ற சைதன்யாவின் வரிகளையும்

கிறிஸ்துவுடன் அருகிருக்கையில், மொழி வழி பால்சக்கரியா, நிகாஸ் கசன்ட்சாக்கிஸ், தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் சென்றடைந்த பாதையில் மேரிகொரெல்லியும் அமர்ந்திருப்பதை அணுக்கமாக உணர்கிறேன். என்ற நந்தகுமாரின் வரிகளையும் ஓட்டிப் பார்க்கிறேன். (என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் – மேரி கொரெல்லி)

தனி மனிதனைப் பற்றி எழுதும் போது கசப்புகள், கீழ்மைகள், பிறழ்வுகள் என மனித மனத்தின் அப்பட்டங்களை எழுதுகிறேன் என ஒரு பக்கம் தீவிரமாக எழுதிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதற்கு அப்படியே நேர் எதிர் தளத்தில் நேர்நிலைச் சிந்தனை கொண்ட படைப்புகளும் எழுதப்பட்டன. பெரும்பாலும் அவற்றை எழுதியவர்கள் விடுதலைக்கு முந்தைய  காலகட்டத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மையச் சிந்தனை/சரடு இலக்கியத்தில் தீவிர பேசுபொருளாக உள்ளது. அதுவல்லாமல் எழுதுபவர்களை விமர்சகர்கள் மையப்படுத்துவதில்லை. ஆனால் நேர்நிலையோ எதிர்நிலையோ அது கலைப் படைப்பாக அமையும் போது வாசகன் காலம் கடந்து கூட அதைக் கண்டு கொள்கிறான் என்றே தோன்றியது,

சமீபத்தில் சுப்ரமண்ய ராஜு கதைகளை வாசித்தேன். அவரின் பேசு பொருளின் ஒரு முடிச்சை சரோஜா ராமமூர்த்தி யோடு ஒப்பிட முடிந்தது என்றால் அது “ஊழ்” என்பது தான். சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் படித்த இரண்டு நாட்கள் மிகவும் எதிர்மறைச் சிந்தனையோடு இருந்தேன். ”இந்த உலகம் மோசமாக உள்ளது. பார்த்து சூதானமாக இரு” என ஒரு அண்ணன் எழுதி வைத்திருப்பது போல இருந்தது. குறிப்பாக பெண்களுக்கு. ஏனெனில் அவர் ஆணின் அத்தனை கீழ்மையான சிந்தனைகளையும் இனி சொல்ல ஏதுமில்லை என்பது போல எழுதி வைத்திருக்கிறார். மேலும் விரிவாக சுப்ரமண்ய ராஜுவின் படைப்புலகம் குறித்து எழுதவிருப்பதால் இந்தப்புள்ளியில் நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் சரோஜாவின் கதைகளை வாசித்து முடித்தபின் வரும் ஊழ் ஒட்டுமொத்தமாக நேர்மறைச் சிந்தனையோடு இருந்தது. “இது இப்படித்தான்.” என்று கூறி நவீனமும் மரபும் கலந்த தீர்வை முன் வைத்திருந்தார்.

ராஜுவிற்கு தனிப்பாதையில் தான் பயணிப்பதான எண்ணம் இருந்தது தெரிகிறது. “மந்தையிலிருந்து பிரிந்த மாடு” என்ற படிமம் அவரின் எழுத்துக்களின் வழி அவரைப் பற்றி எடுத்த சித்திரமாக இங்கு கொள்ளலாம். ஒட்டு மொத்த நவீன இலக்கியத்தில் எழுதியவர்களுக்கும் இந்த தனிப்போக்கின் மேல் காதல் இருந்ததாகத் தெரிகிறது. அப்படியல்லாதவர்களை இவர்கள் தீவிர இலக்கியப் போக்கிலிருந்து விலக்கி வைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

தமிழ்விக்கியில் பாலாமணி பற்றிய பதிவு எழுதும்போது அவரைப் பிடித்திருந்தது. ஆனால் டி.கே.ஷண்முகம் பதிவிடும் போது அவருடைய டம்பாச்சாரி விலாசம் நாடகத்தால் தான் சங்கரதாஸ் ஸ்வாமிகள் இறந்தபின்னான நாடகக் குழுவை மீட்க முடிந்தது எனத் தெரிந்தபோது அவளின் வாழ்க்கையை கற்பனையாக ஓட்டிப் பார்த்தேன். அவள்  நாடக உலகின் “குயின்” என்று தோன்றியது. தாட்டிகமான அவளின் சித்திரம் தந்த புனைவை மேலும் புனைந்தெழுதிப்பார்க்கவே விழைகிறேன்.

ஆனால் பாலாமணி பற்றி தி.ஜா ஒரு கதை எழுதியிருப்பதாகத் தெரிந்தபோது ஆவலுடன் சென்று படித்தேன். “ஆடை” என தலைப்பு தெரிந்ததுமே அது தாராஷஷாங்கம் பற்றிய உட்குறிப்புடன் கூடிய கதையாகத்தான் இருக்கும் என நினைத்தேன். நிர்வாணமாக அவள் அதில் நடித்தாள் என்ற விளம்பரத்துடன் தந்திரக்காட்சிகள் மூலம் அரங்காற்றுகை செய்யப்பட்ட நாடகம் அது. தி.ஜா பாலாமணி பற்றிய ஆடை சிறுகதையில் “தேவடியாள் அவளுக்கு என்ன; தடிச்சி” என்றே சித்தரிக்கிறார். அது தவறில்லை. ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்க்குரலான ஒரு நேர்மறைக் குரல் அங்கு இல்லாததால் அது சமன்செய்யப்படாமல் முழுக்க எதிர்சிந்தனையாகவே பதிவாகிய தோற்றத்தை அளித்தது. அது அப்படி அமைந்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.

