Jeyamohan's Blog, page 610

March 19, 2023

முகில்கள்… கடிதம்

அந்தமுகில் இந்த முகில் மின்னூல் வாங்க

அந்த முகில் இந்த முகில் வாங்க

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நாவலை வாசித்தேன். அதைப்பற்றி பலரும் சொன்னபிறகுதான் வாசிக்க முடிந்தது. குறிப்பாக ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னபின்னர்தான் சினிமாவிலுள்ள நாங்களெல்லாம் வாசிக்க நினைத்தோம். அதை இணையதளத்திலேயே பார்த்திருந்தாலும் வாசிக்கவேண்டுமென்ற எண்ணம் அப்போது வரவில்லை.

அந்நாவலை வாசித்தபின் யூடியூபுக்குப் போய் ஆ மப்பு ஈ மப்பு பாட்டை கேட்டேன். பழைய பாட்டு. ஏதோ நூற்றாண்டுக்கு பின்னாலிருந்து கேட்பதுபோல ஒலித்தது.ஆனால் ஒரு கனவுபோல என்னை தொடர்ந்துகொண்டே இருந்தது. அந்தக்குரலுக்கே ஒரு பெரிய நாஸ்டால்ஜியா இருந்தது.

சினிமாவை பின்புலமாகக்கொண்ட நாவல். ஆனால் சினிமாவின் உத்திகளை எல்லாம் எப்படி சரியாக இலக்கியப்படிமமாக ஆக்கலாம் என்பதற்கு ஒரு பாடம்போலவே இருந்தது. ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்கு சரிகை உடை உறுத்தி புண்ணாகும். அது இப்போதும் உண்டு. அந்த புண்ணுடன் வெயிலில் நிற்கவேண்டும். ஆனால் காட்சியில் தகதகவென இருக்கும். அதைப்போல எவ்வளவு உவமைகள் நிறைந்துள்ளன.

இறுதிக்காட்சியில் அந்த திரைப்பட உரையாடல் மனதை பித்துப்பிடிக்கவைத்தது. என்னடா வாழ்க்கை என்றுதான் ஆரம்பத்திலே தோன்றியது. பிற்பாடு இதுதானே அற்புதமான வாழ்க்கை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

நாகராஜ் மாணிக்கம்

இரு முகில்களின் கதை -கடிதம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2023 11:31

மழையின் பாடல் – இந்துமதி

மழைப்பாடல் மின்னூல் வாங்க

மழைப்பாடல் வாங்க 

அன்புள்ள ஜெ ,

கிடைத்தற்கரிய ஒரு பேரனுபவம் மழைப்பாடல் வாசிப்பு.வாசிப்பனுபவத்தை மொத்தமாக தொகுத்துக் கொள்ள முனைகையில் எண்ணற்ற  நிலங்களும்,மனிதர்களும், குணங்களும்,சம்பவங்களும் காட்சிகளாக அகத்தில் விரிந்துகிடக்கின்றன. பலமும் பலவீனமும் ஒருங்கே கொண்ட  இந்த மானுடப்பிறப்பின் மேன்மைகளை கீழ்மைகளை ஆடியில் ஒருசேர பார்த்தது  போன்றதொரு உணர்வு மழைப்பாடல்.முதற்கனலைப் போலவே மழைப்பாடலிலும்   பீஷ்மரின் தன்னறமான குணமே முதன்மையாய் மனதில்  பதிந்தது. மனதிற்கு மிகவும்  நெருக்கமாக  உணர்ந்த ஒரு காட்சி உண்டு. திருதராஷ்டினன் தன் சிறுமையால் பீஷ்மரை  துவந்த யுத்தத்திற்கு  அழைத்து தோற்று,பின்பு  பீஷ்மரை சந்திக்க வந்தபோது  பீஷ்மர் திருதராஷ்ட்டினை அன்புடன்  ஆரத்தழுவி  தனுர்வேதத்தை கற்றுக்கொடுக்கும் முன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மந்திரம் போலானது.

‘இந்த குருகுலத்தில் நியதிகளில் ஒன்று.ஒருமுறைக்கு மேல் எதுவுமே சொல்லப்படாதது என்பதுதான்.அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது.அனைத்தும் செயலாக நிகழ வேண்டும்.’ என்ற பீஷ்மரின்  சொற்களை உணர்ந்த போது இப்பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட  நியதியே இதுவாகத்தான் இருக்குமோ ? ஒரவளவுக்கு பிற உயிர்கள் அதனை பின்பற்றவே செய்கின்றன. இந்த மனிதப் பிறவியொன்று தான் அதை  மறந்து  சௌகர்யங்களை தனக்கேற்றார் போல் மாற்றியமைத்துக் கொண்டு  தன்போக்கில் வாழ நியதிகளை சமைத்துக் கொண்டனவோ என்று தோன்றியது.

முற்றிலுமாகக் கீழ்மைகளை மட்டுமே, பலவீனங்களை  மட்டுமே கொண்ட ஒரு மானுடப் பிறப்பென்று இப்புவியில் எவருமே இருக்க முடியாது என்று மழைப்பாடலை வாசித்த போது நினைத்துக் கொண்டேன்.விழியற்றவனாக  திருதராஷ்டினன் இருக்கிறான்.அதன் விளைவான  ஒரு ஆற்றாமையும்,பாதுகாப்பின்மையும் கொண்டவனாக அவனை ஆக்குகிறது. ஆனால், திருதராஷ்டினனைப் போல் இசையை அனுபவித்து ரசித்து உணர்ந்தவர் வேறு எவர் இருக்க முடியும்? கேட்கிற இசையை விட உணர்கிற இசை கூடுதல் இசைமையுடையது. திருதராஷ்டினன் வெறும் இசை கேட்பவனல்ல.இசை உணர்பவன். பீஷ்மர் திருதராஷ்டானனிடம் இப்படி சொல்வார்.’காற்றை உணர்ந்தால் நீ அனைத்து பொருட்களையும் உணர முடியும்.கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறிய முடியும்’ என்று.புறஉலகச் சிதறலின்றி,புலன் தாண்டி மெய்வழியாய் பூரணத்துடன் உணர்ந்து வாழ்வதென்பது ஒருவகையில் எத்தனை முழுமையான வாழ்வாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.அந்தத் தொடுகையொன்றே அம்பிகையிடம்,விதுரனிடம்,காந்தாரியிடம் அவரவரின் திருதிராஷ்டிரனை அவர்களிடம் கொண்டு சேர்த்தது.தன் உடற்குறையால் உருவாகிய ஒருவிதமான  பாதுகாப்பின்மையை அரியணையில் அமர்வதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள அத்தனை தீர்க்கமாய் நீண்டகாலம் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த  திருதராஷ்டினன் விழியில்லாததால் தான் அரியணையில் அமர முடியாது என்ற சூழ்நிலை வந்த கணத்தில்  விதுரன் பாண்டுவை திருதராஷ்டினனிடம் ஆசி பெற்றுக்கொள்ள அழைத்தபோது ஒருநொடி கூட  யோசிக்காமல் சிறிதுகாலம் நீயே அரியணை ஆழ்வாய் என்று தன் தம்பி பாண்டுவிற்கு ஆசியளித்து மனசார விட்டுக்கொடுக்கிறான்.

பாண்டுவிற்கும் ஒரு உடற்குறை இருந்தது .உடல் வெம்மை கொண்டு ஒருவிதமான நரம்புத் தளர்ச்சி நோயால் வாழ்வு முழுதும் அவதிப்படுகிறான்.பாவைகளை வைத்து விளையாடும்  சிறுபிள்ளையின் சித்தரத்திலேயே பாண்டு அனைவராலும் பார்க்கப்படுகிறான்.ஆனால் அதே  குணம் தான் குந்தியின் சுயம்வர நிகழ்ச்சியில் பாண்டுவிற்கு பலமாகவே அமைந்தது.கம்சன் போன்றோர் உடல் வலிமை கொண்ட போட்டிகளில் பங்கெடுத்து வெற்றிகொள்ள , பாண்டு புலியையும் பூனையையும் கூண்டில் அடைக்கும்  அறிவுக்கூர்மை சார்ந்த சவாலான  போட்டியில் தான் பாவைகளுடன் விளையாடும் அதே யுக்தியை பயன்படுத்தியே குந்தியை சுயம்வரத்தில் வென்று மணம் முடிக்கிறான்.

