Jeyamohan's Blog, page 612
March 15, 2023
யோகம், கடிதம்
நான் தினமும் மெல்லோட்டம் (Jogging) பயிற்சி செய்து வருவபன் . ஒரு கட்டத்தில் அது முழு உடலையும் மேம்படுத்துவதில்லை என்று உணர்ந்து, யோகா கற்க முடிவு செய்தேன்.சௌந்தர் அண்ணாவின் ” யோகம் இன்று ” காணொளிகளை கண்டிருந்தாலும், அவரிடம் முறைப்படி கற்க, யோகமுகாம் வகுப்புக்கு பதிவு செய்தேன். மூன்று நாட்களில் அவரிடம் கற்றது, குருகுல அனுபவம், வாக்தேவியின் அருள்முகம் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் கூட வரும் ஜெ.
நம் உடல் எவ்வாறு சமநிலையை இழந்து, நம்மிடம் உணர்த்தி கொண்டே இருக்கிறது, அதை கண்டு கொள்வது எப்படி என்பதில் ஆரம்பித்து, யோகமரபு, அதன் வரலாறு, தற்போதைய அமைப்புகள், யோகத்திற்கும் ஆயுர்வேதத்திற்கும் உள்ள உறவு, தற்போது ஆங்கில மருத்துவத்திற்கும் யோகதிற்கும் உள்ள உரையாடல் என பல்வேறு தளங்களை சுட்டி காட்டினார். மருத்துவர் மகாதேவன், குரு சிவானந்தா, குரு கிருஷ்ணமச்சர்யா ஆகிய ஆளுமைகளை அறிமுகம் செய்தார். முதியவர்கள் மற்றும் எடை உள்ளவர்களையும் கவனத்தில் கொண்டு பயிற்சி வடிவமைத்து, ஒவ்வொரு பயிற்சிக்கும் முன்னும், பின்னும் அப்பயிற்சி உடலின் எந்த பாகத்தை, எந்த தசையை வலுப்படுத்துகிறது என்பதை உணர செய்தார். நம் உடலில் மறைந்திருந்த வழிகளை நாமே வெளிகொணர்ந்து உணர்வது நல்ல அனுபவம் ஜெ.
(நம் உடலும் உள்ளமும் இனிய வலிகளை மறக்க விரும்புவதில்லை போலும். பயிற்சிக்கு இணையாக மகிழ்வளித்தது நண்பர்களுடன் விவாதம், மணி அண்ணாவுடன் பகிர்வு, நூலகத்தில் உள்ள அரிய புத்தங்களுடன் வாசிப்பு, அருண்மொழி அக்காவின் “இசை” பற்றிய சிறிய சொற்பொழிவு. (யானையும், அக்காவும் ஒன்று தான். உருவத்திற்கும் அதன் குழந்தைத்தன்மைக்கும் சம்பந்தமில்லை.)
அனைவருக்கும், அனைத்திற்கும் காரணமான உங்களுக்கும் நன்றி ஜெ .
மாணவன்,
மருதுபாண்டியன்.த
அறம் அளிக்கும் நெகிழ்வு ஏன்? -கடிதம்
வணக்கம்,
இந்த விமர்சனத்தை நீங்கள் படிக்க போகிறீர்களா என்று கூட எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்களுக்கு எழுதுகிறேன் என்பதே எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது.
மிகவும் சமீபத்தில் தான் உங்கள் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன். எனது கணவர் உங்கள் “நூறு நாற்காலிகள்” கதையை படிக்கச் சொல்லி பரிந்துரைத்தார். படித்த பின் என்னுள் எழுந்த எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
நூறு நாற்காலிகள்
மனித மனங்களில் இருக்கும் இருண்ட பகுதியை கண்கூசாத வெளிச்சத்தோடு பிரதிபலிக்கும் ஆளுமை தான் “ஜெயமோகன்”.
இந்தக் கதை இருண்ட சமூகத்தின் இருட்டிலிருந்து தப்பித்தவன், வெளிச்சத்திற்கு வந்து சந்திக்கும் இன்னல்களை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு உருக்கமாக வெளிப்படுத்துகிறது.
“உலகம் அழகானது, வாழ்க்கை இனிமையானது” என்று சொல்ல எத்தனையோ கதைகள் இருக்கிறது. ஆனால் இந்த வாழ்க்கை எத்தனை வரமானது என்று உணரவைக்க ஒரு சில கதைகளால் மட்டுமே முடியும். அப்படி ஒரு கதை தான் இது.
அரியணை ஏற வேண்டும் என்று ஆசைப்பட எல்லாருக்கும் உரிமை உண்டு . ஆனால் சில அரியணைகள் ஆளுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை என்பதே நிதர்சனம். உபயோகிக்க முடியாத அதிகாரம் போல் சுமை தருவதும் ஏதுமில்லை.
அழுக்கிலும் அசுத்தத்திலும் உலாவுவது பரிசுத்தமான அன்பாக இருந்தாலும், அதைப் புறக்கணித்து தான் இந்த சமூகத்தில் பிழைக்க முடியும் என்ற எதார்த்தத்தை நெற்றி பொட்டு போல் வெளிப்படையாக சொல்கிறது இந்த கதை.
மகாலட்சுமி சந்திரசேகரன்
***
அன்புள்ள மகாலட்சுமி,
அந்தக்கதை என் பார்வையில் ‘இன்னல்களை’ மட்டும் சொல்வது அல்ல. அந்த இன்னல்களின் இருட்டில் அவருக்கு பல்வேறு கைகள் உதவிக்கு வருகின்றன. அதைப்பற்றிக்கொண்டு இன்னும் மேலேறவேண்டும் என்னும் வேகம் அவரில் எழுமிடத்தில் அக்கதை உச்சம்கொள்கிறது.
ஜெ
அன்பு ஜெ
நலம் விழைகிறேன்.
6 ஆண்டுக்கு முன் அறம் தொகுப்பு படித்த பின் தான் உங்களின் தொடர் வாசகனானேன். அதன்பின் உங்கள் தளமும் வெண்முரசும் என் தினசரி ஆகிபோனது. இன்றும் அறம் கதைகளை பற்றி சிலாகிக்கும் வாசகர்களை உங்கள் தளத்தில் காணமுடிகிறது. இன்று மட்டுமல்ல என்றும் அறம் என்ற சொல்லுக்கு மிகசிறந்த விளக்கமாக இக்கதைகள் இருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் ஏன் இக்கதைகள் எல்லோரையும் சிலிர்க்க வைக்கிறது என்று என்னால் விலங்கி கொள்ள முடியவில்லை. கதைகள் படித்து முடித்த பின் என்னுள் சொல்லிலடங்கா உணர்வெழுச்சி. ஒரு நல்ல கதையை படித்து விட்ட மகிழ்ச்சி மட்டுமல்ல அது, எளிதில் கிடைக்காத சாமானியனின் அற தரிசனம் காரணமாக இருக்கலாம். ஏண் ஒரு இலக்கியம் இவ்வளவு மக்களை தன்னெழுச்சி கொள்ள செய்கிறது என நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா.
