Jeyamohan's Blog, page 611
March 17, 2023
2.0 ஓர் ஆய்வு
நலமா?
வழக்கம் போல சில ஆய்வு கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன் . தேடல் இடையே Signe Cohen (இணைப்பேராசிரியர் , சமயத்துறை , Missouri பல்கலைக்கழகம் ) எழுதிய Dharma : Enthiran 2.0 என்னும் ஆய்வுக்கட்டுரை கண்ணில் பட்டது . Cohene ஹிந்து , பௌத்த மதங்களில் உள்ள இயந்திர மனிதர்களை குறித்து ஆய்வுகளில் இப்போது ஈடுபட்டிருக்கிறார் . முன்னர் உபநிடங்களின் காலம் குறித்து ஆய்வுகளை செய்துள்ளார் .
பின்காலனித்துவம் போலவே Post Humanism மும் (பின் மானுடத்துவம்) இப்போது கல்விப் புலங்களில் அதிகம் விவாதக்கப்படும் கோட்பாடு . மேற்குலக சிந்தனைகளை கட்டுடைக்க நல்ல கருவி .
Post Humanism அத்வைத வேதாந்தம் ஆகியவற்றின் அடிப்படைகளைக் கொண்டு (இவை இரண்டும் தொடர்புடையவை என்கிறார்) 2.0 வை புரிந்து கொள்ள முயல்கிறார் . ஏராளமான கல்விப் புலம் சார்ந்த தேய்வழக்குகளும் போதாமைகளும் விபரீத புரிதல்களும் இருந்தாலும் குறிப்பிடத்தக்க முயற்சி என்று எண்ணுகிறேன் .ஆகவே
உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர்
religions-13-00883 (1)
பேரரசன் அசோகன் : தொலைந்த நிலையும், மீட்ட கதையும்-கடலூர் சீனு
கடந்த பல வருடங்களாக நான் கண்டு கொண்டு இருக்கும் நிலை ஒன்றுண்டு. ஒரு ஆறு ஏழு வருட இடைவெளியில் இந்திய செக்யூலகூலரிசம் மீது அதி தீவிர காதலுடன் இந்தியப் பண்பாடு குறித்து ஏதேனும் அபுனைவுகள் வெளியாகும். வலதுசாரி சாதீய மதவாத பாசிசத்தால் (எல்லாவற்றுக்கும் காரணம் பிராமணீயம் என்பதே இவை உரத்து சொல்லாத சப் டெக்ஸ்ட்) சிதைவுற்றுக் கொண்டிருக்கும் இந்திய பன்மைத்துவம் காப்பாற்றப்பட வேண்டிய நிலை குறித்த கரிசனம் அத்தியாயம் தோறும் பொங்கும். இறுதி அத்தியாயங்களில் ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்று நிறுவப்பட்ட அண்மைய சான்றுகளை எடுத்து இயம்பும்.
அடுத்த ஐந்து வருடத்தில் இதே போல மற்றொரு நூல் வரும். தவறாமல் முந்திய நூலை மேற்கோள் காட்டும். கூடவே ஆரியர்கள் வந்தேறிகளின்தான் என்று உறுதி செய்த அந்த முந்தய நூலில் உள்ள சான்றை கடந்து, இப்போதுதான் சுட சுட கிடைத்தாக சொல்லி சில புதிய சான்றுகளை அளிக்கும்.
அப்படி சில வருடங்கள் முன்பு நான் வாசித்த நூல். டோனி ஜோசப் எழுதிய ஆதி இந்தியர்கள் எனும் நூல். ஆரியர்கள் வந்தேறிகள்தான் என்று மரபணு ஆய்வுகள் நிறுவிவிட்டன என்று சொல்லி இதுதான் ஆரிய மரபணு எண் என்று ஒரு எண்ணையும் அந்த நூல் வழங்கியது.
இப்போது நான் வாசிக்க நேர்ந்த நூல் நமித் ஆரோரா எழுதிய இந்திய நாகரீகம் எனும் நூல். தவறாமல் முந்திய ஆதி இந்தியர்கள் நூலை மேற்கொள் காட்டி, (சென்ற வாரம் திங்கள் கிழமை இந்திய நேரப்படி காலை 7.37 கு) மீண்டும் உறுதியான ஆரியர்கள் வந்தேறிகள்தான் எனும் ஆய்வுகளை எடுத்து கூறி, இந்திய பன்மைத்துவம் குறித்த கரிசனத்தோடு முடிந்தது அந்த நூல்.
ஆரிய வந்தேறிகள் எனும் கருத்து தொட்டு, சைவம் இந்து மதத்தை சேர்ந்தது இல்லை என்பது வரை பல்வேறு விஷ விதைகள் இங்கே தொடர்ந்து விதைக்கப்படும் காரணம் நேரடியானது. கொண்ட ஒவ்வொரு அலகையும் டிஸ்மாண்டில் செய்வதன் வழியே பிரம்மாண்ட தேர் ஒன்றை, அப்படி ஒன்று அங்கே இருந்த தடயமே இல்லாமல் ஆக்கிவிட முடியும். அதே உத்திதான் இந்தியப் பண்பாட்டின் மீதும் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது.
அதிலும் இந்த நமித் ஆரோரா இருக்கிறாரே, நாளந்ததா அழிவுக்கு (அதை பக்தியார் கில்ஜி மட்டுமேயாக செய்யவில்லை எனும் உண்மையை இந்த நூல் தரும் தரவுகள் வழியே அறிய நேரும் வாசகன், பக்தியார் கில்ஜியை இத்தனை நாள் பிழையாக எண்ணிவிட்டதை நினைத்து விக்கித்துப் போவான்) அவர் தரும் சான்றுகள் கண் கலங்க வைப்பன. நாளந்தா வை எரியூட்டியது பௌத்தர்கள் மேல் காழ்ப்பு கொண்ட பிராமணர்கள் என்று ஒரு திபெத்திய பௌத்த நூல் சொல்கிறது. அது உண்மையாகவும் இருக்கலாம் என்கிறார் அந்த நூல் எது ஆசிரியர் யார் எனும் சான்றெல்லாம் இந்த எழுதிய ஆரோராவுக்கே தெரியவில்லை. இவை போக அன்று எரிந்த நாளந்தா சிதைவுகளை, அது எரிந்த தடங்களை இன்று நேரில் ஆய்வு செய்து, சுவரில் படிந்த அது, அங்கே வசித்த பல்லாயிரம் பேருக்கு சமையல் செய்த அடுப்பு வெளியிட்டு படிந்த கரி அல்லது, வேறு ஏதோ தீ விபத்தாக கூட இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
இத்தகு அசட்டு நூல்கள் ஒவ்வொரு முறையும் ஐந்து வருடத்துக்கு ஒன்றென புதிது புதிதாக வெளியாகும். பாரதத்தின் செப்பு மொழி பதினெட்டிலும் அது வாசிக்க கிடைக்கும். மாறாக எது இந்தியப் பண்பாட்டின் அசைவுகளை பேசும் முக்கிய நூலோ அது எவர் கைக்குமே வாசிக்க கிடைக்காது.
இந்த விஷ விதை என்பது, 17 ஆம் நூற்றாண்டு துவங்கி இங்கே வந்து ஆய்வுகள் புரிந்து, இதுதான் நீங்கள் என்று இந்தியர்களுக்கு இந்தியாவின் வரலாற்றை பண்பாட்டை எழுதி அளித்த வெளிநாட்டு இந்தியவியலாளர்கள் விதைத்தது. இது அவர்கள் அறிந்து செய்தது அல்ல. அன்று அவர்கள் தரவுகளை தொகுத்துக்கொள்ள கைக்கொண்ட, (வெளியே இருந்து வந்த ஒன்றே உள்ளூரில் தேங்கி நின்ற கலாச்சாரத்தை ஒழித்து மேலான பண்பாட்டை அளிக்கிறது என்ற) அன்றைய கால பொது சிந்தனை வழியே கொண்ட ஹைபோதீசிஸ் அது. குறிப்பாக அந்த ஹைப்போ தீஸிஸ் வழியே சிந்தித்த இந்தியவியலாளர் ஒரியண்டல் வில்லியம் ஜோன்ஸ் பணிகள் வழியே உருவாகி நிலைபெற்றது அது.
உண்மையில் நவீன இந்தியாவின் வரலாற்றியலை உருவாக்க தனது வாழ்நாளெல்லாம் செலவிட்ட பல பத்து இந்தியவியலாளர்களின் பண்பாட்டு முக்கியத்துவத்தை முற்றிலும் மறந்து விட்டு, டோனி ஜோசப் நமித் அரோரா போன்றவர்களால் அப்டேட் செய்து காட்டப்படும் இத்தகு விஷ சித்தரிப்புகள் வழியாக இத்தகு எதிர்நிலை விஷயங்களின் விதையாக மட்டுமே அந்த முன்னோடிகளை நமது பொது நினைவில் பதிய வைத்துக் கொள்கிறோம்.
இத்தகு அசட்டு நூல்களுக்கு வெளியே நின்று உண்மையில் இந்தியவியலாளர்கள் ஆற்றிய பணிகள் எது என முழுமையாக அறிந்து அப்பணிகள் கிளர்த்திய நேர்நிலைக் கூறுகள் மீது வாசக கவனம் குவிய, அதற்கு துணை நிற்க தமிழில் நூல்களே இல்லை என்பதே நிதர்சனம். இந்த நிலவரத்தின் பின்னணி கொண்டே சார்லஸ் ஆலன் எழுதி, தருமி மொழியாக்கம் செய்து,எதிர் வெளியீடு பதிக்கம் வெளியிட்ட _பேரரசன் அசோகன்: மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு_ நூல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.
https://www.theguardian.com/books/2020/aug/21/charles-allen-obituary
சார்லஸ் ஆலனின் பரம்பரை இந்திய வாழ்க்கை பின்புலம் காரணமாக தனது வரலாற்று நூல்களில் பிரிட்டிஷ் இந்தியா கால ஆங்கிலேயர் மாண்பை குறைத்தே காண்பிக்கிறார் என்று ஆங்கிலேய விமர்சகர்களாலும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் எவ்வளவு மனிதார்த்தம் கொண்டவர்கள் என்று சித்தரிக்க, எல்லா படையெடுப்பாளர்களையும் போல முகமதிய ஆட்சியாளர்களும் செய்ததை ஊதி பெருக்கி காண்பிக்கிறார் என்று இந்திய சிறுபான்மை சார்பு வரலாற்று ஆய்வு ஆதரவாளர்களாலும், இந்தியாவில் முகமதிய அரசர்கள் நிகழ்த்திய அழிவுகளை சித்தரிக்கிறார் என்று ஆலனை நம்பிவிட வேண்டாம் அதே அளவு அழிவுகளை செய்த அங்கிலேய ஆட்சியாளர்கள் குறித்து அவரது நூலில் பெரிதாக பேசியதில்லை காரணம் அவர் உள்ளே உள்ள ஆங்கிலேய இன மேட்டிமைவாதம், சரஸ்வதி நதி நாகரீக ஆதரவாளர், தன்னை ஒரு பௌத்தர் என்று கூறிக்கொண்டாலும் இவரும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு ஆதரவாளர்தான் பிராமண துவேஷிதான் என்று இந்துத்துவர்களாலும், என இப்படி சகல தரப்பினராலும் விமர்சிக்கப்படும் நிலை கொண்டே, சார்லஸ் ஆலன் அவர்களின் வரலாற்று நூல்கள் அளித்த தாக்கத்தை வாசகர் உணரலாம்.
கீழைத்தேயவியல் என்பது மிகப்பெரிய கடல். 15 ஆம் நூற்றாண்டு துவங்கி வேகம் பெற்ற அறிவியல் நோக்கு, மத அடிப்படைவாதத்துக்கு அரசு அதிகாரத்துக்கு எதிரான ஜனநாயக போக்கு, தத்துவத்தால் அடித்தளம் அசைக்கப்பெற்ற மத நம்பிக்கைகள், இத்தகு பல விஷயங்கள் கூடி மேலை மரபின் அறிவார்ந்த மனங்களை கீழைத்தேயம் நோக்கி திரும்பின. புதிய உடைப்பை நோக்கி அம்மனங்கள் தேட்டம் கொண்டிருந்தன. அந்த ஓட்டத்தில் அவர்கள் கண்டடைந்த மீட்டுருவாக்கம் செய்த பல விஷயங்களில் ஒன்றே இன்று இந்தியாவில் நாம் காணும் நவீன நிலவியல் மானுடவியல் வரலாற்றியல் முதலான பல விஷயங்கள். இந்தியாவுக்கு ஐரோப்பியர் வரவு துவங்கி, இந்திய குடிமகன் என்றாகி பௌத்தராகவே மாறிவிட்ட வெரியர் எல்வின், இந்திய குடிமகனாகவே மாறிவிட்ட ரோமுலஸ் விட்டேகர், மிஷெல் தானினோ, அஸ்கோ பார்ப்பலோ, தாமஸ் ஹிடோதோஷி ப்ரூக்ஸ்மா என நீளும் நெடிய மரபைக் கொண்டது இந்தியவியல்.