மிகப்பெரிய மாளிகையில் வாழ்ந்த (இந்திராபார்த்தசாரதி அம்மாளிகையைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார்) பாலாமணி தன் இறுதிக்காலத்தில் சொத்துக்களை இழந்து மதுரை வீதிகளில் மெலிந்து பணத்திற்காக கஷ்டப்பட்டு இறந்தார்தான். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் அவள் தவிர்க்க முடியாத ஆளுமை. ஆடை சிறுகதை வழியாக பாலாமணி மேல் ஓர் எதிர்மறைச் சிந்தனையே வந்திருக்கக் கூடும் அக்காலத்தில். உண்மையில் அது மீறல் கதையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்து ’ஆடையில்லாமல் நடித்தாள் தற்போது ஆடை விலக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறாள்’ என நிலையாமையைச் சொல்வதாக அமைந்த கதையாகவே தி.ஜா வின் சிறுகதை அமைந்தது. தி.ஜா -வின் மேல் எந்தப் புள்ளியில் நீங்கள்  விலக்கம் அடைந்தீர்கள் என நான் உணர்ந்து கொண்ட தருணமது. (அக்கதையை வாசித்தபோது அது தெரியவில்லை. சமீபத்தில் அயன் ராண்ட் கட்டுரை வாசித்தபோது ஏதோ ஒரு பொறி தட்டி அதை உணர்ந்தேன்.)

ஒவ்வொருவரும் தனக்கான இஸங்களை உருவாக்கிக் கொண்டு பயணித்திருக்கிறார்களோ என்றே தோன்றுகிறது. மேலும் வாசிப்பின் வழியே இந்த சந்தேகத்திற்கான விடையை நானே ஒரு நாள் அடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் தேடல் தான் உள்ளது.

இலக்கியத்தில் நான் முதலில் நுழைந்தது உங்கள் எழுத்துக்களில் தான். அது ஒரு ஒளி பொருந்திய பாதை. லட்சியவாதத்தை நோக்கி முடுக்குவது. ஒட்டுமொத்தமாக இன்று நான் உங்களில் வாசித்தவைகளைக் கணக்கில் கொண்டு மதிப்பிட்டால் நீங்கள் நேர்மறைத் தீவிரத்தையே என்னில் விதைத்திருக்கிறீர்கள். ஆம்! மனிதர்கள் மேல் அன்பு செய்யவே தோன்றுகிறது. ஏனெனில் நீங்கள் நன்மை, தீமை என்ற இரு தரப்புக்கும் ஒரு துளி மிச்சமில்லாமல் ”நியாயப்படுத்துதல்” செய்து விடுகிறீர்கள். துரோகம், போலி, ஏமாற்றம் என எதை மனிதனில் கண்டாலும் அவனை அணைத்துக் கொள்ளுமளவு அன்பு நிறைந்துள்ளது இன்று என்னிடம். இன்னொரு வகையில் அது நல்லதல்ல.

ஏனெனில் இலக்கிய உலகிற்குள் அதே மன நிலையில் ஒரு குழந்தை போல உள்நுழைந்தால் முதல் அடி எதார்த்தவாதிகளிடமிருந்து கிடைக்கிறது. அவர்கள் நேர்நிலைச் சிந்தனையோடு இருப்பவர்களை பைத்தியம் போல பார்க்கிறார்கள். அன்பு என்றால் சந்தேகப்படுகிறார்கள். காந்தியவாதத்தை சோம்பேரித்தனம் என்கிறார்கள். அன்றாடத்தை பூதாகரமாக்கி சமன்குலைவுக்கு ஆளாக்குகிறார்கள். பொதுவெளியை விட மிகக் குரூரமான மனிதர்களை இலக்கியத்தில் தான் பார்க்க முடிகிறது. ஏன் என்று யோசித்திருக்கிறேன். பொதுவெளி எதார்த்தவாதியைவிட இலக்கிய எதார்த்தவாதி அறிவானவன். அதனால் அந்தக் குரூரம் திகைக்க வைக்கிறது.

உங்கள் எழுத்துக்களிலிருந்து சற்றே பின் சென்று பார்த்தால் எதிர்மறைச் சிந்தனைகளும் சுயமோக எழுத்துக்களும் தான் இவர்களை வளர்த்து வைத்திருக்கிறது. ’எதுவும் இங்கு தப்பில்லை. எந்த உணர்வுகளுக்கும் மதிப்பில்லை. எல்லா மனிதனும் இவர்களுக்கு சல்லிப் பயல்கள். காதல், அன்பு, பாசம் எல்லாமே இவர்களுக்கு க்ளிஷேக்கள். தனி மனித ஒழுக்கம் சாத்தியமே இல்லை’ என்பது போலவே இங்கு பிறழ்வுறவுகள், பாலியல் அத்துமீறல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன.

அதைப் பற்றி பேசாதவர்களை அக்காலத்தில் “மாமி எழுத்து” என ஒதுக்கி வைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. அங்கிருந்து எந்தப்பெண் காமத்தின் அப்பட்டங்களை, தான் வாழ்ந்த வாழ்க்கை, சமூகத்திலுள்ள கீழ்மைகளைப் பேசினாலோ அவளே முன் நிறுத்தப்பட்டாளோ என்று தோன்றுகிறது.