சகுனியைப் பற்றி சத்யவதி சியாமையுடன் ஆலோசிக்கும் போது சொன்ன சொற்களை வாசித்தபோது எத்தனை உண்மை என்று தோன்றியது  .”ஒருவனைப் பற்றி எந்த இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன் அவனை நேரில் பார்த்தாக வேண்டும்.அவனிடம் சில முறையாவது பேசியாக வேண்டும்.எத்தனை நுணுகியறிந்திருந்தாலும் நேரில் பார்க்கையில் நம் அனைத்துக் கணிப்புகளும் பிழைபட்டு விடுகின்றன.பிறர்  சொல்லும்போது நம் சிந்தைதான் அவற்றைக் கேட்கிறது.நம் தர்க்கம் தான் அவற்றை புரிந்து கொள்கிறது.அம்மனிதன் நம்மருகே நிற்கையில் நம்முடைய ஆன்மா அவனை உணர்கிறது.உள்ளுணர்வின் மூன்றாம் விழியால் அவனை நாம் பார்க்க முடிகிறது.” ஆம்! இப்படித்தானே இருக்க முடியும் ? சகுனியை சினந்து வெறுக்கும்  இடமென்று மழைப்பாடலில் ஏதுமில்லை. காந்தார பாலை நிலத்தில்  நடுநிசியில் ஓர் ஓநாயின் பசியையும் அதன் போக்கையும் ஆராய்ந்து அதனை பின்தொடர்ந்த சகுனியின் கூர்ந்த அவதானிப்புகள் வியக்கச் செய்தது.அந்த மதியூகம் தானே  சகுனியின் ஆளுமை.திருதராஷ்டிரன் முடிசூடி தன் தமக்கையான காந்தாரி அரியணையில் அமர்வதைக் காண்பதற்காகவே காந்தாரத்தை விட்டு வந்த சகுனி ஒரு நிலையில்  திருதராஷ்டிரன் மூடிசூடப் போவதில்லை என்பதை அறிந்ததும் எழுந்த ஆற்றாமையை முற்றிலுமாக அடக்கிக்கொண்டு  பீஷ்மரின் அன்பிற்கும் வார்த்தைக்கும்  கட்டுப்பட்டு ஒரு கைக்குழந்தைபோல் அவரிடம் சரண்புகுந்த  அந்த சகுனியை நினைக்கையில் வியப்பே எழுந்தது.சகுனியையும் தன் தூய அன்பில் கட்டிப்போட்ட பீஷ்மரின் உயரத்தை நினைத்துக் கொண்டேன்.


காந்தாரியை அறிந்து, அவளது மாறும் நிலைப்பாட்டை  உணர்கையில்  எனக்கு கி ராவின் கன்னிமை சிறுகதை நினைவிற்கு  வந்தது.’நம்மை பிறர் சினம் கொள்ள செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?’ என்று  இத்தனை பக்குவமானவளாக   இருக்கும்  காந்தாரி  மணம்முடிந்த  பின் அரியணை ஆசை, தன் மைந்தனுக்கான ஆட்சி என்று போட்டி பொறாமைகளில் கலங்கடிக்கப்படுகிறாள்.அந்த கன்னிமை பருவத்தில் இருக்கும் ஒரு தூய குணம் பின்பு மறைந்துதான் போகின்றதோ என்று காந்தாரியை உணர்கையில் எண்ணத் தோன்றியது.”கொள்கைகைகளை விட, கனவுகளை விட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று இவர்கள் நினைக்கிறார்கள்” என்று பீஷ்மர் சொன்ன வார்த்தைகள் சத்யவதியிலிருந்து அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி உட்பட யாவருக்கும் பொருந்தும் தானே.அந்த பிள்ளை பாசமென்ற பெரும் திரை ஒன்று மட்டுமே அத்தனை ஆண்டுகளாய் அம்பிகையையும் அம்பாலிகையையும் விலக்கி வைத்திருந்தது.பாண்டுவின்  இறப்பைக் கேட்ட அந்த நொடி அத்திரை அறுபட்டு பழைய அம்பிகையையும் அம்பாலிகையையும் அவர்களுக்கு திருப்பிக் கொடுத்தது.இந்த மனித மனம் தான் எத்தனை விசித்திரமானது.அன்பு, வெறுப்பு எதிலும் நிலைப்பட ஒன்றில் அதனால் இருக்கமுடிவதில்லை. அம்பிகை,அம்பாலிகை இருவரும் வனம்புக எத்தனிக்கையில் அவர்களோடு சத்யவதியும் வனம் செல்ல எடுத்த முடிவு மனதை கலக்கவைத்தது.கண்கலங்காமல்  அந்த கடைசி அத்தியாயத்தை வாசிக்க முடியவில்லை.அதுவரை   அவள் எத்தனை பொறுப்புகளை,பாரங்களை சுமந்திருப்பாள்.அவள் எடுத்து வைத்து ஒவ்வொரு சிறு அடியிலும் தான் எத்தனை போராட்டங்கள்.அதுநாள் வரை ஆன்மபலத்தோடு எதிர்கொண்டிருந்தவள் சட்டென்று அத்தனையிலிருந்தும் அறுபட்டு ஒரு பெரும் விடுதலையுணர்வைக் கோரும் முடிவை ஒரு நொடியில் எடுக்க முடிந்துவிடுகிறது.அதற்கு முன் தன் மகன்கள்  சித்ராங்கனின், விசித்திரவீரியனின் மரணத்தை  அருகில் இருந்து பார்த்து, கடந்து வந்தவளுக்கு பாண்டுவின் மரணச்செய்தி  அவளை  அப்படியொரு முடிவை எடுக்க செய்ய முடிந்திருக்குமா என்று தோன்றவில்லை. அவள் அத்தனை நாள் இறைஞ்சிக் காத்திருந்த  துறவிற்கு ஒரு துயர் வழிகாட்டியிருக்கக்கூடும். மானுடத்துயர் அதன் உச்ச குரூரத்துடன் வந்து நிற்கையில் ,அது அந்த அகவிடுதலையைக் கோரும் துணிவை கொடுக்கும் போலும்.

மழைப்பாடலின் பாதி அத்தியாயத்திற்கு மேல் குந்தியே என்னை முற்றிலுமாக ஆட்கொண்டாள்.பாண்டு இறந்த சமயம் அவள் எண்ணஓட்டத்தில் எழுந்த சிந்தனை, ” அவள் கால்கள் சற்று பதறுமென்றால் ,உள்ளம் சற்று சோர்வுறுமென்றால், அவள் மைந்தர்கள் மண்ணும் மதிப்பும் இல்லாத சேவகர்களின் வாழ்க்கைக்கு சென்றுசேருவார்கள்”. இளவயதில் கணவனை இழந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் அத்தனை பெண்களிலும் இதே வைராக்கியமும் தீர்க்கமும் தானே இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேரும் குந்தியானவர்கள் தானே.

எண்ணற்ற  சிந்தனைத்தளங்களும் ,வாசிப்பின்போது  தானே மனதில் பிடித்து தங்கிவிடும் உவமைகளும்  மழைப்பாடலின் வழிநெடுக  நிறைந்திருந்தன.’அவன் சொற்களெல்லாம் முளைக்கும் ஒரு வயல் நீ ‘ என்று சத்யவதி விதுரனிடன் சொன்ன உவமையை முகமலர்ந்து ரசித்தேன்.சார்வாகன் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் உறைந்திருந்திருந்த உண்மையை அறிய முயன்றேன்  .”உண்மை என்பது என்ன? எப்போதும் அது இருந்து கொண்டிருப்பது.அது பொய்யால் மறைக்கப்பட்டிருக்கிறது.அந்தப் பொய்யை உருவாக்குவது எது?எது இந்த நகரை, இந்த அரசை, இந்த வாழ்க்கையை இந்த தெய்வங்களை உருவாக்கியதோ அது அதான். மானுடன் தன்னந்தனியானவன்.ஒவ்வொரு நாளும் பேரியற்கை முன் தன்னந்தனியாக நிற்க கடமைப்பட்டவன்.அந்தத் தனிமையை அவன் அஞ்சத் தொடங்கிய போது தான் இவையனைத்தும் உருவாயின” இப்படி சார்வாகனின் வரிகள் வழியாய், பிரபஞ்சத்திற்கும் இந்த இருப்பிற்குமான தொடர்பை, தேடல்களையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கும் தருணங்கள் வெண்முரசின் வாசிப்பின்போது நிகழ்வதை உணர்கிறேன்.