இதில் 1650 முதல் 1950 வரையிலான காலகட்டம் மிக முக்கியமானது. மேலை அறிவு மரபுக்கு உரையாட இங்கிருந்து வேதங்கள் உபநிஷத்துகள் பகவத்கீதை மகாபாரதம் போன்றவை சென்றன. மேலை ஆய்வாளர்கள் இன்று இப்போது நாம் காணும் வகையிலான பௌத்தத்தை மீட்டு மறுவடிவமைப்பு செய்து அளித்தனர். (இந்த பௌத்த மறுமலர்ச்சி குறித்த அடிப்படைகளை ராஜ் கெளதமன் எழுதிய அயோத்திதாசர் ஆய்வுகள் நூல் வழி அறியலாம்) இணையாக நவீன இந்திய வரலாற்றியலும் முகிழ்ந்தது.
இந்த பின்புலத்தில் வைத்து நூற்றாண்டுகள் மறதியில் புதைந்து கிடந்த முதல் இந்தியப் பெருமன்னன் அசோகன் எவ்விதம் எவ்வெவரால் என்னென்ன முயற்சிகள் வழியே கண்டடையப்பட்டு மீட்டளிக்கப்பட்டார் என்பதன் சுருக்கமான செறிவான பொது வரலாற்று அறிமுகமே சார்லஸ் ஆலனின் இந்த நூல்.
முதன் முதலாக நாளந்ததா சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் துவங்கி, சில வருடங்கள் முன்பு நாளந்தாவில் புதிய பல்கலை கழகம் தொடங்க இந்திய அரசு எடுத்த முன்னெடுப்பில் முடியும் இந்த நூலின் துவக்க அத்தியாயங்கள் நவீன வரலாற்றியலுக்கான துவக்க களமாக எவ்விதம் இந்தியா இருந்தது என்பதை சித்தரிக்கிறது.
முகமது கஜினி, தைமூர் என பற்பல அன்னியப் படையெடுப்புகள் வழியே, ஒளரங்கஜெப் வரை எவ்விதம் அவர்களுக்கு முன்பான பௌத்த மற்றும் பல வரலாற்று தடங்களை கொண்ட இந்தியக் களம் துவம்சம் செய்யப்பட்டது. டில்லி எத்தனை முறை புதிது புதிதாக கட்டப்பட்டது. தேசம் நெடுக எவையெல்லாம் எவ்விதம் அழிக்கவோ மாற்றி அமைக்கவோ பட்டது, அதன் கீழே எஞ்சிய பண்டைய இந்தியா எவ்விதம் புதைந்து விட்டது என்பதை விவரிக்கும் ஆலன், இத்தகு போக்குகளின் உச்சமாக நாளந்ததா அழிவுடன் பௌத்தம் எவ்விதம் முற்றிலும் இந்தியாவில் வழக்கொழிந்தது எனும் மெல்லிய கோட்டு சித்திரம் ஒன்றை அளிக்கிறார்.
1670 இல் இந்தியா வந்து பீகாரில் பணியாற்றிவிட்டு சென்ற ஜான் மார்ஷல் குறிப்புகள் வழியாகவே, இங்கே இந்தியாவில் வேதம் பகவத் கீதை போன்றவை உள்ளது அவை சமஸ்க்ருதம் எனும் மொழியில் உள்ளது போன்ற தகவல்கள் எல்லாம் மேலைத்தேய உரையாடலில் பரவி, ஆவல் கொண்ட முக்கிய ஆளுமைகள் பலரும் இந்தியாவுக்கு வந்து இறங்குகிறார்கள். அவர்களில் பலரது முக்கியப் பணிகள் குறித்து அறியத் தரும் இந்த நூலின் முதன்மை நாயகர்கள் என, என் நோக்கில் இருவரை சொல்வேன். முதல்வர் இந்தியா வந்த பணி செய்த வருடத்தில் 1784 இல் வங்காள ஆசிய கழகம் துவங்கி, 1794 இல் இயற்கை எய்துவது வரை அதை மையமாக கொண்டு பல்வேறு பணிகள் செய்த, ஓரியண்டல் எனும் சிறப்பு விகுதி பெற்ற வில்லியம் ஜோன்ஸ்.
இரண்டாமவர் 1833 இல் தனது 19 ஆவது வயதில் கல்கத்தா வந்து இறங்கி, 71 வயதில் இறக்கும் வரை இந்திய தொல்லியல் களங்களில் பாடுபட்ட, இந்திய ஆர்க்கியாலஜியின் தந்தை எறே அழைக்கப்படத்தக்க அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம்.
பௌத்தம் எனும் விரிவான களம், பஞ்சாப்புக்கு மேலே காந்தகார் வரை ஒரு விதமான பண்பாட்டு தனித்துவம் கொண்டது. அவ்விதமே தனித்துவம் கொண்டது திபெத்திய பௌத்தமும், இலங்கை பௌத்தமும். இது அத்தனையும் முளைத்த நிலம் இந்தியா என்பதும், அதை நாற்திசையும் பரப்பியயவர் அசோகர் என்பதும் இந்த ஆசிய கழகமும், இந்திய தொல்லியல் கழகமும் நிகழ்த்திய 100 வருட தொடர் உரையாடல் வழியே எவ்விதம் துலங்கி வந்தது என்பதையும், மேற்சொன்ன இரண்டு ஆளுமைகளுடன், ஹென்றி கோல் ப்ருச், ஹரேஸ் ஹேமன் வில்சன், பிரான்சிஸ் ஃபுக்கான், காலின் மேக்கன்சி, ப்ரைன் ஹாட்ஜசன், பிரின்செப் போன்ற பலப்பல ஆளுமைகள் எவ்விதம் இணைந்தும் இந்த இருவரின் காலத்துக்கு பிறகு தொடர்ந்து பணியாற்றியும் இவற்றை முழுமை செய்தனர் என்பதையும் விவரிக்கிறது இந்நூல்.
ஓரியண்டல் வில்லியம் ஜோன்ஸ் எத்தகு ஆளுமை என இந்நூல் அளிக்கும் சித்திரம் மலைக்க வைப்பது. பற்பல வேலைகளை செய்திருக்கிறார். முதல் இந்திய வரைபடம் உருவாக்கப் பணிகளில் இந்திய நதிகளை அதில் பொருத்தும் பணிகளை செய்திருக்கிறார். வங்காள அச்சு எழுத்துகளை உருவாக்கி இருக்கிறார். பிரிட்டிஷ் இந்திய நீதி இயலுக்கு முகமதிய சட்டங்கள், இந்து சட்டங்களை வரையறை செய்திருக்கிறார். ( இதன் வழியாகவே மனு ஸ்ம்ருதி இங்கே மீண்டும் அதிகாரம் பெறுகிறது) இந்திய தாவரவியல், மானிடவியல், ஜோதிடம் வழியிலான வானியல், இதில் தேர்ந்த அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். உலக மொழிகளில் 20 மொழிகளை இலக்கண சுத்தமாக கற்றிருக்கிறார். உலக மொழிகள் ஒப்பியல் ஆய்வு நிகழ்த்தி இருக்கிறார். ( இதன் வழியாகவே மொழி குடும்பம் ஆரிய வந்தேறிகள், யூத பிராமண தொடர்பு போன்ற கோணல்கள் உண்மை போலவே இங்கே புழங்க துவங்கின) இங்கே வந்த பிறகு சமஸ்க்ருதம் கற்றிருக்கிறார். இங்குள்ள பெரும்பாலான சமஸ்க்ருத நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த வரிசையில் தான் ராஜ தரங்கினி போன்ற நூல்களை அடைகிறார். முகமதிய ஆட்சிக்கு முன்பான இந்திய வரலாறு என்று கிடைக்கும் அத்தனை புராண கதைகளையும் தொகுத்து, பைபிள் மற்றும் பண்டைய கிரேக்க கதைகளுடன் ஒப்பு நோக்கி ஆராய்கிறார். இந்த வரிசையில் கிரேக்க இந்திய தொடர்பு கதைகள் வழியே அலெக்ஸ்சாண்டரின் தளபதி செல்யுகஸ் நிகேட்டாரை தோற்கடித்து இந்தியாவில் கிரேக்க ஆதிக்கத்தை முடித்து வைத்த சன்றகோட்டா மன்னனை வந்து அடைகிறார். (இதற்கு அரை நூற்றாண்டுக்கு பிறகே விதிஷாவின் ஹலியோடோரஸ் தூண் கண்டுபிடிக்கப்படுகிறது)
சிலோனை மையமாக கொண்டு இயங்கும் விரிவான ஆய்வு தரப்புகள் வழியே மகா வம்சம் உரையாடலுக்கு வருகிறது. அதன் தொடர் உரையாடல்கள் வழியே சந்திர குப்தர் வெளியே வருகிறார். அந்த சந்திர குப்தர்தான் இந்த சன்றகோட்டா என்று கண்டு பிடிக்கப்பட்டு சந்திர குப்தர் துவங்கி ப்ருகத்ரத மௌரியன் வரையிலான மௌரிய வம்சத்தின் வரிசையும் காலமும், அது ஆண்ட மகத நாடும் வெளிச்சத்துக்கு வருகிறது அவருக்கு
பின்னர் மெல்ல மெல்ல ஃப்ரெஞ்சில் இருந்து வெளியான பாகியான், யுவான் சுவாங் பயண குறிப்புகள், இந்தியாவில் பௌத்தம் பரவி நின்ற நிலையை உரையாடலுக்கு கொண்டு வருகிறது.
பின்னர் ஹாரிஸ் ஹேமன் வில்சன் ஒரு 15 வருடம் வேலை செய்து ஆங்கிலம் சமஸ்கிருதம் சார்ந்த தொடர்புக்கு இலக்கண நூல்கள் அகராதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்கிறார். (இந்த அடித்தளத்தில் இருந்தே மாக்ஸ் முல்லர் தனது பணியை துவங்குகிறார்) .லார்ட் வெல்லசி அதிகார தஷ்பிரயோகம் வழியே கல்கத்தா வில்லியம் கோட்டை கல்லூரியை துவங்குகிறார். ( ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர் நின்ற பலர், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்ட வங்காள மறுமலர்ச்சி க்கு வித்திட்ட பலர் உருவாக இந்த கல்லூரியே அடிப்படை). அங்கே இலங்கையில் இருந்தும் திபெத்தில் இருந்தும் வந்த பௌத்த நூல்கள் பல முதல் முயற்சிகள் வழியே மொழியாக்கம் கண்டு அவை குறித்த உரையாடல்கள் நிகழ்கின்றன. பௌத்தம், மௌரிய வம்சம் இரண்டுமே இந்தியாவை பூர்வீகம் கொண்டது என்பது இந்த நெடிய உரையாடல்கள் வழியே உறுதி கொள்கிறது.( அதுவரை இங்கே உள்ள பல்வேறு பௌத்தத்தின் தோற்றுணரான புத்தர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று ஊகித்து அங்கே தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்)
இந்த கலாச்சாரக் கதைகள் மேல் படியும் தொல்லியல் உண்மைகள், அதன் சலியாத தொடர் தேடல்கள் பேரொஸ் ஷா கழற்றி எடுத்து சென்ற அசோகர் தூண் ஒன்றிலிருந்து துவங்குகிறது. தொடர் தேடல் வழியே ஒவ்வொரு தூணாக கிடைக்கிறது.அசோகரின் புகழ்பெற்ற மலை கல்வெட்டுகள் ஒவ்வொன்றாக கிடைக்கிறது. சாஞ்சி, சாரநாத், கயா என்று நெடிய தேடுதல் வழியே ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது. இதில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுக்கள் அதை எழுதியவர் ஒருவரேதான் என்று கண்டறியப்பட்டு, பின்னர். அந்த எழுத்துக்களின் மொழி யூகித்து பின்னர் சரியாக கண்டறியப்படுகிறது. மெல்ல மெல்ல அந்த எழுத்துக்களின் மர்மம் நீக்கப் படுகிறது.
முழுக்க முழுக்க பிரிட்டிஷ் தனமான இரும்புத்தனம் கொண்ட இந்த நூலை வாசித்துக்கொண்டே வருகையில், தே வ ர் க ளு க் கு பி ரி ய மா ன வ ன் எனும் எழுத்துக்கள் கூடி முதன் முறையாக சொற்றொடராக வாசிக்கப்படுகையில் உளம் பொங்கி அந்த வரிகளின் மேல் கண்ணீர் சிந்திவிட்டது.