உங்களிலிருந்து சற்றே பின்னோக்கி ஒவ்வொரு எழுத்து காலகட்டத்தையும் பார்த்தால் என்னால் எதிர்மனநிலையையே சென்று அடைய முடிகிறது. சுயமோகம் கொண்ட எழுத்துக்கள். தன்வயமாக சுருக்கப்பட்ட பார்வையைக் கொண்ட எழுத்துக்கள். நான் கட்டாயம் முழுமையாக அக்காலகட்டங்களை பற்றிய என் பார்வை சார்ந்த கட்டுரைகளை பின்னாளில் எழுதுவேன். இப்போதைக்கு என் வாசிப்பில் என் கருத்து இதுவாகத்தான் உள்ளது.

மரபிலிருந்து நவீனத்திற்கு சிந்தனையைக் கடத்த முற்பட்டவர்கள், காந்தியவாதிகள், காஞ்சி பரமாச்சாரியாரின் பக்தைகள், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவே பெரும்பான்மையான பெண் எழுத்தாளர்களை விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் பார்க்க முடிகிறது. அவர்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். தீவிர/மைய எழுத்தல்ல என்று சொல்லி அவர்களை எளிதாகக் கடந்திருக்கலாம். அதன் பின் வந்த பெண்கள் மைய ஓட்டத்தின் பேசுபொருள்களுக்கு ஏற்ப தங்களை தகவமைப்பு செய்து கொண்டவர்களா அல்லது ஏதேனும் கொள்கை சார்ந்து கோட்பாடு சார்ந்து முன்வைக்கப்பட்ட எழுத்துக்களை எழுதினார்களா அல்லது உலக அளவில் இருந்த பேசுபொருட்களை மரபின் எந்த வேரும் இன்றி பற்றிக் கொண்டு முன் நகர்ந்தார்களா எனத் தெரிய வேண்டும். நீலியின் பயணத்தின் வழி அதை மேலும் நண்பர்களுடன் இணைந்து கண்டறிவோம்.

இதனுடன் தத்துவம் சார்ந்த புரிதல் எவ்வளவு முக்கியம் என்பது மண்டையில் இடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தப் புரிதல் தரும் பார்வை இன்னும் விசாலமானதாக இருக்கும். நீங்கள் எத்தனை தொலைவிலிருந்து இந்தச் சிந்தனைகளை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என சில உரைகள், கட்டுரைகள் சரியாக ஆழமாகப் புரியவரும்போது தெரிகிறது. இங்கிருந்து பயண தூரம் அதிகமுள்ளது என உணர்கிறேன். இப்பாதையில் உங்கள் சமீபத்திய உரைகள்  (பொருநை இலக்கிய விழா உரை, லஷ்மி சரவணக்குமார் விழா உரை, விடுதலை என்பது என்ன, கல்தூணும் கனிமரமும்)மேலும் ஆழமாக உள் சென்று கொண்டே இருக்கிறது. சமீபத்தில் உங்களின் அயன் ராண்ட் கட்டுரைகள் வாசித்தபோது மானசீகமாக உங்கள் கால்களில் விழுந்து வணங்கிக் கொண்டேன். தங்கப்புத்தகம் சிறுகதை மேலும் திறந்து கொண்டது. நான் உணர்ந்தேன் ஜெ. இந்த ஒட்டுமொத்த இலக்கியப் பரப்பை நீங்கள் பார்க்கும் நோக்கை அங்கிருந்து கண்டேன். இன்னும் என் பார்வை தெளிவாக வேண்டும் அப்போது தான் விரிவாக அதை எழுத முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிந்தனைகளின் வழி பிரதீப் கென்னடியின் இந்த வாதத்திற்கு விடை சொல்ல முற்படுகிறேன்.

ஆனால் தஸ்தயெவ்ஸ்கி முக்கியமான கலைஞனாக இருப்பதற்கு  அவருடைய கதைகளில் வெளிப்படும் தரிசனம் மட்டும்தான் காரணமா ? ஒரு மகத்தான  கலைப்படைப்பு தரிசனத்தின் துணைக்கொண்டு மட்டும் அமைவதுதானா ? மகத்தான கலையில் ஒரு மையச்  சரடுதான் அதன்  தரிசனம். ஆனால் வெறும்  சரடு கலையாவதில்லை. அவை எவ்வாறு எல்லாம்  பின்னப்பட்டிருக்கின்றது என்பதை  கொண்டே அவை அப்படி உருவாக்கின்றன.இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

என்னால் இப்போதைக்கு ஒன்று சொல்ல முடியும். ஆம் மாய்ப்பொன் தருணம் எல்லா உண்மையான கலைஞனுக்கும் ஏதோவொரு புள்ளியில் நிகழ்ந்திருக்கும் தான். அதை ஓர் நல்ல வாசகனாக எந்தப் புள்ளி என்று கூட உணர முடியும். தனித்தனி படைப்புகளின் சாரம் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த படைப்புகள் வழியாக ஒரு கலைஞனில் வெளிப்படும் சாரம் ஒன்று உள்ளது. அதைத்தாண்டி படைப்பாளனின் படைப்புகள் மற்றும் அதற்கு இணையாக அவனின் வாழ்க்கை, புறச்சூழல் வழியாக தொட்டெடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. பின்னும் அவற்றுடன் அக்காலகட்டம் பிற எழுத்தாளர்கள், அவர்களின் பாதிப்புகள் அவை வழியே தொட்டு எடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. அதையும் கடந்து ஒரு காலகட்டத்திற்கும் இன்னொரு காலகட்டத்திற்கும் இடையே ஊடாடும் ஒன்றின் வழியேயான சாரம் ஒன்றுள்ளது. இறுதியாக ஒட்டுமொத்த அவனின் மரபில் அவனை நிறுத்தி தெற்றெடுக்கும் சாரம் ஒன்றுள்ளது. ஊடும்பாவுமாக ஒரு எழுத்தாளனின் எழுத்தில் பின்னியிருப்பது அவனின் படைப்புகள் மட்டுமல்ல. இம்மாபெரும் பெருக்கின் ஒரு துளி தான் எந்த எழுத்தாளனும் என்பதை உணர்கிறேன்.