கீழ்மைகளும் குறைகளும் மட்டுமே முழுமையாய் நிறைந்தவொன்றென்று இப்புடவியில் எவ்வுயிரும் இல்லையென்பதைப் போலவே ,ஒவ்வொரு பிறப்பிற்குமே அதன் இருப்பிற்கான ஒரு அர்த்தமும், இப்பிரபஞ்சவியக்கம் என்னும் தொடர்ச்சங்கிலியில் அதுவும் ஒரு கண்ணியாக என்றுமே இணைந்திருக்கும் என்ற சிந்தனையே மழைப்பாடலை வாசித்து முடித்த கணம் மனதில் நின்றது. சிவை நினைவிற்கு வருகிறாள்.அவள் நிகழ்த்தவேண்டியவற்றை  நிகழ்த்தியபின்னர் தானே அவளும் விடைபெற்றாள்.அவள் வாழ்வும் அர்த்தப்பட்டதுதானே  . “பிறப்பும் இறப்பும் கூடியும் பின்னும் வலையால் ஆனது இப்புடவி என்பதால் ஒவ்வொரு பிறப்பும் இங்கு நிகழ்த்தும் அனைத்துடனும் இணைந்துள்ளது” என்ற மழைப்பாடலின் வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.வண்ணக்கடலை தொடங்விருக்கிறேன்.

பணிவன்புடன்,
இந்துமதி.

[image error] [image error]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2023 11:30

March 18, 2023

கூர்வாசிப்பு

வணக்கம் ஜெயமோகன் சார்,

ஒரு குழப்பத்திலிருந்து என் கேள்வி உருவாகிறது. கடந்த 4-5 மாதங்களாக நிறைய வாசிக்க தொடங்கியிருக்கிறேன். பெரும்பாலும் நாவல்கள் மற்றும் சிறுகதைகள். தொடர்ந்து வாசிக்க தொடங்கிய பின், சில கதைகளை / நாவல்களை மேலதிகமாக புரிந்து கொள்ள அதுசார்ந்த பின்புலத்தை வாசிக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, நொய்யல் நாவல் வாசிக்கும்போது குன்னடையான் கதை குறித்து குறிப்பாக வருகிறது. இப்போது குன்னடையான் கதை என்ன என்பது குறித்து படிக்க தோன்றுகிறது. இதுபோல வெவ்வேறு தருணங்களில், கதையை வாசிப்பதை நிறுத்திவிட்டு அந்த கிளைக்கதைக்குள் புகுந்து கொள்கிறேன். இதனால் மனம் அலைபாய்தலிலேயே இருப்பதாக உணர்கிறேன். அதேபோல் வாசிக்க இன்னும் நிறைய நிறைய இருக்கிறது அல்லது எதாவது nuance ஐ தவற விட்டுவிடுவோம் எனும் insecurity உம் கூட சேர்ந்துகொள்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது அல்லது இதனை எப்படி organized ஆக அணுகுவது?

அன்புடன்,

திலீபன். ப

***

அன்புள்ள திலீபன்,

கூர்ந்து வாசிப்பதென்பது ஒரு  வகை பயிற்சி. எளிமையான பயிற்சி அல்ல, கொஞ்சம் முயற்சி எடுக்கவேண்டும்.

முதன்மையாக பிற திசைதிரும்பல்களை அனுமதிக்கலாகாது.நடுவே மின்னஞ்சல் பார்ப்பது, குறுஞ்செய்தி பார்ப்பது , டிவி ஓடிக்கொண்டிருப்பது ஆகியவை கவனத்தை கலைப்பவை. இசை ஓடிக்கொண்டிருப்பதுகூட கவனத்தை கலைப்பதே. இசையில் ஒவ்வொரு மெட்டுக்கும் ஒரு மனநிலை உண்டு. நாம் அந்த மனநிலை நோக்கி நம்மையறியாமலேயே ஈர்க்கப்படுவோம். அது வாசிப்பை குலைப்பது.

வாசிக்கும் நூல் புனைவா, அபுனைவா என்பது முக்கியமானது. அபுனைவு நூல் என்றால் வாசிக்க வாசிக்க குறிப்புகள் எடுத்துக்கொள்வது உதவியானது. ஆனால் வாசித்தபடியே குறிப்பெடுக்கலாகாது. ஓர் அத்தியாயம், அல்லது ஒரு கருத்துவிரிப்பு முடிந்ததும் அதை சொந்தச்சொற்களில் குறித்துக்கொள்ளுங்கள். உடைந்த சொற்களாக அல்ல, முழுமையான சொற்றொடர்களாக.

விரிவான அத்தியாயம் என்றால் அதற்கு வரைபடம் உருவாக்கிக் கொள்ளுங்கள். முதற்கருத்து – துணைக்கருத்துக்கள் – அதை நிறுவும் தர்க்கங்கள் என ஒரு அட்டவணைபோல. அந்த அட்டவணை அல்லது வரைபடம் நினைவில் நிற்கும். வாசித்து முடித்தபின் அந்நூல் பற்றி முழுமையாக ஒரு வரைபடத்தை அமைத்துக்கொண்டால் அந்நூல் உங்கள் சிந்தனையில் என்றுமிருக்கும்.

புனைவு வாசிப்பு அவ்வாறல்ல. அது ஒன்றிச் செய்யவேண்டியது. குறிப்புகள் எடுக்க வெளியே வந்தால் அந்த புனைவு உருவாக்கும் வாழ்விலிருந்து வெளியே வருகிறோம். புனைவு வாசிப்பின் முதன்மை நெறியே முழுமையாக அதில் ஈடுபட்டிருப்பதுதான். அந்த புனைவுலகில் உண்மையான வாழ்வுக்கு நிகரான ஒரு வாழ்க்கையை வாழ்வதுதான்.

அதற்கு தேவையான சில நிபந்தனைகளுண்டு. என் பழக்கத்தால் அறிந்தவை. நீங்கள் செய்துபார்க்கலாம்.

அ. ஒரு முறைக்கு குறைந்தது 50 பக்கங்களாவது வாசிக்கவேண்டும். ஒரு மணிநேரமாவது வாசிக்கவேண்டும். அதற்கும் குறைவாக வாசித்தால் நாம் புனைவுக்குள் செல்லமுடியாது. ஒரு புனைவை நாம் வாசிக்கையில் மொழியை அர்த்தமாக்கிக்கொள்ளும் செயல் தொடங்குகிறது. அது நம்மை இரண்டாக பிளந்துவிடுகிறது. நாம் வாசிக்கிறோம், வாசிக்கிறோம் என்னும் தன்னுணர்வும் இருக்கும். அப்போது வாசிப்பு மிக மெல்லவே நகரும். வாசிப்பு ‘சூடுபிடிப்பது’ அந்த உலகுக்குள் நாம் நுழையும்போது. நம் இரட்டைநிலை மறையவேண்டும். அதற்கு ஓரளவு பக்கங்கள் முன்னகரவேண்டும். அதன்பின் நமக்கே நாம் வாசிக்கிறோம் என தெரியாது. மொழி அர்த்தமாகி , அர்த்தம் காட்சிகளும் ஒலிகளும் வாழ்வுமாகி ஒரே சமயம் நடந்துகொண்டிருக்கும். அதற்குமேல் வாசிப்பதே வாசிப்பில் சேரும். அதற்கு கொஞ்சம் நேரமும் பக்கங்களும் தேவை. ஆகவே ஒரு படைப்பு எந்த வகையானது என்றாலும், நம்மை கொஞ்சம்கூட கவரவில்லை என்றாலும் ஐம்பதுபக்கம் வாசித்தேயாகவேண்டும்.