மரபார்ந்த ஆய்வாளர்கள் மட்டுமல்ல எவரேவரோ இத்தகு கல்வெட்டுகளை முடிந்த வரையில் பிரதி செய்து இந்த கழகங்களில் சேர்ப்பித்து இருக்கிறார்கள். டெலோ தோம்பா எனும் நாடு கடத்தப்பட்ட பாதிரியார் தனது இந்திய அகதி வாழ்வில் இத்தகு கல்வெட்டுகளை படி செய்து உரிய இடத்தில் சேர்த்திருக்கிறார்.
ஆலம் ஷா எனும் சிற்றரசன் வசம் ராணுவ தளபதி வேலை பார்த்த ஸ்விஸ் நாட்டை சேர்ந்த அந்தோய்ன் பொலியர் தனது போர்க்கள பணிகள் இடையே இதையும் செய்திருக்கிறார். காசுக்கு அளித்த உழைப்பே எனினும் வில்லியம் ஜோன்ஸ் உடன் கேமிரா இல்லாத காலத்தில் ஒவ்வொரு தொல்லியல் களத்தையும் ஓவியம் வரைந்த அந்தர் தேவிஸ், அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம் உடன் பணி செய்த ஓவியர் தமிழ் நிலத்தின் முருகேச முதலியார். என பலர் இந்த பணியில் முக்கியமானவர்கள்.
மார்க்கம் கிட்டோ ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து தௌலி கல்வெட்டை படியெடுத்திருக்கிறார். அப்போது அது காடு. ஒரு முறை இம்முயற்சியில் குட்டியை காப்பாற்றும் அம்மா கரடி வசம் சிக்கி கொள்கிறார். கரடியை கொன்று இவர் உயிர் பிழைக்கிறார். மற்றொரு முறை இப்படி அகப்பட்டு தப்பி ஓடி வருகையில் விழுந்து காலை உடைத்துக் கொள்கிறார்.
புலி குகை என்று ஊரே பயப்படும் குகைக்குள் நுழைந்து ஒருவர் அஜந்தா ஓவியங்களை கண்டு அதிர்ந்து அதை வெளியே கொண்டு வருகிறார். இப்படி பல்வேறு ஆளுமைகள் வழியே விரிகிறது இந்த தொல்லியல் தேடல் வெளி.
தொல்லியல் பேசும் பியாதசி, இலக்கியம் பேசும் அசோகன், இருவரின் வழியே இந்திய பௌத்த தொல்லியல் களம் மெல்ல மெல்ல துலங்கி வரும் சூழலில், இலங்கையில் இருந்து ஒரு முக்கிய தடயம் வழியே, பியாதசியும் அசோகனும் ஒன்றே எனும் உண்மை வெளிப்படுகிறது.
இதன் பின்னர்தான் தூண் எழுத்துக்கள், மலை கல்வெட்டுகள், நாணய சான்றுகள், தொல்லியல் கள சான்றுகள், சிற்பவியல் சான்றுகள் இலக்கிய சான்றுகள் அனைத்தும் ஒன்றன் மேல் ஒன்று பொருந்தி அமைய, அசோகன் எனும் மன்னனும் அவன் வழியே உலகம் முழுதும் பரவிய பௌத்தத்தின் தாயகமும், அவனது ஆட்சிக்காலத்தின் நீளமும், அவன் ஆட்சி செய்த எல்லையின் விரிவும் சீரான வரலாற்றுக் கதையாக முழுமை பெறுகின்றன.
இவை யாவும் நிகழ்ந்த, 1650 துவங்கி 1950 வரையிலான கால சூழலின் பின்புலத்தில் இவற்றை பொறுத்திப் பார்த்தால், இந்த பண்பாட்டு அசைவின் வீரியம் புரியும். பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் ஆதிக்க வெறி மொத்த உலகையே தனது காலனி என்றாக்கி காலடியில் போட்டுக்கொள்ள வீறுகொண்டு செயலாற்றிக்கொண்டிருந்த காலம். இந்தியாவிலோ காலனி ஆதிக்க நாடுகள், சமஸ்தானங்கள், எஞ்சிய மன்னர்கள் என ஓயாத உள்நாட்டுப் போர். பிரிட்டன் அரசுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்குமான ஈகோ அதிகார சண்டைகள் முட்டல் மோதல்கள், 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியை காவு வாங்கிய செயற்கை பஞ்சங்கள். சிப்பாய் கலகம். அதிகார மாற்றத்தில் நிகழ்ந்த தடைகள், இரண்டு உலக போர்கள். இன வெறியோடு இந்தியாவை உதாசீனம் செய்து, தன்னால் முடிந்த வரையில் புதிய அழிவுகளை தேடி தேடி செய்த உயரதிகாரிகள், கடுமையான நிதி நெருக்கடிகள், கீழை ஆய்வுகள் சார்ந்த மேலை மனதின் உதாசீனம், வந்த மேலை நாட்டினரால் தொடர் பணி செய்ய இயலாது போகும் வகையிலான சமாளிக்க இயலா இந்திய பருவ சூழல். இத்தனைக்கும் நடுவில்தான் மேற்கண்ட பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. இப்படித்தான் நமக்கு நவீன வரலாற்றியல் துவங்கி இருக்கிறது. அதன் வழியாகத்தான் குப்தர் காலம் முதல் பேரரசன் ராஜ ராஜ சோழன் வரை கண்டுபிடிக்கப்பட்டு நமக்கு கிடைத்திருக்கிறது.
குறைந்த பட்சம் 20 முக்கிய ஆளுமைகள் அவர்களின் பணிகள் வழியே விரியும் இந்த நூல் பக்கங்கள் தோறும் பற்பல சுவாரஸ்யங்களை கொண்டிருக்கிறது உதாரணமாக ஆய்வாளர் பாபு பூர்ண சந்திர முகர்ஜி குறித்த சித்திரம். சக ஆய்வாளர் மீது பொறாமை கொண்டவர், புகழ் விரும்பி அதே நேரம் ஆய்வில் தீவிரம் கொண்டவர். இவர் குணத்துக்கு இயைந்த இரண்டு விஷயங்கள் இவரால் கண்டுபிடிக்க பட்டிருக்கிறது. ஒன்று அசோகரின் நரகம் என்றழைக்க படும் அவரது வதை முகாம். மற்றது இப்போது பாட்னா வில் உள்ள மிக அழகிய சாமரம் வீசும் பெண் சிற்பம். இவர்கள் போலவே இணையாக இந்த மேலை ஆய்வாளர்களுக்கு மொழிப் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிலும் துணை நின்ற பல்வேறு இந்திய ஆளுமைகளும் இந்நூல் நெடுக இடம் பெறுகிறார்கள்.
மனம் கசக்க செய்யும் தருணங்கள் பலவும் நூலில் உண்டு. பல முக்கிய ஆய்வுகள் வெற்றுத் தன் முனைப்பு மோதலால் நிரந்தர இருளில் சென்று விழுந்திருக்கின்றன. பல திட்டமிட்ட அழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக மூன்று. ஜவ்கடா கல்வெட்டை எலியட் எனும் அதிகாரி வன்மம் கொண்டு உடைக்கும் சித்திரம். இரண்டாவது ப்ரும்மாண்ட ஸ்தூபி ஒன்று கேப்டன் ஜான்சன் என்பவரால் இரண்டாக பிளக்கப்படும் சித்திரம். மூன்றாவது அலெக்ஸ்சாண்டர் கன்னிங்ஹாம் கண்டெடுத்து குறித்து வைத்த டன் கணக்கான சாரநாத் தொல்லியல் பொருட்கள் மாஜிஸ்திரேட் டேவிட்சன் முன்நின்று அள்ளி எடுத்து வரணா நதிக் கரை கட்டுமான பணிகளுக்கு எடுத்து சென்று அழிக்கும் சித்திரம். இவை போக வீடு கட்ட, புதையல் தேடி என பல்வேறு காரணங்கள் வழியே அழியும் தொல்லியல் களங்களின் சித்திரம்.
நூலின் இறுதியில் வரும் அசோகர் கதையில் அக் கதையின் பின்புலம் கொண்ட சிற்பவியல் சார்ந்த ஆய்வுகளில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. அசோகர் எல்லா சிற்பங்களிலும் மிக சாதாரணமாகவே சித்தரிக்க பட்டிருக்கிறார். குறிப்பாக ஒரு சிற்பத்தில் போதி மரத்தின் முன் பரவசம் கொண்ட அசோகன் நிற்க இயலாமல் ராணிகள் மேல் சாய்ந்து கொண்டிருக்கிறான். இப்படி பல. அந்த அசோகரின் கதையில் அசோகர் இறுதியாக மணம் புரிந்து கொண்ட ராணிக்கு யார் மீது என்ன கோபமோ, இந்த போதி மரத்துக்கு விஷமிட்டு விடுகிறார். கன்னிங்ஹாம் கயாவில் முதன் முதலாக அழிந்த நிலையில் இந்த பொதியை கண்டு, புதிய போதி ஒன்றை அங்கே நடும் பணியையும் செய்கிறார். தொல்லியல் தரவுகள் வழியே உறுதி கொண்ட முழுமையான கதையில் வரும் அசோகரின் கலிங்கப் போருக்குப் பிறகான குற்ற உணர்ச்சி சார்ந்த மன மாற்றம் அவரது மீட்சிக்கு அதற்கு காரணமான பௌத்தம் எனும் வரிசை மேலை ஆய்வாளர்களை வசீகரித்தில் எந்த வியப்பும் இல்லை. தன்னையோ ஏன் புத்தரயோ கூட முன்வைக்காமல், தர்மம் என்பதை முன்வைத்து அனைத்தையும் தொகுத்திருக்கிறான். அவனது காலத்தில் இருந்த பல் வேறு பௌத்த போக்குகளையும் இந்த தர்ம சக்கரம் என்ற ஒன்றை கொண்டு இணைத்திருக்கிறான். அவன் பௌத்த அறத்தின்படி உருவாக்கிய பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருந்திருக்கிரார்கள். படையெடுத்து அண்டை நாடுகளை வெல்லாமல், கலாச்சார தூது வழியே, பௌத்த தர்மத்தின் சேதியை சொல்லி கருத்தியல் ரீதியாக அவர்களை வெல்ல முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறான். எல்லாமே 2200 ஆண்டுகளுக்கு முன்.
ஐநூறு பக்கங்களிலான இந்த இறுக்கமான செறிவான நூல் வழியே, அசோகன் மெல்ல மெல்ல மீண்டு முழுமை கொள்ளும் சித்திரத்தின் இறுதியாக, அசோகர் ஆணைகளின் மொழியாக்கம் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் வழியிலான பயணத்துக்கு பிறகு இங்கே வரும் வாசகன் இந்த கல்வெட்டு வாசகங்களை உளம் பொங்காமல் வாசிக்க இயலாது. கேரளாந்தகன் எனும் மெய்க்கீர்த்திக்கும் தேவர்களுக்கு பிரியமானவன் எனும் மெய்க்கீர்த்திக்கும், அவனது கல்வெட்டு செய்திகளுக்கும் கலிங்கத்து பயணிக்கும் இடையே உள்ள தூரம் இருக்கிறதே அதுவே இந்நிலத்துக்கு பௌத்தம் அளித்த கொடை.
ஆசீவகர்கள் எனும் சொல் இருக்க, ஆலன் பயன்படுத்திய அஜீவிக்காஸ் போன்ற சொற்களையே பயன்படுத்தும் தருமி அவர்களின் மொழியாக்கத்தில், இதற்கு சிற்சில இடர்களை விட்டு விட்டால் வாசிக்க எந்த விதத்திலும் இடர் செய்யாத, வாசகர் மன வாசிப்பு மொழிக்கு இயைந்த மொழியாக்கம் கொண்ட நூல் இது.