இந்த ஒட்டுமொத்த சித்திரத்தின் வழியே நீங்கள் ஏன் டால்ஸ்டாயை தஸ்தாவெஸ்கியை விட ஒரு படி மேலே வைக்கிறீர்கள் என்பது புரிகிறது. சைதன்யா ஏன் நிலவறை மனிதர்கள் மண்டியிடும் சித்திரத்தை அளித்தார் என்றும், நந்தகுமார் டால்ஸ்டாய் சென்றடைந்த பாதையில் மேரிகொரெல்லியும் அமர்ந்திருப்பதை அணுக்கமாக ஏன் உணர்கிறார் என்பதையும் காண்கிறேன்.

மிக மெல்லிய சரடுகளை மூளை பின்னிக் கொண்டே செல்கிறது ஜெ. நான் எனக்கு நிறைவாக இந்த வாதத்திற்கு பதிலளிக்கவில்லை. ஆனால் இதுவரை அடைந்த என் சிந்தனையை இது தொகுத்துக்கொள்ள உதவியுள்ளது. நண்பர்களுடனான இந்தப் பயணம் மகிழ்வளிக்கிறது. “பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி கட்டுரைக்காக நன்றி ஜெ. எங்கள் எல்லோருக்குமே அக்கட்டுரை அடுத்த அடிக்கான (மின்மினி)விளக்கு.

ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:31

தத்துவ வகுப்புகள், கடிதங்கள்

ஹலோ சார்

2023 ஆண்டு துவக்கதில் உங்களுடைய இந்திய தத்துவ அறிமுக வகுப்பில் கலந்து கொண்டது எனக்கு ஒரு மிக நல்ல தொடக்கம்.

இந்த ஆரம்ப வகுப்பில் இந்திய தத்துவத்தை பற்றி ஒரு துல்லியமான வரைபடத்தை எங்களுக்கு அளித்தீர்கள். மிக சிரத்தையாக வடிவமைக்கப்பட்ட மூன்று நாட்களின் விரிவுரைகள், நிச்சயமாக எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவை.

மூன்று நாட்களிலே இந்திய தத்துவ சிந்தனை மரபின் சாரம்சத்தையும், அதன் பல்வேறு தரிசன வகைகளையும், ஒவ்வொன்றின் தனித்தன்மைகளையும், ஒட்டுமொத்த சிந்தனைகளின் அடுக்கு முறைகளயும், தத்துவ ஞானிகளையும், சரியான விளக்கங்களுடன் சிந்தனை மரபின் கலைச்சொற்கள் தொகுப்பும், மற்றும் சிந்தனை மரபின் ஒட்டு மொத வரலாற்று பற்றிய சித்திரத்தையும் எங்களுக்கு அளித்தீர்கள். இது நான் கலந்து கொண்டு மிக அதிகமாக கற்றுக்கொண்ட பயன்பெற்ற சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். மிக்க நன்றி.

Bonus ஆக நடை பயணங்களில் பாரதியாரின் கடைசி காலம் பற்றிய ஒரு துல்லிய சித்திரத்தை அளித்தீர்கள். இது அவரை பற்றிய பல சிறந்த புத்தகங்ளை படித்த அனுபவத்தை கொடுத்தது.

உங்களுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் ஒரு கற்றலாக இருந்தது.

இந்த தொடரின் அடுத்த கட்ட வகுப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

அன்புள்ள

ஆனந்த் கிருஷ்ணன்

திருப்பூர்

***

அன்புள்ள ஜெ

தத்துவ அறிமுக வகுப்புகள் பற்றிய செய்திகளை வாசித்தேன். தத்துவத்தை முறையான வகுப்புகள் வழியாக மட்டுமே அறிமுகம் செய்துகொள்ள முடியும் என்பதுதான் உலகமெங்குமுள்ள நடைமுறை. அமெரிக்காவில் மேலைத்தத்துவத்தை 15 நாள் வகுப்புகள் வழியாக முறையாகக் கற்பதற்கான பல அமைப்புகளை பல்கலைக் கழகங்களிலேயே காணலாம். தத்துவ வகுப்பின் முக்கியமான பயன் என்னவென்றால் தொடக்கத்திலேயே நாம் தவறாக ஏதேனும் புரிந்துகொண்டிருந்தால் அதை களைய முடியும். நூல்களை நம்பியே வாசித்தால் கொஞ்சநாட்களில் ஒரு தப்பான புரிதலை மிகப்பெரியதாக வளர்த்துவிட்டிருப்போம். பிறகு சரியாக புரிந்துகொள்ளவும் முடியாது. இந்தியாவில் இந்தவகை முறைகள் இல்லை. தமிழகத்தில் நான் கேள்விப்பட்டதில்லை. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

அர்விந்த் ஆறுமுகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:30

அறம் ஒரு பதிவு

அறம் வாங்க  

அறம் மின்னூல் வாங்க

ஜெயமோகன் எழுதிய நூறு நாற்காலிகள் வாசித்தபோது என் இளமையில் நிகழ்ந்த சில அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.