ஆ.ஒருபோதும் நடுநடுவே வெளிவந்து தகவல்களை தேடலாகாது. ஆங்கிலத்தில் தொடக்ககாலத்தில் அகராதியை தேடலாம் – அது வாசிப்பல்ல, மொழிகற்றல் மட்டுமே. வெளியே வந்து உள்ளே சென்றுகொண்டிருந்தால் வாசிக்கும் அனுபவமே நிகழாது. ஒரு குறிப்பிட்ட அளவு வாசித்தபின்னர், அதன் துணைக்கதைகளை பற்றிய குறிப்புகளை வேண்டுமென்றால் தனி தாளில் எழுதிக்கொள்ளலாம். முக்கியமான பெயர்கள், சொற்களை எழுதிக்கொள்ளலாம். பின்னர் அந்த குறிப்பேட்டை வைத்து மேலதிகமாக தகவல்களை திரட்டலாம். அந்த கூடுதல் வாசிப்பு புனைவுகளை இன்னும் கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவும்

இ. புனைவுகள் நம் அனுபவங்களால் வாசிக்கவேண்டியவை. முதன்மையான நம் தரவுத்தொகை நம் அனுபவங்களே. ஆகவே தகவல்களை தெரிந்துகொண்டேயாக வேண்டுமென்பதில்லை. நல்ல படைப்பு தரவுகளை தரும்போதே வாசிப்பின் போக்கில் அவற்றை நாம் புரிந்துகொள்ளவும் வைத்துவிடும்.

ஈ . நம் வாழ்க்கையை முன்வைத்தே வாசிக்கிறோம், ஆனால் உடனடியாக, நேரடியாக புனைவுடன் நம் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளலாகாது. அந்த இணைப்பு ஒரு வாசிப்புப் பிழை. தன்னிச்சையாக அந்த இணைப்பு நிகழும். அதை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் அதை நாமே வளர்த்துக்கொள்ளலாகாது.

வாசியுங்கள், வாசிப்பே வாசிப்பதற்கான பயிற்சி.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2023 11:35

ஆர்.பொன்னம்மாள்

[image error]

ஆர்.பொன்னம்மாள் குழந்தைகளுக்கான ஆன்மிகக் கதைகளை எழுதுபவர். எண்ணிக்கையில் மிகுதியான படைப்புகளை எழுதியவர்களில் ஒருவர். என் நண்பர் பாஸ்டன் பாலாஜியின் அம்மா

ஆர்.பொன்னம்மாள் ஆர்.பொன்னம்மாள் ஆர்.பொன்னம்மாள் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2023 11:34

தேவிபாரதி ஆவணப்படம் – கடிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம்‌. தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் ஆவணப் படத்தை பார்த்தேன்;  குழுவினரின் தரமான ஆக்கம்.

பள்ளிப் பருவத்திலேயே இப்படி ஒரு வீழ்ச்சியைக் கண்ட வாழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. வாழ்வு மீதான நம்பிக்கையும் எதிர்கொள்வதற்கான வீராப்பும் அப்படி ஒரு அநீதி நிகழ்ந்த பின்னும் மொத்தக் குடும்பத்தினருக்கே இருந்தது வணக்கத்திற்குரியது.

ஆனால் தேவிபாரதியின் தந்தை ‘அறிவற்றங் காக்கும் கருவி’ எனச் சொல்லித் தரும் சராசரி ஆசிரியர் அல்ல; அப்படி ஒன்றைத் தன் மகனுக்கு அடுத்திருந்து உருவாக்கித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் தடுமாறும் போதெல்லாம் புத்தகங்களே அவரை காத்திருக்கின்றன. அவரின் அனுபவங்கள் வாசிப்பின் மீதும், மன்னிப்பின் மீதும், வாழ்வின் மீதும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அவரது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பதிவின் கீழ் பின்னூட்டமிட்டிருப்பதைக் கண்டேன். எழுத்தும் வாசிப்பும் குடும்பத்தால் அங்கீகரிக்கப்படுவதையும், அடுத்த தலைமுறைக்கு கைமாறுவதையும் காண்கையில் அவர் தந்தை ஆக்கித் தந்த அழியாச் செல்வம் என் கண்முன்னே விரிகிறது.

அவருக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

நன்றி.

விஜயகுமார் சாமியப்பன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2023 11:31

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன் புதிய பதிப்பு  வாங்க 

அன்பின் ஜெ,

சிலவருடங்களாகவே பனிமனிதன் நாவலை வாங்கி பசங்களுக்குக் கதை சொல்ல வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நற்றிணையின் சிறப்புச் சலுகையில் தான் உங்களின் 15 புத்தகங்களில் ஒன்றாக அதை வாங்கினேன். முதலில் குழந்தைகளை என்னுடன் இருத்தி வார்த்தை வார்த்தையாகப் படித்துக் கதை சொல்லிக் கொண்டிருந்த நான், பிறகு அவர்களை விட்டு விட்டு இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். என் ஆமை வேக வாசிப்பு வரலாற்றில் இது ஒரு அசுர சாதனை. அந்த உற்சாகத்தில் உடனடியாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இமயமலையை ஒட்டிய நிலப்பகுதியில், சிறுவன் கிம், ராணுவ வீரர் பாண்டியன், டாக்டர் திவாகர் மூவரும் பனி மனிதனைத் தேடிப் பயணிக்கிறார்கள். பல்வேறு இடர்களுக்கு உள்ளாகி, மரண விளிம்பு வரை சென்று பனிமனிதனைக் கண்டு மீள்கிறார்கள். அவர்களின் சாகசப்பயணங்களும், அந்த பயணம் வழி அவர்கள் அடையும் மாற்றமுமே நாவலின் பொதுவான கதை. பனிமனிதனைத் தேடிச் செல்ல மூவரின் நோக்கமும் வேறு வேறு என்றாலும் புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிம் என்ற ஆன்மீக தேடல் கொண்ட சிறுவனுக்கு ஏற்படும் சோதனைகளும் அதை அவன் கடத்தலுமே கதையின் உள்ளுறைப் பயணம்.

பரிணாம வளர்ச்சியில் இரு வேறு திசைகளில் சென்ற இனங்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வது என்பதே மிக சுவாரஸ்யமான கற்பனை. அதில் நீங்கள் விவரிக்கும் நிலக் காட்சிகளும், பனி மனிதனின் காடு, விலங்குகள், அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய விவரணைகளும் வாசிக்கும் போது ஒரு கனவுத் தன்மையை உண்டாக்குகின்றன.

தினமணி சிறுவர்மணியில் தொடர்கதையாக வெளிவந்த நாவல், எழுதப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் வாசிப்பு சுவாரஸ்யம் குறையாமல் இருக்கிறது. துப்பறியும் தொடர்கதையின் இலக்கணப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது.  அதும் வலியத் திணித்தது போல் இல்லாமல் கதையோட்டத்துடனே வருகிறது. ஒரு ஆங்கில 3D சாகச சினிமாவைப் பார்ப்பது போல நாவலின் அனைத்து பக்கங்களும் செல்கின்றன. The Croods, Avatar போன்ற சினிமாக்களில் வரும் கையடக்க யானை, ஆறு கால் குதிரை, பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கலப்பின சோதனை விலங்கு வடிவங்கள், பிற உயிரினங்களுடன் உணர்வுகளால் இணைந்திருத்தல், அனைத்து உயிர்களுக்குமான ஒற்றை மனம், போன்றவை எல்லாம் 1998 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவலில் வருவது உங்களின் ஆராய்ச்சியையும் எழுத்திற்கான மெனக்கெடலையும் காட்டுகிறது.  நாவலில் வரும் Fantacy சம்பவங்களை உங்களின் மிகு கற்பனை என்று நினைத்து வாசித்து, அதே அத்தியாயத்தின் இறுதியில் அதற்கான  அறிவியல் விளக்கங்களும், ஆராய்ச்சிக் குறிப்புகளும் படித்து, இணையத்தில் தேடி, மீண்டும் முதலிலிருந்து வாசிக்கும் போது அந்த சம்பவங்கள் மேலும் பிரம்மாண்டமாக விரிகின்றன.

சிறுவர்களுக்கான சாகசக் கதையில், எந்த மிகு கற்பனையையும் எழுதலாம் என்றில்லாமல், ஒவ்வொரு சம்பவத்திற்குமான அறிவியல் சாத்தியங்களை நீங்கள் கொடுத்திருப்பது, ஆதர்ச சிறுவனுக்காக கதை சொல்வது போன்ற பல காரணங்களால், சுந்தர ராமசாமி காந்தியை வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று அவதானிப்பதைப் போல, நீங்களும் வெஸ்டர்ன் மைண்ட் செட் உள்ளவர் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. கொற்றவை வாசித்தபோது முதலில் தோன்றியது இது.