நமது கடந்த காலம் வழியே இந்த முன்னோடிகள் வழியே நாம் பெற்றது அனைத்தும் நல்லதும் கேட்டதும் என கலந்த ஒன்றாகவே இருக்க, அந்த நல்லதை விடுத்து கெட்டதை மட்டுமே பேசி பேசி வளர்த்துக் கொண்டிருக்கும் நமது குறுகிய புத்திக்கு வெளியே சென்று, அந்த நல்லவைகள் மேல் சற்றேனும் கவனம் குவிய வேண்டிய காலம் இது. வெறும் 40 வருடமே வாழ்ந்து அதில் 20 வருடத்தை இந்தியவியலில் செலவு செய்து, பிணமாக அவர் உடல் மட்டும் சொந்த தேசம் போகிறது. இப்படி எத்தனையோ பேர் இங்கே இதன் பொருட்டு வாழ்ந்து செத்திருக்கிறார்கள். இத்தகு ஆளுமைகளின் எதிர்நிலைப்பங்களிப்புகள் மட்டுமே இங்கே வளர்த்தெடுக்க படும் சூழலில், அவர்கள் இயற்றிய நேர்நிலை பங்களிப்பு குறித்து பேச இங்கே நூல்களே இல்லை. இந்த முன்னோடிகள் வழியே நிகழ்ந்த எதிர்நிலைகளை தீஸிஸ் என கொண்டால், நேர் நிலைகளை ஆன்டி தீஸிஸ் என்று கொண்டே இந்த இரண்டின் ஊடாக மதிப்பிட்டே நமது முன்னோடிகளை வரையறை செய்ய வேண்டும். இங்கு இருப்பதெல்லாம் தீஸிஸ் மட்டுமே. ஆன்டி தீஸிஸ் என எதுவுமே இல்லை. இந்த நிலை மாற தமிழில் கிடைக்கும் மிக சில நூல்களில் ஒன்றான இந்த நூல், ஒட்டு மொத்தமாக பிரிட்டிஷ் தனமான கட்டுமானத்தில், நிறைந்து வழியும் தரவுகளின் பின்புலம் வழியே, அரிய ஓவியங்கள் புகைப்படங்கள் வழியே,நவீன இந்திய வரலாற்றியலை உருவாக்கிய ஆளுமைகளின் பணிகளின் முக்கிய தருணங்களை, டான் ப்ரௌன் எழுதிய லாங்டன் துப்பறியும் மர்ம நாவல் ஒன்றினை வாசிப்பது போன்ற வாசிப்பு இன்பத்தின் வழியே வாசகனுக்கு அளிக்கிறது.
பின்னிணைப்பு ஒன்று:
பொதுவாக எங்கேனும் என்னை சந்திக்கும் புதிய வாசகர்கள் என்னைக் கேட்கும் முதல் கேள்வி, நான் எப்படி இத்தகு நூல்களை தேடி செல்கிறேன் என்பது. விடை மிக எளிது நீங்கள் உங்கள் வாசிப்பு வழியே யார் யாரை பின் தொடர்கிறீர்களோ அவர்களின் வழியே அடுத்தடுத்த வாசல் திறக்கும். நான் எப்போதும் பின்தொடரும் சிலரில் தியோடர் பாஸ்கரன் அவர்களும் ஒருவர். இந்த சர்லஸ் ஆலன் எழுதிய பேரரசன் அசோகன் நூல் குறித்து இதன் ஆங்கில வடிவம் குறித்து, இப்படி ஒரு முக்கியமான நூல் உள்ளது என்று 2014 உயிர்மை இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 2012 இல் வெளியான அந்த நூல் எதிர் வெளியீட்டில் தமிழிலும் உண்டு என்று தேடி அறிந்தேன். தியோடர் பாஸ்கரன் அவர்களின் அந்த நூல் குறித்த குறிப்பை அடிப்படையாக கொண்ட கட்டுரை அவரது கல் மேல் நடந்த காலம் நூலில் உண்டு. அப்படித்தான் இந்த இந்த நூலை வந்தடைந்தேன். இந்த 10 வருடத்தில் இப்படி ஒரு நூல் வந்திருக்கிறது, அது வாசகர் ஒருவரால் வாசிக்கப்பட்டிருக்கிறது என்பதை தமிழில் எழுத்து வடிவில் அறிவதற்கு இருக்கும் ஒரே ஒரு குறிப்பு தியோடர் பாஸ்கரன் எழுதிய அந்த குறிப்பு மட்டுமே. இரண்டாவதாக ஒன்று இருக்கும் என்றால் இதோ இப்போது எழுதப்பட்டு கொண்டிருக்கும் இதுவாக இருக்கும். பத்து வருடம் முன்னர் என்னிடம் இருந்து வாசிக்க எடுத்து செல்லப்பட்ட நூல், வாசிக்காமலேயே கிடந்த இடத்திலிருந்து கண்டெடுத்த பின் மீண்டும் வாசித்து இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
தியோடர் பாஸ்கரன் அந்த நூல் குறித்த குறிப்புடன் எழுதிய கட்டுரையின் சுட்டி கீழே
http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/11/blog-post.html?m=1
பின்னிணைப்பு இரண்டு:
இந்த சார்லஸ் ஆலனின் பேரரசன் அசோகன் நூலை விரித்துப் பொருள்கொள்ள, இத்துடன் ராஜ் கெளதமன் எழுதிய அயோத்திதாசர் ஆய்வுகள் நூலை இணைத்து வாசிக்க வேண்டும், குறிப்பாக அதன் பௌத்தம் குறித்த முதல் இரண்டு அத்தியாயங்கள் முக்கியமானது. தமிழ் இணைய நூலகத்தில் உள்ள அந்த நூலின் சுட்டி கீழே.
பின்னிணைப்பு மூன்று.
எழுத்தாளர் சார்லஸ் ஆலன். தனது நூல் குறித்து பேசிய அறிமுக காணொளி கீழே
பின்னிணைப்பு நான்கு.
தருமி அவர்கள் அவரது தளத்தில் இந்த நூலின் மொழியாக பணி சார்ந்து எழுதியதன் சுட்டி கீழே
இணையமும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ,
இன்றைய இணையச்சூழல் பற்றி இளங்கோ கிருஷ்ணன் எழுதிய குறிப்பு இது. இத்தனைச் சுருக்கமாக, தீவிரமாக முகநூலிலேயே இதை எழுதியிருப்பது ஆச்சரியமானது
சங்கர் ராம்
அன்புள்ள சங்கர்
நான் எழுதியதும் இதையே. பார்க்க வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
ஜெ
*
இலக்கியம் தொடர்பாக ஏதாவது சர்ச்சை எழுகிறபோதும், இலக்கியவாதிகள் தொடர்பாய் ஏதாவது குற்றச்சாட்டு எழுகிறபோதும் ஒரு கும்பலே அடிக்கத் தயாராய் இருக்கிறது. “ஓ இந்த இலக்கியவாதிகளே இப்படித்தான். இலக்கியமே இப்படித்தான்..” என்று கூச்சல்கள் எழுகின்றன.
உண்மையில் இந்தக் குற்றச்சாட்டை கூவுவது ஒரு கூட்டம் அல்ல. வெவ்வேறு வகையான கும்பலைச் சேர்ந்த மனிதர்கள். ஏதாவது ஒரு கட்சி மற்றும் சித்தாந்த பின்புலத்தில் இயங்கியபடி, அவர்களின் சித்தாந்தத்தை கோட்பாட்டை மட்டுமே இலக்கியம் வாந்தி எடுக்க வேண்டும் என்றும் கருதுவோர்.
ஒரு கவிதை நூலோ, சிறுகதை நூலோ மொக்கையாக எழுதிவிட்டு, தன்னை யாரும் கவனிக்கவில்லை என்றதும் பொங்கல் வைக்கும் அரைகுறைகள்.
ஏதாவது ஒரு பெரிய மனுஷனுக்கு அல்லது ஒரு குழுவுக்கு Bully யாக செயல்படும் அடியாள் கூட்டம்.
வயிற்றுப் பிழைப்புக்காக என்.ஜி.ஓ வைத்துக்கொண்டு சமூக சேவகர், சமூகக் களப்பாணியாளர் என்று கருதிக்கொண்டு உலவும் கூட்டம்.
முகநூல் தோன்றிய காலத்திலேயே உருவாகி மெல்ல வளர்ந்து இன்று மாபெரும் முகநூல் ஜோம்பிகளாக உருவாகியிருக்கும் பொச்செரிச்சல் கூட்டம்.
முன்னால் இலக்கியவாதிகள், எதிர் இலக்கியவாதிகள், எதிர் அறிவுத்தரப்பினர், இலக்கிய வெறுப்பாளர்கள், இலக்கிய மறுப்பாளர்கள், இலக்கியம் அறியாதவர்கள் என்றொரு கூட்டம்…
இப்படி தனித் தனி க்ரூப்பை சேர்ந்த ஆட்கள் எந்த ஒரு விவகாரம் வரும்போது பொங்கிக்கொண்டு வருவார்கள். இவர்கள் யாருக்குமே தமிழ் இலக்கியம் குறித்தோ, அதன் அறிவார்த்தம் குறித்தோ, அதன் உள்ளார்ந்த விழுமியங்கள், அது முன்வைக்கும் அழகியல் சிந்தனைகள், அதன் தத்துவார்த்த மனநிலைகள், அதன் வரலாற்றுப் பின்புலங்கள் குறித்தோ பெரும்பாலும் அறிதல் இருப்பதில்லை. இருந்தாலும் அதன் மீது எந்த மரியாதையும் இல்லை.
கலை என்பதை தன்னளவிலான முழுமையான அறிதல் முறை என்பதை நம்புபவன் நான். கலையின் வழியே வாழ்வை சமூகத்தை அறிவதற்கு தத்துவம் எவ்வாறு பயன்படுகிறது அல்லது உதவுகிறது என்கிற விஷயத்தையும் கவனிப்பவன். அதனாலாயே கலைஞன் என்பவன் தனித்துவமானவன் என்பதும் என் புரிதல்.
ஒளியும் இருளும் மயங்கிக் கிடக்கும் ஒரு பாதை அது. மனித குலத்துக்கு மேன்மையைக் கொண்டு வரும் மிகச் சிறந்த விஷயங்களை கொண்டு வந்து சேர்க்கும் அறிவார்ந்த மனதுக்கு, அதைச் செய்யும்போது எவ்வளவு நுட்பம் உண்டோ அதே நுட்பம்தான் அந்த மனதில் கபடம் இயங்கும் போதும் நிகழும். இது ஓர் அடிப்படை.
இங்கு இது ஓராயிரம் முறைச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் கலைஞன் என்றால் அடிப்போம் என்று எப்போதும் ஒரு கும்பல் வக்கறிக்கிறது. என்ன காரணம். கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், புகழ், விருதுகள், மீடியா வெளிச்சம் உள்ளிட்டவை உருவாக்கும் பொச்செரிச்சல். அது மட்டுமே தூய உண்மையான காரணம்.
மற்றொன்று அன்றாடத்தின் சலிப்பும் அதில் ஈடுபடும்போது அவர்கள் செய்யும் மலினங்களும் தங்களை தீண்டிவிடக்கூடாது என்பதில் இருக்கும் கவனம். அதை உதறிக்கொண்டு மேல் எழுந்து செல்ல, அன்றாடத்தின் கபடம் தங்கள் மீது கவிழ்க்கும் குற்றவுணர்விலிருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு அவுட்லெட் தேவைப்படுகிறது. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பது போல் இருக்கவே இருக்கான் இலக்கியவாதி போட்டு பிளடா ராசா என்று ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
இலக்கியவாதிகள் எல்லோருமே யோக்கியர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். ”நான் யோக்கியன்” என்று சொல்லவே எனக்கு நடுங்கும். அதுதான் என் சுபாவம். ஆனால், இலக்கியவாதியை அடிக்கிறேன் என இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மாபெரும் அறிவு மரபை இழிவு செய்யாதீர்கள். இலக்கியவாதிகள் செய்யும் தவறுக்கு இலக்கியம் என்ன செய்யும். கம்பனும், வள்ளுவனும், வால்மீகியும் காளிதாசனும் தஸ்தாயெவ்ஸ்கியும் டால்ஸ்டாயும் இலக்கியவாதிகள்தான். உங்கள் மகத்துவமான கண்களுக்கு அவர்கள் எல்லாம் தெரியவில்லையா என்று கேட்கிறேன். நான் இலக்கியவாதிகள் என்று சொல்லும்போது அவர்களை மனதில் வைத்துத்தான் சொல்கிறேன். அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதான் கோவை ஞானி எங்களுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.
இந்தப் பதிவைப் படிக்கும்போது உங்களுக்கு கோபம் வந்தால் உட்கார்ந்து யோசியுங்கள். கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன். மனது ஆறவில்லை. தகிப்பாய் இருக்கிறது.
இளங்கோ கிருஷ்ணன்
March 16, 2023
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
தங்களின் துணைவன் சிறுகதை இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் படமாக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் அக்கதை பலராலும் படிக்கப்பட்டு பகிர்ந்துகொள் ப்பட்டது. அப்போது எழுந்த விமர்சனத்திற்க்கு விடுதலை திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பதிலளித்திருந்தீர்கள். அதாவது புரட்சி பேசும் தீவிர நக்சலைட்டாக உள்ள ஒருவர் சாதி, மதத்திலிருந்து முற்றிலும் ஒதுங்கிய நாத்தீகராகத்தான் இருப்பார் என்று வந்த விமர்சனங்களுக்கு “நக்சலைட்டுகள் மக்களோடு மக்களாகத்தான் இருப்பார்கள், போலீசாருக்கு தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறுதான் இருந்தார்கள்” என பதில் அளித்திருந்தீர்கள்.