எங்கள் வீட்டுக்கு ஒரு வயதான பெண்மணி பிச்சையெடுக்க வந்துகொண்டிருந்தார். அவரை அனைவரும் நாயாடி என்று அழைத்தனர். வேறு பெயர் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. எனக்கு அன்று ஆறே ஏழோ வயது. அந்த பெண்மணிக்கு பணம் கொடுப்பது என் வேலை. அடிக்கடி பழைய ஆடைகளும் அளிப்போம். அவருடைய மகனின் குழந்தைக்கு என் வயதுதான். என்னை காணும்போது பிரியமாக விரியும் அவர் முகத்தை நினைவுகூர்கிறேன்.

ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு நிகழ்வுண்டு. பிச்சை அளிக்கப்பட்டதும் ‘நாசமாகப்போக; என்று சாபமிட்டுக்கொண்டு அவர் திரும்பிச் செல்வார். என் அம்மாவிடம் அதைப்பற்றி கேட்டேன். அது அவர்களின் நம்பிக்கை என்றார். கொடுக்கும் கையை சாபமிட்டு அவர்கள் நம் பாவத்தையும் வாங்கிக்கொள்கிறார்களாம்.

எம் இளம் உள்ளத்தில் அது அன்று உவக்காப இல்லை. அப்படிச் சொல்லவேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர் பொருட்படுத்தவில்லை. பலமுறை சொன்னபின் அவர் என்னிடம் ஒரு சமரசத்திற்கு வந்தார். நன்றாக இரு என வாழ்த்திய பின் உரக்க நாசமாகப்போகட்டும் என சொல்வார்

காலம் கடந்தபோது அவரை காணமாலாயிற்று. ஒரு உயர்சாதிக்குடும்பத்தில் அதன் எல்லா நன்மைகளையும் அடைந்து வளர்ந்த நான் அவரை மறந்தேன். இந்நாவலில் அவரை காண்பது வரை

ஐஏஸ் அதிகாரியான தர்மபாலன் என்னும் காப்பனின் அன்னைதான் அந்த பெண்மணி. இந்திய ஜனநாயகத்தின் அதிகாரசிம்மாசனத்தில் மகன் அமரும்போதுகூட தன் வழக்கமான பிச்சையெடுக்கும் வாழ்க்கையில் இருந்து உளவிடுதலை அடையமுடியாதவர். அவரை கட்டியிருக்கும் சங்கிலிகள் அரசின் கட்டுப்பாட்டிலுள்ளவை அல்ல. அவர்ணனை ஏளனம் செய்யும் ஆதிக்கசாதி அழுக்கு மறுபக்கம் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளும் கீழாளரின் பிரக்ஞையை உருவாக்குகிறது. ஆண்டுகணக்காக நீண்ட ஒரு வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள முடியாத வயோதிக அன்னை. மறுபக்கம் தன் மகனையும் கணவனையும் அந்த இருளுக்குள் தள்ளிவிடலாகாது என நினைக்கும் மனைவி. இரண்டு எல்லைகள் நடுவே தத்தளிக்கிறான் தர்மபாலன்.நம் ஆரியபாரதம் உருவாக்கிய பலியாடுகள்

தன் முன் நியாயம் ஒரு பக்கமும் நாயாடி மறுபக்கமும் இருந்தால் நாயாடிக்கே சாதகமாக இருப்பேன், ஏனென்றால் பிறப்பாலேயே நாயாடி அநீதிக்கிரையானவன் என்று சொல்லும் அந்த இளம் ஐஏஸ் அதிகாரியில் இருந்து மிகவும் பின்தங்கிவிடுகிறான் காப்பன். நம் நடுத்தரவர்க்க வாழ்க்கையின் பகுதிகளல்லவா சமரசங்கள்.

ஆனால் எங்கும் தாழ்ந்தவன் தாழ்ந்தவனே. அதிகாரம் தாளில் மட்டுமே. சாதியாதிக்கம் ஆட்சிசெய்யும் அரசுப்பதவிகளில் தான் இப்போதும் மேலாளரைக் கண்டால் வழிவிலகிச்செல்லவேண்டிய அடியாளன்தான் என காப்பன் புரிந்துகொள்கிறான். தெருவில் பிச்சையெடுத்து அனாதையாக இறக்கும் அம்மா இறுதிமூச்சுடன் சொல்கிறாள். ‘காப்பா களசம் வேண்டாம்லே…கசேரயில் இருக்காதே”

என் நினைவுகளிலுள்ள் அந்த பழைய நாயாடி பெண்மணியும் ஏதாவது அரசு மருத்துமவனையில் அனாதையாக இறந்திருப்பாரா? என்னைப்போன்ற ’கொடையாளி’களின் பாவங்களை பெற்றுக்கொண்டு?

நந்தகுமார்

மலையாளத்தில் இருந்து. இணைப்பு 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 06, 2023 10:30

March 5, 2023

இலக்கியவாதிகளும் பொதுக்களமும்

’தமிழ் இலக்கியத்துக்குள் நுழையும் ஒருவர் வெகுசீக்கிரம் எழுத்தாளர் சம்பந்தமான மிகை மதிப்பீட்டு பிம்பங்களுக்கும், உள்ளே பெரிய தாழ்வுணர்வுக்கும் படிப்படியாக ஆளாவதைப் பலரிடம் பார்த்திருக்கிறேன். இந்தச் சிக்கல் தமிழ் இலக்கியத்திலேயே இருக்கிறதா? தன்னை இந்தச் சமூகம் ஏந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. பொதுமேடைகளுக்கான இடம் தங்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் எழுத்தாளர்களிடம் துலக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தச் சமூகத்தின் பெரும்பாலான பிரச்சினைகளோடு அவர்களுக்கு எந்த உறவும் இல்லை.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்நாட்டின் தனித்துவமான சில விஷயங்களை நாம் எடுத்துக்கொள்வோம். ரத்தம் தோய்ந்த மொழிப் போராட்டம். நம்முடைய இலக்கியங்களில் என்னவாக அது பதிவாகி இருக்கிறது? எத்தனை நவீன எழுத்தாளர்கள் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்கள்? மொழி அடிப்படையில் அவர்களுடைய முதன்மை உரிமை எல்லைக்கு உட்பட்டதல்லவா? நம்முடைய இலக்கிய முன்னோடிகள் பலர் முற்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்கள். பிராமண சமூகத்திலும், பிராமணரல்லாத சமூகத்திலும்! யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற ஓர் ஆளுமை இங்கே ஏன் தோன்றவில்லை? ஏன் ‘சம்ஸ்காரா’ போன்று சாதியைத் தீவிரமான சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கும் ஒரு படைப்பு இங்கு தோன்றவில்லை? அனந்தமூர்த்திக்கு கன்னட அரசியல் தலைவர்கள் பலருடனும் நல்லுறவு இருந்திருக்கிறது. கன்னட தேசியர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். தலித் – பழங்குடி அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். சர்வதேச மேடைகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அஷிஸ் நந்தி போன்ற கோட்பாட்டாளர்களுடனும் அவருக்கு நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. உலகளாவிய விரிந்த பார்வையை அவருடைய உரையாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. இங்கே உள்ள உரையாடல்களில் குறைகளும் கசப்பும்தான் வெளிப்படுகின்றன. இதுதான் நம்முடைய எல்லையா?

எழுத்துச் செயல்பாடே போராட்டம்தான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம், மேற்கண்ட கேள்வியை சமஸ் சாரு நிவேதிதா பேட்டியில் கேட்டிருக்கிறார். ( சாரு இதற்கு, அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பான பதிலை கூறியிருக்கிறார் ) இதைப்  பற்றி நூற்றுக்கணக்கான பக்ககங்கள் நீங்கள் எழுதிவிட்டீர்கள், மீண்டும் மீண்டும் இவர்கள் ஏன் எழுத்தாளனுக்கு பாடம் நடத்த வருகிறார்கள், இவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை எழுத்தாளனும் எடுக்க வேண்டும் என ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்,  எழுத்தாளனை ஆசிரியனாக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டால் இவர்களுக்கு ஏன் எரிகிறது, தமிழ்ச்சூழலில் எழுத்தாளனை அறிந்து பின்தொடர்ந்து ஓர் தொடர் அறிவியக்கத்தில் இருப்பவர்களே அரிதினும் அரிது, அதை கூட இவர்களால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

எழுத்தாளனை ஆசிரியனாக ஏற்றுக்கொள்வதை  மிகை மதிப்பீடாக விமர்சிக்கும் இவர்கள்தான் “தெற்கிலிருந்து கிளம்பிய சூரியன்”  “காஞ்சியில் வெடித்த புரட்சி கனல்”  என்று மாதம் ஒரு நூலும் கட்டுரையும் எழுதி குவிக்கிறார்கள்.

இதை வேறு எவரோ கேட்டிருந்தால்  உங்களுக்கு அனுப்பி இருக்க மாட்டேன், சமஸ் உள்வட்டத்தில் இருப்பவர் ( அப்படித்தான் நான் நம்புகிறேன்) சாருவும், நீங்களும்  இவ்வளவு பேசியும், எழுதியும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

அன்புடன்,

சம்பந்தர்

பேய்க்கரும்பன்கோட்டை ( அருண்மொழி அக்காவின் ஊரான ஆலத்தூருக்கு பக்கத்து ஊர்தான்.  வேலையின்  பொருட்டு  சிங்கப்பூரில் வசிக்கிறேன்)

எழுத்தாளர் பூமணி எழுத்தாளர் பூமணி

அன்புள்ள சம்பந்தர்,

சமஸ் கேட்பது பேட்டியில் ஒரு கேள்வி. பொதுவாக பேட்டிகளில் வாசகச்சூழல் ஓர் எழுத்தாளனிடம் கேட்கவிரும்பும் கேள்விகளையே கேட்பது வழக்கம். அதுவே பேட்டியை வாசகர்களுக்கு அணுக்கமாக்கும். எல்லா நல்ல பேட்டியாளர்களும் செய்வது அதையே. சமஸும் அதையே செய்கிறார். அது அவருடைய கேள்வி என எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. சீண்டி பதில் வாங்கும் உரிமை பேட்டியாளருக்கு உண்டு.

இக்கேள்வி இங்கே பொதுச்சூழலில் இருந்து அடிக்கடி எழும் ஒன்றே. இந்தக் கேள்விக்கான பதிலை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். இந்திய சுதந்திரப்போராட்டம் , சர்வோதய இயக்கம் முதல் நெருக்கடிநிலை வரை எந்த தமிழ்நாட்டுச்ச் சமூகநிகழ்வுக்கானாலும் தமிழில் இருக்கும் முக்கியமான பதிவுகள் அனைத்துமே இலக்கியத்தில் நிகழ்ந்தவை மட்டுமே. நெருக்கடிநிலைக்கு அசோகமித்திரன், பொன்னீலன் முதலியவர்களின் பதிவுகளை விட்டால் இன்று  வேறு விரிவான பதிவுகளே இல்லை என்பதே உண்மை. இந்தி எதிர்ப்புப் பின்னணியில் பூமணியின் வரப்புகள் நாவல் அமைந்துள்ளது. தமிழகத்தின் சாதிக்கலவரங்களின் பின்னணியில் அமைந்தது அவருடைய அஞ்ஞாடி நாவல். அவற்றை படிக்காமல், கேள்விகூட படாமல்தான் இங்கே பாமரர் இந்தக் கேள்வியை எந்த மேடையிலும் எழுத்தாளர்களிடம் கேட்கிறார்கள்.

(இல்லை அத்தனை எழுத்தாளர்களும் சமூகநிகழ்வுகள் அனைத்தைப் பற்றியும் எழுதியாகவேண்டும் என்று சொல்கிறார்களா என எண்ணும்போது பதற்றம் வருகிறது. தமிழில் எதுவும் நிகழும்)

இலக்கியம் புறவய வரலாற்றைப் பதிவுசெய்வது அல்ல. அதன் இலக்கும் அழகியலும் அது அல்ல. அது மனிதவாழ்க்கை வழியாக வரலாற்றைப் பார்க்கிறது. நாங்கள் சினிமாவுக்காக காலகட்டங்களை ஆராயும்போது இலக்கியப் பதிவுகள் அன்றி வேறு பதிவுகளே இல்லை என்ற திகைப்பூட்டும் உண்மையை கண்டடைவதுண்டு. இந்தியன் சினிமாவுக்காக நேதாஜி பற்றி ஆய்வுசெய்தபோது சுஜாதா தமிழில் ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என என்னிடம் கேட்டார். நான் நாவல்களையே சுட்டிக்காட்டினேன். இன்று இந்தியன் 2 க்கும் நானும் நாவல்களையே கருத்தில்கொள்கிறேன்.

இந்திய சுதந்திரப்போராட்டப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்களில் மண்ணில் தெரியுது வானம் (ந.சிதம்பர சுப்ரமணியன்) சுதந்திரதாகம் (சி.சு.செல்லப்பா) ஆகியவை முக்கியமானவை. நெஞ்சின் அலைகள் (அகிலன்) மணிக்கொடி (ஜோதிர்லதா கிரிஜா) போன்ற ஐம்பது நாவல்களைச் சொல்ல முடியும். நேதாஜியின் போர் பற்றிய புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் (ப.சிங்காரம் ) இமையத்தியாகம் (அ.ரெங்கசாமி) ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவற்றில் வெளிப்படுவது மிகமிக விரிவான சித்திரம். இந்திய சுதந்திரப்போர் தமிழகத்தின் சமூக வாழ்க்கையில், உளவியலில் என்ன மாறுதலை உருவாக்கியது என அறிய இந்நாவல்கள் அன்றி வேறு வழியே இல்லை என்பதே யதார்த்தம்.

அதேபோல நெருக்கடிநிலை. அதன் சமூக விளைவுகளை மிக விரிவாகச் சித்தரிக்கிறது பொன்னீலனின் புதிய தரிசனங்கள். அது உருவாக்கிய ஆழ்ந்த தத்துவச்சிக்கலைப் பேசுகிறது அசோகமித்திரனின் இன்று. நக்சலைட்டுகள் ஒடுக்கப்பட்டதன் சித்திரங்கள் பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை போன்ற நாவல்களில் உள்ளன. தமிழகத்தில் அணைக்கட்டுகளின் விளைவாக உருவான இடப்பெயற்சிகளை பேசும் நாவல்கள் த.நா.குமாரசாமியின் ஒட்டுச்செடி , விட்டல்ராவின் போக்கிடம், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம். தமிழகத்தின் தொழில்வளர்ச்சியின் சூழியல் அழிவை சுப்ரபாரதி மணியன் (சாயத்திரை) எம்.கோபாலகிருஷ்ணன் (மணற்கடிகை) போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் குடியேற்றங்கள் பற்றிய வரலாறே கூட கோபல்லகிராமம் (கி.ராஜநாராயணன்) முதல் அம்மன் நெசவு (எம்.கோபாலகிருஷ்ணன்) வரையிலான படைப்பாளிகளால் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் உருவாகி வந்த தமிழ்த்தேசிய இயக்க அலை பற்றிக்கூட ஞாநி எழுதிய தவிப்பு நாவல்தான் ஒரே பதிவு.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சமூக வரலாற்றுப் பதிவென நமக்கு கிடைப்பது இலக்கியம் மட்டுமே. நினைவுப்பதிவுகளும் சரி , கல்வித்துறை சார்ந்த ஆவணப்பதிவுகளும் சரி மிகமிகமிகக் குறைவு. உண்மையில் பிற சூழல்களில் அவையெல்லாம் பிறரால் செய்யப்படுகின்றன.அவையே இலக்கியப்படைப்புக்கான கச்சாப்பொருட்கள்.அவற்றிலிருந்தே இலக்கியப்படைப்பு உருவாகிறது. நேர் மாறாக இங்கே அதையும் எழுத்தாளனே செய்யவேண்டியிருக்கிறது. தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த மாறுதல்களான  விதவை மறுமணம், பெண்கல்வி தொடங்கி இன்றைய குடும்பச் சிக்கல்கள் வரை இலக்கியப்பதிவுகளை மட்டுமே இன்றைய வாசகர்கள் தமிழக சமூகவரலாற்றுக்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

ஏனென்றால், இங்கே அரசியலாளர்கள், இதழாளர்கள் எவரும் நம்பகமான நினைவுப்பதிவுகளையோ, ஆதாரபூர்வமான வரலாற்றுப் பதிவுகளையோ எழுதுவதில்லை. அரசியலாளர்களின் நினைவுப்பதிவுகளில் தி.செ.சௌ.ராஜன், கோவை அய்யாமுத்து, க.சந்தானம் போன்றவர்களின் பதிவுகளே புறவயமானவை, நேர்மையானவை. மற்றவை அரசியல்பிரகடனங்களும் அரசியல் விவாதங்களும் தன்விளக்கங்களுமாகவே நின்றுவிட்டவை. இதழாளர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் துதிபாடல்களையே பெரும்பாலும் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் எந்த காலகட்டம் பற்றியும் இதழாளர்கள் எழுதிய நல்ல நூல் என ஏதும் இல்லை – ஒன்றே ஒன்று கூட. நேர்மையான நினைவுகளோ, ஆய்வுகளோ. எழுதப்பட்டவை எல்லாமே எளிமையான போற்றிப்பாடடி பெண்ணே கும்மிகள்தான். அப்படி எழுதலாகாது என்னும் சுரணை கொண்டவர்களே மிக அரிதானவர்கள். (ஆனால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மிகச்சிறப்பான நூல்களை இதழாளர்கள் எழுதியுள்ளனர்) ஆனால் அவர்கள்தான் இங்கே எல்லாவற்றுக்கும் கருத்து சொல்கிறார்கள். கருத்துருவம் உருவாக்குகிறார்கள்.

ஆனால் ஒன்றுண்டு, ஒட்டுமொத்தமாகவே இலக்கியம் அரசியல் -சமூகநிகழ்வுகள் சிலவற்றை பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்.  அரசியலாளர்களுக்கோ வரலாற்றாளர்களுக்கோ இதழாளர்களுக்கோ முக்கியமென தோன்றிய ஒன்று இலக்கியவாதிகளுக்கு முக்கியமாக தோன்றாமலிருக்கலாம். அல்லது குறைந்த முக்கியத்துவம் மட்டுமே அவர்களால் அளிக்கப்படலாம். மற்ற அனைவருக்குமே முக்கியமற்றவை என தோன்றும் சிலவற்றுக்கு இலக்கியவாதிகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல கோணங்களில் எழுதியிருக்கலாம். உதாரணமாக, தமிழக எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப விவசாயத்தின் அழிவை எழுதியிருக்கிறார்கள். அரசியலாளர்களுக்கு அது ஒரு பேசுபொருளே அல்ல. மாறாக அதை அவர்கள் வளர்ச்சி என நினைக்கிறார்கள். இலக்கியம் ஏன் ஒன்றை பொருட்படுத்தவில்லை, இன்னொன்றை பொருட்படுத்துகிறது என்பதை ஆராயவேண்டும். அதற்குத்தான் கல்வித்துறை ஆய்வுகள் தேவை. இலக்கியம் என்ன எழுதவேண்டும், எதை எழுதவேண்டும் என எவரும் ஆணையிட முடியாது.

இலக்கியவாதிகளில் சிலர் நேரடியாகச் சமூகச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சிலர் தங்களுக்குள் ஆழ்ந்து செல்பவர்கள். தொ.மு.சி.ரகுநாதன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் அரசியல் -சமூகக் களங்களில் செயல்பட்டவர். சுந்தர ராமசாமி, ஆ.மாதவன் போன்றவர்கள் தங்கள் கலைக்குள் நின்றவர்கள். இங்கே பொதுக்களத்தில் பெரும்பணியாற்றிய வை.மு.கோதைநாயகி அம்மாள், து.ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தி , குமுதினி கா.சி.வெங்கடரமணி எம. எஸ். கல்யணசுந்தரம் போன்ற பல படைப்பாளிகள் உள்ளனர். அவர்களை இக்கேள்வி கேட்பவர்கள் அறியவே மாட்டார்கள். ஜெயகாந்தன் யு.ஆர்.அனந்த மூர்த்தியை விட நீண்ட அரசியல் அனுபவமும் விரிவான தொடர்புகளும் கொண்டவர் என்பதையும் அறிய மாட்டார்கள்

கன்னடத்திலும் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்றவர்கள் பொதுக்களத்தில் நின்றவர்கள். எஸ்.எல்.பைரப்பா, எச்.எஸ்.சிவப்பிரகாஷ் போன்றவர்கள் எழுத்துக்குள் நின்றவர்கள். மலையாளத்தில் தகழி பொதுக்களத்தில் நின்ற எழுத்தாளர். பஷீர் அப்படி அல்ல. ஆனால் அங்கெல்லாம் பொதுக்களத்தில் போராடிய படைப்பாளிகளையாவது பரவலாக தெரிந்து வைத்திருப்பார்கள். இங்கே பொதுப்பணியில் வாழ்க்கையே அர்ப்பணித்த எழுத்தாளர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதோடு ஏன் தமிழ் எழுத்தாளர்கள் பொதுப்பணிகளில் ஈடுபடுவதே இல்லை என கேள்வியும் கேட்பார்கள். இதுதான் உண்மையாகச் சொன்னால் தமிழிலக்கியச் சூழலில் உள்ள சிக்கல்.

தமிழகத்தில் எழுத்தாளர்கள் கோருவது தங்களுக்குச் சம்பந்தப்படாத தளங்களில் தங்களுக்கு ஓர் இடம் வேண்டும் என்றல்ல. மாறாக, தாங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து எழுதும் இலக்கியத்தில் இலக்கியவாதியாக ஓர் இடம் வேண்டும் என்று மட்டுமே. அங்கும் அரசதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே வந்து அமர்வதைக் கண்டு மட்டுமே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசியல்சமூகக் களங்களில் வாழ்க்கையை அர்ப்பணித்த எழுத்தாளர்களுக்குக் கூட எளிய அங்கீகாரங்கள், குறைந்தபட்சம் பெயர் சொல்லப்படுதல்கூட இல்லாத சூழலையே அவர்கள் குறைசொல்கிறார்கள். அதையும் சொல்லாதே என்றுதான் இங்கே பொதுச்சூழல் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2023 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.