மீண்டும் வார்த்தை வார்த்தையாக குழந்தைகளுக்கு கதை சொல்ல புத்தகத்தை எடுத்திருக்கிறேன். நன்றி ஜெ.

ரதீஷ் வேணுகோபால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2023 11:31

புதுவாசகர் சந்திப்பு, கடிதம்

அன்புள்ள ஜெ

ஒரு ஒழுங்குடன் நல்ல முறையில் ஒரு பயிற்சி/ ஒரு வாசகர் சந்திப்பு – நடைமுறையில் கண்டது கனவா நனவா என கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். புதிய வாசகர் சந்திப்பு / பயிற்சி பெற்ற அனைவருக்கும் ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும். தங்களின் சிந்தனையில் தெளிவு (Clarity of Thought) இதுவரை நான் சந்தித்த யாரிடமும் காணமுடியாத ஒன்றாக வியக்கவைக்கிறது.

ஏறத்தாழ 18 மணிநேர பயிற்சி. ஒரு மணித்துளிகூட மையக் கருத்தைவிட்டு விலகவே இல்லை. பயிற்சி கூடத்திற்கு வெளியேயும் பயிற்சி பெறுபவர் தொடுக்கும் வினாக்களுக்கு தெளிவான விளக்கமான பதில்கள்.புதிய வாசகர்களின் படைப்பு குறித்து சரியான மதிப்பீட்டுடன் சரியான அறிவுறுத்தல்கள். புதிதாக எழுதவிரும்புவோருக்கு இது எங்கும் கிடைக்காத ஒரு ஆக்கபூர்வமான பயிற்சி. சரியாக உள்வாங்கிக்கொண்டு இலக்கிய வேட்கை கொண்டோர் தொடர்முயற்சி செய்தால் சரியாக மிளிரமுடியும்.

பயிற்சி நடைபெற்ற புலம் சரியான தேர்வு. உணவும் தங்குமிட வசதிகளும் அருமை. வழிகாட்ட சரியான நபர் இருக்கும் நிகழ்வுகளில் சரியாகத்தான் எல்லாம் நடக்கும். மேலும் தங்களின் தோழமை ‘ வியத்தலும் இலமே’ என ஒதுக்கிவிட முடியவில்லை. பொருள் பொதிந்த சந்திப்பு.

அன்புடன்

பார்த்திபன்.ம.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 18, 2023 11:30

March 17, 2023

சுனில் கிருஷ்ணன் இணையச் சந்திப்பு இன்று

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம் !  க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் , இலக்கியத்திற்காக யுவபுரஸ்கார் விருது பெற்றவரும்  நவகாந்தியவாதியுமான எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடவிருக்கிறோம்.

சுனில் பரந்த விமர்சகராகவும், நல்ல  நேர்முகம் நடத்துனராக உரையாடுபவர் என்ற வகையிலும் வாசகர்களின் நன்மதிப்பு பெற்றவர். சிறப்பு உரைகளைத் தொடர்ந்து வரும் கேள்வி- பதில் நேரத்தில் வாசகர்கள் தங்கள் விவாதத்துக்குரிய கேள்விகளைக் கேட்க அரியதொரு  வாய்ப்பு.

நேரில் கலந்து கொள்ளும் நிகழ்விற்கு வருவதுபோல,  பத்து நிமிடம் முன்னர் வந்து இணையவெளி அரங்கில் இடம் பிடித்துக்கொள்ளவும்.  வாசகர்கள் காணொளியில் வந்து ஒலி/ஒளி இரண்டையும் தக்கமுறையில் உபயோகித்துப் பயன்பெறவும்.

.நா.சு உரையாடல் அரங்கு 

விருந்தினர் சுனில் கிருஷ்ணன்  

சனிக்கிழமை, மார்ச்  18,  2023, இந்தியா இரவு 8:30 மணி IST / அமெரிக்கா காலை 10:00 மணி CST

யூட்யூப் நேரலை :   https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)

நிகழ்ச்சி நிரல் :

8:30 PM IST / 10:00 AM CST    : வாழ்த்துப்பா

8:35 PM IST / 10:05 AM CST    : அறிமுகம் / வரவேற்பு –  ஜா. ராஜகோபாலன்

8:40 PM IST/10:10 AM CST:  சுனில் கிருஷ்ணனின் புனைவுகளை முன்வைத்து – பிரபு, போர்ட்லேண்ட்

8:50 PM IST / 10:20 AM CST :  சுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்களை முன்வைத்து –  மதன், போர்ட்லேண்ட்

9:00 PM IST / 10:30 AM CST  : கேள்வி பதில் நேரம்

10:00 PM IST / 11:30 AM CST : நன்றியுரை – பழனி ஜோதி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு vishnupuramusa@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2023 21:03

பழைய நிலங்கள்

கேரளபுரம் கேரளபுரம்

17, ஜூன் 2018 ஞாயிறன்று அஜிதன் வீட்டிலிருந்தான். சைதன்யாவுக்கு விடுமுறை. ஆகவே சும்மா ஒரு சுற்று கிளம்பிவரலாமே என்று புறப்பட்டோம்.

கன்யாகுமரி மாவட்டத்தில் விளவங்கோட்டுக்கு என்று ஒரு தனிப் பண்பாடு உண்டு. பண்பாடு என்பது தனித்தன்மைக்குள் தனித்தன்மைக்குள் தனித்தன்மை என்று சென்றுகொண்டே இருப்பது. குமரிமாவட்டம் தமிழகத்திற்குள் முற்றிலும் பண்பாட்டுத்தனித்தன்மை கொண்டது. கேரளத்திற்கும் அது ஒரு விந்தையான அயல்நிலம்தான். இரு மாநிலத்தவருமே அதைப்பற்றி ஒருவகையான மயக்கத்துடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

கேரளபுரம் சுடர்கன்னிகள் கேரளபுரம் சுடர்கன்னிகள்

கன்யாகுமரிமாவட்டத்திலேயே அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்கள் ஒருவகையான பண்பாடு கொண்டவை. இவை பழைய நாஞ்சில்நாடு எனப்படுகின்றன. கல்குளம் விளவங்கோடு பகுதிகள் பழைய வேணாடு. வேணாடு தக்கலை அருகே வில்லுக்குறி என்ற ஊரில் தொடங்குகிறது. களியக்காவிளைகடந்து கேரளத்தில் நெய்யாற்றின்கரையுடன் முடிகிறது. அதற்கப்பால் வேறு நாடுகள். கேரளம் அப்படி ஐம்பத்தாறு நாடுகளாலானது.

அவற்றில் நாஞ்சில்நாடு பழங்காலத்தில் நாஞ்சில்குறவன் என்னும் ஆட்சியாளரால் ஆளப்பட்டதாக சங்ககாலச் செய்திகள் சொல்கின்றன. சிதறால் கல்வெட்டும் சான்று. வேணாடு என்றால் வேள் நாடு. ஆய்வேளிர் ஆட்சி செய்த நிலம். ஆய் அண்டிரன் ஆட்சிசெய்தமைக்கான கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. நடுகல் கல்வெட்டுகளை பத்மநாபபுரம் அரண்மனையில் பார்க்கலாம்.

கேரளபுரம் ஆலயம் பின்பக்கம் கேரளபுரம் ஆலயம் பின்பக்கம்

நாஞ்சில்நாடு கொஞ்சம் தமிழகச் சாயல்கொண்டது. (கொஞ்சம் பாலக்காடுச் சாயலும் உண்டு) மலைசூழ்ந்த வயல்கள். சோழர்காலக் கோயில்கள். வேணாடு நில அமைப்பிலேயே வேறுபட்டது. வேணாட்டின் பெரும்பகுதி மலையும் மலைசார்ந்ததுமான நிலம். நாஞ்சில்நாட்டைவிட இருமடங்கு மழை. ஆகவே கண்நிறைக்கும் பசுமை. விவசாயம், உணவுப்பழக்கம், பேச்சு தொனி எல்லாமே வேறு.

குமரிமாவட்டத்தின் இரு நதிகள் இங்கே உற்பத்தியாகின்றன. இரண்டுமே ஜீவநதிகள். இவற்றில் இரண்டு பெரிய அணைக்கட்டுக்களும் இரண்டு மின்னுற்பத்திநிலைகளும் உள்ளன. சிறியதடுப்பணைகள் பத்துக்கும் மேல். இவ்வாறுகளின் நீர்தான் இன்று கூடங்குளம் உட்பட நெல்லையின் கணிசமான பகுதிகளுக்கு விடாய் தீர்க்கிறது.

7 திக்குறிச்சி ஆலய முகப்பு

வேணாட்டின் தொன்மையான ஆலயங்கள் இரண்டு. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் சங்ககாலம் முதல் குறிப்புடையது. ’வளநீர் வாட்டாறு’ என்று எழினியாதனை மாங்குடிக் கிழார் புறநாநூறு 396 ஆம் பாட்லில் வாழ்த்துகிறார். (புறநாநூறு)

திற்பரப்பு மகாதேவர் ஆலயம் அதேயளவுக்குத் தொன்மையானது. கிராதமூர்த்தி அக்கால காபாலிக மரபினரின் தெய்வம். சமணத்தலங்களான சிதறால் மலைக்கோயில் திருநந்திக்கரை குடைவரைக் கோயில் ஆகியவை இங்குள்ளன.

5

இவற்றைத்தவிர கேரளபாணியிலான முக்கியமான ஆலயங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவை இந்நிலத்தில் உள்ளன. இங்குள்ள இரு ஆறுகளான தென் தாமிரவருணி அல்லது கோதையாறு, வள்ளியாறு இரண்டின் இரு கரைகளிலும் ஆற்றைநோக்கியபடி ஆலயங்களின் ஒரு வரிசை உண்டு. ஆலயங்களை ஆற்றால் தொடுத்து உருவாக்கிய மாலை போல.

இங்கே தமிழகத்தின் ஆகமமுறை பூசை இல்லை. அல்லது தமிழகத்திலுள்ள 16 உபச்சாரங்கள் செய்யும் பூசனைமுறை இல்லை, இவை வேறு ஆகமமுறைகள் கொண்டவை. இந்த ஆலயங்களின் பூசைகளை தாந்திரிக முறைப்படி செய்கிறார்கள். தாந்த்ரீக முறைசார்ந்த பூசைநெறிகள் உண்டு. மாத்தூர் மடத்தின் முதன்மை தாந்த்ரீகர் அவற்றுக்குப் பொறுப்பானவர்.

9[அளப்பங்கோடு முகப்பில்]

பெரும்பாலும் எல்லா ஆலயங்களும் மிக அழகிய சூழலில் தனிமையாக அமைந்தவை. ஆலயத்தைச் சுற்றி ஒரு தொன்மையான மலையாளக் கலாச்சாரம் இருந்தது. பெரிய ஓட்டுவீடுகள். பெரும்பாலும் நாயர்கள், அரிதாக வேளாளர்கள். ஆலயப்பொறுப்புள்ள போத்திகள் எனும் துளுபிராமணர்கள் ஆகியோர் அடங்கியது கோயில்வட்டம். தஞ்சாவூர் மாதிரி. ஆனால் தஞ்சாவூரில் கோயிலைச்சூழ்ந்த பகுதிகள் கைவிடப்பட்டு கிடப்பதுபோல இங்கே காணமுடியாது

ஆண்டுக்கு குறைந்தது இரு திருவிழாக்கள். திருவிழாக்களில் கண்டிப்பாக கதகளி உண்டு. மலையாள மாதந்தோறும் வெவ்வேறு பூசனைமுறைகள். பருவத்திற்கேற்ப தனித்தனியான பூசைகள்.

11

இருபது வயது வரை நான் வாழ்ந்த சூழல். பசுமை, மழை, கோயில்கலைகள், இலக்கியம். மிகசிறிய உறவு –கிராமச் சுற்றம். மொத்த வாழ்க்கையும் கோயிலுடன் பிணைந்தது. கோயில் இயற்கையுடனும் சங்ககாலம் முதல் அறுபடாதுவரும் சேரர் பண்பாட்டு மரபுடனும் தொடர்புடையது. அதை அஜிதனுக்கும் சைதன்யாவுக்கும் காட்டவிரும்பினேன். அவற்றை நான் சொல்லிச் சொல்லி அவர்களிடம் ஒரு கனவை உருவாக்கியிருக்கிறேன்.

என் புனைவுலகில் பெரும்பகுதி இந்நிலத்தில்தான் நிகழ்ந்துள்ளது. நிலமென்றால் கதை நிகழும் களம் மட்டுமல்ல. அது உண்மையில் கதைக்கான அடிப்படைப் படிமங்களின் வெளி. கதையின் புறம் மட்டுமல்ல அகமும் நிலம்தான்.

திருவரம்பு படித்துறை திருவரம்பு படித்துறை

காலை ஏழரை மணிக்குக் எங்கள் காரிலேயே கிளம்பி கேரளபுரம் சென்றோம். தக்கலை அருகே உள்ள கேரளபுரம் தொன்மையான ஊர். உண்மையில் கேரளம் என்ற சொல்லின் ஊற்றே இவ்வூர்தான் என்று ஒரு கூற்று உண்டு. தொனமையான தலக்குளம் அரசகுடும்பத்தின் குடும்ப ஆலயம். பின்னாளில் பெரிதாக்கிக் கட்டப்பட்டது.

திருவிதாங்கோடு ஆலயம் மிக அருகில்தான். சிவன்கோயில். வட்டவடிவமான கருவறை. 1317ல் வேணாட்டை ஆண்ட வீரகேரள வர்மனால் இவ்வாலயத்தின் முதற்கட்டுமானம் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் மரத்தடியில் சிறிய பதிட்டையாக சிவக்குறி மட்டும் இருந்தது. வட்டமாக கருவறையை உள்ளிட்டு பிரகாரமும் சுற்றுமண்டபங்களும் பின்னர் அமைக்கப்பட்டன. திருவிதாங்கூர் ஆட்சியாளர்களால் மேலுமொரு பெரிய பிரகாரம் கட்டப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட சுடர்மங்கையருடன் அமைந்துள்ள இந்த பிரகாரம் இன்று பழுதின்றி ஆனால் புழக்கமில்லாமல் கிடக்கிறது.

திருவரம்பு ஆற்றங்கரை திருவரம்பு ஆற்றங்கரை

ஆலயவளாகமே பச்சைப்பசேலென்று அமைதியில் மூழ்கியிருந்தது. மெல்லிய தூறலும் குளிர்காற்றும் இருந்தன. ஜூன் மாதத்தில் குமரிமாவட்டத்தையும், கேரளத்தையும் சுற்றிப்பார்ப்பதே நல்லது. இளந்தூறல் இருந்துகொண்டே இருக்கும்.

ஆலயவளைப்புக்குள் இன்னொரு சிறிய கோயில் உள்ளது. ஒரு மரத்தடியில் அமைந்த அதிசயவினாயகர் தட்சிணாயணத்தில் வெண்ணிறமாகவும் உத்தராயணத்தில் கருமையாகவும் இருப்பார் என்கிறார்கள். மழையால் உருவாகும் ரசாயன மாற்றம் அச்சிலை அமைந்த குறிப்பிட்ட கல்லை அப்படி மாற்றுகிறது. குமரிமாவட்டத்தின் தனிப்பண்பாட்டைப் பார்க்கவேண்டியவர்கள் தவறவிடக்கூடாத ஆலயம் இது.

16

அங்கிருந்து மார்த்தாண்டம் சென்று திரும்பி திக்குறிச்சி சென்றோம். கோதையாற்றங்கரையில் அமைந்துள்ளது இந்த ஊர். ஆற்றில் செந்நிற நீர் பெருகிச்சென்றுகொண்டிருந்தது. அதில் நீந்திக்குளித்துக்கொண்டிருந்தார்கள். குமரிமாவட்டத்தில் நீரில் நீந்திக்குளிப்பது வாழ்க்கையின் சுகங்களில் முக்கியமானது என்னும் எண்ணம் உண்டு. ‘முங்கிக்குளி சீவிதம்’ என்று ஒரு சொலவடை உண்டு. கவலையே இல்லாமல் ஒரு சின்ன வட்டத்திற்குள் வாழ்வது என்று அதற்கு பொருள்.

அழகிய கேரளபாணி ஆலயம். புகழ்பெற்ற மலையாள நடிகர் திக்குறிச்சி சுகுமாரன்நாயரின் சொந்த ஊர் இது. சிறிய கோயில்கிராமம். ஆலயம் நன்றாகவே பராமரிக்கப்படுகிறது. வட்டமான கருவறை. ஓர் ஆலயம் அழகாகவும் தூய்மையாகவும் ஆளரவமில்லாமலும் இருப்பதே ஊழ்கநிலையை அளிக்கிறது

திருவரம்பு ஆறு திருவரம்பு ஆறு

அருகிலிருக்கும் அளப்பங்கோடு ஆலயத்திற்கு அங்கிருந்து சென்றுசேர்ந்தோம். அளப்பங்கோடு காளமுத்தப்பன் பூதத்தான் என்றே சொல்லப்பட்டார். இப்போது சாஸ்தாவாகவும் கருதப்படுகிறார். இது ஒரு பெரிய இலஞ்சிமரத்தடியில் அமைந்த நாட்டார் ஆலயம். சுற்றிலும் பிரகாரம். நடுவே திறந்த வெளியில் அந்த மரம். அதை உள்ளிட்டு அழியிட்ட கோயில். சிலை மிகச்சிறிது.

ஒரு காலகட்டத்தில் இந்த வழியாகத்தான்  கேரள மையநிலத்துக்கு மாடுகளைக் கொண்டு சென்றிருந்தார்கள். ஒரு முறை மாடுகளில் சில நோயுற்றபோது இந்த மரத்தின் அடியில் நிறுத்திவிட்டுச் சென்றனர். அவை இறந்துவிடும் என நினைத்தார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து வந்தபோது அவை மிகச்சிறப்பாக நின்றிருப்பதைக் கண்டார்கள். அவற்றைக் காக்கும் தெய்வம் இந்த மரத்தடியில் உள்ளது என்று உணர்ந்து அவற்றை இங்கே நிறுவினார்கள் என பழங்கதை.

முழுக்கோடு பள்ளி முழுக்கோடு பள்ளி

அளப்பங்கோடு பூதத்தான் பல குடும்பங்களுக்குக் குலதெய்வமும் கூட. இங்குள்ள வழிபாடு அரிசிபாயசமும் வெண்சோறும். மாடு கன்றுபோட்டால், புதிய மாடு வாங்கினால், மாடு நோயுற்றால் வேண்டுதல்கள் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தால் வழிபாடுகள் உண்டு. புதுமணத் தம்பதிகள் வந்தாலும் வழிபாடு உண்டு.

நாங்கள் சென்றபோது நல்ல கூட்டம். பல கூட்டுக்குடும்பங்கள் வந்திருந்தன. பந்திருநாழி வழிபாடு என்பது பன்னிரண்டு நாழி அரிசியால் பொங்குவது, வெல்லப்பாயாசமும் வெண்சோறும். அதை அங்கேயே அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள். நாங்கள் பார்த்த ஒரு பெருங்குடும்பம் கேரளத்தில் இருந்து வந்திருந்தனர்.

q

முழுக்கோடுக்குச் சென்றோம். அங்கே வந்து மிகச்சரியாக நாற்பத்திமூன்று ஆண்டுகள் ஆகின்றன. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு. வரக்கூடாது, என் நெஞ்சிலுள்ள சித்திரம் அழிந்துவிடும் என்று வருவதைத் தவிர்த்தேன். ஆனால் இது இன்னொரு வகை அனுபவம் என தோன்றியது.

நான் என் உள்ளத்தில் வைத்திருந்த இடம் முழுமையாகவே மாறிவிட்டிருந்தது. முழுக்கொடு ஒய் எம் சி ஏ எங்களூரின் முக்கியமான நிறுவனம். நிறைய ஆங்கில நூல்களுடன் ஒரு நல்ல நூலகம் இருந்தது. நான் எட்டாண்டுகள் அதிலேயே பழிகிடந்திருக்கிறேன். பெரிய மாற்றமில்லாமல் அப்படியே இருந்தது. நூலகம் இல்லை என்று நினைக்கிறேன்.

கோதையாறு திக்குறிச்சி ஆலயத்தருகேகோதையாறு திக்குறிச்சி ஆலயத்தருகே

அன்று ஆரம்பப் பள்ளி ஒரு பெரிய மைதானத்தின்  எல்லையில் இருந்தது. அந்தக்காலத்தில் அந்த திறந்தவெளிதான் ஊரின் மையம். ஊரே அந்தியில் அங்கே கூடியிருக்கும். இரவுபகலாக மிகப்பெரிய கிணற்றில் தண்ணீர் சேந்திக்கொண்டிருப்பார்கள். நாலைந்து இடங்களில் கபடி, ஓணப்பந்து விளையாட்டுக்கள் நிகழும். அந்த மைதானமே ஏராளமான அரசு கட்டிடங்களாக மாறிவிட்டிருந்தது. ஆனால் பள்ளியின் பழைய கட்டிடம் அப்படியே இருந்தது.

சாலையின் இருபக்கமும் வீடுகள் செறிந்திருந்தன. நெரிசலான ஒரு நகரம் போலிருந்தது முழுக்கோடு. எல்லாமே வசதியான பெரிய வீடுகள். மாடக்குளம் வரை சென்றோம். நான் வழக்கமாக குளிக்கும் குளம். நீர் கெட்டுப்போய் கிடந்தது. ஒரு காலத்தில் அக்குளம் இருக்குமிடம் முழுக்க வயல்வெளிகள். இப்போது ரப்பர்தோட்டங்களும் வீடுகளும். அந்த இடத்தின்மேல் என் மனதிலிருந்த இடத்தை ஒட்டிவைக்க முடியவில்லை. உள்ளூர ஏதோ ஒன்று அசைவுகொண்டது. பதைப்புடன் நோக்கிக்கொண்டே இருந்தேன்.

முழுக்கோடு ஒய் எம் சி ஏ முழுக்கோடு ஒய் எம் சி ஏ

நாங்கள் குடியிருந்த அணியாட்டுவீடை கண்டுபிடிக்கமுடியவில்லை. அது அந்தக்காலத்தில் பெரிய வீடு. வீட்டுக்கூடத்தில் பெரிய ஊஞ்சல்கட்டி ஆடுவோம். அது இருக்க வாய்ப்பில்லை. பழையபாணி நாலுகெட்டு வீடு. அப்போதே ஐம்பதாண்டு பழையது. அப்பா விசாலமான வீட்டில்தான் எப்போதும் வாழவிரும்பினார்.  பெரிய வீடு வேண்டும் என்றுதான் அருமனையில் பதிவு அலுவலகம் இருந்தபோதிலும் முழுக்கோடுக்கு வந்தார்.

அப்பா எப்போதுமே தன்பிள்ளை பிறர்பிள்ளை என்ற பேதம் அறிந்தவர் அல்ல. எங்கள் வீட்டில் சாதாரணமாக இருபது பிள்ளைகள் விளையாடுவார்கள், சாப்பிடுவார்கள், இரவு கூடத்தில் பெருங்கூட்டமாகத் தூங்குவதும் உண்டு.

 

மாடக்குளம் இன்று மாடக்குளம் இன்று

அந்த இல்லத்தின் அறப்புரையில் [இணைப்புக் கட்டிடத்தில்] அம்மாவின் தோழி குடியிருந்தார்கள். அவர்கள் திக்குறிச்சி சுகுமாரன் நாயரின் அண்ணாவின் இரண்டாம் மனைவி. அவர் வழக்கறிஞராக குழித்துறையில் பணியாற்றினார். பின்னர் நெய்வேலிப்பக்கம் அக்குடும்பம் மாற்றலாகிச் சென்றுவிட்டது. அவர்களின் மூத்தவளுக்கு அங்கே வேலைகிடைத்தது.

இப்பகுதியில் அன்றெல்லாம் ஓலைக்கூரைவீடுகள்தான். சில வீடுகளே ஓடிட்டவை. இன்று ஒரு வீடுகூட ஓலோ ஓடோ இல்லை. எல்லாமே சிமிட்டிக்கூரை வீடுகள். பலவண்ணங்களில். மழையின் இருளிருந்தமையால் ஏதோ ஓர் அறியாத அயல்நாட்டு தெருவில் செல்வதுபோலத் தோன்றியது.

திருவரம்பு வீடிருந்த இடம் திருவரம்பு வீடிருந்த இடம்

முழுக்கோட்டில் அன்று செயலாக இருந்த காபிரியேல் நாடாரின் சிறிய மளிகைக்கடை அப்படியே பாழடைந்து இருந்தது. அங்கே கடைநடப்பதுபோலத் தெரியவில்லை. இடித்துக் கட்டியிருக்கவுமில்லை.

அருமனைக்குச் சென்றோம்.  நான் படித்த அருமனை அரசு உயர்நிலைப்பள்ளியை காட்டினேன். நான் மிதித்து ஏறி நெல்லிக்காய் பறித்து அடிவாங்கிய, இந்திய சுதந்திரம் இருபத்தைந்து ஆண்டு நிறைவு ஸ்தூபி அப்படியே இருந்தது. பள்ளியின் முகப்புக்கட்டிடமும் மாற்றமில்லாமல் இருந்தது.  வாரம் இருமுறை நான் சென்று நின்று அடிவாங்கும் தலைமை ஆசிரியரின் அலுவலக முகப்பு. நான் கல்கோனா வாங்கும் கடை இடிந்து கைவிடப்பட்டு எஞ்சியிருந்தது.

பள்ளி முகப்பில் இருந்த கடை. கல்கோனா மிட்டாய் இங்கே பிரபலம் பள்ளி முகப்பில் இருந்த கடை. கல்கோனா மிட்டாய் இங்கே பிரபலம்

அங்கிருந்து திருவரம்பு சென்றோம். நான் வளர்ந்த ஊர். என் பெரும்பாலான கதைகளின் களம். சென்ற முறை ஆவணப்படவேலைக்காக வந்தபோது எங்கள் வீடிருந்த இடம் முழுக்க ரப்பர் நின்றது. இப்போது மொத்த ரப்பரையும் முறித்து வெட்டவெளியாக்கி மரவள்ளி நட்டிருந்தனர். ரப்பர் தோட்டங்கள் பெரிய நஷ்டத்தை அளிக்கக்கூடியனவாக ஆகிவிட்டிருக்கின்றன. படிக்கட்டில் அமர்ந்து அக்காலகட்டத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ஆறுவரை இறங்கிச்சென்றோம்

பொதுவாக நான் கண்டது இந்நிலப்பகுதியின் அழகும் சிறப்பம்சமுமான நீர்நிலைகள் அனைத்துமே அண்மைக்காலத்தில் கிட்டத்தட்ட கைவிடப்பட்டு அழிந்துவிட்டன என்பதே. பொதுப்பணித்துறை தூர்வாரிச் சீரமைப்பதில்லை. எல்லா நீர்நிலைகளிலும் சாக்கடைகள் கலக்கின்றன. ஊர்ப்பராமரிப்பே இல்லை.

 

aae

மழைமிகுந்த இடமாதலால் நீர் நிறையவே உள்ளது. ஆனால் நெல் ாழை என வேளாண்மை ஏதுமில்லை, ரப்பர் மட்டுமே. ஆகவே நீர்நிலைகள் எவருக்கும் தேவையில்லை. குளங்களில் மிக அரிதாகவே சிலர் நீராடுகிறார்கள். ஒருகாலத்தில் நாங்கள் நீந்தித்திளைத்த குளங்கள் எல்லாமே பாசிபடிந்து கிடக்கின்றன. ஆல்யக்குளங்கள்கூட.

வாழ்க்கையின் மையங்கள் மாறுகின்றன. அன்று ஆறுதான் கிராமத்தின் மையம். எல்லா வீடுகளில் இருந்தும் தோட்டங்களில் இருந்தும் ஆற்றுக்கு பாதைகள் உண்டு. கிராமத்தில் ஆற்றில்தான் எப்போதும் மக்கள்கூட்டம் இருக்கும். குளிப்பவர்கள், மாடு கழுவுபவர்கள், வாழைக்கு நீர் இறைப்பவர்கள். கணிசமானவர்கள் ஆற்றங்கரை மணலில் ஊற்று தோண்டித்தான் குடிநீர் எடுப்பார்கள்.சும்மா வந்து அமர்வதும் படுத்துத் தூங்குவதும்கூட ஆற்றில்தான். அன்று ஆறு மிகப்பெரிய மணல்வெளி. நடுவே இன்றிருப்பதைவிட பலமடங்கு நீர் செல்லும். நீர் எந்த பருவத்திலும் குறைவதில்லை.  ஆற்றுக்கரையில் அமைந்த மகாதேவர் ஆலயத்தில் அடுத்தபடியாக சமூகச் செயல்பாடுகள் இருக்கும்

ns

இப்போது ஆலயம் மக்கள் நடமாட்டமில்லாமல் கிடக்கிறது. ஆற்றுக்கு எவரும் செல்வதில்லை என்று தெரிந்தது. செல்வதற்குப் பாதையே இல்லை. புதர்மண்டிக் கிடந்தது. சாஸ்திரப்படி சிவலிங்கத்துக்கு இருவேளையும் கோதையாற்றின் நீரைக்கொண்டுதான் அபிஷேகம் செய்யவேண்டும். நாராயணன்போற்றி குடம் குடமாக நீர் கொண்டுவந்து ஊற்றுவார்.

ஆற்றிலிறங்கும் காலடித்தடமே தெரியவில்லை. மணல் முழுமையாகவே சுரண்டப்பட்டுவிட்ட ஆறும் பெரிய சேற்றுக்குழியாக மாறி நீர் நிறைந்து சென்றது. இருபக்கங்களையும் ஆக்ரமித்து நீர்விளிம்புவரை தோட்டங்களாக்கியிருந்தனர். புறக்கணிக்கப்பட்டு எவராலும் பார்க்கப்படாமல் கொல்லைப்புறச் சாக்கடைபோல ஓடியது ஆறு. என் வாழ்க்கையில் அம்மாவுக்கு நிகரான இடம் கொண்டது. நூறுநூறு வர்ணனைகளால் நான் எழுதி எழுதி எனக்குள் பேருருக்கொள்ளச் செய்தது. அதுதான் உண்மையில் விஷ்ணுபுரத்தின் சோனா.

na

குலசேகரம் சென்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். அங்கிருந்து திற்பரப்பு அருவிக்குச் சென்று குளித்தோம். திற்பரப்பில் நானும் ராதாகிருஷ்ணனும் நடந்தே வந்து தன்னந்தனியாகக் குளிப்போம். தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். இப்போது திற்பரப்பு ஒரு பெரிய சுற்றுலா மையம்.புதிய காலத்தின் கொப்பளிப்பு

திரும்பிவரும்போது கொஞ்சம் தூங்கிவிட்டேன். அரைமயக்க நிலையில் இயல்பாக பழைய திருவரம்பில், முழுக்கோட்டில் திக்குறிச்சியில் வாழ்ந்தேன்.நான் நேற்று இரவு தூங்க நெடுநேரமாகியது. கிருஷ்ணமதுரம் திகட்டத்திகட்ட தேவைப்பட்டது உளம் ஓய்ந்து மறைய.

aa

அந்த நிலம் எங்குள்ளது? இங்கு எங்கும் அது இல்லை. அந்த மனிதர்கள், அந்த காற்று அந்த ஒளி எதுவும். அப்படியொரு நிலம் இருந்தது என்பதற்கான சான்றாக சில பாழடைந்த தடையங்களே எஞ்சியிருக்கின்றன.

அந்நிலமும் வாழ்க்கையும் என்னுள் மிகத்துல்லியமாக உள்ளன. எப்போதுவேண்டுமென்றாலும் மீட்டு எடுத்து உள்ளே நுழையமுடியும். அந்நிலம் தன் கருவடிவுக்கு சென்றுவிட்டது. பருவடிவமாக ஆவதற்கு முன்னாலும் அவ்வாறு எங்கோ இருந்திருக்கக்கூடும்.

முதற்பதிவு Jun 19, 2018/மறுபிரசுரம்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2023 11:35

இந்து மதாபிமான சங்கம்

குலம்உயர நகர்உயர நாடுயர உழைக்கின்றார்; கோடி மேன்மை

நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி  வாழ்ந்துஒளிர்க நிலத்தின் மீதே.

என்று பாரதியால் பாடப்பட்டது ஹிந்து மதாபிமான சங்கம்.  காரைக்குடியில் இந்துப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது

இந்து மதாபிமான சங்கம் இந்து மதாபிமான சங்கம் இந்து மதாபிமான சங்கம் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 17, 2023 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.