ஆரம்பத்தில் தாங்கள் நக்சலைட்டுகளை அவமானப்படுத்த வேண்டுமென்றே அவ்வாறு சித்தரித்ததாக அறிவுஜீவிகள் தரப்பாக தங்களை காட்டிக்கொள்பவர்கள் கொந்தளித்திருந்தார்கள். கொஞ்சம் வரலாற்றை அணுகிப் பார்த்தால் உண்மை புலப்படும்.
1960 களில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற நக்சல் இயக்க நிகழ்வுகள் கேரளத்தில் நடைபெற்றவைதான். குன்னிக்கல் நாராயணன், மந்தாகினி, அவர்களின் மகள் அஜிதா, வர்க்கீஸ், பிலிப் எம் பிரசாத், ஸ்டீபன் என பெரும் நக்சல் இயக்க தலைவர்கள் கேரளத்தில் களமாடியவர்கள். இதில் அஜிதா, பிலிப் எம் பிரசாத், ஸ்டிபன் போன்றவர்கள் தங்களுடைய அனுபவங்களை புத்தகங்களாகவும் பேட்டிகள் வாயிலாகவும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்
ஒரு பேட்டியில் “தாங்கள் உறங்கச்செல்லும் முன்பு மண்டியிட்டு ஜெபம் செய்துவிட்டுதான் உறங்குவீர்களாமே?” என்ற கேள்விக்கு “ஆம். புல்பள்ளி காடுகளில் ஆயுதங்களுடன் தோழர்களுடனும் சுற்றித்திரிந்த போதும் கூட இரவில் மண்டியிட்டு ஜெபித்தால் தான் எனக்கு உறக்கம் வரும். நான் சிறுவனாக இருந்தபோது எனது தாயார் சகோதர்களையும் என்னையும் இருத்தி ஜெபம் செய்துவிட்டுதான் உறங்குவார். அந்த பழக்கம்தான் எப்போதும் தொடர்ந்தது. அது ஒரு ஆசுவாசத்தை அளித்து உறங்கச் செய்தது”என பதிலளித்திருக்கிறார் நக்சலைட்டாக இருந்த பிலிப் எம் பிரசாத்
அஜிதா மற்றொரு பேட்டியில் ” ஒரு நல்ல உருக்கமான கதைபடித்தால் அழுவேன். நல்ல இசைப்பாடல் கேட்டால் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் நினைப்பது போல் இல்லை. நான் நக்சல் இயக்கத்தில் பங்கு கொண்டேன் என்பதை தாண்டி உங்களைப்போல் தான் நானும் என்னுடன் இருந்த தோழர்களும் அப்படியே” என தெரிவித்திருக்கிறார். இந்த உண்மையை மலையாள சினிமாக்களில் இயல்பாக காட்டியும் இருக்கிறார்கள்
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய கதாபுருஷன் திரைப்படத்தில் நச்சலைட்டாக வரும் நாகேந்திர பிரசாத் போலீசாரிடம் இருந்து தப்பிக்க காவியாடை அணிந்த துறவி போல சுற்றுவார். அஞ்சலி மேனனின் மஞ்சாடிக்குரு படத்திலோ போலீசாரிடம் இருந்து தப்பிக்க காவியாடை உடுத்திய முரளி கடைசியில் துறவியாகியே போவார் நக்சலிசத்தை துறந்து. அங்கெல்லாம் நக்சலைட்டுகளை எவ்வாறு இப்படி சாமியாராக சித்தரிக்கலாம் என்ற விவாதங்களெல்லாம் இல்லை. ஆனால் இங்கு வெறுப்பினால் ஒரு விவாதம் கிளப்பப்பட்டு அதற்கு தாங்கள் அளித்த பதிலையும் திரித்து ” அந்த காலத்தில் புரட்சியாளர்கள் எல்லாம் நெற்றியில் விபூதி வைத்து இருப்பார்கள்” என ஜெயமோகன் பேசியதாக தங்களின் பேச்சுக்கு தலைப்பிடுகிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை
அன்புடன்
பார்த்திபன்
அன்புள்ள பார்த்திபன்,
அண்மையில் ஓர் இணைய இதழாசிரியருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார், தமிழின் தீவிர இலக்கியத்துக்கான இணைய இதழ்களின் வாசகர்கள் அதிகபட்சம் 200 பேர் என. ஒரு கதை, கட்டுரை பிரபலமடைந்தால் 450 தொடுகை (ஹிட்)கள் வருகின்றன. சாதாரணமாக ஐம்பது அறுபது. அவ்வளவுதான். இதை இணைய இதழ்களின் ஆசிரியர்கள் எழுதியுமிருக்கிறார்கள்.
அதாவது பழைய சிற்றிதழ்களின் காலகட்டத்தைவிட மோசம். அன்றெல்லாம் சிற்றிதழ்கள் சாதாரணமாக 600 பிரதிகள் அச்சிடப்படும். குறைந்தபட்சம் 200. பின்னர் இடைநிலை இதழ்களின் காலம் வந்தது. அதில் உச்சமான காலச்சுவடு ஒரு கட்டத்தில் 8000 பிரதிகள் வரை சென்றது. நான் நடத்திய சொல்புதிது இதழ் 2000 பிரதிகள் அச்சிட்டோம்.
இப்போது பேசப்படுவதை வைத்துப் பார்த்தால் இடைநிலை இதழ்களின் காலகட்டமே நவீன இலக்கியத்தின் இரண்டாவது பொற்காலம் என்று படுகிறது. அதாவது மணிக்கொடி, சுதேசமித்திரன், கலைமகள் இதழ்கள் 5000 பிரதிகள் விற்ற 1930 முதல் 1950 வரையிலான முதல் காலகட்டம் ஒரு பொற்காலம். புதுமைப்பித்தனின் காலம். அதன்பின் தொடர் சரிவு. இலக்கியம் சிற்றிதழ்களில் ஒடுங்கிக்கிடந்தது. 1990 ல் சுபமங்களா, இந்தியா டுடே காலம் முதல் 2005 வரை பதினைந்தாண்டுகள் இரண்டாவது பொற்காலம். இன்று சக்கரம் சுழன்று பழைய தேக்கநிலைக் காலகட்டத்திற்கே சென்றுவிட்டிருக்கிறது.
நான் எழுதவந்தது அந்த இரண்டாம் பொற்காலத்தின் தொடக்கத்தில். அதனுடன் வளர்ந்து வந்தேன், அதை உருவாக்கியவர்களில் ஒருவனாகவும் இருந்தேன். எனக்கெல்லாம் கிடைத்த வாய்ப்பு இன்று எழுதுபவர்களுக்கு அமையாதா என்னும் திகைப்பு உருவாகிறது. (ஆனால் தீவிர எழுத்தாளர்கள் தங்களுக்கான பாதையை தாங்களே வெட்டுபவர்கள் என்றும் படுகிறது)
கூடவே எனக்கு ஒரு வியப்பு. இன்று எழுத்தாளர்களை, இலக்கியத்தை வசைபாட வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் சாதாரணமாக ஐம்பதாயிரம் பேர் கூடிவிடுகிறார்கள். ஐந்தாயிரம் பதிவுகள் வந்துவிடுகின்றன. கணக்குகளைப் பார்த்தால் இவர்களில் ஆயிரத்தில் ஒருவரே ஏதேனும் இலக்கிய இதழை வாசிக்கிறார். அதாவது உள்ளே சென்று எட்டிப்பார்த்து ஒரு தொடுகையையேனும் அதற்கு அளிக்கிறார். மிச்சபேரெல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்?
யார் யாரோ இலக்கியவாதியை வசைபாடுகிறார்கள். போலி வரலாற்றுப் பிலாக்காணம் வைக்கும் யுடியூபர்கள், ஓய்வுபெற்ற போலிப்புரட்சியாளர்கள், என்ஜிஓ ஆசாமிகள், வெவ்வேறு கட்சிகளின் ஊடக அணியினர்… சுருக்கமாகச் சொன்னால் ஓய்வுபெற்ற அத்தனை பேருமே சமூகவலைத்தளத்தில் அமர்ந்து இலக்கியவாதிகளை வசைபாடுகிறார்கள். ஐம்பதாயிரத்தில் ஆயிரம் பேர்கூட இலக்கிய இதழ்களை சும்மா உள்ளே என்ன இருக்கிறது என்றாவது நுழைந்து பார்ப்பதில்லை. வசைபாடுவதற்கான தகவல்களைத் திரட்டுவதற்காகக்கூட வாசிப்பதில்லை. அவர்களுக்கு எவரேனும் வெட்டி எடுத்துப்போடும் ஒற்றைவரியே போதும் அதற்கு.
இன்று இலக்கியவாதிகளின் பெயர்கள் அனைவருக்கும் தெரிகிறது. ஒற்றைவரி அபிப்பிராயங்களை தெரிந்துகொள்கிறார்கள். அவரவர் அரசியல், சாதிமதக் காழ்ப்புகள் சார்ந்து வசைபாட ஆரம்பிக்கிறார்கள்.
துணைவன் இசைவெளியீட்டுவிழாவில் நான் சொன்னதை பார்த்திருப்பீர்கள். இங்கே அரசியலோ வரலாறோ அறியாத சிலர் கோனார் என ஓர் இடதுசாரிக்குப் பெயர் இருக்குமா என்று எழுதினர். சென்றகால இடதுசாரியினர் பெரும்பாலும் மக்களுடன் இணைந்து மறைந்திருப்பார்கள், அவ்வாறு மறைந்திருக்கும் அவர்கள் சூட்டிக்கொண்ட பொதுவான பெயரோ அல்லது போலீஸ் போடும் அடையாளப் பெயரோதான் அவர்களுக்கு இருக்கும் என்று சொன்னேன். (அதாவது பெயர் சூட்டிக்கொண்டு புரட்சிபேசும் முகநூல் புரட்சியாளர்கள் அல்ல அவர்கள்)
அதை ஓர் ஊடகம் ’அந்தக்கால புரட்சியாளர்கள் விபூதி போட்டிருப்பார்கள்’ என தலைப்பிட்டு வெளியிட்டது. தலைப்பு இந்த வம்புக் கும்பலில் ஒரு பகுதியையேனும் சுண்டி இழுத்து அந்த ஏழுநிமிட வீடியோவை பார்க்கவைத்து ’ஹிட்’ தேற்றிக்கொள்ளும் நோக்கம் கொண்டது. ஏமாறுவார்களா வம்பாளர்கள்? அவர்கள் அந்த வீடியோவை பார்க்கவில்லை. தலைப்பை வைத்தே வசைபாடி தள்ளிவிட்டனர். நான் புரட்சியாளர்களை மதவெறியர்கள் என்று சொல்கிறேன் என்று சொல்லி ஐநூறுக்கும் மேற்பட்ட வசைகள்.
இன்று என் பெயரோ, சில எழுத்தாளர்களின் பெயர்களோ பரவலாகத் தெரிகிறது. அதை எண்ணி சிலர் பெருமிதம் கொள்கிறார்கள். அது ஒரு பெரும் மாயை. இந்த சமூக ஊடகம் இலக்கியத்தின் எதிரிகளுக்கு இலக்கியத்திலுள்ள பெயர்களை கொண்டுசென்று சேர்த்துள்ளது. இலக்கியத்திற்கு ஆள் கொண்டுவந்து சேர்க்கவுமில்லை. இலக்கியம் பழைய சிற்றிதழ் யுகத்திற்கே போய்விட்டிருக்கிறது.
இன்று கோடையின் சிற்றோடைபோல மெலிந்து தளர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது இலக்கியம். மறுபக்கம் கிடைக்கும் தருணத்தை எல்லாம் பயன்படுத்தி இலக்கியத்தை அழிக்க வெறிகொண்ட பெருங்கூட்டம் திரண்டுள்ளது. இலக்கியம் தமிழில் நூறாண்டுகளாக முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றுள்ளதுபோல இத்தனை பெரிய எதிரிக்கூட்டம் என்றும் இருந்ததில்லை. இது மிகப்புதிய ஒரு நிகழ்வு. மிக அச்சமூட்டுவது.
இந்தக் கூட்டம் முதலில் ‘இலக்கியம் வாசிக்கலாம், ஆனா இன்ஃபுளூயன்ஸ் ஆகிவிடக்கூடாது’ என ஆரம்பிக்கிறது. (ஆனால் இளைஞர்கள் இவர்கள் சொல்லும் கட்சியரசியலால் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம் என்கிறார்கள். அசட்டு சமூகவியல் கருத்துக்களால் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம். சினிமா, வணிகம் என எல்லாவகை பிரச்சாரங்களாலும் இன்ஃப்ளூயன்ஸ் ஆகலாம். இலக்கியம் மட்டும் இன்ஃப்ளூயன்ஸ் செலுத்திவிடவே கூடாது. சும்மா வாசித்துவிட்டு அப்படியே போய்விடவேண்டும். வேண்டுமென்றால் நான்கு மீம்ஸ் போடலாம் என்கிறார்கள்.)