முத்து
அன்புள்ள முத்து,
மனிதர்கள் இங்கே வாழ விரும்புகிறார்கள். வாழ்க்கை அறம், கருணை சார்ந்தே நிகழமுடியும். மானுடத்தீமையை நம்பி மானுடர் வாழமுடியாது. மனிதனின் இயல்பிலேயே எங்கோ அறமும் கருணையும் உள்ளது. ஆகவேதான் மானுடன் மானுடமாக திரண்டு இவ்வுலகைப் படைத்தான். இருளும் கீழ்மையும் அவனிடம் உள்ளன. அவற்றுடன் போரிட்டு அவன் தன்னை அறம் சார்ந்து நகர்த்திக்கொள்ளவே என்றும் முயல்கிறான். இருட்டின் வெளியில் ஒளிச்சுடர் கொள்ளும் புனிதம் அறத்திற்கு உள்ளது. அறத்தின் தரிசனம் நம்பகமாக முன்வைக்கப்படுகையில் மானுடர் கொள்ளும் உள எழுச்சி அதன்விளைவே
ஜெ
கவிதைகள் – இந்தி கவிதைச் சிறப்பிதழ்
மார்ச் மாத கவிதைகள் இதழ் ’இந்திக் கவிதைகள்’ சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இவ்விதழில் எம். கோபாலகிருஷ்ணன் மங்களேஷ் டப்ரால் பற்றி எழுதிய ‘மலைமேல் ஒளிரும் லாந்தர் விளக்கு’, இந்திக் கவிஞர் ரமாகாந்த் ரத் எழுதிய ’கவிதையும் கவிஞனும்’ (தமிழில் எம். கோபாலகிருஷ்ணன்) கட்டுரைகளுடன் கவிஞர் மதார், நிக்கிதா எழுதிய வாசிப்பனுபவங்களும் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்த்து சமீபத்தில் நூல்வனம் வெளியீடாக வெளிவந்த ‘பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி’ கவிதை நூலிலிருந்த ’இந்திக் கவிதைகள் ஒரு அறிமுகம்’ கட்டுரை ஏழாம் நூற்றாண்டிலிருந்து சமகாலம் வரையான இந்திக் கவிதைகள்/கவிஞர்களை அறிமுகம் செய்வது. அக்கட்டுரையும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
இந்திக் கவிதைகளுக்கான இதழ் என முடிவானதும் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் உதவியை நாடினோம். இவ்விதழின் மூன்று கட்டுரை அவரது நேரடி பங்களிப்பில் வந்தவை. மீதி இரண்டு கட்டுரைகள் அவர் மொழிபெயர்த்த கவிதை நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இவ்விதழுக்கான ஆலோசனையும், ஊக்கமும் தந்து எங்களை வழிநடத்திய எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனுக்கு எங்கள் நன்றி.
கவிதைகள் இணையஇதழ்நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், நவின். ஜி.எஸ்.எஸ்.வி.)
March 14, 2023
என்றும் பஷீர்
வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி
ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 வெளிவருகிறது. மார்ச் 29 இசைவெளியீட்டுடன் அதற்கான விளம்பரங்கள் தொடங்குகின்றன. ஒரு எதிர்பார்ப்பு, பதற்றம். இனிய உணர்வுதான் அது.
ஆனால் அதற்கு இணையாகவே நான் எதிர்பார்க்கும் படம் நீலவெளிச்சம். ஆஷிக் அபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படம் வைக்கம் முகமது பஷீர் எழுதிய நீலவெளிச்சம் என்னும் கதையின் திரைவடிவம்.
நீலவெளிச்சம் படம் ஏற்கனவே ஏ.வின்செண்ட் இயக்கத்தில் மலையாளத்தில் 1964 ல் ‘பார்கவி நிலையம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மலையாளத்தின் கிளாஸிக் படங்களில் ஒன்று அது.
பஷீரின் கதைகள் பின்னரும் படமாகியுள்ளன. இதற்கு பஷீரே திரைக்கதை எழுதினார். அந்தப்பணத்தில்தான் அவர் கோழிக்கோடு அருகே போப்பூரில் நிலம் வாங்கி வீடுகட்டி குடியேறினார். பஷீரின் ஆளுமையும் அவருடைய பித்தும் தனிமையும் மிகச்சிறப்பாகப் பதிவான படங்களில் ஒன்று இது.
வைக்கம் முகம்மது பஷீர்- பழைய படம்முப்பதாண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இப்படத்தை சென்ற ஜூலையில் பார்த்தேன். இன்னும் கனவுத்தன்மை கொண்டிருந்தது. ஒரு கட்டுரையும் எழுதினேன். தனிமையின் முடிவில்லாத கரையில்…
நீலவெளிச்சம் ஒரு ‘பஷீரியன்’ உளவியல் கொண்ட படைப்பு. மேலோட்டமான பார்வைக்கு எளிமையான, உற்சாகமான பேய்க்கதை. ஆனால் அதன் மறுவாசிப்புகள் உள்ளே உள்ளே வாசல்களை திறப்பவை. பஷீர் நீண்ட பயணத்திற்குப் பின் ஊர்திரும்பி ஏதேனும் எழுத முடியுமா என்று பார்க்க ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிக்கிறார். ஆனால் எழுத முடியவில்லை. ஒரு காலகட்டம் முடிந்துவிட்டிருக்கிறது. அகம் அல்ல, ஆன்மாவே களைத்துப்போயிருக்கிறது.
பஷீர் போராடிய இந்திய தேசியவாத இலட்சியங்கள் நாடு சுதந்திரமடைந்தபின் வெளிறிவிட்டன. அவரால் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கமுடியவில்லை. காந்தி கொலையுண்டதுமே முழுமையாக அரசியலை துறந்துவிட்டார். அதுவரை எழுதிய கொள்கைசார்ந்த எழுத்துக்கள் அனைத்தையும் கொளுத்தி அழித்துவிட்டார். எஞ்சுவது ஒன்றுமில்லை. சில நினைவுகளை தவிர. அவற்றில் பல துயரமானவை, சில இனியவை.
அலுப்பு, சலிப்பு, சோர்வு. எழுத்தாளர்கள் அவ்வப்போது அடையும் மகத்தான வெறுமை. இன்று உளவியலாளர்கள் chronic depression என்று சொல்லி மாத்திரை எழுதிவிடுவார்கள். உளச்சோர்வு தனிமையால் பெருகும், தனிமையை பெருக்கிக் கொள்ளும். அந்த மகத்தான தனிமையில் அவருள் தோன்றிய ஒரு பிம்பம் பார்கவி. அவருடைய கற்பனையில் இருந்து.
பார்கவி அவருடன் விளையாடுகிறாள். அவரைச் சீண்டுகிறாள். மீண்டும் இளமை, மீண்டும் சிரிப்பு. ஆனால் எங்கோ அவளை கழற்றிவிட்டாகவேண்டும். அவள் இருக்குமிடம் ஒரு அகவெளி. பைத்தியமாக ஆகாமல் அங்கே செல்ல முடியாது. மீளும் துடிப்பில் பஷீரின் கற்பனை அவளுக்கொரு கதையை உருவாக்குகிறது. பார்கவி நிலையத்தின் அந்தக் கிணறு அவருடைய ஆழுளமேதான். அவள் அங்கிருந்து வருகிறாள். அவள் சொன்னகதைகளும், அவர் எழுதிய நினைவுகளும் அவளுடன் மீண்டும் அதற்குள் சென்று மறைகின்றன.எஞ்சுவது இனிய ஒரு வலி. எரிச்சலும் சுகமுமாக ஒரு குருதிக்கீறல். அதுதான் நீலவெளிச்சம்.
பஷீரின் மகத்தான ஆளுமை மிகச்சிறப்பாக வெளிப்பட்ட படம் பார்கவி நிலையம். முதல் வடிவில் மது பஷீராக நடித்திருந்தார். பஷீரின் தனிமை, சோர்வு, அந்த இருளில் இருந்து எழும் ஒளியாக ஒரு பெண்குரல். குறிப்பாக ‘ஏகாந்ததயுடெ மகாதீரம்’ என்னும் பாடல். ஒரு பஷீரியன் பாடல் அது. அறிவின் புண்களும் பரவசத்தின் சிறகுகளுமாக பஷீர் வந்தடைந்த தனிமையின் முடிவில்லாத மறுகரை.
மறுஆக்கத்தில் பஷீர் இன்னும் துலங்குகிறார். புகைப்படத்தில் பஷீரிடம் வெளிப்படும் உடல்மொழியையும் அப்படியே பதிவுசெய்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பாபுராஜ்பார்கவி நிலையம் படத்திற்கு எம்.எஸ்.பாபுராஜ் இசையமைத்த பாடல்கள் மலையாளத்தின் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. பாபுராஜ் இன்னொரு பஷீர். ஏறத்தாழ சமவயது கொண்டவர். முகமது சபீர் என்ற பெயர் கொண்ட பாபுராஜ் வங்காள கஸல் பாடகரான ஜான் முகமது கான் என்பவருக்கு பிறந்தவர். ஒரு கச்சேரிக்கு கோழிக்கோடு வந்த பாபுராஜின் தந்தை அவர் அன்னையுடன் சில ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு கைவிட்டுவிட்டுச் சென்றார். அன்னை பைத்தியமாகி மறைய பாபுராஜ் தன் தம்பியுடன் கோழிக்கோடு தெருக்களில் பாடி பிச்சையெடுத்து வாழ்ந்தார்.
பின்னர் மும்பை ரயில்களில் பாடும் நாடோடியானார். இலங்கைக்குச் சென்று பாடினார். கோழிக்கோடுக்கு திரும்பி கஸல் பாடகராக புகழ்பெற்று திரையிசையில் குறுகிய காலத்தில் ஓர் அலையை கிளப்பினார். பஷீரின் நண்பராக இருந்தார். பெருங்குடிகாரராகி, செல்வத்தை இழந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனாதையாக இறந்தார். பஷீரின் ஆளுமையை உணார்ந்து போடப்பட்ட இசை இப்படத்திலுள்ளது.
அதே பாடல்களுடன் அந்தப்படம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. புதியபாடல்கள் நல்ல ஒலிப்பதிவுடன் வண்ணமயமாக உள்ளன. சிறப்பாகவும் உள்ளன.
ஆனால் அறுபதாண்டுகளுக்கு முந்தைய கறுப்புவெள்ளை படத்திலேயே அற்புதமான ஓவியச்சட்டகங்கள் உள்ளன. குறிப்பாக ஏகாந்ததையுடே அபார தீரம் பாடலில் வின்செண்ட் அளித்த காட்சிகள் கருமைவெள்ளை காரணமாக மேலும் கனவுத்தன்மையுடன் உள்ளன.
தாமதமென்ன வருவதற்கு?பாடியவர் ஷஹபாஸ் அமன்
தாமஸமெந்தே வருவான் பிராணசகி என்றே முன்னில்
தாமஸமெந்தே அணையான் பிரேமமயி என்றே கண்ணில்
ஹேமந்த யாமினி தன் பொன் விளக்கு பொலியாறாய்
மாகந்த சாககளில் ராக்கிளிகள் மயங்ஙாறாய்
தாமஸமெந்தே வருவான்…
தளிர்மரம் இளகி நின்றே தங்கவள கிலுங்ஙியல்லோ
பூஞ்சோலப் கடவில் நின்றே பாதசரம் கிலுங்ங்கியல்லோ
பாலொளி சந்த்ரிகயில் நின் மந்தஹாசம் கண்டுவல்லோ
பாதிராக் காற்றில் நின்றே பட்டுறுமால் இளகியல்லோ
தாமஸமெந்தே வருவான்…
(தமிழில்)
தாமதமென்ன வருவதற்கு உயிர்தோழி என் முன்னால்
தாமதமென்ன அணைவதற்கு காதல்கொண்டவளே என் கண்ணில்?
முன்பனிக்கால இரவின் பொன்விளக்கு அணையப்போகிறது
செஞ்சந்தன மரத்தில் இரவுக்கிளிகள் கூடணைகின்றன
தாமதமென்ன வருவதற்கு?
தளிர்மரம் அசைந்து உன் தங்கவளையல் குலுங்குகிறது
பூஞ்சோலைப் படிக்கட்டில் உன் கொலுசு ஒலிக்கிறது
பாலொளி சந்திரனில் உன் புன்னகை தெரிகிறது
நள்ளிரவுக் காற்றில் உன் பட்டுமேலாடை நெளிகிறது
தாமதமென்ன வருவதற்கு?