அடுத்து இக்கும்பல் ‘எந்த எழுத்தாளரையும் பெரியாளா மதிக்கக்கூடாது’ என நீட்டுகிறது. ’எனக்கு எவர்மேலும் மரியாதை இல்லை’ என்கிறது. (ஆனால் அரசியல் தலைவர்களுக்கு கொடிபிடித்து நரம்பு புடைக்க கூச்சலிடலாம். அவர்களை திருவுருவாக்கி வழிபடலாம். அவர்களின் எல்லா செயல்களையும் மாய்ந்து மாய்ந்து நியாயப்படுத்தலாம். அவர்களை வைத்து இரவுபகலாகச் சண்டை போடலாம்)
அதாவது சிந்தனை சார்ந்த, கலை சார்ந்த செல்வாக்குகளுக்கு மட்டும் ஆளாகி விடலாகாது. மற்ற அத்தனை செல்வாக்குகளும் இயல்பாகவே வந்தமையலாம். நான் இளைஞர்களிடம் சொல்வதெல்லாம் உங்களிடம் ‘இன்ஃப்ளூயன்ஸ் ஆகாதே’ என்பவர்களிடம் ‘நீ இங்குள்ள அத்தனை கழிசடை செல்வாக்குகளுக்கும் ஆளானவன் அல்லவா? உனக்கு என்ன தகுதி பேசுவதற்கு?” என்று திருப்பி கேளுங்கள் என்றுதான். ‘சிறந்தவற்றின் செல்வாக்குகளை எல்லாம் கவனமாக தடுத்து நீ அடைந்ததுதான் என்ன? உன் சாதனை என்ன? என்னையும் உன்னைபோல ஒரு வெட்டிவம்பன் ஆகச் சொல்கிறாயா?’ என்று கேளுங்கள் என்றுதான்.
அடுத்த கட்டம்தான் எதிரிகளின் மெய்யான மனநிலை வெளிப்படும் இடம். அக்கும்பல் ‘இந்த இலக்கியவாதிகளே மோசம்’ என்று ஆரம்பிக்கிறது.(இவர்கள் உட்பட மற்றவர்கள் அனைவரும் அறச்செல்வர்கள்) இலக்கியவாதிகள் சுயநலக்காரர்கள், மோசடிக்காரர்கள், ஒழுக்கமில்லாதவர்கள், முன்பின் பேசுபவர்கள், வியாபாரபுத்தி கொண்டவர்கள் ….இன்ன பிற. இப்படிச் சொல்பவர்களில் நானறிந்தவர்கள் பெரும்பாலும் அத்தனைபேரும் நினைத்தாலே நெஞ்சம்கூசச்செய்யும் பரம அயோக்கியர்கள். (அந்தக்காலத்தில் இந்த கூத்தாடிகளே இப்படித்தான் என்று கீழ்த்தரக் கும்பல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்குமே, அதே மனநிலைதான்)
இக்கும்பல் இலக்கியத்தால் என்ன பயன் என அடுத்தாகச் சொல்ல ஆரம்பிக்கிறது. ‘பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லை’ என்ற பிலாக்காணம் அப்படியே விரிய, ‘நான்லாம் வாசிக்கிறதே இல்ல, நல்லவேளை’ என்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன் இணையம் வழியாக இலக்கியத்திற்குள் கொஞ்சம்பேர் வந்தனர். அவர்களை இந்த வம்பர்கும்பல் வெற்றிகரமாக தடுத்துவிட்டனர், தங்களின் சில்லறை அரசியல் வம்புகளுக்குள் மூழ்கடித்து மறைத்துவிட்டனர் என்பதையே இன்றைய இணைய இதழ்களின் நிலைமை காட்டுகிறது.
என் இணையதளத்திற்கு வாசகர்கள் வரவில்லையா என்று கேட்கலாம். ஆம், வருகிறார்கள். இதுதான் மிக அதிகமானவர்கள் இத்தளத்தை வாசிக்கும் காலகட்டம். ஆனால் நான் மிகநீண்ட சென்றகாலம் வழியாக இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன். ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறேன். சினிமா உட்பட புகழின் ஒளியில் இருக்கிறேன். அடுத்த தலைமுறை ஏறிவர வழி இருக்கிறதா என்றுதான் கேட்கிறேன். இதழ்கள் இந்த அளவுக்குத்தான் வாசிக்கப்படுகின்றன என்றால் மிகமிகப் பிழையாக ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
இது இலக்கியத்தின் மீதான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு. அவை வெறும் பூச்சிகள்தான். ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.
வம்பர்களை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் சில்லறை ஆதரவுக்காக அந்த வம்பர்சூழலில் இணைந்து அதை வளர்க்கும் செயலைச் செய்யும் எழுத்தாளர்கள் யோசிக்கவேண்டும்.
ஜெ
கா.நமச்சிவாய முதலியார்
கா.நமச்சிவாய முதலியார் தமிழ்வழிக் கல்வி தமிழகத்தில் உருவாக முன்முயற்சி எடுத்தவர். தமிழ்ப்பாடநூல்களை எழுதியும், கல்லூரிப்படிப்புக்குரிய துணைநூல்களை எழுதியும் தமிழ்க்கல்வியை பரப்பியவர்.ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதி வருமானம் பெற்ற ஆங்கிலேயர், கா. நமச்சிவாய முதலியார் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார். ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது. அந்த ஆங்கிலேயர், கா. நமச்சிவாய முதலியார் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து கா. நமச்சிவாய முதலியாரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற கா.நமச்சிவாய முதலியாருக்கு ஆணை வழங்கியது.
கா.நமச்சிவாய முதலியார்
கா.நமச்சிவாய முதலியார் – தமிழ் விக்கி
இரு குறும்படங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லக்கி லூக், ஆர்ச்சி, டெக்ஸ் வில்லர், கிட் ஆர்டின், வாரமலர் என்று ஏழு வயதில் தொடங்கிய எனது வாசிப்பு பன்னிரெண்டாவது வயதில் பொன்னியின் செல்வனுக்கு வந்து சேர்ந்தது. பின்னர் க்ரைம் நாவல், சுஜாதா வழியாக பயணித்து ஏழு வருடங்களுக்கு முன்பு தான் இரவு நாவல் மூலம் உங்களைக் கண்டடைந்தேன். அதற்குப் பின் அறம், ரப்பர், விஷ்ணுபுரம், வெண்முரசு, பல சிறுகதைகள் வழியாக தங்களை வாசிக்கிறேன். முயற்சிக்கிறேன் என்றும் சொல்லலாம். ஏனென்றால், தங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களைப் படிக்கும் பொழுது, நான் வாசிப்பில் இன்னும் நிறைய தேற வேண்டியது இருக்கிறது என்று தோன்றுகிறது.
ஆசிரியர், வாசகர் உறவு நேரடித் தொடர்பில் இருக்கத் தேவையில்லை என்றுதான் நினைத்திருந்தேன். உங்கள் வாசகர் வட்டம், இலக்கிய சந்திப்பு போன்றவை ஆச்சரியம், ஆர்வம் அளிக்கிறது. சில பதிவுகள் கட்டுரைகளில் அந்த உரையாடலுக்கான தேவையையும் விளக்கியுள்ளீர்கள்.
பல நாள் தயக்கத்திற்குப் பின் இந்த அறிமுகக் கடிதம் எழுத துணிவு வந்தது. தயக்கதிற்குக் காரணம் உங்களுக்கு எழுதுமளவிற்கு இலக்கிய வாசிப்புத் தகுதி இல்லை என்ற உணர்வு. துணிவிற்குக் காரணம், ஒரு வார காலமாக நடந்து வரும் புனைவுக் களியாட்டு. ஒரு திரைப்படவிழா கொண்டாட்ட மன நிலையை அளித்தது. யா தேவி சிறுகதைகள் முதலே இது ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறது. திரைப்படவிழாவிற்கு வரும் இயக்குனர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு மற்றும் அனுபவம், இரண்டு நிமிட அறிமுகம், கைகுலுக்கல், படம் அருமை போல் சம்பிரதாயமாக இருப்பினும் ஒரு திருப்தி கிடைக்கும். அதே போல் இந்த முதல் கடிதம் ஒரு மன நிறைவை அளிக்கிறது. பதில் கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி.
நான் ஒரு முயற்சிக்கும் திரை இயக்குனர் என்ற முறையில், புனைவு என்ற அளவுகோலில், எனது இரண்டு குறும்படங்களின் இணைப்பை அனுப்புகிறேன். உங்களுக்கு நேரமிருந்தால், விருப்பமிருந்தால் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
மதன் ஜெகநாதன்.
அரசனின் கருணை – சிவராஜ்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சில நாட்கள் முன்பாக, மருத்துவர் ஜீவானந்தம் அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான திட்டமிடல் மற்றும் அதுசார்ந்த செயற்பணிகளுக்காக அவரது தங்கை ஜெயபாரதி அம்மாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் பெறும் ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் மற்றும் செயற்பாட்டாளர் திருநங்கை சுதா ஆகியோர்களின் நேர்காணலை காணொளிகளாகப் பதிவுசெய்யும் பணிகளைத் திட்டமிட்டுவந்தோம். ஜெயபாரதி அம்மாவைத் தொடர்ந்து தினமும் சந்தித்து உரையாடி வந்த சூழ்நிலையில், அவரும் தனது கல்விப்பணி சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் நிறைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவ்வாறு அவர் பேசுகையில் பகிர்ந்த ஒரு அனுபவத்தை உங்களுக்கு எழுதவே இக்கடிதம்.
அவருடைய பள்ளியில் பயிலும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஒரு மலைகிராமத்திற்கு சென்று அங்கு தங்கியிருக்கிறார்கள். வனச்சூழலை பிள்ளைகள் அகமுணரும் வகையில், குழந்தைகளுக்கான ‘கானுலா’ என்ற அடிப்படையில் அப்பயணத்தை அவர்கள் திட்டமிட்டுச் சென்றுள்ளனர். அவ்வாறு சென்றுகொண்டிருந்த ஓரிரவில் சாலையின் நடுவில் சில யானைகள் கூட்டமாக நின்றிருப்பதால் அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இரவில் தனித்த வனத்தில் யானைகள் சூழ்ந்த பகுதியில் குழந்தைகளோடு நின்றுவிட்டதால் அவர்கள் அனைவருக்குள்ளும் ஒருவித அச்சம் சூழ்ந்திருக்கிறது. அப்பொழுது, ஒரு சிறுமி எல்லோரையும் அழைத்து ஒரு திசையைக் காண்பிக்கிறாள். அத்திசைநோக்கி சிறிது வெளிச்சத்தைத் திருப்பினால், அங்கு ஒரு மரத்திற்குக் கீழே முதுயானை ஒன்று தனது நீண்ட தந்தங்களால் அம்மரத்தை முட்டியசைத்து உலுக்கியபடி நின்றிருக்கிறது. அம்மரத்திலிருந்து சிறுசிறு பழங்களாக தரையில் உதிர்ந்து விழுவதை அவர்கள் கண்டுள்ளனர்.
இன்னும் சற்று உற்றுப் பார்க்கையில்தான் தெரிகிறது, அது இழந்தைமரம் என்று. கோடைக்காலத் துவக்கம் என்பது கொத்துகொத்தாக மரம் கனிகாய்த்திருக்கிறது. முதுயானையின் உலுக்கலில் தரையில் கொட்டும் இழந்தைப் பழங்களை நாற்பதைம்பது மான்கள் சூழ்ந்துநின்று மேய்ந்த காட்சியையும் அவர்கள் கண்டுள்ளனர். சிறிதுநேரம் மான்கள் மேய்ந்தபிறகு அந்த யானை மீண்டும் மரத்தை உலக்குகிறது; மீண்டும் இழந்தைப் பழங்கள் தரைகொட்டுகின்றன; மீண்டும் மான்கள் அவற்றை உண்கின்றன…
குழந்தைக்குரிய வியப்புக் கண்களோடு ஜெயபாரதி அம்மா இந்தக் காட்சியை விவரித்தபோது மனதுக்குள் அத்தனைப் பரவசம் நிறைந்தெழுந்தது. கோடையின் தகிப்பிலும்கூட பழங்கள் நிறைந்த இழந்தை மரமும், அதை உலுக்கித் தரையுதிர்க்கும் யானையும், கூட்டமாக நின்று மேய்ந்து பசியாறும் மான்கூட்டமும் எத்தனைத் தன்னியல்பாக வனத்திற்குள் நிகழ்கிறது! வயதுபேதமின்றி அதைக் கண்ட அனைவருக்கும் அக்காட்சி ஒருவித நிறைவுணர்வையும் உளமலர்ச்சியையும் தோற்றுவித்ததை அம்மாவின் வார்த்தைகளில் உணரமுடிந்தது.
இந்த அனுபவத்தைக் கேட்ட அக்கணமே எனக்குள் யானை டாக்டர் கதை நிகழத் தொடங்கியது. யானையைப்பற்றி எச்சிறு செய்தி கேட்டறிந்தாலோ பார்வையுற்றாலோ உடனே மனது, நீங்களெழுதிய யானை டாக்டரை உருவகித்து அக்கதையின் தொடர்ச்சியாக அவைகளை சேகரித்துக் கோர்க்கிறது.
அவ்வகையில் யானை டாக்டர் கதை இன்று என் உள்ளத்தில் ஓராயிரம் கிளைக்கதைகளின் பச்சைக்கரு போல உயிரசைந்து நிற்கிறது. இனக்குழுக்களின் குலப்பாடல்களிலிருந்து திரண்டெழிந்த செவ்விலக்கியக் காப்பியத்திற்கோ, புராதனத் தன்மையை போற்றி வணங்கும் பண்பாட்டின் கனிந்த வடிவமான தொன்மத்திற்கோ இத்தகையதொரு உயிர்சரடு உள்ளிருக்கும் என்பதாக நான் மீளமீள யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
உங்களது குழந்தைப் பருவத்தில் காட்டுச்சேம்பின் இலைகளை எடுத்து காதில் கட்டிக்கொண்டு யானை போல உறுமி விளையாடுவீர்கள் என எழுதியிருப்பீர்கள். ‘ஆனைச்செவி’ என்றே ஒரு காட்டிச்செடி அழைக்கப்படுவதையும் அதில் குறிப்பிட்டிருப்பீர்கள். புலியை வைத்து ஒரு வனத்தை மதிப்பிடுவது ஒருவகை கண்ணோட்டமென்றால் யானையை வைத்து கானகத்தை அறியமுயல்வது மனிதருக்கு இன்னும் அணுக்கமான அகத்திறவுதான் போலும்.
நிலத்தின் பேருயிர் பற்றிய ஒரு இலக்கியப் படைப்பு, அவ்வுயிர் பற்றிய அத்தனைத் தகவல்களையும் கதைகளையும் நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் தனது நீட்சியாகத் தோன்றவைக்கும் என்றால் அப்படைப்பின் உயிராழம் எத்தனையாயிரம் வேர்கள் நிரம்பிய ஆரண்யம்! ஓர் ஆசிரியத் தொன்மம் போல யானை டாக்டர் கே அவர்களைப் பற்றிய நினைவினையும், யானைகள் பற்றிய சூழியல் விழிப்புணர்வையும் தமிழில் இக்கதை வழியாக நிகழ்த்திட்ட உங்கள் அகத்தை மீண்டும் இக்கணம் பணிகிறேன்.
ஜெயபாரதி அம்மாவுடன் பயணித்த ஒரு பள்ளி மாணவி எடுத்த ஒளிப்படத்தை இக்கடித்ததுடன் இணைத்திருக்கிறேன்.
நன்றியுடன்,
சிவராஜ்
மலைபூக்கும் கதைகள் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ
புனைவுக் களியாட்டு கதைத் தொகுதிகளை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். அவற்றில் மலை பூத்தபோது தொகுப்பை இப்போது வாசித்தேன். ஒவ்வொரு கதையிலுமுள்ள அந்த மாயத்தன்மை பித்துப்பிடிக்கச் செய்வதாக இருந்தது. சிறுகதை என்பதை யதார்த்தவாதத்துடனேயே இணைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் கதையாக ஆவதைத்தான் நாம் நல்ல கதை என்கிறோம். இந்தக்கதைகளில் வாழ்க்கைக்கு அப்பாலுள்ள சந்தர்ப்பங்கள்தான் இருக்கின்றன. எல்லா கதைகளுமே ஒரு parable என்று சொல்லத்தக்கவையாக இருக்கின்றன.
இதில் சில கதைகளை என் பிள்ளைகளுக்கு டைனிங் டைமிலே சொன்னேன். சொல்லும்போது அப்படியே ஆயிரம் ஆண்டு பழைய கதைகளைப்போல ஆகிவிடுகின்றன. வாசிக்கும்போது தெரியாத நுட்பங்களெல்லாம் படிக்கும்போது தெரிய ஆரம்பிக்கின்றன.
என்.ஆர்.மாதவன்
***
அன்புள்ள ஜெ
ஊருக்கெல்லாம் பால் கொடுக்கும் பசுவை எப்படி ஊராரே அஞ்சி கொலைசெய்கிறார்கள் என்ற இடத்தை கதையில் வாசித்தபோது அந்த விரிவு எனக்கு திகைப்பூட்டியது. அந்த கதையில் பசு ராணி பார்வதிபாய் தம்புராட்டி அரசியுடன் சம்பந்தப்பட்டது. அவர் திருவிதாங்கூருக்கு அரும்பணி ஆற்றியவர். ஆனால் கடைசிக்காலத்தில் கைவிடப்பட்டு பெங்களூரில் அனாதையாக இறந்தார் என்று மானு பிள்ளையின் புத்தகத்திலே வாசித்தேன். அந்தக்கதையே அவரைப் பற்றியதுதான் என்று அப்போது தெரிந்தது.
அர்விந்த்
March 15, 2023
சைபர்சாலை புத்தர்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
புதிய தலைமுறை டிஜிட்டலுகாக நீங்கள் பரிசல் கிருஷ்ணா அவர்களுக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன். அதில் நீங்கள் சமூக வலைதளங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது என்னை உலுக்கிவிட்டது.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு ‘சைபர் உளவியல்’ படிக்க வேண்டும் என தேடி பின்பு சைபர் உளவியல் தந்தை ஜான் சுலர் அவர்களின் மின்னஞ்சல் வழிகாட்டுதல் மூலம் நானாக பாடங்களை கற்றுத் தேர்ந்தேன். அன்றிலிருந்து சமூக வலைதள உளவியல், அரசியல், சைபர் சமூக ஆபத்துகளை பேசிக்கொண்டிருக்கிறேன். பெரிய அளவு யாரையும் அடைய முடியவில்லை.
சமூக வலைதளங்கள் அடிப்படையில் இயங்கும் முறை என்பது echo Chamber என்றைழைப்பார்கள் நாம் பேசும் கருத்துக்கள் ஒத்த எதிரொலிக்கும் கருத்துகளை கொண்ட நபர்கள் தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு filter Bubbelல் சிக்கி கொள்கிறார்கள். நன்றாக அரசியல் படித்தவர்கள், வாசிப்புள்ளவர்கள், நிபுணர்கள் கூட இந்த விஷ சூழலில் சிக்கிக்கொள்வதை பார்க்க முடிகிறது.
எதிர்க்கருத்தை பேசவே கூடாது என்பதில் தொடங்கி, சிறிதும் கவனிப்பதே இல்லை என்னும் நிலைபாடு வரை சென்றடைகிறார்கள். வெறுப்பை எழுதும் போது கிடைக்கும் கவனம் அன்பை எழுதும் போது கிடைப்பதில்லை. அவதூறுகள், கேலிகள் நிரம்பிய மீம்களில் தொடங்கும் நாள் அன்றைய டிரெண்டில் கலந்து கரைந்து விடுகிறது.
நீங்கள் முன் வைப்பது போல கவனம் சிதறுதலில் தொடங்கி அதற்கு அடிமையாகும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள் (Adiicted to Distraction). பின்பு கவனம்செலுத்த வைக்கும் எதுவும் இவர்களுக்கு கோபம் தருவதாக இருக்கிறது.
உங்கள் பேச்சை கேட்கும் போது என்னை ஆச்சரியப் படுத்தியதும் உற்சாக படுத்தியதும், நீங்கள் முன்வைத்த சிறு-குறு சிதறல் எழுத்துகளில் இருந்து வெளியேறி நீண்ட வாசிப்பை முன் வைத்தமைதான்.
சரியாக சில ஆண்டுகள் முன் தான் சமூக வலைதள ஆர்ப்பரிப்பில் இருந்து விலகி இதற்கு மாற்றாக Long Reads கவனம் செலுத்த தொடங்கினேன். சில வாரங்களுக்கு முன் மீண்டும் வலைப்பூவில் எழுதுவதை கட்டாயமாக்கியுள்ளேன். சமூக வலைதலத்தில் எழுதுவதை விட வலைப்பூவில் எழுதும் போது என தகவலும், சிந்தனையும் ஒழுங்கமைந்து வருவதை உனர முடிகிரது. இது தான் நிபுனர்களின் ஆலோசனையும், வழிகாட்டியும்.
பொதுவாக எனக்கு உங்களின் பல கருத்துகளில் உடன்பாடில்லை, என் சமூக வலைதளத்தில் உங்களை கேலி செய்த பதிவுகள் நிறைய இருக்கும். ஆனால் என் அடிப்படை கருத்து Listening. குறிப்பாக மாற்றுக் கருத்து, நமக்கு பிடிக்காத கருத்து கொண்டவரையும் கவனித்து, அவர் ஏன் அப்படி சிந்திக்கிறார் என்று ஆராய்வது என் வேலை. அதில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இது என அனுபவம். அதனால் உங்கள் எழுத்தை படிப்பதும் பேட்டிகளை கவனிப்பதும் தொடர்கிறது. பேட்டியில் பல கருத்தில் உடன்பாடில்லை ஆனால் இந்த சமூகவலைதளத்தை பற்றிய உங்கள் கருத்து கொஞ்சம் அசைத்து பார்த்தது. இந்த கடிதம் எழுத தூண்டியது. இத்த்னை ஆண்டுகள் உங்களை படிக்கிறேன் கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை. காரணம் நிறைய.
இரவு நாவலை 2011ல் படிக்கும் போது இதே இணையக் கூச்சலை பற்றி எழுதி இருந்தீர்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. அன்றிலிருந்து சமூக வலைதளங்களின் வெறுப்பு அதிகம் ஆகிகொண்டே தான் இருக்கிறது.
மூன்று வருடம் முன்பு ஏன் இந்த சமூக வலைதளங்களில் இருப்பவர்களை அன்பின் வழி திருப்ப முடியாதா, கவனிக்க வைக்க முடியாதா, சிந்திப்பதை ஒரு பணியாக தூண்ட முடியாதா என யோசித்து- பேசி வருகிறேன். பெரிய அளவில் சென்று சேரவில்லை. ஆனால் உங்கள் பேட்டியில் நீங்கள் சொல்வது போல் ஒருவேளை பொறுமையாக என் பணியை செய்தால் ஒரு சிறு குழுவையாவது சென்று சேர முடியும் என நம்பிக்கை வந்தது. நன்றி.
பின்குறிப்பு:
எனக்கு தமிழில் எழுத ஆசை ஆனால் பிழை அதிகம் வரும். எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு இடதுசாரி ஆதரவாளன். உங்களுடன் முரண்படத்தான் வாய்ப்புகள் அதிகம். உங்களுடன் உடன்படும் கருத்து அதுவும் நான் பயணப்படும் களம் என்பதாலும், மிக சோர்வாக இருந்த நேரத்தில் உங்கள் பேச்சை கேட்டதும் உற்சாகம் வந்து கடிதம் எழுதிவிட்டேன். இதை நீங்கள் படிப்பீர்களா என்று கூட எனக்கு தெரியாது.
வாழ்த்துகள். வணக்கம்.
நன்றி,
வினோத் ஆறுமுகம். (Cyber Buddha)
Vinod Kumar Arumugam
Digital Life Coach,
Pradanya e-Life
@thiruvinod4u
https://cybersangam01.blogspot.com/
அன்புள்ள வினோத்
உங்கள் பெயர் வினோதமாக உள்ளது– சைபர் புத்தர்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒருவகை துறவும் தேவைப்படுகிறது என்பது ஓரு நடைமுறை உண்மை. ஒரு தேர்வில் வெல்வதென்றால்கூட அதற்கான துறத்தல்கள் சில உள்ளன. ’நோன்பில்லாத புண்ணியம் ஒன்றில்லை’ என இதை மலையாளத்தில் சொல்வார்கள்.
இன்றைய சூழலில் நான் அறிவியக்கத்துக்காக கடைப்பிடிக்கவேண்டிய ஒரு நோன்பு என ’சமூக ஊடக விலக்கத்தை’ச் சொல்வேன். இன்று மாபெரும் தொடர்புவலையாக இணையம், சமூக ஊடகம் உள்ளது. அது அனைவரையும் இணைக்கிறது. அந்த இணைப்பு வணிகத்திற்கு மிக உதவியானது. அறிவியக்கத்துக்கு எதிரானது.