முதல் வடிவம். யேசுதாஸ்
*
தனிமையின் முடிவில்லாத கரைபுதிய வடிவம். பாடியவர் ஷஹபாஸ் அமன்
ஏகாந்ததையுடே மகாதீரம்
ஏகாந்ததையுடே அபார தீரம்
பின்னில்தாண்டிய வழி அதிதூரம்
முன்னில் அக்ஞாத மரண குடீரம்
இந்நு நீ வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்
பலதும் தேடி பலதும் நேடி
நிழலுகள் மூடிய வழிகளில் ஓடி
ஒடுவில் வந்நெத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்
ஆதிமபீகர வனவீதிகளில்
நிலாவில் மயங்ஙிய மருபூமிகளில்
நூற்றாண்டுகளுடே கோபுரமணிகள்
வீணு தகர்ந்நொரு தெருவீதிகளில்
அறிவி முறிவுகள் கரளிலேந்தி
அனுபூதிகள்தன் சிறகில் நீந்தி
மோகாந்தத தீர்ந்நு எத்திய ஓரிடமோ
ஏகாந்ததையுடே அபார தீரம்
தமிழில்
தனிமையின் மகத்தான கரை
தனிமையின் முடிவில்லாத கரை
பின்னால் கடந்த வழி மிகத்தொலைவு
முன்னால் அறியமுடியாத மரணக்குடில்
இன்று நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவிலாக் கரை
பலவும் தேடி பலவும் அடைந்து
நிழல்கள் மூடிய வழிகளில் ஓடி
இறுதியில் வந்து சேர்ந்த இடமோ
தனிமையின் முடிவிலா கரை,
ஆதிபயங்கர வனப்பாதைகளில்
நிலவில் மயங்கும் பாலைநிலங்களில்
நூற்றாண்டுகளின் கோபுரமணிகள்
வீழ்ந்து உடைந்ந்த தெருவீதிகளில்
அறிவின் புண்களை நெஞ்சில் ஏந்தி
பரவசங்களின் சிறகுகள் கொண்டு நீந்தி
மோகக்குருட்டுத்தன்மை நீங்கி
நீ வந்து சேர்ந்த ஓர் இடமோ
தனிமையின் முடிவில்லா கரை
பழைய வடிவம் பாடியவர் கமுகற புருஷோத்தமன்
காதல் மதுக்கிண்ணம்புதிய வடிவம் கே.எஸ்.சித்ரா
அனுராக மதுசஷகம் அறியாதே மோந்தி வந்த
மதுமாச சலஃபமல்லோ
ஞானொரு மதுமாச சலஃபமல்லோ
அழகின்றே மணிதீப ஜ்வாலயே ஹ்ருதயத்தில்
அறியாதே நிறச்சல்லோ
ஞானொரு மலர்மாச சலஃபமல்லோ
அக்னிதன் பஞ்சரத்தில் பிராணன் பிடஞ்ஞாலும்
ஆடுவான் வந்நவள் ஞான்
நெஞ்சிலே ஸ்வப்னங்கள் வாடிக் கொழிஞ்ஞாலும்
புஞ்சிரி கொள்ளும் ஞான்
சிறகு கரிஞ்ஞாலும் சிதயில் எரிஞ்ஞாலும்
பிரியில்லென் தீபத்தே ஞான்
விட்டு பிரியில்லென் தீபத்தே ஞான்
(தமிழில்)
காதல் மதுக்கிண்ணம் அறியாமல் குடித்துவிட்ட
வசந்தகால வண்ணத்துப்பூச்சி நான்.
அழகின் மணிதீபத்தின் சுவாலையை உள்ளத்தில்
அறியாமல் நிறைத்தவள் நான்.
நான் ஒரு மலர்மாத வண்ணத்துப்பூச்சி.
நெருப்புக் கூண்டுக்குள் உயிர் துடித்தாலும்
ஆடுவதற்காக வந்தவள் நான்.
நெஞ்சின் கனவுகள் வாடி உதிர்ந்தாலும்
புன்னகை செய்பவள் நான்
சிறகு கருகினாலும் சிதையில் எரிந்தாலும்
பிரியமாட்டேன் என் தீபத்தை நான்.
விட்டு பிரியமாட்டேன் என் தீபத்தை நான்.
பழைய வடிவம். எஸ்.ஜானகி
குடந்தை சுந்தரேசனார்
குடந்தை ப. சுந்தரேசனார் தமிழ் பண்ணாராய்ச்சி வித்தகர். மரபான தமிழிசை மீட்சிக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்தார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, எளிய தமிழில் எடுத்துரைத்தார். மரபான தமிழிசை நுட்பங்களை அடையாளம் கண்டு எளிய தமிழில் எடுத்துரைத்தார். குறிப்பாக இலக்கிய நூலாக மட்டுமே கற்கப்பட்டு வந்த சிலப்பதிகாரத்த்தில் உள்ள பல அரிய இசை நுட்பங்களை வெளிக்கொணர்ந்தார்.
குடந்தை சுந்தரேசனார்
குடந்தை சுந்தரேசனார் – தமிழ் விக்கி
திருப்பூந்துருத்தி -வெங்கி
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும்.
அண்மையில் ஊரிலிருந்து கல்லூரி நண்பன் ஒருவன் அழைத்திருந்தான் (கல்லூரிக் காலத்தில் எங்களின் “பாலா” வாசகர் குழுவில் இருந்தவன்). பேசி பல வருடங்களாகியிருந்தது. நெடுநேரம் பேசினோம். பேச்சு 90-களின் கல்லுரி வாழ்க்கையைத்தான் தொட்டுத் தொட்டு சுழன்று கொண்டிருந்தது. அவன் பேசி முடித்து வைத்துவிட்டான். என் மனம் முப்பது வருடங்கள் பின்னோக்கிய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தது. பாலாவின் நாவல்கள் ஒன்று மாற்றி ஒன்று நினைவுக்கு வந்துகொண்டிருந்தன. திருமங்கலம் நூலகத்தில் “திருப்பூந்துருத்தி” படித்த நினைவு மேலெழுந்து வந்தது.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை இளமறிவியல் படித்துக்கொண்டிருந்தபோது, ஒருமுறை மேட்டூர் அணைப்பகுதியில் இருக்கும் நண்பன் குருநாதனின் வீட்டிற்கு “சீதா கல்யாண” உற்சவத்திற்காக சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு குருநாதனுக்கு, உற்சாகமான, கர்நாடக இசை பயிலும் நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்றிருந்தது. இரண்டு நாட்களில் அனைவரும் எனக்கும் நெருக்கமானார்கள். தோழி ஒருவருக்கு அப்போதுதான் திருமணமாகி அவர் கணவரும் எங்கள் குழாமில் ஐக்கியமாகியிருந்தார். அக்காலகட்டத்தில் எங்கள் அனைவரையும் ஒரே சரடில் இணைக்கும் மந்திரப் பெயர் ஒன்றிருந்தது – “பாலா“. பாலாவின் எழுத்தையும், அச்சமயத்தில் வெளியான அவரின் நாவல்களையும், தொடர்களையும் பற்றிப் பேசாமல் எங்கள் பின்னிரவு உரையாடல்கள் முடிந்ததில்லை (கல்லூரியிலும் நண்பர்களுடன் அதுபோல்தான்).
கல்லூரி முடித்து வேலைக்கு விண்ணப்பங்கள் அனுப்பி காத்திருந்த காலம். அப்போது மதுரை திருமங்கலத்தில் குடியிருந்தோம். காலை உணவு முடித்து, உசிலம்பட்டி சாலையிலிருந்த நூலகத்திற்கு சென்று, வாசிப்பின் பின், மதியத்திற்கு மேல் வீட்டிற்குத் திரும்புவதுதான் என் தினசரி வழக்கமாகி விட்டிருந்தது. நூலகத்தில் பெரிய டேபிளின் மீது கிடக்கும் வார, மாதப் பத்திரிகைகளையும், நாளிதழ்களையும் (ஒன்றிரண்டு கையெழுத்துப் பத்திரிகைகளும் கிடைக்கும்) ஒன்று விடாமல் புரட்டிக் கொண்டிருப்பேன். என் ஞாபகம் சரியென்றால், அப்போதுதான், ம. நடராஜன் ஆசிரியப் பொறுப்பில் மாதம் இருமுறை இடைநிலை இதழாக வெளிவந்து கொண்டிருந்த “புதிய பார்வை” சஞ்சிகையில் பாலாவின் “திருப்பூந்துருத்தி” தொடர் ஆரம்பித்திருந்தது. என்ன காரணத்தினாலோ, தொடர் மனதுக்கு மிக அண்மையாய் ஒட்டிக்கொண்டது. திருப்பூந்துருத்தியின் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
95 – ஓசூரில் முதல் வேலை கிடைத்து அங்கிருந்தபோது, நண்பன் செல்வம் என்னைப் பார்க்க, மேட்டூரிலிருந்து வந்திருந்தான். அப்போது காரப்பள்ளி அருகே செந்தில் நகரில், மஞ்சுஸ்ரீ மலர்ப் பண்ணையில் வேலை செய்த நான்கைந்து பேச்சிலர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். மாலை தேநீர் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது செல்வம் “என்ன பாலா இப்படி மாறிட்டாரு?” என்றான் மிகுந்த வருத்தத்துடன். அப்போது பாலாவின் எழுத்து ஆன்மீகம் நோக்கி திரும்பியிருந்தது. “ஏன் மாறக்கூடாது?” என்றேன் நான் புன்னகையுடன். “எப்பவுமே காதலும், ஆண்–பெண் உறவுச் சிக்கலும்தான் எழுதணுமா செல்வம்? மெர்க்குரிப் பூக்கள் பாலாவேதான் வேணுமா நமக்கு? அது ஒரு பயணம் இல்லையா?. அவர் மாற்றம் எனக்கொண்ணும் ஆச்சரியமா தெரியல. அது அவர் கண்டடைந்த வழி. அவரோட எழுத்து எல்லாமே, பாதையில, அவருக்குள்ள நடந்த தேடல்தானே? அந்த “Thought Process”-த்தானே அவர் நாவல்களா எழுதினார்? தேடித் தேடி இங்க வந்து சேர்ந்திருக்கார். அவர் எழுத்து எப்படி மாறிடுச்சுன்றது முக்கியமில்லை. நமக்கு அதுலருந்து என்ன கிடைச்சதுன்றதுதான் முக்கியம். இல்லையா செல்வம்?” என்றேன். திருமங்கலத்தில் வசித்தபோது, நானும் பள்ளி நண்பன் மூர்த்தியும், மார்கழி வைகறைகளில் திருப்பாவையும், திருவெம்பாவையும் படிக்க சாமிப் பாட்டி வீட்டிற்குச் செல்வோம். விடுமுறை நாட்களின் மதிய வேளைகளில், தேவி பாகவதமோ, பாரதமோ பாட்டிக்கு உரக்க வாசிப்போம். பாலாவின் பிந்தைய புத்தகங்கள் சிலவற்றையும் (கிருஷ்ணார்ஜுனன், பதினெண் நாயன்மார்களின் கதை உட்பட) பாட்டிக்கு உரக்க வாசித்தது பற்றி செல்வாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
திருப்பூந்துருத்தியின் கதை இப்படி ஆரம்பிக்கிறது… – 26 வயது மணியின் அப்பா வரதராஜனின் “ஸ்டியரிங் ராட்” தயாரிக்கும் தொழிற்சாலையில் 840 பேர் வேலை செய்கிறார்கள். மணிக்கு மூன்று அண்ணன்கள். மணி உட்பட நான்கு மகன்களும் தொழிற்சாலையின் வெவ்வேறு பிரிவுகளை நிர்வகிக்கிறார்கள். மணி, விற்பனைப் பிரிவை பார்த்துக் கொள்கிறான். தினமும் வீட்டிலிருந்து தொழிற்சாலை செல்லும் நேரத்தில், காரில், 53 வயது டெஸ்பாட்ச் கிளெர்க் வாசுதேவனிடம் திவ்யப் பிரபந்தம் கற்றுக்கொள்கிறான்.
ஒருநாள் தொழிற்சாலை செல்லும் வழியில் கார் கவிழ்ந்து மோசமான விபத்துக்குள்ளாகிறது. மணி படுகாயமடைகிறான். விபத்து நடந்தபோது அச்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த வனிதா, மற்றவர்களுடன் சேர்ந்து விபத்துக்குள்ளான காரை நிமிர்த்தி மயங்கியிருந்த மணியை தன் காரில் கிடத்தி, வாசுதேவனையும் ஏற்றிக்கொண்டு விரைந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கிறாள்.
வனிதாவிற்கு 36 வயது. கணவன் சரியில்லை. கணவனைப் பிரிந்து குழந்தையுடன் தனியே வசிக்கிறாள். பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை. வனிதாவிற்கு வாழ்க்கையில் எப்படியாவது கஷ்டப்பட்டு முன்னேறி நல்ல நிலைமையை அடைந்து விடவேண்டுமென்று ஆசை.
மருத்துவமனையில் மணிக்கும், மணியைப் பார்க்க வரும் அப்பா வரதராஜனுக்கும் ஒரே நேரத்தில் கடுமையான மாரடைப்பு வருகிறது. இருவரின் உயிரும் உடல் விட்டுப்பிரிகிறது.
இது நாவலின் துவக்கம் மட்டுமே. நாவல் பேச வந்த விஷயமே வேறு. நாவலில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. அப்பாவின் மேல் கோபம் கொண்ட ஜெயவேலுவின் கதை, உணவின் மேல் பிரியம் கொண்ட 25 வயது கிருஷ்ணனின் கதை, உடைகளின் மேல் ஆசை கொண்ட இளைஞன் உத்ராபதியின் கதை, நல்ல மேம்பட்ட வசிப்பிடத்தின் மேல் பற்று கொண்ட 17 வயது ரங்கம்மாவின் கதை, எந்நேரமும் காமமே சிந்தையிலிருக்கும் 20 வயது பொப்பிலியின் கதை, கல் குவாரியில் வேலை செய்யும் கந்தசாமியின் கதை, காண்ட்ராக்டரின் மகன் திருஞான சம்பந்தம், அவன் மனைவி வசந்தாவின் கதை…என பல கதைகள். நாவலில் எனக்குப் பிடித்திருந்தது இடையில் வரும் எண்ணத் தொடர்கள்…
‘சலனமில்லாதது எப்படியெல்லாம் சலனப்பட்டிருக்கிறது, பார். இப்பொழுது உன் வேதனைகளெல்லாம் மிகப் பெரிய விளையாட்டு என்று தோன்றுகிறதல்லவா? நீ சந்தோஷம் என்று கொண்டவைகளெல்லாம் பெரிய அற்புதம் இல்லை என்று புரிகிறதல்லவா? சலனப்பட்டதுதான் நடந்திருக்கிறதே ஒழிய, இது சந்தோஷ சலனம் – இது துக்க சலனம் என்றில்லை என்பது புரிகிறதா? இரண்டும் ஒன்றே என்று அறிய, சலனப்படாது இருப்பதே சிறப்பு என்பதை அறிகிறாயா? நீ சலனப்படாது இருப்பது தெரிந்துவிட்டால், சலனப்பட்டதன் அபத்தமும் புரியும். நீயே இந்த பிரபஞ்சம். நீயே இந்த பூமி. நீயே இங்குள்ள எல்லா உயிர்களும். உனக்கும்/எனக்கும், எறும்பிற்கும், கழுதைக்கும், புழுவிற்கும், மரத்திற்கும், மீனுக்கும், பறவைக்கும், பாம்பிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீயே ஆண். நீயே பெண். நீயே எல்லாம். மண், நீர், காற்று, வெளி, நெருப்பு எல்லாம் நீயே.’
தேடலின் பாதையில் எனைத் திருப்பிய அந்த விகசிப்பின் கண்ணீர்க் கணங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். கிராமத்து வீட்டின் பூஜையறையில், ஒரு புரட்டாசி சனிக்கிழமையின் முன்னிரவில் “பல்லாண்டு” பாடும்போது விம்மிய பெரியப்பாவின் கண்ணீர், ஒரு மார்கழியின் வைகறையில் பூஜை முடித்தபின் டேப்ரிகார்டரில் ஒலிக்கவிட்டிருந்த கிஷோரி அமோன்கரின் குரல் கேட்டு அழ ஆரம்பித்த அம்முவின் கண்ணீர், ஓசூர் தளி ரோட்டில் உப்பனூர் ஏரிக்கருகில் அதீத ஆஸ்ரமத்தில், “மா ராஜி” மொழிபெயர்த்த ஓஷோவின் “பகவத் கீதை – ஒரு தரிசனம்” மூன்றாம் பாகம் நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தபோது, மாலை தியானத்தில் கண்மூடி அமர்ந்திருந்த சாரதா அக்காவின் கன்னங்களில் வழிந்த கண்ணீர்…
அன்பின் ஜெ, இத்தேடல் தூய ஆனந்தத்தின்/பரவசத்தின் கண்ணீரைப் பின் தொடரும் தேடல்தானோ?
வெங்கி
“திருப்பூந்துருத்தி” – பாலகுமாரன்
திருமகள் நிலையம்/விசா பப்ளிகேஷன்ஸ்
பொலிவன, கலைவன – கடிதம்
பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
அண்மையில் பொலிவதும் கலைவதும் தொகுப்பை வாசித்தேன். உங்களுடைய சிறுகதைகளை, நாவல்களை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல கதைகள் என் வாழ்க்கையின் அம்சமாகவே மாறிவிட்டவை. ஆனால் இந்த தொகுப்பின் கதைகளை இப்போதுதான் இத்தனை கவனமாக வாசிக்கிறேன். இந்த கதைகளை நான் அனேகமாக மறந்துவிட்டேன். எல்லா கதைகளையும் வாசித்திருந்தேன். ஆனால் இப்போது வாசிப்பதுபோல கூர்மையாக வாசிக்கவில்லை.
பொலிவதும் கலைவதும் உட்பட எல்லா கதைகளுமே உறவுகளின் மென்மையான விளையாட்டைச் சொல்லும் கதைகள். பொலிவதும் கலைவதும் கதையிலுள்ள அந்த சோகமும் அது வெறும் ஒரு காட்சியாகவே வெளிப்பட்டிருக்கும் அழகும் அபாரம். நான் திரும்பத் திரும்ப இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கதை எழுதுபவர்களுக்கு ஒன்று தெரியவேண்டும். அவர்கள் உருவாக்கவேண்டியது அழகை. வடிவ அழகு, மொழியழகு, பார்வையின் அழகு இப்படி பல அழகுகள் உள்ளன. பலசமயம் கதைகள் சொரசொரவென கரடாக உள்ளன. வாசித்தாலே எரிச்சல்தான் வருகிறது. இந்தக் கதைகளெல்லாமே மஞ்சாடி மணிகளை ஒரு சின்ன சம்புடத்திற்குள் போட்டு வைத்திருப்பதுபோல் இருக்கின்றன. அழகான கதைகள். அடிக்கடி திறந்து திறந்து பார்க்கவைக்கும் அழகு கொண்ட கதைகள்.
இந்தக் கதைகளில் அதிகம் பேசப்படாத நிறைய அற்புதமான படைப்புகள் உள்ளன. தவளையும் ராஜகுமாரனும் அப்படிப்பட்ட ஒரு கதை. அதேபோல ஆட்டக்கதை. என்ன ஒரு விசித்திரமான கதை. அந்தக்கதையின் களமும் அழகாக உள்ளது. அதேபோல வனவாசம். ஒரு கனவுமாதிரியான கதை அது. கதைகளை வாசிக்க வாசிக்க ஒரு இனிப்பு டப்பாவையே சாப்பிட்டு முடிப்பதுபோல ஒரு பெரிய இனிமையான அனுபவமாக இருந்தது.
சரண்யா குமார்
பொலிவதும் கலைவதும் -கடிதங்கள் பொலிவதும் கலைவதும் முன்னுரைஅகழ், அஜிதன் கதையுடன்
அஜிதனின் இன்னொரு கதை, ’பஷீரிய அழகியல்’ என மலையாளத்தில் சொல்வார்கள். எளிமை, தெளிவு, அழகு ஆகியவற்றுடன் இரண்டாவது கவனத்தில் மட்டுமே பிடிகிடைக்கும் நுட்பங்களும், வாழ்க்கை பற்றிய முழுமைநோக்கும் வெளிப்படுவது அது. படிமங்கள், அவை படிமங்களென தன்னை காட்டாமலேயே நிகழ்வது.
அகழ் இவ்விதழில் சந்தைத் தெருவில் ஸ்பினோஸா என்னும் ஐசக் பாஷவிஸ் சிங்கரின் கதையை பாரி மொழியாக்கம் செய்துள்ளார். விஷால்ராஜாவின் திருவருட்செல்வி கதை வெளியாகியுள்ளது. இசை, ஏ.வி,மணிகண்டன், ஷங்கர் ராமசுப்ரமணியன், அ.க.அரவிந்தன் ஆகியோரின் கட்டுரைகள், உமாஜியின் கதை, நெற்கொழுதாசன் கவிதைகள், சாம்ராஜின் நாவல் பகுதி என இலக்கிய வாசகர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை அளிக்கும் இதழாக வெளிவந்துள்ளது.
அகழ் மின்னிதழ்March 13, 2023
சுனில் கிருஷ்ணன் இணையச் சந்திப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் , இலக்கியத்திற்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவரும் நவகாந்தியவாதியுமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடவிருக்கிறோம்.
சுனில் பரந்த விமர்சகராகவும், நல்ல நேர்முகம் நடத்துனராக உரையாடுபவர் என்ற வகையிலும் வாசகர்களின் நன்மதிப்பு பெற்றவர். சிறப்பு உரைகளைத் தொடர்ந்து வரும் கேள்வி- பதில் நேரத்தில் வாசகர்கள் தங்கள் விவாதத்துக்குரிய கேள்விகளைக் கேட்க அரியதொரு வாய்ப்பு.
நேரில் கலந்து கொள்ளும் நிகழ்விற்கு வருவதுபோல, பத்து நிமிடம் முன்னர் வந்து இணையவெளி அரங்கில் இடம் பிடித்துக்கொள்ளவும். வாசகர்கள் காணொளியில் வந்து ஒலி/ஒளி இரண்டையும் தக்கமுறையில் உபயோகித்துப் பயன்பெறவும்.
க.நா.சு உரையாடல் அரங்கு
விருந்தினர் சுனில் கிருஷ்ணன்
சனிக்கிழமை, மார்ச் 18, 2023, இந்தியா இரவு 8:30 மணி IST / அமெரிக்கா காலை 10:00 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
8:30 PM IST / 10:00 AM CST : வாழ்த்துப்பா
8:35 PM IST / 10:05 AM CST : அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
8:40 PM IST / 10:10 AM CST : சுனில் கிருஷ்ணனின் புனைவுகளை முன்வைத்து – பிரபு, போர்ட்லேண்ட்
8:50 PM IST / 10:20 AM CST : சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்களை முன்வைத்து – மதன், போர்ட்லேண்ட்
9:00 PM IST / 10:30 AM CST : கேள்வி பதில் நேரம்
10:00 PM IST / 11:30 AM CST : நன்றியுரை – பழனி ஜோதி
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com
ஏழாம் உலகம், நான் கடவுள், The Abyss
ஏழாம் உலகம் வெளியாகி இருபதாண்டுகள் ஆகிறது. 2003 டிசம்பரில் வெளியான அந்நாவல் ஒரே வாரத்தில் எழுதப்பட்டது. அந்நாவலை எழுதுவதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் காடு நாவலை எழுதியிருந்தேன். காடு ஓர் இனிய கனவு, ’வறனுறல் அறியாச் சோலை’யில் மீண்டும் வாழ்ந்து மீண்டேன். இன்று வரை பல்லாயிரம் வாசகர்கள் அந்த வாழ்க்கைக்குள் சென்று திளைத்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அந்த உச்சத்தில் இருந்து நான் ஏழாம் உலகத்தின் இருட்டுக்குள் சரிந்தேன்.
காரணம், சட்டென்று எழுந்த திம்மப்பனின் நினைவு. தொழுநோயாளி, பிச்சைக்காரர், ஆனால் நான் சந்தித்த அபூர்வமான மாமனிதர்களில் ஒருவர். திம்மப்பன் ஏழாம் உலகம் நாவலில் ராமப்பனாக ஆனார். அவரை நாயகனாக்கி அந்நாவலை எழுதவேண்டுமென எண்ணினேன். ஆனால் எழுதத் தொடங்கிய சில வரிகளிலேயே போத்திவேலுப் பண்டாரம் துலக்கமாக எழுந்து வந்தார். இது ஆச்சரியமான ஒரு விஷயம், எழுதுவோர் பலருக்கும் இது அனுபவமாகியிருக்கும். ஒரு கதாபாத்திரத்தை நாம் எந்தவகையிலும் உருவகிக்கும் முன்னரே அதுவே நம்முள் உருவாகி வரும். சிலசமயம் முகமாக. சிலசமயம் அது வாழும் சூழலாக. சிலசமயம் அது பேசும் சொற்களாக.
போத்திவேலுப் பண்டாரத்தின் பெயர்தான் எனக்கு அவரை உடனடியாக காட்டியது. எனக்கு பெயர்களிலேயே ஒரு கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையும் தெளிவடைந்து தெரிவதுண்டு. ப.சிங்காரத்தின் ‘டாலர் ராஜாமணி ஐயர்’ எனக்கு ஒரு நாவலுக்குரிய கதாபாத்திரமாக தெரிகிறார். நான் எழுதிவிடலாம், எழுதாமலும் போகலாம். ஆனால் அவரை எனக்கு நன்றாகவே தெரியும். நாவலின் முதல்வரியிலேயே அப்படித் தெரிய வந்தவர் போத்திவேலுப் பண்டாரம்.
எங்கிருந்து அந்தப்பெயர் அமைந்தது? எங்களூரில் ஒரு கடையின் பெயர் போத்திவேலு ஆண்ட் சன்ஸ். அதுவாக இருக்கலாமா? அ.கா.பெருமாள் அந்த மூலக்கதாபாத்திரம் பற்றி ஒரு முறை சொன்னபோது அந்தப்பெயரும் உடன் நுழைந்திருக்கலாமோ? தெரியவில்லை. அவர் வந்ததும் கதை அப்பக்கமாகச் சென்றது. எழுதி முடித்து உடனடியாக தமிழினி வசந்தகுமாருக்கு அனுப்பி உடனே அச்சிடப்பட்டு சிலநாட்களிலேயே விற்பனைக்கு வந்து வந்த சூட்டிலேயே விற்றும் தீர்ந்துவிட்டது.
பின்னர் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டபோது அந்தக் களத்தில் ஒரு ‘அதீதநாயகன்’ கொண்டுவந்து இணைக்கப்பட்டார். தானே விதித்துக்கொண்ட ஓர் இடைவெளிக்குப்பின் பாலா நான் கடவுள் வழியாக மீண்டு வந்தார். அதற்கு ஏழாம் உலகத்தில் அவர் திரும்பத் திரும்ப உழன்றது வழிவகுத்தது. என்னை அவரிடம் அழைத்துச் சென்ற சுகா சொன்னார், “அவரு அவருக்கான ஏழாம் உலகத்த காட்டுவார் மோகன். ஆனா அதை எடுத்த பிறகுதான் அது என்ன் எப்டீன்னு அவருக்கே தெரியும். அவரு சினிமாவ எடிட்டிங்லதான் உண்டுபண்ணுவார்”
2004ல் தொடங்கிய நான் கடவுள் 2009ல்தான் வெளியாகியது. பாலாவுக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. நான் கடவுள் படம் வணிகவெற்றி பெற ஆர்யா நடித்த ருத்ரனே காரணம். ஆனால் நினைவில் நீடிப்பதற்கு அதில் காட்டப்பட்ட இரு உலகங்களே காரணம். ஒன்று காசி, இன்னொன்று பாலா காட்டிய ஏழாம் உலகம். அந்த உலகம் சினிமாவில் ’திறந்துகொள்ளும்’ காட்சியை இன்றுவரை தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை இயக்குநர் வியந்துரைப்பதுண்டு, ஒரு பாடமாகவே பயில்வதுமுண்டு.
அந்த காட்சி ஒரு நீண்ட ஒற்றை ‘ஷாட்’. தாண்டவன் அறிமுகமாகும் காட்சி. உயர்தர காரில் இருந்து அவன் இறங்கி திமிராகவும் அலட்சியமாகவும் நடந்து வருகிறான். அவனை முன்னாலிருந்து பார்த்தபடி காமிரா நகர்கிறது. அவன் நிலத்துக்கு அடியில் இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள் வழியாக உள்ளே சென்று இருண்ட ஆழத்திற்குள் நுழைகிறான். அவன் முகம் இருளில் மறைகிறது. இருளில் மூழ்கி மீண்டும் அவன் தோன்றும்போதும் அதே ஷாட் தொடர்கிறது. (உண்மையில் இன்னொரு ஷாட் அது. ஆனால் ஒரே ஷாட் என நம்பவைக்கும்படி கச்சிதமாக எடிட் செய்யப்பட்டுள்ளது) இப்போது காமிரா அவன் பின்னால் தொடர்ந்து செல்கிறது. தாண்டவனின் பார்வையில் ‘ஏழாம் உலகம்’ என்னும் Abyss விரிகிறது. சிதைந்த உடல்கள், கோர உருவங்கள், இருள், நிழல், ஊடே புகுந்த ஒளி… ஒரு நரகம்.
பாலா காட்டும் அவர் உருவகித்த ஏழாம் உலகம் இது. ஒரு சொல்கூட இல்லாமல் பாதாளம் அது என காட்டுகிறார். (அதலம் விதலம் முதலிய ஏழு கீழுலகங்களில் ஏழாவது உலகம் பாதாளம்.) அந்த ஏழாம் உலகிலேயே அன்பும் நட்பும் இருப்பதை வேகமாகச் செல்லும் காட்சிகளிலேயே காட்டுகிறார். நான் சிங்கப்பூரில் நான் -யாங் பல்கலையில் இருக்கையில் சினிமா பற்றி ஒரு வகுப்பை எடுக்க கோரினர். திரைக்கதை காட்சியாகும் விதம் பற்றி. அதில் இந்த ஷாட்டை காட்டி ஏழாம் உலகம் நாவல், அதற்கு நான் எழுதிய திரைவடிவம், அதற்கு பாலா அளித்த காட்சிவடிவம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி விளக்கினேன்.
பாலாவுக்கு தேசியவிருது கிடைக்கக் காரணமாக அமைந்த ஷாட் இது என்றே சொல்வார்கள். தொடர்ந்து அந்தப்படத்தை வேறொரு வகையில், கதையை கருத்தில்கொள்ளாமல் ஒரு காட்சியனுபவமாக மட்டும் பார்க்க இந்த ஷாட் வழி வகுத்தது. இந்த ஷாட் பற்றி மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நான் கடவுள் வெளியானபோது தமிழில் வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்களில் ஒன்றில்கூட அந்த ஷாட், அல்லது அப்படத்தின் காட்சித்தன்மை பேசப்படவில்லை. அன்று தமிழில் எழுதிய பெரும்பாலும் அனைவருமே அந்தப்படத்தின் ‘கதை’ சரியில்லை என்றோ அதன் ‘அரசியல்’ சரியில்லை என்றோ மட்டுமே எழுதினர். அவ்வளவுதான் நம் ரசனை.
அந்த முதல் ஷாட்டுக்கு நிகரான பல ஷாட்டுகள் உள்ளன. ஏழாம் உலகின் மனிதர்களின் விதவிதமான சிரிப்புகள் வழியாக ஓடும் காட்சிகள். பல்வேறு தெய்வ உருவம் அணிந்த பிச்சைக்காரர்களின் திகைப்படைந்த முகங்கள் வழியாக ஓடும் ஒரு ஷாட். எவையும் இங்கே பேசப்பட்டதில்லை
சுசித்ரா[ ஆசிரியர் ஒளி சிறுகதை தொகுதி]நான் எப்போதுமே நினைப்பது ஒன்றுண்டு. தமிழ் சினிமா போல இந்த அளவுக்குக் கவனிக்கப்படும் ஓர் உலகம் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவை உண்மையில் கூர்ந்து கவனிப்பவர்கள், ரசிப்பவர்கள், அதை நினைவில் நிறுத்தி தலைமுறைகளுக்குக் கொண்டு செல்பவர்கள், சினிமாவுக்குள் இருப்பவர்கள்தான். அவர்கள்தான் சினிமாவின் உண்மையான ரசிகர்கள், விமர்சகள். சினிமா எடுப்பவர்களும் அவர்களையே உண்மையில் தங்கள் மெய்யான பார்வையாளர்களாக நினைத்து அவர்களின் கருத்துக்களையே பொருட்படுத்துகிறார்கள் என்பதை கவனித்துள்ளேன்.
ஏனென்றால் இங்கே வெளியே சினிமா பார்ப்பவர்கள் பலவகை. பெரும்பாலானவர்களுக்கு சினிமா கேளிக்கை மட்டுமே. சுவாரசியமாக இருக்கவேண்டும், அவ்வளவுதான். இன்னும் கொஞ்சபேருக்கு அது ஒருவகை பந்தயம். நடிகள் பந்தயக்குதிரைகள். அவர்கள் பார்ப்பது ஒரு போட்டி. சினிமா விமர்சனம் செய்பவர்களும் பலவகை. ஒரு சாரார், எதையாவது சொல்லி கூடுமானவரை அதிகம்பேரால் கவனிக்கப்படவேண்டும் என நினைப்பவர்கள். அவர்களுக்கு சினிமா ஒருவகை வம்பு மட்டுமே.
இன்னொரு சாரார், தங்களுடைய அரசியலை மட்டுமே சினிமாவில் தேடுபவர்கள். இன்னொரு சாரார், எங்கோ சினிமா பற்றி தெரிந்துகொண்ட சொந்தக் கருத்துக்களை சினிமா மேல் சுமத்துபவர்கள். சினிமா என்னும் கலையை மதித்து கூர்ந்து பார்த்து எழுதுவோர் அரிதினும் அரிது. கொண்டாடப்பட்ட, பெருவெற்றி அடைந்த படங்களுக்க் கூட சினிமாக்காரர்கள் மதிக்கும் ஒரு மதிப்புரை என்பது மிக அரிது.
நான் கடவுள் அடைந்த வணிகவெற்றி எனக்கு இந்நாள் வரை நீளும் திரைவாழ்க்கையை அளித்தது. என்னை பொருளியல் சுதந்திரம் கொண்டவனாக, நான் கொண்டிருந்த கனவுகளை நிறைவேற்றும் ஆற்றல் கொண்டவனாக ஆக்கியது. இன்று வந்தடைந்த இடத்திற்கு, செய்துள்ள பணிகளுக்கு அவ்வகையில் நான் கடவுள் காரணம். அதற்கு ஏழாம் உலகம் காரணம். ஏழாம் உலகத்திற்கு நான் திம்மப்பனுக்கு கடமைப்பட்டவன்.
ஏழாம் உலகம் வெளியாகி பதினைந்தாண்டுகளாகியும் இன்றும் ஓடிடி தளத்தில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அது உள்ளது. பல இந்திய மொழிகளில் அதன் மொழிமாற்று வடிவங்கள் உள்ளன. அவ்வாறு அதைக் கொண்டுசென்றவை இளையராஜாவின் இரண்டு பாடல்கள். ‘மா கங்கா’ ‘ஓம் சிவோகம்’ இன்று காசிக்குச் சென்றால் அவற்றை கேட்காமல் நாம் திரும்பி வரமுடியாது.
சுசித்ரா மொழியாக்கத்தில் ஏழாம் உலகம் The Abyss என்ற பேரில் ஆங்கிலத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. அமேசானில் முன்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நூலின் அட்டைப்படத்தை முதலில் பார்த்தபோதே அதற்கு அமைந்த மிகச்சிறந்த படம் என்னும் எண்ணம் உருவாகியது. யாசிக்கும் கைகள் போல் தோன்றுகின்றன. இருளை துழாவும் கைகளாகவும் தெரிகின்றன. சட்டென்று பார்க்கையில் தழல்போலவும் தோன்றுகின்றன.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