ஏனென்றால் அது அனைவரையும் நிகராக்குகிறது. அனைவரையும் சராசரரியாக மாற்றுகிறது. அனைவரையும் ஒன்றையே பேச, ஒன்றுபோல யோசிக்க வைக்கிறது. அனைவருக்கும் ஒரே செய்திகளை அளிக்கிறது, அதை மட்டுமே பேசுபவர்களையே தூக்கிக் காட்டுகிறது. சராசரிகள்தான் அதற்கு வேண்டும். சராசரிகளைக் கொண்டுதான் அது செயல்பட முடியும்.
ஆனால் சிந்தனை, கலைச்செயல்பாடு, சேவை ஆகிய மூன்றுமே ஆளுமைத்திறனின் வெளிப்பாடுகள். ஆளுமைத்திறன் (பர்சனாலிட்டி) என்பது தனித்தன்மைதானே ஒழிய சராசரித்தன்மை அல்ல. ஒருவரிடம், அவருடையது மட்டுமான ஏதேனும் ஒன்று வெளிப்படவேண்டும். அவர் தன்னைத்தானே அவ்வண்ணம் கண்டடையவேண்டும். அதுவே அவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. தான் பொதுவெளியில் வெளிப்படுவதற்குரிய நியாயமான காரணம் உண்டு என உணரச்செய்கிறது. எவ்வகையிலேனும் இந்த சராசரிப் பரப்பில் இருந்து மேலே எழுந்து தெரிபவர்களையே நீண்டகால அளவில் அந்த சராசரிப் பரப்பேகூட கவனிக்கும்.
ஆனால் அவ்வாறு கவனிக்கப்படுபவர்கள் சராசரிகளால் எதிர்மறைக் கருத்துக்களால்தான் எதிர்கொள்ளப்படுவார்கள். ஏனென்றால் இன்றைய இணைய ஊடகம் எதிர்மறை மனநிலைகளாலானது. அதற்குக் காரணம், அது திரளின் விதிகள் வழியாகச் செயல்படுவது.
ஆள்கூட்டம் அல்லது திரள் நான்கு விதிகள் வழியாகச் செயல்படுகிறது.
அ.சராசரித்தன்மை. அறிவார்ந்ததும், நுட்பமானதுமான விஷயங்களை விட மிக அதிகமானவர்களைச் சென்றடைவது அனைவருக்கும் உரிய சராசரியான விஷயங்களே. (இன்றைய விளம்பர உலகின், திரையுலகின் அடிப்படை விதி இது)
ஆ. பெரும்பான்மை. ஒரு வெற்றிகரமான விஷயத்தின் இடம் பொதுவெளியில் பெரும்பான்மையினரால் வகுக்கப்படுகிறது. பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டதே அனைவருக்கும் உரியதாகிறது. அதுவே வணிகவெற்றி.
இ. எதிர்மறைத்தன்மை. பெரும்பாலான சராசரி மக்கள் எதிர்மறைத்தன்மையால் ஈர்க்கப்படுகின்றனர். எதிர்மறை மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இரண்டு அடிப்படை உணர்வுகளால் கட்டுண்டிருக்கிறார்கள். ஒன்று எதிர்காலம் பற்றி அச்சம். இன்னொன்று அன்றாடத்தின் சலிப்பு.
இன்று எவ்வளவு வசதியாக இருந்தாலும் ஒரு சராசரி மனிதன் எதிர்காலம் என்னாகுமோ என்னும் ஐயமும் அச்சமும் உள்ளூரக் குடைந்துகொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கிறான். வீடு திரும்பும்போது தன் வீட்டுமுன் ஒரு சிறு கூட்டம் தென்பட்டால் திக் என உள்ளம் பதறுபவனே சாமானிய மனிதன்.
வேலை, தொழில், குடும்பச்சூழல், சமூகச்சூழல் அனைத்துமே இங்கே மாறாத ஒரு சுழல் வட்டம். தனிப்பட்ட சாதனைகளுக்கும் நிறைவுக்கும் இடமே இல்லை. நிறைவூட்டும் கேளிக்கைகள் கூட அவனுக்கில்லை. காரணம், இசை, நாடகம், இலக்கியம் என உயர்ந்த கேளிக்கைகள் எல்லாமே அடிப்படையான கலாச்சாரப் பயிற்சி தேவைப்படுபவை. சற்றேனும் பொறுமை தேவைப்படுபவை.
எதிர்மறை மனநிலை என்பது அச்சத்தின் விளைவாக இயல்பாக உருவாகிறது. அச்சத்தைப் பெருக்கிப் பரப்பிக்கொள்ள மனிதர்கள் விரும்புகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் எத்தனை விதமான அச்சங்கள்! எல்லாமே கற்பனையானவை. அந்த அச்சங்களை மக்கள் மிகையான ஊக்கத்துடன் திட்டமிட்டு பெருக்கிக் கொண்டார்கள் என்பதை கண்டோம்.
எதிர்மறைத்தன்மை ஒரு மறைமுகமான கேளிக்கையாக மாறி வாழ்க்கையை நிறைத்து சலிப்பை இல்லாமலாக்கிவிடுகிறது. செய்திகள் கேளிக்கையாக ஆவது இப்படித்தான். கொரோனா காலகட்டத்தில் பலர் எதிர்மறை மனநிலையைக் கொண்டுதான் பொழுதுபோக்கினர். அதற்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. எந்தக் கவனமும் தேவையில்லை.
சமூகவலைத்தளங்களின் அரசியல் மட்டுமல்ல சினிமா, தொலைக்காட்சி என பொதுக்கேளிக்கையேகூட எதிர்மறை மனநிலையின் வழியாகவே இயங்குகின்றன. சமூக வலைத்தளச் சூழலில் உண்மையான அரசியலீடுபாடு கொண்டவர் அனேகமாக எவருமில்லை. சிலர் சுயலாப அரசியலில் இருப்பார்கள். அவர்களின் ஈடுபாடு மட்டுமே உண்மையானது. எஞ்சியோருக்கு அது எதிர்மறை மனநிலையில் திளைப்பதற்கான ஒரு சாக்குதான். ஏதாவது ஓர் அரசியல் நிலைபாட்டை எடுத்துவிட்டால் காலை எழுந்தது முதல் மாலைவரை எவரையாவது வசைபாடிக்கொண்டே இருக்கலாம். வம்புகளை பேசலாம். அவதூறு பரப்பலாம். அச்சங்களையும் ஐயங்களையும் பெருக்கி விரிக்கலாம்.
இங்கே சினிமாவேகூட அந்த மனநிலையில்தான் அணுகப்படுகிறது. சினிமா ஒரு கேளிக்கை. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை கேளிக்கையாகக்கூட ரசிக்க முடியவில்லை. அதில் சிலரை வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பால் வேறு சிலரை விரும்புகிறார்கள். ஒரு சினிமாவுக்கான அறிவிப்பு வந்ததுமே அதை வசைபாட ஆரம்பிக்கிறார்கள். அது தோற்கவேண்டுமென வஞ்சினம் உரைக்கிறார்கள். அவர்கள் வாழும் மனநிலை எத்தனை இருள் நிறைந்தது.
இந்த எதிர்மனநிலை வழியாக இங்குள்ள மற்ற அனைவருமே அயோக்கியர்கள், மூடர்கள் என நிறுவுகிறார்கள். அதன் வழியாக தங்கள் தோல்விகளுக்கு சால்ஜாப்பு கண்டடைகிறார்கள். தங்கள் அயோக்கியத்தனங்களை தங்களுக்கே சற்று நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஈ. தனிமைக்கூச்சம். சாமானியன் தனித்துநிற்க விரும்புவதில்லை. திரள் ஆக விரும்புகிறான். ஒட்டுமொத்தமாக ஒரு திரளின் பகுதியாக நிலைகொள்கையில் நிம்மதியாக உணர்கிறான். ஆனால் அவனுக்கு கொஞ்சம் தனியடையாளமும் தேவையாகிறது. ஆகவே அதற்குள் சிறு உட்குழுக்களை உருவாக்கிக் கொள்கிறான். மேலும் மேலும் குழுக்களாகிக்கொண்டே இருக்கிறான். ஆகவே குழுக்களை வளர்ப்பதையே சமூகவலைத்தளங்கள் செய்கின்றன. அதற்கு ஒவ்வொருவருக்கும் அவரைப்போன்ற சிலரை அடையாளம் காட்டி அவர்கள் ஒன்றாக வழியமைக்கின்றன
நம்மை இன்று இப்படி தட்டையாக்கிக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் ‘சராசரி இயந்திரத்தை’ எதிர்கொள்வது எப்படி என்பதே இந்நூற்றாண்டின் பிரச்சினை. அதற்கு ஒவ்வொருவரும் தனக்கான வழியைக் கண்டடையவேண்டும். அதன் வழியாக வெல்லவேண்டும். அதுவே இன்று தேவையாக உள்ள நோன்பு.
உங்கள் பணிகள் எவையாக இருந்தாலும் அவற்றை நீண்டகால அளவில் வகுத்துக்கொள்வதும், குறைந்தது பத்தாண்டுகளுக்காவது தொடர்ச்சியாகச் செயல்படுவதும், அந்தப் பணியின் சவால்களை கூர்ந்து கவனித்து தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டே இருப்பதும்தான் முக்கியமான தேவைகள். எச்செயலும் அதற்கான வழியை கண்டடையவேண்டும் – நீர் தன் வழியை கண்டடைவதுபோல. எந்த அணையும் ஓர் ஆற்றை முற்றிலுமாக நிறுத்திவிடமுடியாது. வாழ்த்துக்கள்.
*
கல்பற்றா நாராயணனின் ஒரு கவிதை இது
நீங்கள் செல்வது சைபர் நெடுஞ்சாலை
ஜெ
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் கடித்தத்தை படித்து பதில் எழுதியதில் மகிழ்ச்சி. கவிதை மிகவும் அருமை, மேலும் என் நிலைக்கு ஒத்த கவிதையாகவும் இருந்தது. உங்கள் கடிதத்தை படிக்கும் முன்பு ”இன்ஸடாகிராமில் எப்படி புகழடைவது” என்ற கட்டுரையை படித்துக்கொண்டிருந்தேன். சிறு கேலிகளையும், துணுக்குகளையும் பகிருங்கள் என ஆலோசனை சொல்லி இருந்தார்கள். மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே செல்கிறர்கள்.
நானும் சமூகவலைதளக் கூச்சல்களில் இருந்து விலகியே இருக்கிறேன்– Digital Diet. மிக எளிதாக நேரத்தை தின்று விடுகிறது ஆனால் நான் எங்கே செயல்பட வேண்டும் என்பதில் எனக்கு மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. நீங்கள் சிறுபத்திரிக்கை எனும் ஊடகத்தில் செயல்பட்டீர்கள், ஆனால் எனக்கு அப்படியான ஊடகம் அமையவில்லை அல்லது இருக்கும் ஊடகத்தில் அறிவு சார்ந்த மக்களை இழுக்கும் ஊடகம் எது என்பது குழப்பமாகவும் கேள்விக்குள்ளானதாகவும் இருக்கிறது. வலைப்பூவை படிப்பார்களா என தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை மட்டும் இருக்கிறது. குழப்பங்களுக்கு பதில் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.
உரையாடல் என்று ஒன்று சத்தியம் தான் என புரிய வைப்பதே இங்கு குதிரைக்கொம்பாக உள்ளது.
நீங்கள் சொல்லியிருக்கும் பலவற்றுடன் உடன்படுகிறேன். மெல்ல மெல்ல அடிகளை நகர்த்தி இந்த சைபர் நெடுங்சாலையை கடக்க முனைகிறேன்.
நன்றி,
வினோத் ஆறுமுகம் – Cyber Buddha
Vinod Kumar Arumugam
Digital Life Coach,
Pradanya e-Life
@thiruvinod4u
https://cybersangam01.blogspot.com/
அன்புள்ள வினோத்
உரையாடல் என நீங்கள் முடிவுசெய்தால் அதற்கு யூடியூப் மற்றும் மேடையுரைகளே வழி. பிளாக் அடுத்தபடியாக.
ஒரு முழுநூலை வாசிப்பது, ஒரு முழுமையான சிந்தனையை தெரிந்துகொள்வது ஏன் முக்கியம், எப்படி அதைச் செய்வது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.
யுடியூப் உரைகள் நல்ல ஊடகமே. அதில் உரையாடலுக்கு முயலக்கூடாது. உரையாடல் நேரடியாக மட்டுமே நிகழவேண்டும்
ஜெ
சரஸ்வதி பாசு
சரஸ்வதி பாசு தொடக்க கால பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர். இன்று முழுமையாகவே மறைந்துவிட்டிருக்கிறார்.
சரஸ்வதி பாசு
சரஸ்வதி பாசு – தமிழ் விக்கி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers



